Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Maaveerar  - மாவீரர் அணையாத தீபங்கள் > Maaveerar Naal 2007 > மாவீரர் நாள் - நம்பிக்கை அளித்த சிட்னி இளையோர் - பராசக்தி சுந்தரலிங்கம்

மாவீரர் நாள் - நம்பிக்கை அளித்த சிட்னி இளையோர்

- பராசக்தி சுந்தரலிங்கம்
5 December  2007

"பார்வையாளர்கள் உறைந்துபோகிறார்கள். சிலர் வெம்புகிறார்கள். சிலர் பொங்கும் கண்ணீரை அடக்கப்பார்க்கிறார்கள். இது பாவனை - ஒரு நாடகம்! ஆனால் அதுதான் உண்மை! யதார்த்தம்! ... 'உண்மையின் அழகும் அழகின் உண்மையும் இரண்டறக் கலக்கும் இடத்தில் உன்னதத்தை தரிசிக்க முடியும்." என்ற பிளேட்டோவின் வாசகம் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. "


'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"

இந்தப் பாடல் படிப்படியாக உச்சஸ்தாயியில் ஏறி மெதுவாக இறங்கிக்கொண்டிருக்கிறது.

மேடையிலே தமிழ் இளையோர் இந்த தாள கதிக்கு ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளம். கண்ணீர் வழிய எழுந்து நின்று நீண்ட கரகோஷம் செய்து எழுச்சி நடனம் ஆடிய இந்த இளையோரை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறது.

மக்கள் கண்களில் வழிந்தது துன்பக்கண்ணீரல்ல. அது ஆனந்தக்கண்ணீர். பேரிடிகளால் தவித்துக்கொண்டிருந்த மாவீரர் குடும்பங்களுக்கும் ஏனைய தமிழ் உறவுகளுக்கும் இந்த இளையோர் நம்பிக்கை ஊட்டிவிட்டார்கள்.

இந்த ஆடலை இவர்களே சிந்தித்து நெறிபடுத்தினார்கள் என்பதுதான் புதுமை.

மண்டபத்திலே மின்சார வெளிச்சம் மெதுவாக ஒளி குறைகிறது. மெளுகுவர்த்தி வெளிச்சத்தில் ஆடல் ஆரம்பிக்கிறது.

'நித்தியப் புன்னகை அழகன் இங்கே
மீள்துயில் கொள்ளுகின்றான.
நாங்கள் தொட்டு எழுப்பவும்
கூவி அழைக்கவும்
ஏதும் பேசாமல் உறங்குகின்றான்.
உன்னை இழந்தது உண்மையா?
பதில் சொல்லையா எங்கள் செல்வமே!"

என்ற புதுவையாரின் பாடல் சாந்தனின் குரலிலே உருக்கமாக ஒலிக்கத்தொடங்குகிறது.

நான்கு இளையோர் புலிக் கொடி போர்த்திய பேழையை தமது தோளிலே சுமந்தபடி மெதுவாக நடந்து வருகின்றனர். முன்னாலே இளையோர் ஒருவர் கையிலே விளக்கை ஏந்தியபடி வருகிறார் - எல்லாமே தாள கதிக்கு.

பேழையில் மந்திரப்புன்னகை செல்வனின் வித்துடல் இருப்பதாக பாவனை. மண்டபத்திலிருந்த மக்களுக்கூடாக இந்த ஊர்வலம் நகர்ந்தபோது பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கிறது. மெதுவாக அந்தப் பேழையை அதற்காக அமைக்கப்பட்ட மேடை மீது வைத்து வணங்கி நிற்கிறார்கள் இந்த இளையோர்.

திடீரென அந்த மௌனத்தைக் கலைத்துக்கொண்டு பறை ஒலி கேட்கிறது. இளையோர் ஒருவர் பறையை ஏற்ற இறக்கத்துடன் ஒலிக்கச்செய்கிறார் - ஊனையும் உயிரையும் உலுப்பிய பறை ஒலி அது! எமது மண்ணுக்கே உரிய பறை ஓலி. போர்ப் பறையா? மரணவீட்டுப் பறையா?

பார்வையாளர்கள் உறைந்துபோகிறார்கள். சிலர் வெம்புகிறார்கள். சிலர் பொங்கும் கண்ணீரை அடக்கப்பார்க்கிறார்கள். இது பாவனை - ஒரு நாடகம்! ஆனால் அதுதான் உண்மை! யதார்த்தம்!

சிங்கள தேசம் கொன்றொழித்த சமாதானப்புறாவின் இறுதி யாத்திரையை நேரிலே கொண்டுவந்துவிட்டார்கள் இந்த இளையோர். ஒரு பெரிய செய்தியை சொல்லிவிட்டார்கள் இந்த மௌன நாடகத்தின் மூலம்.

தொடர்ந்து வந்தது சங்காரம்!
ஊழிக்கூத்து!

'போரம்மா! போரம்மா!
உனையன்றி யாரம்மா?
போரம்மா! போரம்மா!"

என்ற பாடலுக்கு இளம் பெண்களும் ஆண்களுமாக மேடையிலே புதிய கூத்து படைக்கத் தொடங்குகிறார்கள். பாட்டும் ஆட்டமுமாக மேடை அதிர்கிறது. போரிலே வீழ்ந்த மாவீரரை ஏந்தியபடி ஆட்டம் தொடர்கிறது.



தமிழ் மக்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் இந்த ஆட்டத்திலே இணைகின்றன - சிலம்பமும் காவடியும் கூத்தும் கும்மியும் களரியுடன் பின்னிப்பிணைகின்றன. புதிய வடிவங்கள் பிறக்கின்றன. நியுசிலாந்து நாட்டு பழங்குடிகளின் ஹக்கா நடனம் இந்த வடிவங்களுடன் இணைந்து வீறுபெற்று எழுகிறது. மேடையா? போர்க்களமா? என்ற சந்தேகம் தோன்றுகிறது. இது வேலன் வெறியாடமா!!

இதைப்பார்த்தபோது ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் மௌனகுரு (அப்பொழுது அவர் மாணவர்) மேடையில் ஆடிய 'சங்காரம்", 'கந்தன் கருணை" நினைவுக்கு வருகிறது. அந்த ஆட்டத்தை அவருக்குப்பின்னர் யாருமே அப்படி ஆடவில்லை என்றுதான் செல்லவேண்டும். இன்று இந்த இளையோரின் ஆடலைப் பார்த்ததும் நம்பிக்கை பிறக்கின்றது.

மனம் சோர்ந்துபோயிருந்த புலம்பெயர் மக்களுக்கு எங்கள் இளையோரின் ஆழமான தாயகப்பற்று புதிய நம்பிக்கையை தோற்றுவித்துவிட்டது என்பது தெளிவாகியது.

'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனைகூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?"

என்று சும்மாவா அன்று பாரதி பாடினான்?

'உண்மையின் அழகும் அழகின் உண்மையும்
இரண்டறக் கலக்கும் இடத்தில் உன்னதத்தை தரிசிக்க முடியும்."

என்ற பிளேட்டோவின் வாசகம் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

இளையோரின் இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டியது. சிட்னியில் மாத்திரமல்ல வேறு இடங்களிலும் இவர்கள் இதை மேடையேற்றவேண்டு;ம். இவர்களிடமிருந்து நாம் நிறையவே எதிர்பார்க்கிறோம். புதிய ஆடல் வடிவங்கள் பல தோன்ற வேண்டும்.

இந்த இளையோரை வாழ்த்துகிறோம்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home