Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > Velupillai Pirabaharan > திரு.பிரபாகரன் அவர்களின்
குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்

திரு.பிரபாகரன் அவர்களின்
குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்

Selvarathi
20 February 2004

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.

வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.

பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.

தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.

தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்.

ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home