"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
மகிந்தவின் (சிங்களப் பேரினவாதத்தின்) இன்னுமொரு
முகம்தான் ரணில் விக்கிரமசிங்க!10 October 2007
"..ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும், ஜேவிபியினரும் சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் வெவ்வேறு முகங்களே தவிர, அடிப்படைக் கோட்பாட்டில் ஒன்றிணைந்தவர்களே ஆவார்கள்..."
" Sinhala Buddhist chauvinism has been institutionalised in Sri Lanka and today it has become more powerful than the politicians themselves. Indeed even if the Sinhala politicians seek to settle the conflict, Sinhala Buddhist chauvinism may try to prevent such a settlement. This is the political reality that those who are aware of the Sri Lankan situation are well aware of...This Sinhala chauvinism which was nurtured by Sinhala politicians for their electoral advantage, has grown into a Frankenstein monster which now has the power to destroy and make politicians. This we understand very well..." Sathasivam Krishnakumar, June, 1991
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இலங்கை இனப் பிரச்சனை குறித்துத் தற்போது தெரிவித்து வருகின்ற கருத்துக்களும், தெரிவிக்க மறுத்து வருகின்ற கருத்துக்களும் புலம் பெயர் தமிழர்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு இப்போது மாறிவிட்டது என்றும், சிங்களக் கடும் போக்காளர்கள் போல் இப்போது ரணில் விக்கிரமசிங்கவும் பேச ஆரம்பித்துள்ளார் என்றும் புலம் பெயர் தமிழர்களிடையே அங்கலாய்ப்பும் எழுந்து வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க குறித்துப் புலம் பெயர் தமிழர்களிடையே நல்லதொரு பிம்பம் தொடர்ந்தும் இருந்தே வந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க முன்னர் சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்று, தமிழீழ விடுதலைப் புலிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட காலத்திலிருந்து, ரணில் விக்கிரமசிங்க குறித்த எமது கருத்தை நாம் திரும்பத் திரும்பச் சொல்லியே வந்துள்ளோம்.
சிங்களப் பேரினவாதத்தின் இன்னுமொரு முகம்தான் ரணில் விக்கிரமசிங்க என்றும், அவரோ அல்லது அவரது கட்சியோ அல்லது அவரது அரசாங்கமோ தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை ஒரு போதும் தரப்போவதில்லை என்ற எமது கருத்தையும் நாம் தொடர்ந்தும் தர்க்கித்தே வந்துள்ளோம். நாம் சொல்லி வந்த கருத்து, முழுமையாக நிரூபணமாகின்ற இடத்தில்தான் இன்று ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நடத்தி வந்த, நடத்தி வருகின்ற அரசியல் ஊடாகச் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!
ரணில் விக்கிரமசிங்கவும் சரி, அவர் சார்ந்து நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சரி அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருப்பதைத்தான் வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் நெடுங்காலத் தமிழர் விரோதப் போக்குக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் நாசூக்கான தமிழர் விரோதப் போக்குக்கும் அடிப்படை வித்தியாசம் எதுவுமில்லை.
சமாதான ஒப்பந்தங்களைப் போடுவதும், பின்னர் அதனைக் கிழித்தெறிவதும், மற்றவர்கள் கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்ப்பதும் இவர்களுக்கு வழக்கமான வேலையாக இருந்து வருகின்றது. முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க, தமிழர் தரப்புடன் செய்து கொண்ட டட்லி - செல்வா ஒப்பந்தம் தூக்கியெறியப்பட்டது.
பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுகின்ற வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அந்த ஒப்பந்தத்தை வன்மையாக எதிர்த்தார். அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சிறிலங்காவின் முன்னாள் அரச அதிபரும், ரணிலின் உறவினருமான ஜேஆர் ஜெயவர்த்தனா ரணிலை இரகசியமாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ரணில் இவ்வாறு செய்தார் என்றும் அப்போது பேசப்பட்டது.
பின்னர் சந்திரிக்கா அம்மையார் பதவிக்கு வந்தபோது, அவர் உருவாக்க முனைந்த தீர்வுத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தது மட்டுமல்லாது அந்தத் தீர்வுத் திட்டப் பிரதிகளை எரிக்கவும் செய்தார்.
2000ம் ஆண்டில் ஆனையிறவுப் பெருந்தளத்தைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள், அந்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஒரு தலைப் பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து, அதனை நான்கு மாதங்கள் தொடர்ந்து நீடித்தார்கள். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தையூடாக நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக சந்திரிக்கா அம்மையாரின் அரசுக்கு விடுதலைப்புலிகளின் தலைமைப் பீடம் அழைப்பு விடுத்தது.
ஆனால் சந்திரிகாவின் அரசு விடுதலைப் புலிகளின் இந்த அழைப்பை நிராகரித்தது (எதிர்பார்த்ததுபோல்) மட்டுமல்லாது தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காரணத்தால், நான்கு மாதங்களுக்குப் பின்னர், அதாவது 2001ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23ம் திகதியன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய ஒரு தலைப் பட்சமான போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.
ஆனால் அதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்பிரல் மாதம் 24ம் திகதியன்று, சந்திரிகா அரசின் இராணுவம், அக்னி கீல (தீச்சுவாலை) என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தப் பாரிய இராணுவ நடவடிக்கையை நான்கே நாட்களில் முறியடித்த தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்குப் பாரிய இழப்பையும் ஏற்படுத்தினார்கள்.
மே மாதம் நான்காம் திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் அவர்கள் சிறிலங்காவின் அரசிற்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படியும் அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் சிறிலங்காவின் அன்றைய வெளிவிவகார அமைச்சரான லக்ஸ்மண் கதிர்காமரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்காவின் கொழும்புத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை இனப் பிரச்சனையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது என்பதை அமெரிக்கா நெடுங்காலமாக நம்பி வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சந்திரிகா அம்மையாரின் சிங்களப் பேரினவாத அரசு சற்றும் அசைந்து கொடுக்காத நிலையில், 2001ம்ஆண்டு ஜீலை மாதம் 24ம் திகதியன்று பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலும் அதனை அண்டியிருந்த விமானப் படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் பதின்மூன்று விமானங்கள் அழிக்கப்பட்டன.
இதனையடுத்து அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் விடயத்தை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று சிறிலங்காவின் பிரதமராகப் பதவி ஏற்கின்றார். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தலைப் பட்சமான போர் நிறுத்தத்தை அறிவிக்கின்றார்கள்.
நாம் இவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட்டமைக்கு காரணம் உள்ளது. எத்தகைய கட்டத்தில், எத்தகைய நிலைமையில், எத்தகைய அழுத்தத்தில் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்றார் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் இந்த வரலாற்றுப் பின்னணியை மீளவும் சுட்டிக் காட்டினோம்.
ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு ஏதோ கொட்டிக் கொடுக்கப் போகின்றார் என்று புலம் பெயர் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை அன்று ஏற்பட்டிருந்தது.
ஆனால் சிங்கள அரசுகளிடமிருந்து நியாயமான தீர்வு எதுவும் கிட்டாது என்கின்ற தம்முடைய கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று சம்பந்தப்பட்ட உலக நாடுகளிடம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் உலக நாடுகளோ இப்போது நாங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றோம்.
முன்னர் நடந்த பேச்சு வார்த்தைகள் போல் அல்லாது இப்போது எமது அனுசரணையுடன் இந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெறும். புரிந்துணர்வு ஒப்பந்தம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு என்று நாமும் இந்த விடயத்தில் ஈடுபடுவோம். எமது அனுசரணையின் கீழ் இலங்கை இனப்பிரச்சனையைச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்க்கலாம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இவற்றின் ஊடாகத்தான் அன்றைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க அன்றும் ஒரு தீர்வுத்திட்டத்தை முன் வைக்கவில்லை. அதன் பின்னரும் ஒரு தீர்வுத்திட்டத்தை முன் வைக்கவில்லை. இன்றுவரை எந்தவிதமான ஒரு தீர்வுத் திட்டத்தையும் -ஒரு சாட்டுக்காகக்கூட - ரணில் விக்கிரமசிங்க முன் வைக்கவேயில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசோடு அன்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியபோது அவற்றின் ஊடாகச் சில அபாயங்களைத் தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாம் முன்னரும் பல தடவைகள் குறிப்பிட்ட விடயங்களில் சிலவற்றை மீண்டும் குறிப்பிட விரும்புகின்றோம்.
� ஏற்கனவே சிறிலங்கா அரசுகளின் பேரினவாதச் செயல்பாடுகளுக்கு இணக்கமாக இருந்த மேற்குலகம், பேச்சு வார்த்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி போராட்டத்தின் பாதையையும், இலக்கையும் திசை திருப்ப முனையலாம். (தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்தின் அடிப்படையில் பல வெற்றிகளைக் கண்ட பின்னர்தான் மேற்குலகம் இங்கு தலையிட்டது என்பதையும், அதற்கு முன்னர் மேற்குலகம் தமிழர்கள் அழிவு குறித்துப் பாராமுகமாக இருந்து வந்ததையும் நாம் மனதில் கொள்ளுதல் வேண்டும்).
� தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை, அவர்களது வேட்கைகளைத் தீர்க்காத தீர்வுத்திட்டம் ஒன்றை, இந்தப் பேச்சு வார்த்தைகள் ஊடாக மேற்குலகம் திணிக்க முற்படலாம். (முன்னுதாரணமாக - அன்றைய இந்திய இலங்கை ஒப்பந்தம்).
� தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுத்திய பின்னர், அதன் மீது பாரிய அழுத்தங்களையும், தடைகளையும் விதிப்பதன் மூலம், இயக்கத்திற்கு ஓர் அரசியல் கடிவாளத்தை இட்டு, விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது அல்லது ஒரு கட்டத்திற்கு அப்பால் இயக்கம் நகர்ந்து செல்ல முடியாத நிலையை உருவாக்க முனைவது. (நாம் எண்ணியது போன்றே அழுத்தங்களும் தடைகளும் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் வளைந்து கொடுக்கவில்லை).
� புலம் பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய உண்மையான ஜனநாயக மரபுகளை, அதன் விழுமியங்களை எடுத்துக்காட்டி அவைகளைப் போல் சிறிலங்கா அரசும் எதிர்காலத்தில் ஜனநாயக மரபுகளை பேணும் என்று, புலம் பெயர் தமிழ் மக்களை ஏமாற்றி நம்ப வைக்க முனைவது. இதற்கு ஆதாரமாகத் தொடர்ந்து நடக்கின்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சுட்டிக்காட்டித் தமிழர்களைத் திசை திருப்ப முனைவது.
அதி குறைந்த பட்சமாக, விடுதலைப் புலிகளின், விடுதலைப் போராட்டத்திற்கான இலட்சியத்தைக் கிளைப்பாதைகளின் ஊடாகத் திசை திருப்ப வைப்பது.
மேற்குலகத்தின் தலையிடு எந்த விதமாக இருந்தாலும், எந்தச் சிங்கள அரசும் தமிழ் மக்களுக்குப் பேச்சு வார்த்தையூடாக நியாயமான தீர்வு எதையுமே தரமாட்டாது என்ற பட்டறிவோடு, தமிழீழத் தேசியத் தலைமை மேற்கூறிய பிரச்சனைகளை ரணில் விக்கிரமசிங்கவோடு எவ்வாறு சாதுரியமாகக் கையாண்டது என்பதானது ஒரு முக்கியமான விடயமாகும்.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதும், ரணில் விக்கிரமசிங்க ஊடாகத் தீர்வு எதுவும் கிட்டாது என்பது தெரிந்த போதும், சர்வதேச மயப்படுத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை, அதனூடே அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பது குறித்தும், அதேவேளை இலக்கை மாற்றாமல், உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், இலக்கை நோக்கிய பயணத்தைச் சரியாகக் கொண்டு செல்ல வேண்டியது குறித்தும் தமிழீழத் தேசியத் தலைவர் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு மிகச் சரியாக நெறிப்படுத்திச் சென்றார்.
வெளிப் பரபரப்புகள் எதுவும் இல்லாமல் கீழ்வரும் விடயங்கள் நிறைவேறின:-
� சிறிலங்கா அரசு அன்றும் (இன்றும்) முன் வைத்த ஒற்றையாட்சிக் கோட்பாடு உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
� சமாதானப் பேச்சு வார்த்தைக் காலகட்டத்தில் புலம் பெயர் தமிழீழ மக்கள் பெருவாரியாகத் தமிழீழம் சென்று, தொடர்புகளையும் ஏற்படுத்தி, நிலைமைகளை நேரில் கண்டுணர்ந்து, மிகப் பாரிய செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னின்று உதவினார்கள். உலகளாவிய வகையில் இவை குறித்த, குறிப்பான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது மட்டுமன்றி, வெளிநாடுகளின் உதவிகளை நம்பியிராமல் புலம் பெயர் தமிழர்களின் மகத்தான பங்களிப்புக்கள் காரணமாகப் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
� முன்னர் எதிர்பார்த்தது போன்றே அழுத்தங்களையும், தடைகளையும் இயக்கம் எதிர்கொண்டபோதும் ஈற்றில் சிறிலங்காவின் சமாதான விரோதச் செயல்களும், மனித உரிமை மீறல்களும் தோலுரித்துக் காட்டப்பட்டன. இன்று உலகளாவிய வகையில் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. இவற்றிற்குச் செயல் வடிவம் விரைவில் கொடுக்கப்பட வேண்டும்.
� கடந்த இருபது ஆண்டுக் காலத்தில் நிகழாத மிகப் பெரிய மாற்றம் இப்போது தமிழ் நாட்டில் நிகழ்ந்து வருகின்றது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான முழு ஆதரவினைத் தமிழக அரசும், தமிழக அரசியல் தலைவர்களும், தமிழக மக்களும் வெளிப்படையாக வழங்குகின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. இது சரியான முறையில் நெறிப்படுத்தப்படுகையில், இந்த மாற்றம் மேற்குலக அரசியலிலும் விரைவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
� தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத, அவர்களது வேட்கைளைப் பூர்த்தி செய்ய முடியாத எந்த விதமான அரைகுறைத் திட்டங்களையும் தமிழ் மக்கள் மீது வலிந்து திணிக்க முடியாமல் போயிற்று. இவற்றை எதிர்கொள்ளும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
� இப்படிப்பட்ட சமாதானக் காலங்களில் ஏற்படக்கூடிய முக்கிய அபாயங்களாக, விடுதலைப் போராட்டங்கள் நீர்த்துப் போவதையும், கிளைப்பாதைகள் ஊடாகத் திசை திரும்புவதையும், இறுதி இலக்கை விட்டு வழி தவறுவதையும் கொள்ளலாம். ஆனால் தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்கமான நெறியாள்கை காரணமாக இத்தகைய ஆபத்துக்கள் யாவுமே முழுமையாகத் தவிர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது இறுதி இலக்கை நோக்கிச் சரியான பாதையில் பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது. சரியாகச் சொல்லப் போனால், மிகச்சரியான அரசியல் உத்திகளோடு, கடந்த ஐந்து ஆண்டுகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
ரணில் விக்கிரசிங்கவின் அரசு எதையுமே தரப்போவதில்லை என்று தெரிந்து கொண்டு, அதனூடே விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது என்பது எளிதான விடயமல்ல!
தவிரவும் போரின்போது வெளிப்படையாகத் தெரிகின்ற ஆபத்துக்கள், சமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரகசியமாக மறைந்து நிற்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவினால் இரகசியமாக வரவிருந்த மிகப்பெரிய அபாயங்கள், அதே முறையினாலேயே தடுக்கப்பட்டதனால், இவற்றினுடைய வெற்றியின் பரிமாணத்தை உணர முடியாமல் உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஊடாகத்தான் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய ஆபத்து வரவிருந்தது. அது தமிழீழ தேசியத் தலைமையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று ரணில் விக்கிரமசிங்க கள நிலை மாறிவிட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என்று கூறத் தொடங்கியுள்ளார். நேர்மையான விதத்தில் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு எதிரான போரை நடத்துங்கள் என்று மகிந்தவிற்கு அறிவுரையும் வழங்குகிறார்.
இலங்கை இனப் பிரச்சனைக்குச் சமஸ்டி முறையில் தீர்வா? அல்லது ஒற்றையாட்சி முறையில் தீர்வா? என்று கேட்டால், முதலில் பாணின் விலை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடட்டும். அந்தப் பாணை உண்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சமஸ்டியையா ஒற்றையாட்சியையா ஆதரிக்கின்றது என்பது குறித்து, ஊடகங்களுககுப் பதில் சொல்லும் என்று ஏளனமாக ரணில் பதில் கூறுகின்றார். அதாவது பதில் சொல்ல மறுக்கின்றார்.
மகிந்த ராஜபக்சவின் அரசு தமிழ் மக்கள் மீது பாரிய மனித உரிமை மீறல்களைப் புரிந்து வருகின்றது. தமிழ்ப் பொதுமக்கள் அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். தமது வாழ்விடங்களை விட்டுக் கலைக்கப்பட்டு வருகின்றார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்க இவை பற்றிக் கவலைப்படாமல், மகிந்த அரசின் இத்தகைய செயல்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றார்.
மறுபக்கம், சிறிலங்கா இன்று பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுத் திணறுகின்றது. விலைவாசி தினமும் உயர்ந்து கொண்டே போகின்றது. இவைகளை எதிர்த்து தனது சிங்கள மக்களுக்காகக் காத்திராமான ஒரு போராட்டத்தைக்கூட ரணில் விக்கிரமசிங்காவால் செய்ய முடியாமல் அவர் ஆளுமையற்றுப் போயிருக்கின்றார். தன் கட்சி நலன் சார்ந்து கூட அவரால் செயல்பட முடியாமல் உள்ளது.
ஆகையால், இன்று அவருக்கு ஜேவிபியின் துணை தேவைப்படுகின்றது. ஜேவிபியின் துணையோடு ரணில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் அவர் ஜேவிபியின் சொல்லுக்கு ஏற்ற மாதிரி நாட்டியமாட வேண்டும். மகிந்தவின் சிந்தனை என்பது அடிப்படையில் ஜேவிபியின் சிந்தனைதான்! இப்பொழுது ரணிலும் மகிந்தவின் சிந்தனைக்குப் போகின்றார். மகிந்த தன்னுடைய சிங்களப் பௌத்த பேரினவாதச் சிந்தனையை ஜேவிபியைப்போல் வெளிப்படையாகவே சொல்கின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஏனென்றால் சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் இன்னமொரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவர்தான் ரணில் விக்கிரமசிங்க!
ஐக்கிய தேசியக்கட்சி என்பது சிறிலங்காவின் ஒரு பெரிய அரசியல் கட்சியாகும். அதே போல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒரு பெரிய அரசியல் கட்சியாகும் ஆனால் ஜேவிபியை நம்பி அரசியல் நடத்துகின்ற அளவிற்கு இந்த இரண்டு கட்சிகளும் மேலும் தரம் தாழ்ந்து போயுள்ளன.
இவர்கள் எல்லோருமே தேர்தலையும் பேரினவாதத்தையும் மையப்படுத்தி தமது கேவலமான அரசியலை நடாத்துகின்றார்கள். இவர்கள் அடிப்படையில் சிங்களவர்களை இரண்டு விதமாக ஏமாற்றி வருகிறார்கள். ஒன்று, குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் என்று சொல்வது. மற்றது சிங்கள இனவாத்தைத் தட்டி எழுப்புவது.- இவைகள்தான் இந்த அரசியல்வாதிகளின் உத்தியாக உள்ளது.
இவர்களை நம்பி, இவர்கள் ஊடாகத் தீர்வைக் காணலாம் என்று அன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஏமாந்து போனார்கள். அவர்கள் நம்பி ஏமாந்தது போலத்தான், இன்று மேற்குலகமும் சிங்களவர்களிடம் பேசித் தீர்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் சிறிலங்கா சொல்வது பொய் என்பதை, இன்று மேற்குலகம் வெளிப்படையாகவே உணர்ந்து வருகின்றது. அதாவது முன்னர் உள்ளுரத் தெரிந்து கொண்டிருந்தாலும் இப்போது தமக்கு வெளிப்படையாகவே தெரிய வந்து விட்ட விடயத்தை மற்றவர்களும் உணர்ந்து விட்டார்கள் என்பது மேற்குலகத்திற்குப் புரிந்து விட்டது.
அதாவது மேற்குலகத்திற்கு ஏற்கனவே உண்மை தெரியும். அது தெரியாதது போல் நடித்துக் கொண்டிருந்தது. இன்று மேற்குலகத்திற்கு உண்மை தெரியும் என்ற உண்மை, எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இனி மேலும் மேற்குலகம் நடிக்க முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும், ஜேவிபியினரும் சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் வெவ்வேறு முகங்களே தவிர, அடிப்படைக் கோட்பாட்டில் ஒன்றிணைந்தவர்களே ஆவார்கள். இவர்கள் ஊடாக எந்த விதமான நியாயமான தீர்வும் தமிழனுக்குக் கிட்டாது. சுதந்திரத் தமிழீழத் தனியரசைத் தவிர வேறு தீர்வு இல்லை. தமிழீழத்தைத் தவிர வேறு எதுவும் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்காது!