Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > தமிழ்த் தேசியமும் தனிதாயகம் அடிகளாரும்
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழ்த் தேசியமும் தனிதாயகம் அடிகளாரும்

13 February 2007


உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் என்றதுமே பலரின் கண்முன் வருபவர் தனிநாயகம் அடிகளார் என்றால் அது மிகையாகாது. இன்று பலரும் மேடைகளில் தம் பேச்சின் ஆரம்பத்தில் அல்லது முடிவில்:

" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே "

எனக் கூறுவதைக் கேட்கின்றோம்.

திருமுலரின் திருமந்திரத்தில் 81 ஆவது பாடல்:

" பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே "

இதில் முதல் இரு அடிகள் எமது பிறப்பின் இருப்பை எமது செயல்களே நிர்ணயிக்கின்றன என்ற கருத்தையும் கடைசி இரு அடிகள் நல்வினைகளின் விளைவால் வரும் பிறப்பு அன்பின் வழி சிவத்தைத் தேடும் என்ற அர்த்தத்தையும் தருகின்றது.

இந்த அன்பு தமிழாக, பக்தியாக ,ஆர்வத்தோடு வாழ்ந்த வாழ்வாக அடிகளாருக்கு அமைந்ததைப் பார்க்கின்றோம். அவரின் பார்வையில் இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு எனலாம்.

இந்த இரு இறுதி வரிகளை 1966 ஆம் ஆண்டில் அடிகளார் தானே முன்நின்று ஒழுங்கு செய்த முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்தபோது குறிப்பிட்டார்.

இதன் பின் இவ் வரிகள் தாரக மந்திரமாகத் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் ஒலித்து வருவதைக் கேட்கின்றோம். இதனை ஏன் அழுத்திக் கூறுகின்றோம் எனில் அடிகளார் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியதற்கு இதுபோன்ற பல உத்திகளைக் கையாண்டு அதில் பெரும் வெற்றி கண்டார் என்பதை விளக்குவதற்கே.

இவரின் இந்த உத்தியை விவேகானந்தரின், பாரதியின், விபுலானந்தரின், ஆங்கிலக்கவிஞன் ரெனிசன் பிரபு போன்றோரின் "எழு , விழி , பற " என்ற நிலைப்பாட்டிற்கு ஒப்பிடலாம்.

கிரேக்கர் ,ரோமர், சீனர், அரேபியர் , வட இந்தியர் என பல்வேறு நாகரிகங்களுடன் ஆதித் தமிழர் கொண்டிருந்த வர்த்தக ,பண்பாட்டுத் தொடர்புகளும் :

" யாதும் ஊரே யாவரும் கேளிர் "
எனவும்,

" யாதானும் நாடாமரல் ஊராமரல் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு "
(கற்றவனுக்கு தன்நாடும் தன் ஊரும் போலவே வேறு நாடுகளும் வேறு ஊர்களுமாகும். அவ்வாறாயின் ஒருவன் சாகும்வரையும் கல்லாது காலம் கழிப்பது எப்படி)

எனவும் உலகளாவிய பரந்த நோக்கினைக் கைக்கொள்ள வழிசமைத்தது என்கின்றார்.

அதேசமயம் தமிழர் தமது மொழியை , பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுடன் புதியன செய்வதன் மூலமே தமது தேசியத்தை உலகத்தேசியத்திற்கு உவந்து அளிக்கலாம் என்கின்றார். இதனையே Reciprocal Bases of National Culture and the fight for Freedom ( தேசியப் பண்பாட்டிற்கும் சுதந்திரப்போராட்டத்திற்குமான பரஸ்பர தளங்கள் ) என்ற தலைப்பில் ஆபிரிக்க கறுப்பின எழுத்தாளர் மாநாட்டில் ஆற்றிய உரையில் Frantz Fanon  

" If man is known by his acts, then we will say that the most urgent thing today for the intellectual is to build up his nation. If this building up is true, that is to say if it interprets the manifest will of the people and reveals the eager African peoples, then the building of a nation is of necessity accompanied by the discovery and encouragement of universalising values. Far from keeping aloof from other nations, therefore, it is national liberation which leads the nation to play its part on the stage of history. It is at the heart of national consciousness that international consciousness lives and grows. And this two fold  emerging is ultimately the source of all culture "

தனது செயல்களாலும், தனது திறமைகள் வாழ்வின் வசதிகள், கிடைத்த வாய்ப்புக்கள் அத்தனையையும் தமிழ் இனத்தை சிந்திக்க, செயல்பட வைத்தவர் தனிநாயகம் அடிகளார். இவருக்கு தமிழ்ப் பண்பாட்டை பேணி வளர்ப்பது என்பது தெளிவான சிந்தனையின் அடிப்படையில் அமையும்போதே பயன்தருவதாகும்.

1955 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருந்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் ஆற்றிய உரையில்

" it is selfless and noble to dedicate one's time and energies under God to one's Culture and one's Country. The Tamil sage implied that Tamil Culture is the dearest possession of the Tamil people for the preservation of which no sacrifice would be great enough, not even life itself "

ஒருவரின் பண்பாட்டிற்காக , தாயகத்திற்காக இறைவன் தந்த காலத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பது உயர்வானதும் தன்னலம் அற்றதுமாகும். தமிழ்ச் சான்றோர் தமிழ்ப்பண்பாடு தமிழ் மக்களின் கிடைத்தற்கரிய பொக்கிசம். எனவும் இதனைப் பேணுவதற்கு எந்தத் தியாகங்களும் ஈடாகா. உயிரும் தான் எனக் கூறியுள்ளனர்.

ஏனெனில்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்
அஃ தின்றேல் மண்புக்கு மாய்வதுமன்
(பண்புள்ளவர்கள் உள்ளதால்தான் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது. அது இல்லையானால் உலகம் மண்ணுள் புகுந்து அழிந்துபோகும்)

என்கிறார். இந்தக் குறளை பல இடங்களில் இவர் கையாண்டுள்ளமை பண்பாட்டிற்கு இவர் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. இதனால்தான் 1952 இல் தனிமனிதாக நின்று
Tamil Culture என்னும் ஒப்பற்ற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தார். முதல் மூன்று இதழ்களும் இவரது தனிமுயற்சியாக, அடுத்துவந்தவை Madras Acadamy of Tamil Culture  என்னும் அமைப்பின் மூலம் வெளியிடப்டபட்டன.

" இலங்கையில் தமிழ் மொழிக்கு தேசிய அந்தஸ்தும் உரிமையும் இல்லையெனில் உலகில் எந்த நாட்டிலும் வேறு எந்த மொழிக்கும் உரிமை இல்லை " என அடித்துக்கூறிய அடிகளார் சிகங்கள மொழியை அவர்தம் அற்புதமான பண்பாட்டை அவற்றைப் பேணிவளர்க்கவேண்டிய தேவைகளையும் வலியுறுத்தத் தவறவில்லை. இந்த நிலைப்பாட்டையே இந்தியமொழிகள்மீதும் கொண்டிருந்தார்.

" யாதும் ஊரே யாவரும் கேளிர் , தீதும் நன்றும் பிறர் தர வாரா " என உரக்கக் கூவிய பூங்குன்றத்துக் கணியன் இராமநாதபுரத்தில் பஸ்ரீங்குன்றம் என்னும் ஊரூடாக பரந்த உலகத்தை தழுவியபோதும் தன் ஊரையும் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டான்.

 யாழ்பாணமாவட்டத்தில் கரம்பன் என்னும் ஊரில் பிறந்த அடிகளார் கால் படாத நாடுகளே இல்லை எனலாம். இவர் பயணம் எல்லாம் தமிழ்த் தேடலாக தமிழ்த்தேசியத்திற்கு உரமூட்டுவதாக அமைந்தன. முடிவில் இவரும் தான் தொடங்கிய இடமான கரம்பனுக்கு வந்து அமைதிகண்டார். தன்னையும் முதன் முதலாகத் தரிசித்திருப்பார். இளங்கோ அடிகளாரைப்போல் , விபுலானந்த அடிகளாரைப்போல் எதைத்துறந்தாலும் தமிழையும் தமிழச்க செய்யும் வாழ்வையும் துறவாத துறவியானார். இதுவும் " மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே " என வாழ்வில் கொண்ட பற்றின் பண்பாடே எனலாம்.

" ஜம்புலன் அடக்கியே சும்மா இருக்கின்ற
ஆகாத துறவு வேண்டேன்.
அத்துறவினால் வரும் விடுதலை எனக்கென்றும்
அற்பமும் வேண்டுகில்லேன்.
எம்பிரான் என்னை இங்கே ஆனந்த பந்தங்கள்
ஆயிரம் சுஸ்ரீழ்ந்து தழுவ
ஏங்கணும் விடுதலைப் பரிசம் உண்டாகுமே "

என்னும் தாகூரின் அஞ்சலியை நினைவு கூர்ந்து அமைகின்றேன்.

பயன்பட்டவை

1.Collected Papers of Thani Nayagam Adigal-International Institute of Tamil Studies.
2.Frantz Fanon tamilnation.org

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home