Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature >  Sangam Classics: Ettuthokai/Melkannaku - the Eight Anthologies > pattuppATTu/Melkannaku - the Ten Idylls > திருமுருகாற்றுப்படை > பொருநர் ஆற்றுப்படை > சிறுபாணாற்றுப்படை > பெரும்பாணாற்றுப்படை > முல்லைப்பாட்டு > மதுரைக்காஞ்சி > நெடுநல்வாடை > குறிஞ்சிப்பாட்டு > பட்டினப் பாலை > மலைப்படுகடாம்
 

 
perumpANARRuppaTai of kaTiyalUr uruttirangkaNNanAr
(work in pattuppATTu anthologies)

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை
ஆசிரியர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பாடப்பட்டவன் :: தொண்டைமான் இளந்திரையன்
திணை :: பாடாண்திணை - துறை :: ஆற்றுப்படை
பாவகை :: ஆசிரியப்பா - மொத்த அடிகள் :: 500



Etext Preparation : Staff & Students of K.A.P. Viswanatham Higher Secondary School, Tiruchirappalli, Tamilnadu, India ; Dr. C. Kesavaraj, BDS, FICD, Trustee, K.A.P. Viswanatham Higher Secondary School (Project Sponsor)
Dr. R. Vasudevan, Former Director, School of Energy, Bharathidasan University, Trichi, Tamilnadu (Tech. support)
Dr. R. Rajendran, Senior Teacher, K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu (coordination)
Text Input : Ms. J. Jayanthi (Librarian); S. Sinnakannan (Typist), Sivadayal, Christopher (Students), K.A.P. Viswanatham Higher Secondary School, Trichi, Tamilnadu, India; Proof-reading: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India; Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

� Project Madurai 1999-2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப் . . . .10

பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியடு மதிவலந் திரிதருந்
தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந் தேரும் பறவை போலக் . . . . .20

கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!
பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக்
கருவி வானந் துளிசொரிந் தாங்குப்
பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு
வழங்கத் தவாஅப் பெருவள னேய்தி
வாலுளைப் புரவியடு வயக்களிறு முகந்துகொண்
டியாமவ ணின்றும் வருதும் நீயிரு
மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் . . . .30

திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்
கேளவ னிலையே கெடுகநின் னவல
மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் . . .40

கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமும் உரறா தரவுந் தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங்
கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வுருளி
யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன
வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம் . . . . .50

வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக்
கோழி சேக்குங் கூடுடைப் புதவின்
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந்
துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி
நாடக மகளி ராடுகளத் தெடுத்த
விசிவீங் கின்னியங் கடுப்பல் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண் . . . .60

முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி
யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக
மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ
மரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றா
ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின் . . . .70

விரவுவரிக் கச்சின் வெண்கை யள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி
யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு . . . .80

முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
யீன்பிண வொழியப் போகி நோன்கா . . . .90

ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவி
னீழன் முன்றி னிலவுரற் பெய்து
குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல் . . . . .100

வாடாத் தும்பை வயவர் பெருமக
னோடாத் தானை யண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கு . . . .110

மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்
பகுவாய் ஞமலியடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபட
வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெ�கம்
வடிமணிப் பலகையடு நிரைஇ முடிநாட் . . . .120

சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக
ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையடு
கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த்
தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக்
கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற்
களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன . . . . .130

சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்
யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்
சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு . . . . .140

நாள்ஆ தந்து நறவுநொடை தொலைச்சி
யில்லடு கள்ளின் றோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்
சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப்
பகல்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளகுஅரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி . . . .150

னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி
னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் . . . . .160

சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை . . . .170

யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
யன்றம ருடுக்கைக் கூழா ரிடையன்
கன்றமர் நிரையடு கானத் தல்கி
யந்நு ணவிர்புகை கமழக் கைம்முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி
னின்றீம் பாலை முனையிற் குமிழின் . . . .180

புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்
தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக் . . . . .190

கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெறுவிர் ஞாங்கர்க்
குடிநிறை வல்சிச் செஞ்சா லுழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி
லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித் . . . .200

தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை
யரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
வன்புல மிறந்த பின்றை மென்றோன்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ளலவ னளற்றளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவி . . . .210

னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்
களைஞர் தந்த கணைக்கா னெய்தற்
கட்கனழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலை யாரச் சூடிப்
பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் . . . .220

புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி
னிரும்புவடித் தன்ன மடியா மென்றோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅற்
பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற்
புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக்
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் . . . .230

தூம்புடைத் திரடா டுமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந்
துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற்
சிலம்பி வானூல் வலந்த மருங்கிற்
குழுமுநிலைப் போரின் முழுமுத றொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத் துகடப
வையுந் துரும்பு நீக்கிப் பைதறக்
குடகாற் றெறிந்த குப்பை வடபாற் . . . . .240

செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைப்
பகட்டுஆ ஈன்ற கொடுநடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு
லேணி யெய்தா நீணெடு மார்பின்
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லிற்
றச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
வூரா நற்றே ருருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட வலர்முலைச் . . . .250

செவிவிஅம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சு மழகுடை நல்லிற்
றொல்பசி யறியாத் துளங்கா விருக்கை
மல்லற் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்
கெந்திரஞ் சிலைக்குந் துங்சாக் கம்பலை . . . .260

விசய மடூஉம் புகைசூ ழாலைதொறுங்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற்
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த
ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் . . . .270

மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பி
னவையா வரிசி யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
வெல்லையு மிரவு மிருமறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த . . . .280

வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த கவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த
நெடுங்கழைத் தூண்டி னடுங்கநாண் கொளீஇக்
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை நெருங்கயந் தீப்பட மலர்ந்த
கடவு ளண்பூ வடைத லோம்பி . . . . .290

யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
யகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
வரக்கிதழ்க் குவளையடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் . . . .300

மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் . . . .310

வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
யிரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசைஇ யவன
ரோதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
வாலுளைப் புரவியடு வடவளந் தரூஉம் . . . .320

நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பி
னெல்லுழு பகட்டொடு கறவை துன்னா
ஏழகத் தகரோ டெகினங் கொட்குங்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ்பவை போற்
பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க
மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் . . . .330

பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணற் பொற்கழங் காடும்
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூத் தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பி . . . . .340 . . . .
னீர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றிப் பன்னாட்
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
கொழுநிணத் தடியடு கூர்நறாப் பெறுகுவிர்
வான மூன்றிய மதலை போல
வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்
திரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
யுரவுநீ ரழுவத் தோடுகலங் கரையுந் . . . . .350

துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத்
தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பிற்
றாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழி றாழைக் குழவித் தீம்நீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழந்
திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந் . . . .360

தீம்ப� றார முனையிற் சேம்பின்
முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்
மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்கா
யாறுசெல் வம்பலர் காய்பசி தீரச்
சோறடு குழிசி யிளக விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் . . . .370

நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ
னிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற் . . . .380

சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன
நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும்
பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக்
குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச்
சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுத
னறவுபெயர்த் தமர்த்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயி . . . .390

னருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநுங்
கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்
காழோ ரிகழ்பதம் நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற்
களிறுகத னடக்கிய வெளிறில் கந்திற்
றிண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த . . . .400

வடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பி
னிழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ . . . .410

விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ
ரவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வா
யந்தி வானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே
ராராச் செருவி னைவர் போல
வடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
வொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக்
கச்சி யோனே கைவண் டோன்ற . . . . .420

னச்சிச் சென்றோர்க் கேம மாகிய
வளியுந் தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோருந்
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோருங்
கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப்
பல்வேறு வகையிற் பணிந்த மன்ன
ரிமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை
வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் . . .430

பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகு மிரியன் மாக்க
ளருமரப் பாணியிற் தூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப்
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்குங்
கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்
திறையுறை புறவின் செங்காற் சேவ
லின்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் . . . .440

குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பட்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்
பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்
புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் . . . . .450

கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினு
மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி . . . .460

வந்தேன் பெரும வாழிய நெடிதென
விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழூஉப் பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்நிலை
நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
யந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
யாவி யன்ன அவிர்நூற் கலிங்க
மிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக் . . . .470

கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
யரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்க
லருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கு . . . . .480

மாடுவண் டிமிரா வழல்தவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி
யுரவுக்கடல் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப்
புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின்
றொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
யரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத் . . .490

தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெ லிவுளியடு பசும்படை தரீஇ
யன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க்
கின்னர முரலு மணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி லுறும்பிற்
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு
மொளிறிலங் கருவிய மலைகிழ வோனே. . . . .500

பெரும்பாணாற்றுப்படை முற்றிற்று.



 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home