Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > 1 விராதன் வதைப் படலம் > 2 சரபங்கன் பிறப்ப நீங்கு படலம் > 3 அகத்தியப் படலம் > 4 சடாயு காண் படலம் >5 சூர்ப்பணகைப் படலம் > 6 கரன் வதைப் படலம் > 7 சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் >8 மாரீசன் வதைப் படலம் > 9 இராவணன் சூழ்ச்சிப் படலம் > 10 சடாயு உயிர் நீத்த படலம் > 11 அயோமுகிப் படலம் > 12 கவந்தன் படலம் > 13 சவரி பிறப்பு நீங்கு படலம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
ஆரணிய காண்டம் - 12. கவந்தன் படலம்


இராம இலக்குவர் கவந்தன் வனத்தைக் காணுதல்

ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி, அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்;
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று, இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைந்து வயிற்று அடங்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார். 1

எறுப்பு இனம், கடையுற, யானையே முதல்
உறுப்புடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன்
வெறிப்புறு நோக்கின, வெருவுகின்றன்
பறிப்பு அரு வலையிடைப் பட்ட பான்மைய் 2

மரபுளி நிறுத்திலன், புரக்கும் மாண்பிலன்;
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன்
வெருவுவ, சிந்துவ, குவிவ, விம்மலோடு
இரிவன, மயங்குவ, இயல்பு நோக்கினார். 3

மால் வரை உருண்டன வருவ் மா மரம்
கால் பறிந்திடுவன் கான யாறுகள்
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன்
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன் 4

கவந்தன் கைப்பட்ட இருவரும் பலவாறு எண்ணுதல்

நால் திசைப் பரவையும் இறுதி நாள் உற,
காற்று இசைத்து எழ எழுந்து, உலகைக் கால் பரந்து
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல், திசை சுற்றிய கரத்துப் புக்குளார். 5

தேமொழி திறத்தினால், அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைந்தது என்று, உவகை எய்தினார்;
நேமி மால் வரை வர நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய, கைம் மதிட்குள் ஆயினார். 6

இளவலை நோக்கினன் இராமன், 'ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும், இவ்
அளவையது ஆகுதல் அறிதி; ஐய! நம்
கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' என, 7

'முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல்,
எற்றிய முரசு ஒலி, ஏங்கும் சங்கு இசை,
பெற்றிலது; ஆதலின், பிறிது ஒன்று ஆம்' எனச்
சொற்றனன் இளையவன், தொழுது முன் நின்றான். 8

'தௌ;ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான்? வேறு ஓர் நாகம்தான்?
தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து,
உள் உறக் கவர்வதே ஒக்கும்; ஊழியாய்!' 9

கவந்தனின் தோற்றம்

என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன், நடந்த நாயகன்;
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு, ஓங்கல்தான்
நின்றென இருந்த அக் கவந்தன் நேர் சென்றார். 10

வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை
குயிற்றியதாம் எனக் கொதிக்கும் கண்ணினன்;
எயிற்று இடைக்குஇடை இரு காதம்; ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான். 11

ஈண்டிய புலவரொடு அவுணர், இந்துவைத்
தீண்டிய நெடு வரைத் தெய்வ மத்தினைப்
பூண்டு உயர் வடம், இரு புடையும் வாங்கலின்,
நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான். 12

தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு என,
புகைக் கொடி, கனலொடும் பொடிக்கும் மூக்கினான்;
பகைத் தகை நெடுங் கடல் பருகும் பாவகன்
சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினான். 13

புரண்டு பாம்பு இடை வர வெருவி, புக்கு உறை
அரண்தனை நாடி, ஓர் அருவி மால் வரை
முரண் தொகு முழை நுழை, முழு வெண் திங்களை
இரண்டு கூறிட்டென, இலங்கு எயிற்றினான். 14

ஓத நீர், மண் இவை முதல ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே,
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு, உயிர் படைத்த பண்பினான். 15

வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வௌ; அரா,
செய் தொழில் இல, துயில் செவியின் தொள்ளையான்;
பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர்
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான். 16

முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி, தான்
பற்றிய கரத்தினன், பணைத்த பண்ணையில்
துற்றிய புகுதரும் தோற்றத்தால், நமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான். 17

ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான்;
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்;
நீல மால்; நேமியின் தலையை நீக்கிய
காலநேமியைப் பொரும் கவந்தக் காட்சியான். 18

தாக்கிய தணப்பு இல் கால் எறிய, தன்னுடை
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர்
ஆக்கையின் இருந்தவன் தன்னை, அவ் வழி,
நோக்கினர் இருவரும், நுணங்கு கேள்வியார். 19

கவந்தனின் வாயைப் பார்த்து இராம இலக்குவர் ஐயுறுதல்

நீர் புகும் நெடுங் கடல் அடங்கும், நேமி சூழ்
பார் புகும், நெடும் பகு வாயைப் பார்த்தனர்;
'சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது?' என்று, உன்னினார். 20

அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
'வௌ;வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?' என, செம்மல் சொல்லுவான்: 21

'பழி சுமந்து வாழ்கிலேன்' எனல்

தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!' என்றான். 22

'ஈன்றவர் இடர்ப்பட, எம்பி துன்புற,
சான்றவர் துயருற, பழிக்குச் சார்வுமாய்த்
தோன்றலின், என் உயிர் துறந்தபோது அலால்,
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ? 23

'"இல் இயல்புடைய, நீர் அளித்த, இன் சொலாம்
வல்லி, அவ் அரக்கர்தம் மனை உளாள்" எனச்
சொல்லினென், மலை எனச் சுமந்த தூணியென்,
வில்லினென், செல்வேனோ, மிதிலை வேந்தன்பால்? 24

'"தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன்,
இளை புரந்து அளித்தல்மேல் இவர்ந்த காதலன்,
உளன்" என, உரைத்தலின், "உம்பரான்" என
விளைதல் நன்று; ஆதலின், விளிதல் நன்று' என்றான். 25

'முன்னம் முடிவன்' என இலக்குவன் மொழிதல்

ஆண்டான் இன்ன பன்னிட, ஐயற்கு இள வீரன்,
'ஈண்டு, யான் உன்பின் ஏகியபின், இவ் இடர் வந்து
மூண்டால், முன்னே ஆர் உயிரொடும் முடியாதே,
மீண்டே போதற்கு ஆம் எனின், நன்று என் வினை!' என்றான். 26

என்றான் என்னாப் பின்னும் இசைப்பான், 'இடர்தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார்? விரவாரின்
தன் தாய், தந்தை, தம்முன், எனும் தன்மையர் முன்னே
பொன்றான் என்றால், நீங்குவது அன்றோ புகழ் அம்மா? 27

'"மானே அன்னாள்தன்னொடு தம்முள் வரை ஆரும்
கானே வைக, கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனாள்; என்னே!" என்றவர் முன்னே, "அவர் இன்றித்
தானே வந்தான்" என்றலின், வேறு ஓர் தவறு உண்டோ ? 28

'என் தாய், ''உன்முன் ஏவிய யாவும் இசை; இன்னல்
பின்றாது எய்தி, பேர் இசையாளற்கு அழிவு உண்டேல்,
பொன்றாமுன்னம் பொன்றுதி" என்றாள்; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா? 29

'என்-பெற்றாளும், யானும், எனைத்து ஓர் வகையாலும்,
நின்-பெற்றாட்கும், நிற்கும், நினைப்புப் பிழையாமல்,
நல் பொன் தோளாய்! நல்லவர் பேண நனி நிற்கும்
சொல் பெற்றால், மற்று ஆர் உயிர் பேணி, துறவேமால். 30

'ஓதுங்கால், அப் பல் பொருள் முற்றுற்று, ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய்;
மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின்தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதிஎன்னின், பொருள் உண்டோ ? 31

கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேணார்; 'கிளர் போரில்
தோட்டார் கோதைச் சோர் குழல்தன்னைத் துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான், செரு வெல்ல
மாட்டான், மாண்டான்" என்றலின்மேலும் வசை உண்டோ ? 32

'பூதத்தின் கையொடு வாயைத் துணிப்பதே கருமம்' எனல்

'தணிக்கும் தன்மைத்து அன்று எனின், இன்று இத் தகை வாளால்,-
கணிக்கும் தன்மைத்து அன்று, விடத்தின் கனல் பூதம்-
பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி; துன்பம் துற' என்றான். 33

என்னா முன்னே, செல்லும் இளங்கோ, இறையோற்கு
முன்னே செல்லும்; முன்னவன், அன்னானினும் முந்த,
தன் நேர் இலாத தம்பி தடுப்பான்; பிறர் இல்லை
அன்னோ! கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால். 34

கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல்

இனையர் ஆகிய இருவரும், முகத்து இரு கண்போல்,
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும், கவந்தன்,
'வினையின் எய்திய வீரர் நீர் யாவர்கொல்?' என்ன,
நினையும் நெஞ்சினர், இமைத்திலர்; உருத்தனர், நின்றார். 35

'அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை' என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப,
'விழுங்குவேன்' என வீங்கலும், விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். 36

கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும்,
சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு
ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான். 37

கவந்தன் முன்னை உருப் பெற்று, விண் உற நிமிர்தல்

ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால்,
மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்;
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா,
நீளம் நீங்கிய பறவையின், விண் உற நிமிர்ந்தான். 38

விண்ணில் நின்றவன், 'விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன்' எனக் கருத்துற உணர்ந்தான்;
எண் இல் அன்னவன் குணங்களை, வாய் திறந்து, இசைத்தான்;
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப் பொருளே? 39

இராமனைத் துதித்தல்

ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை தீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப் பயனோ?
மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அரு வினையேன் சாபத் துயர் துடைத்தாய்! 40

மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41

'காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42

'ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
"சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!" என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43

'எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புiர் அம்மா! 44

'மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45

'நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46

'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47

'மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?' என்றான். 48

எதிரில் நின்றவனை இலக்குவன் 'நீ யார்' என வினவல்

என்று, ஆங்கு, இனிது இயம்பி, 'இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு' என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49

'பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
ஆராய்!' என, அவனும், 'ஆர்கொலோ நீ?' என்றான். 50

தனுவின் வரலாறு

'சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்;
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்,
எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின்' என்றான். 51

தனு சவரியை அடைந்து சுக்கிரீவன் நட்பைப் பெறுமாறு கூறல்

'கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். 52

'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து
உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே,
ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? 53

'ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி,
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 54

'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது' என்றான்,
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். 55

மதங்கன் இருக்கை சேர்தல்

ஆனபின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து அவனும் போனான்;
மானவக் குமரர் தாமும் அத் திசை வழிக் கொண்டு ஏகி,
கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து இறுக்கும் காலை,
யானையின் இருக்கை அன்ன, மதங்கனது இருக்கை சேர்ந்தார். 56


 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home