"To us all towns
are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Struggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam > A liberation struggle draws its strength from the determination of its people
Liberation Tigers of Tamil Eelam A liberation struggle draws its strength from the determination of its people Nilavaram, 6 January 2009
|
இவ்வாறான செய்திகளை உண்மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் கருத்தரங்கொன்றில் தமிழ்மகன் ஒருவர் எழுப்பியிருந்த கேள்வி உண்மையில் எமது மக்களுக்குள் சிங்களப் பேரினவாத்தின் பரப்புரை எவ்வளவு தூரம் அவர்களைக் குழப்பியுள்ளது என்பதை உணர முடிந்தது. கேள்வி நேரத்தின் போது அவர் எழுப்பிய கேள்வியானது வன்னிக்குள் இருந்து கொண்டு புலிகள் இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்பது தான் அவரது இந்த கேள்வியில் நியாயத்தன்மைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையாயினும் அவரது கேள்விகள் பலரிடம் இதே ஆதங்கங்கள் இருந்ததை உணர முடிந்தது. இந்த நிலையில் எரிமலையின் பெருநிலமாய் பெரும் வரலாறு படைத்த வன்னிப் பெருநிலப்பரப்பின் வரலாற்றை ஒருமுறை மீளாய்வு செய்தல் பொருத்தமாய் இருக்குமென்று கருதுகின்றேன். விடுதலைப் புலிகள் காடுகளுக்குள் துரத்தப்படுத்தப்பட்டு விட்டார்கள் நகரங்களில் இருந்து மட்டுமல்ல காடுகளுக்குள் வைத்தும் விடுதலைப் புலிகள் துரத்தப்பட்டுக் கொண்டே இருப்பதாக சிங்களம் கூறிக் கொண்டிக்கையில் இன்னொரு பக்கத்தில் மாவிலாறில் தொடங்கிய இராணுவ முன்னகர்வு நில ஆக்கிரமிப்பாகத் தொடங்கி ஈற்றில் வன்னி மீதான முற்றுகையூடாக தமிழ் மக்களின் தொடர்பை தாம் புலிகளிடமிருந்து பிரித்து விட்டதாகவும் எமது போராட்டத்தை தாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் மார்தட்டியவாறு சிங்கள மக்களை ஏமாற்றியது சிறிலங்கா பேரினவாதம். தொடரும் போரில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவர் என அவர்கள் சூழுரைத்தார்கள். விடுதலைப் புலிகளின் இறுதிமூச்சை எடுப்பதற்கான காலகெடுக்களை கூட அவர்கள் நிர்ணயித்திருந்தார்கள். பிரபாகரன் தங்கள் காலடியில் சரணாகதி அடையும் காலம் நெருங்கி விட்டதாகவே உலகத்திற்குச் சொல்லி உலகத்தின் வன்முறைமிக்க இராணுவத் தலைமைகளை வன்னிப் பெருநிலப்பரப்பின் எல்லைகளுக்கு வந்து அவர்களை நம்ப வைத்தார்கள். இவற்றை எல்லாம் ஒரு எல்லை வரை மட்டுமே நம்ப முடியும் என்கின்ற ஒரு செய்தியை விடுதலைப் புலிகள் தமது தயார்ப்படுத்தல் ஊடான வலிந்த சமர் தளங்களின் மூலம் இன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைநாட்டி வருகின்றனர். ஆனாலும் வீழ்ந்து விடுவார்கள் என காத்திருந்த எம்மினம் நிமிர்ந்து நிற்பது எல்லோரும் ஆச்சரியப்படும் படியாய் எம் எல்லோருக்கும் இப்படி ஒரு நிமிர்வு எப்படி வந்தது. அது தான் விடுதலைப் புலிகளின் போர்முறை. மற்றவர்களின் துணையின்றி எழுந்து நடக்கவே முடியாதென்பதே நியதியாகிப் போன இவ்வுலகில் நின்று எங்களுக்கு என்று எவருமே இல்லாது நின்ற மக்கள் நாம் எப்படி நிமிர்ந்து கொண்டோம். விடை மிகவும் சாதாரணமானது. உறுதிகொண்ட எங்கள் தலைவனின் அருகிருந்து எம்மினத்தை நிமிர வைத்த அந்த மாபெரும் சக்தி எது? வன்னி மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த வன்னி. அது தான் அந்த மாபெரும் சக்தியை எமது விடுதலைப் போருக்கு தந்தது. இந்த வரலாற்றின் போரின் அதிஉச்சமான வரலாற்றுக் கட்டம் வன்னியில் தான் நிகழப் போகின்றது. தமிழீழத்தின் அனைத்து பிரதேச மக்களினதும் தலைமையாக நிற்கும் வன்னி தான் தன் சுமையை தோள்களில் தாங்கி ஒரு வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்தப் போகின்றது. தன் வரலாற்றைப் பறிகொடுத்து வெறும் கையாய் நின்ற எம்மினத்திற்கு உலக வரலாற்றில் அதிஉன்னதமான அத்தியாயங்களை பெற்றுக் கொடுத்த போரின் சுமைகளை வன்னி மக்கள் தான் தம் தோள்களில் சுமந்து கொண்டார்கள். அப்படி ஒரு நிமிர்விற்காய் எமது மக்கள் இரத்தக் கண்ணீர் வடித்த நாட்கள் நினைவுகளுக்கு எவ்வளவு கடினமானவை. எங்கள் மக்களை எதிரி என்றைக்குமே விடுதலைப் புலிகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. மக்களிடமிருந்து புலிகளை வேறுபடுத்தி தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் நின்று கொண்டு மக்களையும் புலிகளையும் ஒன்றாகவே உலகிலிருந்து தனிமைப்படுத்த முனைந்தார்களேயன்றி வேறெதையும் அவர்கள் செய்யவில்லை. செய்ய நினைக்கவும் இல்லை. அதுவும் வன்னியில் வாழும் அத்தனை மக்களையும் அது முழுப் புலிகளாகவே பார்த்தது. பார்த்தும் வருகின்றது. அதனால் தான் சிங்களப் பேரினவாத்தின் ஒவ்வொரு செயல்பாடும் அதையே சுட்டி நிற்கின்றன. உதாரணமாக இரண்டாம் மூன்றாம் ஈழப்போரின் காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட இராணுவ தோல்வி ஒன்றிற்காக ஒரு கிராமத்தின் மக்கள் மீது குண்டு வீசி சிறுவர்களையும் வயோதிபர்களையும் கொன்று குவித்த போது உண்மையினை வெளியிட்ட சர்வதேச தொண்டு நிறுவனத்திற்கு உங்களுக்கு மலேரியாவைத் தடுப்பதுவும் நுளம்புகளையும் பூச்சிகளையும் ஒழிப்பதுவும் தான் இங்கு வேலை. அதை மட்டும் பார்த்துக் கொண்டிருங்கள் என சிறிலங்கா அரசு மிரட்டல் விடுத்திருந்தது. உணவுப் பொருட்கள் தடுக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணத்தையும் சிறிலங்கா அரசு தடுத்த வேளை உலகமெங்கும் சேவை புரியும் மனித உரிமை அமைப்பிடம் உதவி கேட்ட போது உங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு எமக்கு இங்கு அனுமதியில்லை என தன் இயலாமையை இன்று சொல்வது போல் அன்றும் இதே உதவி நிறுவனங்கள் செய்தன. இது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாக இருக்கும் போது இவை இரண்டையும் வைத்து மட்டும் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ளுவோமேயானால் ஒரு கொடிய வாழ்வியல் மறுப்புக்குள் நின்று தான் வன்னி மக்கள் தமது போராட்ட பழுவைப் சுமந்தார்கள். சுமக்கின்றார்கள். உலகம் எங்கும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தமது சுதந்திர தேசத்திற்காக போராடிய மக்கள் புரிந்த அர்ப்பணிப்புக்கள் புனிதம் வாய்ந்தவை. சோவியற் மக்கள் லெனில் கார்டிலும் ஸ்டாலிங் கார்டிலும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போதும் வெளிப்படுத்திய உறுதி கடந்த நூற்றாண்டில் உலக வரலாற்றின் சாதனையாக பெருமிதத்துடன் பேசப்பட்டது. கோடாளிகள் கத்திகளுடன் மக்கள் போர்க்களம் சென்றதும் உண்ண உணவின்றி பட்டினியால் வாடிய மக்கள் தமக்கு கிடைத்த சொற்ப உணவையும் சேதம் காக்கும் தம் வீரர்களுக்காய் அனுப்பி வைத்துவிட்டு பசித்திருந்து காத்திருந்ததவும் தமது நகரை எதிரி வீழ்:த்தும் வேளை வந்தால் தமது வீடுகள் கடைகள், கோவில்கள் எல்லாவற்றையும் தமது கைகளாலேயே அழித்து விட தயாராய் வெடிமருந்துகளைப் பொருத்தி விட்டு காத்திருந்ததவும் 60-65 வயது நிரம்பியவர்கள் கூட தற்காப்புப் போர் பயிற்சியை களமுனையில் பெற்றுக் கொண்டதுவும் மனித உணர்வுகளை உலுக்கி எடுக்கும் வரலாறாயின. இங்கு தான் குறும் தேசியவாதம் பேசும் சிந்தனாவாதிகளின் கருத்துக்கள் பொய்ப்பித்துப் போயிருக்கின்றன. உதாரணமாய் 60 வயது மூதாட்டி கையில் தடியுடன் நிற்பதை காட்சிப் படுத்துவதும் யுத்தமுனையில் நிற்கும் மக்கள் புலிகளுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்பதும் வரம்பு மீறின செயல் என பிரச்சாரப்படுத்தும் இந்த குறுந்தேசிய வாதிகள் பன்முகப்பரிமாணத்தில் தோற்றப்பாட்டில் இருக்கும் சிந்தாந்த தேசிய கோட்பாட்டு முறைமையினை ஏற்க மறுப்பதுவும் நிராகரிப்பதுவும் மன வேதனை அளிக்கின்றது. வல்லரசுகளின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்ட வியட்நாம் மக்கள் வயது வேறுபாடின்றி எல்லோருமே ஆயுதமேந்தி பெரும் சக்தியாய் ஒன்று திரண்டு போரிட்டதுவும் கொடிய பட்டினியால் வதங்கிய போதெல்லாம் தமது விடுதலை ஒன்றையே இலக்காக்கி எரித்திரிய மக்கள் பணியாது போரிட்டதுவும் அடக்குமுறையாளர்களை எதிர்த்து போராட வழியின்றி தவித்த பாலஸ்தீன சிறுவர்களும் பெரியவர்களும் தாமே கிளர்ந்தெழுந்து கற்களால் எறிந்தே எதிரியைக் கலங்க வைத்ததுவும் விடுதலைக்காகப் போராடிய எல்லா மக்களையுமே பெருமைக் கொள்ள வைத்தன. வன்னியில் எமது மக்களை அவர்களின் வாழ்வியல் சக்தியிடமிருந்து பிரித்தெடுப்பதற்காய் எத்தனை தந்திரங்களையெல்லாம் சிங்களப் பேரினவாதம் கையாண்டவை என்பதை எமது மக்கள் ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும். கொடுமைகளால் மட்டுமே பணிய வைக்கும் தோல்வி கண்ட அந்நிய தந்திரோபாயத்திற்குப் பதிலாய் கவர்ச்சிகரமான சலுகைகளையும் துணையாகக் கொண்ட புதிய தந்திரத்தால் பணிய வைக்க முயல்வதுவும் ஒரு காட்சியாகவே வருகின்றது. துன்பங்களாலும் வேதனைகளாலும் நிரம்பிய முற்றுகையை வன்னியில் மக்கள் மீது ஏற்படுத்தி மறுபுறம் வவுனியாவில் வசதியான வாழ்வு எனும் சலுகையைக் காட்டி எதிரி எம்மக்களின் ஆத்ம திடத்தின் மீது போர் தொடுக்கின்றான். மீன் பொரியலின் ஈர்ந்தெடுக்கும் வாசனையின் பின்னால் எதிரி ஒளித்து வைத்த பொறியை எம்மக்கள் நன்றாகவே இனங்கண்டு கொண்டு எதிரியையும் அவன் சார்ந்தவர்களையும் வெட்டி தலைகுனிய வைத்தார்கள். கொடிய இயற்கையின் அனர்த்தம் விசஜந்துக்களின் வாசனை, தொடர்ந்து வரும் துயரம் கொடுமைமிக்க நோய் என்று எல்லாம் சூழ்ந்துள்ள போதிலும் எமது விடுதலைபமு பயணத்தை தம் தோள்களில் சுமந்து வன்னி மக்கள் காவிச் செல்ல வேண்டிய ஒரு வரலாற்றுக்குள் தள்ளப்பட்டார்கள். உறுதிமிக்க மக்களின் உன்னத லட்சியத்தை சிதைத்து சின்னாபின்னமாக்க எதிரி தன் வலையை மேலும் மேலும் இறுக்கிபடியே செல்கின்றான். மூன்றாம் கட்ட ஈழப்போர் தந்த வரலாற்றுப் பாடங்கள் இந்த இடத்தில் நினைவு கூர வைக்கின்றது. ஜயசிக்குறு என்னும் பெயரில் எதிரி பெரும்படையெடுப்பு செய்த காலங்கள் வன்னி மக்களின் வாழ்வாதாரமாய் எஞ்சி நின்ற கானகத்து நகரங்களை ஒவ்வொன்றாய் விழுங்கியபடி எதிரியின் வெற்றி உறுதி நீண்டே சென்றது. இறுதி நம்பிக்கையாய் நின்ற வன்னி மண்ணை எதிரி முழமையாய் விழுங்கிடாத படி போராளிகள் களமாடினர். அண்ணன் அக்காள் தம்பி தங்கை மைத்துனன் சித்தி சித்தப்பா என ஒரே உறவுகள் தம் தேசத்துக்காய் போராடுவதென புறப்பட்டு வந்தார்கள். அந்த காலப் பகுதியில் வன்னி பட்ட துன்பதுயரங்கள் எழுதி மாளாதவை. அது ஒவ்வொரு பின்னகர்வின் பின்னாலும் தமது மக்கள் சுமக்கப் போகும் வேதனையை எண்ணி ஒவ்வொரு புலி வீரனும் களமாடினான், கண்ணீர் விட்டான். கரும்புலியாகினான். அத்தோடு உயர்ந்த இலட்சியத்துக்காய் உறுதியும் பெற்றான். இத்தனைக்கும் மத்தியிலும் நிவாரண வெட்டு மக்கள் அவதி என செய்தி கூறும் பத்திரிகை தாள்களில் சுற்றியபடியே மக்கள் தமது வயிற்றையும் வாயையும் கட்டி அனுப்பி வைக்கும் உலர் உணவுகளை உண்ணும் போதும் அவற்றுள் முகம் தெரியாத தம் மைந்தர்களிடம் சுகம் விசாரித்து அவர்கள் அனுப்பி வைக்கும் கடிதங்களை வாசிக்கும் போதும் ஒவ்வொரு புலிவீரனும் தன் மக்களை எண்ணி பெருமிதம் அடைந்தான். எதிரி மாங்குளத்தின் முன்னாள் உறுதியாக மறிக்கப்பட்டிருந்தான். கனகராஜன் குளம், ஊடறுப்புச் சமரால் புதுஏறி நின்றது. எதிரியினுடைய வெற்றி உறுதியற்று தள்ளாடிக் கொண்டிருந்தது. அந்த நாட்கள் நீட்சி பெற்று வருடமாய் மாறியது. தேசத்தைக் காக்கும் அந்த உயரிய போர்க்களத்தின் காவலரண்களுக்குள்ளேயே தம் வாழ்வின் ஒரு வயதை கழித்தார்கள். புலிவீரர்கள். எம் சகோதரியைக் காணத் தவித்த தாயின் முகத்தைப் பார்த்து தம்பி வந்து சொல்லி வரிகள் என் செவிகளுக்குள் இன்னமும் பேசிக் கொண்டே இருக்கின்றது. அம்மா உன் மகள் காவலரணில் நின்றாள் நான் பார்த்தேன் என் தாய் ஆனந்தக் கண்ணீர் கொண்டாள். தலைவனுக்குத் துணையாய் அவள் போர்க்களம் புகுந்தாள் என்ற செய்தி என் தாயை பெரிமிதம் அடைய வைத்தது. இப்படி பல தாய்கள் மனதிற்குச் சுகம் தரும் அந்த யுத்தக்களத்திற்கு போராளிகளை அரவணைக்கும் ஆசை கொண்டு மக்களெல்லாம் எழுச்சிக் கொண்டு அணி திரண்டு வருவதாய் செய்தி வந்தது. அதை அறிந்ததும் களத்தில் எம் சகோதர்களும் சகோதரிகளும் அடைந்த ஆனந்தம் எல்லையற்றது என்பதை உள்ளிருந்து ஒரு குரலாய் என் சகோதரி எனக்கு எழுதியதிலிருந்து அறிந்து கொண்டேன். ஆனாலும் அந்தக் கொடிய களம் அன்று எம் உறவுகளின் சங்கமத்தை தடுத்தது. போராளிகளை அந்தக் காவலரண்களிலிருந்து அசைய விடாதபடி எல்லா முனைகளிலும் எதிரி மூர்க்கமாகத் தாக்கினான். உயிராபத்துகள் ஏற்படக் கூடாது என்ற ஆதங்கத்தில் அணிதிரண்டு வந்த மக்களை எல்லாம் முறிகண்டியில் வைத்தே மறிக்க வேண்டியதாயிற்று. தம் காவல் தெய்வங்களை ஒரு பொழுது கூட பார்க்க முடியாது. பாவப்பட்ட மக்களாய் எமது உறவுகள் திரும்பின. அந்த நாள் எம்மக்களிடையேயும் போராளிகளிடையேயும் ஏற்படுத்திய சோகத்தின் சுமையை உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால் என்றும் அவை மீள்தரிசனம் செய்து கொள்ளுங்கள். இந்தப் புலிகள் ஒன்று தான் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வுக்குள் விழிப்பையும் தெளிவையும் ஏற்படுத்தும். காரணம் வன்னி மக்கள் தம் புதல்வர்களிடம் அன்று வெளிப்படுத்திய நேசமும் பாசமும் எமது போராட்டத்தை ஆயிரம் மடங்குகள் உறுதியாக்கிற்று. அந்த வரலாறு தான் இன்றும் வன்னிக் களமுனையில் பதிவாக தொடர்கின்றது. சிறிது காலத்திற்குள் வன்னிப் பெருநிலப்பரப்பின் வரலாறு போர்க்களம் மேலும் விரிவு கண்டது. தோல்வி உறுதியாகத் தெரிவதை உணர்ந்த எதிரி புதிய போர் வியூகங்களை வகுத்தான். வன்னியின் எல்லாத் திசைகளும் எதிரியின் இலக்குகளாயின. எமது போராட்டம் இன்று போல் அன்றும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஒவ்வொரு போராளியும் தன் சக்திக்கு மீறியதாய் பலமடங்கு சுமைகளை சுமந்து கொண்டான். தன் புதிய மூலோபாயத்தால் இனியும் தாக்கிப் பிடிக்க முடியாதென எதிரி புதிய நம்பிக்கை கொள்ளலானான். வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பலம் பரப்பப்பட்ட நிலையில் அடுத்தக் கட்டம் நோக்கிய எமது வரலாறு ஏக்கத்துடன் காத்திருந்த காலகட்டம் அது. அப்போது தான் எதிரியின் கொலை அச்சுறுத்தலையும் தாண்டி மக்கள் களம் நோக்கி வரத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களுடனும் களவேலைகள் செய்வதற்காகவும் எல்லா தரப்படுத்த எம்மக்களும் களம் வந்து போராளிகளின் சுமைகளை கண்டும் கேட்டும் அறிந்தும் கொண்டார்கள். களமுனைப் போராளிகளிடம் யுத்தக்களம் பற்றி தாங்களே அறிந்தும் கொண்டார்கள். இதுவே அன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் பிறப்பெடுத்த அந்த மாபெரும் சக்தியின் ஊற்றுக்கண்ணாய் அமைந்தது. எமது தாயகமாகிய தமிழீழத்தை வன்பறிப்பாளர்களிடமிருந்து எமது மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி உறுதி எடுத்துக் கொள்ளும் அந்த நிகழ்வுகள் எங்கும் நம்பிக்கை ஒளியாய் பரவத் தொடங்கியது. மக்களோடு புலிகளாய் இருந்தவர்கள் புலிகளோடு மக்களாய் ஆகி தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என எம்மக்கள் எழுப்பிய சங்கொலிகள் எங்கும் எல்லைகள் தாண்டி பெயர் அதிர்வுகளாய் எதிரொலித்த போது ஒவ்வொரு புலிவீரனும் தன் தோள்கள் பல்லாயிரம் மடங்கு வலிமை பெற்று விட்டதாய் வலுக்கொண்டவனாய் உணர்ந்து கொண்டான். அன்றிலிருந்து தான் எமது வரலாறு உரிய கட்டம் ஒன்றை நோக்கி நகரத் தொடங்கியது. விரைவிலேயே மக்கள் எல்லோரும் முதியவர்என்றும் இளையவர் என்றும் வேறுபாடுகள் இன்றி காவல் நிலைகளை நோக்கியே அணிவகுத்தார்கள். எம் வரலாறு சுமந்த தியாகி திலீபனின் இலட்சியப் பசி அடங்கும் நாளை அடைந்து விட்டதாய் களத்து மக்களும் புலத்து மக்களும் நன்கு உணர்ந்து கொண்டோம். அந்த நாளில் எமது வரலாறு தன் புதிய பக்கங்களை திறந்து கொண்டது. எதிரியால் மோசமாய் சுமத்தப்பட்ட குடும்பச் சுமைகளைச் சுமந்தபடி போராட்ட சுமைகளையும் முழுமையாய் சுமக்கத் தொடங்கினார்கள் எம் மக்கள் இறுதியில் அதுவும் அவர்கள் வாழ்வின் துர் அங்கமாகவே மாறிக் கொண்டது. நாளாந்தம் உழைத்து குடும்பம் நடத்தும் ஒரு குடும்பத் தலைவன் காவல் நிலைகளுக்கு வந்து போராளி சகோதரர்களின் சுமைகளை பகிர்ந்து கொண்ட கதைகள் முழுமையாய் இதில் எழுதி முடிக்கக் கூடியவை அல்ல. இது புலம்பெயர் வாழ்விலும் பொருந்தக்கூடியது. வீடு தட்டி காசு கேட்பதுவும் விடுதலைக்காய் ஆதரவு தேடுவதும் அரும்பணியாகி அள்ளி கொடுத்த எம் மக்களின் வரலாறும் வார்த்தைகள் விபரிக்கப்பட முடியாதவை. எமது பெண்கள் சமூக வாழ்விலும் களவாழ்விலும் மாறி மாறி ஈடுபடும் புதிய நிலையும் அவற்றால் எழும் சவால்களுக்கு எதிரான அவர்களின் தனியான போராட்டமும் தனியே எழுதப்பட வேண்டியவையே. எமது மக்களின் இத்தகைய எழுச்சியின் விளைவாய் ஓயாத அலை 3 என்ற பெரும் சமர் பிறப்பெடுத்தது. அதற்கான அடிப்படை வன்னி மக்களின் நேரடிக்கள பங்கேற்பாலும் மட்டக்களப்பு மக்களின் உன்னத லட்சிய தியாகப் பற்றாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உறுதிமிக்க பற்றுறதியாலும் அந்த பெரும் போர்க்களம் ஒரு வரலாற்றை தனதாக்கிக் கொண்டது. 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஈழத் தமிழனுக்கு பெருமை சேர்த்த ஒரு நாள். எங்கள் தேசியத்தின் பெரும் இமையம் விரல் காட்டிய திசையெல்லாம் எதிரி வீழ்த்தப்படுவதற்கான போர் முரசு ஒலிக்கத் தொடங்கியது. ஒட்டிசுட்டானில் தொடங்கி முதல் சமர்க்களம் வெற்றியுடன் தொடர்ந்த போது வில்வளைத்த வன்னி பெருநிலப்பரப்பு ஆர்ப்பரித்தது. ஒரு வரலாற்றில் காணமுடியாத போர்க்களம் குருசேத்திரம். இதை எமது மக்கள் ஒட்டிசுட்டானில் உண்மையாகவே கண்டார்கள். காவல் நிலைகளில் நின்ற எங்கள் எல்லைப்படை வீரர்கள் பொறுமையிழந்து அவர்கள் தடுத்து நின்ற எதிரிகளை தேடிச் சென்று களமாடி துரத்தியடிக்கும் ஆர்வம் அவர்களுக்கு எழுந்தது. தளபதி தீபனின் கட்டளையில் மாங்குளத்தின் புதிய முனை ஒன்று திறக்கப்பட்ட போது மூன்றுமுறிப்பில் நின்ற எல்லைப்படை வீரர்களெல்லாம் தாமும் சண்டையிடப் போவதாக ஆர்ப்பரித்தனர். அதனால் அக்களத்தில் அவர்களையும் தவிர்க்க முடியாது சண்டையில் களமிறக்கினான் தளபதி தீபன். பாதுகாப்பு நிலைகளில் எமது சுமைகளைப் பகிர்ந்து கொள்ள வந்த மக்கள் போராளிகளோடு இணைந்து வலிந்த தாக்குதல் களத்தில் முன்னேறிச் சென்றது எமது போரில் அடுத்த கட்டங்களில் ஏற்படுத்தப்போகும் பிரகாசமான மாற்றங்களுக்கு எதிரவுகூறி நின்றது. ஓயாத அலை 3இன் முதல் கட்டத்தில் எல்லைப்படை வீரர்கள் காட்டிய மூர்க்கமும் ஆர்வமும் அடுத்த கட்டங்களில் அவர்களுக்கென முக்கிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. சிறப்பு எல்லைப்படைத் தாக்குதல் அணிகள் எமது போராளிகளுடன் இணைந்து முக்கிய களங்களில் சண்டையிட்டனர். நவம்பர் 18ஆம் திகதி ஓயாத அலைகள் 3ன் இரண்டாம் கட்டத்தின் போது பெரிமடுவின் ஊடாக முனையில் லெப்.கேணல் றொபேட்டின் தலைமையில் ஜெயந்தன் படையணியுடன் மற்றைய முனையான பவளமடுவில் லெப்.கேணல் லக்ஸ்மன் தலைமையில் மாலதி மன்னார் தாக்குதல் அணிகளுடன் திறப்பு எல்லைப்படை அணிகள் சண்டையின் முன்னணி நடவடிக்கைளின் திறக்கப்பட்டன. வெற்றிகளைக் குவித்து தந்த அச்சமர்க்களத்தில் ஏனைய படையணிகளைப் போலவே எல்லைப்படை அணிகளும் தமக்குத் தரப்பட்ட பணிகளையெல்லாம் வெற்றிகரமாய் செய்து முடித்தன. அதுபோலவே ஓயாத அலை 3ன் 3வது கட்டத்திலும் எல்லைப்படையணியின் சிறப்புத் தாக்குதல் அணிக்கான முன்னணித் தாக்குதல் பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. லெப்.கேணல் றொபேட்டின் தலைமையில் ஜெயந்தன் அன்பரசி, படையணிகளுடன் இணைந்து அந்த சமரின் வெற்றிக்காய் எல்லாம் முனைகளிலும் அவர்கள் உழைத்தார்கள். இவ்வாறு முதிர்ச்சி நிலை நோக்கி பயணித்த வன்னி மக்களின் போர்ப்பங்களிப்பும் எழுச்சியும் மட்டக்களப்பு மக்களின் உயரிய அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் ஆனையிரவு பெருந்தள வீழ்ச்சிக்கான இறுதிக்கட்ட சமர்களில் காத்திரமான கட்டத்தை அடைந்தது. தமிழர் வரலாறு உள்ளவரை வாழப் போகும் அந்த புகழ்பூத்த சமரில் எமது மக்களின் பங்கு பிரித்துப் பார்க்க முடியாத படி இரண்டறக் கலந்து இருந்தது. எமது மக்கள் படை கட்டுமாணத்தில் மாணவர் படை கிராமியப்படை எல்லைப்படைகள் என எல்லாமே இச்சமருக்கான பணிகளில் பங்கெடுத்திருந்தனர். இன்று போல் அன்றும் நவீன வசதிகளும் சர்வதேச ஆதரவும் கொண்ட சிறிலங்கா அரசே ஆனையிறவில் சமரில் காயமடைந்த தன் வீரர்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பின்னணி வேலைகளை செய்ய முடியாது திணறிய போது வசதிகள் ஏதுமற்ற வன்னியில் எமது விடுதலைக்கான போர் அரங்குகளின் பின்கள வேலைகள் சிரமமின்றி செய்து முடிக்கப்பட்டமை எவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கப்படக் கூடியவை. அதுவும் களத்தில் காயமடைந்த எமது போராளிகளுக்கான அனைத்துப் பணிகளுடன் அவர்களைப் பராமரித்து பாதுகாப்பதில் எத்தகைய குறையுமின்றி எமது மக்கள் ஈடுபட்டார்கள். அவர்களை சிரமமின்றி களத்திலிருந்து நகர்த்துவதற்காக பாதைகளைச் சீரமைத்து இரத்த தானம் செய்து மருத்துவமனைகளுக்கு வந்து பராமரித்து அவர்களுக்கு தேவையான உணவுகள் தயாரித்து எமது மக்கள் செய்து உயரிய பணி எம் போராளிகளிடையேயும் புலம்பெயர்ந்த வாழ்வில் பணிபுரிந்து எம் இதயங்களுக்குள்ளும் ஆழமான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்களில் வன்னி மக்கள் முழுமையாகப் போர் பணிகளில் ஈடுபட்ட போது அவற்றை விட அந்த சமர்க்களங்களில் கடினமான களமொன்றில் எல்லைப்படையினரின் சிறப்பு அணிகள் அர்ப்பணிப்புடன் போராடிக் கொண்டிருந்தது. புலம்பெயர்ந்த மண்ணிலும் குளிரிலும் பனியிலும் குறைவின்றி உழைத்த எமது பணியாளர்களின் அர்ப்பணிப்பும் உறுதிப்பாடும் எமது விடுதலையை விரிவடையச் செய்தது. அந்த அர்ப்பணிப்பும் அந்த உயர்ந்த விசுவாசமும் இன்று எமக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கின்றது. உலக வரலாற்றிலேயே முக்கிய இடம்பிடித்த ஆனையிரவுச் சமரில் ஊடறுப்புச் சமரில் (இத்தாவில்) சிறப்பு எல்லைப்படை வீரர்களின் பங்கு வன்னி மக்களின் பெருமையின் சிகரமாய் அமைந்தது. சமருக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் சிறப்பு எல்லைப்படை வீரர்கள் தமது குடும்பங்களை நீண்ட எல்லையில் பிரிந்து வந்து உயர் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். எமது முன்னணி படையணிகளின் ஓரங்கமாகவே சிறப்பு எல்லைப்படையின் அணியும் இணைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தின் முன்னணிப் படையணியையே திணர வைத்து தோற்கடித்த அச்சமர்க்களத்தில சிறப்பு எல்லைப்படை வீரர்கள் களையாது சமரிட்டதுவும் அதற்காய் தமது உயிர்களை அர்ப்பணித்ததுவும் வரலாற்றில் சிறப்பான அம்சங்கள். ஆரம்பத்தில் எல்லைப்படை வீரனாய் களம் புகுந்து அச்சமர்க்களத்தில் முழுமையான போராளிகளாய் மாறியவர்களுள் எமது போராளிகளையே வழிநடத்தும் அணித்தலைவனாய் அக்களத்திலேயே செயல்பட்ட மாவீரன் கெப்டன் லொறன்சின் செயல்பாடுகள் இங்கு நினைவு கூரத்தக்கவை. இப்படித் தான் வன்னி மக்களின் முழுமையானப் போர் பணி வளர்ச்சிக் கண்டது. எல்லைப்படையணியில் சண்டை தேர்ச்சிமிக்க பல அணிகள் உருவாகின. எம்மால் திட்டமிடப்பட்ட சண்டைகள் மட்டுமல்லாது எதிரியால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படும் சண்டைகளை முறியடிப்பதிலும் சாதனைபடைக்கக் கூடிய தமது ஆற்றலை 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் நடந்த கடுமையான பாதுகாப்புச் சமர் அரங்கு ஒன்றில் நிரூபித்திருந்தனர். அன்று அதிகாலை 5.10 மணியளவில் சிவிகிரண என்ற பெயர் சூட்டி புதிதாய் கொள்வனவு செய்த நவீன விமானங்கள் பீரங்கிகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி வடதமிழ் ஈழத்தின் பகுதிகளில் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை எதிரி முன்னெடுத்தான். இறுதியில் 250க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 1000க்கு மேற்பட்ட இராணுவத்தினர் காயப்பட்டும் எதிரிக்குப் பல தோல்வியைக் கொடுத்த அந்த நடவடிக்கையின் முறியடிப்புக்கு தலைமை தாங்கிய தளபதி கேணல் சொர்ணம் அவர்கள் சொன்னவை எமது மக்களுக்கு பெருமை சேர்க்கும் வார்த்தைகள். எதிரியின் கடுமையான ஆயுத வலுவுடன் நடாத்தப்பட்ட யுத்தக்களத்தின் எமது போராளிகள் அணித்தலைவர்கள் காட்டிய நிதானமும் உறுதியுமே அவர்களின் வீரத்திற்கு வெற்றியைத் தந்தது. அதிலும் குறிப்பாக எங்கள் எல்லைப்படை சிறப்பு எல்லைப்படை வீரர்களின் போர் ஆற்றல் இத்தனை தூரம் வளர்ந்திருப்பது வியப்பையும் பெருமையையும் தந்தது. அவர்களின் ஆற்றல் இதில் முழுமையாக நிரூபித்தன. என்று தான் நான் சொல்வேன். இப்படித் தான் அங்கு தொடர்ந்த மற்றும் பல கடுமையான சமரரங்குகளின் நிலைமையும் இருந்தது. அச்சமர் அரங்குகளில் வைத்து தான் எமது எல்லைப் படைவீரர்களின் வீரமும் தியாகமும் நிறைந்த எண்ணற்ற அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்து முடிந்தன. அவை தனியே எழுதப்பட வேண்டிய உணர்வை உலுப்பும் நீண்ட பக்கங்கள் கொண்டவை. அந்தப் போர்க்களங்களின் சாட்சிகளை நான் தரிசிக்க கிடைத்த போது அதில் களமாடிய மக்களின் சுவடுகளை பார்க்கும் போது வன்னி நிலம் வளையாது என்ற வார்த்தைகளே இன்றும் எம்மனக்கண் முன் வரிகளாகின்றது. இவ்வாறு விடுதலைக்கான போர்க்களத்தில் வன்னியில் எமது மக்களின் போர்ப்பங்களிப்பு அதிசயிக்க வைப்பது இத்தகைய களங்களின் எமது மக்கள் சிந்திய குருதி புனிதம் நிறைந்தது. அர்த்தங்கள் பொதிந்தது. எண்ணிப் பார்ப்பதற்கே எவருக்கும் கடினமாயிருக்கும். இவ்வளவு தீவிரமாய் விடுதலைப் போரைத் தாங்கி நிற்கும் எம்மக்களின் தேசப்பற்றை அறிய எவருக்கும் ஒரு பெருமை தோன்றும். அத்தனை தூரம் விடுதலை வேண்டி நிற்கும் ஒரு மக்களினம் கொண்டிருக்க வேண்டிய உறுதிப்பாட்டை இன்று எமது மக்கள் எட்டி நிற்கின்றார்கள். இப்போது எண்ணிப் பார்க்கின்றேன். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் இந்த நவீன ஒழுங்குக்குள் எப்படி இருக்கும் என்று. எங்களை காடுகளுக்குள் திரத்தி விட்டதாக சிங்களம் எக்காளம் இட்ட நாட்கள் எங்களின் இறுதி மூச்செடுப்புக்கான காலக்கெடுக்கள் இவற்றையெல்லாம் இறுதி முடிவுக்கான எதிரி நம்பிக்கையுடன் செய்த ஜெயசிக்குறு நடவடிக்கை இவையெல்லாம் எதிரியின் வெறும் பகல் கனவுகளாய் எவ்வாறு அழிந்து போயின என்பதை எமது மக்கள் மீண்டும் ஒரு முறை பதிவு செய்து கொள்ளுவார்களேயானால் வன்னியில் இனி புலிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்ற கேள்விக்கும் நிச்சயம் விடை கிடைக்கும் எமது போராளிகளின் வைராக்கியமும் வன்னி மக்களின் முண்டுகொடுப்பும் இறுதியில் அவர்களின் எழுச்சியால் உருவான எல்லைப் படையணிகளின் போர்ப் பங்கெடுப்பும் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒட்டுமொத்த பேராதரவும் எம் தலைவனின் கரங்களைப் பலப்படுத்த எதிரியின் கற்பனைகள் எல்லாம் கடற்கரையில் கட்டிய மண்வீடுகள் போலாகும். ஒரு இனத்தின் விடுதலைப் போரை அழிப்பதென்பது அந்த இலட்சியத்தை சுமப்பவர்களின் உயிருள்ளவரை முடியாதென்பதை உலகிற்கு ஒரு பாடமாக வன்னி மக்கள் சொல்லி வைத்தார்கள். இனியும் சொல்வார்கள். சொல்வதற்கு நாளும் குறித்து விட்டார்கள். வன்னிக் களம் வரலாற்றில் ஒரு எரிமலை. அது வெடிக்கும் போது சுற்றியிருக்கும் சூறாவளிகளெல்லாம் சிதறுண்டு போகும். அந்த நாளுக்காய் நம்பிக்கையுடன் செயல்படுவோம். |