Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார்  -  ஒரு பார்வை.
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார்  - ஒரு பார்வை.

"ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது..."

Kittu - Sathasivam Krishnakumar
Kittu

Gramsci Thileepan Fast to Death
Gramsci Thangathurai Thileepan
Emerson Gorky Che Guvera

இத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937)  அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன். புத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி

"ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது"

என்று கூறினார்.

ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.

மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது.

கறுப்பு யூலை தமிழர்களை அவர்தம் தாயகம் நோக்கி ஓடவைத்தது. அவர்களில் பலர் பல நாடுகள் நோக்கி ஓடினார்கள். இன்று அவர்கள் தங்கள் தாயகத்தில் அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு வதை முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேசிய விடுதலைக்காக நாடோடியாக மாறிய கிட்டு என வாஞ்சையோடு அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் :

நாடிருந்தும்
நாடோடியாக
நாளெல்லாம்
நாடெல்லாம்
ஓடுகின்றேன்
ஓடுவதற்கு உடல் வலு தேவையில்லை
மனவலு இருந்தால் மட்டும் போதும்
ஓடுவதற்கு கால் எனக்குத் தேவையில்லை
போதிய உளஉரம் வேண்டும்
ஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதிபெறுகின்றேன்
நாம் ஓடாமல் இருப்பதற்கு
ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும்

என்று ...தனக்கே உரிய அழகான ஆளுமையுடன் கூறுகின்றார்.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம், தங்கத்துரை, கிட்டு, திலீபன் எனப் பல புத்திஜீவிகளை உருவாக்கியுள்ளது. அவர்களில் கிட்டு என்ற புத்திஜீவி பற்றியே எனது பார்வை இடம் பெறுகிறது.

"கிட்டு ஓரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு." எனகிறார் கிட்டுவை ஆட்கொண்ட தேசியத் தலைவர்.

"தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய உண்மையான ஒரு தமிழ் புத்திஜீவி கிட்டு" என்கிறார், அவரால் ஆட்கொள்ளப்பட்ட திரு நடேசன் சத்தியேந்திரா.

அவ்வாறான கிட்டுவைப்பற்றி எமது பார்வையைத் திருப்பு முன்னர், புத்திஜீவி என்றால் யார்? புத்திஜீவியின் இலக்கணம் என்ன? பண்புகள் என்ன ? என்பவை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.

ஆங்கிலத்தில் Intellectual  என்று கூறப்படும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பே புத்திஜீவி என்னும் பதமாகும். ஆனால் ஆங்கிலச் சொல் உருவாவதற்கு முன்பே தமிழில் சான்றோன் என்ற பதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்துள்ளது. சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும், அவர்களின் பாடல்களை சான்றோர் இலக்கியங்கள் என்றும் அழைப்பர். சங்ககாலத்தின் பின் எழுந்த திருக்குறளும் சான்றோன் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளது.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்,

என்னும் குறள் இதற்கு ஒரு உதாரணமாகும்.

ஆனால் சங்க இலக்கியங்கள் கூறும் சான்றோருக்கும், வள்ளுவர் காணும் சான்றோருக்கும் வேறுபாடுகள் உண்டு. காதலையும் வீரத்தையும் பாடிய சங்கச் சான்றோர் சமுதாய மாற்றங்களின் கருவியாகச் செயல்பட, திருக்குறள் காட்டும் சான்றோர் கல்வி அறிவு மிக்கவர் என்ற அர்தத்தைப் பெறுகின்றனர்.

பின் வந்த பக்திநெறிக் காலத்தில் சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் போன்ற சமய குருவர் சான்றோராகப் போற்றப்படுகின்றனர். சமுதாய மாற்றங்கள் புத்திஜீவி பற்றிய வரைவிலக்கணத்தையும் காலத்திற்குக் காலம் மாற்றுவதைக் காண்கின்றோம்.

அந்தவகையில் நவீன அரசின் தோற்றத்தோடும், அந்த அரசுகளுக்கு உள்ளே காணப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடனும் புத்திஜீவியின் பண்புகளும் மாற்றம் அடைவதைக் காண்கிறோம்.

"Intellectuals are to be considered as formulators of the nationalist ideology. Their task does not end here, however, since many of them also act as agitators and mobilizers of the nationalist movement. It has to be added that not all intellectuals perform both functions. In the case of a nation without a state of its own, its intellectuals' discourse is opposed by the state's intellectuals, some of whom will operate within the territory of the national minority defending the status quo, questioning its nationalist ideology and displaying a clear 'pro-state nationalist' attitude." Nations without States: Political Communities in a Global Age, by Montserrat Guiberna

இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க புத்திஜீவிகளில் ஒருவரான எமர்சன் ( Ralph Waldo Emerson ) " The American Scholar "  என்னும் புகழ்பெற்ற கட்டுரையில் புத்திஜீவி என்பவன் பூரண மனிதனைக் குறிக்கும் " ஒரு மனிதன் " என்கிறார்.

அந்த ஒரு மனிதனுள் பல ஆற்றல்களும், செயல்களும் ,வெளிப்படும் எனக் கூறும் எமர்சன் அந்த மனிதனை உருவாக்குவதில், இயற்கை, புத்தகங்கள், செயல்கள் ( nature, books and action)  என்பன ஆதிக்கம் செலுத்தும் எனவும், அவரின் செயல்பாடுகள் அவரது குணநலனின் வெளிப்பாடு என்றும், குணநலன் புத்தியைவிட உயர்வானது எனவும் கூறுகிறார். (Character is higher than intellect ) எமர்சன் கூறும் ஒரு மனிதனில் " விவசாயி, பேராசிரியர், பொறியியலாளர், சமயகுரு, அறிஞன், போர்வீரன், கலைஞன் " என்னும் பன்முக ஆற்றல்கள் புதைந்து கிடக்கும் . இந்தப் புத்திஜீவி

தன்காலத்தின் எல்லா ஆற்றல்களையும்
கடந்த காலங்களின் அர்ப்பணிப்புக்களையும்
எதிர்காலத்தின் நம்பிக்கையையும்

தன்னுள் சுமக்கின்றான் என்கிறார் எமர்சன்.

"The scholar is that man who must take up into himself all the ability of the time, all the contributions of the past, all the hopes of the future."

 எமர்சன் கூறும் "ஒரு மனிதன்" பெண்களை உள்ளடக்கவில்லை என்ற குறைபாடு அவர்மேல் சிலரால் சுமத்தப்படுகிறது.

எமர்சன், கிறாம்சி போன்றோர் கூறும் வரைவிலக்கணங்களுக்கு இலக்கியமாக விளங்கக்கூடிய புத்திஜீவிகளை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கியுள்ளது என்பதே எமது வாதமாகும்.

19 வயதிலேயே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிட்டு சமாதான முன்னெடுப்புடன் சர்வதேச சமாதான உலகிற்கு தெரியப் படுத்திய நிலையில் ஜரோப்பாவில் இருந்து தன் மண்ணை நோக்கி கப்பலில் பிரயாணம் செய்தபோது சர்வதேச கடற்பரப்பில்வைத்து இந்தியக் கடல்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பலவந்தமாக இந்திய கடற்பரப்புள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சரண் அடையாது வங்கக் கடலில் சங்கமமாகியபோது அவருக்கு வயது 31 மட்டுமே.

 

"On Wednesday 13 January 1993 the ship, M.V.Ahat was unlawfully interceptedby the Indian Navy in international waters in the Indian Ocean. The ship was intercepted about 290 miles east of Hambantota in the south of the island of Sri Lanka and about 440 miles south east of South India (Latitude 6 degrees North, Longitude 85 degrees East).The boat was carrying Sathasivam Krishnakumar, (also known as Kittu), one time Deputy Leader of the Liberation Tigers of Tamil Eelam (and one of its founding members), and several other members of the LTTE. The ship was then forced to travel towards the South Indian coast by Indian Navy frigates.... Nine survivors from the M.V.Ahat were arrested by the Indian Navy and lodged in solitary cells in a special wing of Vishakapatnam jail with maximum security. They were charged with criminal conspiracy, shipment of explosives and threatening Navy officials under the TADA Act. The TADA court judge, Mr.P. Lakshman Reddy, rejected the submissions of the Prosecution as well as the charge of carrying explosives against the crew, and held that the Navy and the investigating agencies, including the Central Bureau of Investigation and the Special Investigating Team, had failed to prove their charges against the crew of the MV Ahat. The Judge said there was no case under the TADA Act against the  accused as they were brought forcibly into the Indian waters and  also there was no evidence of any offence. He agreed with the  defence argument that the Coast Guard ship was not justified in  intercepting m. v. Yahat, when it was in international waters and  when the accused had revealed that the ship belonged to Honduras. Dissatisfied with the judgment of the Trial Court, the Prosecution appealed to the Indian Supreme Court. But the Supreme Court upheld the Trial Court finding and ordered the release of the accused... The Indian authorities, faced with the decision of the Indian Supreme Court, adopted an interesting approach. They re arrested all the freed accused on charges of entering India without valid travel documents! " India's Act of Piracy, 1993

சாவை வென்ற கிட்டு ஒரு போராளியாக, தளபதியாக. ஓவியனாக, சமையல்காரனாக, அரசியல் ஞானியாக, ஆத்மீகவாதியாக, கலைஞனாக பன்முக ஆற்றல்களை உள்ளடக்கிய எமர்சன் கூறும் " ஒரு மனிதன் ".

இவரை அறியாதோர் ஓரளவு தன்னும் இவர் பற்றிய தேடலில் ஈடுபடுவதற்கு இவரின் வீர மரணத்தைத் தொடர்ந்து இவரது தோழர்களால் வெளியிடப்பட்ட "தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு " என்ற நூலும், புலம் பெயர்ந்து இருந்த காலத்தில் கிட்டு தன் காதலிக்கு எழுதிய " என் இனியவளுக்கு " என்ற மடல்களும் உதவியாக உள்ளன எனலாம்.

கிட்டுவைப்பற்றி அவரது தோழர்களில் ஒருவரான ச.பொட்டு கூறுகையில் ...குட்டிசிறியின் மோட்டார் செல் லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதில் இருந்து , நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை, எல்லாக் காரியங்களிலும் செய்வன திருந்தச் செய்தார் எனக் கூறுகிறார்.

செய்யும் தொழிலே தெய்வம் ,அதில் திறமைதான் தமது செல்வம் என்ற கீதாசாரத்தை வாழ்வாக்கிய கிட்டு " போராளிகளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை என்றாலும் அதை எப்படி வெள்ளையாகத் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன் " என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

போராட்டச் சுஸ்ரீழலில் சிறுவர்களின், குழந்தைகளின் மனநிலை. உளநிலை பாதிக்கப்படுவதை உணர்ந்த கிட்டு அவர்களுக்காக பல சிறுவர் பூங்காக்களை உருவாக்கியதை நாம் அறிவோம்.

அதேபோல் போராட்டச் சுஸ்ரீழலில் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வு குன்றாமல் இருப்பதற்காக அந்த மக்களுக்கு நன்கு பரிச்சியமான கலை வடிவங்களான வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, நாடகம் என்பன மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

போராளிகள் மத்தியில் புரட்சிகரமான அரசியல் சிந்தனைகளை செப்பனிடுவதற்காக வாசிப்புக்களை தூண்டியதோடு அவ்வாறான வாசிப்பிற்கு உரிய புத்தகங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வாறான புத்தகங்களில் ஒன்று றஸ்சிய நாவலாசிரியர் மக்சிம் கோர்கியின் " தாய் " என்னும் நாவல் என அவர் சகபாடி பொட்டு கூறுகிறார். இந்த நாவலை வாசிக்கத் தூண்டியதோடு அவர்கள் வாசித்து முடிந்ததும் அவைபற்றிய கருத்துப் பரிமாற்றங்களைச் செய்தாராம்.

இந்த இடத்தில் இந்த நாவலை வாசியாதோரை கருத்தில்கொண்டு சில வார்த்தைகள் கூறுவது பலனாக இருக்கும்.

புகழ்பூத்த றஸ்சிய நாவலாசிரியர்களில் ஒருவரான Maxim Gorky   என்பவரால் 1905 ஆம் ஆண்டில் இடம் பெற்ற றஸ்சியப் புரட்சியின்போது எழுதப்பட்ட அழியா ஓவியம் இந்த " தாய் " . இதில் வரும் பெலகீயா (Pelageya ) ஒரு பட்டிக்காடு. படிப்பறிவற்றவள். ஆலைத் தொழிலாளி ஒருவரின் மனைவி. தாழ்வுற்று வறுமைமிஞ்சி ,விடுதலை தவறிக்கெட்டு ,பாழ்பட்டு நின்ற தங்கள் நிலமையை விதிவசம் என ஏற்றுக்கொண்டவள். ஆனால் இந்தத் தாயின் மகன், நாவலின் கதாநாயகனான பவல் (Pavel Mikhailovich )  ஒரு இளம் ஆலைத் தொழிலாளியாக இருந்தபோதும் நன்கு வாசிப்பவன், ஒரு கருமயோகி, ஒரு புத்திஜீவி. ஒரு புரட்சியாளன்.

ஆரம்பத்தில் மகனில் ஏற்பட்ட மாற்றங்களை, அவனின் புதிய நண்பர்களை, அவன் வாசிக்கும் நூல்களை எதுபற்றியும் அறியாது இருந்த தாய் கால ஓட்டத்தில் அவனை அவன் நண்பர்களை, அவர்கள் செயற்பாடுகளை உன்னதமான, தூய்மையான காரியங்களாக நோக்கத் தொடங்குகிறாள். வாசிக்க கற்றுக்கொள்கிறாள்.

அதிகாரவர்க்கத்தால் பவல் கைது செய்யப்படுகிறான். அந்தத் தாய் புரட்சிகரமான துண்டுப்பிரசுரங்களை ஆலைக்குள் இரகசியமாக கொண்டு செல்லும் அளவிற்கு மாற்றம் அடைகிறாள். வழக்கு விசாரணை நடைபெறுகிறது. புரட்சியைத் தூண்டியவன் என பவல் சைதூரியாவிற்கு நாடு கடத்தப்படுகிறான். ஆனால் அவன் மூட்டிய விடுதலைத் தீ  பரவுகிறது. அவன் தாயும் அதற்கு விலக்கல்ல . நெஞ்சை நெருப்பாக்கும் சொற்களால் கதையைப் பின்னுகிறார் கோர்கி.

இதில் வரும் வழக்குரைகாதை, அதில் யாரின் துணையின்றியும் வாதாடும் பவலின் வாதம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் வழக்குரைகாதையை, சோக்கிரட்டிஸ் வழக்கை எம் கண்முன் நிறுத்தும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அலிப்பூர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்தர் அவரின் சட்டத்தரணியான இளம் சித்தரஞ்சன் தாஸ்போல் தன் கதாநாயகன் பவல் மூலம் கோர்கி உதிரவிடும் சொற்கள் இரத்தத்தோடும் சதையோடும் பீறிட்டுபாய்வதை தமிழ்மொழிபெயர்ப்பிலும் காணலாம்.

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் இது போன்ற வழக்குரைகாதை உண்டு. திரு நடேசன் சத்தியேந்திரா தங்கத்துரை சார்பில் தோன்றியபோதும் கோர்கியின் பவலாக தங்கத்துரை மாறிய காட்சி ஒரு உன்னதமான அரசியல் அரங்கம் (a poweful political theatre )  எனலாம். இவைபற்றி பிறிதொரு சமயம் எம் பார்வையைச் செலுத்துவது காலத்தின் தேவை.

கோர்கியின் நாவல் கிட்டுவை ஆகர்சித்ததில் அதிசயம் இல்லை.

கிட்டுவின் புத்திக் கூர்மைக்கும் அதனை வெளிப்படுத்தும் படைப்பு ஆற்றலுக்கும் உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அவர் ஜரோப்பாவில் ஒழித்து ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழீழத்தின் எல்லைகள் எது என்ற கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் கிட்டுவிடம் கேட்கிறார். சற்று யோசித்துவிட்டு கிட்டு கூறிய பதில் பத்திரியையாளரை வியக்க வைத்தது. இலங்கையின் வரைபடத்தை எடுத்து அதில் சிறிலங்கா அரசின் போர்விமானங்கள் குண்டு வீசிய இடங்களுக்கு சாயம் பூசினால் முடிவில் தமிழீழத்தையும் அதன் எல்லைகளையும் காணலாம் எனக் கூறினாராம்.

சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் சிங்கள இளைஞர் ஜே.வி.பி அணியாகப் புரட்சி செய்தபோது அவர்கள் குரூரமாக அழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருந்த பகுதிகளில் விமானக் குண்டு வீச்சுக்கள் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கிட்டு தன் மண்ணைவிட்டு பிரிந்து இருந்ததை தாங்க முடியாது தவித்ததை தன் இனியவளுக்கு எழுதிய மடல்களில் கொட்டும் விதம் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியை எம் கண்முன்னே நிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக,

".....அங்கு
தெருவோரத்துச் சொறிநாய்களும்
கோபம் கொண்டு
அலையாய் மோதும்
மாரிக் கடலும்
அடித்து, அடங்கி
வற்றிப்போகும்
கோடைக் கடலும்
பகலில் மகளிர் கல்�ரிகளைச் சுற்றும்
விடலைப் பையன்களும்
இங்கு காணமுடியாது, ஆனால்
காணத் துடிக்கிறேன் ...."

கிட்டுவின் படைப்பு ஓசையில் அயர்லாந்து தேசத்தின் குடிமனைகளும், கிராமப்புறங்களும் வயல்வெளிகளும் எப்படி இருக்கவேண்டும் எனக் கனவு கண்ட டி வலறாவின் குரலையும் கேட்கிறேன்.

இன்னொரு மடலில் ஆத்மீகத்தை தேடும் கிட்டு அந்த ஆத்மீகத்தை போராட்டத்தின் நோக்கமாக அதன் தேடலாகக் காண்கிறார்.

" வறியவர்களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்றது
இந்நிலை மாற வேண்டும்
விறகு கொத்தும் கந்தனும்
கள்ளு வடிக்கும் பூதனும்
கோவணத்துடன் தோட்டம் கொத்தும் ராமையாவும்
கரவலை இழுக்கும் போபுவும்.....

கிட்டுவின் காட்சியில்வர இவர்களின் வாழ்வு வளம்பெற உழைப்பது ஆத்மீகமாகிறது.

" இதைத்தான் ஆத்மீகமும் சொல்கிறது, புரட்சியும் சொல்கிறது
ஆத்மீகம் போதிக்கிறது, புரட்சி வழிகாட்டுகின்றது.
ஆத்மீகமும் புரட்சியும் வேறல்ல
இரண்டும் ஒன்றுதான் "

அதிசயிக்கத் தக்க வகையில் தன் கடைசி நாட்களில் ஆத்மீகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

" ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கின்றது. ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். எம்முள்ளே இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். தேடல் என்பது எம்முள்ளே இருக்கும் அழுக்குகளை அகற்றுவதைதான் குறித்து நிற்கின்றது "

தன் இனியவளுக்கு வரைந்த கடைசி மடலில்:

போராட்டம் புரட்சி என்பவையை சேவையின் உயர் வடிவமாக் காணும் கிட்டு அதற்காக

" சனங்களிடையே ஆன்ம விழிப்பு ஏற்படுத்துவது அவசியம். உண்மையையும் சத்தியத்தையும் தம்முடைய வாழ்வின் உயரிய லட்சியமாகக் கொள்வதற்கு மக்களைப் பயிற்றுதல் வேண்டும். எம்மால் புரிந்துகொள்ள முடியாத கடவுளைத் தேடுவதை விட நாம் சாதிக்கக்கூடிய சத்தியத்தைத் தேடுவது மேலானது.
சத்தியம் என்பது வார்த்தையிலும் செயலிலும் உண்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உள்ளத்திலும் உண்மையுடன் இருப்பதுமாகும் "

" நாம் உண்மையுடனும் சரியாகவும் நடக்க வேண்டியதே எமது கடமை. எமது கடமையின் உண்மை எம்மைச் சரியான பாதையிலேயே இட்டுச் செல்லும்.

தன் இனியவளுக்கு அவர் எழுதிய கடைசி வரிகளான

" வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எமக்கு ஏற்படும் சோதனையாகத்தான் கொள்ளவேண்டும். எவ்வித சோதனைகளையும் எதிர்நின்று வெற்றி பெறுவோம் "

என்பது தமிழ் இனத்திற்கு அவர் விட்டுச் சென்ற ஆணையும் உறுதியும். இதில் உள்ள சோதனையும் வேதனையும் என்னவென்றால் சத்தியமே வெல்லும் என்னும் வேதவாக்கியத்தை தன் இலச்சனையில் தாங்கி நிற்கும் இந்தியப் பேரரசு கிட்டு என்ற " ஒரு மனிதனின் " மரணத்தை சம்பவித்ததாகும்.
தொலை நோக்குக் கொண்ட கிட்டு ,விழிப்புப் பற்றி தன் கடைசி வாசிப்புக்களைச் செய்த கிட்டு இதனையும் அறிந்திருந்தாரோ?

சே குவரா, காந்தி, அரவிந்தர் ஆகியோரின் வாழ்க்கைக் கோலங்களையும் எமர்சன், கிறாம்சி என்பாரின் எழுத்தோவியங்களையும் வாழ்வாக்கிய கிட்டு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்துள் இருந்து வந்த ஒரு உண்மையான புத்திஜீவி. அதே சமயம் அந்தப் போராட்டமும் இவரால் வலுப்பேற்றது. கிட்டு கூறுவதுபோல், எமது கடமை அந்தக் கடமையின் உண்மை எம்மை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home