Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Velupillai  Prabhakaran  > On the Death of  Velupillai Prabhakaran > தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் - புலிகளின் புலனாய்வுத்துறை அறிவிப்பு


On the Death of  Velupillai Prabhakaran

தேசியத் தலைவருக்கு வீரவணக்கம்
 புலிகளின் புலனாய்வுத்துறை அறிவிப்பு
[also in PDF - Tamil - English]

18 June 2009


[வியாழக்கிழமை, 18 யூன் 2009, 04:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு� அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள், மற்றும் சிறிலங்கா படைத்துறையின் உயர்பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும், அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும், அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதேவேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத்துறையின் இயக்குநர் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இருவேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதேவேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும், அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக்கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள், தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன், இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"






 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home