Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Velupillai  Prabhakaran  > On the Death of  Velupillai Prabhakaran > தாயிலாப்பிள்ளை யானோம் - அகதித்தமிழன்
 

On the Death of  Velupillai Prabhakaran

தாயிலாப்பிள்ளை யானோம்
அகதித்தமிழன்


ஜயா உன்னைப் பாடக்கூட முடியவில்லை
உனக்காய் பாமாலை சூட்டியவன்
உனக்கு பூமாலை சூட முடியாமல் தவிக்கின்றேன்
இறைவன் என்கிறார் / நீ
மனிதன் என்கிறார் /இல்லை
முற்றும் துறந்த முனிவன் என்கிறார்
அதனால் உனக்கு
வழிபாடு தேவை இல்லை என்கிறார்
அய்யன் அய்யனே
பூசைக்கு வராதா திரு உருவம் நீ
வீதிக்கு வராத திரு வதனம் நீ
ஆசைக்குக் கூட உன்னை
அழகுத்தேரில் அழைத்துவரமுடியவில்லை
என் காவல்தெய்வம்
கரிகாலச் சோழனை
ஆரத்தழுவி அழக்கூட முடியவில்லை

வரலாற்றுத்தவறை ஏன்
செய்தீர் என்று
எழுதியதற்காகவே
வாங்கியவன் துரோகிப்பட்டம்.
அய்யனே
நீயே என் உயிரானாய்
நீயே என் உணர்வானாய்
தங்கவண்ண மேனியும்
புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
கண்களில் வீரப் போர்புலிப்பார்வையும்
புவனம் யாவையும் தன்வயமாக்கிய
தமிழ்க்குலக்காவலா
தமிழீழ நாட்டின் மேதகு தலைவா
மொட்டவிழாப் பயிராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர்முகம் தூக்கி நின்ற குலவிளக்கே / உன்
கட்டவிழா மேனிதன்னைக்
கரம்தொட்டுத்தடவியாடக்
காத்திருந்தோம் கண்விழித்தோம்
முடியவில்லை
அய்யனே
நான் அழவில்லை , இரத்தம் அழுதது
போவது நிச்சயம் , முன்போ பின்போ
ஆயினும் அழுகை அதன் பேர் பாசம்
வாழ்க்கை மரணம் நடுவில் தடைச்சுவர்
எனக்கு எல்லாம் இவனென்று இருந்தேன்,
நாதியற்றேன் அப்பொழுதே
நாளை என்னினத்தைக் காப்பவர்,
யார் ....
என்னை ஈன்றவனை
என்னை உலகுக்குத்தந்தவனை
எனக்கு எல்லாமாய் ஆனவனை
அழகுபார்க்க முடியவில்லை
திக்குத்தெரியாமல் திகைக்கின்றேன்
என்செய்வேன் ..
சென்றனை என்ற போதும்
செவியினும் நம்...பவில்லை
அம்பலவி ஒரு விசரன்
அண்ணை இருக்கும் போது
அழுது புலம்புகிறான் என்று
அணைவரும் சொல்லுகிறார்
அது உண்மையாய் இருக்கட்டும்
நான் என்ன ...
கொள்ளி வைக்கவா கேட்கிறேன்
குலம்காத்த கோமகனை
நிலம் பார்த்து அதிரும் வண்ணம்
கெடுதலைக்கு ஆழாகிக்
கீழோரால் கீழ் என்று இகழப்படும் என்றன்
பெரும்தலைவன்
பாதத்திருவடியை
பாரெல்லாம் போற்றும்
பண்பை உருவாக்க நினைக்கின்றேன்
நாட்டுக்காய் உழைத்த
உத்தமனாம் பெருவீரன்
நிலைதனை அறிந்து தேர்ந்து
நீதிக்குத் தொடுக்கும் யுத்தத் தளபதியாய்
நின்றிருந்தான்
பெரும்சேனை முகப்பதனில்
நாடளிக்கும் குணக்கேடர்களைக்
கூடி எதிர்ப்பதற்க்குக்
கூவுகின்றான் , தெருவெல்லாம் பாசறைகள்
முள்ளிவாய்க்கால் பெருவெளியில்
இரத்த வாய்க்கால் பெருக்கெடுத்து ஓடுவதை
சகிக்காத பெரும் தலைவன்
போருக்கு நாள் குறித்து
விரைவில் போர் தொடங்கும்
பொறுத்திருங்கள் எனப் பதில் இறுத்தான்
படைகொண்டு செல்வதற்கு
இன்னும் சில நாட்களே
எனக்கண்டு சிந்தை மகிழ்ந்தான் அதற்குள்..
கொடும் விந்தை ஒன்று உருவாகும் என
யார் கண்டார் .....
பாசறைக்குப் பக்கத்தே
படைநடத்தும் விதம் பற்றித்
தனிமையிலே நின்று
தலைவன் யோசனைக்கு அடிமையானான்
அப்போது .....
அண்டை நாட்டோடு
அகிலத்தின் ஆதிக்கக் கரங்களெல்லாம்
ஒன்றுகூடி ...
உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற
நாய் நரிகள் கழுகுக்கும் பருந்துக்கும்
இவ்வுடலைக்கொடுப்பதற்கே
சுற்றியுள்ளார் என்பதனை
உணர்ந்து ஆய்ந்து
தான் வளர்த்த வீரர்களை
அழித்துப்போடல் ஆகாதென அறிந்து
போர்தொடுக்க துணிந்த வேளை
மலைபிளக்க வெடி வைத்ததுபோல் மாவீரன்
மண்டையைப் பிளப்பதற்கும்
துணிந்து விட்டார் .
தலை நொறுங்கித் தரையில் சாய்ந்தான்
தமிழ் தலைவன்
தினவெடுத்த தோள்களோடு
தினம் திரிந்த மணிமார்பில்
உதிர வெள்ளம் .
முடித்து விட்டார் பகையை என்ற
இறுமாப்பில்
ஆரியத்துச் சிங்கம் மண்ணை
முத்தமிட்ட வேளை
உத்தமனும் கடைசி மூச்சை
நாட்டுக்கே அளித்து விட்டு
துயில் நீங்காத்தொட்டிலில் படுத்துக்கொண்டான்
சித்திரம் சிதைந்தது எனக்கேள்வியுற்று
இத்தரையில் மாந்தரெல்லாம்
உயிருள்ள பிணமாகி
உருக்குலைந்து போனார்
தலைமகனே
தலைகுனியாத்தமிழனாக
இறுதிவரை போராடி
இலங்குபுகழ் ஈழமதின்
அணையாச் சுடரானாய்
உனை மறக்க முடியாமால்
உள்ளமெல்லாம் நீ நிறைந்தாய்
சாகாததாகச் செத்தது மேனி
தளராததாகத் தளர்ந்தது பூமி
வேகாத வெந்தன விழிகள்
வீட்டிலும் நாட்டிலும் அவையே ஒளிகள்
அய்யகோ தமிழே
தாயிலாப்பிள்ளை யானேம்
தலைவனை இழந்த பின்னே

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home