காரைக்கால் அம்மையார் -
ஒரு பன்முகப்பார்வை
ம.தனபாலசிங்கம் , சிட்ணி,
அவுஸ்திரேலியா
M.Thanapalasingham
15 March 2005
"பிரச்சனைகளை
எதிர்நோக்கியபோது அம்மையார் செயல்பட்ட விதங்கள், சைவ பத்தி
இயக்கத்திற்கு முன்னோடியாக சிவனை முழுமுதற் கடவுளாக பாடிய
பாடல்கள், சிவதாண்டவம் பற்றிய கருத்தாக்கங்கள், இலக்கிய
வடிவங்கள், என பரந்துபட்ட துறைகள் எல்லாவற்றிலும்
காரைக்காலம்மையார் ஒரு முன்னோடி. அக்காலச் சூழலில் வைத்து
நோக்கும்போது அவர் செய்தது ஒரு தனிமனிதப் புரட்சி
எனலாம்..."
(பெருமிழலைக்
குறும்பர்க்கும் ) "பேயார்க்கும் அடியேன்"
திருத்தொண்டத்தொகை (4)
காரைக்காலில் பிறந்த புனிதவதியாரை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் "பேயார்" என வாஞ்சையோடு
அழைக்கின்றார். "தாயுமிலி,
தந்தையிலி தான் தனியன்" ஆன சிவனால் அம்மையே என அன்புருக
விளிக்கப்படுகின்றார்.
அம்மையாரோ பெற்றோர் சூட்டிய பெயரைத் துறந்து தன்னைக்
காரைக்கால் பேயாக, இனம்காண்கின்றார்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள்.
காரைக்காலம்மையார்,
மங்கையர்க்கரசியார்,
இசைஞானியார் ஆகிய மூவருமே அவர்கள். பாண்டிமாதேவியான
மங்கையற்கரசியாரும்,
சுந்தரரின் தாயாரான, இசைஞானியாரும் பத்திப் பாடல்கள்
எதையும் பாடவில்லை.
அப்பரின் சகோதரியான திலகவதியார் அறுபத்துமூவரில்
இடம்பெறவுமில்லை. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான
பேயார் தேவாரகாலத்திற்கு முற்பட்டவர்.
அப்பருக்கும்,
சம்பந்தருக்கும்
முன்தோன்றியவர்.
சைவசமய எழுச்சிக்கும், பத்திமார்க்கத்திற்கும் வித்திட்ட
பெண்மணி என்ற பெருமை காரைக்காலம்மையாரையே சாரும். அம்மையாரைத்
தொடர்ந்து திலகவதியாரும் மங்கையற்கரசியாரும் சைவ சமய
எழுச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இருந்தபோதும் பண்ணோடு பாடும்
பாடல்களைப்பாடி பத்தி இயக்கத்திற்கு அம்மையாரே
வித்திடுகின்றார். அவர்
திருவாலங்காட்டில் விதைத்த விதைகள் அப்பராலும்,
சம்பந்தராலும் தமிழ் நாடெங்கும் தடைகள் அகற்றி
விதைக்கப்படுகின்றன.
சுந்தரராலும், வாதவூரராலும் அவை
கனி நிறைந்த மரங்களாகின்றன.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில்
தனிமரங்களையல்ல பெரும் சோலையை தரிசிக்கின்றோம்.
அம்மையாரின் பாடல்கள்
வெந்தசாம்பல் நிறைந்த ஈமப்புறங்காட்டை நோக்கிச்செல்ல, மூவர்
தேவாரங்களும், வாதவூரரின் வாசகங்களும் தமிழ்நாட்டுக்
கோவில்தலங்களைச் சுற்றிவருகின்றன.
அம்மையார் திருவாலங்காட்டில்
பேய்களின் மத்தியில் சிவனாரின் உருத்திரதாண்டவத்தை கண்டு
களிக்கின்றார். அப்பரோ பத்தர்கள் சூழ்ந்த கோவில் சூழலில் "
இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்தை" காணும் மனித்தப்பிறவியை
குதூகலத்துடன் பாடுகின்றார்.
சிவதாண்டவம் பற்றிய தத்துவம்,
பத்தி, சித்தாந்தக் கருத்துருவாக்கம், சிவனாரைப் பாடும்போது
எடுத்தாண்ட புராணக்கதைகள், இசைப்பாடல்கள் என பல்வகைகளிலும்
அம்மையார் காட்டியவழியில் பின்வந்தோர் பெரும் கொடுமுடிகளைத்
தொட்டு நிற்பதைக் காணமுடிகிறது.
சிலம்பின் கண்ணகியார்போல் " பெருநிலம் முழுதாளும் பெருமகன்
தலைவைத்த ஒருதனிக்குடிகளில் " அம்மையார் பிறக்காவிடினும்,
செல்வம் நிறைந்த வணிகனான தனதத்தன் மகளாகப் பிறந்த
புனிதவதியார், கல்வியிலும், அறிவிலும், கலைகளிலும் பெரும்
பரிணாமங்களைக் கண்டுள்ளமையை அவரது ஆக்கங்களில் காணமுடிகின்றது.
தனதத்தன் தன் செல்வம் செல்வாக்கு
என்பவற்றை பயன்படுத்தி தன் மகளுக்கு வீட்டோடு ஒரு மாப்பிள்ளையை
கலியாணம் செய்துவைத்தார்.
"...............தளரடி மென்நகை
மயிலைத் தாதவிழ்தார்க்
காளைக்குக் களிமகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள்"
என்பர் கேககிழார் பெருமான்.
புனிதவதியாரை மயிலுக்கும்
பரமதத்தனை எருதுக்கும் உவமையாக்குவதன் மூலம் " ஞானமும்
கல்வியும் நல்லோர் ஏத்தும் பேணிய " பண்புகளும் கொண்ட
புனிதவதிக்கு பரமதத்தன் பொருத்தமானவனா என்ற கேள்வி எழுகின்றது.
இதன் விபரீத விளைவுகளை பின்னர் காண்கின்றோம்.
தமிழ் மக்களின் வாழ்வியல் கோலங்களில் மாம்பழம் முக்கனிகளில்
ஒன்றுமட்டுமல்ல, அது பல கலகங்களுக்கும் காரணமாக இருந்ததைப்
பார்க்கின்றோம்.
கந்தனுக்கும் கணேசனுக்கும் போட்டியாகி, முடிவில் கந்தன்
வீட்டை விட்டு வெளியேறி கோவண ஆண்டியாக வழிசமைத்த கனியே
அம்மையாரின் வாழ்விலும் திருப்பு முனையாக அமைகின்றது. அவரும்
வீட்டைவிட்டு வெளியேறி பேயுருவம் கொள்கின்றார்.
அவர் காலத்து வாழ்கைச் சூழலில்
இது ஒரு புரட்சி எனலாம். அம்மையாரின் வாழ்வில்
மாம்பழத்தைச்சுற்றி ஏற்பட்ட சம்பவங்களை சமயம், ஆன்மீகம் என்ற
பார்வையில் மட்டுமே பார்க்கும் சுபாவம் பலருக்கும்
பழக்கப்பட்டதொன்றாகும். அந்த நிகழ்வை சமூக மானிடவியல் நோக்கில்
பார்க்க வேண்டுமாயின் அக்காலத்து சமூக அமைப்பினை, அதில்
பெண்கள் வகித்த இடத்தினை விளங்கிக்கொள்வது அவசியமாகின்றது.
இருந்ததோ இரண்டு மாம்பழங்கள். பரமதத்தனோ அதை மனைவியுடன்
பகிர்ந்து உண்ணும் பண்பற்றவனாகக் காணப்படுகின்றான். ஒன்றை
உண்டபின் மற்றதை தன் மனைவிக்கு என எண்னாமல் அதையும் தரும்படி
வேண்டுகின்றான். அந்தச் சந்தர்பத்தில் அந்த மாம்பழத்திற்கு
என்ன நடந்தது என்பதை புனிதவதியார் ஏன் கூறவில்லை?
கணவனின் அனுமதியின்றி எதையும்
செய்வதற்கு அவருக்கு உரிமை இருக்கவில்லையா? சிவனடியார்களை
உபசரிப்பதை கணவன் விரும்பவில்லையா? நடந்தவற்றை சொல்ல பயந்தாரா?
என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இதற்கான விடைகளை அவர்காலத்து
சமூக பண்பாட்டுச் சூழலை விளங்கிக்கொள்வதன் மூலமே காணமுடியும்.
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்ற சமூக அமைப்பில் கற்பும்
ஒழுக்கமும் பெண்களுக்கே. அதுவும் உயர்குடிப் பிறந்தார்க்கே.
அந்த உயர் குடியில் பிறந்த
ஆண்கள் மறுமணம் செய்யலாம்,. அவர்களுக்கு இற்பரத்தையும்
இருக்கலாம். அவர்கள் சேரிப்பரத்தையிடமும் போகலாம். ஆண்
ஆதிக்கம் செலுத்திய சமூகம் அவர் வாழ்ந்த சமூகம்.
இதனை மாற்றும் சக்தியோ வாய்ப்போ
புனிதவதியாருக்கு இருக்கவில்லை. அதே சமயம் மற்றவர்களைப்போல்
அதை ஏற்றுக்கொள்ளவும் அவரால் முடியவில்லை. அவரது கல்வியும்
அறிவும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
அதுமட்டுமன்றி துணிவும்
வைராக்கியமும் கொண்ட அவரது ஆளுமை தனது துன்ப நிலைக்கு
மாற்றுவழிகாண அவருக்குத் துணையாகின்றது. இதனால்தான் எடுத்த
எடுப்பிலேயே
முதல் பாடலில்,
பிறந்து மொழிபயின்ற
பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்
என அவரால் துணிந்து
பாடமுடிந்தது. இறைவனே எனக்கு வந்த இடரை எப்படித்
தீர்க்கப்போகின்றாய் என கேட்க முடிந்தது.
வாழ்வில் ஏற்பட்ட சோகங்களுக்கு
ஏமாற்றங்களுக்கு , தோல்விகளுக்கு, சமூகத்தின் அழுத்தங்களுக்கு
அம்மையார் விடைகாண முற்பட்டதன் விளைவே அவர் வீட்டை விட்டு
வெளியேறி சுடுகாட்டை தன் வாழ்வுடன் தழுவிக்கொண்டு அமைதிகாண
முற்பட்ட செயல்கள் எனலாம்.
இந்த தேடலில் அவரது வைராக்கியம்
அசைக்க முடியாததொன்றாக இருப்பதை,
இடர் களையாரேனும் எமக்கு
இரங்காரேனும்
படருநெறி பணியாரேனும்
அன்பறா என்நெஞ்சு அவர்க்கு.
என் நெஞ்சு இறைவனுக்கேயன்றி பழைய வாழ்க்கையை நாடாது. சிவனையே "
மனக்கினிய வைப்பாக வைத்தேன் " என்கின்றார்.
அம்மையாரது பாடல்களை ஆய்வு
செய்யும்போது அவரது வாழ்க்கை அனுபவங்கள், இழப்புக்கள்,
எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அவரது ஆக்கங்களில் வெளிப்பட்டள்ளது
புலப்படும். இதை அவர் மரபிற்கு புறம்பான முறையில்
வெளிப்படுத்தி பிற்காலத்தவற்கு அந்தமுறையை மரபாக்கி வெற்றி
கொள்கின்றார் எனலாம். இவரது ஆக்கங்கள் மூவகைப்படும்:
1. நூற்றியொரு பாடல்களைக் கொண்ட
அற்புதத் திருவந்தாதி.
2. இருபது பாடல்களைக் கொண்ட
திருவிரட்டைமணி மாலை.
3. பதினொரு பாடல்களால்
திருத்தலத்தை போற்றும் மூத்ததிருப்பதிகமும், பதினொரு
பாடல்களால்
திருநடனத்தைப் போற்றும் மூத்ததிருப்பதிகமும்.
இவற்றில் முதலில் பாடப்பெற்றது
அற்புதத் திருவந்தாதி. வெண்பா என்னும் பாவகையில் அந்தாதி
முறையில் பாடப்பட்டுள்ளது. ஒரு பாடலின் இறுதிச்சொல் அதனை
தொடரும் பாடலின் முதல் சொல்லாக அமையும் அந்தாதி மரபிற்கு
அம்மையார் முன்னோடி.
யாப்பிற்காக சொல்லை
சிதைவுபடுத்தாது சொல்லும், பொருளும் ஒத்தியல்வதை இவரது
கவிதையில் கண்டு களிக்கலாம். பண்ணும் இசையும் துள்ளல் நடையும்
மந்திரச்சொல்லின்பமும் அற்புதத்திருவந்தாதிக்கு அணிசெய்கின்றன.
விருத்தம் என்ற பாவகையின் கொடுமுடியைக் கண்டவன்
கம்பன். தாழிசையால் சயங்கொண்டார் பரணி பாடிக்
குதிக்கின்றார். புகழேந்தியார் வெண்பாவில் வித்தை காட்டுவதை
நளவெண்பாவில் காண்கின்றோம். புகழேந்திக்கு முற்பட்ட
அம்மையார் வெண்பாவை தொடக்கிய ஆரம்பத்திலேயே அதன் உச்சங்களை
தொட்டு நிற்பதை காணமுடிகின்றது.
அழகான வர்ணனைகள் இவர்
கவிதைகளுக்கு மெருகூட்டுவதைப் பார்க்கலாம். சூரிய உதயம்,
கடும்பகலின் சூடு, அந்திமாலையின் அற்புதம், கும்மிருட்டு இவை
ஒரு நாளின் பல்வேறு காட்சிக்கோலங்கள். சிவனை நோக்கி எவ்வுருவோ
நின் உருவம் எனக் கேட்ட பேயார்:
காலையே போன்றிலங்குமேனி
கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு, மாலையின்
ஆங்குருவே போலுஞ் சடைக்கற்றை, மற்றவற்கு
வீங்கிருளே போலுமிடறு
என எங்கும் எதிலும் சிவனையே
காண்கிறார்.
அற்புதத் திருவந்தாதியில் காதலும் பத்தியும் கசிந்துருகும்
பாவமும் பெருக்கெடுக்க அவரது மற்றைய படைப்பான திருவிரட்டைமணி
மாலை தாயன்பை வெளிப்படுத்துகின்றுது. நெஞ்சை நோக்கிப் பாடிய
பாடல்கள் பலவும் இரட்டைமணி மாலையில் காணப்படுகின்றன. கலியும்
வெண்பாவும் மாறி மாறி வர ஆக்கப்பட்டுள்ள இப் பாடல்களில்
துன்பத்திலிருந்து விடுபட, கர்மவினைகள் பற்றிப்பிடிக்குமுன்
நெஞ்சே:
சங்கரனை தாழ்ந்த சடையானை
அச்சடைமேற்
பொங்கரவம் வைத்து உகந்த புண்ணியனை
பாடு என வேண்டுகிறார்.
வேதியனை, வேதப்பொருளானை,
வேதத்திற்கு ஆதியனை நோக்கி நீ ஏன் கொடிய பாம்பை
அணிந்திருக்கின்றாய், சுடலையில் ஆடும்போது உமையவளை வையாதே
என்றெல்லாம் தாயின் அன்புடன் உருகுகின்றார்.
இவற்றிற்கு மாறாக அமைந்த பாடல்கள் அவரது
மூத்த திருப்பதிகமாகும். திருவாலங்காட்டு சுடலையும், அங்கு
நடந்த உருத்திர தாண்டவமும் மூத்த திருப்பதிகத்தின்
பாடுபொருளாகின்றது. பேய்களும், பிணம் தின்னும் காட்சிகளும்
எமக்கு அருவருப்பையும் அச்சத்தையும் தருகின்றன. குரு~ரமான
காட்சிக்கோலங்களைக் கண்டு நடுங்குகின்றோம்.
செத்த பிணத்தைத் தெரியாதொருபேய்
சென்று விரல்சுட்டிக்
கத்தியுறுமிக் கனல்விட்டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேயிருந்தோடப்
பித்தவேடம் கொண்டு நட்டம் பெருமானாடுமே
பேய்களும் பெண் பேய்களாகக் காணப்படுகின்றனர்.
இந்த பேய்மகளிர் பற்றிய
செய்திகள் பல அம்மையாருக்கு முற்பட்ட இலக்கியங்களில்
காணப்படுகின்றன. போரக்ககளத்தில் இறந்து போனவரை உண்பதும்,
பேயாட்டங்களும், களவேள்விகளும், கொற்றவை ஆட்டங்களும்,
ஈமப்புறங்காட்டுக் காட்சிகளும்
சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவற்றை
அறிந்திருக்கும் வாய்ப்பு பேயாருக்கு இருந்திருக்கும் எனத்
துணியலாம். பேய்மகளிர் பற்றிய செய்திகள் மக்கள், குலங்களாக,
குளுக்களாக வாழ்ந்த பல புராதன சமூகங்களிடையே காணப்பட்டதை
மானிடவியல் ஆய்வாளர் நிரூபித்துள்ளனர்.
பூர்வீகத் தமிழரும் முருகனுக்கு
பலிகொடுத்து வணங்கிய இடத்தை " வெறி அயர்களம் " எனக் குறிப்பர்.
வேலையுடைய ஒருவன் வெறிகொண்டு ஆடும் இடம் என்பதே இதன் பொருள்.
இவற்றின் பின்னணியில் அம்மையார் காட்டும் பேய்மகளிரை வைத்து
நோக்கல் வேண்டும்.
அம்மையார் படிப்படியாக தன்னை சமூகத்தில் இருந்து
அப்புறப்படுத்திய நிலையில், அதில் இருந்து
அந்நியப்படுத்தப்பட்ட நிலையில், " அன்னையையும் அத்தனையும் அயல்
இடத்தார் ஆசாரத்தையும் " துறந்த நிலையில், தன்நாமம் கெட்டு
தலைப்பட்டு நின்ற நிலையில் மூத்த திருப்பதிகத்தை பாடினார்
எனலாம்.
மூத்த திருப்பதிகத்தில்
அம்மையார் காட்டும் சிவனாரின் நடன தத்துவம் சாக்தத்திலும்,
குறிப்பாக வங்காளத்தில் காணப்படுகின்றது. வங்காளத்தில்
சிவனுக்குப் பதிலாக காளியே நடனம் செய்வாள்.
சுடலை விரும்பினையாதலின் உளத்தை
சுடலையாக்கிவிட்டேன் மாகாளி
மயானத்துறையும் மாயே சாமளா
தியானித்து என் உள்ளத்தாடுவை நிரந்தரம்
என்பது வங்காளத்தில் காளியை
ஏத்தும் தோத்திரங்களில் ஒன்று.
தாழ்சடை எட்டுத்திசையும் வீசி
அங்கங் குளிர்ந்து
அனலாடும் எங்களப்பன் இடம் திருவாலங்காடே
இதில் நெருப்பு அழித்தலையும், குளிர்ந்த தேகம் சிவனின்
அருளையும் குறிக்கும் என்பர். மூத்த திருப்பதிகம்
ஈமப்புறங்காட்டில் பாடப்பட்டதாலோ என்னவோ அவை இன்று கோவில்களில்
பாடப்படுவதில்லை.
இந்த நடனத்திற்கு விளக்கம்
கொடுக்கும் ஆனந்தகுமாரசுவாமி
" சிவன் அழித்தற் கடவுள். அவனுக்கு உவப்பான இடம் சுடுகாடு.
ஆனால் அவன் சங்காரம் செய்வது எதை? பிரபஞ்ச ஒடுக்கத்திலே
மண்ணையும் விண்ணையும் மாத்திரம் ஒடுக்கவில்லை. ஒவ்வோர் உயிரின்
பாசத்தளையையும் அழிக்கிறான். சுடலை எங்கே? சுடலை என்றால் என்ன?
மயானமென்பது நமது பிரேதத்தை சாம்பலாக்குமிடமன்று. இறைவனுடைய
பத்தரின் உள்ளமே சுடுகாடு. அது பாழ்படுத்தப்பட்ட பாலை நிலமாக
வேண்டும். எங்கே அகங்காரம் அழிகிறதோ அங்கே மாயையும் கன்மமும்
பொடியாகின்றன. மாயாவிகாரமும் வினைத்தொகைகளும்
எரிக்கப்படுகின்றன. அதுதான் சுடலை. அதுதான் மயானம். அங்கேதான்
திருக்கூத்தனின் திருநடனம் நிகழும். அதனால் அவன் சுடலையாடி
என்ற பெயரையும் பெறுகின்றான். "
அம்மையாரை திருவாலங்காட்டிற்கு
இட்டுச்சென்ற சிவனார் அவருக்காக நடனமாடி அருளிய செய்திகளை
அவரது பாடல்களில் காண்கின்றோம்.
பிரச்சனைகளை எதிர்நோக்கியபோது
அம்மையார் செயல்பட்ட விதங்கள், சைவ பத்தி இயக்கத்திற்கு
முன்னோடியாக சிவனை முழுமுதற் கடவுளாக பாடிய பாடல்கள்,
சிவதாண்டவம் பற்றிய கருத்தாக்கங்கள், இலக்கிய வடிவங்கள், என
பரந்துபட்ட துறைகள் எல்லாவற்றிலும் காரைக்காலம்மையார் ஒரு
முன்னோடி. அக்காலச் சூழலில் வைத்து நோக்கும்போது அவர் செய்தது
ஒரு தனிமனிதப் புரட்சி எனலாம்.
பயன்பட்ட நூல்கள்
1. திருத்தொண்டர் புராணம், சி.கே சுப்பிரமணிய முதலியார் உரை
2. சிவானந்த நடனம்,
டாக்டர் ஆனந்தகுமாரசுவாமி
3.
பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், கலாநிதி க.கைலாசபதி
4. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை
நோக்கு செல்வி திருச்சந்திரன்.
5.புறநாணூறு |