"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil National Forum > Selected Writings - Sanmugam Sabesan > மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!
Selected Writings by Sanmugam Sabesan
மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!
குடும்பிமலைப் பகுதியைக் கைப்பற்றியதோடு, கிழக்கு மாகாணம் முழுவதும், முதல் முறையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகச் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பைக் கொண்டாடும் முகமாகக் கடந்தவாரம் கொழும்பு நகரில் வெ(ற்)றி விழாவொன்றையும் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச நடாத்தியுள்ளார். விரைவில், கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட்டு, ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும் என்றும், மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்தச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கூறைச் சுட்டிக்காட்டிச் சில தர்க்கங்களை முன்வைப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! இன்று கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரிக்கும் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்ச முன்னெடுத்து வருகின்றார். கிழக்கை மூன்றாகப் பிரிக்கும் யோசனை, மகிந்தவின் சிந்தனையில் இருந்து, புதிதாக உருவான ஒன்றல்ல! வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் என்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும், கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற யோசனை, முன்னர் தொடங்கியே சிங்கள அரசுகளிடம் இருந்து வந்துள்ளது. 1980ம் ஆண்டுக் காலங்களின் ஆரம்பத்தில், பெங்கலூரில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளிலும் சிங்கள அரசு இந்த யோசனையை முன்வைத்திருந்தது. அந்த யோசனையின்படி, திருகோணமலை சிங்களவர்களுக்கு என்றும், மட்டக்களப்பு தமிழர்களுக்கு என்றும், அம்பாறை முஸ்லிம்களுக்கு என்றும், ஒரு திட்டம் சிங்கள அரசால் முன்வைக்கப்பட்டது. அம்பாறையைக் கிழக்கிலிருந்து பிரித்து மிகுதிப் பிரதேசங்களை வடக்கோடு இணைக்கலாம் என்றும் பின்னர் ஒரு திட்டம் முன் வைக்கப்பட்டது. அடிப்படையாக, சிங்கள அரசுகளுக்கு நீண்டகாலமாக ஒரு திட்டம் இருந்து வந்துள்ளது. திருகோணமலையை முழுமையாகச் சிங்கள மயப்படுத்துவதும், அதேபோல் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் சிங்களவர்களைப் பெருமளவில் குடியேற்றுவதும் சிங்கள அரசுகளின் மாறாத ஒரு திட்டமாகும். மகிந்த ராஜபக்சவின் அரசிற்கு இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவேசம் இருக்கின்றது. இன்று மட்டக்களப்பிலிருந்து கிட்டத்தட்ட ஒரு இலட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு தமிழ் மக்களின் வதிவிடங்களையும், பொருளாதாரத்தையும் நாசம் செய்துவிட்டு, இப்போது இவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செய்யப் போவதாக மகிந்த ராஜபக்ச சொல்கின்றார். சமாதானக் காலத்தில் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை இவ்வாறு அழித்துவிட்டு இப்போது உலகநாடுகளும், முஸ்லிம் நாடுகளும் தம்முடைய பாரிய பொருளாதார தேவைகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவ வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டு வருகின்றார். இங்கே நடப்பது என்னவென்றால், தொடர்ந்து இவர்கள் அழிப்பதுவும் பின்னர் அழிவுகளை அகற்றுவதற்கான வளர்ச்சித் திட்டங்களுக்குரிய நிதியை வாங்கி, மீண்டும் தங்களது படையைத் திரட்டி வலுச் சேர்ப்பதுவும்தான்! குடும்பிமலை என்ற பகுதி இப்போதுதான் முதல்தடவையாகச் சிறிலங்கா அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற பொய்ப் பரப்புரையைச் சிங்கள அரசு மேற்கோண்டு வருகின்றது. ஆனால் இன்று சிங்கள அரசின் ஏவல் நாயாகச் செயல்படுகின்ற கருணா, கடந்தவாரம் பிபிசி (BBC)க்கு அளித்த செவ்வியில் இதனை மறுத்திருக்கின்றார். முன்னரும் பல தடவைகள் சிறிலங்கா இராணுவம் குடும்பிமலையில் நிலை கொண்டிருந்ததைக் கருணாகூட ஒப்புக்கொண்டு செவ்வி அளித்திருக்கின்றார். இங்கே சில விடயங்களை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். முன்னர் ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, கிழக்கு மாகாணத்தில் 44 படை முகாம்களுக்கு மேல் மூடப்பட்டு, அங்கிருந்த இராணுவ வீரர்களை ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கைக்காக அரசு அனுப்பி வைத்தது. இதன் மூலம், கிழக்கில் தனது இராணுவ நிலைகளைச் சிறிலங்கா அரசு இயல்பாகவே இழந்தது. பின்னர் அப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் சென்று நிலை கொண்டார்கள். அங்கே மரபுவழிப் படைத்தளங்களை விடுதலைப்புலிகள் (தகுந்த காரணத்தோடு) வைத்திருக்கவுமில்லை. இவ்வாறு போரிடாமல் விடுதலைப்புலிகள் நிலை கொண்டிருந்த இடங்களில்தான் இன்று சிறிலங்கா அரசு பல்வேறு பாரிய இழப்புகளைச் சந்தித்தபின்பு பழையபடி நிலை கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை முதல்முறையாகக் கைப்பற்றியுள்ளோம் என்று சிங்கள அரசு சொல்வதைச் சரியென்று நாம் ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அங்கேயும் ஒரு மறைமுகமான உண்மை வெளிவருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அதாவது சிங்களம் இப்போதுதான் முதல் முறையாகக் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுகின்றது என்றால், இப்பிரதேசம் இதுவரை காலமும் சிங்களத்திற்குரிய பிரதேசமாக இருக்கவில்லை என்பதுவும் அப்பிரதேசம் தமிழர்களுடைய பாரம்பரிய பூமி என்பதுவும் இங்கே மறைமுகமாகச் சிங்கள அரசால் எற்றுக் கொள்ளப் பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். சிங்கள-பௌத்தப் பேரினவாதத்தின் வெறியை வெளிக்கொண்டு வருகின்ற வகையில், ஒரு வெற்றி விழாவை மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் நடாத்திக் காட்டியிருக்கின்றார். வெறியின் அடிப்படையில் இந்த வெற்றிவிழா நடைபெற்றிருந்தாலும், இந்த விழா வேறு நோக்கங்களையும் உள்ளடக்கியிருப்பதை நாம் உணருகின்றோம். இது மகிந்த ராஜபக்சவின் எதிர்கால அரசியல் வாழ்விற்காகவும், சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காகவும் செய்யப்பட்டதே தவிர, இது ஒரு உண்மையான, நிரந்தமான வெற்றி அல்ல என்பதை மகிந்த ராஜபக்ச உணர்ந்தே உள்ளார். இந்த வெ(ற்)றி விழாவில் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை. பல அரசியல் கட்சிகளும் பங்குபற்றவில்லை. இந்த விழாவில் பொதுமக்களும் பெருமளவில் ஆர்வமாகக் கலந்து கொள்ளவில்லை. இப்படியான போலியான பொய்ப்பரப்புரைகள் ஊடாகத்தான் மகிந்த ராஜபக்ச போரை நகர்த்திக் கொண்டு போக முனைகின்றார். இவருக்கு அதிர்ச்சி தரும் விடயங்கள் விரைவில் அரங்கேறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எமக்கு இல்லை! இந்த விழாவிற்கு பல அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுகமளிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம். சிங்கள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், மகிந்த ராஜபக்சவிற்கு இந்த வெற்றி சொந்தமில்லை என்று சொல்லி வந்தாலும், கிழக்கில் சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டுள்ளமை அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் அளித்திருக்கின்றது. சிங்களக் கட்சிகளின் பொதுவான நிலைப்பாடு இதுதான், என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை சிங்கள மக்கள் பெருமளவில் இந்த விழாவில் கலந்து கொள்ளாதற்குத் தகுந்த காரணங்கள் உண்டு. தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள அரசு வெல்வதில் சிங்கள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். அதில் சந்தேகமில்லை! ஆனால் இன்று போரின் காரணமாகச் சிங்கள மக்களும் பல பாரிய பிரச்சனைகளை எதிர் கொள்ள ஆரம்பத்துள்ளார்கள். வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி என்று பல பாரிய பிரச்சனைகளைத் தங்களது நாளாந்த வாழ்க்கையில் சிங்கள மக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். தவிரவும், முன்பு மகிந்த ராஜபக்சவோடு சேர்ந்திருந்த அரசியல்வாதிகளான மங்கள சமரவீர, சிறீபதி போன்றோர், பாரிய ஊழல் குற்றச் சாட்டுக்களை மகிந்த ராஜபக்சமீது முன் வைத்துள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கள் சிங்கள பொதுமக்களின் மனதில் படிப்படியாக ஆழமாக இப்போது ஊறி விட்டன. தங்களுடைய தற்போதைய வாழ்வு நிலையை மகிந்தவின் ஊழல் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற அளவிற்கு சிங்கள மக்களின் மனநிலை உருவாகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் சொத்துக்களையும், பொருளாதாரத்தையும் அழித்து, அவர்களை இடம்பெயரச் செய்து விட்டு இப்போது இங்கே தேர்தலை நடாத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். இங்கே சில விடயங்களைச் சுட்டிக்காட்டித் தர்க்கிக்க விழைகின்றோம். தேர்தலின் ஊடாகத் தங்களுடைய அடிவருடிகளுக்குப் பதவிகளைக் கொடுத்து, அவர்களின் ஊடாகத் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு மகிந்த ராஜபக்ச எண்ணுகின்றார். மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் முழுமையாகப் பறித்துவிட்டு பின்னர் சிpறு சிறு சலுகைகளைக் கொடுப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமை உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்று மகிந்த ராஜபக்ச திட்டம் தீட்டுகின்றார். இதற்காக அடிவருடிகளையும், கூலிpப் பட்டாளங்களையும் பயன்படுத்துவது சிங்கள அரசுகளின் நெடுங்கால உத்தியாகும். எப்போதும் தமிழ் மக்களில் சிலருக்கு சின்னச் சின்னப் பதவிகளைக் கொடுத்து அவர்களைத் தன் வலையில் சிங்கள அரசு வீழ்த்தியே வந்துள்ளது. தமிழர்களில் பலர் இவ்வாறு வீழ்ந்துள்ளதை வரலாறும் பதிவு செய்துள்ளது. தேர்தல்களோ, சலுகைகளோ பிரச்சனைகளைத் தீர்க்காது! தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் அங்கே தேர்தல்கள் நடாத்திப் பிரயோசனமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியத் தலையீட்டைச் சொல்லலாம். அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்க்காமல், எழுந்தவாரியான பிரச்சனைகளை மட்டும் தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, ஒரு தீர்வைச் செலுத்த முனைவது பிழை என்பதை இந்தியப் படையெடுப்பு நிரூபித்துக் காட்டியுள்ளது. தமிழீழத்தில் இந்தியப் படையெடுப்பு நடந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், எந்தத் தமிழ்ப் பகுதியுமே இருக்கவில்லை. இப்போது கிழக்கு மாகாணத்தில் நடைபெற இருப்பதுபோல், தேர்தல் அன்று நடாத்தப்பட்டு மாகாண சபையும் அமைக்கப் பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் மாகாணசபை நிர்வாகத்தால் அரசொன்றை நடாத்த முடியவில்லை. இந்தியப் பெரும்படை தமிழீழத்தின் சகல பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆக்கிரமித்து நின்றது. தாங்கள் விரும்பிய அரசை அமைத்து, தாங்கள் விரும்பிய செயற்பாடுகளையும் மேற்கொண்டது. ஆனால் விடுதலைப் போராட்டத்தின் வேகம் கூடிக் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது, போராட்டம் மேலும் மேலும் வளர்ச்ச்pபெற்றுப் புதிய பரிமாணங்களையும் அடைந்தது. இது ஒரு முக்கியமான படிப்பினையாகும். இங்கே போரியலில், மரபுவழிப் போரும், கரந்தடிப்போரும் இடத்திற்கும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், உத்திக்கும் ஏற்பட்ட முறையில் மாறி மாறி உபயோகிக்கப்படும். போரியலில் இதை இப்படித்தான் செய்யலாம், அதை அப்படித்தான் செய்யலாம் என்று வரையறுக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது. போரியலில் நேர்கோடு என்று இல்லை. எடுத்துக்காட்டாக ஒரு விடயத்தை வரலாற்றில் இருந்து பார்க்கலாம். மாசேதுங் முதலில் மரபு வழிப்போரைப் புரிந்தார். பின்னர் பாரிய நெருக்கடி வந்தபோது நீண்ட நடைப் பயணத்தை மேற்கொண்டு, ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்கின்றார். தன்னுடைய படைப்பலத்தைத் தக்க வைத்து வளர்ப்பதற்காக, மாசேதுங் இதனைச் செய்கின்றார். இன்று மாசேதுங்கின் நீண்ட நடைப்பயணம் மறு வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டாலும், இது உத்திகளில் ஒன்று என்பதையும், போரியலில் நேர்கோடு என்பது இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. போராட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வது போன்ற அடிப்படை விடயங்களில் மாற்றம் வராது என்பதையும் இச் செயல்கள் விளக்குகின்றன. கிழக்கு மாகாணத்தின் ஒட்டுக்குழுக்களில் ஒன்றான கருணா குழுவில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற கருணா-பிள்ளையான் உட்குழு மோதல்களால் மகிந்த ராஜபக்சவிற்குப் பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது என்று சிலர் கூறத் தொடங்கியுள்ளார்கள். இது மிகத் தவறான கூற்றாகும். கருணா-பிள்ளையான் பிரச்சனையை மகிந்த அரசுதான் திட்டமிட்டுத் தூண்டி விட்டுள்ளது. அதாவது எந்த ஒரு தமிழ் அணியும் பலமாக இருக்கக்கூடாது என்பதே சிங்கள அரசுகளின் கோட்பாடாகும். தங்களுக்கு ஆதரவாக ஏதாவது தமிழ் அணி இருந்தாலும் கூட, அது பலமாக இருக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசுகள் தெளிவாக இருக்கின்றன. தமிழ் அணிகள் அவ்வாறு பலமில்லாமல் இருந்தால்தான், அவைகள் தங்களது அடி பணிந்து இருக்கும் என்பதுவும் அப்போதுதான் இவைகளைத் தங்களின் இஷ்டப்படி கையாளலாம் என்பதுவும் சிங்கள அரசுகளின் உத்தியாகும். இந்த உத்தியை முன்னர் இந்திய அரசும் செய்துள்ளது. பல போராட்டக் குழுக்களுக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவித்து அவைகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்தியாவின் உத்தியைத்தான், மகிந்த ராஜபக்ச இன்று வெற்றிகரமாக கையாளுகின்றார். சரியாகச் சொல்லப் போனால் கருணா-பிள்ளையான் மோதல்கள் மகிந்தவிற்குப் பிரச்சனையல்ல! அது அவருக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் மகிந்தவின் அரசு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றது. இதன்மூலம் இக் குழுக்களுக்குள் இருந்த கொஞ்சநஞ்சப் பேரம் பேசும்? ஆற்றலும் இல்லாமல் போய்விட்டது. சிங்கள அரசு தேவைப்பட்டால் இக் குழுக்களுக்குள் இன்னும் பிளவுகளை உண்டாக்கும். தேவையென்றால் அவர்களையும் தானே கொல்லும்! இங்கே சகல பிரச்சனைகளும் அரசியல் பிரச்சனைகள்தான்! விடுதலைக்கான போராட்டச் சிந்தனையும், அதனை அடக்குவதற்கான பேரினவாதச் சிந்தனையும் அரசியல் தளத்தின் இரு துருவங்களின் மோதல்களாகும். அரசியல் பிரச்சனை ஊடாகத்தான் மற்றைய பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. இன்று இராணுவத்தின் வெற்றி என்று சொல்லிக் கொண்டு அரசு வெ(ற்)றி விழாக்களை நடாத்தினாலும், இது உண்மையான வெற்றி அல்ல என்பது அரசுக்கு உள்ளுரத் தெரியும். தவிரவும், சிங்கள இராணுவத்தினரின் மனநிலை பாதிக்கப்பட்டு வருவதைச் செய்திகளும், அவர்களது தற்கொலைகளும், கைவிட்டு ஓடுதலும் தெரியப்படுத்தி வருகின்றன. சிங்கள இராணுவம் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாகப் பல உடைவுகளையும் சந்தித்து வருகின்றது. தானே தன்னைத் திருப்திப்படுத்துவதற்காக, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, இந்த மாயையில் மற்றவர்களும் ஏமாந்துவிட வேண்டும் என்பதற்கான விழாதான் இது1 தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அமைதி காத்து வருகின்றார்கள் என்ற சொற்பதத்தைப் பலர் உபயோகித்து வருகின்றார்கள். இது மிகத் தவறான சொற்பதமாகும். விடுதலைப்புலிகள் அமைதி காக்கவில்லை. விடுதலைப்புலிகள் அமைதி காத்து வருகின்றார்கள் என்றால் யாழ்ப்பாணத்தில் சுமார் 40,000 இராணுவத்தினர் தேவையில்லை. கொழும்புப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையில்லை. கிழக்கு மாகாணத்திலும் இவ்வளவு படைகள் தேவையில்லை. இன்று பாரிய இராணுவ முகாம்கள் தாக்கியழிக்கப்படாவிட்டாலும் விடுதலைப்புலிகள் அவர்களுக்குரிய வகையில் செயற்பட்டுக் கொண்டுதான் வருகின்றார்கள். இதன் காரணமாகத்தான் சிங்கள அரசு ஒவவொரு நாளும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றது. இன்று குடும்பிமலையைப் பிடித்து விட்டதன் மூலம் தமிழீழக் கனவை நசுக்கி விட்டோம் என்று சிங்கள அரசு சொல்கின்றது. இதேபோலத்தான் முன்னர் யாழ்ப்பாணத்தைப் பிடித்தபோது தமிழீழப் போராட்டத்தை முற்றாக அழித்து விட்டோம் என்று முந்தைய அரசும் சொல்லியது. யாழ்ப்பாணத்தைப் பிடித்துவிட்டு போராட்டம் முடிந்தது என்று பட்டயம் வாங்கிய காலமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் பின்னர்தான், மிகப்பாரிய சண்டைகள் எல்லாம் நடைபெற்று, பாரிய தமிழ்ப் பகுதிகள் மீட்கப்பட்டன. பிறகு புலிகளுக்கு என்று கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன என்பதை அரசு ஏற்றுக் கொண்டு ஓர் இணக்கத்திற்கும் வந்தது. இப்போது மீண்டும் ஒரு பட்டயத்தை இந்த அரசு பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கைக் காலத்தில் இதோ நாளைக்கு வன்னி பிடிபடப் போகின்றது என்று சொல்லப்பட்ட வேளையில்தான், இரண்டு ஆண்டுக்காலக் கைப்பற்றுதல்கள், இரண்டு கிழமைகளுக்குள் மீட்கப்பட்டன. அப்படியான ஓர் உடைவை சிங்கள அரசு மீண்டும் சந்திக்காமல் போகாது! இது வரலாறு!
இன்று யாழ்ப்பாணத்தில் சுமார் 40 ஆயிரம் இராணுவத்தினர்களை எந்தவிதத்
தாக்குதல்களையும் மேற்கொள்ளாமலேயே விடுதலைப்புலிகள் முடக்கி
வைத்துள்ளார்கள். கிழக்கு மாகாணத்திலும், சிங்கள இராணவத்தினத்தினர்
இவ்வாறு முடக்கி வைக்கப்படுகின்றபோது இராணுவம் அகலக்கால் வைத்துள்ள
நிலைமைக்குத் தள்ளப்படுகின்றது. ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின்
விருப்பத் தேர்வின்படிதான் அடுத்த கட்ட இராணுவ நகர்வுகள் அமையும்! |