Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - புதிய ஏற்பாடு > மத்தேயு நற்செய்திகள்  >மார்க் நற்செய்திகள் > யோவான் நற்செய்திகள் > லூக்கா நற்செய்திகள் > கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்,  இரண்டாம் திருமுகம் > கலாத்தியருக்கு எழுதிய திருமுகம், &.. > யாக்கோபு (யாகப்பர்) திருமுகம், பேதுரு முதல் திருமுகம் & ...


 
Holy Bible - New Testament
Corinthians I & II

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்,
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்



Etext input: Rev.Fr. Adaikalarasa,sdb, St. Xavier's Church, Dindigul, Tamilnadu Proof-reading : Mr. Mukundaraj Munisamy, Chennai, Tamilnadu ? Project Madurai 2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

1. அதிகாரம்

1 கொரி. 1.1 கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது

1 கொரி. 1.2 இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும் எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்

1 கொரி. 1.3 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக. இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல அனைவருக்கும் ஆண்டவர்.

1 கொரி. 1.4 கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன்.

1 கொரி. 1.5 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.

1 கொரி. 1.6 மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1 கொரி. 1.7 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.

1 கொரி. 1.8 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.

1 கொரி. 1.9 கடவுள் நம்பிக்கைக்குரியவர் தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

1 கொரி. 1.10 சகோதர சகோதரிகளே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.

1 கொரி. 1.11 என் அன்பர்களே உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலொயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.

1 கொரி. 1.12 நான் இதைச் சொல்லக் காரணம் உங்களுள் ஒவ்வொருவரும் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் கேபாவைச் சார்ந்துள்ளேன் " என்றோ "நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன் " என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.

1 கொரி. 1.13 கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?

1 கொரி. 1.14 கிறிஸ்பு காயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும் நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லை. இதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

1 கொரி. 1.15 ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.

1 கொரி. 1.16 ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.

1 கொரி. 1.17 திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

1 கொரி. 1.18 சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

1 கொரி. 1.19 ஏனெனில் "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன். அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன் " என்று மறைநூலில் எழுதியுள்ளது.

1 கொரி. 1.20 இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?

1 கொரி. 1.21 கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோ ரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

1 கொரி. 1.22 யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள் கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.

1 கொரி. 1.23 ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.

1 கொரி. 1.24 ஆனால் அழைக்கப்பட்டவர்கள் யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

1 கொரி. 1.25 ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது,மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

1 கொரி. 1.26 எனவே சகோதர சகோதரிகளே நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?

1 கொரி. 1.27 ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே வலியோரை வெட்கப்படுத்த வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.

1 கொரி. 1.28 உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.

1 கொரி. 1.29 எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

1 கொரி. 1.30 அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.

1 கொரி. 1.31 எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு "பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.

---------------

2. அதிகாரம்

1 கொரி. 2.1 சகோதர சகோதரிகளே கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை.

1 கொரி. 2-2 நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

1 கொரி. 2.3 நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய் மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன்.

1 கொரி. 2.4 நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

1 கொரி. 2.5 உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல,கடவுளின் வல்லமையே.

1 கொரி. 2.6 எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள்.

1 கொரி. 2.7 வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.

1 கொரி. 2.8 இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.

1 கொரி. 2.9 ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு "தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை செவிக்கு எட்டவில்லை மனித உள்ளமும் அதை அறியவில்லை. "

1 கொரி. 2.10 இதைக் கடவுள் தூய ஆவியின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார் கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.

1 கொரி. 2.11 மனிதரின் உள்ளத்திலிருப்பதை அவருள்ளிருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறியமுடியாது அன்றோ. அவ்வாறே கடவுள் உள்ளத்திலிருப்பதை அவர் தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார்.

1 கொரி. 2.12 ஆனால் நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்ளுகிறோம்.

1 கொரி. 2.13 ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்குரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை மாறாக தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.

1 கொரி. 2.14 மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணைகொண்டே ஆய்ந்துணர முடியும்.

1 கொரி. 2.15 ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும்
அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

1 கொரி. 2.16 "ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்? " நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

-----

3. அதிகாரம்

1 கொரி. 3.1 சகோதர சகோதரிகளே ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும் கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.

1 கொரி. 3.2 நான் உங்களுக்குத் திட உணவை அல்ல பாலையே ஊட்டினேன். ஏனெனில் திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.

1 கொரி. 3.3 நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில் பொறாமையும் சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?

1 கொரி. 3.4 ஏனெனில் ஒருவர் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன் " என்றும் வேறொருவர் "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் " என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்?

1 கொரி. 3.5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே. ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டாற்றுகிறார்கள்.

1 கொரி. 3.6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார், கடவுளே விளையச் செய்தார்.

1 கொரி. 3.7 நடுகிறவருக்கும் பெருமை இல்லை நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.

1 கொரி. 3.8 நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர்.

1 கொரி. 3.9 நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

1 கொரி. 3.10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

1 கொரி. 3.11 ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

1 கொரி. 3.12 அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன் வெள்ளி விலையுயர்ந்த கற்கள் மரம் புல் வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம்.

1 கொரி. 3.13 ஆனால் அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும் தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

1 கொரி. 3.14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.

1 கொரி. 3.15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.

1 கொரி. 3.16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?

1 கொரி. 3.17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது நீங்களே அக்கோவில்.

1 கொரி. 3.18 எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும்.
அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள்.

1 கொரி. 3.19 இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு "ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர். "

1 கொரி. 3.20 மேலும் "ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார். "

1 கொரி. 3.21 எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல் அப்பொல்லோ கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே.

1 கொரி. 3.22 அவ்வாறே உலகம் வாழ்வு சாவு நிகழ்காலம் எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே.

1 கொரி. 3.23 ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள் கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

-----

4. அதிகாரம்

1 கொரி. 4.1 நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள் கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும்.

1 கொரி. 4.2 பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ.

1 கொரி. 4.3 என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.

1 கொரி. 4.4 எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.

1 கொரி. 4.5 எனவே குறித்த காலம் வருமுன் அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார் உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

1 கொரி. 4.6 சகோதர சகோதரிகளே உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில் "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே " என்பதின் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள் இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.

1 கொரி. 4.7 நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?

1 கொரி. 4.8 தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே

1 கொரி. 4.9 கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கம் கடையராக்கினார். நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.

1 கொரி. 4.10 நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள் நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள் நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள் நாங்களோ மதிப்பற்றவர்கள்.

1 கொரி. 4.11 இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம் நாடோ டிகளாய் இருக்கிறோம்.

1 கொரி. 4.12 எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம் துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம்.

1 கொரி. 4.13 அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.

1 கொரி. 4.14 உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.

1 கொரி. 4.15 கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம் ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

1 கொரி. 4.16 ஆகையால் நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்.

1 கொரி. 4.17 இதற்காகவே திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர் என் அன்பார்ந்தபிள்ளை. ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர். நான் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலையில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார். அவற்றையே நான் எங்கும் எல்லாத் திருச்சபைகளிலும் கற்பித்து வருகிறேன்.

1 கொரி. 4.18 நான் உங்களிடம் வரப்போவதில்லை என உங்களுள் சிலர் எண்ணி இறுமாப்புக் கொண்டிருக்கின்றனர்.

1 கொரி. 4.19 ஆனால் ஆண்டவர் திருவுளம் கொண்டால் நான் உங்களிடம் விரைவிலேயே வருவேன். இறுமாப்புக் கொண்டுள்ள அவர்கள் என்ன பேசுகிறவர்கள் என்பதை அல்ல அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்.

1 கொரி. 4.20 இறையாட்சி பேச்சில் அல்ல செயல்பாட்டில்தான் இருக்கிறது.

1 கொரி. 4.21 நான் பிரம்போடு வரவேண்டுமா அல்லது அன்போடும் கனிவான உள்ளத்தோடும் வரவேண்டுமா? எதை விரும்புகிறீர்கள்?

------

5. .அதிகாரம்

1 கொரி. 5.1 உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்திடையே கூடக் காணப்படவில்லை.

1 கொரி. 5.2 இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா?

1 கொரி. 5.3 நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.

1 கொரி. 5.4 நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு

1 கொரி. 5.5 அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.

1 கொரி. 5.6 நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

1 கொரி. 5.7 எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

1 கொரி. 5.8 ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல மாறாக நேர்மை உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

1 கொரி. 5.9 பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்.

1 கொரி. 5.10 ஆனாலும் இவ்வுலகில் பரத்தைமையில் ஈடுபடுவோர் போராசையுடையோர் கொள்ளையடிப்போர் சிலைகளை வழிபடுவோர் ஆகியோரைப் பற்றி நான் பொதுவாக எழுதவில்லை. அப்படியானால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே.

1 கொரி. 5.11 உங்கள் நடுவில் "சகோதரர் " அல்லது "சகோதரி " என்னும் பெயரை வைத்துக்கொண்டு பரத்தைமையில் ஈடுபடுவராகவோ பேராசையுடையவராகவோ சிலைகளை வழிபடுகிறவராகவோ பழிதூற்றுகிறவராகவோ குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் உங்களுக்கு எழுதியிருந்தேன் அவர்களோடு உணவருந்தவும் வேண்டாம்.

1 கொரி. 5.12 திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.

1 கொரி. 5.13 உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள்.

-----

6. அதிகாரம்

1 கொரி. 6.1 உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின் தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதவரிடம் செல்லத் துணிவதேன்?

1 கொரி. 6.2 இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா?

1 கொரி. 6.3 வான தூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக் கொள்ள முடியாதா?

1 கொரி. 6.4 அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோ ரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?

1 கொரி. 6.5 நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா?

1 கொரி. 6.6 சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?

1 கொரி. 6.7 நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?

1 கொரி. 6.8 ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள் வஞ்சித்துப் பறிக்கிறீர்கள் அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.

1 கொரி. 6.9 தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள் பரத்தைமையில் ஈடுபடுவோர் சிலைகளை வழிபடுவோர் விபசாரம் செய்வோர் தகாத பாலுறவு கொள்வோர் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர்

1 கொரி. 6.10 திருடர் பேராசையுடையோர் குடிவெறியர் பழிதூற்றுவோர் கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை.

1 கொரி. 6.11 உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள் கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

1 கொரி. 6.12 "எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு " ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. "எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு " ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.

1 கொரி. 6.13 "வயிற்றுக்கென்றே உணவு உணவுக்கென்றே வயிறு. " இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்.

1 கொரி. 6.14 ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்.

1 கொரி. 6.15 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது.

1 கொரி. 6.16 விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓருடலாகிறான் என்று தெரியாதா? "இருவரும் ஒரே உடலாயிருப்பர் " என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே.

1 கொரி. 6.17 ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.

1 கொரி. 6.18 எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர்.

1 கொரி. 6.19 உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.

1 கொரி. 6.20 கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

------

7. அதிகாரம்


1 கொரி. 7.1 இப்போது நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம் பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.

1 கொரி. 7.2 எனினும் எங்கும் பரத்தைமை காணப்படுவதால் ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழ வேண்டும் பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழ வேண்டும்.

1 கொரி. 7.3 கணவர் தம் மனைவிக்கு மண வாழ்க்கைக்குரிய இமைகளைக் கொடுக்க வேண்டும் அதுபோல மனைவியும் தம் கணவருக்குக் கொடுக்க வேண்டும்.

1 கொரி. 7.4 மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு. அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு.

1 கொரி. 7.5 மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக் கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால் உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்.

1 கொரி. 7.6 இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை ஆனால் உங்கள் நிலைமையைக் கருதியே இப்படிச் சொல்கிறேன்.

1 கொரி. 7.7 எல்லாரும் என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனினும் ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும் வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது.

1 கொரி. 7.8 இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே. அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.

1 கொரி. 7.9 எனினும் அவர்கள் தன்னடக்கமில்லாதவர்கள் என்றால் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் காமத்தீயில் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.

1 கொரி. 7.10 திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே. "மனைவி கணவிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது. " இது என்னுடைய கட்டளையல்ல .

1 கொரி. 7.11 மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது.

1 கொரி. 7.12 மற்றவர்களுக்கு நான் சொல்வது இதுவே இதை ஆண்டவரல்ல நானே சொல்கிறேன் சகோதரர் ஒருவரின் மனைவி நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரரோடு வாழ உடன்பட்டால் அவர் அவரை விலக்கிவிடக் கூடாது.

1 கொரி. 7.13 அப்படியே சகோதரி ஒருவரின் கணவர் நம்பிக்கை கொள்ளாதவரானாலும் தொடர்ந்து அச்சகோதரியோடு வாழ உடன்பட்டால் தம் கணவரை அவர் விலக்கிவிடக் கூடாது.

1 கொரி. 7.14 நம்பிக்கை கொள்ளாத கணவர் நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார். அப்படியே நம்பிக்கை கொள்ளாத மனைவி நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார். அப்படி இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தூய்மையற்றவர்களாய் இருப்பார்களே. ஆனால் அவர்கள் தூயவர்களாய் இருக்கிறார்கள்.

1 கொரி. 7.15 கணவன் மனைவி ஆகிய இருவருள் நம்பிக்கை கொள்ளாத ஒருவர் பிரிந்து வாழ விரும்பினால் பிரிந்து வாழட்டும். இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கை கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார்.

1 கொரி. 7.16 மணமான சகோதரியே ஒருவேளை உம்மால் உம் கணவர் மீட்படையலாம். மணமான சகோதரரே ஒருவேளை உம்மால் உம் மனைவி மீட்படையலாம். இது உங்களுக்குத் தெரியாதா?

1 கொரி. 7.17 எது எப்படியிருந்தாலும் ஒவ்வொருவரும் ஆண்டவர் அவரவருக்குப் பகிர்ந்தளித்த கொடையின்படியும் அவர் விடுத்த அழைப்பின்படியும் வாழட்டும். இதுவே நான் எல்லாத் திருச்சபைகளிலும் கொடுத்துவரும் கட்டளை.

1 கொரி. 7.18 விருத்தசேதனம் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் அந்நிலையிலேயே இருக்கட்டும். ஒருவேளை விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால் அவர் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டாம்.

1 கொரி. 7.19 விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தலே பயன்தரும்.

1 கொரி. 7.20 ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அந்நிலையிலேயே நிலைத்திருக்கட்டும்.

1 கொரி. 7.21 அடிமை நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றிக் கவலைப் பட வேண்டாம். எனினும் அந்நிலையிலிருந்து விடுதலை பெற முடியுமானால் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1 கொரி. 7.22 அடிமை நிலையில் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர் கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார்.

1 கொரி. 7.23 நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமையாக வேண்டாம்.

1 கொரி. 7.24 சகோதர சகோதரிகளே நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே கடவுள்முன் நிலைத்திருங்கள்.

1 கொரி. 7.25 இனி மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை. எனினும் ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன்.

1 கொரி. 7.26 மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

1 கொரி. 7.27 மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

1 கொரி. 7.28 நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

1 கொரி. 7.29 அன்பர்களே நான் சொல்வது இதுவே இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.

1 கொரி. 7.30 அழுபவர் அழாதவர் போலவும் மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும் பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும்.

1 கொரி. 7.31 உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

1 கொரி. 7.32 நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன் மணமாகாதவர் ஆண்டவருக்கியவற்றில் அக்கறை கொள்கிறார் எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

1 கொரி. 7.33 ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார் எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

1 கொரி. 7.34 இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண் உலகுக்கு஢யவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.

1 கொரி. 7.35 உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

1 கொரி. 7.36 ஒருவர் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணுடன் தவறாக நடக்க எண்ணங்கொண்டால் வேறு வழி இல்லையென்றால் அவர் திருமணம் செய்து கொண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அது பாவமல்ல.

1 கொரி. 7.37 ஆனால் தம் உள்ளத்தில் உறுதியாயிருந்து எந்தக் கட்டாயத்திற்கும் உட்படாமல் தம் சொந்த விருப்பப்படி செயல்படும் ஆற்றல் கொண்ட ஒருவர் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணை அந்நிலையிலேயே வைத்திருக்கத் தம் உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தால் அவர் செய்வதில் தவறில்லை.

1 கொரி. 7.38 ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.

1 கொரி. 7.39 கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.

1 கொரி. 7.40 அவர் கைம்பெண்ணாகவே இருந்துவிட்டால் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதுவெ என் கருத்து. நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறேன் எனக் கருதுகிறேன்.
-----

8. அதிகாரம்

1 கொரி. 8.1 இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும். ஆனால் அன்பு உறவை வளர்க்கும்.

1 கொரி. 8.2 தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.

1 கொரி. 8.3 கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.

1 கொரி. 8.4 இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம். "இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை. கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை " என்று நமக்குத் தியும்.

1 கொரி. 8.5 விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம் தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர்.

1 கொரி. 8.6 ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே, அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே நமக்கு ஆண்டவரும் ஒருவரே அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.

1 கொரி. 8.7 ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைபடுகிறது.

1 கொரி. 8.8 நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.

1 கொரி. 8.9 ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

1 கொரி. 8.10 "அறிவு " கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா?

1 கொரி. 8.11 இவ்வாறு இந்த அறிவு வலுவற்றவின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா?

1 கொரி. 8.12 இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால் அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.

1 கொரி. 8.13 ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால் இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்.
----

9. அதிகாரம்

1 கொரி. 9.1 எனக்குத் தன்னிமை இல்லையா? நானும் ஒரு திருத்தூதன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?

1 கொரி. 9.2 நான் திருத்தூதன் என மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும் உங்களுக்கு நான் திருத்தூதன் தானே. நீங்கள் ஆண்டவரோடு கொண்டுள்ள உறவே என் திருத்தூதுப்பணிக்கு அடையாளச் சின்னமாய் அமைகிறது.

1 கொரி. 9.3 இது குறித்து என்னிடம் கேள்வி கேட்போருக்கு எனது விளக்கம் இதுவெ

1 கொரி. 9.4 உண்பதற்கும் குடிப்பதற்கும் உரியவற்றைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?

1 கொரி. 9.5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?

1 கொரி. 9.6 பிழைப்புக்காக உழைக்காமலிருக்க எனக்கும் பர்னபாவுக்கும் மட்டுந்தான் உரிமை இல்லையா?

1 கொரி. 9.7 யாராவது எப்போதாவது ஊதியமின்றிப் படைவீரராகப் பணியாற்றுவாரா? திராட்சைத் தோட்டம் போட்ட யாராவது அதன் பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை மேய்க்கும் ஆயர் அதன் பாலை அருந்தாதிருப்பாரா?

1 கொரி. 9.8 மனித வழக்கத்தை மட்டும் வைத்து நான் இதைச் சொல்லவில்லை. திருச்சட்டமும் இதையே சொல்லவில்லையா?

1 கொரி. 9.9 மோசேயின் சட்டத்தில் "போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே " என்று எழுதியுள்ளதே. மாடுகளைப் பற்றிய கவலையினால் கடவுள் இதைச் சொல்கிறாரா?

1 கொரி. 9.10 அல்லது எங்கள் பொருட்டு இதைச் சொல்கிறாரா? ஆம் இது எங்கள் பொருட்டே எழுதப்பட்டுள்ளது. ஏனெனில் தமக்குப் பங்கு கிடைக்கும் என்னும் எதிர்நோக்குடன் உழுகிறவர் உழவேண்டும் போரடிக்கிறவரும் அதே எதிர்நோக்குடன் போரடிக்க வேண்டும்.

1 கொரி. 9.11 நாங்கள் ஆவிக்குரியவற்றை உங்களிடையே விதைத்திருப்பதால் எங்கள் உடலுக்குரிய தேவைகளை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக் கொள்வது மிகையாகாது அல்லவா?

1 கொரி. 9.12 உங்களிடம் பங்கு பெற மற்றவர்களுக்கு உரிமை இருந்தால் எங்களுக்கு அதைவிட அதிக உரிமையில்லையா? அப்படியிருந்தும்கூட நாங்கள் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்திக்கு எத்தடையும் வராதவாறு எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறோம்.

1 கொரி. 9.13 கோவிலில் வேலைசெய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவுபெறுவர் பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர். இது உங்களுக்குத் தெரியாதா?

1 கொரி. 9.14 அவ்வாறே நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரி஢யவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார்.

1 கொரி. 9.15 ஆனால் இவ்வுரிமைகளில் எதையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதவுமில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான் சாவதே நல்லது. எனக்குரிய பெருமையை எவரும் அழித்துவிட முடியாது.

1 கொரி. 9.16 நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு.

1 கொரி. 9.17 இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.

1 கொரி. 9.18 அப்படியானால் எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

1 கொரி. 9.19 நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.

1 கொரி. 9.20 யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.

1 கொரி. 9.21 திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.

1 கொரி. 9.22 வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

1 கொரி. 9.23 நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

1 கொரி. 9.24 பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.

1 கொரி. 9.25 பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம்.

1 கொரி. 9.26 நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.

1 கொரி. 9.27 பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.
-----

10. அதிகாரம்

1 கொரி. 10.1 சகோதர சகோதரிகளே நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.

1 கொரி. 10.2 அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.

1 கொரி. 10.3 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.

1 கொரி. 10.4 அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை.

1 கொரி. 10.5 அப்படியிருந்தும் அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

1 கொரி. 10.6 அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.

1 கொரி. 10.7 அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள். அவர்களைக் குறித்தே "மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர் எழுந்து மகிழ்ந்து ஆடினர் " என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.

1 கொரி. 10.8 அவர்களுள் சிலர் பரத்தைமையில் ஈடுபட்டனர். அதனால் ஒரே நாளில் இருபத்து முவாயிரம் பேர் மடிந்தனர். அவர்களைப்போல் நாமும் பரத்தைமையில் ஈடுபடக்கூடாது.

1 கொரி. 10.9 அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது.

1 கொரி. 10.10 அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.

1 கொரி. 10.11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.

1 கொரி. 10.12 எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

1 கொரி. 10.13 உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார் சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார் அதிலிருந்து விடுபட வழி செய்வார்.

1 கொரி. 10.14 எனவே என் அன்புக்குரியவர்களே சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.

1 கொரி. 10.15 உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 கொரி. 10.16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா. அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா.

1 கொரி. 10.17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

1 கொரி. 10.18 இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப்பொருட்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?

1 கொரி. 10.19 எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்?

1 கொரி. 10.20 மாறாக சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவுகொள்வதை நான் விரும்பவில்லை.

1 கொரி. 10.21 நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது.

1 கொரி. 10.22 நாம் ஆண்டவருக்கு இச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?

1 கொரி. 10.23 "எல்லாவற்றையும் செய்ய இமையுண்டு ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல. "எல்லாவற்றையும் செய்ய இமையுண்டு " ஆனால் எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல.

1 கொரி. 10.24 எவரும் தன்னலம் நாடக்கூடாது மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்.

1 கொரி. 10.25 இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் நீங்கள் உண்ணலாம் கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

1 கொரி. 10.26 ஏனெனில் "மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை. "

1 கொரி. 10.27 நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர் உங்களை உணவருந்த அழைக்கும்போது நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால் அவர் உங்களுக்குப் பிமாறும் எதையும் உண்ணுங்கள் கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

1 கொரி. 10.28 எவராவது உங்களிடம் "இது படையல் உணவு " என்று சொன்னால் அவ்வாறு திவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும் அதை உண்ண வேண்டாம்.

1 கொரி. 10.29 உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன். "ஏன் எனது தன்னிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்? "

1 கொரி. 10.30 "நான் நன்றியுடன் உணவருந்தினால் நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்? " என்று ஒருவர் கேட்கலாம்.

1 கொரி. 10.31 அதற்கு நான் சொல்வது நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.

1 கொரி. 10.32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.

1 கொரி. 10.33 நானும் அனைத்திலும் அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல் பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.

-------

11. அதிகாரம்

1 கொரி. 11.1 நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

1 கொரி. 11.2 நீங்கள் எப்போதும் என்னை நினைவு கூர்கிறீர்கள். நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள் எனவே உங்களைப் பாராட்டுகிறேன்.

1 கொரி. 11.3 ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண். ஆணுக்குத் தலைவர் கிறிஸ்து. கிறிஸ்துவுக்கோ தலைவர் கடவுள்.

1 கொரி. 11.4 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தலைவரை இகழ்ச்சிக்குள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.

1 கொரி. 11.5 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.

1 கொரி. 11.6 தம் தலையை மூடிக்கொள்ளாக எந்தப் பெண்ணும் தம் கூந்தலை வெட்டிக் கொள்ளட்டும். கூந்தலை வெட்டிக்கொள்வதையும் தலையை மழித்து விடுவதையும் இகழ்ச்சியாகக் கருதினால் அவர் தம் தலையை மூடிக்கொள்ளட்டும்.

1 கொரி. 11.7 ஆண் தம் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவரே கடவுளின் சாயலும் பெருமையும் ஆவார். ஆனால் பெண் ஆணின் பெருமையாய் இருக்கிறார்.

1 கொரி. 11.8 பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை மாறாக ஆணிலிருந்தே பெண் தோன்றினார்.

1 கொரி. 11.9 மேலும் பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை மாறாக ஆணுக்காகவே பெண் படைக்கப்பட்டார்.

1 கொரி. 11.10 வான தூதர்களை முன்னிட்டுப் பெண் அதிகாரத்தின் அடையாளமாக தம் தலையை மூடிக்கொள்ள வேண்டும்.

1 கொரி. 11.11 எது எப்படி இருந்தாலும் ஆண்டவரோடு இணைக்கப்பட்ட நிலையில் ஆணின்றிப் பெண்ணில்லை, பெண்ணின்றி ஆணில்லை.

1 கொரி. 11.12 ஏனெனில் ஆணிலிருந்து பெண் தோன்றியதுபோலவே பெண் வழியாகவே ஆண் தோன்றுகிறார். ஆனால் அனைத்தும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன.

1 கொரி. 11.13 பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் கடவுளிடம் வேண்டுவது முறையா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 கொரி. 11.14 நீண்ட முடி வளர்ப்பது ஆண்களுக்கு மதிப்பு ஆகாது. ஆனால் அது பெண்களுக்குப் பெருமை தருவதாகும்.

1 கொரி. 11.15 இதை இயற்கையே உங்களுக்குக் கற்பிக்கிறது அன்றோ. ஏனெனில் பெண்களின் கூந்தலே அவர்களுக்குப் போர்வையாக அமைகிறது.

1 கொரி. 11.16 இதைப்பற்றி விவாதிக்க நினைப்போருக்கு நான் கூறுவது "இதைப் பொறுத்தவரை வேறு எந்த வழக்கமும் எங்களிடையே இல்லை கடவுளின் திருச்சபைகளிலும் இல்லை. "

1 கொரி. 11.17 இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும் போது நன்மையைவிடத் தீமையே மிகுதியாக விளைகிறது.

1 கொரி. 11.18 முதலாவது நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அதை நம்புகிறேன்.

1 கொரி. 11.19 உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும்.

1 கொரி. 11.20 இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.

1 கொரி. 11.21 ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில் ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்.

1 கொரி. 11.22 உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்தி இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்ட மாட்டேன்.

1 கொரி. 11.23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து

1 கொரி. 11.24 கடவுளுக்கு நன்றி செலுத்தி அதைப்பிட்டு "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் " என்றார்.

1 கொரி. 11.25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் " என்றார்.

1 கொரி. 11.26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

1 கொரி. 11.27 ஆகவே எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.

1 கொரி. 11.28 எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.

1 கொரி. 11.29 ஏனெனில் ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.

1 கொரி. 11.30 இதனால்தானே உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்கின்றனர் மற்றும் பலர் இறந்தும் விட்டனர்.

1 கொரி. 11.31 ஆனால் நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோ ம்.

1 கொரி. 11.32 இப்போது ஆண்டவர் நம்மைத் தீர்ப்புக்கு ஆளாக்கினால் அது நம்மைத் தண்டித்துத் திருத்துவதற்கே. உலகத்தோடு நாமும் தண்டனைத் தீர்ப்பு அடையாதிருக்கவே இப்படிச் செய்கிறார்.

1 கொரி. 11.33 எனவே என் சகோதர சகோதரிகளே உண்பதற்காக நீங்கள் ஒன்று கூடி வரும்போது ஒருவர் மற்றவருக்காகக் காத்திருங்கள்.

1 கொரி. 1134 ஒருவருக்குப் பசித்தால் அவர் தம் வீட்டிலேயே உணவருந்தட்டும். அப்போது நீங்கள் கூடிவருவது உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பை வருவிக்காது. மற்றவை குறித்து நான் வரும்போது அறிவுரைகள் தருவேன்.

------

12. அதிகாரம்

1 கொரி. 12.1 சகோதர சகோதரிகளே தூயஆவியார் அருளும் கொடைகளைக் குறித்துப் பார்ப்போம். அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

1 கொரி. 12.2. நீங்கள் பிற இனத்தவராயிருந்தபோது ஊமைச் சிலைகள்பால் ஈர்க்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்பட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

1 கொரி. 12.3 கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் "இயேசு சபிக்கப்பட்டவர் " எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர் " எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1 கொரி. 12.4 அருள்கொடைகள் பலவகையுண்டு ஆனால் தூய ஆவியார் ஒருவரே.

1 கொரி. 12.5 திருத் தொண்டுகளும் பலவகையுண்டு ஆனால் ஆண்டவர் ஒருவரே.

1 கொரி. 12.6 செயல்பாடுகள் பலவகையுண்டு ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.

1 கொரி. 12.7 பொது நன்மைக்காகவே தூய ஆவியின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

1 கொரி. 12.8 தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார்.

1 கொரி. 12.9 அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள்கொடையையும் அளிக்கிறார்.

1 கொரி. 12.10 தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.

1 கொரி. 12.11 அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார் அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

1 கொரி. 12.12 உடல் ஒன்றே உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்.

1 கொரி. 12.13 ஏனெனில் யூதரானாலும் கிரேக்கரானாலும் அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

1 கொரி. 12.14 உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல பல உறுப்புகளால் ஆனது.

1 கொரி. 12.15 "நான் கை அல்ல ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல " எனக் கால் சொல்லுமானால் அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?

1 கொரி. 12.16 "நான் கண் அல்ல ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல " எனக் காது சொல்லுமானால் அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?

1 கொரி. 12.17 முழு உடலும் கணாணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?

1 கொரி. 12.18 உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார்.

1 கொரி. 12.19 அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா?

1 கொரி. 12.20 எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.

1 கொரி. 12.21 கண் கையைப்பார்த்து "நீ எனக்குத் தேவையில்லை " என்றோ தலை கால்களைப் பார்த்து "நீங்கள் எனக்குத் தேவையில்லை " என்றோ சொல்ல முடியாது.

1 கொரி. 12.22 மாறாக உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன.

1 கொரி. 12.23 உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன.

1 கொரி. 12.24 மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார்.

1 கொரி. 12.25 உடலில் பிளவு ஏற்படாமல் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார்.

1 கொரி. 12.26 ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.

1 கொரி. 12.27 நீங்கள் கிறிஸ்துவின் உடல் ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

1 கொரி. 12.28 அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும் இரண்டாவது இறைவாக்கினர்களையும் மூன்றாவது போதகர்களையும் பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும் அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள் துணைநிற்பவர்கள் தலைமையேற்று நடத்துபவர்கள் பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார்.

1 கொரி. 12.29 எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை.

1 கொரி. 12.30 எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே.

1 கொரி. 12.31 எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆவமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
------

13. அதிகாரம்

1 கொரி. 13.1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

1 கொரி. 13.2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும் மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும் அறிவெல்லாம் பெற்றிருப்பினும் மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.

1 கொரி. 13.3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

1 கொரி. 13.4 அன்பு பொறுமையுள்ளது நன்மை செய்யும் பொறாமைப்படாது தற்புகழ்ச்சி கொள்ளாது இறுமாப்பு அடையாது.

1 கொரி. 13.5 அன்பு இழிவானதைச் செய்யாது தன்னலம் நாடாது எரிச்சலுக்கு இடம் கொடாது தீங்கு நினையாது.

1 கொரி. 13.6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது மாறாக உண்மையில் அது மகிழும்.

1 கொரி. 13.7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் அனைத்தையும் நம்பும் அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும் அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.

1 கொரி. 13.8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம் பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம் அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.

1 கொரி. 13.9 ஏனெனில் நமது அறிவு அரைகுறையானது நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.

1 கொரி. 13.10 நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்.

1 கொரி. 13.11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன் குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன் குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.

1 கொரி. 13.12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம் ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன் அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

1 கொரி. 13.13 ஆக நம்பிக்கை எதிர்நோக்கு அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

-----

14. அதிகாரம்

1 கொரி. 14.1 அன்பு செலுத்த முயலுங்கள். ஆவியார் அருளும் கொடைகளையும் குறிப்பாக இறைவாக்குரைக்கும் கொடையையும் ஆர்வமாய் நாடுங்கள்.

1 கொரி. 14.2 ஏனெனில் பரவசப்பேச்சு பேசுகிறவர் மக்களிடமல்ல கடவுளிடமே பேசுகிறார். அவர் பேசுவது எவருக்கும் விளங்குவதில்லை. அவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மறைபொருள்களைப் பேசுகிறார்.

1 கொரி. 14.3 ஆனால் இறைவாக்கு உரைப்பவரோ மக்களிடமே பேசுகிறார். அவர் பேசுவது அவர்களுக்கு வளர்ச்சியையும் ஊக்கத்தையும் ஆறுதலையும் அளிக்கிறது.

1 கொரி. 14.4 பரவசப் பேச்சு பேசுகிறவர் தம்மை மட்டுமே வளர்ச்சியுறச் செய்கிறார். ஆனால் இறைவாக்குரைப்பவர் திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறார்.

1 கொரி. 14.5 நீங்கள் அனைவரும் பரவசப்பேச்சு பேசுவதை நான் விரும்புகிறேன். ஆனாலும் நீங்கள் இறைவாக்குரைப்பதையே நான் அதிகமாக விரும்புகிறேன். பரவசப்பேச்சு பேசுகிறவர் திருச்சபையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் தாம் பேசுவதை விளக்க வேண்டும். இல்லையெனில் பரவசப்பேச்சு பேசுபவரைவிட இறைவாக்குரைப்பவரே மேலானவர்.

1 கொரி. 14.6 எனவே சகோதர சகோதரிகளே நான் உங்களிடம் வந்து திருவெளிப்பாடு மெய்யறிவு இறைவாக்கு போதனை இவற்றில் எதைக் குறித்தும் பேசாமல் பரவசப் பேச்சை மட்டும் பேசினால் என்னால் நீங்கள் அடையும் பயனென்ன?

1 கொரி. 14.7 குழல் அல்லது யாழ் ஆகிய உயிரற்ற இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலிகளுள் வேறுபாடு இல்லையெனில் குழல் எழுப்பும் ஒலி எது யாழ் எழுப்பும் ஒலி எது என்பதை எப்படி அறிய முடியும்?

1 கொரி. 14.8 எக்காளம் தெளிவாக முழங்காவிடில் யார் போருக்குத் தயாராவார்?

1 கொரி. 14.9 அவ்வாறே நீங்களும் பரவசப்பேச்சு பேசும்போது பேசும் வார்த்தைகள் தெளிவாயிராவிடில் நீங்கள் பேசியது என்ன என்று எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? ஏனெனில் உங்கள் பேச்சுதான் காற்றோடு காற்றாய்ப் போய்விடுகிறதே.

1 கொரி. 14.10 இவ்வுலகில் எத்தனையோ வகையான மொழிகள் உள்ளன. அவற்றுள் பொருள் தராத மொழியே இல்லை.

1 கொரி. 14.11 எனவே ஒரு மொழியில் தெரிவிக்கப்பட்டதை நான் அறியாதவனாய் இருப்பின் அம்மொழியைப் பேசுகிறவருக்கு நான் ஓர் அன்னியனாய் இருப்பேன். அவரும் எனக்கு அன்னியராய்த்தான் இருப்பார்.

1 கொரி. 14.12 இது போலவே நீங்களும் இருக்கிறீர்கள். தூய ஆவியார் அருளும் கொடைகளை ஆர்வமாய் நாடும் நீங்கள் திருச்சபையைக் கட்டி எழுப்பும் கொடைகளையே தேடி அவற்றில் வளர்ச்சியடையுங்கள்.

1 கொரி. 14.13 பரவசப்பேச்சு பேசுகிறவர் அதனை விளக்குவதற்கான ஆற்றலைப் பெற இறைவனிடம் வேண்டட்டும்.

1 கொரி. 14.14 எனவே நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார். என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை.

1 கொரி. 14.15 இந்நிலையில் நான் செய்ய வேண்டியதென்ன? தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன் அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன் அறிவோடும் திருப்பாடல் பாடுவேன்.

1 கொரி. 14.16 இல்லையேல் நீங்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுக் கடவுளைப் போற்றும்போது அங்கு அமர்ந்திருக்கும் பொது மக்கள் நீங்கள் நன்றி செலுத்திச் செய்யும் இறைவேண்டலுக்கு எவ்வாறு "ஆமென் " எனச் சொல்ல முடியும்? நீங்கள் சொல்வதுதான் அவர்களுக்கு விளங்கவில்லையே.

1 கொரி. 14.17 நீங்கள் நன்றாகத்தான் நன்றி செலுத்தி இறைவனிடம் வேண்டுகிறீர்கள். ஆனால் அது பிறரது வளர்ச்சிக்கு உதவவில்லையே.

1 கொரி. 14.18 நான் உங்கள் அனைவரையும் விட மிகுதியாகப் பரவசப்பேச்சு பேசுகிறேன். அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

1 கொரி. 14.19 ஆயினும் நான் திருச்சபையில் பரவச நிலையில் பல்லாயிரம் சொற்களைப் பேசுவதைவிட மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாலைந்து சொற்களை அறிவோடு சொல்வதையே விரும்புகிறேன்.

1 கொரி. 14.20 அன்பர்களே சிந்திப்பதில் நீங்கள் சிறுபிள்ளைகள்போல் இராதீர்கள். தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும் சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள்.

1 கொரி. 14.21 "வேற்றுமொழியினராலும் புரியாதமொழி கொண்டோ ர் மூலமும் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார். அப்போதும் எனக்கு அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள் " என்கிறார் ஆண்டவர் " என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.

1 கொரி. 14.22 எனவே பரவசப்பேச்சு பேசுவது நம்பிக்கை கொண்டோ ருக்கு அல்ல நம்பிக்கை கொண்டிராதோருக்கே அடையாளமாக இருக்கிறது. இறைவாக்கு உரைப்பதோ நம்பிக்கை கொண்டிராதோருக்கு அல்ல நம்பிக்கை கொண்டோ ருக்கே அடையாளமாக இருக்கிறது.

1 கொரி. 14.23 இப்படியிருக்க திருச்சபை முழுவதும் ஒன்றாகக்கூடி இருக்கும் போது எல்லாரும் பரவசப்பேச்சு பேசினால் அப்போது அங்கு நுழையும் பொது மக்கள் அல்லது நம்பிக்கை கொண்டிராதவர்கள் உங்களைப் பித்துப்பிடித்தவர்கள் எனச் சொல்ல மாட்டார்களா?

1 கொரி. 14.24 நீங்களெல்லாரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டு இருக்கும்போது நம்பிக்கை கொண்டிராத ஒருவரோ அல்லது பொது மக்களுள் ஒருவரோ அங்கு நுழைந்தால் ஒவ்வொருவரும் உரைக்கும் இறைவாக்கு அவரது குற்றத்தை அவருக்கு எடுத்துக் காட்டும் அவரைத் தீர்ப்புக்கு உட்படுத்தும்.

1 கொரி. 14.25 அவர் உள்ளத்தில் உறைந்து கிடப்பவை வெளியாகும். அப்பொழுது அவர் முகங்குப்புற விழுந்து கடவுளைப் பணிந்து "உண்மையில் கடவுள் உங்களிடையே உள்ளார் " என அறிக்கை செய்வார்.

1 கொரி. 14.26 அப்படியானால் சகோதர சகோதரிகளே செய்ய வேண்டியது என்ன? நீங்கள் கூடிவரும்போது ஒருவர் திருப்பாடலைப் பாடலாம் ஒருவர் கற்றுக் கொடுக்கலாம் ஒருவர் திருவெளிப்பாடுகளை எடுத்துரைக்கலாம் ஒருவர் பரவசப்பேச்சு பேசலாம் ஒருவர் அதை விளக்கிக் கூறலாம். இவை அனைத்தும் திருச்சபையைக் கட்டியெழுப்பும் வகையில் நடைபெற வேண்டும்.

1 கொரி. 14.27 பரவசப்பேச்சு பேசுவதாயிருந்தால் இருவர் பேசலாம் மிஞ்சினால் மூவர் பேசலாம். ஆனால் ஒருவர் பின் ஒருவராகப் பேச வேண்டும். ஒருவர் அதற்கு விளக்கம் கூற வேண்டும்.

1 கொரி. 14.28 ஆனால் விளக்கம் கூறுபவர் இல்லையெனில் அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும் தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்.

1 கொரி. 14.29 இறைவாக்கினரைப் பொறுத்தவரையில் இருவர் அல்லது மூவர் பேசட்டும் மற்றவர்கள் அவர்கள் கூறியதை ஆய்ந்து பார்க்கட்டும்.

1 கொரி. 14.30 அங்கு அமர்ந்திருக்கும் வேறொருவருக்கு திருவெளிப்பாடு அருளப்பட்டால் முன்பு பேசிக்கொண்டிருந்தவர் அமைதியாகிவிட வேண்டும்.

1 கொரி. 14.31 நீங்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம். அப்போதுதான் நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்ளவும் ஊக்கம் பெறவும் இயலும்.

1 கொரி. 14.32 இறைவாக்கினர்கள் பெறும் ஏவதல்கள் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவைதான்.

1 கொரி. 14.33 ஏனெனில் கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல அமைதியை ஏற்படுத்துபவர். இறைமக்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்குக்கேற்ப

1 கொரி. 14.34 சபையில் பெண்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களுக்குப் பேச அனுமதி இல்லை. மாறாகத் திருச்சட்டம் கூறுவது போல அவர்கள் பணிந்திருக்க வேண்டும்.

1 கொரி. 14.35 அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால் அதை வீட்டில் தங்கள் கணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளட்டும். பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும்.

1 கொரி. 14.36 கடவுளின் வார்த்தை உங்களிடமிருந்தா வந்தது? அல்லது அது உங்களிடம் மட்டுமா வந்தடைந்தது?

1 கொரி. 14.37 தாம் ஓர் இறைவாக்கினர் அல்லது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் என ஒருவர் நினைத்தால் நான் உங்களுக்கு எழுதுபவற்றை அவர் ஆண்டவரின் கட்டளையாக ஏற்றுக் கொள்ளட்டும்.

1 கொரி. 14.38 இவற்றை எவராவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்.

1 கொரி. 14.39 எனவே அன்பர்களே இறைவாக்கு உரைக்க ஆர்வமாய் நாடுங்கள். பரவசப்பேச்சு பேசுவதையும் தடுக்காதீர்கள்.

1 கொரி. 14.40 ஆனால் அனைத்தும் பாங்காகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும்.

-- ------------

15. அதிகாரம்

1 கொரி. 15.1 சகோதர சகோதரிகளே உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள் அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.

1 கொரி. 15.2 நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள் இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

1 கொரி. 15.3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவெ மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து

1 கொரி. 15.4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

1 கொரி. 15.5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.

1 கொரி. 15.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர் சிலர் இறந்து விட்டனர்.

1 கொரி. 15.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

1 கொரி. 15.8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

1 கொரி. 15.9 நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன்.

1 கொரி. 15.10 ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.

1 கொரி. 15.11 நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

1 கொரி. 15.12 இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?

1 கொரி. 15.13 இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.

1 கொரி. 15.14 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.

1 கொரி. 15.15 நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா?

1 கொரி. 15.16 ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.

1 கொரி. 15.17 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.

1 கொரி. 15.18 அப்படியானால் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள்.

1 கொரி. 15.19 கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

1 கொரி. 15.20 ஆனால் இப்போதோ இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

1 கொரி. 15.21 ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.

1 கொரி. 15.22 ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.

1 கொரி. 15.23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.

1 கொரி. 15.24 அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர் அதிகாரம் செலுத்துவோர் வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.

1 கொரி. 15.25 எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.

1 கொரி. 15.26 சாவே கடைசிப் பகைவன் அதுவும் அழிக்கப்படும்.

1 கொரி. 15.27 ஏனெனில் "கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார். " ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது.

1 கொரி. 15.28 அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.

1 கொரி. 15.29 மேலும் இறந்தோருக்காகச் சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே. ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால் அவர்களுக்காகத் திருமுழுக்குப் பெறுவானேன்?

1 கொரி. 15.30 நாங்களும் எந்நேரமும் ஆபத்திற்குள்ளாவதேன்?

1 கொரி. 15.31 நான் நாள்தோறும் சாவை எதிர்கொள்கிறேன். அன்பர்களே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அடியான் என்னும் முறையில் நான் உங்கள்மேல் கொண்டுள்ள பெருமையின் மீது ஆணையாக இதைச் சொல்கிறேன்.

1 கொரி. 15.32 நான் எபேசுவில் கொடிய விலங்குகளோடு போராடினேன். மனித முறையில் அதனால் எனக்கு வரும் பயன் என்ன? இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையெனில் "உண்போம் குடிப்போம் நாளைக்குச் சாவோம் " என்றிருக்கலாமே.

1 கொரி. 15.33 நீங்கள் ஏமாந்துபோக வேண்டாம். தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.

1 கொரி. 15.34 அறிவுத்தெளிவுடன் இருங்கள் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள் பாவஞ் செய்யாதீர்கள். ஏனெனில் உஙகளுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.

1 கொரி. 15.35 "இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்? என ஒருவர் கேட்கலாம்.

1 கொரி. 15.36 அறிவிலியே நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர்பெறாது.

1 கொரி. 15.37 முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

1 கொரி. 15.38 கடவுளோ தம் விருப்பப்படி அதற்கு ஓர் உருவைக் கொடுக்கிறார் ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவைக் கொடுக்கிறார்.

1 கொரி. 15.39 எல்லா ஊனம் ஒரே வகையான ஊன் அல்ல. மானிடருக்கு ஒரு வகையான ஊனம் விலங்குகளுக்கு இன்னொரு வகையான ஊனம் பறவைகளுக்கு வேறொரு வகையான ஊனம் மீன்களுக்கு மற்றொரு வகையான ஊனம் உண்டு.

1 கொரி. 15.40 விண்ணைச் சார்ந்தவைகளுக்கு ஒரு வகையான உருவமும் மண்ணைச் சார்ந்தவைகளுக்கு இன்னொரு வகையான உருவமும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு மண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு.

1 கொரி. 15.41 கதிரவனின் சுடர் ஒன்று நிலவின் சுடர் இன்னொன்று. விண்மீன்கள் சுடர் மற்றொன்று விண்மீனுக்கு விண்மீன் சுடர் வேறுபடுகிறது.

1 கொரி. 15.42 இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது.

1 கொரி. 15.43 மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது.

1 கொரி. 15.44 மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.

1 கொரி. 15.45 மறைநூலில் எழுதியுள்ளபடி முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார் கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.

1 கொரி. 15.46 தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது.

1 கொரி. 15.47 முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர் அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர்.

1 கொரி. 15.48 மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

1 கொரி. 15.49 எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைக் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

1 கொரி. 15.50 அன்பர்களே நான் சொல்வது இதுவெ ஊனியல்புடைய மனிதர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது. அழிவுக்குரியது அழியாமையை உரிமைப் பேறாக அடைய முடியாது.

1 கொரி. 15.51 இதோ ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன் நாம் யாவரும் சாகமாட்டோ ம் ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.

1 கொரி. 15.52 ஒரு நொடிப்பொழுதில் கண் இமைக்கும் நேரத்தில் இறுதி எக்காளம் முழங்கும் போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர் நாமும் மாற்றுரு பெறுவோம்.

1 கொரி. 15.53 ஏனெனில் அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

1 கொரி. 15.54 அழிவுக்குரியது அழியாமையையும் சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும் "சாவு முற்றிலும் ஒழிந்தது வெற்றி கிடைத்தது.

1 கொரி. 15.55 சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?

1 கொரி. 15.56 பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.

1 கொரி. 15.57 ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி.

1 கொரி. 15.58 எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே உறுதியோடு இருங்கள் நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

----------------

16. அதிகாரம்

1 கொரி. 16.1 இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம். கலாத்திய திருச்சபைகளுக்கு நான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

1 கொரி. 16.2 நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நான் அங்கு வந்தபின் நன்கொடை திரட்ட வேண்டியதிராது.

1 கொரி. 16.3 தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.

1 கொரி. 16.4 நானும் போவது நல்லது எனத் தோன்றினால் நானும் போவேன் அவர்கள் என்னோடு வரலாம்.

1 கொரி. 16.5 நான் மாசிதோனியா வழியாகச் செல்லவிருக்கிறேன். மாசிதோனியாவைக் கடந்தபின் உங்களிடம் வருவேன்.

1 கொரி. 16.6 நான் ஒருவேளை உங்களோடு தங்கலாம் குளிர் காலத்தை அங்கே கழிக்கலாம். அப்போது நான் அடுத்ததாகப் போகுமிடத்திற்கு நீங்கள் என்னை வழி அனுப்பி வைக்கலாம்.

1 கொரி. 16.7 போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை ஆண்டவர் அனுமதிப்பாரானால் சிறிது காலம் உங்களிடம் வந்து தங்கலாம் என நம்புகிறேன்.

1 கொரி. 16.8 பெந்தக்கோஸ்து விழா வரை எபேசில் தங்கியிருப்பேன்.

1 கொரி. 16.9 அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும் பயனுள்ள முறையில் எபேசில் பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

1 கொரி. 16.10 திமொத்தேயு உங்களிடம் வரும்போது அவருக்கு எவ்விதக் குறையும் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரும் என்னைப் போலவே ஆண்டவருடைய வேலையைத்தான் செய்கிறார்.

1 கொரி. 16.11 ஆகையால் யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது. அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள். ஏனெனில் நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.

1 கொரி. 16.12 நம் சகோதரராகிய அப்பொல்லோவைக் குறித்துக் கேட்டீர்களே. அவர் மற்றச் சகோதரர்களுடன் உங்களிடம் வருமாறு அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இப்போது உங்களிடம் வர அவருக்கு மனமேயில்லை. ஆனால் தகுந்த நேரம் வரும்பொது அவர் உங்களிடம் வருவார்.

1 கொரி. 16.13 விழிப்பாயிருங்கள் நம்பிக்கையில் நிலைத்திருங்கள் துணிவுடன் நடந்து கொள்ளுங்கள் வலிமையுடன் செயல்படுங்கள்.

1 கொரி. 16.14 அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.

1 கொரி. 16.15 அன்பர்களே இன்னுமொரு வேண்டுகோள் ஸ்தேவனா வீட்டோ ரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அக்காயா நாட்டில் முதன் முதல் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள். இறை மக்களுக்குத் தொண்டு செய்யத் தங்களையே அர்ப்பணித்தவர்கள்.

1 கொரி. 16.16 இத்தகையோருக்கும் இவர்களுடன் இணைந்து செயல்படுவோர் பாடுபட்டு உழைப்போர் அனைவருக்கும் பணிந்திருங்கள்.

1 கொரி. 16.17 ஸ்தேவனா பொர்த்துனாத்து அக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.

1 கொரி. 16.18 அவர்கள் என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள். இத்தகையோருக்கு மதிப்பு அளியுங்கள்.

1 கொரி. 16.19 ஆசியாவிலுள்ள திருச்சபைகள் உங்களை வாழ்த்துகின்றன. அக்கிலாவும் பிஸ்காவும் தங்கள் வீட்டில் கூடும் திருச்சபையோடு சேர்ந்து ஆண்டவரோடு இணைந்துவாழும் உங்களுக்கு வாழ்த்துகள் பல கூறுகிறார்கள்.

1 கொரி. 16.20 சகோதரர் சகோதரிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.

1 கொரி. 16.21 இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.

1 கொரி. 16.22 ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக. மாரனாத்தா.

1 கொரி. 16.23 ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக.

1 கொரி. 16.24 கிறிஸ்து இயேசுவோடு இணைந்துவாழும் உங்களனைவருக்கும் என அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்


1. அதிகாரம்

2 கொரி. 1-1 கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது

2 கொரி. 1.2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக.

2 கொரி. 1.3 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று அவரைப் போற்றுவோம்.

2 கொரி. 1.4 கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

2 கொரி. 1.5 கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார் அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.

2 கொரி. 1.6 ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான் நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது.

2 கொரி. 1.7 நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

2 கொரி. 1.8 சகோதர சகோதரிகளே ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.

2 கொரி. 1.9 எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் எங்களை அல்ல இறந்தோரை உயிர்த்தெழச்செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நிகழ்ந்தது.

2 கொரி. 1.10 அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார் இன்னும் எங்களை விடுவிப்பார்.

2 கொரி. 1.11 நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

2 கொரி. 1.12 மக்களிடையே குறிப்பாக உங்களிடையே மனித ஞானத்தின்படி நடவாமல் கடவுளின் அருளைச் சார்ந்து அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது. இதுவெ எங்களுக்குப் பெருமை.

2 கொரி. 1.13 நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

2 கொரி. 1.14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.

2 கொரி. 1.15 இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன். அப்போது நீங்களும் என்னை இருமறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள்.

2 கொரி. 1.16 மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன். நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.

2 கொரி. 1.17 இப்படித் திட்டமிட்ட பிறகு நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா?

2 கொரி. 1.18 நான் ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.

2 கொரி. 1.19 நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் "ஆம் " என உண்மையையே பேசுபவர்.

2 கொரி. 1.20 அவர் சொல்லும் "ஆம் " வழியாக கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக "ஆமென் " எனச் சொல்லுகிறோம்.

2 கொரி. 1.21 கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார் இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

2 கொரி. 1.22 அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூயஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

2 கொரி. 1.23 என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன் உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.

2 கொரி. 1.24 நீங்கள் எதையெதை நம்ப வேண்டும் என நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு ஒத்துழைக்கிறோம்.

----------------

2. அதிகாரம்

2 கொரி. 2.1 நான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

2 கொரி. 2.2 நான் உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியூட்ட யார் இருக்கிறார்? என்னால் மனவருத்தத்துக்குட்பட்ட நீங்கள்தானே எனக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்.

2 கொரி. 2.3 நான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தர வேண்டிய உங்களாலே எனக்கு மனவருத்தம் வரக்கூடாது என்பதற்காகவே அத்திருமுகத்தை உங்களுக்கு எழுதினேன். நான் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள். இதுவெ உங்கள் அனைவரையும் பற்றிய என் உறுதியான நம்பிக்கை.

2 கொரி. 2.4 நான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும் கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன். உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்.

2 கொரி. 2.5 ஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும். அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை.

2 கொரி. 2.6 அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.

2 கொரி. 2.7 எனவே இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் நல்லது. அவன் மனவருத்தத்தில் முழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறுதல் அளியுங்கள்.

2 கொரி. 2.8 நீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

2 கொரி. 2.9 நீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே அத்திருமுகத்தை நான் எழுதினேன்.

2 கொரி. 2.10 நீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன்.

2 கொரி. 2.11 இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோ ம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல.

2 கொரி. 2.12 துரொவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழுது அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார்.

2 கொரி. 2.13 ஆனால் அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால் என்மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே அம்மக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன்.

2 கொரி. 2.14 கிறிஸ்துவோடு இணைந்து வாழும் எங்களைக் கடவுள் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்கு கொள்ளச் செய்து எங்கள் வழியாய்த் தம்மைப்பற்றி யாவரும் அறியச் செய்கிறார் இவ்வறிவு நறுமணம் போல் எங்கும் பரவுகிறது. இவ்வாறு செய்யும் கடவுளுக்கே நன்றி உரித்தாகுக.

2 கொரி. 2.15 மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.

2 கொரி. 2.16 அழிவுறுவோருக்கு அது சாவை விளைவிக்கும் நச்சுப் புகையாகும். மீட்புப் பெறுவோருக்கு அது வாழ்வளிக்கும் நறுமணமாகும். அப்படியெனில் இத்தகைய பணியை யார்தான் செய்ய இயலும்?

2 கொரி. 2.17 நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்.

-------------

3. அதிகாரம்

2 கொரி. 3.1 மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா?

2 கொரி. 3.2 யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே.

2 கொரி. 3.3 எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது.

2 கொரி. 3.4 கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம்.

2 கொரி. 3.5 நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது.

2 கொரி. 3.6 அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு தூய ஆவியால் விளைவது வாழ்வு.

2 கொரி. 3.7 கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது.

2 கொரி. 3.8 அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்.

2 கொரி. 3.9 தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்.

2 கொரி. 3.10 அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல.

2 கொரி. 3.11 மறையப்போவது மாட்சி உடையதாயிருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாயிருக்கும்.

2 கொரி. 3.12 இவ்வாறு நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்.

2 கொரி. 3.13 மறைந்துபோகும் மாட்சியை இஸ்ரயேல் மக்கள் காணாதவாறு தம் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொண்ட மோசேயைப்போல் நாங்கள் செய்வது இல்லை.

2 கொரி. 3.14 அவர்களின் உள்ளம் மழுங்கிப் போயிற்று. இன்றுவரை அந்தப் பழைய உடன்படிக்கை நூல்களை அவர்கள் வாசிக்கும்போது அதே முக்காடு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. கிறிஸ்துவின் வழியாய்த்தான் அது அகற்றப்படும்.

2 கொரி. 3.15 இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.

2 கொரி. 3.16 ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும்.

2 கொரி. 3.17 இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு.

2 கொரி. 3.18 இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.

--------------

4. அதிகாரம்

2 கொரி. 4.1 கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம்.

2 கொரி. 4.2 மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை நாங்கள் தவிர்த்து விட்டோ ம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.

2 கொரி. 4.3 நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.

2 கொரி. 4.4 இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை.

2 கொரி. 4.5 நாங்கள் எங்களைப் பற்றி அல்ல இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம் அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.

2 கொரி. 4.6 "இருளிலிருந்து ஒளி தோன்றுக. " என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

2 கொரி. 4.7 இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.

2 கொரி. 4.8 நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை

2 கொரி. 4.9 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.

2 கொரி. 4.10 இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.

2 கொரி. 4.11 இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.

2 கொரி. 4.12 சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.

2 கொரி. 4.13 "நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன் ஆகவே பேசினேன் " என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம் ஆகவே பேசுகிறோம்.

2 கொரி. 4.14 ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார் உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.

2 கொரி. 4.15 இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

2 கொரி. 4.16 எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளருவதில்லை.

2 கொரி. 4.17 நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.

2 கொரி. 4.18 நாங்கள் காண்பவற்றையல்ல நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.

-----------

5. அதிகாரம்

2 கொரி. 5-1 நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா.

2 கொரி. 5.2 இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

2 கொரி. 5.3 அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோ ம்

2 கொரி. 5.4 இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமுச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம். வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும்.

2 கொரி. 5.5 இந்நிலையடைவதற்கென்றே கடவுள் நம்மைத் தயாரித்து மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவருடைய தூய ஆவியை நமக்கு வழங்கினார்.

2 கொரி. 5.6 ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.

2 கொரி. 5.7 நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.

2 கொரி. 5.8 நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

2 கொரி. 5.9 எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.

2 கொரி. 5.10 ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவின் செயல்களும் வெளிப்படும்.

2 கொரி. 5.11 ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் மக்களை ஈர்க்கப் பார்க்கிறோம். எங்கள் செயல்கள் கடவுளுக்கு வெளிப்படை. அவை உங்கள் மனச்சான்றுக்கும் வெளிப்படையாயிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

2 கொரி. 5.12 மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப் பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும்.

2 கொரி. 5.13 நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோம் என்றால் அது கடவுளுக்காகவே. அறிவுத் தெளிவோடு இருக்கிறோம் என்றால் அது உங்களுக்காகவே.

2 கொரி. 5.14 கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.

2 கொரி. 5.15 வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

2 கொரி. 5.16 ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோ ம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை.

2 கொரி. 5.17 எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ.

2 கொரி. 5.18 இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.

2 கொரி. 5.19 உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

2 கொரி. 5.20 எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.

2 கொரி. 5.21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

--------------

6. அதிகாரம்

2 கொரி. 6.1 நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

2 கொரி. 6.2 "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன் விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன் " எனக் கடவுள் கூறுகிறார். இதுவெ தகுந்த காலம். இன்றே மீட்பு நாள்.

2 கொரி. 6.3 எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை.

2 கொரி. 6.4 மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம் வேதனை இடர் நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மனஉறுதியோடு தாங்கி வருகிறோம்.

2 கொரி. 6.5 நாங்கள் அடிக்கப்பட்டோ ம் சிறையில் அடைக்கப்பட்டோ ம் குழப்பங்களில் சிக்கினோம் பாடுபட்டு உழைத்தோம் கண்விழித்திருந்தோம் பட்டினி கிடந்தோம்

2 கொரி. 6.6 தூய்மை அறிவு பொறுமை நன்மை தூயஆவியின் கொடைகள் வெளிவேட மற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்

2 கொரி. 6.7 உண்மையையே பேசி வருகிறோம் கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலாம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம்.

2 கொரி. 6.8 போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள்.

2 கொரி. 6.9 அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோ ர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை.

2 கொரி. 6.10 துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.

2 கொரி. 6.11 கொரிந்தயரே நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை.

2 கொரி. 6.12 நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள் எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.

2 கொரி. 6.13 பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன் எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.

2 கொரி. 6.14 நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு நெறிகேட்டோ டு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?

2 கொரி. 6.15 கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோ ர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு?

2 கொரி. 6.16 கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. "என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள். அவர்கள் என் மக்கள். " என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ.

2 கொரி. 6.17 எனவே "அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள் " என்கிறார் ஆண்டவர். "தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்.

2 கொரி. 6.18 மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன் நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள் " என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.

-----------

7. அதிகாரம்

2 கொரி. 7.1 அன்பார்ந்தவர்களே இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றுள்ள நாம் உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்.

2 கொரி. 7.2 உங்கள் இதயத்தில் எங்களுக்கோர் இடம் வேண்டும். நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை யாரையும் வஞ்சிக்கவில்லை.

2 கொரி. 7.3 நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை நான் ஏற்கெனவே கூறியவாறு நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள். நாம் செத்தால் ஒன்றாய்ச் சாவோம் வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம்.

2 கொரி. 7.4 உங்கள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. உங்களைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். எல்லா இன்னல்களுக்கு இடையேயும் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்கிவழிகிறது.

2 கொரி. 7.5 மாசிதோனியாவிற்று வந்து சேர்ந்தபோது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம் உள்ளே அச்சம் இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம்.

2 கொரி. 7.6 தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார்.

2 கொரி. 7.7 அவரது வருகையால் மட்டும் அல்ல நீங்கள் தீத்துவுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். எங்களைக் காண நீங்கள் கொண்டிருந்த ஏக்கத்தையும் நீங்கள் அடைந்த துயரத்தையும் நீங்கள் என்னிடம் காட்டிய ஆர்வத்தையும் பற்றி அவர் எங்களிடம் சொன்னபோது நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்.

2 கொரி. 7.8 நான் எழுதிய திருமுகம் உங்களை மனவருத்தப்படுத்தியது என்பதை அறிந்தபோது அதுபற்றி நான் வருந்தவில்லை. அத்திருமுகம் உங்களைச் சிறிது காலத்துக்கு மனவருத்தப்படுத்தியது என்பது உண்மைதான். முதலில் அதுபற்றி நான் வருத்தப்பட்டாலும்

2 கொரி. 7.9 இப்போது எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் மனவருத்தம் அடைந்தீர்கள் என்பதற்காக அல்ல மாறாக உங்கள் மனவருத்தம் மனம்மாறச் செய்தது என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய முறையில் அந்த மனவருத்தத்தைத் தாங்கிக் கொண்டீர்கள். ஆகவே நாங்கள் உங்களுக்கு எந்த இழப்பையும் வருவிக்கவில்லை.

2 கொரி. 7.10 கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொள்ளப்படும் மனவருத்தம் மீட்பு தரும் மனம்மாற்றத்தை விளைவிக்கிறது. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உலகப் போக்கிலான மனவருத்தம் சாவை விளைவிக்கும்.

2 கொரி. 7.11 கடவுளுக்கு ஏற்புடையமுறையில் நீங்கள் தாங்கிக் கொண்ட மனவருத்தம் உங்களுக்கு எத்துணை ஊக்கத்தை அளித்தது பார்த்தீர்களா? அதுமட்டுமா? நேர்மையைக் காட்ட உங்களுக்கு எத்துணை ஆவல். எத்துணை உள்ளக் கொதிப்பு. என் மீது எத்துணை அச்சம். என்னைக் காண எத்துணை ஏக்கம். எத்துணை ஆர்வம். எனக்கு மனவருத்தம் அளித்தவனிடம் எத்துணைக் கண்டிப்பு. இவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்திலும் நீங்கள் நேர்மையாளர்கள் எனக்காட்டிக் கொண்டீர்கள்.

2 கொரி. 7.12 ஆக தீங்கிழைத்தவரை முன்னிட்டோ தீங்குக்கு உள்ளானவரை முன்னிட்டோ நான் அத்திருமுகத்தை எழுதவில்லை மாறாகக் கடவுள் திருமுன் நீங்கள் எங்கள் மேல் கொண்டுள்ள ஆர்வம் வெளிப்படுமாறே அதை உங்களுக்கு எழுதினேன்.

2 கொரி. 7.13 அதனால் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். நாங்கள் ஆறுதல் அடைந்தது மட்டுமல்ல தீத்துவின் மகிழ்ச்சியைக் கண்டபோது மேலும் மிகுதியாக மகிழ்ச்சி அடைந்தோம். ஏனெனில் நீங்கள் அவருக்குப் புத்தெழுச்சி ஊட்டினீர்கள்.

2 கொரி. 7.14 நான் உங்களைக் குறித்துத் தீத்துவிடம் பெருமையாய்ப் பேசியது பற்றி வெட்கமடையவில்லை. நாங்கள் உங்களிடம் பேசியதெல்லாம் உண்மையாய் இருப்பதுபோல நாங்கள் தீத்துவிடம் உங்களைக் குறித்துப் பெருமையாய்ப் பேசியதும் உண்மையெனத் தெளிவாயிற்று.

2 கொரி. 7.15 நீங்கள் அனைவரும் அவருக்குக் கீழ்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக் கொண்ட முறையை அவர் நினைவு கூரும்போது அவரது உள்ளம் உங்களுக்காக மிகுதியாய் உருகுகிறது.

2 கொரி. 7.16 உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

------------

8. அதிகாரம்

2 கொரி. 8.1 சகோதர சகோதரிகளே மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தியப்படுத்த விரும்புகிறோம்.

2 கொரி. 8.2 அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள்வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்.

2 கொரி. 8.3 அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன் அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி.

2 கொரி. 8.4 இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்குபெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.

2 கொரி. 8.5 நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள் நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால் எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.

2 கொரி. 8.6 எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக் கொண்டோ ம்.

2 கொரி. 8.7 நம்பிக்கை நாவன்மை அறிவு போரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.

2 கொரி. 8.8 நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன்.

2 கொரி. 8.9 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே. அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

2 கொரி. 8.10 இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவெ. இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள் அது மட்டுமல்ல இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே.

2 கொரி. 8.11 அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள்.

2 கொரி. 8.12 ஆர்வத்தோடு கொடுத்தால் தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை.

2 கொரி. 8.13 மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்.

2 கொரி. 8.14 இப்பொழுது உங்களிடம் மிகுதெரியாயிருக்கிறது அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதெரியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.

2 கொரி. 8.15 "மிகுதியாகச் சேகித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை " என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ.

2 கொரி. 8.16 எங்களுக்கு உங்கள் பேரில் உள்ள அதே ஆர்வத்தைத் தீத்துவின் உள்ளத்திலும் தூண்டியெழுப்பிய கடவுளுக்கு நன்றி உரித்தாகுக.

2 கொரி. 8.17 நாங்கள் விடுத்த வேண்டுகோளை முன்னிட்டு மட்டும் அல்ல அவரே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அவராக உங்களிடம் புறப்பட்டு வருகிறார்.

2 கொரி. 8.18 அவரோடு மற்றொரு சகோதரரையும் அனுப்புகிறோம். அவர் நற்செய்தி அறிவித்து எல்லாத் திருச்சபைகளிலும் புகழ்பெற்று விளங்குபவர்.

2 கொரி. 8.19 அது மட்டும் அல்ல நாங்கள் செய்யும் அறப்பணிப் பயணத்தில் வழித்துணைவராகத் திருச்சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே. ஆண்டவரின் மாட்சி இலங்கவும் எங்கள் ஆவம் விளங்கவுமே நாங்கள் இவ்வறப் பணியை மேற்கொண்டுள்ளோம்.

2 கொரி. 8.20 இந்தப் பெருந்தொகையைக் கையாளும் முறைபற்றி எங்கள் மீது எவரும் குறை கூறாவண்ணம் கவனமாயிருக்கிறோம்.

2 கொரி. 8.21 ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம்.

2 கொரி. 8.22 அவர்களோடு வேறொரு சகோதரதையும் அனுப்பி வைக்கிறோம். இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில் நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்களிடம் உறுதெரியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால் இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார்.

2 கொரி. 8.23 தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் என்பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார். மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள். கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள்.

2 கொரி. 8.24 ஆகவே அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சியே என்று எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.

----------

9. அதிகாரம்

2 கொரி. 9.1 இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியைக் குறித்து உங்களுக்கு நான் தொடர்ந்து எழுதத் தேவையில்லை.

2 கொரி. 9.2 உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்குத் தெரிந்ததே. அதைக் குறித்து மாசிதோனிய மக்களிடம் பெருமையோடு பேசியிருக்கிறேன். அக்காயா மாநில மக்கள் கடந்த ஆண்டிலிருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் எனவும் சொல்லியிருக்கிறேன். இந்த உங்கள் ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.

2 கொரி. 9.3 எனவே இந்த அறப்பணியைப் பொறுத்த வரையில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியது பொருளற்ற பேச்சல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் நான் சொன்னதற்கேற்ப நீங்கள் பொருளுதவி செய்யத் தக்க ஏற்பாட்டுடன் இருக்கவுமே இந்த மூன்று சகோதரர்களையும் அனுப்புகிறேன்.

2 கொரி. 9.4 என்னோடு வரும் மாசிதோனியர் நீங்கள் பொருளுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கண்டால் நாங்கள் வெட்கமுற வேண்டியிருக்கும் நீங்களும் வெட்கமுற வேண்டியிருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மீது நான் அத்துணைத் திடநம்பிக்கை கொண்டிருக்கிறேன் அல்லவா.

2 கொரி. 9.5 இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்னால் உங்களிடம் வந்து நீங்கள் வாக்களித்த நன்கொடையைத் திரட்டி வைக்க முன்னேற்பாடு செய்தால் நான் அங்கு வரும்போது அது தயார் நிலையில் இருக்கும். அது கட்டாயப்படுத்தித் திரட்டப்பட்டதாக அன்றி நீங்களாகக் கொடுத்த நன்கொடையாகவும் இருக்கும்.

2 கொரி. 9.6 குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

2 கொரி. 9.7 ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

2 கொரி. 9.8 கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார் அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.

2 கொரி. 9.9 "ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் " என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா.

2 கொரி. 9.10 விதைப்பவருக்கு விதையையும் உண்பதற்கு உணவையும் வழங்குபவர் விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

2 கொரி. 9.11 நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணிவழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

2 கொரி. 9.12 நீங்கள் திருத்தொண்டாக ஏற்றுக்கொண்ட இப்பணி இறைமக்களின் தேவையை நிறைவு செய்வது மட்டுமன்றிப் பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும்.

2 கொரி. 9.13 இவ்வாறு நீங்கள் ஏற்று அறிக்கையிடும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு நீங்கள் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும் அவர்களுக்கும் மற்றெல்லாருக்கும் நீங்கள் செய்த உங்கள் பொருளுதவியால் உங்கள் வள்ளன்மை வெளிப்படும். இவ்வாறு அவர்கள் இந்த அறப்பணியின் விளைவாகக் கடவுளைப் போற்றிப் புகழ்வார்கள்.

2 கொரி. 9.14 கடவுள் உங்கள் மீது அளவற்ற அருள் பொழிந்துள்ளதால் அவர்கள் உங்களோடு நெருங்கிய ஈடுபாடு கொண்டு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவர்.

2 கொரி. 9.15 கடவுளின் சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கே நன்றி உரித்தாகுக.

---------------

10. அதிகாரம்

2 கொரி. 10.1 உங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன் ஆனால் தொலையில் இருக்கும் போது துணிவுடன் செயல்படுகிறேன் என்றா நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் பணிவோடும் கனிவோடும் பவுலாகிய நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது

2 கொரி. 10.2 நான் உங்களோடு இருக்கும்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன்.

2 கொரி. 10.3 நாங்கள் உலகில் தான் வாழ்கிறோம் எனினும் எங்கள் போராட்டம் உலகைச் சார்ந்தது அல்ல.

2 கொரி. 10.4 எங்கள் போராட்டத்தில் நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் உலகு சார்ந்தவை அல்ல மாறாக அவை கடவுளின் வல்லமையால் அரண்களைத் தகர்த்தெறியக் கூடியவை. அவற்றைக் கொண்டு குதர்க்க வாதங்களையும்

2 கொரி. 10.5 கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம். மனித எண்ணங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு கட்டாயப்படுத்துகிறோம்.

2 கொரி. 10.6 நீங்கள் முழுமையாகக் கீழ்ப்படிந்த பிறரது கீழ்ப்படியாதவர்கள் யாவருக்கும் தக்க தண்டனை கொடுக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்.

2 கொரி. 10.7 கண்திறந்து பாருங்கள். தாம் கிறிஸ்துவுக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடும் எவரும் சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். அவர் கிறிஸ்துவுக்குச் சொந்தமாயிருப்பது போன்று நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தமே.

2 கொரி. 10.8 எங்களுடைய அதிகாரத்தை உங்கள் அழிவுக்காக அல்ல உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் தந்திருக்கிறார். அவ்வதிகாரத்தைப் பற்றி நான் சற்று அதிகமாகவே பெருமை பாராட்டினாலும் அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.

2 கொரி. 10.9 திருமுகத்தின் வாயிலாக மட்டும் உங்களை அச்சுறுத்துகிறேன் என நான் நினைக்கவில்லை.

2 கொரி. 10.10 "அவருடைய திருமுகங்கள் கடுமையானவை ஆற்றல்மிக்கவை. ஆனால் அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது பேச்சும் எடுபடாது " என்கிறார்கள்.

2 கொரி. 10.11 அப்படிச் சொல்பவர்கள் எங்கள் திருமுகங்களில் நாங்கள் வெளிப்படுவது போலவே நேரில் வரும்போதும் செயல்படுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2 கொரி. 10.12 சிலர் தங்களுக்குத் தாங்களே நற்சான்று கொடுக்கின்றனர். அவர்களோடு எங்களைச் சேர்த்துக் கொள்ளவோ ஒப்பிடவோ நாங்கள் துணியவில்லை. அவர்கள் தங்களையே அளவு கோலாகக் கொண்டு தங்களை அளவிட்டுக் கொள்கிறார்கள். தங்களைத் தங்களோடே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். இது அறிவீனம் அல்லவா.

2 கொரி. 10.13 ஆனால் நாங்கள் அளவு மீறிப் பெருமை கொள்வதில்லை அதற்கென்று எங்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. அது கடவுளே வரையறுத்த எல்லை. அந்த எல்லைக்கு உட்பட்டே உங்கள் நகர் வரை வந்தோம்.

2 கொரி. 10.14 உங்கள் நகர் வரை நாங்கள் வராமல் இருந்திருந்தால் அளவுமீறிப் பெருமை கொண்டவர்கள் ஆவோம். ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் நகருக்கு முதன்முதல் வந்தவர்கள் நாங்களே.

2 கொரி. 10.15 மற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டினால் அது அளவு மீறிச் செயல்படுவதாகும். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை வளரவளர உங்களிடையே நாங்கள் ஆற்றும் பணி விரிவடையும் கடவுள் வரையறுத்துக்கொடுத்த எல்லைக்குள்ளேயே இருப்போம் என்றே நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

2 கொரி. 10.16 இவ்வாறு உங்கள் எல்லைக்கு அப்பால் வாழ்வோரிடமும் நாங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியும். அப்போது மற்றவர்களுக்குக் குறிக்கப்பட்ட எல்லையை மீறிச் செயல்பட்டு அவர்கள் செய்த வேலையைக் குறித்து நாங்கள் பெருமை பாராட்டவும் இடம் இராது.

2 கொரி. 10.17 "பெருமைபாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும். "

2 கொரி. 10.18 தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.

--------

11. அதிகாரம்

2 கொரி. 11.1 என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும் ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்

2 கொரி. 11.2 உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

2 கொரி. 11.3 ஆனால் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.

2 கொரி. 11.4 உங்களிடம் யாராவது வந்து நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால் அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால் அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.

2 கொரி. 11.5 இப்படிப்பட்ட "மாபெரும் " திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன்.

2 கொரி. 11.6 நான் நாவன்மையற்று இருக்கலாம் ஆனால் அறிவு அற்றவன் அல்ல இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தியே இருக்கிறோம்.

2 கொரி. 11.7 ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வுபெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா?

2 கொரி. 11.8 நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.

2 கொரி. 11.9 நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை இனி இருக்கவும் மாட்டேன்.

2 கொரி. 11.10 கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப்படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது.

2 கொரி. 11.11 ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள் மீது அன்புகொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

2 கொரி. 11.12 எங்களைப் போன்று பணியாற்றுவதாகக் காட்டித் தம் பணியில் பெருமையடைய சிலர் வாய்ப்புத் தேடுகின்றனர். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காதிருக்க நான் இப்போது செய்து வருவதையே தொடர்ந்து செய்வேன்.

2 கொரி. 11.13 ஏனெனில் இத்தகையோர் போலித் திருத்தூதர் வஞ்சக வேலையாள்கள் கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள்.

2 கொரி. 11.14 இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே?

2 கொரி. 11.15 ஆகவே அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்.

2 கொரி. 11.16 நான் மீண்டும் சொல்கிறேன். நான் ஒரு அறிவிலி என எவரும் எண்ண வேண்டாம். அவ்வாறு எண்ணினால் என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள் அப்படியானால் நானும் சற்றுப் பெருமையடித்துக்கொள்ளலாமே.

2 கொரி. 11.17 நான் இவ்வாறு பெருமையாய்ப் பேசுவது ஆண்டவரின் தூண்டுதலால் அல்ல மாறாக நான் ஓர் அறிவிலியாய் இருப்பதால் தான்.

2 கொரி. 11.18 பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன்.

2 கொரி. 11.19 நீங்கள் அறிவுக்கூர்மையுள்ளவர்கள் அல்லவா? அறிவிலிகளை மனமுவந்து பொறுத்துக் கொள்பவர்கள் ஆயிற்றே.

2 கொரி. 11.20 யாராவது உங்களை அடிமைப்படுத்தினாலும் சுரண்டினாலும் உங்களுக்குக் கண்ணி வைத்தாலும் உங்களிடம் இறுமாப்போடு நடந்து கொண்டாலும் உங்களைக் கன்னத்தில் அறைந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்.

2 கொரி. 11.21 இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே. இது அவமானத்திற்குரிய ஒன்றுதான். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமைப்பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.

2 கொரி. 11.22 அவர்கள் எபிரேயரா? நானும் தான். அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான். அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.

2 கொரி. 11.23 அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன் பன்முறை சிறையில் அடைபட்டேன் கொடுமையாய் அடிபட்டேன் பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.

2 கொரி. 11.24 ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்.

2 கொரி. 11.25 மூன்றுமுறை தடியால் அடிபட்டேன் ஒருமுறை கல்லெறிபட்டேன் மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன் ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.

2 கொரி. 11.26 பயணங்கள் பல செய்தேன் அவற்றில் ஆறுகளாலும் இடர்கள் என் சொந்த மக்களாலும் இடர்கள் பிற மக்களாலும் இடர்கள் நாட்டிலும் இடர்கள் காட்டிலும் இடர்கள் கடலிலும் இடர்கள் போலித் திருத்தூதர்களாலும் இடர்கள் இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.

2 கொரி. 11.27 பாடுபட்டு உழைத்தேன் பன்முறை கண்விழித்தேன் பசிதாகமுற்றேன் பட்டினி கிடந்தேன் குளிரில் வாடினேன் ஆடையின்றி இருந்தேன்.

2 கொரி. 11.28 இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

2 கொரி. 11.29 யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப்போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என் உள்ளம் கொதிப்பதில்லையா?

2 கொரி. 11.30 நான் பெருமைபாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

2 கொரி. 11.31 நான் சொல்வது பொய் அல்ல. இதை ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் கடவுளே அறிவார். அவர் என்றென்றும் போற்றப்பெறுக.

2 கொரி. 11.32 நான் தமஸ்கு நகிரில் இருந்தபோது அரசர் அரோத்தாவின் கீழிருந்த ஆளுநர் என்னைப் பிடிக்க நகர வாயிலில் காவல் வைத்தார்.

2 கொரி. 11.33 ஆனால் நான் நகர மதிலில் இருந்த பலகணி வழியாகக் கூடையில் வைத்து இறக்கப்பட்டு அவர் கைக்குக் தப்பினேன்.

-------------

12. அதிகாரம்

2 கொரி. 12.1 பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட
வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன்.

2 கொரி. 12.2 கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார்.

2 கொரி. 12.3 ஆனால் அம்மனிதன் பின்பு வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்

2 கொரி. 12.4 அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.

2 கொரி. 12.5 இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை.

2 கொரி. 12.6 அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

2 கொரி. 12.7 எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.

2 கொரி. 12.8 அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

2 கொரி. 12.9 ஆனால் அவர் என்னிடம் "என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் " என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.

2 கொரி. 12.10 ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

2 கொரி. 12.11 நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன். என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள். நான் ஒன்றுமில்லை. எனினும் அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல.

2 கொரி. 12.12 உங்களிடையே நான் கொண்டிருந்த மனஉறுதி நான் செய்த அரும் அடையாளங்கள் அருஞ்செயல்கள் வல்லசெயல்கள் ஆகியவையே ஒரு திருத்தூதருக்குரிய அறிகுறிகள்.

2 கொரி. 12.13 எந்த முறையில் மற்றத் திருச்சபைகளை விட உங்களைத் தாழ்வாய் நடத்தினேன்? உங்களுக்குச் சுமையாய் இராதது ஒரு குற்றமா? அப்படியானால் அக்குற்றத்தை மன்னித்துக் கொள்ளுங்கள்.

2 கொரி. 12.14 இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறேன். ஆனால் உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். உங்களுடைய உடைமைகளை அல்ல உங்களையே நாடி வருகிறேன். பெற்றோருக்குப் பிள்ளைகள் செல்வம் சேமித்து வைக்க வேண்டியதில்லை. மாறாக பெற்றோரே பிள்ளைகளுக்காகச் சேமிக்க வேண்டும்.

2 கொரி. 12.15 நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும் ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன். உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா?

2 கொரி. 12.16 நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாதது குற்றமாகவே இருக்கட்டும். ஆனால் நான் உங்களைக் சூழ்ச்சியாய் வஞ்சித்தேன் என நினைக்கிறீர்களா?

2 கொரி. 12.17 நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா?

2 கொரி. 12.18 உங்களிடம் வருமாறு தீத்துவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன் மற்றொரு சகோதரரையும் அவரோடு அனுப்பிவைத்தேன். தீத்து உங்களிடம் ஆதாயம் தேடினாரா? நாங்கள் ஒரே மனப்பாங்கோடு செயல்படவில்லையா? ஒரே வழிமுறையைப் பின்பற்றவில்லையா?

2 கொரி. 12.19 நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக இதுவரை எண்ணியிருப்பீர்கள். அன்பார்ந்தவர்களே கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன் நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே.

2 கொரி. 12.20 எனக்கு ஓர் அச்சம். நான் அங்கே வரும்போது நான் காணவிரும்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ என்னவோ. ஒருவேளை நீங்கள் காண விரும்பாத நிலையில் நானும் இருக்கலாம். சண்டை சச்சரவு பொறாமை சீற்றம் கட்சி மனப்பான்மை அவதூறு பேசல் புறங்கூறல் இறுமாப்பு குழப்பம் ஆகியவை உங்களிடம் இருக்கக் காண்பேனோ என்னவோ.

2 கொரி. 12.21 நான் மீண்டும் உங்களிடம் வரும்போது என் கடவுள் உங்கள்முன் என்னைத் தலைகுனியச் செய்வாரோ என்னவோ. முன்பு பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய ஒழுக்கக்கேடு பரத்தைமை காமவெறி ஆகியவற்றை விட்டு மனம் மாறாமல் இருப்பதைக் கண்டு துயருற்று அழவேண்டியிருக்குமோ என்னவோ.

-------------

13. அதிகாரம்

2 கொரி. 13.1 இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமுலத்தாலே அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2 கொரி. 13.2 முன்பு பாவம் செய்தோரையும் மற்ற எல்லாரையும் கூட நான் ஏற்கெனவே எச்சரித்தது போலவே மீண்டும் எச்சரிக்கிறேன். இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்தபோது செய்தது போலவே இப்போதும் நான் இங்கிருந்தே எச்சரிக்கிறேன். நான் மீண்டும் அங்கு வரும்போது அவர்களை நான் எளிதாக விட்டுவிடப் போவதில்லை.

2 கொரி. 13.3 கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார்.

2 கொரி. 13.4 ஏனென்றால் அவர் வலுவற்றவராய்ச் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் கடவுளின் வல்லமையினால் அவர் உயிர் வாழ்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்கு பெறும் நாங்களும் உங்கள் பொருட்டு கடவுளின் வல்லமையால் அவரோடு வாழ்வோம்.

2 கொரி. 13.5 நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்.

2 கொரி. 13.6 நாங்கள் எங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன்.

2 கொரி. 13.7 நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம். எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தகைமையற்றவர்களாகக் காணப்பட்டாலும் நீங்கள் நன்மையையே செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டல்.

2 கொரி. 13.8 ஏனெனில் உண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய இயலாது. உண்மையின் பொருட்டே அனைத்தையும் செய்கிறோம்.

2 கொரி. 13.9 நாங்கள் வலுவற்றவர்களாயிருப்பினும் நீங்கள் வல்லமையுடையவர்களாய் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியே. நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றே நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம்.

2 கொரி. 13.10 நான் இங்கிருந்தே இதையெல்லாம் எழுதுகிறேன். ஏனெனில் நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் கண்டிப்பாய் நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்கள் அழிவுக்காக அல்ல உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் இந்த அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளார்.

2 கொரி. 13.11 சகோதர சகோதரிகளே இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது மகிழ்ச்சியாயிருங்கள் உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள் என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள் மன ஒற்றுமை கொண்டிருங்கள் அமைதியுடன் வாழுங்கள் அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

2 கொரி. 13.12 தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

2 கொரி. 13.13 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home