Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Velupillai  Prabhakaran  > On the Death of  Velupillai Prabhakaran > பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா என்பது பதில் கூறமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.
 


On the Death of  Velupillai Prabhakaran

பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா என்பது
பதில் கூறமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.

தமிழவன்

உயிரோசை, 26 May 2009
 


பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா என்பது பதில் கூறமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.

ஆனால் பிரபாகரன். தமிழர்கள் உயர்பண்புகள் என்று போற்றிப் பாதுகாத்த முக்கியமான எல்லா பண்புகளையும் கொண்டவர். ஒழுக்கமான வாழ்க்கை கொண்டவர்; கொண்ட கொள்கைக்காக உயிரைவிடவும் தயாராக இருந்தவர். அரசியல் தந்திரம் என்ற பெயரில் காட்டிக் கொடுக்காதவர், பொய் பேசாதவர், நாடகம்போடாதவர், மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்தவர்; தன் இலட்சியத்துக்காகத் தன் குடும்பத்தையும் இணைத்தவர்; தியாகத்துக்குத் தயங்காதவர்; எதிரிகளை அழிப்பதில் தயை தாட்சண்யமில்லாதவர். வீரமிக்கவர்.

சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பு உண்டு என்று ஜார்ஜ் ஹார்ட் அணங்கு என்ற சொல்லை விளக்குவார்; அதாவது ஒரு தெய்வத் தன்மை தமிழர்களின் நிலம், இயற்கை, சிந்தனைசார்ந்து நின்றது என்றும் அதுதான் அணங்குக் கோட்பாடு என்றும் ஜார்ஜ்ஹார்ட் கூறுவார். அதுபோல் வெறியாடல் என்று மந்திரவாதியை அழைப்பதுபற்றி சங்க இலக்கியம் கூறும். முருகவணக்கம் தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகம். சைவத்தத்துவமும் அப்படித்தான்; இவை வீரம் சார்ந்த வழிபாடுகள். பிரபாகரன் காட்டிய வீரம் தமிழ்க்குடிக்கு அகில உலகப் பெருமையைத்தரும் முறையில் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று. உலகில் சிறுசிறு மக்கள் கூட்டங்கள் தங்களுக்கான நாட்டை உருவாக்குவது சர்வசாதாரணம்.

அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தை தனது அறிவுத்தோற்றவியலின் (Epistemology) அடிப்படையாக வைத்தார். சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு முதன்முதலில் அச்சானது 1894. அன்றிலிருந்து தமிழர்களுடைய வீரம் தமிழ்க் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு வருகிறது. எந்தப் பாடநூலிலும் தமிழர்களுடைய வீரம் பற்றிய செய்தி இல்லாமலில்லை. ஈழத்தவரான சி.வை.தாமோதரம்பிள்ளையும் தமிழகத்தவரான உ.வே.சாமிநாத அய்யரும் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார்கள். சங்க இலக்கியத்தின் மொத்த செய்தியும் வீரமும் தமிழ்ப் பெருமையும். சங்க இலக்கியத்தைத் தமிழர்களின் தனிப் பெரும் சொத்தாகப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றது திராவிடப் பரம்பரை.

சங்க இலக்கியத்தைத் தன் சிந்தனையின் அடிப்படையாகக் கொண்ட அண்ணாவையும் அவரின் சீடர்களையும் நாம் குறைசொல்ல வேண்டிவரும். பிரபாகரனை உருவாக்கிய விழுமியங்களைத் தமிழ் சமூகத்துக்குப் பரப்பியவர்கள் இவர்கள்தாம். மே 20ஆம் தேதி இந்து நாளிதழில் முரளிதர்ரெட்டி என்ற நிருபர் பிரபாகரனை ஒரு Megalomaniac என்றழைத்துச் செய்திகளுக்குத் தலைப்புக் கொடுக்கிறார்.

பிராமணக் கருத்துருவம் (Brahmin Ideology) தமிழ்க்கருத்துருவத்துக்கு (Tamil Ideology) எதிரானது என்று இந்து செய்தித்தாள் நிரூபித்து வருகிறது. உ.வே.சாமிநாத அய்யரும் ஒரு பிராமணர்தான். ஆனால் அவர் தமிழ்க் கருத்துருவத்துக்கு ஆதரவான பிராமணர்.

இந்த இடத்தில் இன்றைய தமிழ்க்கலாச்சாரத்தின் உள் சேர்ந்துள்ள அம்சங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். இலட்சியம், வைராக்கியம், கொண்ட கொள்கையில் பிடிவாதம் போன்ற குணங்களை சமூகம் தொடர்ந்து போற்றிவருகிறது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போற்றிக் கற்பிக்கிறது. மதம், அரசியல், சினிமா என்று பிரச்சாரம் நடக்கிறது.

பிரபாகரனை உருவாக்கிய மதிப்பீடுகளில் நேதாஜி சுபாஷ் போஸ் முக்கியமானவராகத் தெரிகிறார். அப்படியென்றால் இன்றைய சுதந்திரம் பெற்ற இந்தியா போற்றிப் பாதுகாக்கும் விழுமியங்களும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. அதனால்தான் வடஇந்திய தொலைக்காட்சிகள் ராஜபக்ஷவின் செய்திகளை அப்படியே பிரசுரிக்கின்றன.

 

இன்றைய தமிழ்ச்சமூகம் பற்றி கலாச்சாரத் தலைவர்கள் யோசிக்கவேண்டிய காலம் வந்துள்ளது என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களே கலாச்சாரத்தலைவர்கள் என்று பாரதிதாசனும் அண்ணாவும் செய்த விதி தகர்ந்து போக ஆரம்பித்துள்ளது.

அதற்கான உதாரணங்கள் மே மாதம் 18-ஆம் தேதியிலிருந்து-இலங்கையிலிருந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது தெரிகின்றன.

தமிழ்க் கருத்துருவம் என்பது நேரடியான பொருளாதாரத்தோடு தொடர்புடையதல்ல; அல்துஸ்ஸரும் கிராம்ஸ்கியும் கூறியுள்ள சிந்தனைகளைப் படிப்பவர்கள் கருத்துருவம் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அண்ணாதான் திராவிட நாடு இல்லை என்றான போது கலாச்சார ரீதியாக திராவிட நாட்டை உருவாக்கும் ரகசியத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தினார். பாடப்புத்தகங்களிலும் அதுபோல தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்தின் பெயரை மாற்றியதிலும் இத்திட்டம்தான் செயல்பட்டது. ஆனால் அவர் செய்த தவறு மு.வ.போன்ற மேம்போக்கு ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தியது. காங்கிரஸ் ஆதரவாளர் என்ற காரணத்துக்காக தெ.பொ.

மீனாட்சி சுந்தரம் போன்ற ஆய்வாளர்களின் மரபு அழிக்கப்பட்டது. அதுபோல தமிழ்க் கருத்துருவத்துக்குள் சனரஞ்சகம் நுழைய அண்ணா அனுமதித்தார்.

அனைத்துலக ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் அதன் நோக்கங்களில் இருந்து மாறியது. தமிழ் மக்களுக்கு ஒரு போர்க்கால நடவடிக்கையாய் கல்விப் பரவலைச் செய்யாமல் அவர்களை அப்படியே வைத்தபடி படிக்காதவர்களுக்கான கலாச்சாரம் உருவாக ஆரம்பித்தது. திராவிடப் பாரம்பரியம் இதில் உற்சாகமாகப் பங்கெடுத்தது. சிறு அறிவாளி குழுக்கள் எண்பதுகளில் தோன்றி இந்த திராவிட சனரஞ்சகத்தை கும்பல் கலாச்சாரம் என்று சரியாக முத்திரை குத்தின.

தமிழகத்துக்குள் தமிழ்க்கருத்துருவத்தை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தி பிராமணக் கருத்துருவம். இது தனிப்பட்ட பிராமணச் சாதியினரைக் குறிப்பிடாது. இந்தச் சக்திதான் இடதுசாரிக் கட்சிகளுக்குள்ளும் காங்கிரஸ் என்ற கட்சிக்குள்ளும் நுழைந்துள்ளது.

பாரதிராஜா போன்ற நடுத்திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவர்களையும் சீமான் போன்ற இளைஞர்களையும் அண்ணாவின் தமிழடையாளம் என்ற நெடுங்காலத்திட்டத்தினால் உருவானவர்கள் என்று கணிக்க வேண்டும் போலுள்ளது.

இவர்கள் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் போட்டியிட்ட அத்தனை காங்கிரஸ் பிரமுகர்களும் தோற்றது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கருதுகிறேன்.

தமிழர்களின் ஆட்டுமந்தைத்தனம் என்ற பைத்தியக்காரத்தனத்திலும் ஒரு முறைமை உண்டு என்று தெரிகிறது.

அனைத்துலக மார்க்சிய சித்தாந்தத்தில் தன்னெழுச்சி, மற்றும் தர்க்கபூர்வமாகத் திட்டமிடல் என்று இரண்டு சிந்தனைமுறைகள் உண்டு.

தன்னெழுச்சி என்பது இயல்பான கோபம், அகங்காரம், செயல்வீரம் சார்ந்தது; தர்க்கபூர்வமாகத் திட்டமிட்டு எதிர்த்தல், தாக்குதல் என்பது செய்யப்போகிற வன்முறையை முன்கூட்டியே யோசித்து அதுபோன்ற வரலாற்றில் நடந்த வன்முறையை விமர்சனத்தோடு எப்படிக் கையாள்வது என்பது. தமிழர்களின் சரித்திரத்தில் பார்த்தால் அவர்களின் இன உளவியல், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள சூத்திரர்களதைப்போலவே, தன்னெழுச்சி சார்ந்ததாகும். அதனாலேயே முத்துக்குமார் என்ற இளைஞன் சிறுபத்திரிகைக் குழுக்களில் இருந்து தோன்றவில்லை. குறியீட்டு முறையில் சிறு பத்திரிகை சார்ந்தவர்கள் தர்க்கபூர்வமாகத் திட்டமிடுபவர்கள். அதனால் இவர்களால் தன்னெழுச்சி சார்ந்த சிந்தனையையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கமுடியாது.

சிறுபத்திரிகை சார்ந்து வளர்ந்து, அடையாளப்படுத்திய சிலர் பொதுத்தமிழர்களின் உணர்வுகளைப் புரியமுடியாதவர்களாக உள்ளனர். இவர்களால் பாதிப்பு பெற்றுப் பல நாடுகளில் வாழும் ஈழ அறிவாளிகளும் தங்கள் மக்களின் பொது உணர்வோடு சேரமுடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் பொதுமக்களின் உள்ளுணர்வும், வரலாறும், புனைவுகளும் நிர்ணயித்த உயிர்த்தன்மையில் இருக்கும் நியாயத்தை அறியமுடியாதவர்கள். (இதுதான் தமிழுண்மை).

இப்போது நான் பேசிவரும் விசயம்தான் சமீபகாலப் புதுக்கவிதைக்குள் செயல்படும் இருவகை வெளிப்பாடுகளுக்கு அடிப்படை. தமிழகத்தில் ந.பிச்சமூர்த்தி, சி.மணியின் பாணியிலும் ஈழத்தில் த.ராமலிங்கத்தின் (புதுமெய்க்கவிதைகள் என்ற தொகுப்பைப் பார்க்க) பாணியிலும் வெளிப்படும் தர்க்கம் வேறு, தமிழகத்தில் மனுஷ்யப்புத்திரன் தொடங்கிவைத்த உணர்வுப் பாணி வேறு.

இந்தத் தமிழுணர்வு, எல்லை வரையறைகளைத் தாண்டிச் செயல்படக்கூடிய, அமானுஷ்யத்தன்மைச் சார்ந்த, வெறியாடல் சார்ந்த, அணங்கு சார்ந்த ஒரு வரையறை. அது இல்லை என்று சொல்லமுடியாது. இந்த அம்சத்தை, பயங்கரவாதம் என்று வரையறை செய்யப்பட்ட ஸ்தாபனம்சார் நபர்கள் கூறலாம். ஆப்பிரிக்க இலக்கியத்தின் அடிநாதம் இதுதான். அவர்களின் வரலாறும் இதுதான். அவர்களின் வெற்றியும் தோல்வியும் இதுதான். பிரபாகரனைவிட மோசமான கொலைகள் செய்தவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இன்று ஜனாதிபதிகளாக உள்ளனர். பலர் தலைவர்களாக இருந்தனர். தேவைக்கேற்ப சாத்வீக சிந்தனைக்கு வர்ணம் பூசுகிறார்கள். இந்த மனிதன் வெற்றிபெற்றிருந்தால் இந்தக் கேவலமான பத்திரிகையாளர்கள் பூஜை பண்ணியிருப்பார்கள்.

தெஹல்கா என்ற இணையத்தளத்தில் ஷியாம் டெக்வானி என்ற பத்திரிகையாளர் மிக விரிவாக பிரபாகரன் பற்றி எழுதியிருந்தார்.

அவர், இந்து ராம் போல, ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரனின் நடைமுறைகளை ஆதரித்ததுபோலவும் ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு மனம் மாறியது போலவும் எழுதியுள்ளார். பொதுச்சூழலுக்கு ஏற்ப மாறுவது சாதாரணத் தெருமுனைப் பேர்வழிகள் செய்வதுதான். காந்தியப் போராட்டம் செய்து கொண்டிருந்த இயக்கத்திலிருந்து வந்த ஒருவன் ஏன் வன்முறையாளனாக மாறினான் என்ற கேள்வி கட்டுரையில் இல்லை. அதுபோல் இந்தியச் சமாதானப் படைபற்றிய நடுநிலையான ஆராய்ச்சி இல்லை. உயர்ந்த நாகரிகம் என்பது நேர்மையாகத் தொழில் பார்ப்பது.

அதுவும் பத்திரிகையாளனான ஷியாம் டெக்வானியின் கட்டுரையில் நேர்மை எங்கும் இல்லாமலுள்ளது. வீழ்ந்துபோகிற கொரில்லாத் தலைவர்களைப் பற்றிய பத்திரிகையாளர் கணிப்பு இது. வரலாற்றுக்கு எப்போதும் இன்னொரு முகம் உண்டு.

இதற்கு மாறாக தைரியத்தோடும் தமிழுண்மை சார்ந்த நேர்மையோடும் வைத்தியநாதனை ஆசிரியராகக் கொண்ட தினமணி தலையங்கம் தீட்டியிருந்தது. தினமணியின் ஆச்சரியப்படத்தக்க நடைமுறை மாற்றம் உலகத் தமிழர்களை மெய்சிர்க்க வைத்தது.

உண்மை எழுத்தில் வரவேண்டும் என்ற நெறிசார்ந்த அகங்காரத்தைக் காட்டிய வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர்.

ராஜீவ்காந்தி மனிதக் குண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது.

இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை மனித உறவுகளை இழந்துநின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத்தீர்ப்புச் சொல்லமுடியும். மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்புச் சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே�.

இந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் தமிழன் வரலாற்றில் நின்று நிலைக்கும். சந்தேகமில்லை.

ஒரு தேசம்-அதுவும் காந்தி மகாத்மாவால்-கட்டப்பட்ட தேசம் பொய்யைப் பரப்பக்கூடாது. பொய், தேச நிர்மாணத்தில் பங்கெடுக்கத் தேவையில்லை. ஆனால் இந்திய மனநிலை என்பது தினமணி சுட்டிக்காட்டும் பொய் மனநிலையாகும். இந்த இலட்சணத்தில் பி.ஜே.பி.யைப் பழிசொல்வதற்கு யாருக்கும் நியாயம் இல்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட இரத்த சாட்சிகளையும் அவமானப்படுத்துவதாகும் இது. இந்தியப் படைகளின் நிலைப்பாடு மட்டுமே ஒரு நாட்டின் தேசிய நியாயமாக விளங்கக்கூடாது. ஷியாம் டெக்வானி போன்ற வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகை யாளனுக்கு வாழ்வின் உன்னத விசயங்கள் புரிய முடியாது. அந்த மனிதனைப் புகழும் அடிவருடிகளுக்கும்.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home