இருபதாம் அத்தியாயம்
நிலவில் நண்பர்கள்
வானக்கடலில் மிதந்த பூரண
சந்திரன் பால் நிலவைப் பொழிந்து இந்த மண்ணுலகத்தை மோகனப் பொன்னுலகமாகச்
செய்து கொண்டிருந்த இரவில் வடபெண்ணை நதியானது அற்புதக் காட்சியை அளித்துக்
கொண்டிருந்தது. முதல் நாளிரவு அதே நேரத்தில் இந்த நதியைப்
பார்த்திருந்தோமானால், சலசலவென்று இனிய ஓசையோடு அம்மாநதியில் ஓடிய
தண்ணீர்ப் பிரவாகம் உருக்கிய வெள்ளியைப் போல் தகதகவென்று பிரகாசிப்பதையும்,
நாலாபுறமும் ககனவட்டம் பூமியைத் தொட்டு ஒன்றாகும் வரம்பு வரையில் பூரண
அமைதி குடிகொண்டிருப்பதையும் கண்டிருப்போம். அந்த இயற்கை அமுதக் காட்சியின்
இன்பத்தில் மெய்மறந்திருப்போம். பிரவாகத்தையொட்டி விரிந்து பரந்து
கிடக்கும் வெண் மணலிலே படுத்துக் கொண்டு "ஆகா! இது என்ன அற்புத உலகம்?
இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான்
கிடைக்கமா?" என்று வியந்திருப்போம்.
ஆனால், இன்றிரவோ அந்த
வடபெண்ணை நதித் துறையானது மகத்தான அல்லோலகல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது.
கணக்கற்ற யானைகளும், குதிரைகளும், ரதங்களும், வண்டிகளும் அந்த நதியை
அப்போது கடந்து கொண்டிருந்தன. யானைகள் அணிந்திருந்த தங்க முகபடாங்களும்,
அவற்றின் தந்தங்களுக்கு அணிந்திருந்த வெள்ளிப் பூண்களும், இயற்கையிலேயே
அழகுடைய புரவிகளுக்குப் பூட்டியிருந்த நானாவித ஆபரணங்களும், ரதங்களின்
தங்கத் தகடு வேய்ந்த விமானங்களும் வெண்ணிலவில் பளபளவென்று ஜொலித்தன.
யானைகள், குதிரைகள் எல்லாம் வரிசை வரிசையாக ஏககாலத்தில் நெடுந்தூரத்துக்கு
நெடுந்தூரம் நதியை அடைத்துக் கொண்டு நீர்ப்பிரவாகத்தைக் கடந்த போது ஏற்பட்ட
ஓசை பெருங் காற்று அடிக்கும்போது அலைவீசிக் குமுறும் சமுத்திரத்தின்
பேரிரைச்சலை ஒத்திருந்தது.
அக்கரையில் கண்ணுக்கெட்டிய
மட்டும் காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் காணப்பட்டனர். அவர்களுடைய கையிலே
பிடித்திருந்த கூரிய வேல்கள் அசைந்தபோதெல்லாம் மின்வெட்டின் ஒளி தோன்றிக்
கண்ணைப் பறித்தது. அந்த வீரர் கூட்டத்துக்கு இடையிடையே ஆயிரக்கணக்கான
ரிஷபக் கொடிகள் இளங்காற்றில் பறந்து படபடவென்று சப்தித்துக் கொண்டிருந்தன.
இந்தக் கரையில் நதித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஒரே ஒரு கூடாரம்
மட்டும் காணப்பட்டது. கூடாரத்துக்குப் பக்கத்தில் புல்தரையில்
விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மேல் யாரோ நாலு பேர் உட்கார்ந்து
பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையைத் தட்டிக் கூப்பிட்டால்
கேட்கக்கூடிய தூரத்தில் பத்துப் பன்னிரண்டு வீரர்கள் கையில் நீண்ட
வேல்களுடனும், இடையில் செருகிய வாள்களுடனும் சர்வ ஜாக்கிரதையுடன் காவல்
புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலிருந்து ரத்தினக் கம்பளத்தில்
உட்கார்ந்திருப்பவர்கள் பெரிய அந்தஸ்து படைத்த முக்கியஸ்தர்கள் என்று
ஊகிக்கலாம். அருகில் சென்று பார்த்தோமானால், நமது ஊகம் உண்மை என்பதைக்
காண்போம். அந்த நால்வரும் மாமல்ல சக்கரவர்த்தி, சேனாபதி பரஞ்சோதி, வேங்கி
அரசன் ஆதித்த வர்மன், ஒற்றர் தலைவன் சத்ருக்னன் ஆகியவர்கள்தான்.
வேங்கி அரசன் ஆதித்தவர்மன்
மாமல்லருடைய தாயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன்
வம்சத்தில் வந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில்
கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு
வந்தார்கள். சளுக்க சக்கரவர்த்தி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தபோது,
ஆதித்த வர்மன் பல்லவ சக்கரவர்த்தியின் உதவிக்கு வர முடியாதபடி இடையில்
புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனனால் வழிமறிக்கப்பட்டான்.
விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் புராதன இராஜவம்சத்தை நிர்மூலம் செய்து தான்
சிம்மாசனம் ஏறியதும், ஆனால், புலிகேசி தென்னாட்டிலிருந்து வாதாபிக்குத்
திரும்பி வருவதற்குள் விஷ்ணுவர்த்தனன் உயிர் துறக்க நேர்ந்ததும் நேயர்கள்
அறிந்தவை. விஷ்ணுவர்த்தனனுடைய ஆட்சியையும் ஆயுளையும் அகாலத்தில் முடிவு
செய்யக் காரணமாயிருந்தவன் ஆதித்தவர்மன்தான். ஆனால், சில வருஷத்துக்குப்
பின்னர் மீண்டும் புலிகேசியின் பெருஞ் சைனியம் வேங்கியைக் கைப்பற்ற
வந்தபோது, ஆதித்தவர்மன் தன்னுடன் மிச்சம் இருந்த வேங்கிச் சைனியத்துடனே
தென் திசை நோக்கிப் பின்வாங்கி மீண்டும் தாக்கச் சந்தர்ப்பத்தை நோக்கிக்
காத்திருந்தான். மாமல்லர் மாபெரும் சைனியத்தோடு வாதாபியின் பேரில்
படையெடுத்த போது, ஆதித்தவர்மனும் அவரோடு சேர்ந்து போருக்குப் புறப்பட்டான்.
சேனாதிபதி பரஞ்சோதி,
பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் தாம் இதே வடபெண்ணையின் அக்கரையில்
புலிகேசியின் சேனா சமுத்திரத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்தது பற்றியும்,
மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தன்னைப் பின் தொடர்ந்து வந்து
புலிகேசியின் கண்ணெதிரே தன்னை விடுதலை செய்தது பற்றியும் விவரமாகச்
சொல்லிக் கொண்டிருந்தார். மற்ற மூவரும் அதிசயத்தோடு கேட்டுக்
கொண்டிருந்தனர். மூவரிலும் ஆதித்தவர்மன் மிகவும் அதிசயப்பட்டான். அவனுக்கு
அந்த விவரங்கள் எல்லாம் புதியனவாக இருந்தன. "ஆகா! அந்த விசித்திர சித்தரை
நேரில் பார்க்கும் பாக்கியம் இந்தக் கண்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே?"
என்று வருந்தினான்.
அப்போது மாமல்லர் சொன்னார்;
"இலங்கை இளவரசன் கூட அடிக்கடி இவ்விதம் கூறி வருத்தப்படுவான். என் தந்தை
என்பதற்காக நான் பெருமையடித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரைப் பார்ப்பதே
ஒரு பாக்கியந்தான். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கோ பல ஜன்மங்களிலே
பாக்கியம் செய்திருக்க வேண்டும். மூன்று வருஷ காலம் அவர் என்னை அழைத்துக்
கொண்டு தென் தேசமெங்கும் யாத்திரை செய்தார். இந்த மாதிரி வெண்ணிலவு பொழிந்த
இரவுகளிலே நானும் அவரும் வெட்ட வெளியில் உட்கார்ந்து ஆனந்தமாகக் காலம்
கழித்திருக்கிறோம். அவர் பிரயாணம் கிளம்பும் போது பரிவாதினி வீணையையும்
உடன் எடுத்து வருவார். வீணைத் தந்திகளை மீட்டி அவர் இசை வெள்ளத்தைப்
பெருக்கும் போது, வானமும் பூமியும் நிசப்தமாய், நிச்சலனமாய் நின்று கேட்பது
போலத் தோன்றும். அந்த நாத வெள்ளத்தைத் தடை செய்யப் பயந்து காற்றும் நின்று
விடும். மரங்களின் இலைகள் அசைய மாட்டா. பட்சி ஜாலங்களும் மௌனவிரதம்
பூண்டிருக்கும்." "அண்ணா நிறுத்துங்கள்! இப்படி நீங்கள் பேச ஆரம்பித்தால்
எனக்குச் சித்தம் கலங்கி விடுகிறது. யுத்தமும் இரத்தக் களரியும்
என்னத்திற்கு, வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாகக்
கழித்து விட்டுப் போகலாமென்று தோன்றி விடுகிறது!" என்றான் ஆதித்தவர்மன்.
மாமல்லர் கலகலவென்று சிரித்து விட்டுச் சொன்னார்; "மகேந்திர பல்லவர் இதே
மாதிரி வார்த்தைகளை ஒரு காலத்தில் சொன்னதுண்டு. 'உலகத்தில் மன்னர்
குலத்தில் பிறந்தவர்களுக்கு மண்ணாசை என்பது போய் விட்டால் இந்த பூவுலகமே
சொர்க்கமாகி விடும்!' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது.
வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர்
உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு
வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி
கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது
படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி
விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும்
மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து
விட்டான்...!" என்று கூறி விட்டு மாமல்லர் சேனாபதி பரஞ்சோதியைப் பார்த்துப்
புன்னகை புரிந்தார்.
"நமது சேனாதிபதி காஞ்சி
நகரில் பிரவேசித்த அன்று நடந்த சம்பவத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அதைப்
பற்றி ஒருநாள் அவரிடம் நானே விவரமாகக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்" என்று
கூறினான் ஆதித்தவர்மன். "என் தந்தையின் அபிமானத்தை நமது சேனாதிபதி
கவர்ந்தது போல் வேறு யாரும் கவர்ந்ததில்லை. ஒவ்வொரு சமயம் எனக்கு அவர் மேல்
பொறாமை கூட உண்டாயிற்று. மகேந்திர பல்லவர் என்னைப் புறக்கணித்து விட்டுச்
சேனாதிபதிக்க முடிசூட்டி விடுவாரோ என்று கூடச் சில சமயம் சந்தேகித்தேன்.
ஆனால், அதற்கு நானும் ஆயத்தமாயிருந்தேன். இன்றைக்குக் கூடச் சேனாதிபதி
ஒப்புக் கொண்டால்..." என்று மாமல்லர் சொல்லி வந்த போது தளபதி பரஞ்சோதி
குறுக்கிட்டார்.
"பிரபு! இப்படியெல்லாம் பேச
வேண்டாம்; சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் எனக்கு என்னத்திற்கு?
பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம்,
'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு
வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை
நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த
யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப்
போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால்
இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக்
கொடுங்கள்!" என்றார். மாமல்லர் உடனே ஆதித்தவர்மனையும், சத்ருக்னனையும்
பார்த்துக் கண்ணினால் சமிக்ஞை செய்ய, அவர்களும் விஷயம் தெரிந்து கொண்டதற்கு
அடையாளமாகப் புன்னகை புரிந்தார்கள்.
மாமல்லர் மானவன்மனிடம் அதிகப்
பிரியம் வைத்திருக்கிறார் என்னும் விஷயம் சேனாதிபதி பரஞ்சோதியின் மனத்தில்
உறுத்திக் கொண்டே இருந்தது. இதை மாமல்லர் நன்கு அறிந்திருந்தார். வாதாபி
யுத்தத்துக்கு மானவன்மனை வர வேண்டாமென்று காஞ்சியில் நிறுத்தி விட்டு
வந்ததற்கே இதுதான் முக்கியமான காரணம். எனவே மாமல்லர் மற்ற இருவரையும்
பார்த்து, "பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போயிற்று" என்று
சொல்வதற்கு அறிகுறியாகச் சமிக்ஞை செய்து விட்டு, தலைகுனிந்தவண்ணமிருந்த
பரஞ்சோதியைப் பார்த்து "அழகாய்த்தானிருக்கிறது! போயும் போயும் அந்த
மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர்? அவனை
நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப்
புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை.
இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி
உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டார்.
சேனாதிபதி சற்று யோசனை செய்து
விட்டு, "போர்க்களத்துக்கு வரவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உள்ளவரை எதற்காகத்
தடுக்க வேண்டும்? மானவர்மர் வந்தால் நல்லதுதான்; நமது யானைப் படைக்கு அவர்
தலைமை வகித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்" என்று சொன்னார். "எனக்கு என்னவோ
சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மானவன்மன் நம்முடைய உதவியைக் கோரி வந்து
அடைக்கலம் புகுந்தவன். இப்போது அவனுடைய உதவியினால் நாம் ஜயித்தோம் என்று
எதற்காக ஏற்பட வேண்டும்?...." என்றார் மாமல்லர்.
அதுவரை ஏறக்குறைய
மௌனமாயிருந்த சத்ருக்னன் கூறினான்; "சக்கரவர்த்தி! தாங்கள் அவ்விதம் எண்ணவே
கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும்
தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது?
சேனாதிபதியும் ஆதித்தவர்மரும் இல்லாவிட்டாலும் தாங்கள் வாதாபியை அழித்து
விட்டு வெற்றி வீரராய்த் திரும்புவீர்கள். இந்தப் படையெடுப்பில் கலந்து
கொள்வதற்குக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள். மானவன்மர் இந்தப்
படையெடுப்பிலே கலந்து கொண்டால் அவரால்தான் தாங்கள் ஜயமடைந்தீர்கள் என்ற
பெயர் ஒரு நாளும் ஏற்பட்டு விடாது. அதனால் அவருக்குக் கௌரவம் ஏற்படும்
என்பதுதான் உண்மை."
சத்ருக்னன் கூறியதைச்
சேனாதிபதி, ஆதித்தவர்மன் இருவரும் பூரணமாக ஆமோதித்தார்கள். "மேலும், நமது
யானைப் படைக்குப் பயிற்சி அளிக்கும் காரியத்தில் மானவன்மர் மிக்க சிரத்தை
எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போருக்கு வர வேண்டாம் என்று சொல்வது
நியாயமல்ல" என்றார் சேனா