Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > மாவீரர் தின உரை - 2007 - ஒரு பார்வை
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

மாவீரர் தின உரை - 2007 - ஒரு பார்வை

17 December  2007

"....சிறிலங்காவின் பொய்ப் பரப்புரையில் மயங்கி விழுவதற்கு நீங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! அது எங்களுக்குத் தெரியும். நீங்கள் மயங்குவது போல் நடிக்கிறீர்கள்! அதுவும் எங்களுக்குத் தெரியும். இவையெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்பதைத்தான் இராஜ தந்திர மொழியில் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த மொழியின் அர்த்தம் சர்வதேசத்திற்கு நன்கு விளங்கும்... அந்த நாடு உதவி செய்யுமா, இந்த நாடு உதவி செய்யுமா, அந்த நாடு சார்பாக இருக்குமா, இந்த நாடு சார்பாக இருக்குமா என்று ஏங்கி நிற்கின்ற நிலையை விட்டு, நாங்கள் இருக்கின்றோம், நாங்கள் செய்வோம், நாங்கள் எங்களுடைய பலத்தைக் காட்டுவோம் என்று உலகத் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் இந்தப் போராட்டத்தின் பரிமாணமே மாறும்..."


தமிழீழ சுதந்திரப் போராட்டம், இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டு, உலகின் முதன்மையான விடுதலைப் போராட்டமாக விளங்குகின்ற இந்த வேளையில், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது மாவீரர் தின உரையைத் தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளும் ஆவலோடும், ஆர்வத்தோடும் எதிர்பார்த்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

தமிழீழச் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியமான இந்தக் கால கட்டத்தில், தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையில் தெரிவித்துள்ள செய்திகள் குறித்து, உலகளாவிய வகையில் பல தரப்பட்டவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்ற இவ்வேளையில், நாமும் எமது வழமையைப் பேணி, எமது பார்வையைத் தர விழைகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரைக்கு, மேலும் விளக்கமளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல! தேசியத் தலைவர் தெரிவித்துள்ள மிக முக்கியமான கருத்துக்களில் சிலவற்றைச் சற்று விரிவாகப் பார்க்க முனைவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!

"எத்தனையோ புதிய சிந்தனைகளுடன் நிறையவே மாறி வருகின்ற உலகத்து மனிதன் சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதிகளும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னதமான, வாழ்வைக் கற்பிதம் செய்தான். சுதந்திரமும், சமத்துவமும் கூடிக்குலவும் இந்த உன்னதமான வாழ்வின் கருத்துருவமான சுதந்திரத்தை, வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து மனிதன் போராடப் புறப்பட்டான்" -

- என்று சுதந்திரத்தின் தேவையையும், உயர்வையும் குறிப்பிட்ட தேசியத் தலைவர், (உன்னதமான) இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம் கொண்டு நிற்கின்றது என்றும், (இப்படிப்பட்ட) தமிழீழச் சுதந்திரப் போரை, இந்தப் பூமிப் பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்தியவர்கள் எமது மாவீரச் செல்வங்கள் என்றும் கூறி, மாவீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் ஒருங்குசேரப் புகழ்ந்து போற்றுகின்றார்.

மனித சுதந்திர வரலாற்றில், குறிப்பாகத் தமிழீழச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், எமது மாவீரர்களே இத்தகைய பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் என்பதைத் தனது மாவீரர் தின உரையினூடாகப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், பல முக்கியமான கருத்துக்களைத் தன்னுரையில் தெரிவித்துள்ளார். அவற்றில் மூன்று கருத்துக்களை இந்தக் கட்டுரையின் ஊடாகச் சற்று விரிவாகப் பார்க்க விழைகின்றோம்.

தமிழீழத் தேசியத் தiலைவர், மாவீரர் தின உரையில் தான் தெரிவித்த கருத்துக்களைப் பிழையான விதத்தில் திரிபுபடுத்தி, சர்வதேச அரசியலில் பிழையான அர்த்தங்களைச் சொல்ல முற்படுபவர்களுக்கு வாய்ப்பளிக்காத முறையில், மிகுந்த கவனம் எடுத்து, தன்னுடைய உரையை வடிவமைத்துள்ளார். சிறிலங்கா அரசின் விருப்பத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் மாறாக இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள தேசியத் தலைவர் அவர்கள், தன்னுடைய உரையினைப் பிறர் பிழையாகச் திரித்துப் பிழையான கருத்துக்ளைச் சொல்வதற்கான எந்த விதமான வாய்ப்பையுமே தரவில்லை என்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. இராஜ தந்திர மொழியில் பல விடயங்களைத் தலைவர் நேரடியாக மட்டுமல்லாது, நாசூக்காகவும் சொல்கின்றார். இவற்றையும் இக்கட்டுரையில் பின்னர் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தன்னுடைய மாவீரர் தின உரையின் போது தெரிவித்துள்ள முக்கியமான கருத்துக்களில், சிங்கள தேசம் குறித்தும், சர்வதேசம் குறித்தும், தமிழக மக்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் குறித்தும் கூறியுள்ள கருத்துக்களைச் சற்று விரிவாக பார்ப்பது பொருத்தமானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட என்றுதான் நாம் கருதுகின்றோம். அந்த வகையில், சிங்கள தேசம், சர்வதேசம், உலகத் தமிழர்கள் என்று மூன்று பகுதிகள் ஊடாகத் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையைச் சற்று விரிவாகப் பார்க்க விழைகின்றோம்.

சிங்கள தேசம்.

சிங்களம் கடைப்பிடிப்பதாகச் சொல்கின்ற பௌத்தத்தை, ஓர் ஆழமான ஆன்மிகத் தரிசனம் என்றும், அன்பையும், அறத்தையும், ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும், தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம் என்றும், தேசியத் தலைவர் உயர்வாகப் போற்றிக் கூறுகின்றார். ஆனால் இப்படிப்பட்ட உயர்வான தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடித்து வருவதாகக் கூறிக்கொள்கின்ற சிங்களமோ, இந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே, இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடப்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டுகின்றார்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும், தமிழர் நீதி கேட்ட போதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை என்பதையும், வன்முறைப் பாதையிலேயே அது தொடர்ந்து பயணித்து வருகின்றது என்பதையும் கூறி, கடந்த கால சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசுகளின் செயல்களை விளக்கிய தேசியத் தலைவர் அவர்கள், தற்போதைய சிங்கள அரசான, மகிந்த ராஜபக்ச அரசு குறித்தும் மிகத் தெளிவான கருத்துக்களை முன் வைக்கின்றார்.

சர்வதேசத்தின் ஒரு தலைப்பட்சமான முண்டு கொடுப்புக்கள் காரணமாக, மகிந்த ராஜபக்சவின் அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரைத் தமிழீழ மண்ணிலே துணிவுடனும் திமிருடனும், தொடர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய தேசியத் தலைவர், இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம், தமிழரின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதை, மகிந்த ராஜபக்சவின் அரசு இனியும் உணர்ந்து கொள்ளப் போவதில்லை என்கின்ற யதார்த்த உண்மையையும் புலப்படுத்தியுள்ளார்.

ஆகவே மகிந்த ராஜபக்ச அரசு தன்னுடைய தமிழின அழிப்புப் போரைக் கை விடப் போவதில்லை என்ற நிதர்சனத்தைத் தெளிவுபடுத்தியுள்ள தலைவர், எதிர்காலச் சமாதானத் தீர்வு குறித்து மிக முக்கியமான தீர்க்க தரிசனமான தனது பார்வையைக் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

தமிழரின் தேசியப் பிரச்சனையை, நீதியான முறையில், சமாதான வழியில் தீர்த்து வைப்பதற்கான அரசியல் நேர்மையும், உறுதிப்பாடுகளும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லை என்பது கடந்த் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து, யாரும் தீர்வை எதிர்பார்த்தால அறுபது ஆண்டுகளில் தெட்டத் தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றது.

 சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து, யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறு ஒன்றுமன்று!

சிங்கள தேசம் குறித்த இந்தக் கருத்துக்கள் மூலம் சர்வதேசத்திற்கும், மிகக் குறிப்பாகப் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களுக்கும் தேசியத் தலைவர் ஒரு மிகத் தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளார்.

எந்த ஒரு சிங்கள அரசும் - அன்றும் சரி,- இன்றும் சரி - எதிர் காலத்திலும் சரி - தமிழ் மக்களுக்கு நீதியான, அரசியல் தீர்வை, சமாதான வழியில் ஒரு போதும் தரப் போவதில்லை. அதை நாம் வரலாற்று ரீதியாகவும், பட்டறிவு ரீதியாகவும் அறிந்துள்ளோம். சிங்கள தேசத்தை நாம் நம்பப் போவதில்லை. நீங்களும் நம்பி ஏமாற வேண்டாம்! என்பதே அந்தச் செய்தியாகும்!

இங்கே சிங்கள தேசத்தை நோக்கி எந்தவித வேண்டுகோளோ, எதிர்பார்ப்போ, தமிழீழத் தேசியத் தலைவரால் முன் வைக்கப்படவில்லை என்பதுதான் முக்க்pயமான விடயமாகும்!

இங்கே அடிப்படையான கருத்து என்னவென்றால், சர்வதேசம் எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும், சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்குச் சமாதானத் தீர்வைத் தரப்போவதில்லை என்பதுதான்! அதாவது சிங்கள அரசுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை அழிப்பதற்கான போர்களை நடாத்திக் கொண்டுதான் இருக்கப் போகின்றன. ஆகையால் நாமும் எமது சுதந்திரத்திற்கான போராட்டத்தை, எத்தனை இடர்கள் வரினும் முன்னெடுத்து, எமது ஆட்சி உரிமையை மீளவும் நிலைநாட்டுவோம் என்று தலைவர் தெளிவாகத் தெரிவித்து இருக்கின்றார்.

சர்வதேசம்.

இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசியத் தலைவர் பல முக்கியமான விடயங்களைத் தன்னுரையின் ஊடாகக் கூறியிருக்கின்றார். சர்வதேசத்தின் இராணுவ பொருளாதார, கேந்திர நலன்கள் எமது பிராந்தியத்திலே புதைந்து கிடப்பதையும், அந்த நலன்களை முன்னெடுப்பதற்காகச் சர்வதேசம் முனைப்புடன் முயற்சிப்பதையும், இதன் காரணமாக இலங்கைத் தீவில் நெருக்கடி நிலை நீங்கி, சமாதானமும், நிலையான நல்லாட்சியையும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும், அக்கறையும் காட்டுவதையும் வெளிப்படையாகவே தலைவர் சுட்டிக் காட்டுகின்றார்.

அத்தோடு இன்னுமொரு விடயத்தைத் தேசியத் தலைவர் சொல்கின்றார். சிங்கள அரசின் போலியான, பொய்யான பரப்புரைகளின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சனையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும், எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகின்றது என்று தலைவர் சொல்வது மூலம், மிக நாசூக்கான செய்தியொன்றையும் சேர்த்தே தெரிவிக்கின்றார். அது என்னவென்றால் சிறிலங்காவின் பொய்ப் பரப்புரையில் மயங்கி விழுவதற்கு நீங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! அது எங்களுக்குத் தெரியும். நீங்கள் மயங்குவது போல் நடிக்கிறீர்கள்! அதுவும் எங்களுக்குத் தெரியும். இவையெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்பதைத்தான் இராஜ தந்திர மொழியில் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த மொழியின் அர்த்தம் சர்வதேசத்திற்கு நன்கு விளங்கும்.

சர்வதேசத்தின் நடிப்புக்கு அப்பாற்பட்ட செய்திகளையும் தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று சிங்கள அரசு துணிவுடனும், திமிருடனும், இராணுவத் திட்டத்தை முன்னெடுத்து வருவதற்கு, சர்வதேசச் சமூகத்தின் பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும், இராஜதந்திர முண்டு கொடுப்புகளும், ஒரு பக்கச் சார்பான தலையீடுகளும்தான் காரணம் என்று சர்வதேசத்தைச் சாடியுள்ள தேசியத் தலைவர் எமது தேசியப் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் எமது மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்த நாடுகள் மீது எமது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்து போயிருக்கின்றது. இந்த நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கின்றது என்று தமிழீழத்தின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றார்.

இங்கே இந்தியாவிற்கும் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அன்று இந்தியாவும், தன் நலன் சார்ந்து, பிழையான அணுகுமுறையைக் கையாண்டு, பெரிய தவறை இழைத்தது. சிங்கள அரசின் உள்நோக்கம் குறித்தும், இந்திய அரசின் தவறான அணுகுமுறை குறித்தும் இந்தியாவிற்கு பல்வேறு தடவைகள், பல்வேறு இடங்களில், பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, தேசியத் தலைமை இந்தியாவிற்கு எடுத்துரைத்தது. இந்தியா இணங்க மறுத்தது. இதனால் தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.

இந்தியாவின் பிழையைச் சுட்டிக் காட்டுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர், அத்தகைய பிழையைத்தான் இன்று சர்வதேசமும் செய்கின்றது என்பதையும் தெரிவிக்கின்றார். அதாவது, அடிப்படையாக இருக்கக் கூடிய நம்பிக்கையை முதலில் மெதுவாக இழந்து, பின்னர் முற்றாகவே இழக்கின்ற நிலைமைக்குத்தான் இன்று இந்தியாவும் சர்வதேசமும் இருக்கின்றன.

இந்த அடிப்படையினூடாகத்தான் கீழ்வரும் கேள்விகளைத் தமிழ் மக்கள் சார்பில் தேசியத் தலைவர் கேட்டுள்ளார்.

சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும், தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத் தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் அவர்கள் மகாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன? சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக் கட்டத் துணை போவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா? இத்தனை கேள்விகள் இன்று எம் மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன!

புலம் பெயர் வாழ் தமிழர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளிலே பலம் பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும், அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் பொறுக்க முடியாத சிங்களப் பேரினவாதத்திற்கு, துணையாகச் சில உலக நாடுகள் செயல்படுவதையும், தலைவர், ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் என்று கூறிக் கண்டித்திருக்கின்றார். தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து சிறைகளில் அடைப்பதையும், எமது மக்களின் போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்துவதையும் சுட்டிக்காட்டிய தேசியத் தலைவர், இவற்றின் மூலம் சர்வதேச சமூகம் மீது எமது மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும் தெரிவிக்கின்றார்.

இவற்றின் மூலம் தமிழீழத் தேசியத் தலைவர் அடிப்படையான விடயங்களைச் சொல்லியுள்ளார். சர்வதேசம், சமாதானம் என்ற பெயரில், (போர்வையில்) இலங்கை வந்து இதுவரை எந்தப் பிரச்சனையையும் சரியான முறையில் அணுகவில்லை என்பதையும், சமநிலையோடு இந்தப் பிரச்சனையைச் சர்வதேசம் அணுகவில்லை என்பதையும் தலைவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இதனுடாகச் சர்வதேசத்திற்குத் தலைவர் சொல்கின்ற செய்தி ஒன்று உண்டு. நீங்கள் என்னதான் ஒன்று சேர்ந்து அறிக்கைகளை விடுத்தாலும், இங்கேயுள்ள அடிப்படைப் பிரச்சனையை அடையாளம் காணும்வரை, அதனைச் சிங்கள அரசு தீர்க்காது என்பதையும் அறியும்வரை, இங்கே பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்பதுதான் அந்தச் செய்தி.

அந்தச் செய்தியும் ஒரு விடயத்தைச் சொல்கின்றது. அடக்குமுறைக்கு ஊடாக, எங்களது விடுதலைப் போராட்டத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கலாம் என்றால் அது நடக்கப் போகின்ற விடயம் அல்ல!

சர்வதேச விழுமியங்கள், ஜனநாயக மரபு என்று நீங்கள் சொல்லிக் கொண்டு, நடைமுறையில் முரணாக நடந்து கொள்வது என்பது, எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்! உங்களுடைய கொள்கையளவில், எரித்திரியா - கொசோவா போராட்டங்களை ஒரு கட்டத்தில் கை விட்டீர்கள். பிறகு அரவணைக்கின்றீர்கள். நீண்ட காலமாக அந்த மக்களுக்கு பிரச்சனை இருந்தது. அப்போது அதனை ஏற்கமாட்டேன் என்றுதான் சொன்னீர்கள். இன்று ஏதோ ஒரு நலன் கருதி ஏற்கின்றீர்கள். அந்த வகையிலாவது, அந்த மக்களுடைய நியாயங்கள் இப்போது ஏற்கப்பட ஆரம்பித்துள்ளன. உங்களுடைய இத்தகைய நிலைப்பாட்டால்தான் இந்த நாடுகள் தங்களுடைய சுதந்திரத்திற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது!

அதனால்தான் நாம் சொல்கின்றோம், இனியாவது உங்கள் அணுகுமுறையில் நியாயமான மாற்றங்கள் வரவேண்டும். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாரதார உதவிகளை வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என்று எமது மக்கள் இன்று எதிர்பார்த்து நிற்கின்றார்கள் என்பதுதான் சர்வதேசத்திற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்திருக்கும் வேண்டுகோளும், செய்தியுமாகும்!

உலகத் தமிழர்கள்

புலம் பெயர் வாழ் தமிழர்கள் குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் பல கருத்துக்களைத் தெரிவித்து, அவர்களின் செயற்பாடுகள், அர்ப்பணிப்புக்கள் குறித்துத் தன் அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆனால் இவற்றின் ஊடாகச் சில முக்கியமான செய்திகள் உள்ளன. எந்த ஒரு காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேசத்தை நம்பியிருந்ததில்லை. ஆனால் புலம் பெயர்வாழ் தமிழர்கள் நம்பினார்கள். ஆகையால் சர்வதேசம் பற்றிய தெளிவு உலகத் தமிழர்களுக்கு அவசியம் வேண்டும். இந்தத் தெளிவு பற்றித்தான் தலைவரின் இந்த உரை கூறிச் செல்கின்றது.

 தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கையில், அதனோடு சேர்ந்து ஓடுவது என்பது வேறு! அது குறித்துத் தமிழ் மக்களுக்குத் தெளிவு வேண்டும்.

அந்த நாடு உதவி செய்யுமா, இந்த நாடு உதவி செய்யுமா, அந்த நாடு சார்பாக இருக்குமா, இந்த நாடு சார்பாக இருக்குமா என்று ஏங்கி நிற்கின்ற நிலையை விட்டு, நாங்கள் இருக்கின்றோம், நாங்கள் செய்வோம், நாங்கள் எங்களுடைய பலத்தைக் காட்டுவோம் என்று உலகத் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் இந்தப் போராட்டத்தின் பரிமாணமே மாறும்.

இதன் அடிப்படையில்தான், இன்று உலகம் முழுக்க வியாபித்து வாழுகின்ற எட்டுக்கோடித் தமிழர்களும் ஒன்றிணைந்து கிளர்ந்தெழ வேண்டும். புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களும், புலம் பெயர் வாழ் தமிழக மக்களும் எமது தொன்மையான இனத்தின் விடிவுக்காக ஒருங்கிணைய வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தமது தார்மீக ஆதரவைத் தருவதற்காக ஒட்டு மொத்தத் தமிழக மக்களும் குரல் கொடுக்க வேண்டும். இத்தகைய அரசியல் பரப்புரைப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேசியக் கடமை புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு.

தமிழீழத் தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உலகத் தமிழர்கள் அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் போன்ற அனைத்து வளங்களையும் திரட்டி, தொடர்ந்தும் பெரும் பங்களிப்பை எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு வழங்க வேண்டும். மாவீரர்களுக்கான வீர வணக்கம், மலர் வணக்கத்தோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. மாவீரர்களின் கனவை, நாம் நனவாக்குவதுதான், நாம் அவர்களுக்குச் செய்யக் கூடிய உண்மையான வீர வணக்கமாகும்.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home