Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature >  Sangam Classics:Ettuthokai/Melkannaku - the Eight Anthologies > pattuppATTu/Melkannaku - the Ten Idylls > kIzhkaNakku 18 - பதினெண் கீழ் கணக்கு > திணைமாலை நூற்றைம்பது

 
tiNaimAlai nURRaimpatu of kaNimEtAviyAr

திணைமாலை நூற்றைம்பது
(ஆசிரியர் கணிமேதாவியார்)

Etext input, proof reading, HTML version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.© Project Madurai 2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


மின்னுரையாக்கம், பிழைதிருத்தம், உயருரைக் குறிமொழியாக்கம், நூலறிமுகம் : முனைவர். கு. கல்யாணசுந்தரம்

© மதுரைத் திட்டம் 2000  மதுரைத் திட்டம் தமிழ்ச் செவ்விலக்கியங்களை மின்னுரைவடிவில், தளையின்றி ஊடுவலையின் மூலம் பரப்பும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முனைப்பாகும். இத்திட்டம் குறித்த மேலதிக விபரங்களைப் பின்வரும் வலையகத்திற் காணலாம்.http://www.projectmadurai.org
இம்மின்னுரையை, இம்முகப்புப் பக்கத்திற்கு மாற்றமின்றி, தாங்கள் எவ்வழியிலும் பிரதியாக்கமோ, மறுவெளியீடோ செய்யலாம்.


1. குறிஞ்சி
நிலம் : மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. (1)

சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன். (2)

சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியழா ஆர்த்து. (3)

கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாள் மயிர். (4)

வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! (5)

மானீல மாண்ட துகில்உமிழ்வ(து) ஒத்தருவி
மானீல மால்வரை நாட! கேள் - மாநீலம்
காயும்வேற் கண்ணாள் கனையிருளின் நீவர
ஆயுமோ மன்றநீ ஆய். (6)

கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர்
நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
நன்மலை நாடன் மகள். (7)

அவட்காயின் ஐவனம் காவல் அமைந்த(து)
இவட்காயின் செந்தினைகார் ஏனல் - இவட்காயின்
எண்ணுளவால் ஐந்திரண்(டு) ஈத்தான்கொல் என்னாங்கொல்
கண்ணுளவால் காமன் கணை. (8)

வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்என் - நெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத்(து) அன்(று)என்
வலங்கொண்டாள் கொண்டாள் இடம். (9)

கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்தி
பருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல்
தேன்வார்க்(கு) ஓக்கும் மலை நாட! வாரலோ
வான்தேவர் கொட்கும் வழி. (10)

கரவில் வளமலைக் கல்லருவி நாட!
உரவில் வலியா ஒரு நீ - இரவின்
வழிகள்தாம் சால வரஅரிய வாரல்
இழிகடா யானை எதிர். (11)

வேலனார் போக மறிவிடுக்க வேரியும்
பாலனார்க்(கு) ஈக பழியிலாள் - பாலால்
கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற்(கு) அல்லால்
நெடும்பனைபோல் தோள்நேராள் நின்று. (12)

ஒருவரைபோல் எங்கும் பல்வரையும் சூழ்ந்த
வருவரை யுள்ளதாம் சீறூர் - வருவரையுள்
ஐவாய நாதும் புறமெல்லாம் ஆயுங்கால்
கைவாய நாதும்சேர் காடு. (13)

வருக்கை வளமலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண்மேலே மாகப் - பருக்கைக்
கடாஅமால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என்தோழி தோள். (14)

வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து. (15)

நாள்நாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன்
பூண்ஆகம் நேர்வளவும் போகாது - பூண்ஆகம்
என்றேன் இரண்டாவ(து) உண்டோ மடல் மாமேல்
நின்றேண் மறுகிடையே நேர்ந்து. (16)

அறி(கு)அவளை ஐய இடைம்மடவாய் ஆயச்
சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள்
நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும். (17)

என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி. (18)

பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்(து)என்
நெஞ்சம்வாய்ப் புக்(கு)ஒழிவு காண்பானோ காண்கொடா
அஞ்சாயற் கேநோவல் யான். (19)

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட!
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்(கு)
என்னையோ நாளை எளிது. (20)

பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென்று - என்மெலிவிற்(கு)
அண்கண்ணி வாடாமை யால்நல்ல என்(று)ஆற்றான்
உண்கண்ணி வாடாள் உடன்று. (21)

கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு - செல்வர்தாம்
ஓரம்பி னான்எய்து போக்குவர்யான் போகாமல்
ஈரம்பி னால்எய்தாய் இன்று. (22)

பெருமலை தாம்நாடித் தேன்துய்த்துப் பேணா(து)
அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
ஏண்அழிதற்(கு) யாமே இனம். (23)

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்(து)உழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு. (24)

கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்
நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ
ஏமவேல் ஏந்திஇரா. (25)

கருங்கால் இளவேங்கை கான்றபூக் கள்மேல்
இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் - மருங்கால்
மழைவளரும் சாரல் இரவரின் வாழாள்
இழைவளரும் சாயல் இனி. (26)

பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)

மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழ்அகில்
நாகம்தோய் நாகம்என இவற்றைப் - போக
எறிந்(து)உழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும்
அறிந்துழல்வான் ஓ!இம் மலை? (28)

பலாஎழுந்த பால்வருக்கைப் பாத்தி அதன்நேர்
நிலாஎழுந்த வார்மணல் நீடிச் - சுலாஎழுந்து
கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தான்நாறத் தாழ்ந்த இடம். (29)

திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித்
தங்களுள் ளாள்என்னும் தாழ்வினால் - இங்கண்
புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனங்காக்க வைத்தார் மருண்டு. (30)

தன்குறையி(து) என்னான் தழைகொணரும் தண்சிலம்பன்
நின்குறை என்னும் நினைப்பினனாய்ப் - பொன்குறையும்
நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை யன்னான் குறிப்பு. (31)
---

2. நெய்தல்
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

பானலம் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு. (32)

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா(து)
இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம். (33)

தாமரை தான்முகமாத் தண்அடையீர் மாநீலம்
காமர்கண் ஆகக் கழிதுயிற்றும் - காமருசீர்த்
தண் பரப்ப! பாயிருள் நீவரின்தாழ் கோதையாள்
கண்பரப்பக் காணீர் கசிந்து. (34)

புலால்அகற்றும் பூம்புன்னைப் பொங்கு நீர்ச்சேர்ப்ப!
நிலாவகற்றும் வெண்மணல்தண் கானல் - சுலா அகற்றிக்
கங்குல்நீ வாரல் பகல்வரின்மார்க் கவ்வையாம்
மங்குல்நீர் வெண்திரையின்மாட்டு. (35)

முருகுவாய் முள்தாழை நீள்முகைபார்ப் பென்றே
குருகுவாய்ப் பெய்(து)இரை கொள்ளாது - உருகிமிக
இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற! (36)

ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார்
காதல்நீர் வாராமை கண்ணோக்கி - ஓதநீர்
அன்றறியும் ஆதலால் வாரா(து) அலர்ஒழிய
மன்றறியக் கொள்ளீர் வரைந்து. (37)

மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்(பு)அணங்கா - மாக்கடலே
என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யார்உரையாய்
என்போலும் துன்பம் நினக்கு. (38)

தந்தார்க்கே ஆம்ஆல் தட மென்தோள் இன்னநாள்
வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே
காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப்
பூவா இளஞாழல் போது. (39)

தன்துணையோ(டு) ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன்துணையோ(டு) ஆட இயையுமோ? - இன்துணையோ(டு)
ஆடினாய் நீயாயின் அந்நோய்க்(கு)என் நொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து. (40)

உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால்
பெருகுமால் நம்அலர் பேணப் - பெருகா
ஒருங்குவால் மின்னோ(டு) உருமுடைத்தாய் பெய்வான்
நெருங்குவான் போல நெகிழ்ந்து. (41)

கவளக் களிப்பியனமால் யானைசிற் றாளி
தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்தொறும் நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு. (42)

கடற்கோ(டு) இருமருப்புக் கால்பாக னாக
அடற்கோட் டியானை திரையா - உடற்றிக்
கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல்
வரைவாய்நீ யாகவே வா! (43)

கடும்புலால் புன்னை கடியும் துறைவ!
படும்புலால் புட்கடிவான் புக்க - தடம்புலாம்
தாழையா ஞாழல் ததைந்துயர்ந்த தாய்பொழில்
எழைமான் நோக்கி இடம். (44)

தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல்
மாழை நுளையர் மடமகள் - ஏழை
இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும்
துணைநாடி னன்தோம் இலன்! (45)

தந்(து)ஆயல் வேண்டாஓர் நாட்கேட்டுத் தாழாது
வந்தால்நீ எய்துதல் வாயால்மற்(று) - எந்தாய்
மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல்
எறிமகரம் கொட்கும் இரா. (46)

பண்ணாது பண்மேல்தே பாடும் கழிக்கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது
சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார். (47)

திரை மேற்போந்(து) எஞ்சிய தெள்கழிக் கானல்
விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய் பசும்புற இப்பிகால் முத்தம்
படுவாய் இருளகற்றும் பாத்து. (48)

எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப!-
பொங்கு திரையுதைப்பப் போந்தெழிந்த - சங்கு
நரன்யியிர்த்த நித்திலம் நள்ளிருள்கால் சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. (49)

திமில்களி றாகத் திரைபறையாப் பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப!
நெறியால்நீ கொள்வது நேர். (50)

கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கண்
படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்
சாலிகை போல்வலை சாலம் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று. (51)

திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
ஆய்ந்து வரைதல் அறம். (52)

பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத் தேறு திரைபறையாப் புட்படையாத் - தேறாத
மன்கிளர்ந்த போலும் கடற்சேர்ப்ப! மற்றெமர்
முன்கிளர்ந்|(து) எய்தல் முடி! (53)

வாராய் வான்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல்
தேரின்மா காலாழும் தீமைத்தே - ஓரில்ஓர்
கோள்நாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர்
நாள் நாடி நல்குதல் நன்று. (54)

கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர்
மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு - மண்பரக்கும்
ஆறுநீர் வேலைநீ வாரல் வரின்ஆற்றாள்
ஏறுநீர் வேலை எதிர். (55)

கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட
அடற்கானல் புன்னைதாழ்ந்(து) ஆற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்(து)எம்
முன்றில் இளமணல்மேல் மொய்த்து. (56)

வருதிரை தானுலாம் வார்மணல் கானல்
ஒருதிரை ஓடா வளமை - இருதிரை
முன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப!
என்வீழல் வேண்டா இனி. (57)

மாயவனும் தம்முனும் போலே மறிகடலும்
கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று? (58)

பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன - புகஅரிய
தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம். (59)

திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக்
கரையலவன் காலினாற் கானாக் - கரையருகே
நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்
மையல் நுளையர் மகள். (60)

அறி(கு)அரி(து) யார்க்கும் அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த
கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் தாழை இணைந்து. (61)

வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்
நல்லார் விழவகத்தும் நாம்காணேம் - நல்லாய்!
உவர்கத்(து) ஒரோஉதவிச் சேர்ப்பன்ஒப் பாரைச்
சுவர்கத்(து) உளராயின் சூழ். (62)
----

3. பாலை
நிலம் : குறிஞ்சியும் முல்லையும் திரிந்த மணல்வெளி.
ஒழுக்கம் : பிரிதலும் பிரிதல் நிமத்தமும்.

எரிநிற நீள்பிண்டி இணரினம் எல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர் முலையாய்! பூந்தொடித்தோள்
என்னணிந்த ஈடில் பசப்பு? (63)

பேணாய் இதன்திறத்(து) என்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய் நாணிண்மை - காணாய்
எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்(கு) ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு. (64)

தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங் குரவே! - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து. (65)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த்
திகழக்கான் றிட்டன தேர்ந்து! (66)

வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார்
பொறுக்கஎன் றால்பொறுக்க லாமோ? - ஒறுப்பபோல்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது! (67)

சென்றக்கால் செல்லும்வாய் என்னோ? இருஞ்சுரத்து
நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்ற
இழைக்கமர்ந்த ஏஏர் இளமுலையாள் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு! (68)

அத்தம் நெடிய அழற்கதிரோன் செம்பாகம்
அத்தமறைந் தான்இவ் அணியிழையோ(டு) - ஒத்த
தகையினால் எம்சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு. (69)

நின்நோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண்
பொன்நோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன் நோக்கம்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்!
வண்டல் அயர்மணல்மேல் வந்து! (70)

அஞ்சுடர்நள் வாண்முகத்(து) ஆயிழையும் மாநிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக் கண்டு - அஞ்சி
ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனஎன் றார். (71)

முகந்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம்
இகந்தார் விரல்காந்தள் என்றென்று - உகந்தியைந்த
மாழைமா வண்டிற்காம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது. (72)

செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ் வாயம்
தார்த்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும்
ஓர்த்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து. (73)

புன்புறவே! சேவலோ(டு) ஊடல் பொருளன்றால்
அன்புறவே உடையார் ஆயினும் - வன்புற்று
அதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்து
இதுகாண்என் வண்ணம் இனி! (74)

எரிந்து சுடும்இரவி ஈடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெ·காப் - புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயும்நீள் அத்தம்
அடுதிறலான் பின் சென்ற ஆறு. (75)

நெஞ்சம் நினைப்பினும் நெற்பொரியும் நீளத்தம்
அஞ்சல் எனஆற்றின் அஞ்சிற்றால் - அஞ்சப்
புடைநெடும் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண் கொண்ட பனி. (76)

வந்தால்தான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால்
வெந்தாற்போல் தோன்றும்நீள் வேய்அத்தம் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு? (77)

ஒருகை, இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனையில் காணா(து) - அருகல்
வழிவிலங்கி வீழும் வரைஅத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்! (78)

சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றால்
நின்றார்சொல் தேறாதாய்! நீடின்றி - வென்றார்
எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும்
கடுத்த மலைநாடு காண்! (79)

உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
வெருவிவீந்து உக்கநீள் அத்தம் - வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஆடும் இடம். (80)

கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்(கு)
என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாள்
மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)

ஆண்கட னாம்ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையால் - பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி! நீசிறிது
நைபொருட்கண் செல்லாமை நன்று. (82)

செல்பவோ சிந்தனையும் ஆகாதே நெஞ்செரியும்
வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய்
இதடி கரையும்கல் மாபோலத் தோன்றுச்
சிதடி கரையும் திரிந்து. (83)

கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத்
தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும்
பொருளில ராயினும் பொங்கெனப்போந்(து) எய்யும்
அருளில் மறவர் அதர். (84)

பொருள் பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி
அருள்பொருள் ஆகாமை யாக - அருளான்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை. (84)

ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார்என் றாய்நீ சிறந்தாயே - செல்லாது
அசைந்தொழிந்த யானை பசியால்ஆள் பார்த்து
மிசைந்தொழியும் அத்தம் விரைந்து. (86)

ஒன்றானும் நா(ம்)மொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்(கு) அரிதாச் சேய சுரம். (87)

அல்லாத என்னையும் தீரமற்(று) ஐயன்மார்
பொல்லாத தென்பது நீபொருந்தாய் - எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்
புல்லி ஒழிவான் புலந்து. (88)

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரா - எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான். (89)

வேறாக நின்னை வினவுனேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக
என்மனைக்(கு) ஏறக்கொணருமோ வெல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான். (90)

கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நற்றியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்க வீயும் இடம். (91)

செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிள்துவன்றிக்
கொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால்
அடிவெந்து கண்சுடும் ஆறு. (92)
-----

4. முல்லை

நிலம் :காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.

கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்ூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய
என்கொல்யான் ஆற்றும் வகை. (93)

பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என்ஆவி யூர்ந்து. (94)

மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக்
கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. (95)

இருள்பரந்(து) ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு. (96)

பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்றெறிந்த
வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து. (97)

வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (98)

பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கெயிற்றாய் - என் வாள்போல்
வாள்இழந்த கண்தோள் வனம்பிழந்த மெல்விரலும்
நாள்இழந்த எண்மிக்கு நைந்து. (99)

பண்(டு)இயையச் சொல்லிய சொற்பழுதால் மாக்கடல்
கண்(டு)இயைய மாந்திக்கால் வீழ்த்(து) இருண்(டு) - எண்திசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண். (100)

வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். (101)

மான்எங்கும் தம்பிணையோ(டு) ஆட மறிஉகள
வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது
யானிறுத்தேன் ஆவி இதற்கு. (102)

ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு. (103)

ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை
இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின்
ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று
கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. (104)

எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார்
கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை
பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய்
குருந்(து)அங்(கு) ஒடுங்கழுத்தம் கொண்டு. (105)

என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்
அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே
வந்(து)ஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து. (106)

கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி
உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற
ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான்
எந்தலையே வந்த(து) இனி. (107)

கண்ணுள வாயின் முலையல்லை காணலாம்
எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா
அன்றொழிய நோய்மொழிச்சார் வாகா(து) உருமுடை வான்
ஒன்றொழிய நோய்செய்த வாறு. (108)

என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார்
பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல்
துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்,
இணைபிரிந்து வாழ்வர் இனி. (109)

பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்
அரியார் எளியரென்(று) ஆற்றாப் - பரிவாய்த்
தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்(டு) ஆற்றா
மலையழுத சால மருண்டு. (110)

கானம் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார்
வானம் விளிப்பவண்(டு) யாழாக - வேனல்
வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லாய்
உளராகி உய்யும் வகை. (111)

தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக
வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காராய்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி. (112)

பறியோலை மேலொடு கீழா இடையர்
பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்ப
நரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்!
விரியுளைமான் தேர்மேல்கொண் டார். (113)

பாத்துப் படுகடல் மாந்திய பல்கொண்மூக்
காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக்
குருந்தே! -பருவங் குறித்துவளை நைந்து
வருந்தேயென் றாய்நீ வரைந்து. (114)

படுந்தடங்கண் பல்பணைபோல் வான்முழங்க மேலும்
கொடுந்தடங்கண் கூற்றுமின் ஆக - நெடுந்தடங்கண்
நீர்நின்ற நோக்கின் நெடும்பணை மென்தோளாட்(கு)த்
தேர் நின்ற(து) என்னாய் திரிந்து. (115)

குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்தேய் எயிறொடுதார் பூப்பித்து - இருந்தே,
அரும்(பு)ஈர் முலையாள் அணிகுழல்தாழ் வேய்த்தோள்
பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. (116)

கதநாகம் புற்றிடையக் காரேறு சீற
மதநாகம் மாறு முழங்கப் - புதல்நாகம்
பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்!
என்பசந்த மென்தோள் இனி. (117)

கார்தோன்றிப் பூவுற்ற காந்தள் முகைவிளக்குப்
பீர்தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல் - நீர் தோன்றித்
தன்பருவம் செய்தது கானம் தடங்கண்ணாய்!
என்பருவம் அன்(று)என்றி இன்று. (118)

உகவும்கள் அன்றென்பார் ஊரார் அதனைத்
தகவு தகவனென்(று) ஓரேன் - தகவேகொல்
வண்துடுப்பாயப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்
வெண்குடையாம் தண்கோடல் வீந்து. (119)

பீடிலார் என்பார்கள் காணார்கொல் வெங்கதிரால்
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் கோடெலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன்
துத்தம் அறையும் தொடர்ந்து. (120)

ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து. (121)

கானம் தலைசெயக் காப்பார் குழல்தோன்ற,
ஏனம் இடந்த மணிஎதிரே - வானம்
நகுவதுபோல் மின்ஆட நாண்இல்என் ஆவி
புகுவது போலும் உடைந்து. (122)

இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும்
உம்மையே ஆமென்பார் ஓரார்காண் - நம்மை
எளியர் எனநலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளியச் சுடப்பட்ட வாறு. (123)
------

5. மருதம்

நிலம் : வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்.

செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால்
இவ்வகை ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன் - இவ்வழியே
ஆடினான் ஆய்வய லூரன்மற்(று) எங்கையர்தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து. (124)

மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் - தூக்கோல்
தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து. (125)

விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா அழையேல்
முளரி மொழியா(து) உளரிக் - கிளரிநீ
பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை. (126)

மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் - இங்கண்
குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)

செந்தா மரைப்பூ உற நிமிர்ந்த செந்நல்லின்
பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்(து) ஆடுவாள் - அந்தார்
வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை
நயந்தகன்(று) ஆற்றாமை நன்று. (128)

வாடாத தாமரைமேல் செந்நெற் கதிர்வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் - ஈடாய
புல்லகம் ஏய்க்கும் புகழ்வயல் ஊரன்தன்
நல்லகம் சேராமை நன்று. (129)

இசையுரைக்கும் என்செய் திரம்நின் றவரை
வசையுரைப்பச் சால வழத்தீர் - பசைபொறை
மெய்ம்மருட்(டு) ஒல்லா மிகுபுனல் ஊரன்தன்
பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. (130)

மடங்(கு)இறவு போலும்யாழ்ப் பண்பிலாப் பாண!
தொடங்குறவு சொல்துணிக்க வேண்டா - முடங்கிறவு
பூட்டுற்ற வில்ஏய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய்
கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து. (131)

எங்கை யரில்உள்ளா னேபாண! நீபிறர்
மங்கை யரில் என்று மயங்கினாய் - மங்கையரில்
என்னா(து) இறவா(து) இவணின் இகந்தேகல்
பின்னாரில் அந்தி முடிவு. (132)

பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு. (133)

கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயன்நோக்கிக் கொல்லோ- கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரில் கேளா
அடியேன் பெற்றா அருள். (134)

என்கேட்டி ஏழாய்! இருநிலத்தும் வானத்தும்
முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்டு
அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர்
பணியிகவான் சாலப் பணிந்து. (35)

எங்கை இயல்பின் எழுவல் யாழ்ப் பண்மகனே!
தங்கையும் வாழும் அறியாமல் - இங்கண்
உளர உளர உவன்ஓடிச் சால
வளர வளர்ந்த வகை. (136)

கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்
ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்(து) அழகாத்
தாம்பல் அசையினவாய் தாழ்ந்து. (137)

கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி
வந்(து)ஐ,ஆ என்னும் வகையிற்றே மற்றிவன்
தந்தையார் தம்மூர்த் தகை. (138)

மருதோடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல்
எருதோடு உழல்கின்றார் ஓதை - குருகோடு
தாராத்தோ(று) ஆய்ந்தெடுப்பும் தண்ணம் கழனித்தே
ஊராத்தே ரான்தந்தை ஊர். (139)

மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேன்நமதென்(று)
உண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளும் - கண்ணார்
வயலூரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊ ரரவர் மகள். (140)

அணிக்குரல்மேல் நல்லாரோ(டு) ஆடினேன் என்ன
மணிக்குரல்மேல் மாதராள் ஊடி - மணிச்சிரல்
பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
யாட்டை இருந்துறையும் ஊர். (141)

தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர ! - வண்கயம்
போலும்நின் மார்பு புளிவேட்கைத்(து) ஒன்(று)இவள்
மாலும்மா றாநோய் மருந்து. (142)

நல்வயல் ஊரன் நறுஞ்சாந்(து) அணிஅகலம்
புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கண் - புல்லியார்
கூட்டு முதலுறையும் கோழி துயிலெடுப்ப
பாட்டு முரலுமாம் பண். (143)

அரத்தம் உடீஇ, அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும். (144)

பாட்டார வம்பண் அரவம் பணியாத
கோட்டரவம் இன்னிவை தாங்குழுமக் - கோட்டரவம்
மந்திரம் கொண்டோங்கல் என்ன மகச்சுமந்து
இந்திரன்போல் வந்தான் இடத்து. (145)

மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யழியத் தரள மூலையினாள்
மென்மைசெய் திட்டாள் மிக. (146)

செங்கண் கருங்கோட்(டு) எருமை சிறுகனையால்
அங்கண் கழனிப் பழனம்பாய்ந்(து) - அங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடி
தவளையும்மேற் கொண்டு வரும். (147)

இருள்நடந்த(து) அன்ன இருங் கோட்(டு) எருமை
மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்த
கற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும். (148)

புண்கிடந்த புள்மனுநுன் நீத்தொழுகி வாழினும்
பெண்கிடந்த தன்மை பிறி(து)அரோ - பண்கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல்போல் கண்ணினாள்
நையாது தான்நாணும் ஆறு. (149)

கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!
எண்ணுங்கால் மற்(று(இன்(று) இவளடுநேர் - எண்ணின்
கடல் வட்டத்(து) இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்(து) ஆர்உளரேல் ஆம். (150)

சேறாடுங் கிண்கிணிக்கால் செம்பொன்செய் பட்டத்து
நீறாடும் ஆயதிவன் இல்முனா - வேறாய
மங்கையரின் ஆடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே!
எங்கையரின் ஆடலாம் இன்று. (151)

முலையாலும் பூணாலும் முன்கண்தாம் சேர்ந்த
இலையாலும் இட்ட குறியை - உலையாது
நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வன் நிற்கும் உனைமுலைப்பால்
தார்சிதைக்கும் வேண்டா தழூம். (152)

துனிபுலவி ஊடலின் நோக்கு(எ)ன் தொடர்ந்த
கனிகலவி காதலினும் காணேன் -முனிஅகலின்
நாணா நடுங்கும் நளிவய லூரனைக்
காணாஎப் போதுமே கண். (153)

சிறப்புப் பாயிரம்

முனிந்தார் முனி(வு) ஒழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை யீடிலா இன்தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து.

திணைமாலை நூற்றைம்பது முற்றிற்று 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home