தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா?. இந்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது.
இந்த சூழலில் கட்டுரையின் ஊடாக சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் எனத் தோன்றுகிறது.
இந்தக் கட்டுரையில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதன் நோக்கம் இந்த சர்ச்சை தொடரக்கூடாது என்பதனை வலியுறுத்துவது தான்.
தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்துவது தான். இந்த வணக்கம் தமிழீழ மற்றும் உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளின் தேவை மட்டுமல்ல, அவர்களின் அரசியல் தேவையும் கூட.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான துறையும் புலனாய்வுத்துறையும் வெளிப்படுத்தி அவருக்கான வீரவணக்கத்தினையும் செலுத்தி விட்டனர்.
இருந்தபோதும் விடுதலைப் பணியாளர்கள் பலர் தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் புலம்பெயர் தமிழ் மக்களும் உலகத் தமிழ் மக்களும் தேசியத் தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் உரிமையை இதுவரை இழந்துள்ளனர்.
முன்னாள் சட்டவாளரும் தமிழீழம் பெருமையடையக்கூடிய அறிஞருமான திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் தனது http://www. tamilnation.org வலைப்பினனலில் தலைவர் அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.
18.06.2009 அன்று எழுதப்பட்ட இந்த வணக்கக்குறிப்பில் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து கிருஸ்ணா அம்பலவாணர் எழுதிய கீழ்க்காணும் கருத்துக்களில் தான் உடன்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். (பார்க்க - http://www.tamilnation.org/saty/090618vp.htm)
'...மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துக்கள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த சாவு ஈழத் தமிழினத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக - ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும். ஆனால், இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்." (31.05.20099)
கிருஸ்ணாவின் இந்த கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன்.
தெளிவாகச் சிந்திக்கக்கூடிய எவரும் தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாக நம்புவதற்கு எவ்வித அடிப்படைகளும் இல்லை. நாம் ஏற்க மறுக்கும் செய்தியினை நமது மனம் இலகுவில் ஏற்று விடுவதில்லை. தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற செய்தியும் அத்தகையது தான்.
தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு ஒரு சிறுதுளி கூட இருக்காதா என உலகத் தமிழர் மனங்கள் ஏங்குவதும் இயல்பானது தான். நமது வாழ்க்கையில் அறிவு ஏற்கும் ஒரு விடயத்தை மனம் ஏற்க மறுப்பதும் பல தடவைகளில் நடந்து விடுவது தான்.
இந்த சந்தர்ப்பங்களில் அறிவுக்கும் மனதுக்கும் பெரும் போராட்டமே நடக்கும். ஆரம்பத்தில் மனம் வெற்றி பெற்றாலும் இறுதியில் அறிவுதான் வெற்றி பெறும். இது நம் வாழ்க்கை அனுபவம்.
இதுதான் தலைவர் அவர்களின் விடயத்திலும் நடந்து வருகிறது. அறிவு அவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை உணர்த்தினாலும் மனம் அதனை ஏற்க மறுக்கிறது.
இருந்த போதும் மனத்தினை அறிவு வென்று தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்த செய்தியினை மக்கள் மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
எவ்வளவு விரைவில் மனதினை அறிவு வெல்கிறது என்பது அவரவர் சிந்தனைத்திறனின் கூர்மையினைப் பொறுத்தது.
தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாக தற்போதும் நம்பும் மக்கள் நாளாந்தம் தமது அறிவுக்கும் மனதுக்குமிடையே போராடி வருகிறார்கள்.
தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்டு வணக்கம் செலுத்த மறுப்பதலாலேயே இவர்களது மனப்போராட்டம் தொடர்கிறது. குழப்பம் நீடிக்கிறது.
ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனும் காரணமும் தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் கூறப்படுகிறது. இது அவலமான ஒரு முரண்பாடு.
தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்தமை தெரிந்திருந்தும் அதனை மறுப்பதும் மறைப்பதும் ஒரு அடிப்படை நேர்மையீனம்.
இந்த நேர்மையீனம் சுயநலத்தின் அடிப்படையிலிருந்து எழுகிறது என வாதிட நான் முன்வரவில்லை. மாறாக, எந்தப் பொதுநோக்கு காரணமாவும் நாம் நேர்மையீனத்தை நியாயப்படுத்திவிட முடியாது.
பொறுப்பானவர்கள் மக்களுக்கு உண்மையைக்கூற வேண்டும். தலைவர் விடயத்தில் அறிவுக்கும் மனதுக்குமிடையில் நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது. இவ்வாறு விளையாடுவது மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய அநீதி.
தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்குமாயின் தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்.
வெளிநாடுகளில் தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை ஏற்றுக்கொண்டால் போராட்டச் செயற்பாட்டுக்கான கட்டமைப்பு உடைந்து சிதைவுற்று விடும் என்ற காரணம் கூறப்படுகிறது.
அந்தக் கட்டமைப்பு சிதைவுற்றுவிடின் போராட்டத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டு விடும் என்று பயம் எழுந்துள்ளது.
தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறார் எனக் கூறுவதன் மூலம் போராட்டத்திற்கான கட்டமைப்பை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது போல் தெரிகிறது.
இந்தக் கணிப்பீடு மிகப் பெரும் தவறு.
உண்மையில் தலைவர் அவர்களின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்டு அவருக்கு எழுச்சியுடன் வீரவணக்கம் செலுத்தி, அந்தக் கூட்டெழுச்சியின் உந்துதலோடு கடமைகளைத் தொடர்வதே போராட்டத்திற்கான பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதற்கு வழி சமைக்கும்.
மாறாக, உண்மையினை மறுப்பதும் மறைப்பதும் போராட்டச் செயற்பாடுகளின் சிதைவுக்கே நாளடைவில் வழிகோலும். மக்களின் மனதினை அறிவு வெல்லும் போது மக்கள் முன் பொய்யர்களாக நிற்க வேண்டி வரும்.
மக்களின் கோபக் கனலுக்கு முன்பாக பொசுங்கிப் போக வேண்டி வரும்.
போராட்டத்திற்கான எந்தப் பணியையுமே செய்ய முடியாத நிலை தோன்றும்.
மக்கள் முன்னால் குற்றவாளிகளாகத் தலை குனிந்து நிற்க வேண்டி வரும். அல்லது ஓடி ஒளிக்க வேண்டி வரும்.
இதனால், உரியவர்கள் தமது சிந்தனையைக் கூர்மைப்படுத்தி மிகத் தெளிவான முடிவை எடுப்பது அவசியம்.
தமிழகத்தில் தேசியத் தலைவர் அவர்கள் தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாக விளங்குகிறார்.
ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும் கௌரவத்திற்கும் தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகிறார்.
தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்தமையினை ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசிய எழுச்சி வீழ்ச்சி அடைந்து விடும் என தமிழக தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
இவ்வாறு ஒப்புக்கொள்வது தமிழ்த் தேசியத்தின் தோல்வியாகி விடுமோ எனப் பயமுறுகின்றனர். இதனால் இவர்களும் தலைவர் அவர்களின் வீரச்சாவினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இந்த நிலைப்பாடும் மாபெரும் அரசியல் தவறு.
மிக நீண்ட காலமாக தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக நின்று வரும் தமிழகத்தின் தமிழீழ ஆதரவுத் தலைவர்கள், தலைவர் வீரச்சாவு விடயத்தில் தமிழக மக்கள் முன் பொய்யர்களாகக் கூனிக்குறுகும் நிலை காலத்தால் ஏற்பட்டு விடும் என நான் அஞ்சுகிறேன்.
இத்தகைய நிலை ஏற்படின் இந்த தலைவர்களால் தமிழீழ மக்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க முடியும்?
எவ்வாறு இவர்களால் தமிழ்த் தேசிய எழுச்சியினை தலைமையேற்று முன்னெடுக்க முடியும்?
தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வாய்ப்பினை உரிய நேரத்தில் இழந்தமை குறித்த கோபக்குரல்களும் இவர்களைச் சுட்டெரிக்கும்.
இதற்கு மாறாக, தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு உலக வரலாறு காணாத எழுச்சிமிகு வீரவணக்கத்தினைச் செலுத்திவிட்டு அந்த எழுச்சியுடன் தலைவர் அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகக் கொணடு தமது கடமைளைச் செய்வதே சரியான முடிவாக இருக்கும்.
இங்கு மேலும் இரு வாதங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்காது நமது பணிகளை நாம் முன்னெடுத்துச் செல்லவேணடும்.
இந்த சர்ச்சையில் சிக்கினால் தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைந்துவிடும்.
இந்த வாதத்தினை முன்வைப்பவர்ளின் எண்ணம் நல்நோக்கத்தினை கொண்டது.
ஆனால், அவர்களின் அணுகுமுறை அரசியல் ரீதியில் தவறானது. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை முடிவுக்கு வராமல் நாம் நமது அடுத்த கட்டப் போராட்டத்தினைப் பற்றி நாம் தெளிவாகச் சிந்திக்க முடியாது.
இத்தகைய தெளிவின்றி எந்தப் பணிகளையும் தொலைநோக்குடன் முன்னெடுக்க முடியாது.
மேலும் தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை தீர்க்கப்படாவிடின் அதுவே தமிழ் மக்களின் ஒற்றுமையினைக் குலைத்துவிடும்.
இந்த சர்ச்சையினைப் புறந்தள்ளிவிட்டுப் பணியினை மேற்கொள்ள முனையும் போது - புரையோடிப்போகும் புற்றுநோயைப் போல இந்த சர்ச்சையே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை அழித்துவிடும்.
அடுத்த வாதம், தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதினை ஏற்றுக்கொண்டு - அவருக்கு வீரவணக்கம் செலுத்தவேணடியது எவ்வாறு எனக் கேள்வி எழும்புகிறது.
தலைவர் அவர்களுக்கு செலுத்தும் வணக்கம் என்பது அவருக்கு மலர் தூவுவதோ அல்லது சுடர்வணக்கம் செலுத்துவதோ அல்ல, மாறாக தமிழீழத்தினை எடுத்து அவரது காலடியில் சமர்ப்பிப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான வணக்கம் என அது வாதிடுகிறது.
நாம் எவ்வாறு தமிழீழத்தினை எடுக்கப் போகிறோம்?
ஆயுதப்போராட்டம் முலமாகவா? அல்லது மிக நுணுக்கமாத் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வுகளுடாகத் தமிழ்த் தேசிய எழுச்சியினை உயிர்ப்புடன் பேணி � தமிழர்களின் நியாயபூர்மான உரிமைப் போராட்டத்திற்கு அனைத்துலக ஆதரவினை வென்று எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் முரண்பாடுகளை நமக்குச் சாதகமாக்கி அதனுடாகத் தமிழீழத்தின் சாத்தியத்தினைப் பற்றி சிந்திக்கப் போகிறோமா?
இந்த விவாதத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை.
ஆனால், தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு உரிய வணக்கத்தினைச் செலுத்தி அந்த வணக்க பீடத்தில் நின்று நாம் அடுத்தகட்டப் போராட்டத்தினை முன்நகர்த்துவது குறித்து உறுதியெடுத்துக் கொள்வதே - தலைவர் அவர்களின் இலட்சியக்கனவினை முன்னோக்கி நகர்த்த உதவும்.
மாறாக, தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாய் பொய் கூறிக்கொண்டு, அந்தப் பொய்யின் அத்திவாரத்தில் நின்று நாம் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்திப்போமானால் - அந்த அத்திவாரமே ஆட்டம் கண்டு தலைவர் அவர்களது இலட்சியக் கனவினைத் தகர்ந்து விழச் செய்து விடும்.
இன்னுமோர் விடயம். இது தலைவரின் பாசறையில் வளர்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் முன்பாகவுள்ள தார்மீகக் கடமை சாந்த விடயம். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகக் கூறி, தற்போதைய எமது நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைவர் அவர்களைப் பொறுப்பாக்குவது தார்மீகத்திற்கு எதிரானது. சத்தியத்திற்கும் புறம்பானது.
தலைவர் பாசறையில் வளர்ந்த எந்தப்போராளியும் இத்தகைய அணுகுமுறைக்குத் துணை போகக்கூடாது. மாறாக இதனைத் தடுத்து நிறுத்தவே செயற்படவேண்டும்.
நாம் அiஎவரும் தெளிவாகச் சிந்தித்துச் சரியான முடிவினை எடுக்க வேண்டிய தருணம் இது.
வெளிநாடுகளில் போராட்டப் பணிகள் தடைப்பட்டுவிடும் என்று பயந்தோ � தமிழகத்தின் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு குந்தகம் விளைந்து விடும் எண்ணியோ தயவுகூர்ந்து தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்தும் மக்களுக்குப் பொய் கூறிக்கொண்டிருப்பதனை நிறுத்துங்கள்.
தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை முக்கியம் அல்ல. தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படுவதே முக்கியம் என்று எண்ணி இந்த சர்ச்சையினைப் புறந்தள்ளி - இந்தப் புறந்தள்ளுகை ஊடாக தமிழர்களின் ஒற்றுமை சிதைவடையவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் பலவீனமடைந்து போகவும் துணை போய் விடாதீர்கள்.
தலைவர் அவர்களுக்கு காணிக்கையாகத் தமிழீழத்தைப் பெறுவதே உண்மையான வீரவணக்கம் என்று கூறி - தலைவர் அவர்களின் விடுதலைக் கனவை சிதைத்து விடாதீர்கள்.
உண்மையின் பலம் மிகவீச்சானது. பொய்மைகனை அது விரைவாகச் சுட்டெரித்து விடும். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதான பொய்மையினை அவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற உண்மை சுட்டெரிக்கும் போது பொசுங்கப் போவது பொய்மை மட்டுமன்றி � தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வீச்சும் தான் என்பதனை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேணடும்.
இனியும் தலைவர் வீரச்சாவு விடயத்தில் உண்மை உறங்கக்கூடாது. உரியவர்களை உண்மை பேசவைப்பது உலகத் தமிழ் மக்களின் கடமை.