Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > அழிவும் ஆக்கமும் - தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வின் கனவை மறக்கலாமா

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

அழிவும் ஆக்கமும் - தோல்வி நிலையென நினைத்தால்

வாழ்வின் கனவை மறக்கலாமா

14 March 2009


அன்னிய  சிங்கள அடக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப்போர் இன்று அழிவுகளின் மத்தியில் குரூரமான கொடிய காடசிகளை எம்கண்முன் காட்டி நிற்கின்றது. சொந்தச் சகோதரர்கள் அங்கு கொத்துக் கொத்தாக மடிவதைத் தினமும் பார்த்து செய்வதறியாது துடிக்கும் புலத்தமிழர்கள் மனம் சோர்ந்து துன்பத்தில் சுழல்வதை காண்கின்றோம்.

இதே கொடுமைகள் ஆபிரிக்க மக்களுக்கோ, பாலஸ்தீனியர்களுக்கோ நிகழும்போதும் நாம் உருகியிருப்போம். செஞசிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு துயர் துடைக்கும் பணத்தை அனுப்பி ஒருவகை மனச்சாந்தியும் பெற்றிருப்போம். ஆனால் எங்கள் உடன்பிறப்புக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதானால் எம்மால் உறங்க முடியவில்லை, சிரிக்கமுடியவில்லை, சாதாரண வாழ்வின் இன்பதுன்பங்களை அனுபவிக்க முடியவில்லை. இது இயற்கை. தானாடாவிட்டாலும் சதையாடும் இரத்த பாசம்.

உன்னதமான இலடசியத்தின் பொருட்டு நிகழும் அழிவுகள் என்பதால் அது சிலுவை சுமப்பது போன்ற ஆன்மீக துயரத்தையும் அளிப்பதால் வலி எமது நெஞ்சைப் பிளக்கிறது. வலியின் ஆழமும் அகலமும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி என்னவோ செய்கிறது. முத்துக்குமாரனைப்போல், முருகதாசனைப்போல் ஆகமுடியாத பலவீனங்களும், ஆற்றாமையும் ஒருபுறம் வாட்ட, அவரவர் நிலைக்கேற்ற சுயதர்மம் என்ற அறிவுசான்ற வினோதங்கள் ஒருபுறம், சேக்ஸ்பியர் படைத்த சிக்கலான ஹம்லட் பாத்திரத்தைப்போல் வீரமும், கோழைத்தனமும், வாழ்வும் சாவும் எம்மை ஆட்டிப் படைக்கின்றது.

இந்த நிலையில் தத்துவத்தின் ஒளியில், வரலாற்றின் இயக்கத்தில், அறிவின் வெளிச்சத்தில், தோன்றி மறையும், நாளுநாள் சாகின்ற வாழ்வின் இயக்கத்தில் இவற்றை ஒரு முறை தரிசிக்கும் முயறசியே இக் கட்டுரை.

சிலுவையில் அறையப்பட்ட யேசுபிரானும் அவரின் உயிர்த்தெழலும், மரணதண்டனையில் இருந்து தப்பும் வாய்ப்பிருந்தும் அதனை விரும்பாத சோக்கிறட்டிசும், அனல் ஏந்தி ஆடும் சிவனாரின் தாண்டவமும் என் மனத்திரையில் ஏனோ அலை வீசுகிறது.

அந்த அலையில் முத்துக்குமாரனின், முருகதாசனின் தரிசனத்தை காண்கின்றேன். அதில்தான் எத்தனை சுகம். அந்த அழிவில் எத்தனை ஆக்கம். கற்பூரம், ஊதுபத்தி, வாழைமரம் என்னும் காடசிக்கோலங்கள். ஆயினும் இந்த எரியாத தீபங்கள் எம் ஊனினை உருக்கி உள் ஒழி பரப்புவதுபோன்ற பிரமை.

 இந்தத் தரிசனங்களில், பிரசவவேதனையில் துடிக்கும் ஒரு தேசத்தின் குரலாக புலிகளின் தாகமாக இருந்து தமிழரின் தாகமாக விரிவுபெற்று, விசாலம் பெற்று, விஸ்வரூப தரிசனமாகக் காடசிதரும் கோலங்கள், நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிமாணங்களை உள்வாங்கி நிற்கும் அற்புதம் என விபரிக்கமுடியாத காடசிக்கோலங்கள் மனக்குகையில் இருந்து பிரசவிக்கிறது.

என்று மனிதன் எழுத்தைக் கண்டுபிடித்தானோ அன்று வரலாறு தொடங்குகிறது என்பர் வரலாற்று அறிஞர். அதன் முன்னுள்ள காலத்தை வரலாற்றுக்கு முற்பட்டகாலம் என அழைப்பர். அதேபோல் அரசு என்ற தாபனத்தின் தோற்றத்துடனேயே மனித சமுதாயம் நாகரிக உலகில் நுழைந்ததென்பர் மானிடவியலாளர். இந்த முதல் அரசின் தோற்றத்தின் பின்னால் ஓயாத போர்களும், அழிவுகளும் இடம்பெற்றுள்ளன. இதனையே மனிதனின் முதல் வீரயுகம் எனவும் கூறுவர். வீரயுகமும், நடுகற்களும், வீரவணக்கமும், இவற்றைப் போற்றிய கவிதைகளும், இன்னபிறவும் அரசின் தோற்றத்திற்கான உடன்நிகழ்வுகள் என்பதை பண்டைய வரலாறுகள் குறித்து வைத்துள்ளன. இது புராதன பெருமை கொண்ட சுமேரியர், கிரேக்கர், எகிப்தியர், தமிழர், கெல்தியர் போன்ற இனங்களுக்குப் பொதுவானவை என்பது இவைபற்றி ஆய்வு செய்த பலரின் கணிப்பாகும் (எச்.எம்.சட்விக், நோறா சட்விக், மில்மன் பரி, கைலாசபதி உட்பட்ட).

பண்டைத் தமிழர்களின் வரலாற்றிலும் அரசு என்ற தாபனத்தின் பிறப்பின் பின்னால் ஓயாத போர்களையும் அழிவுகளையும் சங்க இலக்கியங்கள் மூலம் காண்கிறோம். பேராசிரியர் க.கைலாசபதி இவைபற்றிக் கூறுகையில் :

' சான்றோர் இலக்கியங் காட்டும் தமிழர் சமுதாயம், நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறித்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ,தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக் குழுக்கள் சிதறிக்கிடந்தன. .................................. நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப்போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலைதூக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது....."

இந்தப் பண்டைய அரசின் தோற்றத்தின் பின்னால் ஒரு வீரயுகப் பண்பாட்டையும், மாவீரர்களின் நடுகற்களையும், வீரவணக்கத்தையும், புலிச் சின்னம் பொறித்து புறம்போக்கிய ஏற்றுமதி இறகுமதி வர்த்தகத்தையும், அதன் வழியான கடல் ஆதிக்கத்தையும், மொழிவீச்சையும், கலை, பண்பாட்டு உன்னதங்களையும் திரிசிக்கின்றோம். இவற்றின் ஊற்றான பண்டைய அரசின் தோற்றத்தின் பின்னே எரியும் வயல்களை, வீடுகளை, விதவைகளை, சிறைபிடிக்கப்பட்டோரை காண்கின்றோம். அகதியாகிய பாரி மகளிரின் புலம்பல்களைக் கேட்கின்றோம்.

காலங்கள் உருள்கின்றன. போர்களின், அழிவுகளின், அகதி வாழ்வுகளின் மத்தியில்தான் நாடுகளின் எல்லைகள் மீண்டும் மீண்டும் மாறுவதையும் புதிய நாடுகள் உருவாவதையும் பார்க்கின்றோம். இவையாவும் கேட்டுப் பெற்றவை அல்ல அடித்துப் பெற்றவையே. பண்டைய அரசுகள் மாத்திரம் அல்ல இன்றைய நவீன தேசிய அரசுகளின் தோற்றத்தின் பின்னாலும் கதை ஒன்றுதான்.

விதிவிலக்காக ஆங்காங்கே சில உதாரணங்கள் இல்லாமலும் இல்லை. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1905 இல் சுவீடனில் இருந்து பிரிந்த நோர்வேயும, அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பளப்புரடசி மூலம் பிரிந்த செக், சிலேவாக்கியா நாடுகள் சில உதாரணங்கள். ஏனைய நாடுகள் அழிவில் ஆக்கம் பெற்றவையே. இந்த வரலாறு சுமையாக இருக்க இன்றைய உலக நியதியில் தொடுபட்டு நிற்கும் தமிழீழமக்களின் விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்து சமுத்திரம் ஏழு கடல்களுக்கான திறவுகோலை கொண்டுள்ளமை, அந்தச் சமுத்திரத்தின் கேந்திர அமைவிடத்தில் இலங்கைத்தீவு அமைந்துள்ளமை, இதனால் உலக வல்லரசுகள் இதில் தலையிடுபவை, அந்தத் தலையீடு அரசுக்கு அரசு என்ற நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் யதார்த்தம் என்பவை தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை சகிக்க முடியாத வேதனைகளை தாங்கிச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளது.

இந்த சகிக்கமுடியாத வேதனையை நாம் எவ்வாறு கூட்டாக எதிர்கொள்கின்றோமோ அதில்தான் அழிவில் இருந்து ஆக்கம் பெறும் வலுமையைப் பெற்றவர்களாவோம்.

இந்த இடத்தில் யூத மக்களுக்காக ஒரு நாடு வேண்டும் என 1882 இல் அந்தக் கருத்தியலின் தந்தையான தியோடர் ஹேல் கூறியது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.

' நாங்கள் ஒரு மக்கள், எங்கள் எதிரிகள் எம்மை ஒரு மக்களாக ஆக்கியுள்ளனர். அவலநிலை எம்மை ஒன்றாக இணைக்கின்றது. அதனால் ஒன்றுபட்டு தீடீராக நாம் எமது பலத்தை கண்டுகொண்டோம். ஆம் ஒரு அரசை அதுவும் ஒரு முன்மாதிரியான அரசை தாபிக்கும் பலம் எமக்குண்டு. அதற்கான எல்லா மனித வளங்களையும் மற்றும் மூலவளங்களையும் நாம் கொண்டுள்ளோம்"

"We are one people - our enemies have made us one.. Distress binds us together, and, thus united, we suddenly discover our strength. Yes, we are strong enough to form a state and a model state. We possess all human and material resources for the purpose." - *Theodor Herzl : The Jewish State, 1882 quoted in Wittamayer Baron - Modern Nationalism and Religion, New York 1947

தேசத்திற்கு, தேசியத்திற்கு விளக்கம் அளிக்கும் ஏனெஸ்ற் றெனன் என்னும் அறிஞன்:

' ..... கூட்டாக வேதனைப்படுவதும், நம்பிக்கை கொள்வதும், பொதுவான வரிகளையும், எல்லைகளையும் விட வலுவானது. ஒன்றுசேர்ந்து துன்பத்தை அனுபவிப்பது, கூட்டாக அனுபவிக்கும் மகிழ்சசியைவிட சக்திவாய்ந்தது. சொல்லப்போனால் தேசியமயமான வேதனை, வெற்றிகளைவிட மிக முக்கியமானது. ஏனெனில் அந்த வேதனைகள் கடமைகளை வலியுறுத்துகிறது, கூட்டான முயறசியை வேண்டிநிற்கிறது. தியாகங்களைச் செய்தோரதும் அதனைச் செய்ய முன்னிற்போரதும் உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு விழுமிய இணைப்பே ஒரு தேசமாகும். "

" More valuable by far than common customs posts and frontiers conforming to strategic ideas is the fact .. of having suffered together  and, indeed, suffering in common unifies more than joy does. Where national memories are concerned, griefs are of more value than triumphs, for they impose duties, and require a common effort. A nation is therefore a large-scale solidarity, constituted by the feeling of the sacrifices that one has made in the past and of those that one is prepared to make in the future."  What is a nation? - Ernest Renan, 1882

என விளக்குகிறார்.

தேசிய விடுதலைக்காக சயினயிட் குழிசையை கழுத்தில் அணிந்திருக்கும் புலி வீரர்களின் ஓர்மம்

"என் உயிரை இழந்தால் ஒழிய நான் என் சுதந்திரத்தை இழக்கமாட்டேன்" " நாம்யார்க்கும் குடியல்லோம், யமனை அஞ்சோம் "

என்ற உறுதி, இதன் வழியான தியாகம், வேதனையை சுமக்கத் தயாராகிவிட்ட நிலை, இவையாவும் கண்டங்கள் பலவற்றிலும், கடல்கள் பல கடந்தும் வாழும் தமிழர்களிடையே பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணர்வலைகள் தமிழகத்தில் முத்துக்குமாரன்களையும் புலத்தில் முருகதாசன்களையும் எரிமலைகள் என வெடிக்கப்பண்ணி அழிவில் இருந்தான ஆக்கத்திற்கு புதிய ஓடுபாதைகளை திறந்துவிட்டுள்ளது. தமிழீழம் உலகத்தமிழர்களின் தாகமாகிவிட்டதைக் கண்ட சிங்களத்தின் அடிமனத்தில் உள்ள கிலியை தயான் ஜெயதிலகா போன்றவர்களின் எழுத்துக்களில் காணமுடிகின்றது.

தமிழ்நாட்டின் முத்துக்குமாரன் தனது மரணசாசனத்தில் பின்வருமாறு கூறியுள்ளதை நாம் மனங்கொள்ளல் வேண்டும்.

'....களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே, அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கு இல்லையே. ஆனால் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலத்தில்தான் தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். ...."

கையறுகாலங்கள்தான் மனிதத்தின் பாச்சலுக்கான வாய்ப்புக்களை அளிக்கின்றது என்ற ஆழ்ந்த வரலாற்றுப் பிரக்ஞையுடன் உடன்பிறப்பு முத்துக்குமாரன் குறிப்பிடுவதை எதிர்மறை வல்லமை என (negative capability)  பிரிவுத்துயரின் பிறவிக் கவிஞன் என ஆங்கில இலக்கிய உலகில் வாஞ்சையோடு அழைக்கப்படும் யோன் கீற்ஸ் என்னும் கவிஞன் குறிப்பிடுகின்றான் எனலாம்.

சாதனை புரியும் ஒரு மனிதனுக்கு அதற்கான வல்லமை எவ்வாறு வந்தது, எங்கிருந்து வந்தது எனக்கேட்ட இளம் கவிஞன், பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது ஏற்படும் வல்லமை அது எனவும், பிரச்சனைகளுக்குள் மூழ்கிப்போகாது நிற்போரால், அந்தப் பிரச்சனையில் இருந்து விலகி அதை அணுகும் வல்லமை கொண்டவர்களால் மட்டுமே இது முடியும் என்று தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகின்றான்.

முருகதாசனோ தன் மனஅழுத்தத்தின் மத்தியிலும் தெளிவான அரசியல் ஞானத்துடன் தன் சுதந்திரதாகத்தை வருமாறு குறிப்பிடுகின்றான்.

'...தமிழ் தேசம், சிங்கள தேசம் ஆகியவற்றின் வாழிடமே இலங்கைத் தீவு என்பது தமிழ் மக்களின் உறுதியான மாற்றமுறாத கருத்து நிலைப்பாடாகும். இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கும் அடிப்படையில்தான் இரு தேசங்களினதும் உண்மையான பிரதிநிதிகள் அதாவது இரண்டு தேசங்களினதும் எதிர்கால பாதுகாப்பு, பரஸ்பர நலன் போன்றவற்றிற்காக எவ்வாறு இரண்டு தேசங்களும் கூடிச் செயற்பட்டு தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு நீதியான நீடித்து நிற்கக்கூடிய தீர்வைக் காணலாம் என்பது குறித்து பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் .

இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள இனத்தவருக்கு உரித்தானது என்ற கொள்கை நிலைப்பாட்டினால்தான் சிங்களவர்களோடு சமத்துவமாக வாழும் ஒர் அரசியல் ஏற்பாட்டை பேச்சு மூலம் காண்பதற்கு தமிழினம் எடுத்த அனைத்து முயறசிகளும் தோற்றுப் போயின. சமத்துவமான தமிழ் தேசம் உள்ளது என்ற இந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதற்கு மறுத்த இந்த பௌத்த சிங்கள இன ரீதியிலான தேசியவாதமே இன அழிப்பு நோக்கிலான போர் வழித் தீர்விற்கு சிறிலங்கா அரசைத் தள்ளியுள்ளது. "

முருகதாசனின் இந்தச் சொற்களுக்கு அழுத்தமும் வேண்டுமா?. இவர் தேசத்தின் குரலுமல்ல. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ்த் தேசியத்திற்கு மாற்றுத் தலைமை தேடும் சர்வதேச பிரச்சனைகளுக்கான குழுவினருக்கு முருகதாசனின் மரண சாசனம் கசப்பினையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

சங்கப்புலவர் மாங்குடி மருதனார் பாண்டிநாட்டு வீரர்களை பாடும்போது

" துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர் "

எனப் பாடுகின்றார். இன்று களத்திலும் புலத்திலும் நாம் துஞ்சாது அஞ்சாது செயல்பட வேண்டும். கொடியை என்றும் இல்லாத அளவில் தூக்கிப் பிடிக்கும் காலத்தின் தேவையும் இது. இரண்டு உலகமகா யுத்தங்களின் அழிவில் இருந்து ஆக்கம் பெற்ற தேசங்களே இன்று எமது போராட்ட சக்திக்கு தடைவிதித்துள்ளது. இதன் பின்னுள்ள அரசியலை விளங்கி செயல்படுவோம். தடைகள் உடைக்கப்படும். விடியலுக்கு இல்லைத் தூரம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
 


"வாழ்க ஈழத் தமிழகம்,  தலை நிமிர்ந்து வாழ்கவே..."

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home