Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Velupillai PirabaharanVelupillai Pirabaharan - Future Begins at 50 > புதிய தமிழ் தேசத்தை நிர்மாணித்து வழிநடத்தும் தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது - பேராசிரியர் கலாநிதி பணி. எஸ். ஜே. இம்மானுவேல்

புதிய தமிழ் தேசத்தை நிர்மாணித்து வழிநடத்தும் தலைவரை
தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது

பேராசிரியர் கலாநிதி பணி. எஸ். ஜே. இம்மானுவேல்
26 November 2004

[see also Saluting the Leader and Architect
of a New Tamil Nation - Prof. Dr. S. J. Emmanuel, 26 October 2004
and
For Pirabhakaran, Future Begins at Fifty; a birthday greeting from Sachi Sri Kantha]

Velupillai Pirabakaran hoisting Tamil Eelam Flag"தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது."
 


1. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரியவர் பலருக்குச் சவாலுமானவர் பிரபாகரன்

இலங்கை, தமிழீழம் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் 26.11.2004ல் தனது 50வது அகவையை நிறைவு செய்யும் தமிழர் தலைவரை நெஞ்சம் நிறைந்து நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

ஏனென்றால் அவர் சிங்கள ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சவாலாகவும், தமிழ் மக்களின் விடுதலை வேங்கை நிறை வீரனாகவும் கணிக்கப்படுகிறார். சிங்கள அரசியல் சக்திகளுக்கும், அதன் அடக்குமுறையின் கருவியான இராணுவத்துக்கும் அவர் ஒரு சவால் ஆக இருப்பது மட்டுமல்ல, அடக்குமுறைக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும், ஊக்குவிக்கின்ற சுயநலமிக்க வல்லரசுகளுக்குத் தடையாகவும் சவாலாகவும் எழுந்து நிற்கின்றார். தன் மக்களைக் காப்பாற்ற நம்பிக்கையுடைய இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பி தாயக மண்ணினதும், மக்களினதும் ஒற்றுமைக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.

இவரது தலைமைத்துவத்தை தாயகத்தில் மட்டுமல்ல உலகில் வாழுகின்ற பெரும்பான்மையான தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு இவரை தங்களுடைய விடுதலையின் வீரனாகவும், உலகிற் ஓர் தனித்துவ தலைமைத்துவத்தைப் பேணுபவராகவும், கருதுகின்றபடியால் 26.11.2004 நாள் முக்கியத்துவம் பெறுகின்றது. இவரின் செயற்பாடுகள் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கின்றது.

2. பிரபாகரனுக்கு தோன்றுவதற்கு முந்திய சிங்கள அடக்குமுறைகள்

சமூகவேறுபாடு, பிரதேசவேறுபாடு, சீதனக்கொடுமை, படித்தோர்-படியாதோர் வேற்றுமை, அசையா சொத்துக்களை மேலாகத் தேடும் போக்கு இப்பேர்ப்பட்ட அடிமைத்தனங்கள் பீடித்திருந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தான் இவரது பிறப்பு அமைந்தது. ஏற்கனவே இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது சிங்கள அரசியல் தலைவர்கள் முழு அதிகாரத்தையும் தாமே பெற்று அதைப் பயன்படுத்தி இலங்கை நாட்டை ஒரு முழு பௌத்த நாடாக மாற்றக் கொண்டிருந்த இரகசியத் திட்டத்தை அன்றைய தமிழ்த் தலைவர்கள் ஓரளவிற்கு அறிந்திருந்தனர். ஆனாலும் அதற்கெதிராகக் குரல் கொடுத்து போராடத் தயங்கினர். இதன் காரணமாக தமிழ் மக்ககளின் எதிர்காலம் பறிபோவதற்கு காரணமாகவும், சிங்கள மக்களின் மேலாண்மை ஓங்குவதற்கும் உந்துசக்தியாகவும் ஒரு வகையில் அமைந்து விட்டார்கள்.

பிரித்தானிய அரசு இலங்கையிலிருந்து வெளியேறியதும் சி;ங்கள அரசு தன்னுடைய பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்தனர், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் அரசின் உதவியுடன் சிங்களவர்களை குடியேற்றினர், சிங்கள மொழியை தனி அரச மொழியாகப் பிரகடனம் செய்து, தமிழ் மக்களினது கல்வியிலும், வேலைவாய்ப்புக்களிலும், அவர்களுடைய முன்னேற்றங்களிலும் தடைகளையும் ஏற்படுத்தினர். இவைகளின் பாரிய விளைவுகளை தமிழ் பொது மக்கள் வேதனையுடன் அனுபவித்தனர். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் தங்களுடைய தொகுதிகளைச் சந்தித்து வந்த தமிழ்த் தலைவர்கள் இம்மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கஙகளை முழமையாக உணர முடியவில்லை. அதினால் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் செய்த போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின.

சிங்களக் காடையரும் அரச படைகளின் காடைத்தனமும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் உயிர்வாழ்விற்கும் சவாலாக எழுந்த வேளையில், அன்றைய தமிழ் தலைவர்கள் என்ன செய்வது என்று அறியாது திணைத்தனர். சர்வ தேசம் தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தைக் கண்டு மௌனம் சாதித்தனர். இந் நிலையில் இராணுவ அடக்குமறைக்கும் காடைத்தனத்திற்கும் சவாலாக எவரும் அன்று இருக்கவில்லை.

3. சிங்கள கொடுமைத்தனத்தின் மத்தியில் அரசிற்கு சவாலாகத் தோன்றிய பிரபாகரன்.

இலங்கை சுதந்திம் பெற்ற பின்பு, இலங்கை அரச பயங்கரவாதம் தமிழ் மக்களை கொன்று எரித்தும், அவர்களுடைய உடமைகளை சூறையாடிக் கொள்ளையடித்தும் வந்தனர். தமிழ் மக்களின் பேரறிவின் அடையாளச் சின்னமாக கட்டி எழுப்பப் பட்ட யாழ் பொது நூலகத்தை சிங்கள காடையர் எரித்தனர், தமிழ் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கினர், தமிழ் மக்களின் மொழி கலாச்சாரச் சின்னங்களை அழித்தனர். இக்காலகட்டத்தில் தான் பிரபாகரன் தோன்றினார்.

அவரின் கண்களும், காதுகளும், இதயமும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் கொடூரத்தை கண்டன, அழுகுரலை கேட்டன. அவர் வளர வளர, மக்களின் அபயக் குரல் அவர் மேல் வளர்ந்தது. சுpங்கள கொடுமையிலிருந்து தன்மக்களை விடுதலைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற உறுதி மலை போல் அவர் உள்ளத்தில் திரண்டது. ஆனால் அவர் தன்னுடைய நாளுக்காகக் காத்திருந்தார். பதுங்குவதில் பலம் தேடினார்.

பலருக்கு வேதனையாகவும், அதிர்ச்சியுமாக அமைந்த தன்னுடைய திட்டங்களை மெதுவாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த சிங்களக் கொடூரங்களை நிறுத்தினார்;. நீங்கள் செய்த கொடூரங்கள் இனிப் போதும் என்ற செய்தியை தென்னிலங்கை சிங்களவருக்கு செய்தியாக அனுப்பினார். சிங்களவர்கள் இதன்பின்குதான் விழித்தௌத் தொடங்கினர்.

4. மக்கள் மத்தியில் எழுந்து நிற்கும் ஓர் தனித்துவத் தலைவர்

இவர் தன்னுடைய தீர்க்கமான 30 வருடப் போராட்டத்துக்குப்பின் தமிழ் மக்களுடைய, உயர்ந்த-தாழ்ந்த, செல்வர்;-ஏழைகள், படித்த-படியாத மக்களின் அன்பையும் மதிப்பையும் வென்றெடுத்தார். இவரை அன்று கடுமையாக விமர்சித்தவர்களும் இன்று இவருடைய தலைமைத்துவத்தைப் பாராட்டுகிறார்கள். இவருடைய எதிரிகள் இவருடைய பெயரைக் கொச்சைப்;படுத்தினாலும், இவர் உலகத் தலைவர்களுடைய ஒப்பற்ற கவனத்தை ஈர்ந்துள்ளார். இவர் தன்னுடைய நேர்மையான இலட்சியத்திலிருந்து கீழிறங்கி உலகின் சக்திகளுக்கு அடிமைப்பட்டு விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டவரல்ல. இலட்சியத்தில் நான் தவறின் என்னையே அழித்துவிடுங்கள் என்று கூறுகின்றார்,

5. தமிழினம் இன்னொரு தலைமைத்துவத்தை தேட ஏன், எப்படி தள்ளப்பட்டது?

பெரும்பான்மை சிங்கள ஜனநாயக அரசினதும், அதனுடைய இராணுவத்தினதும் கொடூரமான அடக்குமுறையால் கசப்பான அனுபவங்களைப் பெற்ற தமிழ்மக்கள், இவ் அடக்குமுறைக்கு எதிராக பழைய தலைமைத்துவத்தின் பயனற்ற தன்மையை உணந்தனர். புதிய தலைமைத்துவத்தைத் தேடத்தொடங்கினார்கள்.

இந்திய தமிழ் நாட்டையும் இலங்கையின் வட-கிழக்குப் பகுதிகளையும் இணைத்து பரந்த தமிழ் நாடு உருவாகிவிடுமோ என்ற பயம் சிங்கள இனவாதிகள் மனதில் ஆளமாக இருந்தது. அதனால் தமிழ் மக்கள் தமக்குச் சமமாக வாழுகின்ற அடிப்பட உரிமை கேட்டதைக் கூட அவ்வித கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். தமிழர் தங்களுடைய மொழி, மறை, பண்பாடுகளுடன் தனித்துவத்தோடு வாழுவதையும் சிங்கள இனவாதிகள் தமது ஆதிக்கத்திற்கு எதிர் சக்தியாக நோக்கினர். இதன் காரணமாக தமிழ் மக்களின் எல்லா வித போராட்டத்தையும் அடக்குவதற்கு நாடாளுமன்றில் தமது பெரும் பான்மையை பாவித்து தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் பயன்படுத்தினார்கள்.

அகிம்சையும், ஜனநாயக வழிமுறைகளும் தோற்கடிக்கப்பட்டு தமிழ்மக்கள் அவமானப்படுத்தப் பட்ட இக்காலகட்டத்தில் தான் பொறுமையிழந்த தமிழ் இளைஞர்கள் இவ்அரச பயங்கரவாதத்துகக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்க ஆயத்தமானார்கள். இருள் நிறைந்த எதிர்காலத்தில் நம்பிக்கை இல்வாதவர்களாக, கல்வி, வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக இருந்த இளைஞர்கள் பழைய தலைமைத்துவத்தை கைவிட்டு ஒரு புதிய அரசியல் நோக்குடன் ஆயதம் கலந்த தலைமைத்துவத்தைத் தேடினார்கள்.

6. புதிய தலைமைத்துவத்தைப் பற்றிய தவறான கணிப்பு

யார் புதிய தமிழ் தலைமைத்துவத்தை தோன்றுவிக்க காரண கார்த்தாக்களாக இருந்தார்களோ அவர்கள் தான் இன்று இப் புரட்சியான தலைமைத்துவத்தைப் பற்றி பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்புகின்றனர்.

தமிழ் தலைமைத்துவம் அகிம்சை வழியிலும் ஜனநாயகத்திலும் இருந்து எவ்விதம் இப் புதிய தலைமைத்துவத்தை ஆரபித்தனர் என்ற உண்மையை ஒதுக்கிவிட்டு புதிய தமிழ் தலைமைத்துவம் சென்ற நோக்குப் பற்றி பல கேள்விகள் பெரும்பான்மை சிங்களவருக்கும் அவர்களது அரசுக்கும் எழுகின்றது. இப்புதிய தலைமையுடன் எவ்வாறு பேசிக் கையாளுவது என்ற பிரச்சினையும் எழுந்தது. பல சிங்களவர்களும், ஏன் சில தமிழர்கள் கூட, இந்தத் தலைமையை இராணுவ பலத்தால் வெற்றி கொள்ள முடியும் என்றும், அப்படி அழிக்கப்படாவிடின் இத் தீவிரவாதிகளால் தமிழர் விடுதலையடைந்து பிரிந்து போய் விடுவர் என்றும் எண்ணினர்.

சிங்கள அரசும், வல்லரசுகளின் உதவியுடன், இதற்காக பல வழிகளில் கடின முயற்சி செய்து, பல மறைமுகமான வழிகளில் இந்தத் தலைமைக்குப் பதிலான வேறு தமிழ்த் தலைமையை ஏற்படுத்த முனைந்தது. அரசு புதிய தலைமையைப் புறம்தள்ளி தங்களுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கவர்ச்சிகரமான ஆசைகளைக் காட்டித் தன் பக்கம் இழுக்க முனைந்தது. கடந்த காலத்தில் மிதவாத அரசியல்வாதிகள் என்று பெயர் சூட்டப்பட்ட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் இவ்வலைக்குள் விழுந்தார்கள். தமிழனாய்ப் பிறந்தாலும், தமிழ்ப் பேசத் தெரியாத கூலிக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டமைச்சருடைய செயற்பாடுகள் தமிழ் மக்களையும் அவர்களுடைய தீவிரவாதத் தலைமைத்துவத்தையும் புறம்தள்ள முயன்றது. ஆனால் பெரும்பான்மையான தமிழர்கள் அவற்றை ஒரு நய வஞ்ஞக காட்டிக்கொடுப்பாக கணித்து அவரையும் சகாக்களையும் நிராகரித்தார்கள். வரலாறு இவர்களுக்கு நீதி வழங்கும்.

உண்மையாகவே ஜனநாயகத் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென்று பெரும்பான்மையான சிங்கள மக்களும் அதன் அரசுகளும் நினைக்குமாக இருந்தால், புதிய தலைமையைப் புரிந்துகொண்டு அத்தலைமையை தமிழ் மக்களின் உண்மையான தலைமையாக ஏற்று, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும். இது முன்னெடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் சிங்களத் தலைமைத்துவம் ஊழல் நிறைந்த ஜனநாயகத்திலிருந்தும், நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியும் நடாத்தும் காடைத்தனத்திலிருந்தும் விடுபட்டு, புதிய தமிழ் தலைமைத்துவத்தை யதார்த்த முறையில் ஏற்றுக்கொண்டு, தமிழரின் தனி மனித உரிமைகளையும், இன உரிமைகளைக் மதிக்கவும் காக்கவும் முன்வரவேண்டும்.

7. சிங்கள ஜனநாயகத்தின் ஊழல்தன்மையே புதிய தமிழ்த் தலைமைத்துவத்தைத் தேடத் தள்ளியது

இலங்கையில் சரி வெளி நாட்டில் சரி ஜனநாயகத்தைப் பற்றியும் தலைமைத்துவத்தைப் பற்றியும் மிகவும் குறுகிய நோக்கைக் கொணடிருப்பதினாலேயே பல ஜனநாயகவாதிகள் இப் புதிய தமிழ் தலைமைத்துவத்தைப் புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றார்கள். இவர்;களுடைய மேற்கத்திய கல்வியும், காலனித்துவம் சார்;பான சிந்தனைகளும் இவர்களுடைய ஒற்றைப் போக்கு கணணோட்டத்தை தோற்றுவிக்கின்றது.

இவர்கள் தங்கள் ஜனநாயகத்தினுள் நடக்கின்ற ஊழல்கள், அநீதிகளைப் பற்றி பெரிதும் பேசுவதில்லை. இவர்களின் ஜனநாயகப் போக்கு எத்தனையோ ஊழல்களையும் அநீதிகளையும் அதிகரித்திருக்கின்றது, மிகவும் பயங்கரமான சர்வாதிகாரிகளை உருவாக்கியிருக்கின்றது, அதுமட்டுமல்லாது இவர்களுடைய மேற்கத்திய உருவாக்கம், காலனித்துவத்தின்பின் ஏற்பட்ட வளர்ச்சிகளையும் மூன்றாம் மண்டல நாடுகளின் பிரச்சினைகளையும் திறந்த கணணோட்டத்தில் ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றது. இவர்கள் எல்லாவற்றையும் தமது பாரம்பரிய சிந்தனைக் கோட்பாட்டின் ஊடாகச் சிந்திப்பதையும், தம்மை உயர்வாகக் கருதுகின்ற அரக்கத்தனத்துடன் தூர நிகழ்வுகளையும் நிலைமைகளையும்; பற்றித் தீர்ப்பிடுகின்றார்கள். ஆகவே இலங்கை அரசாங்கமும் அத்துடன் துணை போகும் மற்றும் வல்லரசுகளும் உண்மையான, நேர்மையான முயற்சியெடுத்து தோல்வியுற்ற ஜனநாயகத்திலிருந்து எழுகின்ற இந்தப் புதிய தலைமைத்துவத்தை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.

பிரித்தானியரால் விட்டுச்செல்லப்பட்ட பெரும்பான்மை சிங்கள ஜனநாயகம், அடிக்கடி நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றி;, அச்சட்டங்கள் எப்பொழுதும் தமக்கு சார்பாக இருப்பதையும், சிறுபான்மையினரை அடக்குவதையுமே கருத்திற் கொண்டிருந்தது. இதனால் கடந்த 50 வருடங்களாக நாடாளுமன்றத்தின் வழியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பலன் அளிக்கவில்லை. இது படு தோல்வி கண்டதுடன், அரச பயங்கரவாத சட்டங்கள் மூலம் தம் சொந்த நாட்டுப் பிரஜைகளான தமிழ் மக்களுக்கு எதிராக போரை முன்னெடுக்கவும் நீதிப்படுத்தவும் துணை போயிருக்கிறது. இப்பின்னணியில்தான் தமிழ் மக்களின் புதிய தலைமைத்துவம் உருவாகியிருக்கின்றது.

8. தமிழர் தேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பாராளுமன்றத்தினால் இழிவுபடுத்தி நிராகரிக்கப்பட்டனர்.

நாடுகளை ஆளுவதும் வழி நடத்துவதும் உயர் கல்லூரிகளில் படித்தவர்கள் அல்லது உயர்ந்த சாதியில் உள்ளவர்;களின் பிரத்தியேகமான உரிமை அல்ல. உயர்நிலையினரும், கல்விகற்றவர்களும் ஈழத்தமிழர் வரலாற்றில் பாரதூரமான தவறுகளை செய்திருக்கின்றார்கள். தமிழ் மக்களின் வரலாற்றிலும் அவர்களுடைய சோகமான போராட்ட அனுபவங்களிலும் சில கல்விகற்ற உயர்நிலையினர் தமிழ் மக்களின் போராட்டத்தை தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகக் காட்டிக் கொடுத்தது கோச்சைப் படுத்தியத வேதனைக்குரியது.

அதேவேளையில் நல்ல தமிழ்த் தலைவர்கள் சிங்கள ஜனநாயகத்துக்குள் இழிவுபடுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூயெதாக இருக்கின்றது. ஒரு காலத்தில் பிரித்தானிய கலாசாலைக் கல்வியிலும் நாடாளுமன்ற முறைகளிலும் தகுதிபெற்று, பன்னாடுகளாலும் மதிக்க்பட்ட தமிழர்கள் வட-கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்தனர். இவர்களுக்குள் ஆகக் குறைந்த தராதரம் ஒரு வழக்கறிஞராகவாவது இருந்தது. இவ் வழக்கறிஞர்கள் தெளிவான, ஆணித்தரமான வாதாடும் திறமையால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பினாலும் இவர்கள் சிங்கள பேரினவாதிகளால் பேசவிடாது இடைமறித்து கூச்சலுடன் புறம்தள்ளப்பட்டனர். ஆகவே இப்படியான வாதாடும் ஞானம் கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புப் பாராளுமன்றிற்கு அனுப்புவதில் எவ்வித அர்த்தமும் உள்ளதாகத் தெரியவில்லை. இதே போலவே இன்றும் தெரிவு செய்யப்பட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கீழ் தரமான முறையில் பாராளுமன்றத்தினுள் நடந்து கொள்கின்றனர்.

இன்றைய இளைஞர் சமூகம் எடுத்திருக்கின்ற தலைமைத்துவம் உறுதிய10ட்டுவதாக அமைகின்றது. ஏனென்றால் கடந்தகால தலைமைத்துவத்தின் கசப்பான அனுபவங்கள் அவர்களுக்கு அறிவூட்டும் பள்ளியாக அமைந்தது. இவர்களின் சில செயற்பாடுகளை நாம் அவசரப்பட்டு தவறாகக் கணித்துக் கொள்ளக் கூடாது. வுpறேடமாக தென்னிலங்கையில் குளிரூட்டும் அறைகளில் சாய்வு நாற்காலியில் பத்திரிகை படித்துக் காலாட்டிக்கொண்டு விமர்சனம் செய்யும் கல்விமான்கள் தமது விமர்சனங்களை நெறிப்படுத்த வேண்டும். வன்னிக்குச் சென்று பல இடைய10றுகள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் புதிய தலைமைத்துவத்தின் நிர்வாகத்தை சற்று அவதானித்த பின்பு தமது விமர்சனத்தை மேற்கொள்ளுவது நலம்.

9. சிங்கள அரச நிராகரிப்பும் அதன் பயங்கரவாதமும்; பிறப்பித்த தமிழ்த் தலைமைத்துவம்

தென்பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை வடகிழக்கின் கலகக் கும்பல் என நையாண்டி செய்பவர்கள் தாங்களே அதன் காரணகர்த்தாக்கள் என்பதை மறந்துவிடுகின்றனர்;. இப் புரட்சிகரமான தலைமைத்துவத்துக்கு வித்திட்டவர் யார்? தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இவைகளின் அரசியலிலும் பார்க்க கர்;வம், பிடிவாதம் கொண்ட சிங்கள அரசுகளின் அடக்குமுறையும் அதன் இராணுவத்தின் வன்செயல்களுமே என்பதை ஒருவரும் மறக்கக் கூடாது.

கடின உழைப்பு, அறிவு, கீழ்ப்படிதல், அகிம்சை இவற்றிற்குப் பெயர் போனவர்கள் தமிழர்கள். சிங்கள வெறியர்களின் செயற்பாடுகள் அல்லது அரச வன்செயல்கள் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவர்கள் மகாத்மா காந்தி போதித்த அகிம்சை வழியைக் நீண்ட காலமாகக் கைவிடவில்லை. ஆனால் இவற்றை தமிழ் மக்களின் பலவீனமாகச் சிங்கள மக்கள் உதாசீனம் செய்தார்கள். அதன் விளைவாக தமிழ் மக்கள் பாரிய உயிர் அழிவுகளுக்கும், சொத்து அழிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், உயர் தரக் கல்வி தரப்படுத்தல் படுத்தப்பட்டதும் தமிழ் இளைஞர்களை சீற்றப்படுத்தியது, நம்பிக்கையில்லா இருளக்குள் தள்ளியது. அதனால் தங்கள் மண்ணையும் மக்களையும் தங்கள் பாரம்பரியத்தையும் அரச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க முடிவெடுத்தார்கள்.

தங்களை அடக்குபவர்களுக்கு எதிராக, அடக்கப்படுகின்றவர்கள் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தித் திருப்பித் தாக்குவதற்கு உரிமையுண:டு. பாதிக்கப்பட்டு வீழ்ந்து கிடந்து போராடும் தமிழர்களுக்கு சிங்கள அடக்குமறையினர்; நீங்கள் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று சொல்வதற்கோ, அவர்களுக்கு எதிராகச் சட்டங்கள் உருவாக்குவதற்கோ உரிமையில்லை.

தற்போதைய தமிழ் தலைமைத்துவம் ஆரம்ப காலங்களில் மேற்கொண்ட தாக்குதல்கள், ஆயுத அபகரிப்புகள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக இயலாத்தன்மையில் கையாண்ட வழிகளாகக் கணிக்க வேண்டும். வடகிழக்கு தமிழ் மக்கள் ஒழுக்கமின்றியோ நோக்கமின்றியோ, தீர்மானமின்றியோ ஒருபொழுதும் வாழவில்லை. ஆனால் அவர்களுடைய நீண்டகால துன்பவியல் வரலாறு, அம்மக்களை ஒற்றுமையாகவும் உறுதியான தீர்மானத்துடனும், அடக்குமுறைக்கு எதிராக சக்தியோடு முகம் கொடுக்க வழிவகுத்தது. இந்த சக்தியினது உருவம்தான் வடகிழக்குத் தமிழர்களின் புதிய தலைமைத்துவம்.

10. தெளிவான வேட்கைகளில் உறுதி கொண்ட தலைமைத்துவம்

விரும்பியோ விரும்பாமலோ ஒரு உண்மையை எல்லோரும் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இன்று விடுதலைப் புலிகளே ஈழத் தமிழரின் தலைமைத்துவம். இத் தலைமைத்துவம் சிங்களவர்கள் பழகிய ஊழல்நிறை தேர்தல்கள் ஊடாகவல்ல, மாறாக தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தவர்களுக்;கெதிரான ஆயுதப் போராட்டத்தினாலும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான ஆயதப் போராட்டத்தினாலும் தானாகவே உருவாகியது.

இத் தலைமைத்துவம் பின்வரும் காரணிகளில் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது.

1. வட-கிழக்கு தமிழ் மக்களின் ஈலட்சியத்தை தொடர்ச்சியாக பிரமாணிக்கத்துடன் முன்னெடுத்து போராடுகின்ற ஒரேயொரு அமைப்பாக.
2. தமிழ் மக்களுக்கு எதிராக ஏவப்படுகின்ற ஏவுகணைகளிலிருந்தும் குண்டுத்தாக்குதல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கின்ற அமைப்பாக.
3. தமிழர் விடுதலைக்காக அதிக ஆயிரப் போராளிகளை பலிகொடுத்தவர்களாக
4. வடகிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு நிர்வாகக் கட்டமைப்பை (காவல்துறை, நீதிமன்றம், கல்வி, போக்குவரத்து) ஏற்படுத்தியவர்களாக
5. தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக, தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்ககொள்ளப்பட்ட அமைப்பாக

சிங்கள அராஜகத்திலிருந்தும், காடையர்களிலிருந்தும், இராணுவத்தாலும் ஏற்பட்ட நீண்ட காலத் துன்ப்களும் இறப்புக்களும் தமிழ் மக்களின் வரலாறாக மாறினாலும், சிங்கள அரசாங்கத்துடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டாலும், கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளிலிருந்து சிங்கள அரசாங்கங்கள் பின்வாங்கினாலும், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தலைமைத்துவம், பெரும்பான்மை சிங்கள மக்களுக்குப் பெரும் சவாலாகவும், இலகுவில் விலைபோகாத தலைமைத்துவமாகவும் இருக்கின்றது. அண்மைக் காலங்கள் வரை சிங்கள அரசு அமைச்சர் பதவிகள், சலுகைகளுடன் அல்லது நிறைவேற்றப்பட முடியாத உறுதிமொழிகள்; உடன்படிக்கைகளுடன் பல போலித் தமிழ் தலைவர்களை விலை கொடுத்து வாங்கினர். அப்படி இன்றைய தலைமைத்துவத்துடன் சிங்களவர் காலடிகளில் விழுந்து கிடந்தாலும் செய்ய முடியாது.

எத்தனை உயிர் இழப்புகளைச் சந்தித்தாலும், இராணுவத் தோல்விகளைச் சந்தித்தாலும், விமர்சனங்களை எதிர்கொண்டாலும், உலகின் பல வல்லரசுகளிலிருந்து அச்சுறுத்தல்கள் வந்தாலும் அல்லது சிங்கள அரசிடமிருந்து பயமுறுத்தல்கள் வந்தாலும் தற்போதைய தலைமைத்துவம் தன்னுடைய வேட்கையில் இருந்து சற்றேனும் பின்வாங்குவதாக இல்லை. சிங்கள அரசாங்கங்கள் தன்னுடைய தலைமைகளை மாற்றி தங்களுடைய நகர்வுகளையும் யுக்திகளையும் தெளிவான தத்துவ உறுதியின்றி மாற்றியிருக்கின்றது ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் எவ்வித மாற்றமுமின்றி தனது குறிக்கோளிலும் செயற்பாட்டிலும் உறுதியாக செல்லுகின்றது.

இலட்சியத்திலும் வேட்கைகளிலும் உறுதியுடன் திடமாக உரமாக நடப்பதென்பது இவர்கள் பேச்சவார்த்தை, உரையாடல் அல்லது நீதியான சமாதானமான தீர்வுகளை வெறுக்கின்றார்கள் அல்லது தவிர்க்கின்றார்கள் என்பதல்ல. மாறாக அப்பேர்ப் பட்ட தீர்வை நோக்கி உறுதியுடன் நடக்கின்றார்கள் என்பதே உண்மை.

11. நெறிப்படுத்தப்பட்ட தமிழ்த் தலைமைத்துவம்

சிங்கள அரசுகளினால் உறுதிமொழி கொடுக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்படடும், வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் தீர்மானங்கள் பல. இந்த ஏமாற்று நிலை தமிழ் மக்களின் துன்பகரமான அனுபவமாகும். சிங்கள தீவிரவாதிகளின் சிறிய எதிர்ப்பு ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு, பாரிய உடன்படிக்கைகளை கிழித்தெறியும் சிங்கள அரசுகள் எப்படி தமிழர்களுக்கு ஓர் உறுதி மொழி கொடுக்க முடியும்? அவைகளை எப்படி செயற் படுத்த முடியும்?

அதே வேளையில் பதவி, பணம், சலுகைகள் போன்ற சோதனைக்கு தங்களை உள்ளாக்கி கடைசியில் ஒன்றுமில்லாத நிலைக்கு உட்படுத்தப்பட்ட பழைய புதிய தமிழ்த் தலைமைகளும் தமிழரின் அனுபவங்கள். ஆனால் புலிகளின் தலைமைத்துவம் இத்தகைய அனுபவங்களிலிருந்து ஆளமான பாடங்களைக் கற்றுக் கொண்ட ஒரு தலைமைத்துவமாக, தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்திருக்கின்றது. சிங்கள அரசோடு மட்டுமல்ல, தன் சொந்த மக்களின் நலனுக்காக மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பயன் கொடுக்கும் தீர்வையே அது விரும்புகின்றது.

சிங்கள அரசாங்கங்கள், விடுதலைப் புலிகள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல, அவர்கள் யுத்தத்தை நோக்கியே செல்கின்றனர் எனக் குற்றம்சாட்டி, அவர்களை முற்றாக அழித்து அல்லது பலவீனப்படுத்தி, தமிழ் மக்களின் நலனுக்கான ஏதோ செய்யலாம் என்று சிங்கள அரசு சொல்லி வருகின்றது. இது சிங்களத் தலைமைத்துவத்தின் கடந்தகால மறக்கப்பட்ட தோல்விகளின் வரலாற்றை மீளவும் நமக்கு வெளிப்படுத்துகின்றது. மேலாக இப்பேர்பட்ட விவாதங்கள் கொள்கையுடைய நெறிப்படுத்தப்பட்ட தமிழ்த் தலைமைத்துவத்தோடு நேராக நிற்கமுடியாத நேர்மையாக பேச முடியாத சிங்கள அரசாங்கங்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது.

12. அரசியல் இராணுவம் இவைகளை ஒன்றுபடுத்தும் ஒரு தலைமைத்துவம்;

சிங்கள அரசுகள் இனப்பிரச்சினையின் முதல் 30 வருடமும் தன்னுடைய இராணுவத்தை பயன்படுத்தி தமிழ் ஜனநாயக எதிரணியை அடக்கியது. அதன்பின் இராணுவத்துக்கு மேலதிக அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் (Pவுயு) ஊடாகக் கொடுத்துதவியது. தமிழர்களின் எதிர்-தீவிரவாதத்துக்கு எதிராக கட்டுப்பாடற்ற இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து இனப்பிரச்சினையில் இராணுவத்தின் தலையீடு பன் மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. அரசாங்கம் இராணுவத்தில் தங்கியிருப்பதானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு என்றுமே தடையாக இருக்கும். இராணுவம் தங்களுக்கென்று ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழர்களுக்கு நன்கு தெரியும். உதாரணமாக 1995ம் ஆண்டு வடகிழக்கிற்கு எதிரான பொருளாதாரத்தடை நீக்கத்தை அரசாங்கம் வர்த்தமானிக் கட்டளையாகப் பிறப்பித்திரிந்தும் இராணுவம் அதை செயல் படுத்த பின் வாங்கியது தெரிந்ததே. அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் உள்ள அதிகார இழுபறி தமிழ்மக்களின் தீர்வுக்கு எப்பொழுதும் தடையாக இருக்கும்.

இந்நிலைக்கு எதிராகத்தான்; அரசியல்-இராணுவ நாடாளுமன்ற பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி, புலிகளின் ஒரே தலைமைத்துவமாக தோற்றுவித்திருக்கின்றது.

13. யுத்தத்தை நீதிப்படுத்தி நீடிக்கும் அரசின் போக்கு

கூலிக்கு கூத்தாடும் வெளிவிவாகார அமைச்சரால் புலிகளுக்கு எதிராக பல பன்னாட்டுப் பிரச்சாரங்கள்; முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைப் பயங்கரவாதத்திற்கு சார்பென்று குற்றம் சுமத்தி தடைசெய்திருக்கின்றார்.

சமாதானத்துக்காகப் போர் செய்கின்றோம், தமிழ் பயங்கரவாதிகளிடமிருந்து யாழ் மக்களை விடுவிப்போம், எங்களுக்குச் சமாதானம் வேண்டும் ஆனால் புலிகள்தான் போரைத் தொடங்கினார்கள், எங்களுடைய யுத்தம் புலிகளுக்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல - இப்பேர் போன்ற பல பொய் சுலோகங்கள் வெளிநாடடில் இலங்கைத் தூதரகங்களால் பரப்பப் பட்டது. தமிழ் மக்களையும் அவர்களின் போராட்டங்களையும் மாசுபடுத்த கொச்சைப் படுத்த பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்படியான வஞ்சகமான பிரச்சாரங்கள், தமிழ் மக்களை தமது போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து பலவீனப்படுத்தவில்லை. மாறாக, புலம்பெயர் தமிழர்கள் தவறான பிரச்சாரத்துக்கு இடத் கொடாது தலைமைத்துவத்துடன் ஒன்றித்து புரிந்துணர்வுடனும் தோழமையுடனும் ஒத்துழைக்கின்றனர். தலைமைத்துவமும் பெலம் குன்றாது தன்னைப் பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையில் வளர்ந்து வருகின்றது. எதிரியின் பொய் பிரசாரம் விடுதலைப் புலிகள் அனைத்து மக்களாலும், ஏன் மக்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும், ஏக பிரதிநிதிகளாக மாறுவதற்கு வழி செய்துள்ளது.

14. இராணுவ வெற்றிகளில்; மிதமிஞ்சி பெருமிதங் கொள்ளாத தலைமைத்துவம்

சிங்களப் பெரும்பான்மையும் அதன் அரசுகளும், வடகிழக்குத் தமிழ் மக்களின் உண்மையான நிலையை ஏற்றுக் கொள்வதில் காட்டுகின்ற பிடிவாதமும், புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளக் காட்டுகின்ற நீடித்த அரக்கத்தனமும் யுத்தத்தை விஸ்தரிக்கச் செய்தது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா ||இந்த யுத்தத்தை எவராலும் வெற்றிகொள்ள முடியாது|| என்று பல தடவை சிங்கள மக்களுக்கு கூறியிருப்பினும், அவர்களுள் பலர் உயிருக்கும் சொத்துகளுக்கும் ஏற்படுகின்ற அழிவை கவனத்திற் கொள்ளாது, தங்களுக்கே வெற்றி வேண்டுமென்ற தாகத்துடன் போர் வேண்டுமென்று இன்னும் கூச்சல் இடுகின்றனர்.

பெரும்பான்மையானோர் யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புகளால் கோபம் கொண்டவர்களாக, யுத்தத்தின் வெற்றிகளால் தங்களுடைய பெருமையை நிலைநாட்ட முடியும் என்று நம்புகின்றார்கள். புலிப்பாச்சல் என்று பெயரிடப்பட்ட புலிகளின் இராணுவ நடவடிக்கையால் அரசாங்கப் படைகள் அவமானமிக்க தோல்வியைத் தழுவிக்கொண்டதும், இலங்கை அரசு தற்காலிகமாகத்தான் விழித்துக் கொண்டது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இறந்த சிங.கள இராணுவத்தினரின் உடல்கள் பொலித்தின் உறைகளில் தென்பகுதிக்கு அனுப்பப்பட்டாலும், அதிகார ஆசை உடையவர்களின் மனதில் அது எந்தவித நீடித்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகள் இராணுவ வெற்றியைத் தமதாக்கிக் கொண்டாலும் பெருமையடையாமல் பெருந்தன்மையுடன் ஒருபக்க சார்பாக யுத்த தமது நிறுத்தத்தை அறிவித்தார்கள். அப்படியிருந்தும் அரசாங்கம் கர்;வமாக அதை நிராகரித்தது. அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்கள் விடுதலைப் புலிகளால் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. புலிகளின் இச்செயல் சிங்கள இராணுவம் தமது எதிரிகளாக இருந்தாலும் தமிழர் தலைமைத்துவம் எவ்வளவு மரியாதையுடன் போரில் வீழ்ந்தவர்களை மதிக்கின்றது என்பதற்கு ஒரு சான்று. கோப்பாயில் 5000 மாவீரார்களுடைய கல்லறையை கனரக வாகனங்களால் தரைமட்டமாக்கிய சிங்கள இராணுவம் தனது சீர்கெட்ட அநாகரிக செயலையிட்டு வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிகழ்வு இது.

15. தூய்மையான ஜனநாயகமே தமிழரின் குறிக்கோள்

அண்மையில் புதியரக ஜனநாயகத் தேர்தல் ஒன்றை தமிழ் மக்கள் தென்னிலங்கையிலும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்குப் பகுதியிலும் கண்டுள்ளார்கள். சுpல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற வயம்பா தேர்தல்களில் சிங்கள அரசியல் கட்சிகள் வெட்கித் தலைகுனியக் கூடிய ஊழல்கள் நிறைந்த தேர்தலொன்றை நடத்தினார்கள். இருந்தும் அக்கட்சிகளும் அரசாங்கமும் அதற்கு ஈடு செய்வதற்கு எந்த சீர் திருத்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் மக்கள் வெளிநாடுகளைப் போன்று ஜனநாயகத்தை உயர்வாகவும் மதிப்புடனும் பார்க்கின்றார்கள். ஆனால் சிறிலங்கா அரசு கொண்டுள்ள ஜனநாயகத்தால் ஏற்பட்ட கொடூரமான அனுபவங்களுக்குப் பின்பு தமிழர் தலைமைத்துவம் அத்தகைய ஜனநாயகத்தை அரவணைக்க தயங்குகின்றனர்.

இலங்கையில் சிங்கள பெரும்பான்மை ஜனநாயகத் தேர்தல்கள், அதிகாரவர்க்கம், நீதித் துறைகள், இராணுவக் கட்டமைப்பு, காவல்துறை -இவற்றால் தமிழ் மக்கள் பெரிதாக பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதன் விளைவால் அவசரப்பட்டு இலங்கைப் பெரும்பான்மை ஜனநாயகத்தை தமதாக்கிக் கொள்ள தமிழர் தரப்பு ஆயத்தமில்லை. சிங்கள சமூகம் தங்களின் இந்த வித அதிகாரத்தை தமிழ் மக்களுக்குத் திணிக்க முன்வரக்கூடாது. முதலில் தென்பகுதி இப்படியான ஊழல்களிலிருந்து விடுதலை பெறட்டும். அப்போது தமிழர்களாகிய நாங்கள் எம் விடுதலைக்காக எப்படி ஓர் புதிய தலைமைத்துவத்திற்கு தள்ளப் பட்டோம் என்பதை மனதில் வைத்து, புதிய தலைமைத்துவத்தோடு சேர்ந்து செல்கையில் தூய்மையான, திறமையான, ஊழலற்ற, அதிகாரவர்க்கமற்ற நிர்வாகத்துக்குள் எங்களைக் கொண்டுசெல்ல முடியும்.

16. ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் சாதகமான சூழலை உருவாக்குதல்.

தங்களுடைய சொந்த மண்ணில் மனித மாண்போடு, தமிழ் மக்கள் வாழத் தொடங்க உயர்ந்த ஜனநாயகமும்;, மனித உரிமை மதிப்பீடுகளும் இயல்பாகவே தோன்றும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளான பாதுகாப்பு, உணவு, உடை, உறைவிடம் இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சிக்கலான நிரந்தரத் தீர்வைப்பற்றி பேச அரசு விரும்புவது வேடிக்கையானது. ஆகையதல் இவற்றிற்கு தமிழ் மக்கள் ஆயத்தமில்லை. போரின் பயமுறுத்தல் எம்மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்க, வயிறார உணவின்றி வாட முடிவுறாத அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் ஈடுபட ஆயத்தமாக இல்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு புதிய தலைமைத்துவத்துடன் ஒத்துழைக்க வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை யும் மனித உரிமைகளையும் நிலை நாட்ட தமிழ் தலைமைத்துவத்தோடு ஒத்துழைக்க வேண்டும். ஆகையால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப மட்டும் அரசு சாக்குப் போக்குகளைச் சொல்லாது விடுதலைப் புலிகளோடு பேசியே ஆக வேண்டும். அரசாங்கம் ஜனநாயத்தையும் மனித உரிமைகளையும் தான் பேணாமல், விடுதலைப் புலிகளுக்குப் அதைப்பற்றிப் போதிப்பதில் பயனில்லை.

17. தமிழர்கள் பொய்யான தலைவர்களை நிராகரிக்கிறார்கள்

வடகிழக்குத் தமிழ் மக்களால் தெளிவாக முன்னிலைப்படுத்தப்பட்ட புலிகளின் தலைமைத்துவத்தோடு ஒன்றும் செய்ய முடியாத நிலையில், சிங்களத் தலைவர்கள் புலிகளை ஓரங்கட்டவும், இன்னும் பொய்யான தமிழர் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தைகளை செய்யவும் எத்தனிக்கின்றனர். பல சிங்களவர்கள் புலிகளை பலவீனப்படுத்தி அல்லது பிளவுபடுத்தி, போலியான தமிழர் தரப்புகளோடு தங்களது அரசியல் வியாபாரத்தை வைத்துக் கொள்ளலாமென கனவுகாண்கின்றனர்.

சில தமிழ் குழுக்கள் ஆரம்பத்தில் தீவிரவாதிகளாக இருந்தாலும் அண்மைக் காலங்களில் ஆயுதம் தாங்கிய அரசியல்வாதிகளாக அரசுக்கு ஆதரவாளர்களாகவும், தமிழர் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகவும் வலம் வருகின்றார்கள். அரசின் பணத்தோடும்;, இராணுவத்தின் துணையோடும், சில ஆதரவாளர்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு பின்கதவால் நாடாளுமன்றுள் நுழைந்தவர்கள், இன்று தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காவிட்டாலும் அரசு அவர்களை ஜனநாயகத் தமிழர் என முத்திரை குத்தி சர்வ தேசத்திற்கு அவர்கள் தான் உண்மையான ஜனநாயக தமிழ் தலைவர்களென காட்ட முயற்சிக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மைச் சமூகமும் அவர்களின் அரசியற் கட்சிகளும், தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதிகளின் போராட்டமாக கொச்சைப் படுத்தி அதற்கெதிராக பன்னாட்டு பணம் ஆயதம் உதவிகளையும் கோருகின்றார்கள்.

தமிழர்களின் புதிய தலைமைத்துவம் தன்னுடைய இராணுவ ஆற்றலை வெளிப்படுத்தியதற்குப்பின் தன்னுடைய அரசியல சாதுரியத்தையும் அரசியல் தீர்வுக்கான ஆயத்த நிலையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இன வாதத்தாலும் பிரபுத்துவ வாதத்தாலும் உள்வாங்கப்பட்ட சிங்கள அரசியல் தலைமைப் பீடங்கள இன்று சர்வதேச அரங்கில் சேபதிக்கப் படுகின்றனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை ஜனநாயக ரீதியாக, நீதியான முறையில்; தீர்ப்பார்களா என்பதன் மூலம் தங்களின் இராஜ நிர்வாகத் திறமையை உலகத்துக்கு முன்னால் நிரூபிக்க வேண்டிய நிற்பந்தம் நெருங்கிக் கொண்டு வருகின்றது.

18. மக்களின் இலட்சிய உறுதியில் வேரூன்றிய தலைமைத்துவம்

அரச பயங்கரவாதத்தை ஆயுதம் கொண்டு எதிர்ப்பதும், மக்களிடையே விடுதலைக்குரிய அரசியல் வேட்கைகளை பலப்படுத்துவம் விடுதலைப் புலிகளின் தலைக்கடன் ஆயிற்று. தங்களுடைய இராணுவ வெற்றிகளின் ஊடாக ஊதியத்துக்காகப் போராடுகின்ற அரச படைகளுக்கும் ஒரு கொள்கையோடு போராடிய விடுதலை வீரர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருக்கி;றார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி கூறுவது - எங்களின் பலம் நாங்கள் வைத்திருக்கும் ஆயதங்களிலும் மேலாக நாங்கள் பெற்ற இராணுவ வெற்றிகளிலும் மேலாக எமமில் வேரூன்றியிருக்கும் ஆழமான இலட்சிய உறுதியே. இவ்வுறுதி நிலைப்பாடு அரச படைகளது இரும்புப் பிடியினால் ஏற்பட்ட துன்பங்களின் நிமித்தம் மக்களிடையே ஆழமாக வளர்ந்து விட்டது.

விடுதலைக்காக போராடுகின்ற மக்களை இராணுவப் பலம் கொண்டு அடக்க முடியாது என்பதை உணர சிறிலங்கா அரசுக்கு நீண்ட காலம் எடுத்தது. விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தில் குழப்பமேற்பட்டு அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்றும், அண்மையில் இடம்பெற்ற கிழக்குப் பிரதேச பிரச்சினைகளில், கருணாவால் ஏற்படுத்தப்பட்ட பிளவால் குழம்பிவிடுவார்கள் என்றும், அந்நிய, ஏகாதிபத்திய சக்திகள் ஊடாக விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்றும் பல கனவுகள் இன்றும் இன்னமும் பல சிங்கள மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் தமிழ் மக்களின் இலட்சிய உறுதியை எந்த இராணுவ பலமும் அழிக்க முடியாது.

19. நாடாளுமன்றத்தினுள்ளும் குரல் கொடுக்க வல்ல தமிழ் தலைமைத்துவம்

விடுதலைப் புலிகள் பெரும் பான்மை சிங்கள ஜனநாயக முறையிலான நாடாளுமன்றில் நம்பிக்கை வைத்தவர்கள் அல்ல. பெரும்பான்மை சிங்கள ஜனநாயகம் சிங்களவர்கள் அல்லாதவர்களின் உரிமைகளை பாழடிக்கச் செய்திருக்கின்றன. சிங்கள பெரும்பான்மை ஜனநாயத்தால் நிறைவேற்றப்படுகின்ற அரசியற் கோட்பாடுகள் சட்டங்கள் தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெற்றிருக்கவில்லை. எனினும் ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் இலங்கைக்கும் சர்வ தேசத்துக்கும் வழங்கக்கூடிய செய்தியை அவர்களின் ஜனநாயக மொழியில் கொடுப்பதற்கு ஒரு வழி தேடினர்.

ஆகையினால் கடந்த தேர்தலை உபயோகித்து ஒரு செய்தியை விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைக்கும் சர்வ தேசத்திற்கும் சொல்லி நின்றது. இதற்காக 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே தன் சார்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தையும் அதற்கான ஆதரவையும் வெளிப்படுத்தி நின்றது. இத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பினது அமோக வெற்றி, விடுதலைப் புலிகளின் தலைமையின் சக்தியை தமிழ் மக்கள் மத்தியிலும் உலகத்திற்கும் வெளிப்படுத்தி நின்றது. தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் வெற்றிவாகையோடு தங்களது வாக்குரிமையை அளித்து விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றனர். விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளென அகிலமெங்கும் பறைசாற்றி நின்றார்கள்.

விடுதலைப் புலிகள் அடித்தளத்திலிருந்து, மக்கள் மத்தியில் இருந்து மேலெழுந்து தங்களுடைய கொள்கைகளில் உறுதியாக நின்று அதைப் பலப்படுத்தி அக் கொள்கைக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடினார்கள்.

அன்று 1976 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பிரிந்து தனித் தமிழ் நாடு கோருவதே ஒரே வழி என்று அமோகமாக வாக்களித்தனர். இம் முடிவை செயல் படுத்த ஒரு சிலர் தொடர்ந்தும் பாராளுமன்றப் பாதையில் சென்றனர். தோல்விக்கு மேல் தோல்வி கண்டனர். விரக்தியின் எல்லைக்குத் தள்ளப் பட்டனர். மாறாக இளைஞர்கள் ஆயதம் ஏந்தி இலட்சிய பாதையில் சென்றனர். உயிர்ப் பலி கொடுத்து இலட்சியத்தைப் பெலப்படுத்தி ஆயத பலத்தையும் நிரூபித்தனர். 30 வருடங்களின் பின் அரசியல் இலட்சிய இராணுவ வழிகள் இணைந்து ஒரு உயரிய குறிக்கோளுக்காக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பயணிக்கின்றது. இத் தனிப் பெரும் தலைமைத்துவத்தின் குரல் தான் இன்று வன்னியிலும் இலங்கை நாடாளுமன்றினுள்ளும் ஒலிக்கிறது.

20. தமிழ்த் தேசியத்தின் தனிப்பெரும் தலைமைத்துவத்தை நிர்மாணித்த தலைவரை நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கடந்த 55 வருடங்களாக பல எல்லைகளையும் எதிர்ப்புகளையும் கடந்திருக்கின்றது. ஓh மக்களின் விடுதலைக்கு உண்மையான அர்த்தத்தை ஊட்டி, அதேவேளையில் தீய சக்திகளான பல்வேறு அடக்குமுறையாளர்களையும் அடையாளம்காண வைத்துள்ளது. உண்மையான விடுதலைக்கு மக்கள் வாழ்வாலும் சொத்து அழிவாலும் விலை கொடுக்க வேண்டும் என்ற நிலையை நிரூபித்துள்ளது. அழிவின் சக்திகளாக செயல்படும் அடக்குமுறை நாடுகளையும் அரசுகளையும் அடையாளம் காட்டத் தவறியதில்லை. இந்த உண்மைகள் புதிய தமிழ்த் தேசத்தால் உள்வாங்கப்பட்டு எம் தமிழ்த் தேசியத்தின் நித்திய நினைவுகளில் பதியப்பட வேண்டியவை!!

தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home