Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

 Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள் புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் &  புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயாபுத்தகம் 24 - எரேமியா >  புத்தகம் 25 - புலம்பல் > புத்தகம் 26 - எசேக்கியேல் > புத்தகம் 27 - தானியேல் > புத்தகம் 28 - ஒசாயா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா) > புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து) புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்) > புத்தகம் 44 (சீராக்கின் ஞானம்) & புத்தகம் 45 (பாரூக்கு > புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்) 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்


 

Holy Bible - Old Testament
Book 25: Lamentations


விவிலியம் - பழைய ஏற்பாடு
புத்தகம் 25 - புலம்பல்


Acknowledgements:Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the"bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version. PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland � Project Madurai 2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


அதிகாரம் 1.

1.       அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே! நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே! மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே!
2.       ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்: அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது: அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை: அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர்.
3.       இன்னலுற்ற அடிமையான யூதா நாடுகடத்தப்பட்டாள்! வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை! துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே அவளை வளைத்து பிடித்தனர்!
4.       விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை: சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன: அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன: அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்: அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்: அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.
5.       உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள்! வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர்! அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டவர் அவளைத் துன்பத்திற்கு உட்படுத்தினார்! அவள் குழந்தைகளை எதிரிகள் கைதியாக்கிக்கொண்டு போயினர்.
6.       அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது: அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.
7.       எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்: அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்: அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை: அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர்.
8.       ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்: அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்: அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்: அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்: அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.
9.       ஜயகோ! அவள் தீட்டு அவள் ஆடையில் தெரிகின்றதே! அவள் தனக்கு வரவிருப்பதை நினைவில் கொள்ளவில்லை! அளவது வீழ்ச்சி அதிர்ச்சியைத் தருகின்றது! அவளைத் தேற்றுவார் யாரும் இல்லை! ஆண்டவரே என் துன்பத்தைப் பாரும்! பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!
10.       ஒப்பற்ற அவளது விருப்பமான பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்! வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்! அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை அவள் பார்த்து நின்றாள்!
11.       உணவைத் தேடி அவளின் மக்கள் அனைவரும் ஓலமிடுகின்றனர்! உயிரைக் காத்திடத் தம் ஒப்பற்ற பொருள்களை உணவுக்காகத் தந்தனர்! ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்! நான் எத்தகு இழிநிலைக்கு உள்ளானேன் என்று பாரும்!
12.       இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினர்.
13.       மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.
14.       என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது: அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன: அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
15.       என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்: என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்: மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராடசைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.
16.       இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்: என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன: என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்: பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.
17.       சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்: அவளைத் தேற்றுவார் யாருமில்லை: சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்: எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.
18.       ஆண்டவரோ நீதியுள்ளவர்: நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்: அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்: என் துயரத்தைப் பாருங்கள்: என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.
19.       என் காதலர்களை அழைத்தேன்: அவர்களோ என்னை ஏமாற்றினர்: என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர்.
20.       ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்! துயரில் நான் மூழ்கியுள்ளேன்! நான் பெருங் கலகம் செய்துள்ளேன்! என் குலை நடுங்குகின்றது! என் இதயம் வெடிக்கின்றது! வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்! வீட்டினுள்ளும் சாவு மயம்!
21.       நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்: என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை: என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்: நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!
22.       அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும் உம் திருமுன் வருவதாக! என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு, நீர் என்னைத் தண்டித்தது போல், அவர்களையும் தண்டியும்! விம்மல்கள் மிகப் பல! என் இதயம் சோர்ந்துபோயிற்று!

அதிகாரம் 2.


1.       ஜயோ! மகள் சீயோனை ஆண்டவர் தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்! அவர் இஸ்ரயேலின் மேன்மையை விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்! அவரது சினத்தின் நாளில் தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை!
2.       ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்: அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்: அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.
3.       அவர் வெஞ்சினம் கொண்டு இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்: பகைவன் வந்தபொழுது தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்: சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென, அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார்.
4.       எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்: பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்: கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்: மகள் சீயோனின் கூடாரத்தில் தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார்.
5.       என் தலைவர் எதிரி போலானார்: அவர் இஸ்ரயேலை அழித்தார்: அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்: மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார்.
6.       தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத் தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்: சபை கூடும் இடத்தையும் அழித்தார்: சீயோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்: அவர் வெஞ்சினமுற்று அரசனையும் குருவையும் வெறுத்து ஒதுக்கினார்.
7.       என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார். தம் திருத்பயகத்தைக் கைவிட்டார்: அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்: விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்:
8.       மகள் சீயோனின் மதிலை அழிக்க ஆண்டவர் திட்டமிட்டார்: அதற்கென மலினால் அளந்தார்: அதை அழிப்பரை நிறுத்தத் தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை: அரணும் மதிலும் புலம்பச் செய்தார்: அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.
9.       அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன: அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்: அவளின் அரசனும் தலைவர்களும் வேற்றினத்தாரிடையே உள்ளனர்! திருச்சட்டம் இல்லை: அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை.
10.       மகள் சீயோனின் பெரியோர் தரையில் மெளனமாய் அமர்ந்துள்ளனர்: அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் பவிக் கொண்டுள்ளனர்: சாக்கு உடை உடுத்தியுள்ளனர்: எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.
11.       என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்!
12.       அவர்கள் தங்கள் அன்னையரிடம், அப்பம், திராட்சை இரசம் எங்கே? என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!
13.       மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?
14.       உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்: நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை: அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!
15.       அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா? என்றனர்.
16.       உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக் கோணல்வாய் காட்டுகின்றனர்: சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்: நாம் அவளைப் பாழாக்கினோம் என்றனர். இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்: இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது என்றனர்.
17.       ஆண்டவர் தாம் திட்டமிட்டபடியே செய்தார்: நெடுநாள்களுக்குமுன் தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு செயல்பட்டார்: ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளினார்: உன் எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்தார்: பகைவனின் ஆற்றலைப் பெருகச் செய்தார்.
18.       அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!
19.       எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெருமுனையில் பசியால் மயங் கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!
20.       கண்ணோக்கும் ஆண்டவரே! எண்ணிப் பாரும்: யாருக்கு இப்படிச் செய்திருக்கின்றீர்? பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் கனிகளையே, கைக்குழந்தைகளையே, தின்ன வேண்டுமோ? குருவும், இறைவாக்கினரும் என் தலைவரின் திருத்பயகத்தில் கொல்லப்படவேண்டுமோ?
21.       வீதிகளின் புழுதியில் சிறியோரும் பெரியோரும் வீழ்நது கிடக்கின்றனர்! என் கன்னியரும் காளையரும் வாளால் வீழ்த்தப்பட்டனர் உமது சீற்றத்தின் நாளில் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்!
22.       திருவிழாவுக்கு அழைப்பது போல, எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்! ஆண்டவரது சீற்றத்தின் நாளில் உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை! நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்!

அதிகாரம் 3.


1.       ஆண்டவரது சினத்தின் கோலால் வேதனை அனுபவித்த ஒருவன் நான்!
2.       அவர் என்னைத் துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார்!
3.       உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்! நாள் முழுதும் ஓங்குகிறார்! மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்!
4.       அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!
5.       அவர் கசப்பாலும் துயராலும் என்னை முற்றுகையிட்டு வளைத்துக்கொண்டார்!
6.       பண்டைக் காலத்தில் இறந்தோர் போல, இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்!
7.       நான் தப்பிச் செல்ல இயலாதவாறு என்னைச் சுற்றிலும் அவர் மதில் எழுப்பினார்! பளுவான தளைகளால் என்னைக் கட்டினார்!
8.       துணை வேண்டி நான் கூக்குரல் எழுப்பியபோதும், அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுத்துவிட்டார்!
9.       செதுக்கிய கற்களால் என் வழிகளில் தடைச் சுவர் எழுப்பினார்! என் பாதைகளைக் கோணாலாக்கினார்!
10.       பதுங்கியிருக்கும் கரடி போன்றும் மறைந்திருக்கும் சிங்கம் போன்றும், அவர் எனக்கு ஆனார்!
11.       என் வழிகளினின்று இழுத்துச் சென்று, என்னைப் பீறிக் கிழித்தார்! என்னை முற்றிலும் பாழாக்கினார்!
12.       அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்!
13.       அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை என் நெஞ்சுள் பாய்ச்சினார்!
14.       நாள் முழுதும் நான் என் மக்கள் அனைவரின் நகைப்புக்கு உள்ளானேன்! அவர்களது வசைப்பாடலின் பொருள் ஆனேன்!
15.       அவர் கசப்புணவால் என்னை நிரப்பினார்! எட்டிக் காடியால் எனக்கு வெறியூட்டினார்!
16.       கற்களால் என் பற்களை நொறுக்கினார்! என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்!
17.       அமைதியை நான் முழுக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!
18.       என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின! என்று நான் சொல்லிக் கொண்டேன்.
19.       என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!
20.       அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!
21.       இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்: எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
22.       ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
23.       காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!
24.       ஆண்டவரே என் பங்கு என்று என் மனம் சொல்கின்றது! எனவே நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.
25.       ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!
26.       ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
27.       இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது!
28.       அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்: எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும்.
29.       அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்: நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்!
30.       தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்! அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!
31.       என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார்!
32.       அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.
33.       மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை: துன்புறுத்துவதுமில்லை.
34.       நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும் காலால் மிதிக்கப்படுவதையோ,
35.       உன்னதரின் திருமுன் மனிதருக்கு நீதி மறுக்கப்படுவதையோ,
36.       வழக்கில் ஒருவர் வஞ்சிக்கப்படுவதையோ, என் தலைவர் காணாது இருப்பாரோ?
37.       என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்?
38.       நன்மையும் தீமையும் புறப்படுவது, உன்னதரின் வாயினின்று அன்றோ?
39.       உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்? மானிடர் அடைவது தம் பாவத்தின் விளைவை அன்றோ?
40.       நம் வழிகளை ஆய்ந்தறிவோம்! ஆண்டவரிடம் திரும்புவோம்!
41.       விண்ணக இறைவனை நோக்கி நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!
42.       நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை!
43.       நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு எம்மைப் பின்தொடர்ந்தீர்! இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?
44.       எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி, மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!
45.       மக்களினங்கள் இடையே எம்மை குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!
46.       எங்கள் பகைவர் அனைவரும் எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!
47.       திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன! சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!
48.       என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின!
49.       வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன:
50.       ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!
51.       என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு, என் உள்ளம் புலம்புகின்றது!
52.       காரணமின்றி என் பகைவர், பறவையை வேட்டையாடுவது போன்று, என்னை வேட்டையாடினர்!
53.       உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்!
54.       வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! நான் தொலைந்தேன் என்றேன்.
55.       படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.
56.       என் குரலை நீர் கேட்டீர்: என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும் உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!
57.       உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, அஞ்சாதே என்றீர்!
58.       என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்!
59.       ஆண்டவரே! எனக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்! எனக்கு நீதி வழங்கும்!
60.       அவர்களின் பழிவாங்கும் திட்டத்தையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!
61.       ஆண்டவரே! அவர்களின் வசைமொழிகளையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!
62.       என் பகைவர் நாள் முழுவதும் எனக்கெதிராக, முணுமுணுத்துத் திட் டமிடுகின்றனர்.
63.       பாரும்! அவர்கள் அமர்ந்தாலும் எழுந்தாலும் என்னைப் பற்றியே வசைபாடுகிறார்கள்!
64.       ஆண்டவரே! அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கைம்மாறு அளித்தருளும்!
65.       நீர் அவர்கள் மனதைக் கடினப்படுத்தும்! உம் சாபம் அவர்கள்மேல் விழச் செய்யும்!
66.       ஆண்டவரே, சினம் கொண்டு அவர்களைப் பின்தொடரும்! வானத்தின்கீழ் இல்லாதவாறு அவர்களை அழித்தொழியும்!

அதிகாரம் 4.


1.       ஜய! பொன் இப்படி மங்கிப் போயிற்றே! பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே! திருத்தலக் கற்கள் தெருமுறை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே!
2.       பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் அருமை மைந்தர் இன்று குயவனின் கைவினையாம் மண்பாண்டம் ஆயினரே!
3.       குள்ளநரிகளும் பாழட்டித் தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்! பாலைநிலத் தீக்கோழியென என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!
4.       பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!
5.       சுவையுணவு அருந்தினோர் நடுத்தெருவில் நலிகின்றனர்! பட்டுடுத்தி வளர்ந்தோர் குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!
6.       ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!
7.       அவள் இளவரசர் பனியினும் பயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!
8.       இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது: அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!
9.       பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!
10.       இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்!
11.       ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்: தம் கோபக் கனலைக் கொட்டினார்: சீயோனில் நெருப்பை மூட்டினார்: அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.
12.       பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை.
13.       நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய இறைவாக்கினரின் பாவமும் குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்!
14.       அவர்கள் குருடரெனத் தெருக்களில் தடுமாறினர்: அவர்கள்மீது இரத்தக் கறை எவ்வளவு படிந்திருந்ததெனில், அவர்கள் ஆடைகளைக்கூட எவராலும் தொட இயலவில்லை.
15.       விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்! தொடாதீர்கள்! என்று அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்: அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள். �இனி நம்மிடம் குடியிரார்,� �இனி எம்மிடையே தங்கக்கூடாது� என்று வேற்றினத்தார் கூறினர்.
16.       ஆண்டவரே தம் முன்னிலையினின்று அவர்களைச் சிதறடித்தார்: இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார். குருவை மதிப்பார் இல்லை: முதியோர்க்கு இரங்குவார் இல்லை.
17.       உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்!
18.       எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது: எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை: எம் முடிவு நெருங்கிவிட்டது: எம் நாள்கள் முடிந்துவிட்டன: எம் முடிவு வந்து விட்டது.
19.       வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்: மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்: பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.
20.       ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்��� தனர்! அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம் என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!
21.       ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!
22.       மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது: உன் அடிமைத்தனம் இனியும் தொடராது: மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!

அதிகாரம் 5.


1.       ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்! எங்கள் அவமானத்தைக் கவனித்துப்பாரும்.
2.       எங்கள் உரிமைச்சொத்து அன்னியர்கைவசம் ஆயிற்று: வீடுகள் வேற்று நாட்டினர் கைக்கு மாறிற்று.
3.       நாங்கள் தந்தையற்ற அனாதைகள் ஆனோம்! எங்கள் அன்னையர் கைம்பெண்டிர் ஆயினர்!
4.       நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம்! விறகையும் பணம் கொடுத்தே வாங்குகிறோம்!
5.       கழுத்தில் நுகத்தோடு விரட்டப்படுகிறோம்! சோர்ந்துபோனோம்! எங்களுக்கு ஓய்வே இல்லை!
6.       உணவால் நிறைவு பெற, எம் கையை எகிப்தியர், அசீரியரிடம் நீட்டினோம்!
7.       பாவம் செய்த எம் தந்தையர் மடிந்து போயினர்! நாங்களோ அவர்கள் குற்றப்பழியைச் சுமக்கின்றோம்!
8.       அடிமைகள் எங்களை ஆளுகின்றார்கள்! எங்களை அவர்கள் கையினின்று விடுவிப்பர் எவரும் இல்லை!
9.       பாலைநில வாளை முன்னிட்டு, உயிரைப் பணயம் வைத்து எங்கள உணவைப் பெறுகிறோம்!
10.       பஞ்சத்தின் கொடுந்தணலால் எங்கள் மேனி அடுப்பெனக் கனன்றது!
11.       சீயோன் மங்கையர் கெடுக்கப்பட்டனர்! நகர்களின் கன்னியர் கற்பழிக்கப்பட்டனர்!
12.       தலைவர்கள் பகைவர் கையால் பக்கிலிடப்பட்டனர்! முதியோர்களையும் அவர்கள் மதிக்கவில்லை!
13.       இளைஞர் இயந்திரக் கல்லை இழுக்கின்றனர்! சிறுவர் விறகு சுமந்து தள்ளாடுகின்றனர்!
14.       முதியோர் நுழைவாயிலில் அமர்வதைக் கைவிட்டனர்! இளையோர் இசை மீட்டலைத் துறந்துவிட்டனர்!
15.       எங்கள் இதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது! எங்கள் நடனம் புலம்பலாக மாறியது!
16.       எங்கள் தலையினின்று மணிமுடி வீழ்ந்தது! நாங்கள் பாவம் செய்தோம்! எங்களுக்கு ஜயோ கேடு!
17.       இதனால் எங்கள் இதயம் தளர்ந்து போயிற்று: எங்கள் கண்கள் இருண்டுபோயின.
18.       சீயோன் மலை பாழடைந்து கிடக்கின்றது: நரிகள் அங்கே நடமாடுகின்றன.
19.       நீரோ ஆண்டவரே, என்றென்றும் வாழ்கின்றீர்! உமது அரியணை தலைமுறை தலைமுறையாய் உளதாமே!
20.       ஆண்டவரே! தொடர்ந்து எங்களைக் கைவிட்டது ஏன்? இத்துணைக் காலமாய் எங்களைக் கைவிட்டது ஏன்?
21.       ஆண்டவரே! எம்மை உம்பால் திருப்பியருளும்! நாங்களும் உம்மிடம் திரும்புவோம்! முற்காலத்தே இருந்ததுபோல! எம் நாள்களைப் புதுப்பித்தருளும்!
22.       எங்களை முற்றிலும் தள்ளிவிட்டீரோ! எங்கள் மேல் இத்துணை வெஞ்சினம் கொண்டீரே!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home