அத்தியாயங்கள்
கல்கியின் "சிவகாமியின் சபதம் "
பாகம்-3: பிக்ஷுவின் காதல்
முதல் அத்தியாயம்அழியா
மதில்
வாதாபி
சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின்
காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின்
சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத
காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக்
கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி
நின்றன. வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் கூடக் காஞ்சிக்
கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை. வாதாபி வீரர்கள்
காஞ்சிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டவுடனே, வைஜயந்தி
பட்டணத்தில் செய்தது போலவே ஒரே மூர்க்கமாய்க் கோட்டையைத்
தாக்கிக் கைப்பற்ற யத்தனித்தார்கள். காலாட் படையைச் சேர்ந்த
கணக்கற்ற வீரர்கள் ஏக காலத்தில் கோட்டையின் நாற்புறத்திலும்
அகழிகளை நீந்திக் கடக்க முயன்றார்கள். கோட்டை மதில்களின் மேல்
மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும்
அகழியிலிருந்த முதலைகளும் அவ்வீரர்களையெல்லாம் எமலோகத்துக்கு
அனுப்பின. தப்பித் தவறிக் கரையேறிய வீரர்கள் கோட்டை
மதிலோரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருந்த பொறிகளில்
அகப்பட்டுத் திண்டாடினார்கள். ஆங்காங்கு அகழிகளில் இறங்கிய
யானைகளுக்கும் அகழியிலிருந்த முதலைகளுக்கும் பயங்கரமான
போராட்டம் நடந்ததில், அகழியில் நிறைந்திருந்த தண்ணீரெல்லாம்
செந்நீராக மாறியது.
முதல்
முயற்சியில் தோற்ற பிறகு, கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத்
தூர்த்துக் கோட்டைக் கதவுகள் மேல் யானைகளை மோதச் செய்ய
முயன்றார்கள். காஞ்சியைச் சுற்றியிருந்த பெரிய பெரிய
விருக்ஷங்களையெல்லாம் மத்த கஜங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு
வந்து அகழியில் போட்டுத் தூர்த்தன. ஆனால், இந்த வேலை அவ்வளவு
எளிதாக நடக்கவில்லை. கோட்டை வாசலின் மேல் மாடங்களில் மறைவான
இடங்களிலிருந்து பல்லவ வீரர்கள் வேகமாய் எறிந்த வேல்கள்
யானைகளின் கண்களிலும் மற்றுமுள்ள மர்ம ஸ்தானங்களிலும் தாக்க,
அவை வீறிட்டுக் கொண்டு திரும்பியோடிச் சளுக்கர் படைகளுக்குச்
சேதமுண்டாக்கின.
பெரும்
பிரயத்தனத்தின் பேரில் கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழிகள்
தூர்க்கப்பட்டன. யானைகள் கோட்டைக் கதவுகளை முட்டிய போது, வௌிக்
கதவுகள் தகர்ந்தன. ஆனால், வௌிக் கதவுகளுக்கு உள்ளே எதிர்பாராத
அதிசயம் யானைகளுக்குக் காத்திருந்தது. புதிதாய்
அமைக்கப்பட்டிருந்த உட்கதவுகளில் நூற்றுக்கணக்கான வேல் முனைகள்
பொருத்தப்பட்டிருந்தன. இந்த வேல் முனைகளில் வேகமாய் மோதிக்
கொண்ட வாதாபி யானைகள், பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு திரும்பி,
தங்களுக்குப் பின்னாலிருந்த காலாட் படை வீரர்களையெல்லாம்
துவம்சம் செய்து கொண்டு ஓடின. பெரிய பெரிய மரக்கட்டைகளைக்
கொண்டு வந்து அந்த வேல் முனை பொருந்திய கதவுகளையும்
தகர்த்தார்கள். அப்படித் தகர்த்து விட்டுப் பார்த்தால்,
அக்கதவுகளுக்குப் பின்னால் கோட்டை வாசலை அடியோடு அடைத்துக்
கொண்டு கருங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கெட்டிச்
சுவர் காணப்பட்டது. இவ்விதமாக, ஏறக்குறைய ஒரு மாதகாலம்
கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு முயன்று தோல்வியடைந்த
பிறகு, நீடித்து முற்றுகையை நடத்திக் கோட்டையிலுள்ளவர்களைப்
பட்டினி போட்டுப் பணியச் செய்வதென்று புலிகேசி தீர்மானித்தான்.
வாதாபிப் படைகள் காஞ்சியைச் சுற்றிலும் நெடுந்தூரம் வரை
கூடாரம் அடித்துக் கொண்டு தண்டு இறங்கின.
முற்றுகையை
ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன போது, கோட்டைக்குள்
இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமென்று புலிகேசி
எதிர்பார்த்தானோ அந்த ஆபத்து வாதாபிப் படைகளுக்கே நேரலாயிற்று.
அதாவது உணவுப் பஞ்சம் நேர்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்களும்,
ஆயிரக்கணக்கான போர் யானைகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் ஒரே
இடத்தில் இருந்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு உணவு பெற
முடியும்? வடபெண்ணைக் கரையிலிருந்து காஞ்சி வரையில் உள்ள
வழியில் புலிகேசியின் படைகளுக்கு யாதொரு உணவுப் பொருளும்
கிடைக்கவில்லை. ஏனெனில் வடபெண்ணையிலிருந்து மெல்ல மெல்லப்
பின்வாங்கி வந்த பல்லவ சைனியம், வாதாபிப் படைக்கு உணவுப்
பொருள் ஒன்றும் கிடைக்காதபடி நன்றாய்த் துடைத்து
விட்டிருந்தது. அவ்வாறே, காஞ்சியைச் சுற்றிலும்
நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உள்ள கிராமங்களையெல்லாம்
சூனியமாக விட்டு விட்டு ஜனங்கள் போய் விட்டபடியால், வாதாபிப்
படைக்கு உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டு மூன்று
மாத காலத்திற்குள் காஞ்சியைச் சுற்றியிருந்த காடுகள்,
தோட்டங்கள் எல்லாவற்றையும் வாதாபியின் யானைகள் அழித்துத்
தின்று விட்டன. அப்புறம் அவற்றுக்கு ஆகாரம் தேடுவதற்காகப் பல
காத தூரம் போக வேண்டியிருந்தது. அப்படிப் போனாலும் அந்த
வருஷத்துக் கடுங் கோடையில் பசுமையைக் கண்ணால் பார்ப்பதே
அபூர்வமாயிருந்தது. இதையெல்லாம் காட்டிலும் மிகப் பயங்கரமான
இன்னோர் அபாயம், கோடை முற்றிய போது வாதாபிப் படைகளுக்கு
ஏற்பட்டது, அதாவது, குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது.
அந்த வருஷத்தில்
காஞ்சியைச் சுற்றிலும் ஏழெட்டுக் காத தூரம் பரவிய
பிரதேசங்களில் சில அதிசயங்கள் நடந்து வந்தன. கார்த்திகை,
மார்கழியில் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த பெரிய
பெரிய ஏரிகளெல்லாம், தை, மாசி, மாதத்தில் எப்படியோ திடீர்
திடீரென்று கரை உடைத்துக் கொண்டு சுற்றுப் பிரதேசங்களை
வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது காரணமாக, சித்திரை மாதத்தில்
ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஆங்காங்கு இருந்த
கிணறுகளும், குளங்களும், ஏரிகள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்த
போது தூர்ந்து போய் விட்டன. எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர்
கண்டால் குடிப்பதற்குப் பயனில்லாதபடி அழுகி நாற்றமெடுத்துக்
கிடந்தது.
அந்த நாளில்
பாலாற்றில் மூன்று இடங்களில் அணைக்கட்டு கட்டித் தண்ணீரைத்
தேக்கி வைத்திருப்பார்கள். வேனிற்காலத்தில் சிறிது சிறிதாக
விடுவார்கள். இந்த வருஷத்தில் அந்தத் தேக்கங்களை முன்னமே
உடைத்து விட்டிருந்தபடியால் கோடைக் காலத்தில் பாலாறும் வறண்டு
விட்டது. பாலாறு வறண்ட காரணத்தினால் காஞ்சியையும் கடலையும்
ஒன்று சேர்த்த கால்வாயிலும் தண்ணீர் வற்றிப் போய் விட்டது.
கோட்டையைச் சுற்றியிருந்த அகழித் தண்ணீரோ, இரத்தமும் நிணமும்
சேர்ந்த சேற்றுக் குட்டையாக மாறியிருந்தது. எனவே, வாதாபியின்
இலட்சக்கணக்கான வீரர்களுக்கும் யானைகள், குதிரைகள், மாடுகள்
எல்லாவற்றிற்கும் பாலாற்றில் ஊற்றெடுத்தே குடி தண்ணீர் கிடைக்க
வேண்டியிருந்தது. பசி, தாகங்களின் கொடுமையினால் போர் யானைகள்
அவ்வப்போது வெறி பிடித்துச் சிதறியோட, அவற்றின் கால்களில்
மிதிபட்டு வீரர்கள் பலர் எமலோகம் சென்றார்கள்.
ஆனி மாதத்திலே
ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்திற்குள்ளே
புலிகேசியின் யுத்த மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே
வடபெண்ணை நதிக்கரையில் நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள்
ஏழெட்டுப் பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில்
உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில்
கம்பீரமாக அமர்ந்திருந்தான். முன்னைக் காட்டிலும் புலிகேசியின்
முகத்தில் கடூரமும் கோபமும் அதிகமாகக் கொதித்துக்
கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான்;
"இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு; மகன்
பெயர் நரசிம்மன். ஆனால், மகேந்திரனோ வெறும் நரியாக
இருக்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வது போல், இவன்
கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையிலிருந்து
வௌியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக்
கொண்டிருப்பது? உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை
தோன்றுகிறதா?"
படைத் தலைவர்கள்
மௌனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத்
துணியவில்லை. "ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கிறீர்கள்! வெற்றி
மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்த போது, நான் நீ என்று
எல்லோரும் யோசனை சொல்ல முன்வந்தீர்கள். யோசனை தேவையாயிருக்கும்
போது வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகா! நமது பிக்ஷு
மட்டும் இப்போது இங்கிருந்தால்...." என்று சொல்லிப் புலிகேசி
பெருமூச்சு விட்டான். சபையில் ஒருவன், "பிரபு! பிக்ஷுவைப்
பற்றி எந்தவிதமான தகவலும் வரவில்லையா?" என்று கேட்டான்.
"பிக்ஷுவிடமிருந்து சேதி வந்து நெடுங்காலம் ஆகிறது. வடபெண்ணைக்
கரையில் வஜ்ரபாஹு என்னும் களப்பாளத் தலைவனிடம் அனுப்பிய
ஓலைக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மதுரைப்
பாண்டியனைப் பார்ப்பதற்கு அவர் போயிருந்த சமயத்தில், ஏதேனும்
நேர்ந்து விட்டதோ, என்னவோ? ஆகா! பிக்ஷு மட்டும்
இப்போதிருந்தால் உங்களைப் போல விழித்துக் கொண்டு இருப்பாரோ?
ஒற்றர் தலைவரே! புத்த பிக்ஷு என்ன ஆகியிருப்பாரென்று
கண்டுபிடிக்கும்படியாக எட்டு மாதத்திற்கு முன்னாலேயே சொன்னேனே?
இதுவரை ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று கேட்க, ஒற்றர் படைத்
தலைவன் தலை குனிந்து கொண்டான்.
பிறகு புலிகேசி
அங்கே எல்லோருக்கும் முதலில் இருந்தவனைப் பார்த்து,
"சேனாதிபதி, உமக்கு என்ன தோன்றுகிறது? முற்றுகையைத் தொடர்ந்து
நடத்த வேண்டியதுதானே? மகேந்திர பல்லவனைப் பணியச் செய்ய இன்னும்
எத்தனை காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான்.
அதற்கு வாதாபி சேனாதிபதி, "மதில் மேல் காணப்படும் பல்லவ
வீரர்கள் கொஞ்சம் கூட வாட்டமின்றிக் கொழுத்தே
காணப்படுகிறார்கள். ஆனால், நம்முடைய வீரர்களுக்கு இப்போது அரை
வயிறு உணவுதான் கொடுக்கிறோம். இன்னும் ஒரு மாதம் போனால்
அதுவும் கொடுக்க முடியாது. சுற்றுப்புறத்தில் பத்துக்
காததூரத்திற்கு ஒரு தானிய விதை கூடக் கிடையாது" என்றார்.
புலிகேசியின்
முகத்தில் கோபம் கொதித்தது, "ஆமாம்! ஆமாம்! எப்போது
பார்த்தாலும் இந்தப் பஞ்சப் பாட்டுத்தான்! இம்மாதிரி மூக்கால்
அழுவதைத் தவிர, வேறு ஏதாவது யோசனை சொல்லுவதற்கு இங்கு யாரும்
இல்லையா?" என்று கோபக் குரலில் புலிகேசி கேட்க, படைத்
தலைவர்களில் ஒருவன், "பிரபு! காவேரிக் கரையில் ஆறு மாத
காலமாகப் பாண்டிய ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். சோழ
வளநாட்டில் சென்ற வருஷம் நன்றாக விளைந்த தானியம் ஏராளமாக
இருக்கிறது. ஜயந்தவர்ம பாண்டியருக்கு ஓலையனுப்பினால், ஒருவேளை
அவர் உணவு அனுப்பக்கூடும்," என்றான்.
இதைக் கேட்ட
புலிகேசி சற்று நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு
திடீரென்று துள்ளிக் குதித்து எழுந்து, எல்லாரையும் ஒரு தடவை
சுற்றிப் பார்த்து விட்டு, "என்ன செய்வதென்று தீர்மானித்து
வட்டேன். இனிமேல் நான் இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தால்
எனக்குப் பைத்தியமே பிடித்து விடும். சேனாதிபதி! நீர் இங்கேயே
நமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் முற்றுகையை நடத்திக்
கொண்டிரும். ஓர் இலட்சம் வீரர்களுடன் நான் தெற்கே புறப்பட்டுச்
சென்று பாண்டிய மன்னனை நேரில் பார்த்து விட்டு வருகிறேன்.
யானைப் படை என்னுடன் வரட்டும். ஆஹா! வாதாபியிலிருந்து
புறப்பட்ட போது கொழு கொழுவென்றிருந்த நம் யானைகள் உணவில்லாமல்
எப்படி மெலிந்து போய் விட்டன! காவேரிக் கரையில் நம்
யானைகளுக்கு நிறைய உணவு கிடைக்குமல்லவா?" என்றான்.
அப்போது ஒற்றர்
படைத் தலைவன், "பிரபு! தாங்கள் அப்படிச் சிறு படையுடன் போவது
உசிதமா? பாண்டியனுடைய நோக்கம் எவ்விதம் இருக்குமோ?" என்று
கூறியதற்குப் புலிகேசிப், "பாண்டியனுடைய நோக்கம் என்னவாக
இருந்தாலும் என்ன? அவன் நம்மோடு போர் செய்யத் துணிய மாட்டான்.
அவன் மோசக் கருத்துள்ளவனாயிருந்தாலும் என்ன செய்து
விடமுடியும்? காவேரிக் கரையில் ஒளிந்து கொள்வதற்குக் கோட்டை
ஒன்றும் இல்லை. எதிரி போர்க்களத்தில் நிற்கும் வரையில்
எனக்குப் பயமும் இல்லை" என்றான்.
காஞ்சி மாநகரில்,
பிரதான மந்திராலோசனை மண்டபத்தில் சபை கூடியிருந்தது. மந்திரி
மண்டலத்தாரும் அமைச்சர் குழுவினரும் பிரசன்னமாகியிருந்தார்கள்.
சக்கரவர்த்தியும், குமார சக்கரவர்த்தியும் சிம்மாசனங்களில்
நடுநாயகமாக வீற்றிருக்க, அருகே ஒரு தனிப் பீடத்தில் சேனாதிபதி
கலிப்பகையும் அமர்ந்திருந்தார். தளபதி பரஞ்சோதியை மட்டும்
அவ்விடத்திலே காணவில்லை. கோட்டைப் பாதுகாப்பு முயற்சியில்
ஈடுபட்டிருந்தபடியால் அவரால் மந்திராலோசனைக்கு வரமுடியவில்லை
போலும்.
சபையில்
கூடியிருந்தவர்களின் முகத்திலெல்லாம் இலேசாகக் கவலைக் குறி
தோன்றியது. எல்லோரையும் காட்டிலும் அதிகமான கவலை, சபையில்
எழுந்து நின்ற பண்டகசாலை அமைச்சர் பராந்தக உடையார் முகத்தில்
காணப்ட்டது. "உடையாரே! முற்றுகை ஆரம்பிக்கும் சமயத்தில் நீர்
உறுதியாகச் சொன்னீரல்லவா? குறைந்தது பதினைந்து மாதத்துக்கு
வேண்டிய தானியங்களை நம் பண்டகசாலைகளில்
பத்திரப்படுத்தியிருப்பதாக! முற்றுகை ஆரம்பித்து ஏழு மாதந்தானே
ஆகிறது? இன்னும் எட்டு மாதத்துக்கு இருக்க வேண்டுமே? மூன்று
மாதத்துக்குத் தான் தானியம் இருக்கும் என்று சொல்கிறீரே? அது
எப்படி?" என்று சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர பல்லவரின்
குரல் மிகக் கடுமை பெற்றிருந்தது. அவருடைய முகத்தில்
சுருக்கங்கள் அதிகமாயிருந்தன.
பராந்தக உடையார்
குரலில் கலக்கத்துடனும், சொல்லில் தடுமாற்றத்துடனும் கூறினார்;
"பல்லவேந்திரா! நான் எதிர்பார்த்தபடி சில காரியங்கள்
நடக்கவில்லை. எதிர்பாராத காரியங்கள் சில நடந்து விட்டன. நகரை
விட்டு வௌியேறிய ஜனங்கள் பலர், புள்ளலூர்ச் சண்டைக்குப் பிறகு
நகருக்குத் திரும்பி வந்து விட்டார்கள். தொண்டை மண்டலத்திலுள்ள
சிற்பிகள் அனைவரையும் தலைநகருக்குள்ளே கொண்டு வந்து சேர்க்க
வேண்டுமென்று தங்களுடைய ஆக்ஞை பிறந்தது. இதனால் ஐயாயிரம் பேர்
அதிகமானார்கள். நமது கடிகைகள்-கல்லூரிகள் எல்லாவற்றையும் மூடி
ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் வௌியே அனுப்பி விடலாமென்று
முதலில் யோசனை செய்திருந்தோம். கடைசி நேரத்தில் தாங்கள்
அவ்விதம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுயிட்டீர்கள்."
"இவ்வளவுதானா?
இதனாலேயே ஐந்து மாதங்களுக்குரிய உணவு குறைந்து போய்விட்டதா?"
என்று சக்கரவர்த்தி கேட்டார். "அடியேனும் ஒரு பெரிய தவறு
செய்து விட்டேன். நகரில் உள்ள புருஷர்கள், ஸ்திரீகள்,
குழந்தைகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு, பதினைந்து
மாதத்துக்கு உணவு இருப்பதாகச் சொன்னேன். கறவைப் பசுக்கள்,
கோயில் மாடுகள், குதிரைகள் இவற்றைக் கணக்கில் சேர்க்கவில்லை.
மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் வைக்கோலும் புல்லும்
கிடைக்காதபடியால் தானியத்தையே தீனியாகக் கொடுக்க வேண்டியதாகி
விட்டது" என்றார் அமைச்சர். "நல்லது, பராந்தகரே! தொண்டைமான்
இளந்திரையன் வம்சத்தில் பிறந்த காஞ்சி மகேந்திர பல்லவன்,
வாதாபிப் புலிகேசியிடம் சரணாகதியடைய நேர்ந்தால் அந்தப் பழியைக்
கோவில் மாடுகள் மீதும், தேர்க் குதிரைகள் மேலும் போட்டு
விடலாமல்லவா?" என்று கூறி விட்டுச் சக்கரவர்த்தி சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் கோபம் அதிகமாய்த் தொனித்ததா, ஏளனம்
அதிகமாய்த் தொனித்ததா என்று சொல்வதற்கு முடியாமல் இருந்தது.
அப்போது
நரசிம்மவர்மர் துள்ளி எழுந்து, "அப்பா! என்ன வார்த்தை
சொன்னீர்கள்? வாதாபிப் புலிகேசியிடம் மகேந்திர பல்லவர்
சரணாகதியடைவதா? ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் ஏழு மாதமாக மூன்று
வேளை உண்டும், உறங்கியும் இந்தக் கோட்டைக்குள்ளே எதற்காக
அடைபட்டுக் கிடக்கிறார்கள்? தந்தையே! நமது பண்டகசாலை
அமைச்சரின் கணக்குப் பிழையும் ஒருவிதத்தில் நல்லதாகவே
போயிற்று. இப்போதாவது கட்டளையிடுங்கள், கோட்டைக்குள்ளே ஏழு
மாதம் ஒளிந்து கொண்டிருந்தது போதும். உலகமெல்லாம் நம்மைப்
பார்த்துச் சிரித்தது போதும். அப்பா! இப்போதாவது வாதாபிப்
படைகளைத் தாக்கி நிர்மூலம் செய்யும்படி அடியேனுக்குக்
கட்டளையிடுங்கள்!" என்று ஆத்திரமும் அழுகையுமாய்க் கூறி
விட்டு, மகேந்திர பல்லவரின் முன்னால் தரையில் விழுந்து அவருடைய
பாதங்களைப் பற்றிக் கொண்டார். மகேந்திர பல்லவர் தமது கண்களில்
துளித்த நீர்த் துளியை மறைப்பதற்காக முகத்தைப் பின்புறமாகத்
திருப்பினார்.
ஒரு நொடி
நேரத்தில் சக்கரவர்த்தி மீண்டும் சபையின் பக்கம்
திரும்பியபோது, அவர் முகத்தில் பழையபடி கடுமையும் ஏளனப்
புன்னகையும் குடிகொண்டிருந்தன. தம் பாதங்களைப் பற்றிக் கொண்டு
தரையில் கிடந்த மாமல்லரை அவர் தூக்கி நிறுத்தி, "மாமல்லா!
உன்னை வெகு காலம் நான் அந்தப்புரத்திலேயே விட்டு வைத்திருந்தது
பிசகாய்ப் போயிற்று. மூன்று தாய்மார்களுக்கு மத்தியில் நீ ஒரே
மகனாக அகப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா? அதனாலேதான்
பெண்களுக்குரிய குணங்களான ஆத்திரமும் படபடப்பும் உன்னிடம்
அதிகமாய்க் காணப்படுகின்றன. உலகில் வீரச் செயல்கள் புரிய
விரும்பும் ஆண் மகனிடம் இத்தகைய படபடப்பும் ஆத்திரமும்
இருக்கக் கூடாது. நரசிம்மா! மல்யுத்தத்தில் மகா நிபுணனான
உனக்கு இதை நான் சொல்ல வேண்டுமா?" என்றார். மாமல்லருடைய
உதடுகள் துடித்தன; தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்ல
அவருடைய உள்ளத்திலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன. ஆனால்,
அதிக ஆத்திரத்தினாலேயே அவரால் பேச முடியாமற் போய் விட்டது.
மகனுடைய நிலையைக்
கண்ட மகேந்திர பல்லவர், "குழந்தாய்! நீண்ட காலமாகப் பொறுத்து
வந்திருக்கிறாய், இன்னும் சில நாள் பொறு. நீயும் நமது பல்லவ
வீரர்களும் உங்களுடைய வீர தீரத்தை எல்லாம் காட்டுவதற்குரிய
சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப் போகிறது. வாதாபிப்படை, இன்னும்
சில தினங்களுக்குள் கோட்டையைத் தாக்குமென்று
எதிர்பார்க்கிறேன். அந்தத் தாக்குதல் வெகு கடுமையாயிருக்கும்
என்றும் எண்ணுகிறேன். அதைச் சமாளிப்பதற்கு நாமும் நமது பூரண
பலத்தையும் பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும். பல்லவர்
வீரத்துக்கு மகத்தான சோதனை வரப் போகிறது. அதற்கு நாம்
எல்லோரும் ஆயத்தமாக வேண்டும்!" என்றார். இவ்விதம் மாமல்லனைப்
பார்த்துக் கூறிய பிறகு, பண்டகசாலை அமைச்சரைப் பார்த்து
மகேந்திர பல்லவர், "பராந்தகரே! இன்று முதல் காஞ்சி நகரில்
உள்ளவர் அனைவரும், மாடுகளும் குதிரைகளும் உட்பட சமண நெறியை
மேற்கொள்வோமாக!" என்றதும், சபையில் இருந்த அனைவருக்குமே
தூக்கிவாரிப் போட்டது.
"ஒரே ஒரு
காரியத்தில் மட்டும்தான் சொல்கிறேன்; அதாவது, இரவில் உணவு
உட்கொள்வதில்லையென்ற சமண முனிவர்களின் விரதத்தை எல்லாரும்
கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த உணவுப்
படியில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து விடுங்கள்.
அரண்மனைக்கும் ஆலயங்களுக்கும் உள்படச் சொல்லுகிறேன். இனிமேல்
காஞ்சி நகரில் உள்ளவர்களுக்கெல்லாம் தினம் இரண்டு வேலைதான்
உணவு. இதன்மூலம் கைவசமுள்ள தானியத்தை நாலரை மாதம் நீடிக்குமாறு
செய்யலாமல்லவா? மந்திரிமார்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
என்று சக்கரவர்த்தி கேட்கவும், முதன்மந்திரி சாரங்கதேவர்,
"பிரபு! கோட்டை முற்றுகை நாலரை மாதத்துக்கு மேல்
நீடிக்காதென்று தாங்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது"
என்றார்.
"இல்லை! நாலரை
மாதம் கூட நீடிக்குமென்று நான் நினைக்கவில்லை.
முன்ஜாக்கிரதையாக உணவை மூன்றில் ஒரு பங்கு குறைக்கலாமென்று
சொன்னேன். புலிகேசி இன்னும் ஒரு வாரத்தில் கோட்டையைத் தாக்கத்
தொடங்குவான் என்று எதிர்பார்க்கிறேன்..." "பிரபு! அப்படித்
தாங்கள் எதிர்பார்ப்பதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தான்
வேண்டும்" என்றார் சாரங்க தேவர். "ஆம்; அவற்றை உங்களுக்கும்
சொல்ல விரும்புகிறேன்! சபையோர்களே! உணவு நெருக்கடியைப்
பொறுத்தவரையில் நம்மைக் காட்டிலும் புலிகேசியின் நிலைமை
ஆபத்தானது. வாதாபிப் படையினர் மூன்று மாத காலமாக அரை வயிறு
உணவு உண்டுதான் ஜீவித்து வருகிறார்கள். புலிகேசி
வாதாபியிலிருந்து புறப்பட்ட போது ஐந்து இலட்சம் வீரர்களுடும்,
பதினையாயிரம் யானைகளுடனும் புறப்பட்டான். இப்போது வாதாபிப்
படையில் மூன்றரை இலட்சம் வீரர்கள்தான் இருக்கிறார்கள்.
பதினாயிரம் யானைகள் மட்டுமே இருக்கின்றன. சபையோர்களே! இன்னும்
ஒரு மாதம் போனால் இவர்களிலும் பாதிப் பேர் பஞ்சத்திலும்
நோயிலும் மடிந்து போவார்கள். யானைகளின் கதி என்ன ஆகுமோ
தெரியாது. ஆகையால், புலிகேசி சீக்கிரத்தில் கோட்டையைத்
தாக்கித்தான் ஆகவேண்டும். இந்தத் தாக்குதல் வெகுமூர்க்கமாய்
இருக்குமென்பதிலும் சந்தேகமில்லை."
முதல் அமைச்சர்
ரணதீர பல்லவராயர், "பல்லவேந்திரா! இந்த மாதிரி அதிசயத்தை
இவ்வுலகம் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. முற்றுகைக்கு
உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம்
சரண் அடைந்ததும் உண்டு. ஆனால் முற்றுகை இடுகிறவர்கள்
பட்டினிக்கு ஆளானார்கள் என்று கதைகளிலே கூடக் கேட்டதில்லை!"
என்றார். "ஆம் பல்லவராயரே! திரிபுரம் எரித்த பெருமானின்
அருளினால் அம்மாதிரி அதிசயம் நடக்கிறது. தொண்டை மண்டலத்துக்
கிராமங்களில் உள்ள ஜனங்கள் எதிரிகளுக்கு ஓர் ஆழாக்கு அரிசியோ,
ஒரு பிடி கம்போ கொடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். கையிலுள்ள
தானியத்தையெல்லாம் வெகு பத்திரமாகப் புதைத்து
வைத்திருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் கூட
நமக்குப் பெரிய உதவி செய்திருக்கின்றன. சென்ற தை மாதத்தில்
எக்காரணத்தினாலோ நம் நாட்டு ஏரிகள் எல்லாம் திடீர் திடீரென்று
உடைத்துக் கொண்டு விட்டன. அப்படி ஏற்பட்ட உடைப்பு
வெள்ளத்தினால் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் எல்லாம்
பாழாயின. கோடைக் காலத்துச் சாகுபடியும் நடக்கவில்லை.
இதனாலெல்லாம் புலிகேசியின் போர் வீரர்களுக்கும் போர்
யானைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை."
சேனாபதி கலிப்பகை
எழுந்து, "சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் நமது கட்சியில்
சேர்ந்து உடைத்துக் கொண்டு பகைவர்களைப் பட்டினிக்குள்ளாக்கியது
உண்மைதான். ஆனால், அவை தாமாக உடைத்துக் கொள்ளவில்லை; விசித்திர
சித்தரான நமது மன்னரின் மகேந்திர ஜால வித்தையிலேதான் ஏரிகள்
எல்லாம் உடைத்துக் கொண்டன" என்றார். "நான் செய்தது
ஒன்றுமில்லை; சத்ருக்னனுடைய தலைமையில் நமது ஒற்றர் படை வெகு
நன்றாய் வேலை செய்திருக்கிறது. தொண்டை மண்டலத்திலுள்ள கோட்டத்
தலைவர்களும் வெகு திறமையுடன் காரியம் செய்திருக்கிறார்கள்.
நாட்டில் பஞ்சம் வந்தாலும் வரட்டும் என்று ஏரிகள்,
அணைக்கட்டுகள் எல்லாவற்றையும் அவர்கள் வெட்டி
விட்டிருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்துப் பிரஜைகள்
இந்த யுத்தத்தில் செய்திருக்கும் உதவிக்கு நூறு ஜன்மம் எடுத்து
நான் அவர்களுக்குத் தொண்டு செய்தாலும் ஈடாகாது" என்று
சக்கரவர்த்தி கூறிய போது அவருடைய குரல் உணர்ச்சியினால்
தழுதழுத்தது.
சற்று நேரம்
சபையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு முதல் மந்திரி
சாரங்கதேவர், "பல்லவேந்திரா! புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக்
கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே! பாண்டியன்
ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம்
அல்லவா?" என்றார். "ஆம் மந்திரி! பாண்டியனிடம் உணவுப் பொருள்
உதவி கோருவதற்காகத் தான் புலிகேசி தெற்கே போயிருக்கிறான்.
ஆனால் அந்த உதவி அவனுக்குக் கிடைக்கும் என்று நான் கருதவில்லை.
தவிரவும், புலிகேசி சீக்கிரத்தில் வாதாபிக்குத் திரும்ப
வேண்டிய காரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சபையோர்களே! ஒவ்வொரு
நிமிஷமும் தெற்கேயிருந்து முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே மகேந்திர பல்லவர்
மண்டபத்தின் வாசற் பக்கம் பார்த்தார். பார்த்த உடனே "ஆ இதோ
செய்தி வருகிறது!" என்றார்.
காவலன் ஒருவன்
உள்ளே வந்து, சக்கரவர்த்திக்கு அடி வணங்கி, அவருடைய காதோடு ஏதோ
இரகசியமாகச் சொன்னான். சாதாரணமாக எந்தச் சந்தர்ப்பத்திலும்
ஆச்சரியமான அறிகுறியைக் காட்டாத மகேந்திர பல்லவரின் முகம்,
மேற்படி காவலன் கூறியதைக் கேட்டதும் எல்லையற்ற வியப்பைக்
காட்டியது. "சபையோர்களே! நீங்களாவது நானாவது சற்றும்
எதிர்பாராத அதிசயமான செய்தி வந்திருக்கிறது. என்னாலேயே நம்ப
முடியவில்லை. விசாரித்து உண்மை தெரிந்து கொள்ளப் போகிறேன்.
இப்போது சபை கலையட்டும், இன்றிரவு மறுபடியும் சபை கூட
வேண்டும். அப்போது எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். மாமல்லா!
நீயும் அரண்மனைக்குப் போய் உன் தாய்மாரைப் பார்த்து விட்டு
வா!" என்று கூறிக் கொண்டே மகேந்திர பல்லவர் எழுந்து சபா
மண்டபத்தின் வாசலை அடைந்து, அங்கு ஆயத்தமாய் நின்ற குதிரையின்
மீது தாவி ஏறினார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நீண்ட
காலத்திற்குப் பிறகு நாம் மறுபடியும் கண்ணபிரானுடைய
வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது, அங்கே 'குவா குவா' என்ற
சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிடுகிறோம். வாசற்படியில் சிறிது
தயங்கி நின்று விட்டு உள்ளே சென்றோமானால், அஸ்தமன வேளையின்
மங்கிய வௌிச்சத்தில் அங்கே ஓர் அபூர்வமான காட்சியைக்
காண்கிறோம். விபூதி ருத்ராட்சமணிந்து கனிந்த சிவப்பழமாய்த்
தோற்றமளித்த ஒரு சைவப் பெரியார் நிற்கிறார். அவருடைய நீட்டிய
இரு கரங்களிலும் ஒரு பச்சைக் குழந்தை - ஆறு மாதத்துக் குழந்தை
காணப்படுகிறது - மூக்கும் முழியுமாக வெண்ணெய் தின்ற கண்ணனைப்
போல் கிண்ணென்றிருந்த அந்தக் குழந்தைதான் 'குவா குவா' என்று
அழுகிறது. அந்தச் சைவப் பெரியாருக்கு எதிரில் கண்ணபிரானும்,
கமலியும் நின்று புன்னகை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர்,
குழந்தையைக் கமலியின் கைகளில் விட்டு விடப் பார்க்கிறார். கமலி
குழந்தையை வாங்கிக் கொள்ள மறுத்துப் பின்வாங்குகிறாள். "நான்
என்ன செய்வேன்? பாட்டனைக் கண்டால் பேரனுக்கு அவ்வளவு ஆசை,
என்னிடம் வர மாட்டேனென்கிறான்" என்று சொல்கிறாள் கமலி.
இதையெல்லாம் பார்த்துக் கண்ணபிரான் சந்தோஷப்பட்டுக் கொண்டே
நிற்கிறான். குழந்தை 'குவா குவா' என்று கத்திக் கொண்டே
காலையும் கையையும் உதைத்துக் கொள்கிறது. கிழவர்..."கமலி!
உன்னுடைய பொல்லாத்தனம் உன் குழந்தையிடமும் இருக்கிறது!"
என்கிறார்.
அச்சமயம்,
வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து அதாவது அரண்மனைத்
தோட்டத்திலிருந்து மணி அடிக்கும் சப்தம் கேட்கிறது. பெரியவர்
அதைக் கேட்டதும் அதிக பரபரப்பை அடைகிறார். அப்பால் இப்பால்
பார்க்கிறார், குழந்தையைத் திடீரென்று தரையில் விட்டு விட்டுத்
தோட்டத்தைப் பார்க்க ஓட்டம் பிடிக்கிறார். கமலி தன் கண்களில்
தீப்பொறி பறக்க, "பார்த்தாயா, உன் தகப்பன் சாமர்த்தியத்தை?
பச்சைக் குழந்தையைத் தரையிலே போட்டு விட்டு ஓட எப்படித்தான்
மனம் வந்ததோ?" என்றாள்.
"கமலி! அப்பாவின்
பேரில் குற்றம் இல்லை. நாதப் பிரம்மம் நேரிலே வந்து கூப்பிடும்
போது அவர் என்ன செய்வார்?" "நாதப் பிரம்மமும் ஆச்சு! நாசமாய்ப்
போனதும் ஆச்சு! வெறும் ஆஷாடபூதி. அவ்வளவு வைராக்கிய
புருஷாயிருந்தால், காட்டுக்குத் தபசு செய்யப் போவதுதானே?
அரண்மனைத் தோட்டத்தில் சிங்கார மண்டபத்தில் என்ன வேலை? சமாதி
கட்டிக் கொள்ள இங்கேதானா இடம் அகப்பட்டது? அது போகட்டும், என்
பொல்லாத்தனமெல்லாம் என் குழந்தைக்கும் வந்திருக்கிறதாமே!
கிழவரின் வாய்த் துடுக்கைப் பார்த்தாயா? இவருடைய மகன் மட்டும்
ரொம்பச் சாதுவாம்! பார்! நான் போய் விடுகிறேன். என் தங்கை
சிவகாமியைப் பார்க்க வேண்டுமென்று எனக்குக் கூட ஆசையாய்
இருக்கிறது. கோட்டைக் கதவு திறந்ததும் இந்தப் பொல்லாத
பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய் விடுகிறேன்! இந்த
அரண்மனைச் சிறையில் யார் இருப்பார்கள்?"
இப்படி கமலி
மூச்சு விடாமல் பேசிக் கொண்டே தரையில் கிடந்த குழந்தையை
எடுக்கப் போனாள். கண்ணனும் அதே சமயத்தில் குழந்தையை
எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். இருவருடைய தலைகளும் மோதிக்
கொண்டன. "இந்தப் பொல்லாதவனை நீ ஒன்றும் எடுக்க வேண்டாம்!"
என்றாள் கமலி. "அப்படித்தான் எடுப்பேன்; நீ என்ன சொல்கிறது?"
என்றான் கண்ணன். இப்படி இவர்கள் குழந்தையைத் தரையிலிருந்து
யார் எடுப்பது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே,
வாசலில் குதிரைச் சப்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம்
யாரோ உள்ளே வந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்த
கண்ணபிரானும் கமலியும் அப்படியே பார்த்தது பார்த்தபடி
பிரமித்து நின்றார்கள்.
ஏனெனில்,
அவ்விதம் திடீரென்று வந்தவர் சாஷாத், மகேந்திர பல்லவ
சக்கரவர்த்திதான்! "ஓஹோ! இங்கேயும் ஒரு யுத்தமா? நாட்டிலே
யுத்தம் நின்று விடும் போல் இருக்கிறது. ஆனால், உங்கள் வீட்டு
யுத்தம் மட்டும் நிற்கவே நிற்காது போலிருக்கிறதே!" என்று
சக்கரவர்த்தி கூறியதும் தம்பதிகள் இருவரும் பெரிதும்
வெட்கமடைந்து மறுமொழி சொல்ல முடியாமல் நின்றார்கள். பிறகு
மகேந்திர பல்லவர், "கமலி! உன் குழந்தை சௌக்கியமாயிருக்கிறதா?"
என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து குழந்தையின் முகத்தைப்
பார்த்து விட்டு, "கண்ணனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது!
சின்னக் கண்ணன் என்றே பெயர் வைத்து விடலாம். மாமல்லனுக்கும்
கலியாணமாகி இந்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தால், அரண்மனை
கலகலவென்று இருக்கும். அரண்மனையில் குழந்தை அழுகைச் சப்தம்
கேட்டு வெகுகாலம் ஆயிற்று!" என்று தமக்குத் தாமே பேசிக்
கொள்கிறவர் போல் சொல்லி விட்டு, "கண்ணா உன் தகப்பனார் எங்கே?"
என்று கேட்டார். "இப்போதுதான் வசந்த மண்டபத்துக்குப் போனார்,
பிரபு!" என்றான் கண்ணன்.
"ஆ! மகரிஷி யோக
சாதனைக்குப் போய் விட்டாரா!" என்று மகேந்திரர் கேட்டபோது, கமலி
இலேசாகச் சிரித்தாள். "கமலி சிரிக்கிறாள்! உங்களைப் போல் இளம்
வயதாயிருப்பவர்களுக்கு யோகம், சமாதி என்றால் சிரிப்பாய்த்தான்
இருக்கும். வயதாகி உலகத்தில் விரக்தி ஏற்பட்டால் அப்புறம்
நீங்களும் போகும் வழிக்குக் கதி தேடலாமென்று யோசிப்பீர்கள்.
போகட்டும்; உங்களுடைய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள். நான்
யோகியைப் பார்த்து விட்டுப் போகிறேன்" என்று சொல்லிக்
கொல்லைப்பக்கம் நோக்கிச் சென்றவர், வாசற்படியண்டை சற்று
நின்று, "கமலி! உன் சிநேகிதி சிவகாமியைக் கூடிய சீக்கிரத்தில்
நீ பார்க்கலாம்!" என்று கூறி விட்டு மேலே நடந்தார்.
சக்கரவர்த்தி
மறைந்ததும், கமலி, "கண்ணா! இதென்ன சக்கரவர்த்தி திடீரென்று
வந்து நம் மானத்தை வாங்கி விட்டார்! சிவகாமி கூடிய சீக்கிரம்
வருவாள் என்று அவர் சொன்னதைக் கேட்டாயா, கண்ணா? யுத்தம்
சீக்கிரத்தில் முடிந்து விடப் போகிறதா? சளுக்கர்கள் தோற்று
ஓடிப் போய் விட்டார்களா?" என்று ஏதேதோ கேட்டாள். அந்தக்
கேள்விகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய்க் கண்ணபிரான்
ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று யோசனையை நிறுத்தி,
"கமலி! கொஞ்ச நாளாகவே எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் இருந்தது.
அது இன்றைக்கு ஊர்ஜிதமாயிற்று!" என்றான். "என் பேரில் சந்தேகம்
வந்து விட்டதா? அது என்ன சந்தேகம்?"
"உன் பேரில்
எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை. சந்தேகம் என் தகப்பனார்
பேரில்தான். அவர் ஏதோ யோகம், தியானம் நாதப்பிரம்ம உபாசனை
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு நந்தவன மண்டபத்துக்குப் போய் இரவு
பகலாய் உட்கார்ந்திருக்கிறாரே, அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க
வேண்டுமென்று சந்தேகித்தேன். அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று
இன்று." "என்ன சந்தேகம்? எப்படி ஊர்ஜிதமாயிற்று?" "கிட்ட வா,
சொல்கிறேன்; ரொம்ப ரொம்ப அந்தரங்கமான விஷயம். இந்தப் பயலின்
காதிலே கூட விழக் கூடாது! கமலி, அப்பாவின் யோக மண்டபத்தில் ஒரு
சுரங்க வழி இருக்கிறது. அது கோட்டைக்கு வௌியே போகிறது.
சக்கரவர்த்தியின் ஒற்றர்கள் அதன் வழியாக அடிக்கடி வந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பார்த்தாயா? இந்தப்
பயல் நான் சொல்வதை எப்படி ஒற்றுக் கேட்டுக்
கொண்டிருக்கிறான்...!" என்று கண்ணபிரான் சொல்லிக் குழந்தையின்
கன்னத்தை இலேசாகக் கிள்ள, குழந்தை வீர் என்று கத்த ஆரம்பிக்க,
கமலி கண்ணபிரானைச் சண்டை பிடிக்க, கண்ணபிரான், 'அவனும் என்
கன்னத்தை வேணுமானால் கிள்ளட்டும்!' என்று கூற, கமலி
குழந்தையைப் பார்த்து, 'என் கண்ணே!' என்று அதற்கு முத்தம்
கொடுக்கப் போக, குறுக்கே கண்ணபிரான் கன்னத்தை நீட்ட, கமலி
அவனைச் சண்டை பிடிக்க, இப்படி ஏகப் பூசலாகி விட்டது.
இதற்கிடையில்
மகேந்திர சக்கரவர்த்தி அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து
வசந்த மண்டபத்துக்குச் சென்றார். காலடிச் சப்தத்தைக்
கேட்டதும், சிவனடியாராக விளங்கிய அசுவபாலர் வௌியில் தலையை
நீட்டி, "பிரபு, தாங்கள்தானே; நல்ல சமயத்தில் வந்தீர்கள்;
இப்போதுதான் மணி அடித்தது!" என்று கூறி, மண்டபத்தின்
நடுமத்தியில் இருந்த சிவலிங்கத்தை அப்பால் நகர்த்தவும்,
சிவலிங்கம் இருந்த இடத்தில் ஒரு பள்ளமும் அதற்குள் மங்கிய
இலேசான வௌிச்சமும் தெரிந்தன. சில விநாடிகளுக்கெல்லாம் அந்தப்
பள்ளத்திலிருந்து சத்ருக்னனுடைய தலை எழுந்தது. பிறகு
சத்ருக்னனின் முழு உருவமும் வௌியில் வந்தது.
"சத்ருக்னா?
உனக்காகக் காத்திருந்து காத்திருந்து போதும் போதும் என்று
ஆகிவிட்டது. ஏன் இவ்வளவு தாமதம்? போன காரியம் என்ன? காயா?
பழமா?" என்று மகேந்திர பல்லவர் கேட்டார். "பல்லவேந்திரர்
எடுத்த காரியம் ஏதாவது காயாவது உண்டா? பழந்தான். சுவாமி!
எல்லாம் தாங்கள் போட்ட திட்டப்படியே நடந்தது. வேங்கித்
தூதனுடன் போன சளுக்க வீரர்களிடம் குண்டோதரன் அகப்பட்டுக்
கொண்டான். இருவரும் கொள்ளிடக் கரையில் புலிகேசியின்
முன்னிலைக்குக் கொண்டு போகப்பட்டார்கள்."
"குண்டோதரனை
அப்புறம் பார்த்தாயா? அல்லது அவனிடமிருந்து ஏதேனும் செய்தி
உண்டா?" "அதுதான் இல்லை; அவனுக்காகத்தான் இத்தனை நேரம்
காத்துப் பார்த்தேன். புலிகேசி மகா மூர்க்கன் என்று
கேள்வியாச்சே, சுவாமி! குண்டோதரனுடைய கதி என்ன ஆயிற்றோ என்று
சிறிது கவலையாயிருக்கிறது." "குண்டோதரனுக்கு ஒன்றும்
நேர்ந்திராது, சத்ருக்னா!" "எப்படிச் சொல்லுகிறீர்கள்? பிரபு?"
"நம்முடைய யுக்தி நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான
பலனை அளித்துவிட்டது. கேள், சத்ருக்னா! புலிகேசி சமாதானத் தூது
அனுப்பியிருக்கிறான்! இந்த நேரம் அனுடைய தூதர்கள் என் மறு
மொழிக்காகத் தெற்குக் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள்.
நான் உன்னைச் சந்தித்து விட்டுப் பிறகு முடிவாக மறுமொழி
சொல்லலாம் என்றெண்ணி அவசரமாக இங்கே வந்தேன்."
"பிரபு!
புலிகேசியை நம்பலாமா? மகா வஞ்சகன் என்று சொல்லுகிறார்களே?"
என்றான் சத்ருக்னன். "அவநம்பிக்கை கொள்வதற்கு இடமே இல்லை,
சத்ருக்னா! ஆனாலும், குண்டோதரன் திரும்பி வந்தால் அவனைச் சில
விஷயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன்."
இவ்விதம் மகேந்திரர் சொல்லிக் கொண்டிருந்தபோதே சத்ருக்னன்
எந்தப் பள்ளத்திலேயிருந்து வௌிவந்தானோ, அந்தப் பள்ளத்திற்குள்
இருமல் சப்தம் கேட்டது. பேசிக்கொண்டிருந்த இருவரும்
திடுக்கிட்டார்கள். அடுத்த வினாடி அந்தப் பள்ளத்தில்
குண்டோதரனுடைய தலை தெரியவே, அளவிறந்த வியப்போடு ஓரளவு
அமைதியும் அடைந்தார்கள்.
"குண்டோதரா!
உனக்கு நூறு ஆயுசு! இப்போதுதான் உன்னைப்பற்றிப் பேசிக்
கொண்டிருந்தோம். நீ எப்படித் திடீரென்று முளைத்தாய்?" என்று
சக்கரவர்த்தி கேட்க, "பிரபு! தாங்கள் அடிக்கடி 'சத்ருக்னரைப்
பின்பற்றி நட! சத்ருக்னரைப் பின்பற்றி நட!' என்று
சொல்லுவீர்களே, அது மிகக் கடினமான காரியம். இந்த இருட்டுச்
சுரங்க வழியில் இவரைப் பின்பற்ற முயன்று நான் ஓடோடி வந்தும்
இவரைப் பிடிக்க முடியவில்லை!" என்றான் குண்டோதரன். "உன்
வேடிக்கையெல்லாம் அப்புறம் ஆகட்டும்; நீ போன இடத்தில் என்ன
நடந்ததென்று விவரமாகச் சொல்லு" என்று மகேந்திர சக்கரவர்த்தி
கேட்க, குண்டோதரனும், நாம் முன்னமே அறிந்த அவன் வரலாற்றை
விவரமாக கூறி முடித்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அன்றிரவு
இரண்டாம் ஜாமத்தில் மந்திராலோசனை சபை மறுபடியும் கூடிய போது,
சபையில் கூடியிருந்த எல்லோருடைய முகத்திலும் பரபரப்புக்
காணப்பட்டது. வாதாபி வீரர்கள் இருவரும் வெள்ளைக் கொடி
பிடித்துக்கொண்டு தெற்குக் கோட்டை வாசலில் வந்து நின்றதாகவும்
அவர்கள் கொண்டு வந்த ஓலை மகேந்திரச் சக்கரவர்த்தியிடம்
சேர்க்கப்பட்டதாகவும் நகரம் முழுவதும் வதந்தி பரவிவிட்டது.
ஓலையில் என்ன எழுதியிருந்தது, மகேந்திர பல்லவர் என்ன மறு ஓலை
அனுப்பப் போகிறார் என்று அறிந்து கொள்ள அவ்வளவு பேரும் ஆவலாக
இருந்தார்கள். முக்கியமாக, நரசிம்மவர்மரின் முகத்திலே எள்ளும்
கொள்ளும் வெடித்தன. அவருடைய கண்களில் பளிச் பளிச்சென்று
மின்னல் தோன்றி மறைந்தன. தம் பக்கத்தில் நின்ற பரஞ்சோதியுடன்
அடிக்கடி சமிக்ஞா பாஷையினால் அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
அவருடைய மார்பு புயலால் தாக்குண்ட கடலைப் போல் மேலே
பொங்குவதும் கீழே அடங்குவதுமாக இருந்தது.
சக்கரவர்த்தி
வழக்கத்தைவிட மிடுக்கான நடையுடன் வந்து சிம்மாசனத்தில்
அமர்ந்தார். அவர் கையிலிருந்த ஓலை மீது எல்லாருடைய கண்களும்
கவனமும் சென்றன. "சபையோர்களே! இன்று மாலை சபை கலையும்
சமயத்தில் முக்கியமான செய்தியை எதிர்பார்ப்பதாகச் சொன்னேன்.
நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் முக்கியமான
ஆச்சரியமான செய்தி வந்திருக்கிறது. மந்திரிகளே! அமைச்சர்களே!
தளபதிகளே! அனைவரும் கேளுங்கள்! வாதாபிச் சக்கரவர்த்தி
யுத்தத்தை நிறுத்தி விட்டார். சமாதானத்தையும் சிநேகத்தையும்
வேண்டி ஓலை அனுப்பியிருக்கிறார்!" என்று சொல்லி மகேந்திர
பல்லவர் தம் கையிலிருந்த ஓலையைத் தூக்கிக் காட்டியதும் சபையில்
ஏற்பட்ட 'ஹா ஹா' காரத்தையும் மற்றும் பலவியப்பொலிகளையும்,
குதூகல சப்தங்களையும் வர்ணிக்க முடியாது. இவ்வளவுக்கிடையில்
'ஹூம்' என்ற ஆட்சேபிக்கும் சப்தம் ஒன்றும் கிளம்பியது. அது
மாமல்லர் இருந்த இடத்திலிருந்து வந்ததென்பதைச் சொல்ல
வேண்டியதில்லை.
"மந்திரிகளே!
அமைச்சர்களே! உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன். துங்கபத்ரா நதியிலிருந்து நர்மதை நதிவரையிலும்
உள்ள மத்திய பாரத தேசத்தின் ஏக சக்கராதிபதி நம்முடைய
சிநேகத்தைக் கோருகிறார். நம்முடன் சமாதானத்தை நாடுகிறார்.
அவருக்கு நான் என்ன மறுமொழி அனுப்பட்டும்? யுத்தத்தை நிறுத்த
முடியாது; போர் நடத்தியே தீருவோம் என்று சொல்லியனுப்பட்டுமா?
அல்லது பல்லவ குலத்தின் பரம்பரைத் தர்மத்தை அனுசரித்து,
சிநேகத்தைக் கோருகிற வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாமும்
சிநேகத்தைக் கைக்கொள்ளலாமா? சபையோர்களே! நன்றாக யோசித்துச்
சொல்லுங்கள். பதினையாயிரம் யானைப்படையையும், ஐந்து இலட்சம்
காலாட் படையையும் உடைய வாதாபிப் புலிகேசி மன்னர், யுத்தத்தை
நிறுத்திவிட்டு நமது விருந்தினராகக் காஞ்சி நகருக்குள்
பிரவேசிக்க விரும்புகிறார். சில தினங்கள் இங்கே தங்கி
இம்மாநகரின் சிறப்புக்களைப் பார்த்துக் களித்துவிட்டுப் போக
ஆசைப்படுகிறார். அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரிப்போமா
அல்லது கோட்டைக் கதவுகளுக்கு இன்னும் சில தாழ்களைப் போட்டு
அடைப்போமா? உங்களுக்குள்ளே கலந்து யோசித்துக் கொண்டு ஏகமனதாக
அபிப்பிராயத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்றார்
சக்கரவர்த்தி.
பிறகு சற்று
நேரம் சபையில் ஒரே கலகலப்பாய் இருந்தது. மந்திரிகளும்,
அமைச்சர்களும் ஒருவரோடொருவர் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டார்கள்.
கடைசியாக, பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர் பேசுவதற்கு எழுந்து
நின்ற போது, சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.
"பல்லவேந்திரா! தங்களுடைய இராஜ தந்திரத்திலும்
தீர்க்காலோசனையிலும் இச்சபையோர் அனைவருக்கும் பூரண நம்பிக்கை
இருக்கிறது. எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் எப்படிச் செய்ய
வேண்டுமோ, அப்படித் தாங்கள் செய்து முடிப்பீர்கள் என்று
எல்லாரும் உறுதி கொண்டிருக்கிறோம். ஆகவே, முதலில் தங்களுடைய
அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்றார்.
அப்போது
சக்கரவர்த்தி, "பட்டரே! என் அபிப்பிராயத்தைக் கேட்கவும்
வேண்டுமா? அவசியத்துக்கு மேலே ஒரு வினாடியும் யுத்தத்தை
நடத்துவதில் எனக்குப் பிரியமில்லை. ஓர் உயிரேனும் வீணாகச்
சேதம் அடைவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கோட்டைக்குள்
இருக்கும் நாமெல்லோரும் கூடியவரையில் ஒரு குறையும் இல்லாமல்
சௌகரியமாயிருக்கிறோம். ஆனால், கோட்டைக்கு வௌியே கிராமங்களிலும்
பட்டணங்களிலும் உள்ள பல்லவ நாட்டுப் பிரஜைகள்
பெருங்கஷ்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொண்டை மண்டலத்தில்
இந்தக் கோடை காலத்தில் பயிர்த் தொழிலே நடக்கவில்லை. இன்னும்
சில மாத காலத்தில் பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பெரும் பஞ்சம்
பீடிக்கக் கூடும். இப்பேர்ப்பட்ட நிலைமையில், அநாவசியமாக
யுத்தத்தை வளர்த்துவதற்கு எனக்குச் சம்மதமில்லை. மேலும்,
உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியைப் போர்க்களத்தில்
புறங்காட்டச் செய்த வீராதி வீரரான புலிகேசி மன்னர் யுத்தத்தைத்
தாமே நிறுத்தி விட்டு வலிய வந்து சமாதானத்தைக் கோரும் போது
நாம் அதை எதற்காக நிராகரிக்க வேண்டும்? என்னுடைய அபிப்பிராயம்
சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதுதான்" என்ார்.
இவ்விதம்
சக்கரவர்த்தி கூறி நிறுத்தியதும், சாரங்கதேவ பட்டர்,
"பல்லவேந்திரா! தாங்கள் இப்பொழுது கூறிய விஷயங்கள் எல்லாம்
மந்திரி மண்டலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடன்பாடுதான்.
ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி எங்களிலே சிலருக்கு ஓர்
ஐயப்பாடு இருக்கிறது. வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சி
நகருக்குள் விருந்தினராக வரவேற்பது பற்றித் தாங்கள்
சொன்னீர்கள், அது உசிதமான காரியமா என்றுதான்
சந்தேகப்படுகிறோம். வாதாபி மன்னர் பழி பாவங்களுக்கு அஞ்சாத
வஞ்சகர் என்றும், அசுர குணம் படைத்தவர் என்றும்
கேள்விப்பட்டிருக்கிறோம். காஞ்சியைப் பார்க்க வருவதாக அவர்
சொல்லுவதில் ஏதேனும் அந்தரங்க சூழ்ச்சி இருக்கக்கூடுமல்லவா?"
என்றார்.
மகேந்திர பல்லவர்
புன்னகையுடன் கூறினார்; "சாரங்க தேவரே! முன் ஜாக்கிரதையுள்ள
மதி மந்திரிகள் சொல்ல வேண்டியதைத்தான் நீங்கள் சொன்னீர்கள்.
யோசிக்க வேண்டிய காரியந்தான், ஆனால் வாதாபி அரசர்
கேட்டிருப்பதில் ஒருவிதமான சூழ்ச்சியும் இருக்க நியாயமில்லை.
அவருடைய யானைப்படை, காலாட் படை எல்லாவற்றையும் காஞ்சிக்கு
இரண்டு காத தூரத்துக்கப்பால் அனுப்பி விடச் சம்மதிக்கிறார்.
அவருடைய முக்கிய மந்திரிப் பிரதானிகள் பத்துப் பதினைந்து
பேருடன் நிராயுதபாணியாகக் காஞ்சிக்குள் பிரவேசிக்கச்
சித்தமாயிருக்கிறார். சபையோர்களே! நம்மிடம் இவ்வளவு பூரண
நம்பிக்கை வைத்துச் செய்தி அனுப்பியுள்ளவரிடம் நாம்
எவ்விதத்தில் சந்தேகம் கொள்வது? ஆகவே, யுத்தமா, சமாதானமா
என்பதைப் பற்றித்தான் உங்களுடைய அபிப்பிராயம் வேண்டும்!"
மறுபடியும் மந்திரிமார்களும் அமைச்சர்களும் ஒருவரோடொருவர்
கலந்து, ஆலோசித்தார்கள். கடைசியில், சாரங்க தேவபட்டர் எழுந்து,
"பல்லவேந்திரா! மந்திரி மண்டலத்தார் சமாதானத்தையே
விரும்புகிறார்கள். வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சிக்குள்
வரவேற்கும் விஷயத்தில் தங்களுடைய கருத்து எதுவோ அதன்படி
செய்யலாமென்று அபிப்பிராயப்படுகிறார்கள்" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
மந்திரி
மண்டலத்தாரின் ஒருமுகமான அபிப்பிராயத்தை முதன் மந்திரி
சாரங்கதேவ பட்டர் கூறி முடித்ததும் மகேந்திர சக்கரவர்த்தி
சபையோரை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்தார். மாமல்லரும்
பரஞ்சோதியும் இருந்த இடத்தை மட்டும் நோக்காமல் அவருடைய
கண்ணோட்டத்தை முடித்து விட்டு, "சபையோர்களே! உங்களுடைய
அபிப்பிராயத்தை முன்கூட்டியே எதிர்பார்த்து..." என்று
ஆரம்பித்தார். சிங்காசனத்தில் நிலைத்து உட்கார முடியாமல்
தத்தளித்துக் கொண்டிருந்த மாமல்லர் அப்போது துள்ளி எழுந்து,
"பல்லவேந்திரா! சாதுக்களும், சமாதானப் பிரியர்களும், இராஜ
தந்திரிகளும், தீர்க்கதரிசிகளும் வீற்றிருக்கும் இந்த மகா
சபையில் அடியேனும் ஒரு வார்த்தை சொல்லலாமா?" என்று கேட்டார்.
அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் சீறலுடன் நெருப்பைக் கக்கிக்
கொண்டு வரும் அக்னியாஸ்திரத்தைப் போல் அந்தச் சபையில்
இருந்தவர்களின் செவியில் பாய்ந்தது.
மாமல்லருடைய
அக்னியாஸ்திரங்களை, மகேந்திரர் வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து
அடக்க முயன்றார். "மாமல்லா! இதென்ன இப்படிக் கேட்கிறாய்? பல்லவ
சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரிமை பூண்ட குமார
சக்கரவர்த்தியல்லவா நீ? சாம்ராஜ்யத்தின் மந்திராலோசனை சபையில்
கலந்து கொள்ள உனக்கு இல்லாத பாத்தியதை வேறு யாருக்கு உண்டு?
உன் மனத்தில் தோன்றுகிறது என்னவோ, அதைத் தாராளமாகச் சொல்!
ஆனால், நான் உன்னுடைய தந்தையாகையாலும், இச்சபையில்
உள்ளவர்களெல்லாம் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த
பெரியவர்களாதலாலும் எங்களையெல்லாம் அவமதித்துப் பேசும் உரிமையை
நீ கோர மாட்டாயென்று கருதுகிறேன்..." அப்போது சபையில் ஏற்பட்ட
குறுநகைப்பின் ஒலி மாமல்லர் காதில் விழவும் அவர் தம் கண்களில்
தீ எழுமாறு சபையைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தந்தையை
இடைமறித்துக் கூறினார்.
"தந்தையே!
தங்களையாவது இங்குள்ள பெரியவர்களையாவது அவமதிக்கும் எண்ணம்
எனக்குக் கொஞ்சங்கூட இல்லை. பல்லவ குலத்தையும் பல்லவ
இராஜ்யத்தையும் உலகம் என்றென்றைக்கும் அவமதிக்காமல் இருக்க
வேண்டுமே என்றுதான் கவலைப்படுகிறேன். வாழையடி வாழையாக
தொண்டைமான் இளந்திரையன் காலத்திலிருந்து வந்த வீர பல்லவ
குலத்தின் பெருமையைக் குறித்துத் தாங்கள் அடிக்கடி
சொல்லியிருக்கிறீர்கள். பல்லவ குலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது
இதற்கு முன்னால் இவ்விதமெல்லாம் செய்ததுண்டா? போர்க்களத்தில்
எதிரியின் படைகளுக்குப் புறங்காட்டிப் பின் வாங்கி வந்ததுண்டா?
பகைவர்களின் படையெடுப்புக்குப் பயந்து, கோட்டைக்குள்ளே ஒளிந்து
கொண்டதுண்டா? கடைசியாக இப்போது, பல்லவ நாட்டுக்குள்
படையெடுத்து வரத்துணிந்த பாதகனுடன் சமாதானம் செய்து கொள்ளப்
போவதாகச் சொல்லுகிறீர்கள். பல்லவேந்திரா! கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்; நாளைக்கு உலகிலெல்லாம் என்ன பேச்சு ஏற்படும்?
'வாதாபிச் சக்கரவர்த்தி படையெடுத்து வந்த போது பல்லவ
சக்கரவர்த்தி பயந்து கோட்டைக்குள் புகுந்து கொண்டார்;
கடைசியில் சரணாகதி அடைந்து சமாதானம் செய்து கொண்டார்'
என்றுதானே உலகத்தார் சொல்லுவார்கள். புலிகேசி சமாதானத்தை
வேண்டித் தூது அனுப்பினான் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.
பாண்டியனும் சோழனும் சேரனும் களப்பாளனும் பல்லவர்களைப்
பார்த்து நகையாடுவார்கள். புள்ளலூரில் புறங்காட்டி ஓடிய கங்க
நாட்டான் மறுபடியும் துள்ளி எழுவான். உலகம் உள்ளவரைக்கும்
பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட இந்தப் பழி மறையாது." இப்படி
மாமல்லர் கேட்போரின் மான உணர்ச்சியைத் தூண்டும் வீரமுள்ள
வார்த்தைகளைப் பேசிக் கொண்டு வந்த போது, சபையிலே கலகலப்பு
ஏற்பட்டது. மாமல்லருடைய வார்த்தைகளில் உண்மை இருக்கிறது என்பதை
ஆமோதித்து ஒருவரோடொருவர் கசமுசவென்று பேசிக் கொண்டார்கள்.
இந்த நிலைமையைத்
தமது கூரிய கழுகுக் கண்களின் ஓரப் பார்வையினால் தெரிந்து கொண்ட
மகேந்திர சக்கரவர்த்தி, மாமல்லருடைய பேச்சில் நடுவே
குறுக்கிட்டார். "மகனே! உலகம் நீ நினைப்பது போல் அவ்வளவு
பைத்தியக்கார உலகம் அல்ல. மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு
முட்டாள்களும் அல்ல. அப்படியே இருந்த போதிலும், அதற்காக நானும்
மூடத்தனமான காரியத்தைச் செய்ய முடியாது. அவசியமில்லாத போது
யுத்தம் நடத்த முடியாது. இலட்சக்கணக்கான வீரர்களின் உயிரை வீண்
வீம்புக்காகப் பலிகொடுக்க முடியாது. காரணமில்லாமல் நாட்டின்
பிரஜைகளைச் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளாக்க முடியாது.
மாமல்லா! இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் நான் ஏறியபொழுது, இந்த
மணிமகுடம் என் தலையில் சூட்டப்பட்ட அன்று, இச்செங்கோலை முதன்
முதலாக என்னுடைய கரத்தில் ஏந்திய உடனே, இந்த நாட்டு மக்களின்
உயிரையும் உடைமையையும் பாதுகாப்பேன்; அவர்களுக்குக் கஷ்டம்
எதுவும் வராமல் தடுப்பேன் என்று நாடறியச் சபதம் செய்தேன்.
வெறும் வீம்புக்காகவோ, உலகத்தில் மூடர்கள் ஏதேனும்
சொல்லுவார்ளே என்பதற்காகவோ அந்தச் சபதத்தை நான் கைவிட
முடியாது!" என்று கம்பீரமான குரலில் தலை நிமிர்ந்து கூறினார்.
ஆனால், மாமல்லருடைய அம்பறாத்தூணியில் இன்னும் சில பாணங்கள்
மிச்சமிருந்தன.
"தந்தையே! இந்தப்
பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பற்றித்தான் தாங்கள்
கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம்.
தெய்வாதீனமான காரணத்தினால் ஏழு மாதத்துக்கு முன்னால் ஒரு சிறு
கிராமத்தில் நான் மூன்று தினங்கள் வசிக்க நேர்ந்தது. அப்போது
அந்தக் கிராமத்து ஜனங்கள் பேசிக் கொண்டதை என் இரு செவிகளாலும்
கேட்டேன். இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பிரஜைகள் சுத்த வீரர்கள்
என்றும், மானத்துக்காக உயிரையும் உடைமைகளையும் திருணமாக
மதிக்கிறவர்கள் என்றும் அறிந்தேன். புள்ளலூர்ச் சண்டையைப்
பற்றியும், அதில் நாம் அடைந்த வெற்றியைக் குறித்தும், பல்லவ
நாட்டு மக்கள் எப்பேர்ப்பட்ட குதூகலம் அடைந்தார்கள், தெரியுமா?
நாம் வீர சைனியத்துடன் இந்தக் காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்து
கொள்ளப் போகிறோம் என்ற வதந்தியை அவர்களால் நம்ப முடியவில்லை.
பல்லவேந்திரா! என் காதினால் கேட்ட வார்த்தையைச் சொல்லுகிறேன்;
மண்டபப்பட்டுக் கிராமத்து ஜனங்கள் என்ன பேசிக் கொண்டார்கள்
தெரியுமா? 'மாமல்லனைப் போன்ற புத்திரனையும், பரஞ்சோதியைப்
போன்ற தளபதியையும் படைத்த மகேந்திர சக்கரவர்த்தி
புலிகேசிக்குப் பயந்து எதற்காகக் கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப்
போகிறார்? ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார்' என்று பேசிக்
கொண்டார்கள். புலிகேசி காஞ்சிக் கோட்டைக்கருகில் வந்ததும்
பல்லவ சைனியம் வாதாபிச் சைனியத்துடன் வீரப் போர் புரியுமென்று
நம் பிரஜைகள் எதிர்பார்த்தார்கள். அவர்களை நாம் அடியோடு
ஏமாறும்படி செய்து விட்டோம். இப்போதாவது அவர்களுடைய
நம்பிக்கையை மெய்ப்படுத்த எனக்குக் கட்டளையிடுங்கள். இந்தக்
கோட்டைக்குள்ளே ஓர் இலட்சம் பல்லவ வீரர்கள் எப்போது போர்
வருமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நகரின்
மாபெரும் கொல்லர்கள் ஒன்றரை வருஷமாகச் செய்து குவித்திருக்கும்
வாட்களும் வேல்களும், 'தாகம் தாகம்' என்று தவித்துக்
கொண்டிருக்கின்றன. இதோ என் உயிர்த் தோழர் பரஞ்சோதியும்
துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். தந்தையே! சைனியத்தை நடத்திக்
கொண்டு போகக் கட்டளையிடுங்கள். வாதாபி சைனியத்தை நிர்மூலம்
செய்ய இந்த க்ஷணமே ஆக்ஞை இடுங்கள்!"
மகேந்திர பல்லவர்
உணர்ச்சி மிகுதியினால் பேச முடியாமல் தத்தளித்தார். தமது
அருமைக் குமாரனுடைய வீராவேச மொழிகளைக் கேட்டு அவருடைய கல்
நெஞ்சமும் கனிந்து விட்டதாக ஒரு கணம் தோன்றியது. எனினும்,
மறுகணமே அவர் பல்லைக் கடித்துக் கொண்டு முகத்தையும் கடுமையாக
வைத்துக்கொண்டு சொன்னார்; "குழந்தாய்! சுத்த வீரன்
சொல்லக்கூடிய வார்த்தைகளை நீ பேசினாய்; அதைக் குறித்து
எனக்குச் சந்தோஷந்தான். ஆனாலும், உன் யோசனையை நான் ஒப்புக்
கொள்வதற்கில்லை. பல்லவ நாட்டு வீரக் குடிமக்களின்
அபிப்பிராயத்தைப் பற்றிச் சொன்னாய். அதைப் பற்றியும் எனக்கு
மகிழ்ச்சியே, ஆனால் பிரஜைகளின் அபிப்பிராயம் எப்போதும் சரியான
அபிப்பிராயமாயிராது. முன் யோசனையின்றி, உணர்ச்சி வேகத்தினால்
பிரஜைகள் சொல்லும் பேச்சைக் கேட்டு அது காரணமாக இந்த நாட்டு
மக்களுக்கும், அவர்களுடைய வருங்காலச் சந்ததிகளுக்கும்
எல்லையற்ற கஷ்ட நஷ்டங்களை நான் உண்டாக்கப் போவதில்லை!"
இவ்விதம் மாமல்லரைப் பார்த்துச் சொன்னவர், சபையோரின் பக்கம்
திரும்பி, "சபையோர்களே! உங்களுடைய சம்மதத்தை எதிர்பார்த்து
நான் வாதாபிச் சக்கரவர்த்திக்கு முன்னமேயே மறுமொழி
அனுப்பிவிட்டேன். அவருடைய சமாதானத் தூதை ஏற்றுக் கொள்வதாகவும்
அவரைக் காஞ்சிமாநகருக்குள் நமது விருந்தினராக வரவேற்க
மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வதாகவும் ஓலை எழுதி
அனுப்பிவிட்டேன். அவ்விதம் நான் கொடுத்துவிட்ட வாக்கை இனி
என்னால் மீற முடியாது!" என்றார்.
மாமல்லர் அப்போது
முன்னைவிட அதிகப் பரபரப்புடனே, "அப்பா! இது என்ன? பல்லவ
வம்சத்தின் கொடிய சத்ருவை நமது தலைநகரத்தில் வரவேற்பதா?
புலிகேசிக்கு உபசாரமா? யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் செய்து
கொள்வதோடாவது நிறுத்திக் கொள்ளுங்கள். வாதாபிப் படை இந்த
நாட்டை விட்டு ஒழியும் வரையில் நாம் கோட்டைக்குள்ளேயே
வேணுமானாலும் ஒளிந்து கொண்டிருப்போம். ஆனால், வஞ்சகப்
புலிகேசியுடன் நமக்குச் சிநேகம் வேண்டாம். வைஜயந்திப்
பட்டணத்துக்கு நெருப்பு வைத்த பெரும் பாதகன் இந்தப் புண்ணிய
நகரத்துக்குள்ளே காலடி வைக்க வேண்டாம்" என்று அலறினார்.
"முடியாது, மாமல்லா! பல்லவ குலத்தினர் ஒரு தடவை கொடுத்த வாக்கை
மீறுவது வழக்கமில்லை; புலிகேசியை நான் வரவேற்றேயாக வேண்டும்"
என்றார் மகேந்திரர்.
இதைக் கேட்ட
மாமல்லர் இரண்டு அடி முன்னால் பாய்ந்து வந்தபோது சபையோர்
ஒருகணம் திடுக்கிட்டுப் போய் விட்டார்கள். தந்தையைத்
தாக்குவதற்கே அவர் பாய்கிறாரோ என்றுகூடச் சிலர் பயந்து
போனார்கள். அவ்விதமான விபரீதம் ஒன்றும் நேரவில்லை.
சக்கரவர்த்தியின் அருகில் வந்து கைகூப்பிக் கொண்டு, "தந்தையே!
வாதாபிச் சக்கரவர்த்தியைத் தாங்கள் வரவேற்றேயாக வேண்டுமானால்,
எனக்கு ஒரு வரம் கொடுங்கள். புலிகேசியும் நானும் ஏககாலத்தில்
இந்த நகருக்குள்ளே இருக்க முடியாது. புலிகேசி உள்ளே வரும் போது
நான் வௌியே போய் விடுவதற்கு அனுமதி கொடுங்கள்!" என்றார்
மாமல்லர்.
"நானும்
அப்படித்தான் யோசித்து வைத்திருக்கிறேன். குமாரா! வாதாபிச்
சக்கரவர்த்தி வரும்போது உன்னை வௌியே அனுப்பி விடுவதாகத்தான்
உத்தேசித்திருக்கிறேன். அதற்கு வேறோர் அவசியமும்
ஏற்பட்டிருக்கிறது" என்றார் சக்கரவர்த்தி. இச்சமயத்தில் தளபதி
பரஞ்சோதி ஓர் அடி முன்னால் வந்து, "பிரபு! எனக்கும் குமாரச்
சக்கரவர்த்தியுடன் வௌியேற அனுமதி தரவேண்டும்" என்று கேட்க,
மகேந்திரர் கூறினார்: "ஆஹா! அப்படியே! இராமன் போகும்
இடத்துக்கு லக்ஷ்மணனும் தொடர்ந்து போக வேண்டியது நியாயந்தானே!
நீங்கள் இருவரும், நம் சைனியத்திலே சிறந்த முப்பதினாயிரம்
வீரர்களைப் பொறுக்கிக் கொண்டு ஆயத்தமாகுங்கள். வடநாட்டுச்
சளுக்க சைனியம் படையெடுத்த சமயம் பார்த்துக் கோழைத்தனமாகவும்,
திருட்டுத்தனமாகவும் பல்லவ இராஜ்யத்துக்குள் பிரவேசித்த
தென்பாண்டிய நாட்டானுக்கு அவசியம் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்
சீக்கிரமாகவே புறப்பட ஆயத்தமாகுங்கள்!" சக்கரவர்த்தியின் கடைசி
மொழிகள் மாமல்லருடைய கோபத்தைத் தணித்து ஓரளவு உற்சாகத்தை
அளித்ததோடு, மந்திர மண்டலத்தாரை ஒரே ஆச்சரியக் கடலில் ஆழ்த்தி
விட்டன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அன்றிரவு வெகு
நேரத்துக்குப் பிறகு அந்தப்புரத்தில் மகேந்திர பல்லவர் தம்
பட்டமகிஷியைச் சந்தித்த போது, புவனமகாதேவி தனது மனக் கவலையைத்
தெரிவித்தாள். "பிரபு! இன்றைக்கு மந்திராலோசனை சபையில்
தங்களுக்கும் மாமல்லனுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததாமே!
நாலு பேருக்கு முன்னால் தந்தயும் புதல்வரும் சண்டை போட்டுக்
கொள்ளலாமா?" என்று சக்கரவர்த்தினி கேட்டாள். "தேவி! யார் என்ன
வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எனக்கு இன்று இருக்கிற
பெருமையையும் பூரிப்பையும் சொல்லி முடியாது. அர்ஜுனனும்
அபிமன்யுவும், லக்ஷ்மணனும் இந்திரஜித்தும் பேசுவதற்குரிய வீர
வார்த்தைகளை இன்று மாமல்லன் பேசினான். உள்ளுக்குள் எவ்வளவோ
எனக்கு ஆனந்தமாயிருந்தது. ஆனாலும், என்னுடைய நோக்கத்தை நான்
கைவிடுவதற்கு இல்லை. ஆகையால், என்னுடைய ஆனந்தத்தை வௌியே
காட்டாமல் கடுமையாகவும், கண்டிப்பாகவும் பேச நேர்ந்தது"
என்றார் சக்கரவர்த்தி. "உங்களுடைய நோக்கந்தான் என்ன? தாங்கள்
செய்யப் போகும் காரியம் எனக்கும் பிடிக்கவில்லை. நம்முடைய
கொடிய சத்துருவைக் காஞ்சி நகருக்குள் வரவேற்பது உசிதமான
காரியமா?" என்றாள் பல்லவச் சக்கரவர்த்தினி.
"தேவி! இது என்ன
வார்த்தை? சத்துருவாக வந்தவரை மித்திரராக்கித்
திருப்பியனுப்புவது பல்லவ வம்சத்துக்குப் பெருமை அல்லவா?
என்னுடைய நோக்கம் என்னவென்று கேட்டாயே? சொல்கிறேன் கேள்.
என்னுடைய வாழ்நாளில் உலகத்தில் மீண்டும் சத்திய யுகம்
பிறப்பதைக் காண வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் புண்ணிய
பாரத பூமியில் இன்றைய தினம் மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள்
இருக்கின்றன. நர்மதைக்கு வடக்கே ஹர்ஷவர்த்தனர்; நர்மதைக்கும்
துங்கபத்ராவுக்கும் மத்தியில் புலிகேசி, துங்கபத்ரைக்குத்
தெற்கே மகேந்திர பல்லவன். இந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர்
சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்தப் புண்ணிய பூமி
நரக பூமியாயிருக்கும். பஞ்சமும் பிணியும் ஜனங்களைப் பிடுங்கித்
தின்னும். அப்படியில்லாமல் இந்த மூன்று பேரும் சிநேக
தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாயிருந்தால், இந்தப் பாரத
பூமியே சொர்க்க பூமியாகிவிடும். தேசத்தில் வறுமை, பட்டினி,
பஞ்சம் ஒன்றும் தலை காட்டாது. கல்வியும் கலைகளும் ஓங்கி
வளரும்; சகல ஜனங்களும் சௌக்கியமாக வாழ்வார்கள். தேவி! என் இளம்
பிராயத்தில் நான் ஒரு பகற்கனவு காண்பது உண்டு. சளுக்கச்
சக்கரவர்த்தியின் விருந்தினனாக நான் சென்று அஜந்தாவின் வர்ண
சித்திர அதிசயங்களைக் கண்டு களிப்பதாகக் கனவு கண்டேன்.
அப்புறம் வடக்கே கன்யாகுப்ஜத்துக்குச் சென்று ஹர்ஷவர்த்தனர்
மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை நடத்தும் ஆனந்தக் கலைவிழாவைப்
பார்த்து மகிழ்வதாகக் கனவு கண்டேன். மாமல்லபுரத்தை ஒரு
சொப்பனச் சிற்ப உலகமாகச் சிருஷ்டித்து அதைப் பார்ப்பதற்காக
ஹர்ஷரையும் புலிகேசியையும் அழைப்பதாகக் கனவு கண்டேன்.
அதெல்லாம் இப்போது நிறைவேறுமெனத் தோன்றுகிறது. நாங்கள் மூவரும்
சிநேகர்களாகிவிட்டால் அப்புறம் இந்த நாட்டில் சமயச் சண்டை
என்பது ஏது? யுத்தந்தான் ஏது?"
"பிரபு! அன்பு
மதத்தையும் சிநேக தர்மத்தையும் பற்றிப் பேசும் தாங்கள்
பாண்டியனைத் தண்டிப்பதற்கு மாமல்லனை எதற்காக ஏவுகிறீர்கள்?"
என்று சக்கரவர்த்தினி குறுக்கிட்டுக் கேட்டாள். "அது வேறு
விஷயம், சிநேகம் என்பது சமநிலையில் உள்ளவர்களுக்கிடையேதான்
ஏற்பட முடியும். அறிவாளிகளுக்குள்ளே தான் அன்பு வளர முடியும்.
அறிவற்ற மூடர்களையும் அதிகப்பிரசங்கிகளையும் தண்டோபாயத்தைக்
கைக்கொண்டே சீர் திருத்தியாக வேண்டும்" என்று கூறினார்
மகேந்திர பல்லவர்.
மறுநாள் முதல்
காஞ்சி நகரம் ஒரு புதிய தோற்றத்தை மேற்கொண்டது. ஏதோ ஒரு பெரிய
முக்கியமான திருவிழாவை எதிர்பார்ப்பது போல ஜனங்களிடையே
அபரிமிதமான உற்சாகம் காணப்பட்டது. வீதிகளையும் வீடு
வாசல்களையும் ஜனங்கள் சிங்காரிக்கத் தொடங்கினார்கள். கடை
வீதிகள் பழையபடி சோபை பெற்று விளங்கின. கோயில்களில் உற்சவங்கள்
ஆரம்பமாயின. சிற்ப மண்டபங்களில் பழையபடி சிற்பிகள் வேலை
செய்யத் தொடங்கினார்கள். நாற்புறமும் மேள வாத்தியங்கள்
முழங்கின. சமஸ்கிருதக் கடிகைகளில் முன்போல வேதகோஷங்கள் கேட்டன.
தமிழ்க் கல்லூரிகளில் பாசுரங்கள் பாடப்பட்டன. நடன அரங்கங்களும்
நாடக மேடைகளும் புத்துயிர் பெற்றன. தாளச் சத்தத்துடன் கலந்து
பாதச் சதங்கையொலியும் எழுந்தது.
ஜனங்களின் முக
மலர்ச்சியோ சொல்ல வேண்டியதில்லை. எல்லாரும் ஒரே ஆனந்தமயமாய்க்
காணப்பட்டார்கள். புருஷர்களும் ஸ்திரீகளும் முன்போல ஆடை
ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
பெண்களின் கூந்தலில் புஷ்பக் காடுகள் மலர்ந்து நாற்புறமும்
சுகந்தத்தைப் பரப்பின. மாமல்லர் எதிர்பார்த்ததுபோல் காஞ்சி நகர
மக்கள் அதிருப்தியடைந்தவர்களாகத் தெரியவில்லை. யுத்தம் நின்று
விட்டதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.
அதைக் காட்டிலும், சளுக்கச் சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம்
செய்யப் போவதை நினைத்து நகரவாசிகள் அபரிமிதமான
களிப்படைந்தவர்களாகத் தோன்றினார்கள்.
புலிகேசியின்
சமாதானத்தூதன் வந்த ஐந்தாவது நாள் பிற்பகலில், காஞ்சி நகரின்
வடக்குக் கோட்டை வாசல் எட்டு மாதத்திற்குப் பிறகு மீண்டும்
திறந்தது. பேரிகைகளும், நகராக்களும் சமுத்திர கோஷம் கடுமுகம்
என்னும் வாத்தியங்களும் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம்
உள்ளவர்களின் காது செவிடுபடும்படி முழங்கின. வாதாபிச்
சக்கரவர்த்தி தாம் இளம் பிராயத்திலிருந்து பார்க்க
ஆசைப்பட்டுக் கொண்டிருந்த 'கல்வியிற் பெரிய காஞ்சி'
மாநகரத்திற்குள் பிரவேசம் செய்தார். அவருடைய முக்கிய
பரிவாரத்தைச் சார்ந்த ஐம்பது பேர் அவருடனே வந்தார்கள்.
வௌிவாசலைத்
தாண்டி உள்ளே பிரவேசித்ததும், அங்கே தம்மை வரவேற்பதற்கு
ஆயத்தமாகக் காத்துக் கொண்டிருந்த மகேந்திர பல்லவச்
சக்கரவர்த்தியைப் புலிகேசி பார்த்தார். அவ்விரண்டு
பேரரசர்களின் கண்களும் சந்தித்தன. மகேந்திரரின் முகத்தில்
அரும்பியிருந்த இளம் புன்னகையைத் தவிர வேறு எவ்வித
உணர்ச்சியும் வௌியாகவில்லை. ஆனால், புலிகேசியின் முகமானது
அவருடைய கொதிப்படைந்த உள்ளத்தின் கொந்தளிப்பை நன்கு
காட்டுவதாய் இருந்தது. 'என்னுடைய வம்ச சத்துரு, நான் போட்டுக்
கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் தோல்வியடையச் செய்த மகேந்திர
பல்லவன் இவன்தானா?' என்று புலிகேசியின் உள்ளத்தில் உண்டான
ஆத்திரத்தை அவருடைய கண்கள் பிரதிபலித்தன. இந்த எண்ணங்களோடு,
'ஆகா! கள்ளங் கபடு அறியாதது போலப் பாவனை செய்யும் இந்தக்
கம்பீரமான முகத்தை இதற்கு முன் எங்கேயோ பார்த்தாற் போல்
இருக்கிறதே!' என்ற நினைவும் புலிகேசியின் மனத்தில் தோன்றியது.
இரு
சக்கரவர்த்திகளின் விருதுகளும் முறையே கூறப்பட்ட பிறகு,
இருவரும் அவரவருடைய குதிரையிலிருந்து கீழே இறங்கி
ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அதே சமயத்தில்
புலிகேசியின் கண்கள் மகேந்திர பல்லவருக்குப் பின்னால் நின்ற
பரிவாரங்களைத் துருவி ஆராய்ந்தன. "சத்தியாச்ரயா! யாரைத்
தேடுகிறீர்கள்?" என்று மகேந்திர பல்லவர் கேட்க, "பல்லவேந்திரா
தங்களுடைய வீரப் புதல்வர் மாமல்லரைப் பற்றி எவ்வளவோ
கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மகாவீரர், இங்கு நிற்பவர்களிலே
யாரோ?" என்று சளுக்கச் சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர
பல்லவர் அப்போது இலேசாகச் சிரித்துவிட்டு, "இல்லை,
சத்தியாச்ரயா! மாமல்லன் இங்கே இலலை; அவன் வேறு முக்கிய
காரியமாக வௌியூருக்குச் சென்றிருக்கிறான்!" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பன்னிரண்டாம் அத்தியாயம்
மூன்று உள்ளங்கள்
காஞ்சி மாநகரின்
வடக்குக் கோட்டை வாசல் வழியாக வாதாபிச் சக்கரவர்த்தி
அந்நகருக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த போது, தெற்குக்
கோட்டை வாசல் வழியாகக் குமார சக்கரவர்த்தி வௌியேறிக்
கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் முப்பதினாயிரம் பல்லவ
வீரர்கள் அடங்கிய காலாட்படையும், ஐயாயிரம் போர்க் குதிரைகளும்,
நூறு போர் யானைகளும், மற்றும் சேனைப் பரிவாரங்களும்
நகரிலிருந்து வௌியேறி, கோட்டைக்குச் சற்று தூரத்தில்
அணிவகுத்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாக நின்றன. இடிந்து
தகர்ந்து, பாதி தூர்ந்து போயிருந்த அகழியின் மேல், அவசரமாக
அமைத்த பாலத்தின் மீது கண்ணபிரான் ஓட்டிய ரதம் விரைந்து
சென்றபோது, அதன் சக்கரங்கள் கடகட சடசடவென்று சப்தம் செய்தன.
ரதத்தில் மாமல்லரும் பரஞ்சோதியும் வீற்றிருந்தார்கள். அகழிப்
பாலத்தை ரதம் கடந்து அக்கரை சென்றதும், பாலம் அகற்றப்பட்டது.
உடனே, கோட்டை வாசல் கதவுகள் தடார் தடார் என்று சாத்தப்பட்டன.
அக்கதவுகளின் தாழ்களைப் போடும் 'லொடக்' 'லொடக்' என்ற சப்தமும்,
பூட்டுக்கள் பூட்டப்படும் 'டடக்', 'டடக்' என்ற சப்தமும், ரதச்
சக்கரங்களின் 'கடகட, சடசட' என்ற சப்தத்துடன் கலந்து கொண்டன.
அச்சமயம் அந்த ரதத்தில் வீற்றிருந்த மூன்று பேரின்
இருதயங்களுங்கூடப் 'படக்' 'படக்' என்று அடித்துக்
கொண்டிருந்தன.
மாமல்லர்
புறப்படுவதற்குமுன்னால் தமது அன்னை புவனமாதேவியிடம்
விடைபெற்றுக் கொள்வதற்காகச் சென்றார். அப்போது அந்த வீர
மாதரசியின் கண்கள் கலங்கியிருந்தன. அவளுடைய உள்ளமும்
கலக்கமடைந்திருந்ததாகத் தோன்றியது. துர்விநீதனைத்
தண்டிப்பதற்காகப் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு மாமல்லர்
புறப்பட்டபோது, புவனமகாதேவி இத்தகைய மனக் கலக்கத்தைக்
காட்டவில்லை. அச்சமயம் முக மலர்ச்சியுடனும் பெருமிதத்துடனும்
வீரமகனை ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பினாள்.
"அம்மா! இது
என்ன, ஏன் கலங்குகிறீர்கள்? போர்க்களம் எனக்குப் புதியதா?
யுத்தந்தான் புதியதா?" என்று மாமல்லர் கேட்டதற்குச்
சக்கரவர்த்தினி, "குழந்தாய்! அதைக் குறித்தெல்லாம் நான்
கவலைப்படவில்லை. உன்னுடைய தந்தையின் காரியந்தான் என்னை
வருத்துகிறது. தசரதர் செய்ததைக் காட்டிலும் கொடுமையான
காரியத்தை உன் தந்தை செய்கிறார். தசரதர் இராமனைக் காட்டுக்கு
அனுப்புவதோடு நின்றார். உன் தந்தையோ இராமனைக் காட்டுக்கு
அனுப்பி விட்டு, அதே சமயத்தில் இராவணனையும் விருந்தாளியாக
வரவேற்கப் போகிறார்!" என்றாள். இதைக் கேட்ட மாமல்லரின்
முகத்தில் சென்ற சில காலமாகக் காணப்படாத குறுநகை மலர்ந்தது.
"தாயே! நான்
இராமன் அல்ல; இராமனாயிருந்தால், சீதையையும் கூட்டிக்
கொண்டல்லவா காட்டுக்குப் போக வேண்டும்? என் தந்தையும் தசரதர்
இல்லை; ஏனென்றால் கைகேயி வார்த்தையைக் கேட்டுக் கொண்டு அவர்
என்னை வனத்துக்கு அனுப்பவில்லை. புலிகேசியோ நிச்சயமாக இராவணன்
இல்லை. இராவணன் சுத்த வீரன், அம்மா! போர்க்களத்தில் சகலமும்
போய்த் தன்னந்தனியாக நின்ற போதும் சரணாகதி அடைய மறுத்து உயிரை
விட்டான். அந்த மகாவீரன் எங்கே, இந்தக் கோழைப் புலிகேசி எங்கே?
நூறு காத தூரம் படையெடுத்து வந்து விட்டு யுத்தம் செய்யாமலே
அல்லவா இவன் திரும்பிப் போகப் போகிறான்?" என்றார் மாமல்லர்.
"குமாரா! நீ என்னதான் சொன்னாலும் மொத்தத்தில் என் மனத்தில்
அமைதி இல்லை. பல்லவ குலத்தின் தீரா விரோதியுடன் உன் தந்தை
சிநேகம் கொண்டாடுவது எனக்குப் பிடிக்கவில்லை; இந்தச் சமயத்தில்
நீ காஞ்சியைவிட்டுப் போவதும் எனக்குச் சம்மதமாயில்லை.
இதனாலெல்லாம் என்ன விபரீதம் வருமோ எனனவோ என்று என் மனம்
சஞ்சலமடைகிறது!" என்றாள் பல்லவ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினி.
மேற்கண்டவாறு
அன்று காலையில் அன்னை கூறிய வார்த்தைகள் மாமல்லருடைய மனத்தில்
ஆழமாய்ப் பதிந்து கிடந்தன. இன்னதென்று சொல்ல முடியாத சோர்வு
அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. பெருமுயற்சி செய்து
அந்தச் சோர்வைப் போக்கிக் கொள்ள முயன்றார். வரப் போகும்
யுத்தத்தையும் பாண்டியனைத் தாக்கி அவனைத் தண்டிக்கப் போவதையும்
நினைத்துக் கொண்டார். அதனோடு மண்டபப்பட்டுக் கிராமத்தில்
இருக்கும் ஆயனர் மகளையும் எண்ணிக் கொண்டார். தாம் போகின்ற
மார்க்கத்தை விட்டுக் கொஞ்சம் விலகிச் சென்றால், சிவகாமியைப்
பார்த்து விட்டுப் போகலாம். ஆனால், அது உசிதமாகாது என்று
அவருடைய மனமே சொல்லிற்று. புலிகேசியைப் புறங்காட்டி ஓடச்
செய்து விட்டுத் திரும்பி அவளிடம் வருவதாக அல்லவா அன்றைக்குச்
சொல்லிக் கொண்டு விடைபெற்றோம்? பாண்டியனையாவது போர்க்களத்தில்
புறங்கண்ட பிறகுதான் சிவகாமியைச் சந்திக்க வேண்டும். இவ்வாறான
பற்பல எண்ணங்கள் அலை மேல் அலை எறிந்து மாமல்லரின் உள்ளத்தை
அலைத்துக் கொண்டிருந்தன.
தளபதி
பரஞ்சோதியும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் கடுமையாகத்
தம்முடைய முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய பொறுப்பு
உணர்ச்சியானது அவருடைய மனத்தில் பெரும் பாரமாய் அமர்ந்து அதை
அமுக்கிக் கொண்டிருந்தது. அன்று காலையில் சக்கரவர்த்தி அவரை
அந்தரங்கமாக அழைத்து, "தம்பி! உன்னை நம்பித்தான் மாமல்லனை
இப்போது போர்க்களத்துக்கு அனுப்புகிறேன். அவனுடைய இப்போதைய
மனநிலையில் முன்பின் யோசனையில்லாமல் முரட்டுத்தனமாகக் காரியம்
செய்வான். அவனுக்கு யாதோர் அபாயமும் நேரிடாதபடி நீதான்
பார்த்துக் கொள்ள வேணும். இந்தப் புராதன பல்லவ குலம்
நீடிப்பதற்கு அவன் ஒருவன் தான் இருக்கிறான். தளபதி! பாண்டிய
நாட்டு மறவர்கள் மகாவீரர்கள். அவர்களையும் கங்க நாட்டார்கள்
என்று நினைத்து விடாதே. எளிதாக அவர்களைப் புறங்காண முடியாது.
ஆகையால், சர்வ ஜாக்கிரதையாகவே நீ இந்த யுத்தத்தை நடத்த வேணும்"
என்று சொன்னார். மீண்டும் அவர், "மாமல்லனை நீ போர்க்களத்தில்
வேல்கள் அம்புகளிடமிருந்து மட்டும் காப்பாற்றினால் போதாது"
என்று கூறி விட்டு, மர்மமான புன்னகையுடன், "மண்டபப்பட்டுக்
கிராமத்தில் இருக்கிறாளே, சிற்பியின் மகள் சிவகாமி, அவளுடைய
கண்ணாகிய கூரிய அம்பிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்,
தெரிகிறதா? முன் தடவை துர்விநீதனைத் தொடர்ந்து போனபோது
ஏற்பட்டதைப் போல் இந்தத் தடவை ஏற்பட்டு விடக் கூடாது. போகும்
காரியத்தை முடித்து விட்டு நேரே காஞ்சிக்குத் திரும்பி வந்து
சேர வேண்டும்" என்றார்.
பரஞ்சோதி
விடைபெற்றுக் கொண்டு புறப்பட யத்தனித்த போது, கடைசியாகச்
சக்கரவர்த்தி அவரை மறுபடியும் அருகில் அழைத்து, "தளபதி! நான்
மண்டபப்பட்டுக் கிராமத்தைப் பற்றிச் சொன்னது
திருவெண்காட்டுக்குப் பொருந்தாது. பாண்டியனைத் துரத்தியடித்த
பிறகு உனக்கு விருப்பமாயிருந்தால் திருவெண்காட்டுக்குச் சென்று
உன் தாயாரையும் மாமனையும் பார்த்து விட்டு வா!" என்று
அருமையுடன் கூறினார். சக்கரவர்த்தி கூறிய ஒவ்வொரு விஷயமும்
பரஞ்சோதியின் பொறுப்பு உணர்ச்சியை அதிகப்புத்துவதாகவே
இருந்தது. ஆகா! மகேந்திர பல்லவர் எப்பேர்ப்பட்ட அபூர்வமான
மனிதர்! அவருடைய அன்பையும் நம்பிக்கையையும் இவ்வளவு தூரம்
பெறுவதற்குத் தான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்! ஆனால்
அவ்வளவு அன்புக்கும் நம்பிக்கைக்கும் தான் பாத்திரமாக
வேண்டுமே! மாமல்லரைப் பத்திரமாய்க் காஞ்சிக்குக் கொண்டு வந்து
சேர்க்கவேண்டுமே? 'திருவெண்காட்டுக்குப் போய் விட்டு வா!'
என்று சக்கரவர்த்தி கூறியது அவருடைய பெருந்தன்மைக்கு உகந்தது.
ஆனால், அதற்கு இந்தச் சந்தர்ப்பம் தகுதியானதா? தன்னை இத்தகைய
போர்க்கோலத்திலே பார்த்தால், தாயும் மாமனும் என்ன
நினைப்பார்கள்? உமையாள் ஏற்கெனவே நாணம் அதிகம் உள்ளவள். தன்னை
அணுகுவதற்கே இப்போது பயப்படுவாளோ என்னவோ? - இவ்வாறெல்லாம்
தளபதி பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்.
ரதத்தின்
முனையில் அமர்ந்திருந்த கண்ணபிரானுடைய மனக் கண்ணின் முன்னால்
அடிக்கடி ஒரு காட்சி வந்து கொண்டிருந்தது. விடைபெற்றுக்
கொள்ளவேண்டிய சமயம் வந்த போது கண்ணபிரான் தன் எட்டு மாதக்
குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து "போய் வரட்டுமா, கண்ணே!"
என்று கொஞ்சினான். அந்தக் குழந்தை அர்த்தம் ஒன்றுமில்லாமலும்
அகாரணமாகவும் புன்னகை புரிந்ததுடன் தன் இரண்டு இனந்தளிர்க்
கரங்களையும் நீட்டிக் கண்ணபிரானுடைய நீண்ட இரு காதுகளையும்
பிடித்துக் கொண்டது. மேற்படி நினைவு வந்தபோதெல்லாம்
குழந்தையின் தளிர்க் கரங்கள் அவன் காதைப் பிடித்த இடங்களில்
அவனுக்கு என்னவோ செய்தது. மறுபடியும் அந்த மதுரமான ஸ்பரிச
இன்பத்தை எப்போது அடையப் போகிறோமோ என்று அவன் மனம் ஏங்கிற்று.
அதோடு கடைசியாக
அவன் புறப்பட்டபோது கமலி கூறிய மொழிகளும் அவனுக்கு அடிக்கடி
நினைவு வந்து கொண்டிருந்தன. முன்னெல்லாம், "யுத்தத்துக்கு
எப்போது புறப்படுகிறாய்?" என்று கேட்டுக் கொண்டிருந்தவள்,
கண்ணபிரான் உண்மையாகப் புறப்படும் சமயம் வந்த போது, "கண்ணா
மகேந்திர பல்லவருக்கு இப்படி ஏன் புத்தி கெட்டுப் போய்
விட்டது? வாதாபிச் சக்கரவர்த்தியை விருந்தாளியாக வரவேற்பதாம்!
பாண்டிய ராஜாவோடு சண்டை போடுவதற்கு மாமல்லரை அனுப்புவதாமே? என்
மனம் ஏனோ தத்தளிக்கிறது! கண்ணா! எது எப்படியானாலும் என் தங்கை
சிவகாமியை மறந்து விடாதே! மாமல்லருக்கு நினைவூட்டு!" என்றாள்.
இவ்விதமாக, அந்த ரதத்தில் இருந்த மூன்று பேருடைய உள்ளங்களும்
வெவ்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தபோதிலும் பதைபதைப்பிலும்
பரபரப்பிலும் வருங்காலத்தில் என்ன நேருமோ என்ற கவலையிலும்
ஒன்றுபட்டிருந்தன. எனவே, அவர்களுடைய இருதயத் துடிப்புகள் ஒரே
ஸ்வரத்தில், ஒரே தாளத்தில் சப்தித்தன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதின்மூன்றாம் அத்தியாயம்
இராஜோபசாரம்
வாதாபிச்
சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம் செய்ததிலிருந்து ஏழு தினங்கள்
ஒரே திருவிழாக் கொண்டாட்டமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் நகரின்
ஒவ்வொரு பகுதிக்கு இரண்டு சக்கரவர்த்திகளும் விஜயம்
செய்தார்கள். தினம் ஒரு கோயிலுக்குச் சென்றார்கள். ஒரு நாள்
காஞ்சியின் கல்விக் கழகங்களையெல்லாம் பார்வையிட்டார்கள். ஒரு
நாள் சிற்பக் கலை மண்டபங்களையும் சித்திர சாலைகளையும்
பார்த்தார்கள். ஒருநாள் பௌத்த விஹாரங்களுக்கும் இன்னொரு தினம்
ஜைனர்களின் கோயில்களுக்கும் சென்றார்கள். ஒரு நாள் இரு
சக்கரவர்த்திகளும் பட்டத்து யானை மீது அம்பாரியில் அமர்ந்து
நகர் முழுவதும் பவனி வந்தார்கள்.
பழகப் பழக இரண்டு
சக்கரவர்த்திகளுக்குள்ளேயும் சிநேகம் முதிர்ந்து வந்ததாகத்
தோன்றியது. இந்தச் சிநேகத்தின் பயனாக வருங்காலத்தில் இரண்டு
சாம்ராஜ்யங்களும் பெரு நன்மையடையப் போகின்றன என்று மகேந்திர
பல்லவர் எதிர்பார்த்ததுடன் அதைப் புலிகேசியிடமும்
தெரியப்படுத்தினார். தமக்குச் சமண மதத்தினிடமோ புத்த
சமயத்தினிடமோ எள்ளளவும் துவேஷம் கிடையாதென்றும், சைவ சமயமானது
மற்ற எல்லாச் சமயங்களையும் சமநோக்குடன் பார்க்க இடம்
தருகிறதென்றும், அதனால்தான் தாம் சைவ சமயத்தைச்
சார்ந்ததாகவும், சமணர்களும் பௌத்தர்களும் அநாவசியமான விரோத
பாவம் தம் பேரில் கொண்டிருப்பதாகவும் மகேந்திர பல்லவர்
கூறினார். புலிகேசி தமக்கும் தீவிர மதப் பற்றோ, மதத் துவேஷமோ
கிடையாதென்றும், இராஜீய காரணங்களை முன்னிட்டே சமண
முனிவர்களுக்கு அதிகமாக இடம் கொடுத்து வந்ததாகவும்
தெரிவித்தார்.
சமய போதனையில்
ஈடுபட்ட குருமார்கள் இராஜீய விஷயங்களில் தலையிடவே
கூடாதென்றும், தலையிடுவதால் அவர்களுக்கும் சமயத்துக்கும்
நாட்டுக்குமே தீமைதான் என்றும் மகேந்திரர் கூறினார். அதை
வாதாபிச் சக்கரவர்த்தியும் ஒப்புக் கொண்டார். மகேந்திர
பல்லவர், "உண்மையான சமய பெருமானுடைய வாழ்க்கை உதாரணத்தை
எடுத்துக் காட்டினார். அந்த மகானைத் தாம் பார்க்க முடியுமா
என்று புலிகேசி கேட்டதற்கு, "யுத்தக் குழப்பங்களின் போது
அந்தப் பெரியார் இங்கே இருக்க வேண்டாம் என்று நானே அவரைத்
தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி விட்டேன். இப்போது எங்கே
இருக்கிறார் என்றே தெரியவில்லை" என்று மகேந்திரர்
தெரிவித்தார். புலிகேசி அப்போது "பல்லவ நாட்டு மகா சிற்பியைக்
கூட நான் பார்க்க முடியாதோ?" என்று கேட்க, மகேந்திரபல்லவர்,
"யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். "ஆயனர்
என்பவரைத்தான்!" என்றார் புலிகேசி. "அவரைப் பற்றி உங்களுக்கு
எப்படித் தெரியும்?" என்று மிக்க வியப்புடன் மகேந்திர பல்லவர்
கேட்டார்.
"காட்டின்
மத்தியில் உள்ள சிற்ப வீட்டை ஒருநாள் நான் பார்த்தேன். அதனுள்
உயிருள்ள பிராணி எதுவும் இல்லை. ஆனால், உயிர்ச் சிலைகள் பல
இருந்தன. அதிலும் வெகு வெகு அற்புதமான நடனச் சிலைகள் பல
இருந்தன. அப்புறம் விசாரித்தேன், அந்த வீட்டில் ஆயனர் என்னும்
மகா சிற்பியும், நாட்டியக் கலையில் வல்ல அவருடைய மகளும்
வசித்ததாகவும், கோட்டை முற்றுகை காரணமாக அவர்கள் எங்கேயோ போய்
விட்டதாகவும் தெரிந்தது. அவர்கள் தற்போது இருக்குமிடமும்
தங்களுக்குத் தெரியாதோ?" என்று வாதாபிச் சக்கரவர்த்தி
கேட்டார். "அவர்கள் இருக்குமிடமும் தெரியும்; அவர்களை அழைத்து
வர ஆளும் அனுப்பி இருக்கிறேன். நாளை கூடும் மகா சபைக்கு
அவர்கள் வந்தாலும் வருவார்கள்" என்றார் காஞ்சிச் சக்கரவர்த்தி.
அதைக் கேட்ட புலிகேசி மிக்க உற்சாகம் அடைந்தவராகக்
காணப்பட்டார்.
வாதாபிச்
சக்கரவர்த்தி காஞ்சி நகருக்குள் பிரவேசித்த எட்டாம் நாள்,
அவருக்கு பிரிவுபசாரம் நடத்துவதற்காகக் காஞ்சியின் பிரதான சபா
மண்டபத்தில் பெரிய சபை கூடியது. அந்த மகா சபையில் பல்லவ
சாம்ராஜ்யத்தின் மந்திரிகள், அமைச்சர்கள், தளபதிகள், மண்டலத்
தலைவர்கள், கோட்டத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், வர்த்தகச்
செல்வர்கள் முதலியோர் வீற்றிருந்தனர். இன்னும் சைவ வைஷ்ணவ சமய
குருமார்கள், வடமொழி வித்வான்கள், தமிழ் மொழிப் புலவர்கள், இரு
பாஷைகளிலும் கவி பாடத் தெரிந்தவர்கள், சங்கீத வித்வான்கள்,
சிற்பிகள், சித்திரக்காரர்கள் முதலியோரும் வரிசைக் கிரமமாக
வீற்றிருந்தார்கள்.
மேலே கூறப்பட்ட
கூட்டத்தாருக்குள் பிரமுகர்கள் வாதாபிச் சக்கரவர்த்திக்கு
அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். வடமொழி, தென்மொழி ஆகிய இரு
மொழிகளிலும் வல்ல புலவர்கள் அந்த மகத்தான சந்தர்ப்பத்துக்கேற்ற
கவிதைகளைப் புனைந்து பாடினார்கள். இரண்டு சக்கரவர்த்திகளில்
எவரையும் தாழ்த்தாமலும் ஒருவரையும் அதிகமாக உயர்த்தாமலும்
சமமான புகழுரைகளை நிறைத்துப் புலவர்கள் பாடிய கவிகள்
அவர்களுடைய கவித் திறத்தைக் காட்டிலும் அவர்களுடைய லௌகிக
ஞானத்துக்கே சிறந்த உதாரணங்களாயிருந்தன. பிறகு,
சாம்ராஜ்யத்தின் சங்கீத வித்வான்கள் தங்களுடைய வித்வத்தைக்
காட்டினார்கள். மகேந்திர பல்லவரால் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு
நரம்புகள் உடைய 'பரிவாதினி' என்னும் வீணையைப் புலிகேசி
பரிசீலனை செய்து மிகவும் மகிழ்ந்தார்.
இவ்வாறு நேரம்
போய்க் கொண்டேயிருந்தது. ஆனாலும், மகேந்திர பல்லவர், வாதாபிச்
சக்கரவர்த்தி இருவருமே கொஞ்சம் மன அமைதியின்றிப் பரபரப்பு
உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். மகேந்திர பல்லவரின் கண்கள்
அடிக்கடி சபா மண்டபத்தின் வௌி வாசற்பக்கத்தை நோக்கிக்
கொண்டிருந்தன. கடைசியாக, அவர் உற்சாகமான குரலில், "அதோ வந்து
விட்டார்கள்!" என்று கூறிய போது, பக்கத்திலிருந்த வாதாபிச்
சக்கரவர்த்தி, "யார்? ஆயனரும் அவர் மகளுந்தானே?" என்று
வினவினார். அப்போது உண்மையாகவே அச்சபா மண்டபத்தின் வௌி வாசல்
வழியாக ஆயனரும் சிவகாமியும் உள்ளே பிரவேசித்துக்
கொண்டிருந்தார்கள். வாசற்படியைத் தாண்டும் போது சிவகாமியின்
கால் வாசற்படியில் இடறிற்று. 'ஆஹா! இது என்ன அபசகுனம்? என்று
எண்ணமிட்டுக் கொண்டே சிவகாமி மானின் நடைபெற்ற மயிலைப் போலச்
சபா மண்டபத்திற்குள் பிரவேசித்தாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினான்காம் அத்தியாயம்
"வாழி நீ மயிலே!"
ஆயனரும்
சிவகாமியும் அந்த விஸ்தாரமான சபா மண்டபத்துக்குள் பிரவேசித்த
போது மண்டபத்தில் வீற்றிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும்
அவர்கள் மீது சென்றன. அளவில்லா வியப்பும் குதூகலமும் ஆவலும்
அந்த ஈராயிரம் கண்களிலேயும் ததும்பின. சபையில் அப்போது
வீற்றிருந்தவர்களில் ஒருசிலர் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாலே
அதே மண்டபத்தில் நடந்த சிவகாமியின் அரங்கேற்றத்தின் போது அங்கே
பிரசன்னமாயிருந்தவர்கள்; மற்றும் அநேகர் அந்த அரங்கேற்றத்தைப்
பற்றிக் கேள்வியுற்றிருந்தவர்கள். சிவகாமியின் அரங்கேற்றம்
அந்த மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்திலேதான் முதன்
முதலில் புலிகேசியின் படையெடுப்பைப் பற்றி செய்தி
கிடைத்ததென்பதையும், அதனால் அரங்கேற்றம் தடைப்பட்டதென்பதையும்,
அவர்கள் எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். அந்தத் தடைக்குக்
காரணமான புலிகேசிச் சக்கரவர்த்தி அச்சமயம் அந்தச் சபையில்
வீற்றிருக்கும் அதிசயத்தை எண்ணியபோது அவர்கள் எல்லாருடைய
கண்களும் மாறி மாறிச் சிவகாமியையும் புலிகேசியையும்
நோக்குவனவாயின.
ஆயனரும்
சிவகாமியும் சபா மண்டபத்துக்குள் பிரவேசித்து வரும் காட்சியைப்
பார்த்தவுடன், எல்லாரையும் போல் வாதாபி மன்னரும் சிறிது நேரம்
பிரமிப்பில் ஆழ்ந்திருந்தார். அஜந்தா மலையின் ஆழ்ந்த
குகைக்குள்ளே அவர் கண்டிருந்த அற்புத வர்ண சித்திர உருவங்களில்
ஒன்றுதான் உயிர் பெற்று எழுந்து தம் கண் முன்னால் நடந்து
வருகிறதோ என்று அவருக்குத் தோன்றிற்று. சௌந்தரியவதிகளான
எத்தனையோ பெண்களை அவர் பார்த்ததுண்டு. ஆனால், இம்மாதிரி
நடையழகு வாய்ந்த பெண்களைப் பார்த்தது கிடையாது. சிவகாமி நடந்து
வந்த போது அவளுடைய பாதங்கள் பூமியில் பட்டனவோ படவில்லையோ என்று
தெரியாதபடி நடந்தாள். சங்கீதக் கலையின் உயிர்த் தத்துவத்தை
உணர்ந்து புலவன் பாடும் போது இசை எப்படி ஒவ்வொரு ஸ்வரமும்
தனித்தனியாகவும் அதே சமயத்தில் ஒன்றோடொன்று இழைந்தும்
கேட்கப்படுகிறதோ, அதுபோல் சிவகாமி நடந்த போது, அவள் அடிகள்
எடுத்து வைக்கிறாளோ அல்லது பூமிதான் அவளுடைய பாதங்களுக்குக்
கீழே நழுவிச் சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. சபா
மண்டபத்திலிருந்த அத்தனை பேருடைய கண்களுக்கும் சிந்தனைக்கும்
வேலை கொடுத்துக் கொண்டு பிரவேசித்த சிவகாமியோ, அவ்விதம்
எல்லோருடைய கவனத்துக்கும் கண் நோக்கும் தான் ஆளாகியிருப்பதை
உணர்ந்ததாகத் தெரியவில்லை. உயர் குலத்துப் பெண்டிருக்குரிய
இயற்கையான நாணத்தினால் சிறிதளவு தலைகுனிந்த வண்ணம் அவள் நடந்து
வந்தாள். அவளுடைய உள்ளத்தில் அல்லும் பகலும் குடிகொண்டிருந்த
கம்பீர முகத்துக்குரியவர் அந்தச் சபையில் எங்கே இருக்கிறார்
என்று தெரிந்து கொள்ள அவளுக்கு அளவற்ற ஆவல் இருந்தது. எனினும்,
அந்த ஆவலைப் பெருமுயற்சி செய்து அவள் அடக்கிக் கொண்டு இயல்பாக
எதிரே பார்த்துக் கொண்டு நடந்தாள்.
இரண்டு
சக்கரவர்த்திகளும் வீற்றிருந்த இடத்துக்கு அருகில் வந்ததும்,
ஆயனர் கும்பிட்டு நிற்க, சிவகாமி நமஸ்கரித்து நின்றாள்.
மகேந்திர பல்லவர், "ஆயனரே! உமது புதல்வி சிவகாமியின் நாட்டியக்
கலைத் திறமையின் புகழானது நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி
வாதாபிச் சக்கரவர்த்தியின் காது வரையில் எட்டியிருக்கிறது. இதோ
இன்று நமது அருமைச் சிநேகிதராக வீற்றிருக்கும் சத்யாச்ரய
புலிகேசி மன்னர் சிவகாமியின் நடனத்தைப் பார்க்க
விரும்புகிறார். அதற்காகவே உங்களை இவ்வளவு அவசரமாகக் கூட்டி
வரச் செய்தேன். சிவகாமியினால் இப்போது உடனே நடனம் ஆட முடியுமா?
உம்முடைய விருப்பம் என்ன?" என்று வினாவிய போது, ஆயனர், "மகாப்
பிரபு! தங்களுடைய கட்டளை எதுவோ, அதுதான் என்னுடைய விருப்பம்.
சிவகாமிக்கு, அவளுடைய கலைத் திறமையைக் காட்டுவதற்கு இதைக்
காட்டிலும் சிறந்த சபையும் சந்தர்ப்பமும் எங்கே கிடைக்கப்
போகிறது? இரண்டு மாபெருஞ் சக்கரவர்த்திகளும் இரண்டு
சூரியர்களைப் போலவும் இரண்டு தேவேந்திரர்களைப் போலவும் ஏக
காலத்தில் கூடியிருக்கிறீர்கள்!" என்று சொல்லி விட்டுச்
சிவகாமியை நோக்கினார்.
முதலில் மகேந்திர
பல்லவர் பேசிய போது, சிவகாமி சிறிது தலைநிமிர்ந்து
அரைக்கண்ணால் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்தாள். பிறகு,
அவளுடைய கண்கள் கட்டுக்காவல்களை உடைத்துக் கொண்டு, இரண்டு
சக்கரவர்த்திகளின் சிம்மாசனங்களையும் சுற்றிச் சிறிது
தூரத்துக்கு வட்டமிட்டன. ஆனால் அவை அடைந்தது ஏமாற்றந்தான்.
சிவகாமியின் கண்கள் தேடிய வீர சௌந்தரிய வதனம் அங்கே
தென்படவில்லை. "ஆ! அவர் எங்கே? ஏன் சக்கரவர்த்திக்கு அருகில்
அவர் காணப்படவில்லை?" என்று அவளுடைய உள்ளம் பதைபதைத்தது. சில
கண நேரத்திற்குள் பற்பல எண்ணங்கள் மின்னலைப் போல் தோன்றி
மறைந்தன. ஏதாவது அவருக்கு விபத்து நேர்ந்திருக்குமோ? இராது,
இராது இராது. அப்படி இருந்தால், மகேந்திர பல்லவர் இந்த
வைபவத்தை நடத்துவாரா? "மிக்க சந்தோஷம் ஆயனரே! அதோ வாத்தியக்
கோஷ்டியும் ஆயத்தமாயிருக்கிறது. உங்களுக்காகவே இந்தச் சபையை
இவ்வளவு நேரம் வளர்த்திக் கொண்டிருந்தோம்!" என்றார் மகேந்திர
பல்லவர்.
சிவகாமி தான்
நின்ற இடத்திலிருந்து நடன வட்டத்துக்குப் போகத் திரும்பிய
போது, மீ்டும் அவளுடைய கண்கள் ஒருமுறை சுற்றிச் சுழன்றன.
அப்போது அவளுடைய பார்வை தற்செயலாகப் புலிகேசியின் முகத்தில்
விழுந்தது. வெறித்து நோக்கிய புலிகேசியின் கொடுங் கண்களைச்
சந்தித்த போது திடீரென்று வீசிய வாடைக் காற்றில் அடிபட்ட
மல்லிகைக் கொடியைப் போல அவளுடைய உள்ளம், உடம்பு எல்லாம்
சில்லிட்டு நடுநடுங்கின. இது ஒரு வினாடி நேரந்தான். அகாரணமாகத்
தோன்றிய அந்த உணர்ச்சியை எப்படியோ சிவகாமி சமாளித்துக் கொண்டு
நடன வட்டத்தை நோக்கி நடந்தாள். அப்போது இன்னதென்று சொல்ல
முடியாத அருவமான நிழல் போன்ற ஞாபகம் ஒன்று அவளைப்
பின்தொடர்ந்து சென்றது.
நடன வட்டத்தில்
சென்று நின்றதும் சிவகாமி மேற்கூறிய நிழல் ஞாபகத்தை உதறித்
தள்ளிவிட்டு ஆட்டத்துக்கு ஆயத்தமானாள். அப்போது அவள்
தன்னடக்கத்துக்குப் பங்கமில்லாமல் அந்த மகாசபையின்
நாலாபுறத்திலும் கண்ணைச் சுழற்றிப் பார்த்தல்
சாத்தியமாயிருந்தது. மண்டபத்தின் மேல் மச்சு மாடங்களிலே
சக்கரவர்த்தினியும் மற்ற அந்தப்புரத்து மாதர்களும்
வீற்றிருப்பது அவள் பார்வைக்குப் புலனாயிற்று. முன்னொரு நாள்
அதே மண்டபத்தில் நடந்த அரங்கேற்றத்தின் போது இன்று போலவே
மாமல்லரைக் காணாமல் முதலில் தான் ஏமாற்றமடைந்ததும், பிற்பாடு
அவர் தாய்மார்களுடன் மேல் மாடத்திலிருந்து பார்த்துக்
கொண்டிருந்ததாகத் தெரியப்படுத்தியதும் நினைவு வந்தன.
இன்றைக்கும் அவர் அவ்வாறே தன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு
மறைவான இடத்திலிருந்து தன்னுடைய நடனத்தைப் பார்த்துக்
கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. இந்த எண்ணம் ஏற்பட்டதும்
இதற்கு முன் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றம், சோர்வு, மனக்
கலக்கம், நடுக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து போயின, நடனமும்
உடனே ஆரம்பமாயிற்று. நடனம் ஆரம்பமாகிச் சிறிது
நேரத்துக்கெல்லாம் அச்சபையில் இருந்தவர்கள் எல்லாம், அது ஒரு
இராஜ சபை என்பதையும், அதில் ஒரு பெண் நடனமாடுகிறாள்
என்பதையும், தாங்கள் அங்கேயிருந்து அதைப் பார்க்கிறோம்
என்பதையும் மறந்தே போனார்கள். இந்த ஜட உலகத்தையே விட்டு விட்டு
அனைவரும் ஒரு புதிய ஆனந்தக் கனவுலகத்துக்கே போய் விட்டார்கள்.
நடனம்
ஆரம்பமாகும் சமயத்தில் சிவகாமி தௌிந்த தன்னுணர்ச்சி
பெற்றிருந்தாள். தன் வாழ்க்கையிலேயே அது ஒரு முக்கியமான தினம்
என்றும், அன்று தான் ஆடப் போகும் நடனம் தன் வாழ்க்கையில் ஒரு
முக்கிய சம்பவம் என்றும் உணர்ந்திருந்தாள். கன்னி சிவகாமியின்
உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த இரு பேருணர்ச்சிகளில் ஒன்று
மாமல்லர் மேல் கொண்ட காதல் என்பதையும், இன்னொன்று நடனக் கலை
மீது அவளுக்கிருந்த பிரேமை என்பதையும் முன்னமே
பார்த்திருக்கிறோம். இப்போது இங்கே கூடியிருப்பது போன்ற ஒரு
மகா சபை தனது கலைத் திறமையைக் காட்டுவதற்குக் கிடைப்பது
மிகவும் அரிது என்பதை ஆயனரைப் போல் அவளும் உணர்ந்திருந்தாள்.
அன்றியும் சிவகாமிக்குத் தன்னுடைய கலைத் திறமை முழுவதையும்
அந்தச் சபையில் காட்ட வேண்டுமென்ற ஊக்கம் ஏற்படுவதற்கு இன்னொரு
முக்கிய காரணமும் இருந்தது.
மகேந்திர பல்லவர்
மற்ற விஷயங்களில் எவ்வளவு கடின சித்தராயிருந்தபோதிலும்,
கலைகளுக்கு மனம் உருகக் கூடியவர். தன் கலைத் திறமையினால்
அவருடைய நன்மதிப்பைக் கவர வேண்டும்; தான் மாமல்லரை மணந்து
கொள்வதற்கு அவர் தடை சொல்லாதபடி செய்ய வேண்டும். வயிர
நெஞ்சமுள்ள ஒரு மகா சக்கரவர்த்தியின் மனத்தை மாற்றித் தன்
விருப்பத்துக்கிணங்கும்படி செய்வதற்குத் தன்னிடம் உள்ள ஒரே
ஆயுதம் நடனக் கலையே அல்லவா? எனவே, அன்றைக்குத் தன்னுடைய நடனம்
பரத நாட்டியத்தின் சரித்திரத்திலேயே ஓர் அற்புத சம்பவமாயிருக்க
வேண்டுமென்று சிவகாமி சங்கற்பம் செய்து கொண்டாள். ஆனால்
இத்தகைய தன்னுணர்ச்சியெல்லாம், சிவகாமி ஆட்டத்தைத் தொடங்கும்
வரையிலேதான் இருந்தது. ஆட்டம் ஆரம்பமாயிற்றோ, இல்லையோ, இத்தனை
காலமும் சிவகாமியின் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த கலை
உணர்ச்சியானது பொங்கிப் பெருகத் தொடங்கியது. சிவகாமி தான்
என்னும் உணர்ச்சி அற்றுக் கலை வடிவமாகவே மாறி விட்டாள்.
பின்னர் சிவகாமி நடனம் ஆடவில்லை; நடனக் கலையானது அவளை
ஆட்கொண்டு ஆட்டுவித்தது.
சிவகாமியின்
உள்ளமானது நாட்டியக் கலையின் அம்சங்களாகிற தாளங்களையும்,
ஜதிகளையும், அடைவுகளையும், தீர்மானங்களையும் பற்றி எண்ணவில்லை.
அந்தத் தாளங்கள், ஜதிகள், அடைவுகள், தீர்மானங்கள் எல்லாம், அவை
அவை அந்தந்த இடத்தில் ஓடி வந்து சிவகாமிக்குச் சேவை செய்தன.
சிவகாமியின் உள்ளம் ஆனந்த வௌியிலே மிதந்து கொண்டிருந்தது.
அவளுடைய தேகமோ எல்லையற்ற ஆனந்த வெள்ளத்திலே அனாயாசமாக மிதந்து
கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த சபையோர்களும் ஆனந்த
சாகரத்தில் மிதக்கலாயினர். பரத நாட்டிய வினிகையில் முதற்
பகுதியான 'நிருத்தம்' முடிவடைந்த போதுதான் சபையோர் தாங்கள்
சஞ்சரித்த ஆனந்தக் கனவுலோகத்திலிருந்து பூவுலகத்துக்கு
வந்தனர். அப்போது சபையின் நானா புறங்களிலிருந்தும் பிரமாதமான
கரகோஷம் எழுந்தது. அவ்விதம் கரகோஷம் செய்து தங்கள்
மகிழ்ச்சியைத் தெரிவித்தவர்கள் இரு சக்கரவர்த்திகளும்
கூடத்தான்.
நடனம்
ஆரம்பிப்பதற்கு முன்னால், சிவகாமியும் ஆயனரும் மகேந்திர
சக்கரவர்த்தியிடம் கட்டளை பெற்றுக் கொண்டு நடன வட்டத்தை
நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வாதாபி மன்னர் மகேந்திர
பல்லவரைப் பார்த்து, "இதென்ன? இவர்களுக்கு இவ்வளவு மரியாதை
செய்கிறீர்களே? எங்கள் நாட்டிலே சாட்டையினால் அடித்து நடனம்
ஆடச் சொல்வோம்!" என்றார். "சத்யாச்ரயா! எங்கள் நாட்டில்
அப்படியில்லை. இங்கே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நாங்கள்
மிக்க மரியாதை செய்கிறோம். இராஜ்யம் ஆளும் மன்னர்களையும்
சக்கரவர்த்திகளையும் போலவே கலை உலகிலும் இங்கே அரசர்களும்
சக்கரவர்த்திகளும் உண்டு. 'சிற்ப சக்கரவர்த்தி', 'கவிச்
சக்கரவர்த்தி' என்ற பட்டங்கள் அளிக்கிறோம். ஆயனர் 'சிற்ப
சக்கரவர்த்தி' என்ற பட்டம் பெற்றவர். இராஜ்யம் ஆளும்
சக்கரவர்த்திகளுக்குச் செய்யும் மரியாதையை மக்கள் இவருக்கும்
செய்கிறார்கள்" என்றார். "அழகாய்த்தானிருக்கிறது உங்கள்
நாட்டின் வழக்கம்!" என்று பரிகசித்தார் வாதாபி மன்னர்.
சிவகாமியின்
நிருத்தம் முடிந்தவுடனே வாதாபிச் சக்கரவர்த்தியும்
மற்றவர்களைப் போல் கரகோஷத்தில் ஈடுபட்டதைக் கண்ட மகேந்திர
பல்லவர், "இப்போது என்ன சொல்கிறீர்கள்? கலைஞர்களுக்கு மரியாதை
செய்வது பற்றி உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக்
கொண்டீர்களா?" என்று கேட்டார். "நடனம்
அற்புதமாய்த்தானிருக்கிறது; இம்மாதிரி நான் பார்த்ததேயில்லை.
ஆனாலும்...." என்று கூறி இடையில் நிறுத்தி விட்டுப் புலிகேசி
ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.
அன்று
அபிநயத்துக்குச் சிவகாமி முதன் முதலாக எடுத்துக் கொண்டு பாடல்
செந்தமிழ் நாட்டின் ஆதிதேவதையான வேலனைப் பற்றியது. வேலன்
தன்னிடம் பக்தி கொண்ட பெண்ணுக்கு, "நான் திரும்ப வந்து உன்னை
ஆட்கொள்கிறேன்!" என்று வேலின் மீது ஆணையிட்டு
வாக்களித்திருக்கிறான். ஆனால் அவ்வாக்குறுதியை அவன்
நிறைவேற்றவில்லை. அதனால் அந்தப் பெண் ஏமாற்றமும் மனத் துயரமும்
அடைகிறாள். அந்த நிலைமையிலும் வேலனிடத்திலே கோபங்கொள்ளவோ, அவன்
மீது குறை சொல்லவோ அவளுக்கு விருப்பமில்லை. எனவே,
குற்றத்தையெல்லாம் வேலனுடைய வாகனமாகிய மயிலின் மீது
போடுகிறாள். மயிலை நிந்திக்கிறாள்; கோபிக்கிறாள்; பலவிதமாகவும்
இடித்துக் காட்டுகிறாள். இந்தக் காலத்தில், 'ஆனந்த பைரவி'
என்றும் வழங்கும் பழமையான ராகத்தில், நடனத்துக்கும்
அபிநயத்துக்கும் ஏற்ற தாளத்துடன் அமைந்த பாடல் பின்வருமாறு:
மறவேன் மறவே னென்று
வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)
உருகி உருகி உள்ளம் அவரை
நினைவதையும்
உயிரும் கரைவதையும் - அறியாரோ
மயிலே?(மற)
அன்பர் வரவு நோக்கி இங்குதான்
காத்திருக்க
அன்னநடை பயில்வாயோ - வண்ண
மயிலே! பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப் பாதையை மறந்தாயோ
- பேதை மயிலே! வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து வழியில்
உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)
தன்னிகரில்லாதான் தனயர்பால்
மையல் கொண்ட
மங்கைமீ திரங்காயோ - தங்க
மயிலே! சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய் உன்னை நொந்
தாவதென்ன? - வன்கண் மயிலே! மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க உன்னை
ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)
|
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினைந்தாம் அத்தியாயம்
"நமனை அஞ்சோம்!"
வேலனின் காதலி
நீல மயில் ஒன்றை வளர்த்து வருகிறாள். அந்த மயிலைப் பார்க்கும்
போதெல்லாம் அவளுக்கு முருகனுடைய நினைவு வருகிறது, காதலின்
தாபம் அதிகமாகிறது. ஒருநாள் மயிலைப் பார்த்துச் சொல்கிறாள்;
"நீ பெருமான் முருகனுடைய வாகனமல்லவா? போ! போய் அவரை இங்கு
விரைவில் அழைத்து வா!" என்று கட்டளை இடுகிறாள்.
கட்டளையிடுவதுடன் நிற்காமல் மயிலை அடிப்பதாக பயமுறுத்தி
விரட்டி விடுகிறாள். நீலமயில் விரைவில் திரும்பி வரும்
என்றும், வரும்போது தன்மீது வேலனை ஏற்றிக்கொண்டு
ஆடிவருமென்றும் காதலி வழிபார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால்
நெடுநேரம் காத்திருந்தும் மயிலையும் காணவில்லை; வேலனையும்
காணவில்லை. "வேலன் ஒருவேளை அடியோடு தன்னை மறந்து
விட்டிருப்பாரோ?" என்று ஒரு கணம் தோன்றுகிறது.
உடனே அந்த பழைய
சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. கடைசித் தடவை வேலனை அவள்
சந்தித்தபோது, "என்னை மறந்து விடக் கூடாது" என்று தான் இரந்து
கேட்டுக் கொண்டதும், அவர் தம் வேலின் மேல் ஆணையாக "உன்னை ஒரு
நாளும் மறக்க மாட்டேன்!" என்று வாக்களித்ததும் நினைவுக்கு
வருகின்றன. உடனே, "இல்லை, அவர் ஒருநாளும் மறந்திருக்க
மாட்டார். இந்த மயில்தான் தாமதம் செய்கிறது" என்று
தீர்மானித்துக் கொள்கிறாள். தன் மனக் கண்ணின் முன்னால் மயிலை
உருவகப்படுத்தி நிறுத்திக் கொண்டு சொல்கிறாள்; "மறவேன் மறவேன்
என்று வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ நீல மயிலே!"
என்று சிவகாமி பாடிக் கொண்டு அபிநயமும் பிடித்தபோது, சபையோரின்
கண் முன்னாலிருந்து சிவகாமி மறைந்து விட்டாள். தமிழகத்தின்
அதிதெய்வமான ஸரீசுப்ரமண்யர் கையில் வேலுடனே அவர்கள் கண்
முன்னால் நின்றார். கருணையும் அன்பும் ததும்பிய கண்களினால்
முருகப் பெருமான் தன்னிடம் காதல் கொண்ட பெண்ணை நோக்குவதையும்,
கையில் பிடித்த வேலின் மேல் ஆணை வைப்பதையும், 'உன்னை என்றும்
மறவேன்!' என்று உறுதி கூறுவதையும் சபையோர் பிரத்தியட்சமாய்க்
கண்டார்கள்.
அடுத்த கணத்தில்
வேலனும் வேலும் மறைய, வேலனைப் பிரிந்த காதலியையும் நீல
மயிலையும் சபையோர்கள் தங்கள் எதிரே பார்த்தார்கள். காதலியின்
உயிர் வேலனைப் பிரிந்திருக்கும் ஆற்றாமையினால் உருகிக்
கரைவதையும் அவர்கள் கண்டார்கள். "அன்பர் வரவுநோக்கி இங்குநான்
காத்திருக்க அன்னநடை பயில்வாயோ வன்ன மயிலே!" என்னும் அடிக்குச்
சிவகாமி அபிநயம் பிடித்தபோது, முதலிலே தன்னந் தனியான ஒரு பெண்,
கண்களில் அளவற்ற ஆசையுடனும் ஆர்வத்துடனும், முடிவில்லாமல்
நீண்டு சென்ற வழியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதைப்
பார்த்தார்கள். பிறகு, அந்தப் பெண், அன்னநடை பயிலும் வன்ன
மயிலைப் பரிகசிப்பதற்காகத் தானும் அன்ன நடை நடந்து
காட்டியபோது, சபையில் 'கலீர்' என்ற சிரிப்பு உண்டாயிற்று.
அவ்விதமே, முருகன் தன்னை வாகனமாய்க் கொண்ட பெருமிதத்தினால்
மயிலின் தலைக்கேறிய போதையைக் காட்டியபோதும், அதனால் மயில்
பாதையை மறந்து திண்டாடிய பேதைத் தனத்தைக் குறிப்பிட்ட போதும்
சபையில் ஒரே குதூகலமாயிருந்தது. "ஒருவேளை என்மேல் பழி
தீர்த்துக் கொள்வதற்காக வழியில் வேணுமென்று படுத்து உறங்கி
விட்டாயா?" என்று மயிலைப் பார்த்துக் கேட்டுவிட்டு,
அப்பேர்ப்பட்ட அநியாயத்தைச் செய்த மயிலை, "என்னவோ, நீ
எப்படியாவது சௌக்கியமாயிரு!" என்று மனங்கசந்து
ஆசீர்வதிப்பதற்கு அறிகுறியாக, "வாழி நீ மயிலே!" என்று
வாழ்த்தி, அதற்குரிய பாவமும் காட்டியபோது, அந்தச் சபையில்
ஏற்பட்ட ஆரவாரத்தைச் சொல்லி முடியாது.
மறுகணத்தில்
காதலியின் உள்ளப்பாடு மாறுகிறது. "தங்க மயிலே!" என்று கொஞ்சி
அழைத்து, இந்த மங்கை மீதிரங்க மாட்டாயா?" என்று கெஞ்சுகிறாள்.
"உனக்காகவும் தெரியாது; சொன்னாலும் நீ கேட்க மாட்டாய்! உன்னைக்
குற்றம் சொல்லி என்ன பயன்? ஏ! வன் கண் மயிலே!" என்று மயிலின்
கொடுமையான கண்களின் சலனப் பார்வையைச் சிவகாமி காட்டியபோது,
சபையோர் அதிசயத்தில் மூழ்கினார்கள். "உன்னை நொந்து பயனில்லை;
உலகத்தில் யானைகள், குதிரைகள் என்பதாக எத்தனையோ நல்ல நல்ல
பிராணிகள் இருக்க, உன்னைப் போய் வாகனமாய்ப் பிடித்தானே
அவனையல்லவா நோக வேண்டும்?" என்று பாட்டை முடிக்கும் போது,
அதில் அடங்கியிருந்த சோகம், மனக் கசப்பு, பரிகாசம், நகைச்சுவை
ஆகிய உள்ளப் பாடுகள் அவ்வளவையும் சேர்ந்தாற்போல் முகத்தில்
காட்டிய சிவகாமியின் அற்புதக் கலைத்திறமை சபையோரைப்
பரவசப்படுத்தியது.
ஆம்; மேற்கூறிய
பாடலும் அபிநயமும் சபையில் எல்லோரையும் பரவசப்படுத்தத்தான்
செய்தன - ஒரே ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் மகேந்திர
பல்லவர்தான். அவர் முகத்தில் சிணுக்கம் காணப்பட்டது. வேலனிடம்
காதலை வௌியிடும் வியாஜத்தில் சிவகாமி மாமல்லரிடம் தன்னுடைய
மனம் ஈடுபட்டதையும் தெரிவிக்கிறாள் போலும். 'வேலின் மேல்
ஆணையிட்ட மன்னர்' என்பதில், அடங்கிய சிலேடை மிகத் தௌிவாக
மகேந்திரருக்கு விளங்கியது. 'தன்னிகரில்லாதான்' என்னும்போது
சிவகாமி தம்மைப் பார்த்ததின் கருத்தையும் தெரிந்து கொண்டார்.
ஆகா! இந்த பெண்ணுக்குத்தான் என்ன தைரியம்! தம்மைத் தோத்திரம்
செய்து அவளுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள எண்ணுகிறாள்,
போலும்! ஆகா! மகேந்திர பல்லவனுடைய இயல்பை இவள் இன்னும் அறிந்து
கொள்ளவில்லை! இவ்விதம் எண்ணமிட்ட சக்கரவர்த்தி, அருகிலிருந்த
ஏவலாளனிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். அவன் போய் ஆயனர் காதோடு
ஏதோ கூறினான். ஆயனர் சிவகாமியிடம், "அம்மா! வாகீசப் பெருமானின்
பதிகம் ஒன்று பாடு!" என்று கூறினார்.
ஏற்கெனவே,
சக்கரவர்த்தியின் சிணுங்கிய முகத்திலிருந்து அவருடைய
மனப்பாங்கைச் சிவகாமி ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தாள். அவர்
சொல்லி அனுப்பிய செய்தியினால் அது ஊர்ஜிதமாயிற்று. அந்தக் கல்
நெஞ்சரைத் தன்னுடைய கலையின் மூலம் இளகச் செய்து, அவருடைய
ஆதரவைப் பெறலாம் என்று எண்ணிய தன்னுடைய பிசகை நினைக்க அவளுக்கு
வெட்கமாயிருந்தது. அந்த வெட்கமே மறுகணம் கோபமாக மாறி அவள்
உள்ளத்தில் கொந்தளித்தது. பின்வரும் பாடலை ஆரம்பித்தாள்:
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!..." அதுவரையில் ஒரே
ஆனந்தத்திலும் குதூகலத்திலும் ஆழ்ந்திருந்த அந்தச் சபையில்
திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. ஒரு கல்யாண
வைபவத்தின்போது, எதிர்பாராத அபசகுனம் ஏதேனும் ஏற்பட்டால்
எல்லாருடைய மனமும் முகமும் எப்படி மாறுமோ அப்படிப்பட்ட
மாறுதல். 'இந்தப் பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன்
பாடவேண்டும்' என்று அத்தனை பேரும் எண்ணியதாக அவர்களுடைய முகக்
குறியிலிருந்து தெரிந்தது.
மேற்படி பாடலின்
சரித்திரம் அத்தகையதாகும். சமண சமயத்தைத் தழுவிய மருள்
நீக்கியார்மீது பாடலிபுரத்துச் சமணர்கள் பற்பல குற்றங்களைச்
சுமத்திக் காஞ்சிப் பல்லவ சக்கரவர்த்திக்கு விண்ணப்பம்
செய்துகொள்ள, மகேந்திர பல்லவர் உண்மையை விசாரித்து உணரும்
பொருட்டு அவரைக் காஞ்சிக்கு வரும்படி கட்டளை அனுப்பினார்.
கட்டளையைக் கொண்டு போன இராஜ தூதர்கள் அந்த மகா புருஷரைக்
கொஞ்சம் அச்சுறுத்தினார்கள். "எனக்கு இறைவன், சிவபெருமான்
தான்; உங்களுடைய அரசன் கட்டளையை நான் மதியேன்!" என்று
திருநாவுக்கரசர் கூறித் தூதர்களைத் திடுக்கிடச் செய்தார்.
"உம்மைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவோம், யானையின் காலால்
மிதிக்கச் செய்வோம்; கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலிலே
போடுவோம்" என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்தினார்கள். அப்போது,
மருள்நீக்கியார் ஒரு பாடலைப் பாடினார்: நாமார்க்குங்
குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந்
துன்பமில்லை! தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற்
சங்கவெண் குழையோர் காதில் கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே!
மேற்கண்ட பாடலை
ஓலையிலே எழுதுவித்து, "இதை எடுத்துக்கொண்டு போய் உங்கள்
அரசரிடம் கொடுங்கள்" என்றார் சிவனடியார். தூதர்களும்
தங்களுக்கு வேறு கட்டளையில்லாமையால் திரும்பிச் சென்று பாடலைச்
சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தற்கு
மாறாகக் காரியம் நடந்தது. அதாவது பாடலைப் படித்த மகேந்திர
பல்லவர் அத்தகைய தெய்வப் பாடலைப் பாடக் கூடிய மகானைத் தரிசிக்க
விரும்பினார். அவரைத் தரிசித்த பிறகு, தாமும் ஜைன
மதத்தைவிட்டுச் சைவ சமயத்தைச் சேர்ந்தார். இதெல்லாம்
தெரிந்தவர்களானபடியாலேதான் சபையோர் அத்தகைய அஸ்வாரஸ்யத்தைக்
காட்டினார்கள்.
ஆனால்,
சபையோருடைய மனோபாவத்துக்கு நேர்மாறாக இருந்தது மகேந்திர
பல்லவருடைய மனோபாவம். அந்தப் பாடல் அவருக்கு மிகுந்த
உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. பாடல் ஆரம்பித்த உடனே, அது
எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டதென்பதை மகேந்திரர்
புலிகேசிக்கு அறிவித்தார். புலிகேசிக்கு அது எல்லையற்ற
வியப்பையும் உவகையையும் அளித்ததாகத் தெரிந்தது. "அழகுதான்!
தங்களுடைய அதிகாரத்தை மறுதலித்து ஒரு பரதேசி பாடல் பாடுவது;
அதை ஒரு பெண், சபை நடுவில் அபிநயம் பிடிப்பது; அதை நீங்களும்
பார்த்துச் சந்தோஷப்படுவது; இதையெல்லாம் என்னால் நம்பவே
முடியவில்லையே!" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி. "அதுதான்
கலையின் மகிமை, சத்யாச்ரயா! ஒருவன் வாய்ப் பேச்சாக என் ஆக்ஞையை
மறுத்திருந்தால், உடனே அவனைச் சிரச்சேதம் செய்யும்படி
கட்டளையிட்டிருப்பேன். அதுவே செந்தமிழ்க் கவிதையாக வந்தபோது,
'இத்தகைய அற்புதக் கவிதையைப் பாடியவரைப் பார்க்க வேண்டும்'
என்ற விருப்பம் எனக்கு உண்டாகிவிட்டது" என்றார் ரஸிக
சிகாமணியான காஞ்சிச் சக்கரவர்த்தி. இதற்குள்ளாகப் பாடல் ஒரு
தடவை பாடி முடிந்து, அபிநயமும் ஆரம்பமாகியிருந்தது. 'நமனை
அஞ்சோம்' என்னும் பகுதிக்குச் சிவகாமி அபிநயம் பிடிக்கத்
தொடங்கியிருந்தாள். மார்க்கண்டனுடைய கதை சபையோரின் கண்முன்னால்
வந்தது.
மல்லிகைப் பூவின்
மெல்லிய இதழ் போன்ற மிருதுவான சரீரத்தையுடைய அந்த யுவதி ஒரு
கணத்தில் கையிலே தண்டாயுதத்துடனும் பாசக் கயிற்றுடனும்
கண்டவர்கள் உயிர்க் குலையும் பயங்கரத் தோற்றத்துடன் வரும்
யமதர்மராஜனாக மாறுகிறாள்! அடுத்த கணத்தில் அவளே பதினாறு
வயதுள்ள இளம் பாலகனாக மாறி, முகத்தில் சொல்ல முடியாத
பீதியுடன், சிவலிங்கத்தை அணைத்து ஆலிங்கனம் செய்து
கொள்ளுகிறாள். மறுகணத்தில் யமதர்மராஜன் தன் பாசக் கயிற்றை வீசி
எறிந்து மார்க்கண்டனுடைய உயிரை வலிந்து கவரப் பார்க்கிறான்.
அந்த இளம் பிள்ளையின் முகமோ முன்னைக் காட்டிலும் பதின்மடங்கு
பீதியையும் பரிதாபத்தையும் காட்டுகிறது.
ஆஹா!
அடுத்தகணத்தில் அந்தச் சிவலிங்கத்திலிருந்து சம்ஹார
ருத்ரமூர்த்தி கிளம்புகிறார்! சிவகாமியின் நெடிதுயர்ந்த
ஆகிருதி இப்போது இன்னும் உயர்ந்து தோற்றமளிக்கிறது. ஒரு கணம்
கருணை ததும்பிய கண்கள் சற்று கீழ்நோக்கிப் பார்க்கின்றன.
கரங்கள், பாலன் மார்க்கண்டனுக்கு அபாயம் அளிக்கின்றன. மறு
கணத்தில் கண்கள் எதிர்ப்புறம் நோக்குகின்றன. யமனைக் கோபத்துடனே
பார்க்கும் கண்களில் அக்னி ஜுவாலை தழல் விடுகிறது.
புருவங்களுக்கு மத்தியிலே நெற்றிக் கண் இதோ
திறந்துவிடப்போகிறது என்று நினைக்கும்படியாக ஒரு
துடிதுடிப்புக் காணப்படுகிறது.
கோர பயங்கர
உருவம் கொண்ட யமதர்மனிடம் இப்போது சிறிது பணிவைக் காண்கிறோம்.
"என் பேரில் ஏன் கோபம்? என்னுடைய கடமையைத்தானே செய்கிறேன்?"
என்று சொல்லும் தோற்றம். கோபம் கொண்ட சம்ஹார ருத்ரமூர்த்தி
மீண்டும் சபையோருக்கு தரிசனம் தருகிறார். ஒரு காலைத் தூக்கி
ஓங்கி உதைக்கிறார். 'தடார்' என்ற சத்தத்துடன் யமன் உதைபட்டுக்
கீழே விழுகிறான். மீண்டும், பாலன் மார்க்கண்டனின் பால் வடியும்
முகம். ஆகா! அந்த முகத்தில் இப்போது பயம் இல்லை, பீதி இல்லை!
பக்திப் பரவசமும் நன்றியும் ததும்புகின்றன.
அபிநயம்
ஆரம்பித்தவுடனேயே சபையோர் தங்களுடைய பழைய விரஸ உணர்ச்சியை
மறந்துவிட்டார்கள். பாட்டு யார் பாடியது; எந்தச்
சந்தர்ப்பத்தில் பாடியது என்பதெல்லாம் அவர்களுக்கு அடியோடு
மறந்து போய்விட்டது. வௌியுலகத்தை மறந்து, தங்களையும் அடியோடு
மறந்துவிட்டார்கள். பாடல் முழுவதும் முடிந்து, பூலோகத்திற்கு
வந்தவுடனே "எப்படி?" என்று மகேந்திர பல்லவர் புலிகேசியைக்
கேட்டார். "நாகநந்தி எழுதியது உண்மைதான்!" என்று வாதாபி மன்னர்
சொல்லிவிட்டு மகேந்திர பல்லவரை உற்று நோக்கினார். மகேந்திரரின்
முகத்தில் எவ்வித மாறுதலும் காணப்படவில்லை. "நாகநந்தி யார்?"
என்று சாவதானமாக மகேந்திரர் கேட்டார். "நீங்கள் நாகநந்தி
பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையா? தென்னாடெங்கும் பலநாள்
யாத்திரை செய்த புத்த பிக்ஷு." "பிக்ஷு என்ன எழுதியிருந்தார்
தங்களுக்கு?" "அவருடைய யாத்திரை விவரங்களை என்கு அவ்வப்போது
தெரிவுக்கும்படி கேட்டிருந்தேன். அந்தப்படியே எழுதிக் கொண்டு
வந்தார். 'ஆயனரைப் போன்ற மகா சிற்பியும் சிவகாமியைப் போன்ற நடன
கலா ராணியும் இந்தப் பரத கண்டத்தில் வேறு எங்கும் இல்லை!'
என்று ஒரு தடவை எழுதியிருந்தார்." "நாகநந்தி பிக்ஷு நல்ல
ரசிகர் போலிருக்கிறது; அவர் இப்போது எங்கேயோ?" "அதுதான்
தெரியவில்லை; ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாமென்று
நினைத்தேன். மகேந்திரர் மௌனமாயிருந்தார். "நாட்டில் இருந்த
புத்தபிக்ஷுக்களையெல்லாம் ஒற்றர்கள் என்று நீங்கள் பிடித்துச்
சிறைப்படுத்தியதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை நாகநந்தி
பிக்ஷுவையும் ஒற்றர் என்று சந்தேகித்துச் சிறைப்படுத்தி
விட்டீர்களோ, என்னவோ?"
மேற்குறித்த
சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில், சிவகாமியின் கண்கள் கரகோஷம்
செய்து ஆரவாரித்துக் கொண்டிருந்த சபையோரின் மலர்ந்த முகங்களைப்
பார்த்த வண்ணம் சுற்றிக் கொண்டு வந்து, மகேந்திர பல்லவரின்
உற்சாகம் ததும்பும் முகத்தைப் பார்த்து விட்டு, அடுத்தாற்போல்
வாதாபிச் சக்கரவர்த்தியின் கிளர்ச்சி கொண்ட முகத்தில் வந்து
நின்றன. அவ்விதம் நின்றதும் சிவகாமியின் உள்ளத்தில் இத்தனை
நேரமும் படர்ந்து வேதனை செய்து கொண்டிருந்த மாயத்திரை
பளிச்சென்று விலகிற்று. நிழலாயிருந்த ஞாபகம் தௌிந்த
உருவெருத்து மனக்கண் முன்னால் நின்றது. ஆ! அந்த முகம்!
அப்படியும் இருக்க முடியுமா? இரு மனிதருக்குள் அத்தகைய முக
ஒற்றுமை சாத்தியமா? அல்லது இருவரும் ஒருவர்தானா? மகேந்திர
சக்கரவர்த்தி பலவித மாறுவேஷங்கள் போட்டுக் கொண்டு திரிவதுண்டு
அல்லவா? அதுபோலவே, வாதாபிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி
பிக்ஷுவாகத் தென்னாட்டில் உலவிக் கொண்டிருந்தாரா?
இத்தகைய
எண்ணங்களினால் சிவகாமியின் உள்ளம் குழம்பிக்
கொண்டிருக்கும்போதே, மகேந்திர பல்லவர் நடனத்தை முடித்து
விடலாம் என்று ஆயனருக்குச் சமிக்ஞை செய்தார். நடனக் கலையின்
அதி தெய்வமும் தமிழ் நாட்டின் தனிப் பெருந்தெய்வமுமான ஸரீ
நடராஜமூர்த்தி தில்லைப் பதியில் ஆடிய ஆனந்த நடனத்தை
வர்ணிக்கும் பாடலோடும், அதற்குரிய நடன அபிநயத்துடனும் அன்றைய
நடன வினிகை முடிவுற்றது. "இம்மாதிரி ஒரு நடனம் இதற்கு முன்னால்
நடந்ததில்லை; இனிமேலும் நடக்கப் போவதில்லை!" என்று
அம்மகாசபையில் கூடியிருந்த ரஸிகர்கள் ஏகமனதாக
அபிப்பிராயப்பட்டார்கள்.
மகேந்திர பல்லவர்
மீண்டும் சமிக்ஞை செய்ததின் பேரில் ஆயனரும் சிவகாமியும் இரு
சக்கரவர்த்திகளும் அமர்ந்திருந்த சிம்மாசனங்களுக்கு அருகே
சென்று வணங்கி நின்றார்கள். மகேந்திர பல்லவர், "ஆயனரே! முன்
தடவை இதே இடத்தில் சிவகாமியின் அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்த
போது, இடையிலே தடைப்பட்டதல்லவா? அந்தத் தடைக்குக் காரணமான
வாதாபிச் சக்கரவர்த்தியே இங்கு இன்று வீற்றிருப்பது உமது
குமாரியின் அற்புத நடனத்தைப் பார்த்துக் களித்தார்!" என்று
கூறி விட்டுச் சிவகாமியைப் பார்த்து, "அம்மா, சிவகாமி!
வாதாபிச் சக்கரவர்த்தி உன்னுடைய நடனக் கலைத்திறமையில்
ஒரேயடியாக மயங்கிப் போய்விட்டார். உன்னையும் உன் தகப்பனாரையும்
தம்முடன் வாதாபிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கிறார். உனக்குப்
போகச் சம்மதமா?" என்று வினவினார்.
சிவகாமி
கோபத்தினால் தன்னடக்கத்தை இழந்து, "பிரபு இந்த ஏழைப் பெண்
இந்தத் தேசத்தில் இருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லையா?"
என்றாள். இம்மொழிகள் ஆயனருக்கும் இன்னும் பக்கத்தில்
நின்றவர்களுக்கும் வியப்பையும் பயத்தையும் அளித்தன. ஆனால்
மகேந்திர பல்லவரின் முகத்தில் மட்டும் புன்னகைதான் தவழ்ந்தது.
அவர் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்து, "சத்யாச்ரயா!
பார்த்தீர்களா? சாட்டையினால் அடித்து நடனம் ஆடச் சொல்லும்
நாட்டுக்குக் கலைஞர்கள் போக விரும்புவார்களா?" என்றார்.
அப்போது
புலிகேசியின் முகம் கறுத்ததையும், அவருடைய கண்களில் கனல்
எழுந்ததையும் கவனியாமல், மகேந்திரர் "அம்மா சிவகாமி! உன்னை
நாட்டை விட்டுத் துரத்த நான் விரும்பவில்லை. இந்த நகரத்தை
விட்டு உங்களைப் போகச் சொல்லவே எனக்கு இஷ்டமில்லை. ஆயனரே!
இன்று இவ்வளவு அற்புதமாக நடனம் ஆடிய சிவகாமிக்கு நான் பரிசுகள்
கொடுக்க வேண்டும். அதுவரை சில தினங்கள் நீங்கள் நகரிலேயே
இருக்க வேண்டும். கமலியின் வீட்டில் போயிருங்கள்; கமலியும்
சிவகாமியைப் பார்க்க ஆவலாயிருக்கிறாள். பின்னர் அங்கு நான்
வந்து உங்களுடன் சாவகாசமாகப் பேசுகிறேன்!" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினாறாம் அத்தியாயம்
புலிகேசியின் புறப்பாடு
மறு நாள் காஞ்சி
நகரில் மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டம். அன்று வாதாபிச்
சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சியிலிருந்து புறப்படுவதாக
ஏற்பாடாகியிருந்தது. புறப்படுவதற்கு முன்னால் இன்னொரு தடவை
காஞ்சிமா நகரை நன்றாய்ப் பார்க்க வேண்டுமென்று புலிகேசி
விரும்பினார். எனவே இரு சக்கரவர்த்திகளும் பட்டத்து யானை மீது
அமர்ந்து நகர்வலம் கிளம்பினார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டுக்
காஞ்சி நகரம் அன்று மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நகர மாந்தர்கள் - ஸ்தீரிகளும் புருஷர்களும் அழகிய ஆடை
ஆபரணங்கள் பூண்டு தெரு ஓரங்களில் கும்பலாக நின்று
கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பலவகை வாத்தியங்கள் முழங்கிக்
கொண்டிருந்தன. உப்பரிகை மேல் மாடங்களிலிருந்து இரு
சக்கரவர்த்திகளும் அமர்ந்து சென்ற பட்டத்து யானை மீது மலர்
மாரி பொழிந்து கொண்டிருந்தது.
காஞ்சிமா நகரின்
அழகிய விசாலமான வீதிகளையும், மாடமாளிகைகளையும், கோயில்களையும்,
கோபுரங்களையும், சிற்ப சித்திர மண்டபங்களையும், நடன
அரங்கங்களையும், புத்த விஹாரங்களையும் சமணர் ஆலயங்களையும்
எவ்வளவுதான் பார்த்தாலும் புலிகேசிக்கு அலுப்பு ஏற்பட்டதாகத்
தெரியவில்லை. "பாரவியை மகா கவி என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அவர் எவ்வளவு மட்டமான கவி என்பது இப்போதுதான்
தெரிகிறது..." என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி திடீரென்று.
"அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்? பாரவியின் 'கிராதார்ஜுனீயம்'
எவ்வளவு அழகான காவியம்?... தாங்கள் படித்திருக்கிறீர்கள்
அல்லவா?" என்றார் மகேந்திர பல்லவர்.
"ஆ! இந்தக்
கவிகள் மலையையும் காட்டையும் மழையையும் மேகத்தையும் வர்ணிக்கச்
சொன்னால் வர்ணிப்பார்கள். இந்த மாதிரி ஒரு நகரத்தை வர்ணிக்கச்
சொன்னால் அப்போது அவர்களுடைய சாமர்த்தியமெல்லாம் எங்கோ போய்
விடுகிறது! பாரவி இந்த நகரத்தைப் பற்றி எனக்கு எழுதிய
வர்ணனையெல்லாம் இதன் உண்மைச் சிறப்பில் கால் பங்குகூட வராது...
பல்லவேந்திரா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா? நாம்
இருவரும் ஒரு பரிவர்த்தனை செய்து கொள்வோம். நர்மதையிலிருந்து
துங்கபத்திரை வரை பரந்து கிடக்கும் என்னுடைய சாம்ராஜ்யம்
முழுவதையும் எடுத்துக் கொண்டு அதற்கு மாற்றாக இந்தக் காஞ்சி
நகரை மட்டும் எனக்குக் கொடுங்கள்!" என்றார் வாதாபி அரசர்.
"மன்னர் மன்னா!
திவ்யமாக இந்த் காஞ்சி நகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு
மாறாக, உங்கள் இராஜ்யம் முழுவதையும் எனக்குக் கொடுக்க
வேண்டாம். அஜந்தா மலையையும் அதன் குகைகளையும் மட்டும்
கொடுத்தால் போதும்! கல்லினாலும் சுண்ணாம்பினாலும் மண்ணினாலும்
மரத்தினாலும் கட்டிய இந்த மாநகரின் கட்டடங்கள் எல்லாம் ஒரு
காலத்தில் இடிந்து தகர்ந்து போனாலும் போகலாம்; அஜந்தா மலைக்
குகைகளில் எழுதிய அழியா வர்ணச் சித்திரங்கள் நீடூழி காலம்
இருக்கும். சளுக்க குல சிரேஷ்டரே! தங்களுக்கு ஒரு சமாசாரம்
தெரியுமா? நேற்று நடன மாடினாளே, சிவகாமி! "வாதாபிக்குப்
போகிறாயா?" என்று கேட்டதும், அவள் அவ்வளவு மனத்தாங்கலுடன்
பேசினாள் அல்லவா? நீங்கள் மட்டும் அவள் தந்தை ஆயனரிடம்
அஜந்தாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான்; உங்களுடன்
வந்தால் அஜந்தா வர்ண இரகசியத்தைத் தெரியப்படுத்துவதாகச் சொல்ல
வேண்டியதுதான். உடனே உங்களுடன் புறப்பட்டு வர ஆயத்தமாகி
விடுவார்!..."
"அப்படியா? ஆயனச்
சிற்பிக்கு அஜந்தா வர்ண விஷயத்தில் அவ்வளவு அக்கறையா?" என்று
புலிகேசி கேட்ட போது ஏதோ பழைய நினைவு வந்தவரைப் போல அவருடைய
கண்களில் சிந்தனைக் குறி தோன்றியது. "ஆமாம்; ஆமாம், அஜந்தா
வர்ண இரகசியத்தைத் தெரிந்து கொண்டு வருவதற்காக ஆயனர் தூது கூட
அனுப்பினாரே, அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?" என்றார் பல்லவ
சக்கரவர்த்தி. பின்னர் தொடர்ந்து, "ஆகா! அந்த ஓலையைப் படிக்கக்
கேட்டபோது நீங்கள் எப்படித் திகைத்தீர்கள்!" என்று
கூறிவிட்டுக் கலகலவென்று நகைத்தார். விதி, விதி என்று
சொல்கிறார்களே, அந்த விதியானது அப்போது மகேந்திரவர்மரின்
நாவிலே வந்து உட்கார்ந்து கொண்டது. அது காரணமாக,
மகாமேதாவியும், தீர்க்க திருஷ்டியுள்ளவரும், சாணக்கிய
சாகஸத்தில் இணையற்றவருமான அந்தப் பல்லவ சிரேஷ்டர், நாவின்
அடக்கத்தை இழந்தார். யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்னும் பொய்யாமொழிப் புலவரின்
வாக்கை நன்கறிந்தவராயினும் அச்சமயம் அதை மறந்துவிட்டார்.
அவருடைய இதய அந்தரங்கத்துக்குள்ளே கிடந்த ரகசியங்கள்
ஒவ்வொன்றாய் வௌி வரலாயின.
மகேந்திர
பல்லவரின் கடைசி வார்த்தைகள் புலிகேசியின் உடம்பில் ஏக
காலத்தில் பல தேள்கள் கொட்டியது போன்ற உணர்ச்சியை
உண்டாக்கியதாகத் தோன்றியது. "சத்ருமல்லா! எதைப்பற்றிச்
சொல்கிறீர்கள்? உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று
கேட்டுவிட்டு, பாம்பு சீறுவதைப்போல் பெருமூச்சு விட்டார்
புலிகேசி. மகேந்திர பல்லவர் மறுபடியும் நகைத்து, "ஆமாம்!
அந்தக் காட்சியை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்புச்
சிரிப்பாய் வருகிறது. வடபெண்ணை நதியை நீங்கள்
நெருங்கிவிட்டீர்கள். முதலில் ஒரு தூதன் ஓலையைக் கொண்டு வந்து
கொடுக்கிறான். அதிலே நீங்கள் எதிர்பாராதவிதமாய் ஏதோ
எழுதியிருக்கிறது. உங்களுக்குக் கோபம் கோபமாய் வருகிறது.
அந்தச் சமயத்தில் ஓர் இளம் பிள்ளையைச் சிறைப்படுத்திக் கொண்டு
வருகிறார்கள், அவனிடமும் ஓர் ஓலை இருக்கிறது. அதைப் படித்தால்,
பூஜை வேளையில் கரடியை விடுவதுபோல், அஜந்தா வர்ண இரகசியத்தைப்
பற்றிக் கேட்டிருக்கிறது. அப்போது உங்களுடைய முகத்தைப் பார்க்க
வேண்டுமே? அதிர்ஷ்டவசத்தினால், அந்தப் பிள்ளையாண்டானை உடனே
சிரச்சேதம் பண்ணச் சொல்லாமல் நாகார்ஜுன மலைக்கு அனுப்பச்
செய்தீர்கள்!" என்றார்.
"விசித்திர
சித்தரே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட
இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்களே?" என்று பல்லைக்
கடித்துக் கொண்டு கேட்டார் புலிகேசி. "கிட்ட இருந்து
பார்த்ததனால்தான் தெரிந்தது!" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.
புலிகேசி மகேந்திரரின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு "ஆ!
அப்படியானால், அந்த வஜ்ரபாஹு என்கிற தூதன் தாங்கள்
தானாக்கும்!" என்றார். "அடியேன்தான்!" என்றார் மகேந்திர
பல்லவர். "என் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த பல மர்மங்களில்
ஒன்று வௌியாகிவிட்டது. மீதமுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில்
இனிமேல் கஷ்டமேயிராது என்று புலிகேசி மெல்லிய குரலில் தமக்கு
தாமே சொல்லிக் கொண்டார். பிறகு உரத்த குரலில் "அப்படியானால்
வஜ்ரபாஹு கொண்டு வந்த அந்த ஓலை?.." என்று கேட்டார். "தூதனையே
சிருஷ்டி செய்தவனுக்கு ஓலையைச் சிருஷ்டி செய்வதுதானா பெரிய
காரியம்?" "இல்லை, இல்லை! காஞ்சி மகேந்திர பல்லவருக்கு எதுவுமே
பெரிய காரியம் இல்லை!.... ஐயா! இப்போதாவது எனக்குச்
சொல்லலாமல்லவா? எது நிஜ ஓலை! எது பொய் ஓலை?"
"சத்யாச்ரயா!
அந்தப் பிள்ளை முதலில் கொண்டுவந்த நிஜமான ஓலை மட்டும்
உங்களிடம் அப்போது வந்திருந்தால் இன்றைக்கு நீங்களும் நானும்
இந்தக் காஞ்சி நகரின் வீதிகளில் பட்டத்து யானையின் மீது
அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருக்க மாட்டோம். ஊர்வலம்
வருவதற்கு வீதியே இராது; காஞ்சி நகரமும் இராது. வைஜயந்தி
அடைந்த கதியைக் காஞ்சியும் அடைந்திருக்கும். நண்பரே! இப்போது
நீங்களும் உண்மையைச் சொல்லுங்கள். இந்த அழகான நகரை, அடியோடு
அழித்துவிடும் எண்ணம் அப்போது உங்கள் உள்ளத்தில்
இருக்கவில்லையா?" என்று மகேந்திரர் கேட்டார். புலிகேசி தன்
மனத்திற்குள், "அப்போது அவ்வளவாக இல்லை; இப்போதுதான் இந்த நகரை
எரித்துப் பொசுக்கிச் சாம்பலாக்கி விட வேண்டுமென்று
தோன்றுகிறது" என்று எண்ணிக் கொண்டார். வௌிப்படையாக,
"பல்லவேந்திரா! முதல் ஓலையில் - நிஜ ஓலையில் - என்ன
எழுதியிருந்தது?" என்று கேட்டார். "வேறொன்றுமில்லை, பாகப்
பிரிவினைத்தான் செய்திருந்தது! 'பல்லவ சாம்ராஜ்யத்தையும்
காஞ்சி சுந்தரியையும் நீ எடுத்துக் கொள்; நடன கலா ராணி
சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு' என்று பிக்ஷு
உங்களைக் கேட்டிருந்தார்!" இதைக் கேட்ட வாதாபிச் சக்கரவர்த்தி
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, "காஞ்சி சுந்தரியைக்
கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான காரியமா?" என்றார். "நண்பரே!
அந்த ஓலையில் எழுதியிருந்தபடி நீங்கள் நேரே காஞ்சிக்கு
வந்திருந்தால் அது சுலபமாகத்தான் இருந்திருக்கும். அப்போது
இந்தக் காஞ்சிக் கோட்டை வாசல்களின் கதவுகள் உங்கள் யானைப்
படையில் ஒரு யானையின் மோதலுக்குக் கூட ஈடு கொடுத்து
நின்றிருக்க முடியாது!" என்றார் மகேந்திர பல்லவர்.
புலிகேசியின்
உள்ளத்தில் பல தீ மலைகள் ஏக காலத்தில் நெருப்பைக் கக்க
ஆரம்பித்தன. மகேந்திரரை ஏறிட்டு நோக்கி, "பல்லவேந்திரா! அர்த்த
சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் உங்களிடம் பிச்சை வாங்க
வேண்டும்!" என்றார். "எங்கள் தென்னாட்டிலும் ஒரு பிரபல இராஜ
தந்திரி உண்டு. அவர் பெயர் திருவள்ளுவர்; அந்தப் பெரியார்
எழுதிய பொருளதிகார நூலை உங்களுக்குப் பரிசளிக்க வேண்டுமென்று
எனக்கு விருப்பம். ஆனால், எங்கள் செந்தமிழ் மொழியை இன்னும்
நீங்கள் நன்றாய்ப் பயிலவில்லையே?" என்றார் சத்துருமல்லர்.
பிறகு, "நண்பரே!
போனதெல்லாம் போயிற்று, அதையெல்லாம் பூர்வ ஜன்ம அனுபவமாக
நினைத்து மறந்துவிடுங்கள். இந்தப் பத்துத் தினங்களில்
நீங்களும் நானும் அத்தியந்த சிநேகிதர்களாகி விட்டோம். உங்களை
நான் அறிந்து கொண்டேன்; என்னையும் நீங்கள் அறிந்து
கொண்டீர்கள். உங்களுடைய படையெடுப்பைத் தடுப்பதற்கு நான்
கையாண்ட தந்திரங்களையெல்லாம் என் மனத்திற்குள் வைத்திருப்பது
சிேகிதத் துரோகம் என்றுதான் அவற்றை உங்களுக்குச் சொன்னேன்.
இனிமேல் நமது நேசத்திற்கு எவ்விதத் தடங்கலும் இல்லை,
நம்மிருவருடைய ஆயுளும் உள்ளவரையில் நாம் இனிமேல் சிநேகிதர்கள்.
என் ஆயுட் காலத்தில் தங்களுக்கு விரோதமாக இனி நான் ஒன்றும்
செய்ய மாட்டேன்; தாங்களும் அப்படித்தானே?" என்று மகேந்திர
பல்லவர் உண்மையான உள்ள நெகிழ்ச்சியுடன் கேட்டார். "சத்ருமல்லா!
அதைப்பற்றிக் கேட்க வேண்டுமா?" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி.
நகர்வலம் எல்லாம்
முடிந்து பட்டத்து யானை காஞ்சியின் வடக்குக் கோட்டை வாசல்
அண்டை வந்து நின்றது. இரு சக்கரவர்த்திகளும் பிரியவேண்டிய
சமயம் வந்தது. யானையின் மீதிருந்தவர்கள் பூமியில்
இறங்கினார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள்.
"பல்லவேந்திரா! உங்கள் நகருக்கு விருந்தினனாக வந்ததில் எனக்கு
எவ்வளவோ சந்தோஷம். அபூர்வமான காட்சிகளைக் கண்டேன்; அபூர்வமான
விஷயங்களைக் கேட்டேன். ஆனால், தங்கள் வீரப் புதல்வன்
மாமல்லனைப் பார்க்காமல் திரும்பிப் போவதிலேதான் கொஞ்சம்
வருத்தம்!" என்றார் புலிகேசி. "ஆம்; மாமல்லனையும்
பார்க்கவில்லை; உங்களுக்கு முதலில் ஓலை கொண்டு வந்த
வாலிபனையும் நீங்கள் பார்க்கவில்லை; நாகநந்தி பல்லவ
ராஜ்யத்துக்குப் பெரியதொரு உபகாரம் செய்தார். சிறந்த வீரத்
தளபதி ஒருவனை அளித்தார்...."
புலிகேசி
குறுக்கிட்டு, "ஆமாம்; தளபதி பரஞ்சோதியைப் பாராததிலும் எனக்கு
ஏமாற்றந்தான். அவர்களிருவரும் எங்கே என்பதை இன்னும் தாங்கள்
சொல்லவில்லையே?" என்றார். "பாண்டிய மன்னனை வழி அனுப்ப அவர்கள்
போயிருக்கிறார்கள்! இன்றைக்குக் காலையிலேதான் செய்தி வந்தது.
பாண்டியனைக் கீழைச் சோழ நாட்டின் எல்லை வரையில் கொண்டு
போய்விட்டு விட்டார்களாம்!" "ஆஹா! நினைத்தேன்; ஏதோ
பாண்டியனுக்கு நீங்கள் சம்பந்தியாகப் போவதாக ஒரு வதந்தி
இருந்ததே!" "சம்பந்தி உபசாரம் செய்வதற்குத்தான் மாமல்லனும்
பரஞ்சோதியும் போனார்கள்!" என்று கூறி மகேந்திர பல்லவர்
நகைத்தார்.
"விசித்திர
சித்தரே! போய் வருகிறேன்; போவதற்கு முன்னால் கடைசியாக ஒரு
வார்த்தை கேட்கிறேன். நாகநந்தி பிக்ஷு யார் என்பது
உங்களுக்குத் தெரியுமா?" என்று புலிகேசி கேட்க மகேந்திர
பல்லவர், "உத்தேசமாகத் தெரியும்!" என்று கூறி வாதாபிச்
சக்கரவர்த்தியின் காதோடு ஏதோ கூறினார். "ஆ! உங்களுக்குத்
தெரியாதது ஒன்றுமேயில்லை. அப்படித் தெரிந்திருக்கும் போது,
அவரை நீங்கள் விடுதலை செய்து என்னுடன் அனுப்பப் போவதில்லையா?"
என்று புலிகேசி ஆங்காரமான குரலில் கேட்டார். "சக்கரவர்த்தி
கோரினால் அவ்விதமே செய்யத் தடையில்லை!" என்றார் மகேந்திர
பல்லவர். "வாதாபி சளுக்க குலத்தார் யாரிடமும் எந்தக்
கோரிக்கையும் செய்து கொள்வதில்லை!" என்று புலிகேசி
கம்பீரமாய்க் கூறினார்." "காஞ்சிப் பல்லவ குலத்தினர்
யாருக்கும் கோராத வரத்தைக் கொடுப்பதில்லை" என்றார் மகேந்திர
பல்லவர். "பல்லவேந்திரா! போய் வருகிறேன்" என்றார் புலிகேசி.
"சத்யாச்ரயா! ஞாபகம் இருக்கட்டும்" என்றார் மகேந்திரர். "ஒரு
நாளும் மறக்க மாட்டேன்" என்றார் வாதாபி மன்னர்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஏறக்குறைய ஒன்றரை
ஆண்டு காலம் பிரிந்திருந்த பிறகு, சிவகாமியும் கமலியும்
சந்தித்த போது, அந்த இளம் பிராயத் தோழிகளுக்கு ஏற்பட்ட உள்ளக்
கிளர்ச்சியை விவரிக்க முடியாது. ஒருவரை ஒருவர் தழுவிக்
கொண்டார்கள்; ஒருவருடைய தலையை ஒருவர் தோளில் வைத்துக்கொண்டு
கண்ணீர் விட்டார்கள்! விம்மி அழுதார்கள்; திடீரென்று
சிரித்தார்கள்; ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டார்கள்; உடனே
வைது கொண்டார்கள். இருவரும் ஏக காலத்தில் பேச முயன்றார்கள்;
பிறகு இருவரும் சேர்ந்தாற்போல் மௌனமாயிருந்தார்கள். அந்த
ஒன்றரை வருஷத்துக்குள் இருவருடைய வாழ்க்கையிலும் எத்தனை
எத்தனையோ முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. அவற்றில் எதை
முதலில் சொல்வது எதை அப்புறம் சொல்வது என்று நிர்ணயிக்க
முடியாமல் தவித்தார்கள். அந்தப் பிரச்னையை அவர்களுக்காகச்
சின்னக் கண்ணன் தீர்த்து வைத்தான்.
தொட்டிலில்
படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, தான் விழித்துக்
கொண்டு விட்டதை ஒரு கூச்சல் மூலம் தெரியப்படுத்தியதும், கமலி
ஓடிப் போய்க் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தாள்.
சிவகாமி சின்னக் கண்ணனைக் கண்டதும் சற்று நேரம்
திகைத்துப்போய், பார்த்தது பார்த்தபடி நின்றாள். வௌிப்படையில்
அவள் ஸ்தம்பித்து நின்றாளே தவிர, அவளுடைய உடம்பின் ஒவ்வோர்
அணுவும் அப்போது துடித்தது. அவளுடைய இதய அந்தரங்கத்தின்
ஆழத்திலிருந்து இதுவரை அவளுக்கே தெரியாமல் மறைந்து கிடந்த ஏதோ
ஓர் உணர்ச்சி பொங்கி வந்து, மளமளவென்று பெருகி, அவளையே
முழுதும் மூழ்கடித்து விட்டது போலிருந்தது.
"ஏனடி இவ்விதம்
ஜடமாக நிற்கிறாய்? சின்னக் கண்ணன் உன்னை என்ன செய்தான்? இவன்
பேரில் உனக்கு என்ன கோபம்?" என்று கமலி கேட்டதும், சிவகாமி
இந்தப் பூவுலகத்திற்கு வந்தாள். "கமலி! இவன் யாரடி?
எங்கிருந்து வந்தான்? எப்போது, வந்தான்? என்னிடம் வருவானா?"
என்று சிவகாமி குழறிக் குழறிப் பேசிக் கொண்டே இரண்டு கைகளையும்
நீட்ட, குழந்தையும் சிவகாமியின் முகத்தைத் தன் அகன்ற கண்கள்
இன்னும் அகலமாக விரியும்படி பார்த்துக் கொண்டே, அவளிடம்
போவதற்காகக் கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு
பிரயத்தனப்பட்டது. "உன்னிடம் வருவானா என்றா கேட்கிறாய்?
அதற்குள் என்னவோ மாயப் பொடி போட்டுவிட்டாயே! கள்ளி
மாமல்லருக்குப் போட்ட மாயப்பொடியில் கொஞ்சம் மிச்சம் இல்லாமல்
போகுமா?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே கமலி குழந்தையைச்
சிவகாமியிடம் கொடுத்தாள்.
மாமல்லரைப்
பற்றிக் குறிப்பிட்டது சிவகாமிக்குக் குதூகலத்தையும்
நாணத்தையும் ஒருங்கே அளித்தது. அவள் குழந்தையைக் கையில் வாங்கி
மூக்கும் விழியும் கன்னமும் கதுப்புமாயிருந்த அதன் முகத்தைப்
பார்த்துக் கொண்டே, 'ஆமாண்டி அம்மா, ஆமாம்! நீ கண்ணனுக்குப்
போட்ட மாயப் பொடியில் கொஞ்சம் மீத்துக் கொடுத்ததைத்தானே நான்
மாமல்லருக்குப் போட்டேன்? பார்! அப்படியே அப்பாவின் முகத்தை
உரித்து வைத்தது போலிருக்கிறது! கமலி! இவன் அப்பா எங்கே?"
என்று கேட்க, கமலி, "இது என்ன கேள்வி? மாமல்லர் எங்கே
இருக்கிறாரோ, அங்கேதான் இவன் அப்பா இருப்பார்!" என்றாள். "ஓஹோ!
அப்படியானால் அண்ணனும் இன்று அரண்மனையில்தான் இருந்தாரா?
சபையில் என்னுடைய நாட்டியத்தைப் பார்த்திருப்பார் அல்லவா? நீ
ஏனடி வரவில்லை?" என்று சிவகாமி கேட்டதும் கமலி, "என்ன தங்கச்சி
உளறுகிறாய்? உன் அண்ணனாவது நாட்டியம் பார்க்கவாவது? உனக்குத்
தெரியாதா, என்ன? மாமல்லர் தான் தெற்கே பாண்டியனோடு சண்டை
போடுவதற்குப் போயிருக்கிறாரே?" என்றாள்.
இதைக் கேட்டதும்
சிவகாமிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், தன் மடியில் இருந்த
குழந்தையைக் கூட மறந்துவிட்டு எழுந்தாள். குழந்தை தரையில்
'பொத்' என்று விழு்து, 'வீர்' என்று கத்திற்று. கமலி அலறும்
குரலில், "அடிப்பாவி! ஏனடி குழந்தையைக் கீழே போட்டாய்? நீ
நாசமற்றுப்போக! உன்னைப் புலிகேசி கொண்டு போக!" என்றெல்லாம்
திட்டிக் கொண்டே, சின்னக் கண்ணனை எடுத்து மார்போடு அணைத்து
இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே, "வேண்டாமடா, கண்ணே!
வேண்டாமடா!" என்று சமாதானப்படுத்தினாள். குழந்தை மீண்டும்
மீண்டும் வீரிட்டு அழுதவண்ணம் இருக்கவே, கமலி கோபம் கொண்டு"அடே
வாயை மூடுகிறாயா? அல்லது புலிகேசியை வந்து உன்னைப் பிடித்துக்
கொண்டுபோகச் சொல்லட்டுமா?" என்றாள். குழந்தை அதிகமாக அழுதால்
இந்த மாதிரி புலிகேசியின் பெயரைச் சொல்லிப் பயமுறுத்துவது
வழக்கமாயிருந்தது. அதனால் தான் சிவகாமியையும் மேற்கண்டவாறு
சபித்தாள்.
குழந்தை ஒருவாறு
அழுகையை நிறுத்தியதும் அதைக் கீழே விட்டு விட்டுக் கமலி
சிவகாமியைப் பார்த்தாள். அவளுடைய திகைப்பைக் கவனித்துவிட்டு,
"தங்கச்சி! மாமல்லர் பாண்டியனோடு யுத்தம் செய்யப் போயிருப்பது
உனக்குத் தெரியாதா, என்ன?" என்று கேட்டாள். "தெரியாது, அக்கா!"
என்று சிவகாமி உணர்ச்சி பொருந்திய கம்மிய குரலில் கூறினாள்.
தான் சபையில் நடனமாடியபோது மாமல்லர் எங்கேயோ மறைவான
இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார் என்று எண்ணியதை
நினைத்து ஏமாற்றமடைந்தாள். ஆம்! கமலி சொல்வது உண்மையாகத்தான்
இருக்க வேண்டும். மாமல்லர் மட்டும் இங்கு இருந்திருந்தால்
அந்தக் காட்டுப் பூனையின் முன்னால் தன்னை ஆட்டம் ஆடச் சொல்லிப்
பார்த்துக் கொண்டிருப்பாரா?
மாமல்லர் இல்லாத
சமயத்தில் புலிகேசியின் முன்னால்தான் ஆடியதை நினைத்தபோது
சிவகாமிக்கு இப்போது அசாத்திய வெட்கமாயிருந்தது. மகேந்திர
பல்லவர் மீது கோபம் கோபமாய் வந்தது. மாமல்லர் இல்லாதபோது அவர்
இல்லை என்கிற தைரியத்தினாலேயே சக்கரவர்த்தி தன்னைப்
புலிகேசியின் முன்னால் ஆடச் சொல்லி
அவமானப்படுத்தியிருக்கிறார். இத்தகைய குழப்பமான எண்ணங்கள்
சிவகாமியின் உள்ளமாகிற ஆகாசத்தில் குமுறி எழுந்தன. திடீரென்று,
மின்னலைப் போல் ஓர் எண்ணம் தோன்றிக் குழப்பமாகிற கரிய இருளைப்
போக்கியது. அந்த மின்னல் ஒளியிலே அவள் கண்டு தெரிந்து கொண்ட
விஷயம், தன்னைக் கெடுப்பதற்கு மகேந்திர பல்லவர் செய்த சூழ்ச்சி
எவ்வளவு பயங்கரமானது என்பதுதான். அதாவது மாமல்லர் தெற்கே
போகும் போது தன்னை மண்டபப்பட்டில் சந்திக்காதிருக்கும்
பொருட்டே, தன்னை இங்கே சக்கரவர்த்தி வரவழைத்திருக்கிறார்!
என்று அவள் முடிவு செய்தாள்.
சிவகாமியின்
முகத் தோற்றத்தையும் அவளுடைய கண்களில் ஜொலித்த கோபக் கனலையும்
கவனித்த கமலி சிறிது நேரம் தானும் வாயடைத்துப் போய் நின்றாள்.
அப்புறம் சமாளித்துக் கொண்டு "தங்கச்சி! இது என்ன கோபம்?
ஒன்றும் முழுகிப் போய்விடவில்லையே! மாமல்லருக்கு யுத்தம்
புதிதா? பாண்டியனை முறியடித்து விட்டு வெற்றி வீரராகத்
திரும்பி வர போகிறார்! அதுவரையில்..." என்று கமலி சொல்லி
வந்தபோது, "ஆ! போதும்! போதும்! வாதாபிப் புலிகேசியை ஜயித்து
வாகை மாலை சூடியாகி விட்டது; பாண்டியனை ஜயிப்பதுதான் மிச்சம்!
போடி, அக்கா, போ! இந்தப் பல்லவ குலத்தாரைப் போல்
மானங்கெட்டவர்களை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை" என்றாள்
சிவகாமி. கமலிக்குத் தூக்கிவாரிப் போட்டது! 'இது என்ன இவள்
இப்படிப் பேசுகிறாள்? சூரியனிடம் காதல் கொள்ளத் துணிந்த
பனித்துளிக்கு ஒப்பிட்டுத் தன்னைத்தானே எத்தனையோ தடவை நொந்து
கொண்ட சிவகாமிதானா இவள்? குமார பல்லவரின் ஒரு கடைக்கண்
நோக்குக்காகத் தன் உயிரையே கொடுக்கச் சித்தமாயிருந்த
சிவகாமிதானா இவள்?'
இப்படிக் கமலி
எண்ணி வியந்து கொண்டிருக்கும்போதே, சிவகாமியினுடைய முகபாவம்
மாறியது. கமலியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "அக்கா! ஏதோ
பிதற்றுகிறேன்; மன்னித்து விடு, எல்லாம் விவரமாகச் சொல்லு.
மாமல்லர் எப்போது யுத்தத்துக்குப் போனார்? வாதாபிச்
சக்கரவர்த்தி காஞ்சிக்கு வருவதற்கு முன்னாலா? அப்புறமா?
அவருடன் அண்ணனைத் தவிர இன்னும் யார் யார் போயிருக்கிறார்கள்?
எல்லாம் விவரமாகச் சொல்லு. போகும்போது அண்ணன் உன்னிடம் என்ன
சொல்லிவிட்டுப் போனார்? என்னை இங்கே சக்கரவர்த்தி நாட்டியம் ஆட
வரவழைக்கப் போவது அவர்களுக்குத் தெரியுமா? சொல்லு அக்கா! ஏன்
மௌனமாயிருக்கிறாய்? என் பேரில் உனக்குக் கோபமா?" என்று
கேள்விகளை மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போனாள்.
அதன் பேரில்
கமலியும் தனக்குத் தெரிந்த வரையில் கூறினாள். சிவகாமி
நாட்டியமாடுவதற்காக வரப்போகும் செய்தி யுத்தத்துக்குப்
போனவர்களுக்குத் தெரிந்திருக்கவே நியாயமில்லையென்றும், தனக்கே
இன்றுதான் தெரியுமென்றும் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டு
விட்டுச் சிவகாமி, "அக்கா! நீ ஒன்றும் தப்பாக நினைத்துக்
கொள்ளாதே! உன்னை நான் பார்த்து எத்தனையோ நாளாயிற்று. உன்னோடு
பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உன் குழந்தை
இந்தக் கண்மணியோடு எத்தனை யுகம் கொஞ்சினாலும் எனக்கு ஆசை
தீராது. ஆனாலும் இப்போது இங்கே இருப்பதற்கில்லை.
மண்டபப்பட்டுக்கு உடனே புறப்பட்டுப் போக வேண்டும்; அப்பாவிடம்
இதோ சொல்லப் போகிறேன்!" என்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பதினெட்டாம் அத்தியாயம்
"புலிகேசிக்குத் தெரியுமா?"
மறுநாள் மாலை
கண்ணபிரானுடைய வீட்டுக் கூடத்தில் ஆயனர், சிவகாமி, கமலி,
கமலியின் மாமனார் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
புலிகேசியும் மகேந்திர பல்லவரும் நகர்வலம் வந்தது பற்றியும்,
அவர்கள் வடக்குக் கோட்டை வாசலில் ஒருவரிடம் ஒருவர்
விடைபெற்றுக் கொண்ட காட்சியைப் பற்றியும், புலிகேசி அக்கோட்டை
வாசல் வழியாக வௌியேறியது பற்றியும் யோகி அசுவபாலர்
மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். புலிகேசி
காஞ்சிக்கு விஜயம் செய்த நாளிலிருந்து அந்த யோகி தமது யோக
சாதனத்தை அடியோடு மறந்து நகரில் நடந்த களியாட்டங்களில்
ஈடுபட்டிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
மேற்படி பேச்சுக்கு இடையிடையே அங்கே தவழ்ந்து வட்டமிட்டுக்
கொண்டிருந்த சின்னக் கண்ணன் அவர்களுடைய கவனத்தைக் கவர முயற்சி
செய்தான். கமலியும் அவனுடைய நோக்கத்துக்குத் துணை
செய்கிறவளாய், பேச்சை மறித்து, சின்னக் கண்ணனுடைய பிரதாபங்களை
அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம்
அசுவபாலர் அவளை, "ஐயோ! பைத்தியமே! இப்படியும் ஒரு அசடு உண்டா?"
என்று சொல்லும் தோரணையில் பார்த்துவிட்டு, மேலே தமது
வரலாற்றைத் தொடர்ந்தார்.
எல்லாம்
முடிந்ததும் சிவகாமி, "மாமா வாதாபிச் சக்கரவர்த்திதான் போய்த்
தொலைந்துவிட்டாரே? கோட்டைக் கதவுகளை இனிமேல்
திறந்துவிடுவார்கள் அல்லவா?" என்று கேட்டாள். எல்லாம் நாளை
மறுநாள் தெரிந்து விடும், அம்மா! எனக்கென்னவோ அவ்வளவு
நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த வாதாபி சளுக்கனுடைய முகத்தில்
பத்து நாளாக இருந்த முகமலர்ச்சியை இன்றைக்குக் காணோம்.
பல்லவரிடம் விடைபெற்று வௌியே போகும் சமயத்தில் முகத்தைக்
கடுகடுவென்று வைத்துக் கொண்டிருந்தான்! அந்த ராட்சதன் என்ன
செய்கிறானோ, என்னவோ?" "அப்படி என்ன செய்துவிடுவான்?" என்று
சிவகாமி கேட்டாள். "மறுபடியும் அவன் கோட்டையை முற்றுகை போடத்
தொடங்கலாம்; அல்லது கோட்டையைத் தாக்கிப் பிடிக்க முயலலாம்."
"அப்படியெல்லாம் செய்வார்களா, என்ன? இத்தனை நாள் இவ்வளவு
சிநேகம் கொண்டாடிவிட்டு?" என்று சிவகாமி வியப்புடன் கேட்டாள்.
"தங்கச்சி! இது
என்ன நீ கூட இப்படிக் கேட்கிறாயே? இராஜ குலத்தினருக்கு விவஸ்தை
ஏது? இன்றைக்குச் சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக்
குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெண் கொடுத்துச்
சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை
போடுவார்கள்!" என்றாள் கமலி. ஆயனர், அசுவபாலரைப் பார்த்து,
"வாதாபி அரசருக்கு என்ன கோபமாம்? எதாவது தெரியுமா?" என்று
கேட்டார். "சளுக்கனும் பாண்டியனும் சிநேகிதர்களாம். கொள்ளிடக்
கரையில் இரண்டு பேரும், ரொம்ப உறவு கொண்டாடினார்களாம்.
சளுக்கன் இங்கே வந்திருக்கும் போது, மாமல்லர் பாண்டியன் மீது
படையெடுத்துச் சென்றதில் இவனுக்குக் கோபம் என்று சிலர்
சொல்லுகிறார்கள். இன்னும் ஒரு அபிப்பிராயம் என்ன
தெரியுமா?...." என்று அசுவபாலர் நிறுத்தினார். "என்ன
சொல்லுங்களேன்?" என்றார் ஆயனர்.
"சிவகாமியின்
நடனத்தைப் பார்த்து விட்டு மயங்கிப் போய் வாதாபி அரசர்
சிவகாமியைத் தம்முடன் அனுப்பும்படி கேட்டாராம். பல்லவேந்திரர்
மறுத்து விட்டாராம்! - அதனால்தான் புலிகேசிக்குக் கோபமாம்!"
என்றார் அசுவபாலர். "அவன் நாசமாய்ப் போக! அவன் தலையிலே இடி
விழ!" என்றாள் கமலி அழுத்தந் திருத்தமாக. அப்போது, "ஆஹா!
இவ்வளவு திவ்யமான ஆசீர்வாதம் யார் வாயிலிருந்து வருகிறது?"
என்று ஒரு குரல் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டு எழுந்து
நின்று, குரல் வந்த பக்கத்தைப் பார்த்தார்கள். அந்தக்
கம்பீரமான குரல் சின்னக் கண்ணனுடைய கவனத்தைக் கூடக் கவர்ந்து
விட்டதாகத் தோன்றியது. அவனும் உட்கார்ந்தபடியே ஆவலுடன் குரல்
வந்த திசையை நோக்கினான். வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே
வந்தவர் வேறு யாருமில்லை; மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான்.
"அசுவபாலரே! நீர்
சொல்லிக் கொண்டிருந்த வதந்தி என் காதிலும் விழுந்தது. ஆனால்
அது உண்மையல்ல; வாதாபிச் சக்கரவர்த்தி சிவகாமியைத் தம்முடன்
அனுப்பும்படி என்னைக் கேட்கவில்லை. பின்னே என்ன சொன்னார்
தெரியுமா? 'இந்தப் பெண்ணுக்கு என்னவோ இவ்வளவு பிரமாத மரியாதை
செய்கிறீரே? என்னுடன் வாதாபிக்கு அனுப்பினால் சாட்டையினால்
அடித்து நாட்டியம் ஆடச் சொல்வேன்' என்றார். அவ்வளவு ரஸிக
சிகாமணி அந்த மூர்க்கப் புலிகேசி!" என்றார் சக்கரவர்த்தி.
அப்போது அவருடைய கண்களில் உண்மையான கோபத்துக்கும்
வெறுப்புக்கும் அறிகுறி காணப்பட்டது.
அப்போது சிவகாமி
ஓர் அடி முன் வந்து சக்கரவர்த்தியை ஏறிட்டுப் பார்த்து,
"பிரபு! அப்பேர்ப்பட்ட பரம ரஸிகரின் முன்னிலையிலே என்னை
நாட்டியம் ஆடச் சொன்னீர்களே! அது தர்மமா?" என்று கம்பீரமாக
கேட்டாள். "அது தவறுதான், குழந்தாய்! புலிகேசியின் முன்னால்
உன்னை நான் ஆடியிருக்கச் சொல்லக்கூடாதுதான்; ஆனால் நான்
கண்டேனா? அஜந்தாவின் அற்புத வர்ண சித்திரங்கள் எவனுடைய
இராஜ்யத்தில் உள்ளனவோ, அவன் இப்பேர்ப்பட்ட ரஸிகத் தன்மையற்ற
மூர்க்கனாயிருப்பான் என்று நான் நினைக்கவில்லை.... ஆயனரே! ஒரு
செய்தி கேட்டீரா? காஞ்சிக் கோட்டைக்கு வௌியே இத்தனை மாதம்
சளுக்க சக்கரவர்த்தி தண்டு இறங்கியிருந்தாரல்லவா? ஒரு
தடவையாவது மாமல்லபுரத்துக்குப் போய் அவர் பார்க்கவில்லையாம்!
நான் கேட்டதற்கு, 'உயிருள்ள மனிதர்கள் இருக்கும் போது வெறும்
கல் பதுமைகளை யார் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பது?' என்று
விடை சொன்னார். இது மட்டுமா? 'அஜந்தாவிலே அப்படி என்ன
பிரமாதமாயிருக்கிறது? சுவரில் எழுதிய வெறும் சித்திரங்கள்
தான்?' என்றார். இப்பேர்ப்பட்ட மனுஷரிடந்தான் அஜந்தா வர்ண
இரகசியத்தை அறிந்து வரும் பொருட்டு நாகநந்தியின் ஓலையுடன்
பரஞ்சோதியை நீர் அனுப்பி வைத்தீர்; உமக்கு அது ஞாபகம்
இருக்கிறதா?" என்று மகேந்திர பல்லவர் ஆயனரை நோக்கிக் கேட்டார்.
ஆயனருக்கு
அப்போது உண்டான அளவு கடந்த ஆச்சரியத்தை அவருடைய முகக் குறி
காட்டியது. 'பல்லவேந்திரா! உண்மையாகவா? வாதாபிச்
சக்கரவர்த்திக்கா நாகநந்தி ஓலை கொடுத்து அனுப்பினார்? இது
தங்களுக்கு எப்படி...?" என்று தயங்கினார். "எப்படித் தெரிந்தது
என்றுதானே கேட்கிறீர்? ஓலையை நானே படித்துப் பார்த்தேன். ஆனால்
நாகநந்தி ரஸிகர் இந்த மூர்க்கப் புலிகேசியைப் போன்றவர் அல்ல.
அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? 'சைனியத்துடன் சீக்கிரம்
வந்து பல்லவ ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரியையும் நீ
கைப்பற்றிக் கொள். சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு!'
என்று எழுதியிருந்தார்; எப்படியிருக்கிறது, விஷயம்?...ஆயனரே?
உம்முடைய அத்தியந்த சிநேகிதர் நாகநந்தியினால் இந்தப் பல்லவ
இராஜ்யத்துக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வருவதற்கு இருந்தது,
தெரியுமா?" என்றார் சக்கரவர்த்தி. ஆனால், ஆயனரோ சக்கரவர்த்தி
கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கவனித்தவராகக் காணப்படவில்லை.
வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார். 'ஆஹா! புத்த
பிக்ஷு கொடுத்த ஓலை வாதாபிச் சக்கரவர்த்திக்கா?...
அப்படியானால், அஜந்தா வர்ண இரகசியம் புலிகேசி மகாராஜாவுக்குத்
தெரியுமா?' என்று தமக்குத் தாமே மெதுவான குரலில் சொல்லிக்
கொண்டார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பத்தொன்பதாம் அத்தியாயம்
சுரங்க வழி
ஆயனர் அஜந்தா
வர்ண ரகசியத்தில் மனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில்,
சக்கரவர்த்தி அசுவபாலரைப் பார்த்து, "என்ன யோகியாரே, யோகப்
பயிற்சியெல்லாம் இப்போது எப்படியிருக்கிறது? இந்த வாதாபி
மன்னர் வந்தாலும் வந்தார்; யோக சாதனத்தில் மனதைச் செலுத்தவே
அவகாசம் இல்லாமல் போய்விட்டது!" என்று கூறி கண்களினால் சமிக்ஞை
செய்யவே, அசுவபாலர் சக்கரவர்த்தியைப் பின்தொடர, இருவரும்
வீட்டுக்குப் பின்னால் அரண்மனை உத்தியானவனத்தில் இருந்த யோக
மண்டபத்துக்குச் சென்றார்கள். அவர்கள் போனதும், சிவகாமி
கமலியைப் பார்த்து, "அக்கா! சக்கரவர்த்தி கற்ற கலை எல்லாம்
போதாதென்று யோகக் கலை வேறு கற்றுக்கொள்ள
ஆரம்பித்திருக்கிறாரா?" என்று கேட்டாள். அதற்குக் கமலி, கண்ணை
விஷமமாகச் சிமிட்டிக் கொண்டே இரகசியம் பேசும் குரலில்,
"யோகமாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் மோசம்! அப்புறம்
சொல்கிறேன்" என்றாள்.
சற்று
நேரத்துக்கெல்லாம் மகேந்திர பல்லவர் யோக மண்டபத்திலிருந்து
திரும்பி அந்த வீட்டின் வழியாக வௌியே சென்ற போது ஆயனர் சென்று
குறுக்கிட்டு வணங்கி "பல்லவேந்திரா! இங்கே நாங்கள் வந்த
காரியம் ஆகிவிட்டதல்லவா? இனி மண்டபப்பட்டுக்குத் திரும்பலாமா?"
என்று இரக்கமான குரலில் கேட்டார். மகேந்திரர் புன்னகையுடன்,
"ஆயனரே! சிவகாமியின் அற்புத நடனத்துக்கு இன்னும் நான்
வெகுமதிகள் அளிக்கவில்லையே? கொஞ்சம் பொறுத்திருங்கள். மேலும்
மண்டபப்பட்டுக்கு நீங்கள் திரும்பிப் போகவேண்டிய அவசியமே
நேராது. உங்களுடைய பழைய அரண்ய வீட்டுக்கே போகலாம்!" என்றார்.
ஆயனர் கவலை
மிகுந்த குரலில், "பிரபு ஒவ்வோரிடத்திலும் ஆரம்பித்த வேலை
அப்படி அப்படியே நடுவில் நிற்கிறதே! இந்தத் துரதிர்ஷ்டசாலியின்
பாக்கியம் போலிருக்கிறது. மண்டபப் பட்டில் ஆரம்பித்த
திருப்பணியும் அப்படியே நின்றுவிட்டால்..." என்று கூறி
வந்தபோது, மகேந்திர பல்லவர் குறுக்கிட்டு, "மகா சிற்பியாரே!
மனித வாழ்க்கை அற்பமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் ஆரம்பித்த
காரியத்தைப் பூர்த்தி செய்துவிட முடிகிறதா? நான் தொடங்கிய
காரியங்களும் எத்தனையோ நடுவில் நின்றுதான் போயிருக்கின்றன.
அதனால் என்ன? நமக்குப் பின்வரும் சந்ததிகள் நிறைவேற்றி
வைப்பார்கள், அதற்காகக் கவலைப்பட வேண்டாம். மேலும் நமது
அரண்மனையில் கூடிய சீக்கிரத்தில் ஒரு கல்யாணம் நடக்கப்
போகிறது. அப்போது உம் குமாரி நாட்டியம் ஆட வேண்டியிருந்தாலும்
இருக்கும்!" என்று கூறி விட்டு, மேலே நடந்து சென்றவர்,
வாசற்படியண்டை சற்றுத் தயங்கி நின்று, "ஆயனரே! உங்கள்
விருப்பத்துக்கு விரோதமாக இருக்கும்படி கட்டாயப்படுத்த நான்
விரும்பவில்லை. உங்களுக்கு அவசியம் போக வேண்டுமானால் கோட்டை
வாசல் கதவுகள் திறந்ததும் போய் வாருங்கள், தேவை ஏற்படும்போது
சொல்லி அனுப்புகிறேன்" என்று கூறி விட்டு, விரைந்து
வாசற்படியைக் கடந்து சென்றார்.
சக்கரவர்த்தி போன
பிறகு, சிவகாமி திடீரென்று தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு
விம்மி விம்மி அழத் தொடங்கினாள். கமலி அவளுடைய தலையைத்
தூக்கித் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "என் கண்ணே! நீ
ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ சொல்! எந்தப்
பாடுபட்டாவது, உயிரைக் கொடுத்தாவது நான் செய்து கொடுக்கிறேன்.
நீ கண்ணீர் விட்டால் என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது!"
என்றாள்.
சிவகாமி மறுமொழி
சொல்லாமல் விம்மவே, "அசடே! நீ எதற்காக அழுகிறாய் என்று
எனக்குத் தெரியும். சக்கரவர்த்தி கலியாணத்தைப் பற்றிச்
சொன்னதற்காகத்தானே? அது எப்படி நடக்கும், சிவகாமி? மாமல்லர்
உனக்கு வாக்குக் கொடுத்திருக்கும் போது, எப்படி நடக்கும்? இந்த
மகேந்திர சக்கரவர்த்தி என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் மாமல்லர்
வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டார். மாமல்லரின்
குணம் எனக்கு நன்றாய்த் தெரியும். அவரிடம் இந்தச்
சக்கரவர்த்தியின் சூழ்ச்சி ஒன்றும் பலிக்காது!" என்றாள் கமலி.
சென்ற சில
நாளாகக் காஞ்சி நகரில் மாமல்லரின் விவாகத்தைப் பற்றிப் பலவித
வதந்திகள் உலாவி வந்தன. பாண்டியனைப் புலிகேசியிடமிருந்து
பிரிக்கும் பொருட்டு, பாண்டிய குமாரியை மாமல்லருக்குக்
கலியாணம் செய்து கொள்வதாகச் சக்கரவர்த்தி ஓலை
அனுப்பியிருக்கிறார் என்று சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர்
வாதாபிச் சளுக்கர் குலத்திலேயே மாமல்லருக்குப் பெண் கொள்ளப்
போவதாகப் பிரஸ்தாபித்தார்கள். இதெல்லாம் கமலியின் காதுக்கும்
எட்டியிருந்தபடியால், அவளுடைய மனமும் ஒருவாறு வேதனைப்பட்டுக்
கொண்டிருந்தது. ஆகையினால்தான் மாமல்லரின் மன உறுதியைப் பற்றி
அவ்வளவு வற்புறுத்தி, சிவகாமிக்கு அவள் தேறுதல் கூறினாள்.
ஆனால் சிவகாமி தேறுதல் அடையவில்லை. மாமல்லரின் பெயரைக் கேட்ட
பிறகு இன்னும் விசித்து அழலானாள். "இல்லை, அக்கா, இல்லை!
மாமல்லர் என்னை வெறுத்து விடுவார். என்னிடம் அவருக்கிருந்த
ஆசையெல்லாம் விஷமாகிவிடப் போகிறது. அவருக்கு அப்படித் துரோகம்
செய்து விட்டேன், இந்தப் பாவி! முன்னமே ஒரு தடவை அவர் என்னை
வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்க, நான் ஊர் சுற்றப்
போய்விட்டேன். இப்போது என்னை மண்டபப்பட்டிலேயே இருக்கும்படி
சொல்லியிருக்க, இங்கே நாட்டியம் ஆட வந்துவிட்டேன். அக்கா! அவர்
பாண்டியனை வென்று விட்டு நேரே மண்டபப்பட்டுக்கு வருவார்! வந்து
என்னைத் தேடுவார்! அங்கே என்னைக் காணாமற் போனால், அவருக்கு
எப்படி இருக்கும்? நான் இங்கே புலிகேசிக்கு முன்னால் நாட்டியம்
ஆடவந்துவிட்டேன் என்று கேள்விப்பட்டால் அவருக்கு என்னமாய்
இருக்கும்? ஆஹா! இந்தச் சக்கரவர்த்தி என்னை எப்படி வஞ்சித்து
விட்டார்!" என்று விம்மிக் கொண்டே கூறினாள் சிவகாமி.
கமலி சற்று நேரம்
யோசனையில் ஆழ்ந்திருந்தாள். "சிவகாமி! இதற்கு ஏன் இவ்வளவு
கவலை? கோட்டை வாசல் திறந்ததும் நீ போகலாம் என்றுதான்
சக்கரவர்த்தியே சொல்லி விட்டாரே!" என்றாள். "ஆஹா! அவருடைய
சூழ்ச்சி உனக்குத் தெரியாது! எனக்காகவே கோட்டை வாசலை வெகு நாள்
வரையில் சாத்தி வைத்திருப்பார், அக்கா! மாமல்லர் இங்கு வந்து
சேரும் வரையில் திறக்கமாட்டார்! நீ வேணுமானால் பார்!" என்று
சிவகாமி விம்மினாள். "தங்கைச்சி! நீ கவலைப்படாதே! கோட்டை வாசல்
திறக்காவிட்டால் போகட்டும்; நான் உன்னை எப்படியாவது வௌியே
அனுப்பி வைக்கிறேன்!" என்றாள் கமலி.
உடனே, சிவகாமி
விம்மலை நிறுத்தி எழுந்து உட்கார்ந்து, "அக்கா! நிஜமாகத்தானா?
அது சாத்தியமா? என்று கேட்டாள். "நான் மனம் வைத்தால் எது தான்
சாத்தியமாகாது? என்னை யார் என்று நினைத்தாய்? இந்த மகேந்திர
சக்கரவர்த்தியின் சூழ்ச்சியெல்லாம் என்னிடம் பலிக்குமா?"
"அக்கா! எப்படி என்று சொல்! எங்களை எவ்விதம் வௌியில் அனுப்பி
வைப்பாய்?" என்று சிவகாமி பரபரப்புடன் கேட்க, கமலி அவள்
காதண்டைத் தன் வாயை வைத்து, "சுரங்க வழி மூலமாக!" என்றாள்.
சிவகாமி, ஏற்கெனவே காஞ்சியிலிருந்து வௌியே போக இரகசியச் சுரங்க
வழி இருக்கிறதென்று கேள்விப்பட்டதுண்டு. எனவே, இப்போது கரை
கடந்த ஆவலுடன், "சுரங்க வழி நிஜமாகவே இருக்கிறதா? உனக்கு
நிச்சயமாய்த் தெரியுமா?" என்று கேட்டாள்.
கமலி மீண்டும்
இரகசியக் குரலில் கூறினாள்; "இரைந்து பேசாதேயடி! மாமாவின் யோக
சாதனத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்றேன் அல்லவா? யோகம்
என்பதெல்லாம் பொய். தங்கச்சி! சுத்தப் பொய்! அந்த மண்டபத்திலே
சுரங்க வழி இருக்கிறது! அதற்குள்ளேயிருந்து குண்டோதரன்
அடிக்கடி வௌி வருவதை நான் பார்த்திருக்கிறேன்; சக்கரவர்த்தி
கூடச் சில சமயம்....." "என்ன அக்கா சொல்கிறாய்? குண்டோதரனா?"
"ஆமாமடி தங்கச்சி! ஆமாம்! குண்டோதரன் என்று சக்கரவர்த்தியின்
ஒற்றன் ஒருவன் இருக்கிறான். சத்ருக்னன் என்று இன்னொருவன்
இருக்கிறான். இரண்டு பேரும் பொல்லாத தடியர்கள்!....என்னடி
யோசிக்கிறாய்?"
"ஒன்றுமில்லை,
சொல், அக்கா! அந்தச் சுரங்க வழி உனக்கு எப்படித் தெரிந்தது?"
"அந்த யோக மண்டபத்தின் பக்கம் நான் வரவே கூடாது என்று என்
மாமனார் சொல்லியிருந்தார். அதனாலேயே அவருக்குத் தெரியாமல் நான்
அடிக்கடி போய்ப் பார்ப்பேன். ஒரு நாள் நான் போய் எட்டிப்
பார்த்தபோது, மண்டபத்தின் மத்தியில் இருந்த சிவலிங்கம் அப்பால்
நகர்ந்திருந்தது. லிங்கம் இருந்த இடத்தில் ஒரு பெரிய துவாரம்
தெரிந்தது. அதற்குள்ளேயிருந்து குண்டோதரன் வௌியே வந்து
கொண்டிருந்தான். அப்போது மண்டபத்திற்குள்ளே யார் இருந்தது
என்று நினைக்கிறாய்? என் மாமனாரோடு சக்கரவர்த்தியும் நின்று
கொண்டிருந்தார்!"
சிவகாமி சற்றுச்
சிந்தித்துவிட்டு "கமலி அக்கா! எப்படியாவது அந்தச்
சுரங்கத்தின் வழியாக எங்களை நீ வௌியே அனுப்பி விட்டால்,
உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. என்றென்றைக்கும் நான் உன்
அடிமையாயிருப்பேன்!" என்றாள். "பேச்சைப் பார், பேச்சை! எனக்கு
அடிமையாயிருக்கப் போகிறாளாம்! அடி பொல்லாத நீலி! நீ இந்த
இராஜ்யத்துக்கே இராணியாகப் போகிறாய்; எனக்கு அடிமையாகி
விடுவாயா நீ! வாக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் திண்டாடாதே!"
என்றாள்.
பிறகு,
"ஆகட்டும், தங்கச்சி கொஞ்சம் பொறுமையாயிரு! அந்த மண்டபத்தின்
மத்தியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை இடம் விட்டு
நகர்த்தினால் சுரங்க வழி தெரியும். லிங்கத்தை எப்படி இடம்
விட்டு நகர்த்துவதென்பதை இன்றைக்கு அல்லது நாளைக்குள்
எப்படியாவது தெரிந்து கொள்கிறேன். ஆனால் நீ இவ்வளவு
அவசரப்பட்டு என்ன பிரயோஜனம்? உன் தகப்பனார் உன்னுடன்
வருவதற்குச் சம்மதிக்க வேண்டுமே?" என்று கமலி கவலையுடன்
கேட்டாள். "என்னைவிட அவர்தான் வௌியே போவதற்கு அதிக
அவசரப்படுவார்! அதற்குக் காரணம் இருக்கிறது" என்றாள் சிவகாமி.
அதே சமயத்தில்
வாசற் பக்கமிருந்த ஆயனர் அவர்களின் அண்டையில் வந்து, "இன்னும்
எத்தனை நாளைக்கு இந்தக் கோட்டைக்குள் அடைப்பட்டுக் கிடக்க
வேண்டுமோ தெரியவில்லை... சிவகாமி! உனக்குத் தெரியுமா? முன்னொரு
நாள் அந்தப் பரஞ்சோதி என்கிற பிள்ளையிடம் நாகநந்தி ஓலையைக்
கொடுத்து அனுப்பினாரே, அஜந்தா வர்ண இரகசியத்துக்காக? புலிகேசி
மகாராஜாவுக்குத்தான் அந்த ஓலையைக் கொடுத்து அனுப்பினாராம்;
அடாடா! வாதாபி மகாராஜா காஞ்சியில் இருக்கும் போதே இதைச்
சொல்லியிருந்தால், நான் அந்தச் சளுக்க குலசிரேஷ்டரிடம்
கெஞ்சிக் கூத்தாடி அஜந்தா வர்ண இரகசியத்தைப் பற்றிக் கேட்டுத்
தெரிந்து கொண்டிருப்பேனல்லவா?" என்று புலம்பினார். "புலிகேசி
மகாராஜாவுக்கு அந்த இரகசியம் தெரிந்திருப்பது என்ன நிச்சயம்
அப்பா?" என்று சிவகாமி குறுக்கிட்டுக் கேட்டாள். "கட்டாயம்
தெரிந்திருக்க வேண்டும், சிவகாமி! புலிகேசியின் இளம்
பிராயத்தில் அவர் அஜந்தா மலைக் குகையிலேயே கொஞ்ச காலம் ஒளிந்து
கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார் ஆயனர்.
அப்போது கமலியும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துப்
புன்னகை புரிந்து கொண்டார்கள். ஆயனர் மேற்கண்டவாறு பேசப் பேச
அவர்களுக்கு உற்சாகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபதாம் அத்தியாயம்
காபாலிகர் குகை
வாதாபிச்
சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்று மூன்று நாள் ஆகியும்,
கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. இதைப் பற்றி நகரில் பல வகை
வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. "ஒப்பந்தப்படி வாதாபிப்
படைகள் திரும்பிப் போகவில்லை; மறுபடியும் கோட்டையை நெருங்கி
வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றன!" என்று சிலர் சொன்னார்கள்.
புலிகேசி வௌியில் போன பிறகு மகேந்திர பல்லவருக்கு ஏதோ ஓலை
அனுப்பியிருந்ததாகவும், அதற்கு மறு மொழியை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். "வாதாபி
மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவரான யாரோ ஒரு புத்த பிக்ஷுவை
மகேந்திர பல்லவர் சிறையில் வைத்திருக்கிறாராம். அவரை உடனே
விடுதலை செய்து அனுப்பாவிடில் மீண்டும் யுத்தம் தொடங்குவேன்!"
என்று அந்த ஓலையில் எழுதியிருப்பதாகச் சிலர் சொன்னார்கள்.
"ஆயனரையும் சிவகாமியையும் என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
இல்லாவிடில் யுத்தத்துக்கு ஆயத்தமாக வேண்டும்" என்று
எழுதியிருந்ததாக இன்னொரு வதந்தி உலாவியது.
மகேந்திர
பல்லவருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சி நகரத்து மக்கள் முதன்
முதலாக இப்போதுதான் அவருடைய காரியங்களைப் பற்றிக் குறை கூற
ஆரம்பித்தார்கள். "புலிகேசியைக் காஞ்சிக்குள் வர விட்டதே
தவறு!" என்று சிலர் சொன்னார்கள். "அப்படியே நகருக்குள்
விட்டாலும் அவனுக்கு என்ன இவ்வளவு உபசாரம்? சத்துரு அரசனிடம்
இவ்வளவு தாழ்ந்து போகலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அந்த
மூர்க்கனுக்கு முன்னால், நமது கலைச்செல்வி சிவகாமியை ஆடச்
சொல்லியிருக்க வேண்டியதில்லை; சிவகாமியின் நடனத்தைப் பார்த்து
விட்டுத்தான் புலிகேசி தேன் குடித்த நரியாக ஆகிவிட்டான்!"
என்று வேறு சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.
அந்த மாதிரியான
நகர மாந்தர் பேச்செல்லாம் கமலி மூலமாக வடிகட்டி வந்து ஆயனரின்
காதிலேயும் எட்டியது. அதிலெல்லாம் ஒரே ஒரு விஷயந்தான் ஆயனர்
மனத்தில் ஆழமாய்ப் பதிந்தது. அதாவது வடக்குக் கோட்டை
வாசலுக்குக் கொஞ்ச தூரத்தில் வாதாபிப் படையின் தண்டு இன்னும்
இருக்கிறது என்பதுதான். "வாதாபி மன்னர் புறப்படுவதற்குள்
இந்தக் கோட்டையை விட்டு நாம் வௌியேறி விட்டால் எவ்வளவு
நன்றாயிருக்கும்? அவரை எப்படியும் பார்த்து அஜந்தா வர்ணத்தைப்
பற்றிக் கேட்டு விடுவேனே?" என்று அடிக்கடி ஆயனர் சொல்லிக்
கொண்டிருந்தார். ஒரு தடவை திடீரென்று எதையோ நினைத்துக்
கொண்டவர் போல், "நகரிலிருந்து வௌியே போவதற்குச் சுரங்க வழி
ஒன்று இருக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால்
போய் விடலாம்!" என்றார்.
இதைக் கேட்ட
சிவகாமி கண்களில் மின்வெட்டுடன், "நிஜந்தானா, அப்பா! சுரங்க
வழி தெரிந்தால் நாம் வௌியே போய் விடலாமா!" என்று கேட்டாள்.
"போய் விடலாம்; நான் கூட அந்தச் சுரங்க வழியில் கொஞ்ச நாள்
வேலை செய்திருக்கிறேன். ஆனால் அதற்கு வாசல் எங்கே என்று
மட்டும் தெரியாது! அதை எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று ஆயனர்
ஏமாற்றமான குரலில் கூறினார். "அப்பா நம் கமலி அக்காவுக்கு
அந்தச் சுரங்க வழி தெரியுமாம்!" என்று சிவகாமி மெல்லிய குரலில்
கூறியதும், ஆயனர் பரபரப்புடன் எழுந்து கமலியின் அருகில் வந்து
அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, "என் கண்ணே குழந்தாய்! உன்
தங்கச்சி சொல்வது உண்மைதானா? அப்படியானால் நீ எனக்கு அந்தச்
சுரங்க வழியைக் காட்டவேணும். இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை
மறக்க மாட்டேன்" என்றார். "ஆகட்டும், சித்தப்பா! ஆனால், சமயம்
பார்த்துத்தான் உங்களைச் சுரங்க வழிக்கு அழைத்துப் போக
வேண்டும்; அங்கே பலமான காவல் இருக்கிறது!" என்றாள் கமலி.
மூன்று தினங்களாக
அசுவபாலர் அநேகமாக யோக மண்டபத்திலேயே காலம் கழித்து வந்தார்.
மண்டபத்திலிருந்து அடிக்கடி மணிச் சப்தமும் கலகலத் தொனியும்
பேச்சுக் குரலும் கேட்டுக் கொண்டிருந்தன. நாலாம் நாள் இரவு
ஜாமத்தில் ஆயனர் தூக்கம் பிடிக்காமல் பலகணியின் வழியாக
அரண்மனைத் தோட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நிலா
வௌிச்சத்தில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார். தோட்டத்தின்
வழியாக நல்ல ஆஜானுபாகுவான ஆகிருதி உடைய ஒருவரை இரண்டு
புறத்திலும் இரண்டு பேர் கையைப் பிடித்து நடத்திக் கொண்டு
வந்தார்கள். நடுவில் இருந்தவரின் கண்கள் துணியினால்
கட்டப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது.
இன்னும் சிறிது
உற்றுப் பார்த்தபோது, நடுவில் நடந்து கொண்டிருந்த ஆஜானுபாகுவான
உருவம் ஒரு புத்த பிக்ஷுவின் வடிவமாகக் காணப்பட்டது. அந்த
உருவம் ஆயனருக்கு நாகநந்தியை நினைவூட்டியது. ஒருவேளை
நாகநந்திதானோ அவர்? ஊர் வதந்தியின்படி இந்தப் புத்த
பிக்ஷுவுக்காகத்தான் புலிகேசி இத்தனை நாள்
காத்துக்கொண்டிருந்தாரோ? நாகநந்தியை அதற்காகத்தான் சுரங்க
வழியாக அனுப்புகிறார்களோ? அப்படியானால் நாகநந்தி போய்ச்
சேர்ந்ததும் புலிகேசி புறப்பட்டு விடுவாரல்லவா? ஆஹா!
எப்பேர்ப்பட்ட அருமையான சந்தர்ப்பம் கை நழுவிப் போய்க்
கொண்டிருக்கிறது.
நாகநந்திக்கும்
புலிகேசிக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஆயனருடைய மனத்திலும் அப்போது
தென்பட்டது. நாகநந்தியடிகள் உண்மையில் யாராயிருக்கலாம்?...
இவ்விதம் பற்பல எண்ணங்களினால் அலைப்புண்ட ஆயனர் அன்றிரவு
தூங்கவே இல்லை. பொழுது புலரும் சமயத்தில் யோக
மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்த அசுவபாலர் ஆயனரைப்
பார்த்தார். "என்ன சிற்பியாரே! இரவெல்லாம் நீர் தூங்கவில்லை
போலிருக்கிறது!" என்றார். "ஆம் ஐயா! தோட்டத்தில் உங்களுடைய யோக
மண்டபத்தில் இரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்ததே! என்ன விசேஷம்?"
என்று ஆயனர் கேட்டார். அசுவபாலர், "கலகலப்பாவது, ஒன்றாவது?
ஒருவேளை நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்" என்று சொல்லிவிட்டு,
"நண்பரே, ஆனால் ஒன்று உண்மை. நேற்றிரவு யோக சாதனத்தில் நான்
ஓர் அபூர்வமான அனுபவத்தை அடைந்தேன். அதை உடனே போய்ச்
சக்கரவர்த்தியிடம் சொல்லிவிட்டு வரவேண்டும்!" என்று கூறி
விரைந்து வௌியே சென்றார்.
அவர் போய்ச் சில
நிமிஷத்துக்கெல்லாம் கமலி வந்து ஆயனர், சிவகாமி இருவரையும்
அவசரப்படுத்தினாள். ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி முக்கியமான
துணிமணிகளை ஒரு ஓலைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு,
எந்த நிமிஷமும் கிளம்புவதற்கு அவர்கள் சித்தமாக இருந்தார்கள்.
எனவே, உடனே மூவரும் கிளம்பி அரண்மனைத் தோட்டத்திலிருந்த
மண்டபத்துக்குள் சென்றார்கள். மண்டபத்தின் மத்தியில் இருந்த
சிவலிங்கத்தைக் கமலி லாகவமாக அப்புறம் நகர்த்தினாள். லிங்கம்
இருந்த இடத்தில் சுரங்க வழியின் படிக்கட்டுக் காணப்பட்டது.
கமலி ஆயத்தமாக வைத்திருந்த தீபத்தை எடுத்து ஆயனரிடம் கொடுத்து,
"சித்தப்பா, சீக்கிரம்!" என்றாள். ஆயனர் தீபத்தை வாங்கிக்
கொண்டு சுரங்க வழியின் படிக்கட்டில் இறங்கினார்.
சிவகாமி கமலியை
ஆர்வத்துடன் கட்டிக் கொண்டாள். இருவருடைய கண்களிலும் கண்ணீர்
ததும்பிற்று. "அக்கா! போய்வருகிறேன்!" என்று தழுதழுத்த குரலில்
கூறினாள் சிவகாமி. "தங்கச்சி! போய்வா! மறுபடி காஞ்சிக்குத்
திரும்பி வரும் போது பல்லவ குமாரரின் பட்ட மகிஷியாகத் திரும்பி
வர வேண்டும்!" என்று கமலி ஆசி கூறினாள். "அக்கா! நான் திரும்பி
வரும்வரை எனக்காகச் சின்னக் கண்ணனுக்குத் தினமும் ஆயிரம்
முத்தம் கொடு!" என்றாள் சிவகாமி. கமலி சிரித்துக் கொண்டே,
"அவன் மூச்சு முட்டிச் சாக வேண்டியதுதான்!" என்றாள். சிவகாமி
சுரங்கப் படியில் இறங்கிய போது அவளுடைய உள்ளம் பதை பதைத்தது.
மார்பு படபட என்று அடித்துக் கொண்டது. ஒளி நிறைந்த குதூகலமான
உலகத்திலிருந்து இருளும் ஐயமும் பயங்கரமும் நிறைந்த ஏதோ பாதாள
உலகத்துக்குப் போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அந்த
உணர்ச்சியை மனோதிடத்தினால் போக்கிக் கொண்டு ஆயனரின் பின்னால்
நடந்தாள்.
இருளடர்ந்த
சுரங்கப் பாதையில் ஆயனரும் சிவகாமியும் ஏறக்குறைய ஒரு
முகூர்த்த நேரம் நடந்தார்கள். இவ்வளவு நேரமும் அவர்களுக்குள்
அதிகமான பேச்சு ஒன்றும் நடைபெறவில்லை. அடிக்கடி ஆயனர் நின்று
சிவகாமியின் கையைப் பிடித்து "இனி அதிக தூரம் இராது, அம்மா!
சீக்கிரம் வழி முடிந்து விடும்!" என்று தைரியப்படுத்திக்
கொண்டு போனார். ஒரு முகூர்த்த நேரத்துக்குப் பிறகு, திடீரென்று
வெப்பம் மாறி ஜில்லிப்பு உணர்ச்சி ஏற்பட்டது. "அம்மா, சிவகாமி!
கோட்டைக்கு வௌியே வந்து விட்டோம், அகழியை கடக்கிறோம்!"
என்றார். ஒரு கணம் அங்கே நின்று, "குழந்தாய்! இங்கேதான் நான்
வேலை செய்ததாக ஞாபகம் இருக்கிறது. அகழித் தண்ணீர் உள்ளே வராமல்
வெகு சாதுரியமாக இங்கே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு
இல்லை, ஏதாவது ஆபத்துக் காலங்களில் இந்தச் சுரங்க வழியை
மூடிவிடவும் இங்கேதான் உபாயம் இருக்கிறது. அதோ, பார்த்தாயா?
அந்த அடையாளமிட்ட இடத்தில் ஒரு கல்லை இலேசாகப் பெயர்த்தால்,
அகழி ஜலம் கடகடவென்று உள்ளே புகுந்து விடும். அப்புறம்
வௌியிலிருந்தும் உள்ளே போக முடியாது, உள்ளேயிருந்தும் வௌியே
போக முடியாது!" என்றார்.
"நல்ல வேளை!
அப்படி ஏதாவது ஏற்படுவதற்கு முன்னால் நாம் வௌியே
போய்விடுவோமல்லவா?" என்றாள் சிவகாமி. அதற்குப் பிறகு இன்னும்
ஒரு முகூர்த்த நேரம் வழி நடந்த பிறகு, மேலேயிருந்து வௌிச்சம்
வருவதைக் கண்டார்கள். "ஆ! சுரங்க வழி முடிந்துவிட்டது!"
என்றார் ஆயனர். இருவரும் படிகள் வழியாக மேலே ஒளிவந்த இடத்தை
நோக்கி ஏறிச் சென்றார்கள்.
அவர்கள் ஏறி
வந்து நின்ற இடம் ஒரு சின்ன மலைப்பாறையில் குடைந்து
அமைக்கப்பட்ட சமணர்களின் குகைக் கோயில். ஜைன
தீர்த்தங்கரர்களின் பெரிய பிரதிமைகள் மூன்று அங்கே காணப்பட்டன.
ஆனால் என்ன பயங்கரம்? காபாலிகர்கள் அந்தச் சமணக் குகையை
ஆக்கிரமித்து விட்டதாகத் தோன்றியது. எங்கே பார்த்தாலும் மண்டை
ஓடுகள் சிதறிக் கிடந்தன. போதாதற்கு, மூன்று தீர்த்தங்கரர்களின்
சிலைகளுக்கு அப்பால் நாலாவது சிலையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு
காபாலிகன் உட்கார்ந்திருந்தான். உடம்பெல்லாம் சாம்பலைப்
பூசிக்கொண்டு மண்டை ஓட்டு மாலை அணிந்திருந்த அவனுடைய தோற்றம்
பார்ப்பதற்கு மிகக் கோரமாயிருந்தது. ஆனால், நல்ல வேளையாக அவன்
கண்களை இறுக மூடிக் கொண்டு யோக நிஷ்டையில்
உட்கார்ந்திருந்தான்.
ஆயனரும்,
சிவகாமியும் இரண்டாவது தடவை அவனைப் பார்க்காமல் பாறையின்
படிகள் வழியாக இறங்கி விரைந்து சென்றார்கள். கொஞ்ச தூரம் சென்ற
பிறகு, "அப்பா! இதென்ன? சமணர் குகைக் கோவிலில் காபாலிகன் வந்து
உட்கார்ந்திருக்கிறானே?" என்று சிவகாமி கேட்டாள். "அம்மா!
இந்தப் பாறை ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்தது. மகேந்திர
பல்லவரிடம் கோபித்துக் கொண்டு சமணர்கள் இந்த நாட்டை விட்டுப்
போய்விட்டார்களல்லவா? கோட்டை முற்றுகைக்கு முன்னால் காஞ்சி
நகரிலுள்ள காபாலிகர்களையெல்லாம் வௌியில் துரத்தியபோது இந்தக்
குகையை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது!
அவர்களுக்கு யுத்தம் என்றால் கொண்டாட்டந்தானே! கபாலங்கள்
ஏராளமாய்க் கிடைக்குமல்லவா?"
இப்படிப்
பேசிக்கொண்டு ஆயனரும், சிவகாமியும் காட்டுப் பிரதேசத்தின்
வழியே நடந்து போனார்கள். கொஞ்ச தூரம் போவதற்குள்ளே,
அவர்களுக்கு எதிர்ப்புறத்திலிருந்து பலர் கும்பலாக வரும் பெரு
முழக்கம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம், ஒரு பெரும்
கும்பல் அவர்கள் கண் முன்னால் எதிர்ப்பட்டது. அப்படி
வந்தவர்கள் வாதாபிப் படையைச் சேர்ந்த வீரர்கள்தான்!
அவர்களுக்கு மத்தியில் தூக்கிப் பிடிக்கப்பட்டிருந்த வராகக்
கொடியிலிருந்து இது தௌிவாகத் தெரிந்தது!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஆயனரும்,
சிவகாமியும் வாதாபி வீரர்களைச் சந்திக்க நேர்ந்தது எப்படி
என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் சிறிது பின்னோக்கிச் செல்ல
வேண்டும். காஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசலில் மகேந்திர
பல்லவரிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிந்த போது புலிகேசியின்
மனநிலை எப்படியிருந்தது என்பதை ஒருவாறு நாம் தெரிந்து
கொண்டோம். கரும் புகையும், தீக் குழம்பும், அக்கினிச்
சுவாலையும் குமுறிக் கொண்டு எப்போது வௌிக் கிளம்பலாம் என்று
வழி பார்த்துக் கொண்டிருக்கும் நெருப்பு மலையின் கர்ப்பத்தைப்
போல் இருந்தது அவருடைய உள்ளம்.
காஞ்சி மாநகரின்
மணிமாட மண்டபங்களும், அந்நகர மக்களின் செல்வமும், சிறப்பும்,
காஞ்சி அரண்மனையின் மகத்தான ஐசுவரியமும், அங்கு அவர் கண்ட
காட்சிகளும், வைபவங்களும் அளவற்ற பொறாமைத் தீயை அவர்
உள்ளத்தில் மூட்டியிருந்தன. அந்தப் பொறாமைத் தீயை வளர்க்கும்
காற்றாக அமைந்தது கடைசியாக நடந்த சிவகாமியின் நடனம். நடனத்தின்
போது மகேந்திர பல்லவர் கலைச் செருக்குடன் கூறிய மொழிகள் கலை
உணர்வு இல்லாத புலிகேசியின் உள்ளத்தில் பெரும் துவேஷத்தை
உண்டாக்கின. எல்லாவற்றுக்கும் மேலாக, புலிகேசியின் மனத்தில்
கோபம் குமுறி எழும்படி செய்த விஷயம், மகேந்திர பல்லவர் தம்மை
நெடுகிலும் ஏமாற்றி வந்திருக்கிறார் என்ற உணர்ச்சியேயாகும்.
வடபெண்ணைக் கரையில் தம் முன்னிலையில் அவர் தன்னந்தனியாக வந்து
நின்று, பொய் ஓலையைக் கொடுத்து ஏமாற்றி விட்டல்லவா போய்
விட்டார்? அதற்குப் பிறகு நெடுகிலும் எத்தனை ஏமாற்றங்கள்?
எத்தனை தந்திர மந்திரங்கள்? எத்தனை மாயா ஜாலங்கள்.
நியாயமாக இந்தக்
காஞ்சி மாநகரம் இதற்குள்ளே தமது காலடியில் விழுந்து கிடக்க
வேண்டும். ஐசுவரிய கர்வமும் கலைக் கர்வமும் கொண்ட காஞ்சி
மக்கள் தம் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு உயிர்ப் பிச்சை
கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆ! இந்த மகேந்திர பல்லவனுடைய
மணிமுடியைத் தமது காலால் உதைத்துத் தள்ளியிருக்க வேண்டும்!
ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் வடபெண்ணைக் கரையில் நின்றிராமல்
நேரே முன்னோக்கி வந்திருந்தால் இதெல்லாம்
சாத்தியமாகியிருக்கும். இப்போது காஞ்சியிலும் உறையூரிலும்
மதுரையிலும் கூட வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும்.
இதெல்லாம்
நடக்காமற் போய் விட்டதன் காரணம் என்ன? எல்லாம் மகேந்திர
பல்லவனுடைய மாய தந்திரங்கள்தான். வன விலங்குகளையெல்லாம்
கதிகலங்கச் செய்யக்கூடிய வீரப் புலியைக் கேவலம் ஒரு நரி
வளையில் பதுங்கி வாழும் நரி தந்திரத்தினால் வென்று விட்டது!
இதை நினைக்க நினைக்க, வாதாபிச் சக்கரவர்த்திக்குக் கோபம்
மேலும் மேலும் பொங்கிக் கொண்டு வந்தது. அவருடைய நெற்றியின்
நரம்புகள் ஒவ்வொன்றும் புடைத்துக் கொண்டு நின்றன. அவருடைய
முகத்தைப் பார்த்தவர்கள் என்ன விபரீதம் வரப் போகிறதோ என்று
அஞ்சி நடுங்கினார்கள்.
காஞ்சி
நகரிலிருந்து வௌியேறியது முதல் அந்த நகருக்கு வடக்கே ஒரு காத
தூரத்தில் சளுக்கர் பெரும் சைனியம் தங்கியிருந்த இடத்துக்குப்
போய்ச் சேரும் வரையில் வாதாபிச் சக்கரவர்த்தி வாய் திறந்து
பேசவில்லை. இந்த விபரீத அமைதியானது அவருடன்
சென்றவர்களுக்கெல்லாம் பீதியை ஊட்டியது. சக்கரவர்த்தி
கூடாரத்தை அடைந்ததும், எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்தது.
வாதாபியின் படைத் தலைவர்களும் பண்டக சாலைத் தலைவர்களும்,
ஒற்றர் படைத் தலைவர்களும் புலிகேசியின் கோபாக்னியில் எரிந்து
பொசுங்கினார்கள்.
தளபதிகள்
முதலியோர் மந்திராலோசனைக்காக வந்து கூடியதும், "உங்களில்
பாதிப் பேரை யானையின் காலால் இடறச் செய்யப் போகிறேன்; மிச்சப்
பாதிப் பேரைக் கழுவிலே ஏற்றப் போகிறேன்!" என்று புலிகேசி
ஆரம்பித்தார். அதை கேட்டு மௌனமாயிருந்த சபையினரைப் பார்த்து
"ஏன் சும்மா இருக்கிறீர்கள்? எல்லாருக்கும் வாய் அடைத்துப்
போய் விட்டதா?" என்று கர்ஜித்தார். பின்னர் சரமாரியாக அவர் வசை
பாணங்களைப் பொழிந்தார். தென்னாட்டுப் படையெடுப்பில் நாளது
வரையில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைகள், தோல்விகள்,
ஏமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் காரணம் என்று
குற்றம் சாட்டினார்.
"வீரம் மிகுந்த
படைத் தலைவர்களே! புத்தியிற் சிறந்த ஒற்றர்களே! கேளுங்கள்!
இந்தக் காஞ்சி நகரின் கோட்டை வாசல்களுக்கு ஒரு சமயம் வெறும்
ஒற்றை மரக்கதவு போட்டிருந்தது. அப்போது நாம் வந்திருந்தால்
நம்முடைய யானைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்டை வாசலைத்
திறந்து விட்டிருக்கும். இந்தக் கோட்டை மதிலைக் காக்க அப்போது
பத்தாயிரம் வீரர்கள் கூட இல்லை. நமது வீரர்கள் ஒரே நாளில்
அகழியைக் கடந்து மதிலைத் தாண்டி உள்ளே புகுந்திருக்கலாம். இந்த
மகேந்திர பல்லவன் ஓடி வந்து என் காலில் விழுந்திராவிட்டால்,
காஞ்சியை லங்காதகனம் செய்திருப்பேன். அப்படிப்பட்ட காஞ்சி
நகரில் என்னை அந்தப் பல்லவன், இல்லாத அவமதிப்புகளுக்கெல்லாம்
உள்ளாக்கினான். ஒரு கல்தச்சனுக்கும் ஒரு கூத்தாடிப்
பெண்ணுக்கும் முன்னால் என்னை அவமானப்படுத்தினான்! எனக்குக் கலை
தெரியாதாம்! ரஸிகத்தன்மை இல்லையாம்! என்ன கர்வம்! என்ன
அகம்பாவம்!" என்று கூறிப் பற்களை நறநறவென்று கடித்துத் தரையில்
காலால் உதைத்தார் புலிகேசி மகாராஜா! பிறகு" மகேந்திர பல்லவன்
இந்தக் காஞ்சிக் கோட்டையைப் பழுது பார்த்துச் செப்பனிட்டுக்
கொண்டிருந்த போது, நீங்கள் வடபெண்ணைக் கரையில் சாவகாசமாகத்
தூங்கிக் கொண்டிருந்தீர்கள்!" என்று கூறிப் பயங்கரத் தொனியுடன்
சிரித்தார்.
அப்போது வாதாபி
ஒற்றர் படைத் தலைவன் சிறிது தைரியம் கொண்டு, "பிரபு! எல்லாம்
நாகநந்தியின் ஓலையால் வந்த வினை! அப்போதே நான் ஆட்சேபித்தேன்!"
என்றான். புலிகேசி கண்ணில் தீப்பொறி பறக்க அவனைப் பார்த்துச்
சொன்னார்; "நிர்மூடா! உன்னுடைய முட்டாள்தனத்துக்கு நாகநந்தி
மேல் பழி போடப் பார்க்கிறாயா? நாகநந்தி ஒருநாளும் தப்பான யோசனை
கூறியிருக்க மாட்டார். நமக்கு வந்த ஓலை நாகநந்தியின் ஓலை அல்ல.
நாகநந்தியின் ஓலையை இந்தத் திருடன் மகேந்திரன் நடுவழியில்
திருடிக் கொண்டு விட்டான். அது மட்டுமா? வேறு பொய் ஓலை எழுதி
இவனே மாறுவேடத்தில் என்னிடம் அதைக் கொண்டு வந்து கொடுத்தான்.
நமது புத்திசாலிகளான ஒற்றர்களால் இதையெல்லாம் கண்டுபிடிக்க
முடியவில்லை. ஆஹா!...நாகநந்தி மட்டும் அச்சமயம் நம்முடன்
இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்குமா? இந்தப் பல்லவ
நரியின் தந்திரமெல்லாம் அவரிடம் பலித்திருக்குமா..." நீங்கள்
இவ்வளவு பேர் இருந்து என்ன பயன்? புத்த பிக்ஷு ஒருவர்
இல்லாததனால் நமது பிரயத்தனமெல்லாம் நாசமாகி விட்டது!....
நாகநந்தியைப்
பற்றிப் பேச ஆரம்பித்தவுடனே சக்கரவர்த்தியின் உள்ளம்
கனிவடைந்து, பேச்சும் கொஞ்சம் நயமாக வந்தது. இதுதான் சமயம்
என்று வாதாபி சேனாதிபதி, "பிரபு! போனது போயிற்று! இப்போது நமது
சைனியத்தை வாதாபிக்குப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதைப்
பற்றி யோசிக்க வேண்டும். நாள் ஆக ஆக, நாம் திரும்பிப் போவது
கடினமாகி விடும்..." என்று கூறி வந்த போது, புலிகேசி,
இடிமுழக்கம் போன்ற குரலில், "சேனாதிபதி! என்ன சொன்னீர்?
திரும்பிப் போகிறதா?" என்று கர்ஜனை செய்தார். மறுபடியும்,
"தளபதிகளே! கேளுங்கள்! நாகநந்தியடிகள் இந்தக் காஞ்சிக்
கோட்டைக்குள்ளே பல்லவனுடைய சிறைக்கூடத்தில் அடைபட்டுக்
கிடக்கிறார். இளம்பிள்ளைப் பிராயத்தில் பெற்ற தாயைப் போல்
என்னை எடுத்து வளர்த்துக் காப்பாற்றியவர்; என் உயிரைக்
காப்பதற்காகத் தம் உயிரைப் பல தடவை பலி கொடுக்கத் துணிந்தவர்;
வாதாபிச் சிம்மாசனத்தில் என்னை ஏற்றி வைத்தவர்; உத்தராபதத்தின்
மகா சக்கரவர்த்தி ஹர்ஷவர்த்தனரை என்னிடம் சமாதானம் கோரித் தூது
அனுப்பச் செய்தவர்; அத்தகைய மகா புத்திமான் இந்தப் பல்லவ
நரியின் வளையிலே அடைபட்டுக் கிடக்கிறார்; அவரை அப்படியே விட்டு
விட்டு நாம் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று
சொல்கிறீர்கள்; ஒருநாளும் இல்லை. படைத் தலைவர்களே! காஞ்சிக்
கோட்டையைத் தாக்கும்படி உடனே நமது வீரப் படைகளுக்குக்
கட்டளையிடுங்கள். காஞ்சியைப் பிடித்து, மகேந்திர பல்லவனுடைய
மாளிகையைச் சுட்டெரித்து, மகேந்திரனுடைய தலையை மொட்டையடித்து
நமது தேர்க்காலில் கட்டிக் கொண்டு வாதாபிக்குத் திரும்பிப்
போவோம். நாகநந்தியடிகளைச் சிறை மீட்டு அவரை நமது பட்டத்து
யானையின் மீது வைத்து அழைத்துப் போவோம்! உடனே புறப்படுங்கள்!"
என்று கூறி நிறுத்தினார். சபையில் சற்று நேரம் நிசப்தம்
குடிகொண்டிருந்தது.
"இது என்ன மௌனம்?
ஏன் பேசாதிருக்கிறீர்கள்? பல்லவ நாட்டுக் கற்சிலைகளைப்
பார்த்துவிட்டு நீங்களும் கற்சிலையாகப் போய் விட்டீர்களா?"
என்று சக்கரவர்த்தி கேட்டார். அதன் பேரில், தளபதிகள்
ஒவ்வொருவராகத் தம் அபிப்பிராயங்களைச் சொல்லலானார்கள். யானைப்
படைத் தலைவர், யானைகள் எல்லாம் உணவின்றி மெலிந்து விட்டன
என்றும், அவற்றின் வெறி அதிகமாகி வருகிறதென்றும், சில நாள்
போனால் யானைகள் கட்டுமீறிக் கிளம்பி நமது வீரர்களையே அழிக்க
ஆரம்பித்து விடுமென்றும் கூறினார்.
காலாட் படைத்
தலைவர், காஞ்சிக் கோட்டையைத் தாக்கும்படி வீரர்களை ஏவுதல்
இயலாத காரியம் என்றும், அவர்கள் ஏற்கெனவே சோர்வும்,
அதிருப்தியும் கொண்டு ஊருக்குத் திரும்பிப் போக துடித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். பண்டகசாலை அதிபதி,
இன்னும் சில நாள் போனால் எல்லாரும் பட்டினியினாலேயே செத்துப்
போக நேரிடுமென்று கூறினார். ஆயுதசாலை அதிபதி, கோட்டையைத்
தாக்குவதற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லையென்றும், கொண்டு
வந்தவையெல்லாம் முன் தாக்குதல்களில் நஷ்டமாகி விட்டன என்றும்
சொன்னார். இதையெல்லாம் கேட்கக் கேட்கப் புலிகேசிக்குக் கோபம்
பொங்கிக் கொண்டு வந்தது. ஆயினும் அவ்வளவு பேரும் சேர்ந்து
சாத்தியமில்லையென்று சொல்லும் போது அந்த ஒரு முகமான
அபிப்பிராயத்துக்கு மாறாகக் கோட்டையைத் தாக்கத்தான்
வேண்டுமென்று சொல்லப் புலிகேசிக்குத் துணிச்சல் வரவில்லை.
"ஆஹா! உங்களை நம்பி நான் இந்தப் படையெடுப்பை ஆரம்பித்தேனே!"
என்று வெறுப்புடன் பேசி விட்டு, "இருக்கட்டும், எல்லாரும்
போய்த் தொலையுங்கள். இன்றிரவு யோசித்து நாளைக்கு முடிவு
சொல்லுகிறேன்!" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்திரண்டாம் அத்தியாயம்
புலிகேசி ஆக்ஞை
அன்றிரவு
மட்டுமல்ல; மறுநாளும் அதற்கு மறுநாளும் கூடப் புலிகேசி
அவ்விடத்திலேயே இருந்து யோசனை செய்தார். அங்கிருந்து தெற்கே
காத தூரத்தில் தெரிந்த காஞ்சிமா நகரின் கோபுரங்களையும்
ஸ்தூபிகளையும் பார்க்கப் பார்க்க அவருடைய கோபம் கொந்தளித்துப்
பொங்கிற்று. அந்நகரின் பாதாள காராக்கிருகம் ஒன்றில் நாகநந்தி
அடிகள் சிறைப்பட்டுக் கிடக்கிறார் என்பதை நினைத்த போது அவருடைய
கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவது போலிருந்தது. மகேந்திர பல்லவன்
பேரில் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்னும் எண்ணம்
நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்ந்து சீக்கிரத்தில் வானத்தையும்
பூமியையும் அளாவி நின்றது.
இரண்டு தினங்கள்
இரவு பகலாக யோசனை செய்து, கடைசியில் வாதாபிச் சக்கரவர்த்தி சில
முடிவுகளுக்கு வந்தார். தமது தளபதிகளையும் பிரதானிகளையும்
அழைத்து அம்முடிவுகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அந்த
முடிவுகள் இவைதான்; சக்கரவர்த்தியும் முக்கிய தளபதிகளும்
சைனியத்தில் பெரும் பகுதியுடன் வாதாபிக்கு உடனே புறப்பட
வேண்டியது. சைனியத்தில் நல்ல தேகக்கட்டு வாய்ந்த வீரர்களாக
ஐம்பதினாயிரம் பேரைப் பின்னால் நிறுத்த வேண்டியது. அவர்கள்
தனித் தனிக் கூட்டமாகப் பிரிந்து காஞ்சி நகரைச் சுற்றிலும்
நாலு காத தூரம் வரை உள்ள கிராமங்கள், பட்டணங்களை எல்லாம்
சூறையாடிக் கொளுத்தி அழித்து விடவேண்டியது. அந்தந்தக்
கிராமங்களிலுள்ள யௌவன ஸ்திரீகளை எல்லாம் சிறைப்பிடித்துக்
கொண்டு, வாலிபர்களை எல்லாம் கொன்று, வயதானவர்களை எல்லாம்
அங்கஹீனம் செய்து, இன்னும் என்னென்ன விதமாகவெல்லாம்
பழிவாங்கலாமோ அவ்விதமெல்லாம் செய்ய வேண்டியது. முக்கியமாக,
சிற்பங்கள் - சிற்ப மண்டபங்கள் முதலியவற்றைக் கண்ட கண்ட
இடங்களிலெல்லாம் இடித்துத் தள்ள வேண்டியது. சிற்பிகளைக்
கண்டால் ஒரு காலும் ஒரு கையும் வெட்டிப் போட்டுவிட வேண்டியது.
இப்படிப்பட்ட கொடூர பயங்கரமான கட்டளைகளைப் போட்டு அவற்றை
நிறைவேற்றுவதற்குத் தக்க பாத்திரங்களையும் நியமித்து ஏவி
விட்டு, வாதாபிச் சக்கரவர்த்தி தமது சைனியத்தின் பெரும்
பகுதியுடன் பிரயாணமானார். மேற்கூறிய கொடூர ஆக்ஞையை
நிறைவேற்றுவதற்காகக் காஞ்சியைச் சுற்றிக் கொண்டிருந்த வாதாபி
வீரர் கூட்டம் ஒன்றைத்தான் ஆயனரும் சிவகாமியும் காட்டு வழியில்
சந்தித்தார்கள்.
வராகக் கொடியைப்
பார்த்து வாதாபி வீரர்கள் என்று தெரிந்து கொண்டதும்
சிவகாமிக்குத் தேகமெல்லாம் நடுங்கிற்று; உள்ளம் பதைத்தது.
எதிர்ப்பட்ட வாதாபி வீரர்கள் கிட்டத்தட்ட நூறு பேர்தான்
என்றாலும், சிவகாமியின் கண்களுக்குப் பதினாயிரம் பேராக அவர்கள்
காட்சியளித்தார்கள். ஆனால், ஆயனருக்கோ, அம்மாதிரி அச்ச
உணர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை. அவருக்கு உற்சாகமே ஏற்பட்டு
விட்டதாக முகமலர்ச்சியிலிருந்து தோன்றியது. முன்னால் நின்ற
வீரனைப் பார்த்து, "ஐயா, நீங்கள் வாதாபி வீரர்கள்தானே? உங்கள்
மகாராஜா எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அந்த வீரனுடைய
முக பாவத்தைப் பார்த்ததும் தமிழ் பாஷை அவர்களுக்குத்
தெரிந்திராது என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு அதே விஷயத்தைப்
பிராகிருத மொழியில் கேட்டார். அந்த வாதாபி வீரனுக்கு அதுவும்
விளங்காமல் அவன் பின்னால் வந்த படைத் தலைவனைத் திரும்பிப்
பார்த்தான். இதற்குள் குதிரை மேல் வந்து கொண்டிருந்த படைத்
தலைவன் முன்புறத்துக்கு வந்து சேர்ந்தான். ஆயனரையும்
சிவகாமியையும் உற்றுப் பார்த்ததும், அவன் "ஓஹோ!" என்ற ஒலியால்
தனது வியப்பைத் தெரிவித்தான்.
ஏனெனில்,
புலிகேசியுடன் காஞ்சி நகருக்குள் வந்து, பல்லவ
சக்கரவர்த்தியின் சபையில் சிவகாமியின் நடனத்தைப்
பார்த்தவர்களிலே இவனும் ஒருவன். எனவே அவர்களை அடையாளம்
தெரிந்து கொண்டதும் அவனுக்கு வியப்பும் குதூகலமும் உண்டாயின.
இன்னும் அவர்கள் அருகில் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்து
அவர்களை விழித்துப் பார்த்து விட்டு ஆயனரை நோக்கி, "என்ன
கேட்கிறீர்?" என்றான். ஆயனர் உற்சாகத்துடன், "ஐயா, உங்கள்
சக்கரவர்த்தி எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்க வேண்டும்"
என்றார். தளபதி சசாங்கனின் புருவங்கள் நெரிந்தன. முகத்தில்
வேடிக்கைப் புன்னகையுடன், "வாதாபிச் சக்கரவர்த்தியை நீர்
எதற்காகப் பார்க்க வேண்டும்? அவரிடம் உமக்கு என்ன காரியம்?"
என்று கேட்டான்.
"காரியத்தைச்
சக்கரவர்த்தியிடம் மாத்திரந்தான் சொல்ல வேண்டும்; அந்தரங்கமான
விஷயம்" என்றார் ஆயனர். அதைக் கேட்டு அவ்வீரன் பரிகாசச்
சிரிப்புச் சிரிப்பதைப் பார்த்து விட்டு, ஒருவேளை விஷயத்தைச்
சொல்லாவிட்டால் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் தங்களை அழைத்துப்
போகமாட்டார்கள் என்று எண்ணி, "இருந்தாலும், உங்களிடம் சொல்லவே
கூடாது என்பதில்லை. அஜந்தா சித்திரங்களின் அழியாத வர்ண
இரகசியத்தைப் பற்றி உங்கள் சக்கரவர்த்திக்குத் தெரியுமாமே,
அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான்
வந்தேன். தயவு செய்து என்னைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப்
போவீர்களா?" என்றார். இதைக் கேட்டதும் தளபதி சசாங்கன் முன்னை
விடப் பலமாகச் சீறினான். பக்கத்தில் நின்ற வீரர்களைப்
பார்த்து, "ஏன் நிற்கிறீர்கள்? இவர்களுடைய கண்களைக்
கட்டுங்கள்" என்றான்.
ஆயனர்
திடுக்கிட்ட குரலில், "கண்களைக் கட்டுவதா? எதற்காக?" என்று
வினவினார். அதற்குக் குதிரை மேலிருந்த தளபதி சசாங்கன், "உமக்கு
அவசியம் தெரியத்தான் வேண்டுமா? அப்படியானால் சொல்லுகிறேன்.
இந்தப் பல்லவ நாட்டிலுள்ள யௌவன ஸ்தீரிகளை எல்லாம் சிறை
பிடித்துக் கொண்டு வரும்படி வாதாபிச் சக்கரவர்த்தி
கட்டளையிட்டிருக்கிறார். அதோடு இந்த ராஜ்யத்தில் உள்ள
சிற்பிகளையெல்லாம், ஒரு காலையும், ஒரு கையையும் வெட்டிப்
போடும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். சாதாரண சிற்பிகளுக்கு இந்த
ஆக்ஞை. நீரோ சிற்பிகளுக்கெல்லாம் குருவான மகா சிற்பி. ஆகையால்,
உம்முடைய இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் துணித்து விடப்
போகிறேன். அதை இந்தப் பெண் பார்க்க வேண்டாமென்றுதான் கண்ணைக்
கட்டச் சொன்னேன்!" என்றான். அம்பினால் அடிபட்ட குயிலின் கடைசி
மரணக் குரலைப் போல வேதனை ததும்பிய ஒரு குரல் 'கீச்' என்று
கேட்டது. சிவகாமி தரையில் விழுந்து உயிரற்ற சவம் போலக்
கிடந்தாள்.
சிவகாமிக்கு
மறுபடியும் தன்னுணர்வு வந்த போது தன் தலை இன்னும் சுழன்று
கொண்டிருப்பதையும், தன் கால்கள் நடந்து கொண்டிருப்பதையும் இரு
பக்கத்திலும் இருவர் தன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டு நடத்தி வருவதையும் கண்டாள். சிறிது சிறிதாக அவளுக்குப்
பிரக்ஞை வந்து சற்று முன் நடந்த சம்பவங்களும் நினைவுக்கு
வந்தன. பக்கத்தில் தன் தந்தை இல்லை என்பதை உணர்ந்தபோது அவளுடைய
வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத இதய வேதனை உண்டாயிற்று. பிரமை
பிடித்த நிலையில் பக்கத்தில் நின்ற வீரர்களால் உந்தப்பட்டு
இன்னும் சில அடி தூரம் நடந்து சென்ற போது, அருகில் அடர்ந்த
காட்டுக்குள்ளிருந்து திடீரென்று ஓர் உருவம் வௌிப்பட்டதைக்
கண்டாள். பார்த்த கணத்திலேயே அந்த உருவம் நாகநந்தி அடிகளின்
உருவந்தான் என்பதும் தெரிந்து விட்டது. உடனே ஆவேசம் வந்தவள்
போலத் தன்னைப் பற்றியிருந்த வீரர்களின் கைகளிலிருந்து திமிறிக்
கொண்டு விடுபட்டு நாகநந்தி அடிகளின் முன்னால் சிவகாமி பாய்ந்து
சென்றாள். அவருடைய காலடியில் விழுந்து நமஸ்கரித்து, "சுவாமி!
தாங்கள்தான் கதி! காப்பாற்ற வேண்டும்!" என்று கதறினாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்து மூன்றாம் அத்தியாயம்
அபயப் பிரதானம்
"சிவகாமி!
மெய்யாகவே நீதானா? அல்லது என் கண்கள் என்னை ஏமாற்றுகின்றனவா?"
என்று நாகநந்தியடிகள் போலி அவநம்பிக்கையுடன் கேட்டார்.
"அடிகளே! நான்தான்; அனாதைச் சிவகாமிதான்; இந்த ஏழைச்
சிற்பியின் மகளைக் காப்பாற்றுங்கள் சுவாமி!" "அப்படிச்
சொல்லாதே, அம்மா! நீயா அனாதை? நீயா ஏழை? பல்லவ ராஜ்யத்தின்
குமார சக்கரவர்த்தி மாமல்லப் பிரபுவின் காதலுக்குரிய
பாக்கியசாலியல்லவா நீ? மண்டலாதிபதியான மகேந்திர பல்லவரின்
மருமகளாகப் போகிறவளல்லவா?" "சுவாமி! என்மேல் பழி தீர்த்துக்
கொள்ள இது சமயமல்ல! தங்களை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன்;
காப்பாற்ற வேண்டும்" என்று சிவகாமி அலறினாள்.
"பெண்ணே! காவித்
துணி தரித்த ஏழைப் பரதேசி நான்! என்னால் உன்னை எப்படிக்
காப்பாற்ற முடியும்?" "தங்களால் முடியும், சுவாமி! தங்களால்
முடியும்! தாங்கள் மனது வைத்தால் கட்டாயம் காப்பாற்ற
முடியும்." "இவர்களிடம் நீ எப்படிச் சிக்கிக் கொண்டாய்?
கோட்டைக்குள்ளிருந்து ஏன் வௌியே வந்தாய்? எப்படி வந்தாய்?"
"அதையெல்லாம் இப்போது கேட்க வேண்டாம், சுவாமி! மூடத்தனத்தினால்
வௌியே வந்தேன். என் அருமைத் தந்தைக்கு நானே யமனாக ஆனேன்!...
நான் எக்கேடாவது கெட்டுப் போகிறேன்; என் தந்தையைக்
காப்பாற்றுங்கள்...." "உன் தந்தை எங்கே, அம்மா? அவருக்கு என்ன
ஆபத்து வந்திருக்கிறது?" என்றார் பிக்ஷு. "ஐயோ! இவர்களைக்
கேளுங்கள்; அப்பா எங்கே என்று இவர்களைக் கேளுங்கள்! சற்று
முன்னால் ஏதோ பயங்கரமான வார்த்தை என் காதில் விழுந்தது. அதோ
அந்தக் குதிரை மேல் இருப்பவர் சொன்னார். ஆயனர் எங்கே என்று
அவரைக் கேளுங்கள் சுவாமி! சீக்கிரம் கேளுங்கள்!"
இப்படிச் சிவகாமி
சொல்லிக் கொண்டிருந்தபோதே சற்றுப் பின்னால் குதிரை மேல்
வீற்றிருந்தபடி மேற்கூறிய காட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த
தளபதி சசாங்கன் குதிரையைச் செலுத்திக் கொண்டு அவர்கள் அருகில்
வந்து சேர்ந்தான். "புத்தம் சரணம் கச்சாமி!" என்று
நாகநந்தியைப் பார்த்துப் பரிகாசக் குரலில் கூறி வணங்கினான்.
வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாகநந்தி பிக்ஷுவுக்கு இருந்த
செல்வாக்கைக் குறித்துப் பொறாமை கொண்டவர்களில் தளபதி
சசாங்கனும் ஒருவன். "புத்தம் சரணம் கச்சாமி!" என்று
நாகநந்தியும் கடுகடுத்த குரலில் கூறினார். "ஆ! நாகநந்தி
பிக்ஷுவே! திடீரென்று இங்கே எப்படி முளைத்தீர்? நாகம் இத்தனை
நாளும் எந்த வளையில் ஒளிந்து கொண்டிருந்தது. இப்போது ஏன்
வௌியில் தலையை நீட்டுகிறது?" என்று தளபதி சசாங்கன் கேட்டான்.
கேட்டவர்கள்
நடுங்கும்படியான நாகப்பாம்பின் சீறல் சத்தம் அப்போது
திடீரென்று கேட்டது. அதே சமயத்தில் "பாம்பு பாம்பு!" என்று ஒரு
கூக்குரல், அதைக்கேட்ட அங்கே கூடியிருந்த வீரர்கள் சிதறி
ஓடினார்கள். நாகப்பாம்பு ஒன்று சரசரவென்ற சப்தத்துடன் தளபதி
சசாங்கன் ஏறியிருந்த குதிரையின் கால்மீதேறி ஊர்ந்து
அப்பாலிருந்த புதருக்குள் விரைந்து சென்று மறைந்தது. "தளபதி!
ஜாக்கிரதை! சாதாரணமாய் நாகப்பாம்பு கடிக்காது. ஆனால் கடித்து
விட்டால் அதன் விஷம் ரொம்பப் பொல்லாதது!" என்றார் பிக்ஷு.
சசாங்கன் பல்லைக்
கடித்துக் கொண்டு, "பிக்ஷு...இந்த அருமையான உண்மையைச்
சொன்னதற்காக மிகவும் வந்தனம். எனக்கு அலுவல் அதிகம்
இருக்கிறது. தங்களுடன் பேசிக் கொண்டிருக்க இப்போது நேரமில்லை;
மன்னிக்க வேண்டும்..... அடே! இந்தப் பெண்ணைப் பிடித்துக்
கட்டுங்கள்!" என்று சற்று விலகிப் போய் நின்ற வீரர்களைப்
பார்த்துச் சசாங்கன் சொன்னான். அதைக் கேட்ட வீரர்கள் சிவகாமியை
நெருங்கி வந்தார்கள். "தளபதி! தென்னாட்டின் புகழ்பெற்ற நடன
கலைவாணியைச் சிறைப் பிடித்தது உம்முடைய அதிர்ஷ்டந்தான். இந்த
விசேஷ சம்பவத்தைச் சக்கரவர்த்தியிடம் நான் கூடிய சீக்கிரம்
தெரியப்படுத்துகிறேன்..." "ஓஹோ! அப்படியானால் பிக்ஷுவும்
வாதாபியை நோக்கித்தான் பிரயாணம் கிளம்பியிருப்பது போல்
தெரிகிறது...."
"ஆம், சசாங்கரே!
ஆனால் சக்கரவர்த்தியிடம் இந்த விசேஷச் செய்தியைத்
தெரிவிப்பதற்கு வாதாபி வரையில் நான் போக வேண்டியதில்லை. சற்று
முன்னால் இந்தக் காட்டில் இன்னொரு புறத்தில் சக்கரவர்த்தியைப்
பார்த்தேன்..." "பொய்! பொய்! வாதாபிச் சக்கரவர்த்தி இதற்குள்
வடபெண்ணை நதியை அடைந்திருப்பார்." "பொய்யும் மெய்யும் விரைவிலே
தெரியும், தளபதி! ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்
கொள்ளும். புலி தனக்கு இரையாகக் கொள்ள எண்ணிய மானின் மீது பூனை
கண்ணைப் போட்டால் விபரீதம் விளையும், ஞாபகமிருக்கட்டும்!"
என்று நாகநந்தி கம்பீரமான குரலில் கூறியபோது, தளபதி சசாங்கனின்
வாயிலிருந்து 'உம்', 'உம்' என்ற உறுமல் ஒலியைத் தவிர
வேறெதுவும் வரவில்லை. பின்னர், நாகநந்தி சிவகாமியைப் பார்த்து,
"பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அதன்படி நடந்து
கொண்டால் உனக்கு ஒரு அபாயமும் நேராது. இவர்களுடன் தடை
சொல்லாமல் போ! நீ நடனக் கலை பயின்றவளாதலால், உன் கால்களில்
வேண்டிய பலம் இருக்கும், நடப்பதற்கு நீ அஞ்சமாட்டாயல்லவா?"
என்றார்.
இதுவரை
சசாங்கனுக்கும் நாகநந்திக்கும் நடந்த சம்பாஷணையைக் கவனித்த
வண்ணம் கற்சிலைபோல் அசைவற்று நின்ற சிவகாமி சட்டென்று உணர்வு
வரப் பெற்றவளாய், "சுவாமி! என்னைப் பற்றி எனக்கு ஒரு
கவலையுமில்லை. இந்தப் பாவியினால் தங்கள் சிநேகிதர் ஆயனர்
பெரும் அபாயத்துக்கு உள்ளாகி விட்டார், ஐயோ! அவரைக்
காப்பாற்றுங்கள்!" என்று கதறினாள். உடனே நாகநந்தி பிக்ஷு,
"தளபதி! இந்தப் பெண்ணின் தந்தை எங்கே?" என்று கேட்க, சசாங்கன்
ஒரு கோரச் சிரிப்புச் சிரித்தவண்ணம், "ஆஹா! உங்களுக்கு அது
தெரிய வேண்டுமா? சொல்கிறேன். பல்லவ நாட்டிலுள்ள
சிற்பிகளையெல்லாம் ஒரு காலையும் ஒரு கையையும் வெட்டிப்
போடும்படி சக்கரவர்த்தியின் கட்டளை; இவளுடைய தந்தை பெரிய மகா
சிற்பியல்லவா? அதற்காக அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு
இரண்டு கையையும் இரண்டு காலையும் வெட்டிப் போடச்
சொல்லியிருக்கிறேன்! அதோ தெரியும் அந்தப் பாறைமேல் கொண்டு
போய்ச் சுற்றுப் பக்கமெல்லாம் தெரியும்படியாகக் காலையும்
கையையும் வெட்டிக் கீழே உருட்டிவிடச் சொல்லியிருக்கிறேன்.
காஞ்சிக் கோட்டை மதிலிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிய
வேண்டுமென்றுதான் பாறை உச்சிக்குக் கொண்டு போகச் சொன்னேன்"
என்றான் சசாங்கன். இவ்விதம் சொல்லிவிட்டு மீண்டும் அவன்
பயங்கரமாகச் சிரித்தான்.
சசாங்கன் பேசுகிற
வரையில் அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த
சிவகாமி அவன் பேசி முடித்ததும், விவரிக்க முடியாத பயங்கரமும்
வேதனையும் நிறைந்த கண்களினால் நாகநந்தியைப் பார்த்து,
"அடிகளே!" என்று கதறினாள். அப்போது நாகநந்தி, "பெண்ணே! என்
வார்த்தையில் நம்பிக்கை வை; உன் தந்தையை நான்
காப்பாற்றுகிறேன். மன நிம்மதியுடன் நீ இவர்களோடு போ!" என்றார்.
அப்போது சசாங்கன், "பிக்ஷு வாதாபிச் சக்கரவர்த்தியின்
கட்டளைக்குக் குறுக்கே நிற்பவருக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா?
அது தங்களுக்கும் ஞாபகம் இருக்கட்டும்!" என்று கூறி விட்டுச்
சிவகாமியைப் பார்த்து, "பெண்ணே! இந்தப் பிக்ஷு உனக்குச் சொன்ன
புத்திமதி நல்ல புத்திமதிதான். அதன் பிரகாரம் தடை ஒன்றும்
சொல்லாமல் எங்களுடன் வந்து விடு!" என்றான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்து நான்காம் அத்தியாயம்
அட்டூழியம்
ஆயனரின் உள்ளம்
சிந்தனா சக்தியை அடியோடு இழந்திருந்தது. தன் கண்ணால்
பார்த்தது, காதால் கேட்டது ஒன்றையுமே அவரால் நம்ப முடியவில்லை.
இவையெல்லாம் கனவிலே நடக்கும் நிகழ்ச்சிகளா, உண்மையில் நடக்கும்
சம்பவங்களா என்பதையும் அவரால் நிர்ணயிக்கக் கூடவில்லை!
உலகத்தில் மாநிலத்தை ஆளும் மன்னர்கள் யுத்தம் செய்வது
இயற்கைதான், அதில் நம்பமுடியாதது ஒன்றுமில்லை. அப்படி யுத்தம்
செய்யும் அரசர்கள் போருக்கு அனுப்பும் வீரர்களுக்கு,
"ஸ்திரீகளையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும்
பசுக்களையும், கலைஞர்களையும் ஹிம்சிக்கக்கூடாது" என்று
கட்டளையிடுவதுண்டு. அரசர்கள் பொல்லாத மூர்க்கர்களாயும்
கருணையற்றவர்களாயுமிருந்தால், அவ்வளவு சிரத்தை எடுத்துக்
கட்டளையிட மாட்டார்கள்.
ஆனால்,
சாம்ராஜ்யம் ஆளும் சக்கரவர்த்தி ஒருவர் தம் படை வீரர்களுக்கு,
'சிற்பிகளையெல்லாம் காலையும் கையையும் வெட்டிப் போட்டுவிடு!'
என்று ஆக்ஞை இடுவது நடக்கக்கூடிய சம்பவமா? அம்மாதிரிக்
கட்டளையிடக்கூடிய ராட்சதர்கள் இராஜ்ய சிம்மாசனத்தில் ஏறி
வீற்றிருக்க முடியுமா? அந்த நாட்டின் பிரஜைகள் அதைப்
பொறுத்துக் கொண்டிருப்பார்களா?" அதிலும், புலிகேசிச்
சக்கரவர்த்தியா அப்படிப்பட்ட கட்டளை பிறப்பித்திருப்பார்?
எவருடைய இராஜ்யத்தில் உலகத்திலேயே இல்லாத கலை அதிசயங்கள்
என்றும் அழியாத வர்ணங்களில் தீட்டப்பட்ட அற்புத ஜீவ
சித்திரங்கள் உள்ளனவோ, அந்த இராஜ்யத்தின் மன்னரா அப்படிப்பட்ட
கொடூரமான கட்டளையை இட்டிருப்பார்? அப்படி அவர்
கட்டளையிட்டிருப்பதாக அந்தக் குரூர முகம் படைத்த தளபதி கூறியது
உண்மையாயிருக்க முடியுமா? அவன் சொன்னதாகத் தம் காதில்
விழுந்தது மெய்தானா?
அவனுடைய கொடூர
மொழிகளைக் கேட்டுச் சிவகாமி உணர்விழந்து தரையில் விழுந்தது
உண்மையா? அவளைத் தாங்கிக் கொள்ளத் தாம் ஓடியபோது வாதாபி
வீரர்கள் தங்களுடைய இரும்புக் கரங்களினால் தம்மைப் பிடித்துக்
கொண்டதும் உண்மையாக நடந்ததுதானா? பிறகு அந்தப் படைத் தலைவன்
இட்ட கட்டளை மெய்தானா? 'அதோ அந்தப் பாறை முனைக்கு அழைத்துப்
போய்க் கோட்டையிலுள்ளவர்களுக்குத் தெரியும்படி காலையும்
கையையும் வெட்டிக் கீழே உருட்டி விடுங்கள்!" என்ற மொழிகள் தாம்
உண்மையாகக் கேட்டவைதானா? அல்லது இவ்வளவும் ஒரு பயங்கரக் கனவில்
நடந்த சம்பவங்களா? இந்தப் பாறைமீது தாம் ஏறுவதும், தம் கால்கள்
களைத்துத் தள்ளாடுவதும் நிஜமா? அல்லது வெறும் சித்தப் பிரமையா?
இவையெல்லாம்
வெறும் பிரமை தான்! அல்லது கனவுதான். ஒருநாளும் உண்மையாக
இருக்க முடியாது. ஆனால், அதோ தெரிகிறதே, காஞ்சிக் கோட்டை,
அதுகூடவா சித்தப்பிரமையில் தோன்றும் காட்சி? இல்லை, இல்லை!
காஞ்சிக் கோட்டை உண்மைதான். தம்மைப் பாறை முனையில் கொண்டுவந்து
நிறுத்தியிருப்பதும் உண்மைதான்; இதோ இந்த ராட்சதர்கள் தம்
கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதும், கைகளை வெட்டுவதற்காகக்
கத்தியை ஓங்குவதும் நிச்சயமாக நடக்கும் சம்பவங்கள்தான். ஆ!
சிவகாமி! என் அருமை மகளே! இந்தப் பாவி உன்னை என்ன கதிக்கு
உள்ளாக்கிவிட்டேன்! என் அஜந்தா வர்ணப் பைத்தியத்துக்கு உன்னைப்
பலிகொடுத்தவிட்டேனே, ஐயோ! என் மகளே! மகளே!
வீரர்களில்
ஒருவன் கத்தியை ஓங்கியபோது ஆயனர் தம் கண்களை இறுக மூடிக்
கொண்டார். ஆனால், ஓங்கிய கத்தி அவர் எதிர்பார்த்தபடி
அடுத்தகணம் அவருடைய கையை வெட்டவில்லை. "நிறுத்து!" என்று
அதிகாரக் குரலில் ஓர் ஒலி கேட்டது. ஆயனர் கண்ணைத் திறந்து
பார்த்தபோது... ஆஹா! இதென்ன? புலிகேசிச் சக்கரவர்த்தியல்லவா
இவர்? இங்கு எப்படி வந்து சேர்ந்தார்? சக்கரவர்த்தியைப்
பார்த்த வியப்பினால் ஆயனரைப் பிடித்துக் கொண்டிருந்த வீரர்கள்
திடீரென்று கைப்பிடியை விட்டார்கள். பக்கத்திலிருந்த
பள்ளத்தில் ஆயனருடைய கால் நழுவிற்று. கீழே பூமி வரையில் சென்று
எட்டிய அந்த மலைச் சரிவில் ஆயனர் உருண்டு உருண்டு போய்க்
கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் தம் உணர்வை
இழந்தார்.
ஆயனருக்குச் சுய
உணர்வு வந்தபோது, அருகில் ஏதோ பெருங் கலவரம் நடப்பதாகத்
தோன்றியது. பல மனிதர்களின் கூச்சலும் கற்கள் மோதும் சத்தமும்
கலந்து கேட்டன. முன்னம் கேட்ட அதே அதிகாரக் குரலில்,
"நிறுத்து!" என்ற கட்டளை எழுந்தது. ஆயனர் கண்களைத் திறந்து
பார்த்தார். அரண்ய மத்தியில் இருந்த தமது பழைய சிற்பக்
கிருஹத்துக்குள் தாம் இருப்பதைக் கண்டார். சுற்றுமுற்றும்
பார்த்தார்; வாதாபிச் சக்கரவர்த்தி கம்பீரமாய் நின்று
கையினால், "வௌியே போங்கள்!" என்று சமிக்ஞை செய்ய, மூர்க்க
வாதாபி வீரர்கள் கும்பலாக வாசற் பக்கம் போய் கொண்டிருப்பதைப்
பார்த்தார்.
வீட்டுக்குள்ளே
தாம் அரும்பாடு பட்டுச் சமைத்த அற்புதச் சிலைகள் - அழகிய நடன
வடிவங்கள் தாறுமாறாய் ஒன்றோடொன்று மோதப்பட்டு அங்கஹீனம்
அடைந்து கிடப்பதைக் கண்டார். அப்போது அவருடைய உடம்பின்மேல்
யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது. பழுதடைந்த
சிலைகளை அருகில் போய்ப் பார்க்கலாமென்று எழுந்தார். அவருடைய
வலது காலில் ஒரு பயங்கரமான வேதனை உண்டாயிற்று, எழுந்திருக்க
முடியவில்லை. தமது வலது கால் எலும்பு முறிந்து போய்விட்டது
என்பது அப்போதுதான் ஆயனருக்குத் தெரிந்தது. அச்சமயம்
பின்கட்டிலிருந்து ஆயனருடைய சகோதரி உடல் நடுங்க, கண்களில் நீர்
பெருக, ஓடிவந்து ஆயனர் அருகில் விழுந்தாள். பாவம் சற்று
முன்னால் அந்தச் சிற்பக் கிருஹத்தில் வாதாபி வீரர்கள் செய்த
அட்டகாசங்களைப் பார்த்து அவள் சொல்ல முடியாத பீதிக்கு
ஆளாகியிருந்தாள். எல்லா வீரர்களும் வீட்டுக்கு வௌியே போன
பிறகு, வாதாபிச் சக்கரவர்த்தி சாந்தமாக நடந்து ஆயனர் கிடந்த
இடத்துக்கு அருகில் வந்தார். ஆயனர், "பிரபு! தங்களுடைய
வீரர்கள் இம்மாதிரி அட்டூழியங்களைச் செய்யலாமா?" என்று
கதறினார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
வலது கால்
எலும்பு முறிந்து எழுந்திருக்க முடியாதவராய்த் தரையில்
விழுந்து கிடந்த ஆயனரண்டையில் வந்து புலிகேசிச் சக்கரவர்த்தி
உட்கார்ந்தார். "மகா சிற்பியே! மன்னிக்க வேண்டும்; உம்முடைய
அற்புதச் சிலை வடிவங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இவ்வளவு
விரைந்து வந்தேன். நீர் மூர்ச்சை தௌியும் வரையில் கூடக்
காத்திராமல், உம்மைக் குதிரையின் மேல் வைத்துக் கட்டிக்
கொணர்ந்தேன். அப்படியும் உம்முடைய சிலை சிலவற்றிற்கு ஆபத்து
வந்து விட்டது; மன்னியுங்கள். ஏதோ மீதமுள்ளவையாவது பிழைத்தனவே
என்று சந்தோஷப்படுங்கள்!" என்றார் புலிகேசி மன்னர்.
ஆயனர் அவருடைய
முகத்தை ஆவலுடன் உற்றுப் பார்த்தார். அவருடைய உள்ளத்தில் ஏதோ
ஒரு சந்தேகத்தின் நிழல் படர்ந்திருந்தது. இதென்ன விந்தை?
வாதாபிச் சக்கரவர்த்தியா இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறார்?
கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போன புலிகேசி மன்னரா தம்
அருகில் உட்கார்ந்து இவ்வளவு சாவதானமாக வார்த்தையாடுகிறார்?
இப்படிப்பட்ட நல்ல சுபாவமுடைய மன்னர் சிற்பிகளைக் காலையும்
கையையும் வெட்டிப் போடும்படி கட்டளையிட்டிருப்பாரா?
சிலைகளையும் சிற்பங்களையும் உடைத்துப் போட
ஆக்ஞையிட்டிருப்பாரா? அந்தக் கடுவம் பூனை முகத்துத் தளபதி
அப்போது சொன்னது உண்மையா? அல்லது இனிய தமிழ் பாஷையில் இதோ
சக்கரவர்த்தியே பேசுவது உண்மையா?
சட்டென்று
ஆயனருக்குச் சிவகாமியின் நினைவு வந்தது! ஐயோ! அவள் என்ன ஆனாள்?
மற்றதையெல்லாம் மறந்து, "பிரபு! என் குமாரி சிவகாமியை உங்கள்
வீரர்கள் பிடித்துக் கொண்டு போனார்கள்; ஐயோ! அவளைக்
காப்பாற்றுங்கள். சிவகாமியை மறந்து விட்டு இந்தப் பாவி
சிலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேனே?" என்று ஆயனர்
அலறினார். அப்போது புலிகேசி, "ஆயனரே! கடவுள் அருளால் உம்
மகளுக்கு ஆபத்து ஒன்றும் வராது. பத்திரமாக அவள் வாதாபி போய்ச்
சேருவாள்!" என்றார். "ஐயோ! என்ன சொன்னீர்கள்? சிவகாமி
வாதாபிக்குப் போகிறாளா? அப்படியானால் இந்தப் பாவி இங்கே
எதற்காக இருக்கிறேன்? என்னையும் கொண்டு போய்விடுங்கள்!"
"அப்படித்தான் முதலில் எண்ணினேன், ஆனால் உம்முடைய காலை
ஒடித்துக் கொண்டு விட்டீரே? இந்த நிலைமையில் சிறிது
நகர்ந்தாலும் உமது உயிருக்கு ஆபத்து வருமே...!"
"பிரபு!
அப்படியானால், என் உயிரைப் பற்றித் தங்களுக்குக் கவலை
இருந்தால், என் மகளை இங்கே அனுப்பி வையுங்கள்!" "அது இயலாத
காரியம்..." "ஆ! இதென்ன தாங்களும் ஒரு சக்கரவர்த்தியா?
சிற்பியின் கால் கையை வெட்டவும், சிலைகளை உடைக்கவும், கன்னிப்
பெண்களைச் சிறைப்பிடிக்கவும் கட்டளை போடத்தான் உங்களால்
முடியுமா?" என்று ஆயனர் ஆவேசமான குரலில் கத்தினார். அப்போது
புலிகேசி, "ஆயனரே! உம்மிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல
வேண்டும். தயவுசெய்து உம்முடைய சகோதரியை உள்ளே போகச்
சொல்லும்!" என்று சாந்தமான குரலில் கூறி, பக்கத்தில் சொல்ல
முடியாத மனக்குழப்பத்தையும் பீதியையும் முகத்தில்
பிரதிபலித்துக் கொண்டு நின்ற சிவகாமியின் அத்தையைச் சுட்டிக்
காட்டினார். "பிரபு! சொல்லுங்கள்! என் சகோதரியின் காது செவிடு!
இடி இடித்தாலும் கேளாது!" "இருந்தாலும், அவளைப் போகச்
சொல்லும்!" என்றார் புலிகேசி. ஆயனர் சமிக்ஞை காட்ட, அவருடைய
சகோதரி முன்னை விட அதிகக் குழப்பத்துடன் உட்சென்றாள்.
புலிகேசி,
"ஆயனரே! நான் சொல்வதை நன்றாய் மனத்தில் வாங்கிக் கொண்டு விடை
சொல்லும்; உம்முடைய குமாரி இப்போது வாதாபியை நோக்கிச் சென்று
கொண்டிருக்கிறாள். ஒருவேளை நான் விரைந்து வேகமாகச் சென்றால்,
அவளைக் கண்டுபிடிக்கலாம். கண்டுபிடித்து, இவ்விடம் அனுப்பி
வைத்தாலும் வைக்கலாம். ஆனால், இன்னொரு விஷயத்தையும் யோசியும்,
இதோ உம்முடைய அற்புத தெய்வீகச் சிலைகளை உடைத்தது போல்,
மாமல்லபுரத்து மகா சிற்பங்களையும் உடைத்தெறிவதற்காக ஒரு பெரும்
படை போயிருக்கிறது. நான் போனால் அந்தப் படையைத் தடுக்கலாம்.
உம்முடைய மகளைக் கொண்டு வருவதற்காகப் போகட்டுமா? அல்லது
மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் காப்பாற்றுவதற்காகப் போகட்டுமா?"
என்று கேட்ட போது, ஆயனரின் உள்ளத்தில் ஏற்கெனவே நிழல் போல்
தோன்றிய சந்தேகம் வலுப்பட்டது.
இவ்வளவு நன்றாகத்
தமிழ் பாஷை பேசுகிறவ் புலிகேசிச் சக்கரவர்த்திதானா? அவரை
நன்றாக உற்றுப் பார்த்து, "ஐயா! தாங்கள்...தாங்கள்....!" என்று
தயங்கினார். புலிகேசிச் சக்கரவர்த்தி உடனே தமது தலையிலிருந்த
கிரீடத்தைக் கழற்றிக் கீழே வைத்தார். "ஆ! நாகநந்தி அடிகளா?"
என்ற வார்த்தைகள் ஆயனரின் வாயிலிருந்து வௌிவந்தன. "ஆம்; ஆயனரே!
அந்த ஏழை பிக்ஷுவேதான்!" "சுவாமி! இதென்ன கோலம்?" "ஆம்;
சிநேகிதர்களுக்கு உதவுவதற்காக இந்தக் கோலம் பூண்டேன்.
சமயத்தில் உதவியும் செய்ய முடிந்தது."
"ஆ! இது என்ன
அதிசயமான உருவ ஒற்றுமை? தத்ரூபமாய் அப்படியே இருக்கிறதே!
சுவாமி, தாங்கள் யார்? ஒருவேளை....!" "இல்லை, ஆயனரே இல்லை!
வாதாபி புலிகேசிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி பிக்ஷுவும்
ஒருவரல்ல. ஏதோ ஓர் அற்புதமான சிருஷ்டி மர்மத்தினால் எங்கள்
இருவருக்கும் கடவுள் அத்தகைய உருவ ஒற்றுமையை
அளித்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி, பரத கண்டத்தின்
பாக்கியத்தினால் பிறந்த மகா சிற்பியின் உயிரைக்
காப்பாற்றினேன்." "ஆ! சுவாமி! என் உயிரைக் காப்பாற்றி என்ன
பயன்? என் மகள்....என் மகள் சிவகாமி! "ஆயனரே! நீரே சொல்லும்,
நான் என்ன செய்யட்டும் என்று? உம்முடைய மகளைத் தேடிக் கொண்டு
போகட்டுமா? அல்லது மாமல்லபுரத்துக்குப் போகட்டுமா?" ஆயனர்
வேதனை ததும்பிய குரலில், "சுவாமி! என் மகளைக் கடவுள்
காப்பாற்றுவார். நீங்கள் மாமல்லபுரத்துக்குப் போங்கள்! உடனே
புறப்பட்டுப் போங்கள்!" என்று கதறினார். அவரைத் திரும்பித்
திரும்பிப் பார்த்துக் கொண்டே வேஷதாரி பிக்ஷு அந்தச் சிற்பக்
கிருகத்திலிருந்து வௌியே சென்றார். உட்புறத்திலிருந்து
சிவகாமியின் அத்தை தயங்கித் தயங்கி வந்து ஆயனர் அண்டை
உட்கார்ந்து கொண்டாள். "தம்பி! உனக்கு என்ன உடம்பு?" என்று
கேட்டாள். ஆயனர் அதற்கு மறு மொழி சொல்லவில்லை. அத்தை
திடீரென்று பதற்றத்துடன் "குழந்தை எங்கே? சிவகாமி எங்கே?"
என்று கேட்டாள். ஆயனர் நிமிர்ந்து உட்கார்ந்து, அந்தச் சிற்ப
மண்டபமே அதிரும்படியான உரத்த குரலில், "அக்கா! சிவகாமி எங்கே?
என் மகள் சிவகாமி எங்கே?" என்று கேட்டார். கேட்டு விட்டுத் தலை
குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார். ஆயனருடைய
குரலைக் கேட்டுக் கொல்லைப்புறத்திலிருந்து ரதியும் சுகரும்
உள்ளே ஓடி வந்தனர். ஆயனர் அழுவதைப் பார்த்து விட்டு அந்தப்
பிராணிகள் சிலைகளைப் போல் அசையாமல் நின்றன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்தாறாம் அத்தியாயம்
கர்வ பங்கம்
காஞ்சி
அரண்மனையின் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில் மகேந்திர
பல்லவர் வீற்றிருந்தார். அவருக்கு எதிரே சேனாதிபதி கலிப்பகை,
முதன் மந்திரி சாரங்கதேவர், முதல் அமைச்சர் ரணதீரர், ஒற்றர்
தலைவன் சத்ருக்னன், குண்டோதரன் ஆகியவர்கள் நின்றார்கள்.
மகேந்திர பல்லவருடைய முகம் பிரகாசமாய்ப் புன்னகை மலர்ந்து
விளங்கிற்று. "குண்டோதரா! நீயே உன் கண்ணால் பார்த்தாயா?
உண்மையாகவே மாமல்லபுரத்திலிருந்து சளுக்கர் படைகள் திரும்பிப்
போயினவா? சிற்பங்களுக்கு ஒரு கேடும் நேரவில்லையே
நிச்சயந்தானே?" என்று கேட்டார்.
"ஆம்,
பல்லவேந்திரா! எனக்கு அப்போது ஏற்பட்ட ஆச்சரியத்தை என்னவென்று
சொல்வேன்? சளுக்க ராட்சதர்கள் இரண்டாயிரம் பேர் கைகளில்
கடப்பாரைகளையும் இரும்பு உலக்கைகளையும் எடுத்துக் கொண்டு
திடுதிடுவென்று ஓடி வந்தார்கள். ஐயோ! ஆயிரமாயிரம் சிற்பிகள்
அரும்பாடுபட்டு வேலை செய்த ஜீவ வடிவங்கள் எல்லாம் ஒரு நொடியில்
நாசமாகப் போகின்றனவே என்று என் உள்ளம் பதைத்தது. தாங்கள்
அந்தக் கோரக் காட்சியைப் பார்க்கும் போது தங்களுடைய மனம் என்ன
பாடுபடும் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நிமிஷம்
எங்கிருந்தோ திடீரென்று அந்தப் பாறை உச்சி மீது புலிகேசிச்
சக்கரவர்த்தி தோன்றினார். கம்பீரமாகக் கையினால் சமிக்ஞை
செய்தார். அவ்வளவுதான்! ராட்சதர்களைப் போல் பயங்கரமாய்
ஊளையிட்டுக் கொண்டு ஓடி வந்த சளுக்கர்கள் ஸ்தம்பித்து நின்று
விட்டார்கள். அவ்விடத்தில் அந்த நேரத்தில் வாதாபிச்
சக்கரவர்த்தியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் இட்ட
கட்டளையை அவரே மாற்றிச் சிற்பங்களை அழிக்காமல் திரும்பிப்
போகும்படி கட்டளையிடுவார் என்றும் எதிர் பார்க்கவில்லை. பிரபு!
நானே அந்த அதிசயத்தினால் சிறிது நேரம் சிலையாகப் போய்
விட்டேன். எல்லாரும் அவ்விடம் விட்டுப் போன பிறகுதான் எனக்குச்
சுய நினைவு வந்தது. உடனே புறப்பட்டு ஓடி வந்தேன்!" என்றான்
குண்டோதரன்.
சாரங்க தேவர்,
"பிரபு! தங்களுடைய மாயாஜால வித்தைகளுக்கு எல்லையே கிடையாது
போல் இருக்கிறதே! சளுக்க சக்கரவர்த்தி போட்ட கட்டளையை அவரே ஓடி
வந்து மாற்றும்படி எப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார். "ஆகா!
அந்த மூர்க்கனுடைய மனத்தை - கலை உணர்ச்சி என்பதே இல்லாத
கசடனுடைய மனத்தை மாற்ற முடியுமா? பிரம்மாவினால் கூட முடியாது!"
என்றார் மகேந்திரர். "அப்படியானால் இந்த அதிசயம் எப்படி
நடந்தது. பல்லவேந்திரா! மாமல்லபுரத்தை எப்படிக்
காப்பாற்றினீர்கள்?" என்று முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர்
கேட்டார். "சிறு துரும்பும் ஒரு சமயம் உதவும் என்று பழமொழி
இருக்கிறதல்லவா? புத்த பிக்ஷுக்களினாலும் பிரயோஜனம் உண்டு
என்று நான் எண்ணியது சரியாய்ப் போயிற்று!" "பிரபு! புதிர்
போடுகிறீர்கள், ஒன்றும் விளங்கவில்லை!"
"நாகநந்தி
பிக்ஷுவைச் சிறைப்படுத்தி வைத்திருந்தேனல்லவா? இந்த மாதிரி ஒரு
சந்தர்ப்பம் நேரலாம் என்று எண்ணித்தான் வைத்திருந்தேன்.
புலிகேசி இங்கிருந்து போகுமுன் கடைசியாக நாகநந்தி
பிக்ஷுவைத்தான் யாசித்தான். ஒருகணம் என் மனம் கூடச் சலித்து
விட்டது. ஒரு வழியாக நாகநந்தியையும் புலிகேசியுடன் கூட்டி
அனுப்பி விடலாமா என்று எண்ணினேன். நல்லவேளையாக அப்படிச்
செய்யாமல் அவரை நிறுத்தி வைத்துக் கொண்டேன். அதனாலேதான்
இப்போது மாமல்லபுரம் பிழைத்தது!"
சத்ருக்னன்,
"தங்களுடைய கட்டளையின் கருத்து எனக்கு இப்போதுதான் புரிகிறது.
'சுரங்க வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திரு!
வௌியில் யார் போனாலும் அதிசயப்படாதே! யோக நிஷ்டையிலேயே
இருந்துவிடு!' என்று ஆக்ஞையிட்ட சமயம் ஒன்றுமே விளங்கவில்லை.
நாகநந்தி வௌியில் வந்த போது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
ஓடிப் போய் அந்தக் கள்ள பிக்ஷுவின் கழுத்தைப் பிடித்து
நெறித்து விடலாமா என்று ஒருகணம் தோன்றியது. தங்களுடைய
கண்டிப்பான கட்டளையை எண்ணிச் சும்மா இருந்தேன்" என்றான்.
சேனாதிபதி கலிப்பகை, "எங்களுக்கெல்லாம் இன்னமும் ஒன்றும்
புரியவில்லை! நாகநந்தி பிக்ஷு போய்ப் புலிகேசியை அழைத்துக்
கொண்டு திரும்பி வந்து மாமல்லபுரத்தைக் காப்பாற்றியதாகவா
சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார்.
"நாகநந்தி
புலிகேசியை அழைத்து வரவில்லை; நாகநந்தியே
புலிகேசியாகிவிட்டார்!" என்று மகேந்திரவர்மர் சொன்னதும் ஏக
காலத்தில் 'ஆ' என்ற வியப்பொலி கிளம்பியது. "உங்களுக்கெல்லாம்
முகத்தில் கண்கள் இருக்கின்றன. ஆனால், இருந்தும் என்ன
பிரயோஜனம்? கண்களை நீங்கள் உபயோகிப்பதில்லை. நாகநந்தியின்
முகத்துக்கும் புலிகேசியின் முகத்துக்கும் உள்ள ஒற்றுமையை
நீங்கள் யாரும் கவனிக்கவில்லையா? நாகநந்திதான் புலிகேசியோ
என்று கூட ஒரு சமயம் நான் சந்தேகித்தேன். இல்லையென்று பிற்பாடு
தெரிந்தது. இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் உபயோகப்படுவார்
என்றுதான் நாகநந்தியைப் பத்திரமாய்ச் சிறைப்படுத்தி
வைத்திருந்தேன். புலிகேசி இங்கே வந்திருந்த போது அவருடைய
கிரீடத்தையும் ஆபரணங்களையும் போல் நம்பொற் கொல்லர்களைக் கொண்டு
செய்வித்திருந்தேன். அவற்றுடன் நேற்று அவரை அனுப்பினேன், நேரே
மாமல்லபுரம் போகச் சொன்னேன்."
"நாகநந்தி
அவ்வளவு சுலபமாகச் சம்மதித்து விட்டாரா, பிரபு?"
"பிக்ஷுவானாலும், ஒற்றனானாலும் உயிருக்கும் விடுதலைக்கும்
ஆசைப்படாதவர் யார்?" என்றார் மகேந்திரர். "ஆனால், அந்தக் கபட
வேஷதாரியிடம் தாங்கள் எப்படி நம்பிக்கை வைத்து வௌியே
அனுப்பினீர்கள்?" "ஆ! நாகநந்தி மனிதனேயல்ல; மனித உருவத்திலுள்ள
அரக்கன்; விஷம் ஏற்றிய கத்தியை உபயோகிக்கும் பாதகன்! ஆனாலும்
அவன் கலைஞன்! அவன் உள்ளத்தில் கலைப்பிரேமை இருப்பதை நான்
அறிவேன். நிச்சயமாய் மாமல்லபுரத்தைக் காப்பாற்றுவான் என்றும்
எனக்குத் தெரியும், ஆகையினால், அவனை அனுப்பினேன். ஆயனரின்
சிற்பக் கிருகத்தையும் காப்பாற்றி விட்டிருந்தால் அப்புறம்
அவன் என்னவாய்ப் போனாலும் கவலை இல்லை!"
இந்த
விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முதன் மந்திரி
முதலியவர்கள் அளவிறந்த வியப்பில் ஆழ்ந்து மௌனமாக நின்று
கொண்டிருந்தார்கள். அந்த மௌனத்தைப் பிளந்து கொண்டு வௌியே ஒரு
பெண்ணின் அழுகுரல் கேட்டது. காவலன் ஒருவன் உள்ளே ஓடி வந்து
தண்டம் சமர்ப்பித்து விட்டு, "பிரபு! மன்னிக்க வேண்டும்,
கண்ணபிரான் பெண்சாதி கமலி வந்து தங்களை உடனே காணவேண்டும்
என்கிறாள். நாங்கள் தடுத்ததற்கு அழுது கூக்குரல் போடுகிறாள்!"
என்றான். சக்கரவர்த்தியின் முகத்தில் சிறிது கலக்கத்தின்
அறிகுறி தென்பட்டது. "வரச் சொல்!" என்று உத்தரவிட்டார். அடுத்த
நிமிஷம் கமலி தலைவிரி கோலமாய் உள்ளே ஓடி வந்து "பல்லவேந்திரா!
இந்தச் சண்டாளியை மன்னிக்க வேண்டும்; பெரிய துரோகம் செய்து
விட்டேன்" என்று கதறிச் சக்கரவர்த்தியின் காலில் விழுந்தாள்.
அன்று காலையில்
கமலியின் மாமனார் அசுவபாலர் கமலியைப் பார்த்து "எங்கே அம்மா,
ஆயனரையும் அவர் மகளையும் காணோம்?" என்று கேட்டார். கமலி
சாதுரியமாக, "அவர்களுக்கு இந்த வீட்டில் பொழுது போகவில்லையாம்.
இந்தப் பச்சைக் குழந்தையின் விஷமம் பொறுக்கவில்லையாம்.
ஊரிலுள்ள கோயில்களையெல்லாம் பார்த்து வரப்போயிருக்கிறார்கள்.
அவர்களுக்குத்தான் சிற்பம் சிலைகள் என்றால் பைத்தியமாயிற்றே?"
என்றாள். "நல்லவேளை! கோட்டைக்கு வௌியே போக வேண்டும் என்று
சொன்னார்களே? போயிருந்தால் என்ன கதி ஆகியிருக்கும் தெரியுமா?
அந்தப் படுபாவி புலிகேசியின் ஆட்கள் ஊர்களையெல்லாம்
கொளுத்துகிறார்களாம். சிற்பிகளையெல்லாம் காலையும் கையையும்
வெட்டுகிறார்களாம். கன்னிப் பெண்களையெல்லாம் கவர்ந்து
சிறைப்படுத்திக் கொண்டு போகிறார்களாம்..." இதைக் கேட்டதும்
கமலி, "ஐயோ! என்று அலறினாள். அலறிக் கொண்டே அசுவபாலரிடம்
விஷயத்தைக் கூறினாள். அவர் கமலியை மனங்கொண்ட வரையில் திட்டி
விட்டு, "ஓடு! ஓடிப் போய்ச் சக்கரவர்த்தியிடம் நடந்ததைச்
சொல்லு!" என்றார். அதன்படியேதான் கமலி சக்கரவர்த்தியிடம் ஓடி
வந்தாள்.
விம்மலுக்கும்
அழுகைக்கும் இடையே தட்டுத் தடுமாறிக் கமலி விஷயம் இன்னதென்று
சொல்லி முடித்தபோது, சக்கரவர்த்தியின் முகபாவம் அடியோடு மாறிப்
போயிருந்தது. கர்வத்துடன் கூடிய புன்னகைக்கு மாறாகச் சொல்ல
முடியாத வேதனை இப்போது அம்முகத்தில் குடிகொண்டிருந்தது.
சத்ருக்னனைப் பார்த்து, "இவள் சொல்வது உண்மையா, சத்ருக்னா!
உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சத்ருக்னன் நடுங்கிய
குரலில், "ஆம், பிரபு! நாகநந்தி போய்ச் சற்று
நேரத்துக்கெல்லாம் ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் வௌிச்
சென்றார்கள். ஆயனர், சிவகாமி மாதிரி தோன்றியது. யார் வௌியே
போனாலும் அதிசயப்பட வேண்டாம் என்று தாங்கள்
ஆக்ஞையிட்டிருந்தபடியால் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்"
என்றான். மகேந்திரர், முதன் மந்திரி முதலியவர்களை நோக்கி,
"சற்று முன்னால் என்னுடைய சாமர்த்தியத்தைப் பற்றி நானே
கர்வப்பட்டுக் கொண்டிருந்தேனல்லவா? கடவுள் கர்வபங்கம் செய்து
விட்டார். சிவகாமியைப் பறிகொடுத்து விட்டு மாமல்லனுடைய
முகத்தில் நான் விழிக்க முடியாது. சேனாதிபதி! உடனே படைகளைத்
திரட்டுங்கள். ஒரு முகூர்த்தப் பொழுதில் நம் படைகள் வடக்குக்
கோட்டை வாசலில் ஆயத்தமாயிருக்க வேண்டும்" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்தேழாம் அத்தியாயம்
வெற்றி வீரர்
சோழ நாட்டைச்
சேர்ந்த திருவெண்காடு என்னும் கிராமம் திமிலோகப்பட்டுக்
கொண்டிருந்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி
நரசிம்மவர்மர் அன்று அந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்யப்
போகிறார்; தம் ஆருயிர்த் தோழரான வீர தளபதி பரஞ்சோதியையும்
அழைத்து வரப்போகிறார் என்னும் செய்தி வந்ததிலிருந்து அந்த
ஊரார் யாரும் பூமியிலேயே நிற்கவில்லை. இரண்டு நாளைக்கு முன்பு
பாண்டிய சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் கொள்ளிடக்
கரையில் நடந்த பெரும் போரைப் பற்றி அந்தக் கிராமவாசிகள்
கேள்விப்பட்டிருந்தார்கள். பாண்டியன் ஜயந்தவர்மன்
தோல்வியடைந்து புறமுதுகிட்டு ஓடியதைப் பற்றியும்
அறிந்திருந்தார்கள். அந்த யுத்தத்தின் காரணமாக, கொள்ளிட
நதியின் தண்ணீர்ப் பிரவாகம் இரத்த வெள்ளமாக மாறி ஓடியதை நேரில்
பார்த்தவர்கள் வந்து அவர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள்.
பாண்டிய சைனியம் பல்லவ சைனியத்தைவிடப் பெரியது என்பதும்,
மாமல்லர், பரஞ்சோதி இவர்களின் வீர சாகஸச் செயல்களினாலேயே
பாண்டிய சைனியம் தோல்வியடைந்து சிதறி ஓடியது என்பதும்
எல்லாரும் அறிந்த விஷயங்களாயின.
அப்பேர்ப்பட்ட
வீராதி வீரர்கள் வருகிறார்கள் என்றால், அந்தக் கிராமவாசிகள்
தலை தெரியாத ஆனந்தத்தில் மூழ்கியிருந்ததில் வியப்பு ஒன்றும்
இல்லையல்லவா? ஏற்கெனவே அந்தக் கிராமவாசிகளுக்கு இன்னொரு வகை
அதிர்ஷ்டம் கைகூடியிருந்தது. பத்துத் தினங்களுக்கு முன்பு
திருநாவுக்கரசர் பெருமான் அவ்வூருக்கு விஜயம் செய்து சைவத்
திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். ஆலயப் பிராகாரங்களில்
அப்பெரியார் தம் திருக்கைகளினால் புல்செதுக்கும் திருப்பணியை
நடத்தியதுடன், மாலை நேரங்களில் ஆலய மண்டபத்தில் தம் தேனிசைப்
பாசுரங்களைச் சீடர்களைக் கொண்டு பாடுவித்து வந்தார்.
அவ்விதம்
சிவானந்தத்திலும் தமிழின்பத்திலும் ஆழ்ந்திருந்தவர்களுக்கு,
சக்கரவர்த்தி திருக்குமாரரும் அவருடைய வீர தளபதியும்
வரப்போகும் செய்தி மேலும் குதூகலத்தை உண்டாக்கிற்று.
திருநாவுக்கரசரைத் தரிசிப்பதற்காகவே மாமல்லரும் பரஞ்சோதியும்
வருவதாக ஒரு வதந்தியும் பரவியிருந்தது. ஆனால், நமசிவாய
வைத்தியர் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் உண்மையில்
அவர்கள் வருகிற காரணம் இன்னதென்று தெரிந்திருந்தது.
பரஞ்சோதயின் அருமைத் தாயார் அந்த வீட்டிலேதான் இருந்தாள்.
பரஞ்சோதிக்கு வாழ்க்கைப்படுவதற்காகக் காத்திருந்த பெண்ணும்
அந்த வீட்டிலேதான் இருந்தாள். அப்படியிருக்கும்போது, தளபதி
பரஞ்சோதியும் அவருடைய தோழரும் திருவெண்காட்டுக்கு வருவதற்கு
வேறு காரணம் எதற்காகத் தேட வேண்டும்? எனவே, அந்தக் கிராமத்தில்
மற்ற எந்த வீட்டையும் விட நமசிவாய வைத்தியரின் வீட்டிலே
குதூகலமும் பரபரப்பும் அதிகமாயிருந்ததென்று சொல்ல
வேண்டியதில்லையல்லவா?
சாதாரணமாய்ச்
சாந்த நிலையில் இருப்பவரான நமசிவாய வைத்தியர் அன்று
வீட்டுக்குள்ளிருந்து வௌியிலும் வௌியிலிருந்து உள்ளேயும் நூறு
தடவை போய் வந்து கொண்டிருந்தார். அவருடைய மனையாள் தன் மகள்
உமையாளை ஆடை ஆபரணங்களால் அலங்கரிப்பதில் அன்று காட்டிய சிரத்தை
அதற்குமுன் எப்போதும் காட்டியதில்லை. உமையாளின் தம்பியும்
தங்கைகளும் அவளைப் பரிகாசம் செய்வதில் மிகவும்
தீவிரமாயிருந்தார்கள். உமையாளின் உள்ளமோ, பெரும் புயல்
அடிக்கும் போது கொந்தளித்து அலை வீசும் கடலை ஒத்திருந்தது.
பரஞ்சோதியின் அன்னை கண்ணீரும் கம்பலையுமாய்த் தன் ஏக புத்திரனை
எதிர்பார்த்த வண்ணமிருந்தாள்.
இங்கு இப்படி
இருக்க, திருவெண்காட்டுக்கு ஒரு யோசனை தூரத்தில் வந்து
கொண்டிருந்த மாமல்லர், பரஞ்சோதி இவர்களுக்குள்ளே மாமல்லரிடமே
உற்சாகம் அதிகம் காணப்பட்டது. பரஞ்சோதியின் முகத்தில் சோர்வு
அதிகமாயிருந்ததுடன் அவருடைய குதிரை அடிக்கடி பின்னால்
தங்கியது. அவரை மாமல்லர் அவ்வப்போது பரிகாசம் செய்து
விரைவுபடுத்தினார். 'இது என்ன தளபதி! உம்முடைய குதிரை ஏன்
இப்படிப் பின்வாங்குகிறது? உம்முடைய அவசரம் அதற்குத்
தெரியவில்லையா, என்ன? குதிரைகளை வேணுமானால் மாற்றிக்
கொள்ளலாமா?' என்றார். உம்முடைய முகம் ஏன் இவ்வளவு
பிரகாசமாயிருக்கிறது? இதென்ன, நீர் உம்முடைய காதலியைக் காணப்
போகிறீரா? அல்லது கொலைக் களத்துக்குப் போகிறீரா? பயப்படாதீர்!
நான் நல்ல வார்த்தை சொல்லி உமையாள் உம்மை அதிகமாகக்
கண்டிக்காமல் பார்த்துக் கொள்கிறேன்' என்று கேலி செய்தார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கடைசியில் பரஞ்சோதியால்
பொறுக்க முடியாமல் போகவே, அவர் கூறியதாவது; "ஐயா என்னுடைய மன
நிலையை அறிந்து கொள்ளாமல் புண்ணில் கோலிடுவதுபோல்
பேசுகிறீர்கள். உண்மையாகவே எனக்கு இங்கு வருவதற்கு விருப்பம்
இல்லை. நீங்கள் வற்புறுத்திய போது இணங்கிவிட்டேன். ஏன்
இணங்கினோம் என்று இப்போது வருத்தமாயிருக்கிறது. உங்களுக்குப்
புண்ணியமாய்ப் போகட்டும், இப்போதாவது நான் திரும்பிப் போவதற்கு
அனுமதி கொடுங்கள். தாங்கள் எனக்காகச் சென்று என் தாயாரைப்
பார்த்து, நான் சௌக்கியமாயிருக்கிறேன்; ஆனால், அவருக்கு நான்
கொடுத்த வாக்கை நிறைவேற்றமுடியவில்லை. ஆகையால், அவரைப் பார்க்க
வெட்கப்பட்டுக் கொண்டு வராமல் நின்றுவிட்டேன் என்று
சொல்லிவிடுங்கள்!"
இவ்விதம்
உணர்ச்சி ததும்பிய குரலில் பரஞ்சோதி கூறியதைக் கேட்டு மாமல்லர்
சிறிது திடுக்கிட்டார். 'தளபதி! உம்முடைய தாயாருக்கு நீர் என்ன
வாக்குறுதி கொடுத்தீர்? அதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை?' என்று
கவலை கொண்ட குரலில் வினவினார். "பிரபு! எதற்காக நான் பிறந்த
ஊரையும் வீட்டையும் விட்டுக் கிளம்பினேன் என்று தங்களுக்குச்
சொன்னேனே, அது ஞாபகமில்லையா? என்னுடைய மாமன் நமசிவாய வைத்தியர்
தம்முடைய மகளை, கல்வி கேள்விகளில் சிறந்த உமையாளை -
நிரட்சரகுட்சியான எனக்குக் கட்டிக் கொடுக்கப் பிரியப்படவில்லை.
அதற்காக, கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகருக்குப் போய் வாகீசப்
பெருமானின் திருமடத்தில் சேர்ந்து படித்துச் சகலகலா வல்லவனாகத்
திரும்பி வரும் எண்ணத்துடன் புறப்பட்டேன்; ஆனால், நடந்தது
என்ன? போனது போலவே நிரட்சரகுட்சியாகத் திரும்பி
வந்திருக்கிறேன். திருநாவுக்கரசர் பெருமானைக் கண்ணாலேகூடப்
பார்க்கவில்லை...." என்று பரஞ்சோதி சொல்லி வந்தபோது,
நரசிம்மவர்மர் கலகலவென்று சிரித்தார். "பல்லவ குமாரா!
தங்களுடைய சிரிப்பு என் உள்ளத்தில் நெருப்பாய் எரிகிறது!
வடக்குப் போர் முனையிலிருந்து சக்கரவர்த்தி என்னைத் தங்களிடம்
அனுப்பியபோது தங்களை எனக்குக் கல்வி கற்பிக்கும்படியாகச்
சொல்லியனுப்பினார்! ஆனால், தாங்கள் எனக்குக் கல்வி
கற்பிக்கவும் இல்லை; நானாக ஏட்டைக் கையில் எடுப்பதற்கும்
விடவில்லை; எப்போதாவது சிறிது நேரம் கிடைத்தால், அந்த
நேரத்தில் ஆயனரின் குமாரியைப் பற்றிப் பேசிப் பொழுது
போக்கிவிட்டீர்கள்! ஆ! இராஜ குலத்தினரைப்போல் சுயநலக்காரர்களை
நான் கண்டதில்லை!' என்று சோகம் ததும்பிய குரலில் பரஞ்சோதி
சொல்ல, அதைக் கேட்ட குமார சக்கரவர்த்தி இன்னும் உரத்த
சத்தத்துடன் சிரித்தார்.
மாமல்லரும்
பரஞ்சோதியும் திருவெண்காட்டை அடைந்த போது கிராமத்தின்
முகப்பில் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்புக் காத்திருந்தது.
அப்போது மாமல்லருக்கு முன்னொரு நாள் மண்டபப்பட்டுக்
கிராமத்தில் நிகழ்ந்த வரவேற்புக் காட்சியும், அன்று ஆயனரும்
சிவகாமியும் முக்கியமாக வரவேற்புக்குரியவர்களாக இருந்ததும்,
தம்மை இன்னாரென்று தெரிவித்துக்கொள்ளாமல் அவர்களைப்
பின்தொடர்ந்து சென்றதும் ஞாபகம் வந்தன. ஆஹா! அதற்குப் பிறகு
எத்தனை எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன! இதற்குள்ளாகக்
கண்ணபிரான் மண்டபப்பட்டுக் கிராமத்துக்குச் சென்று,
கொள்ளிடக்கரைச் சண்டையைப் பற்றியும் பாண்டியன் புறமுதுகிட்டு
ஓடியதைப் பற்றியும் சொல்லியிருப்பான். சிவகாமி எவ்வளவு
மகிழ்ச்சியடைந்திருப்பாள்! எவ்வளவு ஆர்வத்துடன் தம்முடைய
வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்? இந்தத் தடவை அவளும்
மற்றக் கிராமவாசிகளுடனே வந்து தம்மை வரவேற்பாளா? மாமல்லர்
இத்தகைய மனோராஜ்ய பகற்கனவுகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில்,
"குமார சக்கரவர்த்தி நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" "கங்க
மன்னனையும் மதுரைப் பாண்டியனையும் போரில் புறங் கண்ட வீர
மாமல்லர் வாழ்க!" "வீராதி வீரர் தளபதி பரஞ்சோதி வாழ்க!" என்பது
போன்ற ஆகாசமளாவிய கோஷங்கள் அவருடைய பகற் கனவுகளைக் கலைத்துத்
திருவெண்காட்டுக் கிராமத்துக்கு அவர்கள் வந்து விட்டதைத்
தெரியப்படுத்தின.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்தெட்டாம் அத்தியாயம்
பட்டிக்காட்டுப் பெண்
வரவேற்பு
வைபவங்கள் எல்லாம் முடிந்த பிறகு நமசிவாய வைத்தியரின்
வீட்டுக்குள்ளே மாமல்லரும் பரஞ்சோதியும் பிரவேசித்தார்கள்.
பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி திடீரென்று தங்கள்
சின்னஞ்சிறு இல்லத்துக்குள் பிரவேசிக்கவே, அந்த
வீட்டாரெல்லோரும் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து
நின்றார்கள். தளபதிக்குரிய வீர உடை தரித்திருந்த காரணத்தினால்
பரஞ்சோதியை நிமிர்ந்து பார்த்துப் பேசக்கூட அவர்களுக்குக்
கூச்சமாயிருந்தது. பரஞ்சோதிக்கோ அதைவிடக் கூச்சமாயிருந்தது.
கூடத்தில்
போட்டிருந்த ஆசனம் ஒன்றில் யாரும் சொல்லாமல் தாமே மாமல்லர்
உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். நிலைமையை
ஒருவாறு அறிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் ததும்ப நின்ற
மூதாட்டிதான் பரஞ்சோதியின் தாயார் என்று ஊகித்துத் தெரிந்து
கொண்டு, 'எங்கள் வீர தளபதியைப் பெற்ற பாக்கியசாலியான தாயைத்
தரிசிக்க வேண்டும் என்று எனக்கு எவ்வளவோ ஆவலாயிருந்தது; அந்த
பாக்கியம் இன்று கிட்டிற்று!" என்று சொல்லிவிட்டு பரஞ்சோதியைப்
பார்த்து, "தளபதி! இது என்ன? அன்னைக்கு நமஸ்காரம் செய்யும்.
தொண்டை மண்டலத்துக்குப் போனதனால் மரியாதை கூட மறந்து
போய்விட்டதென்றல்லவா நாளைக்கு எல்லாரும் குறை சொல்லுவார்கள்?"
என்றார்.
உடனே பரஞ்சோதி
முன்னால் சென்று அன்னையின் பாதங்களில் நமஸ்காரம் செய்தார்.
நமஸ்கரித்த குமாரனை வாரி எடுத்து உச்சி முகர வேண்டுமென்ற ஆசை
அந்த அம்மாளுக்கு எவ்வளவோ இருந்தது. ஆனால் குமார சக்கரவர்த்தி
அங்கு வீற்றிருந்ததும், தன் குமாரன் போர்க்கோல உடை
தரித்திருந்ததும் அவளுக்குத் தயக்கத்தை உண்டு பண்ணிற்று.
பிறகு, நமசிவாய வைத்தியருக்கும் பரஞ்சோதி நமஸ்காரம்
செய்துவிட்டுத் திரும்பி வந்து மாமல்லரின் பக்கத்திலே அமர்ந்து
உச்சி மோட்டைப் பார்த்தார். நமசிவாய வைத்தியர், மாமல்லரை
நோக்கி, "இந்தக் குடிசைக்குத் தாங்கள் வந்தது எங்களுடைய
பாக்கியம்!" என்றார்.
மாமல்லர் அவரை
நோக்கி, "ஓகோ! நமசிவாய வைத்தியர் என்பது தாங்கள் தானே?
தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். தங்கள்
குமாரி என் சிநேகிதரை ரொம்பவும் பயப்படுத்தி வைத்திருக்கிறாள்
போலிருக்கிறது. அதோ அந்தக் கதவண்டை நிற்பவள்தான் தங்கள்
புதல்வி? பார்த்தால் வெகு சாதுவாகத் தோன்றுகிறாள். ஆனால் பல்லவ
சைனியத்தின் தலை சிறந்த தளபதியை, - வாதாபியின் யானைப் படையைச்
சிதற அடித்த தீரரை, - கங்க நாட்டானையும், பாண்டியராஜனையும்
புறமுதுகிடச் செய்த மகாவீரரை; ரொம்பவும்
பயப்படுத்தியிருக்கிறாள். இனிமேலாவது அப்படியெல்லாம் செய்ய
வேண்டாமென்று தங்கள் குமாரியிடம் சொல்லுங்கள். பரஞ்சோதியை
இங்கே அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது
தெரியுமா? கையைப் பிடித்துப் பலாத்காரமாய் அழைத்து
வரவேண்டியிருந்தது. அம்மா! தாங்களே கேளுங்கள், தங்கள் புதல்வர்
இங்கே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரா, இல்லையா என்று!
கேளுங்கள், அம்மா!" என்று மாமல்லர் கூறியபோது பரஞ்சோதியின்
அன்னை மகனை அன்பும் கர்வமும் ததும்பிய கண்களால் பார்த்து,
"குழந்தாய்! மாமல்லர் பிரபு சொல்வது உண்மையா? எங்களையெல்லாம்
வந்து பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா?" என்றாள்.
"ஆம், அம்மா!
பல்லவ குமாரர் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லுவதில்லை.
ஆனால் ஏன் எனக்கு இங்கு வந்து உங்களையெல்லாம் பார்க்கப்
பிடிக்கவில்லையென்று அவரையே கேளுங்கள்!" என்றார் பரஞ்சோதி.
அன்னை கேட்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல் மாமல்லரே
சொன்னார்; "தங்கள் அருமை மகன் காஞ்சிக்குப் போய்க் கல்வி
கற்றுப் புலவராகத் திரும்பி வருகிறேன் என்று தங்களிடம்
வாக்குறுதி, கூறிவிட்டுப் புறப்பட்டாராம். அந்த வாக்கை
நிறைவேற்ற முடியவில்லையாம். போனபோது எப்படிப் போனாரோ அப்படியே
திரும்பி வந்திருக்கிறார். அதனால் உங்களையெல்லாம் நிமிர்ந்து
பார்க்கவே வெட்கமாயிருக்கிறதாம் எப்படியிருக்கிறது கதை?"
இவ்விதம்
மாமல்லர் சொன்னதும் பரஞ்சோதியின் தாயார் மகனுக்கு அருகில்
வந்து உட்கார்ந்து அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே,
"அப்பா! குழந்தாய்; நீ படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன?
ஏதோ சிவபெருமான் அருளால் நீ உயிரோடு நல்லபடியாய்த் திரும்பி
வந்தாயே அதுவே எனக்குப் போதும். அந்நாளில் உனக்குப் படிப்புச்
சொல்லிக் கொடுக்க வந்த அண்ணாவிமார்களை நீ அடித்து விரட்டினாயே,
அதற்காகவெல்லாம் நான் உன்னை எப்போதாவது கோபித்ததுண்டா?"
என்றாள். இதைக் கேட்ட மாமல்லர் சிரித்துக் கொண்டே சொன்னதாவது;
"என்ன? என்ன? உபாத்தியாயர்களை அடித்து விரட்டினாரா உங்கள்
மகன்! நல்ல வேளை! நான் பிழைத்தேன்! இந்தச் சாதுப் பிள்ளைதான்
என்னைத் தனக்குப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்படி தொந்தரவு
செய்தார். அவர் சொல்வது உண்மை என்று எண்ணிக் கொண்டு நான் பாடம்
கற்பிக்க ஆரம்பித்திருந்தேனானால் என்னையும் அப்படித்தானே
அடித்துத் துரத்தியிருப்பார்? பிழைத்தேன்!" என்று சொல்லி
மீண்டும் சிரித்தார் நரசிம்மவர்மர்.
பரஞ்சோதி அவரைப்
பரிதாப நோக்குடன் பார்த்துக் கூறினார்; "பிரபு! இது ஏதோ
சிரிப்பதற்குரிய விஷயமாக நினைக்கிறீர்கள். உண்மையில்
அப்படியல்ல; காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆகையால், என்
தாயார் நான் கல்வி கல்லாமல் திரும்பி வந்திருப்பதைப்
பொறுக்கிறாள். ஆனால் என் மாமாவைக் கேளுங்கள்; படிப்பில்லாத
இந்த மூடனுக்கு அவர் தமது மகளைக் கட்டிக் கொடுப்பாரா என்று
கேளுங்கள்!...." நமசிவாய வைத்தியரும் அந்தப் பரிகாசப் பேச்சில்
கலந்து கொள்ள எண்ணி "என்னைக் கேட்பானேன்? கல்யாணம் பண்ணிக்
கொள்ளப் போகிற பெண்ணையே கேளுங்களேன்? அவளுக்குச்
சம்மதமாயிருந்தால் எனக்கும் சம்மதந்தான்!" என்றார். அச்சமயம்
ஏதோ கதவு திறந்த சத்தம் கேட்கவே எல்லாரும் அந்தப் பக்கம்
நோக்கினார்கள். உமையாள் கதவைத் திறந்து கொண்டு உள் அறைக்குப்
போய்க் கொண்டிருந்தாள். "எல்லாரும் சேர்ந்து பரிகாசம்
செய்தால், குழந்தை என்ன செய்வாள்?" என்று உமையாளின் தாயார்
முணுமுணுத்தாள்.
பிறகு நமசிவாய
வைத்தியர், சக்கரவர்த்தி குமாரரைப் பார்த்து, "பரஞ்சோதியின்
பராக்கிரமச் செயல்களைக் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டுக்
கொண்டுதானிருக்கிறோம். அவனால் இந்தச் சோழ நாடே பெருமை
அடைந்திருக்கிறது. மறுபடியும் இந்தப் பக்கம் எப்போது வருவானோ
என்னவோ என்று எல்லாரும் ஏக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். ஏதோ
எங்கள் அதிர்ஷ்டம் இவ்வளவு சீக்கிரத்தில் அவன் இங்கு
வரலாயிற்று. அவனோடு தாங்களும் விஜயம் செய்தது, எங்கள் பூர்வ
ஜன்ம தவத்தின் பலன் என்றுதான் சொல்ல வேண்டும். புவிக்கரசராகிய
தாங்கள் வந்திருக்கும் சமயத்தில் நாவுக்கரசர் பெருமானும்
இவ்வூருக்கு வந்திருக்கிறார். இப்பேர்ப்பட்ட நல்ல சந்தர்ப்பம்
மறுபடி எங்கே கிடைக்கப் போகிறது? இப்போதே ஒருநாள் பார்த்துச்
சுப முகூர்த்தத்தில் விவாகத்தை நடத்தி விடுவோம். உமையாளையும்
உங்களுடனேயே அழைத்துப் போய் விடுங்கள்!" என்று நமசிவாய
வைத்தியர் கூறி நிறுத்தினார்.
அப்போது
மாமல்லர், "பார்த்தீரல்லவா தளபதி! எப்படியும் உமக்குக் கல்வி
கற்பித்துப் புலவராக்கி விடுவது என்று வைத்தியர்
தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. வேறு எந்த உபாயமும்
பயன்படாமற் போகவே, அவருடைய மகளைக் கொண்டே உமக்குக் கல்வி
போதிக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆகா! கடைசியாக, நீர்
அடித்துத் துரத்த முடியாத உபாத்தியாயர் ஒருவர் உமக்கு ஏற்படப்
போகிறாரல்லவா?" என்றதும் ஸ்திரீகள் உள்பட எல்லாரும்
'கொல்'லென்று சிரித்தார்கள். பிறகு, குமார சக்கரவர்த்தி
நமசிவாய வைத்தியரைப் பார்த்து, "ஐயா! அதெல்லாம் முடியாது;
பல்லவ சாம்ராஜ்யத்தின் வீர தளபதிக்குத் தலைநகரத்திலே
சக்கரவர்த்தியின் முன்னிலையிலேதான் கல்யாணம் நடைபெற வேண்டும்;
இது என் தந்தையின் ஆக்ஞை. காஞ்சிக்கு நாங்கள் போனவுடனே ஆள்
விடுகிறோம், எல்லாரும் வந்து சேருங்ள். இன்னும் ஒரு விஷயமும்
சொல்லி வைக்கிறேன். அப்படி ஒருவேளை உங்களுடைய குமாரி கல்வி
கேள்விகளில் வல்ல புலவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று
பிடிவாதம் பிடித்தால் அதற்கும் வழி இருக்கிறது. காஞ்சியில்
எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் இருக்கிறார்; வயது
தொண்ணூறுதான் ஆகிறது. தாடி ஒரு முழ நீளத்துக்குக் குறையாது.
அவர் அறியாத கலையோ அவர் படியாத ஏடோ ஒன்றும் கிடையாது. அவரை
வேண்டுமானாலும் உங்கள் புலமை மிகுந்த மகளைக் கல்யாணம் செய்து
கொள்ளச் செய்கிறேன்!" என்று பலத்த சிரிப்புக்களிடையே கூறி
விட்டு, "தளபதி! வாரும், போகலாம்! திருநாவுக்கரசரைத் தரிசித்து
விட்டு வரலாம்!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.
மாமல்லரும்
பரஞ்சோதியும் நாவுக்கரசர் பெருமானை அவர் தங்கியிருந்த
திருமடத்தில் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவுடன்,
பரஞ்சோதியின் தாயார் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, "இங்கே
வா, தம்பி! ஒரு சமாசாரம்!" என்று உள் அறைக்கு அவரை அழைத்துக்
கொண்டு போனாள். அங்கே தரையில் படுத்துத் தேம்பிக் கொண்டிருந்த
உமையாளைக் காட்டி, "பார்த்தாயா உன்னுடைய பரிகாசப் பேச்சு
இந்தப் பெண்ணை என்ன பாடுபடுத்தியிருக்கிறது! இப்படி செய்யலாமா,
அப்பா!" என்றாள். பரஞ்சோதி மனம் இளகியவராய், "ஐயோ! இது என்ன
பழி; நான் ஒன்றும் பரிகாசம் செய்யவில்லையே?" என்றார்.
"செய்ததையும் செய்துவிட்டு இல்லை என்று சாதியாதே! இந்தக்
குழந்தை என்ன சொல்லுகிறாள் தெரியுமா? நீ காஞ்சிப்
பட்டணத்துக்குப் போய் அரண்மனை உத்தியோகமும் சக்கரவர்த்தியின்
சிநேகிதமும் சம்பாதித்துக் கொண்டாயாம். இந்தப் பட்டிக்காட்டுப்
பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டம் இல்லையாம்.
அதனாலேதான் இப்படியெல்லாம் பேசுகிறாயாம்!" "ஐயோ! அப்படி இல்லவே
இல்லை, அம்மா!" "இல்லையென்றால் நீயே இந்தப் பெண்ணுக்குச்
சமாதானம் சொல்லித் தேற்று. நான் எவ்வளவோ சொல்லியும் இவள்
கேட்கவில்லை!" என்று கூறிவிட்டு, பரஞ்சோதியின் தாயார்
வௌியேறினாள்.
அன்னையின்
கட்டளையைச் சிரமேற்கொண்டு பரஞ்சோதி உமையாளைத் தேற்றத்
தொடங்கினார். ஆனால் உமையாள் அவ்வளவு சீக்கிரம் தேறுகிறதாகக்
காணவில்லை. வெகு நேரம் பரஞ்சோதி தன்னைத் தேற்ற வேண்டும் என்று
அவள் ஆசைப்பட்டதாகத் தோன்றியது. தேறுவது போல் ஒருகணம்
இருப்பாள், மறு கணத்தில் மறுபடியும் விம்மவும் விசிக்கவும்
தொடங்கி விடுவாள். உமையாள் பட்டணத்து நாகரிகம் அறியாத
பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனபோதிலும் தன்னுடைய மனோரதத்தை
நிறைவேற்றிக் கொள்வதற்கு உபாயம் அவளுக்குத் தெரிந்திருந்தது.
பரஞ்சோதி சீக்கிரம் வௌியில் போவதற்கு முடியாத வண்ணம் வெகுநேரம்
தன்னைத் தேற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியத்தை அவள் உண்டு
பண்ணிக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு நீளமான
நாடகத்துக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா? அவ்விதம் இந்தப்
பொய்ச் சோக நாடகத்துக்கும் முடிவான மங்களம் பாட வேண்டிய சமயம்
வந்த போது உமையாள் பரஞ்சோதியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்;
தன்னையே அவர் மணந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான். அவ்வாறு
சத்தியம் செய்து கொடுத்த பின் பரஞ்சோதி கூறினார்; 'ஆனால், உமா!
ஒன்று சொல்கிறேன், நம் கல்யாணம் உன் தந்தை சொன்னது போல்
அவ்வளவு சீக்கிரமாக நடைபெறாது. வெகு காலம் நீ காத்திருக்க
வேண்டியிருக்கலாம். என் சிநேகிதர் மாமல்லருக்கு எப்போது
திருமணம் நடக்கிறதோ, அப்போதுதான் நமது கலியாணமும் நடைபெறும்.
அவருக்கு முன்னால் நான் இல்லறத்தை மேற்கொள்ள மாட்டேன்!"
"தங்களுக்காக அவசியமானால் யுக யுகமாக வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன்!" என்றாள் உமா.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இருபத்தொன்பதாம் அத்தியாயம்
காற்றும் நின்றது!
மறுநாள்
அதிகாலையில் நமசிவாய வைத்தியரிடமும் அவருடைய
குடும்பத்தாரிடமும் விடைபெற்றுக் கொண்டு மாமல்லரும்
பரஞ்சோதியும் புறப்பட்டார்கள். பாண்டிய சைனியத்தை
முறியடித்துச் சின்னா பின்னமாக்கித் துரத்தி அடித்த வீரபல்லவ
சைனியம் கொள்ளிட நதியைக் கடந்து அக்கரையில் ஆயத்தமாயிருந்தது.
அதிர்ஷ்டவசமாக நதியில் தண்ணீர் குறைவாயிருந்தபடியால் நதியைக்
கடப்பது எளிதாயிருந்தது. மாமல்லரும் பரஞ்சோதியும்
கொள்ளிடத்தைக் கடந்ததும் குதிரைப் படையை மட்டும் தங்களைத்
தொடர்ந்து வரும்படியும், காலாட்படையைப் பின்னால் சாவகாசமாக
வரும்படியும் கட்டளையிட்டு விட்டு மேலே சென்றார்கள். சூரியன்
அஸ்தமிக்கும் சமயத்தில் தென் பெண்ணைக் கரையை அடைந்தார்கள்.
அன்றைய தினம் வழிப் பிரயாணத்தின் போது மாமல்லர் அவ்வளவு
குதூகலமாயில்லை. அவர் உள்ளம் கவலை கொண்ட சிந்தனையில்
ஆழ்ந்திருந்ததை அவரது முகக்குறி காட்டியது.
கவலைக்கும்
சிந்தனைக்கும் தக்க காரணம் இருந்தது. முதல் நாள் மாலை மாமல்லர்
திருநாவுக்கரசரைத் தரிசிக்கச் சென்றிருந்த போது அந்தப்
பெருந்தகையார் எல்லையற்ற அன்புடன் மாமல்லருக்கு ஆசி கூறினார்.
பாண்டியனைப் புறங்கண்டது பற்றி வாழ்த்தினார். வாதாபிச்
சக்கரவர்த்தி சண்டையை நிறுத்திச் சமாதானத்தைக் கோரியது
பற்றியும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மாமல்லரின்
வேண்டுகோளின்படி காஞ்சிக்குக் கூடிய சீக்கிரத்தில் திரும்பி
வருவதாகவும் வாக்களித்தார். அப்போது காஞ்சி மடத்தில் கடைசியாக
மாமல்லரைப் பார்த்த சம்பவம் நாவுக்கரசருக்கு நினைவு வந்தது.
"பல்லவ குமாரா! ஆயனர் சுகமாயிருக்கிறாரா? அவருடைய மகள் சிவகாமி
சௌக்கியமா? அன்றைக்கு மடத்தில், 'முன்னம் அவனுடைய நாமம்
கேட்டாள்' என்ற பாடலுக்கு அந்தப் பெண் அபிநயம் பிடித்த காட்சி
அப்படியே என் மனக் கண்முன்னால் நிற்கிறது. முடிவில் உணர்ச்சி
மிகுதியால் மூர்ச்சித்தல்லவா விழுந்து விட்டாள்? தந்தையும்
மகளும் சௌக்கியமாயிருக்கிறார்களா?"
இவ்விதம்
சுவாமிகள் கேட்டுக் கொண்டிருந்தபோது மாமல்லருக்கும் ஏதேதோ பழைய
ஞாபகங்கள் வந்தன. சிறிது தயக்கத்துடன், "காஞ்சி முற்றுகைக்கு
முன்னால் அவர்களை நான் பார்த்ததுதான். வராக நதிக்கரையில்
மண்டபப்பட்டுக் கிராமத்தில் இருக்கிறார்கள். போகும்போது
அவர்களைப் பார்க்க எண்ணியிருக்கிறேன்" என்றார். அதைக் கேட்ட
நாவுக்கரசர், "அப்படியா? மண்டபப்பட்டு வெகு அழகான கிராமம்.
அவர்களைப் பார்த்தால் நான் ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்ல
வேணும். அந்தப் பெண் சிவகாமியை நினைத்தால் என் மனம் ஏனோ
உருகுகிறது. பல்லவ குமாரா! ஆயனரிடம் அப்போதே சொன்னேன்.
சிவகாமியை அன்றைக்குப் பார்த்தபோது, எதனாலோ 'இந்தப் பெண்ணுக்கு
ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே!' என்ற கவலை எனக்கு
உண்டாயிற்று. ஏகாம்பரநாதர் கருணை புரிய வேண்டும்" என்றார்.
மேற்கூறிய
மொழிகள் மாமல்லருடைய உள்ளத்தில் பதிந்து அவருடைய
உற்சாகத்தையெல்லாம் போக்கடித்து விட்டன. "சிவகாமிக்கு ஒன்றும்
நேராமலிருக்க வேண்டுமே" என்பதை ஒரு மந்திரம் போல் அவருடைய மனம்
ஜபித்துக் கொண்டிருந்தது. அந்த நிமிஷமே சிவகாமியைப் பார்க்க
வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை அவருடைய இருதயத்தின்
அந்தரங்கத்திலிருந்து பொங்கி எழுந்து அவுடைய உடம்பின் ஒவ்வோர்
அணுத்துவாரம் வழியாகவும் வௌியே வியாபித்தது. அவருடன் கிளம்பிய
குதிரைப்படை வெகுதூரம் பின்தங்கும்படியாகத் தம் குதிரையை அவர்
எவ்வளவோ வேகமாகச் செலுத்திக் கொண்டு போனபோதிலும் அந்த வேகங்
கூட அவருக்குப் போதவில்லை. "பிரபு! குதிரையைக் கொன்று விடுவதாக
உத்தேசமா?" என்று பல தடவை பரஞ்சோதி எச்சரிக்கை செய்து அவரை
நிறுத்த வேண்டியதாயிருந்தது.
இரண்டுநாள்
முன்னதாகவே மண்டபப்பட்டுக்கு அவர் அனுப்பியிருந்த கண்ணபிரான்
எதிரே வந்து ஏன் செய்தி சொல்லக் கூடாது என்று அடிக்கடி
எண்ணமிட்டார். இந்த எண்ணம் அவர் தென் பெண்ணையைத் தாண்டிச்
சிறிது தூரம் போனதும் நிறைவேறியது. கண்ணபிரான் ரதத்தை வேகமாக
ஓட்டிக் கொண்டு எதிரே வந்தான். ஒரு கணம் ரதத்தில் வேறு யாராவது
இருப்பார்களோ என்று ஆவலுடன் மாமல்லர் பார்த்தார். உடனே,
அவ்விதம் எதிர்பார்ப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லையென்று தாமே
சமாதானம் செய்து கொண்டார்.
கண்ணபிரான்
கொண்டு வந்த செய்தி மாமல்லருக்கு முதலில் ஏமாற்றத்தையளித்தது.
பிறகு, அதுவே ஓரளவு ஆறுதலையும் மனச் சாந்தியையும் அளித்தது.
அந்தச் செய்தியானது, மகேந்திர பல்லவர் இரண்டு வாரத்துக்கு
முன்பே தூதர்களை அனுப்பி ஆயனரையும் சிவகாமியையும் காஞ்சிக்கு
வரவழைத்துக் கொண்டார் என்பதுதான். இதனால் தாம் போகிற வழியில்
சிவகாமியைப் பார்க்க முடியாமலிருப்பது உண்மையே. அதனால் என்ன?
காஞ்சியில் அவர்கள் பத்திரமாயிருப்பார்கள் அல்லவா?
யுத்தம்
முடிந்ததும் முதல் காரியமாக மகேந்திர பல்லவர் ஆயனரையும்
சிவகாமியையும் நினைவு கூர்ந்து அவர்களைக் காஞ்சிக்குத்
தருவித்துக் கொண்டது மாமல்லருக்கு மிக்க திருப்தியையளித்தது.
இதிலிருந்து பல ஆகாசக் கோட்டைகளைக் கட்டத் தொடங்கினார்.
எதற்காக அவர்களை அவ்வளவு அவசரமாக மகேந்திர பல்லவர் காஞ்சிக்கு
வருவித்துக் கொண்டார்? எதற்காகத் தம்மையும் பாண்டிய
சைனியத்தைத் தொடர்ந்து போகாமல் திரும்பி வரும்படி
கட்டளையிட்டிருக்கிறார்? ஒருவேளை தமது மனோரதத்தை அறிந்து
விரைவிலேயே விவாகத்தை நிறைவேற்றி விடலாம் என்ற
எண்ணமாயிருக்குமோ? இத்தகைய பற்பல மனோராஜ்யங்களிலும், அவற்றைக்
குறித்துத் தளபதி பரஞ்சோதியிடம் பேசுவதிலுமாக மாமல்லருக்கு
அன்றிரவு நேரம் வராக நதிக்கரையில் சென்றது. இதற்குள் பின்
தங்கிய குதிரைப் படையும் வந்து சேர்ந்தது. மறுநாள் அதிகாலையில்
எல்லோருமாகக் காஞ்சியை நோக்கிக் கிளம்பினார்கள். அன்றிரவே
காஞ்சியை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்தினால் எல்லோருக்குமே
பரபரப்பு அதிகமாயிருந்தது.
வராக
நதியிலிருந்து ஒரு காத தூரம் போனவுடன், எதிரே இரண்டு குதிரை
வீரர்கள் வருவதைப் பார்த்ததும் எல்லாருடைய பரபரப்பும் உச்ச
நிலையையடைந்தது. வருகிறவர்கள் காஞ்சியின் தூதர்களாகத்தான்
இருக்கவேண்டும்; என்ன செய்தி கொண்டு வருகிறார்கள்? அருகில்
நெருங்கியதும் வந்தவர்கள் குதிரை மீதிருந்து குதித்திறங்கி
மாமல்லருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஒருவன் மாட்டுக்
கொம்பில் வைத்துப் பத்திரமாய்க் கொண்டு வந்திருந்த ஓலையைப்
"பிரபு! சக்கரவர்த்தியின் ஓலை!" என்று கூறிய வண்ணம்
மாமல்லரிடம் கொடுத்தான். இன்னொருவன் தான் கொண்டு வந்திருந்த
மற்றோர் ஓலையைப் பரஞ்சோதியிடம் கொடுத்தான். இருவரும் உடனே
ஓலைகளைப் படிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஏறியிருந்த
குதிரைகள் நின்றன. ஓலைகளைக் கொண்டு வந்திருந்த தூதர்கள்
நின்றார்கள். மாமல்லரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நின்றார்கள்.
அவர்களுக்குக் கொஞ்ச தூரத்துக்குப் பின்னால் பெரும் புயலைப்
போலப் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு வந்த பதினாயிரம்
குதிரைப்படை வீரர்களும் நின்றார்கள். சற்று நேரம் காற்றுக்கூட
வீசாமல் நின்றது. மரக்கிளைகளும் இலைகளும் அசையாமல் நின்றன.
மகேந்திர
பல்லவரின் ஓலையின் முதல் சில வரிகளைப் படித்ததும்
மாமல்லருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஓலையை முன்னும் பின்னும்
புரட்டி அந்தரங்க அடையாளாம் சரியாயிருக்கிறதா என்று
பார்த்தார். தூதனையும் உற்றுப் பார்த்தார், சந்தேகமில்லை;
உண்மையாகவே தந்தை எழுதிய ஓலைதான். உடம்பெல்லாம் படபடக்க,
புருவங்கள் நெறிந்தேற, முகத்தில் முத்து முத்தாக வியர்வை
துளிக்க, கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருகி அடிக்கடி எழுத்தை
மறைக்க, ஒருவாறு ஓலையை மாமல்லர் படித்து முடித்தார்; ஓலையில்
எழுதியிருந்ததாவது. "அருமைப் புதல்வன் வீர மாமல்லனுக்கு,
கர்வபங்கமடைந்த தந்தை மகேந்திரவர்மன் கண்ணில் கண்ணீருடனும்
மனத்தில் துயரத்துடனும் எழுதிக் கொண்டது. "குழந்தாய்! என்னுடைய
சாணக்கிய தந்திரமெல்லாம் கடைசியில் பயனற்றுப் போய் விட்டன.
நான் ஏமாந்து விட்டேன்; உன்னுடைய நேர்மையான யோசனையைக்
கேட்காமல் போனதற்காக அளவற்ற துயரமடைந்திருக்கிறேன். மகனே!
அந்தப் பாதகப் புலிகேசி என்னை வஞ்சித்துவிட்டான். இரண்டு வாரம்
காஞ்சி அரண்மனையில் விருந்துண்டு நட்புரிமை கொண்டாடிச்
சல்லாபம் செய்து விட்டுப் போனவன், மகத்தான துரோகம் செய்து
விட்டான். தொண்டை மண்டலத்துக் கிராமங்களையும், பட்டணங்களையும்
கொளுத்தவும், சிற்பங்களையெல்லாம் உடைக்கவும், குடிகளை
இம்சிக்கவும் அந்த மூர்க்க ராட்சதன் கட்டளையிட்டிருக்கிறானாம்.
ஐயோ! குமாரா! எப்படி உன்னிடம் சொல்வேன்? பல்லவ ராஜ்யத்தின்
சிறந்த கலைச் செல்வம் பறிபோய் விட்டதோ என்றும் ஐயுறுகிறேன்.
"மாமல்லா! என்னை
மன்னித்துவிடு! இதோ என்னுடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தம்
செய்து கொள்ளப் புறப்படுகிறேன். மூர்க்க சளுக்க வீரர்களின்
கொடுமைகளிலிருந்து நமது குடிகளைக் காப்பாற்றப் புறப்படுகிறேன்.
கோட்டையிலுள்ள சைனியங்களை அழைத்துக்கொண்டு கிளம்புகிறேன்.
சேனாபதி கலிப்பகையும் என்னுடன் வருகிறார். "குமாரா! காஞ்சி
சுந்தரி பாதுகாப்பாரின்றி அனாதையாக இருக்கிறாள். நீயும் உன்
தோழன் பரஞ்சோதியுந்தான் அவளைக் காப்பாற்ற வேண்டும். காஞ்சிக்
கோட்டைக்கு நான் திரும்பி வருவேனா என்பது சந்தேகம். உன்னை
உயிரோடு பார்ப்பேன் என்பதும் நிச்சயமில்லை. போர்க்களத்தில்
எனக்கு வீர மரணம் கிடைத்தால், அதைக் காட்டிலும் நான் பெறக்
கூடிய பேறு இனிமேல் வேறு ஒன்றும் இல்லை." "மகனே! நான் செய்த
துரோகத்தை மன்னித்து, மறந்து விடு! என்னையும் அடியோடு மறந்து
விடு! ஆனால் அறுநூறு ஆண்டுகளாக வாழையடி வாழையாய் வந்த பல்லவ
வம்சத்துக்கு இனிமேல் உன்னைத் தவிர வேறு கதியில்லையென்பதை
மட்டும் மறந்து விடாதே!"
மாமல்லர் மேற்படி
ஓலையைப் படித்து முடிப்பதற்கு வெகு நேரத்துக்கு முன்னாலேயே
தளபதி பரஞ்சோதி தமக்கு வந்த ஓலையைப் படித்து விட்டார். அது
மாமல்லருக்கு வந்த ஓலையைப் போலன்றி மிகவும்
சுருக்கமாயிருந்தது. "அருமைப் பரஞ்சோதிக்கு! "நீ என்னைப் பல
தடவை 'நீங்கள் வாழ்க்கையில் தவறே செய்தது கிடையாதா?' என்று
கேட்டதுண்டு. நானும் அகம்பாவத்துடன் 'கிடையாது' என்று சொல்லி
வந்தேன். இப்போது என் வாழ்க்கையில் மகா பயங்கரமான தவறைச்
செய்து விட்டேன். இராஜ தந்திரத்தினால் சத்துருவை நண்பனாகச்
செய்து கொள்ளப் பார்த்தேன். நேர்மாறான பலன் கிடைத்தது. அந்தத்
தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக இதோ போர்க்களத்துக்குப்
புறப்படுகிறேன். "இச்சமயம் என் பக்கத்தில் நீ இல்லையே என்று
வருத்தமாயிருக்கிறது. ஆனாலும் மாமல்லன் அருகில் இச்சமயம் நீ
இருப்பதுதான் அதிக அவசியமானது. "நான் பல தடவையும் உன்னிடம்
சொல்லியிருப்பதை மறந்து விடாதே. பல்லவ வம்சம் சந்ததியின்றி
நசித்துப் போகக் கூடாது; மாமல்லனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்."
மாமல்லர் ஓலையை
இரண்டு மூன்று தடவை படித்த பிறகு பரஞ்சோதியிடம் ஏதோ சொல்ல
முயன்றார். ஆனால் வார்த்தைகள் வரவில்லை; எனவே ஓலையைச்
சிநேகிதரின் கையில் கொடுத்தார். பரஞ்சோதி அதை விரைவிலேயே
படித்து முடித்துவிட்டு, "ஐயா! நான் குதிரைப் படையுடன்
முன்னதாகப் போகிறேன். தாங்கள் இங்கேயே தங்கிப் பின்னால் வரும்
காலாட் படையையும் அழைத்துக் கொண்டு வந்து சேருங்கள்!" என்றார்.
"நல்ல காரியம் தளபதி! என் உடம்பு இங்கே இருக்கிறதே தவிர என்
உயிர் ஏற்கெனவே என் தந்தைக்கருகில் போய் விட்டது. இனிமேல்
வழியில் தங்குவது என்பது கிடையாது. காலாட்படை வருகிறபடி
வரட்டும். குதிரைப் படையுடன் நாம் முன்னதாகப் போக
வேண்டியதுதான்" என்றார் மாமல்லர். சற்று நேரத்துக்கெல்லாம்
அந்தப் பிரதேசமானது நாலு கால் பாய்ச்சலில் சென்ற ஆயிரக்கணக்கான
குதிரைகளின் காலடியினால் அதிர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே
புழுதிப் படலமாயிற்று.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பதாம் அத்தியாயம்
"சிவகாமி எங்கே?"
ஆயனர் தமது பழைய
சிற்ப வீட்டை அடைந்ததிலிருந்து நரக வேதனை அனுபவித்துக்
கொண்டிருந்தார். மலையிலிருந்து விழுந்ததினால் முறிந்து
போயிருந்த அவருடைய வலது கால் சொல்ல முடியாத வலியையும்
வேதனையையும் அவருக்குத் தந்து கொண்டிருந்தது. சிவகாமியை
இழந்ததினால் அவருடைய உள்ளம் அளவில்லாத துன்பத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தது. மண்டபப்பட்டிலிருந்து ஆயனரும் சிவகாமியும்
சக்கரவர்த்தி அனுப்பிய பல்லக்கில் அவசரமாகக் கிளம்பியபோது
ஆயனரின் சகோதரியைப் பின்னால் சாவகாசமாக வண்டியில் வந்து
சேரும்படி சொல்லியிருந்தார்கள். அதன்படியே அந்த அம்மாள்
முக்கியமான வீட்டுப் பொருள்களுடன் ரதியையும் சுகரையும்
வண்டியில் ஏற்றிக் கொண்டு பழைய அரண்ய வீட்டுக்கு வந்து
சேர்ந்திருந்தாள். அந்த அம்மாள் அவ்விதம் முன்னாடியே வந்து
சேர்ந்திருந்தபடியாலேயே ஆயனர் இன்னும் உயிரோடிருப்பது
சாத்தியமாயிற்று.
அவருக்கு வேண்டிய
சிகிச்சைகளையும் சிசுரூஷைகளையும் அந்த அம்மாள் மிக்க பக்தி
சிரத்தையோடு செய்து அவரை உயிர் பிழைக்கப் பண்ணியிருந்தாள்.
ஆனாலும் அவள் அடிக்கடி கேட்டு வந்த ஒரு கேள்வியானது புண்ணிலே
கோலெடுத்துக் குத்துவது போல் அவருடைய இருதயத்தை நோகச் செய்து
கொண்டிருந்தது. அந்தக் கேள்வி, "சிவகாமி எங்கே?" என்பதுதான்.
சோகக் கடலில் ஆழ்த்தும் மேற்படி கேள்வியை நிறுத்துவதற்காக
ஆயனர் ஏதேதோ மறுமொழி சொல்லிப் பார்த்தார். அவையொன்றும்
சிவகாமியின் அத்தைக்குப் பிடிபடவே இல்லை. எனவே அவள் கேள்வி
கேட்பதை நிறுத்தவில்லை.
இது போதாதென்று
ரதியும் சுகரும் அடிக்கடி ஆயனரிடம் வந்து முகத்தைத் தூக்கிக்
கொண்டு நின்று சப்தமற்ற குரலில் தங்களுடைய மௌனக் கேள்வியை
அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆயனர் கடுமையான குரலில்
அதட்டி அவர்களை அப்பால் போகும்படி செய்வார். சுகப்பிரம்மரிஷி
இப்போதெல்லாம் அதிகமாகத் தம் குரலை வௌியில் காட்டுவதில்லை. சில
சமயம் திடீரென்று நினைத்துக் கொண்டு பலமான கூக்குரல் போடுவார்.
அப்போது அவருடைய தொனி "சிவகாமி எங்கே?" என்று கேட்பதுபோலவே
இருக்கும்.
அரண்ய வீட்டுச்
சுற்றுப் பக்கமெல்லாம் ஏதோ பெரிய அல்லோலகல்லோலம் நடந்து
கொண்டிருந்ததாகத் தோன்றியது. திடீர் திடீரென்று
காட்டிற்குள்ளும் அப்பாலும், சமீபத்திலும் தூரத்திலும் பலர்
கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் சப்தம் கேட்கும்; போர் முழக்கங்கள்
கேட்கும், அழுகையும் புலம்பலும் சில சமயம் கேட்கும். இரவு
நேரங்களில் சுற்றுமுற்றும் பார்த்தால் திரள் திரளாகப் புகையும்
நெருப்புச் சுவாலையும் எழுவது தெரியும். அந்த வனத்தில் வசித்த
பட்சிகளிடையே என்றும் காணாத மௌனம் சில சமயம் நிலவியது.
திடீரென்று பல்லாயிரம் பட்சிகள் ஏககாலத்தில் கூச்சலிடும்
சப்தம் கேட்டது.
ஒரு நாள் அந்த
அரண்யத்துக்கு வெகு சமீபத்தில் எங்கேயோ ஒரு பெருஞ் சண்டை
நடக்கிறதென்பதற்கு அறிகுறிகள் தெரிந்தன. போர் முரசங்களின்
பேரொலியும்; போர் வீரர்களின் ஜய கோஷமும், குதிரைகளும்
மனிதர்களும் நடமாடும் சத்தமும், ஆயுதங்கள் மோதும் ஓசையும்
இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தன. சாயங்காலம் திடீரென்று
ஐந்தாறு வீரர்கள் மேலெல்லாம் இரத்தக் காயங்களுடன் "தண்ணீர்!
தண்ணீர்!" என்று கூவிக் கொண்டு ஆயனர் வீட்டுக்குள்
நுழைந்தார்கள். அவர்கள் பல்லவ வீரர்கள் தான் என்று தெரிந்து
கொண்டதும், ஆயனர் தாம் படுத்திருந்த இடத்திலிருந்தே அவர்களை
வரவேற்றுத் தம் அருகில் உட்காரச் சொல்லிச் சகோதரியைக் கொண்டு
அவர்களுக்குத் தண்ணீரும் கொடுக்கச் செய்தார். பிறகு, அவர்கள்
எங்கே எப்படிக் காயமடைந்தனர் என்பது பற்றி விசாரித்தார்.
"இதென்ன உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா?" என்று அவ்வீரர்கள்
வியப்புடன் கேட்டனர்.
ஆயனர்
அவர்களுக்குத் தமது முறிந்த காலைச் சுட்டிக்காட்டினார். வந்த
வீரர்கள் அந்தக் காலையும் சுற்று முற்றும் உடைந்து கிடந்த
சிலைகளையும் பார்த்துவிட்டு, "ஐயோ! சளுக்க ராட்சதர்கள் இந்த
வீட்டுக்குள்ளும் புகுந்து இப்படியெல்லாம் அக்கிரமங்கள் செய்து
விட்டார்களா?" என்று வருத்தப்பட்டார்கள். பிறகு அந்த
வீரர்களில் ஒருவன், புலிகேசி காஞ்சியைவிட்டுப் போனதிலிருந்து
அன்று மணிமங்கலத்துக்கருகில் நடந்த பயங்கரமான சண்டை வரையில்
எல்லாம் விவரமாகச் சொன்னான். அவன் கூறியதின் சாராம்சமாவது:
புலிகேசி கோட்டையிலிருந்து வௌியேறியதும் தன்னுடைய சைனியத்தைச்
சிறு சிறு படைகளாகப் பிரித்துப் பல்லவ நாட்டுக் கிராமங்களைக்
கொளுத்தவும், ஜனங்களை இம்சிக்கவும், சிற்பங்களை நாசமாக்கவும்,
சிற்பிகளை அங்கஹீனம் செய்யவும் கட்டளையிட்டு அனுப்பினார்.
இதையறிந்த சக்கரவர்த்தி கோட்டைக்குள்ளிருந்த சொற்பப் படைகளுடன்
வௌிக் கிளம்பினார். அன்று காலையில் மணிமங்கலம் என்னும்
கிராமத்துக்கருகில் புலிகேசியின் படை வீரரும் பல்லவ வீரர்களும்
கைகலந்தார்கள். புலிகேசியின் வீரர்கள் எண்ணிக்கையிலும் ஆயுத
பலத்திலும் அதிகம் ஆன போதிலும் மகேந்திர சக்கரவர்த்தியே நேரில்
தலைமை வகித்தபடியால் காஞ்சி வீரர்கள் பிரமாதமான வீரப் போர்
நடத்தினார்கள். எதிர்ப்பக்கத்தில் வாதாபிச் சக்கரவர்த்தி
புலிகேசியே தலைமை வகித்து நடத்தினார். இரு சக்கரவர்த்திகளும்
போர்க்களத்தின் மத்தியில் நேருக்கு நேர் சந்தித்து வீரவாதம்
செய்த பிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள்.
பல்லவ சைனியம்
ஏறக்குறையத் தோல்வியடைந்திருந்த நிலைமையில், சற்றுத் தூரத்தில்
பெரிய குதிரைப் படை ஒன்று வரும் சத்தம் கேட்டது. ரிஷபக்
கொடியைப் பார்த்ததும், "இதோ மாமல்லர் வந்துவிட்டார்!" என்ற
கோஷம் கிளம்பியது. சற்று நேரத்துக்கெல்லாம் மாமல்லரின் குதிரை
வீரர்கள் சளுக்கர் படை மேல் இடியைப் போல் விழுந்து
தாக்கினார்கள். சளுக்க வீரர்கள் ஓட ஆரம்பித்தார்கள். அரக்கன்
புலிகேசியும் ஓடிப்போனான். ஆனால் போகும்போது தன் கையிலிருந்த
சிறிய கத்தி ஒன்றை மகேந்திரர் மீது குறிபார்த்து எறிந்து
விட்டான். மகேந்திரர் பிரக்ஞை இழந்து தரையில் விழுந்தார்.
வாதாபி வீரர்கள் போர்க்களத்தை விட்டு ஓடிய பிறகு மாமல்லரும்
பரஞ்சோதியும் மகேந்திர பல்லவர் விழுந்திருந்த இடத்துக்கு
வந்தார்கள். அவருக்குத் தக்க சிகிச்சை செய்து காஞ்சிக்குப்
பத்திரமாய் எடுத்துப் போகக் கட்டளையிட்டு விட்டு,
புறமுதுகிட்டு ஓடிய வாதாபி வீரர்களைப் பின்தொடர்ந்து
சென்றார்கள்.
மேற்படி
விவரங்களைக் கூறிய பின்னர் காயமடைந்த பல்லவ வீரர்கள் காஞ்சியை
நோக்கிச் சென்றார்கள். மகேந்திர பல்லவருக்கு மரண காயம்
என்பதைக் கேட்டதில் ஆயனர் அளவற்ற துயரமடைந்தார். ஆனாலும்
மாமல்லரும் பரஞ்சோதியும் சளுக்க வீரர்களைத் தொடர்ந்து
போயிருக்கிறார்கள் என்னும் செய்தி அவருக்குச் சிறிது
ஆறுதலையளித்தது. அவர்கள் சிவகாமியைச் சிறை மீட்டுக் கொண்டு
வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில்
உதயமாகியிருந்தது.
மணிமங்கலம் சண்டை
நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆயனர் தினந்தோறும் ஏதேனும் நல்ல
செய்தி வராதா என்று ஆவலுடன் காத்திருந்தார். வாசலில் ஏதேனும்
சத்தம் கேட்டால் அவர் திடுக்கிடுவார். யாரோ செய்தியுடன்
வருகிறார்கள் என்று பரபரப்புடன் எழுந்து உட்காருவார்.
இம்மாதிரி எத்தனையோ தடவை ஏமாற்றம் அடைந்த பிறகு கடைசியில்
உண்மையாகவே இரண்டு குதிரைகள் அவர் வீட்டை நெருங்கி வரும்
சத்தம் கேட்டது. வந்த குதிரைகள் வீட்டு வாசலில் நின்றன என்பது
தெரிந்தது.
வாசற்படி வழியாக
நுழைந்துவரப் போகிறவர்கள் யார் என்று கொட்டாத கண்களுடனும்
துடிதுடித்த நெஞ்சுடனும் ஆயனர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருடைய ஆசை வீண் போகவில்லை. ஆம்! மாமல்லரும்,
பரஞ்சோதியும்தான் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும்
முதலிலே ஆயனருடைய முகத்தில் மகிழ்ச்சிக் களை படர்ந்தது. ஆனால்
அவர்கள் நெருங்கி வரவர மகிழ்ச்சி குன்றியது. மாமல்லரின்
முகத்தில் தோன்றிய கேள்விக் குறியானது ஆயனருடைய உள்ளத்தில்
சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. மாமல்லர் வாய் திறந்து
கேட்பதற்கு முன்னால் அவர் கேட்கப் போகும் கேள்வியைத் தாமே
கேட்டுவிடத்தீர்மானித்தார் ஆயனர். அந்தச் சிற்ப மண்டபமும்,
வௌியிலிருந்த அரண்யமும் பிரதித்வனி செய்யும்படியான சோகம்
நிறைந்த குரலில், "பிரபு! என் சிவகாமி எங்கே?" என்று அலறினார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்தோராம் அத்தியாயம்
புலிகேசி ஓட்டம்
மாமல்லரும்
பரஞ்சோதியும் ஆயனரின் அரண்ய வீட்டுக்கு எப்படி வந்து
சேர்ந்தார்கள், என்ன மனோநிலையில் வந்து சேர்ந்தார்கள் என்பதைச்
சற்று கவனிப்போம். மணிமங்கலம் போர்க்களத்தில் மகேந்திர
பல்லவரின் சிறு படை, அடியோடு நாசம் செய்யப்படவிருந்த
தறுவாயில், மாமல்லரும் பரஞ்சோதியும் பாண்டியனைப் புறங்கண்ட
குதிரைப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார்கள். சற்று
நேரத்துக்கெல்லாம் போர் நிலைமை அடியோடு மாறி விட்டது. சளுக்க
வீரர் பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர். அவர்களைத் தொடர்ந்து போய்
அடியோடு அழித்து விட்டு வர மாமல்லர் எண்ணிய சமயத்தில்,
போர்க்களத்தின் ஒரு மூலையில் மகேந்திர பல்லவர் மரணக்
காயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி கிடைத்தது. மாமல்லரும்
பரஞ்சோதியும் அவ்விடத்துக்கு ஓடிப் பார்த்த போது, காயப்பட்ட
மகேந்திரரைப் பக்கத்து மணிமங்கலம் கிராமத்திலிருந்த அரண்மனை
விடுதிக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சிகிச்சை செய்து
வருவதாகத் தெரிந்தது. சிநேகிதர்கள் இருவரும் உடனே
அவ்விடத்துக்குச் சென்றார்கள். சிறிது நேரம் சிகிச்சைகள் செய்த
பிற்பாடு மகேந்திரர் கண் திறந்து பார்த்தார். புதல்வனைக்
கண்டதும் முதலில் அவருடைய முகத்தில் மிகிழ்ச்சி தோன்றியது. மறு
கணத்திலே மகிழ்ச்சி பாவம் மாறி அளவற்ற வேதனையும் கவலையும் அந்த
முகத்தில் பிரதிபலித்தன. "மகனே! உனக்குப் பெரிய துரோகம் செய்து
விட்டேன்! என்னை மன்னிப்பாயா?" என்று அவருடைய உதடுகள்
முணுமுணுத்தன. "அப்பா! நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள்தான்
சரியான சமயத்துக்கு வந்து சேர்ந்து விட்டோமே! சளுக்கர் சிதறி
ஓடுகிறார்கள்!...." என்று மாமல்லர் சொல்லும்போதே மகேந்திரர்
நினைவை இழந்து விட்டார்.
மாமல்லரும்
பரஞ்சோதியும் மகேந்திர சக்கரவர்த்தியைப் பத்திரமாகக் காஞ்சி
நகருக்குக் கொண்டு போக ஏற்பாடு செய்து விட்டுப் போர்க்களத்தின்
நிலைமையை ஆராய்ந்தார்கள். மகேந்திர பல்லவருடன்
காஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்த சைனியத்தில் பெரும்பகுதி
வீரர்கள் மணிமங்கலம் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் புகுந்து
விட்டதாக அறிந்தார்கள். சேனாதிபதி கலிப்பகையாரும் அந்தப்
போர்க்களத்திலேயே உயிர் துறந்த செய்தி தெரிய வந்தது. மேலே
தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று மாமல்லரும் பரஞ்சோதியும்
யோசனை செய்தார்கள். காஞ்சி நகரைச் சுற்றிலும் இன்னும் பல
இடங்களில் சளுக்க வீரர்களின் சிறு படைகள் ஆங்காங்கே
கிராமங்களில் புகுந்து ஜனங்களை ஹிம்சித்துக் கொண்டிருப்பதாக
அவர்களுக்குத் தகவல் தெரியவந்திருந்தது. எனவே, அப்படிப்பட்ட
கிராதக ராட்சதர்களை முதலில் ஒழித்துக் கிராமவாசிகளைக்
காப்பாற்றுவதுதான் தங்களுடைய முதற் கடமை என்றும் காலாட்
படையும் வந்து சேர்ந்த பிறகு புலிகேசியின் பெரும் படையைத்
தொடர்ந்து போகலாம் என்றும் தீர்மானித்தார்கள்.
அவ்விதமே மூன்று
நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து காஞ்சிக்குக் கிழக்கிலும்
தெற்கிலும் மேற்கிலும் சளுக்கர் படையே இல்லாமல் துவம்சம்
செய்தார்கள். இதற்குள்ளாகக் காலாட் படையும் வந்து சேரவே
மீண்டும் வடக்கு நோக்கிப் புறப்பட்டார்கள். காஞ்சிக்கு வடக்கே
மூன்று காத தூரத்தில் சூரமாரம் என்னும் கிராமத்துக்கு அருகில்
ஒரு பெரும் போர் நடந்தது. இங்கே சளுக்கர் படைக்குத் தலைமை
வகித்தவன் தளபதி சசாங்கன். இந்தச் சண்டையில் தளபதி சசாங்கனும்
சளுக்க வீரர்களில் பெரும் பகுதியினரும் மாண்டார்கள்,
மற்றவர்கள் பின்வாங்கிச் சிதறி ஓடினார்கள். பல்லவர் படை
அவர்களைத் துரத்திக் கொண்டு வெள்ளாறு வரையில் சென்றது. தளபதி
சசாங்கனைப் பின்னால் நிறுத்தி விட்டுப் புலிகேசிச்
சக்கரவர்த்தி முன்னதாகவே வெள்ளாற்றைக் கடந்து போய் விட்டதாக
மாமல்லரும் பரஞ்சோதியும் அறிந்தார்கள். மாமல்லர்
வெள்ளாற்றையும் கடந்து அப்பால் புலிகேசியைத் துரத்திக் கொண்டு
போக விரும்பினார். கலிப்பகையின் மரணத்தினால் இப்போது பல்லவ
சேனாதிபதியாகி விட்ட பரஞ்சோதியார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
"பிரபு!
சக்கரவர்த்தியை எந்த நிலைமையில் நாம் விட்டு விட்டு வந்தோம்
என்பது தங்களு்கு நினைவில்லையா? அவரை அப்படி விட்டுவிட்டு நாம்
நெடுகிலும் போய்க் கொண்டேயிருப்பது நியாயமா? கலிப்பகையும்
போர்க்களத்தில் காலமாகி விட்டார். நாம் இல்லாத சமயத்தில்
சக்கரவர்த்திக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் பல்லவ ராஜ்யம்
என்ன கதி ஆவது? சளுக்கர்களால் சூறையாடப்பட்டும்
ஹிம்சிக்கப்பட்டும் தவித்துக் கொண்டிருக்கும் கிராமவாசிகளின்
கதி என்ன? அவர்களுக்கு அன்னவஸ்திரம் அளித்துக் காப்பாற்றும்
கடமையை யார் நிறைவேற்றுவார்கள்? மதுரைப் பாண்டியன் மீண்டும்
பல்லவ ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?
பிரபு! இதையெல்லாம் யோசித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்"
என்றார் பரஞ்சோதி.
மகேந்திரருடைய
தேக நிலைமையைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே மாமல்லருடைய
மனவுறுதி தளர்ந்து விட்டது. சற்று நேரம் தலைகுனிந்தபடி
சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் "சேனாதிபதி! நீங்கள்
சொல்லுவது உண்மைதான். அது மட்டுமல்ல, நாம் இப்போது நமது
சைனியத்துடன் முன்னேறினால் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்
இல்லை. போகும் வழியில் ஏற்கெனவே சளுக்க அரக்கர்கள்
கிராமங்களைச் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்குப்
பின்னால் நாமும் போனால் கிராமவாசிகள் எங்கிருந்து உணவு
அளிப்பார்கள்? நாமும் சேர்ந்து அவர்களை ஹிம்சிப்பதாகவே
முடியும். எல்லாவற்றுக்கும் காஞ்சிக்குத் திரும்பிச் சென்று
தந்தையின் உடல்நிலை எப்படியிருக்கிறதென்று தெரிந்து கொள்வோம்.
தக்க ஏற்பாட்டுடன் பிறகு திரும்புவோம்" என்றார்.
காஞ்சியை
நோக்கித் திரும்பி வரும் போது ஆங்காங்கே கிராமங்களில் சளுக்க
வீரர்கள் செய்துள்ள அக்கிரமங்கள் அவர்களுடைய கவனத்தைக்
கவர்ந்தன. ஊர் ஊராக வீடுகளிலும் குடிசைகளிலும் வைக்கோற்
போர்களிலும் அறுவடைக்கு ஆயத்தமாயிருந்த வயல்களிலும்
சளுக்கர்கள் தீ வைத்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே
சாம்பல் மயமாயிருந்தது. பல்லவ நாடே ஒரு பெரிய பயங்கர ஸ்மசான
பூமியாக மாறி விட்டதாகத் தோன்றியது. இன்னும் சில கிராமங்களில்
வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கு ஜனங்களின்
அழுகைக் குரல் எழுந்தது. மாமல்லரையும் பரஞ்சோதியையும் கண்டதும்
ஜனங்கள் உரத்த சப்தமிட்டுப் புலம்பத் தொடங்கினார்கள். சளுக்க
வீரர்கள் செய்த பயங்கர அட்டூழியங்களைப் பற்றி ஆங்காங்கே
சொன்னார்கள். சிற்பிகள் கால் கை வெட்டப்பட்டது பற்றியும், இளம்
பெண்கள் சிறைப் பிடித்துப் போகப் பட்டது பற்றியும், ஆடு
மாடுகள் வதைக்கப்பட்டது பற்றியும் ஜனங்கள் சொன்னதைக் கேட்டபோது
கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் மாமல்லரின் மார்பு வெடித்து
விடும் போலிருந்தது. நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக்
கொண்டது. பரஞ்சோதியிடம் தமது கோபத்தையும் ஆத்திரத்தையும்
வௌியிட்டு நாலு வார்த்தை பேசுவதற்குக் கூட மாமல்லரால்
முடியாமல் போய் விட்டது.
சிற்பிகள்
பலருக்கு நேர்ந்த கதியைப் பற்றிக் கேட்ட போது மாமல்லரின் இருதய
அந்தரங்கத்தில், நல்லவேளை! ஆயனரும் சிவகாமியும் காஞ்சிக்
கோட்டைக்குள் இருக்கிறார்களே! என்ற எண்ணம் ஓரளவு
ஆறுதலையளித்தது. எனினும் சிற்பங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றி
அறிந்த போது மாமல்லபுரத்து அற்புதச் சிற்பங்களுக்கு என்ன கதி
நேர்ந்ததோ என்ற ஐயம் உதித்து மிக்க வேதனையளித்தது. அதை நேரில்
பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக மாமல்லரும் பரஞ்சோதியும்
அதிவிரைவாக மாமல்லபுரம் சென்றார்கள். அங்கே சிற்பங்களுக்கு
அதிகச் சேதம் ஒன்றுமில்லையென்று தெரிந்து கொண்டு காஞ்சிக்குப்
பயணமானார்கள். மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும்
வழியில் ஆயனரின் அரண்ய வீடு இருந்ததல்லவா? அந்த வீட்டையும்
பார்க்க வேண்டும், அதிலிருந்த தெய்வீக நடனச் சிலைகளுக்கு
ஒன்றும் சேதமில்லையென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
மாமல்லர் விரும்பினார். ஆயனரின் வீட்டு வழியாகப் போவது
காஞ்சிக்குக் குறுக்கு வழியாகவும் இருந்ததல்லவா?
ஆயனர் வீட்டு
வாசலுக்கு வந்ததும் கதவு திறந்திருப்பதைப் பார்த்தார்கள்.
உடனேயே இருவருக்கும் 'திக்' என்றது. வீட்டின் முன் பக்கத்
தோற்றமே மனக் கலக்கத்தை உண்டாக்கிற்று. ஏதோ ஒரு மகத்தான
விபத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற உள்
உணர்ச்சியுடன் வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். உடைந்தும்
சிதைந்தும் அலங்கோலமாய்க் கிடந்த சிலைகளைப் பார்த்த போது
இருவருக்கும் தங்களுடைய நெஞ்சு எலும்புகள் உடைவது போன்ற
உணர்ச்சி உண்டாயிற்று. அவர்களுடைய காலடிச் சப்தத்தைக்
கேட்டதும் படுத்திருந்த ஆயனர் எழுந்து நிமிர்ந்து
உட்கார்ந்தார். காஞ்சியில் பத்திரமாக இருப்பதாக அவர்கள்
எண்ணிக் கொண்டிருந்த ஆயனரை இங்கே கண்டதினால் ஏற்பட்ட வியப்பு
ஒருபுறமிருக்க, பயங்கரத்தால் வௌிறிய அவருடைய முகமும் வெறி
கொண்ட அவருடைய பார்வையும் அவர்களுக்கு விவரிக்க முடியாத பீதியை
உண்டாக்கின. "என் சிவகாமி எங்கே?" என்று ஆயனச் சிற்பியார்
கேட்டதும், மாமல்லருக்கு மலை பெயர்ந்து தலையில் விழுந்து
விட்டது போலிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்திரண்டாம் அத்தியாயம்
இரத்தம் கசிந்தது
மாமல்லர் 'கீழே
விழுந்து விடுவாரே என்ற பயத்தினால் பரஞ்சோதி அவருடைய கரத்தைப்
பிடித்துக் கொண்டார். இருவரும் பேச நாவெழாமல் ஆயனரைப்
பார்த்தபடியே நின்றார்கள். மீண்டும் ஆயனர், "பல்லவ குமாரா!
சிவகாமி எங்கே? என் செல்வக் கண்மணி எங்கே? ஆயனச் சிற்பியின்
அருமைக் குமாரி எங்கே? மகேந்திர பல்லவரின் சுவீகார புத்திரி
எங்கே? பரத கண்டத்திலேயே இணையற்ற நடன கலாராணி எங்கே?" என்று
வெறிகொண்ட குரலில் கேட்டுக் கொண்டே போனார்.
மாமல்லருடைய
உள்ளமானது பெரும் புயல் அடிக்கும் போது கடல் கொந்தளிப்பது போல்
கொந்தளித்தது. ஆயினும் சிவகாமிக்கு என்ன நேர்ந்தது என்று
தெரிந்து கொள்ளும் ஆவலினால் பல்லைக் கடித்து மனத்தை
உறுதிப்படுத்திக் கொண்டு, பசையற்ற வறண்ட குரலில், "ஐயா!
தயவுசெய்து மனத்தை நிதானப்படுத்திக் கொள்ளுங்கள். சிவகாமி
எங்கே என்று நானல்லவா தங்களைக் கேட்க வேண்டும்? சிவகாமிக்கு
என்ன நேர்ந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டார். ஆயனருடைய வெறி
அடங்கியது; அவருடைய உணர்ச்சி வேறு உருவங் கொண்டது. கண்ணில்
நீர் பெருகிற்று, "ஆமாம், பிரபு! ஆமாம்! என்னைத்தான் தாங்கள்
கேட்க வேண்டும். சிவகாமியை இந்தப் பாவியிடந்தான் தாங்கள்
ஒப்புவித்திருந்தீர்கள். நான்தான் என் கண்மணியைப் பறி கொடுத்து
விட்டேன். ஐயோ! என் மகளே! பெற்ற தகப்பனே உனக்குச்
சத்துருவானேனே!" என்று கதறியவண்ணம் தலையைக் குப்புற வைத்துக்
கொண்டு விம்மினார்.
ஆயனரின் ஒவ்வொரு
வார்த்தையும் நரசிம்மவர்மரின் இருதயத்தை வாளால் அறுப்பது போல்
இருந்தது. சிவகாமி இறந்து போய் விட்டாள் என்றே அவர்
தீர்மானித்துக் கொண்டார். பொங்கி வந்த துயரத்துக்கும்,
ஆத்திரத்துக்கும் இடையே சிவகாமி எப்படி இறந்தாள் என்று
தெரிந்து கொள்ளும் ஆவலும் எழுந்தது. ஒருவேளை சளுக்கர்களால்
அவளுடைய மரணம நேர்ந்திருக்குமென்ற எண்ணம் மின்னலைப் போல்
உதயமாகி அவருடைய உடம்பையும் உள்ளத்தையும் பிளந்தது. மீண்டும்
ஒரு பெரு முயற்சி செய்து மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார்.
அதிகாரத் தொனியுடைய கடினமான குரலில், "ஆயனரே! மறுமொழி
சொல்லிவிட்டு அப்புறம் அழும். சிவகாமி எப்படி இறந்தாள்?
எப்போது இறந்தாள்?" என்று கர்ஜித்தார்.
"ஆஹா! என் கண்மணி
இறந்து விட்டாளா?" என்று அலறிக் கொண்டு, படுத்திருந்த ஆயனர்
எழுந்து நிற்க முயன்றார். அவர் கால் தடுமாறியது; பயங்கரமாக
வீறிட்டுக் கொண்டு தொப்பென்று தரையில் விழுந்தார். "இறந்து
விட்டாளா?" என்ற கேள்வியினால், சிவகாமி இறந்து விடவில்லை என்ற
உண்மை மாமல்லரின் மனத்தில் பட்டது. ஆயனர் அப்படி நிற்க முயன்று
விழுந்த போது, அவருடைய காலில் ஊனம் என்னும் விவரமும்
மாமல்லருக்குத் தெரிந்தது. இதனால் அவர் கல்லாகச் செய்து
கொண்டிருந்த மனம் கனிந்தது. "ஐயா! தங்களுக்கு என்ன?" என்று
கேட்டுக் கொண்டே ஆயனரின் அருகில் வந்து உட்கார்ந்தார்.
"ஐயா! தங்கள்
கால் முறிந்திருக்கிறதே? இது எப்படி நேர்ந்தது?" என்று
இரக்கத்துடன் வினவினார். "மலையிலிருந்து விழுந்து கால்
முறிந்தது. என் கால் முறிந்தால் முறியட்டும்; சிவகாமி இறந்து
விட்டதாகச் சொன்னீர்களே! அது உண்மைதானா?" என்று ஆயனர்
கேட்டார். "ஐயா! சிவகாமியைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.
போர்க்களத்திலிருந்து நேரே வருகிறேன். நீங்களும் சிவகாமியும்
காஞ்சியில் சௌக்கியமாயிருப்பதாக எண்ணியிருந்தேன். நீங்கள்
எப்படி இங்கே வந்தீர்கள்? சிவகாமியை எப்போது பிரிந்தீர்கள்?
அவள் இறந்து போய் விடவில்லையல்லவா?" என்று மிகவும் அமைதியான
குரலில் பேசினார் மாமல்லர்.
இதற்கு மாறாக,
அலறும் குரலில், "ஐயோ! சிவகாமி இறந்து போயிருந்தால் எவ்வளவோ
நன்றாயிருக்குமே!" என்றார் ஆயனர். "ஐயா! சிவகாமிக்கு என்னதான்
நேர்ந்தது?" "ஐயோ! எப்படி அதைச் சொல்வேன்? எல்லாம் இந்தப்
பாவியினால் வந்த வினைதான்! பிரபு! சிவகாமியைச் சளுக்கர்கள்
சிறைப்பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்!" "என்ன? என்ன?"
என்று மாமல்லர் கேட்ட தொனியில் உலகத்திலேயே கண்டும்
கேட்டுமிராத விபரீதம் நடந்து விட்டதென்று அவர் எண்ணியது
புலனாயிற்று. "ஆம், பிரபு! சிறைப் பிடித்துக் கொண்டு போய்
விட்டார்கள். தாங்கள் சளுக்கர்களைத் தொடர்ந்து போனது பற்றிக்
கேள்விப்பட்ட போது, சிவகாமியை விடுவித்துக் கொண்டு
வருவீர்களென்று நம்பியிருந்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள்!
ஆனால் உங்கள் பேரில் என்ன தப்பு? எல்லாம் இந்த பாவியினால்
வந்ததுதான். சித்திரம், சிற்பம் என்று பைத்தியம் பிடித்து
அலைந்தேன். என் உயிர்ச் சித்திரத்தை, ஜீவ சிற்பத்தைப்
பறிகொடுத்தேன்!... ஐயோ! என் மகளுக்கு நானே யமன் ஆனேனே!"
இவ்வாறெல்லாம்
ஆயனர் புலம்பியது மாமல்லரின் காதில் ஏறவே இல்லை. சிவகாமியைச்
சளுக்கர் சிறைப்பிடித்துச் சென்றார்கள் என்னும் செய்தி
ஒன்றுதான் அவர் மனத்தில் பதிந்திருந்தது. சிறிது நேரம் பிரமை
பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார். பிறகு, தொண்டையைக்
கனைத்துக் கொண்டு, மிக மெலிந்த குரலில், "சிற்பியாரே!
இதெல்லாம் எப்படி நடந்தது? காஞ்சியிலிருந்து நீங்கள் ஏன்
கிளம்பினீர்கள்? சிவகாமி எப்படிச் சிறைப்பட்டாள்? உங்கள் கால்
எப்படி ஒடிந்தது? அடியிலிருந்து எல்லாம் விவரமாகச்
சொல்லுங்கள்!" என்றார். ஆயனரும் அவ்விதமே விவரமாகச் சொன்னார்.
தட்டுத் தடுமாறி இடையிடையே விம்மிக் கொண்டு சொன்னார். மாமல்லர்
கேட்டுக் கொண்டிருந்தார்; அச்சமயம் உறையிலிருந்து எடுத்த
கத்தியை அவர் கையில் வைத்துக் கொண்டிருந்தார். கத்தியின் கூரிய
விளிம்பை அவர் இடக்கை விரல்கள் தடவிக் கொண்டிருந்தன. அவ்வாறு
தடவிய போது விரல்களில் சில கீறல்கள் ஏற்பட்டன. அந்தக்
கீறல்களில் கசிந்த இரத்தம் சொட்டுச் சொட்டாகத் தரையில்
சொட்டிக் குட்டையாகத் தேங்கியது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்து மூன்றாம் அத்தியாயம்
இருள் சூழ்ந்தது
மாமல்லர் அன்று
ஆயனரின் அரண்ய வீட்டிலிருந்து புறப்பட்டுக் காஞ்சி நகரை
நோக்கிச் சென்றபோது உச்சி நேரம். நிர்மலமான நீல ஆகாயத்தில்
புரட்டாசி மாதத்துச் சூரியன் தலைக்கு மேலே தகதகவென்று
பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஆயினும் மாமல்ல நரசிம்மருக்கு
அப்போது வானமும் பூமியும் இருள் சூழ்ந்திருந்ததாகத் தோன்றியது.
அமாவாசை நள்ளிரவில் நாலாபுறமும் வானத்தில் கன்னங்கரிய மேகங்கள்
திரண்டிருந்தாற் போன்ற அந்தகாரம் அவர் உள்ளத்தைக் கவிந்து
கொண்டிருந்தது. ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரத்தின் மினுக் மினுக்
என்னும் ஒளிக் கிரணத்தைக் கூட அந்தக் காரிருளில் அவர்
காணவில்லை.
ஆனால் திடீர்
திடீர் என்று சில சமயம் பேரிடி முழக்கத்துடன் கூடிய மின்னல்கள்
கீழ்வான முகட்டிலிருந்து மேல்வான முகடு வரையில் அந்தகாரத்தைக்
கிழித்துக் கொண்டு பாய்ந்த மின்னல்கள் - கண்ணைப் பறித்து
மண்டையைப் பிளக்கும் பயங்கரத் தீட்சண்ய ஒளி மின்னல்கள்
மாமல்லருடைய உள்ளமாகிற வானத்தில் தோன்றத்தான் செய்தன. அந்த
மின்னல் ஒளியெல்லாம் ஆயிரமாயிரம் கூரிய வாள்களும் வேல்களும்
போர்க்களத்தில் ஒன்றோடொன்று உராயும் போது சுடர்விட்டு
ஒளிர்ந்து மறையும் மின்னல்களாகவே அவருடைய அகக்காட்சியில்
தோற்றமளித்தன. சிவகாமி அடியோடு நஷ்டமாகிவிட்டதாகவே மாமல்லர்
எண்ணினார். சளுக்கரால் சிறைப்பட்டுச் சிவகாமி உயிர்
வாழ்ந்திருப்பாள் என்று அவரால் கற்பனை செய்யவே முடியவில்லை.
சிறைப்பட்டுச்
சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் பிராணனை விட்டுத்தான் இருக்க
வேண்டும். கேவலம் மற்றச் சாமான்யப் பெண்களைப் போல் அவள்
சத்ருக்கள் வசம் சிக்கிக் கொண்ட பிறகு உயிரை வைத்துக்
கொண்டிருப்பாளா? மானத்தைக் காட்டிலும் பிராணனே பெரிது என்று
எண்ணும் ஈனத்தனம் சிவகாமியிடம் இருக்க முடியுமா? தன்னுடைய
வாழ்க்கையிலிருந்தும், இந்தப் பூலோகத்திலிருந்தும் அந்தத்
தெய்வீக ஒளிச்சுடர் முடிவாக மறைந்தே போய் விட்டது. அத்தகைய
தெய்வீக சௌந்தர்யத்துக்கும் கலைத்திறனுக்கும் மேன்மைக்
குணத்துக்கும் இந்த உலகம் தகுதியற்றது; தானும் தகுதியற்றவன்!
இரண்டு
தந்தைகளுமாய்ச் சேர்ந்து சிவகாமியின் உயிருக்கு இறுதி தேடி
விட்டார்கள். தன்னுடைய வாழ்வுக்கும் உலை வைத்து விட்டார்கள்.
ஆனபோதிலும், அவர்கள் மீது மாமல்லர் அதிகமாகக் கோபங்கொள்ள
முடியவில்லை. மகளைப் பிரிந்த துயரத்தினால் ஆயனர் ஏறக்குறையச்
சித்தப் பிரமை கொண்ட நிலையில் இருக்கிறார். கால் முறிந்து
எழுந்து நிற்கவும் முடியாமல் கிடந்த இடத்திலேயே கிடக்கிறார்.
அவர் மேல் எப்படிக் கோபம் கொள்வது? அல்லது, போர்க்களத்திலே
படுகாயம் அடைந்து யமனுடன் போராடிக் கொண்டிருக்கும் மகேந்திர
பல்லவரிடந்தான் எவ்விதம் கோபம் கொள்ள முடியும்?
சிவகாமி இல்லாத
உலகத்திலே தாம் உயிர் வாழ்வது என்னும் எண்ணத்தை மாமல்லரால்
சகிக்கவே முடியவில்லை. எனினும், சில காலம் எப்படியும் பல்லை்
கடித்துக் கொண்டு ஜீவித்திருக்கத்தான் வேண்டும்; நராதமர்களும்,
நம்பிக்கைத் துரோகிகளும், மனித உருக்கொண்ட ராட்சதர்களுமான
வாதாபி சளுக்கர்களைப் பழி வாங்குவதற்காகத்தான்! இதுவரையில்
இந்த உலகமானது கண்டும் கேட்டுமிராத முறையிலே பழி வாங்க
வேண்டும்! சளுக்கர் தொண்டை நாட்டில் செய்திருக்கும்
அக்கிரமங்களுக்கு ஒன்றுக்குப் பத்து மடங்காக அவர்களுக்குச்
செய்ய வேண்டும். சளுக்க நாட்டில் இரத்த ஆறுகள் ஓட வேண்டும்.
அப்படிப் பெருகி ஓடும் செங்குருதி நதிகளில், பற்றி எரியும்
பட்டணங்களின் மீது கிளம்பும் அக்கினி ஜுவாலைகள் பிரதிபலிக்க
வேண்டும்! அந்த அரக்கர்களின் நாட்டிலே அப்போது எழும் புலம்பல்
ஒலியானது தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்!
இவ்விதம் பழி
வாங்குவதைப் பற்றி எண்ணிய போதெல்லாம் மாமல்லருக்குச் சிறிது
உற்சாகம் உண்டாயிற்று. அடுத்த கணத்தில், "சிவகாமி இவ்வுலகில்
இப்போதில்லை; அவளை இனிமேல் பார்க்கவே முடியாது" என்ற எண்ணம்
தோன்றியது. உற்சாகம் பறந்து போய்ச் சோர்வு குடிகொண்டது.
உடம்பின் நரம்புகள் தளர்ந்து சகல நாடிகளும் ஒடுங்கிக்
குதிரையின் கடிவாளங்கள் கையிலிருந்து நழுவும்படியான நிலைமையை
அடைந்தார். அந்த மனச் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காக மாமல்லர்
பழைய ஞாபகங்களில் தம்முடைய மனத்தைச் செலுத்த முயன்றார்.
சென்ற மூன்று
நாலு வருஷங்களில் சிவகாமிக்கும் தமக்கும் ஏற்பட்டிருந்த
தொடர்பை நினைத்த போது மாமல்லரின் இருதய அடிவாரத்திலிருந்து
பந்து போன்ற ஒரு பொருள் கிளம்பி மேலே சென்று தொண்டையை
அடைத்துக் கொண்டது போலிருந்தது. கண்களின் வழியாகக் கண்ணீர்
வருவதற்குரிய மார்க்கங்களையும், அது அடைத்துக் கொண்டு
திக்குமுக்காடச் செய்தது. ஆஹா! உலகத்தில் அன்பு என்றும், காதல்
என்றும், பிரேமை என்றும் சொல்கிறார்களே! சிவகாமிக்கும்
தமக்கும் ஏற்பட்டிருந்த மனத் தொடர்பைக் குறிப்பிடுவதற்கு
இவையெல்லாம் எவ்வளவு தகுதியற்ற வார்த்தைகள்?
தளபதி
பரஞ்சோதியும் அந்தத் திருவெண்காட்டு மங்கையும் கொண்டுள்ள
தொடர்பைக்கூட அன்பு, காதல், பிரேமை என்றுதான் உலகம் சொல்கிறது.
ஆனால் பரஞ்சோதியின் அனுபவத்துக்கும் தம்முடைய அனுபவத்துக்கும்
எத்தனை வித்தியாசம்? பரஞ்சோதி சேர்ந்தாற்போல் பல தினங்கள்
உமையாளைப் பற்றி நினைப்பது கூட இல்லை என்பதை மாமல்லர்
அறிந்திருந்தார். ஆனால் அவருடைய உள்ளத்திலேயிருந்து ஒரு
கணநேரமாவது சிவகாமி அப்பாற்பட்டதுண்டா? கேணியில் உள்ள தண்ணீரை
இறைத்துவிட்டால், அடியில் உள்ள நீர் ஊற்றிலிருந்து குபு
குபுவென்று தண்ணீர், மேலே வருமல்லவா? அதே மாதிரியாக மாமல்லரின்
இருதயமாகிய ஊற்றிலிருந்து சிவகாமியின் உருவம் இடைவிடாமல் மேலே
வந்து கொண்டிருந்தது. ஆயிரமாயிரம் சிவகாமிகள் நெஞ்சின்
ஆழத்திலிருந்து கிளம்பி மேலே மேலே வந்து மறைந்து போய்க்
கொண்டேயிருப்பார்கள்.
முகத்தில்
புன்னகை பூத்த சிவகாமி, கலீரென்று சிரிக்கும் சிவகாமி, புருவம்
நெரித்த சிவகாமி சோகம் கொண்ட சிவகாமி பயத்துடன் வெருண்டு
பார்க்கும் சிவகாமி, கண்களைப் பாதி மூடி ஆனந்த
பரவசத்திலிருக்கும் சிவகாமி, வம்புச் சண்டைக்கு இழுக்கும்
விளையாட்டுக் கோபங் கொண்ட சிவகாமி இப்படியாக எத்தனை எத்தனையோ
சிவகாமிகள் மாமல்லரின் உள்ளத்தில் உதயமாகிக்
கொண்டேயிருப்பார்கள். தாய் தந்தையரோடு பேசிக் கொண்டிருக்கும்
போதும், இராஜரீக விவரங்களை மிக்க கவனமாகக் கேட்டுக்
கொண்டிருக்கும் போதும், புரவியின் மீது அதிவேகமாகப் போய்க்
கொண்டிருக்கும் போதும் இராஜ சபையில் வீற்றிருந்து ஆடல் பாடல்
விநோதங்களைக் கண்டு கேட்டுக் களித்துக் கொண்டிருக்கும் போதும்,
போர்க்களத்தில் வாள்களும் வேல்களும் நாலாபுறமும் ஒளி வீசி ஒலி
செய்ய எதிரி சைனியங்களுடன் வீரப்போர் புரிந்து அவர்களை
விரட்டியடிக்கும் போதும் எப்படியோ மாமல்லரின் உள்ளத்தின்
அடிவாரத்தில் சிவகாமியின் நினைவு மட்டும் இருந்து
கொண்டுதானிருக்கும். பகல் வேளையில் பல்வேறு காரியங்களில்
ஈடுபட்டிருக்கும் சமயங்களிலேதான் இப்படியென்றால், இரவு
நேரங்களில் சொல்ல வேண்டியதில்லை. காஞ்சி நகரில் அரண்மனையில்
தங்கும் நாட்களில் இரவு போஜனம் முடிந்து தாம் தன்னந்தனியாகப்
படுக்கைக்குப் போகும் நேரத்தை எப்போதும் மாமல்லர் ஆவலுடன்
எதிர் நோக்குவது வழக்கம். ஏனெனில் சிவகாமியைப் பற்றிய
நினைவுகளிலேயே அவருடைய உள்ளத்தைப் பூரணமாக ஈடுபடுத்தலாமல்லவா?
கருவண்டையொத்த அவளுடைய கண்களையும், அந்தக் கண்களின்
கருவிழிகளைச் சுழற்றி அவள் பொய்க் கோபத்துடன் தன்னைப்
பார்க்கும் தோற்றத்தையும் நினைத்து நினைத்துப் போதை
கொள்ளலாமல்லவா?
இப்படி நெடுநேரம்
சிவகாமியைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்த பிறகு கடைசியில்
கண்களை மூடித் தூங்கினால், தூக்கத்திலும் அவளைப் பற்றிய
கனவுதான். எத்தனை விதவிதமான கனவுகள்? அந்தக் கனவுகளில் எத்தனை
ஆனந்தங்கள்? எத்தனை துக்கங்கள்? எத்தனை அபாயங்கள்? எத்தனை
ஏமாற்றங்கள்? கனவுகளிலே என்னவெல்லாமோ ஆபத்துக்கள் சிவகாமிக்கு
ஏற்பட்டதும், அவற்றிலிருந்து அவளைத் தப்புவிக்கத் தாம்
முயன்றதும், சில சமயம் அவளைத் தப்புவிப்பதற்கு முன்னாலே கனவு
கலைந்து எழுந்து, மீதி இரவெல்லாம் கவலைப்பட்டுக்
கொண்டிருந்ததும், மறு நாள் விரைந்து சென்று சிவகாமிக்கு அபாயம்
ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைந்ததும்,
மாமல்லருக்கு இப்போது நினைவுக்கு வந்தன. அந்தப் பயங்கரமான
கனவுகள் இப்போது மெய்யாகி விட்டன! உண்மையாகவே ஆபத்து வந்த
சமயத்தில் தான் அருகிலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாமற்
போய்விட்டது. அந்தப் பேதையின் உள்ளத்தில் இப்படி ஒரு பெரிய
ஆபத்துத் தனக்கு வரப்போகிறது என்பது எப்படியோ தோன்றியிருக்க
வேண்டும். இதன் காரணமாகத் தான் அவள் தன்னிடம் அடிக்கடி "என்னை
மறக்க மாட்டீர்கள் அல்லவா?" என்றும், "என்னைக்
கைவிடமாட்டீர்கள் அல்லவா?" என்றும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போதெல்லாம், "இதென்ன அர்த்தமில்லாத கேள்வி?" என்று மாமல்லர்
அலட்சியமாகத் திருப்பிக் கேட்பது வழக்கம். உண்மையில் அது
எவ்வளவு அர்த்த புஷ்டியுள்ள கேள்வி!
சிவகாமி! என்
கண்ணே! உன்னை மறக்க மாட்டேன்! இந்த ஜன்மத்தில் உன்னை மறக்க
மாட்டேன்! எந்த ஜன்மத்திலும் மறக்கமாட்டேன். உன்னை
என்னிடமிருந்து பிரித்த பாதகர் மேல் முதலில் பழி வாங்குவேன்!
அதற்குப் பிறகு உன்னைத் தேடிக் கொண்டு வருவேன். யமன்
உலகத்துக்கு உன்னைத் தொடர்ந்து வந்து தர்ம ராஜாவிடம், "எங்கே
என் சிவகாமி?" என்று கேட்பேன். சொர்க்க லோகத்திற்குச் சென்று
தேவேந்திரனிடம், "என் சிவகாமி எங்கே? ரம்பை, ஊர்வசி, மேனகை,
திலோத்தமை ஆகிய நாலு பேர் உங்கள் உலகில் இருக்கிறார்கள்.
எனக்கோ சிவகாமி ஒருத்திதான் இருக்கிறாள்! அவளைக் கொடுத்து
விடுங்கள்!" என்று கேட்பேன். சிவகாமி! சொர்க்க லோகத்தில் நீ
இல்லாவிட்டால் அதோடு உன்னை விட்டு விட மாட்டேன்! பிரம்மலோகம்,
வைகுண்டம், கைலாசம் ஆகிய உலகங்களில் எங்கே நீ இருந்தாலும்
உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! வருகிறேன், சிவகாமி
வருகிறேன்! கூடிய விரைவில் நீ இருக்குமிடம் வருகிறேன்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்துநான்காம் அத்தியாயம்
இந்தப் பெண் யார்?
காஞ்சிமா நகரம்
இதற்கு முன் எந்த நாளிலும் கண்டிராத அமைதியுடன் விளங்கிற்று.
பெரிய பயங்கரமான புயல் அடித்து ஓய்ந்த பிறகு ஏற்படும் அமைதியை
அது ஒத்திருந்தது. நகர வாசிகளின் மன நிலைமையும்
அதற்கேற்றபடிதான் இருந்தது. வாதாபிப் படைகள் தொண்டை நாட்டில்
சொல்லொணாத அட்டூழியங்களைச் செய்துவிட்டுப் பின்வாங்கிச்
சென்றது பற்றியும், மணிமங்கலத்திலும் சூரமாரத்திலும் நடந்த
போர்களைப் பற்றியும், காஞ்சி நகர் வாசிகளுக்கு அரைகுறையான
விவரங்கள் கிடைத்திருந்தன. மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தி
மணிமங்கலம் போர்க்களத்தில் அடைந்த காயங்களினால் யமன் உலகை
எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதும், அவரைப் பிழைப்பிக்க
அரண்மனை வைத்தியர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து
கொண்டிருப்பதும் காஞ்சி மக்களுக்குத் தெரிந்திருந்தபடியால்,
எந்த நிமிஷத்திலும் அவர்கள் "சக்கரவர்த்தி காலமானார்" என்ற
துக்கச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மணிமங்கலம்
போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த வீரர் சிலரின் மூலம்
ஆயனருடைய கால் முறிந்த செய்தியையும், சிவகாமி, சளுக்கர்களால்
சிறைப் பிடித்துக் கொண்டு போகப்பட்ட விவரத்தையும் காஞ்சி
மக்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் அவர்களுக்கு
எல்லாவற்றிலும் அதிக வேதனையை அளித்திருந்ததுடன் மகேந்திர
பல்லவரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையைப் பெரிதும்
குறைத்திருந்தது. இத்தகைய காரணங்களினால் காஞ்சி மாநகரம்
களையற்றுக் கலகலப்பற்று, சோபிதமில்லாமல் அசாதாரணமான அமைதி
குடிகொண்ட நகரமாய் விளங்கிற்று. நகரத்திலேயே இப்படி இருந்தது
என்றால் அரண்மனைக்குள்ளே கேட்க வேண்டியதில்லை. புவனமகாதேவி
மகேந்திர பல்லவரை மணந்து காஞ்சி அரண்மனைக்குள்ளே கால் வைத்த
நாளிலிருந்து, அந்த அரண்மனை ஒரு காலத்திலும் இம்மாதிரி
கலகலப்பற்றும் பிரகாசமில்லாமலும் பேய் குடிகொண்ட பழைய
மாளிகையைப் போலத் தோற்றமளித்தது கிடையாது.
காஞ்சி நகரம்
முற்றுகையிடப்பட்டிருந்த காலத்திலே கூட அந்த அரண்மனையில்
அந்தந்த நேரத்தில் கீத வாத்தியங்களின் ஒலியும், பேரிகை
முரசங்களின் கோஷமும் சங்கங்களின் முழக்கமும் ஆலாசிய மணிகளின்
சத்தமும் கேட்டுக் கொண்டுதானிருந்தன. இவற்றுடன் அரண்மனைத்
தாதிப் பெண்கள் கால்களில் அணிந்திருந்த பாதசரங்களின் கிண்கிணி
ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும். வேத மந்திரங்களின்
கோஷமும், செந்தமிழ்ப் பாடல்களின் கீதநாதமும் சில சமயங்களில்
கேட்கும். அரண்மனை முன் வாசல் முற்றத்தில் வந்து போகும்
குதிரைகளின் காலடிச் சத்தம் சதா கேட்டுக் கொண்டிருக்கும்.
இப்படியிருந்த அரண்மனையில் இப்போது ஆழ்ந்த மௌனம், பீதியை
உண்டாக்கும் பயங்கர மௌனம், குடிகொண்டிருந்தது.
மணிமங்கலம்
போர்க்களத்திலிருந்து மகேந்திர பல்லவரை எடுத்து வந்த பிறகு
இராஜ வைத்தியர்கள் அல்லும் பகலும் அவர் பக்கத்தில் இருந்து
சிகிச்சை செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் பல நாள்
நினைவற்ற நிலையிலேயே இருந்தார். சூரமாரம் போர்க்களத்திலிருந்து
மாமல்லர் திரும்பி வந்த பிறகு கூடச் சக்கரவர்த்திக்குச் சுய
நினைவு இல்லாமலிருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்
விழித்துப் பார்க்கவும் தம் எதிரிலுள்ளவர்களைத் தெரிந்து
கொள்ளவும் ஆரம்பித்தார். இனிமேல் சக்கரவர்த்தி பிழைத்துக்
கொள்வார் என்றும், ஆனால், இன்னும் சில காலம் அவரைக் கவலையுடன்
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் சொன்னார்கள்.
மாமல்லரைப் பார்க்கும் போதெல்லாம் மகேந்திரருக்கு உணர்ச்சி
அதிகமாகிப் பேசுவதற்கு முயன்றபடியால் மாமல்லர் தந்தையிடம்
அதிகமாகப் போகாமலிருப்பதே நல்லதென்று அபிப்பிராயப்பட்டார்கள்.
இதனால்
மாமல்லரின் மனவேதனையும் அமைதிக் குலைவும் அதிகமாயின. அவர் மனம்
விட்டுப் பேசுவதற்கு அரண்மனையில் யாரும் இல்லை. தளபதி
பரஞ்சோதியோ சேனைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்கு வௌியே சென்று,
வாதாபிப் படையால் ஹிம்சிக்கப்பட்ட கிராம வாசிகளுக்கு உதவி
செய்வதில் ஈடுபட்டிருந்தார். புவனமகாதேவி எப்போதும் கண்ணீரும்
கம்பலையுமாயிருந்தார். புலிகேசியை நகருக்குள் அழைப்பதால்
கேடுதான் விளையும் என்று தாம் முன்னாலேயே எச்சரித்ததை இப்போது
சொல்லிச் சொல்லி வருந்தினார். அதோடு மாமல்லருக்குப் பாண்டிய
ராஜ குமாரியை அப்போதே மணம் முடிக்காதது எவ்வளவு தவறு
என்பதையும் அடிக்கடி குறிப்பிட்டார். இந்த பேச்சு மாமல்லரின்
காதில் நாராசமாக விழுந்தது.
நாளாக ஆக,
மாமல்லருக்குச் சிவகாமியைப் பற்றி யாருடனாவது மனத்தைத் திறந்து
பேசாவிட்டால் இருதயம் வெடித்து விடும் போலிருந்தது. அப்படிப்
பேசக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆயனர் ஒருவர்தான்.
அவர்தான் சிவகாமியைப் பற்றித் தாம் பேசுவதை ஒத்த உள்ளத்துடன்
கேட்கக் கூடியவர். மேலும் அவருடைய உடல் நிலையைப் பற்றியும்
தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? பார்க்கப் போனால், தமக்கு
மகேந்திர பல்லவர் எப்படியோ, அப்படியே ஆயனரும் தந்தை தானே?
அவரைக் கவனியாமலிருப்பது எவ்வளவு பிசகு? இவ்விதம் எண்ணி
ஒருநாள் மாமல்லர் ஆயனரை அவருடைய அரண்ய வீட்டில்
பார்ப்பதற்காகத் தன்னந்தனியே குதிரை மீதேறிப் பிரயாணமானார்.
காட்டு வழியாகப்
போய்க் கொண்டிருக்கையில், அவருக்குத் தாமரைக்குளம் ஞாபகம்
வந்தது. தானும் சிவகாமியும் எத்தனையோ ஆனந்தமான நாட்களைக்
கழித்த இடம், ஒருவர்க்கொருவர் எத்தனையோ அன்பு மொழிகளைக் கூறிப்
பரவசமடைந்த இடம் அப்பேர்ப்பட்ட குளக்கரையைப் பார்க்க
வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. எனவே, பாதையை விட்டுச் சிறிது
விலகித் தாமரைக் குளக்கரையை நோக்கிக் குதிரையை மெதுவாகச்
செலுத்தினார். சற்றுத் தூரம் போனதும் அந்தக் காட்டு வழியில்
எதிரே பெண் ஒருத்தி வருவது தெரிந்தது. மாமல்லர் வருவது கண்டு
திடுக்கிட்ட தோற்றத்துடன் அவள் ஒதுங்கி நின்றாள். மாமல்லர்
தமது பரம்பரையான குலப் பண்பாட்டுக்கு உகந்தபடி அவளுடைய முகத்தை
மறுமுறை ஏறிட்டுப் பாராமல் தம் வழியே சென்றார். ஆனால், சிறிது
தூரம் சென்றதும் அந்த ஸ்திரீயின் முகம் ஏற்கெனவே பார்த்த
முகம்போல் ஞாபகத்துக்கு வந்தது. "அவள் யார்? அவளை எங்கே
பார்த்திருக்கிறோம்?" என்று எண்ணமிட்டுக் கொண்டே மாமல்லர்
தாமரைக் குளத்தை அடைந்தார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்தைந்தாம் அத்தியாயம்
கலங்கிய குளம்
ஆஹா! அந்தப் பழைய
தாமரைத் தடாகம்தானா இது? சிவகாமியும் தானும் எத்தனையோ இன்பமான
தினங்களைக் கழித்த குளக்கரைதானா இது? ஆம்; அதுதான் ஆனால் அதன்
தோற்றம் இப்போது அடியோடு மாறிப் போயிருந்தது. மாமல்லரின் மனம்
அடைந்திருந்த நிலையை அந்தத் தாமரைக்குளம் நன்கு பிரதிபலித்தது.
பளிங்குபோல் தௌிந்த தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்த தடாகத்தில்
இப்போது பெரும் பகுதி சேறாயிருந்தது. காண்போர் கண்களையும்
உள்ளத்தையும் ஒருங்கே கவர்ந்து பரவசப்படுத்திய செந்தாமரை
மலர்கள், குவிந்த மொட்டுக்கள், பச்சை வர்ணக் குடைகள் போல்
கவிந்து படர்ந்திருந்த இலைகள் - இவை ஒன்றும் இப்போது இல்லை.
யானைகளின் காலினால் சேற்றோடு சேர்த்து மிதிக்கப்பட்ட சில தாமரை
இலைகள் காணப்பட்டன. வாடி வதங்கிய இலைகளையுடைய தாமரைக் கொடிகள்
துவண்டும் உலர்ந்தும் கிடந்தன.
குளக்கரையில்
தழைத்துச் செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள்
முறிக்கப்பட்டுப் பாதி மொட்டையாகக் காணப்பட்டன. ஆ! அந்த
விசுப்பலகை! அதுவும் பாதியில் முறிந்து ஒரு பகுதி தரையில்
துகள் துகளாய்க் கிடந்தது. இன்னொரு பாதி அப்படியே பிளந்த
முனைகளுடன் நின்றது. இருதயம் உடைந்த மாமல்லர் அந்தப் பிளந்த
விசுப்பலகையின் மேல் உட்கார்ந்தார். சுற்று முற்றும்
பார்த்தார்; பழைய ஞாபகங்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு
போட்டியிட்டுக் கொண்டு வந்தன.
வசந்த காலத்தில்,
வனத்திலுள்ள மரங்களெல்லாம் புதுத் தளிர்களும் புஷ்பங்களுமாய்க்
குலுங்கிக் கொண்டிருந்த நாட்களில், எத்தனையோ தடவை சிவகாமியைத்
தேடிக் கொண்டு அவர் அங்கு வந்ததுண்டு. கானகத்துப் பட்சிகள்
கலகலவென்று சப்தித்துக் கொண்டிருந்த நேரங்களில், அவரும்
சிவகாமியும் அதே விசுப்பலகையில் உட்கார்ந்து, கண்களோடு
கண்களும் கரங்களோடு கரங்களும் இருதயத்தோடு இருதயமும் பேசும்படி
விட்டு, வாய்மூடி மௌனிகளாய் நேரம் போவது தெரியாமல்
இருந்ததுண்டு. கீழ் வான முகட்டில் பச்சை மரங்களுக்கிடையே பொற்
குடத்தைப் போல் பூரண சந்திரன் உதயமாகும்போது, அந்த
முழுமதியையும் சிவகாமியின் முகத்தையும் மாமல்லர் எத்தனை தடவை
ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்! தாமரைக் குளத்திலே ததும்பிய
தௌிந்த நீரின் விளிம்பிலே நின்று, மேலே தோன்றிய சிவகாமியின்
உண்மை உருவத்தையும் தண்ணீரிலே தெரிந்த அவளுடைய பிரதி
பிம்பத்தையும் மாறி மாறிப் பார்த்து மகிழ்ந்தது எத்தனையோ நாள்!
இம்மாதிரி ஞாபகங்கள் எல்லாம் மாமல்லருக்கு ஆரம்பத்தில்
இன்பத்தையளித்தன. ஆனால் இடையிடையே, "இனிமேல் அந்த மாதிரி
அனுபவங்கள் நமக்குக் கிட்டப் போவதே இல்லை" என்ற நினைவு
வந்ததும் மனத்தில் கொடிய வேதனை உண்டாயிற்று. இனிமேல் பொறுக்க
முடியாது என்ற மனோநிலை ஏற்பட்டதும் மாமல்லர் குதித்து
எழுந்தார். விரைந்து சென்று குதிரை மீது தாவி ஏறி ஆயனர் வீட்டை
நோக்கிச் செலுத்தினார்.
காஞ்சியிலிருந்து
புறப்பட்ட சமயம் அவர் மனத்திலிருந்த அமைதி இப்போது இல்லை.
அமைதிக்குப் பதிலாக இப்போது கோபமும் ஆத்திரமும் அவர் மனத்தில்
குடிகொண்டிருந்தன. சிவகாமியைக் கொள்ளை கொண்டுபோன சளுக்கப்
பகைவர்கள் மீது குரோதம் எழுந்தது. மூடத்தனத்தினால் சிவகாமியைப்
பறி கொடுத்த ஆயனர்மீது கோபம் கோபமாக வந்தது. புத்த பிக்ஷுவின்
மீது இன்னதென்று விவரமாகாத சந்தேகமும் கோபமும் ஏற்பட்டன. ஆ!
அந்தப் பாஷாண்டியினிடம் அவருக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம்
கிடையாது. பிக்ஷு மனம் வைத்திருந்தால் சிவகாமியைக்
காப்பாற்றியிருக்கலாமல்லவா? ஏன் காப்பாற்றவில்லை? ஏன் ஆயனரிடம்
செய்தி ஒன்றும் சொல்லவில்லை? பிக்ஷு என்ன ஆனார்? எப்படி
மாயமாய் மறைந்தார்?
சிவகாமியின்
அரங்கேற்றம் தடைப்பட்ட அன்றிரவு இராஜ விஹாரத்தின் அருகில்
புத்த பிக்ஷுவைச் சுட்டிக் காட்டிச் சக்கரவர்த்தி தமக்கு
எச்சரித்தது மாமல்லருக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகம் வந்தது.
உடனே, கோபம் தந்தையின் பேரிலேயே திரும்பிற்று. மகேந்திர
பல்லவரின் மந்திர தந்திரங்கள், சூழ்ச்சிகள், வேஷங்கள்
இவற்றினாலேதான் பல்லவ இராஜ்யம் இன்றைக்கு இந்தக் கதியை
அடைந்திருக்கிறது! தாமும் சிவகாமியை இழக்கும்படி
நேரிட்டிருக்கிறது! திடீரென்று ஒரு விபரீதமான சந்தேகம்
மாமல்லரின் உள்ளத்தில் உதித்தது. ஒருவேளை சிவகாமி சிறைப்படும்
வண்ணம் சூழ்ச்சி செய்தவர் மகேந்திர பல்லவர்தானோ? இல்லாவிடில்
எதற்காகத் தன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு,
மண்டபப்பட்டு கிராமத்திலிருந்து சிவகாமியைத் தருவிக்கிறார்?
எதற்காக அரண்மனைத் தோட்டத்தில் ஒரு சுரங்க வழியை ஏற்படுத்தி
அதைக் கண்ணபிரானின் மனைவிக்குத் தெரியும்படி செய்திருக்கிறார்?
ஒருவேளை அந்தப் பெண் கமலி கூடச் சக்கரவர்த்தியின் சதிக்கு
உடந்தையாயிருந்திருப்பாளோ? எல்லாரும் சேர்ந்து தன்னை இப்படி
வஞ்சித்துவிட்டார்களோ! ஆஹா! இது என்ன சதிகார உலகம்? துரோகமும்,
தீவினையும் நிறைந்த சதிகார உலகம்!
இத்தகைய
மனோநிலையில் மாமல்லர், ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்து
சேர்ந்தார். சிவகாமி சிறைப்பட்டது சம்பந்தமாக மர்மமாகவும்,
விளங்காமலும் இருந்த சில விஷயங்களை ஆயனரிடம் கேட்டுத் தெரிந்து
கொள்ள அவர் விரும்பினார். வீட்டு வாசலுக்குச் சற்றுத்
தூரத்திலேயே குதிரையை நிறுத்தி விட்டுத் தாமும் சற்று அங்கேயே
நின்று மனத்தை அமைதிப்படுத்திக் கொண்டார். பிறகு சாவதானமாக
நடந்து வந்து ஆயனர் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள்ளே
பேச்சுக் குரல் கேட்டது அவருக்குச் சிறிது வியப்பையளித்தது.
ஆயனர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்? உள்ளே சிற்ப
மண்டபத்தில் ஆயனருக்கு அருகில் உட்கார்ந்திருந்த மனிதனைப்
பார்த்ததும் மாமல்லருடைய வியப்பு அளவு கடந்தது. அந்த மனிதன்
ஒற்றர் தலைவன் சத்ருக்னன்தான்!
சத்ருக்னனை அங்கே
கண்டதுகூட மாமல்லருக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை.
சத்ருக்னனுடைய முகத்தைப் பார்த்ததும் பளிச்சென்று இன்னொரு
முகம் ஞாபகத்துக்கு வந்தது. அப்படி ஞாபகத்துக்கு வந்த முகம்
சற்று முன்னால் காட்டுப் பாதையில் அவர் பார்த்த பெண்ணின்
முகமேதான்! என்ன அதிசயமான ஒற்றுமை? ஒருவேளை சத்ருக்னனுடைய
தங்கை அல்லது தமக்கையோ அவள்? அல்லது ஒருவேளை இவனே...? சந்தேகம்
தோன்றிய ஒரு கணத்திற்குள்ளேயே அது தீர்ந்து விட்டது.
சத்ருக்னனுக்கு அருகில் ஒரு சேலையும், மற்றும்
ஸ்திரீகளுக்குரிய சில ஆபரணங்களும் கிடந்ததை நரசிம்ம பல்லவர்
பார்த்தார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்தாறாம் அத்தியாயம்
சத்ருக்னன் வரலாறு
வாசற்படியில்
மாமல்லர் வந்து நின்றதைச் சத்ருக்னனும் ஆயனரும் கவனிக்கவில்லை.
அவ்வளவுக்குத் தங்களுடைய பேச்சில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள்.
மண்டபத்துக்குள்ளே மாமல்லர் பிரவேசித்ததும் இருவரும் ஏக
காலத்தில் நிமிர்ந்து பார்த்தார்கள். சத்ருக்னன் சட்டென்று
எழுந்து நின்று, "பிரபு!" என்றான். மேலே ஒன்றும் சொல்ல
முடியாமல் அவன் திகைத்தான். ஆயனரோ முகத்தில் உற்சாகமும்
குதூகலமும் ததும்ப சாய்ந்து படுத்திருந்தவர் நிமிர்ந்து
எழுந்து உட்கார்ந்து "பிரபு! வாருங்கள்! வாருங்கள்!
தங்களைத்தான் இப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். சத்ருக்னன்
நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறான். குழந்தை சிவகாமி உயிரோடு
சௌக்கியமாயிருக்கிறாளாம்!" என்றார்.
இதைக் கேட்ட
மாமல்லரின் தலை சுழல்வது போலிருந்தது. ஆயனருக்கு அருகில் வந்து
நின்ு சத்ருக்னனை ஏறிட்டுப் பார்த்த வண்ணம், "சத்ருக்னா! இது
உண்மைதானா?" என்று கேட்டார். "ஆம் பிரபு! உண்மைதான்!" என்று
சத்ருக்னன் கூறிவிட்டுக் கைகூப்பிய வண்ணம், "பல்லவ குமாரா!
சற்று முன்பு காட்டுப் பாதையில் தங்களைக் கண்டபோது பேசாமல்
வந்துவிட்டேன், அதற்காக மன்னிக்க வேண்டும். திடீரென்று
தங்களைப் பார்த்ததும் பேசக் கூச்சமாயிருந்தது!" என்று பணிந்த
குரலில் கூறினான். "அந்தப் பெண் நீதானா? நல்ல வேஷம்!" என்றார்
மாமல்லர். "ஆமாம், நானுங்கூடச் சற்று முன்பு திகைத்துப் போய்
விட்டேன். பெண் பிள்ளை வேஷம் எவ்வளவு நன்றாய் இவனுக்குப்
பலித்திருக்கிறது? சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு
பொருத்தமாய் ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்?" என்றார் ஆயனர்.
மாமல்லர் மெல்லிய
குரலில், "சக்கரவர்த்தியின் சாமர்த்தியத்தை நீங்கள்தான்
மெச்சிக் கொள்ள வேண்டும்!" என்று முணு முணுத்துக் கொண்டார்.
பிறகு, சத்ருக்னனைப் பார்த்து, "எதற்காக ஸ்திரீ வேஷம்
போட்டாய்?" என்று கேட்டார். "சத்ருக்னன் அந்த வேஷம்
போட்டதனால்தான் சிவகாமியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
தயவு செய்து உட்காருங்கள்; சத்ருக்னன் எல்லாம் விவரமாய்ச்
சொல்லட்டும். நானும் இன்னொரு முறை கேட்டுக் கொள்கிறேன்"
என்றார் ஆயனர். மாமல்லர் உட்கார்ந்தார், சத்ருக்னனும்
உட்கார்ந்து தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான் அந்த வரலாறு
இதுதான்:
"ஆயனரும்
சிவகாமியும் காஞ்சிக் கோட்டையிலிருந்து சுரங்க வழியாக வௌியே
போய் விட்டார்கள் என்று தெரிந்ததும் சக்கரவர்த்திக்கு இடி
விழுந்தது போலாகி விட்டது. உடனே தாமும் கோட்டைக்கு வௌியே போகத்
தீர்மானித்துப் படைகளை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டார்.
பிறகு என்னைத் தனியாகக் கூப்பிட்டு, 'சத்ருக்னா! நீ இதுவரையில்
பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எத்தனையோ சேவைகள் செய்திருக்கிறாய்.
ஆனால், அவை எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமான சேவை இப்போது
செய்ய வேண்டும். மாமல்லன் மட்டும் இப்போது இங்கிருந்தால் நானே
அந்த வேலையை மேற்கொள்வேன். பல்லவ குலத்தின் மானத்தைக்
காப்பதற்காக நான் இப்போது போருக்குப் புறப்பட
வேண்டியிருக்கிறது. சிவகாமியைக் கண்டு பிடித்து அவளைத்
திருப்பிக் கொண்டு வரும் வேலையை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
சிவகாமியை மீட்டுக் கொண்டு வர முடியாவிட்டால் அவளைப்
பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்' என்று கட்டளையிட்டார். இதைக்
கேட்டு நான் திகைத்துப் போனேன். 'பிரபு! சிவகாமி அம்மை
சளுக்கரிடம் சிறைப்பட்டிருந்தால் தன்னந்தனியாக நான் என்ன
செய்வேன்?' என்றேன். 'கஷ்டமான காரியமானபடியால்தான் உன்னிடம்
ஒப்படைக்கிறேன், சத்ருக்னா! நீ இதுவரை எத்தனையோ வேஷங்கள்
போட்டிருக்கிறாய். அவை எல்லாவற்றையும் விட உனக்கு நன்றாகப்
பலிக்ககூடிய வேஷம் ஒன்று இருக்கிறது, அது பெண் வேஷந்தான்!"
என்றார். சக்கரவர்த்தியின் கருத்தை நான் உடனே தெரிந்து
கொண்டேன். சற்றுமுன் பார்த்தீர்களே! அம்மாதிரி வேஷம் தரித்துக்
கொண்டு காஞ்சியை விட்டுக் கிளம்பி முதலில் இந்த வீட்டுக்கு
வந்து சேர்ந்தேன்.
"நான் வரும்
சமயத்திலேதான் இவரை ஸ்மரணையற்ற நிலையில் இந்த வீட்டுக்குள்ளே
கொண்டு வந்தார்கள். இவரோடு சிவகாமி தேவி வரவில்லை; எனவே, தேவி
சளுக்கரிடம் சிறைப்பட்டுத்தான் இருக்க வேண்டுமென்று
தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டேன். காஞ்சிக் கோட்டையைச்
சுற்றிச் சென்றேன். சளுக்க ராட்சதர்களின் கூக்குரல் கேட்ட
இடங்களிலெல்லாம் மறைந்திருந்து கவனித்தேன். கடைசியில்
காஞ்சிக்கு வடமேற்கே ஒரு பெரிய சளுக்கர் படை வட திசையை
நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தப்
பெருங்கும்பலுக்கு மத்தியிலிருந்து ஸ்திரீகள் புலம்பி அழும்
சத்தம் வந்து கொண்டிருந்தது. இன்னும் அருகில் சென்று பார்த்த
போது, அவ்வாறு ஓலமிட்ட ஸ்திரீகள் நம் கிராமங்களில் சிறைப்
பிடிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்தது. அந்தப் பெண்களுக்கு
நடுவே பல்லக்கு ஒன்றும் காணப்பட்டது. அதில் இருந்தவர் சிவகாமி
தேவிதான் என்று தெரிந்து கொண்டேன்.
"சற்று
நேரத்துக்கெல்லாம் நான் தலை விரிகோலமாய் 'ஓ' என்று ஓலமிட்டுக்
கொண்டு அந்தப் படையை நோக்கி ஓடினேன். பின்னால் என்னை யாரோ
துரத்தி வருவதுபோலப் பாசாங்கு செய்து திரும்பித் திரும்பிப்
பார்த்துக் கொண்டு ஓடினேன். சளுக்கர்கள், 'வந்தாயா? வா!' என்று
பரிகாசக் குரலில் கூறிக்கொண்டு என்னை அழைத்துப்போய் மற்றச்
சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களுடனே சேர்த்து விட்டார்கள். சற்று
நேரம் மற்றப் பெண்களைப் போல் நானும் ஓலமிட்டுக்
கொண்டிருந்தேன். பிறகு மெள்ள மெள்ளப் பல்லக்கை நெருங்கிச்
சென்று அதிலிருப்பது சிவகாமி அம்மைதான் என்று உறுதிப்படுத்திக்
கொண்டேன். சிவகாமியை அவ்வளவு மரியாதையுடன் அழைத்துபோன
காரணத்தையும் ஊகித்தறிந்தேன். அந்தச் சளுக்கர் படையின்
தலைவனாகிய தளபதி சசாங்கன், சிவகாமி அம்மையைப் பத்திரமாய்க்
கொண்டுபோய் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் ஒப்புவித்துப் பல்லவ
நாட்டின் சிறந்த கலைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வந்ததற்காகப்
பரிசு கேட்கப் போகிறான்! இந்த எண்ணத்தினால் எனக்கு ஒருவாறு
மனநிம்மதி ஏற்பட்டது. சிவகாமி அம்மைக்கு உடனே தீங்கு எதுவும்
நேராது என்று தைரியம் அடைந்தேன். ஆனால், சளுக்க ராட்சதப்
படையால் சூழப்பட்ட சிவகாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தி
அழைத்துச் செல்வது சாத்தியமான காரியமாகவே தோன்றவில்லை.
எத்தனையோ உபாயங்கள் யோசித்து யோசித்துப் பயன்படாது என்று
கைவிட்டேன்.
"இதற்கிடையில்
எல்லாரும் வடதிசை நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தோம். வெள்ளாறு
என்று வழங்கும் பொன்முகலியாற்றங்கரைக்குப் போய்த் தங்கினோம்.
இவ்விடத்தில் தளபதி சசாங்கன் பெரு மனக்குழப்பத்தை அடைந்தவனாகக்
காணப்பட்டான். அதன் காரணமும் சளுக்க வீரர்களின்
சம்பாஷணைகளிலிருந்து தெரிந்து கொண்டேன். மணிமங்கலத்தில்
வாதாபிச் சக்கரவர்த்திக்கும் மகேந்திர பல்லவருக்கும் நடந்த
பெரும் போரைப் பற்றித் தூதர்கள் கொண்டு வந்த செய்திதான்
காரணம். இந்தச் செய்தி தளபதி சசாங்கனுக்கு அவ்வளவு குழப்பம்
ஏன் அளித்தது என்பதையும் நான் ஊகித்தறிந்தேன். வாதாபிச்
சைனியத்தில் பெரும் பகுதியுடன் புலிகேசி முன்னால் சென்று
விட்டதாகவும், இதற்குள்ளாக அவர் வடபெண்ணைக் கரையை அடைந்திருக்க
வேண்டும் என்றும் சசாங்கன் எண்ணிக் கொண்டிருந்தான். இப்போது
புலிகேசி தனக்குப் பின்னால் தங்கி மாமல்லபுரத்துக்குப்
பக்கத்தில் மணிமங்கலத்தில் சண்டையிட்டதாகச் செய்தி வந்ததும்
சசாங்கன் திகைத்தது இயற்கைதானே? சக்கரவர்த்தியைப் பின்னால்
விட்டுவிட்டுத் தான் முன்னால் ஓடி வந்தது பற்றி அவருக்குக்
கோபமோ என்னவோ என்று சசாங்கன் ரொம்பவும் தவித்துக்
கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பொன் முகலி ஆற்றங்கரைக்கு நாங்கள்
வந்து சேர்ந்த மறுநாள் சசாங்கன் தன் சளுக்கப் படைகளுடன்
தென்கரையில் இருந்து கொண்டு சிறைப்பிடித்த ஸ்திரீகளாகிய எங்களை
மட்டும் அக்கரைக்கு அனுப்பினான். எங்களைக் காவல் புரிவதற்குச்
சில சளுக்க வீரர்களை உடன் அனுப்பி வைத்தான்.
"அக்கரை
சென்றதும், 'இது ஒரு நல்ல சந்தர்ப்பம்; சிவகாமி அம்மையை
அழைத்துக கொண்டு போய்ப் பக்கத்தில் காணப்படும் குன்றுகளிலே
ஒளிந்து கொள்ளலாம். காவலர்கள் சிலர்தான் இருப்பதால்
அவர்களுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் தப்பிச் செல்லலாம்'
என்று தீர்மானித்தேன். அன்றிரவு, எல்லோரும் தூங்க யத்தனம்
செய்த சமயத்தில் நான் சிவகாமி அம்மையின் அருகில் இருக்கும்படி
ஏற்பாடு செய்து கொண்டேன். மற்றப் பெண்கள் எல்லாரும் தூங்கிய
பிறகு பிராகிருத பாஷையில் என்னை இன்னானென்று தெரிவித்துக்
கொண்டேன். சிவகாமி முதலில் பெரிதும் ஆச்சரியமடைந்தார். பிறகு,
ஆயனரைப் பற்றிக் கேட்டார்; தங்களைப் பற்றியும் விசாரித்தார்.
ஆனால் தங்களைப்பற்றி எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
தாங்கள் தெற்கேயிருந்து திரும்பி வந்த விவரமே தெரியாது.
ஆகையால், ஆயனர் உயிர் பிழைத்திருக்கிறார் என்ற விவரத்தை
மட்டும் சொன்னேன். பிறகு மெள்ள, மெள்ள என் யோசனையையும்
தெரிவித்தேன். பிரபு! என்னுடைய ஏமாற்றத்தை என்னவென்று
சொல்வேன்...."
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்தேழாம்அத்தியாயம்
புலிகேசியும் சிவகாமியும்
சத்ருக்னன்
கூறிவந்த வரலாற்றில் மேற்கண்ட இடத்திற்கு வந்ததும்
மாமல்லருக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. மேலே நடந்ததை
தெரிந்து கொள்ள அவர் அவ்வளவு ஆவலாக இருந்தார். ஒருகணநேரத்தில்
அவருடைய மனம் என்னவெல்லாமோ கற்பனை செய்தது. சத்ருக்கனனும்
சிவகாமியும் புறப்பட்டு ஓடிவந்திருக்கவேண்டும் என்றும்,
மறுபடியும் வழியில் அவளுக்குஏதாவது ஆபத்து நேர்ந்திருக்க
வேண்டுமென்று நினைத்தார்.அவளை அந்த ஆபத்திலிருந்து மீட்டுக்
கொண்டு வருவதற்கு அவருடைய உள்ளம் துடித்தது.
"சத்ருக்னா ஏன்
இப்படிக் கதையை வளர்த்திக் கொண்டுருக்கிறாய்? சிவகாமியை எங்கே
விட்டு விட்டு வந்தாய்? சீக்கிரம் சொல்லு,, என்று
ஆத்திரத்துடன் கேட்டார். "பிரபு, சிவகாமியம்மை இப்போது
வடபெண்ணை நதிக்கு அப்பால் போய்க்கொண்டுருப்பார்! பொன்முகலி
ஆற்றுக்கும் வடபெண்ணைக்கும் மத்தியில் அவரை விட்டு விட்டு
வந்தேன். பாவி!" என்று சத்ருக்னன் துயரக்குரலில்
கூறினான்.மாமல்லரின் கண்களில் தழற்பொறி பறந்தது. புலிகேசியிடம்
வந்த கோபத்தைக் காட்டிலும் சத்ருக்னனிடம் அதிக கோபம் வந்ததாகத்
தேன்றியது
"இதெரன்ன ?
சிவகாமியைப் புலிகேசியிடம் விட்டுவட்டு நீ மட்டும் தப்பி
வந்தாயா? சத்ருக்னா! என்னிடம் விளையாட வேண்டாம் சீக்கிரம்
விஷயத்தைச்சொல்!" என்று கர்ஜனை புரிந்தார். அப்போது ஆயனார்,
மாமல்லருக்குக் காரணம் விளங்காத உற்சாகம் நிறைந்த குரலில் ,
"பிரபு! சத்ருக்னன் சொல்கிறபடிசொல்லிவரட்டும். தயவு செய்து
சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள்!" என்றார். சத்ருக்கக்
மறுபடியும் சொல்லத்தொடங்கினான்:
"சிவகாமி அம்மை
உடனே என்னுடைய யோசனையைச் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டு
தப்பிச்செல்ல இணங்குவார் என்று எதிர்பார்த்தேன். இதில் பெறும்
ஏமாற்றம் அடைந்தேன். அதுவரை தைரியமாய் இருந்த சிவகாமி அம்மை
என்னுடைய யோசனையைக் கேட்டதும் திடீரென்று விம்மி
அழத்தொடங்கினார். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பினார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன்.
அப்போது சிவகாமி அம்மை என்னை வெறித்துப் பார்த்து, 'அவருடைய
வாக்குறுதியை நம்பி இந்த கதி அடைந்தேன்'. என்றார். உடனே,
'இல்லை, இல்லை. அவர் பேச்சைக் கேளாததால் இன்த விபரீதம் வந்தது.
இனி அவருடைய முகத்தில் எப்படி விழிப்பேன்?' என்றார். இன்னும்
என்னவெல்லாமோ சம்பந்தமற்ற வார்த்தைகளைச் சென்னார்.
இதனாலெல்லாம் என் திகைப்பு அதிகமாயிற்று.ஒருவேளை அவருக்குச்
சித்தப்பிரமை ஏற்பட்டுவிட்டதோ என்று மிகவும் பயந்து போனேன்.
பிறகு,
சளுக்கியர் படை நம் கிராமங்களில் செய்த அட்டூழியங்களைத் தம்
கண்ணால் பார்த்தது பற்றி சிவகாமி அம்மை சொல்ல ஆரம்பித்தார்.
அப்புறந்தான் அவர் அறிவுத்தௌிவைப் பற்றி எனக்கு ஏற்பட்ட
சந்தேகம் நீங்கிற்று.அவர் சொன்னவற்றை யெல்லாம் சிறிது நேரம்
நான் பொறுமையாகக் கேடடேன். பிறகு, 'அம்மா! மகேந்திர பல்லவரும்
மாமல்லரும் இதற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்குவார்கள்!'
என்றேன். அப்போது சிவகாமி அம்மைக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும்
ஆவேசத்தையும் பார்க்க வேண்டுமே? 'ஆம், சத்ருக்னா! ஆம்!
பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும்' என்று அவர் அப்போது
போட்ட கூச்சலினால் காவலர்கள் சந்தகம் கொள்ளாமல் இருக்க
வேண்டுமே என்று எனக்கு பயமாய்ப்போய்வட்டது. நல்லவேளை அங்கே
ஸ்தரீகள் துக்கத்திலே புலம்புவதும் பிதற்றுவதும் சகமாய்
இருந்தபடியால், சிவகாமி அம்மையின் கூச்சல் காவலர்களின்
கவனத்தைக் கவரவில்லை.
"பிறகு நான் அவரை
மெல்ல மெல்ல சாந்தப்படுத்தினேன். மறுபடியும் தப்பிச்செல்லும்
யோசனையைக் கூறினேன். அப்போது அவர் என்னை வெறித்துப் பார்த்து,
"ஐயா என்னைபோல் ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில்
சிலர் கட்டிய புருஷனை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். சிலர்
கைக்குழந்தைகளை கதறவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம்
அந்த சாளுக்கிய ராட்சதரர்கள் கொண்டுபோகும்படி விட்டுவிட்டு
நான்மட்டும் தப்பிச்செல்லவேண்டுமா? எனக்கு தாலிகட்டிய கணவண்
இல்லை;. வயிற்றில் பிறந்த குழந்தையும் இல்லை. நான் எக்கேடு
கெட்டுப்போனால் என்ன? என்னை விட்டுவிடுங்கள்; இங்குள்ள
கைக்குழந்தைக்காரிகளில் யாராவது ஒருத்தியைக் அழைத்துப்போங்கள்
உஙகளுக்கு புண்ணியம் உண்டாகும்' என்றார். என்மனமும்
இளகிவிட்டது. ஆயினும் மனதை கெட்டிபடுத்திக்கொண்டு, 'அம்மா!
மகேந்திர சக்கிரவர்த்தி எனக்கு இட்ட கட்டளை தங்களைப்
பத்திரமாய் அழைத்து வரவேண்டும் என்பதுதான் 'நான்
சக்கிரவர்த்தியின் ஊழியன். அவருடைய கட்டளையை
நிறைவேற்றவேண்டியவன்' என்றேன். இதனால் அவருக்கு மனம் மாறாது
என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. ஆதலின் மறுபடியும் 'அம்மா!
உங்களுக்கு புருஷனில்லை. குழந்தையில்லை எனபது உண்மைதான். ஆனால்
தந்தை ஓருவர் இருக்கிறார் அல்லவா? ஏகபுத்திரியாகிய தங்களைப்
பிரிந்து அவர்மனம் என்ன பாடுபடும்? அதை யோசிக்க வேண்டாமா'
என்றேன்.
"சிவகாமி
அம்மையின் கண்களில் அப்போது கண்களில் கண்ணீர் துளித்தது.
தழுதழுத்த குரலில், 'ஆம் என் தந்தைக்கு பெரிய துரோகம்
செய்துவிட்டேன் . ஐயோ! அவர் பிழைத்தாரோ இல்லையோ?' என்றார்.
'அம்மா! அவரை பிழைப்பிக்க விரும்பினால் நீங்கள் என்னுடன் உடனே
புறப்பட வேண்டும்!' என்றேன்நான். சிவகாமி அம்மை மறுபடியும்
முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விம்மினாள். சீக்கிரம் கையை
எடுத்துவிட்டு, 'ஐயா இன்று ஒருநாளைக்கு அவகாசம் கொடுங்கள். என்
உடம்பும் உள்ளமும் சோர்ந்து போயிருக்கின்றன. இப்போது நான்
புறப்பட எண்ணினாலும் ஓர் அடி கூட என்னால் எடுத்து வைக்க
முடியாது. நாளுக்கு முடிவாகச்சொல்கிறேன்' என்றார். நானும்
அவருக்கு ஒருநாள் அவகாசம் கொடுப்பது நல்லது என்று எண்ணி,
'ஆகட்டும், அம்மா! ஒருநாளில் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை.
நாளைக்கே முடிவுசெய்யலாம்' என்று சொன்னேன்.
"மறுநா்
இராத்திரி எப்படியாவது அவருடைய மனத்தைத் திருப்பி அவரையும்
அழைத்துக் கொண்டு திரும்பலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால்
மறுநாள் மாலை நான் சற்றும் எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது.
சளுக்கிய சக்ரவர்த்தி புலிகேசி பொன்முகலியாற்றைக்கடந்து வந்து
எங்களுடன் சேர்ந்து கொண்டார். அவருடன் சிறு சைன்யமும் வந்தது!
தளபதி சசாங்கனை அங்கேயே காவலுக்கு நிறுத்தி விட்டு இவர்
மட்டும் முன்னால் செல்ல தீர்மானித்து வந்திருக்கிறார் என்று
ஊகித்தேன். அதன்படியே அன்று இரவுக்கிரவே எல்லோரும் வடக்கு
நோக்கி பிரயாணமானோம். எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும்
துக்கத்தையும் சொல்லி முடியாது. வழியில் சிவகாமி அம்மையோடு
தனியாயிருக்க நேர்ந்த போது, 'அம்மா! இப்படி செய்து
விட்டீர்களே!' என்றேன். 'நானா செய்தேன்? விதி இப்படி இருக்கும்
போது நான் என்ன செய்வேன்!' என்றார் சிவகாமி.
இரண்டுநாள்
பிரயாணத்திற்குப் பிறகு மூன்றாவதுநாள் திருவேங்கடமலையின்
அடிவாரத்தில் சென்று தங்கினோம். முதல் இரண்டுநாள் பிரயாணத்தில்
புலிகேசி நாங்கள் தங்கியிருந்த பக்கம் வரவேயில்லை. முன்றாம்
நாள் நாங்கள் ஒரு பாறையின் பக்கத்தில் தங்கி இருந்தோம்.
சமீபத்தில் குதிரைகளின் காலடிச்சத்தம் கேட்டது. சிறிது
நேரத்திற்கெல்லாம் புலிகேசியும் இன்னும் சில குதிரை வீரர்களும்
அந்தப் பாறையின் திருப்பத்தில் வந்து நின்றார்கள். சக்ரவர்த்தி
குதிரை மேலிறிங்கி எங்கள் அருகில் வருவாரோ என்று நான்
எதிர்பார்த்தேன். அவ்விதம் நாடபெறவில்லை. சற்று நின்று
பார்த்துவிட்டுச் சக்ரவர்த்தி குதிரையை திருப்ப யத்தனித்த
போதுதான் சற்றும் எதிர்பாராத அதிசயச்சம்பவம் நடைபெற்றது.
கண்ணைமுடித்திறக்கும் நேரத்தில் சிவகாமி பெண்கள் கூட்டத்தின்
மத்தியிலிருந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்த ஓடினார். புலிகேசியின்
குதிரைக்கு எதிரில் வழிமறித்து நின்று, 'சக்கிரவர்த்தி! ஒரு
விண்ணப்பம்' என்று அலறினார்.
"சிவகாமியம்மையின் அலறலைக்கேட்டு அந்தக் கல்நெஞ்சன் புலிகேசி
மனம்கூட இளகி இருக்க வேண்டும். உடனே, சிவகாமியின் அருகில்
வந்தார். 'பெண்ணே! என்ன விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்?'
என்று கேட்டார். ஆகா! அப்போது சிவகாமி அம்மையின்
வாக்கிலிருந்து வந்த ஆவேச மொழிகளை எவ்விதம் வர்ணிப்பேன்!
அத்தனை தைரியமும், சாமர்த்தியமும், வாக்கு வன்மையும அவருக்கு
எங்கிருந்துதான் வந்ததோ, அறியேன். கம்பீரமாகப் புலிகேசியை
நிமிர்ந்து பார்த்து, தழுதழுத்த குரலில், சிவகாமி அம்மை கூறிய
மொழிகளை ஏதொ எனக்கு ஞாபகம் உள்ள வரையில் கூறுகிறேன்.
"ஐயா பூமண்டத்தை
ஆளும் மன்னர்களாகிய நீங்கள் உங்களுடைய வீரத்தையும் புகழையும்
நிலைநாட்டிக்கொள்ள யுத்தம் செய்கிறீர்கள். இன்றைக்கு
எதிரிகளாய் இருக்கிறீர்கள்; நாளைக்குச் சினேகிதளாகீர்கள்.
இன்றைக்கு ஒருவனுடைய அரண்மனையில் இன்னொருவர்
விருந்தாளியாயிருக்கிறீர்கள். மறுநாள் போர்களத்தில் யுத்தம்
செய்கிறீர்கள். உங்களுடைய சண்டையிலே ஏழைப்பெண்களாகிய எங்களை
ஏன் வாட்ட வேண்டும்? உங்களுக்கு நாங்கள் என்ன கெடுதல்
செய்தோம்? கருணை கூர்ந்து எங்களையெல்லாம் திருப்பி அனுப்பி
விடுங்கள். இங்கே சிறை பிடித்து வைத்திருக்கும் பெண்களில்
சிலர் கைக்குழந்தைகளை கதறவிட்டு வந்திருக்கிறார்கள். இன்னும்
அநேகர் கையில் திருமணக் கங்கணத்துடன் வந்திருக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் நீங்கள் விடுதலை செய்து அனுப்பாவிட்டால்,
தங்களுடைய நகரமாகிய வாதாபியை அடைவதற்குள் அவர்களுகஙகுப்
பைத்தியம் பிடித்துவிடும். திக்விஜயம் செய்து விட்டுத்
தலைநகருக்கு திரும்பும்போது சித்தப் பிரமை பிடித்த ஆயிரம்
ஸ்தரீகளை அழைத்துக்கொண்டு போவீர்களா? அதில் உங்களுக்கு என்ன
லாபம்? ஆயிரம் பெண்கள் மனமார வாயாரத் தங்களை வாழ்த்திக் கொண்டு
வீடு திரும்பும்படி செய்யுங்கள்!' - இப்படிக் கல்லுங்
கரையுமாறு சிவகாமியம்மை கேட்டதற்கு, 'பெண்ணே! உன்னுடைய பாவ
அபிநயக்கலை சாமர்த்தியங்களை யெல்லாம் நாட்டியக் கச்சேரியில்
காட்டவேண்டும்; இங்கே போர்களத்திலே காட்டி என்ன பிரயோஜனம்!'
என்றான் அந்த ரஸிக்கத்தன்மையற்ற நிர்மூடன்!......"
சத்ருக்னன்
இவ்வாறு சொன்னபோது, மாமல்லர் ஓர் நெடுமூச்சுவிட்டு, ஆகா!
ஆயனாரின் மகள் அந்த நீசனிடம் போய்க் காலில் வீழ்ந்து வரம்
கேட்டாள் அல்லவா? அவளுக்கு வேண்டுயதுதான்!" என்ற கொதிப்புடன்
கூறினார்.
சத்ருக்னன் மேலே
சொன்னான்: "ஆம் பிரபு! சிவகாமி அம்மையும் தங்களைபப்போலவே
எண்ணியதாகத் தோன்றியது. புலிகேசியின் மறுமொழியைக்கேட்டு அவர்
தலையைக் குனிந்து கொண்டார். சிறிது நேரம் தரையைப் பாார்த்த
வண்ணம் இருந்தார். அப்போது அந்த சண்டாளப்பாவி, 'பெண்ணே! உன்
அபிநய சாகஸத்தைக்கண்டு நான் ஏமாந்து விடமாட்டேன். ஆனால் உன்
பேச்சில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. ஆகையால் உன்வேண்டுகோைளு
நிறைவேற்ற இணங்குகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. நீ இந்தப்
பெண்களுக்காக மிகவும் இரங்கிப் பேசினாய். உன்னுடைய இரக்கம்
வெறும் பாசாங்கு இல்லை என்பதை நீ நிரூபிக்க வேண்டும். இவர்கள்
கட்டிய கணவனை பிரிந்து வந்தார்கள் என்றும், கைக் குழந்தையைப்
பிரிந்து வந்தவர்கள் என்றும் சொன்னாயல்லவா? ஆனால் உனக்கு
கணவனுமில்லை. குழந்தையுமில்லை. நீ என்னுடன் வாதாபிக்கு வர
சம்மதிக்கிராயா, சொல்லு! சம்மதித்தால் உன்னைத்தவிர இவர்கள்
எல்லோரையுமே இந்தக்கணமே விடுதலை செய்து அனுப்பி விடுகிறேன்'
என்றான். அந்த மொழியைக் கேட்டதும் அந்தப் பாவியை கொன்றுவிடலாமா
என்று எண்ணினேன்.
மாமல்லர்
குறுக்கிட்டு, "நிபந்தனைக்குச் சிவகாமி சம்மதித்தாளா?" என்று
குரோதம் ததும்பிய குரலில்கேட்டார். "ஆம்பிரபு!
சிவகாமிஒருகணங்கூடதாமதிக்கவில்லை. உடனே எழுந்து நின்று,
"சம்மதம், சக்கிரவர்த்தி! நிபந்தனையை ஒப்புக்கொள்கிறேன்!
என்றார். அச்சமயம் சிவகாமி அம்மை நின்ற நிலையும், அவருடைய
முகத்தோன்றமும் தெய்வீகமாய் இருந்தது! இராவணனுக்கு முன்னால்
நின்ற சீதையையும், துரியோதனன் சபையில் நின்ற பாஞ்சாலியையும்,
யமன் முன்னால் வாதாடிய சாவித்திரியையும், பாண்டியன் முன்னால்
நின்ற கண்ணகியையும் ஒத்து அச்சமயம் ஆயனாரின் திருக்குமாரி
விளக்கினார்.....". சத்ருக்னா உன்னுடைய! பரவச வர்ணணனை அப்புறம்
இருக்கட்டும், பின்னே என்ன நடந்தது?" என்று மாமல்லர் கேட்டார்.
"சற்று
நேரத்திற்கெல்லாம் சக்கிரவர்த்தி எங்களை விடுதலைசெய்யும்படி
உத்தரவிட்டார். பொன்முகலி ஆறு வரையில்எங்களைத் திரும்பக்
கொண்டுபோய் விட்டுவிடும்படியும் சில வீரர் களுக்கு
ஆக்ஞாபித்தார். அவ்வளவு நாளும் அழுத கண்ணும் சிந்தி முக்குமாய்
இருந்த ஸ்தரீகள் எல்லோரும் இப்போது ஒரே சந்தோஷத்தில்
ஆழ்ந்தார்கள். சிவகாமியைத் தலைக்குத்தலை வாழ்த்தினார்கள்.ஆனால்
எனக்கு இடிவிழுந்தது போல் இருந்தது.சிவகாமியின் காலில்
விழுந்து 'அம்மா! உங்களைவிட்டு நான் போகமாட்டேன்.
சக்கிரவர்த்தியிடம் மீண்டும் வரங்கேட்டு என்னை உங்களுடனேயே
வைத்துக் கொள்ளுங்கள்' என்றேன். சிவகாமி ஒரெ பிடிவாதமாக,
'நீதான் முக்கியமாய்ப் போகவேண்டும். என் தந்தையிடம்
பொய்ச்செய்தி சொல்லவேண்டும்' என்றார். நான் எவ்வளவோ சொலலியும்
கேட்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லை என்று நானும் புறப்படத்
தீர்மானித்தேன். மேலும் அங்கே நான் தாமதித்தால் என்னுடைய வேஷம்
வௌிப்பட்டு சிவகாமிக்கும் உபயோகமில்லாமல் இங்கேவந்து
சொல்லமுடியாமற் போய்விடலாம் என்று பயந்தேன். ஆகவே 'தங்கள்
விருப்பம் அதுவானால் போகிறேன், அம்மா! அப்பாவிற்கு என்ன சேதி
சொல்லட்டும்?' என்று கேட்டேன். 'என்னைப்பற்றிக்
கவலப்படவேண்டாம். வாதாபியில் நான் சௌக்கியமாயிருப்பேன் என்றும்
சொல்லு. வாதாபியிலிருந்து திரும்பி வரும்போது அஜந்தா வர்ண
ரகசியத்தைத் தெரிந்து கொண்டு வருவேன் என்றும் சொல்லு என்றார்
சிவகாமியம்மை..."
இவ்விதம்
சத்ருக்னன் சொன்னதும் ஆயனர் துள்ளும் உற்சாகத்துடனே
"பார்த்தீர்களா? பல்லவ குமாரா! சிவகாமி சௌக்கியமாய்
இருக்கிறாள். அதோடு அஜந்தா இகரசியத்தையும் அறிந்து கொண்டு
வருவதாக சொல்கிறாள். அதற்காக நான் பரஞ்சோதியை அனுப்பியதெல்லாம்
வீணாய்ப் போய்விட்டதல்லவா? என் அருமைக் குமாரியினால் என்
மனேராதம் நிறைவேறப்போகிறது! இதுமட்டுமல்ல! வாதாபிச்
சக்ரவர்த்தியைப்பற்றி நமது எண்ணத்தைக்கூட மாற்றிக் கொள்ள
வேண்டியிருக்கிறது. அவர் ரஸிகத்தன்மையற்றவர், கலைஉணர்ச்சியே
இல்லாதவர் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே? அப்படி இருந்தால்,
ஆயிரம் பெண்களைத் திருப்பி அனுப்பிவிட்டு சிவகாமியை மட்டும்
அழைத்துப் போயிருப்பாரா? பிரபு!.....எனக்கு மட்டும் உடம்பு
குணமாக வேண்டும். குணமானதும் நானே வாதாபிக்குப் போவேன்....."
ஆயனாரின்
வார்த்தைகள் மாமல்லரின் செவிகளில் நாராசம் போல் விழுந்துக்
கொண்டிருந்தன. சிவகாமி வாதாபிக்குப் போக சம்மதித்தாள் என்றதுமே
மாமல்லரை ஆயிரம் தேள்கள் ஏக காலத்தில் கொட்டுவது போலிருந்தது.
சிவகாமியிடம் அவர் கொண்டுள்ள பரிசுத்தமான அன்பில் ஒருதுளி
நஞ்சு அப்போது கலந்தது என்றே சொல்ல வேண்டும். சிவகாமி
மனமுவந்து புலிகேசியிடம் வாதாபிக்குச் செல்ல சம்மதித்தாள்
என்னும் எண்ணத்தை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த எண்ணத்தில்
புண்பட்டிருந்த அவருடைய இருதயத்தில் கூரிய வேலை நுழைப்பது
போலிருந்தது ஆயனரின் பேச்சு. மாமல்லர் அப்போது தனிமையை
விரும்பினார். பழைய தாமரைக் குளத்திற்கு போக வேண்டுமென்று
அவருக்கு விருப்பம் உண்டாயிற்று. சட்டென்று ஒரு துள்ளலில்
எழுந்து நின்று "சத்ருக்னா அவ்வளவு தானே விஷயம்? சிவகாமி வேறு
எந்தச் செய்தியும் அனுப்ப வில்லையல்லவா?" என்றார்.
சத்ருக்னன்
தயக்கத்துடன் ஆயனாரைப் பார்த்தான். அவர் ஏதோ யோசனையில்
ஆழ்ந்திருப்பதைக் கவனித்த பின்னர், சிறிது தாழ்ந்த குரலில்,
"பல்லவ குமாரா! சிவகாமியம்மை தங்களுக்கும் ஒரு செய்தி
சொல்லியனுப்பினார். வேலின் மீது ஆணையிட்டுக்கூறிய
வாக்குறுதியைத் தங்களுக்கு ஞாபகப் படுத்தச்சொன்னார். சீதாதேவி
இலங்கையில் காத்திருந்தது போல் தாங்கள் வாதாபிக்கு வந்து
அழைத்துப் போகும் வரையில் காத்திருப்பேன் என்று சொன்னார்."
என்றான்.
சற்றுமுன்
மாமல்லருக்கு இவ்வுலகம் ஒரு சூனியமான வறண்ட பாலைவனமாகக்
காணப்பட்டது. இப்போது அந்தப் பாலைவனத்தில் பசுமையான ஜீவ பூமி
ஒன்றும் இருப்ஒபதாகத் தோனறியது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
முப்பத்தெட்டாம் அத்தியாயம்
வாதாபி மார்க்கம்
புலிகேசியின் படை
வாதாபியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வாதாபியிலிருந்து
கிளம்பிய போது அந்தப் படை எவ்வளவு பெரியதாயிருந்ததோ, அதில்
பாதிதான் இப்போது இருந்தது. ஆயினும், இன்னமும் அது
பெரும்படைதான். ஏறக்குறைய மூன்று இலட்சம் யுத்த வீரர்கள்
அந்தப் படையில் இருந்தார்கள். ஏழாயிரம் போர் யானைகளும்
இருந்தன. போகுமிடத்தையெல்லாம் சுடுகாடாகவும் பாலைவனமாகவும்
செய்து கொண்டு அப்படை சென்றது. கிராமங்களும் பட்டணங்களும்
கொள்ளையடிக்கப்பட்டன. வீடு வாசல்களையும் உடைமைகளையும்
காப்பாற்றிக் கொள்ள முயன்ற மக்கள் ஈவிரக்கமின்றிக்
கொல்லப்பட்டார்கள், அல்லது அங்கஹீனம் செய்யப்பட்டார்கள்.
வீடுகளும் குடிசைகளும் வைக்கோற் போர்களும் கொளுத்தி
விடப்பட்டன. ஏரிக் கரைகள் வெட்டி விடப்பட்டன.
ஒரு பக்கம்
பசியினாலும் இன்னொரு பக்கம் பழி வாங்கும் வெறியினாலும்
சளுக்கிய வீரர்கள் இம்மாதிரி பயங்கர அட்டூழியங்களைச்
செய்தார்கள். தாங்கள் செய்வது போதாதென்று யானைகளையும் அவர்கள்
அந்த நாச வேலையில் ஏவி விட்டார்கள். பசியும் வெறியும் கொண்ட
போர் யானைகள் தாம் போகும் வழியிலிருந்த பசுஞ்சோலைகளை அழித்தன.
பயிர் செய்த வயல்களைத் துவைத்தன. வீட்டுக் கூரையைப் பிடுங்கி
வீசின; வைக்கோற் போர்களே இடறி எறிந்தன. இதனாலெல்லாம் சளுக்கர்
படை திரும்பிப் போன பாதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ளும்படி
இருந்தது. அந்தப் பாதையானது ஒரு பெரிய பயங்கரமான சூறைக்
காற்றுப் போன வழியை போலக் காணப்பட்டது. அந்தப் பாதையில்
பின்னர் வெகு காலம் அழுகுரலும் புலம்பல் ஒலியும் கேட்டுக்
கொண்டிருந்தன. பருந்துகளும் கழுகுகளும் வட்டமிட்டுக்
கொண்டிருந்தன. நரிகள் பட்டப் பகலிலேயே ஊளையிட்டுக்
கொண்டிருந்தன.
வாதாபி நோக்கிச்
சென்ற சளுக்கர் படையுடன் கூடச் சிவகாமியும் போய்க்
கொண்டிருந்தாள். அவளைப் பல்லக்கிலே வைத்துத் தூக்கிக் கொண்டு
போனார்கள். ஆனால் பல்லக்குச் சுமப்பவர்கள் தன்னைத் தூக்கிக்
கொண்டு போவதாகவே சிவகாமிக்குத் தோன்றவில்லை. தடுக்க முடியாத
ஏதோ ஒரு விதியானது தன்னை எங்கேயோ அழைத்துப் போய்க்
கொண்டிருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. சளுக்கர்களால் சிறைப்
பிடிக்கப்பட்ட உடனே அவள் மனத்தில் தோன்றியிருந்த பீதியும்,
தன்னுடைய கதி என்ன ஆகப் போகிறதோ என்ற கவலையும் இப்போது மறைந்து
விட்டன.
அத்தகைய
நிலைமையில் ஓர் அபலைப் பெண்ணிடம் சற்றும் எதிர் பார்க்க
முடியாத மனோ தைரியம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மனோதைரியம்
மட்டும் அல்ல; தன்னுடைய சக்தியைக் குறித்த ஒரு பெருமித
உணர்ச்சியும் உண்டாகியிருந்தது! சிறைப் பிடிக்கப்பட்ட பெண்களை
விடுதலை செய்யும்படி புலிகேசியிடம் விண்ணப்பம் செய்து வெற்றி
பெற்றதிலிருந்து அந்தப் பெருமித உணர்ச்சி சிவகாமிக்கு
உண்டாயிற்று. இதோ ஒரு சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தைக்
காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி
அபலையாகிய தன்னுடைய வேண்டுகோளுக்கு உடனே இணங்கினார்! இது
மட்டுமல்ல; இன்னும் தான் என்ன சொன்னாலும் அந்தப்படி அவர் செய்ய
ஆயத்தமாயிருந்தார் என்பதை அவருடைய முகபாவத்திலிருந்து சிவகாமி
தெரிந்து கொண்டாள்.
அதே சமயத்தில்
சிவகாமி இன்னோர் இரகசியத்தையும் கண்டு கொண்டிருந்தாள். (அல்லது
கண்டு கொண்டிருந்ததாக எண்ணினாள்) அன்று காஞ்சியில் கூடியிருந்த
சபையிலே புலிகேசியின் முகத்தைப் பார்த்த போது ஏதோ ஒரு விளங்காத
மர்மம் அதில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியதல்லவா? அது என்ன
என்பது இப்போது அவளுக்குத் தெரிந்து விட்டது. புத்த பிக்ஷு
நாகநந்தியின் முகத்துக்கும் புலிகேசியின் முகத்துக்கும் இுந்த
ஒற்றுமைதான் அது. ஆஹா! தெரிந்தது மர்மம்! புலிகேசி
சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் ஒருவரேதான்! மகேந்திர
பல்லவர் மாறுவேடம் பூண்டு தேச யாத்திரை செய்வதுண்டு என்பதைச்
சிவகாமி அறிந்திருந்தாளாகையால் புலிகேசியும் அப்படி மாறுவேடம்
பூணுவது இயற்கையென்று அவளுக்குத் தோன்றியது. புத்த பிக்ஷு
தன்னுடைய நாட்டியக் கலையில் காட்டிய ஆர்வமெல்லாம் அவளுக்கு
நினைவு வந்தது. ஒருவேளை தனக்காகவே புலிகேசி காஞ்சி மீது
படையெடுத்து வந்திருக்கலாம் என்றும் அவள் எண்ணமிட்டாள்.
தன்னிடம் இவ்வளவு
சக்தி இருக்கிறது என்பது சிவகாமிக்கே வியப்பையும்
பிரமிப்பையும் அளித்தது. கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர்
போன வாதாபிப் புலிகேசி தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கச்
சித்தமாயிருக்கிறார்! இந்த நினைவு அடிக்கடி தோன்றிச்
சிவகாமியின் பெருமிதத்தை வளர்த்து வந்தது. அன்றியும், தன்னுடைய
பாதுகாப்பைப் பற்றி அவளுக்குக் கவலை ஏற்படாமலும் செய்தது.
தன்னுடைய விருப்பத்திற்கு விரோதமாக ஒன்றும் நடவாதென்றும்,
தனக்குத் தீங்கு எதுவும் நேராதென்றும் அவள் தைரியம் கொண்டாள்.
இந்த நாட்களில்
சிவகாமி மாமல்லரைப் பற்றி நினைத்தாளா? நல்ல கேள்வி! அவளுடைய
எல்லாவித மானஸீக அனுபவங்களுக்கும் அடிப்படையில் மாமல்லரின்
நினைவு இருந்து கொண்டுதானிருந்தது. ஆனால் அந்த நினைவு
அவ்வப்போது விசித்திர ரூபங்களைக் கொண்டது. அன்பு
ஆத்திரமாயிற்று; ஆத்திரம் துயரம் ஆயிற்று; துயரம்
துவேஷத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் உண்டாக்கிற்று.
பல்லவ சாம்ராஜ்யத்தை ஆளப் பிறந்த மாமல்லரால், பல்லவ நாட்டுப்
பெண்களைச் சிறைப் பிடிக்கப்படாமல் காப்பாற்ற முடியவில்லை. இந்த
ஏழைச் சிற்பியின் மகளால் அவர்களை விடுதலை செய்ய முடிந்தது!
இந்தச் செய்தியைச் சத்ருக்னன் அவரிடம் சொல்லும் போது அவர் என்ன
நினைப்பார்? மகிழ்ச்சியடைவாரா? கோபங் கொள்வாரா? அவர் என்ன
நினைத்தால் இங்கு யாருக்கு என்ன? கேவலம் சிற்பியின் மகள்
என்றுதானே என்னை அவர் அலட்சியம் செய்து விட்டிருந்தார்?
அவருடைய தந்தை என்னை அவமானப்படுத்தியதையெல்லாம் பார்த்துக்
கொண்டு சும்மா இருந்தாரல்லவா? உண்மையிலேயே என்னிடம் அன்பு
இருந்தால், என்னைக் காட்டிலும் இராஜ்யத்தைப் பெரியதாய்
எண்ணியிருப்பாரா? மகேந்திர பல்லவரிடம் தம் எண்ணத்தைத்
தைரியமாகச் சொல்லி என்னை மணந்து கொண்டிருக்க மாட்டாரா?
அப்படிச் செய்திருந்தால் இந்த விபரீதமெல்லாம்
நேர்ந்திருக்குமா?
நல்லது; அவருக்கு
ஒரு பாடம் கற்பிக்கிறேன். இதோ ஒரு மகா சக்கரவர்த்தி - பல்லவ
இராஜ்யத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிய ராஜ்யம் உடையவர்
- நான், காலால் இட்ட பணியைத் தலையால் செய்வதற்குக்
காத்திருக்கிறார்! மாமல்லர் வந்து இதைப் பார்க்கட்டும்!
இப்படிப்பட்ட மகோன்னத பதவியை நான் எவ்வளவு துச்சமாகக் கருதி
அவருடன் வருவதற்குச் சித்தமாயிருக்கிறேன் என்பதையும் நேரிலே
தெரிந்து கொள்ளட்டும்! ஒருவேளை அவர் வராமலே இருந்து விட்டால்!
இந்த எண்ணம் தோன்றியதும் சிவகாமியின் உடம்பிலுள்ள
இரத்தமெல்லாம் ஒருகணத்தில் சுண்டிப் போய் அவளுடைய தேகம் ஒரு
தோல் கூடாக மாறி விட்டது போன்ற பயங்கர உணர்ச்சி ஏற்பட்டது.
அடுத்தகணம் அவள் மீண்டும் தைரியம் பெற்றாள். வராமலிருந்து
விடுவாரா? ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார். அவ்வளவு கேவலமான
மனுஷர் அல்ல; அவருடைய அன்பும் அவ்வளவு மட்டமானதல்ல. வேலின்
மேல் ஆணையிட்டுக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக
வேனும் அவர் அவசியம் வருவார்.
'ஒருவேளை அவர்
வரவில்லையானால்...' என்பதாகச் சிவகாமி மனத்தைத் திடப்படுத்திக்
கொண்டு சிந்தனை செய்தாள். 'வரவில்லையென்றால், அதற்கு என்ன
அர்த்தம்? என்னிடம் அவருக்கு உண்மையில் அன்பு இல்லை. என்னிடம்
காதல் கொண்டதாக அவர் சொன்னதெல்லாம் வெறும் நடிப்பு என்றுதான்
அர்த்தம். நல்லதாய்ப் போயிற்று! அன்பில்லாதவரைப் பிரிந்து
வந்ததற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என் தந்தை
எனக்களித்த அற்புதமான நாட்டியக் கலை இருக்கிறது. விஸ்தாரமான
வாதாபி இராஜ்யம் இருக்கிறது. அதற்கு அப்பால் ஹர்ஷவர்த்தனருடைய
சாம்ராஜ்யமும் இருக்கிறது. அன்பில்லாத ஒரு மனிதரிடம் பிரேமை
வைத்து ஏன் உருகி அழிய வேண்டும்?'
இப்படிச் சிவகாமி
எண்ணியபோதே, உண்மையில் அவளுடைய உள்ளம் அந்த அன்பில்லாத
மனிதரைக் குறித்து உருகிக் கரைந்து கொண்டிருந்தது. சீச்சி! இது
என்ன வீண் பிரமை? அவர் மட்டும் வந்து என்னை அழைத்துப்
போகாவிட்டால், அப்புறம் இந்த உலக வாழ்க்கையில் என்ன
இருக்கிறது? எதற்காக வாழ வேண்டும்? நாட்டியமாவது, கலையாவது,
மண்ணாங்கட்டியாவது? வீணாக என்னை நானே ஏமாற்றிக் கொள்வதில் என்ன
பிரயோஜனம்? சளுக்கரிடம் சிறைப்பட்டு நான் உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பது அவருக்காகத்தான். வழியில் பயங்கர அட்டூழியங்களை
யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வாதாபிக்குப் போவதும்
அவருக்காகத்தான். அவர் வந்து இந்தப் பாதகச் சளுக்கர்களைப்
பழிவாங்கி என்னை மீட்டுக் கொண்டு போவார் என்ற
நம்பிக்கையினால்தான். அவருடைய அன்புக்காகவே நான் உயிர்
வாழ்கிறேன். அவருடைய கௌரவத்தைப் பாதுகாக்கவே நான் வாதாபிக்குப்
போகிறேன். அவர் என்னை மறந்து விட்டால்? நல்லது அப்புறம் இந்த
உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனை நேரம் ஆகி விடும்? சிவகாமி
நாட்டியமாடும் போது சில பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பதற்கு
மின்னல் மின்னும் நேரத்தில் உணர்ச்சிகளையும் முகபாவங்களையும்
மாற்றிக் கொள்ள வேண்டியதாயிருக்கும். பார்ப்பவர்கள்
அம்மாறுதல்களைத் தொடர்ந்து கவனிப்பது கூட அசாத்தியமாகி விடும்.
இப்போது சிவகாமியின் உள்ளமானது உண்மையாகவே அத்தகைய மின்னல் வேக
உணர்ச்சி மாறுதல்களை அனுபவித்து வந்தது.
பல்லவ நாட்டுப்
பெண்களை விடுதலை செய்த பிறகு, வடபெண்ணை நதிக்கரை போய்ச் சேரும்
வரையில் புலிகேசிச் சக்கரவர்த்தி அவள் இருந்த பக்கம்
வரவேயில்லை. புலிகேசியின் புத்த பிக்ஷு வேஷத்தைப் பற்றிய
இரகசியம் தெரிந்து விடப் போகிறதே என்னும் தயக்கத்தினாலேதான்
அவர் தன்னிடம் வரவில்லையென்று சிவகாமி கருதினாள். அது தனக்குத்
தெரிந்திருப்பதாக இந்தப் பிரயாணத்தின் போது காட்டிக் கொள்ளக்
கூடாது என்றும் அவள் தீர்மானித்துக் கொண்டாள். வடபெண்ணை
நதிக்கு அக்கரையில், முன்னதாக வந்த வாதாபி சைனியத்தின் பெரும்
பகுதி தங்கியிருந்தது. அந்தச் சைனியத்தோடு பின்னால்
புலிகேசியோடு வந்த சிறு சைனியம் ஒன்று சேர்ந்த அன்று இரவு,
சிவகாமி ஓர் அதிசயமான கனவு கண்டாள். ஆனால் அது கனவா நனவா
என்பது அவளுக்கு வெகுநாள் வரையில் சந்தேகமாயிருந்து வந்தது.
கனவாயிருந்தாலும் நனவாயிருந்தாலும், அதில் கண்டதும் கேட்டதும்
அவளுடைய உள்ளத்தில் புதிய பல சந்தேகங்களையும் கவலைகளையும்
கிளப்பி விடுவதற்கு ஏதுவாயிருந்தன.
வாதாபி சைனியம்
தண்டு இறங்கியிருந்த இடத்துக்கு சற்றுத் தூரத்தில் சிவகாமியின்
பல்லக்கு இறக்கப்பட்டது. பிரதேசம் இயற்கை அழகு பொருந்தியதாயும்
நிசப்தமாயும் இருந்தது. பூரண சந்திரன் வானத்திலும் பூமியிலும்
பால் நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். இனிய இளங்காற்று வீசிக்
கொண்டிருந்தது. நீண்ட பிரயாணத்தினால் பெரிதும்
களைப்புற்றிருந்த சிவகாமி ஒரு மரத்தினடியில் படுத்துக்
கொண்டாள். அவளுடைய கண்கள் தாமே மூடிக் கொண்டன. சிறிது
நேரத்துக்கெல்லாம் நித்திரா தேவியின் வயப்பட்டு அயர்ந்த
தூக்கத்தில் ஆழ்ந்தாள். ஏதோ பேச்சுக் குரல் கேட்டு உறக்கம்
சிறிது கலைந்தது. ஆனால் கண்ணிமைகள் திறக்க மறுத்தன. எனினும்,
யார் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும்
அதிகமாயிருந்தது. பெரிதும் முயன்று கண்ணிமைகளைச் சிறிது
திறந்தாள். எதிரே நிலவு வௌிச்சத்தில் அவள் சற்றும் எதிர்பாராத
அதிசயமான காட்சி ஒன்று தென்பட்டது.
புலிகேசிச்
சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் அருகருகே நின்று
கொண்டிருந்தார்கள். ஒரே உயரம்; ஒரே உருவம்; முகத்தின் தோற்றம்,
மூக்கின் அமைப்பு, கண், புருவம் எல்லாம் ஒன்றே. உடைகளில்
மட்டுந்தான் வித்தியாசம். ஒருவர் சக்கரவர்த்திக்குரிய கிரீடம்
முதலியவை தரித்திருந்தார். இன்னொருவர் மொட்டைத் தலையுடனும்
காவி வஸ்திரத்துடனும் விளங்கினார். இதைப் பார்த்த சிவகாமி தன்
மனத்திற்குள், 'ஆ! இதென்ன! புலிகேசியும் புத்த பிக்ஷுவும்
ஒருவர்தானே? இங்கே தனித்தனியாய் நிற்கிறார்களே? ஆகையால், இது
உண்மையான காட்சியல்ல, நாம் கனவு காண்கிறோம். கனவிலேதான் இந்த
மாதிரி பிரமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது!' என்று எண்ணமிட்டாள்.
மறுபடியும் கண்ணிமைகள் மூடிக் கொண்டன.
கண்கள் மூடிக்
கொண்டபோதிலும் செவிகள் திறந்திருந்தன. பின்வரும் சம்பாஷணை
அவளுடைய காதில் விழுந்தது: "அண்ணா! நீ சொன்னது இந்தப்
பெண்தானே?" "இவள்தான்!" "இவள்தான் சிவகாமியா?" "ஆம், இவள்தான்
சிவகாமி!" "எனக்கு நீ எழுதிய ஓலையில் காஞ்சி சுந்தரியை நீ
எடுத்துக் கொள்; சிவகாமியை எனக்குக் கொடுத்து விடு' என்று
எழுதியிருந்தாயே; அது இந்தப் பெண்ணைப் பற்றித்தானே?" "ஆமாம்,
தம்பி, ஆமாம்!" "அப்படி, இவளிடம் நீ என்ன அழகைக் கண்டாயோ,
அதுதான் எனக்குத் தெரியவில்லை. இவளை விட எத்தனையோ சுந்தரமான
பெண்களை நம் வாதாபியிலே நான் பார்த்திருக்கிறேன்." "இவள்
நாட்டியமாடும்போது பார்க்க வேண்டும்; அப்போது வேறு விதமாகச்
சொல்லுவாய்!" "அதையும் மகேந்திர பல்லவனுடைய சபையில்
பார்த்தேனே! அப்படியொன்றும் அதிசயமாக எனக்குத் தெரியவில்லை."
"உனக்குத் தெரிந்திராது; கலை கண்களோடு பார்ப்பவர்களுக்குத்
தெரியும். அஜந்தா சித்திரங்களைப் பார்த்து, 'இது என்ன
அதிசயம்?' என்று சொன்னவனல்லவா நீ?" "போகட்டும்; நமது
வம்சத்துக்கு நீ ஒருவன், கலைக் கண் உடையவன் இருக்கிறாயே, அதுவே
போதும். இந்தத் தென்னாட்டுப் படையெடுப்பில் நமக்கு எல்லாம்
அபஜயமாய் முடிந்தது. ஏதோ உன்னுடைய மன விருப்பமாவது
நிறைவேறியதே, அந்த வரையில் எனக்கும் திருப்திதான்."
"தம்பி! இவளை நீ
சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் திரும்பி
வரும் வரையில் இவளுக்கு ஒரு குறைவும் வைக்கக் கூடாது." "இதென்ன
இப்படிக் கவலைப்படுகிறாய், அண்ணா?" "நான் இவளுக்காகக்
கவலைப்படவில்லை. இவளிடமிருக்கும் கலைக்காகத் தான்
கவலைப்படுகிறேன். அந்தத் தெய்வக் கலைக்கு யாதொரு குறைவும்
வரக்கூடாதே என்று கவலைப்படுகிறேன்." "நல்ல கலை! நல்ல கவலை!
என்னைக் கேட்டால், என்ன சொல்வேன் தெரியுமா? மகேந்திர
பல்லவனிடம் சொன்னதைத்தான் உனக்கும் சொல்வேன்!" "மகேந்திர
பல்லவனிடம் என்ன சொன்னாய், தம்பி!"
"இந்த
அற்பர்களுக்கு இவ்வளவு மரியாதை என்ன! எங்கள் நாட்டிலேயென்றால்
சாட்டையால் அடித்து நடனம் ஆடச் சொல்வோம் என்று கூறினேன்."
"பார்த்தாயா? உன்னை நம்பி இவளை எப்படி ஒப்புவித்து விட்டுப்
போவது? நான் வேங்கிபுரத்துக்குப் போகவில்லை." "இல்லை அண்ணா,
இல்லை! ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னதை உண்மையாக எடுத்துக்
கொள்ளாதே! உன் விருப்பத்துக்கு மாறாக நான் எந்தக்
காரியத்திலாவது நடந்து கொண்டிருக்கிறேனா? இவளுடைய மனங்கோணாமல்
எல்லா ஏற்பாடுகளும் செய்து வைக்கிறேன். நீ கவலையின்றிப் போய்
விட்டு வா!" இத்துடன் சம்பாஷணை முடிந்ததாகத் தோன்றியது.
சிவகாமி மறுபடி நினைவற்ற உலகத்தில் ஆழ்ந்தாள்.
மறுநாள் பொழுது
விடிந்து சிவகாமி கண் விழித்து எழுந்த போது மேலே கூறிய கனவுக்
காட்சியும் சம்பாஷணையும் சிறிது சிறிதாக ஞாபகம் வந்தன.
அவையெல்லாம் கனவுதானா, ஒருவேளை உண்மையான நிகழ்ச்சிகளா என்ற
சந்தேகமும் அவள் மனத்தில் எழுந்து குழம்பியது. வெகு நேரம்
சிந்தித்துக் கனவாகத்தானிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு
வந்தாள். அப்படி ஒரேவித உருவமுள்ள இரண்டு பேர் இருக்க
முடியாது. இருந்தாலும் ஒருவர் பிக்ஷுவாகவும் ஒருவர்
சக்கரவர்த்தியாகவும் இருக்க முடியாது. அவர்கள் தன்னெதிரே வந்து
நின்று அவ்விதமெல்லாம் பேசுவது ஒருநாளும் நடந்திருக்க முடியாத
காரியம். தன்னுடைய பிரமை கொண்ட மனத்தில் கற்பனையிலேதான்
இவையெல்லாம் நிகழ்ந்திருக்க வேண்டும். மூர்க்கப் புலிகேசியிடம்
ஒரு பக்கத்தில் கலைப்பற்றும் இருக்கும் அதிசயத்தைக் குறித்துத்
தான் அடிக்கடி எண்ணமிட்டதுண்டல்லவா? அது காரணமாகவே ஒரே மாதிரி
இரண்டு உருவங்கள் தன்னுடைய கனவிலே தோன்றி அத்தகைய சம்பாஷணையை
நடத்தியிருக்க வேண்டும். புலிகேசியும் புத்த பிக்ஷுவும்
உண்மையில் ஒருவர்தான் - இவ்விதம் சிவகாமி தீர்மானம் செய்து
கொண்டபோதிலும் மேற்படி கனவு கண்டதன் காரணமாக அவளுடைய உள்ளம்
பெரிதும் கலக்கமும் கவலையும் அடைந்திருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
>முப்பத்தொன்பதாம் அத்தியாயம்
சகோதரர்கள்
புலிகேசியும்
புத்த பிக்ஷுவும் ஒரே மனிதர்கள்தான் என்று சிவகாமி எண்ணிக்
கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை. சற்று முன்னால், புலிகேசிச்
சக்கரவர்த்தியே மேற்படி உருவ ஒற்றுமை காரணமாகத் திகைக்கும்படி
நேர்ந்தது. வாதாபிச் சக்கரவர்த்தி தம்முடைய கூடாரத்தில் தன்னந்
தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மனத்தில் பெரும் சோர்வு
குடிகொண்டிருந்தது. வாதாபியிலிருந்து அவர் புறப்பட்டபோது
என்னென்ன உத்தேசங்களுடன் கிளம்பினாரோ அவை ஒன்றும்
நிறைவேறவில்லை. எல்லாம் மகேந்திர ஜால பல்லவனுடைய
தந்திரங்களினால் உருப்படாமற் போயின.
மகேந்திர
பல்லவனுடைய தந்திரங்களுக்கு மாற்றுத் தந்திரங்கள் செய்து
அவனைத் தோற்கடிக்கக்கூடிய சாமர்த்தியம் வாய்ந்தவரான நாகநந்தி
பிக்ஷுவைப் பற்றித் தகவலே கிடைக்கவில்லை. இதனாலெல்லாம்
புலிகேசி பெரிதும் உற்சாகம் குன்றியிருந்தார். அவருக்கிருந்த
ஒரே ஓர் ஆறுதல் தளபதி சசாங்கன் மூலம் மகேந்திர பல்லவனுக்கு ஒரு
பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்ததுதான். ஆ! பல்லவ
நரி தன்னுடைய பொந்தை விட்டு வௌியே வந்து பார்க்கும்போது,
வாதாபிப் புலிகேசியை வஞ்சித்து ஏமாற்றுவது எவ்வளவு பிசகான
காரியம் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வானல்லவா?
தளபதி சசாங்கன்
தம்முடன் வந்து சேர்வதற்காகவே சக்கரவர்த்தி வடபெண்ணையின்
வடகரையில் காத்துக் கொண்டிருந்தார். கட்டளையை நிறைவேற்றிவிட்டு
வந்து சேரச் சசாங்கனுக்கு ஏன் இத்தனை நாள் பிடிக்கிறது என்று
அவருக்குக் கோம் வந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்
தெற்கேயிருந்து படை வருகிறது என்று கேட்டதும் சசாங்கன்தான்
வருகிறான் என்று எண்ணி, அவன் கொண்டு வரும் செய்தியைக்
கேட்பதற்காக மிக்க ஆவலுடன் இருந்தார். கூடாரத்துக்கு வௌியே
குதிரை ஒன்று வந்து நின்றதும், சசாங்கன் இவ்வளவு தாமதமாய்
வருவதற்காக அவன் மேல் எரிந்து விழுவதற்கு ஆயத்தமானார். ஆனால்,
உள்ளே பிரவேசித்து வந்தது சசாங்கன் அல்ல. கிரீடமும்,
வாகுவலயமும், சக்கரவர்த்திக்குரிய மற்ற ஆபரணங்களும் தரித்த
நெடிதுயர்ந்த கம்பீர உருவம் ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும்
புலிகேசிக்கு ஏற்பட்ட திகைப்புக்கும் குழப்பத்துக்கும்
எல்லையேயில்லை. 'இது என்ன? எனக்குச் சித்தப் பிரமை
பிடித்துவிட்டதா? அல்லது மாயக் கனவு காண்கிறேனா? பின்,
ஆசனத்தில் இதோ சாய்ந்து உட்கார்ந்திருக்கும் நானே
கூடாரத்துக்கு வௌியிலிருந்து எப்படி உள்ளே வர முடியும்?' என்று
திகைத்தார்.
புலிகேசியின்
குழப்பத்தைப் பார்த்து விட்டு வௌியிலிருந்து வந்த உருவம்
புன்னகை புரிந்து, "தம்பி! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? நான்
என்ன பேயா, பிசாசா, பூதமா? உனக்கு என்னைத் தெரியவில்லையா?"
என்று சொல்லிக் கொண்டே தலைக் கிரீடத்தை எடுத்ததும், பிக்ஷுவின்
மொட்டைத் தலை காணப்பட்டது. உடனே புலிகேசி குதூகலத்துடன் துள்ளி
எழுந்து, "அண்ணா நீயா?" என்று கட்டிக் கொள்ளப் போனவர்,
மறுபடியும் திகைத்து நின்று, "ஆஹா! இது என்ன வேஷம்? உன்னுடைய
வாக்குறுதி...?" என்று வினவினார். அப்போது புலிகேசியின்
கண்களின் ஓரங்களில் பொறாமையுடன் கூடிய குரோத ரேகை தென்பட்டது.
"தம்பி!
அதற்குள்ளே அவசரமா? ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வேஷம் உன்னுடைய
உயிரைக் காப்பாற்றுவதற்குப் பயன் பட்டதல்லவா? இப்போது என்னுடைய
உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இது பயன்பட்டது. என்
வாக்குறுதிக்கு ஒரு பங்கமும் நேரவில்லை. உன்னுடைய ராஜ்யத்தில்
நான் இந்த வேஷம் போட்டுக் கொள்வதில்லையென்றுதானே வாக்குறுதி
கொடுத்தேன்? இன்னும் உன்னுடைய சாம்ராஜ்யத்துக்குள் நாம்
வந்துவிடவில்லையே?" என்று நாகநந்தி சொன்னதும் புலிகேசி
கொதிப்புடன் கூறினார்: "ஆம்; ஆனால் இந்தப் பிரதேசம் இன்று
நம்முடைய சாம்ராஜ்யத்துக்குள் வராதிருப்பது ஏன்? பல்லவ
நாட்டில் இன்று வராகக் கொடி பறக்காதது ஏன்? அற்பத்திலும்
அற்பமான மகேந்திர பல்லவனுடைய சைனியத்துக்கு முன்னால்
வாதாபியின் மகா சைனியம் தோல்வியடைந்து திரும்பிப் போவது ஏன்?
எல்லாம் உன்னால் வந்ததுதான்!"
"தம்பி! தோல்வி
என்கிற வார்த்தையையே சொல்லாதே! யார் தோல்வியடைந்தது? வாதாபி
சைனியம் தோல்வியடையவில்லை, நீயும் தோல்வியடையவில்லை. அந்தத்
தோல்வி என்னால் நேரவும் இல்லை. எல்லாம் சாவகாசமாகப் பேசுவோம்.
முதலில் உடனே காவி வஸ்திரம் இரண்டு தருவித்துக் கொடு. நான்
இந்த வேஷத்தில் இருந்தால் வீண் குழப்பத்துக்கு இடமாகும்.
ஏற்கெனவே, நான் வந்து கொண்டிருந்தபோது வௌியில் நிற்கும்
வீரர்கள் என்னை வெறித்து வெறித்துப் பார்த்தார்கள்!" "ஆமாம்;
அவர்கள் வெறித்துப் பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறதல்லவா?
கூடாரத்திற்குள் இருந்த சக்கரவர்த்தி வௌியில் எப்போது,
எப்படிப் போனார் என்று அவர்களுக்குத் திகைப்பாயிருந்திராதா?
எனக்கே கொஞ்ச நேரம் குழப்பமாய்ப் போய்விட்டதே!" என்று புலிகேசி
கூறிவிட்டு கூடாரத்தின் வாசலில் நின்ற காவலனிடம், "உடனே ஒற்றர்
விடுதிக்குச் சென்று காவி வஸ்திரம் இரண்டு கொண்டு வா!" என்று
கட்டளையிட்டார்.
காவி வஸ்திரம்
வந்தவுடனே நாகநந்தி உடையை மாற்றிக் கொண்டார். சகோதரர்கள்
இருவரும் ஒரே ஆசனத்தில் அருகருகே உட்கார்ந்தார்கள். "தம்பி!
இப்போது சொல்லு! நீ வாதாபியை விட்டுப் புறப்பட்டதிலிருந்து
நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று நாகநந்தி கேட்க,
அவ்விதமே புலிகேசி கூறிவந்தார். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட
பிறகு, பிக்ஷு கூறினார்; "ஆகா! மகேந்திர பல்லவன் நான்
நினைத்ததைக் காட்டிலும் கெட்டிக்காரன். நெடுகிலும் நம்மை
ஏமாற்றி வந்திருக்கிறான்!" "அண்ணா! இராஜ்ய தந்திரத்தில் உன்னை
வெல்லக் கூடியவன் இந்த உலகில் எவனுமே இல்லையென்று
நினைத்திருந்தேன்." "ஆரம்பத்தில் நான் ஒரே ஒரு தவறு செய்தேன்.
அதன் பலன் நெடுகிலும் விபரீதமாகவே போய்விட்டது!" "அடிகளே! அது
என்ன தவறு?" "பரஞ்சோதி என்னும் பிள்ளையின் முகத்தைப் பார்த்து
என் மனம் சிறிது இளகிற்று." "அந்தத் திருட்டுப் பயலை நம்பி ஓலை
கொடுத்து அனுப்பினாய்!" "அதற்குக் காரணமானவன் நீதான், தம்பி!"
"நானா? அது எப்படி?"
"பாண்டிய
நாட்டுக்குப் போய் அங்கே வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டுக்
காஞ்சிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஏரிக்
கரையில் ஒரு பிள்ளை சோர்ந்து படுத்துத் தூங்கிக்
கொண்டிருந்தான். உன்னை நான் முதன்முதலில் அதே நிலையில்
பார்த்தது ஞாபகம் வந்தது. அதனால் என் மனம் இளகி அந்தப்
பிள்ளையின் பேரிலும் விசுவாசம் உண்டாயிற்று. அவனுடைய முகக்
களையிலிருந்து பெரிய பதவிக்கு வரப்போகிறவன் என்று தெரிந்து
கொண்டேன். ஆகையால், அவனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்
என்ற சபலமும் உண்டாயிற்று. அவனிடம் உனக்கு ஓலை கொடுத்து
அனுப்பினேன். அந்த ஓலை உன்னிடம் சேர்ந்து நீ நேரே
வந்திருந்தாயானால், காஞ்சிக் கோட்டையை மூன்றே நாளில்
கைப்பற்றியிருக்கலாம். மகேந்திர பல்லவன் உன்னுடைய காலடியில்
விழுந்து கிடப்பான்." "ஆனால் உன்னுடைய ஓலைக்கு மாறாக மகேந்திர
பல்லவன் எழுதி வைத்த ஓலை என்னிடம் கிடைத்தது. அதன் பயனாக
வடபெண்ணைக் கரையில் எட்டு மாதம் வீணாக்க நேர்ந்தது. மகேந்திர
பல்லவன் ஒரு சிறு குதிரைப் படையை வைத்துக் கொண்டு, யுத்தம்
செய்யாமல் வெறும் பாய்ச்சல் காட்டியே ஏமாற்றிக்
கொண்டிருந்தான். அதற்குப் பிறகு நான் காஞ்சிக்கு வந்து
கோட்டையை முற்றுகையிட்டும் பயன்படவில்லை. அண்ணா! நான் வாதாபிச்
சிம்மாசனத்தில் ஏறிய பிறகு முதன்முதலாக அடைந்த தோல்வி இது
தான்..."
"அப்பனே! அந்த
வார்த்தையை மட்டும் சொல்லாதே! தோல்வி எது? யார் தோல்வி
அடைந்தது? இராஜரீக சாஸ்திரத்தில் முதலாவது பாடம் என்னவென்பதை
இன்னமும் நீ தெரிந்து கொள்ளவில்லையா? தோல்வியடைந்து விட்டதாக
ஒரு நாளும் ஒப்புக்கொள்ளக் கூடாதென்பதுதான் அந்தப் பாடம். நீயே
தோல்வியடைந்ததாகச் சொல்லிக் கொண்டால் ஊரார் அப்படிச்
சொல்வார்கள்; உன் விரோதிகளும் அவ்விதமே சொல்வார்கள்;
தேசமெங்கும் 'புலிகேசிச் சக்கரவர்த்தி தோல்வியடைந்தார்!' என்று
செய்தி பரவும். ஹர்ஷவர்த்தனன் காதிலும் அது எட்டும். மகேந்திர
பல்லவன் பொய்யாக எழுதியபடி ஒருவேளை உண்மையில் நடந்தாலும்
நடக்கலாம். நர்மதையைக் கடந்து ஹர்ஷனுடைய சைனியம் உன்
இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கலாம். தோல்வி என்ற வார்த்தையை
இனிமேல் சொல்லாதே, தம்பி!"
"நான்
சொல்லாமலிருந்து விட்டால், தோல்வி வெற்றியாகி விடுமா, அண்ணா?"
"மறுபடியும் தோல்வியைக் கட்டிக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்ன
தோல்வியை நீ அடைந்தாய்? யோசித்துப் பார்! கடல் போன்ற
சைனியத்துடன் திக்விஜயம் செய்யத் தென்னாட்டை நோக்கிப்
புறப்பட்டாய், வைஜயந்தியை அழித்தாய். வடபெண்ணைக் கரையில் பல்லவ
சைனியத்தை நிர்மூலம் செய்தாய், காஞ்சிக் கோட்ையை
முற்றுகையிட்டாய், தெற்கே கொள்ளிடக் கரை வரையில் சென்றாய்.
பல்லவன் சிறைப்படுத்தியிருந்த துர்விநீதனை விடுதலை செய்தாய்.
காவேரிக் கரையில் தமிழகத்தின் மூவேந்தர்கள் - சேர, சோழ,
பாண்டியர்கள் - வந்து உன் அடிபணிந்து காணிக்கை
செலுத்தினார்கள்." "அண்ணா! சோழன் வரவில்லையே?"
"சோழன்
வராவிட்டால் களப்பாளன் வந்தான். இதையெல்லாம் யார் விசாரிக்கப்
போகிறார்கள், தம்பி? நீ திரும்பிக் காஞ்சிக் கோட்டைக்கு
வந்தபோது, மகேந்திர பல்லவனும் உன்னைச் சரணாகதி அடைந்தான்.
மகாபலியின் தலையில் மகாவிஷ்ணு பாதத்தை வைத்ததுபோல், நீயும்
மகேந்திர பல்லவனுடைய சிரசில் உன் பாதத்தை வைத்து, 'பிழைத்துப்
போ' என்று உயிர்ப் பிச்சை கொடுத்தாய். அவன் கொடுத்த
காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டாய்..." "காணிக்கை
ஒன்றும் நான் கொண்டு வரவில்லையே, அண்ணா!" "நீ கொண்டு
வராவிட்டால், நான் கொண்டு வந்திருக்கிறேன்." "என்ன அது?"
"இன்று இரவு காட்டுகிறேன், மேற்படி விவரம் எல்லாம் உத்தர பாரத
தேசத்திலே பரவும்போது, நீ திக்கு விஜயம் செய்து வெற்றி
முழக்கத்துடன் திரும்பினாய் என்று சொல்வார்களா? 'தோல்வி'
யுற்று ஓடி வந்தாய் என்பார்களா?"
"அண்ணா! உன்
சாமர்த்தியமே சாமர்த்தியம்! தோல்வியைக் கூட நீ வெற்றியாக
மாற்றக் கூடியவன். உன் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கே நான்
அடைந்தது வெற்றி என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த வெற்றிச்
செய்தி வடநாட்டிலே எப்படிப் பரவும்?" "ஆ! புத்த பிக்ஷுக்களின்
சங்கங்களும் சமணர்களின் மடங்களும் பின் எதற்காக இருக்கின்றன?
நாகார்ஜுன பர்வதத்துக்கு உடனே ஆள் அனுப்பவேண்டும்." "அண்ணா!
நீயே போவது நல்லது; உனக்கு வேங்கியிலும் வேலை இருக்கிறது."
"என்ன வேலை?" "விஷ்ணுவர்த்தனன் காயம்பட்டுக் கிடக்கிறான்.
சென்ற வருஷம் அவன் வெற்றி கொண்ட வேங்கி இராஜ்யத்தில் இப்போது
எங்கே பார்த்தாலும் கலகமாம்." "அதற்கு நான் போய் என்ன
செய்யட்டும்?" "நீ போய்த்தான் அவனுக்கு யோசனை சொல்லி உதவ
வேண்டும். உன்னால் முடியாத காரியம் ஒன்றுமில்லை அண்ணா!
தோல்வியையும் நீ வெற்றியாக்கி விடுவாய்." "என்னால் இப்போது
வேங்கிக்குப் போக முடியாது." "ஏன்?" "காரணம் இருக்கிறது."
"அதைச் சொல்லேன்." "இராத்திரி சொல்கிறேன்; தம்பி! சூரியன்
அஸ்தமித்து நாற்புறமும் இருள் சூழ்ந்துவிட்டது. பூரண சந்திரன்
உதயமாகப் போகிறது. இந்தக் கூடாரத்திற்குள்ளேயே அடைந்து
கிடப்பானேன்? வா வௌியே போகலாம்!"
"ஆமாம், ஆமாம்!
பிரகிருதியின் சௌந்தரியங்கள் அநியாயமாய் வீணாய்ப் போகின்றன!"
என்று பரிகாசக் குரலில் சொல்லிக் கொண்டு புலிகேசிச்
சக்கரவர்த்தி எழுந்தார். "உனக்கு எவ்வளவோ பாக்கியங்கள்
இருந்தாலும் என்ன பயன்? சௌந்தரியத்தை அநுபவிக்கும் பாக்கியம்
மட்டும் இல்லை" என்று சொல்லிக் கொண்டு நாகநந்தி எழுந்தார்.
சகோதரர்கள் இருவரும் ஒத்த வயதுடைய ஆத்ம சிநேகிதர்களைப் போலக்
கைகோத்துக் கொண்டு வௌியே சென்றார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பதாம் அத்தியாயம்
அஜந்தா அடிவாரம்
'சூரியன்
மறைந்தால் என்ன? அதோடு உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா? இதோ
நான் ஒருவன் இருக்கிறேனே' என்று பறையறைந்து கொண்டு
கீழ்த்திசையில் பூரண சந்திரன் உதயமானான். நெடிதுயர்ந்த இரண்டு
பனை மரங்களுக்கு நடுவே தங்க ஒளி பெற்றுத் திகழ்ந்த சந்திர
பிம்பமானது, மரச் சட்டமிட்ட பலகணியின் வழியாக எட்டிப்
பார்க்கும் நவயௌவன நாரீமணியின் பொன் முகத்தையொத்த இன்ப
வடிவமாய் விளங்கியது. புத்த பிக்ஷுவுக்கு அந்த முகம்
சிவகாமியின் முகமாகவே காட்சியளித்தது.
நாகநந்தியும்
புலிகேசியும் கூடாரத்துக்கு வௌியே வந்து ஒரு மொட்டைப் பாறையின்
மீது உட்கார்ந்தார்கள். "அண்ணா! என்ன யோசிக்கிறாய்?" என்று
புலிகேசி கேட்டார். "தம்பி! இன்றைக்கு நான் கூடாரத்துக்குள்ளே
வந்தபோது உன்னைப்போல் உடை தரித்துக் கொண்டு வந்தேனல்லவா? இதே
மாதிரி முன்னொரு தடவை உன்னைப் போல் வேஷம் தரித்துக் கொண்டேனே,
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" "அதை எப்படி மறக்க முடியும்,
அண்ணா? ஒருநாளும் முடியாது." "இல்லை, இருபத்தைந்து வருஷம்
ஆகிவிட்டதே; ஒருவேளை மறந்து விட்டாயோ என்று நினைத்தேன்."
"இருபத்தைந்து வருஷம் ஆனால் என்ன? இருபத்தைந்து யுகம் ஆனால்
என்ன? இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும்
மறக்க முடியாது, அண்ணா!"
"முதன் முதலில்
நாம் சந்தித்தது நினைவிருக்கிறதா, தம்பி!" "ஏன் நினைவில்லை?
சித்தப்பன் மங்களேசனுடைய கடுஞ்சிறையிலிருந்து தப்பி
ஓடிவந்தேன். அந்தப் பாதகனுடைய வீரர்களுக்குத் தப்பி ஒளிந்து,
காட்டிலும் மலையிலும் எத்தனையோ நாள் திரிந்தேன். ஓடி ஓடி
கால்கள் அலுத்துவிட்டன, உடம்பும் சலித்துவிட்டது. பசியும்
தாகமும் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணர்ந்தேன். கடைசியில்
ஒருநாள் களைப்படைந்து மூர்ச்சையாகிவிட்டேன். மூர்ச்சை தௌிந்து
எழுந்தபோது என்னை நீ மடியில் போட்டுக் கொண்டு, என் வாயில் ஏதோ
பச்சிலைச் சாற்றைப் பிழிந்து கொண்டிருந்தாய். நீ மட்டும்
அச்சமயம் தெய்வாதீனமாய் அங்கு வந்திராவிட்டால் என் கதி என்ன
ஆகியிருக்கும்? அண்ணா! அவ்வளவு சிரமம் எடுத்து என்னைக்
காப்பாற்ற வேண்டும் என்று உனக்கு எதனால் தோன்றிற்று?"
"எனக்கு வினாத்
தெரிந்த நாள் முதல் நான் அஜந்தா மலைக் குகையில் புத்த
பிக்ஷுக்களுடன் வாழ்ந்து கொண்டு வந்தேன். சித்திரக் கலை,
சிற்பக் கலை முதலியவை தெரிந்து கொண்டிருந்தேன். ஆயினும்
அடிக்கடி என் மனம் அமைதியிழந்து தவித்தது. வௌி உலகத்துக்குப்
போக வேண்டுமென்றும் என்னையொத்த வாலிபர்களுடன் பழக
வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். சில சமயம் பெரிய
பிக்ஷுக்களுக்குத் தெரியாமல் நதி வழியைப் பிடித்துக் கொண்டு
மலைக்கு வௌியே வருவேன். ஆனால், அங்கும் ஒரே காடாக இருக்குமே
தவிர மனிதர்கள் யாரையும் பார்க்க முடியாது. இப்படி நான் ஏக்கம்
பிடித்திருக்கையிலேதான் ஒரு நாள் அஜந்தாவின் அடிவாரத்தில் உள்ள
காட்டிலே நீ நினைவிழந்து படுத்துக் கிடப்பதைக் கண்டேன். அந்த
நிமிஷத்தில் இருபது வருஷமாக என் உள்ளத்தில் பொங்கிக்
கொண்டிருந்த அவ்வளவு ஆசையையும் உன் பேரில் செலுத்தினேன். அந்த
வயதில் நாடு நகரங்களில் உள்ள வாலிபர்கள் தங்களுடைய இளங்
காதலிகளிடம் எத்தகைய அன்பு வைப்பார்களோ, அத்தகைய அன்பை
உன்னிடம் கொண்டேன். பச்சிலையைச் சாறு பிழிந்து உன் வாயிலே
விட்டு மூர்ச்சை தௌிவித்தேன்."
"அண்ணா! உன்னை
முதன் முதலில் பார்த்ததும் எனக்கும் அம்மாதிரியே உன் பேரில்
அபிமானம் உண்டாயிற்று. தம்பி விஷ்ணுவர்த்தனரின் பேரில் எனக்கு
எவ்வளவோ ஆசைதான். ஆனாலும், அதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு
அதிகமான பாசம் உன்பேரில் ஏற்பட்டது..." "உன்னைக் கண்டு பிடித்த
அன்றைக்கு நான் அஜந்தா குகைக்குத் திரும்பிப் போகவில்லை.
அடுத்த இரண்டு மூன்று நாளும் போகவில்லை. புது மணம் புரிந்த
காதலர்கள் இணைபிரியாமல் நந்தவனத்தில் உலாவுவதுபோல் நாம்
இருவரும் கைகோத்துக் கொண்டு காட்டிலே திரிந்தோம். நீ உன்னுடைய
வரலாற்றையெல்லாம் எனக்கு விவரமாகச் சொன்னா். நாம் இருவரும்
அப்போதே மங்களேசனைத் துரத்தியடித்து வாதாபி இராஜ்யத்தைத்
திரும்பக் கைப்பற்றும் மார்க்கங்களைப்பற்றி ஆலோசிக்கலானோம்."
"இதற்குள்
மங்களேசனுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு அங்கே வந்து
விட்டார்கள்." "தூரத்தில் ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் நீ
பயந்தாய். 'அண்ணா! என்னைக் கைவிடாதே!' என்று கட்டிக் கொண்டாய்.
ஒரு நிமிஷம் நான் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
'தம்பி! நான் சொல்கிறபடி செய்வாயா?' என்று கேட்டு உன்னிடம்
வாக்குறுதியொன்று வாங்கிக் கொண்டேன். பிறகு உன்னுடைய உடைகளை
எடுத்து நான் தரித்துக் கொண்டேன். என்னுடைய ஆடையை நீ உடுத்திக்
கொண்டாய். அதே சமயத்தில் அஜந்தா மலைக் குகைக்குள் புத்த
சங்கிராமத்துக்குப் போகும் வழியை உனக்கு நான் சொன்னேன். அங்கே
நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் சொன்னேன். சற்றுத் தூரத்தில்
இருந்த அடர்ந்த கிளைகள் உள்ள மரத்தின் மேல் ஏறி ஒளிந்து
கொள்ளச் சொன்னேன்."
"மரத்தின் மேல்
ஏறி நான் ஒளிந்து கொண்டதுதான் தாமதம், மங்களேசனுடைய ஆட்கள்
யமகிங்கரர்களைப் போல் வந்து விட்டார்கள். அவர்களுடைய தலைவன்
உன்னைச் சுட்டிக்காட்டி, 'பிடித்துக் கட்டுங்கள் இவனை!" என்று
கட்டளையிட்டான். என் நெஞ்சு துடியாகத் துடித்தது.
'எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம்' என்று எண்ணினேன்.
உன்னிடம் அளவற்ற நன்றி உணர்ச்சி உண்டாயிற்று." "தம்பி!
நம்முடைய உருவ ஒற்றுமையை நான் அதற்கு முன்னமே தெரிந்து
கொண்டிருந்தேன். நதியிலும் சுனையிலும் நாம் குளித்துக்
கரையேறும் போது, தண்ணீரில் தெரிந்த நமது பிரதிபிம்பங்களைப்
பார்த்து அறிந்து கொண்டிருந்தேன். அப்படித் தெரிந்து
கொண்டிருந்தது அச்சமயம் உன்னைக் காப்பாற்றுவதற்கு
ஏதுவாயிற்று." "அண்ணா! அந்தச் சம்பவமெல்லாம் எனக்கு ஞாபகம்
இருக்கிறதா என்று கேட்டாயே! முன்பின் அறிந்திராத எனக்காக நீ
உன் உயிரைக் கொடுக்கத் துணிந்ததை என்னால் எப்படி மறக்க
முடியும்?" என்று குரல் தழுதழுக்க உருக்கத்துடன் புலிகேசிச்
சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய கண்களிலே கண்ணீர் துளித்தது.
'ஆ! இதென்ன? நெஞ்சில் ஈரப் பசையற்ற கிராதகப் புலிகேசியின்
கண்களிலும் கண்ணீரா? இது உண்மைதானா?' என்று பரிசோதித்துத்
தெரிந்து கொள்வதற்காகப் பூரண சந்திரன் தனது வெள்ளிக் கிரணங்கள்
இரண்டை ஏவ, அது காரணமாகப் புலிகேசியின் கண்ணில் எழுந்த
நீர்த்துளிகள் ஆழ்கடல் தந்த நன்முத்துக்களைப் போல்
சுடர்விட்டுப் பிரகாசித்தன.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்தோராம் அத்தியாயம்
அஜந்தா குகையில்
புலிகேசியின்
உணர்ச்சி மிகுதியையோ கண்ணீரையோ, கவனியாதவராய்ப் புத்த பிக்ஷு
கீழ்வானத்தில் மிதந்து வந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டே
மேலும் கூறினார்: "அந்தக் கிராதகர்கள் என்னை நீ என்றே எண்ணிக்
கொண்டு பிடித்துப் போனார்கள். வனப் பிரதேசங்களையெல்லாம் தாண்டி
அப்பால் கொண்டு போனதும் என்னைக் குதிரை மேல் ஏறச் சொன்னார்கள்.
நான் குதிரை ஏறத் தெரியாமல் தவித்ததைப் பார்த்ததும்
அவர்களுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. நான் பாசாங்கு செய்கிறேனோ
என்று அவர்கள் முதலில் எண்ணினார்கள். பிறகு உண்மையாகவே
எனக்குக் குதிரை ஏறத் தெரியவில்லை என்று அறிந்ததும் அவர்களுடைய
தலைவன் என்னை என்னவெல்லாமோ கேள்விகள் கேட்டான். என்னுடைய
விடைகளைக் கேட்டு அவர்கள் திகைத்தார்கள். உன்னுடைய காதுகளில்
நீ குண்டலம் போட்டுக் கொண்டிருந்தாய், அதற்காகத் துவாரங்களும்
இருந்தன. என் காதுகளில் துவாரமே இல்லையென்பதைப் பார்த்ததும்
அவர்களுக்கு நான் நீ இல்லையென்பது நிச்சயமாய்த் தெரிந்து
விட்டது. உன்னைப் பிடிக்க முடியாததனால் ஏற்பட்ட
கோபத்தையெல்லாம் என்பேரில் காட்டி உபத்திரவப்படுத்தினார்கள்.
என்னை அடித்த அடியின் தழும்புகள் இதோ இன்னும் இருக்கின்றன!"
என்று புத்த பிக்ஷு தம் முதுகைத் தொட்டுப் பார்த்துக்
கொண்டார்.
"ஐயோ! அண்ணா!
அந்தத் தழும்புகளைப் பார்த்து எத்தனையோ நாள் நான்
தூக்கமின்றித் தவித்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் எதற்காக
இப்போது ஞாபகப்படுத்துகிறாய்?" என்று புலிகேசி அலறினார்.
"தம்பி! உனக்கு ஞாபகப்படுத்தவில்லை; எனக்கு நானே
ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். அதையெல்லாம் இன்றைக்கு எண்ணிப்
பார்த்தால் எனக்கு மனக் கஷ்டம் உண்டாகவில்லை, குதூகலந்தான்
உண்டாகிறது. பரோபகாரம் செய்வதில் உள்ள பலன் இதுதான்.
ஒருவருக்கு ஒத்தாசை செய்வதற்காக நாம் கஷ்டப்பட்டோமானால்,
கஷ்டம் அதை அனுபவிக்கும் போது மட்டுமே நீடிக்கிறது.
சீக்கிரத்தில் அது போய் விடுகிறது. அப்புறம் வாழ்நாள் உள்ளவரை
நாம் செய்த உதவியை நினைத்து நினைத்துச் சந்தோஷப்படுகிறோம்.
ஆனால், தம்பி! அந்தப் பழைய கதையையெல்லாம் இப்போது
ஞாபகப்படுத்துவது உனக்கு ஒருவேளை மனக்கஷ்டத்தை உண்டாக்கினால்
நான் சொல்லவில்லை" என்று நாகநந்தி நிறுத்தினார்.
"அண்ணா, என்ன
சொல்கிறாய்? எனக்கும் அந்தக் காலத்தை நினைத்தால் எத்தனையோ
மகிழ்ச்சி உண்டாயிற்று!" "அப்படியானால் சரி, கொஞ்ச நேரம்
வரையில் அந்தக் கிராதகர்கள் துன்புறுத்தியதையெல்லாம்
பொறுத்துக் கொண்டிருந்தேன். பொறுக்க முடியாமற்போன பிறகு, நான்
அஜந்தா புத்த சங்கிராமத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவித்தேன்.
உடனே அவர்கள் பயந்து விட்டார்கள். நான் அணிந்திருந்த உடைகள்
எப்படிக் கிடைத்தன என்று கேட்டார்கள். பொய்கைக் கரையிலே அவை
கிடைத்தனவென்றும், நான் அவற்றை வெறுமனே உடுத்திக் கொண்டு
பார்க்க ஆசைப்பட்டு உடுத்திக் கொண்டதாகவும் சொன்னேன். என்னை
அழைத்துக் கொண்டு திரும்பி அதே பொய்கைக் கரைக்கு வந்தார்கள்.
சுற்றியிருந்த வனப் பிரதேசமெங்கும் தேடிப் பார்த்தார்கள்.
கடைசியில் ஏதோ காட்டு மிருகம் உன்னைக் கொன்று தின்றிருக்க
வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு என்னை விட்டு விட்டுத்
திரும்பிப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, நீ வழி
கண்டுபிடித்துப் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாயோ என்னவோ என்ற
கவலையுடன் நானும் அஜந்தாவை நோக்கிக் கிளம்பினேன்."
வாதாபிச்
சக்கரவர்த்தி அப்போது குறுக்கிட்டுக் கூறினார்; "நீ
சொல்லியிருந்தபடியே நான் நதி வழியைப் பிடித்துக் கொண்டு
போனேன். வளைந்து வளைந்து போன நதியோடு எத்தனை தூரம் போனாலும்
மனித சஞ்சாரமே இல்லை. அடிக்கடி எதிரே சுவர் வைத்தது போல் மலை
நின்று அப்பால் வழியே இல்லையென்று தோன்றியது. போகப் போக
இப்படியே இருந்தது. ஒருவேளை நீ சொன்னதை நான் நன்றாய்த்
தெரிந்து கொள்ளாமல் தப்பான வழியைப் பிடித்துக் கொண்டு போகிறேனோ
என்று எண்ணினேன். அதைவிடப் பயங்கரமான எண்ணம் ஒன்று தோன்றியது.
நீ ஒருவேளை என்னை ஏமாற்றி விட்டாயோ, சித்தப்பன் மங்களேசனிடம்
போய்ச் சமாதானம் செய்து கொண்டு இராஜ்யம் ஆளப் பார்க்கிறாயோ
என்று நினைத்தேன். கடைசியில் அஜந்தாவின் அற்புதச் சித்திரக்
குகைகளை அடைந்தேன். நீ சொன்னபடியே அங்கு யாரோடும் பேச்சுக்
கொடாமல் சிற்பியின் சீடனாக நடித்துக் காலம் கழித்துக்
கொண்டிருந்தேன். ஒரு வாரம் கழித்து நீ வந்து சேர்ந்தாய்.
உன்னுடைய கதையைக் கேட்டு, உன்னுடைய முதுகிலிருந்த காயங்களையும்
பார்த்து விட்டு, உனக்கு நான் மனத்தினால் செய்த அநீதியை எண்ணி
'ஓ'வென்று அழுதேன்..."
"தம்பி! என்
விஷயத்தில் உன்னுடைய மனம் அப்போது கூட முழு நிம்மதி
அடையவில்லை. சங்கிராமத்தின் தலைமை பிக்ஷு நம்மை ஒருநாள்
சேர்ந்தாற்போல் பார்த்து விட்டார். நாம் நதியில் தனி
இடத்திற்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த போது அவர்
பார்த்தார். உன்னைப் பற்றி விசாரித்தார்; நான் உண்மையைச்
சொன்னேன். அஜந்தா சட்டத்துக்கு நேர்விரோதமாக அந்நியனாகிய உன்னை
நான் அங்கே கொண்டு வந்ததற்காக என்னை எவ்விதம் தண்டிப்பாரோ
என்று பயந்தேன். ஆனால், குரு என்னைக் கோபிக்கவும் இல்லை;
தண்டிக்கவும் இல்லை. அன்று சாயங்காலம் அவருடைய தலைமை
விஹாரத்தில் ஒருவரும் வராத சமயத்தில் நம்மை அழைத்து வைத்துக்
கொண்டு நம்மைப் பற்றிய கதையைச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு
உன்னுடைய மனநிம்மதி இன்னும் அதிகமாகக் குலைந்தது. தம்பி! என்
விஷயமாக உன் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டு, வரவரப் பெரிதாகிக்
கொழுந்து விட்டெரியத் தொடங்கியது." "ஆம், அண்ணா! அது
உண்மைதான்; ஆனால் அதே சமயத்தில் என்னுடைய நீச குணத்தைப்
பற்றியும் நான் அடிக்கடி எண்ணமிட்டு வெட்கமடைந்தேன்."
"உன் பேரில்
தவறில்லை, தம்பி! சிறிதும் தவறில்லை. அப்போதும் நான்
அவ்வாறுதான் எண்ணினேன். நீயும் நானும் இரட்டைப் பிள்ளைகள்
என்றும், இரண்டு பேரில் நான் முதலில் பிறந்தவன் என்றும்
தலைமைப் பிக்ஷு நமக்குத் தெரியப்படுத்தினார். நம் தந்தை நான்
பிறந்தவுடனேயே என்னை அப்புறப்படுத்தி வைத்திருந்து ஐந்தாவது
வயதில் என்னைப் பிக்ஷுவிடம் ஒப்புவித்தார். உன்னுடைய உயிருக்கு
ஏதாவது அபாயம் நேர்ந்ததாகத் தெரிந்தால், அப்போது மட்டும்
என்னைப் பற்றிய இரகசியத்தை வௌிப்படுத்தி என்னை
இராஜ்யத்துக்குரியவனாகச் செய்ய வேண்டும் என்று
சொல்லியிருந்தார். இதையெல்லாம் பிக்ஷு குரு நமக்குச் சொல்லி,
உன்னை நானே காப்பாற்றும்படியாக நேர்ந்த விதியைக் குறித்து
வியந்தார். என்னுடைய உத்தம குணத்தை வெகுவாகச் சிலாகித்தார்.
நான் பிறந்து அரை நாழிகைக்குப் பிறகு நீ பிறந்ததாகவும், ஜாதக
ரீதியாக நீயே இராஜ்யமாளப் பிறந்தவன் என்று ஏற்பட்டபடியால் நம்
தந்தை உன்னைச் சிம்மாசனத்துக்கு உரியவனாகத்
தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இது தெரிந்ததும் உன் பேரில்
எனக்கு ஏற்கெனவே இருந்த அன்பு பன்மடங்கு ஆயிற்று. ஆனால், அதே
செய்தியினால் உன்னுடைய மனத்தில் விஷம் பாய்ந்து விட்டது. அந்த
நிமிஷம் முதல் நீ என்னை மனத்திற்குள் துவேஷிக்கத் தொடங்கினாய்.
அதைக் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை; உன் பேரில் கோபம்
கொள்ளவும் இல்லை. நியாயமாக வாதாபிப் பட்டத்துக்குரியவன் நான்
என்று ஏற்பட்டபடியால் நீ என் பேரில் சந்தேகப்படுவது இயற்கை
என்பதை உணர்ந்தேன். உன்னுடைய சந்தேகத்தை அறவே போக்கத்
தீர்மானித்தேன். பிக்ஷு குருவின் காலில் விழுந்து என்னையும்
பிக்ஷு மண்டலத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன்.
குரு முதலில் ஆட்சேபித்தார், கடைசியில் ஒப்புக் கொண்டார்.
உன்னுடைய முன்னிலையில் நான் தலையை மொட்டை அடித்துக் கொண்டு
காவி வஸ்திரம் தரித்த புத்த பிக்ஷு ஆனேன். என்றென்றைக்கும் உலக
வாழ்க்கையைத் துறந்து விட்டதாகச் சத்தியம் செய்தேன். உன்
உள்ளத்தில் மூண்டிருந்த தீ அணைந்தது. முன்போல் என்னிடம்
அன்பும் விசுவாசமும் கொண்டாய்."
"அண்ணா! அது
முதல் உன்னையே நான் தெய்வமாகக் கொண்டேன். எந்தக் காரியத்திலும்
உன் இஷ்டப்படியே நடந்து வந்தேன். நீ சொன்ன சொல்லைத் தட்டி
நடந்ததில்லை." "அதனால் நீ எவ்வித நஷ்டமும் அடையவில்லை, தம்பி!
உன்னை அஜந்தாவில் விட்டு விட்டு நான் வௌியேறினேன். மூன்று வருஷ
காலம் நாடெங்கும் சுற்றினேன். இராஜ்யத்தின் அதிகாரிகள்,
இராணுவத் தலைவர்கள் எல்லாரையும் உன்னுடைய கட்சியில் சேரச்
செய்தேன். பொது ஜனங்களையும் மங்களேசனுக்கு எதிராகக் கிளப்பி
விட்டுக் கொண்டிருந்தேன். பக்குவமான காலம் வந்த போது உன்னை
அஜந்தாவிலிருந்து வரவழைத்தேன். பெரிய சைனியத்துக்குத் தலைமை
வகித்து நீ வாதாபி நோக்கிச் சென்றாய். மங்களேசன் போரில் உயிரை
விட்டான். நம்முடைய புகழ்பெற்ற பாட்டனார் சத்யாச்ரயப் புலிகேசி
வீற்றிருந்து ஆட்சி புரிந்த சளுக்க சிம்மாசனத்தில் நீ
ஏறினாய்."
"அண்ணா! உன்னுடைய
ஒத்தாசையினாலேதான் வாதாபிச் சிம்மாசனம் ஏறினேன். உனக்கு
நியாயமாக உரிய சிம்மாசனத்தை நீ எனக்காகத் துறந்தாய். என்
மனத்தில் சிறிதும் களங்கம் இருக்கக் கூடாது என்பதற்காக உலக
வாழ்க்கையையே துறந்து பிக்ஷு ஆனாய். உன்னுடைய மகத்தான
பிரயத்தனங்களினாலேதான் மங்களேசனைக் கொன்று நான் சிம்மாசனம்
ஏறினேன். அதற்குப் பிறகு, இருபது வருஷ காலமாக நீ எனக்கு அன்னை,
தந்தையாகவும், மதி மந்திரியாகவும், இராணுவ தந்திரியாகவும்
இருந்து வந்திருக்கிறாய். இன்று நர்மதையிலிருந்து வடபெண்ணை
வரையில் வராகக் கொடி பறந்து வருவதெல்லாம் உன்னாலேதான்.
இதையெல்லாம் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒப்புக் கொண்டு உனக்கு
நன்றி செலுத்துகிறேன். ஆனால், இந்தப் பழைய கதையையெல்லாம்
எதற்காக இப்போது ஞாபகப்படுத்துகிறாய்? உன்னிடம் எனக்குள்ள
நன்றியை எந்த விதத்திலாவது நான் தெரிவித்துக் கொள்ள
இடமிருக்கிறதா?" என்று புலிகேசி கேட்டு விட்டு ஆவலுடன்
நாகநந்தியின் முகத்தை நிலா வௌிச்சத்தில் பார்த்தார்.
கடுமையான
விரதங்களினால் வற்றி உலர்ந்திருந்த பிக்ஷுவின் முகத்தில்
புலிகேசி என்றும் காணாத கனிவு தென்பட்டது. "ஆம்; தம்பி! நான்
உனக்குச் செய்திருப்பதற்கெல்லாம் பிரதியாக நீ எனக்குச்
செய்யக்கூடியது ஒன்று இருக்கிறது" என்றார் பிக்ஷு.
"அப்படியானால் உடனே அதைச் சொல்லு, இருபத்தைந்து வருஷமாக உனக்கு
நான் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஒரு பகுதியையாவது
கழிக்கிறேன்." "தம்பி! நீ வாதாபியை விட்டுப் புறப்படுவதற்கு
முன்பே உனக்கு ஓர் ஓலை அனுப்பியிருந்தேனல்லவா? அதில் என்ன
எழுதியிருந்ததென்பது ஞாபகம் இருக்கிறதா?" "எவ்வளவோ விஷயம்
எழுதியிருந்தாய்; எதைச் சொல்கிறாய்?"
"காஞ்சி
சுந்தரியை நீ எடுத்துக் கொள்; சிவகாமி சுந்தரியை எனக்குக்
கொடு! என்று எழுதியிருந்ததைச் சொல்கிறேன்." "ஆமாம்; அதைப்
பற்றி இப்போது என்ன?" "அப்போது கேட்டதையே இப்போதும்
கேட்கிறேன்." "அண்ணா! இது என்ன? காஞ்சி சுந்தரியைத்தான்
நம்மால் கைப்பற்ற முடியவில்லையே?" "காஞ்சி சுந்தரி உனக்குக்
கிடைக்கவில்லை! ஆனாலும், சிவகாமியை எனக்குக் கொடு என்று
கேட்கிறேன்." "அதெப்படி முடியும்? உண்மையில் மகேந்திர
பல்லவனுடைய சபையில் அந்தப் பெண் நாட்டியம் ஆடிய போது நீ
ஓலையில் எழுதியிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அவளை என்னுடன்
அனுப்ப முடியுமா என்று பல்லவனைக் கேட்டேன். அவன் என்ன சொன்னான்
தெரியுமா? கலை உணர்ச்சியேயில்லாத என்னுடன் அவள் வர மாட்டாள்
என்று சொன்னான்! இப்போது மறுபடியும் திரும்பிக் காஞ்சி மீது
படையெடுக்கச் சொல்லுகிறாயா?" "வேண்டாம், தம்பி! மறுபடியும்
படையெடுக்க வேண்டாம். காஞ்சி சுந்தரி உனக்குக் கிட்டவில்லை;
ஆனால், சிவகாமி சுந்தரி எனக்குக் கிடைத்தாள், அவளைக் கொண்டு
வந்தேன்." "என்ன? என்ன? உண்மையாகவா?"
"தம்ப!
அவளுக்காகவே நான் உன்னைப் போல வேஷந்தரித்தேன். அவள் தந்தையின்
உயிரைக் காப்பாற்றினேன். சிவகாமிக்காகவே படைத் தலைமை வகித்து
மகேந்திர பல்லவனுடன் மணிமங்கலத்தில் போர் செய்தேன். அவளை
முன்னிட்டே போரை நடுவில் நிறுத்தி விட்டுப் பின்வாங்கினேன்."
"அண்ணா! எல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று புலிகேசி கேட்க,
நாகநந்தி தாம் மூன்று வருஷத்துக்கு முன்னால் தென்னாட்டுக்கு
வந்ததிலிருந்து செய்ததை எல்லாம் விவரமாய்க் கூறினார்.
எல்லாவற்றையும்
கேட்ட புலிகேசி, "அண்ணா! அந்த நாட்டியப் பெண்ணின் மீது
உண்மையாகவே நீ காதல் கொண்டிருப்பதாகவா சொல்கிறாய்?" என்று
நம்பிக்கையில்லாத குரலில் வினவினார். "ஆமாம் தம்பி!
சத்தியமாகத்தான்." "ஆனால், நீ அஜந்தாவில் புத்த குருவின்
முன்னால் செய்த பிரதிக்ஞை என்ன ஆவது? நாடெங்கும் காவித் துணி
அணிந்து ஸ்திரீலோலர்களாய்த் திரியும் கள்ளப் பிக்ஷுக்களின்
கூட்டத்தில் நீயும் சேர்ந்து விடப் போகிறாயா, அண்ணா?" "தம்பி!
இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். இதற்கு மறுமொழி சொல்லவும்
ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால், இரண்டொரு வார்த்தையிலே சொல்ல
முடியாது. விவரமாகச் சொல்ல வேண்டும், கேட்கிறாயா?" "கட்டாயம்
கேட்கிறேன், ஆனால் சொல்லத்தான் வேண்டுமென்று உன்னை நான்
கட்டாயப்படுத்தவில்லை. உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லு;
இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்!" என்றார் வாதாபிச்
சக்கரவர்த்தி. உண்மையில் மேற்படி விவரத்தைக் கேட்கப்
புலிகேசியின் உள்ளம் துடிதுடித்தது. அதே கணத்தில் அவருடைய
மனத்தில் அசூயையின் விதையும் விதைக்கப்பட்டது. இத்தனை நாளும்
புத்த பிக்ஷுவின் இருதயத்தில் தன்னைத் தவிர வேறு யாரும்
இடம்பெற்றதில்லை. அவருடைய அன்புக்கெல்லாம் தாமே
உரியவராயிருந்தார். தம்முடைய நன்மையைத் தவிரப் பிக்ஷுவுக்கு
வேறு எந்த விஷயத்திலும் கவலையும் கவனமும் இல்லாமலிருந்தது.
இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்போது பெண் ஒருத்தி,
நாட்டியக்காரி, அவருடைய உள்ளத்தில் இடம்பெற்று விட்டாள்! "ஆம்!
இப்போது என்னைக் காட்டிலும் அந்தப் பெண்ணிடந்தான் பிக்ஷுவுக்கு
அபிமானம்! அவள் படுநீலியாயிருக்க வேண்டும்!" என்று புலிகேசி
தம் மனத்திற்குள் அசூயையுடன் எண்ணமிட்டார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
பிக்ஷுவின் காதல்
புலிகேசியின்
உள்ளத்தில் அசூயையென்னும் பாம்பு படமெடுத்து ஆடுவதை
அறியாதவராய் நாகநந்தி பிக்ஷு தமது இருதயத்தைத் திறந்து சொல்லத்
தொடங்கினார். "தம்பி! குழந்தைப் பிராயம் முதற்கொண்டு - எனக்கு
அறிவு தௌிந்த நாளிலிருந்து, நான் அஜந்தா மலைக் குகைகளில்
வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிக்ஷுக்களும்
அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம்
வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. அதாவது, சதை,
இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணைப்
பார்த்ததில்லை. ஆனால், ஜீவனுள்ள பெண்களைப் பார்த்திருக்கிறேன்.
ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப்
பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப்
பார்த்திருக்கிறேன். மானிடக் குலத்துக்கு எட்டாத தெய்வீக
சௌந்தரியம் வாய்ந்த மடமங்கையர்களைப் பார்த்திருக்கிறேன்.
அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அணங்குகளைப்
பார்த்திருக்கிறேன். தங்கள் கூந்தலில் மலர் அணிந்ததனால்
அம்மலருக்கு அழகைத் தந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன்.
சாந்தங் குடிகொண்ட பெண்களையும், கருணை வடிவான பெண்களையும்,
மினுக்கி மயக்கும் மோகினி ரூபம் கொண்ட மாயப் பெண்களையும்
பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் அஜந்தா விஹாரங்களில் உள்ள
சுவர்களிலே பார்த்தேன். மகா சைத்திரிகர்களான பிக்ஷுக்கள்
தீட்டிய அற்புத சித்திர வடிவங்களிலே பார்த்தேன். அந்த சித்திர
வடிவங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையில் உயிர் உள்ள ஸ்திரீ
புருஷர்கள்தான். நான் அவர்கள் அருகில் சென்றதும் என்னை அவர்கள்
வரவேற்பார்கள்; முகமன் கூறுவார்கள்; க்ஷேமம் விசாரிப்பார்கள்.
அவர்களுடன் நானும் மனம் விட்டுப் பேசுவேன்; அவர்களுடைய க்ஷேம
லாபங்களை விசாரிப்பேன்; வௌி உலகத்து விஷயங்களைப் பற்றியெல்லாம்
அவர்களிடம் கேட்பேன். மௌன பாஷையில் அவர்கள் மறுமொழி
சொல்வார்கள்.
"இப்படி நான்
தினந்தோறும் பார்த்துப் பேசிப் பழகிய சித்திர
வடிவங்களுக்குள்ளே முக்கியமாக ஒரு பெண்ணின் வடிவம் என்
சிந்தையைக் கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை
அவள் இடையில் உடுத்தியிருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர்
நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த
அவளுடைய இதழ்களின் செந்நிறமும், அவளுடைய கருங்கூந்தலில்
குடியிருந்த செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று
தூக்கியடித்தன. தாமரை இதழ் போல வடிவம் அமைந்த அவளுடைய கண்களின்
கருவிழிகள் என் இருதயத்தை ஊடுருவி நோக்கிய போது என்
இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும் இன்பமும்
உண்டாயின. அந்தச் சித்திர உருவம் தீட்டப்பட்டிருந்த
விஹாரத்தின் எந்தப் பக்கத்தில், எந்த மூலையில் நின்று
பார்த்தாலும், அந்தப் பத்மலோசனியின் கண்கள் என்னையே நோக்குவது
போல் இருந்தன. அவ்வளவு அற்புத வேலைத் திறமையுடன் யாரோ ஒரு
சைத்திரிகப் பிரம்மா அவ்வுருவத்தைத் தீட்டியிருந்தார். அந்தச்
சித்திரத்தை வரைந்து முந்நூறு வருஷங்களுக்கு மேல் ஆகியிருந்த
போதிலும் வர்ணங்கள் சிறிதும் மங்காமல் நேற்று எழுதியவை போல்
விளங்கின.
"அந்தச்
சித்திரப் பெண்ணின் உருவத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது; அவள்
இடை வளைந்து நின்ற நிலையும், அவளுடைய கரங்களும் கழுத்தும்
அமைந்திருந்த தோற்றத்தில் காணப்பட்ட நௌிவும், அவள் ஏதோ ஒரு
விசித்திரமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைப்
புலப்படுத்தின. ஆனால், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்
என்பது எனக்குப் புலப்படவில்லை. என் மனத்திற்குள் எவ்வளவோ
யோசனை செய்தும் அதை என்னால் அறிய முடியவில்லை. கடைசியில்
சைத்திரிக பிக்ஷு ஒருவரைக் கேட்டேன். அவர் 'அந்தப் பெண்
பரதநாட்டியம் ஆடுகிறாள்' என்று சொன்னார். பிறகு பரதநாட்டியம்
என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். பரத
சாஸ்திரம் என்னும் ஒரு நூல் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அந்த
நூலைச் சம்பாதித்துப் படித்தேன். பரதநாட்டியக் கலையின் பல
அம்சங்களையும் நன்கு தெரிந்து கொண்டேன்.
"இதற்குப் பிறகு,
அந்த ஓவியக் கன்னி என் உள்ளக் காட்சியில் பரத நாட்டியம் ஆடத்
தொடங்கினாள். பரதநாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும்
அவள் காட்சியளித்தாள். பற்பல முத்திரைகள், ஹஸ்தங்கள், பலவித
அபிநயத் தோற்றங்கள் - என் அகக் கற்பனையில் தோன்றிக்
கொண்டேயிருந்தன. பகலிலும் இரவிலும் சதா சர்வகாலமும் அந்தக்
கற்பனைப் பெண் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்தாள். அப்போது
தான் எனக்கு முதன் முதலில் வௌி உலகத்துக்குப் போக வேண்டும்,
நாடு நகரங்களில் வாழும் ஸ்திரீ புருஷர்களைப் பார்க்க வேண்டும்
என்ற ஆசை உண்டாயிற்று. ஒரு வேளை அந்த மாதிரி உ்மையாகவே ஒரு
பெண் எங்கேனும் இருக்கலாமல்லவா என்ற சபலம் ஏற்பட்டது. இந்த ஆசை
காரணமாகவே அஜந்தா நதி வழியைப் பிடித்துக் கொண்டு வௌியே வந்து
மலையடிவாரத்துக் கானகங்களிலே நான் சுற்ற ஆரம்பித்தேன்.
அப்போதுதான் தம்பி, ஒருநாள் உன்னைப் பார்த்தேன். பேச்சு
மூச்சற்றுக் கிடந்த உன் உடம்பில் பிராணனை ஊட்டினேன். அது முதல்
என் மனப்போக்கில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. சித்திரத்தில்
பார்த்துக் கற்பனையில் நான் வளர்த்து வந்த பெண் சிறிது சிறிதாக
என் உள்ளத்திலிருந்து மறையலானாள். அவள் இருந்த இடத்தில் நீ
வந்து சேர்ந்தாய். நீ என் சொந்த உடன்பிறந்த சகோதரன், என்னுடன்
இரத்தத் தொடர்புடையவன்; என்பதை அறிந்த பிறகு என் இருதயத்தில்
அந்தச் சித்திர நாட்டியக்காரிக்குச் சிறிதும் இடமில்லாமல் போய்
விட்டது.
"தம்பி! சிறிது
காலத்துக்கெல்லாம் நீயும் நானும் அஜந்தா மலைக் குகையை விட்டு
வௌியேறினோம். நீ வாதாபிச் சிம்மாசனம் ஏறினாய். நீயும் நானுமாக
எத்தனையோ யுத்தங்கள் நடத்தி ஜயித்தோம். எத்தனையோ இராஜ
தந்திரங்களையும் இராணுவ தந்திரங்களையும் கையாண்டு வெற்றி
பெற்றோம். துங்கபத்திரையிலிருந்து நர்மதை நதி வரையில் சளுக்க
சாம்ராஜ்யம் படர்ந்து தழைத்தது. உத்தராபத ஹர்ஷவர்த்தன
சக்கரவர்த்தியும் வராகக் கொடியைக் கண்டு அஞ்சலானார்.
"இந்த நாட்களில்
நான் ஏற்றுக் கொண்டிருந்த பிக்ஷு விரதத்தை நிறைவேற்றுவது
எனக்குக் கொஞ்சமும் கஷ்டமாயில்லை. வாதாபி நகரத்திலும், மற்றும்
நான் யாத்திரை செய்த பட்டணங்களிலும் கிராமங்களிலும் எத்தனையோ
ஸ்திரீகளை நான் பார்த்தேன். அஜந்தா குகைச் சுவர்களில் நான்
பார்த்த சித்திரப் பெண் வடிவங்களோடு ஒப்பிடும் போது, இந்த
மானிடப் பெண்கள் அழகற்ற அவலட்சண வடிவங்களாகத் தோன்றினார்கள்.
அந்தச் சித்திரப் பெண்களைப் பார்த்து அவர்களுடைய அழகை வியந்த
கண்களினால் இந்தச் சாதாரண மானிட ஸ்திரீகளைப் பார்க்கவே
முடியவில்லை. "உலகத்திலே மனிதர்கள் என்னத்திற்காக ஸ்திரீகள்
மீது மோகம் கொண்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று
வியந்தேன். தம்பி! ஒருவர் பின் ஒருவராக நீ ஆறு பெண்களை மணந்த
போது உன்னுடைய பரிதாப நிலையைக் குறித்து இரங்கினேன்!"
இத்தனை நேரம்
மௌனமாயிருந்து கேட்டுக் கொண்டிருந்த புலிகேசி இப்போது
குறுக்கிட்டுக் கூறினார்: "ஆம், அண்ணா! அதையெல்லாம் நினைத்தால்
ஏன் அந்தப் பைத்தியக்காரத்தனங்களில் இறங்கினோம் என்று எனக்கும்
ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்?
எங்களுக்கெல்லாம் அனுபவித்த பிறகுதான் புத்தி வருகிறது. நீயோ
பெண் மோகம் என்பது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை முன்னதாகவே
கண்டு கொண்டு விட்டாய்!"
புலிகேசிச்
சக்கரவர்த்தி இவ்விதம் கூறிய போது அவருடைய தொனியில் சிறிது
பரிகாசம் கலந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால், அறிவுக் கூர்மை
மிகப் படைத்த பிக்ஷுவுக்கு அச்சமயம் அது தெரியவில்லை, அவர்
மேலும் கூறினார்: "இல்லை, தம்பி இல்லை! உன்னுடைய புகழ்ச்சிக்கு
நான் அருகனல்ல. நீங்கள் எல்லாரும் பட்டு அனுபவித்த பிறகு,
உண்மையைக் கண்டுகொண்டீர்கள். ஆனால், நானோ எத்தனையோ காலம்
துறவறத்தை அனுஷ்டித்த பிறகு, யௌவனப் பிராயத்தையெல்லாம் இழந்து
விட்ட பிறகு, ஒரு பெண்ணின் காதலுக்கு வயமானேன். ஆனால்,
என்னுடைய காதல் மற்ற உலக மாந்தரின் காதலை ஒத்ததன்று. அதைப்
பற்றிச் சொல்வதற்கு முன்னால் நான் காதல் வயப்பட்ட வரலாற்றைச்
சொல்லி விட வேண்டும்.
"வடக்கே ஹர்ஷ மகா
சக்கரவர்த்தியுடன் நாம் ஓர் உடன்படிக்கைக்கு வந்து
நர்மதைக்குத் தெற்கே அவருடைய சைனியங்கள் வருவதில்லையென்று
வாக்குறுதி பெற்ற பிறகு, தென்னாட்டுப் படையெடுப்புக்கு முன்
ஆயத்தம் செய்வதற்காகச் சென்றேன். தென்னாடெங்கும் பௌத்த
மடங்களும் ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தபடியால் என்னுடைய வேலை
மிகவும் சுலபமாயிருந்தது. காஞ்சி இராஜ விஹாரத்திலே கூட நமக்காக
வேலை செய்யும் பிக்ஷுக்கள் கிடைத்தார்கள். பிறகுதான், உனக்குச்
சைனியத்துடன் கிளம்பும்படி ஓலை அனுப்பினேன். அனுப்பி விட்டு
நான் மதுரைக்குப் பிரயாணப்படுவதற்கு முன்னால் என்
வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
"தம்பி! சளுக்க
சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கான வேலைகளில் நான் பூரணமாய்
ஈடுபட்டிருந்த போதிலும், இடையிடையே சிற்ப சித்திரக் கலைகளில்
என் மனம் செல்லாமல் தடுக்க முடியவில்லை. காஞ்சியில் சில
அற்புதமான சிற்பங்களைப் பார்த்தேன்; மாமல்லபுரம் என்று
புதிதாகப் பெயர் பெற்ற துறைமுகத்துக்கருகில் சில அதிசயமான
சிற்ப வேலைகள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன். மதுரைக்குப்
போகுமுன் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று சென்றேன்.
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் உண்மையில் அதிசயமாகவே இருந்தன.
அந்த வேலைகளை நடத்தி வைக்கும் பெரிய சிற்பி ஒருவர் அரண்யத்தின்
நடுவில் வீடு கட்டிக் கொண்டு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி அவருடைய சிற்ப வீட்டைத்
தேடிக் கொண்டு போனேன்.
"அந்த மகா
சிற்பியின் வீட்டில் பல அற்புதங்களைக் கண்டேன். முக்கியமாக,
ஆயனர் அப்போது செய்வதில் ஈடுபட்டிருந்த நடனச் சிலைகள் என்
மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. அஜந்தாவின் புத்த விஹாரத்தின்
சுவரில் நான் பார்த்த நடனப் பெண்ணின் உருவத்தை அவை எனக்கு
நினைவூட்டின. அந்த நடனச் சிலைகளைப் பார்த்து வியந்து
கொண்டிருந்த போது ஒரு மகா அற்புதம் நிகழ்ந்தது. வீட்டின்
பின்கட்டிலிருந்து ஒரு பெண் உருவம் நாங்கள் இருந்த சிற்ப
மண்டபத்துக்கு வந்தது. ஊனும் உடலும் உயிரும் உள்ள உருவந்தான்.
ஆனால், அஜந்தா சுவரில் நான் பார்த்த சித்திரத்துக்கும் இந்த
உருவத்துக்கும் அணுவளவும் வேற்றுமை இல்லை. அதே பூரண
சந்திரனையொத்த முகம்; பொன்னிற மேனி; அதே வர்ணமுள்ள உடைகள்;
நெஞ்சை ஊடுருவிப் பார்க்கும் நீண்ட நயனங்கள்; கூந்தலை
எடுத்துக் கட்டியிருந்த விதமும் அப்படியே. சற்று நேரம் நான்
காண்பது உண்மையான தோற்றமா, அல்லது சித்த பிரமையா என்று
பிரமித்திருந்தேன். அந்த உருவம் அதன் செவ்விதழ்களைச் சிறிது
விரித்து, 'அப்பா! இந்தச் சுவாமிகள் யார்?' என்று கேட்ட பிறகு
தான், இதெல்லாம் உண்மை என்று உணர்ந்தேன். ஆயனச் சிற்பி என்னைப்
பார்த்து, 'இவள் என்னுடைய மகள் சிவகாமி; இவளுடைய நடனத்
தோற்றங்களைத்தான் நான் சிலை வடிவங்களாக அமைக்கிறேன்' என்றார்.
சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடினாள்.
"தம்பி! அந்த
நேரம் முதல் இந்த உலகமே எனக்குப் புதிய உலகமாக மாறி விட்டது.
இவ்வுலகில் யுத்தத்தையும் இராஜ தந்திரத்தையும், இராஜ்ய
பாரத்தையும் விட முக்கியமான காரியங்களும் இருக்கின்றன என்பதை
உணர்ந்தேன். அஜந்தா அடிவாரத்தில் உன்னைச் சந்திப்பதற்கு
முன்னால் சில காலம் அங்கே நான் கண்ட நடனச் சித்திரம் எப்படி
என் உள்ளத்தைக் கவர்ந்ததோ, அல்லும் பகலும் அதே நினைவாக
இருக்கச் செய்ததோ, அதே மாதிரி இப்போது சிவகாமியின் உருவம் என்
உள்ளத்தைக் கவர்ந்தது. உள்ளத்தை மட்டுமா? ஊனையும் உயிரையும்
உயிரின் ஒவ்வோர் அணுவையும் கவர்ந்து விட்டது.
"ஆம், த்பி!
சிவகாமியிடம் நான் காதல் கொண்டேன்; பிரேமை கொண்டேன்; மோகம்
கொண்டேன். இன்னும் உலகத்துப் பாஷைகளில் என்னென்ன வார்த்தைகள்
அன்பையும், ஆசையையும் குறிப்பதற்கு இருக்கின்றனவோ அவ்வளவு
வார்த்தைகளையும் குறிப்பிட்ட போதிலும் காணாது என்று
சொல்லக்கூடிய வண்ணம் அவள் மீது பிரியங்கொண்டேன். காதல்,
பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள்
முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை
உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகளின் மூலம்
நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்க
மாட்டார்கள். என்னுடைய காதலில் தேக தத்துவம் என்பது சிறிதும்
கிடையாது.
"சிவகாமியின்
உருவத்தைக் கண்டு நான் மோகித்து விடவில்லை. அவளுடைய உருவத்தைக்
காட்டிலும் அழகிய சித்திர சிற்ப வடிவங்களை நான்
கண்டிருக்கிறேன். "சிவகாமியின் பசும்பொன் மேனி நிறத்துக்காக
அவள் மீது நான் காதல் கொள்ளவில்லை. அந்த மேனி நிறத்தைக்
காட்டிலும் பிரகாசமான பொன்னிறத்தை இதோ இந்தச் சந்திரனிடம்
காணலாம். "சிவகாமியின் கண்ணழகைக் கண்டு நான் மயங்கி விடவில்லை.
அவள் வளர்த்த ரதி என்னும் மான் குட்டியின் மருண்ட கண்கள்
சிவகாமியின் கண்களைக் காட்டிலும் அழகானவை.
"சிவகாமியின்
உடம்பின் மென்மைக்காக அவள் மீது நான் ஆசை கொள்ளவில்லை. அவளுடைய
உடம்பைக் காட்டிலும் அதிக மென்மை பொருந்திய எத்தனையோ
புஷ்பங்கள் உலகில் இருக்கின்றன. "ஆம், தம்பி, சிவகாமியிடம்
நான் கொண்டிருக்கும் காதலில் தேக தத்துவம் என்பதே கிடையாது.
"ஆகையால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உனக்காக நான்
ஏற்றுக் கொண்ட பிக்ஷு விரதத்துக்குச் சிவகாமியினால் யாதொரு
பங்கமும் நேரவில்லை.." இவ்விதம் நாகநந்தி சொல்லி வந்த போது
அவருடைய முகத்தில் அசாதாரணமான ஒரு கிளர்ச்சி காணப்பட்டது.
புலிகேசி தம் மனத்தில், 'இதென்ன' ஒருவகை விசித்திரமான
பைத்தியம் போல இருக்கிறதே? மகேந்திரனுடைய சிறையில் வெகு காலம்
கிடந்ததனால் புத்தி மாறாட்டமாகி விட்டதா?' என்று எண்ணமிட்டார்.
புலிகேசியின்
முகபாவத்தைக் கொண்டு இதை ஊகித்து உணர்ந்த நாகநந்தி கூறினார்:
"இல்லை தம்பி, இல்லை! எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை.
இவ்வளவு தௌிவாக என்னுடைய அறிவு இதற்கு முன் எப்போதும்
இருந்ததில்லை. எனக்கு உண்மையில் சிவகாமியின் மீது ஆசையே
கிடையாது; அவளை ஆட்கொண்டிருக்கும் கலைத் தெய்வத்தினிடந்தான்
மோகம். சிவகாமி சுயப்பிரக்ஞையை இழந்து தன்னை மறந்து ஆனந்த
வௌியில் மிதந்து நடனமாடும் போது, நானும் தன் வசமிழந்து
விடுகிறேன். அப்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் இந்த உலகில்
வேறெந்தக் காரியத்திலும் ஏற்பட்டதில்லை. தம்பி! மகேந்திர
பல்லவனை நான் எவ்வளவோ பகைக்கிறேன்; துவேஷிக்கிறேன்; ஆனால், ஒரே
ஒரு விஷயத்தில் மகேந்திரனும் நானும் ஒரே அபிப்பிராயம்
கொண்டவர்கள். சிவகாமி கேவலம் மனிதர்களுக்கு மனைவியாகப்
பிறந்தவள் அல்லவென்றும் அவளுடைய அற்புதக் கலை தெய்வத்துக்கே
அர்ப்பணமாக வேண்டிய கலையென்றும் ஒருநாள் ஆயனரிடம் மகேந்திர
பல்லவன் சொன்னான். புத்தர் சிலையின் பின்னாலிருந்து அதை நான்
கேட்டேன்; அவனுடைய கூற்றை மனத்திற்குள் பூரணமாக ஆமோதித்தேன்.
தம்பி! நீ நிச்சயமாக நம்பலாம், சிவகாமியிடம் நான் கொண்ட
காதலினால் என்னுடைய பிக்ஷு விரதத்துக்கு யாதொரு பங்கமும்
நேராது" என்று முடித்தார் நாகநந்தியடிகள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்
புலிகேசியின் வாக்குறுதி
புலிகேசி
சக்கரவர்த்தி முகத்தில் புன்னகையுடன், "அடிகளே! தங்களுடைய
பிக்ஷு விரதத்துக்கு நாட்டியப் பெண் சிவகாமியினால் பங்கம்
நேராமலிருக்கலாம். ஆனால், நம்முடைய தென்னாட்டுப்
படையெடுப்புக்கு அந்தப் பெண் தெய்வத்தினால் பங்கம்
நேர்ந்துவிட்டது!" என்றார். பிக்ஷு வியப்பும் கோபமும் கலந்த
குரலில், "அது எப்படி? படையெடுப்புக்கும் சிவகாமிக்கும் என்ன
சம்பந்தம்? மகேந்திர பல்லவனுடைய சூழ்ச்சித் திறமையினால் அல்லவா
நமது உத்தேசம் நிறைவேறவில்லை?" என்று கேட்டார்.
"அடிகளே!
மகேந்திரனுடைய சூழ்ச்சித் திறனுக்குத் தங்களுடைய சூழ்ச்சித்
திறன் குறைவானதா? யுத்தரங்கத்தில் நாம் சில சமயம்
தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், அரசியல் தந்திரத்தில் இதற்கு
முன்னால் எப்போதாவது நாம் தோல்வியடைந்ததுண்டா? சிவகாமியிடமோ,
அவளை ஆட்கொண்ட கலைத் தெய்வத்திடமோ தங்களுக்கு மோகம்
ஏற்பட்டிராவிட்டால், மகேந்திர பல்லவன் தங்களைச்
சிறைப்பிடித்திருக்க முடியுமா? தங்களுடைய திருவுள்ளத்தைப்
பரிசோதனை செய்து உண்மையைச் சொல்லுங்கள்!"
இவ்விதம்
புலிகேசி கூறியபோது, பிக்ஷுவின் முகத்தில் தோன்றிய கோபக்குறி
மறைந்து, வெட்கம் கலந்த பிடிவாதம் காணப்பட்டது. தரையை நோக்கித்
தலையைக் குனிந்த வண்ணம், "சக்கரவர்த்தி! இந்த அறிவிழந்த
பிக்ஷுவை மன்னித்து விடுங்கள்! சாம்ராஜ்யத்தின் தொண்டுக்கு
நான் இனித் தகுதியில்லாதவன். இத்தனை காலமாய் நான்
செய்திருக்கும் சேவையை முன்னிட்டு மன்னித்து விடுதலை
கொடுங்கள்!" என்றார் பிக்ஷு. "அண்ணா! இது என்ன விளையாட்டு?"
"இல்லை, தம்பி! விளையாட்டு இல்லை; உண்மையாகத்தான் சொல்கிறேன்,
எனக்கு விடை கொடு; நான் போகிறேன்." "எங்கே போவதாக உத்தேசம்?"
"எங்கேயாவது மனிதர்களுடைய கண் காணாத இடத்துக்குப் போகிறேன்.
அஜந்தாவைப் போன்ற இன்னொரு மலைப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து
அதற்குள்ளே, உள்ளே, உள்ளே யாரும் எளிதில் வர முடியாத
இடத்துக்குப் போய்விடுகிறேன். அங்கே சிவகாமியை நடனம் ஆடச்
சொல்லிப் பார்த்துக் கொண்டே என் மிகுதி ஆயுளைக் கழித்து
விடுகிறேன்.."
"அண்ணா! அப்படித்
தனியாகச் சிவகாமியை நீ கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தால்,
அந்தப் பெண் நடனம் ஆடுவாளா?" "கலைஞர்களின் இயல்பு உனக்குத்
தெரியாது, தம்பி! பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்தியின்
அதிகாரத்தினால் சிவகாமியை ஆடச் சொல்ல முடியாது. ஆனால், நிற்க
நிழலில்லாத இந்த ஏழைப் பிக்ஷுவினால் சிவகாமியை ஆடச் செய்ய
முடியும்." "ஓஹோ!" "ஆம், தம்பி! அதனாலேதான் நான் உன்னைப்போல்
வேஷம் தரித்திருக்கும் வரையில் அவளை நடனம் ஆடச் சொல்லவில்லை."
"அண்ணா! இந்தப் பைத்தியம் உனக்கு வேண்டாம். சிவகாமியைக்
காஞ்சிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இல்லாவிட்டால், நம்
தளபதிகளில் யாராவது ஒருவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து
கொடுத்துவிடுவோம்."
பிக்ஷுவின்
கண்களில் கோபக் கனல் பறந்தது, "தம்பி! சிவகாமியைப் பெண்டாளும்
எண்ணத்துடன் அவள் அருகில் நெருங்குகிறவன் யமனுலகம் போக
ஆயத்தமாயிருக்க வேண்டும்" என்றார். "அண்ணா! மாமல்லன் யமனுலகம்
போய்விட்டானா?" என்று புலிகேசி பரிகாசக் குரலில் கேட்டார்.
"இல்லை; அந்த நிர்மூடன் அதைக் காட்டிலும் கொடிய தண்டனையை இந்த
உலகிலேயே அனுபவிக்கப் போகிறான். கேள், தம்பி! மாமல்லனை இந்தக்
கையினாலேயே கொன்று விடத் தீர்மானித்திருந்தேன். இரண்டு மூன்று
தடவை சந்தர்ப்பங்களும் வாய்த்தன. ஆனால், கடைசி நேரத்தில் என்
மனத்தை மாற்றக் கொண்டேன்."
"ஆகா! நீ மட்டும்
உன் மனத்தை மாற்றிக் கொள்ளாமல் மாமல்லனைக் கொன்றிருந்தால்,
பல்லவ இராஜ்யத்தில் இப்போது வராகக் கொடி பறந்து
கொண்டிருக்கும். மகேந்திர பல்லவனும் மதுரைப் பாண்டியனும் நம்
காலின் கீழ் கிடப்பார்கள். "ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம்,
ஆனால் சிவகாமியைத் தன்னுடைய சுகபோகப் பொருளாக்கிக் கொள்ள
நினைத்த மாமல்லனுக்கு அது தக்க தண்டனையாகியிராது." "இப்போது
என்ன தண்டனை?" "அவனுடைய ஆருயிர்க் காதலியைச் சளுக்கர் கொண்டு
போன செய்தி வாழ்நாளெல்லாம் அவனுக்கு நரக வேதனை அளிக்கும். இரவு
பகல் அவன் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும். இதைக் காட்டிலும்
அவனுக்குத் தண்டனை வேறு கிடையாது." "நல்லது, அண்ணா! இப்போது
என்ன சொல்கிறாய்?"
"இராஜரீக
விவகாரங்களிலிருந்து அடியோடு விலகிக் கொள்வதாகச் சொல்கிறேன்.
இருபத்தைந்து வருஷம் உனக்காகவும் சாம்ராஜ்யத்துக்காகவும்
உழைத்தேன். இனிமேல் சிலகாலம் எனக்காக வாழ்கிறேன். தம்பி!
எனக்கு விடைகொடு! எங்கேனும் ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடிச்
செல்கிறேன்." "அண்ணா! இராஜ்ய விவகாரங்களிலிருந்து விலகிக்
கொள். அதற்காகக் காடு மலை தேடிப்போக வேண்டாம். வாதாபியிலேயே
ஒரு நல்ல மாளிகையைப் பார்த்து எடுத்துக் கொள். வேண்டுமானால்
அதில் ஒரு நடன மண்டபமும் கட்டிக்கொள். சிவகாமி அதில் ஆனந்தமாய்
நடனமாடட்டும்; நீ பார்த்துக் கொண்டே இரு." "தம்பி! மெய்யாகச்
சொல்கிறாயா? இதெல்லாம் எனக்காக நீ செய்து தரப்போகிறாயா?"
"நிச்சயமாகச் செய்து தருகிறேன்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை
இருக்கிறது." "நிபந்தனையா? என்னிடமா கேட்கிறாய், தம்பி!"
"நிபந்தனைதான்;
ஆனால், உன்னிடம் நான் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்ளும்
நிபந்தனை; உன்னைத் தவிர யாரும் செய்ய முடியாத காரியம். எனக்கு
இந்தக் கடைசி உதவியை நீ செய்து கொடு. அப்புறம் உன்னை நான்
ஒன்றும் கேட்பதில்லை." "அது என்ன?" "சற்று முன் சொன்னேனே,
அதுதான்; வேங்கியில் விஷ்ணுவர்த்தனன் படுகாயப்பட்டுக்
கிடப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நாடெல்லாம் கலகமும்
குழப்பமுமாய் இருக்கிறதாம். நீ அங்கு உடனே போய் அவனைக்
காப்பாற்ற வேண்டும். என்னைப் போல் விஷ்ணுவும் உன் உடன்பிறந்த
சகோதரன்தானே?" "உடன் பிறந்த சகோதரன்தான்; ஆனால், அவனுக்கு
என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை! அவனிடமிருந்து நான்
பாரவியைப் பிரித்து விரட்டிய குற்றத்தை அவன் மன்னிக்கவே
இல்லை...." "அண்ணா! பாரவி கவியை ஏன் விஷ்ணுவிடமிருந்து நீ
பிரித்தாய்? அதனால் எப்பேர்ப்பட்ட விபத்துக்கள் நேர்ந்தன!"
"எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான் செய்தேன். அவன் ஓயாமல்
கவிதை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் வீண்பொழுது
போக்கிக் கொண்டிருந்தான்...."
புலிகேசி புன்னகை
புரிந்தார், மனத்திற்குள் "என் உடன் பிறந்தவர்களில் இரண்டு
பேரில் ஒருவனுக்குக் கவிதைப் பைத்தியம்; இன்னொருவனுக்குக்
கலைப் பைத்தியம். புத்தி மாறாட்டம் இல்லாதவன் நான் ஒருவன்தான்.
அன்று விஷ்ணுவைக் காப்பாற்றியதுபோல் இன்று பிக்ஷுவை நான்
காப்பாற்றியாக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டார். பின்னர்
கூறினார், "ஆம் அண்ணா! அவனுடைய நன்மைக்காகவே செய்தாய்.
உன்னுடைய விருப்பத்தின்படி நான்தான் பாரவியை நாட்டை விட்டுப்
போகச் சொன்னேன். ஆனால், அதன் பலன் என்ன ஆயிற்று? பாரவி கங்க
நாட்டுக்குப் போனான். அங்கிருந்து துர்விநீதனுடைய மகளைப்பற்றி
வர்ணித்து விஷ்ணுவுக்குக் கலியாணம் செய்து வைத்தான். பிறகு
காஞ்சி நகருக்குப் போனான், அங்கிருந்து காஞ்சி நகரைப் பற்றி
வர்ணனைகள் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் காஞ்சி
சுந்தரியின் மேல் எனக்கு மோகம் உண்டாயிற்று." "அந்தப் பழைய
கதைகளையெல்லாம் எதற்காகச் சொல்கிறாய்?" "உனக்குப்
பிடிக்காவிட்டால் சொல்லவில்லை. ஆனால் இந்தக் கடைசி உதவியை நீ
எனக்குச் செய்துவிடு, அண்ணா! நாம்தான் காஞ்சியைக் கைப்பற்ற
முடியாமல் திரும்புகிறோம். வேங்கியிலிருந்து விஷ்ணுவர்த்தனனும்
தோல்வியடைந்து திரும்பினால் அதைக்காட்டிலும் நம்முடைய
குலத்துக்கு அவமானம் வேண்டியதில்லை. இந்த ஒரே ஓர் உதவிமட்டும்
செய்துவிடு. உன்னுடன் நமது பாதிப் படையை அழைத்துக் கொண்டு போ!"
புத்த பிக்ஷு சற்று யோசித்துவிட்டு, "ஆகட்டும் தம்பி; ஆனால்,
எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும்!" என்றார். "சிவகாமியைப்
பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதுதானே? அப்படியே
வாக்குறுதி தருகிறேன். இத்தனை காலமும் நீ எனக்குச்
செய்திருக்கும் உதவிகளுக்கு இதுகூட நான் செய்ய வேண்டாமா?
வாதாபியின் அழகான அரண்மனை ஒன்றில் அவளைப் பத்திரமாய் வைத்து
நீ, வரும் வரையில் பாதுகாத்து ஒப்புவிக்கிறேன்." "தம்பி!
சிவகாமி கலைத் தெய்வம்; அவளிடம் துராசையுடன் நெருங்குகிறவன்
அதோகதி அடைவான். "அதை நான் மறக்கமாட்டேன் ஆனால், நடனக் கலையைப்
பற்றி நீ சொல்லச் சொல்ல எனக்கே அதில் ஆசை உண்டாகிவிட்டது.
சிவகாமியை நடனம் ஆடச் சொல்லி நான் பார்க்கலாமா?" "அவள்
ஆடமாட்டாள்." "அவளாக இஷ்டப்பட்டு ஆடினால்..." "எனக்கு
ஆட்சேபமில்லை." "மிகவும் சந்தோஷம்." "தம்பி! நம்முடைய
பாட்டனாருக்குச் சத்யாச்ரயர் என்று பட்டம் கொடுத்தார்கள். அதே
பட்டப் பெயர் உனக்கும் கிடைத்திருக்கிறது. ஒரு விஷயத்திலாவது
உன் பட்டப் பெயருக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்."
"சத்தியமாகச் சிவகாமியைப் பத்திரமாய்ப் பாதுகாத்து உன்னிடம்
ஒப்புவிக்கிறேன்." இவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்திக்கும்,
புத்த பிக்ஷுவுக்கும் நடந்த நீண்ட சம்பாஷணை முடிவடைந்தது.
அன்றிரவு இரண்டாவது ஜாமத்திலே தான் இருவரும் சிவகாமி அரைத்
தூக்கமாய்ப் படுத்திருந்த இடத்துக்குச் சென்று நிலா,
வௌிச்சத்தில் நின்று, அவளைப் பார்த்தார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்து நாலாம் அத்தியாயம்
நள்ளிரவுப் பிரயாணம்
மணிமங்கலம் போர்
நடந்து ஏறக்குறைய ஒருமாத காலம் மகேந்திர பல்லவர் உணர்வற்ற
நிலையில் படுத்த படுக்கையாய்க் கிடந்தார். போர்க்களத்தில் அவர்
மீது பாய்ந்து காயப்படுத்திய கத்தி விஷந்தோய்ந்த கத்தி, என்று
தெரியவந்தது. அரண்மனை வைத்தியர்கள் சக்கரவர்த்தியைக்
குணப்படுத்த எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் தக்க பலன்
கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருவெண்காடு நமசிவாய வைத்தியர்
வந்து சேர்ந்தார். தளபதி பரஞ்சோதி திருவெண்காட்டுக்கு ஆள்
அனுப்பி அவரை வரவழைத்தார். நமசிவாய வைத்தியருடைய சிகிச்சை
விரைவில் பலன் தந்தது. மகேந்திரருடைய அறிவும் தௌிவு பெற்றது.
அறிவு தௌிந்ததும்
மகேந்திர பல்லவர் முதன்முதலாக ஆயனர் - சிவகாமியைப் பற்றி
விசாரித்தார். ஆயனர் கால் ஒடிந்து கிடக்கிறார் என்றும்,
சிவகாமியைச் சளுக்கர்கள் சிறைப்பிடித்துச் சென்றார்கள் என்றும்
தெரிந்ததும் அவர் அடைந்த மனக் கலக்கத்திற்கு அளவே இல்லை.
அதனால் குணமான உடம்பு மறுபடியும் கெட்டு விடுமோ என்று
பயப்படும்படி இருந்தது. மாமல்லர் தந்தையைப் பார்க்கச்
சென்றபோது, அவரை முன்னொரு நாள் ஆயனர் என்ன கேள்வி கேட்டாரோ,
அதையே மகேந்திரரும் கேட்டார். "நரசிம்மா! சிவகாமி எங்கே?"
என்றார்.
நரசிம்மர் மிக்க
வேதனையடைந்தவராய், "அப்பா! அதைப் பற்றி இப்போது என்ன கவலை?
முதலில் தங்களுக்கு உடம்பு நன்றாய் குணமாகட்டும்!" என்றார்.
"மாமல்லா! சிவகாமியிடம் நீ காதல் கொண்டதாகச் சொன்னதெல்லாம்
வெறும் வார்த்தை என்று இப்போது தெரிகிறது. இதோ நான்
கிளம்புகிறேன், சிவகாமியைக் கண்டுபிடித்துக் கொண்டுவா!" என்று
சொல்லிய வண்ணம் மகேந்திர பல்லவர் படுக்கையிலிருந்து
எழுந்திருக்க முயன்றார். மாமல்லர் வெட்கமும் பரபரப்பும்
கொண்டவராய்க் கூறினார்; "அப்பா! தங்களுக்கு உடம்பு
குணமாவதற்காகவே காத்திருந்தேன். தாங்கள் என்ன சொல்வீர்களோ
என்று சந்தேகமாயிருந்தது தாங்களே இப்படி சொல்லும் போது..."
"வேறு என்ன நான்
சொல்வதற்கு இருக்கிறது மாமல்லா? ஆயனருடைய சிற்பத் திறமையும்,
சிவகாமியின் நடனத்திறமையும் இமயத்திலிருந்து இலங்கை வரையில்
பரவியிருக்கின்றன. அப்படிப்பட்ட சிவகாமியை அந்த வாதாபி
ராட்சதன் கொண்டு போய்விட்டான் என்றால், அதைக் காட்டிலும் பல்லவ
குலத்துக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்? அப்படிப்பட்ட
அவமானத்தைச் சகித்துக் கொண்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும்,
போர்க்களத்திலேயே என் உயிர் போயிருந்தால் எவ்வளவோ
நன்றாயிருக்கும்." "தந்தையே! இப்படியெல்லாம் பேசவேண்டாம்;
தங்களுக்கு உடம்பு குணமானதும் தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு
புறப்படுவதற்கு நானும் தளபதியும் ஆயத்தம் செய்திருக்கிறோம்..."
"என்ன ஆயத்தம் செய்திருக்கிறீர்கள்?" "படை திரட்டிச்
சேர்த்திருக்கிறோம்." "புத்திசாலிகள்தான்! படைகளுடன் சென்றால்
சிவகாமியையும் கொண்டுவரமாட்டீர்கள்; நீங்களும் திரும்பி
வரமாட்டீர்கள்." மாமல்லர் வியப்புடன், "அப்பா! வேறு என்ன
செய்வது? தங்களுடைய யோசனை என்ன?" என்றார். "பரஞ்சோதியையும்,
சத்ருக்னனையும் அழைத்துக் கொண்டு வா! என்னுடைய யோசனையைச்
சொல்கிறேன்" என்றார் மகேந்திரர்.
அவ்விதமே
மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியவர்கள் அன்று மாலை
சக்கரவர்த்தியிடம் வந்தபோது, அவர் தமது யோசனையைக் கூறினார்.
பரஞ்சோதியும் சத்ருக்னனும் மாறுவேடம் பூண்டு வாதாபிக்குப்
போய்ச் சிவகாமியை அழைத்துவர வேண்டும் என்பதுதான் அந்த யோசனை.
அப்படித் திருட்டுத்தனமாய்ப் போய்ச் சிவகாமியை அழைத்துக்
கொண்டு வருவது பற்றி முதலில் மாமல்லர் ஆட்சேபித்தார்.
திருட்டுத்தனமாய்க் கொண்டு போகப்பட்டவளை அதே முறையில்
திருப்பிக் கொண்டு வருவதில் தவறில்லை என்று மகேந்திரர்
சொன்னார். அதோடு அவ்விதம் இப்போது ஒருதடவை வாதாபிக்குப்
போய்விட்டு வருவது பின்னால் அவர்கள் வாதாபி மேல் பகிரங்கமாகப்
படையெடுத்துப் போவதற்கும் அனுகூலமாயிருக்கும் என்று மகேந்திர
சக்கரவர்த்தி தெரிவித்தார்.
வாதாபி மீது
படையெடுக்கும் யோசனை மகேந்திர பல்லவருக்கு இருப்பது
தெரிந்ததும் மாமல்லருக்கும் உற்சாகம் உண்டாகித் தம்முடைய
ஆட்சேபங்களையெல்லாம் நிறுத்திக் கொண்டார். எல்லாம் பேசி
முடிந்ததும் மாமல்லர் எழுந்து, தந்தைக்குச் சாஷ்டாங்கமாக
நமஸ்காரம் செய்து, "அப்பா! தளபதியுடன் நானும் போய் வருகிறேன்.
கருணை கூர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்!" என்று கெஞ்சுகிற
குரலில் விண்ணப்பம் செய்தார். மகேந்திரர் முதலில் இதை
மறுதலித்தார். கடைசியில், மாமல்லரிடம் முரட்டுத்தனமான
காரியங்களில் இறங்குவதில்லை என்பதாகவும், எல்லா விஷயங்களிலும்
தளபதி பரஞ்சோதியின் ஆலோசனைப்படி நடப்பதாகவும் உறுதி
பெற்றுக்கொண்டு, விடை கொடுத்தார்.
இரண்டு
தினங்களுக்குப் பிறகு நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனை
முற்றத்தில் ஆறு குதிரைகள் மீது ஆறு பேர் ஆரோகணித்துப்
பிரயாணத்துக்கு ஆயத்தமாய் நின்றார்கள். தாடி, மீசை வைத்துக்
கட்டிக்கொண்டிருந்த அந்த வேஷதாரிகள் மாமல்லர், பரஞ்சோதி,
சத்ருக்னன், குண்டோதரன், கண்ணபிரான், அவனுடைய தந்தை அசுவபாலர்
ஆகியவர்கள்தான். அப்படி நின்ற அறுவரும் அரண்மனை மேல்மாடத்தின்
முன்றிலை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் அந்த முன்றிலுக்கு மகேந்திர
சக்கரவர்த்தியும் புவனமகாதேவியும் வந்து சேர்ந்தார்கள்.
"புறப்படுங்கள்; ஜயத்துடன் சீக்கிரம் திரும்புங்கள்" என்று
மகேந்திர பல்லவர் கூறியதும் மாமல்லரும் பரஞ்சோதியும் அவர்களைப்
பார்த்து வணங்கிவிட்டுக் குதிரைகளைத் தட்டிவிட்டார்கள்.
குதிரைகள் அரண்மனை வௌி வாசலைக் கடந்து வீதிக்குப் போனதும்,
புவனமகாதேவியை மகேந்திர பல்லவர் பார்த்து, "தேவி! இராஜ
குலத்தில் பிறந்ததற்குத் தண்டனை இது!" என்று சோகம் ததும்பும்
குரலில் கூறினார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
மகேந்திரர் அந்தரங்கம்
அன்றிரவு
மகேந்திர பல்லவரும் அவருடைய பட்ட மகிஷி புவன மகாதேவியும்
கண்ணுறங்கவேயில்லை. அரண்மனை மேல் மாடத்தில், வெள்ளி
நட்சத்திரங்களை அள்ளித் தௌித்திருந்த வானவிதானத்தின் கீழ்
அமர்ந்து, சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி, அவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள். "தேவி! என் வாழ்நாளின் இறுதிக்
காலத்தில் இப்படி எனக்கு ஆசாபங்கம் உண்டாகுமென்று நான்
எதிர்பார்க்கவேயில்லை. என்னுடைய கனவுகளெல்லாம் சிதைந்து
போய்விட்டன. துரதிர்ஷ்டத்துக்கு உள்ளானவனை அவனுடைய அந்தரங்க
சிநேகிதர்கள் கூடக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசியல் நீதி
கூறுவது எவ்வளவு உண்மை! அதோ வானத்தில் ஜொலிக்கும்
நட்சத்திரங்கள் முன்னேயெல்லாம் என்னைப் பார்த்து, 'மகேந்திரா!
உன்னைப் போன்ற மேதாவி இந்தப் பூவுலகில் வேறு யார்? உன்னைப்
போன்ற தர்மவான், குணபரன், சத்ருமல்லன், கலைப்பிரியன் வேறு
யார்?' என்று புகழ்மாலை பாடுவது வழக்கம். இப்போது அதே
நட்சத்திரங்கள், என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கேலிச்
சிரிப்புச் சிரிக்கின்றன. 'மகேந்திரா! கர்வபங்கம் போதுமா?
உன்னுடைய அகட விகட சாமர்த்தியங்கள் எல்லாம் விதியின் முன்னால்
பொடிப் பொடியாகப் போனதைப் பார்த்தாயா?' என்று கேட்கின்றன..."
மகேந்திரருடைய
உடம்பும் உள்ளமும் வெகுவாக நொந்திருந்தன என்பதைச்
சக்கவர்த்தினி அறிந்தவளாதலால், அவர் மனத்தை மேலும் புண்படுத்த
விரும்பவில்லை. ஆயினும் அவளை அறியாமல் இந்த வார்த்தைகள்
வௌிவந்தன. "பிரபு! நாமாகச் செய்து கொள்ளும் காரியத்துக்கு விதி
என்ன செய்யும்?" இதைக் கேட்ட மகேந்திர பல்லவர் சோகப் புன்னகை
புரிந்து, "மனிதர்களாகிய நாம் எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம்
செய்தாலும் விதி வந்து குறுக்கிட்டு எல்லாவற்றையும் கெடுத்து
விடத்தான் செய்கிறது. என்னுடைய காரியங்களைக் கெடுப்பதற்கு
விதியானது சிவகாமியின் ரூபத்தில் வந்தது!" என்றார்.
"ஆ! அந்த ஏழைப்
பெண்ணின் மீது ஏன் பழியைப் போடுகிறீர்கள்? அவள் என்ன
செய்வாள்?" என்று இரக்கம் ததும்பிய குரலில் கூறினாள் பல்லவர்
தலைவி புவனமகாதேவி. "பெண்ணுக்குப் பெண் பரிந்து பேசுகிறாய்,
அது நியாயந்தான். ஆனாலும், ஆயனர் மகளின் காரணமாகத்தான்
என்னுடைய உத்தேசங்கள் எல்லாம் பாழாய்ப் போயின.
சிவகாமியிடமிருந்து மாமல்லனைப் பிரித்து வைக்க நான் முன்று
வந்தேன். அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகளும் தந்திரங்களும்
செய்தேன். நான் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பயன்படாமல்
போயின, விதிதான் கடைசியில் வெற்றி பெற்றது."
"விதியானது
உங்களுடைய நோக்கத்தைத்தானே நிறைவேற்றி வைத்தது? அந்தப்
பெண்ணிடமிருந்து மாமல்லனைப் பிரிப்பதற்குத் தாங்கள் எத்தனையோ
ஏற்பாடுகள் செய்தீர்கள். விதி உங்கள் ஒத்தாசைக்கு வந்து அவளை
வாதாபிக்கே கொண்டு போய்விட்டது. அப்படியிருக்க, அவளைத் தேடி
அழைத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் ஏன் பிரயத்தனம் செய்ய
வேண்டும்? தங்களுடைய காரியம் எனக்கு விளங்கவில்லையே?" என்று
புவனமகாதேவி உண்மையான திகைப்புடன் கேட்டாள்.
"அதைத்தான்
அப்போதே சொன்னேன், பழைமையான பல்லவ குலத்திலே பிறந்ததற்குத்
தண்டனை இது. சிவகாமியைத் திருப்பிக் கொண்டு வராவிட்டால் பல்லவ
குலத்துக்கு என்றென்றைக்கும் மாறாத அவமானம் ஏற்படும். புலிகேசி
காஞ்சிப் பல்லவனை முறியடித்துவிட்டு ஊர் திரும்பியதாகப்
பெருமையடித்துக் கொள்வான். சிவகாமி வாதாபியில் இருக்கும்
பட்சத்தில் புலிகேசியின் ஜம்பத்தையே உலகம் நம்பும்படி
இருக்கும். சிவகாமியின் புகழ் ஏற்கெனவே இலங்கை முதல்
கன்யாகுப்ஜம் வரையில் பரவியிருக்கிறது. மாமல்லபுரத்துச்
சிற்பங்களையும், சிவகாமியின் நடனத்தையும் வந்து
பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று நானே ஹர்ஷவர்த்தனருக்கு ஓலை
அனுப்பியிருந்தேன். அப்படிப்பட்ட சிவகாமி வாதாபியில் சிறை
வைக்கப்பட்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும்? பல்லவ
குலத்துக்கு அதைக் காட்டிலும் வேறு என்ன இழிவு வேண்டும்?"
"சுவாமி! தாங்கள்
தலையில் அணியும் கிரீடத்தைச் சில சமயம் நான் கையிலே எடுத்துப்
பார்த்திருக்கிறேன். அதனுடைய கனத்தை எண்ணி, 'இவ்வளவு பாரத்தை
எப்படித்தான் சுமக்கிறீர்களோ!' என்று
ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த இரண்டு மூன்று
வருஷத்திலேதான் எனக்குத் தெரிந்தது, தலையிலே அணியும்
மணிமுடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பாரத்தைத் தாங்கள்
இருதயத்திலே தாங்க வேண்டியிருக்கிறதென்று. 'இராஜ்ய பாரம்'
என்று உலக வழக்கிலே சொல்வது எவ்வளவு உண்மையான வார்த்தை?" என்று
சக்கரவர்த்தினி உருக்கமான குரலில் கூறினாள்.
"ஒரு காலத்தில்
அந்தப் பாரத்தை நான் வெகு உற்சாகத்துடன் தாங்கினேன். இப்போது
அதுவே தாங்க முடியாத பெரும் பாரமாய் என் இருதயத்தை
அமுக்குகிறது. தேவி! மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் நான்
ஆகாசக் கோட்டைகள் கட்டி வந்தேன். ஆம்; காஞ்சிக் கோட்டையை
அலட்சியம் செய்து விட்டு ஆகாசக் கோட்டைகள் கட்டினேன். இந்தப்
பூவுலகத்தைச் சொர்க்க பூமியாகச் செய்து விடலாம் என்று
கருதினேன். என்னுடைய மூதாதையர்களையெல்லாம் மனத்திற்குள்
நிந்தித்தேன். வீணாகச் சண்டை பூசல்களிலும் இரத்தக் களறிகளிலும்
அவர்கள் காலத்தைக் கழித்தார்களே என்று வருத்தப்பட்டேன்.
மாமல்லபுரத்தில் எல்லாச் சமயங்களுக்கும் அழியாத கற்கோயில்கள்
கட்டத் தொடங்கினேன். கோயில்கள் கட்டி முடிந்ததும் ஹர்ஷனையும்
புலிகேசியையும் அழைக்க நினைத்திருந்தேன். இந்த ஆகாசக்
கோட்டைகளையெல்லாம் அந்தச் சளுக்க அரக்கன் பொடிப் பொடியாக்கி
விட்டான். அவன் தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் வைத்த தீ
சீக்கிரத்தில் அணையப் போவதில்லை. பல்லவர் படை வாதாபிக்குப்
போய்ப் புலிகேசியை முறியடித்தாலொழியப் பல்லவ குலத்துக்கு
நேர்ந்த அவமானம் தீரப் போவதில்லை. இது என் காலத்தில்
நிறைவேறாவிட்டால், மாமல்லனுடைய காலத்திலாவது நிறைவேறியாக
வேண்டும்." "பிரபு! என் வீர மகன் நிச்சயமாகத் தங்கள் மனோரதத்தை
நிறைவேற்றுவான். பல்லவ குலத்துக்கு நேர்ந்த பழியைத்
துடைப்பான்!" என்று புவனமகாதேவி பெருமிதத்துடன் கூறினாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்தாறாம் அத்தியாயம்
வாதாபி
டபெண்ணைக்
கரையிலிருந்து சளுக்க சைனியத்தின் பெரும் பகுதி வடமேற்குத்
திசையாக வாதாபி நகரத்தை நோக்கிக் கிளம்பிற்று. சிவகாமியும்
அந்தச் சைனியத்துடன் பிரயாணம் செய்தாள். தொண்டை மண்டலத்துக்
கிராமங்களிலே பார்த்த பயங்கரங்களைக் காட்டிலும் கொடுமையான
காட்சிகளைப் பார்த்துக் கொண்டு போனாள். வீடுகளும் வைக்கோற்
போர்களும் பற்றி எரிவதையும், பசுமையான தோப்புக்கள் போர்
யானைகளால் அழிக்கப்படுவதையும், பயிர்கள் நாசமாக்கப்படுவதையும்
பார்த்துக் கொண்டு போனாள். குற்றமற்ற கிராமத்து ஜனங்கள்
கொல்லப்படுவதையும், திடகாத்திர புருஷர்களும் இளம் வயதுப்
பெண்களும் சிறைப்பிடிக்கப்படுவதையும் தாய்மாரைப் பிரிந்த
குழந்தைகள் அலறி அழுவதையும் பார்த்துக் கொண்டு போனாள்.
சிவகாமியின்
உள்ளத்திலும் பெரிய தீப்பிழம்பு ஜுவாலை விட்டு எரியத்
தொடங்கியது. வாதாபிச் சக்கரவர்த்தியை மீண்டும் சந்தித்து
இம்மாதிரி அக்கிரமக் கொடுமைகளைச் செய்ய வேண்டாமென்று வேண்டிக்
கொள்ள விரும்பினாள். பல தடவை அதற்காகப் பிரயத்தனம் செய்தாள்.
தன்னுடன் வந்த காவலர்களை தன்னைப் புலிகேசியிடம் அழைத்துப்
போகும்படி கேட்டுக் கொண்டாள். அந்தக் காவலர்கள் அவள் கூறியதைக்
காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒவ்வொரு சமயம் அவள்
இரவில் தூங்கும் போது, 'ஹ ஹா ஹா' என்று பேய் சிரிப்பது போன்ற
சிரிப்புச் சப்தம் கேட்கும். திடுக்கிட்டுக் கண்ணை விழித்துப்
பார்ப்பாள். எதிரே சற்றுத் தூரத்திலிருந்து வாதாபிச்
சக்கரவர்த்தியின் உருவம் திரும்பிப் போவது போலத் தோன்றும்.
எழுந்து உட்காருவதற்குள் அந்த உருவம் மறைந்து போய் விடும்.
தன்னுடைய சித்தப் பிரமையில் தோன்றிய உருவந்தான் அது என்று
எண்ணிக் கொள்வாள்.
புலிகேசி இளம்
பிராயத்தில் சிற்றப்பன் மங்களேசனால் பெரிதும் கொடுமை
செய்யப்பட்டவன். அதன் காரணமாக, மரத்திலே வைரம் பாய்வது போல்
அவனுடைய சுபாவத்திலேயே குரூரம் கலந்து இறுகிக்
கெட்டிப்பட்டிருந்தது. நாகநந்தியின் உதவியால் வாதாபிச்
சிம்மாசனம் ஏறிய காலத்திலிருந்து உள்நாட்டு எதிரிகளை ஒழித்தல்,
வௌிப் பகைவர்களோடு யுத்தம் செய்தல் முதலிய கொடுங்
காரியங்களிலேயே புலிகேசியின் வாழ்நாளெல்லாம் சென்றிருந்தது.
பிறருடைய துன்பங்களைப் பார்த்து வருந்துவது என்பது
புலிகேசியின் சுபாவத்தில் இல்லவே இல்லை. தற்சமயம்,
புலிகேசியின் சுபாவக் குரூரத்தை ஒன்றுக்குப் பத்தாக வளரச்
செய்த காரணங்கள் இரண்டு ஏற்பட்டிருந்தன.
ஒன்று, மகேந்திர
பல்லவனுடைய மாய தந்திரங்களினால் தம்முடைய தென்னாட்டுப்
படையெடுப்பு அபஜயமாக முடிந்ததில் ஏற்பட்டிருந்த ஆசாபங்கம்.
இன்னொன்று, இதுகாறும் வாதாபி இராஜ்யத்தின் பெருமையையும்
தம்முடைய க்ஷேமத்தையும் தவிர வேறு கவனமே இல்லாமலிருந்த
நாகநந்தியடிகளின் உள்ளத்தை ஒரு பல்லவ நாட்டுப் பெண் கவர்ந்து
விட்டாளே என்ற அசூயையும் ஆத்திரமும். இக்காரணங்களினால் தம்
உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்த குரோதத்தையெல்லாம் புலிகேசிச்
சக்கரவர்த்தி தாம் சென்ற மார்க்கத்தில் எதிர்ப்பட்ட குற்றமற்ற
ஜனங்கள் மீது காட்டினார். தனோடு, சிவகாமியின் மீது வஞ்சம்
தீர்த்துக் கொள்வதற்கும் தக்க வழியை யோசித்துக்
கொண்டிருந்தார். இதையெல்லாம் அறிந்திராத சிவகாமி, தான் மட்டும்
வாதாபிச் சக்கரவர்த்தியை இன்னொரு தடவை நேருக்கு நேர் சந்திக்க
முடிந்தால், அவருடைய படைகள் செய்யும் கொடுமைகளையெல்லாம்
நிறுத்தி விடலாம் என்று ஆசையுடன் நம்பினாள். அவளுடைய இந்த
மனோரதம் வாதாபி போய்ச் சேரும் வரையில் நிறைவேறவில்லை.
வாதாபியில்
பெரியதோர் அழகான அரண்மனையில் சிவகாமி கொண்டு வந்து
சேர்க்கப்பட்டாள். அவளுக்குத் துணையாகவும், பணிவிடை
புரிவதற்காகவும் இரண்டு தாதிப் பெண்கள் அமர்த்தப்பட்டார்கள்.
அவர்கள் பிராகிருதமும் தமிழும் கலந்த பாஷையில் பேசினார்கள்.
அந்தத் தாதிப் பெண்களுடைய பேச்சையெல்லாம் சிவகாமி எளிதில்
புரிந்து கொள்ளுதல் சாத்தியமாயிருந்தது. சக்கரவர்த்தி
கட்டளையின் பேரிலேயே அந்த அரண்மனை சிவகாமிக்காகத் திட்டம்
செய்யப்பட்டதென்றும், அவளுக்கு யாதொரு சௌகரியக் குறையும்
இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்படி ஆக்ஞை என்றும் மேற்படி
தாதிப் பெண்களிடம் சிவகாமி தெரிந்து கொண்டாள். இதெல்லாம் அவள்
எதிர்பார்த்தபடியே இருந்தது. ஆகவே, கூடிய சீக்கிரம் புலிகேசிச்
சக்கரவர்த்தி தன்னைப் பார்க்க அங்கு வருவாரென்றும் சிவகாமி
தீர்மானித்தாள். அப்படி அவர் வரும் போது என்ன பேச வேண்டும்,
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்த
வண்ணமிருந்தாள்.
சக்கரவர்த்தியின்
விஷயத்தில் சிவகாமியின் மனோபாவம் இரண்டு விதமாயிருந்தது. ஒரு
சமயம், அவருடைய சைனியம் செய்த கொடுஞ் செயல்களை எண்ணி எண்ணி
அவளுடைய உள்ளம் கொதித்தது. மற்றொரு சமயம், அப்பேர்ப்பட்ட
கொடுங்கோல் மன்னன் மீது அபலையாகிய தனக்கு ஏற்பட்டிருந்த
சக்தியை நினைத்து அவள் உள்ளம் பெருமிதம் அடைந்தது. இராவணன்
கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறைவைத்த சீதாதேவியின் நினைவு
சிவகாமிக்கு அடிக்கடி வந்தது. சீதையின் நிலைமைதான் தன்னுடைய
நிலைமையும். இராமபிரான் இராவணனை வென்று சீதையைச் சிறை மீட்டுக்
கொண்டு போனது போல் மாமல்லர் ஒருநாள் வந்து இந்தப் பாதகப்
புலிகேசியை வென்று தன்னைச் சிறை மீட்டுக் கொண்டு போகப்
போகிறார்!
இவ்விதம் நம்பிய
சிவகாமி, சீதைக்கும் தனக்கும் இருந்த வித்தியாசத்தைப்
பற்றியும், எண்ணமிட்டாள். சீதாதேவியை இராவணன் அவளுடைய
அழகுக்காக ஆசைப்பட்டு அபகரித்துக் கொண்டு வந்தான். அவளைக்
கலியாணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால், புலிகேசியோ
தன்னிடமிருந்த நாட்டியக் கலையின் மேல் மோகங்கொண்டு தன்னைச்
சிறைப்பிடித்து வந்திருக்கிறான். (புலிகேசியே மாறுவேடம் பூண்ட
புத்த பிக்ஷு என்னும் நம்பிக்கை சிவகாமியின் உள்ளத்தில்
வேரூன்றியிருந்தபடியால் இவ்விதம் எண்ணினாள்.) ஆகையால், இராவணன்
மீது சீதைக்கு இல்லாத செல்வாக்கு, தனக்கு வாதாபிச்
சக்கரவர்த்தியின் மீது இருக்கிறது. தன் கலையின் சக்தி கொண்டு
அவரைத் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டி வைக்கலாம். ஆ! அந்தப்
பொல்லாத புத்த பிக்ஷுவைத் தான் இலேசில் விடப்போவதில்லை.
வரட்டும் இங்கே! எப்படியும் என்னிடம் வந்துதானே ஆக வேண்டும்?
சிவகாமி வாதாபி
வந்து சேர்ந்த எட்டாம் நாள் அவளுடைய மனோரதம் ஈடேறியது.
சக்கரவர்த்தி அவளைப் பார்ப்பதற்காக அந்த அரண்மனைக்கு வந்தார்.
வாசற்புறமிருந்த தாதி ஓடி வந்து, "சக்கரவர்த்தி வருகிறார்!"
என்று தெரிவித்ததும், சிவகாமி மிக்க பரபரப்புக் கொண்டு
வாதாபிச் சக்கரவர்த்தியை வரவேற்கவும், அவர்மீது தன் கூரிய
கண்ணம்புகளையும், சொல்லம்புகளையும் செலுத்தவும் ஆயத்தமானாள்.
ஆனால், சக்கரவர்த்தி அரண்மனைக்குள்ளே வந்து நின்று அவளை மேலும்
கீழும் ஏறிட்டுப் பார்த்து விட்டு, அவள் கனவிலே கேட்டது போன்ற
ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்ததும், சிவகாமி எண்ணியிருந்த
எண்ணமெல்லாம் எங்கேயோ போய் விட்டன. இன்னதென்று சொல்ல முடியாத
ஒரு பீதி அவளுடைய இருதயத்தில் புகுந்து தேகமெல்லாம்
வியாபித்துத் தேகத்தின் எலும்புகளுக்குள்ளே பிரவேசித்து ஒரு
குலுக்குக் குலுக்கி விட்டது. வாயைத் திறந்து பேச முடியாதபடி
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
"சிற்பி மகளே!
நாட்டிய கலாராணியே! மகேந்திர பல்லவனின் கலைப் பொக்கிஷமே!
சௌக்கியமா? வாதாபி வாசம் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று
புலிகேசி கேட்ட போது, சிவகாமியின் உடம்பு படபடத்து
நடுங்கிற்று. தன்னுடைய நாட்டியத் தோற்றங்களிலே வெகு சாதாரணமான
தோற்றத்தைக் கண்டு அப்படியே பரவசப்பட்டு நின்ற புத்த பிக்ஷுவா
இவர்? தன்னிடம் அணுகும்போதே பயபக்தியுடன் அணுகி உணர்ச்சி
மிகுதியினால் தன்னுடன் பேச முடியாமல் தத்தளித்து நின்ற
நாகநந்தி இவர்தானா? பொன்முகலி நதிக்கரையில் தொண்டை நாட்டுப்
பெண்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தான் வரங் கேட்டுப் பெற்ற
போது, அவர் இவ்விதமில்லையே? வாதாபி நகருக்கு வந்து
விட்டதனாலேயே இவரிடம் இந்த வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதா?
இவ்விதம்
சிவகாமியின் உள்ளக் கடல் கொந்தளித்துக் குழம்ப, புலிகேசியின்
கேள்விகளுக்கு மறுமொழி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள்.
அதைப் பார்த்த புலிகேசி, "பெண்ணே! ஏன் மௌனம் சாதிக்கிறாய்?
'கலை உணர்ச்சியில்லாத வாதாபிப் புலிகேசியுடன் நமக்கு என்ன
பேச்சு' என்ற எண்ணமா? அப்படி நான் அடியோடு கலை உணர்ச்சி
இல்லாதவனல்ல. அவ்விதமிருந்தால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த
உன்னை இந்த அரண்மனையில் வைத்திருப்பேனா? பல்லவ நாட்டின்
இணையற்ற நடன கலாராணிக்குத் தகுந்த அலங்கார மாளிகையல்லவா இது?
இங்கு உனக்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா? பணிப்பெண்கள்
திருப்தியாகப் பணிவிடை செய்கிறார்களா? ஏதாவது குறை இருந்தால்
சொல்!" என்றார்.
புலிகேசியின்
பேச்சு எவ்வளவோ அருவருப்பாயிருந்த போதிலும் இனிப் பேசாமல்
இருக்கக் கூடாது என்று சிவகாமி கருதி, மனத்தைத் திடப்படுத்திக்
கொண்டு, "பிரபு! இங்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறது; ஒரு
குறையும் இல்லை, மிக்க வந்தனம்!" என்றாள். "ஆஹா! வாய் திறந்து
பேசுகிறாயா? நல்லவேளை! நீ மௌனமாய் நின்றதைப் பார்த்து விட்டு,
நீ உயிருள்ள பெண்தானா அல்லது உன் தந்தை அமைத்த கற்சிலைகளில்
ஒன்றைத்தான் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோமா என்று
சந்தேகித்தேன். நீ இந்த மட்டும் பேசியது மிக்க சந்தோஷம். நீ
வாயினால் சொன்னபடி உண்மையாகவே எனக்கு வந்தனம் செலுத்த
விரும்பினால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது..." என்ற
புலிகேசி மேலும் கூறத் தயங்கி நின்றார்.
அவர் என்ன
சொல்லப் போகிறாரோ என்ற பீதியுடன் சிவகாமி மௌனமாயிருந்தாள்.
"பெண்ணே! அந்த மூடன் மகேந்திர பல்லவன் என்னைக் கலை உணர்ச்சி
அற்றவன் என்று சொன்னான்; அதை நீயும் நம்பினாய். நரிக்கும்
புலிக்கும் எவ்வளவு வித்தியாசமோ, குட்டைக்கும்
சமுத்திரத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, உள்ளங்கை அகலமுள்ள
தொண்டை மண்டலத்துக்கும் விஸ்தாரமாகப் பரந்த சளுக்க
சாம்ராஜ்யத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, அவ்வளவு வித்தியாசம்
மகேந்திர பல்லவனுடைய கலை உணர்ச்சிக்கும் என்னுடைய கலை
உணர்ச்சிக்கும் உண்டு. கூடிய சீக்கிரத்தில் இதை நயே தெரிந்து
கொள்வாய். கலா ராணியே! கேள்! தொலை தூரத்திலுள்ள பாரசீக
நாட்டுச் சக்கரவர்த்தியிடமிருந்து என்னுடைய சபைக்குத் தூதர்கள்
வந்திருக்கிறார்கள். என்னுடைய நட்பைக் கோரிப் பாரசீகச்
சக்கரவர்த்தி காணிக்கைகளும் சன்மானங்களும்
அனுப்பியிருக்கிறார். பாரசீகத் தூதர்களைப் பகிரங்கமாக
வரவேற்பதற்கும் அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை ஏற்பதற்கும்
நாளைய தினம் மகுடாபிஷேக மண்டபத்தில் மகாசபை கூடுகிறது. அந்த
மகாசபையில் வந்து நீ நடனம் செய்ய வேண்டும்."
இத்தனை நேரம்
பயமும் பலவகைக் குழப்பங்களும் குடிகொண்டிருந்த சிவகாமியின்
உள்ளம் நடனம் என்ற வார்த்தையைக் கேட்டதும் அசாதாரண தைரியத்தை
அடைந்தது. கொஞ்சமும் தயங்காமலும் பயப்படாமலும் தலைநிமிர்ந்து
புலிகேசியை நோக்கி அழுத்தந் திருத்தமான குரலில், "முடியாது"
என்றாள். புலிகேசியின் கண்கள் ஒருகணம் ஜுவாலாக்கினியைக்
கக்கின. தன்னை மீறிக் கொண்டு வந்த கோபத்தைப் புலிகேசி பல்லைக்
கடித்துச் சமாளித்துக் கொண்டதாகத் தோன்றியது. "பெண்ணே! ஏன்
இவ்வளவு கண்டிப்பாக 'முடியாது' என்று சொல்லுகிறாய்? மூன்று
நாள் உனக்கு அவகாசம் கொடுக்கிறேன்; யோசித்துச் சொல்!" என்றார்
புலிகேசி.
"யோசிப்பதற்கு
அவசியமேயில்லை, பிரபு! என்னைத் தங்களுடைய சபையில் ஆடச் சொல்லி,
மகேந்திர பல்லவரைத் தாங்கள் ஜயித்து வந்தது பற்றி
உலகத்துக்கெல்லாம் பறையறையப் போகிறீர்கள். 'பல்லவ
நாட்டிலிருந்து கொண்டு வந்த அடிமை இவள்!' என்று சுட்டிக்
காட்டப் போகிறீர்கள். ஆ! தங்கள் நோக்கம் தெரிந்தது. தாங்கள்
என்னைச் சிறைப்பிடிக்கலாம், என்னுடைய தேகத்தை அடிமை கொள்ளலாம்.
என் ஆத்மாவையும் கட்டுப்படுத்தலாம்; ஆனால், என்னிடமுள்ள
கலையைத் தங்களால் அடிமைப்படுத்த முடியாது. அதிகாரத்துக்கு
அடங்கி, ஆக்ஞைக்குப் பயந்து நான் நடனம் ஆட மாட்டேன்! ஒரு
நாளும் ஆட மாட்டேன்" என்றாள்.
ஆத்திரம் பொங்கிய
குரலில் சிவகாமி மேற்கூறிய மொழிகளைக் கூறி வந்த போது
புலிகேசியின் கண்கள் செந்தணல் நிறம் பெற்று அனல் உமிழ்ந்தன.
சிவகாமி பேசி முடித்ததும் புலிகேசி பழையபடி ஒரு பேய்ச்
சிரிப்புச் சிரித்தார். "பெண்ணே! பொறு! இவ்வளவு பதற்றம் உனக்கு
எங்கிருந்து வந்தது? அப்படியொன்றும் உன் தேகத்தையோ, உன்
கலையையோ அடிமைப்படுத்த எனக்கு உத்தேசமில்லை. உனக்கு
இஷ்டமில்லாவிட்டால் நீ நடனம் ஆட வேண்டாம். இந்த
அரண்மனைக்குள்ளே உன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும்
எண்ண வேண்டாம். உனக்கு இஷ்டமான போது நீ இந்த மாளிகையை விட்டு
வௌியே போகலாம். வாதாபி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு
வரலாம். உங்கள் காஞ்சியைப் போல் எங்கள் வாதாபி அவ்வளவு
அழகாயில்லாவிட்டாலும், ஏதோ பார்க்கத் தகுந்த காட்சிகள்
இங்கேயும் இருக்கின்றன. இந்த அரண்மனை வாசலில் காவல்
காப்பவர்கள் உன்னைச் சிறை வைப்பதற்காக இங்கு இருக்கவில்லை.
உனக்கு ஏவல் புரிவதற்காக இருக்கிறார்கள். நீ எப்போது
சொல்கிறாயோ அப்போது அவர்கள் உனக்குப் பல்லக்குத் தருவித்துக்
கொடுப்பார்கள். மறுபடியும் என்னைப் பார்ப்பதற்கு நீ
விரும்பினாலும் அவர்களிடமே சொல்லி அனுப்பலாம். சிற்பி மகளே! நீ
என் அதிகாரத்துக்குப் பயந்து நடனமாட வேண்டாம். உன் இஷ்டம் போல்
சுயேச்சையாகவும் சுகமாகவும் இருக்கலாம்!"
இவ்விதம் சொல்லி
விட்டுப் புலிகேசிச் சக்கரவர்த்தி சிவகாமியைக் கூர்ந்து
பார்த்தார். அந்தப் பார்வையில் எல்லையில்லாத துவேஷமும்,
பழிவாங்கும் உறுதியும் குடிகொண்டிருந்ததைச் சிவகாமி
கவனிக்கவில்லை. அந்த ஏழைப் பெண் அப்போது தரையை நோக்கிப்
பார்த்துக் கொண்டிருந்தாள். கொடுமைக்கும் கொடூரத்துக்கும்
பெயர் போன வாதாபிப் புலிகேசியைத் தான் வென்று விட்டதாக அவளுடைய
உள்ளம் இறுமாப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அன்று மாலை
சிவகாமி வாசற் காவலரிடம் தான் வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க
விரும்புவதாகக் கூறிப் பல்லக்குக் கொண்டு வரச் சொன்னாள்.
"உன்னை இங்கே சிறை வைத்திருக்கவில்லை; உன் இஷ்டப்படி வௌியே
சென்று வரலாம்" என்று புலிகேசி கூறியது அவள் மனத்தை விட்டு
அகலாதிருந்தது. தன்னுடைய சுதந்திரத்தை அன்றே பரிசோதித்து விட
எண்ணிப் பல்லக்கில் ஏறிக் கொண்டு புறப்பட்டாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்தேழாம் அத்தியாயம்
வீதி வலம்
ஆயிரத்து
முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் பரத கண்டத்தில் பிரசித்தி
பெற்றிருந்த மூன்று சாம்ராஜ்யத் தலைநகரங்களில் வாதாபி
ஒன்றாகும். கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் போலவே வாதாபி
நகரத்தின் புகழும் அந்த நாட்களில் கடல் கடந்து வெகுதூரம்
சென்றிருந்தது. ஒவ்வொரு தடவை திக்விஜயம் செய்து திரும்பும்
போதும் புலிகேசியின் படை வீரர்கள் வெற்றி கொண்ட
தேசங்களிலிருந்து ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து
வாதாபியில் சேர்த்து வந்தார்கள். இதனால் வாதாபி நகரம்
வளங்கொழிக்கும் நகரமாய் அந்தக் காலத்தில் விளங்கிற்று.
அந்நகரில் வர்த்தகம் சிறந்தோங்கியிருந்தது. தூர தூர
தேசங்களிலிருந்தெல்லாம் அந்நகருக்கு இரத்தின வியாபாரிகள் வந்து
போய்க் கொண்டிருந்தார்கள்.
பிரசித்தி பெற்ற
ஜைன ஆலயங்களும் பௌத்த மடங்களும் வாதாபியில் இருந்தபடியால்,
பற்பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் அந்நகருக்கு
வருவதுண்டு. இதனாலெல்லாம் வாதாபி நகரம் எப்போதும் கலகலப்பாகவே
இருந்து வந்தது. அதிலும் சக்கரவர்த்தி தலைநகரில் இருக்கும்
போது கேட்க வேண்டியதில்லை. சக்கரவர்த்தியைப் பேட்டி
காண்பதற்காகச் சிற்றரசர்கள் காணிக்கைகளுடன் வருவார்கள். சீனம்,
பாரசீகம் முதலிய தூர தூர தேசங்களிலிருந்து அரசாங்கத் தூதர்கள்
வருவார்கள். மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் விளங்கிய
வாதாபியின் வீதிகள் எப்போதுமே திருவிழாக் காலத்தைப் போல்
ஜனக்கூட்டம் நிறைந்து விளங்கும். வண்டிகள் வாகனங்களின் சப்தம்
ஓயாமல் கேட்ட வண்ணமிருக்கும்.
வாதாபி நகரில்
வீதிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சிவகாமி பல்லக்கிலே
போய்க் கொண்டிருந்த போது அவளுடைய உள்ளம் அடிக்கடி காஞ்சியையும்
வாதாபியையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது. பழமையான
காலத்திலிருந்து செல்வமும் பண்பாடும் சேர்ந்து வளர்ந்து வந்த
நகரத்துக்கும் திடீரென்று செல்வம் படைத்துச் செழிப்படைந்த
புதுப் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் அவளுக்கு நன்கு
புலனாகி வந்தன. காஞ்சியில் செல்வத்திற் சிறந்த சீமான்களும்
சீமாட்டிகளும் ஆடை ஆபரணங்கள் பூணுவதில் அடக்கம் காட்டுவார்கள்.
அவர்களுடைய அலங்காரங்களில் கலை உணர்ச்சியே பிரதானமாயிருக்கும்.
இந்த நகரிலோ எங்கே பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும்
படாடோபமும் பகட்டும் தாண்டவமாடின.
காஞ்சி வீதிகளில்
தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும்
மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியின்
தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும் போது இடி முழக்க
ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள்
வேலைக்காரரகளுக்குக் கட்டளையிடும் போது கூட அன்புடனும்,
ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள்
வேலைக்காரர்களிடம் பேசும் போது கடுமையான மொழிகளையும்
துர்வசனங்களையும் கையாண்டார்கள். இவற்றையெல்லாம் தவிரக்
காஞ்சிக்கும் வாதாபிக்கும் உள்ள இன்னும் ஒரு வித்தியாசத்தையும்
சிவகாமி கவனித்தாள்.
காஞ்சி வீதிகளில்
புத்த பிக்ஷுக்கள், திகம்பர சமணர்கள், வைதிக சந்நியாசிகள்,
ஆண்டிகள், கபாலிகர்கள், வெறும் பிச்சைக்காரர்கள் ஆகியவர்கள்
மொய்த்துக் கொண்டு வீதியில் போவோர் வருவோரின் பிராணனை
வாங்குவது வழக்கம். தர்ம புத்தியுள்ள தனவான்கள் அதிகம் உள்ள
இடத்திலே யாசகர் கூட்டமும் அதிகமாகப் பெருகி விடும் போலும்!
வாதாபியின் வீதிகளில் அம்மாதிரி பிக்ஷுக்களும் யாசகர்களும்
அதிகம் காணப்படவில்லை. தர்மம் கொடுப்பவர்கள் இல்லாதபடியால்
யாசகர்களும் இல்லை போலும்! இம்மாதிரியெல்லாம் எண்ணமிட்டுக்
கொண்டும், வாதாபியின் செல்வ வளத்தை வியந்து கொண்டும்
சிவிகையில் சென்ற சிவகாமி, ஒரு நாற்சந்தி மூலையில் அதுவரையில்
காணாத காட்சி ஒன்றைக் கண்டாள்.
ஸ்திரீகளும்
புருஷர்களும் அடங்கிய ஒரு கூட்டம் அங்கே நின்றது. அவர்கள்
ஒவ்வொருவருடைய கரங்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன.
அவ்விதம் பந்தமுற்ற கைகளுடன் தலைகுனிந்து நின்ற கும்பலைச்
சுற்றி யமகிங்கரர்களைப் போன்ற முரடர்கள் சிலர் கையில் பெரிய
பெரிய சாட்டைகளுடன் நின்றார்கள். இந்தக் காட்சியைப்
பார்க்கும்போதே சிவகாமியின் உள்ளம் பதைத்தது. கைகள்
கட்டுப்பட்டு நின்ற ஸ்திரீ புருஷர்கள் தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள் என்று தோன்றியபடியால் அவளுடைய மனவேதனை
பன்மடங்காயிற்று.
பல்லக்கை
நிறுத்தி அவர்கள் அருகில் சென்று விசாரிக்கலாமா என்று சிவகாமி
ஒருகணம் நினைத்தாள். ஆனால், அதற்கு வேண்டிய மனோதைரியம்
அவளுக்கு ஏற்படவில்லை; சிவிகை மேலே சென்றது. நாற்சந்தி
முனையிலிருந்து சிவிகை கொஞ்ச தூரம் போன பிறகு சிவகாமி தடுக்க
முடியாத ஆவலினால் திரும்பிப் பார்த்தாள். அந்தக்
கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் கட்டப்பட்ட கைகளினால் தன்னுடைய
சிவிகையைச் சுட்டிக்காட்டுவது போலவும், கண்ணீர் ததும்பிய
கண்களால் தான் போகும் திசையை உற்றுப் பார்ப்பது போலவும்
அவளுக்குத் தோன்றியது. உடனே சிவகாமி தன் பார்வையைத் திருப்பிக்
கொண்டாள். பல்லக்குச் சுமந்தவர்களை நேரே வீட்டுக்குப்
போகும்படி கட்டளையிட்டாள்.
வீடு போய்ச்
சேர்ந்ததும் சிவகாமி தான் கண்ட காட்சியைத் தாதியிடம் சொல்லி,
அதைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று கேட்டாள். தாதி தனக்குத்
தெரியாது என்று சொல்லவே, போய் விசாரித்துக் கொண்டு வரும்படி
பணித்தாள். அவ்விதமே அந்தத் தாதி வௌியே போய் விசாரித்துக்
கொண்டு வந்தாள். அவள் கூறிய விவரம் சிவகாமிக்குச் சொல்ல
முடியாத பயங்கரத்தையும் மன வேதனையையும் அளித்தது. தாதி
விசாரித்து வந்து கூறிய விவரம் இதுதான். பல்லவ நாட்டிலிருந்து
புலிகேசிச் சக்கரவர்த்தி அநேக ஸ்திரீ, புருஷர்களைச் சிறைப்
பிடித்துக் கொண்டு வந்திருந்தார். அவர்களில் சிலர்
சிறையிலிருந்து தப்பிப் போக முயன்றார்கள். சிலர் அடிமைத்
தொண்டு செய்ய மறுத்தார்கள். சிலர் உணவு உட்கொள்ளாமல் பிடிவாதம்
பிடித்தார்கள்; இத்தகைய குற்றங்களைச் செய்த கலகக்காரர்களை
வாதாபி நகரின் நாற்சந்திகளில் நிறுத்திச் சாட்டையினால்
அடிக்கும்படியாகப் புலிகேசிச் சக்கரவர்த்தி
கட்டளையிட்டிருக்கிறார். இந்தச் சாட்டையடி உற்சவம்
இன்றைக்குத்தான் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதம்
வரையில் நடக்கும். தினம் சாயங்கால வேளையில் வீதிகளில் நடக்கும்
வாதாபி நகரவாசிகள் அந்த வேடிக்கையைப் பார்த்துக் களிப்பார்கள்.
சிவகாமி அன்றிரவு
ஒரு கணமும் கண்ணுறங்கவில்லை. வேதனையும் துன்பமும் நிறைந்த
அவளுடைய வாழ்க்கையில் இதுவரை என்றும் அனுபவித்தறியாத வேதனையை
அவள் அனுபவித்தாள். சுளீர் சுளீர் என்று அவளுடைய உடம்பில்
சாட்டையடி விழுவது போன்ற உணர்ச்சி அவளுக்கு அடிக்கடி
உண்டாயிற்று. பொன்முகலியாற்றங்கரையில் அவள் புலிகேசியை
வேண்டித் தன்னுடன் சிறைப்பட்டிருந்த மாதர்களை விடுதலை செய்தது
அவளுக்கு நினைவு வந்தது. அன்று விடுதலையானவர்கள் சளுக்கர்
சைனியத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர்தான்
போலும். இன்னும் எத்தனையோ பேரை முன்னால் சென்ற பெருஞ்சைனியம்
சிறைப் பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும்.
இன்று பகலில்
சக்கரவர்த்தி வந்து தன்னுடன் பேசியதன் கருத்தும், தனக்கு
வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க அனுமதியளித்ததன் கருத்தும்
இப்போது சிவகாமிக்குப் புதிய பொருளில் விளங்க ஆரம்பித்தன.
சிவகாமியைத் தன்னுடைய காலிலே விழுந்து கெஞ்சும்படி செய்வதற்காக
இம்மாதிரியெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறான் அந்தக் கிராதகன்.
ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறப் போவதில்லை. யார் எப்படிப்
போனாலும் சரி; இனித் தான் புலிகேசியின் காலில் விழுந்து
கெஞ்சப் போவதில்லை. ஒருநாளும் முடியாது! இப்படியா வஞ்சம்
தீர்க்க நினைத்திருக்கிறான், அந்தப் பாவி! "எதற்காக வாதாபி
நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்?" என்று எண்ணி எண்ணிச்
சிவகாமி தவித்தாள். இரவெல்லாம் தூக்கமின்றித் துடித்துக்
கொண்டிருந்தாள்.
மறுநாள் பொழுது
விடிந்தது; சூரியோதயம் ஆயிற்று. வானவௌியில் சூரியன் மேலே வர
வர, சிவகாமியின் இதயத் துடிப்பு அதிகமாயிற்று. சூரியன் மேற்கு
நோக்கிப் பிரயாணம் செய்யச் செய்ய அவளுடைய உள்ளமும் உடம்பும்
பதறத் தொடங்கின. இத்தனை நேரம் அந்தப் பல்லவ நாட்டு ஸ்திரீகளும்
புருஷர்களும் நாற்சந்தியில் கொண்டு வந்து
நிறுத்தப்பட்டிருப்பார்கள்! அவர்களுடைய கைகள் பின்னால்
சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். இத்தனை நேரம் யமகிங்கரர்கள்
போன்ற காவலர்கள் கையில் பெரிய சாட்டைகளுடன் வந்து நிற்பார்கள்.
இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் சாட்டையினால் அடிக்கத்
தொடங்கி விடுவார்கள். சிவகாமி முதல் நாள் இரவு கொண்டிருந்த மன
உறுதியெல்லாம் பறந்து போயிற்று. பரபரப்புடன் பல்லக்குக் கொண்டு
வரும்படி வாசற் காவலர்களிடம் கட்டளையிட்டாள். பல்லக்கு
வந்ததும் அதில் விரைந்து ஏறிக் கொண்டு நேற்றுப் பார்த்த
நாற்சந்தி முனைக்குப் போகும்படி சொன்னாள்.
நாற்சந்தியின்
சமீபத்தில் இன்று சிவகாமியின் சிவிகை போய்ச் சேர்ந்த போது,
அங்கே கரங்கள் கட்டப்பட்டு நின்றவர்களிடம் நேற்றுக் காணாத
கிளர்ச்சியை இன்று கண்டாள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஏதோ
பேசிக் கொண்டார்கள். அவர்களில் பலர் சிவகாமியை நோக்கி, "அம்மா!
தாயே! எங்களைக் காப்பாற்று!" என்று கூச்சலிட்டார்கள்.
எதிர்பாராத இந்த அபயக் கூக்குரலினால் சிவகாமியின் உள்ளம்
பெருங்குழப்பமடைந்தது. 'ஐயோ! இவர்களைக் காப்பாற்றும் சக்தி
உண்மையில் நம்மிடம் இருக்கலாகாதா?' என்ற ஏக்கம் ஒரு பக்கம்
உண்டாயிற்று. பல்லக்கைத் தரையில் இறக்கச் சொல்லித் தானும்
இறங்கிக் கூட்டத்தை அணுகினாள். மீண்டும், "அம்மா! தாயே!
எங்களைக் காப்பாற்று!" என்ற கூக்குரல்கள் அக்கூட்டத்திலிருந்து
எழுந்தன.
சிவகாமி அவர்கள்
அருகில் இன்னும் நெருங்கிச் சென்றாள். அவர்களில் சிலருடைய
உடம்பில் முன்னமே சாட்டையடி பட்ட காயங்களைக் கண்டாள். அந்தக்
காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் தரையில்
பல இடங்களில் இரத்தம் சொட்டிக் கறையாகியிருப்பதையும்
பார்த்தாள். சிவகாமியின் தலை சுற்றியது; வயிறு குமட்டியது;
மயக்கம் வந்தது. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு ஒருவாறு
சித்தத் தௌிவை நிலைநாட்டிக் கொண்டாள். கூட்டத்தில் அவளுக்குச்
சமீபத்தில் நின்ற ஸ்திரீயைப் பார்த்து, "அம்மா! உங்களைக்
காப்பாற்றும்படி என்னை வேண்டிக் கொள்கிறீர்களே, அது ஏன்?
உங்களைப் போல் நானும் ஓர் அபலைப் பெண்தானே! சளுக்கரால் சிறைப்
பிடித்துக் கொண்டு வரப்பட்டவள்தானே? உங்களைக் காப்பாற்றும்
சக்தி எனக்கு ஏது?" என்றாள். "எங்களைக் காப்பாற்றும் சக்தி
உனக்கு உண்டு, தாயே! அதோ அந்த ராக்ஷதனைக் கேள்; அவன்தான்
அவ்விதம் சொன்னான்" என்றாள் அந்த ஸ்திரீ.
அவள்
சுட்டிக்காட்டிய ராக்ஷத வடிவங்கொண்ட வீரர் தலைவனைச் சிவகாமி
அணுகினாள். வாதாபிவாசிகள் பேசிய கலப்புப் பாஷையில், "ஐயா!
இவர்களை ஏன் இப்படிச் சாட்டையால் அடித்துச் சித்திரவதை
செய்கிறீர்கள்? வேண்டாம்! இந்தப் படுபாதகச் செயலை
நிறுத்துங்கள்!" என்றாள். அந்த வீரர் தலைவன் கலகலவென்று
சிரித்தான். என்னவோ யோசிப்பவன் போல் சற்று இருந்து விட்டுப்
பிறகு, "நாங்கள் என்ன செய்வோம், தாயே! சக்கரவர்த்தியின்
ஆக்ஞை!" என்றான். "அப்படியானால் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்.
நான் உங்கள் சக்கரவர்த்தியிடம் சென்று வேண்டிக் கொண்டு
பார்க்கிறேன். அதுவரையில்..." என்று சிவகாமி சொல்வதற்குள்,
அவ்வீரன், "வேண்டாம், அம்மா! சக்கரவர்த்தியிடம் நீ போகவே
வேண்டாம். இவர்களைச் சாட்டையால் அடிப்பதை நிறுத்தும் அதிகாரம்
உன்னிடமே இருக்கிறது. நீ சொன்னால் நிறுத்தி விடுகிறோம்; ஆனால்,
அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!" என்றான்.
"அந்த வீரன்
முதலில் கூறிய வார்த்தைகளை வியப்போடும் உவகையோடும் கேட்ட
சிவகாமி, "நிபந்தனை" என்றதும் திடுக்கிட்டாள். இதில் ஏதோ
வஞ்சம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், "என்ன நிபந்தனை?"
என்றாள். "நீ இந்த இடத்தில், எங்கள் எல்லாருடைய முன்னிலையிலும்
நடனம் ஆட வேண்டும். நீ ஆடும் வரையில் நாங்கள் இவர்களை
அடிக்காமல் இருக்கிறோம். சூரியன் அஸ்தமிக்கும் வரையில் நீ
ஆடிக் கொண்டிருந்தால், நாங்களும் பார்த்துக் கொண்டேயிருப்போம்.
சூரியன் அஸ்தமித்ததும் நீ வீட்டுக்குத் திரும்பலாம். நாங்கள்
இவர்களைச் சிறையிலே கொண்டு போய்ச் சேர்ப்போம். நாளைக்கும்
இவர்கள் அடிபடக் கூடாது என்று நீ கருதினால் நாளைக்கும்
இம்மாதிரியே நீ இவ்விடம் வந்து நடனம் ஆடலாம்!" என்றான் அந்தக்
கிராதகன்.
சிவகாமியின்
உள்ளத்திலிருந்து எரிமலை, தீக்குழம்பையும் கரும்புகையையும்
கக்கத் தொடங்கியது. ஆஹா! இதுவா அந்தப் பாதகனுடைய எண்ணம்?
இப்படியா என் மீது பழிவாங்கப் பார்க்கிறான்? இப்படியா என்
அற்புதக் கலையை இழிவுபடுத்த நினைக்கிறான்? புத்த பிக்ஷு
வேஷத்தில் வந்து என் கலையைக் கண்டு மெய்ம்மறந்து பரவசமடைந்ததாக
நடித்ததெல்லாம் இதற்காகத்தானா? ஆனால் அந்த வஞ்சக நெஞ்சனுடைய
உத்தேசம் ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை. யார் எப்படிப்
போனாலும், நான் வாதாபியின் நாற்சந்தியில் நின்று நடனம் ஆடப்
போவதில்லை, ஒரு நாளுமில்லை.
முகத்தில்
குரோதம் பொங்க, கண்களில் தீப்பொறி பறக்க நின்ற இடத்திலே
ஸ்தம்பமாய் நின்று யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியைப்
பார்த்து மேற்படி வீரர் தலைவன், "என்ன முடிவு சொல்கிறாய்,
தாயே! நடனம் ஆடப் போகிறாயா? அல்லது இவர்களைத் தங்கள்
காரியத்தைப் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். அந்தக்
கேள்வி சிவகாமியின் செவிகளில் பழுக்கக் காய்ந்த வேல் நுழைவது
போல் நுழைந்தது. திடீரென்று பிரக்ஞை பெற்றவள் போல் அவள் துள்ளி
நிமிர்ந்து நின்று அவ்வீரனைப் பார்த்தாள். "ஆஹா! இந்த
நாற்சந்தியில் நின்று என்னை நடனம் ஆடவா சொல்கிறாய்? மாட்டேன்;
ஒருநாளும் மாட்டேன்!" என்றாள். அவ்வீரர் தலைவன் முகத்திலே
புன்னகையுடன், "சரி உங்கள் வேலையை நீங்கள் நடத்துங்கள்!" என்று
கையில் சாட்டையுடன் நின்றவர்களைப் பார்த்துக் கட்டளையிட்டான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்தெட்டாம் அத்தியாயம்
நாற்சந்தி நடனம்
கடவுள் ஒருவர்
இருப்பது உண்மையானால், அவர் கருணாமூர்த்தி என்பதும்
உண்மையானால், உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்களை
வைத்திருக்கிறார்? மனித வர்க்கம் ஏன் இத்தனை கஷ்டங்களுக்கு
ஆளாக வேண்டியிருக்கிறது? இந்தக் கேள்விகள் ஆதிகாலந் தொட்டு
கேட்கப்பட்டு வருகின்றன. உள்ளதில் உண்மை ஒளிகொண்ட மகான்கள்
மேற்படி கேள்விகளுக்கு விடையும் சொல்லி வந்திருக்கிறார்கள்.
மனிதர்கள் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல.
சூரியனை மேகம் மூடுவது போல் நமது அறிவை மூடியிருக்கும் மாயை
காரணமாகச் சில விஷயங்களைத் துன்பம் என்று நாம் கருதுகிறோம்.
உண்மையில் துன்பமும் ஒருவித இன்பமேயாகும். "அன்பு வடிவாகி
நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள் ஆக்கநீக்கம் யாவும் அவள்
செய்கை - அவள் ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை!" என்று
பராசக்தியைக் குறித்து இந்தக் காலத்து மகாகவியான ஸரீ
சுப்பிரமணிய பாரதியார் பாடியிருக்கிறார்.
ஆனால், அன்பு
வடிவான ஜகன்மாதா ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கையான அன்னை
பராசக்தி ஏன் தன் மக்களுக்குத் துன்பம் இழைக்கிறாள்; ஏன்
கஷ்டங்களை அளிக்கிறாள்? துன்பம் என்றும், கஷ்டம் என்றும் நாம்
எண்ணிக் கொள்கிறோமே தவிர, உண்மையில் அவை துன்பங்களுமல்ல;
கஷ்டங்களுமல்ல. அறிவுத் தௌிவோடு பார்த்தால், நாம் துன்பம்
என்று நினைத்ததும் இன்பந்தான்; கஷ்டம் என்று கருதியதும்
சுகந்தான். இந்தத் தத்துவத்தை நம்புவது அவ்வளவு சுலபமான
காரியமல்ல. "துன்பத்திலே இன்பமாவது, கஷ்டத்திலே சுகமாவது?"
என்ற அவநம்பிக்கை உண்டாகத்தான் செய்யும். ஆயினும் நமது
வாழ்க்கை அனுபவத்திலேயே சில விஷயங்களை ஆலோசித்துப் பார்த்தால்
மேற்படி தத்துவத்தில் உண்மை உண்டு என்று அறியலாம்.
சோக ரஸமுள்ள
கதைகள், காவியங்களைப் படிக்கிறோம். சோக மயமான நாடகங்களைப்
பார்க்கிறோம்; சோகத்தை ஊட்டும் கீதங்களைப் பாடுகிறோம்,
கேட்கிறோம். இப்படியெல்லாம் துன்பத்தை நாமாகத்தானே தேடி
அனுபவிக்கிறோம்? எதற்காக? அந்தத் துன்பங்களிலேயெல்லாம்
உள்ளுக்குள்ளே இன்பம் பொதிந்திருப்பதனாலேதான். நமது
வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும்
போது கஷ்டமாக இருக்கிறது. 'இது சகிக்க முடியாத கஷ்டம்' என்று
தோன்றுகிறது. 'இந்த வாழ்க்கையே வேண்டாம்' என்று
தீர்மானிக்கிறோம். எல்லாக் கஷ்டங்களையும் எப்படியோ சகித்துக்
கொள்கிறோம். அப்படி நாம் அனுபவித்த சகிக்க முடியாத கஷ்டங்களைச்
சில வருஷ காலம் கழித்து நினைத்துப் பார்க்கும் போது, ஒருவகை
அபூர்வ இன்பம் ஏற்படுகிறது. பழைய கஷ்டங்களை நினைத்துப்
பார்ப்பதிலும் அவற்றைக் குறித்துப் பேசுவதிலும் சந்தோஷம
அடைகிறோம்.
சீதாதேவி
வனவாசத்தின் போது அனுபவித்த துன்பங்களுக்கு எல்லையேயில்லை.
அவ்வளவு துன்பங்களைப் பெண்ணாய்ப் பிறந்த யாரும்
அனுபவித்திருக்க முடியாது. ஆயினும் அயோத்தி அரண்மனையில் ஸரீ
ராமபிரானுடைய பட்டமகிஷியாகச் சீதை வாழ்ந்த காலத்திலும் அதிலும்
கர்ப்பம் தரித்திருந்த சமயத்தில், "உனக்கு எதிலாவது ஆசை
உண்டா?" என்று ராமன் கேட்ட போது, சீதை என்ன சொன்னாள்?
"மறுபடியும் காட்டுக்குப் போய் அங்கே நான் கஷ்டப்பட்ட
இடங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது!"
என்றாள். "துன்பம் என்பது உண்மையில் துன்பம் அல்ல. அவ்விதம்
நினைக்கச் செய்வது மாயையின் காரியம். துன்பத்திற்குள்ளேயும்
இன்பந்தான் இருக்கிறது!" என்று சொல்லும் வேதாந்த உண்மையை
மேற்படி சீதையின் கோரிக்கை நன்கு நிரூபித்திருக்கிறதல்லவா?
சிவகாமியை
நாற்சந்தியில் நெருக்கடியான தருணத்தில் நிறுத்தி விட்டு
மேற்கண்டவாறு நாம் வேதாந்தம் பேசிக் கொண்டிருப்பது பற்றி
வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். மேலே சிவகாமியின்
காரியத்தை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்கண்ட பூர்வ பீடிகை
அவசியமாயிருக்கிறது. தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை சாட்டையடித்
துன்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத் தளபதி விரூபாக்ஷன் அவளை
நாற்சந்தியில் நடனமாடச் சொன்னான். அவ்விதம் செய்வது
தெய்வீகமான, பரதநாட்டியக் கலையையே அவமதிப்பதாகும் என்று எண்ணி
முதலில் சிவகாமி, "முடியாது!" என்றாள்.
ஆனால்,
விரூபாக்ஷனின் கட்டளையின் பேரில், 'சுளீர்' என்ற சாட்டையடிச்
சப்தம் கேட்டதும் சிவகாமியின் மனஉறுதி பறந்து போய் விட்டது.
மறுகணம் வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி தேவி நடனம் ஆடத்
தொடங்கினாள், அற்புதமாக ஆடினாள். துன்பத்திலே இன்பம் உண்டு
என்னும் வாழ்க்கைத் தத்துவம் நன்கு விளங்கும்படி ஆனந்தமயமாக
ஆடினாள். சகிக்க முடியாத கஷ்டத்திலிருந்து எல்லையற்ற ஆனந்தம்
பிறக்கும் என்னும் உண்மை நிதரிசனம் ஆகும்படி ஆடினாள். தன்னை
மறந்து, வௌி உலகத்தை மறந்து, காலதேச வர்த்தமானங்களை மறந்து
ஆடினாள். அந்தக் காட்சியானது அழகுத் தெய்வம் ஆனந்த வெறிகொண்டு
ஆடுவது போலிருந்தது.
வாதாபியின்
வீதியில் சிவகாமி நடனம் ஆடிய போது வானமும் பூமியும் அசைவற்று
நிற்பது போல் தோன்றியது. வீதியிலே போய்க் கொண்டிருந்த வாதாபி
நகர மாந்தர்கள் அப்படி அப்படியே நின்று அந்த விந்தையைப்
பார்த்தார்கள். பந்தமுற்ற தமிழகத்து ஸ்திரீ புருஷர்கள்
அசைவற்று நின்றார்கள்; கையில் சாட்டை பிடித்த கிங்கரர்களும்
சும்மா நின்றார்கள். அவர்களுடைய தலைவன் விரூபாக்ஷனும் அசையாமல்
நின்றான். அனைவரும் பார்த்த கண்கள் பார்த்த வண்ணம், சிற்ப
வடிவங்களைப் போல் நின்றார்கள். காலம் போவதே தெரியாமல்
மெய்மறந்து உலகத்தை மறந்து நின்றார்கள்.
சூரியன்
மலைவாயிலில் விழுந்தது; கோட்டைக் கதவுகள் சாத்துவதற்குரிய
அஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமியின் நடன பரவசத்துக்கு
அதனால் பங்கம் ஏற்பட்டது. ஆட்டம் ஆடுவதை நிறுத்திச் சிவகாமி
நின்றாள். அத்தனை நேரமும் ஏதோ ஓர் அதிசய ஆனந்த உலகில்
சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று பூவுலகத்துக்கு
வந்தவளாய்ச் சுற்று முற்றும் பார்த்தாள். தான் நின்றிருந்த
இடத்தையும் இத்தனை நேரம் செய்த காரியத்தையும் நினைவுக்குக்
கொண்டு வந்தாள். அவள் உள்ளத்தில் சகிக்க முடியாத
வெட்கத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியில் இன்பமும்
பெருமையும் உதித்தன. கட்டுப்பட்டு நின்ற பல்லவ நாட்டு ஸ்திரீ
புருஷர்களைச் சிவகாமி நோக்கினாள். அவர்களுடைய கண்களிலே
ததும்பிய நன்றியறிதலைக் கவனித்தாள். யாருடனும் ஒரு
வார்த்தையும் பேசாமல் பல்லக்கில் போய் ஏறிக் கொண்டாள்;
பல்லக்கு மாளிகையை அடைந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்
பிக்ஷுவின் வருகை
அத்தியாயம்
சுக்கில
பட்சத்துப் பிரதமையில் சிவகாமி வாதாபி நகரின் நாற்சந்தியில்
நடனம் ஆட ஆரம்பித்தாள். சுக்கில பட்சம் முடிந்து கிருஷ்ணபட்சம்
வந்தது. கிருஷ்ண பட்சம் முடிவடைந்து மீண்டும் சுக்கில பட்சம்
வந்தது. சிவகாமியின் வீதி நடனம் இன்னும் நடந்து கொண்டே
இருந்தது. தளபதி விரூபாக்ஷன் நடன அரங்கத்தை அடிக்கடி மாற்றிக்
கொண்டிருந்தான். வாதாபி நகரின் முக்கிய நாற்சந்திகளை
ஒவ்வொன்றாக அவன் தேர்ந்தெடுத்து அங்கங்கே கொண்டு போய்த்
தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை நிறுத்தினான். சிவகாமியும்
அங்கங்கே போய் நடனமாடினாள். அந்தக் காட்சியைப் பார்ப்பதற்குத்
தினந்தோறும் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். ஸ்திரீகளும்
புருஷர்களும் சிறுவர் சிறுமியர்களும் திரண்டு வந்தார்கள்.
அரசாங்க
அதிகாரிகள் ரதம் ஏறி வந்தார்கள். அந்தப்புரத்து ராணிகளும்
சேடிகளும் பல்லக்கில் ஏறி வந்தார்கள். புலிகேசிச் சக்கரவர்த்தி
காஞ்சியிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டு வந்த நாட்டியப்
பெண், வாதாபி நகரின் வீதிகளில் நடனமாடுகிறாள் என்னும் செய்தி
எங்கெங்கோ பரவலாயிற்று. அதன் பயனாக அக்கம் பக்கத்து
ஊர்களிலேயிருந்தும் ஜனங்கள் மேற்படி காட்சியைப் பார்க்க
வந்தார்கள். தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வர
ஆரம்பித்தார்கள். தேசமெங்கும் நானா திசைகளிலும் இதைப் பற்றியே
பேச்சாயிருந்தது.
சிவகாமியின்
விஷயத்தில் வாதாபி ஜனங்களின் மனோபாவம் முதலில்
ஒருவிதமாயிருந்தது. போகப் போக அவர்களுடைய மனோபாவம் வேறு விதமாக
மாறிக் கொண்டிருந்தது. முதலில் அந்த அற்புத நடனத்தைப்
பார்த்துவிட்டு வாதாபி மக்கள் பிரமித்துப் போனார்கள்.
"இப்படியும் ஒரு அற்புதக் கலை உண்டா?" என்று வியந்தார்கள். ஊரை
விட்டு, உற்றாரை விட்டு, சொந்த நாடு, நகரத்தை விட்டுத் தூர
தேசம் வந்திருக்கும் அந்தக் கலைச் செல்வியிடம் அவர்களுக்கு
அன்பும் ஆதரவும் பச்சாத்தாபமும் ஏற்பட்டன. அவர்களில் பலர்
சிவகாமியுடன் வார்த்தையாட விரும்பினார்கள். தங்கள் வியப்பையும்
மதிப்பையும் அன்பையும் அபிமானத்தையும் வௌியிட விரும்பினார்கள்.
அவள் வசித்த மாளிகைக்குப் போய் அவளுடன் சிநேகம் செய்து கொள்ள
விரும்பினார்கள். தத்தம் வீட்டுக்கு அவளை அழைத்து உபசரிக்கவும்
ஆசைப்பட்டார்கள். ஆனால், வாதாபி ஜனங்களின் சிநேகமனப்பான்மை
சிவகாமியின் உள்ளத்தில் எவ்வித எதிரொலியையும் உண்டாக்கவில்லை.
நடனம் ஆடும் போது ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின்னர் இயற்கையாகத்
தோன்றும் சோர்வும் ஏற்கெனவே குடிகொண்டிருந்த மனக்கசப்பும்
சேர்ந்து சிவகாமியை அவர்களுடன் முகங்கொடுத்துப் பேச முடியாமற்
செய்து வந்தன.
நாளாக ஆக,
"அந்தத் தமிழகத்து நடனப் பெண் ரொம்ப கர்வக்காரி!" என்ற செய்தி
நகரமெங்கும் பரவிற்று. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த அபிமானம்,
அனுதாபம் எல்லாம் வெறுப்பும் பரிகாசமுமாக மாறலாயின. சிவகாமி
வரும்போதும் போகும்போதும், ஜனங்கள் அவளைப் பற்றிப் பரிகாசமாகப்
பேசுவதும் கேலி செய்து சிரிப்பதம் அதிகமாகி வந்தன. ஆரம்பத்தில்
சிவகாமியின் நடனத்தை "அற்புதம்" என்றும் "தெய்வீகக் கலை"
என்றும் சொல்லி வந்த அதே ஜனங்கள் கொஞ்ச நாளைக்கெல்லாம் அதைப்
"பைத்தியக்காரியின் கூத்து" என்று சொல்லத் தொடங்கினார்கள்!
சிவகாமி
சிவிகையில் போகும் போது சிறுவரும் சிறுமிகளும் ஊளையிட்டுக்
கொண்டு பின்னால் ஓடினார்கள். சில சமயம் மண்ணையும் அவள் மீது
வீசி எறிந்தார்கள். இதையெல்லாம் சிவகாமி சிறிதும்
பொருட்படுத்தவில்லை. அவளுடைய நெஞ்சில் வைரம் பாய்ந்திருந்தது.
அசைக்க முடியாத ஓர் உறுதி அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது.
புகழையும் இகழையும் பாராட்டையும் நிந்தனையையும் ஒன்றாகக்
கருதும் மனோநிலையைச் சிவகாமி அடைந்திருந்தாள். கடவுளின்
அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டு இந்தப் பூவுலகத்தில் தாமரை
இலைத் தண்ணீர் போல் வாழும் முற்றும் உணர்ந்த ஞானியை அவள்
ஒத்திருந்தாள்.
சிவகாமி வாதாபி
வீதிகளில் நடனம் ஆட ஆரம்பித்து ஏறக்குறைய ஒன்றரை மாத காலம்
ஆயிற்று. ஒருநாள் வழக்கம் போல் சிவகாமி நடனம் ஆடிக்
கொண்டிருந்தாள். சூரியாஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமி
ஆட்டத்தை நிறுத்தினாள், சற்று மூச்சு வாங்குவதற்காக
நின்றுவிட்டுப் பல்லக்கை நோக்கிச் செல்லத் திரும்பினாள். அவள்
திரும்பிய திக்கில் தோன்றிய ஒரு தோற்றம் அவளைச் சிறிது நேரம்
மனம் குழம்பித் திகைத்து நிற்கும்படிச் செய்து விட்டது. அந்தத்
தோற்றம் நாகநந்தியடிகளின் உருவந்தான்.
வியப்பினால்
விரிந்த கண்களில் கோபாக்னியின் பொறி பறக்க, இமையா நாட்டத்துடன்
நாகநந்தி தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைச் சிவகாமி
பார்த்தாள். நாகநந்தியின் முகபாவம் கணநேரத்தில் மாறியது.
கண்களில் கோபாக்னி நிறைந்து பரிதாபம் தோன்றியது. அவளுடைய
கண்களின் பார்வையும் முகத்தின் பாவமும் "மன்னித்து விடு" என்று
கெஞ்சுவது போன்ற உணர்ச்சியை ஊட்டின. இதனால் மேலும்
திகைப்படைந்த சிவகாமி, மெதுவாகச் சுயப்பிரக்ஞை அடைந்து
குழப்பத்தைச் சமாளித்துக் கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து
சென்று பல்லக்கில் ஏறிக் கொண்டாள்.
பல்லக்கு வழக்கம்
போல் மாளிகையை நோக்கிச் சென்றது. ஆனால், சிவகாமியின் உள்ளம்,
ஜனக் கூட்டத்தின் நடுவே நின்ற நாகநந்தியடிகளிடம் இருந்தது.
"இந்த புத்த பிக்ஷு யார்? வேடம் பூண்ட வாதாபிச்
சக்கரவர்த்திதானா? உருவம் அப்படியே இருக்கிறது, ஆனால் கண்களின்
தோற்றத்திலும் முகபாவத்திலும் எவ்வளவு வித்தியாசம்? உணர்ச்சி
என்பதே இல்லாத கல்நெஞ்சைப் பிரதிபலிக்கும் புலிகேசியின்
முகத்துக்கும் கனிவும் இரக்கமும் கலைப் பரவசமும் ததும்பிய
பிக்ஷுவின் முகத்துக்கும், எவ்வளவு வித்தியாசம்...?"
பிக்ஷுவின் தோற்றம் சிவகாமிக்குப் பல்லவ நாட்டையும் அரண்ய
வீட்டையும் நினைவூட்டியது. அந்தக் காலத்து வாழ்வெல்லாம் ஞாபகம்
வந்தது. உண்மையில் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகவில்லை. ஆனால்,
எத்தனை யுகம் ஆகிவிட்ட மாதிரி தோன்றுகிறது!
மாளிகையை அடைந்த
பிறகும் சிவகாமியின் உள்ளம் வழக்கமான அமைதியை அடையவில்லை. ஏதோ
ஓர் ஆவல், அர்த்தமில்லாத பரபரப்பு, அவள் மனத்தில்
குடிகொண்டிருந்தது. அவளுடைய உள்ளம் அப்படி யாரை
எதிர்பார்த்தது? அவளுடைய கண்கள் யாரை எதிர்பார்த்து அவ்விதம்
அடிக்கடி வாசற்பக்கம் நோக்கின? நாகநந்தி பிக்ஷுவையா? இரவு ஒரு
ஜாமம் முடியும் தறுவாயில் நாகநந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்த
போது, சிவகாமியின் கண்களில் தோன்றிய ஒளியும் அவளுடைய
முகபாவமும் அவள் புத்த பிக்ஷுவைத்தான் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தாள் என்பதை உணர்த்தின. நாகநந்தியும் சிவகாமியும்
ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தார்கள். அவர்களுடைய
கண்களின் தீக்ஷண்யம், ஒருவருடைய இருதய அந்தரங்கத்தை இன்னொருவர்
ஊடுருவிப் பார்க்க முயன்றதாகத் தெரியப்படுத்தியது. சற்று நேரம்
அந்த மாளிகையில் மௌனம் குடிகொண்டிருந்தது. மௌனத்தைக் கலைத்துக்
கொண்டு பிக்ஷுவின் தழு தழுத்த குரல், "சிவகாமி! என்னை
மன்னித்துவிடு!" என்று கூறியது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பதாம் அத்தியாயம்
சிவகாமியின் சபதம்
உட்கார்ந்திருந்த
சிவகாமி, சட்டென்று எழுந்து நின்றாள். அவளுடைய உதடுகள்
துடித்தன; புருவங்கள் மேலேறின. கண்களிலிருந்து மின்னல்
கிளம்பிப் புத்த பிக்ஷுவைத் தாக்கின. "கள்ள பிக்ஷுவே! எதற்காக
என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்? எனக்கு என்ன அபசாரம்
செய்தீர்?" என்ற சொற்கள் சீறிக்கொண்டு பாயும் அம்புகளைப் போலச்
சிவகாமியின் வாயிலிருந்து புறப்பட்டன. பிக்ஷு திகைத்துப்
போனார்; தவறாக எதையோ சொல்லி விட்டோம் என்ற உணர்ச்சியினால்
ஏற்பட்ட தடுமாற்றத்துடன், "ஆம், சிவகாமி! நான் உனக்குப் பெருந்
தீங்குதான் செய்து விட்டேன். எல்லாம் விவரமாகச் சொல்ல
வேண்டும். அவசரமாக இரண்டொரு வார்த்தையில் சொல்லக்கூடிய விஷயம்
அல்ல. தயவு செய்து சற்றுச் சாவதானமாக உட்கார்ந்து கேள்!"
என்றார்.
"ஐயா! விவரமாக
எல்லாம் சொல்லுவதற்கு முன்னால் ஒரு விவரம் சொல்லும். நீர்
யார்? கருணாமூர்த்தியான கௌதம புத்தரின் சங்கத்தைச் சேர்ந்து
சர்வ பரித்யாகம் செய்த துறவியா? அல்லது வஞ்சக நோக்கத்துடன்
காவித் துணி வேஷம் தரித்த சளுக்க குலத்துச் சக்கரவர்த்தியா?
சிற்ப சித்திரக் கலைகளிலும் பரதநாட்டியக் கலையிலும் உண்மை
அபிமானங் கொண்ட பரதேசியா? அல்லது ஓர் ஏழைச் சிற்பி மகளைக்
கெடுப்பதற்காகப் பிக்ஷு வேஷம் பூண்ட இராவண சந்நியாசியா? நீர்
யார்? நாகநந்தியா? புலிகேசியா?" இவ்விதம் கேட்டுச் சிவகாமி
நிறுத்தியபோது, வானமுகட்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை
வரையில் அதிர்ந்து நடுங்கும்படியாக மின்னல் மின்னி இடி இடித்து
ஓய்ந்தது போலிருந்தது.
இவ்வளவு இடி
மின்னல்களும் நாகநந்தியின் முகபாவத்தில் எவ்வித மாறுதலையும்
உண்டு பண்ணவில்லை. அவர் அதிசயமான அமைதியுடன், "அம்மா சிவகாமி!
உன்னுடைய சந்தேகங்களுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. ஆனால்,
உண்மையிலேயே நான் உலகப் பற்றறுத்த புத்த பிக்ஷுதான். உன்னுடைய
பரத நாட்டியக்கலைக்கு என் உள்ளத்தைப் பறி கொடுத்தவன்தான்.
விலங்கு இனத்தைச் சேர்ந்த மக்களின் முன்னால் தெரு வீதிகளில்
உன்னை நடனமாடச் செய்த நிர்மூடப் புலிகேசி நான் அல்ல.
பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தினால் அவனோடு உடன் பிறந்த
துரதிருஷ்டசாலி நான். முன்னொரு சமயம், இருபத்தைந்து
வருஷங்களுக்கு முன்னால் என் தம்பி புலிகேசியைக்
கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவனுடைய உடையை நான்
அணிந்து நடித்தேன். மறுபடியும் இருபத்தைந்து வருஷங்களுக்குப்
பின் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவ்விதம்
செய்தேன். ஆம், சிவகாமி காஞ்சிக் கோட்டைக்கு வௌியே காட்டின்
நடுவே எனக்கு முன்னால் நீ கைகூப்பி வணங்கி, 'என் தந்தையைக்
காப்பாற்றுங்கள்!' என்று வேண்டிக் கொண்டாய். அதை
நிறைவேற்றுவதற்காகத் துறவியின் காஷாயத்தைக் களைந்து விட்டுச்
சக்கரவர்த்தியின் ஆடைகளை அணிந்து கொண்டேன்...."
சிவகாமி
பரபரப்புடன் பிக்ஷுவின் அருகில் ஓடிவந்தாள். மண்டியிட்டுக் கை
கூப்பிய வண்ணம், "சுவாமி! இந்த அபலைப் பெண்ணின் ஆத்திர மொழிகளை
மன்னித்து விடுங்கள். என் தந்தையைத் தாங்கள்
காப்பாற்றினீர்களா? அவர் உயிரோடிருக்கிறாரா?
எங்கேயிருக்கிறார்? எப்படியிருக்கிறார்?" என்று அலறினாள்.
"அம்மா! உன்னுடைய தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன். உனக்கு
நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். கொஞ்சம்
அமைதியாக உட்கார்ந்து கேட்டால் விவரங்களும் சொல்கிறேன்"
என்றார் பிக்ஷு.
சிவகாமி
உட்கார்ந்தாள்; புலிகேசியைப் போல் வேஷம் தரித்துச் சென்று,
கையும் காலும் வெட்டப்படுவதற்கிருந்த ஆயனரைக்
காப்பாற்றியதையும், ஆனால், அவர் தவறி மலை மீதிலிருந்து கீழே
விழுந்ததையும், அதனால் கால் முறிந்ததையும், உணர்விழந்த
நிலையில் அரண்ய வீட்டுக்குக் கொண்டுபோய் அங்கு அவருக்கு உணர்வு
வந்த பிறகு விடைபெற்று வந்ததையும், புத்த பிக்ஷு சொல்லி
வந்தபோது சிவகாமிக்கு அவரிடம் எல்லையற்ற நன்றி உணர்ச்சி
உண்டாயிற்று. தான் அவரைக் குறித்துச் சந்தேகித்ததெல்லாம்
எவ்வளவு தவறு என்று அடிக்கடி நினைத்துப் பச்சாத்தாபப்பட்டாள்.
நீர் ததும்பிய கண்களினால் பிக்ஷுவைப் பார்த்துச் சொன்னாள்;
"சுவாமி! என் அருமைத் தந்தையைக் கொடிய தண்டனையிலிருந்து மீட்டு
அவருடைய உயிரையும் காப்பாற்றிய தங்களுக்கு என் ஆயுள் உள்ள
வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது
தாங்கள் இங்கு வந்ததும் என்னிடம் மன்னிப்புக் கேட்டீர்களே, அது
ஏன்? தங்களை அநியாயமாகச் சந்தேகித்ததற்காக நான் அல்லவா
தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சளுக்க
சக்கரவர்த்தியும் தாங்களும் ஒருவரேதான் என்று தவறாக
எண்ணியதனால், தங்களைப் பற்றி அநியாயமாகச் சந்தேகப்பட்டேன்.
என்னை இந்த வாதாபிக்கு அழைத்து வந்தவரும் நாற்சந்தியில்
நடனமாடச் செய்தவரும் தாங்கள்தான் என்று எண்ணிக் கோபம்
கொண்டிருந்தேன். சுவாமி! என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று
சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் நீர் தாரை தாரையாகப்
பெருகியது.
"சிவகாமி! நான்
உன்னை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையிலே நீ தான் என்னை
மன்னிக்க வேண்டும். உனக்கு நான் பெரிய துரோகம்
செய்திருக்கிறேன். இன்று இந்தத் தூரதேசத்தில் நீ
தன்னந்தனியாகச் சிறைப்பட்டிருப்பதற்குக் காரணம் நான்தான்!
என்னை மன்னித்துவிடு!" இவ்விதம் புத்த பிக்ஷு உணர்ச்சியினால்
கம்மிய குரலில் கூறிய போது, சிவகாமி தன் கண்களில் பெருகிய
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நாகநந்தியின் முகத்தை வியப்புடன்
ஏறிட்டுப் பார்த்தாள்.
"ஆம், சிவகாமி!
நான் சொல்வது சத்தியம், வாதாபிச் சைனியம் காஞ்சியின் மீது
படையெடுத்து வருவதற்கே காரணமாயிருந்தவன் நான்தான். என் சகோதரன்
புலிகேசிக்கு முதலில் அந்த உத்தேசம் இருக்கவில்லை. வாதாபிச்
சைனியம் முழுவதும் வேங்கியை நோக்கிப் போவதாயிருந்தது. வாதாபிச்
சைனியத்தை இரண்டாகப் பிரித்துப் புலிகேசியைக் காஞ்சிக்கு
விரைந்து வரும்படி கூறியவன் நான்தான். வேங்கி ராஜ்யத்தின் மீது
படையெடுக்கத் தம்பி விஷ்ணுவர்த்தனனை அனுப்பினால் போதும்
என்றும் எழுதினேன்... அதன் பலன் என்ன விபரீதமாயிற்று,
தெரியுமா? விஷ்ணுவர்த்தனனுடைய பத்தினி இன்று
விதவையாகியிருக்கிறாள். அவளையும், அவளுடைய சின்னஞ் சிறு
புதல்வனையும் இன்றைய தினந்தான் இந்நகரில் பத்திரமாய்க் கொண்டு
வந்து சேர்த்தேன்..." "சுவாமி! இத்தனை நாளும் இந்த நகரில்
தாங்கள் இருக்கவில்லையா?" என்று சிவகாமி கேட்டாள். "இல்லை,
சிவகாமி! இருந்திருந்தால் உன்னுடைய தெய்வீக நடனக்கலை இப்படி
சந்தி சிரிப்பதற்கு விட்டிருப்பேனா? கலை உணர்ச்சியில்லாத
நிர்மூடப் புலிகேசி இப்படிச் செய்துவிட்டான்! அவன் இவ்விதம்
செய்வான் என்று தெரிந்திருந்தால் வடபெண்ணைக் கரையில் உன்னை
அவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டேன்.....
பிக்ஷு
வடபெண்ணைக் கரையைப் பற்றிக் கூறியதும் அன்றொரு நாள் இரவு,
சிவகாமி கண்ட கனவுத் தோற்றம் அவள் நினைவுக்கு வந்தது.
"வடபெண்ணைக் கரையில் என்னை விட்டு விட்டுப் போனீர்களா? அது
எப்படி? உங்களைக் காஞ்சிக்குப் பக்கத்தில் அல்லவா நான்
பார்த்து வரம் கேட்டேன்?" என்றாள். "சக்கரவர்த்தி வேஷம் பூண்டு
உன் தந்தையைக் காப்பாற்றிய பின் உடனே என் வேஷத்தைக்
கலைத்துவிடவில்லை, சிவகாமி! அதே வேஷத்தில் மகேந்திர பல்லவனுடன்
போரிட்டேன். மணி மங்கலத்தில் அவனை முறியடித்துவிட்டு உன்னைத்
தொடர்ந்து வந்தேன். பொன்முகலி நதிக் கரையில் நீ என்னைப்
பார்த்து, சிறைப்பட்ட பல்லவ நாட்டுப் பெண்களையெல்லாம் விடுதலை
செய்ய வேண்டும் என்று வரங்கேட்டாய். வாதாபிக்கு நீ மனத்
திருப்தியுடன் வருவதாய் இருந்தால் அவர்களை விடுதலை செய்வதாகச்
சொன்னேன்; நீயும் சம்மதித்தாய். அப்போது உன்னையும் நான்
விடுதலை செய்து உன் தந்தையிடம் சேர்ப்பித்திருக்கலாம். அப்படி
நான் செய்யவில்லை; உன்னை வஞ்சித்து வாதாபிக்குக் கொண்டு
வந்தேன்!... ஆனால், நான் இல்லாத சமயத்தில் இந்த மூடன் புலிகேசி
இப்படி உன்னை அலங்கோலப்படுத்துவான் என்று மட்டும்
நினைக்கவேயில்லை. உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது
ஏன் என்று தெரிகிறதா, சிவகாமி!" என்றார் பிக்ஷு.
"தெரிகிறது,
சுவாமி! இதற்குமுன் எனக்குக் குழப்பம் அளித்துக் கொண்டிருந்த
இன்னும் பல விஷயங்களும் விளங்குகின்றன. ஆனால், ஒரே ஒரு
சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. எதற்காக இவ்வளவெல்லாம்
நீங்கள் செய்தீர்கள்? எதற்காக இவ்வளவு சூழ்ச்சிகளும்
பிரயத்தனங்களும் செய்து, இந்த அபலைப் பெண்ணை இங்கே கொண்டு
வந்து சேர்த்தீர்கள்? உலகத்தைத் துறந்து பிக்ரு விரதம் பூண்ட
தங்களுக்கு இந்த ஏழைப் பெண்ணால் என்ன உபயோகம்?... கால் ஒடிந்து
ஆதரவற்றுக்கிடக்கும் என் தந்தையிடமிருந்து என்னைப் பிரித்துக்
கொண்டு வந்ததில் தாங்கள் என்ன லாபத்தைக் கண்டீர்கள்? என்ன பலனை
உத்தேசித்து என்னை இங்கே சிறைப்படுத்தி
வைத்திருக்கிறீர்கள்?...."
"சிவகாமி!
சொல்கிறேன், கேள்! என் சொற்படி காலமல்லாத காலத்தில் காஞ்சி
மேல் படையெடுத்த காரணத்தினால் வாதாபியின் வீர சைனியத்தில்
பாதிக்கு மேல் அழிந்துவிட்டது. வேங்கியை வென்று சென்ற வருஷம்
மகுடம் சூடிய விஷ்ணுவர்த்தனன் அந்த வெற்றியை நிலைநாட்டிக்
கொள்ள முடியாமல் மாண்டான். இந்த விபரீதங்களுக்கெல்லாம்
காரணமானவள் நீதான்! உன்னை முன்னிட்டுதான் இதையெல்லாம் நான்
செய்தேன், ஏன் என்று சொல்லுகிறேன், கேள்!"
இந்தப் பூர்வ
பீடிகையுடன் நாகநந்தி பிக்ஷு தமது கதையைக் கூறத் தொடங்கினார்.
அஜந்தா குகைகளில் தாம் கழித்த இளம் பிராய வாழ்க்கையைப் பற்றிக்
கூறினார். அஜந்தா குகைச் சுவரில் தாம் பார்த்த பரதநாட்டியப்
பெண் சித்திரத்தைக் குறித்தும், அதைப்பற்றித் தாம் கண்ட
மனோராஜ்யக் கனவுகளைக் குறித்தும் சொன்னார். தென்னாட்டின்
நிலைமை எப்படியிருக்கிறதென்று அறிந்து கொள்ளத் தாம் யாத்திரை
வந்தது பற்றியும், அப்போது ஆயனர் வீட்டில் அஜந்தா சித்திர
கன்னிகை உயிர் பெற்று வந்து நடனமாடிய காட்சியைக் கண்டு
பிரமித்தது பற்றியும் உணர்ச்சி ததும்ப விவரித்தார்.
"சிவகாமி! அன்று
முதல் நான் ஒரு புது மனிதன் ஆனேன். சளுக்க சாம்ராஜ்யத்தின்
மகோன்னதத்தைப் பற்றி அதுவரை நான் கட்டிக் கொண்டிருந்த ஆகாசக்
கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. இந்தப் பரந்த பரதகண்டம்
முழுவதையும் புத்த சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர
வேண்டும் என்றும், அப்பேர்ப்பட்ட மகா புத்த சங்கத்துக்கு நான்
தலைமைப் பிக்ஷு ஆகவேண்டும் என்றும் நான் கொண்டிருந்த
மனோரதங்களும் மறைந்தன. 'சாம்ராஜ்யங்களும் புத்த சங்கங்களும்
எப்படியாவது போகட்டும். உன்னை நடனமாடச் சொல்லிப் பார்த்துக்
கொண்டே என் வாழ்நாளைக் கழித்து விடுவது' என்று சங்கல்பம்
செய்து கொண்டேன். அதற்குப் பிறகு உன்னை எப்படி இந்த வாதாபி
நகருக்குக் கொண்டு சேர்ப்பது என்பது ஒன்றே என் மனக்கவலை
ஆயிற்று. அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகள் செய்தேன்; எத்தனையோ
உபாயங்களைக் கையாண்டேன்...."
இப்படிப் பிக்ஷு
சொல்லி வந்தபோது, சிவகாமியின் உள்ளத்தில் ஏற்கெனவே
குடிகொண்டிருந்த பெருமிதமான கர்வமும் பரிதாப உணர்ச்சியும்
சேர்ந்தாற்போல் பொங்கிக் கொண்டு வந்தன. 'ஆகா! இந்த ஏழைச்
சிற்பியின் மகள் காரணமாக இரண்டு பெரிய சாம்ராஜ்யங்கள் சண்டைபோட
நேர்ந்ததல்லவா?' என்ற பெருமித கர்வத்தை அடுத்து, 'ஐயோ!
காஞ்சியிலிருந்து வாதாபி வரும்போது நான் பார்த்த அத்தனை
கொடுமைகளும் என் காரணமாக ஏற்பட்டனவா?' என்ற பரிதாப
உணர்ச்சியும் மேலிட்டு வந்தது. "சிவகாமி! உன்னுடைய கலையின்
மேல் நான் கொண்ட மோகத்தினால் ஒரு பெரிய யுத்தத்தையே உண்டு
பண்ணினேன். பயங்காளியும், கோழையுமான அந்த அற்பன்
மாமல்லனிடமிருந்து உன்னைக் காப்பாற்ற இவ்வளவு பிரம்மப்
பிரயத்தனங்களும் செய்தேன். ஆனால் அவ்வளவும், இப்போது
நிஷ்பலனாயின. நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தெரு வீதிகளின்
நாற்சந்தியில் ஆடச்செய்து, உன்னையும் உன் கலையையும் நிர்மூடன்
புலிகேசி கேவலப்படுத்திவிட்டான். சிவகாமி! என்னை
மன்னித்துவிடு, நீ பட்ட அவமானத்திற்கும் நீ அடைந்த
துன்பத்திற்கும் பரிகாரம் செய்து விடுகிறேன். உன்னை உன் தந்தை
வீட்டில் கொண்டு போய் விட்டுவிட ஏற்பாடு செய்கிறேன்.
சக்கரவர்த்தியிடம் போராடி இதற்கு அனுமதியும் பெற்று
வந்துவிட்டேன்."
இதைக் கேட்டதும்
சிவகாமி நியாயமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலமடைந்திருக்க
வேண்டுமல்லவா? விதி வசத்தினாலோ அல்லது விசித்திரக் கோணல்கள்
நிறைந்த பெண் மனோபாவத்தினாலோ, சிவகாமி அவ்விதம்
மகிழ்ச்சியடையவில்லை. மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
"சிவகாமி! ஏன் பேசாமலிருக்கிறாய்? எப்போது புறப்படலாம், சொல்!
உன்னைப் பல்லக்கில் ஏற்றித் தக்க பாதுகாப்புடன்
அனுப்பிவைக்கிறேன். உனக்குப் பணிவிடைப் புரியப்
பணிப்பெண்களையும் உன்னைப் பாதுகாப்பதற்கு வீரர்களையும் அனுப்பி
வைக்கிறேன். பொன்முகலி ஆறு வரையில் உன்னைக் கொண்டு போய்
விட்டுவிட்டு அவர்கள் திரும்புவார்கள்..." என்று புத்த பிக்ஷு
கூறி வந்தபோது, அதுகாறும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த
சிவகாமி சட்டென்று எழுந்து நின்று, ஆவேசம் ததும்பிய குரலில்
பின்வரும் பயங்கர மொழிகளைக் கூறினாள்.
"அடிகளே!
கேளுங்கள், இந்த வாதாபி நகரத்தை விட்டு நான் எப்போது
கிளம்புவேன் தெரியுமா? பயங்கொள்ளி என்று நீங்கள் அவதூறு
சொல்லிய வீர மாமல்லர் ஒரு நாள் இந்நகர் மீது படையெடுத்து
வருவார். நரிக்கூட்டத்தின் மீது பாயும் சிங்கத்தைப் போலச்
சளுக்க சைனியத்தைச் சின்னா பின்னம் செய்வார். நாற்சந்தி
மூலைகளில் என்னை நடனம் ஆடச்செய்த பாதகப் புலிகேசியை யமன்
உலகத்துக்கு அனுப்புவார். தமிழகத்து ஸ்திரீ புருஷர்களைக்
கையைக் கட்டி ஊர்வலம் விட்ட வீதிகளில் இரத்த ஆறு ஓடும்.
அவர்களை நிறுத்திச் சாட்டையால் அடித்த நாற்சந்திகளிலே வாதாபி
மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக்கிடக்கும். இந்தச் சளுக்கர்
தலைநகரின் மாட மாளிகை, கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாகும்,
இந்த நகரம் சுடுகாடாகும். அந்தக் காட்சியை என் கண்ணால்
பார்த்துவிட்டுப் பிறகுத்தான் இந்த ஊரைவிட்டுக் கிளம்புவேன்.
சளுக்கப் பதர்களை வென்று வெற்றி மாலை சூடிய மாமல்லர் என்
கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவதற்கு வருவார்.
அப்போதுதான் புறப்படுவேன், நீர் அனுப்பிப் போக மாட்டேன்.
பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போகமாட்டேன். யானைமீது வைத்து
அனுப்பினாலும் போக மாட்டேன்!" இந்தப் பயங்கரமான சபதத்தைக்
கேட்ட நாகநந்தியின் முகத்திலே புன்னகை தோன்றியது. தம்முடைய
சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி அந்தப் பொல்லாத
பிக்ஷு உள்ளுக்குள் உவகை அடைந்தார் போலும்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்தொன்றாம் அத்தியாயம்
ஜயஸ்தம்பம்
வாதாபி நகருக்கு
இரண்டு காத தூரம் கிழக்கே ஒரு குன்று இருந்தது. சுற்றிலும்
காடு அடர்ந்த அந்தக் குன்றின் ஒருபக்கத்துச் சரிவில்
அடுத்தடுத்துக் குடைந்த குகைகள் இரண்டு இருந்தன. இரண்டு
குகைகளும் குடையும் வேலை பூர்த்தியாகாமல் அரைகுறையாக
விடப்பட்டிருந்தன. பௌத்தர்களோ சமணர்களோ அந்தக் குகைகளைக் குடைய
ஆரம்பித்திருக்க வேண்டும். அப்புறம் எந்தக் காரணத்தினாலோ
வேலையை நடுவில் நிறுத்தி விட்டுப் போயிருக்க வேண்டும்.
குகைகளில் ஒன்றுக்குள்ளேயிருந்து சல சல வென்ற சப்தத்துடன் ஒரு
சிற்றருவி வௌியே வந்து கொண்டிருந்தது. குகையின் வௌியில் அந்த
அருவி அங்குமிங்கும் தவழ்ந்து விளையாடி முத்து நீர்த்துளிகளை
வாரி இறைத்துவிட்டுக் கீழ்நோக்கிச் சென்று அடர்ந்த
விருட்சங்களின் நிழலில் மறைந்தது. இவ்வளவு அழகான இயற்கைக்
காட்சியின் ரம்யத்தைக் கெடுத்து அருவருப்பையுண்டு பண்ணக்கூடிய
பொருள்கள் சில அருவியின் இருபுறத்துப் பாறைகளிலும்
விருட்சங்களின் அடியிலும் காணப்பட்டன. அவை மனிதர்களின் மண்டை
ஓடுகள், மாட்டுக் கொம்புகள் முதலிய காபாலிகர் கூட்டத்தின்
சின்னங்களாகும். பாறைகள் சிலவற்றில் இரத்தக்கறை
படிந்திருந்ததிலிருந்து, அந்தப் பாறைகள் சமீபத்தில்
பலிபீடங்களாக உபயோகப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது.
மாலை நேரத்து
மஞ்சள் வெயிலினால் பச்சை மரங்களும் பசும்பொன் நிறம் பெற்றுத்
திகழ்ந்த நேரத்தில், மேற்கூறிய குகைகளுக்குச் சற்றுத்
தூரத்தில் இருந்த ஒரு மொட்டைப் பாறையிலே நாலுபேர்
உட்கார்ந்திருந்தார்கள். தொலை தூரம் பிரயாணம் செய்திருந்த
காரணத்தினால் அவர்கள் பெரிதும் களைப்படைந்திருந்தார்கள்.
ஆடைகள் அழுக்கடைந்திருந்தன; தலையில் ரோமம் சடை
விழுந்திருந்தது. முகவாய்க் கட்டையில் ரோமம் அடர்ந்திருந்தது.
அவர்களுடைய இளம்பிராயத்துக்குப் பொருந்தாத சுருக்கங்கள்
முகத்தில் காணப்பட்டன, கண்கள் குழிவிழுந்து போயிருந்தன.
ஆயினும், அந்தக் கண்களிலே ஒரு அசாதாரண ஒளி, இணையில்லா
மனோதைரியத்தையும் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் உறுதியையும்
காட்டும் ஜீவசக்தி, பிரகாசித்தது.
குன்றின்
உச்சியில் ஒரு மனிதன் நின்று நாலாபுறமும் உற்று நோக்கிக்
கொண்டிருந்தான். கீழே மொட்டைப் பாறையில்
உட்கார்ந்திருந்தவர்கள் அடிக்கடி அவனை அண்ணாந்து நோக்கிக்
கொண்டிருந்தார்கள். திடீரென்று மேலே நின்ற மனிதன் குதூகலம்
நிறைந்த குரலில், "அதோ!" என்றான். அந்தக் குரலிலிருந்தே அவன்
நமது பழைய நண்பன் குண்டோதரன் என்பதை அறிந்து கொள்கிறோம்.
"அதோ!" என்ற சத்தத்தைக் கேட்டதும் மொட்டைப் பாறையில்
உட்கார்ந்திருந்த நால்வரின் முகங்களும் மலர்கின்றன. அவன்
சுட்டிக்காட்டிய திக்கை அவர்கள் ஆவலுடன் உற்றுப்
பார்க்கிறார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுக்குள்ளேயிருந்து
ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமில்லை; பல்லவ நாட்டு ஒற்றர்
தலைவன் சத்ருக்னன்தான், மற்றவர்களைப் போல் அன்றிச் சத்ருக்னன்
நன்றாக க்ஷவரம் செய்து கொண்டு சுத்தமான முகத்துடன்
விளங்குகிறான். அதிலிருந்தே அவன் நகரத்துக்குப் போய் வருகிறான்
என்று அறிந்து கொள்ளலாம்.
தோளிலே துணிப்பை
தொங்க வந்த சத்ருக்னனை ஐந்து பேரும் சூழ்ந்து கொண்டார்கள்.
"சத்ருக்னா! காயா? பழமா சீக்கிரம் சொல்!" என்றார்கள்.
"பழந்தான்" என்று சொல்லிக் கொண்டே, சத்ருக்னன் தோளில் தொங்கிய
பையை எடுத்து அவிழ்த்தான். அதிலிருந்த பழங்கள் கீழே விழுந்து
உருண்டு ஓடின. அவற்றைப் பொறுக்குவதற்கு எல்லாரும் பட்ட
அவசரத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் பசித்திருந்தார்கள்
என்று தெரிய வந்தது. பசித்ததோ, இல்லையோ தரையில் விழுந்த
பழங்களின் மேல் கவனம் செலுத்தாமல், சத்ருக்னன் என்ன சொல்லப்
போகிறான் என்பதிலேயே கவனம் செலுத்திய ஒருவரும் அவர்களில்
இருந்தார். அவர்தான் மாமல்லர் என்று சொல்ல வேண்டியதில்லை.
"சத்ருக்னா! பழம் என்கிறாயே? அப்படி என்றால் என்ன? சிவகாமியைப்
பார்த்தாயா?" என்று கேட்டார். "ஆம் பிரபு, பார்த்தேன்!" என்று
கூறி மறுபடியும் சத்ருக்னன் மௌனம் சாதித்தான். "ஏன் இப்படிப்
பேசாமல் நிற்கிறாய்? மேலே சொல், சத்ருக்னா! எங்கே பார்த்தாய்?
எந்த நிலையில் பார்த்தாய்?" என்று மாமல்லர் கேட்டார். "பிரபு!
சிவகாமி அம்மையைப் பார்த்தேன். சௌக்கியமாக இருக்கிறார்,
கவலைக்கு ஒரு காரணமும் இல்லை. எங்கே பார்த்தேன்; எப்படிப்
பார்த்தேன் என்பதை விவரமாகச் சொல்ல வேண்டும் எல்லாரும்
உட்காருங்கள், சொல்கிறேன்!" என்றான் சத்ருக்னன்.
அவ்வண்ணமே
அனைவரும் பாறை மீது உட்கார்ந்தார்கள்; சத்ருக்னன் சொல்லத்
தொடங்கினான்: "நேற்று மாலை வளையல் வியாபாரியின் வேஷத்தில்
வாதாபி நகருக்குள் பிரவேசித்தேன். கோட்டை வாசலுக்குள்
பிரவேசிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இருக்கவில்லை. ஜனங்கள்
தாராளமாய் நகருக்குள் வந்து கொண்டும், போய்க்
கொண்டுமிருக்கிறார்கள். எந்த எதிரியின் படையெடுப்பையாவது
எதிர்பார்த்தால் அல்லவா கோட்டையில் கட்டுக்காவல் வைக்கப்
போகிறார்கள்? வாதாபியின் வீரப்படைகள் எட்டுத் திசையும் சென்று
திக்விஜயம் செய்து கொண்டிருக்கும்போது...." அச்சமயம் சேனாதிபதி
பரஞ்சோதி குறுக்கிட்டு, "என்ன உளறுகிறாய்; சத்ருக்னா!
திக்விஜயமாவது மண்ணாங்கட்டியாவது? தென்னாட்டுக்குச் சென்ற
வாதாபிப் படைகள் தோற்றுத் திரும்பி ஓடி வந்திருக்கின்றன!
வேங்கிக்குப் போன சளுக்க சைனியத்தின் பாடும் ஆபத்துத்தான்
என்று தெரிகிறது. அப்படியிருக்க வாதாபிப் படைகளின்
திக்விஜயமாவது...? என்றார்.
சத்ருக்னன்
பணிவுடன் கூறினான்; "சேனாபதி! வாதாபிப் படைகளின் திக்விஜயம்
என்று நான் கூறியது என்னுடைய சொந்த மொழியல்ல. வாதாபி நகரத்தின்
பிரதான நாலு வீதிச் சந்திப்பிலே ஒரு நெடிதுயர்ந்த ஜயஸ்தம்பம்
நாட்டியிருப்பதைப் பார்த்தேன். அந்த ஜயஸ்தம்பத்திலே பிராகிருத
மொழியில் எழுதியிருக்கும் மொழிகளையும் படித்தேன். கிட்டத்தட்ட
அதில் எழுதியிருப்பதை ஞாபகம் உள்ள வரை அப்படியே சொல்லிப்
பார்க்கிறேன். "மகா ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ரணதுங்க சூர
சளுக்க குலதிலக சப்தலோக தேவேந்திர புலிகேசிச் சக்கரவர்த்தி
தென் திசையை நோக்கி விஜயம் செய்யப் புறப்பட்டுச் சென்று
மகேந்திர பல்லவனை வடபெண்ணைக் கரையில் முறியடிக்க, மகேந்திரன்
போரில் புறமுதுகிட்டோடிக் காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கிக்
கொள்ள, புலிகேசிச் சக்கரவர்த்தி மேலும் தெற்கு நோக்கித்
திக்விஜயம் கிளம்பிக் காவேரி நதிக்கு யானைப்பாலம் அமைத்துக்
கடந்து, அங்கே சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுவதற்குக்
காத்திருந்த சேர சோழ களப்பாள பாண்டிய மன்னர்களின் சிரங்களில்
தம் திருப்பாத கமலங்களை வைத்து அருள் புரிந்து,
திரும்புங்காலையில், காஞ்சிக் கோட்டையைப் பலங்கொண்டு தாக்க,
மகேந்திர பல்லவன் சரணாகதியடைந்து காப்பாற்ற வேண்டும் என்று
காலில் விழுந்து கெஞ்ச, அவ்விதமே மகேந்திரனுக்கு அருள்
புரிந்து, அவனுடைய உபசாரங்களையும் காணிக்கைப் பொருள்களையும்
ஏற்றுக் கொண்டு, தென்னாட்டின் திக்விஜயத்தைப் பூர்த்தி செய்து,
ஜயபேரிகை முழக்கி, வெற்றிச் சங்கு ஊதி, வாதாபி நகரத்துக்குத்
திரும்பி வந்தது சாலிவாகன சகாப்தம் நாளது ஆண்டு, திங்கள்,
தேதி; கடல் சூழ்ந்த நில உலகம் உள்ளவரையில் இந்த வாதாபி நகரமும்
இந்த திக்விஜய ஜயஸ்தம்பமும் சளுக்க சக்கரவர்த்தி குலமும்
என்றென்றைக்கும் நின்று நீடித்துப் பொருகித் தழைத்து
விளங்குவதாக!"
இவ்விதம்
சத்ருக்னன் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், "என்ன
பொய்! என்ன கர்வம்! அந்த ஸ்தம்பத்தை இடித்துத் தள்ளாமல்
விடுவதில்லை" என்றெல்லாம் கூறினார்கள். சிறிது அவர்கள் இடம்
கொடுத்ததும், சத்ருக்னன் மேலும் கூறினான்; "பிரபு அந்த
ஜயஸ்தம்பத்தில் இவ்விதம் நான் படித்ததும் என்னை நான் மறந்து
விட்டேன். ஸ்தம்பத்தை நோக்கி ஒரு உதை விடலாம் என்று எண்ணிக்
காலையும் தூக்கி விட்டேன். கடவுள் அருளால் நல்ல சமயத்தில்
எதற்காக வாதாபி நகருக்கு வந்தோம் என்பது ஞாபகம் வந்தது. ஏதோ
கால் தடுக்கி விழுந்தவனைப்போல் தொப்பென்று கீழே விழுந்து
சமாளித்துக் கொண்டேன். வீதியில் ஜனக்கூட்டம் 'ஜேஜே' என்று
இருந்தது. யாராவது பார்த்திருந்தால் விபரீதமாய்ப்
போயிருக்கும்!" என்று கூறி நிறுத்தினான்.
"சத்ருக்னா!
வாதாபிக்கு வந்த காரியம் உனக்கு நினைவில் இருந்தது பற்றிச்
சந்தோஷம். ஆனால் அதைப்பற்றி இன்னமும் நீ சொல்லவில்லை!" என்று
மாமல்லர் கோபம் தொனிக்கக் கூறினார். "பிரபு! மன்னிக்க
வேண்டும்; சளுக்கர்களின் பொய் சொல்லும் திறமைக்குச் சிறந்த
ஞாபகச்சின்னமான அந்த ஜயஸ்தம்பத்தை விட்டு மேலே கிளம்பிச்
சென்றேன். வாதாபி நகரின் மிதமிஞ்சிய ஐசுவரிய போகத்துக்கும்
வாதாபி மக்களின் படாடோப வாழ்க்கைக்கும் பல அறிகுறிகளைப்
பார்த்துக் கொண்டு போனேன். இந்தப் பெரிய நகரத்தில், கிழக்கு
மேற்கிலும் தெற்கு வடக்கிலும் குறைந்தது காத தூரமுள்ள இந்தப்
பிரம்மாண்டமான பட்டணத்தில், சிவகாமி அம்மையை எப்படித் தேடுவது,
யாரை விசாரிப்பது என்று சிந்தனை செய்து கொண்டே போனேன்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், அடுத்தாற் போல்
வந்த நாற்சந்தி வீதி முனையில் அம்மையைச் சந்தித்தேன்..."
"என்ன? நாற்சந்தி முனையிலா?" என்று பல குரல்கள் ஏக காலத்தில்
எழுந்தன.
"ஆம்; நாற்சந்தி
முனையிலேதான் பார்த்தேன். அம்மை அங்கே செய்து கொண்டிருந்த
காரியத்தைக் கேட்டால் நீங்கள் பெரும் ஆச்சரியப்படுவீர்கள்.
எனக்கும் பார்த்தவுடனே ஆச்சரியமாயிருந்தது; வேதனையாகக் கூட
இருந்தது. ஆனால், விசாரித்து வஷயம் தெரிந்து கொண்டதும்
அளவில்லாத பெருமை அடைந்தேன். பிரபு! தமிழகத்துப் பெண்குலத்தின்
பெருமையைச் சிவகாமி அம்மை நிலைநாட்டி விட்டார். நூறு காத
தூரத்துக்கு அப்பால் எதிரிகளின் கோட்டையில் அநாதையாகவும்
தன்னந்தனியாகவும் இருக்கும் நிலைமையில் அம்மையார் தமிழகத்துப்
பெண்குலத்தின் தயாள குணத்தை நிலை நாட்டியிருக்கிறார்..."
"சத்ருக்னா! ஏன் இப்படி வளைத்து வளைத்துப் பேசிக்
கொண்டிருக்கிறாய்? சிவகாமி என்ன காரியம் செய்து
கொண்டிருப்பதைப் பார்த்தாய்?" என்று மாமல்லர் கடுமையான குரலில்
கேட்டார். "பிரபு சொல்லி விடுகிறேன்; வாதாபி நகரின்
நாற்சந்தியில் சிவகாமி அம்மை நடனம் ஆடிக்கொண்டிருந்தார்....."
"ஆகா!", "இது என்ன?" "அவமானம்! அவமானம்!" "இதைத்தானா
தமிழகத்துக்குப் பெருமை என்று சொன்னாய், சத்ருக்னா!" என்று
தலைக்குத் தலை கூவினார்கள்.
"மன்னிக்க
வேண்டும்; கொஞ்சம் பொறுத்துக் கொண்டு மீதியையும் கேளுங்கள்.
சிவகாமி அம்மை ஒரு பெருங் கும்பலுக்கு மத்தியில் நின்று
ஆடுவதைப் பார்த்ததும் எனக்கும் சொல்ல முடியாத அவமானம்
உண்டாயிற்று. கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன.
கூட்டத்தில் நின்ற வாதாபி மக்கள் கொச்சையான பாஷையில் பேசிக்
கொண்ட அருவருப்பான வார்த்தைகளைக் கேட்டதும் என் காதுகள்
கொப்பளித்தன; ஓடிப் பாய்ந்து அம்மையின் முன் சென்று,
'நிறுத்துங்கள் இந்த அவமானத்தை!' என்று கூவ வேண்டும் என்பதாக
ஆத்திரம் உண்டாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயத்தில், நடனமாடிய
அம்மைக்குப் பின்னால் நின்றவர்கள் மீது என் பார்வை விழுந்தது,
ஆகா! அதை எப்படிச் சொல்வேன்? தமிழகத்தைச் சேர்ந்த ஸ்திரீ
புருஷர்கள் பலரை அங்கே கையைப் பின்னால் சேர்த்துக் கட்டி
நிறுத்தியிருந்தார்கள். அவர்களுக்கிடையே கையில் சாட்டை பிடித்த
யமகிங்கரர் போன்ற மனிதர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
அந்தக் காட்சியைக் கண்டதும் பிரமித்து நின்றுவிட்டேன். பிரமை
நீங்கிய பிறகு கூட்டத்திலிருந்தவர்களின் பேச்சுக்களை ஒற்றுக்
கேட்டும், சந்தேகம் தோன்றாதபடி விசாரித்தும், மேற்படி அதிசயக்
காட்சியின் காரணத்தை நன்கறிந்து கொண்டேன்..."
பிறகு
சத்ருக்னன், சிவகாமி அம்மை நாற்சந்தியில் நடனமாட நேர்ந்தது ஏன்
என்னும் காரணத்தைத் தான் தெரிந்து கொண்டபடி அவர்களுக்குக்
கூறினான். "தமிழகத்து ஆடவர் பெண்டிரைக் கொடுமையான சாட்டையடித்
தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே சிவகாமி நடனமாடுகிறாள்"
என்று தெரிந்ததும் மாமல்லர் முதலியவர்களுக்குத் தேகத்தில்
புளகாங்கிதம் உண்டாயிற்று. மேலே நடந்ததைப் பற்றி ஆவலுடன்
கேட்டார்கள். "இனிய கானத்தைக் கேட்ட நாகசர்ப்பத்தைப் போல் நான்
சிவகாமி அம்மையின் நடனத்தைப் பார்த்துக் கொண்டு பிரமித்து
நின்றேன். அம்மை நடனத்தை முடித்துச் சற்று ஆசுவாசப்படுத்திக்
கொண்டு திரும்பினார். திரும்பியதும் சில கண நேரம் அவருடைய
கண்களில் சொல்ல முடியாத வியப்பும் திகைப்பும் காணப்பட்டன.
"அவர் பார்த்த திசையை நானும் நோக்கினேன்; அங்கே யார் நின்றது
என்று நினைக்கிறீர்கள்?" "யார்? யார்?", "புலிகேசியா?" என்று
கேள்விகள் எழுந்தன. "இல்லை நம் சிநேகிதர் நாகநந்திதான்!"
என்றான் சத்ருக்னன்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம்
வளையற்காரன்
நாகநந்தி என்ற
பெயரைக் கேட்டவுடனே அங்கிருந்தவர் அனைவருக்கும் தூக்கி
வாரிப்போட்டது. மாமல்லர், "ஆஹா! புத்த பிக்ஷுவா? அப்படியானால்
குண்டோதரன் கூறிய செய்தி பொய்யா?" என்று சொல்லிய வண்ணம்
குண்டோதரனை நோக்கினார். "இல்லை, பிரபு! குண்டோதரன் கூறிய
செய்தி உண்மைதான். வாதாபிக்கு வரும் வழியில் பிக்ஷு வேங்கி
நகரத்துக்குத்தான் போனார். துரதிர்ஷ்டவசமாக நேற்றுத் திரும்பி
வந்துவிட்டார். அவருடைய வரவினால் நம்முடைய காரியம் ஒன்றுக்குப்
பத்து மடங்கு கடினமாகி விட்டது. இன்னும் இரண்டு நாளைக்கு
முன்னால் மட்டும் நாம் வந்திருந்தால்?...." என்றான்
சத்ருக்னன்.
"பிக்ஷு
நேற்றுத்தான் திரும்பி வந்தாரா? உனக்கு எப்படித் தெரியும்,
சத்ருக்னா!" என்று சேனாபதி பரஞ்சோதி வினவினார். நகரமெல்லாம்
அதைப்பற்றித்தான் பேச்சு, தளபதி! ஜனங்கள் பேசிக்
கொண்டதிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். புலிகேசியின் சகோதரன்
விஷ்ணுவர்த்தனன் சென்ற வருஷம் வேங்கி மன்னனாக முடிசூட்டிக்
கொண்டானல்லவா? எந்த வேளையில் மகுடாபிஷேகம் செய்து கொண்டானோ,
தெரியவில்லை; சில நாளைக்கு முன்பு அவன் மாண்டு போனான். அவனுடைய
மனைவியையும் ஆறு மாதத்துக் கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு
நாகநந்தி நேற்றுத் திரும்பி வந்தாராம்" என்று சத்ருக்னன்
கூறினான். "சளுக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் நெருங்கி விட்டது
என்று பல்லவேந்திரர் கூறியது வீண்போகவில்லை. விஷ்ணுவர்த்தனன்
எப்படி இறந்தானாம்?" என்று பரஞ்சோதி கேட்டார்.
"விஷ்ணுவர்த்தனன்
வேங்கிப் படைகளை முழுவதும் நாசம் செய்ய முடியவில்லை. நம்முடைய
சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியிருந்தபடி வேங்கிப் படைகள்
பின்வாங்கிச் சென்று கிருஷ்ணை கோதாவரி நதிக் கரைக் காடுகளில்
ஒளிந்து கொண்டிருந்தன. விஷ்ணுவர்த்தனன் முடி சூட்டிக்கொண்ட
பிறகு நாடெங்கும் கலகங்கள் மூண்டன. ஒளிந்திருந்த படை வீரர்கள்
அங்கங்கே திடீர்திடீரென்று கிளம்பித் தாக்கினார்கள்.
கலகத்தைத்தானே அடக்கப் போவதாக விருது கூறிக் கொண்டு
விஷ்ணுவர்த்தனன் கிளம்பினான். ஒரு சண்டையில் படுகாயமடைந்து
விழுந்தான். நாடெங்கும் கலகங்கள் அதிகமாயின. இந்த
சமயத்தில்தான் நாகநந்தியும் அங்கே போய்ச் சேர்ந்தார்.
விஷ்ணுவின் மனைவியையும் குழந்தையையும் கொண்டு வந்து
சேர்த்தார். விஷ்ணுவர்த்தனன் மனைவி துர்விநீதனுடைய மகள் என்பது
தங்களுக்குத் தெரியுமல்லவா, பிரபு?" "அதைப் பற்றியெல்லாம்
இப்போது என்ன கவலை, சத்ருக்னா? நாம் வந்த காரியத்தைப் பற்றிச்
சொல்லாமல் ஊர்க்கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே? மேலே
நடந்ததைச் சொல்லு!" என்றார் மாமல்லர்.
"நாகநந்தி
பிக்ஷுவைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்த சிவகாமி
அம்மை, சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு பல்லக்கில் போய்
ஏறினார். பல்லக்கைச் சற்றுத் தூரம் நான் தொடர்ந்து சென்றேன்.
ஆரவாரமின்றி அமைதி குடிகொண்டிருந்த ஒரு வீதிக்குள் பல்லக்குச்
சென்று அழகான மாளிகை ஒன்றின் வாசலில் நின்றது. சிவகாமி அம்மை
பல்லக்கிலிருந்து இறங்கி அந்த மாளிகைக்குள்ளே போனார். வீதி
முனையிலேயே நான் கொஞ்ச நேரம் நின்று என்ன செய்யலாம் என்று
யோசித்தேன். பிறகு மாளிகை வாசலை நெருங்கினேன். காவலாளிகள்
இருவர் அங்கு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'காஞ்சி
நகரத்து நாட்டியப் பெண் இருப்பது இந்த வீட்டிலே தானே?' என்று
கேட்டேன். "ஆமாம்! எதற்காகக் கேட்கிறாய்?" என்றார்கள். 'நான்
வளைச் செட்டி; அழகான வளைகள் கொண்டு வந்திருக்கிறேன்,
அம்மையிடம் காட்ட வேண்டும்' என்றேன். 'இரவு நேரத்தில் இந்த
வீட்டுக்குள் யாரும் புகுவதற்கு அனுமதியில்லை, நாளைப் பகலில்
வா!' என்றார்கள். சற்று நேரம் அவர்களுடன் வம்பு பேசிப் பல
விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சிவகாமி அம்மையும், ஒரு தோழியும்
சமையற்காரியும் மட்டும் அந்த வீட்டுக்குள் இருப்பதாகவும், வேறு
யாரும் இல்லை, வருவதுமில்லையென்பதாகவும் தெரிந்து கொண்டேன்.
ஒரே ஒரு தடவை புலிகேசிச் சக்கரவர்த்தி அங்கு வந்து இராஜ
சபையில் நடனம் ஆடும்படி கேட்டாராம். அம்மை அதை மறுத்து
விட்டபடியால் இம்மாதிரி வாதாபி வீதிகளில் தினம்
நாட்டியமாடும்படி தண்டனை விதித்தாராம். இதை அறிந்ததும்
எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. மனத்திற்குள்ளே அந்தக்
கொடுமனம் படைத்த ராட்சதப் பதரைத் திட்டிக்கொண்டு கிளம்பினேன்.
வீதி முனைக்குச் சென்றதும் ஒரு பக்கத்திலிருந்து தீவர்த்திப்
பிடித்த காவலர்கள் புடைசூழ ஒரு பல்லக்கு வருவதைக் கண்டேன். ஒரு
வீட்டுத் திண்ணையில் தூணின் பின்னால் ஒளிந்து கொண்டு
பல்லக்கில் வருவது யார் என்று கவனித்தேன். நான் எதிர்
பார்த்தது போலவே நாகநந்தி பிக்ஷுதான் பல்லக்கில்
இருந்தார்...."
அப்போது
நறநறவென்று, மாமல்லர் பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்டது.
சேனாபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "சத்ருக்னா! ஏன் கதையை
வளர்த்திக் கொண்டே போகிறாய்? அம்மையைச் சந்தித்துப் பேசினாயா?
ஏதாவது செய்தி உண்டா? அதைச் சொல்லு!" என்றார். பரஞ்சோதியைச்
சிறிது கோபமாக மாமல்லர் பார்த்துவிட்டு, "சத்ருக்னா! எதையும்
விடவேண்டாம், நாகநந்தி எங்கே போனார்? சிவகாமியின்
வீட்டுக்குள்ளேயா?" என்று வினவினார். "ஆம், பிரபு! அம்மையின்
மாளிகைக்குள்தான் போனார். ஒரு நாழிகை நேரம் வீட்டுக்குள்ளே
இருந்துவிட்டு வௌியேறினார். அந்த ஒரு நாழிகை நேரமும் நானும்
அந்த வீதியிலேயே சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒரு தடவை வீட்டு
வாசலுக்கு அருகில் சென்று காவலரில் ஒருவனிடம், 'சமீபத்தில்
சத்திரம் சாவடி எங்கேயாவது இருக்கிறதா?' என்று விசாரித்தேன்.
அப்போது உள்ளே சிவகாமி அம்மை புத்த பிக்ஷுவின் தலையில்
நெருப்புத் தணலைக் கொட்டிக் கொண்டிருந்தார். அவ்வளவு கோபமாக
அவர் பேசியது என் காதில் விழுந்தது. அதில் எனக்குப் பரம
திருப்தி ஏற்பட்டது..."
"இங்கே
எல்லோருக்கும் அப்படித் தான்!" என்றான் குண்டோதரன். "அதே
வீதியில் இருந்த ஒரு சத்திரத்தில் படுத்து இரவு நிம்மதியாகத்
தூங்கினேன். இன்று பொழுது விடிந்து சற்று நேரம் ஆனதும்
அம்மையின் மாளிகைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் சிவகாமி
அம்மைக்கு ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த
தோழியை ஏதோ காரியமாக உள்ளே போகச் சொல்லிவிட்டு, "சத்ருக்னா!
இது என்ன? காஞ்சிக்கு நீ போகவில்லையா? என்னைப் பின்தொடர்ந்தே
வந்துவிட்டாயா?" என்று கேட்டார். "இல்லை, அம்மணி! காஞ்சிக்குப்
போய் மாமல்லரிடம் தாங்கள் கூறிய செய்தியைச் சொன்னேன். அவரும்
வந்திருக்கிறார், சேனாபதியும் வந்திருக்கிறார்!" என்றேன்.
இதைக் கேட்டதும்
அம்மை உற்சாகமும் பரபரப்பும் அடைந்து, 'சைனியம் எங்கே
இறங்கியிருக்கிறது?' என்று கேட்டார். சைனியத்தோடு
வரவில்லையென்றும், மாமல்லரோடு சேனாபதியும் கண்ணபிரானும்
வந்திருக்கிறார்கள் என்றும், கோட்டைக்கு வௌியே இந்த
மலையடிவாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தேன்.
நாளை அமாவாசை இரவில் எல்லோரும் வருகிறோம் என்றும், தோழிப்
பெண்ணை எங்கேயாவது அனுப்பிவிட்டு நம்முடன் புறப்பட
ஆயத்தமாயிருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டு வந்தேன்!"
என்று சத்ருக்னன் முடித்தான். "சத்ருக்னா! சிவகாமி முடிவாக
என்ன சொன்னாள்? ஏதேனும் செய்தி உண்டா?" என்று மாமல்லர்
கேட்டார். "ஒன்றுமில்லை, பிரபு! அம்மை அதிகமாகப் பேசாமல்
அமாவாசை இரவு நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொல்லி
எனக்கு விடை கொடுத்தார் அவ்வளவுதான்!" இதைக் கேட்ட மாமல்லர்
சிந்தனையில் ஆழ்ந்தார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம்
சந்தேகம்
அமாவாசை அன்று
இரவு சிவகாமி தன்னுடைய மாளிகையில் தன்னந்தனியாக
உட்கார்ந்திருந்தாள். அவளுக்குத் துணையாயிருந்த தோழி
நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய அன்னையைப் பார்த்துவிட்டு
வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தமையால், அதை வியாஜமாகக்
கொண்டு அன்றிரவு அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டாள். இப்போது
நுந்தா விளக்கு ஒன்றே சிவகாமிக்குத் துணையாக எரிந்து
கொண்டிருந்தது. அவளுடைய உள்ளமோ பல்வேறு சிந்தனைகளில்
ஆழ்ந்திருந்தது. மாமல்லர் வரப்போகிறார் என்று எண்ணியபோதெல்லாம்
அவளுடைய இருதயம், மேலெழும்பி வந்து தொண்டையை அடைத்துக்
கொண்டது. ஆத்திரமும் ஆங்காரமும் ஒரு பக்கத்தில் பொங்கின.
துக்கமும் ஆர்வமும் இன்னொரு புறத்தில் பெருகின.
மாமல்லரிடம்
வைத்த காதலினாலல்லவா இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஆளானோம் என்ற
எண்ணம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. தனது நிலைமைக்குகந்த
சிற்பியின் மகன் ஒருவனைக் காதலித்துக் கலியாணம் செய்து
கொண்டிருந்தால், தான் இந்த அவகேட்டுக்கெல்லாம் ஆளாகியிருக்க
வேண்டியதில்லையல்லவா? காடு சூழ்ந்த தனி வீட்டில் வசித்த தன்னை
மாமல்லர் ஏன் தேடி வந்து இப்படிப் பித்துப் பிடிக்கச் செய்ய
வேண்டும்? அப்படிச் செய்தவர் மண்டபப்பட்டுக் கிராமத்தில் ஏன்
தன்னைத் தன்னந்தனியாக விட்டு விட்டுப் போக வேண்டும்? மாமல்லர்
மேலுள்ள ஆசை காரணமாகத் தானே காஞ்சிக்கு அவள் வர நேர்ந்தது!
மறுபடியும் அவருடைய காதல் காரணமாகத் தானே கோட்டையிலிருந்து
சுரங்க வழியாக வௌிவர நேர்ந்தது! ஆகா! தன்னுடைய
துன்பங்களுக்கெல்லாம் காரணம் அவர் தான்! இப்படியாக மாமல்லரிடம்
ஒருபுறம் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு வந்தாள் என்றாலும்,
நேரம் ஆக ஆக, 'ஐயோ! அவர் வரவில்லையே?' என்ற ஏக்கமும் ஒருபுறம்
அதிகமாகி வந்தது.
அர்த்த
ராத்திரியில் சிவகாமி ஆழ்ந்த சிந்தனையிலிருந்த போது திடீரென்று
அவள் எதிரில் தாடியும் மீசையுமான முகத் தோற்றமுடைய இருவரைக்
கண்டதும் திகிலடைந்தவளாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஆனாலும்
அப்படி வந்தவர்களுடைய முகத்தோற்றம் பயங்கரத்தை விளைவிப்பதாக
இல்லை. எப்போதோப் பார்த்த முகங்களாகவும் தோன்றின. "யார்
நீங்கள்? இந்த நள்ளிரவு வேளையில் எதற்காக இங்கே வந்தீர்கள்?"
என்று அதிகாரத் தொனியில் கேட்டாள். "சிவகாமி! என்னைத்
தெரியவில்லையா?" என்று மாமல்லரின் குரல் கேட்டதும்,
சிவகாமியின் முகத்தில் வியப்புடன் கூடிய புன்னகை மலர்ந்தது.
எத்தனையோ
காலத்துக்குப் பிறகு சிவகாமியின் முகத்தில் தோன்றிய அந்தப்
புன்னகை அவளுடைய முகத்திற்கு எல்லையற்ற வனப்பை அளித்தது.
ஆனால், அந்த முகமலர்ச்சியானது மாமல்லரின் உள்ளத்தில்
மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை. 'ஆ! இவள் இவ்விடம்
உற்சாகமாகத்தான் இருக்கிறாள்!' என்ற எண்ணம் அவர் அகத்தில்
உண்டாகி முகம் சுருங்கும்படிச் செய்தது. "பிரபு! தாங்கள்தானா?"
என்று உணர்ச்சியினால் கம்மிய குரலில் கேட்டுக் கொண்டு சிவகாமி
எழுந்தாள். "ஆமாம், நான்தான்! வாதாபிச் சக்கரவர்த்தியின்
மாளிகையில் வைபோகமாக வாழும்போது பழைய மனிதர்களைப் பற்றி எப்படி
ஞாபகம் இருக்கும்?" என்று மாமல்லர் கடுமையான குரலில் கூறினார்.
அந்த கொடிய மொழிகளைக் கேட்ட சிவகாமி தக்பிரமையடைந்தவள் போல்
மாமல்லரைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள். இவர் உண்மையில்
மாமல்லர்தானா அல்லது வேஷதாரியா என்று அவளுக்கு ஐயம் தோன்றி
விட்டது.
இப்படி
ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு சும்மா நின்றதைக்
கவனித்த தளபதி பரஞ்சோதி, அந்தச் சந்தர்ப்பத்தில் தாம்
அங்கிருப்பது அனுசிதம் என்பதை உணர்ந்தார். உடனே மாமல்லரின்
காதருகில் வந்து, "பிரபு! காலதாமதம் செய்யக்கூடாது! அதிக நேரம்
நமக்கில்லை" என்று சொல்லி விட்டு, அப்பால் முன்கட்டுக்குச்
சென்றார். பரஞ்சோதி மறைந்த பிறகு மாமல்லர், "ஓகோ! இன்னும்
ஞாபகம் வரவில்லை போலிருக்கிறது. போனால் போகட்டும், உன் தந்தை
ஆயனரையாவது ஞாபகமிருக்கிறதா, சிவகாமி? ஆடல் பாடல் விநோதங்களில்
அவரையும் மறந்து விட்டாயா?" என்றார்.
சிவகாமியின்
புருவங்கள் நெறிந்தன, கோபத்தினால் சிவந்த கண்கள் அகல விரிந்தன;
இதழ்கள் துடித்தன. உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தையெல்லாம்
பெரு முயற்சி செய்து அடக்கிக் கொண்டு, "இளவரசே! என் தந்தை
சௌக்கியமாயிருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? எப்படி
இருக்கிறார்?" என்று கேட்டாள். "ஆம்; ஆயனர்
சௌக்கியமாயிருக்கிறார். கால்களில் ஒன்று முறிந்து, ஏக
புதல்வியை இழந்தவர் எவ்வளவு சௌக்கியமாயிருக்கலாமோ, அவ்வளவு
சௌக்கியமாயிருக்கிறார். 'சிவகாமி எங்கே? என் அருமை மகள்
எங்கே?' என்று வந்தவர் போனவரையெல்லாம் கேட்டுக்
கொண்டிருக்கிறார்; சிவகாமி புறப்படு, போகலாம்!"
சிவகாமியின்
கண்களில் நீர் ததும்பியது; ஆயினும் அவள் மாமல்லருடன்
புறப்படுவதற்கு யத்தனம் செய்வதாகக் காணவில்லை. "சிவகாமி! ஏன்
இப்படி நிற்கிறாய்! உன் தந்தையை உயிரோடு காண விரும்பினால் உடனே
புறப்படு!" என்றார் மாமல்லர். இன்னமும் சிவகாமி அசையாமல்
சும்மா நின்றாள். "இது என்ன, சிவகாமி! காஞ்சிக்கு வர உனக்கு
இஷ்டமில்லையா? ஆகா! அப்போதே சந்தேகித்தேன், அது
உண்மையாயிற்று!" என்று மறுபடியும் மாமல்லர் குத்தலாகச்
சொன்னார்.
சிவகாமியின்
மௌனம் அப்போது கலைந்தது, "பிரபு! என்ன சந்தேகித்தீர்கள்?"
என்று கேட்டாள். "அதைப் பற்றி இப்போது என்ன? பிறகு
சொல்கிறேன்." "என்ன சந்தேகித்தீர்கள்! சொல்லுங்கள் பிரபு!"
"இப்போதே சொல்ல வேண்டுமா?" "அவசியம் சொல்ல வேண்டும்."
"வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையில் சுகபோகத்துடன்
வாழ்ந்தவர்களுக்கு என்னோடு புறப்பட்டு வர இஷ்டமாயிராது என்று
சந்தேகித்தேன்." இதைக் கேட்டதும் சிவகாமி சிரித்தாள்! நள்ளிரவு
நேரத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி மாமல்லரின் காதுக்கு
நாராசமாயிருந்தது. சிரிப்பை நிறுத்தியதும் சிவகாமி உறுதியான
குரலில் கூறினாள். "ஆம் பல்லவ குமாரா! உங்கள் சந்தேகம்
உண்மைதான். எனக்கு இந்த மாளிகையின் சுகபோகத்தைவிட்டு வர
இஷ்டமில்லை. வாதாபி நகரை விட்டு வரவும் மனம் இல்லை; நீங்கள்
போகலாம்!"
இவ்விதம் சிவகாமி
கூறியதும், மாமல்லர் கண்களில் தீப்பொறி பறக்க, "ஆகா
பெரியவர்கள் கூறியிருப்பது எவ்வளவு உண்மை!" என்றார்.
"பெரியவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்?" "ஸ்திரீகள் சபல
சித்தமுடையவர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்." "அந்த உண்மையை
இப்போது கண்டு கொண்டீர்கள் அல்லவா? போய் வாருங்கள், பிரபு."
"ஆகா! உன்னைத் தேடி நூறு காத தூரம் வந்தேனே? என்னைப் போன்ற
புத்திசாலி யார்?" என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டார்
மாமல்லர். பிறகு, "சிவகாமி நீ எனக்காக வரவேண்டாம். உன்
தந்தைக்காகக் கிளம்பிவா! உன் தோழி கமலிக்காகப் புறப்பட்டு வா!
உன்னைக் கட்டாயம் அழைத்து வருவதாக அவர்களிடம் சபதம்
செய்துவிட்டு வந்தேன்!" என்றார் மாமல்லர்.
"நானும் ஒரு
சபதம் செய்திருக்கிறேன், பிரபு!" "நீயும் சபதம்
செய்திருக்கிறாயா? என்ன சபதம்?" "தங்களிடம் எதற்காகச் சொல்ல
வேண்டும்?" "சொல்லு சிவகாமி! சீக்கிரம் சொல்!" "சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை; சபல புத்தியுள்ள அபலைப் பெண்ணின்
சபதந்தானே?" "பாதகமில்லை, சொல்! நேரமாகிறது!" "இந்த வாதாபி
நகரம் தீப்பற்றி எரிந்து, இந்நகரின் வீடுகள் எல்லாம்
சாம்பலாவதையும், வீதிகளிலெல்லாம் இரத்த வெள்ளம் ஓடுவதையும்,
நாற்சந்திகள் பிணக்காடாய்க் கிடப்பதையும் கண்ணாலே பார்த்த
பிறகுதான் இந்நகரை விட்டுக் கிளம்புவேன் என்று சபதம்
செய்திருக்கிறேன்!" "என்ன கோரமான சபதம்! இப்படி ஒரு சபதத்தை
எதற்காகச் செய்தாய் சிவகாமி?"
"பிரபு! இந்த
நகருக்கு வரும் வழியில் நான் பார்த்த கோரக் காட்சிகளையெல்லாம்
நீங்கள் பார்த்திருந்தால் எதற்காகச் சபதம் செய்தேன் என்று
கேட்க மாட்டீர்கள். இந்த வாதாபி நகரின் நாற்சந்திகளிலே
தமிழ்நாட்டு ஸ்திரீ புருஷர்கள் கட்டப்பட்ட கரங்களுடனே கொண்டு
வந்து நிறுத்தப்பட்டதையும், சாட்டையினால் அவர்கள்
அடிக்கப்பட்டதையும், அவர்களுக்கு முன்னால் பல்லவ தேசத்தின் நடன
கலாராணி நாட்டியமாடியதையும் தாங்கள் பார்த்திருந்தால், சபதம்
ஏன் எதற்காக என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்." "சிவகாமி!
அதையெல்லாம் நான் நேரில் பார்க்காவிட்டாலும், எனக்குத்
தெரிந்தவைதான். இருந்தாலும் நீ இவ்வளவு கடுமையான சபதம்
எடுத்துக் கொள்ளலாமா?"
"பிரபு! பல
வருஷங்களுக்கு முன்னால், பல யுகங்களுக்கு முன்னால், என்னை
இளவரசர் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னார். என்னைத் தமது
பட்டமகிஷியாக்கிக் கொள்வதாக வாக்குறுதி கூறினார். என்னை ஒரு
நாளும் மறப்பதில்லை என்று வேலின் மேல் ஆணையாக வாக்களித்தார்.
தாமரைக் குளக்கரையில் பூரண சந்திரனின் நிலவில், 'இந்த
ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் நீயே என் வாழ்க்கைத் துணைவி'
என்று சத்தியம் செய்தார். அவர் சுத்தவீரர் என்றும், சொன்ன சொல்
தவறாதவர் என்றும் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை காரணமாகவே
அத்தகைய சபதம் செய்தேன்!" என்று சிவகாமி கம்பீரமான குரலில்
கூறி மாமல்லரை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை கூரிய
வேலைப்போல் மாமல்லருடைய நெஞ்சிலே பாய்ந்து அவரை நிலைகுலையச்
செய்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்துநாலாம் அத்தியாயம்
விபரீதம்
மாமல்லர் தமது
நிலை குலைந்த நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு, கனிவு ததும்பிய
கண்களால் சிவகாமியை நோக்கினார். "சிவகாமி! உன்னுடைய நம்பிக்கை
வீணாய்ப் போகவில்லையே! உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றத்தானே வந்திருக்கிறேன்? நூறு காத தூரம் காடும்
மலையும் நதியும் கடந்து வந்திருக்கிறேன். பசி பட்டினி பாராமல்
இராத் தூக்கமில்லாமல் வந்திருக்கிறேன். நான் ஏறி வந்த குதிரை
ஏறக்குறையச் செத்து விழும்படி அவ்வளவு வேகமாய் வந்தேன். சற்று
முன்பு நான் கூறிய கடுமொழிகளையெல்லாம் மறந்துவிடு. யார் மேலேயோ
வந்த கோபத்தை உன் மீது காட்டினேன். இத்தனை நாளைக்குப் பிறகு
நம்முடைய சந்திப்பு இப்படிக் கோபமும் தாபமுமாயிருக்குமென்று
நான் நினைக்கவில்லை. எவ்வளவோ ஆசையோடு எத்தனையோ மனக்கோட்டை
கட்டிக் கொண்டு வந்தேன்! - போகட்டும், சிவகாமி! புறப்படு,
போகலாம்!"
"பிரபு!
மன்னியுங்கள்! இப்போது நான் வரமாட்ேன், என் சபதம் நிறைவேறிய
பிறகுதான் வருவேன்." "சிவகாமி! இது என்ன வார்த்தை? என்னுடன்
வருவதற்கு உனக்கு விருப்பம் இல்லையா, என்ன? தாமதிக்க
நேரமில்லை." "இளவரசே! என் சபதத்தை நிறைவேற்றி வையுங்கள்.
பாதகன் புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரத்தைச் சுட்டெரித்து
விட்டு, உங்கள் அடிமையின் கையைப் பிடித்து அழைத்துச்
செல்லுங்கள். அப்போது நிழல் போல் உங்களைத் தொடர்ந்து வருவேன்."
"சிவகாமி! உன் சபதத்தை அவசியம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால்
அதை நிறைவேற்றுவது எளிதல்ல. பெரும்படை திரட்டிக் கொண்டு, தக்க
ஆயுத பலத்தோடு வரவேண்டும். இதற்கெல்லாம் அவகாசம் வேண்டும்; பல
வருஷங்கள் ஆகலாம்..."
"பல்லவ
குமாரர்தானா இப்படிப் பேசுகிறீர்கள்? வீரமாமல்லரா இப்படிப்
பேசுகிறீர்கள்? புலிகேசியைக் கொன்று வாதாபியை வெற்றி கொள்வது
அவ்வளவு கடினமான காரியமா? இந்தப் பேதை தெரியாமல் சபதம் செய்து
விட்டேனே?... பல்லவ குமாரா! தாங்கள் காஞ்சிக்குப் போய் இராஜ்ய
காரியங்களைக் கவனியுங்கள். இந்த ஏழைச் சிற்பியின்
மகளைப்பற்றிக் கவலை வேண்டாம்! நான் என்ன பாண்டிய ராஜகுமாரியா,
சோழன் திருமகளா தாங்கள் கவலைப்படுவதற்கு? நான் எக்கேடு
கெட்டால் தங்களுக்கென்ன? என் சபதம் எப்படிப் போனால் என்ன?"
என்று சிவகாமி கசப்புடன் பேசினாள். "சிவகாமி! நீதான்
பேசுகிறாயா? நீ பழைய சிவகாமிதானா?" என்றார் மாமல்லர்.
"இல்லை, பிரபு!
நான் பழைய சிவகாமி இல்லை; புதிய சிவகாமியாகி விட்டேன். என்
வாழ்க்கை கசந்துவிட்டது, என் மனம் பேதலித்து விட்டது. இந்தப்
புதிய சிவகாமியை மறந்து விடுங்கள். ஒரு சமயம் தங்களிடம்,
'அடியாளை மறக்க வேண்டாம் என்று வரம் கேட்டேன். இப்போது,
'மறந்துவிடுங்கள்' என்று வரம் கேட்கிறேன்!" என்றாள் சிவகாமி.
"சிவகாமி! கேள்! நீ புதிய சிவகாமியானாலும் நான் பழைய
மாமல்லன்தான். உன்னைப் பிரிந்திருந்த காலத்திலெல்லாம் ஒரு
கணமேனும் உன்னை நான் மறக்கவில்லை. இரவிலும், பகலிலும்,
கனவிலும் நனவிலும், அரண்மனையிலும் போர்க்களத்திலும், என்ன
செய்தாலும் யாரோடு பேசினாலும், என் உள்ளத்தைவிட்டு நீ ஒரு
கணமும் அகலவில்லை. உன் பேரில் நான் கொண்ட பரிசுத்தமான காதலின்
மேல் ஆணை வைத்துச் சொல்லுகிறேன். நீ செய்த சபதத்தை நிறைவேற்றி
வைக்கிறேன். இப்போது என்னோடு புறப்படு!" என்று மாமல்லர்
உணர்ச்சி மிகுதியினால் நாத் தழு தழுக்கக் கூறினார்.
கல்லையும் கனிய
வைக்கக்கூடிய மேற்படி மொழிகள் சிவகாமியின் மனத்தைக் கனியச்
செய்யவில்லை. பட்ட கஷ்டங்களினாலும் பார்த்த பயங்கரங்களினாலும்
கல்லினும் கடினமாகியிருந்தது அவள் உள்ளம். "காதலாம் காதல்!
காதலும் கல்யாணமும் இங்கே யாருக்கு வேண்டும்?" என்றாள்
சிவகாமி. "நிஜமாகத்தான் சொல்கிறாயா? காதலும் கலியாணமும் உனக்கு
வேண்டாமா?" என்று மாமல்லர் ஆத்திரத்தோடு கேட்டார்.
"நிஜமாகத்தான் சொல்கிறேன்; காதலும் கலியாணமும் எனக்கு
வேண்டாம்; பழிதான் வேண்டும். வஞ்சம் தீர்க்க வேண்டும்;
புலிகேசி சாகவேண்டும். வாதாபி எரிய வேண்டும், வாதாபி மக்கள்
அலறிப் புடைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட வேண்டும்
வேறொன்றும் எனக்கு வேண்டாம்!"
மாமல்லர்
மீண்டும் நயமான வார்த்தைகள் கூறினார். "சிவகாமி! உன்
விருப்பத்தைத் தெரிந்து கொண்டேன். உன்னைக் காட்டிலும் நூறு
மடங்கு என் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறது. உன்னைச்
சிறைப்பிடித்து வந்து அவமானப்படுத்திய பாதகனைப் பழிவாங்க என்
மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் உன் சபதத்தை
நிறைவேற்றி வைக்கிறேன். நீ மட்டும் இப்போது என்னுடன்
புறப்பட்டு வந்துவிடு!" "வரமாட்டேன், இளவரசே! ஆயனச்
சிற்பியாரிடம், அவருடைய மகள் இறந்து போய்விட்டாள் என்று சொல்லி
விடுங்கள்!" "சிவகாமி! இது என்ன பிடிவாதம்? கடைசி
வார்த்தையாகச் சொல்லுகிறேன், கேள்! உன்னுடைய சபதத்தை நான்
கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால், இந்தச் சமயம் என்னுடன்
நீ வராவிட்டால் என் மனம் கசந்து போய்விடும். என் அன்பை அடியோடு
இழந்து விடுவாய்!"
"அன்பு வேண்டாம்
சுவாமி! சபதத்தை நிறைவேற்றுங்கள்." "பெண்ணே! பல்லவ குலத்தினர்
ஒரு நாளும் சொன்ன சொல் தவறுவதில்லை." "இளவரசே! ஆயனச்
சிற்பியின் மகளும் சொன்ன சொல்லை மாற்றுவதில்லை!" "ஆகா! இதென்ன
அகம்பாவம்?" என்றார் மாமல்லர். "ஆம், இளவரசே! எனக்கு
அகம்பாவந்தான்; ஏன் இருக்கக் கூடாது? பாண்டியன் மகளுக்கும்,
சேர ராஜகுமாரிக்குந்தான் அகம்பாவம் இருக்கலாமா? நான்
சிற்பியின் மகள்தான், ஆனாலும் செந்தமிழ் நாட்டு வீரப்பெண்
குலத்திலே பிறந்தவள். காதலன் கழுத்திலே மாலை சூட்டிப்
போர்க்களத்துக்கு அனுப்பிய மாதர் வம்சத்தில் பிறந்தவள்.
கண்ணகித் தெய்வம் வாழ்ந்த நாட்டில் நானும் பிறந்தேன். எனக்கு
ஏன் அகம்பாவம் இருக்கக்கூடாது, பிரபு?"
சிவகாமியின்
மனத்தைத் திருப்ப மேலே என்ன சொல்லலாம் என்று அவர்
சிந்திப்பதற்குள், சேனாபதி பரஞ்சோதி பரபரப்புடன் உள்ளே
வந்தார், மாமல்லரின் காதில் ஏதோ சொன்னார். மாமல்லரின்
முகத்தில் ஒரு கணம் திகிலின் அறிகுறி தோன்றியது; மறுகணம்
சமாளித்துக் கொண்டார். "சேனாபதி! இந்த மூடப் பெண்ணின்
பிடிவாதத்துக்கு முன்னால் நம்முடைய திட்டமெல்லாம் சின்னா
பின்னமாகிவிடும் போலிருக்கிறது!" என்றார். சிவகாமியின் பக்கம்
கோபமாகத் திரும்பி, "பெண்ணே! நீ வருவாயா? மாட்டாயா? உன்னுடன்
வாதமிட்டுக் கொண்டிருக்க நேரமில்லை!" என்றார் மாமல்லர்.
அப்போது சேனாபதி
பரஞ்சோதி குறுக்கிட்டு, "அம்மணி, எங்களுடைய நிலைமையைத்
தெரிந்து கொள்ளுங்கள். எதிரிகளின் கோட்டைக்குள்ளே தனியாக நாலு
பேர் வந்திருக்கிறோம். கோட்டைச் சுவர் மீது நூலேணியுடன்
கண்ணனும் அவன் தந்தையும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோட்டைக்கு வௌியில் இந்த நிமிஷத்தில், நரபலி கொடுக்கும்
காபாலிகர்கள் எங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயோ
அந்தக் கள்ள பிக்ஷு நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்டு, இதோ
வீதி முனையில் வந்து கொண்டிருக்கிறார். தேவி! இந்த நிலைமையில்
தாங்கள் இப்படி வீண் விவாதம் வளர்த்தக் கூடாது..." என்றார்.
'பெண் புத்தி
பேதமையுடைத்து' என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?
அது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சிவகாமி அப்போது பேசினாள்.
"ஐயா! பல்லவ குமாரரும் அவருடைய அருமைத் தோழரும் கேவலம் மண்டை
ஓட்டில் பிச்சை வாங்கும் காபாலிகருக்கும், காவித்துணி தரித்த
புத்த பிக்ஷுவுக்கும் பயந்து ஓடுவார்கள் என்பது இதுவரையில்
எனக்குத் தெரியாமலிருந்தது. அதற்காக என்னை மன்னியுங்கள்.
நீங்கள் தப்பிப் பிழைப்பதை நான் குறுக்கே நின்று
மறிக்கவில்லையே! தாராளமாகப் போகலாம்" என்றாள். பல்லவ
குமாரருக்குக் காலாக்னியையொத்த கோபம் வந்தது. "அடி பாதகி!
சண்டாளி! இதன் பயனை நீ அனுபவிப்பாய்!" என்று சீறினார். பின்னர்
பரஞ்சோதியைப் பார்த்து "சேனாபதி! இந்த வஞ்சகப் பாதகியின்
நோக்கம் இப்போது தெரிந்தது. கள்ள பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக்
கொடுத்துவிட வேண்டும் என்பது இவள் எண்ணம், வாரும் போகலாம்!"
என்றார்.
அப்போது
பரஞ்சோதி, "பிரபு! மன்னிக்க வேண்டும், நான் எல்லாம் கேட்டுக்
கொண்டிருந்தேன். ஆயனர் புதல்வி அ்படி வஞ்சகம் செய்யக் கூடியவர்
அல்ல. தான் செய்த சபதத்தை முன்னிட்டுத்தான் 'வர மாட்டேன்'
என்கிறார்...." என்பதற்குள்ளே, மாமல்லர் குறுக்கிட்டார்.
"தளபதி பெண்களின் வஞ்சகம் உமக்குத் தெரியாது. சபதமாம், சபதம்!
வெறும் பொய்! வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையை விட்டு
வருவதற்கு இவளுக்கு விருப்பமில்லை, வாரும் போகலாம்!" என்று
மாமல்லர் சேனாபதியின் கையைப்பற்றி இழுக்கத் தொடங்கினார்.
தளபதி பரஞ்சோதி
நகராமல் நின்றார்; "பிரபு! இது நியாயமல்ல; சிவகாமி அம்மையை
இங்கு விட்டுப் போவது பெரும் பிசகு!... அவராக வருவதற்கு
மறுத்தால், நாம் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போக
வேண்டியதுதான்!..." என்றார். இந்த வார்த்தைகள் காதில்
விழுந்ததும் சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. ஒரு சமயம்
மாமல்லர் தன்னை விஷநாகம் தீண்டாமல் கட்டிக் காத்ததாகக் கனவு
கண்டதைப் பற்றிச் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 'அந்தக்
கனவு இப்போது மெய்யாகாதா? சேனாதிபதியின் யோசனைப்படி மாமல்லர்
தன்னை நெருங்கி வந்து கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போக
மாட்டாரா?" என்று எண்ணினாள். ஆகா! அம்மாதிரி மாமல்லர்
செய்திருந்தால், பின்னால் எவ்வளவு விபரீதங்கள் நேராமல்
போயிருக்கும்!
விதிவசத்தினால்
மாமல்லர் அவ்வாறு செய்ய மனங்கொள்ளவில்லை. "வேண்டாம், சேனாபதி!
வேண்டாம், இஷ்டமில்லாத பெண்ணை நாம் பலவந்தப்படுத்தி அழைத்துப்
போக வேண்டியதில்லை. இவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு
சமயம் நிறைவேற்றுவேன். பிறகு இஷ்டமானால் வரட்டும், அதுவரையில்
அந்தக் கள்ள பிக்ஷுவையே கட்டிக்கொண்டு அழட்டும்!..." என்று
மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சத்ருக்னனும்
குண்டோதரனும் உள்ளே ஓடோடியும் வந்தார்கள். "பிரபு! பிக்ஷு வீதி
முனையில் வருகிறார். அவருடன் வந்த வீரர்களில் பாதிப் பேர்
வீட்டின் கொல்லைப் பக்கமாகப் போகிறார்கள்!" என்று சத்ருக்னன்
மொழி குளறிக் கூறினான். பரஞ்சோதி மறுபடியும் சிவகாமியின்
பக்கம் நோக்கிப் பரபரப்புடன், "அம்மா!..." என்றார். "வேண்டாம்,
தளபதி! வேண்டாம், இந்தக் கிராதகி நம்மைக் கள்ள பிக்ஷுவிடம்
காட்டிக் கொடுக்கத்தான் பார்க்கிறாள்! வாரும் போகலாம்!" என்று
மாமல்லர் இரைந்து கூறிப் பரஞ்சோதியின் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு அம்மாளிகையின் பின்புறமாக விரைந்தார். அடுத்த
கணம் அவர்கள் நால்வரும் சிவகாமியின் பார்வையிலிருந்து
மறைந்தார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம்
கத்தி பாய்ந்தது!
மாமல்லர்
முதலியோர் சென்ற பக்கத்தைச் சிவகாமி ஒரு கணம் வெறித்து
நோக்கினாள். மறுகணம் படீரென்று பூமியில் குப்புற விழுந்தாள்.
அவளுடைய தேகத்தை யாரோ கட்புலனாகாத ஒரு மாய அரக்கன் முறுக்கிப்
பிழிவது போலிருந்தது. உடம்பிலுள்ள எலும்புகள் எல்லாம்
நறநறவென்று ஒடிவது போலத் தோன்றியது. அவளுடைய நெஞ்சின் மேல் ஒரு
பெரிய மலையை வைத்து அமுக்குவது போலிருந்தது. அவளுடைய
குரல்வளையை ஒரு விஷநாகம் சுற்றி இறுக்குவது போலத் தோன்றியது.
ஒரு கணம் சுற்றிலும் ஒரே இருள் மயமாக இருந்தது. மறுகணம்
தலைக்குள்ளே ஆயிரமாயிரம் மின்னல்கள் பாய்ந்தன. வீடும்
விளக்கும் அவளைச் சுற்றிக் கரகரவென்று சுழன்றன. கீழே கீழே கீழே
இன்னும் கீழே அதலபாதாளத்தை நோக்கிச் சிவகாமி விழுந்து
கொண்டிருந்தாள். ஆகா! இப்படி விழுவதற்கு முடிவே கிடையாதா?
என்றென்றைக்கும் கீழே கீழே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானா?
"சிவகாமி!
சிவகாமி!" என்று எங்கேயோயிருந்து யாரோ அழைத்தார்கள்; அது
மாமல்லரின் குரல் அல்ல, நிச்சயம். முகத்தின் அருகே நாகப்பாம்பு
சீறுவது போல் சத்தம் கேட்டது. உஷ்ணமான மூச்சு முகத்தின் மீது
விழுந்தது. சிவகாமி கண்களைத் திறந்தாள்; ஐயோ! படமெடுத்தாடும்
சர்ப்பத்தின் முகம்! தீப்பிழம்பாக ஜொலித்த பாம்பின் கண்கள்!
இல்லை; இல்லை! நாகநந்தி பிக்ஷுவின் முகம். அவர் மூச்சுவிடும்
விஷக் காற்றுத்தான் தன்னுடைய முகத்தின் மேல் படுகிறது.
சிவகாமி ஒரு
பெரும் பிரயத்தனம் செய்து பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தாள்.
பிக்ஷுவை விட்டு விலகிச் சற்றுத் தூரத்துக்கு நகர்ந்து
சென்றாள். அவர் தேகமெல்லாம் படபடத்து நடுங்கியது. நாகநந்தி
அவளைக் கருணையுடன் பார்த்து, "பெண்ணே! உனக்கு என்ன நேர்ந்தது?
என்ன ஆபத்து விளைந்தது! ஏன் அவ்வாறு தரையிலே உணர்வற்றுக்
கிடந்தாய்? பாவம்! தன்னந் தனியாக இந்தப் பெரிய வீட்டில்
வசிப்பது சிரமமான காரியம்தான். உன்னுடைய தாதிப் பெண்ணைக்
காணோமே? எங்கே போய் விட்டாள்!..." என்று கேட்டவண்ணம் சுற்று
முற்றும் பார்த்தார்.
அப்போது அவர்
பார்த்த திக்கில் மாமல்லர் போகும் அவசரத்திலே விட்டு
விட்டுப்போன தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கிடப்பதைச் சிவகாமி
பார்த்துப் பெருந்திகிலடைந்தாள். நாகநந்தி அவற்றைக் கவனியாமல்
திரும்பிச் சிவகாமியின் அருகில் வந்து, "பெண்ணே! நான்
சொல்வதைக் கேள். உன்னுடைய நன்மைக்காகவே சொல்லுகிறேன்!" என்று
சொல்லிய வண்ணம் சிவகாமியின் ஒரு கரத்தைத் தன் இரும்பையொத்த
கரத்தினால் பற்றினார். அப்போது சிவகாமியின் உடம்பு மறுபடியும்
நடுங்கிற்று. கொடிய கண்களையுடைய நாக சர்ப்பம் படமெடுத்துத்
தன்னைக் கடிக்க வருவது போன்ற பிரமை ஒரு கணம் ஏற்பட்டது.
சட்டென்று சமாளித்துக் கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.
"ஆ! சிவகாமி! ஏன்
இப்படி என்னைக் கண்டு நடுங்குகிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு
செய்தேன்! உன்னிடம் உண்மையான அபிமானம் கொண்டதல்லாமல் உனக்கு
நான் ஒரு தீங்கும் செய்யவில்லையே! உன் தந்தையின் உயிரைக்
காப்பாற்றியதன்றி வேறொரு அபசாரமும் உனக்குச் செய்யவில்லையே?
ஏன் என்னை வெறுக்கிறாய்?" என்று பிக்ஷு கனிவு ததும்பும்
குரலில் கேட்டார். "சுவாமி! தங்களைக் கண்டு நான் பயப்படவும்
இல்லை; தங்களிடம் எனக்கு வெறுப்பும் இல்லை. தாங்கள் எனக்கு
என்ன தீங்கு செய்தீர்கள், தங்களை நான் வெறுப்பதற்கு? எவ்வளவோ
நன்மைதான் செய்திருக்கிறீர்கள்!" என்றாள் சிவகாமி. "சந்தோஷம்,
சிவகாமி! இந்த மட்டும் நீ சொன்னதே போதும். உன் தேகம் அடிக்கடி
நடுங்குகிறதே, அது ஏன்? உடம்பு ஏதேனும் அசௌக்கியமா?" என்று
வினவினார்.
"ஆம், அடிகளே!
உடம்பு சுகமில்லை!" என்றாள் சிவகாமி. "அடடா! அப்படியா? நாளைக்
காலையில் நல்ல வைத்தியனை அனுப்புகிறேன், ஆனால், இப்படி உடம்பு
அசௌக்கியமாயிருக்கும் போது உன்னை விட்டு விட்டு உன் தாதிப்பெண்
எங்கே போனாள்? எங்கேயாவது மூலையில் படுத்துத் தூங்குகிறாளா,
என்ன?" என்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தார் பிக்ஷு.
சற்றுத் தூரத்தில் தூணுக்குப் பின்னால் கிடந்த தலைப்பாகையும்
அங்கவஸ்திரமும் இப்போது அவருடைய கண்களைக் கவர்ந்தன. "ஆ! இது
என்ன இங்கே யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?" என்று
அருகில் சென்று உற்றுப் பார்த்தார். திரும்பிச் சிவகாமியை
நோக்கி, "சபாஷ்! சிவகாமி! அதற்குள்ளே இங்கே உனக்குக் காதலர்கள்
ஏற்பட்டு விட்டார்களா? உள்ளூர் மனிதர்கள்தானா! அல்லது
வௌியூர்க்காரர்களா?" என்று பரிகாசச் சிரிப்புடன் கேட்டார்.
சிவகாமி மௌனமாய் நின்றதைப் பார்த்துவிட்டு, "நல்லது; நீ
மறுமொழி சொல்ல மாட்டாய், நானே போய்க் கண்டு பிடிக்கிறேன்!"
என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.
அப்போது
சிவகாமிக்கு, "இவள் புத்த பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக்
கொடுக்கப் பார்க்கிறாள்!" என்று மாமல்லர் சொன்னது நினைவு
வந்தது. பளிச்சென்று பிக்ஷு அவர்களைக் கண்டுபிடிப்பதால்
நடக்கக் கூடிய விபரீதங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. சிவகாமி
துடிதுடித்து அங்குமிங்கும் பார்த்தாள். இளவரசரின்
அங்கவஸ்திரத்துக்கு அடியில் ஏதோ பளபளவென்று ஒரு பொருள்
தெரிந்தது. சிவகாமியின் கண்களில் விசித்திரமான ஒளி தோன்றியது.
பாய்ந்து சென்று அந்தப் பொருளை எடுத்தாள். அவள் எதிர்
பார்த்தது போல் அது ஒரு கத்திதான். சிவகாமி அடுத்த கணம் அந்தக்
கத்தியைப் புத்த பிக்ஷுவின் முதுகை நோக்கி எறிந்தாள். பிக்ஷு
'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு விழுந்தார். முதுகில் கத்தி
பாய்ந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது. சிவகாமியைப் பிக்ஷு
திரும்பிப் பார்த்து, இரக்கம் ததும்பிய குரலில், "பெண்ணே! என்ன
காரியம் செய்தாய்? உன்னை உன் காதலன் மாமல்லனிடம் சேர்ப்பித்து
விடலாமென்று எண்ணியல்லவா அவசரமாகக் கிளம்பினேன்?" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்தாறாம் அத்தியாயம்
மகேந்திரர் கோரிக்கை
மாமல்லர்,
பரஞ்சோதி முதலியவர்கள் காஞ்சிக்குத் திரும்பி வந்த போது,
மகேந்திர பல்லவரின் தேகநிலை முன்னை விட மோசமாகியிருந்தது.
அவர்கள் சிவகாமியை அழைத்து வரவில்லையென்று தெரிந்த பிற்பாடு,
அவருடைய உடம்பு மேலும் நலிவடைந்தது. திருவெண்காட்டு நமசிவாய
வைத்தியர் எவ்வளவோ திறமையாக வைத்தியம் செய்தும், தேக
நிலைமையில் அபிவிருத்தி ஏற்படவில்லை. மகேந்திர பல்லவர் ஒருநாள்
தம் புதல்வர் மாமல்லரையும் மந்திரி மண்டலத்தாரையும், படைத்
தலைவர்களையும், கோட்டத் தலைவர்களையும் அழைத்து வரச் செய்தார்.
படுக்கையில் படுத்தபடியே சுற்றிலும் சூழ்ந்து நின்றவர்களைச்
சக்கரவர்த்தி பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கண்ணீர்
கசிந்திருப்பதையும், எல்லாருடைய முகத்திலும் பக்தி விசுவாசம்
ததும்பிக் கொண்டிருப்பதையும் கவனித்தார்.
மகேந்திர
பல்லவரின் பழைய சிம்ம கர்ஜனைக் குரலைக் கேட்டிருந்தவர்கள்,
இப்போது அவருடைய மெலிந்த ஈனஸ்வரமான குரலைக் கேட்டுத்
திடுக்கிட்டார்கள். தங்களுடைய உணர்ச்சியை வௌிக்காட்டாமல்
தடுத்துக் கொள்ள முயன்றார்கள். மகேந்திர பல்லவர் சொன்னார்;
"நான் இந்தப் புகழ்பெற்ற பல்லவ சிம்மாசனத்தில் ஏறி, இன்றைக்கு
இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இவ்வளவு காலமும் நீங்கள் காட்டிய
பக்தியும் விசுவாசமும் இணையற்றவை. காஞ்சியின் புகழ் பாரத
நாடெங்கும் ஓங்கி நின்ற காலத்தில், நீங்கள் என்னிடம் பக்தி
விசுவாசத்துடன் நடந்து கொண்டீர்கள். என்னுடைய விருப்பமே
கட்டளையாகவும் என்னுடைய வார்த்தையே சட்டமாகவும் பாவித்து
வந்தீர்கள். அது பெரிய காரியமல்ல, நான் தவறுக்கு மேல் தவறாகச்
செய்து வந்த காலத்திலும் காஞ்சியின் புகழ் மங்கி வந்த நாளிலும்
படையெடுத்து வந்த பகைவர்களை முன்னேற விட்டுப் பின்வாங்கி வந்த
காலத்திலும், காஞ்சிக் கோட்டைக்குள் நாம் மறைந்திருக்க வேண்டி
வந்த காலத்திலும் என்னிடம் இடைவிடாத விசுவாசம் காட்டி
வந்தீர்கள். மாறாத பக்தி செலுத்தி வந்தீர்கள். சளுக்க மன்னன்
புலிகேசியை உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக நான் விருந்துக்கு
அழைத்ததையும் அதனால் விளைந்த விபரீதங்களையும் நீங்கள்
பொறுத்துக் கொண்டிருந்தீர்கள். எனக்கு அந்திய காலம்
நெருங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் உங்களுக்கெல்லாம் என்
மனத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் எல்லையற்ற நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். நான் செய்த தவறுகளுக்காகவும் என்னால்
உங்களுக்கெல்லாம் நேர்ந்த கஷ்டங்களுக்காகவும்
மன்னிக்கும்படியாக ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்..."
இவ்விதம்
மகேந்திர பல்லவர் பேசிய போது, சபையிலே சிலர் விம்மி
அழுதார்கள். முதன் மந்திரி ஓர் அடி முன்னால் வந்து "பிரபு!
இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.
எங்களிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்பது எங்களைத்
தண்டிப்பதேயாகும். தங்கள் மேல் இல்லாத குற்றங்களையெல்லாம்
சுமத்திக் கொண்டு, எங்களை வேதனைக்கு ஆளாக்குகிறீர்கள்.
நடந்ததெல்லாம் விதிவசத்தினால் நடந்தது. சென்று போன
காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில் பயனில்லை!" என்றார்.
மகேந்திர
சக்கரவர்த்தி மேலும் கூறினார்; "சாரங்கதேவ பட்டரின் மொழிகள்
என்னை மேலும் உங்களிடம் நன்றிக்கடன் பட்டவனாகச் செய்கின்றன.
இன்று உங்களையெல்லாம் நான் அழைத்ததன் காரணத்தைச் சொல்கிறேன்.
என் வாழ்நாளின் இறுதி நெருங்கி விட்டது. இன்னும் சில
நாளைக்கெல்லாம் இந்த மெலிந்து நைந்த தேகத்திலிருந்து என் ஆவி
பிரிந்து போய் விடும். என் அருமைக் குமாரன் நரசிம்மன் வேத
விதிப்படி இறந்து போன தந்தைக்குச் செய்ய வேண்டிய உத்தரக்
கிரியைகளைச் செய்வான்..." என்று சக்கரவர்த்தி சொன்னபோது,
மாமல்லர் தாங்க முடியாத துக்கமும் ஆத்திரமும் பொங்க, "அப்பா!
அப்பா!" என்று அலறினார்.
மகேந்திர பல்லவர்
அருகில் நின்ற மகனை அன்புடன் தழுவிக் கொண்டு, உச்சி முகந்து,
"குழந்தாய்! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
உனக்குக் கேட்பதற்குக் கஷ்டமாயிருந்தால் சற்று வௌியே போய்
இருந்து விட்டு அப்புறம் வா!" என்றார். ஆனால் அவ்விதம்
மாமல்லர் வௌியேறவில்லை. மறுபடியும் மந்திரி பிரதானிகளைப்
பார்த்துச் சக்கரவர்த்தி கூறினார்: "என் அருமை மகன் எனக்குரிய
உத்திரக் கிரியைகளைச் செய்வான். நீங்களும் காலம் சென்ற
சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளைச் செய்வீர்கள். ஆனால்,
இதனாலெல்லாம் என் ஆத்மா சாந்தி அடையவே அடையாது. இப்போது நான்
உங்களிடம் கேட்டுக் கொள்ளப் போகும் கோரிக்கையை நிறைவேற்றி
வைத்தால் என் ஆத்மா சாந்தி அடையும். இல்லாவிட்டால்
சொர்க்கத்திலே இருந்தாலும் என் ஆவி நிம்மதி அடையாது." "பிரபு!
சொல்லுங்கள்; தங்களுடைய ஆக்ஞை எதுவானாலும், அதை நிறைவேற்றி
வைப்பதாக இங்குள்ளவர் அனைவரும் சபதம் செய்ய
ஆயத்தமாயிருக்கிறோம்!" என்று முதல் அமைச்சர் கூறினார்.
"என்னுடைய
அஜாக்கிரதையினாலும் சளுக்க மன்னனின் வஞ்சகத்தினாலும் பல்லவ
வம்சத்துக்குப் பெரிய அவமானம் நேர்ந்து விட்டதை நீங்கள்
அறிவீர்கள். அறுநூறு வருஷத்து வீரப் புகழுக்கு என் காலத்தில்
பங்கம் நேர்ந்துவிட்டது. அந்த அவமானத்தை என்னாலே துடைக்க
முடியவில்லை. இழந்து விட்ட பல்லவ வம்சத்துப் புகழை
நிலைநாட்டாமலே நான் உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். நான்
செய்ய முடியாமற்போன காரியத்தை நீங்கள் நிறைவேற்றி வைக்க
வேண்டும். பல்லவ சைனியம் படையெடுத்துச் சென்று, சளுக்கரை
வென்று, புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரை அழித்து, தீ வைத்து
எரிக்க வேண்டும். வாதாபி நகரம் இருந்த இடத்தில் பல்லவ
ஜயஸ்தம்பம் கம்பீரமாக வானளாவி நிற்க வேண்டும். அப்போதுதான்
பல்லவ வம்சத்துக்கும் தமிழகத்தின் வீரத்துக்கும் நேர்ந்துள்ள
களங்கம் நிவர்த்தியாகும். இதுவே என் கோரிக்கை, என்ன
சொல்கிறீர்கள்? நிறைவேற்றுவீர்களா?" "நிறைவேற்றுகிறோம்",
நிறைவேற்றுகிறோம்" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலித்தன.
"மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க! வீர மாமல்லர் வாழ்க!" என்ற
ஜயகோஷங்களும் முழங்கின. மகேந்திர பல்லவர் இன்னொரு தடவை
எல்லாரையும் பார்த்து, "மறுமுறையும் உங்களுக்கு என்
இருதயத்தில் பொங்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
என்றார்.
அப்போது முதல்
அமைச்சர், "பிரபு ஒரு விஷயம், தங்கள் கோரிக்கையை வௌியிட்ட
போது, இங்குள்ள நாங்கள் அனைவரும் அதை நிறைவேற்றி வைப்பதாக
ஒப்புக் கொண்டு கோஷித்தோம். ஆனால், முக்கியமாகத் தங்கள்
கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டிய இருவரும் சும்மா
இருந்தார்கள். குமார சக்கரவர்த்தியையும் சேனாபதி
பரஞ்சோதியையுந்தான் சொல்கிறேன். அவர்கள் மௌனமாயிருந்தது
எங்களுக்கு அர்த்தமாகவில்லை" என்றார். "மாமல்லனும்
பரஞ்சோதியும் ஏற்கெனவே எனக்கு அவ்வாறு வாக்களித்துச் சபதம்
கூறியிருக்கிறார்கள். அதனாலேதான் இப்போது சும்மா இருந்தார்கள்.
அவர்கள் செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்க நீங்கள் அவர்களுக்கு
ஒத்தாசை செய்ய வேண்டும். சபையோர்களே! நான் மாமல்லனோடு ஒரு
முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதனுடைய முடிவை
உங்களுக்கும் நான் தெரிவித்தாக வேண்டும். சற்று எங்களுக்கு
அவகாசம் கொடுப்பீர்களா?" என்று கேட்டார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
ஐம்பத்தேழாம் அத்தியாயம்
இராஜகுல தர்மம்
மகேந்திர
பல்லவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொண்டு அவரைச்
சூழ்ந்திருந்த மந்திரிகளும் அமைச்சர்களும் சற்று விலகிச்
சென்றார்கள். மறுபடியும் சக்கரவர்த்தி அழைத்தவுடனே திரும்பி
வருவதற்கு ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சக்கரவர்த்திக்குச்
சமீபமாக மாமல்லரும் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில்
பரஞ்சோதியும் வணக்கத்துடன் நின்றார்கள். மகேந்திர பல்லவர்
படுத்திருந்த மண்டபத்துக்கு ஒரு பக்கத்தில் அந்தப்புரத்தின்
வாசல் இருந்தது. மகேந்திர பல்லவர் அங்கே திரும்பி நோக்கியதும்
தாதி ஒருத்தி ஓடி வந்தாள். அவளிடம், "மகாராணியை அழைத்து வா!"
என்று பல்லவ வேந்தர் ஆக்ஞாபித்தார்.
"பின்னர்
மாமல்லரைப் பார்த்து, "குழந்தாய்! நான் கண் மூடுவதற்குள்
இரண்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டுமென்று
தீர்மானித்திருந்தேன். அதில் ஒன்று நிறைவேறி விட்டது.
சிவகாமியின் சபதத்தைப் பூர்த்தி செய்து அவளை வாதாபியிலிருந்து
நீ அழைத்து வரும் விஷயத்தில் நமது மந்திரிப் பிரதானிகளால்
ஏதேனும் தடை நேராதிருக்கும் பொருட்டு அவர்களிடம் உன்
முன்னிலையில் வாக்குறுதி பெற்றுக் கொண்டேன்.
வாக்குறுதியிலிருந்து அவர்கள் பிறழ மாட்டார்கள். வாதாபிப்
படையெடுப்புக்கு உனக்குப் பூரண பக்கபலம் அளிப்பார்கள்"
என்றார். மாமல்லர் மறுமொழி எதுவும் சொல்லவில்லை.
"மகனே! நான்
செய்ய விரும்பும் இரண்டாவது காரியம் உன்னைப்
பொறுத்திருக்கின்றது; நீதான் அதை நிறைவேற்றித் தர வேண்டும்.
மரணத்தை எதிர்பார்க்கும் சக்கரவர்த்தியின் கோரிக்கையை மந்திரி
பிரதானிகள் உடனே ஒப்புக் கொண்டார்கள். என் அருமைப் புதல்வனாகிய
நீயும் என் அந்திமகால வேண்டுகோளை நிறைவேற்றித் தருவாயல்லவா?"
என்றார் மகேந்திரர்." "அப்பா! என்ன வேண்டுமானாலும் எனக்குக்
கட்டளையிடுங்கள்; நிறைவேற்றுகிறேன். கோரிக்கை, வேண்டுகோள்
என்று மட்டும் சொல்லாதீர்கள்!" என்றார் மாமல்லர். "குமாரா!
இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கூடிய
சீக்கிரம் உன் தலையில் சாரப் போகிறது. ஆயிரம் ஆண்டுகளாகப்
புகழ்பெற்ற காஞ்சிமா நகரின் சிம்மாசனத்தில் நீ வீற்றிருக்கும்
காலம் நெருங்கி வந்திருக்கிறது.."
"அப்பா!
இவ்விதமெல்லாம் தாங்கள் பேசுவதானால், நான் இங்கிருந்து போய்
விட விரும்புகிறேன். எனக்குச் சிம்மாசனமும் வேண்டாம்,
சாம்ராஜ்யமும் வேண்டாம்; தாங்கள்தான் எனக்கு வேண்டும்.
நெடுங்காலம் தாங்கள் திடகாத்திரமாக வாழ வேண்டும்..." "மாமல்லா!
நம்முடைய கண்களை நாமே மூடிக் கொண்டு எதிரேயுள்ளதைப்
பார்க்காமல் இருப்பதில் பயனில்லை. இனி நெடுங்காலம் நான்
ஜீவித்திருக்கப் போவதில்லை. அப்படி ஜீவித்திருந்தாலும்
திடகாத்திரமாக இருக்கப் போவதில்லை. சாம்ராஜ்ய பாரத்தை இனிமேல்
என்னால் ஒரு நிமிஷமும் தாங்க முடியாது. அந்தப் பொறுப்பை நீதான்
வகித்தாக வேண்டும்.."
"பொறுப்பு வகிக்க
மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே? காஞ்சி சிம்மாசனத்தில்
தாங்கள் இருந்து கொண்டு எனக்குக் கட்டளையிடுங்கள், நான்
நிறைவேற்றாவிடில் கேளுங்கள்." "நல்லது மகனே! இந்தப் பல்லவ
சாம்ராஜ்யத்தின் பொறுப்பை நிர்வகிப்பதற்குத் தகுதி பெற
வேண்டுமானால் அதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை இருக்கிறது. அதை
நீ பூர்த்தி செய்தாக வேண்டும்!" "நிபந்தனையைச் சொல்லுங்கள்,
அப்பா!" என்றார் மாமல்லர் அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒருவித வேதனை
உண்டாயிற்று.
"குழந்தாய்!
வளைத்து வளைத்துப் பேசுவதில் என்ன பயன்? நீ எனக்கு ஒரே மகன்,
வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சம் உன்னோடு முடிவடைந்து
விடக்கூடாது. காஞ்சி சிம்மாசனத்தில் ஏறத் தகுதி பெறுவதற்கு நீ
கலியாணம் செய்து கொள்ள வேண்டும். மாமல்லா! பாண்டிய
இராஜகுமாரியை மணந்து கொள். நான் கண்ணை மூடுவதற்குள்ளே நீ
இல்லறம் மேற்கொண்டு நான் பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால்
என் மனம் நிம்மதி அடையாது, என் நெஞ்சு வேகாது!" என்றார்
சக்கரவர்த்தி.
மேற்படி மொழிகள்
மாமல்லரின் இருதய வேதனையை பன்மடங்கு அதிகமாக்கின. அவருடைய
நெஞ்சில் ஈட்டியால் குத்தியிருந்தால் கூட அத்தனை துன்பம்
உண்டாகியிராது. சற்று மௌனமாய் நின்று விட்டு, "அப்பா! ஏன்
இப்படி என்னைச் சோதனை செய்கிறீர்கள்? என் மனோநிலை உங்களுக்குத்
தெரியாதா? சிவகாமியின் மேல் நான் அழியாத காதல் கொண்டிருப்பதை
அறியீர்களா? ஒரு பெண்ணிடம் மனம் சென்ற பிறகு, இன்னொரு பெண்ணை
எப்படி மணப்பேன்? அப்படிச் செய்வது மூன்று பேருடைய
வாழ்க்கையையும் பாழாக்குவதாகாதா? இத்தகைய காரியத்தைச்
செய்யும்படி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?" என்று மாமல்லர்
கேட்டார். அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் இருதயத்தின்
அடிவாரத்திலிருந்து நெஞ்சின் இரத்தம் தோய்ந்து வௌிவந்தது.
மகேந்திர பல்லவர்
குமாரனை அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார். பிறகு கனிவு
ததும்பும் குரலில் கூறினார்; "ஆம், நரசிம்மா! அப்படிப்பட்ட
காரியத்தைச் செய்யும்படி தான் சொல்கிறேன். அந்தக் காரியத்தின்
தன்மையை நன்கு அறிந்து சொல்கிறேன். கேள், மாமல்லா! இந்த
உலகத்தில் சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு; இராஜகுலத்தில்
பிறந்தவர்களுக்குத் தர்மம் வேறு. சாதாரண ஜனங்கள் தங்களுடைய
சொந்த சுகதுக்கங்களை உத்தேசித்துக் காரியம் செய்யலாம். ஆனால்
ராஜ குலத்தில் பிறந்தவர்கள் அவ்வாறு செய்வதற்கில்லை. ங்கள்
சுகதுக்கங்களை அவர்கள் மறந்துவிட வேண்டும். இராஜ்யத்தின்
நன்மையைக் கருதியே இராஜ குலத்தினர் தங்கள் சொந்தக்
காரியங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். மாமல்லா! யோசித்துப்
பார்! சிவகாமியை நீ மணந்து கொள்வது இனிமேல் சாத்தியமா?
வாதாபிக்கு நீ படை எடுத்துப் போவது இன்றோ நாளையோ நடக்ககூடிய
காரியமா? வருஷக் கணக்கில் ஆயத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
அப்புறம் யுத்தம் எத்தனை காலம் நடக்குமோ, யார் சொல்ல முடியும்?
அத்தனை நாளும் நீ கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பாயா?
அதற்கும் பல்லவ நாட்டுப் பிரஜைகள் சம்மதிப்பார்களா?"
மாமல்லர்
பெருமூச்சு விட்டார்; சிவகாமியின் மீது அவருக்குச் சொல்ல
முடியாத கோபம் வந்தது. அந்தப் பாதகி தன்னுடன் புறப்பட்டு வர
மறுத்ததனால் தானே இப்போது இந்தத் தர்மசங்கடம் தனக்கு
நேரிட்டிருக்கிறது! அவருடைய உள்ளப் போக்கை அறிந்து கொண்ட
மகேந்திர பல்லவர், "குமாரா! இராஜ குலத்தினர் தங்களுடைய
சுகதுக்கங்களைப் பாராமல் இராஜ்யத்துக்காகவே எல்லாக்
காரியங்களும் செய்தாக வேண்டும் என்று உனக்குச் சொன்னேனல்லவா?
அதை நானே என் வாழ்க்கையில் அனுசரித்து வந்திருக்கிறேன்.
இப்போது கூட இராஜ்யத்தின் நன்மைக்காக ஒரு பயங்கரமான
காரியத்தைச் செய்வதற்கு மனம் துணிந்திருந்தேன். அந்தப்
பயங்கரமான காரியம் என்ன தெரியுமா?" என்று மகேந்திர பல்லவர்
நிறுத்தினார்.
மாமல்லர் ஒன்றும்
புரியாதவராய்த் தாயாரையும் தந்தையையும் மாறி மாறிப்
பார்த்தார். "ஆம், குமாரா! இந்த வயதில் உன் தாயாருக்கு இன்னொரு
சக்களத்தியை அளிப்பதென்று தீர்மானித்திருந்தேன். நீ
வாதாபியிலிருந்து சிவகாமியை இப்போது அழைத்து வந்திருந்தால்,
அவளை நானே மணந்து கொள்வதென்று முடிவு செய்திருந்தேன்..."
என்றதும் மாமல்லர் "அப்பா!" என்று அலறினார். "மாமல்லா! என்னை
மன்னித்து விடு! இராஜ்யத்தின் நன்மைக்காகவே அந்தப் பயங்கரமான
காரியத்தைச் செய்யத் துணிந்திருந்தேன். நீ சிவகாமியை மணக்காமல்
தடுக்கும் பொருட்டே அவ்விதம் செய்ய எண்ணினேன். உன்
அன்னையிடமும் சொல்லி அனுமதி பெற்றேன். ஆனால், அந்தப்
புண்ணியவதி வாதாபியிலிருந்து வர மறுத்து என்னை அந்தப் பயங்கரச்
செயலிலிருந்து காப்பாற்றினாள்!" மாமல்லருடைய மனம் அப்போது
வாதாபி மாளிகையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும்
சிவகாமியிடம் சென்றது. 'ஆ! அவள் தம்முடன் புறப்பட்டு வர
மறுத்தது எவ்வளவு நல்லதாயிற்று?'
"குமாரா! இப்போது
யோசித்துப் பார்! இராஜ்யத்தின் நன்மைக்காக நான் செய்யத்
துணிந்ததைக் காட்டிலும் உன்னைச் செய்யும்படி கேட்பது பெரிய
காரியமா? பாண்டியகுமாரியை மணப்பதனால் பல்லவ ராஜ்யத்துக்கு
எவ்வளவு பலம் ஏற்படும் என்று சிந்தனை செய். நீ செய்வதற்குரிய
மகத்தான பிரம்மாண்டமான காரியங்கள் இருக்கின்றன. வாதாபிக்குப்
படையெடுத்துச் சென்று சளுக்கப் பூண்டை அடியோடு அழித்து
வருவதென்பது சாமான்யமான காரியமா? அதற்கு எத்தனை துணைப் பலம்
வேண்டும்? தென்னாட்டிலுள்ள எல்லா மன்னர்களும் சேர்ந்து
பிரயத்தனம் செய்தாலொழிய அது சாத்தியப்படுமா? ஒரு சத்ருவை
வைத்துக் கொண்டு வடக்கே படையெடுத்துச் செல்வது முடியுமா?
நரசிம்மா! எந்த வழியில் பார்த்தாலும் பாண்டிய ராஜகுமாரியை நீ
மணப்பது மிகவும் அவசியமாகிறது...." இவ்விதம் இடைவிடாமல் பேசிய
காரணத்தினால் மகேந்திர பல்லவர் பெருமூச்சு வாங்கினார். அவருடைய
கஷ்டத்தைப் பார்த்த புவனமகாதேவி, "பிரபு! இவ்வளவு நேரம்
பேசலாமா? வைத்தியர் அதிகம் பேசக் கூடாது என்று
கட்டளையிட்டிருக்கிறாரே?" என்று சொல்லி விட்டு, மாமல்லனை
பார்த்து, "குழந்தாய்! உன் தந்தையை.....என்றாள். அன்னை மேலே
பேசுவதற்கு மாமல்லர் இடம்கொடுக்கவில்லை.
"அப்பா! தாங்கள்
அதிகமாகப் பேச வேண்டாம். பாண்டியகுமாரியை நான் மணந்து
கொள்கிறேன்!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.
மகேந்திர சக்கரவர்த்தியின் முகம் மலர்ந்தது. புவனமகாதேவியோ தன்
கண்களில் துளித்த கண்ணீரை மறைக்க வேறு பக்கம் திரும்பினாள்.
மகேந்திர பல்லவர் சமிக்ஞை காட்டியதும் தளபதி பரஞ்சோதியும்
முதல் மந்திரி பிரதானிகளும் அருகில் வந்தார்கள். "தலைவர்களே!
அதிக நேரம் உங்களை காக்க வைத்து விட்டேன், அவ்வளவுக்கவ்வளவு
உங்களுக்குக் குதூகலச் செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன்.
குமாரச் சக்கரவர்த்திக்கும் பாண்டிய குமாரிக்கும் கலியாணம்
நிச்சயமாகியிருக்கிறது. அதே பந்தலில் அதே முகூர்த்தத்தில்
சேனாதிபதி பரஞ்சோதிக்கும் கலியாணம் நடைபெறுகிறது!" என்று
மகேந்திர பல்லவர் கூறியதும், கேட்டவர்கள் அவ்வளவு பேரும் ஒரே
குதூகலமாக மாமல்லர் வாழ்க! சேனாதிபதி வாழ்க!" என்று
கோஷித்தார்கள்.
மூன்றாம் பாகம் முற்றிற்று