Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  > Tamils - a Trans State Nation  - தமிழ் அகம்: ஓர் உணர்வா, அல்லது இடமா? > The Tamil Heritage > Tamil Language & Literature > Culture of the Tamils Sathyam Art Gallery > Spirituality & the Tamil Nation நாலாயிர திவ்விய பிரபந்தம் - பொருள் அடக்கம் > முன்னுரை - முனைவர் கண்ணன் >  மானிடம் தழுவிய ஆழ்வார்கள் - ம. தனபாலசிங்கம் > பாடல்கள் 1- 473 பாடல்கள் 474 - 503  > பாடல்கள் 504 - 646  > பாடல்கள் 647 - 947 > பாடல்கள் 948-1447பாடல்கள் 1448 - 2031 > பாடல்கள் 2032- 2790 > பாடல்கள் 2791-3342 > பாடல்கள் 3343-4000

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

மானிடம் தழுவிய ஆழ்வார்கள்
[see also Sri Aurobindo on Andal & Nammalwar]

ம. தனபாலசிங்கம்
சிட்னி, அவஸ்திரேலியா, 2 July 2005

 சைவ சமயத்தவர்க்கு பன்னிரு திருமுறைகளை போல் வைணவர்களுக்கு நாலாயிர திவ்விய பிரபந்தம். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவியாழ்வார் என்னும் பன்னிரு ஆழ்வார்களினால் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்ட

“உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி”

பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யபிரபந்தமாகும்.

திருமாலின் பெருமையை, அவதாரங்களைப் பாடியதோடு, கோவிந்தனை, பிள்ளையாக, காதலனாக, வரித்துக் கொண்டு ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் கம்பனுக்கும் பாரதிக்கும், ஏன் கண்ணதாசனுக்கும் ஆதர்சமாக இருந்ததைப் பார்க்கின்றோம்.

திருமால் வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வந்தமைக்கு தொல்காப்பியம் சான்று பகர்கின்றது. நான்கு நிலங்களை விளக்க வந்த தொல்காப்பியர் -

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லனப் படுமே”

எனக் கூறுவர்.

இதில் மைநிறத்து கண்ணன் (மாயோன்) முல்லை நிலத்திற்கும், செவ்வேள் (சேயோன்) குறிஞ்சி நிலத்திற்கும், போகக் கடவுளான இந்திரன் (வேந்தன்) மருத நிலத்திற்கும், மழைக் கடவுளான வருணன் நெய்தல் நிலத்திற்கும் கடவுளராக வழிபடப்பட்ட செய்தியைப்; பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் ஆயர்களால் முல்லை நிலத்தில்; பூசிக்கப்பட்ட திருமால் காலகதியில் வைதீக வி~;ணுவுடன் சங்கமமாகி வைணவக் கடவுளானார். தமிழ் நாட்டில் புறச் சமயங்கள் எனக் கூறப்படும் சமண, பௌத்த மதங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் அகச் சமயங்கள் எனக் கூறப்படும் சைவ வைணவ மதத்தினர் புறச் சமயங்களை அழித்து ஒடுக்கும் போர்க்குரலை ஒலித்தனர்.

பல்லவன் முதலாம் மகேந்திரவர்மனும், பாண்டியன் நின்றசீர் நெடுமாறனும் முறையே அப்பராலும், சம்மந்தராலும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டனர். சமண, பௌத்த மதங்களுக்கு எதிராக அப்பரும் சம்மந்தரும் நடத்திய போராட்டத்திற்கு மன்னர்களும், நிலவுடமை பிரபுக்களும், உயர் சாதியினரும் பெரும் ஆதரவாக இருந்தனர். இத்தகைய பரந்துபட்ட அதிகாரவர்க்கம் ஒன்றின் ஆதரவு வைணவ ஆழ்வார்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆயர் குலத்தவரும், நான்காம் வர்ணத்தவரும் ஆழ்வார்களின் கவனத்தில் வந்தனர். இதனால்தான் போலும் தேவாரங்களில் காணமுடியாத அளவில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வைணவ ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படுகின்றன.

சென்ற நூற்றாண்டின்; ஆரம்பத்தில் கொடுமைகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய பாரதிக்கும் ஆழ்வார்கள் பலவகையில் ஆதர்சமாக இருந்தனர் எனலாம். அன்னிய ஆட்சியைக் கலியாகவும் சுதந்திர காலத்தை சத்திய யுகமாகவும் கண்ட பாரதி

“பொய்க்கும் கலியை நான் வென்று
பூலோகத்தார் கண்முன்னே மெய்க்கும் கிருதயுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதி இதுவே”

என எடுக்கும் சபதத்தில்

“திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள்
தாமும் புகுந்து
பெரிய கிருதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம்
பெருகப் ”

பாடும் நம்மாழ்வாரின் குரலைக் கேட்கின்றோம்.

இன்று தமிழ் நாட்டில் தலித் இயக்கங்கள் நடத்திவரும் போராட்டங்களை நாம் அறிவோம். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக, சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக இவர்கள் ஒரு இயக்கமாக செயல்படுவதை காண்கிறோம். அன்று ஆழ்வார்கள் மனிதநேயம் கொண்டவர்களாக சாதிக் கொடுமைகளுக்கு எதிராக, ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக எழுப்பிய குரல்களையும், நாட்டின் வளம் கருதி, மக்களின் சுபீட்சம் கருதி, வேண்டியவற்றையும் அவர்களது பாசுரங்களில் பரக்கக் காணலாம். இறை பத்தியை இதற்கு கருப்பொருளாக்கி, ஊனையும் உருக்கும் கவிதா வளத்துடன் இவர்கள் பாடல்கள் அமைந்துள்ளன.

திருப்பாணாழ்வார், நான்காம் வர்ணத்தில் பாணர் குலத்தில் பிறந்தவர். வீணையில் இசை ஏற்றி திருமாலைப் பாடியவர். இவரது அகத்தூய்மையை மதிக்காத சாதி அந்தணர் இவரைப் பழித்தனர், இம்சைப்படுத்தினர். அவர்களால் ஒதுக்கப்பட்டார். இது கண்டு பொறுக்காத அந்தணரான தொண்டரடிப்பொடியாழ்வார் உயர் குலத்தோரைச் சாடுகின்றார். அது மட்டுமல்ல அவர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுகின்றார்.

“குடிமையில் கடைப்பட்ட குக்கரில் பிறப்பரேனும்
- - - -
வெடுவரக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேனும்
அவர்கள் திருமால் பக்தராயின் எம் அடியவர்கள்

எனப் போற்றுகின்றார்.

“பழுதிலா வொழுக்கலாற்றுப் பல சதுப் பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமின், கொடுமின், கொண்மின்“

என்று பாடும் ஆழ்வார், நான்கு வேதங்ளை ஓதும் பிராமணர்களாயினும் எம் அடியார்களை மதியாராயின் அவர்களை புலையர் எனச் சாடுகின்றார். இதற்கு இறை பத்தி கருப்பொருளாக பத்தியின் மூலம் சாதிகள் அற்ற, மனிதநேயம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கப் பாடுகின்றனர்.

நான்காம் வர்ணத்தில் பிறந்த திருக்கச்சி நம்பிகளை தம்முடைய குருவாகப் போற்றிய ஸ்ரீராமானுஜருக்கு ஆழ்வார்கள் முன்னோடிகள் மட்டுமல்ல வழிகாட்டிகளும் கூட. இதனால் தான் ஆழ்வார்களின் பாசுரங்களை வடமொழி வேதத்திற்கு இணையாக திராவிடவேதம் என்று போற்றினர். ராமானுஜர் சாதிபேதமற்ற சமதர்ம சமுதாயத்தை பாரினில் உருவாக்கத் தம் வாழ்வினை அர்ப்பணித்தவர்.

கடவுள் பத்தி என்ற கருப்பொருளை தம்வசமாக்கி ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பதை நாச்சியாரின் பாசுரங்களில் கண்டுகளிக்க முடிகிறது.

“வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே.

எனத் துணிந்து பாடுகின்றார்

சைவ சமயத்தில் பேயார் என சேக்கிழார் பெருமானால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட காரைக்காலம்மையார் கணவனால் கைவிடப்பட்டபோது, வீட்டைவிட்டு துணிந்து வெளியேறி மீண்டும் அவ்வாறான ஒரு வாழ்வில் இருந்து விடுபட்டு நிற்க இறைபத்தி துணையாகியதைக் காண்கின்றோம். ஆண்டாளோ தன் பாலியல் ஆசைகளை மறைக்காமல் ஆண் ஆதிக்க சமுதாயம் ஒன்றில் அவற்றைப் பாட்டுக்குப் பொருளாக்கி வெற்றி கண்டார்.

“குறையொன்றும் இல்லாத கோவிந்தனை” தன் மணவாளனாக வரித்துக் கொண்டு ஆண்டாள் பாடிய பாடல்களும், நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிணாமத்தை கொடுமுடியைத் தொட்டு நிற்கும் உணர்வுகளும் நமது பாரதிக்கு ஆதர்சமாக இருப்பதை அவனது கண்ணன் பாடல்களில் கண்டு அனுபவிக்கின்றோம்.

நாட்டு நலனும் மக்களின் சுபீட்சமும் ஆழ்வார்களின் பத்திப் பாடல்களில் பாடு பொருளாக இருப்பதைக் கண்டு மெய்சிலிர்க்க முடிகின்றது.

ஆண்டாளின் வேண்டுதல்களில் - - - - - -

- - - - “தீங்கின்றி நாடெல்லாம் மும்மாரி பெய்து”

செந்நெல் ஓங்கி பருத்து வளரவும், வள்ளல்களைப் போல் பசுக்கள் சுரக்கும்வரை பாலைச் சுரந்து குடங்களை நிரப்ப வேண்டும் என்பதும் இடம் பெறுவதைக் காண முடிகின்றது.

- - - “ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை - - - -

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை”

அம்பரத்திற்காக, (ஆடை) தண்ணீருக்காக, சோற்றுக்காக துயில் எழுப்புகின்றாள்.

இவற்றோடு வியப்பைத்தரும் அறிவியல் கருத்துக்களையும் ஆழ்வார்களின் பாடல்களில் பரக்கக் காண்கிறோம். நம்மாழ்வாரும், ஆண்டாளும் இதில் குறிப்பிடத்தக்கோராவர். மழையின் தோற்றம், எப்படி முகில் கடலில் புகுந்து நீர் உண்டு உருவாகின்றது என்ற கருத்துக்களும்,

“ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து”- - -

என்ற வரியின் மூலம் ஊழிக்காலத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் என்பன பற்றி எல்லாம் நாச்சியாரால் பேச முடிந்தது. இதேபோல் நம்மாழ்வாரும் பிரபஞ்ச கர்த்தாவை “ஆதிப்பிரான்” என வர்ணித்துப் பாடும் பாடலில் பிரபஞ்சத்தின் தோற்றத்தில் முதலில் பிரக்ஞையையும், அதன் பின்னரே மற்றுப் பரும் பொருள்கள் (அயவவநச) படைக்கப்பட்டன என்கின்றார்.

வால்மீகியின் இராமாயணத்தை தழுவி கம்பன் காவியம் செய்தபோது அவரது கவிதையில்

‘கள்ளும் தீயும், காற்றும், வான வெளியும்’ மட்டுமல்ல கதைப் பொருளுமே தமிழ் மண்ணிற்கேற்ப மாற்றம் பெறுகின்றன.

“திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும் ” - - -

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை உள்வாங்கியவர் கம்பன். இராமனை இலட்சிய மன்னனாக, மக்களின்; மன்னனாக கம்பன் படைக்கின்றான்.

“மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்”

எனப் புறப்பட்ட படைப்பாளிகளில் கம்பனும் ஒருவன். இதனால்தான் ஸ்ரீ இராமச்சந்தரனின் பட்டாபிN~கத்தில் அவனது முடியை ஒரு குடிமகன் எடுத்துக் கொடுக்க வசிட்டன் புனைவதாகக் கம்பன் பாடுகின்றான்.

“வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே
புனைந்தான் மௌலி”- - --

என்ற கம்பனின் கருத்தோவியத்தில் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி செய்வதோடு, மன்னன், மக்களிடம் இருந்தே அவர்களை ஆளும் அதிகாரத்தைப் பெறுகின்றான் என்ற அற்புதமான கருத்தையும் சோழ சாம்ராச்சிய காலத்தில் வாழ்ந்து கொண்டு துணிவுடன் சொல்கின்றான்.

“திருவுடை மன்னர்கள் திருமாலின் அவதாரமே”

என்ற ஆழ்வார்கள் கம்பனுக்கு முன்னவர்கள்

“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா”

என்று கூவிய ஆழ்வார்கள்,

“நன்று பெய்யும் மழைகாணில் நாரணன் வந்தான்”

என்று கூத்தாடிய ஆழ்வார்கள்,

“கோமளவான் கன்றையும் புல்கி கோவிந்தன் மேய்த்தன”

எனத் தழுவிய ஆழ்வார்கள் தமது பத்தியோடு சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கும் கருத்துக்களையும், அறிவியல் கருத்துக்களையும் குழைத்துப் பாடிய பாடல்களைப் படிக்கும் தோறும் இன்பம் பெருகுகின்றது.

நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் வாசியாது, அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் வாசிக்கும் போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை முழுதாக தரிசிக்க முடியும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home