Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > 1 விராதன் வதைப் படலம் > 2 சரபங்கன் பிறப்ப நீங்கு படலம் > 3 அகத்தியப் படலம் > 4 சடாயு காண் படலம் >5 சூர்ப்பணகைப் படலம் > 6 கரன் வதைப் படலம் > 7 சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் >8 மாரீசன் வதைப் படலம் > 9 இராவணன் சூழ்ச்சிப் படலம் > 10 சடாயு உயிர் நீத்த படலம் > 11 அயோமுகிப் படலம் > 12 கவந்தன் படலம் > 13 சவரி பிறப்பு நீங்கு படலம்  கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
ஆரணிய காண்டம் - 9. இராவணன் சூழ்ச்சிப் படலம்
 


சங்கு அடுத்த தனிக் கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்;
கொங்கு அடுத்த மலர்க் குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம். 1

சீதையின் துயரம்

எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய,
செயிர் தலைக்கொண்ட, சொல் செவி சேர்தலும்,
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்,
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள். 2

'"பிடித்து நல்கு, இவ் உழை" என, பேதையேன்
முடித்தனென், முதல் வாழ்வு' என, மொய் அழல்
கொடிப் படித்தது என, நெடுங் கோள் அரா,
இடிக்கு உடைந்தது என, புரண்டு ஏங்கினாள். 3

'குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்,
இற்று வீழ்ந்தனன் என்னவும், என் அயல்
நிற்றியோ, இளையோய்! ஒரு நீ?' என்றாள். 4

இலக்குவனின் தெளிவுரை

'எண்மை ஆர் உலகினில், இராமற்கு ஏற்றம் ஓர்
திண்மையார் உளர் எனச் செப்பற்பாலரோ?
பெண்மையால் உரைசெயப் பெறுதிரால்' என,
உண்மையான், அனையவட்கு உணரக் கூறினான். 5

'ஏழுமே கடல், உலகு ஏழும் ஏழுமே,
சூழும் ஏழ் மலை, அவை தொடர்ந்த சூழல்வாய்
வாழும் ஏழையர் சிறு வலிக்கு, வாள் அமர்,
தாழுமே, இராகவன் தனிமை? தையலீர்! 6

'பார் என, புனல் என, பவன, வான், கனல்
பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்? 7

'இடைந்துபோய் நிசிசரற்கு இராமன், எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே? அழைக்குமாம் எனின்,
மிடைந்த பேர் அண்டங்கள் மேல, கீழன,
உடைந்துபோம்; அயன் முதல் உயிரும் வீயுமால். 8

'மாற்றம் என் பகர்வது? மண்ணும் வானமும்
போற்ற, வன் திரிபுரம் எரிந்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில் இற்றது; எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ? 9

'காவலன், ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல்,
மூவகை உலகமும் முடியும்; முந்து உள,
தேவரும், முனிவரும் முதல செவ்வியோர்
ஏவரும், வீழ்ந்துளார்; மற்று அறமும் எஞ்சுமால். 10

'பரக்க என் பகர்வது? பகழி, பண்ணவன்
துரக்க, அங்கு அது, பட, தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான்; அதற்கு
இரக்கம் உற்று இரங்கலிர்; இருத்திர் ஈண்டு' என்றான். 11

சீதை ஏச, இலக்குவன் ஏகுதல்

என்று அவன் இயம்பலும், எடுத்த சீற்றத்தள்,
கொன்றன இன்னலள், கொதிக்கும் உள்ளத்தள்,
'நின்ற நின் நிலை, இது நெறியிற்று அன்று' எனா,
வன் தறுகண்ணினள், வயிர்த்துக் கூறுவாள். 12

'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா, 13

தாமரை வனத்திடைத் தாவும் அன்னம்போல்
தூம வெங் காட்டு எரி தொடர்கின்றாள்தனை,
சேம விற் குமரனும் விலக்கி, சீறடிப்
பூ முகம் நெடு நிலம் புல்லி, சொல்லுவான்; 14

'துஞ்சுவது என்னை? நீர் சொன்ன சொல்லை யான்
அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் தீர்ந்து இனி,
இஞ்சு இரும்; அடியனேன் ஏகுகின்றனென்;
வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ? 15

'போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து, கேடு
ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து,
"ஏகு" என்றீர்; இருக்கின்றீர் தமியிர்' என்று, பின்
வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான். 16

'இரும்பெனேல், எரியிடை இறப்பரால் இவர்;
பொருப்பு அனையானிடைப் போவெனே எனின்,
அருப்பம் இல் கேடு வந்து அடையும்; ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல்?' என்று, விம்மினான். 17

'அறம்தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்;
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இவ் வழித்
துறந்து போம் இதனையே துணிவென்; தொல் வினைப்
பிறந்து, போந்து, இது படும், பேதையேன்' எனா. 18

'போவது புரிவல் யான்; புகுந்தது உண்டு எனின்
காவல்செய் எருவையின் தலைவன் கண்ணுறும்;
ஆவது காக்கும்' என்று அறிவித்து, அவ் வழி,
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான். 19

இராவணன் தவக் கோலத்தில் தோன்றுதல்

இளையவன் ஏகலும், இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான்,
முளை வரித் தண்டு ஒரு மூன்றும், முப் பகைத்
தளை அரி தவத்தர் வடிவம், தாங்கினான். 20

ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்;
சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்;
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என,
வீணையின் இசைபட வேதம் பாடுவான். 21

பூப் பொதி அவிழ்ந்தன நடையன்; பூதலம்
தீப் பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன்;
காப்பு அரு நடுக்குறும் காலன், கையினன்;
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான். 22

தாமரைக் கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன்;
ஆமையின் இருக்கையன்; வளைந்த ஆக்கையன்;
நாம நூல் மார்பினன்; நணுகினான் அரோ-
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய். 23

தோம் அறு சாலையின் வாயில் துன்னினான்;
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்;
'யாவர் இவ் இருக்கையுள் இருந்துளீர்?' என்றான் -
தேவரும் மருள்தரத் தெரிந்த மேனியான். 24

சீதை இராவணனை வரவேற்றல்

தோகையும், அவ் வழி, 'தோம் இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர்' என்னும் சிந்தையால்,
பாகு இயல் கிளவியாள், பவளக் கொம்பர் போன்று,
'ஏகுமின் ஈண்டு' என, எதிர்வந்து எய்தினாள். 25

வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன்,
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்,
பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை,
கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான். 26

தூங்கல் இல் குயில் கெழு சொல்லின், உம்பரும்
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும்,
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்?
வீங்கின, மெலிந்தன, வீரத் தோள்களே. 27

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே. 28

'சேயிதழ் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண்
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை!' என்று, அல்லல் எய்தினான். 29

'அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே,
நிரை வளை முன் கை இந் நின்ற நங்கையின்
கரை அறு நல் நலக் கடற்கு?' என்று உன்னினான். 30

'தேவரும், அவுணரும், தேவிமாரொடும்,
கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட,
மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான்
ஏவல் செய்து உய்குவென், இனி' என்று உன்னினான். 31

'உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான். 32

ஆண்டையான் அனையன உன்னி, ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை, முறை இலோன் தனைக்
காண்டலும், கண்ணின் நீர் துடைத்த கற்பினாள்,
'ஈண்டு எழுந்தருளும்' என்று, இனிய கூறினாள். 33

இயற்கை நடுங்க இராவணன் இருந்தான்

ஏத்தினள்; எய்தலும், 'இருத்திர் ஈண்டு' என,
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்;
மாத் திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும்,
பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே. 34

நடுங்கின, மலைகளும் மரனும்; நா அவிந்து,
அடங்கின, பறவையும்; விலங்கும் அஞ்சின்
படம் குறைந்து ஒதுங்கின, பாம்பும்;-பாதகக்
கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே. 35

தீய இராவணன் வினவ சீதை விடையளித்தல்

இருந்தவன், 'யாவது இவ் இருக்கை? இங்கு உறை
அருந்தவன் யாவன்? நீர் யாரை?' என்றலும்,
'விருந்தினர்; இவ் வழி விரகு இலார்' என,
பெருந் தடங் கண்ணவள் பேசல் மேயினாள்; 36

'தயரதன் தொல் குலத் தனையன்; தம்பியோடு
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான்,
அயர்வு இலன், இவ் வழி உறையும்; அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர், பெருமையீர்!' என்றாள். 37

'கேட்டனென், கண்டிலென்; கெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன்; மலர்
வாள் தடங் கண்ணி! நீர் யாவர் மா மகள்,
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர்?' என்றான். 38

'அனக மா நெறி படர் அடிகள்; நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள்; பெயர் சனகி; காகுத்தன்
மனைவி யான்' என்றனள், மறு இல் கற்பினாள். 39

சீதையின் கேள்விக்கு இராவணன் விடையளித்தல்

அவ்வழி அனையன உரைத்த ஆயிழை,
'வௌ; வழி வருந்தினிர், விளைந்த மூப்பினிர்,
இவ் வழி இரு வினை கடக்க எண்ணினிர்,
எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர்?' என்றாள். 40

'இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்;
அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான். 41

'ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
ஊசி-வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்;
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள்
பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான். 42

'நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவNர்
சொல் பகும், மற்று, அவன் பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய நிதியம் கையன்
பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர். 43

'பொன்னகரத்தினும், பொலன்கொள் நாகர்தம்
தொல் நகரத்தினும், தொடர்ந்த மா நிலத்து
எந் நகரத்தினும், இனிய் ஈண்டு, அவன்
நல் நகரத்தன நவை இலாதன. 44

'தாளுடை மலருளான் தந்த, அந்தம் இல்
நாளுடை வாழ்க்கையன்; நாரி பாகத்தன்
வாளுடைத் தடக் கையன்; வாரி வைத்த வெங்
கோளுடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான். 45

'வெம்மை தீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன்;
செம்மையோன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்;
எம்மையோர் அனைவரும், "இறைவர்" என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான். 46

'அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனைப் பலர், அவன் தனது அருளின் இச்சையோர்;
நினைத்து, அவர் உருகவும், உதவ நேர்கிலன்;
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான். 47

'ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந் நகர்,
வேண்டி, யான் சில் பகல் உறைதல் மேவினேன்;
நீண்டனென் இருந்து, அவற் பிரியும் நெஞ்சிலேன்,
மீண்டனென்' என்றனன், வினையம் உன்னுவான். 48

சீதை-இராவணன் வாக்குவாதம்

'வேதமும் வேதியர் அருளும் வெஃகலா
சேதன மன் உயிர் தின்னும், தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏது என்?-உடலமும் மிகை என்று எண்ணுவீர்! 49

'வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்;
புனல் திரு நாட்டிடைப் புனிதர் ஊர் புக
நினைத்திலிர்; அற நெறி நினைக்கிலாதவர்,
இனத்திடை வைகினிர்; என் செய்திர்! என்றாள். 50

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான், "மறுவின் தீர்ந்தார்,
வெங் கண் வாள் அரக்கர்" என்ன வெருவலம்; மெய்ம்மை நோக்கின்
திங்கள் வாள் முகத்தினாளே! தேவரின் தீயர் அன்றே;
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும்' என்றான். 51

சேயிழை-அன்ன சொல்ல,-'தீயவர்ச் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொழ் நெறி தொடர்ந்தோர்' என்றாள்;
'மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க' என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின், அயல் ஒன்று எண்ணாள். 52

'அயிர்த்தனள் ஆகும்' என்று, ஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான்;
பெயர்த்து, அது துடைக்க எண்ணி, பிறிதுறப் பேசலுற்றான்;
'மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு, அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால், இயற்றல் ஆம் நெறி என்?' என்றான். 53

திறம் தெரி வஞ்சன், அச் சொல் செப்பலும், செப்பம் மிக்காள்,
'அறம் தரு வள்ளல், ஈண்டு இங்கு அருந் தவம் முயலும் நாளுள்,
மறம்தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும்,
இறந்தனர் முடிவர்; பின்னர், இடர் இலை உலகம்' என்றாள். 54

மானவள் உரைத்தலோடும், 'மானிடர், அரக்கர்தம்மை
மீன் என மிளிரும் கண்ணாய்! வேர் அற வெல்வர் என்னின்,
யானையின் இனத்தை எல்லாம் இள முயல்கொல்லும்; இன்னும்,
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும்' என்றான். 55

'மின் திரண்டனைய பங்கி விராதனும், வெகுளி பொங்கக்
கன்றிய மனத்து வென்றிக் கரன் முதல் கணக்கிலோரும்,
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும்' என்றாள்-
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக் கண் நீர் அருவி சோர்வாள். 56

'வாள் அரி வள்ளல்; சொன்ன மான் கணம் நிருதரானார்;
கேளொடு மடியுமாறும், வானவர் கிளருமாறும்,
நாளையே காண்டிர் அன்றே; நவை இலிர், உணர்கிலீரோ?
'மீள அருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம்?' என்றாள். 57

மாய வேடம் சிதைய இராவணன் சீற்றத்துடன் எழல்

தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை,
தானுடைச் செவிகளூடு தவழுற, தளிர்த்து வீங்கும்
ஊனுடை உடம்பினானும், உரு கெழு மானம் ஊன்ற,
'மானிடர் வலியர்' என்ற மாற்றத்தால், சீற்றம் வைத்தான். 58

சீறினன், உரைசெய்வான், "அச் சிறு வலிப் புல்லியோர்கட்கு
ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல்,
தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது, பூளைவீ என வீவன்' அன்றே? 59

'மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினை இடிக்க வேண்டின்,
நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின், பல வினை-சில சொல் ஏழாய்!
யார் எனக் கருதிச் சொன்னாய்?-இராவணற்கு அரிது என்?' என்றான். 60

'அரண் தரு திரள் தோள்சால உள எனின், ஆற்றல் உண்டோ?
கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்
திரண்ட தோள் வனத்தை எல்லாம், சிறியது ஓர் பருவம் தன்னில்,
இரண்டு தோள் ஒருவன் அன்றோ, மழுவினால் எறிந்தான்?' என்றாள். 61

என்று அவள் உரைத்தலோடும், எரிந்தன நயனம்; திக்கில்
சென்றன திரள் தோள்; வானம் தீண்டின மகுடம்; திண் கை
ஒன்றொடு ஒன்று அடித்த, மேகத்து உரும் என் எயிற்றின் ஒளி
மென்றன் வெகுளி பொங்க, விட்டது மாய வேடம். 62

இராவணனின் அரக்க வடிவு கண்டு சீதை ஐயுறல்

'இரு வினை துறந்த மேலோர் அல்லர்கொல் இவர்?' என்று எண்ணி,
அரிவையும், ஐயம் எய்தா 'ஆர் இவன் தான்?' என்று, ஒன்றும்
தெரிவு அரு நிலையளாக, தீ விடத்து அரவம் தானே
உரு கெழு சீற்றம் பொங்கி, பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான். 63

ஆற்றவெந் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்;
ஏற்றம் என் நினைக்கல் ஆகும்? எதிர் அடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை; செய்யும் வினை இல்லை; வரிக்கல் ஆகாக்
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என, குலைவு கொண்டாள். 64

'விண்ணவர் ஏவல் செய்ய, வென்ற என் வீரம் பாராய்;
மண்ணிடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்;
பெண் எனப் பிழைத்தாய் அல்லை; உன்னை யான் பிசைந்து தின்ன
எண்ணுவென் என்னின், பின்னை என் உயிர் இழப்பேன்' என்றான். 65

'குலைவுறல், அன்னம்! முன்னம், யாரையும் கும்பிடா என்
தலைமிசை மகுடம் என்ன, தனித்தனி இனிது தாங்கி,
அலகு இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய,
உலகம் ஈர்-ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி' என்றான். 66

சீதையின் கற்பு

செவிகளைத் தளிர்க் கையாலே சிக்குறச் சேமம் செய்தாள்;
'கவினும் வெஞ் சிலைக் கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை,
புவியிடை ஒழுக்கம் நோக்காய்; பொங்கு எரி, புனிதர் ஈயும்
அவியை நாய் வேட்டதென்ன, என் சொனாய்? அரக்க!' என்னா, 67

'புல் நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற
என் உயிர் இழத்தல் அஞ்சி, இற் பிறப்பு அழிதல் உண்டோ?
மின் உயிர்த்து உருமின் சீறும் வெங் கணை விரவாமுன்னம்,
உன் உயிர்க்கு உறுதி நோக்கி, ஒளித்தியால் ஓடி' என்றாள். 68

என்று அவள் உரைக்க, நின்ற இரக்கம் இல் அரக்கன், 'எய்த
உன் துணைக் கணவன் அம்பு, அவ் உயர் திசை சுமந்த ஓங்கல்
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால்,
குன்றிடைத் தொடுத்து விட்ட பூங் கணைகொல் அது' என்றான். 69

அணங்கினுக்கு அணங்கனாளே! ஆசை நோய் அகத்துப் பொங்க,
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி, உம்பர்க்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள்' என்னா,
வணங்கினன்-உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான். 70

சீதை இலக்குவனை அழைத்தல்

தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும்,
கறை வாள் பட ஆவி கலங்கினள்போல்,
'இறைவா! இளையோய்!' என ஏங்கினளால்-
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள். 71

இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்து ஏகுதல்

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்
தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயர்
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,
கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல். 72

கொண்டான் உயர் தேர்மிசை; கோல் வளையாள்
கண்டாள்; தனது ஆர் உயிர் கண்டிலளால்;
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால்;
விண்தான் எழியா எழுவான் விரைவான். 73

சீதை அரற்றுதல்

'விடு தேர்' என, வெங் கனல் வெந்து அழியும்
கொடிபோல் புரள்வாள்; குலைவாள்; அயர்வாள்;
துடியா எழுவாள்; துயரால் அழுவாள்;
'கடிதா, அறனே! இது கா' எனுமால். 74

'மலையே! மரனே! மயிலே! குயிலே!
கலையே! பிணையே! களிறே! பிடியே!
நிலையே உயிரே? நிலை தேடினிர் போய்,
உலையா வலியாருழை நீர் உரையீர்! 75

'செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்;
மஞ்சே! பொழிலே! வன தேவதைகாள்!
"அஞ்சேல்" என நல்குதிரேல், அடியேன்
உஞ்சால், அதுதான் இழிவோ?' உரையீர்! 76

'நிருதாதியர் வேர் அற, நீல் முகில் போல்
சர தாரைகள் வீசினிர், சார்கிலிரோ?
வரதா! இளையோய்! மறு ஏதும் இலாப்
பரதா! இளையோய்! பழி பூணுதிரோ? 77

கோதாவரியே! குளிர்வாய், குழைவாய்!
மாதா அனையாய்! மன்னே தெளிவாய்;
ஓதாது உணர்வாருழை, ஓடினை போய்,
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ? 78

'முந்தும் சுனைகாள்! முழை வாழ் அரிகாள்!
இந்தந் நிலனோடும் எடுத்த கை நால்-
ஐந்தும், தலை பத்தும், அலைந்து உலையச்
சிந்தும்படி கண்டு, சிரித்திடுவீர். 79

எள்ளி நகையாடும் இராவணனைச் சீதை இடித்துரைத்தல்

என்று, இன்ன பலவும் பன்னி, இரியலுற்று அரற்றுவாளை,
'பொன் துன்னும் புணர் மென் கொங்கைப் பொலன்குழாய்! போரில் என்னைக்
கொன்று, உன்னை மீட்பர் கொல், அம் மானிடர்? கொள்க' என்னா,
வன் திண் கை எறிந்து நக்கான் - வாழ்க்கைநாள் வறிது வீழ்ப்பான். 80

வாக்கினால் அன்னான் சொல்ல, 'மாயையால் வஞ்ச மான் ஒன்று
ஆக்கினாய், ஆக்கி, உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றைப்
போக்கினாய்; புகுந்து கொண்டு போகின்றாய்; பொருது நின்னைக்
காக்குமா காண்டி ஆயின், கடவல் உன் தேரை' என்றாள். 81

மீட்டும் ஒன்று உரைசெய்வாள்; 'நீ வீரனேல், "விரைவில் மற்று உன்
கூட்டம் ஆம் அரக்கர்தம்மைக் கொன்று, உங்கை கொங்கை மூக்கும்
வாட்டினார் வனத்தில் உள்ளார், மானிடர்" என்ற வார்த்தை
கேட்டும், இம் மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ? 82

இராவணன் கூற்றுக்கு சீதை எதிர்மொழி கூறல்

மொழிதரும் அளவில், 'நங்கை! கேள் இது; முரண் இல் யாக்கை
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால்,
விழி தரும் நெற்றியான் தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப்
பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும், வஞ்சம்' என்றான். 83

பாவையும் அதனைக் கேளா, 'தம் குலப் பகைஞர் தம்பால்
போவது குற்றம்! வாளின் பொருவது நாணம் போலாம்!
ஆவது, கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்!
ஏவம் என், பழிதான் என்னே, இரக்கம் இல் அரக்கர்க்கு? என்றாள். 84

மிகைப் பாடல்கள்

ஓவரு கவனம்மது உற்றுச் சென்றுளான்,
பாவரு சாலையுள் பொருந்த நோக்குறா,
'யாவர், இவ் இருக்கையுள் இருந்த நீர்?' என்றான் -
தேவரும் இடர் உறத் திரிந்த மேனியான். 24-1

'மேனகை, திலோத்தமை, முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து, அவன் தன் மாட்சியால்
ஊனம் இல் அடைப்பை, கால் வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே. 43-1

'சந்திரன், இரவி என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர், ஈண்டு, அவன்
கந்து அடு கோயிலின் காவலாளரே. 43-2

என்றனள்; அபயம், புட்காள்! விலங்குகாள்! இராமன் தேவி,
வென்றி கொள் சனகன் பேதை, விதியினால் அரக்கன் தேர்மேல்
தென் திசைசிறைபோகின்றேன்; சீதை என் பெயரும் என்றாள்;
சென்று அது சடாயு வேந்தன் செவியிடை உற்றது அன்றே. 84-1



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home