Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி - சிவகாமியின் சபதம் > பாகம் 1  - அத்தியாயங்கள் 1-47  > பாகம் 2  - அத்தியாயங்கள் 1-55  > பாகம் 3  - அத்தியாயங்கள் 1-57 > பாகம் 4  - அத்தியாயங்கள் 1-50

Acknowledgements: Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM with conversion to TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
Web Version and TSC proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
� Project Madurai 1999 - 2004  Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact

கல்கி - சிவகாமியின் சபதம் - பாகம் 4
சிதைந்த கனவு

kalki - civakAmiyin capatam - part 4
cithaintha kanavu

உள்ளுறை
அத்தியாயங்கள்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50


முதல் அத்தியாயம்
அரண்ய வீடு

ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது, உதிர்ந்த மலர்கள் பூமியில் ஆங்காங்கு புஷ்பக் கம்பளம் விரித்தது போல் கிடந்தன. அந்த மலர்களின் நறுமணம் நாலாபுறமும் 'கம்' என்று நிறைந்திருந்தது. கானகத்துப் பறவைகள் அவ்வப்போது கலகலவென்று ஒலி செய்து, அங்கே குடி கொண்டிருந்த நிசப்தத்தைக் கலைத்தன.

ஆயனர் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த தாமரைக் குளத்தில் தண்ணீர் ததும்பி அலைமோதிக் கொண்டிருந்தது. தாமரை இலைகள் தள தளவென்று விளங்கின. அந்த இலைகளின் மீது தண்ணீர்த் துளிகள் முத்துக்களைப்போல் தத்தளித்துக் கொண்டிருந்தன. இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்த போது, அந்த ஒளி முத்துக்கள் அங்குமிங்கும் ஓடியது, கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இயற்கை அழகையெல்லாம் பார்த்து அனுபவிப்பதற்கு மனிதர்கள் மட்டும் அங்கே இல்லை.

ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி முன்னொரு காலத்தில் நூற்றுக்கணக்கான சிற்பக்கலைச் சீடர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் அங்கே சீடன் எவனும் காணப்படவில்லை. அங்கே இப்போது குடிகொண்டிருந்த சூனியத்தின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தும்படியாக அரண்ய வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு தனிக் கல்லுளியின் சத்தம் 'கல் கல்' என்று கேட்டுக் கொண்டிருந்தது. ஆம்; வீட்டுக்குள்ளே அயனச் சிற்பியார் மீண்டும் கையில் கல்லுளி எடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். அருமைப் புதல்வியை ஆயனர் பறி கொடுத்து இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இத்தனை காலமும் அவர் உயிர் வாழ முடிந்தது மீண்டும் சிற்பத் தொழிலில் கவனம் செலுத்திய காரணத்தினாலேதான்.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னே, நாம் அந்தச் சிற்பக் கிரஹத்தில் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமான நடனச் சிலைகளைப் பார்க்கிறோம். சிலை வடிவம் ஒவ்வொன்றும் சிவகாமியை நினைவூட்டுகின்றன. மண்டபத்தின் சுவர்களிலே அந்த நாளில் நாம் பார்த்த சித்திரங்கள் எல்லாம் இப்போது நிறம் மங்கிப் போயிருக்கின்றன. இதிலிருந்து அஜந்தா வர்ண இரகசியத்தை இன்னும் ஆயனர் தெரிந்து கொள்ளவில்லையென்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். ஆயனரின் உருவத் தோற்றத்திலும் பெரிய மாறுதலைக் காண்கிறோம். அவருடைய தலை ரோமம் தும்பைப் பூவைப் போல் வெளுத்துப் போயிருக்கிறது. கண்கள் குழி விழுந்திருக்கின்றன; முகத்திலே சுருக்கங்கள் காணப்படுகின்றன. அவரை இப்போது ஆயனக் கிழவர் என்று கூறினால் யாரும் ஆட்சேபிக்க முடியாது.

ஆயனர் தமது வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தபடியால், வீட்டின் வாசலில் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் வந்து நின்ற சத்தம் அவர் காதில் விழவி்லை. "தாத்தா!" என்ற மழலைக் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியும் அவருடன் இரு குழந்தைகளும் வாசற்படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்கள். மாமல்லரின் உருவமும் ஓரளவு மாறியிருந்தது. அவருடைய முகத்தில் யௌவனத்தின் தளதளப்புக்குப் பதிலாக முதிர்ச்சி பெற்ற கம்பீர தேஜஸ் குடிகொண்டிருந்தது. படபடப்புக்குப் பதிலாகத் தெளிந்த அறிவும் முரட்டுத் துணிச்சலுக்குப் பதிலாக வயிர நெஞ்சத்தின் உறுதியும் அவருடைய கண்களிலே பிரகாசித்தன.

அவருடன் வந்த குழந்தைகளின் முகத் தோற்றத்திலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாக இருக்க வேண்டுமென்று ஊகிக்க முடிந்தது. அண்ணனுக்கு வயது எட்டு; தங்கைக்கு ஆறு இருக்கும். மாமல்லருடைய சாயல் இருவர் முகத்திலும் காணப்பட்டது. "தாத்தா!" என்று கூவிக்கொண்டு இரு குழந்தைகளும் ஆயனரிடம் ஓடினார்கள். ஆயனர் அவர்களை, "என் கண்மணிகளே வாருங்கள்!" என்று சொல்லி வரவேற்றார். அவர்களைத் தம் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு கொஞ்சிச் சீராட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது. அது குழந்தைகளைக் கண்டதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா, அல்லது நடந்திருக்கக் கூடியதையும் நடக்காமற் போனதையும் நினைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட தாபக் கண்ணீரா என்று யாரால் சொல்ல முடியும்!

குழந்தைகள் சற்று நேரம் ஆயனருடன் விளையாடிக் கொண்டிருந்த பிறகு, மாமல்ல சக்கரவர்த்தி அவர்களைப் பார்த்து, "குந்தவி! மகேந்திரா! இரண்டு பேரும் வெளியே ஓடிப்போய்ச் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருங்கள். நான் தாத்தாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டார். "கண்ணா! குழந்தைகளைப் பார்த்துக் கொள்!" என்று சாரதியைப் பார்த்துச் சொன்னார். அதோ குதிரைக் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு நிற்பவன் கண்ணபிரான்தான். அவன் முகத்தில் இப்போது கறுகறுவென்று மீசை வளர்ந்திருந்தது.

குழந்தைகளை வெளியில் விட்டு விட்டு வீட்டுக்குள்ளே திரும்பி வந்த மாமல்லரைப் பார்த்து ஆயனர், "பிரபு! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். நூற்றெட்டாவது நடனச் சிலை இன்றோடு வேலை முடிகிறது" என்றார். சிவகாமியின் பிரிவினால் ஆயனரின் அறிவு நாளுக்கு நாள் சிதறிப்போய் வருவதைக் கண்ட நரசிம்மவர்ம சக்கரவர்த்தி, அவரை நூற்றெட்டு நடனத் தோற்றச் சிலைகளையும் பூர்த்தி செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். ஆயனர் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவருடைய அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது. "ஆயனரே! என்னுடைய ஆயத்தங்களும் முடிந்து விட்டன. விஜயதசமியன்று யுத்தத்துக்குப் புறப்படுகிறோம். காலையில் ஆயுதபூஜை நடத்திவிட்டு மாலையில் வாதாபி யாத்திரை தொடங்குகிறோம்!" என்றார் மாமல்லர்.

"ஐயா! நானும் கேள்விப்பட்டேன்; திருக்கழுக்குன்றம் மலைச்சாரலில் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் சைனியத்தைப் பற்றிக் குண்டோ தரன் கூறினான். கண்ணுக்கெட்டிய தூரம் யானைப் படையும், குதிரைப்படையும், காலாட்படையும் ஒரே சேனா சமுத்திரமாய் இருக்கிறதாமே? இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே? வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே? குண்டோ தரன் வந்து சொன்னதைக் கேட்டதும் எனக்கே திருக்கழுக்குன்றம் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. "ஆயனரே! திருக்கழுக்குன்றத்தில் இறங்கியிருக்கும் படைகள் நமது சைனியத்தில் மூன்றில் ஒரு பங்குதான்; வடக்கே பொன்முகலி நதிக்கரையில் ஒரு பெரிய சைனியம் நமது சேனாபதி பரஞ்சோதியின் தலைமையில் காத்திருக்கிறது. தெற்கேயிருந்து பாண்டியனுடைய சைனியம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. வராக நதிக்கு அருகில் வந்துவிட்டதாக இன்று தான் செய்தி கிடைத்தது.

"பிரபு! என்னை மன்னிக்க வேண்டும், தாங்கள் காலங்கடத்திக் கொண்டிருப்பதாக எண்ணி நொந்து கொண்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது...." "பகீரதப் பிரயத்தனம் என்றா சொன்னீர், ஆயனரே!" "ஆம் ஐயா!" "ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது 'ஆகாச கங்கை விழுகிறது!' என்று நான் சொன்னேன். உடனே, மகேந்திர பல்லவர், 'சிற்பத்துக்கு நல்ல விஷயம்; இங்கே பகீரதன் தவத்தைச் சித்திரிக்கலாம்' என்றார். நீங்களும் அதை ஒப்புக் கொண்டு சிற்பிகளை அழைத்து வேலை தொடங்கும்படி சொன்னீர்கள். அப்போது நான் தந்தையிடம் பகீரதன் கதை சொல்லும்படி கேட்டுக் கொண்டேன்.

"பகீரதன் கதையை அன்று மகேந்திர பல்லவரிடம் கேட்ட போது எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. பகீரதனுடைய தவத்துக்கு என்னென்ன இடையூறுகள் நேர்ந்தன? அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே! வாதாபியிலிருந்து நான் உங்கள் குமாரியை அழைத்து வராமல் திரும்பி வந்தபோது, மூன்று வருஷத்துக்குள்ளே படை திரட்டிக் கொண்டு வாதாபிக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். வரும் வழியெல்லாம் அவ்வாறுதான் நானும் பரஞ்சோதியும் திட்டம் போட்டுக் கொண்டு வந்தோம். மூன்று வருஷத்தில் நடத்த எண்ணிய காரியத்துக்கு ஒன்பது வருஷம் ஆகிவிட்டது."

"பல்லவேந்திரா! ஒன்பது வருஷம் ஆயிற்று என்றா சொன்னீர்கள்? ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது!" "எனக்கும் அப்படித்தான், ஆயனரே! சிவகாமியைப் பார்த்துப் பல யுகம் ஆகிவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. ஆனாலும், நான் என்ன செய்ய முடியும்? இரண்டு வருஷம் நாட்டில் மழையில்லாமல் பஞ்சமாய்ப் போயிற்று. ஒரு வருஷம் பெரு மழையினால் தேசங்கள் நேர்ந்தன. இலங்கை இளவரசன் மானவன்மனுக்கு ஒத்தாசை செய்ய வேண்டி வந்தது. பாண்டியனுக்கும் சேரனுக்கும் மூண்ட சண்டையில் தலையிட்டுச் சமாதானம் செய்விக்க வேண்டியிருந்தது. இத்தகைய காரணங்களினால் மனச்சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் அடிக்கடி துறைமுகத்துக்குச் சென்று பகீரதனுடைய தவச் சிற்பத்தைப் பார்த்தேன். மீண்டும் ஊக்கமும் தைரியமும் அடைந்தேன். கடைசியில் பகீரதன் முயற்சி பலிதமடைந்ததுபோல், என்னுடைய பிரயத்தனமும் பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த வாரத்தில் போருக்குப் புறப்படப் போகிறேன்."

"பிரபு! இது என்ன? 'புறப்படப் போகிறேன்' என்று சொல்கிறீர்கள்?" என்று கேட்டார் ஆயனர். "வேறு என்ன சொல்லவேண்டும், ஆயனரே?" "புறப்படப் போகிறோம்' என்று சொல்ல வேண்டும். பல்லவேந்திரா! இன்னும் எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேனோ, தெரியாது. சிவகாமியை ஒரு தடவை கண்ணாலே பார்த்து விட்டாவது கண்ணை மூடுகிறேன்." மாமல்லர் தம்முடைய கண்களில் துளித்த கண்ணீரைத் தடைத்துக் கொண்டு, "ஐயா! உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள்!" என்றார்.



இரண்டாம் அத்தியாயம்
மானவன்மன்

திருக்கழுக்குன்றத்தைச் சுற்றிலும் விசாலமான பிரதேசத்தில் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருந்தது. அந்தக் குன்றின் உச்சியில் வீற்றிருந்த சிவபெருமானாகட்டும், அந்தப் பெருமானைத் தினந்தோறும் வந்து வழிபட்டுப் பிரஸாதம் உண்டு சென்ற கழுகுகள் ஆகட்டும், அதற்கு முன்னால் அக்குன்றின் சாரலில் அம்மாதிரிக் காட்சியை எப்போதும் பார்த்திருக்க முடியாது. குன்றின் மேலேயிருந்து வடக்கே நோக்கினால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரே யானைகள் யானைகள், யானைகள்! உலகத்திலே இத்தனை யானைகள் இருக்க முடியாது! இவ்வளவு யானைகளும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்திருப்பதினால் பூமி நிலை பெயர்ந்து விடாதா என்றெல்லாம் பார்ப்பவர்கள் மனத்தில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எல்லையில்லாத தூரம் ஒரே யானை மயமாகக் காணப்பட்டது.

கிழக்கே திரும்பிப் பார்த்தால், உலகத்திலே குதிரைகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லையென்று சொல்லத் தோன்றும். எல்லாம் உயர்ந்த ஜாதிக் குதிரைகள்; அரபு நாட்டிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கப்பலில் வந்து மாமல்லபுரம் துறைமுகத்தில் இறங்கியவை. வெள்ளை நிறத்தவை, சிவப்பு நிறத்தவை, பளபளப்பான கரிய நிறமுடையவை, சிவப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி உள்ளவை; ஹா ஹா! அந்த அழகிய மிருகங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாமென்று தோன்றும். போர்க்களத்துக்குப் போகும் இந்தப் பதினாயிரக்கணக்கான குதிரைகளில் எவ்வளவு குதிரைகள் உயிரோடு திரும்பி வருமோ என்று நினைத்துப் பார்த்தால் கதிகலங்கும்.

தென்புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், ரிஷபங்கள் பூட்டிய வண்டிகளும், பொதி சுமக்கும் மாடுகளும் ஒட்டகங்களும் கோவேறு கழுதைகளும் காணப்பட்டன. வண்டிகளிலே தானிய மூட்டைகளும் துணி மூட்டைகளும் கத்திகளும் கேடயங்களும் வாள்களும் வேல்களும் ஈட்டிகளும் சூலங்களும் வில்களும் அம்பறாத் தூணிகளும் இன்னும் விதவிதமான விசித்திர ஆயுதங்களும் பிரம்மாண்டமான வடக் கயிறுகளும் நூல் ஏணிகளும் கொக்கிகளும் அரிவாள்களும் மண்வெட்டிகளும் தீப்பந்தங்களும் தீவர்த்திகளும் அடுக்கப்பட்டிருந்தன. வண்டியில் ஏற்றப்படாமல் இன்னும் எத்தனையோ ஆயுதங்களும் மற்றக் கருவிகளும் மலைமலையாக ஆங்காங்கு கிடந்தன. ஓரிடத்தில் மலைபோலக் குவிந்திருந்த தாழங்குடைகளைப் பார்த்தால் அவற்றைக் கொண்டு பூமியின் மீது ஒரு சொட்டு மழை கூட விழாமல் வானத்தையே மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணம் உண்டாகும்.

மேற்கே திரும்பினால், அம்மம்மா! பூவுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லாம் இங்கே திரண்டு வந்திருக்கிறார்களா என்ன? அப்படிக் கணக்கிட முடியாத வீரர்கள் ஈ மொய்ப்பது போலத் தரையை மொய்த்துக் கொண்டு நின்றார்கள்! இராவணேசுவரனுடைய மூல பல சைனியம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கும் மகா சைனியத்திலே கூட வீரர்களின் எண்ணிக்கை இவ்வளவு இருந்திருக்குமா என்று சொல்ல முடியாது. இவ்விதம் அந்த நாலு வகைப்பட்ட பல்லவ சைனியமும் தண்டு இறங்கியிருந்த பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கு ரிஷபக் கொடிகள் வானளாவிப் பறந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

மேற்கூறிய சேனா சமுத்திரத்தை அணுகி, மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியானவர் ரதத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைத் தூரத்திலே பார்த்ததும், பூரண சந்திரனைக் கண்டு ஆஹ்லாதித்துப் பொங்கும் சமுத்திரத்தைப் போல அந்தச் சேனா சமுத்திரத்தில் மகத்தான ஆரவாரம் ஏற்பட்டது. சங்கங்களும் தாரைகளும் பேரிகைகளும் முரசுகளும் 'கடுமுகங்'களும் 'சமுத்திரகோஷங்'களும் சேர்ந்தாற்போல் முழங்கியபோது எழுந்த பேரொலியானது, நாற்றிசைகளிலும் பரவி, வான முகடு வரையில் சென்று, அங்கிருந்து கிளம்பி எதிரொலியோடு மோதி, கொந்தளிக்கும் கடலில் அலைகள் ஒன்றையொன்று தாக்கி உண்டாக்குவது போன்ற பேரமளியை உண்டாக்கியது. இன்னும் அந்த வீரர் பெருங்கூட்டத்தில் ஆயிரமாயிரம் வலிய குரல்களிலிருந்து, "மாமல்லர் வாழ்க!", "புலிகேசி வீழ்க!" "காஞ்சி உயர்க!", "வாதாபிக்கு நாசம்!" என்பன போன்ற கோஷங்கள் காது செவிடுபடும்படியான பெருமுழக்கமாக ஏகோபித்து எழுந்து, வானமும் பூமியும் அதிரும்படி செய்தன. இப்படி ஆரவாரித்த மாபெரும் சைனியத்திலிருந்து தனியே பிரிந்து உயர்ந்த ஜாதிக் குதிரை மீது ஆரோகணித்திருந்த ஒரு கம்பீர புருஷன் சக்கரவர்த்தியின் ரதத்தை எதிர்கொள்வதற்காக முன்னோக்கிச் சென்றான். ரிஷபக் கொடி ஏந்திய வீரர் இருவர் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள். அப்படி மாமல்லரை எதிர்கொள்வதற்காகச் சென்றவன்தான் மானவன்மன் என்னும் இலங்கை இளவரசன்.

இந்த மானவன்மனுடைய தந்தையும் மகேந்திர பல்லவரும் நண்பர்கள். மகேந்திர பல்லவரைப் போலவே மானவன்மனுடைய தந்தையும் கலைகள் வளர்ப்பதில் ஈடுபட்டு, அரசியலை அதிகமாய்க் கவனியாது விட்டிருந்தார். இதன் பலனாக அவர் இறந்ததும் மானவன்மன் சிம்மாசனம் ஏற இடங்கொடாமல் அட்டதத்தன் என்னும் சிற்றரசன் இராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மானவன்மன் காஞ்சி மாமல்லருக்கு உதவி கோரித் தூது அனுப்பினான். அப்போதுதான் தொண்டை மண்டலத்தைப் பெரும் பஞ்சம் பீடித்திருந்தது. எனினும் மாமல்லர் ஒரு சிறு படையைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படை இலங்கையை அடையும் சமயத்தில் மானவன்மன் படுதோல்வியுற்றுக் காட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். மாமல்லர் அனுப்பிய சிறு படை அட்டதத்தனோடு போரிடுவதற்குப் போதாது என்று கண்ட மானவன்மன், பல்லவர் படையோடு தானும் கப்பலில் ஏறிக் காஞ்சிக்கு வந்து சேர்ந்தான்.

மகேந்திர பல்லவருடைய சிநேகிதரின் மகன் என்ற காரணத்தினால், மானவன்மன் மீது இயற்கையாகவே மாமல்லருக்கு அன்பு ஏற்பட்டது. அதோடு அயல்நாட்டிலிருந்து தம்மை நம்பி வந்து அடைக்கலம் புகுந்தவனாகையால் அன்போடு அனுதாபமும் சேர்ந்து, அழியாத சிநேகமாக முதிர்ச்சி அடைந்தது. வெகு சீக்கிரத்தில் இணை பிரியாத தோழர்கள் ஆனார்கள். மாமல்லர் பரஞ்சோதிக்குத் தமது இருதயத்தில் எந்த ஸ்தானத்தைக் கொடுக்க விரும்பினாரோ, அந்த ஸ்தானத்தை இப்போது மானவன்மன் ஆக்கிரமித்துக் கொண்டான். உண்மையில் மாமல்லருக்கும் பரஞ்சோதிக்கும் மனமொத்த அந்தரங்க சிநேகிதம் எப்போதும் ஏற்படவேயில்லை. ஏனெனில், பரஞ்சோதியின் உள்ளத்தில் மாமல்லர் புராதன சக்கரவர்த்தி குலத்தில் உதித்தவராகையால் தாம் அவரோடு சரி நிகர் சமானமாக முடியாது என்னும் எண்ணம் எப்போதும் இருந்து வந்தது. அதோடு, ஒன்பது வருஷத்துக்கு முன்னால் வாதாபியிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து, சேனாதிபதி பரஞ்சோதி படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களில் முழுவதும் கவனத்தைச் செலுத்தியிருந்தார். ஊர் ஊராகச் சென்று வீரர்களைத் திரட்டுவதிலும், அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிப்பதிலும், அவர்களில் யானைப் படை, குதிரைப் படைகளுக்கு ஆட்களைப் பொறுக்கி அமைப்பதிலும், ஆயுதங்கள் சேகரிப்பதிலும் அவர் பரிபூரணமாய் ஈடுபட்டிருந்தார். மாமல்லரிடம் சிநேகித சல்லாபம் செய்வதற்கு அவருக்கு நேரமே இருப்பதில்லை. எனவே, மாமல்லருக்கு மனமொத்துப் பழகுவதற்கு வேறொருவர் தேவையாயிருந்தது. அந்தத் தேவையை இலங்கை இளவரசன் மானவன்மன் பூர்த்தி செய்வித்தான்.

மானவன்மன் இலங்கையிலிருந்து காஞ்சி வந்தவுடனே மாமல்லர் அவனுடைய உதவிக்காகப் பெரிய சைனியத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆனால் அப்போது வாதாபி படையெடுப்புக்காகச் சைனியம் திரட்டப்பட்டு வந்ததை மானவன்மன் அறிந்ததும் அந்தச் சைனியத்தில் ஒரு பெரும் பகுதியைப் பிரித்துக் கொண்டு போக விரும்பவில்லையென்பதைத் தெரிவித்தான். வாதாபி யுத்தம் முடியும் வரையில் அங்கேயே தான் தங்குவதாகவும், பிறகு இலங்கைக்குப் போவதாகவும் சொன்னான். இதனால் மாமல்லர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் இலங்கைக்குப் பெரிய சைனியம் அனுப்புவதற்குச் சேனாதிபதி பரஞ்சோதி ஆட்சேபிப்பார் என்ற பயம் மாமல்லருக்கு உள்ளுக்குள் இருந்தது. எனவே, மானவன்மன் இலங்கைப் படையெடுப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னது நரசிம்மவர்மருக்கு மிக்க திருப்தியையளித்தது. மானவன்மனுடைய பெருந்தன்மையைப் பற்றியும், சுயநலமில்லாத உயர்ந்த குணத்தைப் பற்றியும் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.

பின்னர், வாதாபிப் படையெடுப்புக்குரிய ஆயத்தங்களில் மானவன்மனும் பரிபூரணமாய் ஈடுபட்டான். முக்கியமாக யானைப் படைப் போரில் மானவன்மனுக்கு விசேஷ சாமர்த்தியம் இருந்தது. எனவே, யானைப் படைகளைப் போருக்குப் பயிற்சி செய்வதில் அவன் கவனத்தைச் செலுத்தினான். புலிகேசி முன்னம் படையெடுத்து வந்த போது, அவனுடைய பெரிய யானைப் படைதான் அவனுக்கு ஆரம்பத்தில் வெற்றி அளித்ததென்றும், யானைப் படை போதிய அளவில் இல்லாதபடியாலேயே மகேந்திர பல்லவர் பின்வாங்கவும் கோட்டைக்குள் ஒளியவும் நேர்ந்தது என்றும் பரஞ்சோதியும் மாமல்லரும் அறிந்திருந்தார்கள். எனவே, வாதாபிப் படையெடுப்புக்குப் பெரும் யானைப் படை சேகரிக்கத் தீர்மானித்து, சேர நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான யானைகள் தருவித்திருந்தார்கள். அந்த யானைகளைப் போருக்குப் பழக்குவதற்கு மானவன்மன் மிக்க உதவியாயிருந்தான்.

வாதாபிக்குப் படை கிளம்ப வேண்டிய தினம் நெருங்க நெருங்க, மானவன்மனுக்கும் மாமல்லருக்கும் ஒரு பெரும் வாக்குப் போர் நடக்கலாயிற்று; படையெடுப்புச் சேனையோடு தானும் வாதாபி வருவதற்கு மானவன்மன் மாமல்லரின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். மாமல்லரோ வேறு யோசனை செய்திருந்தார். அதிதியாக வந்து அடைக்கலம் புகுந்தவனைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போக அவருக்கு விருப்பம் இல்லை. அதோடு அவர் மனத்தில் இன்னொரு யோசனையும் இருந்தது; தாமும் பரஞ்சோதியும் வாதாபிக்குச் சென்ற பிறகு, காஞ்சி இராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளவும் அவசியமான போது தளவாடச் சாமான்கள், உணவுப் பொருள்கள் முதலியவை சேர்த்துப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கவும் திறமையுள்ள ஒருவர் காஞ்சியில் இருக்க வேண்டும். அதற்கு மானவன்மனை விடத் தகுந்தவர் வேறு யார்.

அன்றியும் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போவதற்கு மாமல்லரின் இதய அந்தரங்கத்தில் மற்றொரு காரணமும் இருந்தது. வாழ்வு என்பது சதமல்ல; எந்த நிமிஷத்தில் யமன் எங்கே, எந்த ரூபத்தில் வருவான் என்று சொல்ல முடியாது. அதிலும் நெடுந்தூரத்திலுள்ள பகைவனைத் தாக்குவதற்குப் படையெடுத்துப் போகும்போது, எந்த இடத்தில் உயிருக்கு என்ன அபாயம் நேரும் என்று யாரால் நிர்ணயிக்க முடியும்? புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் நிர்மூலமாக்காமல் காஞ்சிக்குத் திரும்புவதில்லையென்று மாமல்லர் தம் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். வெற்றி கிடைக்காவிட்டால் போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்யும்படியிருக்கும். அப்படி ஒருவேளை நேர்ந்தால் காஞ்சிப் பல்லவ இராஜ்யம் சின்னாபின்னமடையாமல் பார்த்துக் கொள்வதற்கும், குமாரன் மகேந்திரனைச் சிம்மாசனத்தில் ஏற்றி ஸ்திரப்படுத்துவதற்கும் யாராவது ஒரு திறமைசாலி வேண்டாமா? அந்தத் திறமைசாலி தம்முடைய நம்பிக்கைக்கு முழுதும் பாத்திரமானவனாயும் இருக்க வேண்டும்.

காஞ்சி இராஜ்யத்தையும் குமாரன் மகேந்திரனையும் நம்பி ஒப்படைத்து விட்டுப் போவதற்கு மானவன்மனைத் தவிர யாரும் இல்லை. தம் மைத்துனனாகிய ஜயந்தவர்ம பாண்டியனிடம் மாமல்லருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஜயந்தவர்மனுக்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆள வேண்டுமென்ற ஆசை இருந்ததென்பது மாமல்லருக்குத் தெரியும். பாண்டியனிடம் தமக்கு உள்ளுக்குள் இருந்த அவநம்பிக்கையை மாமல்லர் வெளியே காட்டிக் கொள்ளாமல் வாதாபி படையெடுப்புக்கு அவனுடைய உதவியைக் கோரினார். ஜயந்தவர்மனும் தன்னுடைய மகன் நெடுமாறனின் தலைமையில் ஒரு பெரிய சைனியத்தை அனுப்புவித்தான். அந்தச் சைனியந்தான் வராக நதிக்கரைக்கு அப்போது வந்திருந்தது. இப்படி மாமல்லர் பாண்டியனிடம் யுத்தத்துக்கு உதவி பெற்றாரெனினும், தம் ஆருயிர்த் தோழனான மானவன்மனிடமே முழு நம்பிக்கையும் வைத்து, அவனைக் காஞ்சியில் இருக்கச் சொல்லி விட்டுத் தாம் வாதாபி செல்வதென்று தீர்மானித்தார். மானவன்மனோ, பிடிவாதமாகத் தானும் வாதாபிக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். மேற்படி விவாதம் அவர்களுக்குள் இன்னும் முடியாமலே இருந்தது.

மாமல்லர் ரதத்திலிருந்தும் மானவன்மன் குதிரை மீதிருந்தும் கீழே குதித்தார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு மகிழ்ந்தார்கள். பிறகு மானவன்மன் ரதத்திலிருந்த ஆயனரைச் சுட்டிக்காட்டி, "அண்ணா! இந்தக் கிழவரை எதற்காக அழைத்து வந்தீர்கள். படையெடுக்கும் சைனியத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்கா? அல்லது ஒருவேளை யுத்தத்துக்கே அழைத்துப் போக உத்தேசமா?" என்று கேட்டான். அதற்கு மாமல்லர், "அதை ஏன் கேட்கிறாய், தம்பி! ஆயனக் கிழவர் எல்லார்க்கும் முன்னால் தாம் போருக்குப் போக வேண்டும் என்கிறார். அவருக்குப் போட்டியாகக் குமாரன் மகேந்திரன் தானும் யுத்தத்துக்குக் கிளம்புவேனென்கிறான். 'அண்ணா யுத்தத்துக்குப் போனால் நானும் போவேன்' என்கிறாள் குந்தவி. இதோடு போச்சா? நமது சாரதி கண்ணன் மகன் சின்னக் கண்ணன் இருக்கிறான் அல்லவா? அவன் நேற்றுக் கையிலே கத்தி எடுத்து கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து, 'சளுக்கர் தலையை இப்படித்தான் வெட்டுவேன்' என்று சொல்லிக் கொண்டே அநேகச் செடிகளை வெட்டித் தள்ளி விட்டானாம்!" என்றார்.

மானவன்மன் குறுக்கிட்டு, "ஆயனக் கிழவர், சின்னக் கண்ணன், குமார சக்கரவர்த்தி, குந்தவி தேவி ஆகிய வீரர்களைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போங்கள். என்னைப் போன்ற கையாலாகாதவர்களைக் காஞ்சியில் விட்டு விடுங்கள்!" என்றான். "அப்படியெல்லாம் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போக மாட்டேன். மாமா காஞ்சியில் இருந்தால் தானும் இருப்பதாக மகேந்திரன் சொல்கிறான்; மகேந்திரன் இருந்தால் தானும் இருப்பதாகக் குந்தவி சொல்கிறாள்" ன்றார் மாமல்லர். உடனே மானவன்மன், குமார சக்கரவர்த்தியைத் தூக்கிக் கொண்டு, "நீ ஒரு குழந்தை! நானும் ஒரு குழந்தை, நாம் இரண்டு பேரும் காஞ்சியில் இருப்போம். மற்ற ஆண் பிள்ளைகள் எல்லாம் யுத்தத்துக்குப் போகட்டும்!" என்றான். அப்போது குந்தவி, "ஏன் மாமா! உங்கள் அப்பாவுக்கு நீங்கள் குழந்தைதானே?" என்று வெடுக்கென்று கேட்டாள். மானவன்மன் குமார மகேந்திரனைத் தரையில் விட்டு விட்டுக் குந்தவியின் முன்னால் வந்து கைகட்டி வாய் புதைத்து நின்று, "தேவி! தாங்கள் இருக்குமிடத்தில் யாரும் வாயைத் திறக்கக் கூடாதல்லவா? நான் பேசியது பிசகு! மன்னிக்க வேண்டும்!" என்று வேடிக்கையான பயபக்தியோடு சொல்லவும், ஆயனர் உள்பட அனைவரும் நகைத்தார்கள்.

அன்று சாயங்காலம் மாமல்லரும் மானவன்மனும் தனிமையில் சந்தித்த போது, "அண்ணா! உண்மையாகவே ஆயனரை வாதாபிக்கு அழைத்துப் போகப் போகிறீர்களா?" என்று கேட்டான். "ஆமாம், தம்பி! இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவரை அழைத்துப் போகிறேன். முதலாவது, நம் படை வீரர்கள் தூர தேசத்தில் இருக்கும் போது காலொடிந்த கிழவரைப் பார்த்தும் அவருடைய புதல்வியை நினைத்தும் மனஉறுதி கொள்வார்கள். அதோடு, யாருக்காக இத்தகைய பெருஞ்சேனை திரட்டிக் கொண்டு படையெடுத்துச் செல்கிறோமோ, அவளை ஒருவேளை உயிரோடு மீட்க முடிந்தால், உடனே யாரிடமாவது ஒப்புவித்தாக வேண்டுமல்லவா? அவளுடைய தந்தையிடமே ஒப்புவித்து விட்டால் நம் கவலையும் பொறுப்பும் விட்டது" என்றார் மாமல்லர். அப்போது அவர் விட்ட பெருமூச்சு மானவன்மனுடைய இருதயத்தில் பெரு வேதனையை உண்டாக்கியது.



மூன்றாம் அத்தியாயம்
ருத்ராச்சாரியார்

காஞ்சி நகரமானது முன்னம் மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் கலைமகளும் திருமகளும் குதூகலமாகக் கொலுவீற்றிருக்கும் பெருநகரமாக இப்போது விளங்கியது. இருபுறமும் கம்பீரமான மாடமாளிகைகளையுடைய விசாலமான வீதிகளில் எப்போது பார்த்தாலும் 'ஜே ஜே' என்று ஜனக் கூட்டமாயிருந்தது. மாடு பூட்டிய வண்டிகளும், குதிரை பூட்டிய ரதங்களும் மனிதர் தூக்கிய சிவிகைகளும் ஒன்றையொன்று நெருங்கி வீதியையும் அடைத்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் விதவிதமான வர்ணப் பட்டாடைகளும் ஆபரணங்களும் அணிந்து அங்குமிங்கும் உலாவினார்கள்.

ஆலயங்களிலே பூஜாகாலத்து மணி ஓசையும் மங்கள வாத்தியங்களின் கோஷமும் இடைவிடாமற் கேட்டுக் கொண்டிருந்தன. சமஸ்கிருத கடிகைகளில் வேத மந்திரங்களின் கோஷமும் சைவத் தமிழ் மடங்களில் நாவுக்கரசரின் தெய்வீகமான தேவாரப் பாசுரங்களின் கானமும் எழுந்தன. சிற்ப மண்டபங்களில் கல்லுளியின் 'கல் கல்' ஒலியும், நடன மண்டபங்களில் பாதச் சதங்கையின் 'ஜல் ஜல்' ஒலியும் எழுந்து கலைப்பற்றுள்ளவர்களின் செவிகளுக்கு இன்பமளித்தன. வீதிகளை நிறைத்திருந்த ஜனக்கூட்டத்தில் இடையிடையே கத்தி கேடயங்களைத் தரித்த போர் வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் எதிர்ப்புறமாக வரும் வீரர்களைச் சந்திக்கும்போதெல்லாம் ஒருவருடைய கத்தியை ஒருவர் தாக்கி முகமன் கூறிக் கொண்டார்கள். இவ்வாறு வீரர்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் ஜனங்கள் கூடி, "மாமல்லர் வாழ்க!", "புலிகேசி வீழ்க!" "காஞ்சி உயர்க!", "வாதாபி அழிக!" என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

கலகலப்பு நிறைந்த காஞ்சி நகரின் வீதிகளின் வழியாக மாமல்ல சக்கரவர்த்தியின் ரதம் சென்று, பிரசித்திபெற்ற ருத்ராச்சாரியாரைத் தலைமை ஆசிரியராகக் கொண்ட சம்ஸ்கிருத கடிகையின் வாசலை அடைந்து நின்றது. உள்ளேயிருந்து ஆசிரியரும் மாணாக்கருமாகச் சிலர் வெளிவந்து "ஜய விஜயீபவ!" என்று கோஷித்துச் சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். மாமல்லரும், மானவன்மனும் கடிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அந்த நாளில் பரதகண்டத்திலேயே மிகப் பிரபலமாக விளங்கிய அந்தச் சர்வ கலாசாலையின் கட்டடம் மிக விஸ்தாரமாயிருந்தது. அழகான வேலைப்பாடமைந்த தூண்கள் தாங்கிய மண்டபங்களிலே ஆங்காங்கு வெவ்வேறு வகை வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. ரிக் வேதம், யஜூர்வேதம், சாமவேதம் ஆகியவற்றை வெவ்வேறு மண்டபங்களில் தனித்தனியாக வித்தியார்த்திகள் அத்தியயனம் செய்து கொண்டிருந்தார்கள்.

வேதங்களிலும் வேதாகமங்களிலும் பூரணப் பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் காஞ்சி கடிகையிலேதான் உண்டு என்பது தேசமெங்கும் பிரசித்தமாயிருந்தது. இன்னும் வெவ்வேறு மண்டபங்களில் சாஸ்திர ஆராய்ச்சியும், காவிய படனமும் நடந்து கொண்டிருந்தன. ஒரு மண்டபத்தில் வியாகரண சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு மண்டபத்தில் வால்மீகி இராமாயணம் படிக்கப்பட்டது. இன்னொரு மண்டபத்தில் பகவத் கீதை பாராயணம் நடந்தது. வேறொரு மண்டபத்தில் காளிதாசனுடைய சாகுந்தல நாடகத்தை மாணவர்கள் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் மாமல்லரும் மானவன்மனும் மேலே சென்றார்கள். கடைசியாக அவர்கள் வந்து சேர்ந்த மண்டபம், சிறிதும் சந்தடியில்லாத நிசப்தமான ஒரு மூலையில் இருந்தது. அந்த மண்டபத்தின் மத்தியில் போட்டிருந்த கட்டிலில், கிருஷ்ணாஜினத்தின் மீது ஒரு தொண்டுக் கிழவர் சாய்ந்து படுத்திருந்தார். தும்பை மலர்போல நரைத்திருந்த அவருடைய தாடி நீண்டு வளர்ந்து தொப்புள் வரையில் வந்திருந்தது. அவருடைய சடா மகுடம் வெள்ளை வெளேரென்று இலங்கியது. இந்தக் கிழவர் தான் அந்தப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கடிகையின் தலைவர் ருத்ராச்சாரியார். அவர் படுத்திருந்த கட்டிலுக்கருகில் ஆசிரியர்கள் நாலு பேர் தரையிலே உட்கார்ந்து தைத்திரீய உபநிஷதம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாமல்லரின் வருகையைப் பார்த்ததும் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு எழுந்து சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்திவிட்டு அப்பால் சென்றார்கள். "பல்லவேந்திரா! தங்களை எழுந்து வரவேற்பதற்கும் அசக்தனாகப் போய் விட்டேன் மன்னிக்க வேண்டும். விஜயதசமி அன்று புறப்படுகிறீர்கள் அல்லவா?" என்று ஆச்சாரியார் கேட்டார். "புறப்படுவதற்கு எல்லா ஆயத்தமும் ஆகிவிட்டது. ஆனால், பாண்டிய குமாரன் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக் கரையிலேயே தங்கியிருக்கிறான். ஏதோ தேக அசௌக்கியம் நேர்ந்து விட்டதாம்!" "பிரபு! பாண்டியன் வந்தாலும், வராவிட்டாலும் நீங்கள் விஜயதசமியன்று கிளம்பத் தவற வேண்டாம். இந்த விஜயதசமி போன்ற கிரக நட்சத்திரச் சேர்க்கை ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஏற்படும். இராமபிரான் இலங்காபுரிக்குப் படையெடுத்துப் புறப்பட்டது இம்மாதிரி நாளிலேதான்."

"அப்படியானால் இராமபிரானைப் போலவே நானும் வெற்றியுடன் திரும்புவேன் அல்லவா?" என்று மாமல்லர் கேட்டார். "அவசியம் விஜய கோலாகலத்துடன் திரும்புவீர்கள். ஆனால், அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாது." "குருதேவா! அப்படிச் சொல்லக் கூடாது!" என்று மாமல்லர் பரிவுடனே கூறினார். "அதனால் என்ன? நான் இவ்வுலகை விட்டு மேல் உலகம் போன போதிலும் இந்தக் காஞ்சியையும் கடிகையையும் என்னால் மறந்திருக்க முடியாது. மாமல்லரே! தாங்கள் வதாபியிலிருந்து திரும்பிவரும் நாளில் நான் தங்கள் தந்தை மகேந்திர சக்கரவர்த்தியையும் அழைத்துக் கொண்டு இந்தக் கடிகைக்கு மேலே வந்து நிற்பேன். நாங்கள் இருவரும் தேவலோகத்துப் பாரிஜாத மலர்களைத் தூவித் தங்களை வரவேற்போம்" என்று ருத்ராச்சாரியார் கூறியபோது மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் கசிந்தது.



நான்காம் அத்தியாயம்
நாவுக்கரசர்

ஏகாம்பரேசுவரர் கோயில் சந்நிதியில் இருந்த சைவத் திருமடத்திலும் அன்று மிக்க கலகலப்பாக இருந்தது. திருநாவுக்கரசர் பெருமான் சில நாளாக அந்த மடத்தில் எழுந்தருளியிருந்தார். அப்பெரியாரின் இசைப்பாடல்களை மாணாக்கர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நாவுக்கரசர் அப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆயனச் சிற்பியின் கண்களும் கசிவுற்றிருந்தன. ஏகாம்பரேசுவரர் கோயிலில் உச்சிக் கால பூஜைக்குரிய மணி அடித்தது; பேரிகை முழக்கமும் கேட்டது. மாணாக்கர்கள் பதிகம் பாடுவதை நிறுத்தி உணவு கொள்வதற்காகச் சென்றார்கள்.

நாவுக்கரசரும் ஆயனரும் மட்டும் தனித்திருந்தார்கள். "சிற்பியாரே! பத்து வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் உம்முடைய புதல்வி அபிநயம் பிடித்தாள். அந்தக் காட்சி என் கண் முன்னால் இன்னமும் அப்படியே நிற்கிறது. 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்று மாணாக்கர்கள் சற்றுமுன் பாடியபோது உம் புதல்வியை எண்ணிக் கொண்டேன். என்னை அறியாமல் உடனே கண்ணீர் பெருகிவிட்டது" என்றார். "அடிகளே! எனக்கும் அந்த நினைவு வந்தது; அன்றைக்கு நாங்கள் புறப்படும் போது என்னைப் பின்னால் நிறுத்தித் தாங்கள் எச்சரித்தபடியே நடந்துவிட்டது." "ஆம், ஆயனரே! எனக்கும் அது ஞாபகம் வருகிறது. 'இப்பேர்ப்பட்ட தெய்வீக கலைத்திறமை பொருந்திய பெண்ணுக்கு உலக வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றும் வராமல் இருக்க வேண்டுமே!' என்ற கவலை ஏற்பட்டது, அதைத்தான் உம்மிடம் சொன்னேன்.

"சுவாமி, தங்களுடைய திரு உள்ளத்தில் உதயமான எண்ணம் எவ்வளவு உண்மையாய்ப் போய்விட்டது! சிவகாமிக்கு வந்த கஷ்டம் சொற்பமானதா? கனவிலும் எண்ணாத பேரிடியாக அல்லவா என் தலையில் விழுந்து விட்டது? பச்சைக் குழந்தையாகத் தொட்டிலில் கிடந்தபோதே அவளை என்னிடம் ஒப்புவித்துவிட்டு அவள் தாயார் கண்ணை மூடிவிட்டாள். அது முதல் பதினெட்டு வயது வரையில் என் கண்ணின் மணியைப் போல் அவளைப் பாதுகாத்தேன்; ஒரு நாளாவது நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததில்லை. அப்படி வளர்த்த குழந்தையைப் பிரிந்து இன்றைக்கு ஒன்பது வருஷமாயிற்று. இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அடிகளே! ஒரு பாவமும் அறியாத எங்களைக் கருணைக் கடலான பெருமான் ஏன் இத்தகைய சோதனைக்கு ஆளாக்கினார்? நாங்கள் இறைவனுக்கு என்ன அபசாரம் இழைத்தோம்?" என்று ஆயனர் கேட்ட போது, அவருடைய கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.

"ஆயனரே! வருந்த வேண்டாம்; இறைவனுடைய திருவுள்ளத்தின் இரகசியங்களை மானிடர் அறிவது கடினம். அடியேனும் என் மனமறிந்து இந்தப் பூவுலகில் யாருக்கும் எந்தத் தீமையும் செய்ததில்லை. ஆயினும் இந்தச் சட உடலும் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தது. சிற்பியாரே! அடியேன் கண்ட உண்மையை உமக்குச் சொல்கிறேன். நாம் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல! இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல. இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது. இந்தப் பாசத்தைத்தான் பெரியோர் மாயை என்கிறார்கள். மாயை நம்மைவிட்டு அகலும் போது இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம். அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான் மிஞ்சி நிற்கக் காண்போம்."

"சுவாமி! தங்களுடைய அமுத மொழிகளில் அடங்கிய உண்மையை நான் உணர்கிறேன். ஆயினும், என்னைவிட்டுப் பாசம் அகலவில்லையே? என்ன செய்வேன்?" "பாசம் அகலுவதற்கு வழி இறைவனை இறைஞ்சி மன்றாடுவதுதான்!" என்றார் நாவுக்கரசர். "நான் மன்றாடவில்லையா? மன்றாடியை எண்ணி, இடைவிடாமல் மன்றாடிக் கொண்டுதானிருக்கிறேன். ஆயினும் என் மகள் மேல் உள்ள பாசம் விடவில்லையே! ஈசனைப் பிரார்த்திக்க நினைக்கும் போதெல்லாம் தூர தேசத்திலே, பகைவர்களின் கோட்டையிலே சிறையிருக்கும் என் மகளின் நினைவுதானே வருகிறது? 'இறைவா! என் மகளைக் காப்பாற்று, என் வாழ்நாள் முடிவதற்குள்ளாகச் சிவகாமியை இந்தக் கண்கள் பார்க்கும்படி கருணை செய்!' என்றுதானே வரங்கேட்கத் தோன்றுகிறது! என்ன செய்வேன்!" என்று ஆயனர் கூறி விம்மினார்.

"வேண்டாம், ஆயனரே! வருந்த வேண்டாம்!" என்று அவருக்கு ஆறுதல் கூறினார், உழவாரப்படை தரித்த உத்தமர். மேலும், "உமது மனோரதந்தான் நிறை வேறப் போகிறதே. மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி படையெடுப்புக்குப் பெரும் படை திரட்டியிருக்கிறாரே? இறைவன் அருளால் உம் மகள் திரும்பி வந்து சேருவாள், கவலைப்பட வேண்டாம். அதுவரையில் நீர் என்னுடன் இந்த மடத்திலேயே தங்கியிருக்கலாமே? அரண்ய வீட்டில் தனியாக ஏன் இருக்கவேண்டும்?" என்றார்.

"அடிகளே! மன்னிக்க வேண்டும், பல்லவ சைனியத்தோடு நானும் வாதாபிக்குச் செல்கிறேன்..." என்று ஆயனர் கூறியது வாகீசருக்குப் பெரும் வியப்பை அளித்தது. "இதென்ன, ஆயனரே? போர்க்களத்தின் பயங்கரங்களைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறீர்களா? மனிதர்களின் இரத்தம் ஆறுபோல் ஓடுவதைப் பார்க்க விரும்புகிறீரா? வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கால் வேறு, கை வேறு, தலை வேறாகக் கிடக்கும் சடலங்களைப் பார்க்கப் பிரியப்படுகிறீரா?" என்று பெருந்தகையார் வினவினார். ஆயனர் சிறிது வெட்கமடைந்தவராய், "இல்லை அடிகளே! அதற்காகவெல்லாம் நான் போகவில்லை. என் மகளைப் பார்த்து அழைத்து வரலாமே என்ற ஆசையினாலே தான் போகிறேன்" என்றார்.

இந்தச் சமயத்தில் மடத்தின் வாசற்புறத்திலிருந்து சில ஸ்திரீ புருஷர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான். சேனாதிபதி பரஞ்சோதி, அவருடைய மனைவி உமையாள், நமசிவாய வைத்தியர், அவருடைய சகோதரி ஆகியவர்கள் உள்ளே வந்து நாவுக்கரசருக்கு நமஸ்கரித்தார்கள். எல்லாரும் உட்கார்ந்த பிறகு, நமசிவாய வைத்தியர், "சுவாமி விடைபெற்றுப் போக வந்தேன்" என்றார். "ஆகா! ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களா? எனக்குக் கூடத் திருவெண்காட்டு இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றிருக்கிறது. மறுபடியும் சோழ நாட்டுக்கு யாத்திரை வரும்போது தங்கள் ஊருக்கு வருவேன்" என்றார் வாகீசர்.

"இல்லை, அடிகளே! நான் திருவெண்காட்டுக்குப் போகவில்லை, வடக்கே வாதாபி நகருக்குப் போகிறேன்." "இது என்ன! காஞ்சி நகரிலே ஒருவருமே மிஞ்சமாட்டார்கள் போலிருக்கிறதே? ஆயனர்தாம் அவருடைய மகளை அழைத்து வருவதற்காகப் போகிறார்; நீர் எதற்காகப் போகிறீர் வைத்தியரே?" "வைத்தியம் செய்வதற்குத்தான் போகிறேன். சுவாமி! சைனியத்தோடு ஒரு பெரிய வைத்தியர் படையும் போகிறது. அதன் தலைவனாக நானும் போகிறேன். சளுக்கர்கள் தர்ம யுத்தம் அதர்மயுத்தம் என்ற வித்தியாசம் இன்றி யுத்தம் செய்கிறவர்கள். முனையில் விஷம் ஏற்றிய வாள்களையும் வேல்களையும் உபயோகிப்பவர்கள். நம் மகேந்திர சக்கரவர்த்தி மீது விஷக்கத்தி பாய்ந்த செய்தி தங்களுக்குத் தெரியுமே? சக்கரவர்த்திக்குச் சிகிச்சை செய்தபோது அந்த விஷத்துக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். அதன் பயனாக, யுத்தத்துக்கு நானும் வரவேண்டுமென்று பல்லவ சேனாதிபதியின் கட்டளை பிறந்தது!" என்று கூறிய நமசிவாய வைத்தியர், சேனாதிபதி பரஞ்சோதியைப் பெருமையுடன் பார்த்தார்.

"ஆ! இந்தப் பிள்ளைதான் தேசமெல்லாம் பிரசித்தி பெற்ற பல்லவ சேனாதிபதியா?" என்று கூறித் திருநாவுக்கரசர் பரஞ்சோதியை உற்றுப் பார்த்தார். "இவனுடைய முகத்தில் சாத்விகக் களை விளங்குகிறதே? மகோந்நதமான சிவபக்திப் பெருஞ் செல்வத்துக்கு உரியவனாகக் காணப்படுகிறானே? இவன் ஏன் இந்த கொலைத் தொழிலில் பிரவேசித்தான்?" என்று வினவினார். இதைக் கேட்டதும் நமசிவாய வைத்தியரும் அவருடைய சகோதரியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். உமையாளும் தன் கணவனுடைய முகத்தைச் சிறிது நாணத்துடன் பார்த்துக் குறுநகை புரிந்தாள். பரஞ்சோதியின் முகத்திலும் புன்னகை தோன்றவில்லையென்று நாம் சொல்ல முடியாது.

"சுவாமி! தங்களுடைய திருமடத்தில் சேர்ந்து தமிழ்க்கல்வி கற்பதற்காகத்தான் இவனைப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் காஞ்சிக்கு அனுப்பினோம். விதியானது இவனை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்தது. இவனோடு என்னையும் சேர்த்துக் கட்டிப் போர்க்களத்திற்கு இழுக்கிறது" என்றார். "நாவுக்கரசர் பரஞ்சோதியை இன்னொரு முறை உற்றுப் பார்த்துவிட்டு "இவனையா விதி இழுத்துச் செல்கிறது என்கிறீர்கள்! விதியையே மாற்றி அமைக்கக் கூடிய உறுதி படைத்தவன் என்று இவன் முகக் களை சொல்கிறதே?" என்றார். தளபதி பரஞ்சோதி அந்தக்கணமே எழுந்து திருநாவுக்கரசரின் அடிபணிந்து, "குருதேவரே! தங்களுடைய திருவாக்கை ஆசிமொழியாகக் கொள்கிறேன்!" என்று சொன்னார்.

பரஞ்சோதியின் தாயார் அப்போது எழுந்து நின்று வணக்கத்துடன், "சுவாமி! முன்னொரு சமயம் தாங்கள் திருவெண்காட்டுக்கு வந்திருந்தபோது இவள் தங்களை நமஸ்கரித்தாள். 'சீக்கிரம் விவாகம் ஆகவேண்டும்' என்று கூறினீர்கள். அதன்படியே விவாகம் நடந்தது" என்று சொல்லி நிறுத்தினாள். "என் வாக்குப் பலித்தது பற்றி மிகவும் சந்தோஷம், அம்மா!" என்றார் வாகீசப் பெருமான். "தங்களுடைய திருவாக்கிலே எது வந்தாலும் அது பலிக்கும். கருணை கூர்ந்து இவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்படி ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அந்த மூதாட்டி கூறினாள். திருநாவுக்கரசர் மலர்ந்த முகத்துடன் பரஞ்சோதியையும் உமையாளையும் பார்த்தார். கதைகளிலும் காவியங்களிலும் பிரசித்தி பெறப்போகும் உத்தமமான புதல்வன் இவர்களுக்கு உதிப்பான்!" என்று அருள் புரிந்தார்.



ஐந்தாம் அத்தியாயம்
மாமல்லரின் பயம்

காஞ்சி அரண்மனையின் மேல் உப்பரிகையில் பளிங்குக் கல் மேடையில், விண்மீன் வைரங்கள் பதித்த வான விதானத்தின் கீழ், மாமல்லரும் மானவன்மனும் அமர்ந்திருந்தார்கள். இலட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த காஞ்சி மாநகரத்தில், அப்போது அசாதாரண நிசப்தம் குடிகொண்டிருந்தது. மாமல்லர், அந்த நள்ளிரவில், காஞ்சி நகரின் காட்சியை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்து விட்டு, ஒரு பெருமூச்சு விட்டார். "இந்தப் பெருநகரம் இன்றைக்கு அமைதியாகத் தூங்குகிறது. நாளைக்கு இந்நேரம் ஏக அமர்க்களமாயிருக்கும். நகர மாந்தர் நகரை அலங்கரிக்கத் தொடங்குவார்கள். படை வீரர்கள் புறப்பட ஆயத்தமாவார்கள். ஆகா! நாளை இரவு இந்த நகரில் யாரும் தூங்கவே மாட்டார்கள்!" என்றார் மாமல்லர்.

"பல்லவேந்திரா! அப்படியானால் குறித்த வேளையில் புறப்படுவதென்று முடிவாகத் தீர்மானித்து விட்டீர்களா? பாண்டியன் வந்து சேராவிட்டால் கூட?" என்று மானவன்மன் கேட்டான். "விஜயதசமியன்று காலையில் ஒருவேளை சூரியன் தன் பிரயாணத்தைத் தொடங்காமல் நின்றாலும் நான் நிற்கமாட்டேன். ருத்ராச்சாரியார் சொன்னதைக் கேட்கவில்லையா, இளவரசே!" மானவன்மன் இலங்கை அரசனாக இன்னும் முடிசூட்டப்படவில்லையாதலால் 'இளவரசன்' என்றே அழைக்கப்பட்டு வந்தான். "ஆம்; ருத்ராச்சாரியார் கூறியதைக் கேட்டேன். பல்லவேந்திரா! அப்புறம் ஒரு முறை நான் தனியாகவும் ருத்ராச்சாரியாரிடம் சென்று ஜோசியம் கேட்டு விட்டு வந்தேன்."

"ஓஹோ! அப்படியா! ஆச்சாரியார் என்ன சொன்னார்?" "எல்லாம் நல்ல சமாசாரமாகத்தான் சொன்னார்." "அப்படியென்றால்?" "இலங்கைச் சிம்மாசனம் எனக்கு நிச்சயம் கிடைக்குமென்றார். அதற்கு முன்னால் பல இடையூறுகள் நேரும் என்றும் பல போர் முனைகளில் நான் சண்டை செய்வேன் என்றும் சொன்னார்." மாமல்லர் புன்னகை புரிந்து, "இவ்வளவுதானா? இன்னும் உண்டா?" என்று கேட்டார். "தாங்கள் வாதாபியைக் கைப்பற்றி, வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்களென்றும், இந்தக் காரியத்தில் இரண்டு இராஜ குமாரர்கள் தங்களுக்கு உதவி புரிவார்கள் என்றும் கூறினார்."

மாமல்லர் சிரித்துக் கொண்டே, "அந்த இரண்டு இராஜகுமாரர்கள் யார்?" என்று கேட்டார். "இதே கேள்வியை நானும் ருத்ராச்சாரியாரைக் கேட்டேன். ஜோசியத்தில் அவ்வளவு விவரமாகச் சொல்ல முடியாது என்று கூறி விட்டார்" என்றான் மானவன்மன். "என் அருமைத் தோழரே! அந்த விவரத்தை நான் சொல்கிறேன். எனக்கு வாதாபிப் போரில் உதவி செய்யப் போகிற அரச குலத்தினரில் நீர் ஒருவர். நீர் இந்தக் காஞ்சி நகரில் இருந்தபடியே எனக்கு உதவி செய்யப் போகிறீர்!...." என்று மாமல்லர் சொல்வதற்குள், இலங்கை இளவரசன் குறுக்கிட்டு, "பல்லவேந்திரா! என்னுடைய விண்ணப்பத்தை கேட்டருளுங்கள். குமார பாண்டியன் வந்து சேருவது தான் சந்தேகமாயிருக்கிறதே, அவனுடைய ஸ்தானத்தில் என்னை அழைத்துப் போகலாகாதா? தாங்கள் போர்க்களம் சென்ற பிறகு, காஞ்சி அரண்மனையில் என்னைச் சுகமாக உண்டு, உடுத்தி, உறங்கச் சொல்கிறீர்களா? இது என்ன நியாயம்!" என்று கேட்டான்.

"என் அருமைத் தோழரே! நான் உம்மைப் போருக்கு அழைத்துப் போக மறுப்பதற்கு எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது; அதை இது வரையில் சொல்லவில்லை. நீர் பிடிவாதம் பிடிப்பதால் சொல்கிறேன். ஒருவேளை போர்க்களத்தில் உமது உயிருக்கு அபாயம் நேர்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், இலங்கை இராஜ்ய வம்சத்தின் கதி என்ன ஆவது? உமது இராஜ்யத்தை அநீதியாகவும் அக்கிரமமாகவும் அபகரித்துக் கொண்டிருக்கிறவனுக்கே அல்லவா இராஜ்யம் நிலைத்துப் போய் விடும்! மானவன்மரே! இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய வம்சம் தடைப்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதில் முதன்மையான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பல்லவ வம்சத்தை விளங்க வைப்பதற்கு, எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான்; உமக்கு இல்லை. ஆகையினால் தான் முக்கியமாக உம்மை வரக் கூடாதென்கிறேன்" என்றார் மாமல்லர்.

இதைக் கேட்ட மானவன்மன் பொருள் பொதிந்த புன்னகை புரிந்த வண்ணம், "பல்லவேந்திரா! இதைப் பற்றி என் மனைவி ஸுஜாதையிடம் இப்போதே சொல்லி, அவளோடு சண்டைப் பிடிக்கப் போகிறேன். இலங்கை இரஜ வம்சத்துக்கு அவள் இன்னும் ஒரு புதல்வனைத் தராத காரணத்தினால்தானே என் வாழ்நாளில் ஓர் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப் போகிறது? உலக சரித்திரத்தில் என்றென்றைக்கும் பிரசித்தி பெறப் போகிற வாதாபி யுத்தத்தில் நான் சேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். "நண்பரே! உட்காரும், உமது துணைவியோடு சண்டை பிடிப்பதற்கு இப்போது அவசரம் ஒன்றும் இல்லை. நான் வாதாபிக்குப் புறப்பட்டுப் போன பிறகு, சாவகாசமாகத் தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்" என்றார் சக்கரவர்த்தி.

மேடையிலிருந்து எழுந்த மானவன்மன் மீண்டும் உட்கார்ந்து, "பிரபு! நள்ளிரவு தாண்டி விட்டதே? நாளை இரவுதான் யாரும் தூங்குவதற்கில்லை. இன்றைக்காவது தாங்கள் சிறிது தூங்க வேண்டாமா?" என்று கேட்டான். "என்னைத் தூங்கவா சொல்கிறீர்! எனக்கு ஏது தூக்கம்? நான் தூங்கி வருஷம் பன்னிரண்டு ஆகிறது!" என்றார் மாமல்லர். "லக்ஷ்மணர் காட்டுக்குப் போனபோது, அவருடைய பத்தினி ஊர்மிளை, அவருடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு, இரவும் பகலும் பதினாலு வருஷம் தூங்கினாளாம். அம்மாதிரி தங்களுடைய தூக்கத்தையும் யாராவது வாங்கிக் கொண்டு தூங்குகிறார்களா, என்ன?" என்று மானவன்மன் கேட்டான்.

"இளவரசே! என்னுடைய தூக்கத்தையும் ஒரு பெண்தான் கொண்டு போனாள். என்னைக் கேட்டு அவள் வாங்கிக் கொள்ளவில்லை. அவளே அபகரித்துக் கொண்டு போய் விட்டாள். ஆகா! அந்தச் சிற்பி மகள் இங்கே சமீபத்தில் அரண்ய வீட்டில் இருந்தபோதும் எனக்குத் தூக்கம் இல்லாதபடி செய்தாள். இப்போது நூறு காத தூரத்துக்கப்பால் பகைவர்களின் நகரத்தில் இருக்கும் போதும் எனக்குத் தூக்கம் பிடிக்காமல் செய்கிறாள்..." என்று மானவன்மனைப் பார்த்துச் சொல்லி வந்த மாமல்லர், திடீரென்று வானவெளியைப் பார்த்துப் பேசலானார்: சிவகாமி! ஏன் என்னை இப்படி வருத்துகிறாய்? உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகப் பகலெல்லாம் பாடுபடுகிறேனே. இரவிலே சற்று நேரம் என்னை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாதா? வாதாபியில் தனி வீட்டிலே இரவெல்லாம் நுந்தா விளக்கே துணையாக உட்கார்ந்து என்னைச் சபித்துக் கொண்டிருக்கிறாயா? தாங்காத களைப்பினால் தப்பித் தவறி நான் சற்றுத் தூங்கினால், கனவிலும் வந்து என்னை வதைக்கிறாயே? உன்னை நான் மறக்கவில்லை, சிவகாமி! உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடவில்லை. இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு!"

மாமல்லர் வெறிகொண்டவர் போல் வானவெளியைப் பார்த்துப் பேசியது, இலங்கை இளவரசனுக்குப் பயத்தை உண்டாக்கிற்று. "பல்லவேந்திரா! இது என்ன? சற்று அமைதியாயிருங்கள்" என்றான் மானவன்மன். "நண்பரே! என்னை அமைதியாயிருக்கவா சொல்கிறீர்! இந்த வாழ்நாளில் இனி எனக்கு எப்போதாவது மன அமைதி கிட்டுமா என்பதே சந்தேகந்தான். மானவன்மரே! பத்து வருஷத்துக்கு முன்பு நான் ஒரு தவறு செய்தேன். ஓர் அபலைப் பெண்ணின் ஆத்திரமான பேச்சைக் கேட்டு, அந்தக் கணத்தில் மதியிழந்து விட்டேன். நானும் சேனாதிபதியும் வாதாபியில் சிவகாமியைச் சந்தித்து அழைத்த போது, அவள் சபதம் செய்திருப்பதாகவும், ஆகையால் எங்களுடன் வர மாட்டேனென்றும் சொன்னாள். அப்போது சேனாதிபதி அவளுடைய பேச்சைக் கேட்கக் கூடாதென்றும் பலவந்தமாகக் கட்டித் தூக்கி வந்துவிட வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேளாமல் போய் விட்டேன். அந்தத் தவறை நினைத்து நினைத்துப் பத்து வருஷமாக வருந்திக் கொண்டிருக்கிறேன்."

இவ்விதம் கூறி விட்டுச் சற்று மாமல்லர் மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு கூறினார்; "மானவன்மரே! வாதாபிக்குப் படையெடுத்துச் செல்லும் நாளை நான் எவ்வளவோ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நாளைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வளவோ தீவிரமான முயற்சிகள் எல்லாம் செய்தேன். ஆனால் கடைசியாகப் புறப்படும் நாள் நெருங்கியிருக்கும் போது பயமாயிருக்கிறது....!" "என்ன? தங்களுக்கா பயம்?" என்று மானவன்மன் அவநம்பிக்கையும் அதிசயமும் கலந்த குரலில் கூறினான்.

"ஆம்! எனக்கு பயமாய்த்தானிருக்கிறது; ஆனால், போரையும் போர்க்களத்தையும் நினைத்து நான் பயப்படவில்லை. புலிகேசியைக் கொன்று, வாதாபியைப் பிடித்த பிறகு நடக்கப் போவதை எண்ணித் தான் பயப்படுகிறேன். பகைவரின் சிறையில் பத்து வருஷமாகச் சிவகாமி எனக்காகக் காத்திருக்கிறாள். அந்த நாளில் அவளுடைய குழந்தை உள்ளத்தில் தோன்றிய காதலையும் அன்று போல் இன்றும் தூய்மையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள். ஆனால், என்னுடைய நிலைமை என்ன? கலியாணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கிறேன். சிவகாமியை எந்த முகத்தோடு நான் பார்ப்பது? அவளிடம் என்ன சொல்லுவது? இதை நினைக்கும் போதுதான் எனக்குப் பயமாகயிருக்கிறது. அதைக் காட்டிலும் போர்க்களத்தில் செத்துப் போனாலும் பாதகமில்லை!" "பல்லவேந்திரா! தாங்கள் போர்க்களத்தில் உயிரை விட்டால், தங்களை நம்பி இங்கு வந்து உட்கார்ந்திருக்கும் என்னுடைய கதி என்ன? இலங்கைச் சிம்மாசனத்தில் என்னை அமர்த்துவதாகத் தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிதான் என்ன ஆவது?..." என்று நாத்தழுதழுக்கக் கேட்டான் மானவன்மன்.



ஆறாம் அத்தியாயம்
ஏகாம்பரர் சந்நிதி

பரதகண்டம் எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின் ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கோபுர வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம் திரண்டிருந்ததற்குக் காரணமாகும். ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத சோபையுடன் அன்று விளங்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின் ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச் சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள். அவர்கள் யார் யார் என்பதைச் சற்றுக் கவனிப்போம்.

எல்லாருக்கும் முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக் கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது. அவருக்கு இருபுறத்திலும் இலங்கை இளவரசர் மானவன்மரும் சேனாதிபதி பரஞ்சோதியும் நின்றார்கள். பரஞ்சோதிக்கு அடுத்தாற்போல், பல்லவ வம்சத்தின் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவனும், வேங்கி நாட்டை மீண்டும் புலிகேசிக்குப் பறி கொடுத்து விட்டுக் காஞ்சியில் வந்து அடைக்கலம் புகுந்தவனுமான அச்சுதவர்மன் அடக்க ஒடுக்கத்துடன் ின்றான். அவனுக்குப் பின்னால் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் தோன்றிய உண்மையான வஜ்ரபாஹுவும் நின்றார்கள். இன்னும் பின்னால், பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவ ராயர், மற்ற மந்திரி மண்டலத்தார், கோட்டத் தலைவர்கள் முதலியோர் ஒருவரையொருவர் நெருங்கியடித்துக் கொண்டு நின்றார்கள்.

நல்லது! எதிர்ப்பக்கத்தில் நிற்கும் பெண்மணிகளை இனி பார்க்கலாம். முதற்பார்வைக்கு, அந்தப் பெண்மணிகள் எல்லாரும் சௌந்தர்ய தேவதையின் பலவித வடிவங்களாகவே தோன்றுகிறார்கள். சிறிது நிதானித்துப் பார்த்துத்தான், அவர்களில் யார் இன்னவர் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் காலம் சென்ற மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டமகிஷி புவனமகாதேவி சாந்தமும் பக்தியுமே உருக்கொண்டாற் போன்ற தெய்வீகத் தோற்றத்துடன் நின்றார். அவருக்கு அருகில் மாமல்ல சக்கரவர்த்தியின் தர்மபத்தினியும் பாண்டிய ராஜன் திருக்குமாரியுமான வானமாதேவி நின்றாள். சக்கரவர்த்தினியோடு இணைந்து நின்று இளவரசி குந்தவிதேவி தன் கரிய விழிகளினால் குறுகுறுவென்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வானமாதேவிக்கு அருகில் பக்தியும் தூய்மையும் சௌந்தரியமுமே உருக்கொண்டவள் போல் நின்ற மற்றொரு பெண் தெய்வத்தைச் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் பதினெட்டுப் பிராயம் உடைய இந்த இளமங்கைதான் சோழ வம்சத்தின் கொடும்பாளூர்க் கிளையைச் சேர்ந்தவனான செம்பியன் வளவனுடைய திருப்புதல்வியான மங்கையர்க்கரசி. பிற்காலத்தில் பாண்டியன் நெடுமாறனின் தேவியாகி, ஞானசம்பந்தரை மதுரைக்குத் தருவித்து, சிவனடியார் கூட்டத்தில் என்றும் அழியாத புகழ்பெறப் போகிறவர், இன்னும் பல அந்தப்புரமாதரும் அங்கே இருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி நாம் தனித்தனியாகத் தெரிந்து கொள்வது அவசியமில்லையாதலால், மேலே செல்வோம்.

டண் டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச் சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன் சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின் தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய "நமப் பார்வதீ பதயே!", "ஹரஹர மகா தேவா!" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன.

தீபாராதனை சமயத்தில் பலர் பக்தியுடன் கைகூப்பி நின்றனர். பலர் கன்னத்தில் அடித்துக் கொண்டனர். இளவரசன் மகேந்திரனும் இளவரசி குந்தவியும் மற்றவர்களைப் பார்த்து விட்டுச் சடசடவென்று தங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டது, வெகு வேடிக்கையாயிருந்தது. தீபாராதனை முடிந்ததும் குமார சிவாச்சாரியார் கையில் விபூதிப் பிரஸாதத்துடன் கர்ப்பக்கிருஹத்துக்குள்ளிருந்து வெளியே வந்தார். சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார் உரத்த குரலில் கூறினார்; "காலனைக் காலால் உதைத்தவரும், சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக் கண்ணில் நெருப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி உண்டாகட்டும்! புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக! ஜய விஜயீபவா!"

இவ்விதம் சிவாச்சாரியார் சொல்லி விபூதிப் பிரஸாதத்தைச் சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அதை மாமல்லர் பக்தியுடன் பெற்று நெற்றியிலே தரித்த போது, உள்ளே சிவலிங்கத்துக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த தீபம் திடீரென்று சுடர் விட்டு எரிந்து அதிக ஒளியுடன் பிரகாசித்தது. அப்படி எரிந்த தீபப்பிழம்பிலிருந்து ஒரு சுடர் சடசடவென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. சில வினாடி நேரம் பிரகாசமான ஒளி வீசி விட்டு மங்கி அணைந்தது. இந்தச் சம்பவமானது, சக்கரவர்த்தி எந்த நோக்கத்துடன் கிளம்புகிறாரோ அந்த நோக்கம் நன்கு நிறைவேறும் என்பதற்கு ஒரு நன்னிமித்தம் என்ற எண்ணம் அங்கே கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் ஏக காலத்தில் தோன்றவே, 'ஜய விஜயீபவா!" "ஹர ஹர மகாதேவா!" என்ற கோஷங்கள் கிளம்பிக் கர்ப்பக்கிருஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் எல்லாம் அதிரச் செய்தன. பல்லவேந்திரரின் திக் விஜயத்துக்கு ஏகாம்பரநாதர் அனுமதி கொடுத்து விட்டார் என்ற செய்தி வெளி மண்டபங்களிலும் கோயில் பிராகாரங்களிலும் கோயிலுக்கு வெளியே வீதிகளிலும் கூடியிருந்த ஜனங்களிடையே பரவி எங்கெங்கும், "ஹர ஹர மகாதேவா!" என்ற கோஷத்தைக் கிளப்பிற்று. அப்படிக் காஞ்சி நகரையே மூழ்கடித்த உற்சாக ஆரவார ஜயகோஷத்தில் கலந்து கொள்ளாமல் மௌனம் சாதித்தவன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவன் பல்லவ சக்கரவர்த்தியின் ரதசாரதியான கண்ணபிரான்தான்.



ஏழாம் அத்தியாயம்
கண்ணனின் கவலை

கோபுர வாசலில் அழகிய அம்பாரிகளுடன் பட்டத்து யானைகள் நின்றன. அரண்மனையைச் சேர்ந்த தந்தப் பல்லக்குகளும் தங்கப் பல்லக்குகளும் பளபளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தன. சக்கரவர்த்தியின் அலங்கார வேலைப்பாடமைந்த ரதமும் இரண்டு அழகிய வெண்புரவிகள் பூட்டப் பெற்று நின்றது. குதிரைகளின் கடிவாளத்தை இழுத்துக் கொண்டு கண்ணபிரான் தன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லாத கவலை குடிகொண்டிருந்தது.

அந்த அழகிய தங்க ரதத்தையும் அழகே வடிவமாய் அமைந்த உயர் சாதிப் புரவிகளையும் பார்ப்பதற்காக ஜனங்கள் ரதத்தைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன், "என்ன, சாரதியாரே! முகம் ஏன் வாட்டமாயிருக்கிறது?" என்று கேட்டான். கண்ணன் அந்தக் கேள்விக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அப்போது பக்கத்தில் நின்ற இன்னொருவன், "கவலைக்குக் காரணம் கேட்பானேன்? நாளைக்குப் போர்க்களத்துக்குப் புறப்பட வேண்டுமல்லவா! பெண்சாதி பிள்ளையை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான்!" என்றான். இதைக் கேட்டதும் கண்ணபிரானுடைய கண்கள் நெருப்புத் தழல் போல் சிவந்தன. கையிலிருந்த குதிரைச் சாட்டையை அந்த உயர் சாதிக் குதிரைகள் மேல் என்றும் உபயோகிக்க நேராத அலங்காரச் சாட்டையை மேற்கண்டவாறு சொன்ன ஆளின் மீது கண்ணன் வீசினான்.

நல்லவேளையாக அந்த மனிதன் சட்டென்று நகர்ந்து கொண்டபடியால் அடிபடாமல் பிழைத்தான். சற்றுத் தூரத்தில் நின்றபடியே அந்த விஷமக்காரன், "அப்பனே! ஏன் இத்தனை கோபம்? உனக்கு யுத்தகளத்துக்குப் போக விருப்பமில்லாவிட்டால் ரதத்தை என்னிடம் கொடேன்! நான் போகிறேன்!" என்றான். அதற்குள் அவன் அருகில் நின்ற இன்னொருவன், "அடே பழனியாண்டி! எதற்காகக் கண்ணபிரானின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய்? அவனைச் சக்கரவர்த்தி நாைக்குப் புறப்படும் சேனையுடன் யுத்தகளத்துக்குப் புறப்படக் கூடாது என்று சொல்லி விட்டாராம், அது காரணமாகத்தான் அவனுக்குக் கவலை!" என்று சொல்லவும், பக்கத்தில் நின்றவர்கள் எல்லோரும் "த்ஸௌ" "த்ஸௌ" "அடடா" "ஐயோ! பாவம்!" என்று தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ஆலயத்திலிருந்து வெளிவந்த புவனமகாதேவி முதலியவர்களைக் கண்ணபிரான் அரண்மனையிலே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பினான். குதிரைகளைக் கொட்டடியில் விட்டுத் தட்டிக் கொடுத்து விட்டு கண்ணன் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கே விநோதமான ஒரு காட்சியைக் கண்டான். கண்ணனுடைய மகன் பத்து வயதுச் சிறுவன், கையில் ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியும் சுழற்றிக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் கத்தியைச் சுழற்றியபோது, ஒவ்வொரு சமயம் அவனுடைய முகமானது ஒவ்வொரு தோற்றத்தைக் காட்டியது. சில சமயம் அந்தப் பால்வடியும் முகத்தில் கோபம் கொதித்தது. சில சமயம் அந்த முகம் நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்படுவதைக் காட்டியது. சில சமயம் எதிரியை வெட்டி வீழ்த்தியதனால் ஏற்பட்ட குதூகலத்தை அந்த முகம் உணர்த்தியது!

இவ்விதம் அந்தச் சிறுவன் கத்தியைச் சுழற்றி யுத்த விளையாட்டு விளையாடுவதைச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த கமலி வெகு உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாதபடி சப்தமின்றி வீட்டுக்குள்ளே வந்த கண்ணபிரான் மேற்படி காட்சியைப் பார்த்ததும் முதலில் அவனுடைய முகத்தில் சந்தோஷப் புன்னகை உண்டாயிற்று. புன்னகை ஒரு கணத்தில் மாறி முகச் சுணுக்கம் ஏற்பட்டது. கோபமான குரலில், "முருகையா! நிறுத்து இந்த விளையாட்டை!" என்று கண்ணபிரான் அதட்டியதைக் கேட்டதும் சிறுவன் பிரமித்துப் போய் நின்றான். கமலியும், வியப்பும் திகைப்புமாகக் கண்ணனைப் பார்த்தாள்.

"தலையைச் சுற்றிக் கத்தியை வீசி எறி! குதிரை ஓட்டும் சாரதியின் மகனுக்குப் பட்டாக்கத்தி என்ன வந்தது கேடு? வேண்டுமானால் குதிரைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளையாடு! கத்தியை மட்டும் கையினால் தொடாதே! தெரியுமா?" என்று கண்ணன் கர்ஜனை புரிந்தான். இதைக் கேட்ட சிறுவன் கத்தியை இலேசாகத் தரையில் நழுவ விட்டுக் கமலியை அணுகி வந்து அவளுடைய மடியில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். கமலி, "இது என்ன கண்ணா! குழந்தையை எதற்காக இப்படி அழச் செய்கிறாய்? நாளைக்கு நீ யுத்தகளத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். திரும்பி வர எத்தனை நாள் ஆகுமோ, என்னவோ?" என்றாள்.

"கமலி! அந்த ஆசையை விட்டு விடு! உன் புருஷன் போர்க்களத்துக்குப் போகப் போவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு நான் காஞ்சி நகரத்திலேதான் இருக்கப் போகிறேன். சக்கரவர்த்தியின் கட்டளை அப்படி!" என்றான் கண்ணன். கமலியின் முகத்தில் அப்போது சொல்லி முடியாத ஏமாற்றத்தின் அறிகுறி காணப்பட்டது. "இது ஏன் கண்ணா? சக்கரவர்த்தி எதற்காக உன்னை இப்படி வஞ்சனை செய்தார்? கால் ஒடிந்த ஆயனச் சிற்பியைக் கூடப் போர்க்களத்துக்கு அழைத்துப் போகிறாராமே?" என்று கேட்டாள். "இராமர் வானர சைனியத்தோடு இலங்கைக்குப் போனாரே, அப்போது அந்த இலங்கைத் தீவைச் சமுத்திரத்தில் அமிழ்த்தி விட்டு வந்திருக்கக் கூடாதா?" என்றான் கண்ணபிரான்.

"என்ன இப்படிப் புதிர் போடுகிறாய்? இராமர் இலங்கையைச் சமுத்திரத்தில் அமிழ்த்தாததற்கும் நீ போருக்குப் போகாததற்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் கமலி. "சம்பந்தம் இருக்கிறது; இலங்கை அப்போது சமுத்திரத்தில் மூழ்கியிருந்தால், அந்த ஊர் இளவரசர் இப்போது இங்கே வந்திருக்க மாட்டார் அல்லவா? அவருக்கு ரதம் ஓட்டுவதற்காக நான் இங்கே இருக்க வேண்டுமாம்! சக்கரவர்த்தியின் கட்டளை!" "ஆஹா! அப்படியானால் மானவன்மரும் யுத்தத்துக்குப் போகப் போவதில்லையா? நமது சக்கரவர்த்தியும் அவரும் சிநேகிதம் என்று சொல்கிறார்களே?" "பிராண சிநேகிதன்தான், அதனாலேதான் இந்தத் தொல்லை நேர்ந்தது. மானவன்மர் போர்க்களத்துக்கு வந்து அவருடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், இலங்கையின் இராஜவம்சம் நசித்துப் போய் விடுமாம். மானவன்மருக்கு இன்னும் சந்ததி ஏற்படவில்லையாம். ஆகையால், இலங்கை இளவரசர் போருக்கு வரக்கூடாதென்று சக்கரவர்த்தியின் கட்டளை; அவருக்காக என்னையும் நிறுத்தி விட்டார்!"

"இதுதானே காரணம்? அப்படியானால், நீ கவலைப்பட வேண்டாம், கண்ணா! கூடிய சீக்கிரத்தில் இலங்கை இளவரசரும் நீயும் போருக்குப் புறப்படலாம்!" என்றாள் கமலி. "அது என்னமாய்ச் சொல்லுகிறாய்? என்று கண்ணபிரான் சந்தேகக் குரலில் கேட்டான். "காரணத்தோடுதான் சொல்லுகிறேன், இலங்கை இராணிக்குச் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கப் போகிறது." "ஓகோ! இலங்கை இளவரசிக்கு உடம்பு சௌக்கியமில்லை என்று சொன்னதெல்லாம் இதுதானா? "ஏகாம்பரேசுவரா! இலங்கை இளவரசிக்குப் பிறக்கும் குழந்தை, ஆண் குழந்தையாய்ப் பிறக்கட்டும்!" என்று கண்ணன் ஏகாம்பரர் ஆலயம் இருந்த திக்கு நோக்கிக் கைகூப்பி வணங்கினான்.



எட்டாம் அத்தியாயம்
வானமாதேவி

அன்றைய இரவைக் காஞ்சி வாசிகள் பகலாகவே மாற்றிக் கொண்டிருந்தார்கள். காஞ்சி நகரில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஜனங்களில் கைக் குழந்தைகளைத் தவிர யாரும் அன்றிரவு உறங்கவில்லை. நகரமெங்கும் வீதி விளக்குகள் ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தன. யானைப் படைகளும், குதிரைப் படைகளும், காலாட் படைகளும், வெண் புரவிகள் பூட்டிய ரதங்களும் வரிசை வரிசையாக நின்றன. பொழுது புலரும் சமயத்தில் அரண்மனை வாசலில் வந்து சேருவதற்கு ஆயத்தமாக அவை அணிவகுக்கப்பட்டு வந்தன. மறுநாள் காலையில் சக்கரவர்த்தி போருக்குப் புறப்படும் வைபவத்தை முன்னிட்டு நகர மாந்தர்கள் இரவெல்லாம் கண் விழித்து வீதிகளையும், வீட்டு வாசல்களையும் அலங்காரம் செய்தார்கள். முற்றிய தார்களையுடைய வாழை மரங்களையும், செவ்விளநீர்க் குலைகளையும், தோரணங்களையும், திரைச் சீலைகளையும், தென்னங் குருத்துக் கூந்தல்களையும், எங்கெங்கும் தொங்க விட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் ரிஷபக் கொடியைப் பறக்க விட்டார்கள்.

பெண்மணிகள் வீட்டுத் திண்ணைச் சுவர்களுக்கு வர்ணப் பட்டைகள் அடித்தார்கள். தெரு வாசல்களில் சித்திர விசித்திரமான கோலங்களைப் போட்டார்கள். பெரும்பாலும் போர்க்களக் காட்சிகளே அந்தக் கோலங்களில் அதிகமாகக் காணப்பட்டன. யானை வீரர்களும், குதிரை வீரர்களும் வாள்களும் வேல்களும் தரித்த காலாள் வீரர்களும் அக்கோலங்களில் காட்சியளித்தனர். ஒரு கோலத்தில் ஐந்து ரதங்களிலே பஞ்ச பாண்டவர்கள் தத்தம் கைகளில் வளைத்த வில்லும், பூட்டிய அம்புமாக காட்சி தந்தார்கள். இன்னொரு கோலத்தில் இராம லக்ஷ்மணர்கள் தசகண்ட ராவணனுடன் கோர யுத்தம் செய்யும் காட்சி தென்பட்டது. மற்றொரு கோலத்தில் மகாரதர்கள் பலருக்கு மத்தியில் அபிமன்யு தன்னந்தனியாக நின்று போராடும் காட்சி தோன்றியது. ஆஹா! காஞ்சி நகரத்துப் பெண்மணிகள் பாரத நாட்டு வீரர் கதைகளை நன்கு அறிந்திருந்ததோடு சித்திரக் கலையிலும் மிக வல்லவர்கள் என்பதிலே சந்தேகமில்லை.

சக்கரவர்த்தியின் அரண்மனையிலும் அன்றிரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்தது. அரண்மனை வாசலிலும் நிலா முற்றத்திலும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. வாழை மரங்களும் தோரணங்களும் கட்டினார்கள். செக்கச் சிவந்த மலர்க் கொத்துக்களோடு கூடிய தொண்டைக் கொடிகளைக் கட்டுக் கட்டாய்க் கொண்டு வந்து நெடுகிலும் கட்டித் தொங்கவிட்டார்கள். நிலா முற்றத்தில் வாள்களையும் வேல்களையும் நெய் தடவித் தேய்த்துத் தீட்டிக் கண்கள் கூசும்படி மின்னச் செய்தார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பூட்ட வேண்டிய ஆபரணங்களுக்கு மெருகு கொடுத்துப் பளபளக்கச் செய்தார்கள்.

வீதிகளிலும் அரண்மனை வாசலிலும் இப்படியெல்லாம் அல்லோலகல்லோலமாயிருக்க, அரண்மனையின் அந்தப்புரத்துக்குள்ளே மட்டும் அமைதி குடிகொண்டு நிசப்தமாயிருந்தது. அங்குமிங்கும் முக்கிய காரியமாகச் சென்ற தாதிகள் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசும் போது காதோடு வாய் வைத்து மிகவும் மெதுவாகப் பேசினார்கள். இதன் காரணம் அச்சமயம் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு வந்து தமது பட்டமகிஷியிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்ததுதான்.

இதுவரையில் நாம் பிரவேசித்தறியாத பல்லவ சக்கரவர்த்தியின் படுக்கை அறைக்குள்ளே, சந்தர்ப்பத்தின் முக்கியத்தைக் கருதி நாமும் இப்போது போய்ப் பார்ப்போம். நீலப் பட்டு விதானத்தாலும் முத்துச் சரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தந்தணைக் கட்டிலில் பஞ்சணைமெத்தை மீது சக்கரவர்த்தி அமர்ந்திருக்கிறார். அவருக்கெதிரில் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷி பாண்டியராஜன் குமாரி, வானமாதேவி மிக்க மரியாதையுடன் நின்று கொண்டிருக்கிறாள். சற்றுத் தூரத்தில் திறந்திருந்த வாசற்படியின் வழியாகப் பார்த்தால், அடுத்த அறையிலே தங்கக் கட்டில்களில் விரித்த பட்டு மெத்தைகளிலே பல்லவ குமாரன் மகேந்திரனும், அவன் தங்கை குந்தவியும் நிம்மதியாகத் தூங்குவது தெரிகிறது.

ஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாமல்லரை மணந்து, பல்லவ சிம்மாசனத்துக்குரியவளான பாண்டிய குமாரி வானமாதேவியை முதன் முதல் இப்போதுதான் நாம் நெருங்கி நின்று பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, பாண்டிய நாட்டுப் பெண்ணின் அழகைப் பற்றிக் கவிகளிலும் காவியங்களிலும் நாம் படித்திருப்பதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அந்த அழகெல்லாம் திரண்டு ஓர் உருவம் பெற்று நம் முன்னால் நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. அவளுடைய திருமேனியின் நிறம் செந்தாமரை மலரின் கண்ணுக்கினிய செந்நிறத்தை ஒத்திருக்கிறது. அவளுடைய திருமுகத்திலுள்ள கருவிழிகளோ, அன்றலர்ந்த தாமரை மலரில் மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்திருக்கின்றன..... இதென்ன அறியாமை? வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது? தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள்? சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம்? அப்பேர்ப்பட்ட குலத்தில் உதித்த வானமாதேவியின் சௌந்தரியத்தை நம் போன்றவர்களால் வர்ணிக்க முடியுமா?

"தேவி! புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாளைச் சூரியன் உதயமாகும்போது நானும் போருக்குப் பிரயாணமாவேன்!" என்றார் சக்கரவர்த்தி. வானமாதேவி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்திலே இரு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று தீபச் சுடரின் ஒளியில் முத்துக்களைப் போல் பிரகாசித்தன. "திரும்பி வர எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. ஒருவேளை திரும்பி வருகிறேனோ, என்னவோ! அதுவும் சொல்வதற்கில்லை. தேவி! உனக்குப் பெரும் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போகிறேன். மகேந்திரனையும் குந்தவியையும் நீ கண்ணும் கருத்துமாய் வளர்த்து வர வேண்டும். இந்தப் பல்லவ ராஜ்யத்தைப் பாதுகாத்து, மகேந்திரனுக்கு வயது வந்ததும் அவனிடம் ஒப்புவிக்க வேண்டும்!" என்று மாமல்லர் கூறியபோது, அதுவரை தலைகுனிந்து நின்று கொண்டிருந்த வானமாதேவி சக்கரவர்த்தியின் காலடியில் அமர்ந்து, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்தாள்.

"தேவி! இது என்ன? வீரபாண்டியன் குலத்தில் உதித்தவள் கணவனைப் போர்க்களத்துக்கு அனுப்பத் தயங்குகிறாயா?" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்; "பிரபு! அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை!" "பின் எதற்காக உன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின? உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது? மனத்தைத் திறந்து சொல்ல வேண்டும்" என்றார் மாமல்லர்.

"சுவாமி என்னுடைய மாங்கல்யத்தின் பலத்தைப் பற்றிச் சொன்ன அரண்மனை ஜோசியர்கள் இன்னொரு விஷயமும் சொல்லியிருக்கிறார்கள். என் கழுத்திலே மாங்கல்யத்தோடு என் நெற்றியிலே குங்குமத்தோடு, மீனாக்ஷியம்மனின் பாதமலரை நான் அடைவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை தாங்கள் திரும்பி வருவதற்குள் அவ்விதம் நேர்ந்துவிடுமோ என்று எண்ணினேன், அதனாலேதான் கண்ணீர் வந்தது. தாங்கள் வெற்றி மாலை சூடி இந்த மாநகருக்குத் திரும்பி வருவதைக் கண்ணாற் பாராமல் வானுலகத்துக்குப் போகக் கூட எனக்கு இஷ்டமில்லை!" என்று வானமாதேவி கூறியபோது, மீண்டும் அவளுடைய விசாலமான நயனங்களிலிருந்து கலகலவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின. அப்போது மாமல்லர் அந்தப் பாண்டியர் குலவிளக்கைத் தமது இரு கரங்களினாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். தமது வஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தார்.

"தேவி! நானும் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன், கேள்! புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் அழித்துவிட்டு நான் வெற்றி மாலை சூடித் திரும்பி வருவேன். திக்விஜயம் செய்து விட்டுத் திரும்பி வரும் சக்கரவர்த்தியைக் காஞ்சிநகர் வாசிகள் கண்டு களிக்கும் பொருட்டு, வெண் புரவிகள் பூட்டிய தங்க ரதத்திலே நான் ஏறி நகர்வலம் வருவேன். அப்போது என் அருகில் நீ வீற்றிுப்பாய். உன்னுடைய மடியில் மகேந்திரனும் என்னுடைய மடியில் குந்தவியும் அமர்ந்திருப்பார்கள்..."

"பிரபு! அத்தகைய ஆசை எல்லாம் எனக்கில்லை. தாங்கள் திக்விஜயத்திலிருந்து திரும்பி வருவதைக் கண்ணால் பார்க்கும் பேறு பெற்றேனானால் அதுவே போதும். தாங்கள் திரும்பி வந்த பிறகும் நான் இந்தப் பூமியில் இருக்க நேர்ந்தால், நான் இத்தனை நாளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஸ்தானத்தை, தங்கள் அருகில் வீற்றிருக்கும் பாக்கியத்தை, அதற்கு நியாயமாக உரியவளிடம் உடனே ஒப்புவித்துவிட்டு அகன்று விடுவேன். இந்த அரண்மனையில் தாங்கள் மனம் உவந்து ஒரு சிறு இடம் கொடுத்தால் இங்கேயே இருப்பேன். தங்கள் சித்தம் வேறு விதமாயிருந்தால் என் பிறந்தகத்துக்குப் போய்விடுவேன்!" என்று வானமாதேவி கூறிய மொழிகள் மாமல்லரைத் தூக்கிவாரிப் போட்டன.

"தேவி! இது என்ன? இந்த ஒன்பது வருஷமாக ஒருநாளும் சொல்லாத வார்த்தைகளைக் கூறுகிறாய்? உன்னிடம் யார் என்ன சொன்னார்கள்? எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய்?" என்று மாமல்லர் மனக் கிளர்ச்சியோடு வினவினார். "சுவாமி! இந்த அரண்மனையிலும் இந்த மாநகரிலும் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலிருக்கும் என்றா நினைத்தீர்கள்!" "நீ எதைப்பற்றிச் சொல்லுகிறாய் என்பது இன்னமும் எனக்குத் தெரியவில்லை. அரண்மனையிலும் ராஜ்யத்திலும் எல்லாருக்கும் தெரிந்த அந்த மர்மமான விஷயந்தான் என்ன?" என்று சக்கரவர்த்தி ஆர்வத்துடன் கேட்டார்.

"மர்மம் ஒன்றுமில்லை பிரபு! தாங்கள் வாதாபிக்கு எதற்காகப் படையெடுத்துச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றித்தான்." "எதற்காகப் படையெடுத்துப் போகிறேன்? அதைப்பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய்?" என்று மாமல்லர் கேட்டார். "என் வாயினால் சொல்லத்தான் வேண்டுமா? ஆயனச் சிற்பியின் மகளைச் சிறை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போகிறீர்கள்..." "ஆஹா! உனக்கும் அது தெரியுமா? எத்தனை காலமாகத் தெரியும்? எப்படித் தெரியும்?"

"எத்தனையோ காலமாகத் தெரியும், ஒன்பது வருஷத்துக்கு முன்னால் நான் இந்த அரண்மனையில் பிரவேசித்த புதிதில் தாய்மார்களும் தாதிகளும் என்னை அடிக்கடி பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அனுதாபத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு பேசினார்கள். சிறிது சிறிதாக அவர்களுடைய பேச்சுக்களிலிருந்து நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். சுவாமி! நான் தங்களுடைய பட்ட மகிஷியாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே தங்களுடைய இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பட்டமகிஷி வேறொருத்தி உண்டு என்று அறிந்து கொண்டேன்....." "அப்படித் தெரிந்திருந்தும், நீ என்னை ஒரு முறையாவது அந்த விஷயமாகக் கேட்கவில்லை. ஒன்பது வருஷத்தில் ஒரு முறையாவது என் மீது குற்றங்கூறி நிந்திக்கவில்லை. தேவி! கதைகளிலும் காவியங்களிலும் எத்தனையோ கற்பரசிகளைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன், அவர்களில் யாரும் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்று மாமல்லர் பெருமிதத்துடன் கூறினார்.

"பிரபு! தங்களுடைய வார்த்தைகள் எனக்குப் புளகாங்கிதத்தை அளிக்கின்றன. ஆனால், அந்தப் புகழுரைகளுக்கு நான் அருகதையுடையவள் அல்ல!" என்றாள் பாண்டிய குமாரி. "நீ அருகதையுடையவள் அல்ல என்றால் வேறு யார்? உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள்?"

"சுவாமி! தங்கள் பேரில் எதற்காகக் குற்றம் சொல்லவேண்டும்? குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள்? தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ஜயந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா? அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா? என் தமையன் திரும்பிவந்து தங்களை ஜயித்துவிட்டதாகச் சொன்னபோது மதுரை அரண்மனையிலே நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. தற்பெருமை மிகுந்த என் தமையனுக்குத் தங்களால் நேர்ந்த கர்வபங்கத்தைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ்ந்தோம். அப்படியும் என் அண்ணன் தங்களை விடவில்லை. தன்னுடைய வார்த்தையை நிலை நாட்டுவதற்காக எப்படியாவது என்னைத் தங்கள் கழுத்தில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்தான்...."

"தேவி! ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காகவே நான் உன்னை மணந்ததாக இன்னமும் நீ நம்புகிறாயா?" என்று நரசிம்ம வர்மர் கேட்டபோது அவருடைய முகத்தில் புன்னகை தோன்றியது. "இல்லை, பிரபு! ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. பல்லவ ராஜ்யத்தின் நன்மைக்காக என்னை மணந்தீர்கள். வடக்கேயுள்ள ராட்சதப் பகைவனோடு சண்டை போடுவதற்காகத் தெற்கேயுள்ள மன்னர்களுடன் சிநேகமாயிருக்க வேண்டுமென்று என்னை மணந்தீர்கள். என் தமையனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. தங்கள் தந்தையின் உபதேசத்தைக் கேட்டு மணந்தீர்கள். இந்த அரண்மனைக்கு வந்த சில நாளைக்குள்ளேயே இதெல்லாம் நான் தெரிந்து கொண்டேன்..." "ஆயினும் ஒரு தடவையாவது இதையெல்லாம் பற்றி என்னிடம் நீ கேட்கவில்லை. ஆகா! பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை?" என்று மனத்திற்குள் எண்ணிய வண்ணம் மாமல்லர் தன் பட்டமகிஷியின் முகத்தை உற்றுப் பார்த்தார். அந்தச் செந்தாமரை முகத்தில் கபடத்தின் அறிகுறியை அணுவளவும் அவர் காணவில்லை; எல்லையில்லாத நம்பிக்கையும் அளவு காணாத அன்பும் சாந்தமும் உறுதியும் காணப்பட்டன!

வானமாதேவி கூறினாள்: "சுவாமி! தாங்கள் எதற்காக என்னை மணந்து கொண்டீர்கள் என்பது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் எதற்காகத் தங்களை மணந்தேன் என்பது என் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது. ஜயந்தவர்மன் கொள்ளிடக் கரையில் தங்களால் முறியடிக்கப்பட்டுத் திரும்பி வந்த செய்தியைக் கேட்டபோது, என் உள்ளம் தங்களைத் தேடி வந்து அடைந்தது. அடுத்த நிமிஷத்தில், மணந்தால் தங்களையே மணப்பது, இல்லாவிடில் கன்னிகையாயிருந்து காலம் கழிப்பது என்ற உறுதி கொண்டேன்; என் விருப்பம் நிறைவேறியது. தங்களை மணக்கும் பாக்கியத்தை அடைந்தேன். தங்கள் அரண்மனையின் ஒன்பது வருஷ காலம் எவ்வளவோ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். பிரபு! இந்த ஆனந்தம் என்றென்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. சில காலமாவது மற்றவர்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமல்லவா, ஆயனர் மகளைச் சிறை மீட்டு அழைத்துக் கொண்டு தாங்கள் என்றைக்கு இந்த மாநகருக்கு திரும்பி வருகிறீர்களோ, அன்றைக்கே நான் இந்தப் புராதன பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்கச் சிம்மாசனத்திலிருந்தும், இந்தப் பூர்வீக அரண்மனையின் தந்தக் கட்டிலிலிருந்தும் கீழே இறங்கச் சித்தமாயிருப்பேன்" என்று தழுதழுத்த குரலில் கூறி வானமாதேவி கண்ணீர் ததும்பிய கரிய ண்களினால் மாமல்லரைப் பார்த்தாள். உணர்ச்சி ததும்பிய அந்த வார்த்தை ஒவ்வொன்றும் கள்ளம் இல்லாத உண்மை உள்ளத்திலேயிருந்து வந்தனவென்பதை மாமல்லர் தெளிந்து உவகை கொண்டார்.



ஒன்பதாம் அத்தியாயம்
யுத்த பேரிகை

"தேவி! இந்தப் புராதன பல்லவ சிம்மாசனம் உன்னைப் போன்ற உத்தமியைத் தனக்கு உரியவளாகப் பெறுவதற்கு எத்தனையோ காலம் தவம் செய்திருக்க வேண்டும்! உன்னைப் பட்டமகிஷியாகப் பெறுவதற்கு நான் எவ்வளவோ ஜன்மங்களில் பாக்கியம் செய்திருக்க வேண்டும்!" என்று மாமல்ல சக்கரவர்த்தி கூறிய போது, அவரது வயிரம் பாய்ந்த கம்பீரக் குரலும் தழுதழுத்தது. வானமாதேவிக்கோ புளகாங்கிதம் உண்டாயிற்று. ஏதேதோ சொல்ல வேண்டுமென்று தேவி பிரயத்தனப்பட்டாள். ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை; பல்லவேந்திரர் மேலும் கூறினார்.

"பாண்டியர் குலவிளக்கே! கேள்! நீ என்னுடைய பட்டமகிஷி மட்டுமல்ல. எனக்குப் பிறகு இச்சிம்மாசனத்திற்குரிய மகேந்திர குமாரனுடைய அன்னை. பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரஜைகளையெல்லாம் ஒரு நாளிலே ஒரு நொடியிலே வசீகரித்து, அவர்களுடைய பக்தியைக் கொள்ளை கொண்ட சக்கரவர்த்தினி. என் தந்தை மகேந்திரர் காலமான சில நாளைக்குப் பிறகு, மந்திரி மண்டலத்தார் எனக்குப் பட்டாபிஷேகம் செய்து, பல்லவ சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். அதே சிம்மாசனத்தில் என் அருகில் நீயும் வீற்றிருந்தாய். நம்மிருவருக்கும் ஆசி கூறிய எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் நாம் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் காட்சியானது, சொர்க்கலோகத்துத் தேவ சபையில் தேவேந்திரனும் இந்திராணியும் கொலு வீற்றிருப்பதைப் போல் இருக்கிறது என்று ஆசி கூறினார். அதைக் கேட்ட சபையோர் குதூகலத்துடன் ஆரவாரித்து மகிழ்ந்தார்கள். கொஞ்ச காலம் நாட்டில் மழை பெய்யாமலிருந்ததையும், நீ காஞ்சி நகர் புகுந்ததும் பெருமழை பெய்ததையும் நினைவுகூர்ந்த சபையோர், நீ சாக்ஷாத் இந்திராணியேதான், சந்தேகமில்லை என்று ஒருமுகமாகக் கூறினார்கள். செந்தமிழ்ப் புலவர்கள் உனக்கு வானமாதேவி என்று பெயர் சூட்டி வாழ்த்துப் பாடல்கள் புனைந்தார்கள். அது முதல் அரண்மனையிலும் நாடு நகரங்களிலும் உன்னை இந்திராணி என்றும், வானமாதேவி என்றும் என் பிரஜைகள் பெருமையோடு சொல்லி வருகிறார்கள். அப்பேர்ப்பட்ட உன்னை இந்தப் பல்லவ சிம்மாசனத்திலிருந்து இறக்கி விடுவதற்கு இந்த உலகிலே வேறு யாருக்கும் உரிமை கிடையாது...."

வானமாதேவி அப்போது குறுக்கிட்டு ஒரு கேள்வி கேட்டாள். "சுவாமி! இந்தப் பல்லவ சிம்மாசனத்துக்கு மட்டுந்தானே நான் உரிமையுடையவள்? தங்களுடைய இதய சிம்மாசனத்தில் எனக்கு இடம் கிடையாதல்லவா?" சற்றும் எதிர்பாராத மேற்படி கேள்வி மாமல்லரை ஒருகணம் திகைப்படையச் செய்து விட்டது. சற்று நிதானித்த பிறகு, வானமாதேவியை அன்புடன் நோக்கிச் சொன்னார்: "ஆகா! இத்தகைய சந்தேகம் உன் மனத்திலே ஏற்பட்டிருந்தும் சென்ற ஒன்பது வருஷ காலமாக என்னை ஒன்றும் கேளாமலே இருந்து வந்திருக்கிறாயல்லவா? தமிழ் மறை தந்த திருவள்ளுவ முனிவர், "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்று கூறியருளினார். அவருடைய பொய்யா மொழிக்கு நீயே உதாரணமாவாய். சாதாரணப் பெண் ஒருத்திக்கு அத்தகைய சந்தேகம் தோன்றியிருந்தால் தினம் நூறு தடவை அதைப் பற்றிக் கேட்டுக் கணவனை நரக வேதனைக்கு உள்ளாக்கியிருப்பாள்!" "பிரபு! அப்படியானால் இந்த அரண்மனையிலே நான் கேள்விப்பட்டதிலும், நாட்டிலும் நகரத்திலும் ஜனங்கள் பேசிக் கொள்வதிலும் உண்மை கிடையாதா? அதை எண்ணிக் கொண்டு நான் எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிக் கழித்ததெல்லாம் வீண் மடமைதானா?" என்று வானமாதேவி சிறிது உற்சாகத்துடன் கேட்டாள்.

"தேவி! உண்மையில்லாமல் ஒரு வதந்தி பிறக்காது. நீ கேள்விப்பட்டது முழுவதும் பொய்யல்ல. ஆனால் அது என் பூர்வ ஜன்மத்தைச் சேர்ந்த விஷயம்" என்று கூறிவிட்டு மாமல்லர் சற்று நேரம் அக நோக்குடன் இருந்தார். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு அவர் கூறியதாவது: "ஆம்! அது என் பூர்வ ஜன்மத்தின் நிகழ்ச்சி. தேய்ந்து மறைந்து போன பழைய கனவு. என்னுடைய இளம்பிராயத்தில், மகேந்திர பல்லவரின் ஏக புதல்வனாய் கவலையும் துயரமும் இன்னதென்று அறியாதவனாய் நான் வளர்ந்த காலத்தில், வானமும் பூமியும் ஒரே இன்பமயமாய் எனக்குத் தோன்றிய நாட்களில், ஒரு சிற்பியின் மகள் என் இதயத்தில் இடம்பெற்றிருந்தாள். அவளுக்காக என் உடல் பொருள் ஆவியையும் இந்தப் பல்லவ குலத்தின் பெருமையையும் தத்தம் செய்ய நான் சித்தமாயிருந்தேன். ஆனால், என்றைய தினம் அவளுடைய உள்ளத்திலே அன்பைக் காட்டிலும் ஆங்காரம் மேலிட்டு என்னுடைய இதமான வார்த்தையை உதாசீனம் செய்தாளோ, நூறு காத தூரம் நான் அவளைத் தேடிச் சென்று என்னுடன் வரும்படி அழைத்தபோது, வெறும் பிடிவாதம் காரணமாக என்னுடன் வருவதற்கு மறுத்தாளோ, அன்றே என்னுடைய இதயத்திலிருந்து அவள் விலகிச் சென்றாள். இன்னமும் அவளை நான் மறந்து விடவில்லை; மறக்க முடியவும் இல்லை. இதற்குக் காரணம் அவளுக்கு நான் அன்று கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமலிருப்பதுதான். தூர தேசத்தில் பகைவர்களுடைய கோட்டைக்குள்ளே வசிக்கும் சிவகாமியின் ஆவியானது என்னை இடைவிடாமல் சுற்றிச் சுற்றி வந்து, பகலில் அமைதியில்லாமலும், இரவில் தூக்கமில்லாமலும் செய்து வருகிறது. என்றைய தினம் அவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறேனோ, வாதாபியை வென்று, அவளை விடுதலை செய்து, அவள் தந்தையிடம் ஒப்புவிக்கிறேனோ அன்று அந்தப் பாதகியின் ஆவி என்னைச் சுற்றுவதும் நின்று போய் விடும். அன்றைக்கே அவளுடைய நினைவை என் உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து விடுவேன். பின்னர் என் மனத்திலே உன்னையும் நமது அருமைக் குழந்தைகளையும் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகோந்நதத்தையும் தவிர, வேறெதுவும் இடம்பெறாது. தேவி! நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா! அல்லது இதெல்லாம் உலகில் காமாதுரர்களான புருஷர்கள் சாதாரணமாய்ச் சொல்லும் பசப்பு வார்த்தைகள் என்றே நினைக்கிறாயா?" என்று மாமல்லர் கேட்டார்.

வானமாதேவி அந்தக்கணமே தந்தக் கட்டிலிலிருந்து கீழிறங்கி மாமல்லரின் பாதங்களைத் தொட்டு, "பிரபு! தங்களுடைய வார்த்தை எதிலும் நான் அவநம்பிக்கை கொள்ளேன். தங்களுடைய வாக்குகளுக்கு விரோதமாக என் கண்ணெதிரிலே தாங்கள் நடந்து கொள்வதாகத் தோன்றுமானால், என் கண்களின் பேரிலேதான் அவநம்பிக்கை கொள்வேன்; தங்களைச் சந்தேகிக்க மாட்டேன்!" என்றாள். சந்தேகமும் ஆங்காரமும் நிறைந்த சிவகாமியின் காதலுக்கும் இந்தத் தென் பாண்டிய நாட்டு மங்கையர் திலகத்தின் சாத்வீகப் பிரேமைக்கும் உள்ள வேற்றுமையைக் குறித்து மாமல்லரின் உள்ளம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சட்டென்று சுயநினைவு பெற்று வானமாதேவியை இரு கரங்களாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கூறினார்:

"இந்த விஷயத்தைப் பற்றி இப்போது கேட்டதே நல்லதாய்ப் போயிற்று. என் தலையிலிருந்து ஒரு பெரிய பாரத்தை நீக்கி விட்டாய். அதற்கு ஈடாக உன்னிடம் இந்தப் பெரிய ராஜ்யத்தின் பாரத்தை நான் ஒப்பவித்து விட்டுப் போகப் போகிறேன். நான் இல்லாத காலத்தில் மந்திரி மண்டலத்தார் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்றாலும், முக்கியமான காரியங்களில் உன்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டே செய்வார்கள். ஆனால், தேவி! ஒரு முக்கியமான காரியத்தை மட்டும் உன்னுடைய தனிப் பொறுப்பாக ஒப்புவிக்கப் போகிறேன். அதை அவசியம் நிறைவேற்றித் தருவதாக நீ எனக்கு வாக்களிக்க வேண்டும்" என்று சக்கரவர்த்தி கேட்டதும் வானமாதேவியின் முகத்தில் பெருமிதக் கிளர்ச்சி காணப்பட்டது. "பிரபு! இந்த அபலைப் பெண்ணினால் ஆகக்கூடிய காரியம் ஏதேனும் இருந்தால் கட்டளையிடுங்கள். அதை என்னுடைய பரமபாக்கியமாகக் கருதி நிறைவேற்றி வைக்கிறேன்!" என்றாள்.

"காரியம் இருக்கிறது, அது மிகவும் முக்கியமான காரியம். உன் சகோதரன் மகன் நெடுமாறன் ஒரு பெரிய சைனியத்துடன் வாதாபிப் படையெடுப்பில் என்னோடு சேர்ந்து கொள்வதற்காகப் புறப்பட்டான் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக்கரையில் தேக அசௌக்கியம் காரணமாகத் தங்கியிருப்பதாகவும் ஒரு வாரத்தில் காஞ்சிக்கு வந்து சேருவதாகவும் அது வரையில் நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டுமென்றும் சொல்லி அனுப்பியிருக்கிறான். அப்படி நான் தாமதிப்பது அசாத்யமான காரியம். நமது குலகுரு பார்த்துச் சொன்ன நாளில் நான் கிளம்பியே தீர வேண்டும். தேவி! வழியில் நெடுமாறன் சமணர்களின் மாய வலையிலே விழுந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியிருக்கிறது. சமணர்கள் என் மீது எப்படியாவது பழி தீர்க்க வஞ்சம் கொண்டிருப்பதை நீ அறிவாய். இந்த நிலையில் நெடுமாறனால் இவ்விடம் தீங்கு எதுவும் நேராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்."

இப்படி மாமல்லர் கூறி வாய் மூடுவதற்குள் வானமாதேவி, "பிரபு! இந்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சமும் கவலையின்றி நிம்மதியாகச் செல்லுங்கள். என் பிறந்தகத்தைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேர்வதற்கு நான் விடமாட்டேன். நெடுமாறனுக்கு அத்தகைய தீய எண்ணம் ஏதேனும் இருப்பதாகத் தெரிந்தால் இந்தக் கையிலே கத்தி எடுத்து அவனுடைய நெஞ்சிலே பாய்ச்சிக் கொன்று விடுவேன்!" என்று கம்பீரமாய் மொழிந்தாள். மாமல்லர் இலேசாகப் புன்னகை புரிந்து விட்டுக் கூறினார்: "வேண்டாம், வேண்டாம்! உன்னுடைய மல்லிகை இதழ் போல் மிருதுவான தளிர்க் கரங்கள் கத்தியைப் பிடித்தால் நோகுமல்லவா? நீ கத்தி எடுக்க வேண்டாம். அப்படி ஒரு வேளை அவசியம் நேர்ந்தால் நமசிவாய வைத்தியரைக் கேட்டு நல்ல விஷமாக வாங்கி வைத்துக் கொண்டு, அதைப் பாலிலே கலந்து கொடுத்து விடு!... ஆனால் அந்த மாதிரி அவசியம் ஒன்றும் அநேகமாக நேராது. என்னுடைய சந்தேகம் கொஞ்சமும் ஆதாரமற்றதாயிருக்கலாம். என்றாலும் இராஜ்யப் பொறுப்பு வகிப்பவர்கள் இப்படியெல்லாம் சந்தேகப்பட்டு முன் ஜாக்கிரதை செய்தல் அவசியமாயிருக்கிறது! அதிலும் யுத்தத்துக்காகத் தூரதேசத்துக்குக் கிளம்பும் போது சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமல்லவா?"

இப்படி மாமல்லர் கூறி முடித்தாரோ இல்லையோ, அரண்மனையின் கனமான நெடுஞ்சுவர்களையெல்லாம் அதிரச் செய்து கொண்டு ஒரு பெரு முழக்கம் கேட்டது. கேட்கும்போதே ரோமச் சிலிர்ப்பு உண்டாகும்படியான அந்தச் சப்தம் வெளியிலே எங்கேயோ தொலை தூரத்திலிருந்து வருகிறதா அல்லது தரைக்கு அடியிலே பாதாளத்திலேயுள்ள பூகர்ப்பத்திலேயிருந்து வருகிறதா என்று தெரியாதபடி அந்தப் படுக்கை அறைக்குள்ளே எப்படியோ புகுந்து வந்து சூழ்ந்தது. அந்தச் சப்தம் காதினால் கேட்கக் கூடிய சப்தம் மட்டும் அல்ல! உடம்பினாலே ஸ்பரிசித்து உணரக்கூடிய சப்தமாயிருந்தது. "ஆகா நடுராத்திரி ஆகி விட்டது! யுத்த பேரிகை முழங்குகிறது!" என்று மாமல்லர் துள்ளி எழுந்தார்.

அவ்வாறு மாமல்லரைத் துள்ளி எழச் செய்த யுத்தபேரிகையின் முழக்கம், அவருடைய மனக் கண்ணின் முன்னால் அதிபயங்கரமான போர்க்களங்களின் காட்சியைக் கொண்டு வந்து காட்டியது. பெரிய கருங்குன்றுகள் இடம் விட்டு நகர்ந்து ஒன்றையொன்று தாக்குவது போல், ஆயிரக்கணக்கான போர் யானைகள் கோரமாகப் பிளிறிக் கொண்டு, ஒன்றையொன்று மோதித் தாக்கின. நூறு நூறு ரதங்கள் பூமி அதிரும்படியாக விரைந்து சென்று, ஒன்றின் மீது ஒன்று இடித்துத் தூள் தூளாகி விழுந்தன. பதினாயிரக்கணக்கான குதிரைகள் வாயுவேகமாகப் பாய்ந்து சென்று போர்க்களத்தின் மத்தியில் சந்திக்க, அவற்றின் மீதிருந்த போர் வீரர்கள், கையிலிருந்த ஈட்டிகளைக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிய போது, ஈட்டிகள் மின்னலைப் போல் ஒளிவீசிக் கண்களைப் பறித்தன. லட்சக்கணக்கான போர் வீரர்கள் கூரிய வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டித் தள்ளினார்கள். பார்க்கப் பயங்கரமான இரத்த வெள்ளம் ஒரு பெரிய மாநதியின் பிரவாகத்தைப் போல் ஓடிற்று. அந்த பிரவாகத்தில் உயிரிழந்த கரிகளும், பரிகளும், காலும் கையும் தலையும் வெட்டுண்ட மனிதர்களின் உடல்களும் மிதந்து சென்றன. இந்தப் பயங்கரமான கோரக் காட்சியுடன் கலந்து கலந்து, ஒரு பெண்ணின் ஆங்காரம் நிறைந்த முகத்தோற்றமும் மாமல்லரின் அகக் காட்சியில் தென்பட்டது! அது சிற்பி மகள் சிவகாமியின் முகந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?



பத்தாம் அத்தியாயம்
மங்கையர்க்கரசி

அர்த்த ராத்திரியில் அந்தப்புரத்துக்குள்ளே புகுந்த மாமல்லரின் காதிலே ஒலித்த யுத்த பேரிகையின் முழக்கமானது, அந்தக் காஞ்சி நகரில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் காதிலும் ஒலித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித உணர்ச்சியை அந்த முழக்கம் உண்டாக்கிற்று. அந்த நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனையைச் சேர்ந்த நந்தவனத்தில், பிராயம் முதிர்ந்த ஒரு மனிதரும் கட்டழகியான ஓர் இளம் பெண்ணும் தனிமையாக உலாவிக் கொண்டிருந்தார்கள். வானத்திலே பிரகாசித்துக் கொண்டிருந்த சந்திரனோடு போட்டியிட்டுக் கொண்டு, அந்தப் பெண்ணின் வதன சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யுத்த பேரிகையின் முழக்கத்தைத் திடீரென்று கேட்டதும் பெருங்காற்றில் பூங்கொடி நடுங்குவதைப் போல், அந்த யுவதியின் உடம்பும் நடுங்கிற்று. பீதி நிறைந்த குரலில், "அப்பா! இது என்ன ஓசை?" என்று கேட்டுக் கொண்டே அந்தப் பேதைப் பெண் தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.

"குழந்தாய்! யுத்த பேரிகை முழங்குகிறது! நான் உன்னிடம் விடைபெற வேண்டிய சமயம் நெருங்கி விட்டது!" என்று அந்தப் பெரியவர் கூறினார். நிலா வெளிச்சத்தில் சற்று உற்றுப் பார்த்தோமானால் அந்த இருவரையும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆம்! அன்று பகலில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியில் புருஷர்களின் கோஷ்டியிலே அந்தப் பெரியவரும், பெண்களின் வரிசையிலே அந்த இளநங்கையும் நின்று கொண்டிருக்கவில்லையா? அந்தப் பெண்ணின் முகத்திலே அப்போது ததும்பிய பரவசமான பக்தி பாவத்தைக் கண்டு நாம் வியக்கவில்லையா? அவ்விருவரும் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அவனுடைய செல்வத் திருமகளுமேயாவர்.

கரிகால் வளவன் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் மிகப் பிரபலமாக விளங்கியிருந்த சோழ ராஜ்யமானது, நாளடைவல் சீரும் சிறப்பும் குன்றித் தெற்கே பாண்டியர்களாலும், வடக்கே பல்லவர்களாலும் நெருக்கப்பட்டு, மிக்க க்ஷீண நிலையை அடைந்ததோடு, சோழ வம்சமும் இரண்டு மூன்று கிளைகளாகப் பிரிந்து போயிருந்தது. உறையூரில் நிலைபெற்ற சோழ வம்சத்து மன்னர்கள் ஒரு சிறு ராஜ்யத்துக்கு உரியவர்களாயிருந்தார்கள். கொடும்பாளூர்க் கிளை வம்சத்தின் பிரதிநிதியாக அப்போது விளங்கிய செம்பியன் வளவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. குலத்தை விளங்க வைக்க ஒரு புதல்வி மட்டுமே இருந்தாள். அந்த அருமைக் குமாரிக்கு 'மங்கையர்க்கரசி' என்ற செல்வப் பெயரைச் செம்பியன் வளவன் சூட்டினான். ஆசை காரணமாகத் தகப்பன் சூட்டிய பெயர் என்றாலும் பெண்ணைப் பார்த்தவர்கள் அனைவரும் 'இத்தகைய பெண்ணுக்கு இந்தப் பெயரேதகும்' என்றார்கள். அப்படித் தேக சௌந்தரியத்திலும் குண சௌந்தரியத்திலும் அவள் சிறந்து விளங்கினாள்.

தன்னுடைய ஆயுள் முடிவதற்குள்ளே தன் மகளைத் தென்னாட்டின் சிறந்த இராஜவம்சம் ஒன்றில் பிறந்த இராஜகுமாரனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை செம்பியன் மனத்திலே குடிகொண்டு, இரவு பகல் அதே கவலையாக இருக்கும்படி செய்தது. இந்த நிலையில், வாதாபி படையெடுப்புச் சைனியத்தில் வந்து சேரும்படி, தென்னாட்டு மன்னர் குலத்தினர் அனைவருக்கும் மாமல்லரிடமிருந்து ஓலை வந்தது போல் அவனுக்கும் மனோரதம் நிறைவேறுவதற்கு இதுவே தருணம் என்று எண்ணி உற்சாகமடைந்தான். இந்தத் தள்ளாத பிராயத்தில் அவன் போருக்குக் கிளம்பி வந்ததற்கு முக்கிய காரணம், காஞ்சி நகரில் அச்சமயம் பல தேசத்து இராஜகுமாரர்கள் கூடியிருப்பார்களென்றும், அவர்களில் யாருக்கேனும் மங்கையர்க்கரசியை மணம் புரிவிப்பது ஒருவேளை சாத்தியமாகலாம் என்றும் அவன் நம்பியதுதான்.

"அப்பா! உண்மையாகவே என்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறீர்களா? இந்தப் பெரிய அரண்மனையில், முன்பின் தெரியாதவர்களுக்கு மத்தியில், நான் எப்படிக் காலம் கழிப்பேன்? ஒருவேளை யுத்தகளத்திலே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என் கதி என்ன ஆவது!" என்று புலம்பினாள் செம்பியன் குமாரி மங்கையர்க்கரசி. "குழந்தாய்! நமது குல தெய்வமான முருகப் பெருமான் உன்னைக் காப்பதற்கு இருக்கும் போது நீ ஏன் கவலைப்பட வேண்டும்? எந்தப் பெருமானுடைய வேலாயுதமானது மலையைப் பொடியாக்கியதோ, கடல் நீரை வற்றச் செய்ததோ, சூரனை வதைத்ததோ, பானுகோபனை சம்ஹரித்ததோ, தேவர்களுக்கு அபயப் பிரதானம் அளித்ததோ, அத்தகைய வெற்றிவேல் உனக்கு என்றும் துணையாயிருக்கும். குழந்தாய்! நீ கொஞ்சமும் அதைரியப்படாமல் எனக்கு விடைகொடுக்க வேண்டும்" என்று செம்பியன் கூறியதைக் கேட்ட மங்கையர்க்கரசி, மெய்சிலிர்த்துப் பரவச நிலை அடைந்து நின்றாள்.

அவளுடைய பக்தி பரவச நிலையைத் தெரிந்து கொள்ளாத தந்தை, "அம்மா! வேலும் மயிலும் உனக்குத் துணையாக இருப்பதோடு, மாமல்ல சக்கரவர்த்தியின் தாயார் - மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி - புவனமகாதேவியும் உனக்கு ஆதரவாக இருப்பார். உன்னைத் தன் சொந்த மகளைப் போல் பாதுகாத்து வருவதாக எனக்கு வாக்குத் தந்திருக்கிறார். நீ உன் அன்னையை இளம்பிராயத்திலே இழந்து விட்டாய். புவனமகாதேவிக்கோ சொந்தப் புதல்வி கிடையாது. உன்னைத் தன் கண்மணியைப் போல் பாதுகாத்துத் தருவதாக என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆகையால், என் செல்வ மகளே, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். போர்க்களத்துக்குப் போக எனக்குத் தைரியமாக அனுமதி கொடு!" என்றான். இதற்கும் மங்கையர்க்கரசி மறுமொழி கூறாமல் மௌனமாய் நிற்கவே செம்பியன் வளவன் இன்னமும் சொல்லலானான்.

"மகளே! நீ பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையாயிருந்தபோது, ஒரு பெரியவர் நமது வீட்டுக்கு வந்தார். அவர் உன்னைப் பார்த்தார்; உன் முகத்தை உற்றுப் பார்த்தார். உன் சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளைத் தூக்கிப் பார்த்தார். பார்த்து விட்டு, 'இந்தக் குழந்தையின் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது; இவள் பெரிய மண்டலாதிபதியின் பட்டமகிஷியாவாள்!' என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என் காதிலே இனிய தேனைப் போல் பாய்ந்தன. அன்று முதல் இராஜகுமாரன் எப்போது வரப் போகிறான், எங்கிருந்து வரப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவனைத் தேடிக் கொண்டுதான் முக்கியமாக நான் இந்தக் காஞ்சி நகருக்கு வந்தேன்!...." மங்கையர்க்கரசி அப்போது அளவில்லாத பரபரப்புடன், "அப்பா! அப்பா! நேற்றிரவு நான் ஒரு அதிசயமான கனவு கண்டேன், அதைச் சொல்லட்டுமா?" என்று கேட்டாள்.



பதினோராம் அத்தியாயம்
கனவும் கற்பனையும்

செம்பியன் வளவன் தன் மகளை அணைத்துக் கொண்டு, "அம்மா! கண்ட கனவு எல்லாம் எப்போதும் பலிப்பது கிடையாது; சில சமயம் பலிப்பதும் உண்டு. கனவுகளின் உண்மைக் கருத்தைக் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்வதோ மிக்க கடினம். ஆயினும், நீ கண்ட கனவைக் கூறு. நான் அறிந்த சொப்பன சாஸ்திரத்தை அனுசரித்து உன்னுடைய கனவு பலிக்குமா, பலிக்காதா என்று பார்த்துச் சொல்கிறேன்" என்றான். மகள் கண்டது ஏதாவது துர்ச்சொப்பனமாயிருந்தால் அதற்கு ஏதாவது நல்ல அர்த்தம் கற்பனை செய்து கூறி, அவளுக்குத் தைரியம் சொல்லி விட்டுப் போகலாம் என்று செம்பியன் நினைத்தான்.

மங்கையர்க்கரசி, "அப்பா! அந்தக் கனவை நினைத்தால் எனக்குச் சந்தோஷமாயுமிருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. இதோ பாருங்கள், இப்போது கூட என் தேகமெல்லாம் சிலிர்த்திருப்பதை...!" என்று முன் கையில் ஏற்பட்டிருந்த ரோமச் சிலிர்ப்பைச் சுட்டிக்காடி விட்டு, மேலும் கூறினாள்: "சில காலமாகவே என்னுடைய கனவில் அடிக்கடி ஒரு சுந்தரமான யௌவன புருஷர் தோன்றி வருகிறார். அவர் என்னை அன்பு கனிந்த கண்களினால் அடிக்கடி பார்க்கிறார். வெளி உலகத்தில் அத்தகைய ஒருவரை நான் பார்த்ததேயில்லை. நமது மாமல்ல சக்கரவர்த்தியைக் காட்டிலும் அவருடைய முகம் களையானது. அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'நீ எனக்கு உரியவள் அல்லவா? ஏன் என்னுடன் இன்னும் வந்து சேரவில்லை?' என்று கேட்பது போலத் தோன்றும். அப்போது என் நெஞ்சு படபடக்கும்! உடம்பெல்லாம் பதறும். நேற்று நான் கண்ட கனவிலும் அந்தச் சுந்தர புருஷர் தோன்றினார். ஆனால், மிக்க பயங்கரமான சூழலுக்கு மத்தியில் அவரை நேற்றிரவு நான் கண்டேன். அவரைச் சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு பிசாசுகள் அம்மணமாக நின்று ஏதோ கோரமான சப்தம் போட்டுக் கொண்டு கூத்தாடின. அந்தப் பிசாசுகள் ஒவ்வொன்றின் கையிலும் மயில் இறகுக் கத்தை ஒன்று இருந்தது. சில சமயம் அப்பிசாசுகள் தங்கள் மத்தியில் நின்ற சுந்தர புருஷர் மீது மயில் கத்தைகளை வீசி அடிப்பது போல் தோன்றியது! அவர் பாவம், ஏதோ ஒரு தேக உபாதையினால் கஷ்டப்படுகிறவர் போல் காணப்பட்டார். இதற்கிடையில் அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'இந்தப் பிசாசுகளிடம் நான் அகப்பட்டுக் கொண்டு விட்டேனே? என்னை நீ காப்பாற்ற மாட்டாயா?' என்று கேட்பது போலிருந்தது.

"நான் உடனே திரும்பி ஓட்ட ஓட்டமாக ஓடினேன். எங்கே ஓடுகிறோம் என்ற நினைவே இன்றி நெடுந்தூரம் ஓடினேன். கடைசியாக ஒரு கோவில் தென்பட்டது. அதற்குள் பிரவேசித்தேன், கோவிலுக்குள் ப்போது யாரும் இல்லை. அம்பிகையின் சந்நிதியை அடைந்து முறையிட்டேன். 'தாயே! என் உள்ளம் கவர்ந்த புருஷரை நீதான் காப்பாற்ற வேண்டும்!' என்று கதறினேன். 'குழந்தாய்! பயப்படாதே! என் குமாரனை அனுப்புகிறேன். அவன் உன்னுடன் வந்து உன் விருப்பத்தை நிறைவேற்றுவான்!' என்று ஒரு அசரீரி பிறந்தது. அசரீரி சொல்லி நின்றதோ இல்லையோ, அம்பிகை விக்கிரகத்தின் அருகில் திவ்யமோகன ரூபங்கொண்ட ஒரு பாலன் நின்றதைப் பார்த்தேன். 'என் குமாரனை அனுப்புகிறேன்' என்று தேவி சொன்னபடியால் வள்ளி நாயகன்தான் வரப் போகிறார் என்று எண்ணினேன். ஆனால், அங்கே நின்ற பிள்ளையோ விபூதி ருத்ராட்சம் தரித்த சிவயோகியாகக் காணப்பட்டார். இனிமையும் சாந்தமும் நிறைந்த குரலில் அந்தப் பிள்ளை, 'தாயே! என்னுடன் வா! உன் நாயகனைக் காப்பாற்றித் தருகிறேன்!' என்றார். அந்தத் தெய்வீகக் குழந்தையின் திருவாயில் 'உன் நாயகன்' என்ற வார்த்தைகள் வந்ததும், எனக்கு மெய்சிலிர்த்தது. உடனே உறக்கம் நீங்கி எழுந்து விட்டேன்! அந்தச் சுந்தர புருஷர் காப்பாற்றப்பட்டாரோ இல்லையோ என்ற சந்தேகத்தினால் இன்னமும் என் உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவின் பொருள் என்ன, அப்பா? அதனால் எனக்கு ஏதேனும் தீமை விளையுமா? அல்லது நன்மை ஏற்படுமா?" என்று புதல்வி கேட்டு வாய்மூடு முன்னே, "கட்டாயம் நன்மைதான் ஏற்படும்!" என்று செம்பியன் உறுதியாகக் கூறினான்.

சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு அச்சோழர் பெருந்தகை மேலும் கூறியதாவது; "நீ கண்ட கனவு ஏதோ தெய்வீகமாகத் தோன்றுகிறது. உன் மனதுக்கிசைந்த சுந்தர மணவாளனை நீ இங்கேயே அடையப் போகிறாய். அப்படி நீ அடையும் மணாளனுக்கு ஏதோ பெரிய கஷ்டங்கள் நேரலாமென்றும், நமது குல தெய்வமாகிய முருகப் பெருமானின் அருளால் அந்தக் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்றும் உன்னுடைய கனவிலிருந்து ஊகித்து அறிகிறேன். என் அருமை மகளே! ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இருக்க வேண்டும். நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தேடி அதிர்ஷ்டம் வந்தால் அதை நீ வேண்டாமென்று தள்ளாதே! இராஜகுலத்தில் பிறந்தவன் எவனாவது உன்னைக் கரம்பிடிக்க விரும்பினால், அப்படிப்பட்டவனை மணந்து கொள்ள இப்போதே உனக்கு நான் அனுமதி கொடுத்து விடுகிறேன். போர்க்களத்திலிருந்து நான் உயிரோடு திரும்பி வந்தால் உன்னையும் உன் மணாளனையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து ஆசீர்வதிப்பேன். ஒருவேளை போர்க்களத்தில் உயிர் துறக்கும்படி நேரிட்டால், ஆவிவடிவத்திலே திரும்பி வந்து உங்களை ஆசீர்வதித்து விட்டு அப்புறந்தான் வீர சொர்க்கத்துக்குப் போவேன்." இவ்விதம் கூறிய போது செம்பியன் வளவனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகியது. மங்கையர்க்கரசியும் தந்தையின் விசால மார்பில் முகத்தைப் பதித்துக் கொண்டு விம்மினாள்.



பன்னிரண்டாம் அத்தியாயம்
நெடுமாறன்

மங்கையர்க்கரசி கண்ட கனவின் பொருள் இன்னதென்று செம்பியன் வளவனால் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா? இவள் தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் காஞ்சிக்குத் தெற்கே பத்து காத தூரத்தில் வராக நதிக்கரையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பார்த்தோமானால், ஒரு வேளை அந்தக் கனவின் பொருளை நாம் ஊகித்தறிந்து கொள்ளலாம். நடுநிசியில் நிலவொளியில் வராக நதிக் கரையானது அதுவரையில் என்றும் கண்டறியாத காட்சி அளித்தது. மாபெரும் பாண்டிய சைனியம் அந்த நதிக்கரையில் தண்டு இறங்கி இருந்தது. ஆங்காங்கு அமைந்திருந்த கூடாரங்கள் மீது பறக்க விட்டிருந்த மீனக் கொடிகள், இளங்காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தன. யானைகளும் குதிரைகளும் ரதங்களும் வண்டிகளும் கண்ணுக்கெட்டிய தூரம் காணப்பட்டன. குளிர் அதிகமில்லாத புரட்டாசி மாதமாகையால், வீரர்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். தூக்கம் வராதவர்கள் ஆங்காங்கே கும்பல் கூடி உட்கார்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநிசியின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு சில சமயம் அவர்களுடைய சிரிப்பின் ஒலி கேட்டது. அத்தகைய கூட்டம் ஒன்றின் அருகில் சென்று அவர்கள் என்ன விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக அவ்வீரர்கள் சிறிது கவலையுடனேயே பேசிக் கொண்டிருந்தார்கள். மேலே காஞ்சியை நோக்கிப் போகாமல் மூன்று நாளாக அந்த வராக நதிக்கரையில் சைனியம் தங்கியிருப்பதைப் பற்றியும், அவர்களுடைய சேனாதிபதி நெடுமாற பாண்டியனுக்கு என்ன உடம்பு என்பது பற்றியும் அவர்கள் பேசினார்கள். "உடம்பு ஒன்றும் இல்லை; வேறு ஏதோ காரணம் இருக்கிறது!" என்று சிலர் காதோடு காரறுகச் சொன்னார்கள். "இளவரசருக்கு மோகினிப் பிசாசு பிடித்திருக்கிறது!" என்று ஒருவன் சொன்ன போது இலேசாகச் சிரிப்பு உண்டாயிற்று. "என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது? நாளைக் காலையில் காஞ்சியிலிருந்து பல்லவர் படை கிளம்பப் போகிறது. நாம் நடு வழியில் உட்கார்ந்திருக்கிறோம்!" என்றான் இன்னொருவன். "இங்கிருந்து திரும்பி மதுரைக்குத்தான் போகப் போகிறோமோ, என்னவோ?" என்றான் இன்னொருவன். "அப்படித் திரும்பிப் போவதைக் காட்டிலும் இந்த வராக நதியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம்!" என்றான் இன்னொருவன்.

"ஆகா! உயிரை மாய்த்துக் கொள்ள நல்ல வழி கண்டுபிடித்தாய்! இந்த வராக நதியில் தலைகீழாக நின்றால் தண்ணீர் மூக்கு வரையில் வரும். இந்த நதியில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள ரொம்பக் கெட்டிக்காரத்தனம் வேண்டும்" என்றான் இன்னொருவன். "எது எப்படியிருந்தாலும் நான் திரும்பிப் போகப் போவதில்லை. வாதாபியிலிருந்து அதைக் கொண்டு வருகிறேன்; இதைக் கொண்டு வருகிறேன் என்று என் காதலியிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். வெறுங்கையோடு போனால் அவள் என்ன சொல்லுவாள்?" என்றான் வேறொருவன். "வீர பாண்டியர் குலத்தில் பிறந்தவருக்கு இப்படிப்பட்ட விளக்கெண்ணெய்ச் சுபாவம் எப்படி வந்ததோ?" என்று ஒருவன் கூதனுப் பெருமூச்சு விட்டான்.

இவ்வாறெல்லாம் மேற்படி வீரர்கள் அலுத்துச் சலித்துப் பேசுவதற்குக் காரணமாயிருந்த பாண்டிய இளவரசன் நெடுமாறனை வராக நதிக்கரையோரமாக அமைந்திருந்த அவனுடைய கூடாரத்துக்குச் சென்று பார்ப்போம். ஆம்! இதோ வீற்றிருக்கும் இந்தக் கம்பீரமான சுந்தர புருஷன்தான் நெடுமாறன். பல்லவ குலம் தோன்றியதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாலிருந்து வாழையடி வாழையாக வளர்ந்து வந்த பாண்டிய மன்னர் குலத்திலே பிறந்தவன். அவனுக்கு எதிரில் ஒரு திகம்பர சமணர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மயிலிறகுக்கத்தை, சுருட்டிய பாய், கமண்டலம் ஆகியவை இருக்கின்றன. கட்டையாகவும் குட்டையாகவும் மொட்டைத் தலையுடனும் விளங்கிய அந்தத் திகம்பர சமணரைப் பார்த்து நெடுமாறன், "சுவாமி! இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று கேட்டான். அவன் கேட்டு வாய் மூடுவதற்குள்ளே எங்கேயோ வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லிய கம்பனசப்தம் உடுக்கு அடிப்பது போன்ற சப்தம் வரலாயிற்று. 'தரிரிம்' 'தரிரிம்' என்று ஒலித்த அந்தச் சப்தம் மெல்லியதாயிருந்தபோதிலும் காது வழியாக உடம்பிற்குள்ளே புகுந்து உடம்பின் ஒவ்வொரு அணுவையும் ஒரு குலுக்குக் குலுக்கியது. "அதோ! நமக்கு அழைப்பு வந்து விட்டது! இளவரசே, கிளம்புங்கள்!" என்றார் அந்தச் சமண முனிவர்.

நெடுமாறன் மறுமொழி கூறாமல் புறப்பட்டான். இருவரும் கூடாரத்திலிருந்து வெளியில் வந்து நதிக்கரையோரத்தை அடைந்தனர்! அங்கே ஒரு படகு காத்திருந்தது. அதன் இரு முனையிலும் இரு வீரர் துடுப்புடன் காத்திருந்தனர். நெடுமாறன் படகில் ஏறுவதற்கு முன் ஒருகணம் தயங்கினான். அதைப் பார்த்த சமணர் "இளவரசே! தங்களுக்கு அச்சமாயிருக்கிறதா? அப்படியானால் வர வேண்டாம்! திரும்பிப் போய் விடுங்கள்!" என்று கூறவும், நெடுமாறன் அவரைப் பார்த்து ஒரு தடவை அலட்சியமாக 'ஹூம்' என்று சொல்லி விட்டுப் படகில் முன்னதாகப் பாய்ந்து ஏறினான். சமண முனிவரும் ஏறிக் கொண்டார். வீரர்கள் சப்தம் அதிகமாகக் கேட்காத வண்ணம் துடுப்பை மெதுவாகப் போட்டு ஜாக்கிரதையாகப் படகைச் செலுத்தினார்கள். படகு அக்கரையை அடைந்தது. வீரர் இருவரையும் அங்கேயே படகுடன் காத்திருக்கும்படி சொல்லி விட்டு, நெடுமாறனும் சமண முனிவரும் மேலே சென்றார்கள்.

போகப் போக உடுக்கையின் ஒலி அதிகமாகிக் கொண்டு வந்தது. அந்த ஒலியானது ஒருவகைக் காந்த சக்தியைப் போல் நெடுமாறனைக் கவர்ந்து இழுத்தது. இனிமேல் அவன் விரும்பினாலும் திரும்பிப் போக முடியாதபடி அதன் சக்தி கணத்துக்குக் கணம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெடுமாறனின் நடையும் விரைவாகிக் கொண்டு வந்தது. கடைசியில் அவனுடைய நடை ரொம்ப வேகமாகி ஓட்டமாகவே மாறியது. "இளவரசே! நில்லுங்கள், நாம் சேர வேண்டிய இடம் இதுதான்!" என்று சமண முனிவர் கூறியது கனவிலே கேட்பது போல் நெடுமாறன் காதில் கேட்டது.

நெடுமாறன் நின்றான்; அவனுக்கு எதிரே பாறையில் குடைந்த குகை ஒன்று காணப்பட்டது. குகையின் வாசலில் இரண்டு துவாரபாலர் நின்றார்கள். உண்மையில் கல்லில் செதுக்கிய சிலைகள் தாம் அவை. எனினும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த இளவரசன் ஒருகணம் அவர்கள் உண்மையான காவலர்கள் என்றே நினைத்தான். குகைக்குள்ளேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. உடுக்கையின் சப்தமும் அக்குகைக்குள்ளிருந்து தான் வந்தது. ஆம்! இந்தப் பாறையும் குகையும் துவாரபாலர் சிலைகளும் நாம் ஏற்கெனவே பார்த்தவைதாம். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயனச் சிற்பியார் குடைந்தெடுத்த குகைதான் அது. அந்தக் குகையைத் திகம்பரசமணர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள்.



பதின்மூன்றாம் அத்தியாயம்
அகக் கண்காட்சி

திகம்பர சமணரால் வழிகாட்டப் பெற்று, நெடுமாறன் குகைக்குள்ளே நுழைந்தபோது, உள்ளிருந்து வந்த தூபப் புகையின் வாசனை அவனுடைய தலையை கிறுகிறுக்கச் செய்தது. மெதுவாகச் சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றான். சிறிது தூரம் சென்றதும் தென்பட்ட விசாலமான குகை மண்டபத்தில் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். தீப ஸ்தம்பத்தின் மீதிருந்த பெரிய அகல் விளக்கின் தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து தூபப் புகை வந்து கொண்டிருந்தது. தீபத்தின் வெளிச்சமும் தூபத்தின் புகையும் சேர்ந்து அங்கே தோன்றிய காட்சியை ஏதோ ஒரு மாயாலோகத்தின் கனவுக் காட்சியாகத் தோன்றும்படி செய்தது. நெடுமாறன் சற்று உற்றுப் பார்த்த பிறகு காட்சி சிறிது தெளிவடைந்து காணப்பட்டது. பத்துப் பன்னிரண்டு திகம்பர சமணர் வட்ட வடிவமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மந்திரத்தை ஒரே குரலில் ஒரே விதமாக ஜபித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உடுக்கை போன்ற ஒரு வாத்தியத்தைக் கையிலே வைத்து முழக்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர் பல தந்திகள் உள்ள ஒரு முழு நீளமுள்ள வீணையைக் கையில் வைத்துக் கொண்டு அதன் நரம்புகளை விரலினால் தட்டிக் கொண்டிருந்தார். இந்த இரண்டு நாதங்களும் சேர்ந்துதான் 'தரிரிம்' 'தரிரிம்' என்ற ஒலியைக் கிளப்பி நெடுமாறன் உடம்பிலுள்ள நரம்புகளையெல்லாம் புடைத்தெழச் செய்தன.

வட்ட வடிவமாக உட்கார்ந்திருந்த சமணர்களுக்கு நடுவில் ஏறக்குறையப் பதினாறு வயதுள்ள ஒரு சிறுவன் காணப்பட்டான். மேற்படி மந்திர உச்சாரணத்துக்கும் வாத்தியங்களின் ஒலிக்கும் இசைய, அவனுடைய தேகம் இலேசாக ஆடிக் கொண்டிருந்தது. அவனுடைய கண்களோ முக்கால் பங்கு மூடியிருந்தன. கண்கள் திறந்திருந்த அளவில் வெள்ளை விழி மட்டும் தெரிந்தபடியால் முகம் பயங்கரத் தோற்றத்தை அளித்தது. நெடுமாறனை அழைத்து வந்த சமண முனிவர் அவனை நோக்கிச் சமிக்ஞை செய்து, எதுவும் பேச வேண்டாமென்றும், சப்தம் செய்யாமல் உட்கார வேண்டுமென்றும் தெரிவித்தார். நெடுமாறன் அவ்விதமே சப்தம் செய்யாமல் உட்கார்ந்திருந்தான்.

மந்திர உச்சாரணம், வாத்திய முழக்கம் ஆகியவற்றின் வேகம் வரவர அதிகரித்து வந்தது. திகம்பர மண்டலத்துக்கு மத்தியிலிருந்த சிறுவனுடைய உடம்பின் ஆட்டமும் விரைவாகிக் கொண்டு வந்தது. திடீரென்று மந்திர உச்சாரணமும், வாத்திய முழக்கமும் நின்றன. சிறுவன் 'வீல்' என்று சப்தமிட்டுக் கொண்டு தரையிலே சாய்ந்தான். சற்று நேரம் அந்தக் குகை மண்டபத்தில் ஒரு பயங்கர நிசப்தம் குடிகொண்டிருந்தது. கட்டையைப் போல் கீழே கிடந்த சிறுவனின் கண்ணிமைகளும் உதடுகளும் இலேசாகத் துடித்தன. கையில் வீணை வைத்துக் கொண்டிருந்த சமணர் அதன் ஒற்றை நரம்பை இலேசாகத் தட்டி விட்டு, "தம்பி! என் குரல் உனக்குக் கேட்கிறதா?" என்று வினவினார். "கேட்கிறது, சுவாமி!" என்று அந்தச் சிறுவனின் உதடுகள் முணுமுணுத்தன. "அப்படியானால் நான் கேட்கிற கேள்விகளுக்கு விடை சொல், சற்று முன்னால் நீ இருந்த இடத்துக்கும் இப்போதுள்ள இடத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா?"

"சற்று முன்னால் நான் மலைக் குகையில் தரையில் கிடந்தேன். இப்போது ஆகாச வெளியில் மிதந்து கொண்டிருக்கிறேன். ஆகாச வெளியில் நினைத்த இடத்துக்கெல்லாம் போகக் கூடியவனாயிருக்கிறேன்." "நீ மிதக்கும் இடத்தில் உன்னைச் சுற்றி என்ன பார்க்கிறாய்?" "என்னைச் சுற்றிலும் திரள் திரளாகப் புகை மண்டலங்கள் காணப்படுகின்றன; அந்தப் புகை மண்டலங்களுக்குள்ளே எத்தனை எத்தனையோ உருவங்கள் மங்கலாகக் காணப்படுகின்றன. அவை மறைந்து தோன்றிக் கொண்டிருக்கின்றன." "தம்பி! நீ நிற்கும் இடத்திலேயே நிற்க வேண்டுமா? முன்னாலும் பின்னாலும் உன்னால் போகக்கூடுமா?" "முன்னாலும் பின்னாலும் மேலேயும் கீழேயும் நானா திசைகளிலும் நினைத்தபடியெல்லாம் நான் போகக் கூடியவனாயிருக்கிறேன்." சிறுவனிடம் மேற்படி கேள்விகளைக் கேட்ட சமணர், நெடுமாறனை நோக்கி, "பாண்டிய குமாரா! இந்தப் பிள்ளை இப்போது ரிஷப தேவரின் அருள் மகிமையில் அகக்காட்சி பெற்றிருக்கிறான். இதற்கு முன் இருபதாயிரம் ஆண்டுக் காலத்தில் நடந்தவைகளையும், இனிமேல் இருபதினாயிரம் ஆண்டுக் காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களையும் இவனால் நேருக்கு நேர் கண்டு சொல்ல முடியும்! தங்களுக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா?"

நெடுமாறன் சற்றுத் தயங்கினான், 'வருங்காலத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மேகத் திரையை விலக்கிக் கொண்டு எதிர்காச் சம்பவங்களை, தான் பார்க்க வேண்டியது அவசியந்தானா? அப்படிப் பார்ப்பதனால் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ? ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் அந்த மந்திரக் குகையிலிருந்து உடனே எழுந்து போய் விடலாமா?' மனத்தில் இப்படி நெடுமாறன் எண்ணினானே தவிர, அவனை அங்கிருந்து எழுந்து போக விடாமல், ஏதோ ஒரு சக்தி தடுத்து அவனை அங்கேயே பலமாக இருத்திக் கொண்டிருந்தது. "ஆம், அடிகளே! வாதாபி யுத்த முடிவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்ற வார்த்தைகள் நெடுமாறன் வாயிலிருந்து தாமே வெளிவந்தன. உடனே, சமணர் தரையில் கிடந்த சிறுவனை நோக்கி, "தம்பி! கொஞ்சம் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்து அங்கே என்ன பார்க்கிறாய் என்று சொல்லு!" என்றார்.

"ஆகட்டும், சுவாமி! இதோ வடதிசை நோக்கிப் போகிறேன்!" என்றான் சிறுவன். சற்றுப் பொறுத்து, "ஆ! என்ன பயங்கரம்!" என்றான். "தம்பி! அங்கே என்ன பயங்கரமான காட்சியை நீ பார்க்கிறாய்?" என்று சமணர் கேட்டார். "ஆகா! மிகப் பயங்கரமான யுத்தம் நடக்கிறது. கணக்கிலடங்காத வீரர்கள் வாட்களாலும் வேல்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு செத்து விழுகிறார்கள். எங்கே பார்த்தாலும் இரத்த வெள்ளம் ஆறாக ஓடுகிறது. பெரிய பெரிய பிரம்மாண்டமான யானைகள் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு ஒன்றையொன்று தாக்குகின்றன. யுத்தம் ஒரு பெரிய பிரம்மாண்டமான கோட்டை மதிலுக்குப் பக்கத்தில் நடக்கிறது. கோட்டையின் பிரதான வாசலில் ஒரு பெரிய கொடி பறக்கிறது. அந்தக் கொடியில் வராகத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆகா! கோட்டைக் கதவு இதோ திறக்கிறது! கணக்கற்ற வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே வருகிறார்கள். ஆ! யுத்தம் இன்னும் கோரமாக நடக்கிறது. சாவுக்குக் கணக்கேயில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பிணக்காடு, அம்மம்மா! பார்க்கவே முடியவில்லை!"

சிறுவனுடைய கண்ணிமைகள் அப்போது இலேசாகத் துடித்ததைப் பார்த்த சமண குரு, "தம்பி! பயப்படாதே! உனக்கு ஒன்றும் நேராது; இன்னும் சிறிது உற்றுப் பார். போர்க்களம் முழுவதும் பார்த்து, மிகவும் நெருக்கமான சண்டை எங்கே நடக்கிறதென்று கவனி!" என்றார். "ஆம், ஆம்! அதோ ஓரிடத்தில் பிரமாதமான கைகலந்த சண்டை நடக்கிறது. குதிரை மேல் ஏறிய வீரன் ஒருவன் இரண்டு கைகளிலும் இரண்டு வாட்கள் ஏந்திப் பயங்கரப் போர் புரிகிறான். அவனைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். அவன் தன்னந்தனியாக நின்று அவ்வளவு பேரையும் திருப்பித் தாக்குகிறான். அவனுடைய கை வாட்கள் அடிக்கடி மின்னலைப் போல் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வாள் வீச்சுக்கும் ஒரு தலை உருளுகிறது. ஆகா! இதோ அந்த வீரனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நடுவில் மீனக்கொடி பறக்கிறது. 'நெடுமாற பாண்டியர் வாழ்க! வாதாபிப் புலிகேசி வீழ்க!' என்று அவர்கள் கர்ஜித்துக் கொண்டு எதிரிகள் மீது பாய்கிறார்கள்." இப்படி அந்தச் சிறுவன் சொன்னபோது, இதுவரை சிறிது அலட்சிய பாவத்துடனேயே கேட்டுக் கொண்டு வந்த நெடுமாறன் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். மேலே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அப்போது அளவில்லாத பரபரப்பு உண்டாயிற்று.

மறுபடியும் சிறிது நேரம் சிறுவன் பேசாதிருந்தான். சமண குரு மீண்டும் அவனைத் தூண்டினார். மேலே என்ன நடக்கிறது என்று நன்றாகப் பார்த்துக் கூறும்படி ஆக்ஞாபித்தார். "ஆகா! சண்டை முடிந்து விட்டது, எதிரிகள் எல்லாரும் செத்து விழுந்து விட்டார்கள். வெற்றியடைந்த வீரர்கள் அந்த அஸகாய சூரனைச் சூழ்ந்து கொண்டு, 'மீன் கொடி வாழ்க! நெடுமாற பாண்டியர் நீடூழி வாழ்க!' என்று கோஷிக்கிறார்கள். ஆகா! அவர்களுடைய கோஷமும் ஜயபேரிகைகளின் முழக்கமும் சேர்ந்து காது செவிடுபடச் செய்கின்றன."

"அதோ இன்னொரு வீரர் கும்பல் வருகிறது; அந்தக் கும்பலின் நடுவில் ஒரு ரதம் காணப்படுகிறது. ரதத்தின் மேல் ரிஷபக் கொடி பறக்கிறது. ரதத்தில் கம்பீர வடிவமுள்ள ஒருவர் வீற்றிருக்கிறார். அவருடைய முகத்தில் குரோதம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரதத்தைச் சூழ்ந்து வரும் வீரர்கள் 'மாமல்ல சக்கரவர்த்தி வாழ்க! என்று கோஷம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கோஷத்தில் அவ்வளவு சக்தி இல்லை. இரண்டு கூட்டமும் சந்திக்கிறது. ரதத்தில் வந்தவரும் குதிரை மேலிருந்தவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். இரண்டு பேரும் கீழே இறங்குகிறார்கள், சமீபத்தில் வருகிறார்கள். மீனக்கொடிக்குரிய வீரர், ரிஷபக் கொடிக்கு உரியவரைப் பார்த்து, 'மாமல்லரே! பகைவர்கள் ஒழிந்தார்கள்; புலிகேசி இறந்தான்; வாதாபிக் கோட்டை நம் வசமாகி விட்டது; இனிமேல் தங்கள் காரியம், நான் போக விடை கொடுங்கள்!' என்று கேட்கிறார். ஐயோ! ரிஷபக் கொடியாரின் முகத்தில் குரோதம் தாண்டவமாடுகிறது. அவர், 'அடே பாண்டிய பதரே! எனக்கு வர வேண்டிய புகழையெல்லாம் நீ கொண்டு போய் விட்டாயல்லவா?" என்று சொல்லிக் கொண்டே உடைவாளை உருவுகிறார். மீனக் கொடியார், 'வேண்டாம் சக்கரவர்த்தி! வேண்டாம்! நமக்குள் எதற்காகச் சண்டை?' என்கிறார். ரிஷபக் கொடியார் அதைக் கேட்காமல் உடைவாளை வீசுகிறார், ஐயையோ!"

கேட்டவர்களின் ரோமம் சிலிர்க்கச் செய்த 'வீல்' சப்தத்துடன் இத்தனை நேரமும் தரையில் படுத்துக் கிடந்த சிறுவன் எழுந்து உட்கார்ந்தான். பீதியும் வெருட்சியும் நிறைந்த கண்களை அகலமாகத் திறந்து சுற்றிலும் பார்த்துத் திருதிருவென்று விழித்தான். நெடுமாற பாண்டியன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. சமண முனிவரைப் பார்த்து, "அப்புறம் நடந்ததைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? முக்கியமான தருணத்தில் எழுந்து விட்டானே?" என்றான். "இளவரசே! இன்றைக்கு இவ்வளவுதான், மறுபடி இன்றிரவு இவனை அகக் காட்சி காணும்படி செய்ய முடியாது. பிறகு நடந்ததைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நாளைக்குத் தாங்கள் திரும்பவும் இவ்விடத்துக்கு வந்தாக வேண்டும்!" என்றார்.



பதினான்காம் அத்தியாயம்
படை கிளம்பல்

மறுநாள் விஜயதசமி அன்று காலையில் வழக்கம் போல் கீழ்த்திசையில் உதயமான சூரியன், காஞ்சி மாநகரம் அன்றளித்த அசாதாரணக் காட்சியைக் கண்டு சற்றுத் திகைத்துப் போய் நின்ற இடத்திலேயே நின்றதாகக் காணப்பட்டது. பூர்விகப் பெருமை வாய்ந்த பல்லவ அரண்மனை வாசலில் நின்று மாமல்ல சக்கரவர்த்தி யாத்ராதானம், கிரகப் ப்ரீதி ஆகிய சடங்குகளைச் செய்து விட்டு, குலகுரு ருத்ராச்சாரியார் முதலிய பெரியோர்களின் ஆசிபெற்று, தாயார் புவனமகாதேவியிடமும் பட்டமகிஷி வானமாதேவியிடமும் விடைபெற்றுக் கொண்டு பட்டத்துப் போர் யானையின் மீது ஏறிப் போர் முனைக்குப் புறப்பட்டார். அப்போது காஞ்சி நகரத்தின் மாடமாளிகைகளெல்லாம் அதிரும்படியாகவும், மண்டபங்களிலேயெல்லாம் எதிரொலி கிளம்பும்படியாகவும் அநேகம் போர் முரசுகளும் எக்காளங்களும் ஆர்த்து முழங்கின.

சக்கரவர்த்தி ஏறிய பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் அணிஅணியாக நின்ற யானைகளும் குதிரைகளும் ரதங்களும் ஏக காலத்தில் நகரத் தொடங்கிக் காஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசலை நோக்கிச் செல்லத் தொடங்கின. இந்த ஊர்வலம் காஞ்சியின் இராஜ வீதிகளின் வழியாகச் சென்ற போது இருபுறத்திலும் இருந்த மாளிகை மேல்மாடங்களிலிருந்து பூரண சந்திரனையும் பொன்னிறத் தாமரையையும் ஒத்த முகங்களையுடைய பெண்மணிகள் பல வகை நறுமலர்களையும் மஞ்சள் கலந்த அட்சதையையும் சக்கரவர்த்தியின் மீது தூவி, 'ஜய விஜயீபவ!' என்று மங்கல வாழ்த்துக் கூறினார்கள். இப்படி நகர மாந்தரால் குதூகலமாக வழி அனுப்பப்பட்ட சக்கரவர்த்தியின் போர்க்கோல ஊர்வலம் ஒரு முகூர்த்த காலத்தில் வடக்குக் கோட்டை வாசலை அடைந்தது. நன்றாகத் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாகப் பார்த்தபோது, கோட்டைக்கு வெளியிலே சற்றுத் தூரத்தில் ஆரம்பித்துக் கண்ணுக்கெட்டிய வரை பரவிய ஒரு பெரிய சேனா சமுத்திரம் காணப்பட்டது. அந்த சேனா சமுத்திரத்தின் இடையிடையே கணக்கில்லாத கொடிகள் காற்றிலே பறந்த காட்சியானது, காற்று பலமாய் அடிக்கும் போது சமுத்திரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வெண்ணுரை எறிந்து பாயும் அலைகளை ஒத்திருந்தது.

வடக்குக் கோட்டை வாசலில், அகழிக்கு அப்புறத்தில் நின்று மாமல்ல சக்கரவர்த்தி கடைசியாக விடைபெற்றுக் கொண்டது, மானவன்மரிடமும் தம் அருமைக் குழந்தைகள் இருவரிடமுந்தான். மகேந்திரனையும் குந்தவியையும் தமது இரு கரங்களாலும் வாரி அணைத்துத் தழுவிக் கொண்ட போது, 'இந்தக் குழந்தைகளை இனிமேல் எப்போதாவது காணப்போகிறோமோ, இல்லையோ?' என்ற எண்ணம் தோன்றவும், மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் ததும்பின. குழந்தைகளைக் கீழே இறக்கி விட்டு மானவன்மரைப் பார்த்து மாமல்லர் சொன்னார்; "என் அருமை நண்பரே! இந்தக் குழந்தைகளையும் இவர்களுடைய தாயாரையும் பல்லவ இராஜ்யத்தையும் உம்மை நம்பித்தான் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். நீர்தான் இவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து நான் திரும்பி வரும் போது ஒப்படைக்க வேண்டும். மானவன்மரே! பரஞ்சோதியின் அபிப்பிராயப்படி திருக்கழுக்குன்றத்தில் திரண்டிருந்த படையில் ஒரு பகுதியை நிறுத்தி விட்டுப் போகிறேன். பாண்டிய குமாரனாலோ, அவனுடைய படையினாலோ காஞ்சிக்கு அபாயம் நேர்வதாயிருந்தால், நம் படையைப் பயன் படுத்தத் தயங்க வேண்டாம்."

"ஆகட்டும், பிரபு! தங்களுக்கு இவ்விடத்துக் கவலை சிறிதும் வேண்டாம்!" என்றான் மானவன்மன். "ரொம்ப சந்தோஷம், கடைசி நேரத்தில் எங்கே நீங்களும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். இதுதான் உண்மையான சிநேகத்துக்கு அழகு!" என்று உள்ளம் உவந்து கூறினார் மாமல்லர். அப்போது மகேந்திரன் ஆயிரத்தோராவது தடவையாக, "அப்பா! நானும் வாதாபிப் போருக்கு வருகிறேன், என்னையும் அழைத்துப் போங்கள்!" என்றான். புதல்வனைப் பார்த்து மாமல்லர், "மகேந்திரா! இந்த வாதாபி யுத்தம் கிடக்கட்டும். இதைவிடப் பெரிய இலங்கை யுத்தம் வரப் போகிறது. உன் மாமாவின் இராஜ்யத்தை அபகரித்துக் கொண்டவனைப் போரில் கொன்று இராஜ்யத்தைத் திரும்பப் பெற வேண்டும் அந்த யுத்தத்துக்கு நீ போகலாம்!" என்றார்.

இவ்விதம் கூறி விட்டு மாமல்லர் சட்டென்று குழந்தைகளைப் பிரிந்து சென்று போர் யானை மீது ஏறிக் கொண்டார். அவ்வளவுதான்! அந்தப் பெரிய பிரம்மாண்டமான சைனியம் சமுத்திரமே இடம் பெயர்ந்து செல்வது போல் மெதுவாகச் செல்லத் தொடங்கியது. அவ்வளவு பெரிய சைனியம் ஏககாலத்தில் நகரும் போது கிளம்பிய புழுதிப் படலமானது வானத்தையும் பூமியையும் ஒருங்கே மறைத்தது. அந்தப் புழுதிப் படலத்தில் பல்லவ சைனியம் அடியோடு மறைந்து போகும் வரையில் மானவன்மரும், மகேந்திரனும் குந்தவியும் கோட்டை வாசலில் நின்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



பதினைந்தாம் அத்தியாயம்
குலச்சிறையார்

சென்ற அத்தியாயத்தில் கூறியபடி மாமல்ல சக்கரவர்த்தி படையுடன் புறப்பட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆயின. காஞ்சி மாநகரத்தின் வீதிகள் வழக்கமான கலகலப்பு இல்லாமல் வெறிச்சென்று கிடந்தன. பட்டணமே தூங்கி வழிந்து கொண்டிருந்தது. வழக்கத்துக்கு மாறான அந்தப் பகல் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு காஞ்சி நகர் வீதிகளில் ஒரு ரதம் கடகடவென்ற சப்தத்துடன் அதிவேகமாகப் பிரயாணம் செய்து திருநாவுக்கரசர் மடத்தின் வாசலில் வந்து நின்றது. ரதத்தை ஓட்டி வந்தவன் வேறு யாருமில்லை, நம் பழைய நண்பன் கண்ணபிரான்தான்.

ரதத்திலிருந்து நாம் இதுவரையில் பார்த்திராத புது மனிதர் ஒருவர் - இளம் பிராயத்தினர் - இறங்கினார். சிறந்த பண்பாடு, முதிர்ந்த அறிவு, உயர் குடிப்பிறப்பு ஆகியவற்றினால் ஏற்பட்ட களை அவர் முகத்தில் ததும்பியது. கீழே இறங்கியவரைப் பார்த்துக் கண்ணபிரான், "ஆம், ஐயா! இதுதான் திருநாவுக்கரசரின் திருமடம். அதோ இருக்கும் பல்லக்கு புவனமகாதேவிக்கு உரியது. சக்கரவர்த்தியின் அன்னையார் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருக்கிறார் போல் தோன்றுகிறது" என்றான். "யார் வந்திருந்தபோதிலும் சரி; தாமதிக்க நமக்கு நேரமில்லை" என்று சொல்லிக் கொண்டு அந்தப் புது மனிதர் மடத்துக்குள்ளே நுழைந்தார்.

உள்ளே உண்மையாகவே புவனமகாதேவியார் தமது வளர்ப்புப் பெண்ணாக ஏற்றுக் கொண்ட மங்கையர்க்கரசியுடன் வாகீசப் பெருந்தகையைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். சுவாமிகள் வடநாட்டில் தாம் தரிசனம் செய்து வந்த ஸ்தலங்களின் விசேஷங்களைப் பற்றிப் புவனமகாதேவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாம் சொல்லி விட்டுக் கடைசியில் தாம் மீண்டும் தென்னாட்டு யாத்திரை கிளம்பப் போவது பற்றியும் நாவுக்கரசர் தெரிவித்தார். "ஆம், தாயே! வடநாட்டில் எத்தனையோ ஸ்தலங்களைத் தரிசனம் செய்தேன். கயிலையங்கிரி வரையில் சென்றிருந்தேன். எனினும், நமது தென்னாட்டிலே உள்ள க்ஷேத்திரங்களின் மகிமை தனியானது தான். நமது ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கு இணையான ஆலயம் வேறு எங்கும் இல்லை. நமது திருத்தில்லை, திருவையாறு, திருவானைக்கா முதலிய க்ஷேத்திரங்களுக்கு இணையான க்ஷேத்திரமும் வேறு எங்கும் கிடையாது. மறுபடியும் தென்னாடு சென்று அந்த ஸ்தலங்களையெல்லாம் மீண்டும் தரிசித்து விட்டு வர எண்ணியிருக்கிறேன், நாளைக்குப் புறப்படப் போகிறேன்!"

இப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, மடத்தின் வாசலில் ரதத்திலிருந்து இறங்கிய இளைஞர் உள்ளே வந்தார். பயபக்தியுடன் சுவாமிக்கும் புவனமகாதேவிக்கும் வணக்கம் செலுத்தினார். "நீ யார் அப்பனே? எங்கு வந்தாய்?" என்று நாவுக்கரசர் கேட்ட குரலில் சிறிது அதிருப்தி தொனித்தது. அந்தக் குறிப்பைத் தெரிந்து கொண்ட இளைஞர் கைகூப்பி நின்றவண்ணம், "சுவாமி! மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தியின் அன்னையார் இவ்விடம் விஜயம் செய்திருப்பது தெரிந்தும் முக்கிய காரியத்தை முன்னிட்டுப் பிரவேசித்தேன். அடியேன் வராக நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே நெடுமாற பாண்டியர் கடுமையான தாபஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியர்களின் ஔஷதங்களினால் மட்டும் அவரைக் குணப்படுத்த முடியாதென்று கருதித் தங்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொண்டு போக வந்தேன்; மன்னிக்க வேண்டும்" என்று திருநாவுக்கரசரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புவனமகாதேவியின் பக்கம் திரும்பி, "தேவி! தாங்களும் க்மிக்க வேண்டும்!" என்றார்.

அப்போது தேவி, "அப்பனே! நீ ரொம்ப விநயமுள்ளவனாயிருக்கிறாய். ஆனால், சுவாமிகள் முதலில் கேட்ட கேள்விக்கு நீ மறுமொழி சொல்லவில்லையே? நீ யார்?" என்று கேட்க, "பதற்றத்தினால் மறந்து விட்டேன், தேவி! பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவன். என் பெயர் குலச்சிறை; படையுடன் கிளம்பிய பாண்டிய குமாரருக்கு ஓலை எழுதவும், படிக்கவும் உதவியாயிருக்குமாறு என்னை நியமித்து மதுரை மன்னர் அனுப்பி வைத்தார்!" என்றான் அந்த இளைஞன். "நோய்ப்பட்ட பாண்டிய குமாரரை வராக நதிக்கரையில் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று தேவி மீண்டும் கேட்டார்.

"ரொம்பக் கடுமையான ஜுரம், தேவி! இந்த நிலையில் அவர் பிரயாணம் செய்யக் கூடாது என்பது வைத்தியரின் அபிப்பிராயம். கொஞ்சம் குணப்பட்டதும் இவ்விடத்துக்கு அழைத்து வந்து விடுகிறோம். அரண்மனைக்கு வந்து செய்தி சொல்லி விட்டு போக எண்ணினேன். நல்ல வேளையாக இங்கேயே தங்களைச் சந்தித்தேன்." "அப்படியில்லை, அப்பா! என்னிடம் சொன்னால் மட்டும் போதாது. அரண்மனைக்கு வந்து வானமாதேவியிடமும் நேரில் சொல்லிவிட்டுத் திரும்பிப் போ! பாவம்! அவள் மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்" என்று புவனமகாதேவி சொல்லிக் கொண்டே எழுந்து, "சுவாமி! போய் வருகிறேன் விடை கொடுங்கள்!" என்றார்.

புவனமகாதேவியுடன் மங்கையர்க்கரசி எழுந்து சென்றாள். குலச்சிறை உள்ளே வந்தது முதல் அவனுடைய முகத்தை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது வெளியேறு முன்னர் கடைசி முறையாக ஒரு தடவை பார்த்தாள். அப்போது குலச்சிறையும் அவளைப் பார்க்க நேர்ந்தது. இருவருடைய முகங்களிலும் கண்களிலும் ஏதோ பழைய ஞாபகத்தின் அறிகுறி தோன்றலாயிற்று. பெண்ணரசிகள் இருவரும் போன பிறகு திருநாவுக்கரசர், "அப்பனே! எல்லாம் எனை ஆளும் எம்பெருமான் செயல்! அடியேனால் நடக்கக் கூடியது என்ன இருக்கிறது? என்றாலும் சிரித்துப் புரமெரித்த இறைவன் பெயரை உச்சரித்து இந்தத் திருநீற்றைக் கொடுக்கிறேன், எடுத்துக் கொண்டு போய் இடுங்கள். அடியேனுக்கு நேர்ந்திருந்த கொடிய சூலை நோயை ஒரு கணத்தில் மாயமாய் மறையச் செய்த வைத்தியநாதப் பெருமான், இளம் பாண்டியரின் நோயையும் குணப்படுத்தட்டும்" என்றார்.

நாவுக்கரசர் அளித்த விபூதியைப் பயபக்தியுடன் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்ட குலச்சிறையார், மீண்டும், "சுவாமி! அடியேனுக்கு இன்னொரு வரம் அருளவேண்டும்" என்று பணிவுடன் கேட்டார். "கேள், தம்பி! உன்னுடைய பக்தி விநயம் என் மனத்தை ரொம்பவும் கவர்கிறது!" என்றார் வாகீசர். "தென் பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. ஸ்வாமிகள் தங்கள் சிஷ்ய கோடிகளுடன் பாண்டிய நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டும். விஜயம் செய்து, மக்களைச் சமணர் வலையில் விழாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்! தமிழகத்தில் புராதன பாண்டிய வம்சத்தையும் சமணப் படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும்! ஆஹா! நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி!" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தப் பெருந்தகையார் குலச்சிறையைக் கையமர்த்தி நிறுத்திக் கூறினார்; "தம்பி! சமண மதத்தின் மீது ஒரு காலத்தில் நானும் இப்படிக் கோபம் கொண்டிருந்தேன். ஆனால், இந்தக் காலத்திலே ஒருசிலர் செய்யும் காரியங்களுக்காகச் சமண சமயத்தின் மேல் துவேஷம் கொள்ளுதல் நியாயமன்று. அன்பையும் ஜீவகாருண்யத்தையும் போதிப்பதற்கு ஏற்பட்ட சமயம் சமண சமயம். நமது செந்தமிழ் நாடு ஆதி காலத்துச் சமண முனிவர்களால் எவ்வளவோ நன்மைகளை அடைந்திருக்கிறது. சமண முனிவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள். அரிய காவியங்களைத் தமிழில் புனைந்தார்கள். ஓவியக் கலையை நாடெங்கும் பரப்பினார்கள். குலச்சிறை பொறுமை இழந்தவராய், "போதும், சுவாமி! போதும்! தங்களிடம் சமணர்களைப்பற்றிய புகழுரைகளைக் கேட்பேனென்று நான் எதிர்பார்க்கவில்லை. தொண்டை மண்டலத்தைச் சமணர்களிடமிருந்து காப்பாற்றிய தாங்கள் பாண்டிய நாட்டையும் காப்பாற்றியருள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்தேன். அவர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தாங்கள் பாண்டிய நாட்டிற்கு வந்து பாருங்கள்!" என்று பேசினார்.

நாவுக்கரசர் சற்று நேரம் கண்களை மூடியவண்ணம் ஆலோசனையில் இருந்தார். பிறகு கண்களைத் திறந்து குலச்சிறையைப் பார்த்துக் கூறினார்: "மந்திர தந்திரங்களில் வல்லவர்களான சமணர்களுடன் போராடுவதற்குச் சக்தியோ விருப்பமோ தற்போது என்னிடம் இல்லை. ஆனால் கேள், தம்பி! என்னுடைய அகக்காட்சியில் ஓர் அற்புதத்தை அடிக்கடி கண்டு வருகிறேன். பால் மணம் மாறாத பாலர் ஒருவர் இந்தத் திருநாட்டில் தோன்றி அமிழ்தினும் இனிய தீந்தமிழில் பண்ணமைந்த பாடல்களைப் பொழியப் போகிறார். அவர் மூலமாகப் பல அற்புதங்கள் நிகழப் போகின்றன. பட்ட மரங்கள் தளிர்க்கப் போகின்றன. செம்பு பொன்னாகப் போகின்றது, பாஷாண்டிகள் பக்தர்களாகப் போகிறார்கள். அந்த இளம்பிள்ளையின் மூலமாகவே தென்பாண்டி நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் நீங்கும்; சைவம் தழைக்கும்; சிவனடியார்கள் பல்கிப் பெருகுவார்கள்." இவ்விதம் திருநாவுக்கரசர் பெருமான் கூறி வந்தபோது குலச்சிறையார் மெய் மறந்து புளகாங்கிதம் அடைந்து நின்றார்.

காஞ்சி பல்லவ சக்கரவர்த்தியின் அரண்மனை மிகமிக விஸ்தாரமானது. அது மூன்று பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மூன்று பகுதிகளின் வெளிவாசலும் அரண்மனையின் முன்புறத்து நிலா முற்றத்தில் வந்து சேர்ந்தன. மூன்று பகுதிகளுக்கும் பின்னால் விசாலமான அரண்மனைப் பூங்காவனம் இருந்தது. மூன்றுக்கும் நடுநாயகமான பகுதியில் மாமல்ல சக்கரவர்த்தி தம் பட்ட மகிஷி வானமாதேவியுடன் வசித்து வந்தார். வலப்புறத்து மாளிகையில் புவனமகாதேவியும் மகேந்திர பல்லவருடைய மற்ற இரு பத்தினிகளும் வசித்தார்கள். இடப்புறத்து மாளிகை, அரண்மனைக்கு வரும் முக்கிய விருந்தாளிகளுக்காக ஏற்பட்டது. அந்த மாளிகையில் தற்சமயம் இலங்கை இளவரசர் தமது மனைவியுடன் வசித்து வந்தார். ஒவ்வொரு மாளிகையை ஒட்டியும் அரண்மனைக் காரியஸ்தர்கள், காவலர்கள் முதலியோர் வசிப்பதற்குத் தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று மாளிகைகளையும் ஒன்றோடொன்று இணைக்க மச்சுப் பாதைகளும் தரைப்பாதைகளும் சுரங்கப் பாதைகளும் இருந்தன.

சோழன் செம்பியன் மகளைப் புவனமகாதேவி தம் புதல்வியாகக் கருதிப் பாதுகாத்து வருவதாக வாக்களித்திருந்தார் என்று சொன்னோமல்லவா? அந்த வாக்கை அவர் பரிபூரணமாக நிறைவேற்றி வந்தார். அரண்மனையில் இருந்தாலும், வெளியே கோயில்கள் அல்லது மடங்களுக்குச் சென்றாலும், மங்கையர்க்கரசியைச் சதா சர்வ காலமும் அவர் தம் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தார். சரித்திரப் பிரசித்தி பெற்ற மகேந்திர பல்லவரைப் போலவே அவருடைய பட்டமகிஷி புவனமகாதேவியும் சிவபக்தியிற் சிறந்தவர். சக்கரவர்த்தி சிவபதம் அடைந்த பிறகு அவர் தமது காலத்தைப் பெரும்பாலும் சிவபூஜையிலும் சிவபுராணங்களின் படனத்திலும் கழித்துவந்தார். அவருடைய அரண்மனையின் ஓர் அறையில் ிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் ஆகம விதிகளின்படி அவர் பூஜை செய்வதுண்டு. இந்தச் சிவபூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் உரிமையை மங்கையர்க்கரசி வருந்திக்கோரிப் பெற்றிருந்தாள். மேற்படி பணிவிடைகளை மிக்க பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றி வந்தாள். முன் பின் அறியாதவர்கள் அடங்கிய அந்தப் பிரம்மாண்டமான அரண்மனையில் மங்கையர்க்கரசி பொழுது போக்குவதற்கு அத்தகைய பூஜா கைங்கரியங்கள் சிறந்த சாதனமாயிருந்தன.

மாமல்லர் படையுடன் கிளம்பிச் சென்று மூன்று தினங்கள் வரையில்தான் அவ்விதம் எல்லாம் ஒழுங்காக நடந்தன. நாலாவது நாள் புவனமகாதேவியும் மங்கையர்க்கரசியும் திருநாவுக்கரசரைத் தரிசித்துவிட்டு வந்தார்கள் அல்லவா? அன்று முதல் மங்கையர்க்கரசியின் கவனம் சிறிது சிதறிப் போய்விட்டது. தேவியார் சிவபூஜை செய்ய அமர்ந்த பிறகு, புஷ்பம் வேண்டிய போது தூபத்தையும், தூபம் கேட்டால் பிரசாதத்தையும் மங்கையர்க்கரசி எடுத்துக் கொடுக்கலானாள். இதையெல்லாம் கவனித்த புவனமகாதேவி பூஜை முடிந்த பிறகு, "குழந்தாய்! இன்றைக்கு என்ன ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்திருக்கிறாய்? தகப்பனாரை நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாயா? என்னைப் பார்த்துக் கொள், குழந்தாய்! என்னுடைய ஏக புதல்வனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவில்லையா?" என்று தைரியம் கூறினார்.

அப்போது மங்கையர்க்கரசி சிறிது நாணத்துடன், "இல்லை அம்மா! அப்படியெல்லாம் கவலை ஒன்றுமில்லை!" என்றாள். "பின் ஏன் உன் முகத்தில் சிந்தனைக்கு அறிகுறி காணப்படுகிறது? இந்த அரண்மனையில் வசிப்பதில் ஏதாவது உனக்குத் தொந்தரவு இருக்கிறதா?" என்றார் மகேந்திரரின் மகிஷி. "தொந்தரவா? இவ்வளவு சௌக்கியமாக நான் என் தந்தையின் வீட்டிலே ஒரு நாளும் இருந்ததில்லை. என் மனத்திலும் சஞ்சலம் ஒன்றுமில்லை. நாவுக்கரசர் பெருமானோடு தாங்கள் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில், வாலிபர் ஒருவர் வந்தாரல்லவா? அவரை எங்கேயோ ஒரு முறை பார்த்த ஞாபகமிருந்தது. அதையொட்டிச் சில பழைய ஞாபகங்கள் வந்தன, வேறொன்றுமில்லை அம்மா" என்று மங்கையர்க்கரசி கூறினாள்.



பதினாறாம் அத்தியாயம்
அரண்மனைப் பூங்கா

திருநாவுக்கரசரின் மடத்தில் குலச்சிறையாரை மங்கையர்க்கரசி பார்த்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆயிற்று. இந்த ஒரு வாரம் செம்பியன் வளவனுடைய மகளுக்கு ஒரு யுகமாகச் சென்றது. பாண்டிய குமாரர் இன்று வருவார்; நாளை வருவார் என்று அரண்மனையில் பேச்சாயிருந்தது. நெடுமாற பாண்டியன் வரவைக் குறித்து மங்கையர்க்கரசிக்கு எவ்வித ஆவலும் ஏற்படவில்லை என்றாலும், பாண்டியனோடு அன்று தான் மடத்தில் பார்த்த வாலிபனும் வருவான், அவனிடம் அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரிக்கலாம் என்ற ஆவல் அவள் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு வருஷத்துக்கு முன்னால் கார்காலத்தில் விடா மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் மாலை நடந்த சம்பவமும் மங்கையர்க்கரசியின் மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அன்று இந்தப் பாண்டிய வாலிபனும் இவனுடைய சிநேகிதன் ஒருவனும் மழையில் சொட்ட நனைந்த வண்ணம் செம்பியன் வளவனின் அரண்மனை வாசலில் வந்து நின்று இரவு தங்க இடம் கேட்டார்கள். விருந்தோம்புவதில் இணையற்ற செம்பியன் வளவனும் அவர்களை ஆதரவுடன் வரவேற்று உபசரித்தான். வந்த இளைஞர்கள் இருவரும் தங்களை வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். சிரிக்கச் சிரிக்கக் குதூகலமாய்ப் பேசினார்கள். அப்புராதன சோழ அரண்மனையில் அன்று வெகு நேரம் வரை ஒரே கோலாகலமாயிருந்தது.

மங்கையர்க்கரசியின் தந்தை அவளிடம் இரகசியமாக, "இவர்கள் வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா? வெறும் பொய்! நான் சொல்கிறேன், கேள்! இவர்கள் மாறுவேடம் பூண்ட பெரிய குலத்து இராஜகுமாரர்கள்!" என்று சொன்னார். இது மங்கையர்க்கரசிக்கும் மகிழ்ச்சி தந்தது. ஏனெனில், அந்த இளைஞர்களிலே ஒருவன் தன்னுடைய உள்ளத்தை எப்படியோ மெள்ள மெள்ளக் கவர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மறுநாள் உதயமானதும் இளைஞர் இருவரும் பிரயாணமாயினர். ஆனால், போவதற்கு முன்னால் அவர்களில் ஒருவன், அதாவது குலச்சிறையின் சிநேகிதன், "மீண்டும் ஒருநாள் திரும்பி வருவோம்" என்று உறுதி கூறியதோடு, மங்கையர்க்கரசியிடம் நயன பாஷையில் அந்தரங்கமாகவும் சில விஷயங்களைச் சொன்னான். இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சில நாள் வரையில் தந்தையும் மகளும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு வெறும் கனவு என்று எண்ணி மறந்தார்கள். அப்போது மங்கையர்க்கரசியின் மனம் கவர்ந்த அதே சுந்தர புருஷன்தான் இப்போது சில நாளாக அவளுடைய பயங்கரக் கனவுகளிலே தோன்றிக் கொண்டிருந்தவன். எனவே, தாய் தந்தையின் பாதுகாப்பற்ற அந்த அனாதைப் பெண் இப்போது பெரிதும் பரபரப்புக் கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றுமில்லையல்லவா?

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் காஞ்சி அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. நெடுமாற பாண்டியன் அவனுடைய பரிவாரங்களுடன் காஞ்சிக்கு வந்து விட்டதாக மங்கையர்க்கரசி அறிந்தாள். வானமாதேவியின் நடுமாளிகையில் நெடுமாறன் தங்கியிருப்பதாகவும், அவனுக்கு இன்னும் உடம்பு பூரணமாகக் குணமாகவில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால், குலச்சிறையைத் தனிமையில் சந்தித்து விசாரிக்க வேண்டுமென்னும் மங்கையர்க்கரசியின் மனோரதம் நிறைவேறும் என்பதாக மட்டும் காணப்படவில்லை.

புவனமகாதேவி தினந்தோறும் சிவபூஜை செய்த பிறகு தன் மருமகள் வானமாதேவிக்குப் பிரசாதம் அனுப்புவதுண்டு. மங்கையர்க்கரசி தானே பிரசாதம் எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னாள். அம்மாளிகையில் இருக்கும் போது மங்கையர்க்கரசியின் கண்கள் நாற்புறமும் சுழன்று சுழன்று தேடியும் அந்த வாலிபன் காணப்படவில்லை. ஒருநாள் மனத்துணிவை வரவழைத்துக் கொண்டு புவனமகாதேவியையே கேட்டாள். "அம்மா! அன்று சைவத் திருமடத்தில் ஓர் இளைஞரைப் பார்த்தோமே? அவர் பாண்டிய குமாரரோடு வந்திருப்பதாகத் தெரியவில்லையே?" என்றாள். அதற்குப் புவனமகாதேவி, "அதை ஏன் கேட்கிறாய், குழந்தாய்! பாண்டிய குமாரன் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது..." என்பதற்குள், "அடடா! அப்படியா? அவருக்கு உடம்பு இன்னும் குணமாகவில்லையா? அதனால்தான் வானமாதேவி எப்போதும் ஒரே கவலையாயிருக்கிறார் போலிருக்கிறது. முன்னேயெல்லாம் நான் சிவபூஜைப் பிரசாதம் கொண்டு போனால் முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு என்னிடமும் அன்பாக வார்த்தையாடுவார். இப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை!" என்றாள்.

"ஆமாம், குழந்தாய்! வானமாதேவி கவலைப்படுவதற்கு ரொம்பவும் காரணமிருக்கிறது. நெடுமாறனுக்கு உடம்பு இப்போது சௌக்கியமாகி விட்டது. ஆனால், அவனுடைய மனத்தைச் சமணர்கள் ரொம்பவும் கெடுத்திருக்கிறார்கள். அவனோடு பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற வீரமறவர் சைனியம் வந்திருக்கிறது. அந்தச் சைனியத்தைத் திருக்கழுக்குன்றத்தில் தங்கச் செய்திருக்கிறார்கள். இலங்கை இளவரசனும் நாம் அன்று பார்த்த குலச்சிறை என்ற வாலிபனும் திருக்கழுககுன்றத்திலேதான் இருக்கிறார்களாம். குழந்தாய்! விபரீதம் ஒன்றும் நேராதிருக்க வேண்டுமே என்று அம்பிகைபாகனை அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என்னைக் காட்டிலும் வானமாதேவியின் தலையில் பெரிய பாரம் சுமந்திருக்கிறது. பாவம்! அவள் ஒரு வாரமாய்த் தூங்கவில்லையாம்!" என்றாள் மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி.

பாண்டிய குமாரனுடைய வரவினால் என்ன விபரீதம் ஏற்படக்கூடும், எதற்காக எல்லோரும் இவ்வளவு கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மங்கையர்க்கரசிக்குத் தெளிவாக விளங்கவில்லை. அதைப் பற்றி அவ்வளவாக அவள் கவனம் செலுத்தவும் இல்லை. அவளுக்குத் தன்னுடைய கவலையே பெரிதாக இருந்தது. குலச்சிறை என்று பெயர் சொன்ன வாலிபனை ஒருவேளை தான் பார்க்க முடியாமலே போய் விடுமோ, அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாமற் போய் விடுமோ என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் குடிகொண்டு, வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் செய்தது.

இத்தகைய மனோநிலைமையில் ஒருநாள் மாலை நேரத்தில் அரண்மனைப் பூங்காவனத்தில் புவனமகாதேவியின் சிவபூஜைக்காக மங்கையர்க்கரசி மலர் பறித்துக் கொண்டிருந்தாள். பன்னீர் மந்தாரை, பொன்னரளி, செவ்வரளி முதலிய செடிகளிலிருந்தும், சம்பங்கி, சாதி, மல்லிகைக் கொடிகளிலிருந்தும் அவளுடைய மலர்க்கரங்கள் புஷ்பங்களைப் பறித்துப் பூக்கூடையில் போட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அவளுடைய உள்ளமோ இரண்டு வருஷங்களுக்கு முன்பு விடாமழை பெய்த ஒருநாள் சாயங்காலம் தன் தந்தையின் புராதன மாளிகையைத் தேடி வந்த இளைஞர்களைப் பற்றியும் அவர்களில் ஒருவன் தன் உள்ளத்தைக் கொண்டு போனதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தது. 'ஒரு நாள் உன்னைத் தேடிக் கொண்டு மறுபடியும் வருவேன்' என்று அவன் கூறிய வாக்குறுதி, நீரின் மேல் எழுதிய எழுத்துதான் போலும்! 'இந்த உலகில் எனக்கு ஒரே துணையாக இருந்த தந்தையும் போர்க்களத்துக்குப் போய் விட்டார். இனிமேல் என் கதி என்ன ஆகப் போகிறது?' என்று எண்ணிய போது மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் துளித்தது.

செடி கொடிகளின் வழியாக யாரோ புகுந்து வருவது போன்ற சலசலப்புச் சப்தம் கேட்டு, மங்கையர்க்கரசி சப்தம் வந்த திசையை நோக்கினாள். ஆம்; யாரோ ஒரு மனிதர் அந்த அடர்ந்த பூங்காவின் செடிகளினூடே நுழைந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், அவருடைய முகம் தெரியவில்லை. அந்தப்புரத்துப் பூந்தோட்டத்தில் அவ்விதம் அலட்சியமாக வரும் மனிதர் யாராயிருக்கும்? மாமல்ல சக்கரவர்த்தியைத் தவிர வேறு ஆண்மக்கள் யாரும் அந்தத் தோட்டத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று மங்கையர்க்கரசி கேள்விப்பட்டிருந்தாள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அந்தப் பூங்காவனத்தைப் பராமரிப்பதற்குக் கூட ஸ்திரீகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, இவ்வளவு துணிச்சலாக அந்தத் தோட்டத்தில் நுழைந்து வரும் அந்நிய மனிதர் யார்? யாராயிருந்தாலும் இருக்கட்டும், நாம் திரும்பிப் புவனமகாதேவியின் அரண்மனைக்குப் போய் விடலாம் என்ற எண்ணத்தோடு மங்கையர்க்கரசி சட்டென்று திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

அதே சமயத்தில், "யார் அம்மா, அது? இந்தப் பூந்தோட்டத்துக்குள் தெரியாத்தனமாகப் புகுந்து விட்டேன். திரும்பிப் போக வழி தெரியவில்லை. வானமாதேவியின் அரண்மனைக்கு எப்படிப் போக வேண்டும்? கொஞ்சம் வழி சொல்லு, அம்மா!" என்று யாரோ சொல்லுவது கேட்டது. அவ்விதம் சொல்லிய குரலானது மங்கையர்க்கரசியின் தேகம் முழுவதையும் ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. அவளுடைய காலடியிலிருந்த தரை திடீரென்று நழுவிப் போவது போல் இருந்தது. அந்தப் பூங்காவனத்திலுள்ள செடி கொடிகள் எல்லாம் அவளைச் சுற்றி வருவதாகத் தோன்றியது. பக்கத்திலிருந்த மந்தார மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் சமாளித்தாள். அவளுடைய இடக்கையில் பிடித்திருந்த வெள்ளிப் பூங்கூடை மட்டும் நழுவிக் கீழே விழ, அதிலிருந்து பல நிறப் புஷ்பங்கள் தரையில் சிதறின.

"ஓஹோ! பயந்து போய் விட்டாயா என்ன? ஏதும் தவறாக எண்ணிக் கொள்ளாதே, அம்மா! உண்மையாகவே வழி தெரியாததனால்தான் கேட்டேன். நான் இந்த ஊர்க்காரன் அல்ல; பாண்டிய நாட்டான். வானமாதேவியின் மாளிகை எந்தத் திசையிலிருக்கிறது என்று சொன்னால் போதும்; போய் விடுகிறேன். இந்தத் தோட்டத்தில் வேறு யாருமே காணப்படாமையால் உன்னைக் கேட்கும்படி நேர்ந்தது. நீ யார் என்று கூட எனக்குத் தெரியாது" என்று அந்த மனிதன் சொல்லி வந்த போது மங்கையர்க்கரசிக்குப் பூரண தைரியம் வந்து விட்டது. சட்டென்று தான் பிடித்திருந்த செடியின் கிளையை விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் நினைத்தது தவறாகப் போகவில்லை. ஆம், அவன்தான்! அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவு தன் தந்தையின் வீட்டுக்கு அதிதியாக வந்து தன் உள்ளங்கவர்ந்து சென்ற கள்வன்தான்!

மங்கையர்க்கரசியின் அதிசயத்தைக் காட்டிலும் பாண்டிய குமாரனுடைய அதிசயம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. "ஆ!" என்ற சப்தத்தைத் தவிர வேறொரு வார்த்தையும் அவன் வாயிலிருந்து வரவில்லை. பேச நா எழாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அடங்கா அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டு கைதேர்ந்த சிற்பி அமைத்த கற்சிலைகளைப் போல் சற்று நேரம் நின்று கொண்டிருந்தார்கள். கடைசியாக, பாண்டிய குமாரன், உணர்ச்சியாலும் வியப்பாலும் கம்மிய குரலில், "பெண்ணே! உண்மையாக நீதானா! செம்பியன் வளவன் மகள் மங்கையர்க்கரசிதானா? அல்லது இதுவும் என் சித்தப்பிரமையா?" என்றான். மங்கையர்க்கரசி மறுமொழி சொல்ல விரும்பினாள். ஆனால் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர்தான் வந்தது. உடனே பாண்டிய குமாரன் அளவில்லாத ஆர்வத்துடன் அவள் அருகில் வந்து, "பெண்ணே! இது என்ன? ஏன், உன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது? ஏதேனும் நான் பெரிய பிசகு செய்து விட்டேனா? என்ன செய்து விட்டேன்?" என்று பரபரப்புடன் வினவினான்.

மங்கையர்க்கரசி, விம்மலுக்கிடையில், "ஐயா! அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த மங்கையர்க்கரசி நான்தான்!" என்றாள். "ஏன் இப்படி மனம் நொந்து பேசுகிறாய்? ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய்? கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் உன்னை இங்கே பார்த்ததும், எனக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. பிறவிக் குருடன் கண் பெற்றது போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கடல் கடைந்த தேவர்கள் அமிர்தம் எழக் கண்டதும் அடைந்த ஆனந்தத்தை நானும் அடைந்தேன். எவ்வளவோ மனக் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருந்தவன் உன்னைக் கண்டதும் அவையெல்லாம் மறந்து ஒருகணம் எல்லையற்ற குதூகலம் அடைந்தேன்! ஆனால், உன்னுடைய விம்மலும் கண்ணீரும் அந்த மகிழ்ச்சியையெல்லாம் போக்கி என்னை மறுபடியும் சோகக் கடலில் மூழ்க அடித்து விட்டது. உனக்கு என்ன துயரம் நேர்ந்தது? ஏன் உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொள்கிறாய்? உன் துயரத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் நான் எந்த விதத்திலாவது காரணம் ஆனேனா? ஏற்கெனவே நான் பெரிய மனத் தொல்லைகளுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். அவ்வளவுக்கும் மேலே உனக்கு எவ்விதத்திலாவது தன்பம் கொடுத்திருப்பேனானால், இந்த வாழ்க்கைதான் என்னத்திற்கு? உயிரையே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது."

இவ்வாறு நெடுமாறன் உண்மையான உருக்கத்தோடு சொல்லி வந்த போது, பேதைப் பெண்ணாகிய மங்கையர்க்கரசி பலமுறை குறுக்கிட்டுப் பேச விரும்பினாள். என்றாலும், அதற்கு வேண்டிய தைரியம் இல்லாதபடியால் விம்மிக் கொண்டே சும்மா நிற்க வேண்டியதாயிற்று. கடைசியில், பாண்டிய குமாரன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசியதும் அவளுக்கு எப்படியோ பேசுவதற்குத் தைரியம் ஏற்பட்டு, "ஐயோ! தங்களால் எனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை!" என்றாள். "அப்படியானால் என்னைப் பார்த்ததும் நீ கண்ணீர் விடுவதற்கும் விம்மி அழுவதற்கும் காரணம் என்ன? இரண்டு வருஷ காலமாக உன்னை மறுபடி எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் உன்னைச் சந்திக்கும் போது சந்தோஷத்தினால் உன் முகம் எப்படிச் சூரியனைக் கண்ட செந்தாமரையைப் போல் மலரும் என்று கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக என்னைப் பார்த்ததும் உன் முகம் அஸ்தமன அரக்கனைக் கண்ட தாமரையைப் போல் வாடிக் குவிந்தது. உன் கண்களும் கண்ணீர் பெருக்கின ஏன் அப்படி?"

பாண்டிய குமாரனுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் மங்கையர்க்கரசி, "ஐயா! தாங்கள் சொன்னது உண்மைதானா? என்னைத் தாங்கள் அடியோடு மறந்து விடவில்லையா? என்னை மறுபடியும் சந்திக்கும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததா?" என்று கேட்டாள். "அதைப் பற்றி உனக்கு ஏன் சந்தேகம் ஏற்பட்டது? மீண்டும் உன்னைச் சந்திப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. மதுரையிலிருந்து இந்த நகரத்துக்கு வரும் வழியில் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவில் எனக்கு அடைக்கலம் தந்த செம்பியன் வளவன் மாளிகையை அடைந்தேன். அந்த மாளிகை பூட்டிக் கிடந்ததைப் பார்த்ழூததும் எனக்குண்டான ஏமாற்றத்தைச் சொல்லி முடியாது. உலகமே இருளடைந்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அப்புறம் குலச்சிறை உன்னை இந்த நகரில் பார்த்ததாகச் சொன்ன பிறகு கொஞ்சம் மன அமைதி உண்டாயிற்று" என்றான் நெடுமாறன். "ஆகா! அவர் வந்து சொன்னாரா? அப்படியானால், தாங்களும் பாண்டிய குமாரரிடம் உத்தியோகத்தில் இருக்கிறீர்களா? என்று மங்கையர்க்கரசி கேட்டாள்.

நெடுமாறனுடைய முகத்தில் ஒருகணம் மர்மமான புன்னகை தோன்றி மறைந்தது. தான் இன்னான் என்பதை மங்கையர்க்கரசி இன்னமும் தெரிந்து கொள்ளாமலே பேசுகிறாள் என்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். அந்தத் தவறுதலை இன்னமும் நீடிக்கச் செய்வதில் அவனுக்குப் பிரியம் ஏற்பட்டது. "ஆம்! பாண்டிய குமாரரிடந்தான் நானும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி உனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?" என்று கேட்டான். மங்கையர்க்கரசி, "எனக்கு என்ன ஆட்சேபம்? தாங்கள் நல்ல பதவியில் இருந்தால் எனக்குச் சந்தோஷந்தானே? தங்களுடைய சிநேகிதரைத் திருநாவுக்கரசர் மடத்தில் பார்த்த போது என் மனத்திலும் அம்மாதிரி எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அதையெல்லாம் பற்றி இனி என்ன? என் குலதெய்வம் தங்களையேதான் என் முன் கொண்டு வந்து விட்டதே?" என்று ஆர்வம் பொங்கக் கூறினாள். "ஆனாலும் உன் தெய்வம் என்னை உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய போது நீ சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லையே! உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டாயே?" என்று நெடுமாறன் விஷமப் புன்னகையுடன் கேட்டான்.

"சுவாமி! எதிர்பாராதபோது தங்களைத் திடீரென்று பார்த்ததில் பேசத் தெரியாமல் திகைத்து நின்றேன். தாங்களும் என்னைத் தெரிந்து கொள்ளாதது போல் ஒரு மாதிரியாகப் பேசவே, எனக்குக் கண்ணீர் வந்து விட்டது! என்னுடைய பேதைமையைப் பற்றிச் சொல்லிக் காட்டாதீர்கள்!" என்று மங்கையர்க்கரசி கூறிய போது அவளுடைய கண்களில் மறுபடியும் கண்ணீர் துளித்தது. "என் கண்ணே! என்னை மன்னித்து விடு! இந்த மூர்க்கன் உன் கண்களில் மறுபடியும் கண்ணீர் வரச் செய்தேனே?" என்று சொல்லிக் கொண்டு நெடுமாறன் தன் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான்.

சற்றுப் பொறுத்து மங்கையர்க்கரசி, "சுவாமி! வெகு நேரம் ஆகி விட்டது. பூஜை நேரம் நெருங்கி விட்டது; நான் போக வேண்டும்" என்றாள். "கட்டாயம் போகத்தான் வேண்டுமா?" என்று நெடுமாறன் விருப்பமில்லாத குரலில் கேட்டான். "ஆம், போக வேண்டும், புவனமகாதேவி காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை நான் வரவில்லையேயென்று தாதியை அனுப்பினாலும் அனுப்புவார்கள்." "அப்படியானால் நாளைய தினம் இதே நேரத்தில் இங்கு நீ வர வேண்டும்; தவறக் கூடாது. மேலே நம்முடைய காரியங்களைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே?" என்றான் நெடுமாறன்.

மங்கையர்க்கரசி திடுக்கிட்டவளாய் நெடுமாறனை நிமிர்ந்து பார்த்து, "பாண்டிய குமாரர் வாதாபி யுத்தத்துக்குப் போனால் நீங்களும் அவரோடு போவீர்களா?" என்று கேட்டாள். "ஆமாம், போக வேண்டியதுதானே? ஏன் கேட்கிறாய்? நான் போருக்குப் போவது உனக்குப் பிடிக்கவில்லையா?" என்றான் நெடுமாறன். "எனக்குப் பிடிக்கத்தான் இல்லை; யுத்தம், சண்டை என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் துவேஷிக்க வேண்டும்? ஏன் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாக வேண்டும்? ஏன் எல்லாரும் சந்தோஷமாகவும் சிநேகமாகவும் இருக்கக் கூடாது?" என்றாள் மங்கையர்க்கரசி.

நெடுமாறன் மீண்டும் மர்மமான புன்னகை புரிந்து, "யுத்தத்தைப் பற்றி உன்னுடைய அபிப்பிராயத்தைப் பாண்டிய குமாரரிடம் சொல்லிப் பார்க்கிறேன். ஒருவேளை அவருடைய மனம் மாறினாலும் மாறலாம். எல்லாவற்றிற்கும் நாளை மாலை இதே நேரத்துக்கு இங்கு நீ கட்டாயம் வரவேண்டும்; வருவாயல்லவா?" என்றான். "அவசியம் வருகிறேன்; இப்போது ரொம்ப நேரமாகி விட்டது உடனே போக வேண்டும்" என்று கூறி மங்கையர்க்கரசி கீழே கிடந்த புஷ்பக் கூடையை எடுப்பதற்குக் குனிந்தாள். நெடுமாறனும் குனிந்து தரையில் சிதறிக் கிடந்த புஷ்பங்களைக் கூடையில் எடுத்துப் போட்டு, மங்கையர்க்கரசியின் கையில் அதைக் கொடுத்தான். அப்படிக் கொடுக்கும் போது பயபக்தியுடன் பகவானுடைய நிருமால்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் அவளுடைய மலர்க் கரத்தைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். மெய்சிலிர்ப்பு அடைந்த மங்கையர்க்கரசி பலவந்தமாகத் தன் கையை நெடுமாறனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு புவனமகாதேவியின் அரண்மனையை நோக்கி விரைந்து நடந்தாள்.



பதினேழாம் அத்தியாயம்
உறங்கா இரவு

அரண்மனைப் பூங்காவனத்திலிருந்து திரும்பிப் புவனமகாதேவியின் அரண்மனைக்கு வந்த மங்கையர்க்கரசி, அன்று மாலையெல்லாம் தரையிலே நடக்கவில்லை. ஆனந்த வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்தாள். அவள் சற்றும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது. அத்தகைய பாக்கியம் தனக்குக் கிட்டும் என்பதாக அவள் கனவிலும் எண்ணவில்லை. அவளுடைய தந்தை போர்க்களத்திற்குப் போன பிறகு அவளுடைய வாழ்க்கையே சூனியமாகப் போயிருந்து. அந்தச் சூனியத்தை நிரப்பி அவளுடைய வாழ்க்கையை இன்பமயமாக்கக்கூடியதான சம்பவம் ஒன்றே ஒன்றுதான். அந்த அற்புதம் அன்றைக்கு நடந்து விட்டது. அவளுடைய உள்ளத்தையும் உயிரையுமே கவர்ந்திருந்த காதலன், எளிதில் யாரும் பிரவேசிக்க முடியாத அந்தப் பல்லவ அரண்மனைக்குள்ளே அவளைத் தேடி வந்து சந்தித்தான். சந்தித்ததோடல்லாமல் அவளிடம் தனது இடையறாக் காதலையும் சிறிதும் சந்தேகத்துக்கு இடமின்றி வெளியிட்டான்.

அவளுடைய வாழ்க்கையை ஆனந்தமயமாக்கக் கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது? அவளுடைய கால்கள் தரையிலே படியாமல், நடக்கும்போதே நடனமாடிக் கொண்டிருந்ததில் வியப்பு என்ன இருக்கிறது? இந்த அற்புத சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது ஆனால், யாரிடம் சொல்வது? சொல்வதானால் தன்னைப் புதல்வியெனக் கொண்டு அன்பு செலுத்தி வரும் புவனமகாதேவியிடந்தான் சொல்ல வேண்டும். ஆனால், அன்று மாலை, புவனமகாதேவியின் முகபாவமும் சுபாவமும் ஓரளவு மாறியிருந்தன. தன் அந்தரங்கத்தை வெளியிட்டுப் பேசக்கூடிய நிலைமையில் அவர் இல்லையென்பதை மங்கையர்க்கரசி கண்டாள். சிவ பூஜையின் போது கூடத் தேவியின் திருமுகத்தில் வழக்கமான சாந்தமும் புன்னகையும் பொலியவில்லை. மங்கையர்க்கரசியிடம் அவர் இரண்டொரு தடவை அகாரணமாகச் சிடுசிடுப்பாகப் பேசினார். மற்ற நாளாயிருந்தால் தேவி அவ்விதம் சிடுசிடுப்பாகப் பேசியது மங்கையர்க்கரசியின் உள்ளத்தை வெகுவாக வருத்தப்படுத்தியிருக்கும். ஆனால் இன்று மங்கையர்க்கரசி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தன் மனத்தில் பொங்கி வந்த குதூகலத்தைத் தேவியிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று மட்டுந்தான் அவள் கவலைப்பட்டாள்.

இருட்டி ஒன்றரை ஜாம நேரம் ஆனபோது, மங்கையர்க்கரசி வழக்கம் போல் புவனமகாதேவியின் படுக்கையறைக்குப் பக்கத்தில், தனக்கென்று அளிக்கப்பட்டிருந்த அறையில் படுத்துக் கொண்டாள். ஆனால், உறக்கம் மட்டும் வரவேயில்லை; கண்ணிமைகள் மூடிக் கொள்ளவே மறுத்துவிட்டன. துயரத்தினாலும் கவலையினாலும் தூக்கம் கெடுவதைக் காட்டிலும், எதிர்பாராத சந்தோஷத்தினாலும் உள்ளக் கிளர்ச்சியாலும் உறக்கம் அதிகமாகக் கெடும் என்பதை அன்று மங்கையர்க்கரசி கண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் தூங்கும் முயற்சியையே விட்டு விட்டுத் தன் வருங்கால வாழ்க்கையைப் பற்றிய மனோராஜ்யங்களில் ஈடுபட்டாள்.

இவ்விதம் இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாயிற்று. அந்த நடுநிசி வேளையில், நிசப்தம் குடிகொண்டிருந்த அந்த அரண்மனையில் திடீரென்று கேட்ட ஒரு சப்தம் மங்கையர்க்கரசியைத் தூக்கிவாரிப் போட்டது. அது வெகு சாதாரண இலேசான சப்தந்தான் வேறொன்றுமில்லை. ஏதோ ஒரு கதவு திறக்கப்படும் சப்தம். ஆயினும், அந்த வேளையில் அத்தகைய சப்தம் மங்கையர்க்கரசிக்கு ஏதோ ஒருவிதக் காரணமில்லாத பயத்தை உண்டாக்கியது.

அவள் படுத்திருந்த அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் மெல்லிய காலடிகளின் சப்தம் அவள் கவனத்தைக் கவர்ந்தது. அந்த நேரத்தில் புவனமகாதேவியின் அறைக்கருகே அவ்விதம் நடமாடத் துணிந்தது யாராயிருக்கும்? இன்னதென்று தெளிவாய்த் தெரியாத திகில் கொண்ட உள்ளத்துடன் மங்கையர்க்கரசி தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். காலடிச் சப்தம் மேலும் மேலும் நெருங்கித் தன் அறைக்குச் சமீபத்தில் வருவதாகத் தோன்றியது. அப்படி வருவது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவளைப் பீடித்தது. சப்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்து, அவளுடைய அறையிலிருந்து வெளித் தாழ்வாரத்தை நோக்கிய பலகணியின் அருகே சென்று வெளியிலிருந்து தன்னைப் பார்க்க முடியாதபடி மறைவாக நின்றாள். மறுகணமே அவளுடைய ஆவல் நிறைவேறியது. தாழ்வாரத்தில் இருவர் வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் கையில் தீபம் ஏந்திய தாதிப் பெண்ணும் அவளுக்குப் பின்னால் வானமாதேவியும் வந்து கொண்டிருந்தார்கள். ஆம்! அது வானமாதேவிதான், ஆனால் அவருடைய முகம் ஏன் அப்படிப் பேயடித்த முகத்தைப் போல் வெளுத்து விகாரமடைந்து போயிருக்கிறது! வந்த இருவரும் மங்கையர்க்கரசியின் அறையைத் தாண்டி அப்பால் போனதும், சற்றுத் தூரத்தில் அதே தாழ்வாரத்தின் மறுபுறத்தில் திறந்திருந்த ஒரு கதவு, மங்கையர்க்கரசியின் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. அவள் இந்த அரண்மனைக்கு வந்த நாளாக மேற்படி கதவு திறக்கப்பட்டதைப் பார்த்ததில்லை. வானமாதேவியின் மாளிகையிலிருந்து இந்த மாளிகைக்கு வருவதற்கான சுரங்க வழியின் கதவு அது என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அந்தச் சுரங்க வழி மூலமாகத் தான் வானமாதேவி இப்போது வந்திருக்க வேண்டும்! இந்த நடுநிசியில் அவ்வளவு இரகசியமாகச் சுரங்க வழியின் மூலம் அவர் எதற்காக வந்திருக்கிறார்?

இந்தக் கேள்விக்கு மறுமொழி அவளுக்கு மறுகணமே கிடைத்தது. வந்தவர்கள் இருவரும் புவனமகாதேவியின் படுக்கையறை வாசற் கதவண்டை நின்றார்கள். கையில் விளக்குடன் வந்த தாதிப் பெண் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளேயிருந்து "யார்?" என்ற குரல் கேட்டது. "நான்தான் அம்மா!" என்றார் வானமாதேவி. "இதோ வந்து விட்டேன்!" என்னும் குரல் கேட்ட மறுகணமே கதவும் திறந்தது. தாதிப் பெண்ணை வெளியிலே நிறுத்தி விட்டு வானமாதேவி உள்ளே சென்றார்.

வானமாதேவியின் பயப்பிராந்தி கொண்ட வெளிறிய முகத்தைப் பார்த்த மங்கையர்க்கரசியின் மனத்தில் சொல்ல முடியாத கவலையோடு பயமும் குடிகொண்டது. பூரண சந்திரனையொத்த பிரகாசமான பல்லவ சக்கரவர்த்தினியின் வதனம் நாலு நாளைக்குள் அப்படி மாறிப் போயிருக்கும் காரணம் என்ன? அவருக்கு அத்தகைய கவலையையும் பயத்தையும் உண்டாக்கும் விபரீதம் என்ன? சக்கரவர்த்தி போர்க்களத்துக்குப் போன பிறகு கூட வானமாதேவி எவ்வளவோ தைரியமாகவும் உற்சாகமாகவும் இருந்தாரே? அதைப் பற்றித் தான் ஆச்சரியப்பட்டதும் உண்டல்லவா! அப்படிப்பட்டவரை இவ்விதம் மாற்றும்படியாக எத்தகைய அபாயம் எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது? அந்த அபாயம் அவரோடு மட்டும் போகுமா? அல்லது அந்த அரண்மனையில் உள்ள மற்றவர்களையும் பீடிக்குமா?

கள்ளங் கபடமற்ற பெண்ணாகிய மங்கையர்க்கரசிக்கு மேற்படி விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒற்றுக் கேட்பது ஒரு பிசகான காரியமாகவே தோன்றவில்லை. எனவே, புவனமகாதேவியின் அறைக்கும் தன்னுடைய அறைக்கும் மத்தியிலிருந்த கதவண்டை சென்று நின்று மாமிக்கும் மருமகளுக்கும் நடந்த சம்பாஷணையை ஒற்றுக் கேட்கத் தொடங்கினாள். அந்த சம்பாஷணையின் ஆரம்பமே அவளுடைய மனத்தில் என்றுமில்லாத பீதியை உண்டாக்கி உடம்பெல்லாம் நடுங்கும்படி செய்தது. போகப் போக, அவள் காதில் விழுந்த விவரங்கள் சொல்ல முடியாத வியப்பையும் எல்லையில்லாத பீதியையும் மாறி மாறி அளித்தன. சில சமயம் அவள் உடம்பின் இரத்தம் கொதிப்பது போலவும், சில சமயம் அவளுடைய இருதயத் துடிப்பு நின்று போவது போலவும் உணர்ச்சிகளை உண்டாக்கின. அப்படியெல்லாம் அந்தப் பேதைப் பெண்ணைக் கலங்கச் செய்து வேதனைக்குள்ளாக்கிய சம்பாஷணையின் விவரம் இதுதான்:

"அம்மா! ஒருவேளை தூங்கிப் போ் விட்டீர்களா?" "மகளே! நீ சொல்லியனுப்பியிருக்கும் போது எப்படித் தூங்குவேன்? உன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். ஆனால், இது என்ன மர்மம்? எதற்காக இப்படி நடு ராத்திரியில் வந்தாய்? உன் முகம் ஏன் இப்படி வெளுத்துப் போயிருக்கிறது? ஐயோ பாவம்! பல நாளாக நீ தூங்கவில்லை போல் இருக்கிறதே?" "ஆம், அம்மா! நெடுமாறன் என் அரண்மனைக்கு என்றைக்கு வந்தானோ அன்றைக்கே என்னை விட்டுத் தூக்கமும் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டது. தாயே! பக்கத்து அறையில் யாராவது இருக்கிறார்களா? நாம் பேசுவது யாருடைய காதிலாவது விழக்கூடுமா?"

"இது என்ன பயம், மகளே? யார் காதில் விழுந்தால் என்ன? யாருக்காக நீ பயப்படுகிறாய்? பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி சத்துருமல்லரின் மருமகள், மாமல்லரின் பட்டமகிஷி யாருக்காக இப்படிப் பயப்பட வேண்டும்?" "யாருக்காக நான் பயப்படுகிறேன் என்றா கேட்கிறீர்கள், அம்மா! நமது அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பணியாளிடமும் ஒவ்வொரு பணிப் பெண்ணிடமும் பயப்படுகிறேன்." "அப்படியானால் உன் பின்னோடு அழைத்து வந்தாயே அவள்?" "செவிடும் ஊமையுமாக இருப்பவளைப் பார்த்து அழைத்து வந்தேன்!" "மகளே! இது என்ன பேச்சு? உன்னுடைய பணிப் பெண்களிடமே நீ பயப்படும்படியான அவசியம் என்ன நேர்ந்தது? வீர பாண்டிய குலத்திலே பிறந்து வீர பல்லவர் வம்சத்தில் வாழ்க்கைப்பட்டவள் இத்தகைய பயத்துக்கு ஆளாகலாமா? இது என்ன அவமானம்?"

"அம்மா! இதிலுள்ள மான அவமானமெல்லாம் பாண்டிய குலத்துக்குத்தான்; பல்லவ குலத்துக்கு ஒன்றுமில்லை. என் அரண்மனைப் பணிப் பெண் ஒருத்தி சமணர்களுடைய வேவுக்காரியாகி நெடுமாறனுக்கும் சமணர்களுக்கும் நடுவே தூது போய் வருகிறாள் என்று அறிந்தேன். அவள் வந்து சொன்ன செய்தியின் பேரில் நேற்றிரவு நடுநிசியில் நெடுமாறன் சமண சித்தர்களின் அந்தரங்க மந்திரக் கூட்டத்துக்குப் போய் விட்டு வந்தான்." "ஆம்! மகளே, இது என்ன விந்தை! காஞ்சி நகரில் இன்னும் சமணர்கள் தங்கள் காரியங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களா?" "ஆம், தாயே! நெடுமாறனைத் தொடர்ந்து, அந்தச் சமண சித்தர்களும் வந்திருக்கிறார்கள். நெடுமாறன் அவர்களைப் பார்க்கப் போன போது அங்கே நடந்த காரியங்களைக் கேட்டால் இன்னும் தாங்கள் பயங்கரமடைவீர்கள்!" "என்ன நடந்தது, மகளே?" "நெடுமாறனுடைய மனத்தைக் கெடுப்பதற்காக என்னவெல்லாமோ அவர்கள் மந்திர தந்திரங்களைக் கையாளுகிறார்களாம். பாவம்! நெடுமாறனுடைய புத்தி அடியோடு பேதலித்துப் போயிருக்கிறது!" "ஆனால் சமணர்களுடைய நோக்கந்தான் என்ன?" "யாரோ ஒரு பையனை மந்திர சக்தியால் மயக்கி, வருங்காலத்தில் வரப்போவதை அகக்கண்ணால் கண்டுசொல்லச் சொன்னார்களாம். வாதாபி யுத்தத்தில் வெற்றியடைந்தவுடனே தங்களுடைய புதல்வர், நெடுமாறன் மீது பொறாமை கொண்டு அவனைக் கத்தியால் வெட்டிக் கொல்வதாக அவன் கண்டு சொன்னானாம்!" "ஐயோ! இது என்ன கொடுமை! அப்புறம்...?" "ஆனால், அந்த விதியையும் சமண சித்தர்களின் சக்தியால் மாற்றலாம் என்று அவர்கள் சொன்னார்களாம். அவர்களின் விருப்பத்தின்படி நடந்தால் நெடுமாறனை தக்ஷிண தேசத்தின் ஏக சக்ராதிபதியாக இந்தக் காஞ்சியிலேயே பட்டாபிஷேகம் செய்து வைப்பதாகச் சொன்னார்களாம்!" "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, மகளே?" "நமது ஒற்றர் தலைவன் சத்ருக்னன் எல்லாவற்றையும் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தானாம்."

"ஆகா! மகேந்திர பல்லவர் மீது பழி தீர்த்துக் கொள்ளச் சமணர்கள் நல்ல சந்தர்ப்பத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!" "அம்மா! ஆனால், அவர்கள் உண்மையில் சமணர்களும் அல்லவாம்! வாதாபியின் ஒற்றர்கள் சமணர்களைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு இந்தத் தந்திர மந்திரமெல்லாம் செய்கிறார்களாம்!" "அப்படியானால் அவர்களை உடனே சிறைப் பிடிப்பதற்கு என்ன?" "சிறை பிடித்தால் அதனால் அபாயம் வரலாமென்று சத்ருக்னன் பயப்படுகிறான். பாண்டிய சைனியத்தை உடனே காஞ்சியைக் கைப்பற்றும்படி நெடுமாறன் சொல்லலாமென்றும், காரியம் மிஞ்சி விபரீதமாகிவிடும் என்றும் அஞ்சுகிறான்." "வேறு என்ன யோசனைதான் சத்ருக்னன் சொல்கிறான்?" "அவனுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை, தாயே! உடனே சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்ப வேண்டும் என்றான். ஆனால், என் நாதர் போருக்குப் புறப்படும் போது, அவருக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்றியே தீருவேன், தங்களிடம் அனுமதி பெற்றுப் போகத்தான் வந்தேன்." "அப்படியா? மாமல்லனுக்கு நீ என்ன வாக்குறுதி கொடுத்தாய்?"

"நெடுமாறனால் ஏதாவது கெடுதல் நேருவதாயிருந்தால் என் கையால் அவனுக்கு விஷத்தைக் கொடுப்பேன்; இல்லாவிட்டால் அவனைக் கத்தியால் குத்திக் கொல்வேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்." "ஆ! இது என்ன பாபம்? உன் தலையில் இவ்வளவு பெரிய பாரத்தை வைத்து விட்டு என் மகன் எப்படிப் புறப்பட்டுப் போனான்? "அம்மா! என்னிடம் அவர் பரிபூரண நம்பிக்கை வைத்துச் சென்றார். அந்த நம்பிக்கையை உண்மையாக்குவேன்." "குழந்தாய்! நாளை மாலை வரையில் எனக்கு அவகாசம் கொடு. முடிவாக என் யோசனையைச் சொல்கிறேன்." "அம்மா! அடுத்த அறையில் யார் இருக்கிறது? ஏதோ சப்தம் கேட்பது போல் தோன்றியது." "இந்த அரண்மனையைப் பற்றி நீ சந்தேகிக்க வேண்டாம், இங்கு யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை." "அப்படியா நினைக்கிறீர்கள்? இன்று சாயங்காலம் நடந்ததைக் கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்." "சாயங்காலம் என்ன நடந்தது?"

"நெடுமாறன் பூந்தோட்டத்தில் உலாவிவிட்டு வருவதாகச் சொல்லிப் போனான். வெகுநேரம் அவன் திரும்பி வராமலிருக்கவே எனக்கு ஏதோ சந்தேகமாயிருந்தது. அவனைத் தேடிக் கொண்டு நான் சென்றேன். பூங்காவனத்தில் செடிகள் அடர்ந்திருந்த ஓரிடத்தில் நெடுமாறனும் ஒரு பெண்ணும் நின்று அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள், அந்தப் பெண் யார் தெரியுமா?" "யார்?" "தாங்கள் சுவீகாரப் புதல்வியாகக் கொண்டு அன்புடன் ஆதரித்து வளர்க்கிறீர்களே, அந்தச் சோழ நாட்டுப் பெண்தான்!" "என்ன? மங்கையர்க்கரசியா?" "ஆம்; தாயே! மங்கையர்க்கரசியேதான்!" "மகளே! நீ யாரைப் பற்றி என்ன சொன்னாலும் நம்புகிறேன். ஆனால், மங்கையர்க்கரசியை மட்டும் ஒருநாளும் சந்தேகிக்க மாட்டேன்." "ஆனால், என் கண்ணாலேயே பார்த்தேன், அம்மா!"

"கண்ணாலே என்ன பார்த்தாய்? இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாய். அவ்வளவுதானே? இவள் பூஜைக்கு மலர் எடுக்கப் போயிருந்தாள். தற்செயலாக நெடுமாறன் அங்கு வந்திருப்பான்; ஏதாவது கேட்டிருப்பான். இவளும் யாரோ பாண்டிய நாட்டு வாலிபனைப் பற்றி விசாரிக்க வேணுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள்..." "அவர்களுடைய நடவடிக்கைகள் மிக்க சந்தேகாஸ்பதமாய் இருந்தன, அம்மா!" "இப்போதுள்ள உன்னுடைய மனோநிலையில் யாரைப் பற்றியும் சந்தேகம் தோன்றலாம்." "போய் வருகிறேன், அம்மா! தங்களிடம் சொன்ன பிறகு என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரம் கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றுகிறது!" "போய் வா, குழந்தாய்! மீனாக்ஷி அம்மன் அருளால் உன்னுடைய இருதயத்தின் பாரம் முழுவதும் நீங்கட்டும்." இதன் பிறகு கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து காலடிச் சப்தமும் மறுபடியும் கதவு திறந்து மூடும் சப்தமும் கேட்டன. பிறகு, அந்த அரண்மனையில் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டது.

மேற்படி சம்பாஷணை முழுவதையும் கேட்டுக் கொண்டு சித்திரப் பதுமை போல் கதவண்டை நின்ற மங்கையர்க்கரசி அன்றிரவு முழுவதும் ஒரு கண நேரங்கூடக் கண்ணை மூடவில்லை. இதற்கு முன் விளங்காத பல மர்மங்கள் மேற்படி சம்பாஷணையின் மூலம் அவளுக்குத் தெரியவந்தன. பாண்டிய குமாரன்தான் தன்னுடைய காதலன் என்ற செய்தி அவளுக்கு எல்லையற்ற உவகையையும் வியப்பையும் அளித்தது. தான் அவனைப் பற்றி அடிக்கடி கண்ட கனவின் பொருள் ஒருவாறு விளங்கிற்று. அவனுக்கு அந்த அரண்மனையில் நேர்வதற்கு இருந்த பேரபாயம் அவளுக்குச் சொல்ல முடியாத திகிலையும் கவலையையும் அளித்தது. அந்தப் பேரபாயத்திலிருந்து அவனைத் தப்புவிக்கும் பொறுப்பும் பாக்கியமும் தனக்குரியவை என்பதையும் உணர்ந்தாள். இம்மாதிரி எண்ணங்கள் அவளுக்கு இரவு முழுதும் ஒரு கணமும் தூக்கமில்லாமல் செய்து விட்டன.

மறுநாள் மாலை, குறிப்பிட்ட சமயத்துக்குச் சற்று முன்னாலேயே பூங்காவனத்துக்குச் சென்று காத்திருந்தாள். நெடுமாறன் தென்பட்டதும் விரைந்து வந்து அணுகி ஒரே பரபரப்புடன், "பிரபு! தங்களுக்கு இந்த அரண்மனையில் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது; உடனே இங்கிருந்து போய் விடுங்கள்!" என்று அலறினாள். நெடுமாறன் சிறிது வியப்புடன் "என்ன சொல்லுகிறாய்? எனக்கா பேரபாயம் வரப் போகிறது? இந்த ஏழைக்கு யாரால் என்ன அபாயம் நேரக்கூடும்?" என்றான். "சுவாமி! என்னை இனியும் ஏமாற்ற நினைக்க வேண்டாம். தாங்கள்தான் பாண்டிய குமாரர் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையிலேயே தங்களுக்கு இங்கே பேரபாயம் வருவதற்கு இருக்கிறது. உடனே போய் விடுங்கள், இந்த அரண்மனையை விட்டு!" என்றாள் மங்கையர்க்கரசி.



பதினெட்டாம் அத்தியாயம்
தமக்கையும் தம்பியும்

அன்று சூரியாஸ்தமனம் ஆன பிறகு வானமாதேவி தன்னுடைய விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அறையில் வெள்ளிப் பெட்டிகளையும் தங்கப் பெட்டிகளையும் திறந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள். திடீரென்று, "அக்கா! என்ன தேடுகிறாய்?" என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குத் தெரியாமல், ஓசை உண்டாக்காமல், அந்த அறைக்குள் நெடுமாறன் பிரவேசித்திருந்தான். அவனைக் கண்டதும் வானமாதேவியின் திகைப்பு அதிகமாயிற்று. "அக்கா! என்ன தேடுகிறாய்?" என்று நெடுமாறன் மறுபடியும் கேட்டுவிட்டு ஏறிட்டுப் பார்த்தான். மறுமொழி சொல்ல முடியாமல் வானமாதேவி கொஞ்சம் தடுமாறிவிட்டு, "தம்பி! நீ எப்போது இங்கு வந்தாய்?" என்றாள். "நான் வந்து சிறிது நேரமாயிற்று. ஒருவேளை இந்தக் கத்தியைத்தான் தேடுகிறாயோ என்று கேட்பதற்காக வந்தேன்!" என்று சொல்லிக் கொண்டே பின்புறமாக மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒரு சிறு கத்தியை நெடுமாறன் நீட்டினான்.

வானமாதேவி அந்தக் கத்தியை வெறித்துப் பார்த்தவாறு நின்றாள். அவளுடைய முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் துளித்து நின்றன. "அக்கா! என்னைக் கத்தியால் குத்திக் கொல்வதென்று முடிவாகத் தீர்மானித்திருந்தாயானால், இதை வாங்கிக் கொண்டு இப்போதே அந்தக் காரியத்தைச் செய்துவிடு! வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும்!" பரிகாசமும் பரிதாபமும் கலந்த குரலில் நெடுமாறன் கூறிய மேற்படி வார்த்தைகளைக் கேட்ட வானமாதேவியின் உள்ளம் என்ன பாடுபட்டது என்பதைச் சொல்லி முடியாது. ஒரு பக்கம் அவமானமும் ஆத்திரமும் அவளைப் பிடுங்கித் தின்றன; மற்றொரு பக்கம் கோபமும் ஆத்திரமும் பொங்கின.

எவ்வளவோ முயன்றும், அவளுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. நெடுமாறன் மேலும் கூறினான்; "அல்லது ஒருவேளை விஷங்கொடுத்து என்னைக் கொல்லுவதாகத் தீர்மானித்திருந்தாயானால், கொடுக்கிற விஷம் நிச்சயமாய்க் கொல்லக்கூடியதுதானா என்று தெரிந்து கொண்டு கொடு. நீ எவ்வளவோ சிரமப்பட்டு வாங்கி வைத்திருந்த விஷத்தை அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மான்குட்டிக்கு கொடுத்துப் பார்த்தேன். அது உயிரை விடும் வழியாகக் காணப்படவில்லை. முன்னை விட அதிகமாகவே துள்ளி விளையாடுகிறது!"

நெடுமாறனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் விஷந்தோய்ந்த அம்பைப் போல் வானமாதேவியின் நெஞ்சில் பாய்ந்து அவளைக் கொல்லாமல் கொன்றது. அந்த வேதனையை மேலும் பொறுக்க முடியாதவளாய், தயங்கித் தயங்கி, "தம்பி! இதெல்லாம் என்ன பேச்சு? நானாவது உன்னைக் கொல்லவாவது?..." என்றாள் வானமாதேவி. "அக்கா! பல்லவ குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்குப் பொய்யும் புனைச்சுருட்டும் கற்றுக் கொண்டு விட்டாயா? நேற்றிரவு புவன மகாதேவியிடம் யோசனை கேட்கப் போனாயே? அவர் இந்த யோசனைதான் சொல்லிக் கொடுத்தாரா?" என்றான் நெடுமாறன்.

வானமாதேவிக்கு அவளுடைய ஆத்திரத்தையெல்லாம் பிரயோகிக்க இப்போது ஒரு வழி கிடைத்தது. கடுமை நிறைந்த குரலில், "நான் நினைத்தபடியே ஆயிற்று; இதையெல்லாம் உனக்குச் சொன்னது அந்தச் சோழ நாட்டுப் பெண்தானே?" என்றாள். அந்தப் பேதைப் பெண் மீது உன் ஆத்திரத்தைக் காட்ட வேண்டாம். அக்கா! அவள் அதற்குப் பாத்திரமில்லாதவள். சற்று முன்னால் அவள் என்னிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உண்மைதான். ஆனால் இந்தக் கத்தி காணாமற்போனது இன்றைக்கல்லவே? இரண்டு நாளாக இதை நீ தேடுகிறாய் அல்லவா?"

வானமாதேவி மீண்டும் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டு, "சமண சித்தர்களால் அறிய முடியாதது ஒன்றுமில்லை போலிருக்கிறது!" என்றாள். "ஆனால், உன்னுடைய மனத்திலுள்ளதை அறிவதற்குச் சித்தர்களின் சக்தி தேவையில்லை, அக்கா! பாவம்! நீ கள்ளங்கபடு அறியாதவள். வள்ளுவர் பெருமான், "அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்று சொன்னது உன்னைப் பற்றியே சொன்னதாகத் தோன்றுகிறது. உன் மனத்திலுள்ள எண்ணத்தை உன்னுடைய முகமே எனக்குக் காட்டிவிட்டது. மேலும் நான் கண் குருடாகவும், காது செவிடாகவும் பிறக்கவில்லையே? இந்த அரண்மனைக்கு வந்ததிலிருந்து என் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டுதானிருக்கிறேன். உன் இடுப்பிலே இந்தக் கத்தியை நீ சதா செருகி வைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். இதை நீ ஒரு தடவை ஞாபகமறதியாகத் தரையில் வைத்தாய். உனக்குத் தெரியாமல் இதை எடுத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதச் சிரமும் ஏற்படவில்லை...."

"ஆகா! எப்பேர்ப்பட்ட அசடு நான்?" என்று முணுமுணுத்தாள் வானமாதேவி. "நீ அசடு இல்லை, அக்கா! ஆனால் இந்தக் காரியம் செய்வதற்கு உன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் மனத்திலுள்ளதை மறைக்கத் தெரியாமல் பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாய்!... ஆஹா! பத்து வருஷத்துக்கு முன்பு நீயும் நானும் மதுரை அரண்மனையில் இருந்தபோது, என் பேரில் நீ எவ்வளவு பிரியமாயிருந்தாய்? அந்த நாளை நினைத்தாலே எனக்கு மெய்சிலிர்க்கிறது. நான் விவரமறியாக் குழந்தையாயிருந்தபோதே, என் அன்னை இறந்து போனாள். ிறகு அரண்மனையில் சின்னராணி வைத்ததே சட்டமாயிருந்தது. தாயின் அன்பை அறியாத எனக்கு நீயே தமக்கையும் தாயுமாக இருந்து வந்தாய். வெகு காலம் வரையில் நீ என் சொந்தத் தமக்கையென்றே எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தின் போதுதான், நீ என் மாற்றாந்தாயின் மகள் என்று அறிந்து கொண்டேன்."

வானமாதேவியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியலாயிற்று. "நெடுமாறா! அதையெல்லாம் இப்போது எதற்காக நினைவூட்டுகிறாய்?" என்று விம்மலுக்கிடையே வானமாதேவி கேட்டாள். "அவ்வளவு அன்பாக என்னிடம் இருந்தாயே? அப்படிப்பட்டவள் எவ்வாறு இவ்வளவு கொடூர சித்தமுடையவள் ஆனாய்? என்னைக் கத்தியால் குத்தியோ விஷங்கொடுத்தோ கொல்லுவதற்கு எவ்வாறு துணிந்தாய்?...." என்றான் நெடுமாறன். "தம்பி! என்னை மன்னித்துவிடு, அவர் யுத்தத்துக்குப் புறப்படும்போது இவ்விடத்துப் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுச் சென்றார். உன்னால் ஏதாவது இங்கே அபாயம் நேரலாம் என்று எச்சரித்தார். அப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாக்குக் கொடுத்தபோது நீ இவ்விதம் சதி செய்யப் போகிறாய் என்று கனவிலும் கருதவில்லை!" என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்ணீர்விடத் தொடங்கினாள்.

"அக்கா! நீ கண்ணீர் விடுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. நான் என்ன சதி செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நீ உன் பதிக்கு என்ன வாக்குக் கொடுத்தாய் என்பதையும் நான் அறியேன். ஒருவேளை என்னைக் கத்தியால் குத்திக் கொன்று விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தாயானால், அதைப் பற்றிக் கவலைப்படாதே! இதோ என் மார்பைக் காட்டச் சித்தமாயிருக்கிறேன்; உன் வாக்கை நிறைவேற்று!" என்று சொல்லிய வண்ணம் நெடுமாறன் கத்தியை வானமாதேவியின் கையில் கொடுப்பதற்காக நீட்டிக் கொண்டே, தன் மார்பையும் காட்டினான். "தம்பி! பெருந் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் என்னோடு ஏன் விளையாடுகிறாய்? நீ என்ன உத்தேசத்தோடு இப்போது வந்தாயோ, அதைச் சொல்லு!" என்றாள் சக்கரவர்த்தினி.

"அக்கா! நான் விளையாடவில்லை, உண்மையாகவே சொல்லுகிறேன். உன்னைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவோ கர்வமாயிருக்கிறது. பாண்டியர் குலத்தில் பிறந்த பெண் இவ்வளவு பதிபக்தியுடையவளாயிருப்பது மிகப் பொறுத்தமானதுதான். பாண்டியர் குல தெய்வமான மீனாக்ஷி தேவி, பெற்ற தகப்பனான தக்ஷனை நிராகரித்து விட்டுச் சிவபெருமானே கதி என்று வந்து விடவில்லையா! பிறந்த வீட்டாரால் புருஷனுக்கு ஏதேனும் கேடு நேர்வதாயிருந்தால், புருஷனுடைய நன்மைக்கான காரியத்தைத் திடமாகச் செய்வதுதான் பாண்டியகுலப் பெண்களின் மரபு. ஆனால் என்னால் என்ன கேடு வரும் என்று நீ சந்தேகப்பட்டாய்? எந்த விதத்தில் நான் உன்னுடைய மன வெறுப்புக்குப் பாத்திரமானேன்? அதை மட்டும் சொல்லிவிட்டு இந்தக் கத்தியை என் மார்பில் பாய்ச்சி விடு!" என்றான் நெடுமாறன்.

"தம்பி என் வாயினால் அதைச் சொல்லியே தீரவேண்டுமா? உன்னோடு அழைத்து வந்திருக்கும் பாண்டிய சைனியத்தைக் கொண்டு காஞ்சி நகரையும் பல்லவ சிம்மாசனத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று நீ சதி செய்யவில்லையா?" "இம்மாதிரி துரோக சிந்தை எனக்கு ஏற்பட்டிருப்பதாக உனக்கு ஏன் சந்தேகம் வந்தது? யார் சொன்னார்கள், அக்கா!" "யார் சொல்லவேண்டும்! உன் முகத் தோற்றம், நடவடிக்கை பேச்சு எல்லாம் சந்தேகத்தை உண்டாக்கின. 'வாதாபிக்குப் போவது சந்தேகம்' என்று சொன்னாய், 'இந்த அரண்மனையிலேயே அடைக்கலந்தந்தால் இங்கேயே இருந்து விடுகிறேன்' என்று கூறினாய்; எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் உள்ளவன் போல் காணப்பட்டாய். இதையெல்லாம் தவிர நள்ளிரவில் சமணசித்தர் கூட்டத்துக்குப் போய் வந்தாய். சமணர்களுடைய சூழ்ச்சியில் நீ அகப்பட்டுக் கொண்ட பிறகு நான் சந்தேகப்படுவதற்கு இன்னும் என்ன வேண்டும்?"

"அக்கா! வீணாகச் சமணர்களின் மீது பழி சொல்ல வேண்டாம். அவர்கள் வருங்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை எனக்குக் காட்டியது உண்மையே. ஆனால், அவற்றிலிருந்து நான் முடிவு செய்தது நீ நினைத்ததற்கு நேர் மாறானது. மாமல்லச் சக்கரவர்த்தி இங்கு இல்லாத சமயம் பார்த்து அவருடைய தலைநகரையும் ராஜ்யத்தையும் அபகரித்துக் கொள்ள நான் எண்ணவில்லை. 'மாமா! மாமா! என்று சொல்லிக் கொண்டு என்னை ஓயாமல் சுற்றித் திரியும் குழந்தை மகேந்திரனுக்குத் துரோகம் செய்யவும் நான் எண்ணவில்லை. ஆனால் இந்த அரண்மனைக்கு வந்தது முதலாக எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேனென்றால், எனக்கு நியாயமாக உரிய பாண்டிய ராஜ்யத்தையும் துறந்து, உலக வாழ்க்கையையும் துறந்து திகம்பர சமணனாகி விடலாமா என்றுதான்...."

"தம்பி! இது என்ன விபரீத யோசனை?" என்று வானமாதேவி திடுக்கிட்டுக் கேட்டாள். "எது விபரீத யோசனை, அக்கா! ஆறறிவுள்ள மனிதர்களைப் புலிகளாகவும் ஓநாய்களாகவும் ஆக்கி, லட்சக்கணக்கான ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று மடிவதற்குக் காரணமாயிருக்கும் இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்வது விபரீத யோசனையா? அல்லது புழு பூச்சிகளின் உயிருக்குக்கூட ஊறு செய்யாத ஜீவ காருண்ய மதத்தைச் சேர்ந்து கொல்லா விரதம் மேற்கொண்டு வாழ்வது விபரீத யோசனையா?" "தம்பி! நீ மிகப்படித்தவன்; உன்னோடு தத்துவ விசாரணை செய்வதற்கு வேண்டிய தகுதியற்றவள் நான். ஆயினும் நீ சமண சந்நியாசி ஆகிற யோசனை விபரீதமானதுதான். அதை நினைக்கும் போதே எனக்கு என்னவோ செய்கிறது!"

"என்னை நீ கத்தியால் குத்திக் கொன்றாலும் கொல்லுவாய். ஆனால் நான் திகம்பர சமணன் ஆவதை மட்டும் விரும்ப மாட்டாய்! போனால் போகட்டும்; அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நான் திகம்பர சமணன் ஆகப்போவதில்லை. அந்த யோசனையை நேற்றுச் சாயங்காலத்தோடு கைவிட்டு விட்டேன்...." "பின்னே, என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய், தம்பி!" என்று அடங்காத ஆர்வத்துடன் பல்லவ சக்கரவர்த்தினி கேட்டாள். "நாளைய தினம் மதுரைக்குத் திரும்பிப் போகிறேன். அக்கா! ஒருவேளை எனக்கு அந்தச் சிரமம் கொடுக்காமல் நீ என்னைக் கொன்று விடுவதாயிருந்தால்... " என்று கூறி மீண்டும் தன் கையிலிருந்த கத்தியை நீட்டினான்.

வானமாதேவி அவன் அருகில் வந்து அந்தக் கத்தியைப் பிடுங்கித் தூர எறிந்தாள். பிறகு, நெடுமாறனுடைய இருகரங்களையும் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க, "நெடுமாறா! இந்தப் பைத்தியக்காரியைத் தண்டித்தது போதும், இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதே! உன்பேரில் சந்தேகப்பட்டது பெரிய குற்றந்தான், என்னை மன்னித்துவிடு!" என்றாள். உனக்கு இவ்வளவு மனக்கலக்கத்தை அளித்ததற்காக நான் தான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மனபூர்வமாக மன்னித்து ஆசீர்வாதம் செய், அக்கா!" என்றான் நெடுமாறன். "கடவுள் அருளால் உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். சீக்கிரத்தில் உனக்குத் தகுந்த பத்தினியை மணந்து கொண்டு நெடுங்காலம் பாண்டிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பாய்...." "அக்கா! எனக்குத் தகுந்த பத்தினியைத் தேடிக் கொண்டுதான் நான் காஞ்சி நகருக்கு வந்தேன். அவளைப் பார்ப்பதற்காகவே இத்தனை நாளும் இங்கே தாமதித்தேன். நேற்றுச் சாயங்காலம் அவளை உன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் சந்தித்து் பேசிய பிறகுதான் என் உள்ளம் தெளிவடைந்தது. உன் ஆசீர்வாதம் பலித்து நான் பாண்டிய சிம்மாசனம் ஏறினால் அந்தப் பெண்தான் என் பட்டமகிஷியாயிருப்பாள்!" என்றான் நெடுமாறன்.



பத்தொன்பதாம் அத்தியாயம்
அன்னையின் ஆசி

மறுநாள் பாண்டியன் நெடுமாறன் புவனமகாதேவியிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக அந்த மூதாட்டியின் அரண்மனைக்குச் சென்றான். மகேந்திர பல்லவரின் பட்ட மகிஷி அக மகிழ்ந்து முகமலர்ந்து நெடுமாறனை வரவேற்றாள். அச்சமயம் அங்கிருந்த மங்கையர்க்கரசி வெளியேற யத்தனித்த போது, "குழந்தாய்! ஏன் போகிறாய்? பாண்டிய குமாரனுடன் நான் பேசக் கூடிய இரகசியம் ஒன்றும் இல்லை" எனக் கூறி அவளைப் போகாமல் நிறுத்தினாள். பிறகு நெடுமாறனை உட்காரச் சொல்லி, "அப்பனே! எல்லா விவரமும் அறிந்து கொண்டேன். வானமாதேவி நேற்றிரவே வந்து கூறினாள். இருந்தாலும் அந்த உத்தமியின் மனத்தை நீ ரொம்பவும் கலக்கி விட்டாய்!" என்றாள். நெடுமாறனுடைய மௌனத்தைக் கண்டு, "நீ காஞ்சிக்கு வந்தது முக்கியமாக எனக்குத்தான் பெரிய அனுகூலமாகப் போயிற்று. இந்தப் பெண்ணைத் தகுந்த வரனுக்கு மணம் செய்து கொடுப்பதாக இவளுடைய தந்தைக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். அது விஷயத்தில் நான் பிரயத்தனம் செய்ய இடமில்லாமல் நீங்களே முடிவு செய்து கொண்டு விட்டீர்கள். எனக்கு அது விஷயமான பொறுப்பு இல்லாமல் போயிற்று" என்றாள் புவனமகாதேவி. "தாயே! அப்படிச் சொல்ல வேண்டாம்; தங்களுடைய சுவீகாரப் பெண்ணின் கலியாண விஷயமாகத் தங்களுடைய பொறுப்பு தீரவில்லை. தாங்கள் பிரயத்தனம் செய்வதற்கு இடம் இருக்கிறது. கொஞ்சம் மங்கையர்க்கரசியைக் கேட்டு விடுங்கள், அவள் என்னை மணந்து கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தீர்த்து வைக்கப் போகிறாளா என்று!"

இவ்விதம் நெடுமாறன் சொன்னதும், புவனமகாதேவி, "அவளைப் புதிதாய்க் கேட்பானேன்? ஏற்கெனவே எல்லாம் அவள் என்னிடம் சொல்லியாயிற்று" என்று கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்த்த தேவி, மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு, "இது என்ன? குழந்தைகள் அதற்குள்ளே ஏதேனும் சண்டை போட்டுக் கொண்டீர்களா?" என்று நெடுமாறனைப் பார்த்து வினவினாள். "சாதாரணச் சண்டை போடவில்லை, அம்மா! பெரிய யுத்தம்! வாதாபி யுத்தத்துக்கு நான் போகவில்லையே என்று இங்கே அரண்மனைக்குள்ளேயே யுத்தம் ஆரம்பித்தாயிற்று. இவ்வளவு தூரம் என்னை பைத்தியம் பிடிக்க அடித்து விட்டு, என் சொந்தத் தமக்கையே எனக்கு விஷங்கொடுத்துக் கொல்ல நினைக்கும் வரையில் கொண்டு வந்து விட்டு, இப்போது என்னை மணந்து கொள்ளமாட்டேனென்று சொல்லுகிறாள்! இதன் நியாயத்தை நீங்களே கேளுங்கள்!" என்றான் நெடுமாறன்.

புவனமகாதேவி மங்கையர்க்கரசியைப் பார்த்தாள், "ஏதோ அனாவசியமான தடையை இவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று தெரிந்து கொண்டாள். குழந்தாய்! பாண்டிய குமாரன் சொல்வது வாஸ்தவமா? உன்னைத் தேடி வந்திருக்கும் மகத்தான பாக்கியத்தை நீயே வேண்டாமென்று மறுதலிக்கிறாயா?" என்று கேட்டாள். மங்கையர்க்கரசி விம்மிக் கொண்டே வந்து அவள் பாதத்தில் நமஸ்கரித்து, "அம்மா! இவருக்கு நான் என் உள்ளத்தைப் பறிகொடுத்து இவரை என் பதியாக வரித்தபோது இவர் சமணர் என்பது எனக்குத் தெரியாது...." என்று சொல்லி மேலே பேச முடியாமல் தேம்பினாள்.

நெடுமாறன் பெரும் கவலைக்குள்ளானான். "இது என்ன? கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே?" என்று அவன் திகைத்து நிற்கையில், புவனமகாதேவி அவனைப் பார்த்து, "அப்பனே! இந்தக் குழந்தை சைவர் குலத்தில் பிறந்தவள். சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறவள் என்று உனக்குத் தெரியுமல்லவா? அதற்கு ஒன்றும் தடைசெய்ய மாட்டாயே?" என்று கேட்டாள். நெடுமாறன் அந்தச் சங்கடமான நிலையிலிருந்து விடுபட வழிகிடைத்தது என்ற உற்சாகத்துடன், "அம்மா! அப்படிப்பட்ட மூர்க்கன் அல்லன் நான். சமண சமயத்தில் நான் பற்றுக் கொண்டவனானாலும் சைவத்தை வெறுப்பவன் அல்லன். என் ஆருயிர் நண்பனான குலச்சிறை அபாரமான சிவபக்தன். நான் சுரமாய்க் கிடந்த போது இங்கே வந்து திருநாவுக்கரசர் பெருமானிடம் திருநீறு வாங்கி வந்து எனக்கு இட்டான்; அதை நான் ஆட்சேபிக்கவில்லை. மதுரையில் இருக்கும் போது அவன் காலை, மத்தியானம், மாலை மூன்று வேளையும் ஆலயத்துக்குச் சென்று மீனாக்ஷி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்து விட்டு வருவான். அம்மாதிரியே இவளும் செய்யட்டும், நான் தடை சொல்லவில்லை!" என்றான். அப்போதுதான் மங்கையர்க்கரசியின் முகம் முன்போல் பிரகாசமடைந்தது.

அந்த அபூர்வமான காதலர் இருவரையும் புவனமகாதேவி தன் எதிரில் தம்பதிகளைப் போல் நிற்கச் செய்து ஆசி கூறி வாழ்த்தினாள். இன்னும் சிறிது நேரம் மேலே நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நெடுமாறன் அவ்விருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் சென்ற பிறகு புவனமகாதேவி மங்கையர்க்கரசியை அன்போடு அணைத்துக் கொண்டு, "குழந்தாய்! நீ கவலைப்படாதே! நீ சில நாளாக அடிக்கடி கண்டு வரும் கனவைப் பற்றிச் சொன்னாயல்லவா? உன் கனவு நிச்சயம் பலிக்கும். நெடுமாறன் சிவபக்தியில் சிறந்தவனாவான். அந்தப் புண்ணியத்தை நீ கட்டிக் கொள்வாய்!" என்று ஆசி கூறினாள்.

நெடுமாறனிடமும் மங்கையர்க்கரசியிடமும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் நாமும் இப்போது விடைபெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி விடைபெறுமுன், நெடுமாறன் விஷயத்தில் புவனமகாதேவியின் வாக்கு முழுதும் உண்மையாயிற்று என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். பிற்காலத்தில் நெடுமாறன் ஸ்ரீசம்பந்தப் பெருமானின் பேரருளினால் சிறந்த சிவநேசச் செல்வனானான். யுத்தம் சம்பந்தமான அவனுடைய கொள்கையும் மாறுதல் அடைய நேர்ந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வாதாபிப் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து பாண்டிய நாட்டை அடைந்த போது நெல்வேலிப் போர்க்களத்தில் அவனைப் பாண்டியன் நெடுமாறன் முறியடித்துத் தமிழகத்தின் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றான்.



இருபதாம் அத்தியாயம்
நிலவில் நண்பர்கள்

வானக்கடலில் மிதந்த பூரண சந்திரன் பால் நிலவைப் பொழிந்து இந்த மண்ணுலகத்தை மோகனப் பொன்னுலகமாகச் செய்து கொண்டிருந்த இரவில் வடபெண்ணை நதியானது அற்புதக் காட்சியை அளித்துக் கொண்டிருந்தது. முதல் நாளிரவு அதே நேரத்தில் இந்த நதியைப் பார்த்திருந்தோமானால், சலசலவென்று இனிய ஓசையோடு அம்மாநதியில் ஓடிய தண்ணீர்ப் பிரவாகம் உருக்கிய வெள்ளியைப் போல் தகதகவென்று பிரகாசிப்பதையும், நாலாபுறமும் ககனவட்டம் பூமியைத் தொட்டு ஒன்றாகும் வரம்பு வரையில் பூரண அமைதி குடிகொண்டிருப்பதையும் கண்டிருப்போம். அந்த இயற்கை அமுதக் காட்சியின் இன்பத்தில் மெய்மறந்திருப்போம். பிரவாகத்தையொட்டி விரிந்து பரந்து கிடக்கும் வெண் மணலிலே படுத்துக் கொண்டு "ஆகா! இது என்ன அற்புத உலகம்? இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்கமா?" என்று வியந்திருப்போம்.

ஆனால், இன்றிரவோ அந்த வடபெண்ணை நதித் துறையானது மகத்தான அல்லோலகல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. கணக்கற்ற யானைகளும், குதிரைகளும், ரதங்களும், வண்டிகளும் அந்த நதியை அப்போது கடந்து கொண்டிருந்தன. யானைகள் அணிந்திருந்த தங்க முகபடாங்களும், அவற்றின் தந்தங்களுக்கு அணிந்திருந்த வெள்ளிப் பூண்களும், இயற்கையிலேயே அழகுடைய புரவிகளுக்குப் பூட்டியிருந்த நானாவித ஆபரணங்களும், ரதங்களின் தங்கத் தகடு வேய்ந்த விமானங்களும் வெண்ணிலவில் பளபளவென்று ஜொலித்தன. யானைகள், குதிரைகள் எல்லாம் வரிசை வரிசையாக ஏககாலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நதியை அடைத்துக் கொண்டு நீர்ப்பிரவாகத்தைக் கடந்த போது ஏற்பட்ட ஓசை பெருங் காற்று அடிக்கும்போது அலைவீசிக் குமுறும் சமுத்திரத்தின் பேரிரைச்சலை ஒத்திருந்தது.

அக்கரையில் கண்ணுக்கெட்டிய மட்டும் காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் காணப்பட்டனர். அவர்களுடைய கையிலே பிடித்திருந்த கூரிய வேல்கள் அசைந்தபோதெல்லாம் மின்வெட்டின் ஒளி தோன்றிக் கண்ணைப் பறித்தது. அந்த வீரர் கூட்டத்துக்கு இடையிடையே ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் இளங்காற்றில் பறந்து படபடவென்று சப்தித்துக் கொண்டிருந்தன. இந்தக் கரையில் நதித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஒரே ஒரு கூடாரம் மட்டும் காணப்பட்டது. கூடாரத்துக்குப் பக்கத்தில் புல்தரையில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மேல் யாரோ நாலு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையைத் தட்டிக் கூப்பிட்டால் கேட்கக்கூடிய தூரத்தில் பத்துப் பன்னிரண்டு வீரர்கள் கையில் நீண்ட வேல்களுடனும், இடையில் செருகிய வாள்களுடனும் சர்வ ஜாக்கிரதையுடன் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலிருந்து ரத்தினக் கம்பளத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் பெரிய அந்தஸ்து படைத்த முக்கியஸ்தர்கள் என்று ஊகிக்கலாம். அருகில் சென்று பார்த்தோமானால், நமது ஊகம் உண்மை என்பதைக் காண்போம். அந்த நால்வரும் மாமல்ல சக்கரவர்த்தி, சேனாபதி பரஞ்சோதி, வேங்கி அரசன் ஆதித்த வர்மன், ஒற்றர் தலைவன் சத்ருக்னன் ஆகியவர்கள்தான்.

வேங்கி அரசன் ஆதித்தவர்மன் மாமல்லருடைய தாயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன் வம்சத்தில் வந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில் கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள். சளுக்க சக்கரவர்த்தி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தபோது, ஆதித்த வர்மன் பல்லவ சக்கரவர்த்தியின் உதவிக்கு வர முடியாதபடி இடையில் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனனால் வழிமறிக்கப்பட்டான். விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் புராதன இராஜவம்சத்தை நிர்மூலம் செய்து தான் சிம்மாசனம் ஏறியதும், ஆனால், புலிகேசி தென்னாட்டிலிருந்து வாதாபிக்குத் திரும்பி வருவதற்குள் விஷ்ணுவர்த்தனன் உயிர் துறக்க நேர்ந்ததும் நேயர்கள் அறிந்தவை. விஷ்ணுவர்த்தனனுடைய ஆட்சியையும் ஆயுளையும் அகாலத்தில் முடிவு செய்யக் காரணமாயிருந்தவன் ஆதித்தவர்மன்தான். ஆனால், சில வருஷத்துக்குப் பின்னர் மீண்டும் புலிகேசியின் பெருஞ் சைனியம் வேங்கியைக் கைப்பற்ற வந்தபோது, ஆதித்தவர்மன் தன்னுடன் மிச்சம் இருந்த வேங்கிச் சைனியத்துடனே தென் திசை நோக்கிப் பின்வாங்கி மீண்டும் தாக்கச் சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருந்தான். மாமல்லர் மாபெரும் சைனியத்தோடு வாதாபியின் பேரில் படையெடுத்த போது, ஆதித்தவர்மனும் அவரோடு சேர்ந்து போருக்குப் புறப்பட்டான்.

சேனாதிபதி பரஞ்சோதி, பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் தாம் இதே வடபெண்ணையின் அக்கரையில் புலிகேசியின் சேனா சமுத்திரத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்தது பற்றியும், மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தன்னைப் பின் தொடர்ந்து வந்து புலிகேசியின் கண்ணெதிரே தன்னை விடுதலை செய்தது பற்றியும் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மற்ற மூவரும் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மூவரிலும் ஆதித்தவர்மன் மிகவும் அதிசயப்பட்டான். அவனுக்கு அந்த விவரங்கள் எல்லாம் புதியனவாக இருந்தன. "ஆகா! அந்த விசித்திர சித்தரை நேரில் பார்க்கும் பாக்கியம் இந்தக் கண்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே?" என்று வருந்தினான்.

அப்போது மாமல்லர் சொன்னார்; "இலங்கை இளவரசன் கூட அடிக்கடி இவ்விதம் கூறி வருத்தப்படுவான். என் தந்தை என்பதற்காக நான் பெருமையடித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரைப் பார்ப்பதே ஒரு பாக்கியந்தான். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கோ பல ஜன்மங்களிலே பாக்கியம் செய்திருக்க வேண்டும். மூன்று வருஷ காலம் அவர் என்னை அழைத்துக் கொண்டு தென் தேசமெங்கும் யாத்திரை செய்தார். இந்த மாதிரி வெண்ணிலவு பொழிந்த இரவுகளிலே நானும் அவரும் வெட்ட வெளியில் உட்கார்ந்து ஆனந்தமாகக் காலம் கழித்திருக்கிறோம். அவர் பிரயாணம் கிளம்பும் போது பரிவாதினி வீணையையும் உடன் எடுத்து வருவார். வீணைத் தந்திகளை மீட்டி அவர் இசை வெள்ளத்தைப் பெருக்கும் போது, வானமும் பூமியும் நிசப்தமாய், நிச்சலனமாய் நின்று கேட்பது போலத் தோன்றும். அந்த நாத வெள்ளத்தைத் தடை செய்யப் பயந்து காற்றும் நின்று விடும். மரங்களின் இலைகள் அசைய மாட்டா. பட்சி ஜாலங்களும் மௌனவிரதம் பூண்டிருக்கும்." "அண்ணா நிறுத்துங்கள்! இப்படி நீங்கள் பேச ஆரம்பித்தால் எனக்குச் சித்தம் கலங்கி விடுகிறது. யுத்தமும் இரத்தக் களரியும் என்னத்திற்கு, வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்து விட்டுப் போகலாமென்று தோன்றி விடுகிறது!" என்றான் ஆதித்தவர்மன். மாமல்லர் கலகலவென்று சிரித்து விட்டுச் சொன்னார்; "மகேந்திர பல்லவர் இதே மாதிரி வார்த்தைகளை ஒரு காலத்தில் சொன்னதுண்டு. 'உலகத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர்களுக்கு மண்ணாசை என்பது போய் விட்டால் இந்த பூவுலகமே சொர்க்கமாகி விடும்!' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...!" என்று கூறி விட்டு மாமல்லர் சேனாபதி பரஞ்சோதியைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.

"நமது சேனாதிபதி காஞ்சி நகரில் பிரவேசித்த அன்று நடந்த சம்பவத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அதைப் பற்றி ஒருநாள் அவரிடம் நானே விவரமாகக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்" என்று கூறினான் ஆதித்தவர்மன். "என் தந்தையின் அபிமானத்தை நமது சேனாதிபதி கவர்ந்தது போல் வேறு யாரும் கவர்ந்ததில்லை. ஒவ்வொரு சமயம் எனக்கு அவர் மேல் பொறாமை கூட உண்டாயிற்று. மகேந்திர பல்லவர் என்னைப் புறக்கணித்து விட்டுச் சேனாதிபதிக்க முடிசூட்டி விடுவாரோ என்று கூடச் சில சமயம் சந்தேகித்தேன். ஆனால், அதற்கு நானும் ஆயத்தமாயிருந்தேன். இன்றைக்குக் கூடச் சேனாதிபதி ஒப்புக் கொண்டால்..." என்று மாமல்லர் சொல்லி வந்த போது தளபதி பரஞ்சோதி குறுக்கிட்டார்.

"பிரபு! இப்படியெல்லாம் பேச வேண்டாம்; சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் எனக்கு என்னத்திற்கு? பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள்!" என்றார். மாமல்லர் உடனே ஆதித்தவர்மனையும், சத்ருக்னனையும் பார்த்துக் கண்ணினால் சமிக்ஞை செய்ய, அவர்களும் விஷயம் தெரிந்து கொண்டதற்கு அடையாளமாகப் புன்னகை புரிந்தார்கள்.

மாமல்லர் மானவன்மனிடம் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார் என்னும் விஷயம் சேனாதிபதி பரஞ்சோதியின் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. இதை மாமல்லர் நன்கு அறிந்திருந்தார். வாதாபி யுத்தத்துக்கு மானவன்மனை வர வேண்டாமென்று காஞ்சியில் நிறுத்தி விட்டு வந்ததற்கே இதுதான் முக்கியமான காரணம். எனவே மாமல்லர் மற்ற இருவரையும் பார்த்து, "பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போயிற்று" என்று சொல்வதற்கு அறிகுறியாகச் சமிக்ஞை செய்து விட்டு, தலைகுனிந்தவண்ணமிருந்த பரஞ்சோதியைப் பார்த்து "அழகாய்த்தானிருக்கிறது! போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர்? அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டார்.

சேனாதிபதி சற்று யோசனை செய்து விட்டு, "போர்க்களத்துக்கு வரவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உள்ளவரை எதற்காகத் தடுக்க வேண்டும்? மானவர்மர் வந்தால் நல்லதுதான்; நமது யானைப் படைக்கு அவர் தலைமை வகித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்" என்று சொன்னார். "எனக்கு என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மானவன்மன் நம்முடைய உதவியைக் கோரி வந்து அடைக்கலம் புகுந்தவன். இப்போது அவனுடைய உதவியினால் நாம் ஜயித்தோம் என்று எதற்காக ஏற்பட வேண்டும்?...." என்றார் மாமல்லர்.

அதுவரை ஏறக்குறைய மௌனமாயிருந்த சத்ருக்னன் கூறினான்; "சக்கரவர்த்தி! தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது? சேனாதிபதியும் ஆதித்தவர்மரும் இல்லாவிட்டாலும் தாங்கள் வாதாபியை அழித்து விட்டு வெற்றி வீரராய்த் திரும்புவீர்கள். இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்வதற்குக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள். மானவன்மர் இந்தப் படையெடுப்பிலே கலந்து கொண்டால் அவரால்தான் தாங்கள் ஜயமடைந்தீர்கள் என்ற பெயர் ஒரு நாளும் ஏற்பட்டு விடாது. அதனால் அவருக்குக் கௌரவம் ஏற்படும் என்பதுதான் உண்மை."

சத்ருக்னன் கூறியதைச் சேனாதிபதி, ஆதித்தவர்மன் இருவரும் பூரணமாக ஆமோதித்தார்கள். "மேலும், நமது யானைப் படைக்குப் பயிற்சி அளிக்கும் காரியத்தில் மானவன்மர் மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போருக்கு வர வேண்டாம் என்று சொல்வது நியாயமல்ல" என்றார் சேனாதிபதி. யானைப் படைக்கு ஏதோ புதுவிதமான பயிற்சி இலங்கை இளவரசன் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது என்ன புதுப் பயிற்சி?" என்று ஆதித்தவர்மன் கேட்டான். "அது உண்மைதான்; முன்னெல்லாம் கோட்டை வாசல் கதவுகளை உடைப்பதற்கு யானைகளை முட்ட விடுவது வழக்கம். காஞ்சிக் கோட்டை முற்றுகையின் போது மகேந்திர பல்லவரின் முன் யோசனையினால் அந்தப் பழைய முறை பலிக்காமல் போயிற்று. கோட்டைக் கதவுகளிலே ஈட்டி முனைகளைப் பொருத்தியிருந்தபடியால், ஒரு தடவை மோதியதுமே யானைகள் வெறி கொண்டு திரும்பி ஓடிப் போயின. இப்போது மானவன்மர் நமது யானைகளுக்கு, இரும்பு உலக்கைகளால் கதவுகளைப் பிளக்கவும், கோட்டைச் சுவர்களைக் கடப்பாறைகளைக் கொண்டு இடிக்கவும், தீவர்த்திப் பந்தங்களைத் தூக்கி வீசி கோட்டைக்குள் எறியவும் கற்பித்திருக்கிறார்."

"ஆஹா, இதுவரை இம்மாதிரி யானைப் படையை உபயோகித்ததாக நான் கேட்டதே இல்லை!" என்றான் ஆதித்தவர்மன். சேனாதிபதி பரஞ்சோதிக்கு மானவன்மரிடம் தனிப்பட்ட முறையில் விரோதம் எதுவும் கிடையாது. அவரிடம் மாமல்லர் அதிக அன்பு வைத்திருக்கிறார் என்பதிலேதான் அதிருப்தி. எனவே, இப்போது மாமல்லர் அவரைப் பற்றி அலட்சியமாகப் பேசியதும், இவரே மானவன்மருடைய கட்சி பேச ஆரம்பித்தார். "ஆகையினால்தான் மானவன்மரைத் திருப்பி அனுப்புவது நியாயமல்லவென்று நான் சொல்லுகிறேன். யானைப் படைக்கு இப்பேர்ப்பட்ட புதிய பயிற்சி அளித்து ஆயத்தப்படுத்தியவருக்கு, அந்த யானைப் படை யுத்தத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆசையாயிராதா?" என்றார் சேனாதிபதி பரஞ்சோதி.

இந்தச் சமயத்தில், அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த பிரம்மாண்டமான அரச விருட்சத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அந்த மரத்தின் அடர்த்தியான கிளைகளில் இரவு நேரத்தைக் கழிப்பதற்கென்று அடைக்கலம் புகுந்திருந்த ஆயிரக்கணக்கான பறவைகள் சடசடவென்று இறகுகளை அடித்துக் கொண்டும் பற்பல சுருதி - ஸ்வரங்களில் கூச்சலிட்டுக் கொண்டும் மரத்திலிருந்து வெளிவந்து வட்டமிட்டு மறுபடியும் கிளைகளுக்குள் புகுந்து, ஆரவாரம் செய்தன. "அந்த மரத்துக்குத் திடீரென்று என்ன வந்து விட்டது? மரம் ஏறக்கூடிய காட்டு மிருகம் ஏதாவது அதில் ஏறி விட்டதா? பறவைகள் இப்படி அலறுகின்றனவே!" என்று மாமல்லர் கேட்டதற்கு, அந்தத் திசையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சத்ருக்னன், "பிரபு! காட்டு மிருகம் எதுவும் அந்த மரத்தில் ஏறவில்லை, வீட்டு மிருகம் இரண்டு கால் மிருகம் ஒன்று அந்த மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது!" என்றான்.

உடனே அவன் கையை ஓங்கித் தட்ட சற்றுத் தூரத்தில் ஆயுதபாணிகளாகக் காவல் புரிந்த வீரர்களில் ஒருவன் அவர்கள் இருந்த இடத்துக்கு விரைந்து ஓடி வந்தான். "அதோ பார்! அந்த அரச மரத்திலிருந்து யாரோ ஒருவன் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்!" என்று சத்ருக்னன் கட்டளையிட்டான். அவ்விதமே மேற்படி வீரர்கள் விரைந்து அரச மரத்தை நோக்கிச் சென்று, அதிலிருந்து கீழே இறங்கியவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். வீரர் தலைவன், "பிரபு! இதோ வாதாபி ஒற்றன்!" என்று கூறித் தலை வணங்கினான்.

மாமல்லரும் பரஞ்சோதியும் கலீரென்று சிரித்தார்கள். ஏனெனில், அந்த வீரர்களால் கொண்டு வரப்பட்டவன் வேறு யாருமில்லை, நமது பழைய சிநேகிதன் குண்டோ தரன்தான். "குண்டோ தரா? இது என்ன? எதற்காக நீ வாதாபி ஒற்றன் என்று சொல்லிக் கொண்டாய்?" என்று பரஞ்சோதி கேட்டார். "ஆம் சேனாதிபதி! நான் சொன்னது உண்மைதானே! 'வாதாபி ஒற்றன்' என்றால், 'வாதாபிக்குப் போய் வந்த ஒற்றன்' என்ற அர்த்தத்தில் சொன்னேன். உடனே அந்த வீரர்கள் என்னை ஒரே பிடியாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அப்பா! அவர்கள் பிடித்த இடங்களில் இன்னும் வலிகிறது!" என்றான். "ஆமாம், ஆனால் அந்த மரத்தின் மேலேறி என்ன செய்து கொண்டிருந்தாய்? எத்தனை நேரமாய் அங்கு உட்கார்ந்திருக்கிறாய்?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"பிரபு! நேற்றிரவே இங்கு வந்து விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் நமது சைனியம் வந்து கொண்டிருக்கிறது. உடனே மரத்தின் மேல் ஏறியவன்தான், இத்தனை நேரமும் நமது சைனியத்தின் கணக்கு எண்ணிக் கொண்டும், வாதாபி புலிகேசியை ஜயிப்பதற்கு இந்தச் சைனியம் போதுமா என்று யோசித்துக் கொண்டும் இருந்தேன்." "என்ன முடிவு செய்தாய்? சைனியம் போதுமா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "சுவாமி! அதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் வாதாபிக்கு நாம் போய்ச் சேருவதற்குள்ளே, அஜந்தா குகைக்குப் போயிருக்கும் புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபிக்குத் திரும்பி வர வேண்டுமே! அவர் வெளியில் தங்கி விட்டால் என்ன செய்கிறது என்றுதான் கவலைப்படுகிறேன்!" என்றான் குண்டோ தரன்.



இருபத்தோராம் அத்தியாயம்
புலிகேசியின் கலைமோகம்

புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபியில் இல்லை, அஜந்தாவுக்குப் போயிருக்கிறான் என்று குண்டோ தரன் கூறிய செய்தி அங்கிருந்த நால்வருக்கும் வியப்பையும் குதூகலத்தையும், அளித்தது என்பது அவர்கள் வாயிலிருந்து வந்த விநோதமான சப்தங்களிலிருந்து தெரியவந்தது. "ஆஹாஹோஹோ!" "ஓஹ்ஹோ!" "ஹேஹேஹே!" "சேசேசே!" என்றெல்லாம் அர்த்தமில்லாத ஓசைகளை வெளியிட்ட பிறகு, ஏக காலத்தில் நால்வரும் குண்டோ தரனைப் பார்த்து, "நிஜந்தானா?" "உண்மையா?" "அஜந்தாவுக்கா போயிருக்கிறான்?" "புலிகேசிக்கு அஜந்தாவில் என்ன வேலை?" என்று சரமாரியாகக் கேள்விகளைப் பொழிந்தார்கள். அப்போது மாமல்லர், "இப்படி எல்லாருமாகக் குண்டோ தரனைத் துளைத்தால், அவன் எப்படி மறுமொழி சொல்லுவான்? கொஞ்சம் சும்மா இருங்கள்; குண்டோ தரா! உன் பிரயாணத்தைப் பற்றிய விவரங்களை ஆதியோடந்தமாகச் சொல்லு!" என்றார்.

குண்டோ தரன் சக்கரவர்த்தியைப் பணிந்து விட்டுக் கூறினான்; "பல்லவேந்திரா! இந்த ஏழை சந்தேகமறத் தெரிந்து கொண்டு, வந்த உண்மையைத்தான் கூறினேன். புலிகேசிச் சக்கரவர்த்தி அஜந்தாவுக்குத்தான் போயிருக்கிறார். யாரோ சீனாவிலிருந்து ஒரு யாத்திரிகன் வந்திருக்கிறானாம். அவன் பெயர் என் வாயில் நுழையவில்லை, 'ஹியூன் சங்' என்று சொன்னார்கள். அவன் உத்தர தேசத்தில் கன்யாகுப்ஜம், காசி, கயா முதலிய க்ஷேத்திரங்களையெல்லாம் பார்த்துவிட்டு வந்தானாம். கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் ஆட்சி மகிமையைப் பற்றி அவன் வர்ணித்தானாம், ஹர்ஷ சக்கரவர்த்திக்குத் தான் குறைந்து போய் விடவில்லையென்று வாதாபிச் சக்கரவர்த்தி அந்த யாத்திரிகனைத் தானே நேரில் அழைத்துக் கொண்டு அஜந்தாவின் சிற்ப சித்திர அதிசயங்களைக் காட்டுவதற்காகப் போயிருக்கிறாராம்! பிரபு! இப்போதெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்திக்குக் கலைகளிலே ரொம்ப மோகமாம்! வாதாபியிலுள்ள பாறைகளையெல்லாம் குடைந்து மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் போல் அமைத்துக் கொண்டிருக்கிறாராம்! நமது தொண்டை மண்டலத்திலிருந்து கைகால்களை வெட்டாமல் சிறைப்பிடித்துக் கொண்டு போன சிற்பிகள் சிலர் அந்தப் பாறையிலே வேலை செய்வதை நானே பார்த்தேன். ஆனால், ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். அந்தச் சீன யாத்திரிகன் ஹியூன் சங்கைப் புலிகேசி மேற்படி சிற்பப் பாறைகளுக்கு அழைத்துச் சென்று காட்டியபோது, 'இந்தப் பாறைச் சிற்பங்களைப் பார்த்து விட்டுத்தான் காஞ்சி மகேந்திர பல்லவன் மாமல்லபுரத்தில் இதே மாதிரி செய்யப்பிரயத்தனப்பட்டான்! அவனுக்கு நல்ல புத்தி கற்பித்து விட்டு வந்தேன்!' என்றானாம். இதைப் பற்றிக் கேட்ட போது எனக்கு என்னமாயிருந்தது, தெரியுமா? இரத்தம் கொதித்தது! வாதாபி நாற்சந்தியில் உள்ள ஜயஸ்தம்பத்தில் காஞ்சி மகேந்திர பல்லவரை வாதாபிப் புலிகேசி புறங்கண்டதாக எழுதியிருக்கும் பொய்யும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பிரபு! இதற்கெல்லாம் காலம் இன்னும் மூன்று மாதந்தானே என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு திரும்பி வந்தேன். வாதாபியில் யுத்த ஏற்பாடுகள் ஒன்றுமே நடக்கவில்லை. இந்த வருஷம் நம்முடைய படையெடுப்பை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லையாம்! வாதாபிச் சைனியம் வடக்கே நர்மதைக் கரையிலும் கிழக்கே வேங்கியிலுமாகச் சிதறிக் கிடக்கிறது!"

இவ்விதம் குண்டோ தரன் சொல்லிச் சற்று நிறுத்தியதும், மாமல்லர் பரஞ்சோதியைப் பார்த்து, "சேனாதிபதி! பார்த்தீரா? நம் சத்ருக்னனுடைய யுக்தி இவ்வளவு நன்றாகப் பலிக்கும், என்று நாம் கூட எதிர்பார்க்கவில்லையல்லவா?" என்றார்! சத்ருக்னன் அப்போது பணிவான குரலில், "பல்லவேந்திரா அடியேனுடைய யுக்தி என்று ஏன் சொல்லுகிறீர்கள்? தாங்களும் சேனாதிபதியும் சேர்ந்து தீர்மானித்ததைத்தானே நான் நிறைவேற்றினேன்!" என்றான். அதற்குச் சேனாதிபதி பரஞ்சோதி, "சத்ருக்னர் சொல்வது உண்மைதான்! எல்லாம் மகேந்திர பல்லவரிடம் நாம் மூவரும் கற்றுக் கொண்டதுதானே? இந்த யுத்தத்திலே நாம் ஜயம் பெற்றோமானால் அதனுடைய பெருமை முழுவதும் விசித்திர சித்தருக்கே சேர வேண்டியது!" என்றார். "சேனாதிபதி! 'யுத்தத்தில் ஜயம் பெற்றோமானால்.. என்று நீங்கள் சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன். ஜயத்தைப் பற்றி என்ன சந்தேகம் இருக்கிறது? ஆனால், எந்த 'யுக்தி'யைப் பற்றி நீங்கள் எல்லோரும் பேசுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை, தயவுசெய்து சொன்னால் தேவலை!" என்றான் ஆதித்தவர்மன்.

"அப்படிக் கேள், தம்பி! அதைச் சொன்னால் மகேந்திர பல்லவர் எங்களுக்கு அளித்த பயிற்சி இப்போது எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வாய். சென்ற ஒன்பது வருஷமாக நானும் சேனாதிபதியும் இந்தப் படையெடுப்புக்காக ஆயத்தம் செய்து வந்த போது, சத்ருக்னனுடைய ஒற்றர் படையும் மிகத் திறமையாக வேலை செய்து வந்தது. நம் ஒற்றர் படையிலே சிலர் சத்ருக்னனுடைய தூண்டுதலின் பேரில் நம் யுத்த ரகசியங்களை வாதாபிச் சக்கரவர்த்திக்கு விற்பனை செய்யத் தொடங்கினார்கள். முதலில் சில காலம் உண்மையான தகவல்களையே அனுப்பிக் கொண்டிருந்தபடியால் புலிகேசிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. மூன்று வருஷத்துக்கு முன்னால், 'இந்த வருஷம் பல்லவ சைனியம் வாதாபியின் மேல் படையெடுத்து வரப் போகிறது' என்று செய்தி போயிற்று. புலிகேசி அதை நம்பிப் பெரிய ஆயத்தங்கள் செய்திருந்தான். ஆனால், பல்லவ சைனியம் வராமல் ஏமாந்தான். இப்படியே மூன்று வருஷம் ஏமாந்த பிறகு புலிகேசி கோபங்கொண்டு பழைய ஒற்றர்களையெல்லாம் தள்ளி விடச் செய்தான். புதிய ஒற்றர்கள் இந்த வருஷத்தில், வாதாபி மேல் படையெடுக்கும் உத்தேசமே இங்கு இல்லை என்றும், மானவன்மனுக்கு இலங்கையைப் பிடித்துக் கொடுப்பதற்காகவே பல்லவ சைனியம் சேகரிக்கப்படுகின்றதென்றும் செய்தி அனுப்பினார்கள். புலிகேசி மேற்படி செய்தியைப் பூரணமாய் நம்பி விட்டான் என்று முன்னமே தெரிந்து கொண்டோ ம். துங்கபத்திரை நதிக்கரையிலிருந்த சளுக்க சைனியத்தை நர்மதைக்கும் வேங்கிக்கும் பகிர்ந்து அனுப்பி விட்டதாகவும் அறிந்தோம். இப்போது குண்டோ தரன் சொல்வதிலிருந்து, புலிகேசியே அஜந்தாவுக்குப் போயிருக்கிறான் என்று தெரிகிறது. சத்ருக்னனின் யுக்தி பலித்திருக்கிறது அல்லவா?

இப்படி மாமல்லர் கூறி முடித்ததும், "பல்லவேந்திரா! இலங்கை இளவரசர் இந்த வகையிலும் நமக்குப் பேருதவி செய்திருப்பதாகத் தெரிகிறதே! மானவன்மர் காஞ்சியில் வந்து இருந்ததனால்தானே புலிகேசியின் கண்ணில் சத்ருக்னன் இவ்வளவு நன்றாக மண்ணைத் தூவ முடிந்தது!" என்றான் ஆதித்தவர்மன். சமணர்களால் மனம் குழம்பிப் போயிருந்த குமார பாண்டியனை மதுரைக்குத் திருப்பி அனுப்பி விட்டுப் பாண்டிய சைனியத்தைப் போருக்கு அழைத்துக் கொண்டு வருகிறாரே, அந்த உதவிதான் சாமான்யப்பட்டதா?" என்றான் சத்ருக்னன். அப்போது மாமல்லர் கடுமையான குரலில், "மானவன்மன் என்னதான் நமக்கு உதவி செய்திருக்கட்டும்; அவன் என்னை ஏமாற்றிய காரியத்தை என்னால் மறக்கவே முடியாது; மன்னிக்கவும் முடியாது!" என்றார். "பல்லவேந்திரா! இது என்ன? தங்களை இலங்கை இளவரசர் எந்த விஷயத்தில் ஏமாற்றினார்?" என்று சேனாதிபதி கேட்டார். "மானவன்மன் நம்மோடு வாதாபிக்கு வரக் கூடாது என்பதற்கு, ஒரு முக்கியமான காரணம் அவனுக்கு நான் சொன்னேன். போர்க்களத்தில் அவன் ஒருவேளை வீரசொர்க்கம் போகும்படி நேர்ந்துவிட்டால், இலங்கை இராஜ வம்சம் சந்ததி அற்றுப் போய் விடும்; ஆகையால் அவன் வரக் கூடாது என்று சொல்லியிருந்தேன். இந்த விஷயத்திலேதான் மானவன்மன் என்னை ஏமாற்றி விட்டான்!" என்றார் சக்கரவர்த்தி. "இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?" என்றான் ஆதித்தவர்மன். "நாம் புறப்பட்டு வந்த ஒரு வாரத்துக்குள் இலங்கை இராஜ வம்சத்துக்குச் சந்ததி ஏற்பட்டு விட்டது! மானவன்மனுடைய மனைவி நாம் புறப்படும் போது பத்து மாதக் கர்ப்பிணியாம். நாம் புறப்பட்ட ஐந்தாம் நாள் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததாம்! இந்த விஷயத்தில் சத்ருக்னன் கூட எனக்கு உண்மையைத் தெரியப்படுத்தாமல் இருந்து விட்டான்!" என்று மாமல்லர் கூறுவதற்குள்ளே சேனாதிபதி உள்பட எல்லோரும் 'கொல்' என்று சிரித்தார்கள். இதற்கிடையில் "ஓஹோ! இப்போது தெரிந்தது!" என்றான் குண்டோ தரன். "உனக்கு என்ன தெரிந்தது இப்போது புதிதாக?" என்று மாமல்லர் கேட்டார்.

"பிரபு! அதோ அந்த அரச மரத்தில் நான் ஏறி இருந்த போது தெற்கே ஒரு பெரிய புழுதிப்படலம் தெரிந்தது. ஏதோ படை திரண்டு வருவது போல் தோன்றியது. 'எந்த சைனியம் இப்படிச் சக்கரவர்த்திக்குப் பின்னால் வருகிறது?' என்று யோசித்தேன். தாங்கள் பேசிக் கொள்வதிலிருந்து இலங்கை இளவரசர் தான் பாண்டிய சைனியத்துடன் அவசரமாக வருகிறார் என்று தெரிந்தது" என்றான் குண்டோ தரன். "ஓஹோ! அதற்குள் வந்து விட்டானா?" என்று மாமல்லர் கூறிய போது நிலா வெளிச்சத்தில் அவருடைய முக மலர்ச்சி நன்றாகத் தெரிந்தது. பிறகு அவர் பரஞ்சோதியைப் பார்த்து, "சேனாதிபதி! ஆகக்கூடி, நீங்கள் எல்லாரும் என்னதான் சொல்கிறீர்கள்! மானவன்மனுடைய தவறை மன்னித்து அவனையும் நம்மோடு அழைத்துப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.

"ஆம், பிரபு! அழைத்துப் போக வேண்டியதுதான்!" என்று சேனாதிபதி கூறிய குரலில் ஓரளவு தயக்கம் இருக்கத்தான் செய்தது. "அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; நீங்கள் மூவரும் கொஞ்சம் முன்னால் நதியைக் கடந்து சென்று இன்றிரவு சைனியம் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனியுங்கள். நானும் குண்டோ தரனும் இங்கேயே இருந்து மானவன்மனை அழைத்து வருகிறோம். குண்டோ தரனிடம் நான் கேட்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன" என்று மாமல்லர் கூறவும், குறிப்பறியும் ஆற்றல் வாய்ந்த அறிவாளிகளாகிய மற்ற மூவரும் உடனே கிளம்பிச் சென்று, நதியில் அவர்களுக்காகக் காத்திருந்த படகில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் சென்றதும் மாமல்லர் குண்டோ தரனை ஏறிட்டுப் பார்த்தார். மெல்லிய குரலில் குண்டோ தரன், "பல்லவேந்திரா! வாதாபியில் ஆயனரின் குமாரியைப் பார்த்தேன்; சௌக்கியமாயிருக்கிறார். நம்முடைய வரவை இரவும் பகலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்றான். "அந்தப் பாதகியின் சௌக்கியத்துக்கு என்ன குறைவு? சௌக்கியத்தையும் சாந்தத்தையும் இழந்து தவிப்பவன் நான் அல்லவா?" என்று நரசிம்மவர்மர் முணு முணுத்தார்.



இருபத்திரண்டாம் அத்தியாயம்
பவளமல்லி மலர்ந்தது

வாதாபி மாளிகையில் சிவகாமி சௌக்கியமாகத்தான் இருந்தாள். அதாவது அவளுடைய தேகம் சௌக்கியமாக இருந்தது. ஆனால், அவளுடைய உள்ளமோ ஒரு கணமேனும் சாந்தி காணாமல் அமைதி இன்றி அலைந்து கொண்டிருந்தது. வருஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து போய்க் கொண்டிருந்தன. ஒவ்வொரு வருஷமும் வசந்தம், வேனில் முதலிய பருவ காலங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. வருஷங்களையும், பருவ காலங்களையும் கணக்கிடுவதற்குச் சிவகாமி ஒரு வழி கண்டுபிடித்திருந்தாள். அவள் வசித்த மாளிகையின் பின் முற்றத்தில் கிணற்றின் அருகில் ஒரு பவளமல்லி மரம் இருந்தது. சிவகாமி வாதாபிக்கு வந்த வருஷத்திலே அந்தப் பவளமல்லிச் செடியை அவள் தன் கையாலேயே கிணற்றின் அருகில் நட்டாள்.

நாகநந்தி அடிகள் அஜந்தா மலைப் பிராந்தியத்தைப் பற்றி வர்ணனை செய்த போது, அந்தப் பிரதேசத்தில் ஆவணி, புரட்டாசி மாதங்களில் கணக்கில்லாத பாரிஜாத மரங்கள் புஷ்பித்துக் குலுங்கும் என்றும், அந்த நறுமலர்களின் இனிய மணம் நெடுந்தூரம் காற்றிலே பரவி அந்தப் பக்கம் வருவோர்க்கெல்லாம் இன்ப போதையை உண்டாக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்ட சிவகாமி அந்தச் செடிகளில் ஒன்றைத் தனக்காகக் கொண்டு தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அவளுடைய வேண்டுகோளைக் கட்டளையாக மதித்த புத்த பிக்ஷு சீக்கிரத்தில் அஜந்தா மலைப் பிராந்தியத்திலிருந்து பவளமல்லிச் செடி ஒன்று தருவித்துக் கொடுத்தார். அந்தச் செடியை சிவகாமி நட்டுக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். கண்ணீருடன் தண்ணீரும் விட்டு வளர்த்து வந்தாள்.

அந்தப் பவளமல்லிச் செடியில் முதன் முதலில் இளந்தளிர் விட்ட போது சிவகாமியின் உள்ளம் துள்ளிக் குதித்தது. புதிய கிளை ஒன்று கிளம்பிய போது, துயரத்தால் வெதும்பிய அவள் உள்ளம் குதூகலத்தினால் பொங்கியது. முதன் முதலில் அந்தச் செடியிலே மொட்டு அரும்பிய போதும் அது பூவாக மலர்ந்த போதும் சிவகாமி சிறிது நேரம் தன் துயரங்களையெல்லாம் மறந்து ஆனந்தக் கடலில் மிதந்தாள். கிளி மூக்கின் வடிவமான அதன் அழகிய இதழ்களையும், செம்பவள நிறம் கொண்ட காம்பையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். நேரம் ஆக ஆக, சூரியன் வான மார்க்கத்தில் ஏற ஏற, அந்த மெல்லிதழ் மலர் வர வர வாடிச் சுருங்கிக் கடைசியல் கருகி உதிர்ந்த போது, தற்காலிகமாகக் குளிர்ந்து தளிர்த்திருந்த அவளுடைய இருதயமும் வாடிக் கருகித் தீய்ந்தது. செடி நன்றாக வேரூன்றிக் கிளைத்துத் தழைத்த பிறகு அதைக் கவலையுடன் பராமரிக்கும் வேலை சிவகாமிக்கு இல்லாமல் போயிற்று. அந்தச் செடியைக் கொண்டு பருவங்களையும் வருஷங்களையும் சிவகாமி கணக்கிட்டு வரத் தொடங்கினாள்.

மனிதர்களின் எலும்பு வரை குளிரச் செய்த பனிக் காலத்தில் அந்தப் பவளமல்லிகை மரத்தின் இலைகள் எல்லாம் காய்ந்து உலரத் தொடங்கும். இளவேனிற் காலத்தில் புதிய இளந்தளிர்கள் துளிர்க்கத் தொடங்கும், முதுவேனிற் காலத்தில் இலைகள் முற்றுவதோடு மொட்டுகளும் அரும்ப ஆரம்பிக்கும். உக்கிரமான மேல் காற்றோடு மழையும் கொட்டும். ஆனி, ஆடி மாதங்களில் அந்தப் பவளமல்லிச் செடி பேயாட்டம் ஆடிப் படாத பாடுபடும். அதைப் பார்க்கவும் சகிக்காமல் சிவகாமி வீட்டுக்குள்ளேயே பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருப்பாள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் அந்தப் பவளமல்லிகைச் செடி, பச்சைப் பசேல் என்ற இலைகளை அடியோடு மறைத்து விடுவதற்குப் போட்டி போடும் மலர்கள் குலுங்கப் பெற்று விளங்கும். அந்தக் காலங்களில் சிவகாமி முற்றத்தின் படிக்கட்டின் மீது உட்கார்ந்து அந்தச் செடியை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். நவராத்திரியின் போதும் விஜயதசமி அன்றைக்கும் தமிழகத்தின் ஆலையங்களில் விக்கிரகத்துக்குப் பவளமல்லி மலர்களைக் கொண்டு புஷ்பப் பாவாடை அலங்காரம் செய்வார்கள் என்பதை நினைவுகூர்வாள். அதோடு தான் வாதாபிக்கு வந்து ஒரு விஜயதசமி ஆயிற்று என்றும் கணக்கிடுவாள். இவ்வாறு கணக்கிட்டு வந்ததில், சிவகாமி வாதாபி நகரத்துக்கு வந்து, இப்போது ஒன்பது வருஷங்கள் ஆகி விட்டன.



இருபத்து மூன்றாம் அத்தியாயம்
சீன யாத்திரீகர்

வாதாபி நகரத்தின் வீதிகளில் தன்னை நடனம் ஆடச் சொன்னதனால் ஏற்பட்ட அவமான உணர்ச்சியின் வேகம் நாளாக ஆகச் சிவகாமியின் உள்ளத்தில் குறைந்து மங்கி வந்தது. தமிழகத்திலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர் எல்லாரும் அவரவருக்கு ஏற்ற ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டுக் குடியும் குடித்தனமுமாய் வாழத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர் சில சமயம் சிவகாமியைப் பார்க்க வருவதுண்டு. அப்படி வருகிறவர்களுடைய மனத்திலே கோபமோ, வன்மமோ ஒன்றுமில்லையென்பதைச் சிவகாமி கண்டாள். இதையெல்லாம் எண்ணிப் பார்த்த போது, தான் ஆத்திரப்பட்டுச் சபதம் செய்ததன் அறியாமையையும், மாமல்லருடன் போகாமல் அவரைத் திருப்பியடித்ததன் மௌடீகமும் அவளுக்கு மேலும் மேலும் நன்கு புலனாயின.

ஆயினும் பெண்களின் இயல்புக்கு ஒத்தபடி தான் செய்த தவறுக்கும் மாமல்லர் மீதே சிவகாமி பழியைப் போட்டாள். 'என்ன இருந்தாலும் நான் அறியாப் பெண் தானே! ஏதோ அவமானத்தினாலும் ஆத்திரத்தினாலும் தூண்டப்பட்டு இந்த மாதிரி சபதம் செய்தேன். ஆண் பிள்ளையும் அறிவாளியுமான அவரல்லவா என்னைப் பலவந்தப்படுத்திப் பிடிவாதமாக அழைத்துப் போயிருக்க வேண்டும்? சேனாதிபதி பரஞ்சோதி சொன்னாரே, அந்தப்படி ஏன் அவர் செய்திருக்கக் கூடாது?' என்று அடிக்கடி எண்ணமிட்டாள்.

வருஷங்கள் செல்லச் செல்ல, மாமல்லர் மறுபடியும் வந்து தன்னுடைய சபதத்தை நிறைவேற்றித் தன்னை அழைத்துப் போவார் என்ற நம்பிக்கை சிவகாமிக்குக் குறைந்து கொண்டே வந்தது. அது எவ்வளவு பிரம்மப் பிரயத்தனமான காரியம், எவ்வளவு அசாத்தியமான விஷயம் என்பதையும் உணரலானாள். 'நான் செய்த சபதம் பிசகானது, அறியாமையினால் அத்தகைய அசாத்தியமான காரியத்தைச் சொல்லி விட்டேன். அதைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். என்னை எப்படியாவது திரும்ப அழைத்துக் கொண்டு போனால் போதும்!' என்று மாமல்லருக்குச் செய்தி சொல்லி அனுப்பலாமா என்பதாகச் சில சமயம் அவளுக்குத் தோன்றியது. ஆனால், அந்த யோசனையைக் காரியத்தில் அவள் நிறைவேற்றாதபடி நாகநந்தியின் ஏளன வார்த்தைகள் செய்து வந்தன.

சிவகாமி கத்தியை வீசி எறிந்து நாகநந்தியை முதுகில் காயப்படுத்தியபோது, அந்த நயவஞ்சக வேஷதாரி, 'அடடா! என்ன காரியம் செய்தாய்? உன்னை அவர்களோடு கூட்டி அனுப்பவல்லவா எண்ணினேன்?' என்று சொல்லியது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அதனால் சிவகாமிக்கு நாகநந்தியின் மீதிருந்த கோபமெல்லாம் மாறித் தன் செயலைப் பற்றிப் பச்சாத்தாபமும் பிக்ஷுவின் மீது ஓரளவு அனுதாபமும் உண்டாயின. நாகநந்தி தம்முடைய பாசாங்கு உத்தேசித்த பலனை அளித்து விட்டது குறித்து மனத்திற்குள் மகிழ்ந்தார். சிவகாமிக்குத் தம்மிடம் ஏற்பட்ட அனுதாபத்தைப் பூரணமாகப் பயன்படுத்திக் கொண்டார். சில நாளைக்கெல்லாம் சிவகாமியைத் தாமே அழைத்துக் கொண்டு போய்க் காஞ்சியில் விட்டு விடுவதாக நாகநந்தி சொன்னார். சிவகாமி அதை மறுதலித்ததுடன் தான் செய்த சபதத்தையும் அவருக்குத் தெரியப்படுத்தினாள். அதைக் கேட்ட நாகநந்தி ஏளனப் புன்னகை புரிந்து, "இப்படி ஒருநாளும் நடைபெற முடியாத சபதத்தை யாராவது செய்வார்களா!" என்று கேட்டார். "நிறைவேறுகிறதா, இல்லையா என்று பார்த்துக் கொண்டிருங்கள்!" என்று சிவகாமி வீறாப்பாய்ப் பேசினாள்.

அறிமுகமானவர்கள் யாருமே இல்லாத அந்தத் தூர தேசத்து நகரில், தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையில் இருந்த சிவகாமிக்கு நாகநந்தியடிகளோடு அவ்வப்போது சம்பாஷிப்பது பெரிதும் ஆறுதல் தருவதாயிருந்தது. தேசமெல்லாம் பிரயாணம் செய்தவரும், பல கலைகள் அறிந்தவருமான பிக்ஷுவுடன் பேசுவது உற்சாகமான பொழுதுபோக்காயும் இருந்து வந்தது. "காஞ்சிக்குத் திரும்பிப் போக உனக்கு இஷ்டமில்லாவிட்டால், வேண்டாம். அஜந்தாவுக்கு அழைத்துப் போகிறேன், வா! எந்த வர்ண இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக உன்னுடைய தந்தை துடிதுடித்தாரோ, அதை நீயே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!" என்று நாகநந்தி சில சமயம் ஆசை காட்டினார். அதற்கும் சிவகாமி, "என் சபதம் நிறைவேறாமல் இந்த நகரை விட்டு நான் கிளம்பேன்!" என்றே மறுமொழி சொல்லி வந்தாள்.

மூன்று வருஷத்துக்கு முன்னால் பல்லவ சைனியம் வாதாபியின் மேல் படையெடுத்து வரப் போகிறது என்ற வதந்தி உலாவிய போது சிவகாமி எக்களிப்படைந்தாள். அது பொய்யாய்ப் போனதோடு, நாகநந்தி அதைக் குறித்து மீண்டும் அவளை ஏளனம் செய்தது அவள் மனத்தைப் பெரிதும் புண்படுத்தியது. ஆயினும், தன் மனநிலையை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "பொறுத்திருங்கள்! அடிகளே, பொறுத்திருங்கள்! இந்த வருஷம் இல்லாவிட்டால், அடுத்த வருஷம்! கொஞ்சம் பொறுத்திருங்கள்!" என்று சொல்லி மாமல்லரின் கௌரவத்தை நிலைநாட்ட முயன்றாள். அவ்விதம் கர்வமாகப் பேசி இப்போது வருஷம் மூன்று ஆகி விட்டது. சிவகாமி வாதாபிக்கு வந்து ஒன்பது வருஷம் பூர்த்தியாகி விட்டது. இனியும் நம்பிக்கை வைப்பதில் ஏதேனும் பயன் உண்டா? நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இன்னும் எத்தனை காலம் இந்தத் துயர வாழ்க்கையைச் சுமந்திருப்பது? போதும், போதும்! ஒன்பது வருஷம் காத்திருந்தது போதும். வீட்டு முற்றத்தில், பவளமல்லி மரத்தின் பக்கத்திலே இருந்த கிணறு தன் வாயை அகலமாக விரித்து, 'வா! வா! என்னிடம் அடைக்கலம் புகுவதற்கு வா!' என்று ிவகாமியை அழைத்துக் கொண்டிருந்தது.

இத்தகைய நிலைமையில்தான் ஒரு நாள் நாகநந்தியடிகள் சீன யாத்திரீகர் ஒருவரை அழைத்துக் கொண்டு சிவகாமியைப் பார்க்க வந்தார். ஹியூன் சங் என்னும் அந்தச் சீனர் உலகில் பல தேசங்களையும் பல இராஜ்யங்களையும் பார்த்து விட்டு வந்தவர். பல கலைகளைக் கற்றுப் பாண்டித்யம் பெற்றவர். அந்தக் காலத்தில் பரத கண்டத்தில் புகழ்பெற்று விளங்கிய மூன்று சாம்ராஜ்யங்களில் ஹர்ஷ சாம்ராஜ்யத்தைப் பார்த்து விட்டு, அடுத்தபடி வாதாபிக்கு அவர் வந்திருந்தார். சளுக்க சாம்ராஜ்யத்தில் அஜந்தா முதலிய இடங்களையும் வேங்கி நாட்டில் நாகார்ஜுன பர்வதத்தையும் பார்த்து விட்டு, அவர் பல்லவ ராஜ்யத்துக்குப் போக எண்ணியிருந்தார். இதையறிந்த நாகநந்தி, 'இங்கே பல்லவ நாட்டின் புகழ்பெற்ற மகா சிற்பியின் மகள் இருக்கிறாள். பரத நாட்டியக் கலையில் கரைகண்டவள், அவளைப் பார்த்து விட்டுப் போகலாம்' என்று சொல்லி அழைத்து வந்தார்.

சீன யாத்திரீகரின் சம்பாஷணை சிவகாமிக்குப் பழைய கனவு லோகத்தை நினைவூட்டி மெய்ம்மறக்கும்படிச் செய்தது. ஹியூன்சங் தம்முடைய யாத்திரையில் தாம் கண்டு வந்த தேசங்களைப் பற்றியும் ஆங்காங்குள்ள இயற்கை அழகுகள், கலை அதிசயங்களைப் பற்றியும் விவரித்தார். இடையிடையே தமிழகத்துச் சிற்பக் கலையைப் பற்றிச் சிவகாமியைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிவகாமியின் நாட்டியத் தோற்றங்களை அவருடைய தந்தை ஆயனர் அழியாத சிலை வடிவங்களாகச் செய்திருக்கிறார் என்று நாகநந்தி சொன்னபோது, ஹியூன்சங்கின் அதிசயம் அளவு கடந்து பொங்கிற்று. அந்த நடனத் தோற்றங்களில் சிலவற்றை தாம் பார்க்க வேண்டுமென்று விரும்பிச் சிவகாமியை ரொம்பவும் கேட்டுக் கொண்டார். ஒன்பது வருஷத்துக்குப் பிறகு சிவகாமிக்கு உண்மையிலேயே அவள் கற்றிருந்த கலையில் மீண்டும் உற்சாகம் உண்டாயிற்று. சில நடனத் தோற்றங்களையும் அபிநய பாவங்களையும் சீனக் கலைஞருக்கு அவள் ஆடிக் காட்டினாள். ஹியூன்சங் அவற்றைக் கண்டு அதிசயித்து மகிழ்ந்தார். நாகநந்தியோ மெய்ம்மறந்து பரவசம் அடைந்தார்.

ஹியூன்சங் சிவகாமியைப் பற்றி மேலும் விசாரித்த போது சிவகாமி சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்ட வரலாற்றையும், அவள் செய்த சபதத்தையும் பற்றி நாகநந்தி கூறினார். "சக்கரவர்த்தியின் அனுமதி பெற்று இந்தப் பெண்ணைத் திருப்பிக் கொண்டு விட்டு விடுவதாக எவ்வளவோ நான் சொல்லிப் பார்த்தேன், இவள் கேட்கவில்லை. இப்பேர்ப்பட்ட அற்புதக் கலை இந்த வீட்டுக்குள் கிடந்து வீணாவதை நினைத்தால் எனக்கு எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது. இவளுக்கு விடுதலை தருவதற்காக இந்த வாதாபி நகரத்தை நாமே கொளுத்தி அழித்து விடலாமா என்று கூடச் சில சமயம் எனக்குத் தோன்றுகிறது!" என்றார் நாகநந்தி.

ஹுயூன்சங் தம் செவிகளைப் பொத்திக் கொண்டு, "புத்த பகவான் அப்படியொன்றும் நேராமல் தடுத்து அருளட்டும்!" என்றார். பிறகு, அந்தப் பெரியார் ஜீவகாருண்யத்தின் சிறப்பையும், யுத்தங்களினால் நேரும் கேட்டையும் எடுத்துக் கூறித் தர்மோபதேசம் செய்தார். புத்த பகவான் ஆட்டைக் காப்பதற்காக யாகத்தை நிறுத்திய வரலாற்றை விவரித்தார். அசோகரின் தர்ம ராஜ்யத்தைப் பற்றி எடுத்துரைத்தார்; தற்சமயம் ஹர்ஷ சக்கரவர்த்தி அதே விதமாகத் தர்ம ராஜ்யம் நடத்துவதையும், பிராணி ஹிம்சையைக் கூடத் தமது இராஜ்யத்தில் அவர் தடுத்து விட்டிருப்பதையும் குறிப்பிட்டார். சிவகாமி இடையிலே குறுக்கிட்டு, "ஆனால் சுவாமிகளே! இந்த வாதாபி சக்கரவர்த்தியின் வீரர்கள் தமிழகத்தில் செய்த அக்கிரமங்களைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது. அதனாலேதான் இப்படியெல்லம் தர்மோபதேசம் செய்கிறீர்கள்!" என்று கூறிய போது, அந்தச் சீன பிக்ஷு கூறியதாவது:

"தாயே! யுத்தம் என்று வரும் போது மனிதர்கள் மிருகங்களாகி விடுவதை நான் அறியாதவனல்ல! நீ பார்த்திருக்கக் கூடியவைகளை விடப் பன்மடங்கு அக்கிரமங்கள் நடந்திருக்கலாம். ஆனால், பழிக்குப் பழி வாங்கிக் கொண்டே போனால், அதற்கு முடிவு என்பதே கிடையாது. சளுக்கச் சக்கரவர்த்தி படையெடுத்ததற்குப் பழி வாங்குவதற்காக இப்போது காஞ்சிச் சக்கரவர்த்தி படையெடுக்கிறார். மறுபடியும் காஞ்சியின் மேல் பழிவாங்குவதற்காகச் சளுக்க வம்சத்தினர் படையெடுப்பார்கள். இப்படி வித்திலிருந்து மரமும், மரத்திலிருந்து வித்துமாக உலகில் தீமை வளர்ந்து கொண்டே போகும். யாராவது ஒருவர் மறந்து மன்னித்துத்தான் தீர வேண்டும். அப்போதுதான் உலகம் க்ஷேமம் அடையும். தாயே, எது எப்படியானாலும் உன்னுடைய பயங்கரமான சபதம் நிறைவேற வேண்டும் என்று மட்டும் நீ ஆசைப்படாதே! அதனால் யாருக்கு நன்மை உண்டாகாது. ஆகா! இந்தப் பெரிய நகரத்தில் எத்தனை ஆயிரம் வீடுகள் இருக்கின்றன. எத்தனை லட்சம் ஜனங்கள் வசிக்கிறார்கள்? அவர்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் உன்னைப் போன்ற அபலை ஸ்திரீகளும் எத்தனை பேர்? இந்த நகரத்தைத் தீ வைத்து எரித்தால், இவ்வளவு குற்றமற்ற ஜனங்களும் எத்தனை கஷ்டமடைய நேரிடும்? யோசித்துப் பார்!"

இதையெல்லாம் கேட்ட சிவகாமியின் உள்ளம் பெரும் குழப்பம் அடைந்தது. அந்தச் சமயம் பார்த்து நாகநந்தி அடிகள், "சிவகாமி, இந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டாயல்லவா? நடந்து போனதையே நினைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பழிவாங்கும் எண்ணத்தினால்தான் பிரயோஜனம் என்ன? ஒன்பது வருஷம் நீ விரதம் காத்தது போதாதா? இன்னும் இரண்டு நாளில் இந்த சீனத்துப் பெரியவரும் வாதாபிச் சக்கரவர்த்தியும் அஜந்தாவுக்குப் போகிறார்கள்; அவர்களுடன் நானும் போகிறேன். அங்கே பெரிய கலைத் திருவிழ நடக்கப் போகிறது. நீயும் எங்களுடன் வா, போகலாம்! உலகத்திலே எங்கும் காண முடியாத அதிசயங்களையெல்லாம் அங்கே நீ காண்பாய்!" என்றார்.

ஒருகணம் சிவகாமியின் கலை உள்ளம் சலனம் அடைந்து விட்டது. 'ஆகட்டும், சுவாமி! வருகிறேன்!' என்று சொல்ல அவள் மனம் ஆசைப்பட்டது. ஆனால், அவளுடைய உதடுகள் அந்த வார்த்தைகளை வெளிப்படுத்த மறுதலித்து விட்டன. அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்திலே ஒரு மெல்லிய குரல், 'சிவகாமி! இது என்ன துரோகம் நீ எண்ணுகிறாய்? மாமல்லர் அழைத்த போது அவருடன் போக மறுத்து விட்டு, இப்போது இந்தப் புத்த பிக்ஷுக்களுடனே புறப்படுவாயா? நீ அஜந்தா போயிருக்கும் சமயம் ஒருவேளை மாமல்லர் இங்கு வந்து பார்த்து உன்னைக் காணாவிட்டால் அவர் மனம் என்ன பாடுபடும்?' என்று கூறியது.

சிவகாமி சலனமற்ற தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "பிக்ஷுக்களே! இந்த அனாதைப் பெண் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டதன் பொருட்டு மிக்க வந்தனம். ஆனால், அஜந்தா மலையில் அதிசயங்களைப் பார்க்க அடியாள் கொடுத்து வைத்தவள் அல்ல. இந்தச் சீன தேசத்துப் பெரியார் சொன்ன ஒரு விஷயத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். என் சபதம் நிறைவேற வேண்டுமென்று இனி நான் ஆசைப்பட மாட்டேன். இந்த வாதாபி நகரமும் இதில் வாழும் ஜனங்களும் ஒரு துன்பமும் இன்றிச் செழித்து வாழட்டும்! அவர்களுக்கு என்னால் எந்தவிதமான கெடுதலும் நேர வேண்டாம். ஆனால், அடியாள் என் வாழ்நாளை இந்த வீட்டிலேயேதான் கழிப்பேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த நகை விட்டு வெளியேறுவதற்கு உடன்பட மாட்டேன்!" என்றாள்.



இருபத்து நான்காம் அத்தியாயம்
பவள வியாபாரி

நாகநந்தியும் சீன யாத்திரீகரும் போன பிறகு சிவகாமி சற்று நேரம் கற்சிலையாக சமைந்து உட்கார்ந்திருந்தாள். பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக வந்து போய்க் கொண்டிருந்தன. திருப்பாற்கடல் ஏரி உடைப்பு எடுத்ததும், அந்தப் பெருவெள்ளத்தில் தான் முழுகி இறப்பதற்கு இருந்ததும், மாமல்லர் நல்ல தருணத்தில் வந்து பானைத் தெப்பத்தில் தன்னை ஏற்றிக் கொண்டு காப்பாற்றியதும் நேற்று நடந்தது போல் நினைவு வந்தன. அந்தப் பெருவெள்ளத்தில் முழுகி உயிர் துறக்காத தான் இந்த வீட்டு முற்றத்திலிருந்த கிணற்றுத் தண்ணீரில் மூழ்கி உயிர் விடப் போவதை நினைத்த போது, சிலையை ஒத்திருந்த அவளுடைய அழகிய முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது.

கிணற்றிலே விழும் போது எப்படியிருக்கும்? விழுந்த பிற்பாடு எப்படியிருக்கும்? தண்ணீருக்குள் மூச்சடைத்துத் திணறும் போது தனக்கு என்னென்ன நினைவுகள் உண்டாகும்? மண்டபப்பட்டுக் கிராமத்தருகில் பானைத் தெப்பம் மோதிக் கவிழ்ந்து தான் தண்ணீரில் மூழ்கிய போது, தன்னை மாமல்லர் காப்பாற்றினாரே, அந்தச் சம்பவம் நினைவுக்கு வருமா? இப்படி எண்ணிய போது வீதியில், "பவளம் வாங்கலையா, பவளம்!" என்று கூவும் சப்தம் கேட்டது. சிவகாமி சிறிதும் சம்பந்தமில்லாமல், 'ஆமாம்! பவளமல்லி மலர்ந்துதான் இருக்கிறது! நான் கிணற்றில் விழுந்து இறந்த பிறகும் அது மலர்ந்து கொண்டுதானிருக்கும்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். மறுபடியும் வீட்டு வாசலில், "பவளம் வாங்கலையா பவளம்!" என்று சப்தம் கேட்டது.

ஏனோ அந்தக் குரல் சிவகாமிக்கு மெய்சிலிர்ப்பை உண்டாக்கியது. ஏற்கெனவே எப்போதாவது கேட்ட குரலா என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் பவள வியாபாரி வீட்டுக்குள்ளேயே வந்து, "அம்மா! பவளம் வேண்டுமா? அபூர்வமான உயர்ந்த பவளம்! அஜந்தா வர்ணத்தையும் தோற்கடிக்கும் அழகிய பவளம்!" என்றான். அஜந்தா என்றதும் மறுபடியும் சிவகாமி திடுக்கிட்டு அந்த வியாபாரியின் முகத்தை - தாடியும் மீசையும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த முதிர்ந்த முகத்தை உற்று நோக்கினாள், ஆ! அந்தக் கண்கள்! அன்போடும் பக்தியோடும் அவளை உற்றுப் பார்த்த அந்தக் கண்கள்....! "அம்மா! என்னைத் தெரியவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே பவள வியாபாரி நெருங்கி வந்து உட்கார்ந்து தான் கொண்டு வந்த பவள மூட்டையை அவிழ்த்தான்.

குண்டோ தரனுடைய குரல்தான் அது என்பதைச் சிவகாமி தெரிந்து கொண்டாள். இருந்தாலும், தன் கண்களையும் காதுகளையுமே நம்ப முடியாதவளாய், "யார், குண்டோ தரனா?" என்றாள். "ஆம்! நான்தான், அம்மா! அடியேனை மறந்து விட்டீர்களா?" என்று குண்டோ தரன் பணிவுடன் கேட்டான். "ஆமாம், அப்பனே! மறந்துதான் போயிற்று. நீங்கள் திரும்ப வருவதாகச் சொல்லி விட்டுப் போய் வருஷம் கொஞ்சமாக ஆகவில்லையே?" என்றாள் சிவகாமி சிறிது எரிச்சலுடன். "அம்மா! வெறுமனே திரும்பி வந்தால் போதுமா? தங்களுடைய சபதத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாய் வர வேண்டாமா?" என்றான் குண்டோ தரன். "ஆகா சபதம்! பாழும் சபதம்!" என்றாள் சிவகாமி, குண்டோ தரனைப் பார்த்து. "சபதத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டு விட்டேன், குண்டோ தரா!" என்றாள்.

குண்டோ தரன் விஷயம் விளங்காதவனைப் போல் வெறித்துப் பார்த்து, "அம்மா! என்ன சொல்கிறீர்கள்?" என்று வினவினான். "வேறு ஒன்றுமில்லை, அப்பா! நான் செய்த சபதந்தானே? அதை நானே கைவிட்டு விட்டேன்!" "அப்படிச் சொல்ல வேண்டாம், அம்மா! தாங்கள் செய்த சபதம் தமிழகமே செய்த சபதம், அதை நிறைவேற்றி வைப்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட பொறுப்பு!" "சபதத்தை நிறைவேற்றத்தான் நீ இந்த வேஷத்தில் வந்திருக்கிறாயா? அதற்காகத் தான் பவளம் கொண்டு வந்திருக்கிறாயா?" என்று ஏளனப் புன்னகையுடன் சிவகாமி கேட்டாள். "தாயே! இராம தூதனாகிய அனுமான் சீதாதேவியிடம் வந்தது போல் நான் வந்திருக்கிறேன். இராமபிரான் பின்னால் ஒரு பெரிய சேனா சமுத்திரத்துடன் வரப் போகிறார்!" என்றான்.

சிவகாமியின் தேகம் உணர்ச்சி மிகுதியினால் நடுங்கிற்று. ஆகா! ஒன்பது வருஷம் காத்திருந்தது உண்மையிலேயே பயனுள்ளதாகப் போகிறதா? மாமல்லர் தன்னை அழைத்துப் போக வரப் போகிறாரா? தன்னை விழுங்கி ஏப்பம் விடலாமென்று எண்ணியிருந்த முற்றத்துக் கிணறு ஏமாற்றமடையப் போகிறதா? "ஆம், அம்மா! தென்னாடு இது வரையில் என்றும் கண்டிராத மகத்தான பல்லவ சைனியம் ஆயத்தமாயிருக்கிறது. அந்தச் சைனியத்தின் முன்னணியில் நின்று மாமல்ல சக்கரவர்த்தியும் சேனாதிபதி பரஞ்சோதியும் வரப் போகிறார்கள்!" என்று குண்டோ தரன் தொடர்ந்து சொன்னான். "என்ன மாமல்ல சக்கரவர்த்தியா?" என்று சிவகாமி திடுக்கிட்டுக் கேட்டாள்.

"மன்னிக்க வேண்டும், அம்மா! தாங்கள் திடுக்கிடும்படி செய்து விட்டேன். மாமல்லப் பிரபுதான் இப்போது பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. மகேந்திர பல்லவர் கைலாசவாசியாகி இன்றைக்குப் பல ஆண்டுகள் சென்று விட்டன." இதைக் கேட்டதும் சிவகாமியின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் பொழிந்தது. மகேந்திர பல்லவர் மீது பிற்காலத்தில் அவள் பல காரணங்களினால் கோபப்பட நேர்ந்தது உண்மைதான். ஆனாலும் குழந்தைப் பருவத்தில் அவர் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த அபரிமிதமான அன்பும் பக்தியும் அழிந்து போய் விடவில்லை. சிவகாமியின் துக்கத்தினிடையே குறுக்கிட மனமில்லாமல், குண்டோ தரன் சற்று நேரம் சும்மா இருந்தான்.

சிவகாமி திடீரென்று விம்மலை நிறுத்தி, "குண்டோ தரா! உன்னை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். என்னால் இனி ஒரு கணநேரமும் இந்த நகரில் இருக்க முடியாது. இப்போதே என்னை அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றாள். குண்டோ தரன் திகைத்து நிற்பதைச் சிவகாமி பார்த்து, "என்ன யோசிக்கிறாய்? அதற்கு வசதியும் இப்போது நேர்ந்திருக்கிறது. புலிகேசி, கள்ள பிக்ஷு எல்லாம் இன்னும் இரண்டு நாளில் அஜந்தாவுக்குப் போகிறார்களாம். இப்போதெல்லாம் இங்கே கட்டுக் காவல் ஒன்றும் அதிகமாகக் கிடையாது. சுலபமாகத் தப்பித்துக் கொண்டு போகலாம். அப்படி என்னை அழைத்துப் போக உனக்கு இஷ்டமில்லாவிட்டால், இந்த வீட்டுக் கொல்லை முற்றத்தில் பவளமல்லிச் செடிக்கருகில் ஆழமான கிணறு ஒன்று இருக்கிறது. என் மேல் கருணை வைத்து அதில் என்னைத் தள்ளி விட்டுப் போய் விடு...!" என்று சொல்லி விட்டு மீண்டும் விம்மத் தொடங்கினாள்.



இருபத்தைந்தாம் அத்தியாயம்
மகேந்திரர் சொன்னார்!

சிவகாமி விம்மி ஓய்வதற்குச் சிறிது நேரம் கொடுத்து விட்டுக் குண்டோ தரன் "தாயே! தென் தமிழ்நாட்டில் 'ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லையா?' என்று ஒரு பழமொழி உண்டு. தாங்களும் ஒருவேளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இத்தனை நாள் பொறுத்திருந்தவர்கள், காரிய சித்தியடையப் போகும் சமயத்தில் பொறுமையிழக்கலாமா?" என்றான். "குண்டோ தரா! எனக்கா நீ பொறுமை உபதேசம் செய்கிறாய்? ஒன்பது வருஷ காலம் பகைவர்களின் நகரில் நிர்க்கதியாய், நிாதரவாய் உயிரை வைத்துக் கொண்டிருந்தவளுக்கா பொறுமையை உபதேசிக்கிறாய்?" என்று சிவகாமி தாங்காத மனக் கொதிப்புடன் கேட்டாள்.

"தாயே! தங்களுக்குப் பொறுமையை உபதேசிக்கவில்லை. என்னுடைய சக்தியின்மையைத்தான் அவ்விதம் வெளியிட்டேன். இராமாயணக் கதையில் இன்னொரு கட்டத்தைத் தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமார், பிராட்டியைத் தன்னுடன் புறப்பட்டு வந்து விடும்படி கோரினார். இராமனிடம் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகச் சொன்னார். ஆனால், சீதாதேவி அனுமாருடன் வருவதற்கு மறுத்து விட்டார்...!" என்றான் குண்டோ தரன்.

"குண்டோ தரா! சீதாதேவியின் உபமானத்தை எதற்காகச் சொல்லுகிறாய்? நான் சீதாதேவி அல்ல; மிதிலையை ஆண்ட ஜனக மகாராஜாவின் புத்திரியும் அல்ல; ஏழைச் சிற்பியின் மகள்...!" "அம்மா! நானும் அனுமார் அல்ல, உருவத்திலே ஏதோ அந்த இராம தூதனை ஒத்திருக்கிறேன்! ஆனால், அவருடைய சக்தியிலே லட்சத்தில் ஒரு பங்கு கூட எனக்குக் கிடையாது. இந்த வாதாபி நகரத்தைத் தனியாகக் கொளுத்தி எரித்து விட்டுத் தங்களை அழைத்துப் போகும் சக்தி எனக்கு இல்லையே! என் செய்வேன்?" "ஆ! மறுபடியும் என் பாழும் சபதத்தைக் குறிப்பிடுகிறாய், அதைத்தான் நான் கைவிட்டு விட்டேன் என்று சொன்னேனே? என்னை உன்னோடு அழைத்துப் போகும்படிதானே சொல்கிறேன்?..."

"அம்மா! இதே வீட்டில் இதே இடத்தில் நின்று, மாமல்லர் தம்முடன் வந்து விடும்படி தங்களை வருந்தி வருந்தி அழைத்தார். தாங்கள் பிடிவாதமாக மறுத்து விட்டீர்கள். 'என் சபதத்தை நிறைவேற்றி விட்டு என்னை அழைத்துப் போங்கள்' என்றீர்கள். அதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன். இப்போது மாமல்லர் சபதத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்மா! நாளை விஜயதசமியன்று கிளம்புவதற்கு நாள் பார்த்திருக்கிறது. எல்லாம் உத்தேசப்படி நடந்தால் சரியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் வாதாபி கோட்டையைப் பல்லவ சைனியம் சூழ்ந்து முற்றுகையிடும். தங்கள் கண்முன்னால் தங்களுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்ப்பீர்கள். அதைரியத்துக்கு இடங்கொடாமல் இன்னும் சிறிது காலம் பொறுமையாயிருங்கள்..."

"குண்டோ தரா! நான் சொல்வதை நீ புரிந்து கொள்ளவில்லை. என் மனத்தையும் நன்றாய் அறிந்து கொள்ளவில்லை. அதைரியத்தினாலோ, அல்லது பொறுமை இழந்தோ நான் பேசவில்லை. எனக்காக இன்னொரு பயங்கர யுத்தம் நடப்பதைத் தடுக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததெல்லாம் போதாதா? அந்தச் சமயம் ஏதோ ஆத்திரமாயிருந்தது; அதனால் அப்படிச் சபதம் செய்து விட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது மூடத்தனம் என்று தோன்றுகிறது. யுத்தம் என்றால் என்னென்ன பயங்கரங்கள் நடக்கும்? எத்தனை பேர் சாவார்கள்? எத்தனை குற்றமற்ற ஜனங்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள்? வெற்றி தோல்வியைப் பற்றித்தான் நிச்சயம் என்ன சொல்ல முடியும்? இந்தத் துரதிர்ஷ்டக்காரியின் மூடப் பிடிவாதத்துக்காக அம்மாதிரிக் கஷ்டங்கள் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதனாலேதான் என்னை உன்னோடு அழைத்துப் போகச் சொல்லுகிறேன்!" என்றாள் சிவகாமி.

இதற்கு என்ன மறுமொழி சொல்லுவது என்று தெரியாமல் குண்டோ தரன் திகைத்து நின்றான். சிறிது நேரம் யோசித்து, "அம்மா! இனிமேல் தங்களுடைய சபதத்தைத் தாங்கள் மாற்றிக் கொண்டபோதிலும், மாமல்லர் வாதாபிப் படையெடுப்பைக் கைவிட முடியாது. மகேந்திர பல்லவர் மரணத் தறுவாயில் மாமல்லருக்கு இட்ட கட்டளையை அவர் நிறைவேற்றியே தீருவார்!" என்றதும், சிவகாமி, "ஆ! மகேந்திரர் என்ன கட்டளையிட்டார்?" என்றாள். "ஆயனச் சிற்பியின் மகள் செய்த சபதத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று கட்டளையிட்டார்! வாதாபியைச் சுட்டு எரித்துச் சிவகாமி அம்மையைக் கொண்டு வந்தால்தான் பல்லவ குலத்துக்கு நேர்ந்த அவமானம் தீரும் என்று வற்புறுத்திக் கூறினார். அதற்காக இடைவிடாத பிரயத்தனம் செய்யும்படி மாமல்லரையும் மந்திரிமார்களையும் கேட்டுக் கொண்டார்!" என்று குண்டோ தரன் கூறியதும், "ஆகா! சக்கரவர்த்திக்கு என்பேரில் அவ்வளவு கருணை இருந்ததா! அவரைப் பற்றி என்னவெல்லாம் நான் தவறாக எண்ணினேன்?" என்று கூறிச் சிவகாமி மறுபடியும் கலகலவென்று கண்ணீர் விட்டாள். பிறகு மகேந்திர பல்லவரின் மரணத்தைப் பற்றியும் இன்னும் காஞ்சியில் சென்ற ஒன்பது வருஷமாக நடந்த சம்பவங்களைப் பற்றியும் விவரமாகச் சொல்லும்படி கேட்டாள். குண்டோ தரன் எல்லாச் சம்பவங்களையும் பற்றிக் கூறினான். ஆனால், ஒரு சம்பவத்தைப் பற்றி மட்டும் அவன் பிரஸ்தாபிக்கவே இல்லை. அதைச் சொல்ல அவனுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை.

குண்டோ தரன் விடைபெற்றுக் கிளம்ப வேண்டிய சமயம் வந்த போது, சிவகாமி ஏக்கம் நிறைந்த குரலில், "அப்பனே! மாமல்லர் நிச்சயம் வருவாரா? அல்லது எனக்கு வீண் ஆசை காட்டுகிறாயா?" என்று கேட்டாள். "நிச்சயமாக வருவார், அம்மா! பல்லவ குலத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக அவசியம் வந்தே தீருவார்!" என்றான் குண்டோ தரன். "உண்மைதான்! பல்லவ குலத்தின் கௌரவந்தான் அவருக்குப் பெரிது. அதற்காகத்தான் இவ்வளவு காலம் கழித்து வருகிறார். என்பேரில் உள்ள அன்புக்காக வருவதாயிருந்தால், முன்னமே வந்து என்னை அழைத்துப் போயிருக்க மாட்டாரா?" என்றாள். குண்டோ தரன் தன் மனத்திற்குள், "ஆ! ஸ்திரீகளைத் திருப்தி செய்வது மிகவும் கடினமான காரியம். இப்படி திருப்தி செய்ய முடியாத ஸ்திரீகளுக்காகச் சிலர் இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு இப்படி உயிரை விடுகிறார்களே? என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று எண்ணினான்.

பிறகு, "அம்மா! பல்லவ குலத்தின் கௌரவத்தைக் காட்டிலும் தங்களுடைய அன்பே பெரிதென்று கருதி மாமல்லர் இங்கு ஒருநாள் மாறுவேடத்தில் வரவில்லையா? அவருடன் புறப்பட்டு வந்து விடும்படி தங்களை எவ்வளவோ மன்றாடி வேண்டிக் கொள்ளவில்லையா?" என்று வெளிப்படையாகக் கேட்டான். "ஆம், குண்டோ தரா! அப்போது நான் செய்தது பெரிய தவறுதான். அந்தத் தவறுக்காக ஒன்பது வருஷம் என்னைத் தண்டித்தது போதும் என்று மாமல்லரிடம் சொல்லு! அவரை மீண்டும் ஒருமுறை பார்த்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்காகத்தான் இத்தனை நாள் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லு!" என்றாள் சிவகாமி. நல்லவேளையாக, அந்தப் பேதை தனக்கு இன்னும் எவ்வளவு கடூரமான தண்டனைகள் காத்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால், எந்தக் காரணத்துக்காகவேனும் உயிரை வைத்துக் கொண்டிருக்க உடன்பட்டிருக்கக் கூடுமா?

குண்டோ தரன் கடைசியாகப் புறப்பட வேண்டிய சமயத்தில் தயங்கித் தயங்கி நின்றான். அவனைப் பார்த்தால் ஏதோ சொல்ல விரும்பியவன் போலவும், அதற்குத் துணிச்சல் வராமல் சங்கடப்படுவதாகவும் தோன்றியது. சிவகாமி அவனைத் தைரியப்படுத்தி, "இன்னும் ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா? தயங்காமல் சொல்லு!" என்றாள். "தேவி வேறு ஒன்றுமில்லை; 'ஸ்திரீகளிடம் இரகசியம் தங்காது' என்பதாக ஒரு வழக்கு உண்டு. மகாபாரதத்திலே கூட அந்த மாதிரி ஒரு கதை இருக்கிறது. அம்மா! கோபித்துக் கொள்ளாதீர்கள், நான் வந்து போன விஷயமோ, மாமல்லர் படையெடுத்து வரும் விஷயமோ இங்கே பிரஸ்தாபம் ஆகக் கூடாது!" சிவகாமியின் முகத்தில் சோகம் கலந்த புன்னகை அரும்பியது.

"குண்டோ தரா! மாமல்லருக்கு இத்தனை நாளும் என்னால் ஏற்பட்ட சங்கடமெல்லாம் போதாதா? இந்த வஞ்சகப் பாதகர்களிடம் இன்னமும் அவரை நான் காட்டிக் கொடுப்பேனா? இங்கே எனக்குத் தெரிந்தவர்கள் நாகநந்தி பிக்ஷுவைத் தவிர யாரும் இல்லை. அவரும் அஜந்தாவுக்குப் போகிறார்; ஆகையால் நீ கவலையில்லாமல் திரும்பிச் செல்!" என்றாள் சிவகாமி. பிறகு, "குண்டோ தரா! நீ உன்னை அனுமார் என்று சொல்லிக் கொண்டாய். அந்தப் பெயருக்குத் தகுதியாக நடந்து கொள். மாமல்லரை விட்டு ஒரு க்ஷணமும் பிரியாமல் இருந்து அவரைக் காப்பாற்று! இந்தப் பாவிகள் நெஞ்சிலே விஷம் உள்ளவர்கள். விஷம் தோய்ந்த கத்தி எறிந்து கொல்கிறவர்கள். ஐயோ! என்னுடைய மூடப் பிடிவாதத்தினால் அவருக்கு மறுபடியும் ஆபத்து வர வேண்டுமா?" என்றாள் சிவகாமி. சிவகாமி ஏன் யுத்தத்தை விரும்பவில்லை என்பது அப்போதுதான் குண்டோ தரனுக்குத் தெளிவாயிற்று. மாமல்லருக்குப் போர்க்களத்தில் ஏதாவது அபாயம் வரப் போகிறதோ என்று அவள் கவலைப்பட்டது தான் காரணம் என்று தெரிந்து கொண்டாள். சிவகாமி தேவியிடம் அவனுடைய பக்தியும் அபிமானமும் முன்னை விடப் பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன.



இருபத்தாறாம் அத்தியாயம்
நீலகேசி உதயம்

குண்டோ தரன் வந்து விட்டுப் போனதிலிருந்து சிவகாமியின் சித்தக் கடலில் கொந்தளிப்பு அதிகமாயிற்று. மலை போன்று எண்ண அலைகள் எழுந்து விழுந்து நாற்புறமும் மோதிப் பாய்ந்து அல்லோலகல்லோலம் செய்தன. பொழுது போவது மிகவும் சிரமமாகி, ஒவ்வொரு கணமும் ஒரு முடிவில்லாத யுகமாகத் தோன்றியது. குண்டோ தரன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவனிடம் நாம் உசிதமான முறையில் பேசினோமோ இல்லையோ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றியது. மாமல்லரிடம் போய் அவன் என்ன சொல்கிறானோ என்னவோ என்ற கவலையும் அடிக்கடி ஏற்பட்டது. மாமல்லர் வரப் போவது பற்றிய இரகசியத்தை வெளியிட்டு விட வேண்டாம் என்று குண்டோ தரன் தனக்கு எச்சரிக்கை செய்ததைப் பற்றி நினைத்துக் கொண்ட போது மட்டும் சிவகாமியின் சோகம் குடிகொண்ட வதனத்தில் புன்னகை தோன்றிற்று. ஆயினும், அந்த எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்பது வெகு சீக்கிரத்திலே அவளுக்குத் தெரியவந்தது.

குண்டோ தரன் வந்து சென்ற மூன்றாம் நாள் வாதாபி நகரம் அளவில்லாத அல்லோல கல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. அன்றைய தினம் புலிகேசிச் சக்கரவர்த்தி அஜந்தா கலை விழாவுக்காகப் பயணமாகிறார் என்பதும், பக்கத்திலுள்ள இராஜவீதி வழியாக அவருடைய ஊர்வலம் போகும் என்பதும் சிவகாமிக்குத் தெரிந்திருந்தது. தன் வீட்டின் பலகணியின் வழியாகவே மேற்படி ஊர்வலக் காட்சியைக் காணலாம் என்று அவள் அறிந்திருந்தாள். கடைசியாக, பிற்பகலில் மூன்றாவது ஜாமத்தில் சக்கரவர்த்தியின் பிரயாண ஊர்வலம் வந்தது. பட்டத்து யானை மீது புலிகேசிச் சக்கரவர்த்தி கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் சிவிகைகளில் நாகநந்தி பிக்ஷுவும் சீன யாத்திரிகரும் சென்றார்கள்.

அழகிய தங்க ரதத்தில் சக்கரவர்த்தியின் இளம் புதல்வர்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள். இன்னும், சக்கரவர்த்தியின் முன்னாலும் பின்னாலும் சாம்ராஜ்யத்தின் பிரதான அமாத்தியர்கள், மந்திரிமார்கள், சாமந்தர்கள், சேனா நாயகர்கள் முதலியோர் பலவித வாகனங்களில் பெருமிதத்துடன் அமர்ந்து சென்றார்கள். பொது ஜனங்களின் கோலாகல கோஷங்களோடு வாத்திய முழக்கங்களும் சேர்ந்து காது செவிடுபடும்படிச் செய்தன. இதையெல்லாம் பார்த்த சிவகாமிக்குக் காஞ்சியில் மகேந்திர பல்லவர் மாமல்லபுரத்துக் கலை விழாவிற்கு கிளம்பும் காட்சி நினைவுக்கு வந்தது. ஆகா! முன்னொரு காலத்தில் இந்தப் புலிகேசி எத்தகைய கலை உணர்வே இல்லாத மூர்க்கனாயிருந்தான்! இப்போது எப்பேர்ப்பட்ட மாறுதல் ஏற்பட்டு விட்டது? இதற்கெல்லாம் என்ன காரணம்? காஞ்சியைப் பார்த்து விட்டு வந்ததுதானோ?

அந்த ஊர்வலக் காட்சியைப் பற்றி பிறகு நினைத்த போதெல்லாம் சிவகாமிக்கு எரிச்சல் உண்டாயிற்று. 'இந்தப் புலிகேசியின் ஆடம்பரமும் இறுமாப்பும் கூடிய சீக்கிரத்தில் அடங்கப் போகிறதல்லவா?' என்பதை எண்ணிய போது ஓரளவு ஆறுதல் உண்டாயிற்று. இவர்கள் அஜந்தாவிலிருந்து திரும்பி வருவதற்குள்ளே மாமல்லர் இங்கு வந்து விடக்கூடுமல்லவா? அதை அறிந்தவுடனே இவர்களுக்கெல்லாம் எத்தகைய திகில் உண்டாகும்!" "யுத்தம் வேண்டாம்" என்று தான் குண்டோ தரனிடம் சொன்னது தவறு என்று சிவகாமிக்கு அப்போது தோன்றியது. அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த இன்னொரு காரணமும் சேர்ந்தது. பட்டத்து யானைக்குப் பின்னால் சிவிகையில் சென்ற பிக்ஷு சிவகாமி இருந்த வீட்டின் பக்கம் ஒருகணம் முகத்தைத் திருப்பிப் பார்த்ததாகத் தோன்றியது. ஆனாலும், நாகநந்தி பிரயாணம் கிளம்புவதற்கு முன்னால் தன்னிடம் மறுபடியும் வந்து விடைபெறுவார் என்று அவள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. "ஆ! இந்தக் கள்ளப் பிக்ஷுவுக்கு இவ்வளவு அகங்காரமா?" என்று எண்ணி ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

எனவே, அன்று மாலை இருட்டுகிற சமயத்தில் நாகநந்தி அவள் வீட்டு வாசலில் குதிரை மீது வந்து இறங்கி, உள்ளேயும் பிரவேசித்து வந்த போது சிவகாமி எல்லையற்ற வியப்பு அடைந்தவளாய், "சுவாமி! இதென்ன? தாங்கள் அஜந்தா மார்க்கத்தில் போய்க் கொண்டிருப்பதாக அல்லவா நினைத்தேன்? போகவில்லையா என்ன?" என்றாள். "கட்டாயம் போகிறேன், சிவகாமி! அஜந்தாவில் எனக்கு மிகவும் முக்கியமான காரியம் இருக்கிறது, அதில் உனக்குச் சம்பந்தம் உண்டு. அதைப் பற்றி உன்னிடம் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்றுதான் திரும்பி அவசரமாக வந்தேன். இன்றிரவே சக்கரவர்த்தி தங்கியிருக்கும் இடம் போய்ச் சேர்ந்து விடுவேன்!" என்று சொல்லி விட்டு, சிவகாமிக்குப் பேச இடங்கொடாமல், "இன்று பிற்பகலில் அந்தப் பக்கம் போன ஊர்வலத்தைப் பார்த்தாயா?" என்று கேட்டார் நாகநந்தி பிக்ஷு. "ஓ! பார்த்தேன், மகேந்திர பல்லவர் கலைத் திருநாளுக்காகக் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்படும் காட்சி ஞாபகம் வந்தது. ஏதேது? புலிகேசிச் சக்கரவர்த்தி மகேந்திர பல்லவரைக் கூடத் தோற்கடித்து விடுவார் போலிருக்கிறதே?" என்றாள் சிவகாமி. "நிச்சயமாகத் தோற்கடிப்பார்; சந்தேகமில்லை! வாதாபிச் சக்கரவர்த்தி இப்போது பழைய இரத்தவெறி கொண்ட புலிகேசி அல்ல. கலை மோகமும் ரஸிகத்தன்மையும் கொண்ட புதிய புலிகேசி" என்றார் நாகநந்தி. "அப்படியானால் அஜந்தாவிலும் கலைவிழா கோலாகலமாய்த்தானிருக்கும்" என்றாள் சிவகாமி.

"அதிலும் சந்தேகமில்லை, அஜந்தாவின் புத்த பிக்ஷுக்கள் சக்கரவர்த்தியை ஒப்பற்ற முறையில் வரவேற்று உபசரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டு புகழ்பெற்ற நாலந்தாவிலிருந்தும் ஸ்ரீபர்வதத்திலிருந்தும் இன்னும் பல புத்த பீடங்களிலிருந்தும் ஆசாரிய புருஷர்கள் பலர் வந்திருக்கிறார்களாம். உனக்குத் தெரிுமோ, இல்லையோ! வாதாபிச் சக்கரவர்த்திக்கு இளம்பிராயத்தில் அடைக்கலம் தந்து காப்பாற்றியது அஜந்தா சங்கிராமம்தான். ஆயினும் வெகு காலம் வரையில் அஜந்தா சங்கிராமத்துக்குச் சக்கரவர்த்தி எந்தவித உதவியும் செய்யவில்லை. அதற்கு ஜைன முனிவர்கள் இடம் கொடுக்கவில்லை. இராஜாங்கத்திலிருந்து செய்யும் உதவியெல்லாம் சமண மடங்களுக்கும் சமணக் கோயில்களுக்கும்தான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். ஆனால், இப்போது சக்கரவர்த்தியின் மனம் மாறி விட்டது. சமணர், பௌத்தர், சைவர், வைஷ்ணவர், சாக்தர் ஆகிய எந்த மதத்தினரானாலும், சிற்ப - சித்திரக் கலைகளை வளர்ப்பவர்களுக்கெல்லாம் இராஜாங்கத்திலிருந்து மானியங்களைக் கொடுத்து வருகிறார். இது காரணமாக இப்போது இந்தச் சளுக்க சாம்ராஜ்யம் இந்தியாவிலேயே கலை வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் வாதாபி தோற்கடித்து விட்டது!" என்று நாகநந்தி பெருமிதத்தோடு கூறியதைச் சிவகாமி உண்மையான ஆவலோடு கேட்டுக் கொண்டு வந்தாள். "சிவகாமி! வாதாபிச் சக்கரவர்த்தியின் இந்த மன மாறுதலுக்கு யார் காரணம் என்று உனக்குத் தெரியுமா?" என்று நாகநந்தி கேட்ட போது, "சந்தேகம் என்ன சுவாமி! சகல கலைகளிலும் வல்ல மகா ரஸிகரான நாகநந்தியடிகள்தான்!" என்று சிவகாமி பளிச்சென்று விடையளித்தாள்.

நாகநந்தியின் முகம் ஒன்பது வருஷத்துக்கு முன்பு நாம் பார்த்தபோதிருந்ததைக் காட்டிலும் இப்போது களை பொருந்தி விளங்கிற்று. முன்னே அந்த முகத்தில் நாம் கண்ட கொடூரம் இப்போது கிடையாது. சிவகாமியின் மறுமொழி அவருடைய முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கி, மேலும் களை பொருந்தியதாகச் செய்தது. அத்தகைய முகமலர்ச்சியோடு கனிவு ததும்பிக் காந்த சக்தி வீசிய கண்களினால் சிவகாமியை அவர் நோக்கி, "கலைவாணி! நீ கூறியது உண்மை; இரத்த தாகமும் யுத்த வெறியும் கொண்டிருந்த புலிகேசியைக் கலைமோகம் கொண்ட ரஸிகனாகச் செய்தது நான்தான். ஆனால், அதற்கு முன்னால், என்னை அத்தகைய கலைப் பித்தனாகப் பண்ணியது யார்? உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் நாகநந்தியடிகள்.

பிக்ஷு குறிப்பிடுவது தன்னைத்தான் என்று சிவகாமி மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள். ஆயினும், வெளிப்படையாக "எனக்கு எப்படித் தெரியும் சுவாமி?" என்று கூறினாள். "ஆம், உனக்குத் தெரியாதுதான்; இது வரையில் உனக்கு நான் சொல்லவும் இல்லை. அஜந்தா சங்கிராமத்துச் சுவர்களிலே எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் அழியா வர்ணங்களில் தீட்டிய தெய்வீகச் சித்திரங்கள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமல்லவா? அந்தச் சித்திரங்களிலே பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் சித்திரம் ஒன்றும் இருக்கிறது. அந்தச் சித்திரந்தான் முதன் முதலில் எனக்குக் கலை மோகத்தை உண்டாக்கிற்று. சிவகாமி! அந்த அற்புதச் சித்திரத்தை என்றைக்காவது ஒருநாள் நீ அவசியம் பார்க்க வேண்டும்...." "வீண் ஆசை எதற்காக? அஜந்தா அதிசயங்களைப் பார்க்கும் பாக்கியம் இந்த ஜன்மத்தில் எனக்குக் கிட்டப் போவதில்லை!" என்றாள் சிவகாமி. "அப்படிச் சொல்லாதே! இந்தத் தடவை நீ எங்களுடன் வராததில் எனக்கும் ஒருவிதத்தில் திருப்திதான். ஏனெனில் இந்தத் தடவை நீ எங்களுடன் வந்தாயானால், எனக்கும் மன நிம்மதியிராது; உனக்கும் மன நிம்மதியிராது. ஆனால் காலம் எப்போதும் இப்படியே இருந்து விடாது; சீக்கிரத்தில் மாறியே தீரும்."

நாகநந்தி இவ்விதம் சொன்ன போது, சிவகாமியின் நெஞ்சில் 'சுரீர்' என்றது. நாகநந்தி அவள் கூர்ந்து நோக்கி, "காலம் எப்படி மாறும்? என்ன விதத்தில் மாறும்?" என்று கேட்டாள். "நீ இந்தக் கூண்டிலேயிருந்து விடுதலையடைந்து வானவெளியில் உல்லாசமாகப் பாடிக் கொண்டு சஞ்சரிக்கும் காலம் சீக்கிரத்தில் வரலாம்!" "ஒருநாளும் வரப் போவதில்லை" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி. "அப்படியானால், உன்னுடைய சபதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையே உனக்கு இல்லையா?" என்று நாகநந்தி கேட்டார்.

சிவகாமி பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டு, "இல்லை; அந்த நம்பிக்கையை நான் இழந்து எத்தனையோ நாளாயிற்று!" என்றாள். ஆனால், அவளுடைய மனத்தில் பெரும் பீதியும் கலக்கமும் குடிகொண்டன. இந்த வஞ்சகப் பிக்ஷு ஏதாவது சந்தேகிக்கிறாரா? நம்மிடம் உண்மை அறிய பார்க்கிறாரா? ஒருவேளை குண்டோ தரன் இவரிடம் சிக்கிக் கொண்டிருப்பானோ? "சிவகாமி! உன்னுடைய சபதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை நீ இழந்து விட்டாய்; ஆனால், சபதம் நிறைவேறாமல் நீ இந்த ஊரை விட்டுக் கிளம்பவும் மாட்டாய்; அப்படித்தானே?" "ஆம், சுவாமி! அப்படித்தான்!" என்று சிவகாமி தயக்கமின்றி மறுமொழி கூறினாள். அப்போதுதான் குண்டோ தரனுடைய எச்சரிக்கையை அவள் நன்றியுடன் நினைத்துக் கொண்டாள்.

"ஆகா! உன்னை இந்தக் கதிக்கு உள்ளாக்க ஒருநாளும் நான் உடன்படேன், சிவகாமி! நேற்றுச் சீனப் பெரியாரிடம் சொன்னது போலச் செய்ய வேண்டியது தான். மாமல்லர் வந்து உன் சபதத்தை நிறைவேற்றிவைக்காவிடில், நானே நிறைவேற்றி வைக்கிறேன். இந்த நகருக்கு என் கையாலேயே நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுகிறேன்!" "ஆ! இது என்ன பேச்சு? இந்தப் பைத்தியக்காரியின் பிடிவாதத்துக்காகத் தாங்கள் ஏன் அத்தகைய கொடிய காரியத்தைச் செய்ய வேண்டும்? வேண்டவே வேண்டாம்." "அப்படியானால் நீயாவது உன்னுடைய அர்த்தமற்ற சபதத்தை விட்டு விட வேண்டும்." பேச்சை மாற்றத் தீர்மானித்த சிவகாமி, "சுவாமி! என்னைப் பற்றி இவ்வளவு பேசியது போதும். தங்களைப் பற்றிச் சொல்லுங்கள்; அஜந்தாவைப் பற்றிப் பேசுங்கள்!" என்றாள். "ஆம்! முக்கியமாக என்னைப் பற்றிப் பேசுவதற்குத்தான் வந்தேன். அஜந்தாவில் நான் புனர்ஜன்மம் எடுக்கப் போகிறேன். திரும்பி வரும் போது காவி உடை தரித்த புத்த பிக்ஷுவாக வர மாட்டேன். பட்டுப் பீதாம்பரம் அணிந்த நீலகேசி மகாராஜாவாக வருவேன்!" என்று நாகநந்தி கூறியதும், சிவகாமி வியப்புடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.



இருபத்தேழாம் அத்தியாயம்
இதயக் கனல்

சொல்ல முடியாத வியப்புடனே தம்மைப் பார்த்த சிவகாமியை சர்ப்பத்தின் கண்களையொத்த தமது காந்த சக்தி வாய்ந்த கண்களினாலே நாகநந்தியடிகள் சற்று நேரம் உற்றுப் பார்த்தார். "சிவகாமி! நான் சொல்வதை நீ நம்பவில்லையா? என் நெஞ்சைத் திறந்து உனக்கு நான் காட்டக் கூடுமானால் இந்தக் கடின இதயத்தைப் பிளந்து இதற்குள்ளே இரவும் பகலும், ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீக்கனலை உனக்கு நான் காட்ட முடியுமானால்...." என்று சொல்லிக் கொண்டே பிக்ஷு தம் மார்பில் படீர் படீர் என்று இரண்டு தடவை குத்திக் கொண்டார். உடனே அவருடைய இடுப்பு வஸ்திரத்தில் செருகிக் கொண்டிருந்த சிறு கத்தியை எடுத்து, அதன் உறையைச் சடாரென்று கழற்றி எறிந்து விட்டுத் தம் மார்பிலே அக்கத்தியால் குத்திக் கொள்ளப் போனார். சிவகாமி சட்டென்று அவருடைய கையைப் பிடித்துக் கத்தியால் குத்திக் கொள்ளாமல் தடுத்தாள்.

சிவகாமி தன் கரத்தினால் நாகநந்தியின் கையைப் பிடித்திருந்த சொற்ப நேரத்தில், இரண்டு அதிசயமான அனுபவங்களை அடைந்தாள். நாகநந்தியின் கரமும் அவருடைய உடல் முழுவதும் அப்போது நடுங்குவதை உணர்ந்தாள். ஒன்து வருஷத்துக்கு முன்னால் புத்த பிக்ஷுவைச் சிவகாமி தன்னுடைய தந்தையையொத்தவராய்க் கருதியிருந்த போது சில சமயம் அவருடைய கரங்களைத் தற்செயலாகத் தொட்டுப் பார்க்க நேர்ந்ததுண்டு. அப்போது அவளுடைய மனத்தில், 'இது என்ன வஜ்ர சரீரம்! இவருடைய தேகமானது கேவலம் சதை, இரத்த, நரம்பு, தோல் இவற்றின் சேர்க்கையே பெறாமல் முழுவதும் எலும்பினால் ஆனதாக அல்லவா தோன்றுகிறது? எப்பேர்ப்பட்ட கடின தவ விரதங்களை அனுஷ்டித்து இவர் தம் தேகத்தை இப்படிக் கெட்டிப்படுத்தியிருக்க வேண்டும்?' என்று எண்ணமிட்டதும் உண்டு. அதே புத்த பிக்ஷுவின் தேகம் இப்போது பழைய கெட்டித் தன்மையை இழந்து மிருதுத் தன்மையை அடைந்திருந்ததைச் சிவகாமி உணர்ந்து அதிசயித்தாள்.

நாகநந்தி சற்று நேரம் கையில் பிடித்த கத்தியுடன் சிவகாமியைத் திருதிருவென்று விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சுய உணர்வு திடீரென்று வந்தவரைப் போல் கையிலிருந்த கத்தியைத் தூரத்தில் விட்டெறிந்தார். உடனே சிவகாமியும் அவருடைய கையை விட்டாள். "சிவகாமி! திடீரென்று அறிவு கலங்கி மெய்ம்மறந்து போனேன்! சற்று முன் உன்னிடம் என்ன சொன்னேன், எதற்காக இந்தக் கத்தியை எடுத்தேன் என்பதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துவாயா?' என்று புத்த பிக்ஷு கேட்டதற்குச் சிவகாமி, "சுவாமி! சற்று முன்னால் தாங்கள் புத்த பிக்ஷு விரதத்தைக் கைவிடப் போவதாகவும், சிம்மாசனம் ஏறி இராஜ்யம் ஆளப் போவதாகவும் சொன்னீர்கள்" என்று கூறிவிட்டுத் தயங்கினாள்.

"ஆம், சிவகாமி! நான் கூறியது உண்மை. அதற்காகவே நான் அஜந்தாவுக்குப் போகிறேன். முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னால் அஜந்தா நதிக்கரையில் பிக்ஷு விரதம் ஏற்றேன். அதே நதியில் அந்த விரதத்திற்கு ஸ்நானம் செய்து விட்டு வரப்போகிறேன். அஜந்தா சங்கிராமத்தின் தலைவராகிய எந்தப் பூஜ்ய புத்த குருவினிடம் தீக்ஷை பெற்றேனோ, அவரிடமே இப்போது விடுதலை பெற்று வரப் போகிறேன், அது உனக்குச் சம்மதந்தானே?" என்றார் நாகநந்தியடிகள். சிவகாமி, இன்னதென்று விவரம் தெரியாத பயத்தினால் பீடிக்கப்பட்டவளாய், "சுவாமி! இது என்ன காரியம்? இத்தனை வருஷ காலமாக அனுசரித்த புத்த தர்மத்தைத் தாங்கள் எதற்காகக் கைவிட வேண்டும்? அதனால் தங்களுக்கு உலக நிந்தனை ஏற்படாதோ? இத்தனை நாள் அனுஷ்டித்த விரதம், தவம் எல்லாம் நஷ்டமாகுமே? எந்த லாபத்தைக் கருதி இப்படிச் செய்யப் போகிறீர்கள்!" என்றாள்.

இப்படிக் கேட்டபோதே, அவளுடைய உள்ளுணர்ச்சியானது இந்தக் கேள்வியையெல்லாம் தான் கேட்பது மிகப் பெரிய தவறு என்றும், அந்தத் தவற்றினால் பிக்ஷு விரித்த வலையிலே தான் விழுந்து விட்டதாகவும் உணர்த்தியது. "என்ன லாபத்துக்காக என்றா கேட்கிறாய்!" என்று திரும்பிக் கேட்டு விட்டு, "ஹா ஹா ஹா" என்று உரத்துச் சிரித்தார். "உனக்குத் தெரியவில்லையா? அப்படியானால், சொல்கிறேன் கேள்! முப்பத்தைந்து வருஷ காலமாக அனுஷ்டித்த புத்த பிக்ஷு விரதத்தை நான் கைவிடப் போவது உனக்காகத்தான், சிவகாமி! உனக்காகவே தான்! நான் அஜந்தாவில் சம்பிரதாயமாக, உலகம் அறிய, குருவினிடம் அனுமதி பெற்று விரதத்தை விடப் போகிறேன். ஆனால், விரத பங்கம் பல வருஷங்களுக்கு முன்னாலேயே நேர்ந்து விட்டது. என்றைய தினம் உன்னுடைய தகப்பனார் ஆயனரின் அரண்ய வீட்டில், அற்புதச் சிலைகளுக்கு மத்தியிலே உயிருள்ள சிலையாக நின்ற உன்னைப் பார்த்தேனோ, அன்றைக்கே என் விரதத்துக்குப் பங்கம் வந்து விட்டது. ஆனால், அதற்காக நான் வருத்தப்படவில்லை. உன்னுடன் ஒருநாள் வாழ்வதற்காகப் பதினாயிரம் வருஷம் நரகத்திலே கிடக்க வேண்டுமென்றால், அதற்கும் நான் ஆயத்தமாயிருக்கிறேன். உன்னுடைய அன்பை ஒரு கண நேரம் பெறும் பாக்கியத்துக்காக என்றென்றைக்கும் மோட்சத்தை இழந்து விட வேண்டும் என்றால் அதற்கும் சித்தமாயிருக்கிறேன்...."

சிவகாமி பயந்து நடுங்கினாள், இத்தனை நாளும் அவள் மனத்திற்குள்ளேயே புதைந்து கிடந்த சந்தேகம் இன்று உண்மையென்று தெரியலாயிற்று. ஆனால்...இந்தக் கள்ள பிக்ஷு இத்தனை நாளும் ஏன் இதையெல்லாம் தம் மனத்திற்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருந்தார்? இத்தனை காலமும் தன்னைத் தொந்தரவு செய்யாமல், எந்த விதத்திலும் வற்புறுத்தாமல் சுதந்திரமாக ஏன் விட்டு வைத்திருந்தார்? அவள் மனத்தில் எழுந்த மேற்படி கேள்விக்குத் தட்சணமே மறுமொழி கிடைத்தது.

"சிவகாமி! என்னுடைய ஆத்மாவை நான் காப்பாற்றிக் கொள்வதற்கும் உன்னுடைய வாழ்க்கைச் சுகத்தை நீ பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் ஒன்பது வருஷத்துக்கு முன்னால் ஏற்பட்டது. மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்தபோது நீ அவனுடன் போயிருந்தாயானால், அல்லது உன்னை அவனிடம் சேர்ப்பிப்பதற்கு எனக்காவது ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருந்தாயானால், நான் என் விரதத்தை ஒருவேளை காப்பாற்றிக் கொண்டிருப்பேன். நீயும் உன் வாழ்க்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நீ என் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அநாவசியமாகச் சந்தேகித்து விஷக் கத்தியை என் முதுகின் மேல் எறிந்து காயப்படுத்தினாய். அப்போது அந்த விஷக்கத்தி என்னைக் கொல்லவில்லை. ஆனால், அதே கத்தியானது இப்போது என்னைத் தாக்கினால் அரை நாழிகை நேரம் கூட என் உயிர் நிலைத்திராது! சிவகாமி, சற்று முன்னால் என் கரத்தை நீ பிடித்த போது உன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. ஒன்பது வருஷத்துக்கு முன்னால் இரும்பையும் கல்லையும் ஒத்துக் கெட்டியாயிருந்த என் கை இப்போது இவ்வளவு மிருதுத்தன்மை அடைந்திருப்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட்டாய். இந்த மாறுதலுக்குக் காரணம் நீதான், சிவகாமி! கடுமையான தவ விரதங்களை அனுசரித்து என் தேகத்தை நான் அவ்வாறு கெட்டிப்படுத்திக் கொண்டிருந்தேன். வெகுகாலம் விஷ மூலிகைகளை உட்கொண்டு என் தேகத்தில் ஓடிய இரத்தத்தை விஷமாகச் செய்து கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் என்னை எப்பேர்ப்பட்ட கொடிய விஷ நாகம் கடித்தாலும், கடித்த மறுகணம் அந்த நாகம் செத்துப் போகுமே தவிர எனக்கு ஒரு தீங்கும் நேராது. என்னுடைய உடம்பின் வியர்வை நாற்றம் காற்றிலே கலந்து விட்டால், அதன் கடுமையைத் தாங்க முடியாமல் சுற்று வட்டாரத்திலுள்ள விஷப் பாம்புகள் எல்லாம் பயந்து நாலு திசையிலும் சிதறி ஓடும். இதைப் பல சமயங்களில் நீயே நேரில் பார்த்திருக்கிறாய்...." என்று நாகநந்தி கூறிய போது, இரண்டு பேருடைய மனத்திலும் பத்து வருஷங்களுக்கு முன்னால் மண்டபப்பட்டுக் கிராமத்தில் வெண்ணிலா விரித்த ஓர் இரவிலே நடந்த சம்பவங்கள் ஞாபகத்தில் வந்தன.

"அப்பேர்ப்பட்ட இரும்பையொத்திருந்த என் தேகத்தை மாற்று மூலிகைகளினாலும் மற்றும் பல வைத்திய முறைகளை அனுசரித்தும் இப்படி மிருதுவாகச் செய்து கொண்டேன். என் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தை முறிவு செய்தேன். சென்ற ஒன்பது வருஷம் இந்த முயற்சியிலேதான் ஈடுபட்டிருந்தேன். இடையிடையே உன்னைப் பல நாள் பாராமலிருந்ததன் காரணமும் இதுதான். சிவகாமி! முப்பது பிராயத்து இளைஞனைப் போல் இன்று நான் இல்வாழ்க்கை நடத்துவதற்குத் தகுந்தவனாயிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு நீ என்னை நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தாயானால் அதன் மூலம் எனக்கு நீ அளிக்கும் துன்பத்துக்குப் பரிகாரமாக நூு நூறு ஜன்மங்களில் நீ பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படியிருக்கும்! அப்போதுங்கூட உன்னுடைய பாபம் தீர்ந்து விட்டதாகாது!"

சிவகாமியின் தலை வெடித்து விடும் போல் இருந்தது. தன் முன்னால் பிக்ஷு உட்கார்ந்து மேற்கண்டவாறு பேசியதெல்லாம் ஒருவேளை சொப்பனமாயிருக்கலாம் என்று ஒருகணம் எண்ணினாள். அந்த எண்ணத்தினால் ஏற்பட்ட ஆறுதலும் சந்தோஷமும் மறுகணமே மாயமாய் மறைந்தன. இல்லை, இதெல்லாம் சொப்பனமில்லை; உண்மையாகவே தன் கண்முன்னால் நடக்கும் பயங்கரமான நிகழ்ச்சிதான். இரத்தம் போல் சிவந்த கண்களைக் கொட்டாமல் புத்த பிக்ஷு தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது இதோ தன் எதிரில் உண்மையிலேயே நடக்கும் சம்பவந்தான்.

அபாயம் நெருங்கியிருப்பதை உணர்ந்ததும் சிவகாமியின் உள்ளம் சிறிது தெளிவடைந்தது. இந்தக் கொடிய பைத்தியக்காரனிடமிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை. வணங்கி வேண்டிக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கொஞ்சம் அவகாசம் பெற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் அருள் இருந்தால் இந்த வெறி கொண்ட பிக்ஷு அஜந்தாவிலிருந்து திரும்புவதற்குள் மாமல்லர் வந்து தன்னை விடுதலை செய்து கொண்டு போவார். இல்லாவிடில், வேறு ஏதேனும் யுக்தி செய்ய வேண்டும். முற்றத்துக் கிணறு இருக்கவே இருக்கிறது. எனவே, பிக்ஷுவிடம் மன்றாடி வேண்டிக் கொள்வதற்காகச் சிவகாமி வாய் திறந்தாள்.

பிக்ஷு அதைத் தடுத்து, "வேண்டாம், சிவகாமி! இன்றைக்கு நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். அவசரப்பட்டு எனக்கு மறுமொழி சொல்ல வேண்டாம். அஜந்தா போய் வந்த பிறகே உன்னிடம் இதைப் பற்றியெல்லாம் பிரஸ்தாபிக்க வேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், வாதாபிக்கு வெளியே இன்று இரவு நாங்கள் தங்குவதற்குரிய இராஜாங்க விடுதியை அடைந்ததும், உன்னிடம் என் மனத்தைத் திறந்து காட்டி விட்டுப் போவதுதான் உசிதம் என்றும், எல்லா விஷயங்களையும் நன்றாக யோசித்து முடிவு செய்ய உனக்குப் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டு திரும்பி வந்தேன். உன்னை நான் வற்புறுத்தப் போவதில்லை, பலவந்தப்படுத்தப் போவதில்லை. உனக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஒருநாளும் செய்யச் சொல்ல மாட்டேன். ஆனால், நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விடுகிறேன்; ஒரே மூச்சில் இப்போதே சொல்லி விடுகிறேன்; சற்றுப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிரு. நான் அஜந்தாவிலிருந்து திரும்பி வந்த பிறகு நீ உன்னுடைய தீர்ப்பைச் சொல்லலாம்." பிக்ஷுவின் இந்த வார்த்தைகள் சிவகாமிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன. அவளுடைய பீதியும் படபடப்பும் ஓரளவு குறைந்தன.

நாகநந்தி ஆரம்பத்திலிருந்து மறுபடியும் கதையை ஆரம்பித்தார்; "எந்த நேரத்தில் உன் தந்தையின் அரண்ய வீட்டில் உன்னை நான் பார்த்தேனோ, அதே நேரத்தில் என்னுடைய இதயத்திலிருந்து என் சகோதரனையும் சளுக்க சாம்ராஜ்யத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அவர்கள் இருந்த இடத்தை நீ ஆக்கிரமித்துக் கொண்டாய். அது முதல் என்னுடைய யோசனைகள், ஏற்பாடுகள் எல்லாம் தவறாகவே போய்க் கொண்டிருந்தன. அந்தத் தவறுகள் காரணமாகவே வாதாபிச் சக்கரவர்த்தியின் தென்னாட்டுப் படையெடுப்பு வெற்றியடையாமற் போயிற்று. "ஆகா! அந்தக் காலத்தில் நான் அனுபவித்த சொல்லொணாத மனவேதனையை மட்டும் நீ அறிந்தாயானால், உன் இளகிய நெஞ்சம் கரைந்து உருகி விடும். ஒரு பக்கத்தில் உன் பேரில் எனக்கு ஏற்பட்டிருந்த காதலாகிய கனல் என் நெஞ்சைத் தகித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னோடு பழகியவர்கள், உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள் மீது எனக்கேற்பட்ட அளவில்லாத அசூயை பெருநெருப்பாக என் உடலை எரித்தது. அப்போதெல்லாம் என் நெஞ்சில் நடந்து கொண்டிருந்த தேவாசுர யுத்தத்துக்குச் சமமான போராட்டத்தை நீ அறிந்தாயானால், பெரிதும் பயந்து போயிருப்பாய். ஒரு சமயம் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரையும் கொன்று விட வேண்டும் என்று எனக்குத் தடுக்க முடியாத ஆத்திரம் உண்டாகும். ஆயினும் பின்னால் உனக்கு அது தெரிந்து விட்டால் உன்னுடைய அன்பை என்றென்றைக்கும் இழந்து விட நேரிடுமே என்ற பயம் என்னைக் கோழையாக்கியது. மாமல்லனையும் மகேந்திர பல்லவனையும் கொல்லுவதற்கு எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால், ஒவ்வொரு சமயமும் 'உனக்குத் தெரிந்து விட்டால்....?' என்ற நினைவு என்னைத் தடுத்தபடியால் அவர்கள் தப்பிப் பிழைத்தார்கள். பரஞ்சோதி காஞ்சியில் பிரவேசித்த அன்று உன்னை மதயானை தாக்காமல் காப்பாற்றினான் அல்லவா? அந்தக் காரணத்துக்காகவே அவனை அன்றிரவு நான் சிறையிலிருந்து தப்புவித்து உன் வீட்டுக்கு அழைத்து வந்தேன். ஆனால், அவனுக்கு நீ நன்றி செலுத்துவதைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. கலைவாணி! உன் தந்தை ஆயனருக்கு உன்னிடமுள்ள செல்வாக்கைப் பார்த்துக்கூட நான் அசூயை அடைந்தேன். ஆயினும் உன்னைப் பெற்ற புண்ணியவான் என்பதற்காக அவரை வாளால் வெட்டப் போன வீரனின் கையைப் பிடித்துத் தடுத்து உயிரைக் காப்பாற்றினேன். அதுமுதல் உன் தந்தையைக் காப்பாற்றிக் கொடுத்ததே என்ற காரணத்துக்காக இந்தக் கையை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்."

இதைக் கேட்ட சிவகாமியின் நெஞ்சம் உண்மையிலேயே இளகித்தான் விட்டது. 'இந்தப் புத்த பிக்ஷு இரக்கமற்ற ராட்சதனாயிருக்கலாம்; இவருடைய இருதயம் பைசாசத்தின் இருதயமாயிருக்கலாம்; இவருடைய தேகத்தில் ஓடும் இரத்தம் நாகசர்ப்பத்தின் விஷம் கலந்த இரத்தமாயிருக்கலாம்; ஆனாலும் இவர் என்பேரில் கொண்ட ஆசையினால் என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினார் அன்றோ?' சிவகாமியின் மனோநிலையை ஒருவாறு அறிந்து கொண்ட புத்த பிக்ஷு ஆவேசம் கொண்டவராய் மேலும் கூறினார்; "கேள், சிவகாமி! உன்னைப் பெற்றவர் என்பதற்காக ஆயனரைக் காப்பாற்றினேன். உன்னை விரோதிப்பவர்களை நான் எப்படிப் பழிவாங்குவேன் என்பதற்கும் ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இந்த வாதாபியில் நீ எவ்வித அபாயமும் இன்றி நிர்ப்பயமாக இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறாயல்லவா? இதற்குக் காரணம் என்னவென்று ஒருவேளை நீ ஊகித்திருப்பாய். நீ என்னுடைய பாதுகாப்பில் இருக்கிறாய் என்று எல்லோருக்கும் தெரியுமாதலால் தான், யாருமே உன் அருகில் நெருங்குவதில்லை. இதைக் குறித்து இந்நகரத்து அரண்மனையில் ஒரு பெண்ணுக்கு அசூயை உண்டாயிற்று. அவள் பட்டத்து ராணியின் சகோதரி. விஷம புத்தியுள்ள அந்தப் பெண் என்னைத் தன்னுடைய மோக வலையில் ஆழ்த்துவதற்கு மிக்க பிரயத்தனம் செய்தாள். அது பலிக்காமல் போகவே, ஒருநாள் அவள் உன்னைக் குறிப்பிட்டு நிந்தை மொழி கூறினாள். 'அந்தக் காஞ்சி நகர்க் கலைவாணியின் அழகு எனக்கு இல்லையோ?' என்று கேட்டாள். மறுநாள் அவள் என்னை நெருங்கிய போது, அவளுடைய கையை நான் பிடித்து, என் கைவிரல் நகத்தினால் ஒரு கீறல் கீறினேன். அன்றிரவு அவள் தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். அவ்வளவுதான்; அவளுடைய மூளை கலங்கிப் பைத்தியம் பிடித்து விட்டது! அவ்வளவு பயங்கரத் தோற்றத்தை அவள் அடைந்திருந்தாள். ஒருவருமறியாமல் அவள் இந்நகரை விட்டு வெளியேறிக் காட்டிலும், மலையிலும் வெகுகாலம் அலைந்து கொண்டிருந்தாள். இப்போது அவள் காபாலிக மதத்தினரின் பலிபீடத்தில் அமர்ந்து பலி வாங்கி உண்ட உயிர் வாழ்ந்து வருகிறாள்..."

சிவகாமி பழையபடி பீதி கொண்டாள்; இந்த வெறி பிடித்த பிக்ஷு சீக்கிரம் போய்த் தொலைய மாட்டாரா என்று மனத்திற்குள் எண்ணமிட்டாள். "சிவகாமி! சில நாளைக்கு முன் அந்தக் காளி மாதாவைத் தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தது. அவள் என்ன சொன்னால் தெரியுமா? 'சுவாமிகளே! ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் உம்முடைய காதலி சிவகாமியை நீங்கள் என்னிடம் ஒப்புவித்தேயாக வேண்டும். அவளுடைய உடலைப் புசித்தால்தான் என்னுடைய பசி தீரும்!' என்றாள் பைத்தியக்காரி. அப்படி உன் உடலைப் புசிப்பதாயிருந்தால் அவளிடம் நான் கொடுத்து விடுவேன் என்று எண்ணுகிறாள்! அவளை விட நூறு மடங்கு எனக்குத் தான் பசி என்பதை அவள் அறியவில்லை! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உன்னை அப்படியே விழுங்கி விடவேண்டும் என்று எனக்குண்டாகும் பேராவலை அவள் என்ன கண்டாள்?"

திடீரென்று நாகநந்தி பிக்ஷு மலைப் பாம்பாக மாறினார். மலைப்பாம்பு வாயை அகலத் திறந்து கொண்டு, பிளந்த நாக்கை நீட்டிக் கொண்டு, தன்னை விழுங்குவதற்காக நெருங்கி வருவது போல் சிவகாமிக்குத் தோன்றியது. "ஐயோ!" என்று அலறிக் கொண்டு அவள் பின்னால் நகர்ந்தாள்; கண்களையும் இறுக மூடிக் கொண்டாள். நாகநந்தி சிரித்தார், "சிவகாமி! பயந்து விட்டாயா? கண்களைத் திறந்து பார்; புத்த பிக்ஷுதான் பேசுகிறேன்!" என்றார். சிவகாமி கண்களைத் திறந்து பார்த்தாள். சற்று முன்தான் கண்ட காட்சி வெறும் பிரமை என்பதை உணர்ந்து கொண்டாள். ஆயினும் அவளுடைய கண்களில் பீதி நிறைந்திருந்தது. நாகநந்தி எழுந்து நின்று சொன்னார்; "சிவகாமி! நான் சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்! ஒருவேளை எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீ நினைக்கிறாய் போலும்! நல்லவேளையாக எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. என் அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்ச நாள் வரையில் உன்னிடம் நான் கொண்ட காதல் நிறைவேறாமல் போனால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடும். அப்புறம் நான் என்ன செய்வேனோ தெரியாது.

"சிவகாமி நான் போய் வருகிறேன்; நான் திரும்பி வருவதற்குள் உன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு எனக்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும். உனக்காக நான் இது வரை செய்திருக்கும் தியாகங்களையெல்லாம் காட்டிலும் மகத்தான தியாகம் ஒன்றைச் செய்யப் போகிறேன். அதைப் பற்றி நான் திரும்பி வருவதற்குள் நீயே தெரிந்து கொள்வாய். அதைத் தெரிந்து கொண்ட பிறகு நீ என் பேரில் இரக்கம் கொள்ளாமலிருக்க முடியாது." என் கோரிக்கைக்கு இணங்கமலிருக்கவும் முடியாது." இவ்விதம் சொல்லி விட்டு நாகநந்தி சிவகாமியை அளவில்லாத ஆர்வம் ததும்பும் கண்களினால் சற்று நேரம் உற்றுப் பார்த்தார், சட்டென்று திரும்பி வாசற்பக்கம் சென்றார். பிக்ஷு சென்ற பிறகு சிவகாமியின் உடம்பு வெகுநேரம் வரையில் நடுங்கிக் கொண்டேயிருந்தது.



இருபத்தெட்டாம் அத்தியாயம்
விழாவும் விபரீதமும்

எத்தனையோ நூற்றாண்டு காலமாக நெடிது வளர்ந்து நீண்டு படர்ந்து ஓங்கித் தழைத்திருக்கும் ஆல விருக்ஷத்தின் காட்சி அற்புதமானது. அத்தகைய ஆலமரத்தின் விழுதுகள் காரணமாகத் தாய் மரத்தைச் சேர்ந்தாற்போல் கிளை மரங்கள் தோன்றித் தனித்த மரங்களைப் போலவே காட்சி தருவதும் உண்டு. ஸநாதன ஹிந்து மதமாகிய ஆலமரத்திலிருந்து அவ்விதம் விழுது இறங்கி வேர் விட்டுத் தனி மரங்களாகி நிற்கும் சமயங்கள் பௌத்தமும் சமணமும் ஆகும். அவ்விரு சமயங்களும் பழைய காலத்தில் பாரத நாட்டில் கலைச் செல்வம் பெருகியதற்குப் பெரிதும் காரணமாயிருந்தன.

அஜந்தா மலைப் பிராந்தியத்துக்குள்ளே மனிதர்கள் எளிதில் எட்ட முடியாத அந்தரங்கமான இடத்தில் மலையைப் பிளந்துகொண்டு பாதி மதியின் வடிவமாகப் பாய்ந்து சென்ற நதிக்கரையிலே இன்றைக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் புத்த பிக்ஷுக்கள் கருங்கற் பாறைகளைக் குடைந்து புத்த சைத்யங்களையும் விஹாரங்களையும் அமைக்கத் தொடங்கினார்கள். அது முதல் இரண்டாவது புலிகேசிச் சக்கரவர்த்தியின் காலம் வரையில், அதாவது ஏறக்குறைய அறுநூறு ஆண்டு காலம் அந்த அந்தரங்கப் பிரதேசத்தில் அற்புதமான சிற்ப சித்திரக் கலைகள் வளர்ந்து வந்தன. அழியாத கல்லில் அமைத்த சிலை வடிவங்களும், அமர வர்ணங்களில் தீட்டிய ஓவிய உருவங்களும் பல்கிவந்தன. பார்ப்போரின் கண்களின் மூலம் இருதயத்துக்குள்ளே பிரவேசித்து அளவளாவிப் பேசிக் குலாவும் தேவர்களும் தேவியர்களும் வீரர்களும் வீராங்கனைகளும் சௌந்தரிய புருஷர்களும் அழகே உருவமான நாரீமணிகளும் சைத்ரிக பிரம்மாக்களால் அங்கே சிருஷ்டிக்கப்பட்டு வந்தார்கள்.

அவ்வாறு அஜந்தாவிலே புதிய கலை சிருஷ்டி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அந்தப் பிரதேசம் கண்டிராத கோலாகலத் திருவிழா புலிகேசிச் சக்கரவர்த்தியின் ஆட்சி தொடங்கிய முப்பத்தாறாவது வருஷத்தில் அங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதுவே அந்தச் சளுக்கப் பேரரசன் ஆட்சியின் கடைசி ஆண்டுமாகும். பழைய பாரத நாட்டில் இராஜாங்கங்களும் இராஜ வம்சங்களும் மாறிய போது சமயங்களுடைய செல்வாக்கு மாறுவதும் சர்வசாதாரணமாயிருந்தது. இந்த நாளில் போலவே அந்தக் காலத்திலும் விசால நோக்கமின்றிக் குறுகிய சமயப் பற்றும் துவேஷ புத்தியும் கொண்ட மக்கள் இருக்கவே செய்தார்கள். சமரச புத்தியுடன் சகல மதங்களையும் ஒருங்கு நோக்கிக் கலைகளை வளர்த்து நாட்டிற்கே மேன்மையளித்த புரவலர்களும் அவ்வப்போது தோன்றினார்கள்.

நம்முடைய கதை நடந்த காலத்தில் வடக்கே ஹர்ஷவர்த்தனரும், தெற்கே மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் ஆகியவர்களும் அத்தகைய சமரச நோக்கம் கொண்ட பேரரசர் திலகங்களாகப் பாரத நாட்டில் விளங்கினார்கள். வாதாபிப் புலிகேசிச் சக்கரவர்த்தியும் காஞ்சிப் படையெடுப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு, நாளடைவில் அத்தகைய பெருந்தகையாரில் ஒருவரானார். அஜந்தா புத்த சங்கிராமத்துக்கு அவர் அளவில்லாத கொடைகளை அளித்துக் கலை வளர்ச்சியில் ஊக்கம் காட்டி வந்தார். இது காரணமாக, அஜந்தாவின் புத்த பிக்ஷுக்கள் அறுநூறு வருஷமாக அங்கு நடவாத காரியத்தைச் செய்யத் தீர்மானித்தார்கள். அதாவது புலிகேசிச் சக்கரவர்த்தியை அஜந்தாவுக்கு அழைத்து உபசரிக்கவும் அது சமயம் சிற்பக் கலை விழாக் கொண்டாடவும் ஏற்பாடு செய்தார்கள்.

சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்வதற்காகக் காடு மலைகளைச் செப்பனிட்டு இராஜபாட்டை போடப்பட்டது. அந்தப் பாதை வழியாக யானைகளிலும் குதிரைகளிலும் சிவிகைகளிலும் ஏறிச் சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் மந்திரி தந்திரிகளும் சேனாதிபதிகளும் மற்றும் சளுக்க சாம்ராஜ்யத்தின் பிரசித்த கவிஞர்களும் கலை நிபுணர்களும் அயல்நாடுகளிலிருந்து வந்திருந்த விசேஷ விருந்தாளிகளும் மேற்படி கலை விழாவுக்காக அஜந்தா வந்து சேர்ந்தார்கள். அவர்களனைவரும் அஜந்தா புத்த பிக்ஷுக்களால் இராஜோபசார மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்கள். வந்த விருந்தாளிகள் கும்பல் கும்பலாகப் பிரிந்து ஒவ்வொரு சைத்யத்துக்கும், விஹாரததுக்கும் சென்று ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தார்கள். நல்ல வெயில் எரித்த உச்சி வேளையிலேதான் விஹாரங்களின் உட்சுவர்களில் தீட்டியிருந்த உயிரோவியங்களைப் பார்ப்பது சாத்தியமாகையால் விருந்தாளிகள் அனைவரும் அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து மறுநாளும் மேற்படி சித்திரக் காட்சிகளைப் பார்த்து விட்டுப் போவது என்று ஏற்பாடாகியிருந்தது. சக்கரவர்த்தியின் அன்றைய முக்கிய அலுவல்கள் எல்லாம் முடிந்த பிறகு பிற்பகலில் சிரமப் பரிகாரமும் செய்து கொண்டாயிற்று.

மாலைப் பொழுது வந்தது; மேற்கே உயரமான மலைச் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைந்து கீழே கீழே போய்க் கொண்டிருந்தது. அம்மலைச் சிகரங்களின் நிழல்கள் நேரமாக ஆகக் கிழக்கு நோக்கி நீண்டு கொண்டே வந்தன. கிழக்கேயிருந்த சில உயர்ந்த சிகரங்களில் படிந்த மாலைச் சூரியனின் பொன் கிரணங்கள் மேற் சொன்ன கரிய நிழல் பூதங்களால் துரத்தப்பட்டு அதிவேகமாகக் கீழ்த்திசையை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தன. மலையை அர்த்த சந்திர வடிவமாகப் பிளந்து கொண்டு சென்ற வாதோரா நதியின் வெள்ளமானது ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் ஆங்காங்கு துள்ளி விளையாடிக் கொண்டும் அந்த விளையாட்டிலே விழுந்து எழுந்து இரைந்து கொண்டும் அதிவிரைவாகச் சென்று கொண்டிருந்தது. சரிவான பாறைச் சுவர்களிலே கண்ணுக்கெட்டிய தூரம் பாரிஜாத மரங்கள் இலையும் பூவும் மொட்டுக்களுமாய்க் குலுங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் இடையிடையே சரக்கொன்றை மரங்கள் கண்ணைப் பறித்த பொன்னிறப் பூங்கொத்துக்களைச் சரம் சரமாகத் தொங்க விட்டுக் கொண்டு பரந்து நின்றன. நதி ஓரத்துப் பாறை ஒன்றில் இரண்டு கம்பீர ஆகிருதியுள்ள புருஷர்கள் அமர்ந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். சற்று அருகில் நெருங்கிப் பார்த்தோமானால் அவர்கள் புலிகேசிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி பிக்ஷுவுந்தான் என்பதை உடனே தெரிந்து கொள்வோம்.

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு எந்த வாதோரா நதிக்கரையின் பாறையின் மேல் உட்கார்ந்து அண்ணனும் தம்பியும் தங்கள் வருங்காலப் பகற்கனவுகளைப் பற்றி சம்பாஷித்தார்களோ, வாதாபி சிம்மாசனத்தைக் கைப்பற்றிச் சளுக்க ராஜ்யத்தை மகோந்நத நிலைக்குக் கொண்டு வருவது பற்றிப் பற்பல திட்டங்களைப் போட்டார்களோ, அதே பாறையில் இன்று அவர்கள் உட்கார்ந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அன்றைக்கும் இன்றைக்கும் அவர்களுடைய தோற்றத்திலேயும் சம்பாஷணையின் போக்கிலேயும் மிக்க வித்தியாசம் இருந்தது. பிராயத்தின் முதிர்ச்சியோடு கூட அவர்களுடைய வெளி உலக அனுபவங்களும் அக உலக அனுபவங்களும் அவர்கள் ஈடுபட்ட கோரமான இருதயப் போராட்டங்களும் ஆசாபாசங்களும் கோபதாபங்களும் சேர்ந்து, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அதே நதியில் பிரதிபலித்த பால்வடியும் இளம் முகங்களைக் கோடுகளும் சுருக்கங்களும் விழுந்த கொடூர முகங்களாகச் செய்திருந்தன.

முக்கியமாக, நாகநந்தி பிக்ஷுவின் முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. இரத்தம் கசிவது போல் சிவந்திருந்த கண்களில் அடிக்கடி கோபாக்னியின் ஜுவாலை மின்னலைப் போல் பிரகாசித்தது. அவர் கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் நெருப்பைக் கக்கிக் கொண்டு பாயும் அக்னி யாஸ்திரத்தைப் போல் புறப்பட்டுச் சீறிக் கொண்டு பாய்ந்தன. "ஆ! தம்பி! என்னுடைய விருப்பம் என்னவென்றா கேட்கிறாய்; சொல்லட்டுமா? இந்தக் கணத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு இந்த அஜந்தா மலையானது அப்படியே அதல பாதாளத்தில் அமிழ்ந்து விட வேண்டுமென்பது என் விருப்பம். ஆயிரம் இடிகள் சேர்ந்தாற்போல் விழுந்து இங்குள்ள சைத்யங்களையும் விஹாரங்களையும், இங்கே வசிக்கும் பிக்ஷுக்களையும், உன்னையும் உன் பரிவாரங்களையும் என்னையும் அடியோடு அழித்து நாசமாக்க வேண்டுமென்பது என் விருப்பம்!" என்றார் நாகநந்தி.

இதைக் கேட்ட புலிகேசி, சாவதானமாக, "அடிகளே! அஜந்தாவுக்கு வந்தது உண்மையிலேயே பலன் தந்து விட்டது. எனக்குச் சொல்ல முடியாத சந்தோஷாமாயிருக்கிறது. கொஞ்ச காலமாகத் தாங்கள் ரொம்பவும் பரம சாதுவாக மாறிக் கொண்டு வந்தீர்கள். இன்றுதான் பழைய நாகநந்தி பிக்ஷுவாகக் காட்சி அளிக்கிறீர்கள்!" என்று சொல்லிப் புன்னகை புரிந்தார். "ஆம், தம்பி, ஆம்! இன்று பழைய நாகநந்தி ஆகியிருக்கிறேன். அதன் பலனை நீயே அனுபவிக்கப் போகிறாய் ஜாக்கிரதை!" என்று பிக்ஷு நாக சர்ப்பத்தைப் போல் சீறினார்.

"அண்ணா! என்னை என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய்?" என்று புலிகேசி கேட்டார். "இன்று இராத்திரி நீ தூங்கும் போது இந்த விஷக் கத்தியை உன் மார்பிலே பாய்ச்சி உன்னைக் கொன்று விடப் போகிறேன்..." புலிகேசி "ஹா ஹா ஹா" என்று சிரித்தார். பிறகு, "அப்புறம் என்ன செய்வீர்கள்? அதாவது என் பிரேதத்தை என்ன செய்வதாக உத்தேசம்?" என்று பரிகாசக் குரலில் வினவினார். "இந்த நதியில் கொண்டு வந்து போட்டு விடுவேன்." "அப்புறம்? கேட்கிறவர்களுக்கு என்ன சொல்லுவீர்கள்?" "ஒருவரும் கேட்க மாட்டார்கள்!" "ஏன் கேட்க மாட்டார்கள்? அஜந்தாவுக்கு வந்த சக்கரவர்த்தி இரவுக்கிரவே எப்படி மறைந்தார் என்று சளுக்க ராஜ்யத்தின் பிரஜைகள் கேட்க மாட்டார்களா?" "கேட்கமாட்டார்கள்! சக்கரவர்த்தி மறைந்தது அவர்களுக்குத் தெரிந்தால் அல்லவா கேட்பார்கள்? ஒருவருக்கும் அது தெரியப் போவதில்லை." "அது எப்படி?"

"ஒரு சமயம் நான் உன் உடைகளைத் தரித்து அடிபட்டுச் சித்திரவதைக்குள்ளாகி உன் உயிரைக் காப்பாற்றினேன். இன்னொரு சமயம் நான் உன்னைப் போல் வேஷம் தரித்துப் போர்க்களத்தில் நின்று மகேந்திரனோடு போராடி அவன் மீது விஷக் கத்தியை எறிந்து கொன்றேன். அதே உருவப் பொருத்தம் இப்போதும் எனக்குத் துணை செய்யும். நீ மறைந்ததையே ஜனங்கள் அறிய மாட்டார்கள். நாகநந்தி பிக்ஷு மறைந்ததைப் பற்றி யாரும் கவனிக்க மாட்டார்கள். நியாயமாக இந்தச் சளுக்க ராஜ்யம் எனக்கு உரியது. நான் மனமார இஷ்டப்பட்டு உனக்கு இந்தச் சாம்ராஜ்யத்தைக் கொடுத்தேன். சென்ற முப்பத்தைந்து வருஷமாக உன்னுடைய க்ஷேமத்தையும் மேன்மையையும் தவிர வேறு எண்ணமே இல்லாமலிருந்தேன். ஆனால், நெஞ்சில் ஈவிரக்கமற்றவனும், சகோதர வாஞ்சையற்றவனும் நன்றியற்ற கிராதகனுமான நீ என்னை இன்று பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினாய்! ஆ! இந்தப் பூமி பிளந்து உன்னை இன்னும் விழுங்கவில்லையே என்பதை நினைத்துப் பார்த்தால் எனக்குப் பரம ஆச்சரியமாயிருக்கிறது!"

"அண்ணா! அண்ணா! நீ என்ன சொல்கிறாய்? என்னை இப்படியெல்லாம் சபிக்க உனக்கு எப்படி மனம் வருகிறது? உன்னை என்ன அவமானப்படுத்தி விட்டேன்?" "இன்னும் என்ன அவமானம் செய்ய வேண்டும்? சிவகாமி உன் காலில் விழுந்து மன்னிப்புக் கோரியதாக அழியாத வர்ணத்தில் சித்திரம் எழுதச் செய்ததைக் காட்டிலும் வேறு என்ன அவமானம் எனக்கு வேண்டும்? இதற்காகவா என்னை நீ இங்கே அழைத்து வந்தாய்? இதற்காகவா இந்தக் கலைவிழா நடத்தினாய்? ஆகா! துஷ்ட மிருகமே! ஒரு கலையைக் கொண்டு இன்னொரு கலையை அவமானப்படுத்திய உனக்காக எரிவாய் நகரம் காத்திருக்கிறது, பார்!"

"அண்ணா! உனக்கு என்ன வந்து விட்டது! அந்தப் பல்லவ நாட்டு நடனக்காரி உன்னை என்ன செய்து விட்டாள்? உடல் இரண்டும் உயிர் ஒன்றுமாக இருந்த சகோதரர்களை இப்படிப் பிரிப்பதற்கு அவளிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது? அண்ணா! அண்ணா! என் முகத்தைப் பார்த்துச் சொல்லு! நமது முப்பத்தைந்து வருஷத்து அன்யோன்ய சிநேகத்தை நினைத்துக் கொண்டு சொல்லு! அன்றொரு நாள் இதே பாறை மீது உட்கார்ந்து நாம் கட்டிய ஆகாசக் கோட்டைகளையும், அவற்றையெல்லாம் பெரும்பாலும் காரியத்தில் நிறைவேற்றி வைத்ததையும் எண்ணிப் பார்த்துச் சொல்லு!.... இந்த தெய்வீக வாதோர நதியின் சாட்சியாக, இந்தப் பர்வத சிகரங்கள் சாட்சியாக, ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாகச் சொல்லு! என்னைக் காட்டிலும் உனக்கு அந்தக் காஞ்சி நகரத்துப் பெண் மேலாகப் போய் விட்டாளா? அவளுக்காகவா இப்படியெல்லாம் நீ எனக்குச் சாபம் கொடுக்கிறாய்?"

முன்னைக் காட்டிலும் கடினமான, குரோதம் நிறைந்த குரலிலே புத்த பிக்ஷு கூறினார்; "ஆமாம், ஆமாம்! புத்த பகவானுடைய பத்ம பாதங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். சங்கத்தின் மீதும் தர்மத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். உன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு எனக்குச் சிவகாமி மேலானவள்தான்! நீயும் உன் சாம்ராஜ்யமும் உன் புத்திரமித்திரர்களும் அவளுடைய கால் தூசுக்குச் சமமாக மாட்டீர்கள். அவளை அவமானப்படுத்திய நீயும் உன் சந்ததிகளும் சர்வ நாசமடையப் போகிறீர்கள்! அந்தச் சரணாகதி சித்திரத்தை எழுதிய சித்திரக் கலைஞனின் கதி என்ன ஆயிற்று என்று உனக்குத் தெரியுமா?" "அடிகளே! அந்தத் துர்ப்பாக்கியனைத் தாங்கள் என்ன செய்து விட்டீர்கள்?" புத்த பிக்ஷு பயங்கரமான சிரிப்பு ஒன்று சிரித்தார். "பார்த்துக் கொண்டேயிரு! இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் யாராவது வந்து சொல்வார்கள்!"

"அண்ணா! ஒன்று நான் தெரிந்து கொண்டேன். இளம் பிராயத்திலிருந்தே பிரம்மசரியத்தையும் பிக்ஷு விரதத்தையும் மேற்கொள்வது ரொம்பத் தவறானது. இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்து விட்டுத் தொலைத்த பிறகுதான் சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும். வாலிபத்திலேயே வாழ்க்கை வைராக்கியம் கொள்கிறவர்கள் உன்னைப் போல்தான் பிற்காலத்தில் யாராவது ஒரு மாயக்காரியின் மோக வலையில் விழுந்து பைத்தியமாகி விடுகிறார்கள்!" "புலிகேசி! இத்தனை நேரம் பொறுத்திருந்தேன். இனிமேல் சிவகாமியைப் பற்றி நீ ஒரு வார்த்தை சொன்னாலும் என்னால் பொறுக்க முடியாது." "அடிகளே! சிவகாமி தேவியிடம் தாங்கள் இவ்வளவு பரிவு காட்டுகிறீர்களே? அவளுடைய கௌரவத்தை இவ்வளவு தூரம் காப்பாற்றுகிறீர்களே? தங்களிடம் சிவகாமி தேவிக்கு இவ்வளவு தூரம் பரிவு இருக்கிறதா? தாங்கள் அவளிடம் வைத்திருக்கும் அபிமானத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அவளுக்கு உண்டா?..."

புலிகேசி சக்கரவர்த்தியின் மேற்படி கேள்வி புத்த பிக்ஷுவின் உள்ளத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அறுத்தது என்பதை அவருடைய முகக் குறி காட்டியது. அந்தச் சொல்ல முடியாத வேதனையை வெகு சீக்கிரத்திலேயே நாகநந்தி சமாளித்துக் கொண்டு திடமான குரலில், "அந்தக் கேள்வி கேட்க உனக்கு யாதொரு பாத்தியதையும் இல்லை, ஆனாலும் சொல்லுகிறேன். சிவகாமி உன்னைப் போல் அவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவள் அல்ல. அவளுக்கு என் பேரில் பிரியம் இருக்கத்தான் செய்கிறது" என்றார். "அண்ணா? நீ இப்படி ஏமாறக் கூடியவன் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை!" "தம்பி! நான் ஏமாறவில்லை; நாம் அஜந்தா யாத்திரை கிளம்பிய அன்று இரவு சிவகாமி என் உயிரைக் காப்பாற்றினாள்." "அது என்ன? உன் உயிருக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது, சிவகாமி காப்பாற்றுவதற்கு?" "இந்த விஷக் கத்தியால் என்னை நானே குத்திக் கொள்ளப் போனேன். சிவகாமி என் கையைப் பிடித்து என்னை காப்பாற்றினாள்" என்று புத்த பிக்ஷு கூறிய போது, அவரது அகக் கண்முன்னால் அந்தக் காட்சி அப்படியே தோன்றியது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பிற்று. புலிகேசி புன்னகை புரிந்து, "ஐயோ! மகா மேதாவியான உன்னுடைய புத்தியா இப்படி மாறிப் போய் விட்டது? சிவகாமி எதற்காக உன் உயிரைக் காப்பாற்றினாள், தெரியுமா? அவளுடைய காதலன் மாமல்லனுடைய கையினால் நீ சாக வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மூடப்பெண் இன்னமும் அப்படிக் கனவு கண்டு கொண்டிருக்கிறாள்!" என்றார்.

மேலே விவரித்த அண்ணன் தம்பி சம்பாஷணை நேயர்களுக்கு நன்கு விளங்கும் பொருட்டு அன்று மத்தியானம் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்க வேண்டும். புலிகேசிச் சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் சீன யாத்திரிகரும் மற்றும் சாம்ராஜ்யத்தின் பிரமுகர்களும் ஒரு கும்பலாக அஜந்தாவின் அதிசயச் சித்திரங்களைப் பார்வையிட்டுக் கொண்டு வந்தார்கள். சைத்தியங்கள், விஹாரங்கள் இவற்றின் உள்சுவர்களிலே புத்த பகவானுடைய தெய்வீக வாழ்க்கை வரலாறும், அவருடைய பூர்வ அவதாரங்களின் சம்பவங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன. வெளித் தாழ்வாரச் சுவர்களிலோ அந்தக் காலத்துச் சமூக வாழ்க்கைச் சித்திரங்கள் சில காணப்பட்டன. அப்படிப்பட்ட நவீன வாழ்க்கைச் சித்திரங்களில் புலிகேசி சக்கரவர்த்தியின் வாழ்க்கை சம்பந்தமான இரு முக்கிய சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று, புலிகேசிச் சக்கரவர்த்தி இராஜ சபையில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்க, பாரஸீக மன்னனிடமிருந்து வந்த தூதர்கள் சக்கரவர்த்திக்குக் காணிக்கைகள் சமர்ப்பித்த காட்சியாகும்.

மேற்படி காட்சி எல்லாருக்கும் மிக்க குதூகலத்தை அளித்ததில் வியப்பொன்றுமில்லை. ஆனால், மற்றொரு சித்திரம் அப்படிக் குதூகலத்தை உண்டாக்குவதற்குப் பதிலாக அனைவருக்கும் ஒருவித அசந்துஷ்டியை உண்டாக்கிப் பின்னால் பெரும் விபரீதம் நேர்வதற்கும் காரணமாயிற்று. அந்த விபரீதச் சித்திரம், புலிகேசிச் சக்கரவர்த்தியின் பாதங்களில் ஒரு நடனக் கலைவாணி தலையை வைத்து வணங்கி மன்னிப்புக் கோருவது போல் அமைந்த சித்திரந்தான். இதைத் தீட்டிய ஓவியக் கலைஞன் சிறந்த மேதாவி என்பதில் சந்தேகமில்லை. புலிகேசியின் முகத்தையும் தோற்றத்தையும் அமைப்பதில் அவன் கற்பனாசக்தியின் உதவியைப் பயன்படுத்தியிருந்தான். அந்தச் சித்திரத்தில் புலிகேசி துஷ்ட நிக்கிரஹம் செய்வதற்கு முனைந்திருக்கும் தேவேந்திரனையொத்துக் கோப சௌந்தரியம் பொருந்தி விளங்கினான். கீழே கிடந்த பெண்ணின் தோற்றத்தில் அளவில்லாத சோகத்தையும் மன்றாடி மன்னிப்புக் கோரும் பாவத்தையும் சித்திரக் கலைஞன் வெகு அற்புதமாக வரைந்திருந்தான். பக்கத்திலே நின்ற சேடிப் பெண்களின் பயந்த, இரக்கம் வாய்ந்த தோற்றத்தைக் கொண்டு அந்த நடனப் பெண்ணின் சரணாகதியைப் பன்மடங்கு பரிதாபமுள்ளதாகச் செய்திருந்தான்.

இவ்வளவுக்கும் பின்னால் சற்றுத் தூரத்திலிருந்து புத்த பிக்ஷு ஒருவர் கவலை ததும்பிய முகத் தோற்றத்துடனே விரைந்து வருவதையும் காட்டியிருந்தான். அந்தப் பிக்ஷுவைப் பார்த்தவுடனேயே, அவர் மேற்படி நடனப் பெண்ணை இராஜ தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே விரைந்து வருகிறார் என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உதயமாகும்படி இருந்தது. சித்திரங்களை விளக்கிக் கூறி வந்தவர் மேற்படி சித்திரத்தின் தாத்பரியத்தைப் பற்றிச் சில வார்த்தகள் சொன்னவுடனேயே அங்கிருந்தவர்கள் அனைவரும் ஏக காலத்தில் நாகநந்தி பிக்ஷுவை நோக்கினார்கள். ஒரு கணநேரம் நாகநந்தியின் முகம் படம் எடுத்த பாம்பைப் போல் காட்சி அளித்தது. அடுத்தகணம் நாகநந்தி தம்மை நூறு கண்கள் கூர்ந்து நோக்குகின்றன என்பதை உணர்ந்தார். உடனே அவருடைய முகபாவமும் முற்றிலும் மாறி அதில் புன்னகை தோன்றியது. "அற்புதம்! அற்புதம்! இந்தச் சித்திரத்துக்கு இணையான சித்திரம் உலகத்திலேயே இருக்க முடியாது! என்ன பாவம்? என்ன கற்பனை இதைத் தீட்டிய ஓவியப் பிரம்மா யார்? அவருக்குத் தக்க வெகுமதி அளிக்க வேண்டும்!" என்று நாகநந்தி கூறினார்.



இருபத்தொன்பதாம் அத்தியாயம்
தேசத்துரோகி

நதிக்கரைப் பாறையில் புலிகேசிக்கும் புத்த பிக்ஷுவுக்கும் நடந்த சம்பாஷணை மேலும் மேலும் குரோதம் நிறைந்ததாகிக் கொண்டு வந்தது. சிவகாமியின் விஷயத்தில் நாகநந்திக்கு ஏற்பட்டிருந்த மதிமயக்கத்தைப் போக்கப் புலிகேசிச் சக்கரவர்த்தி முயன்றார். ஆனால் இது சம்பந்தமாகச் சக்கரவர்த்தி சொன்னதெல்லாம் நாகநந்தியின் குரோதத்தை இன்னும் அதிகமாக்கி வந்தது. சிவகாமியைப் பற்றிப் புலிகேசி குறைவுபடுத்திப் பேசப் பேசப் புத்த பிக்ஷு ஆவேசத்துடன் அவளை உயர்த்திப் பேசலானார். சகோதரர்களுக்கிடையில் மேற்படி விவாதம் ரொம்பவும் காரமடைந்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளுவதற்கும் ஆயத்தமாகி விட்ட சமயத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குச் சிறிது தூரத்தில் நடந்த ஒரு கோரமான சம்பவம் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது.

கேட்பவர்களின் இருதயம் நின்று போகும்படியான பயங்கரக் குரலில் "ஐயோ! ஐயோ!" என்று அலறிக் கொண்டு ஒரு மனிதன் ஓடி வந்து வாதோரா நதியின் செங்குத்தான கரையின் மீது ஒருகண நேரம் நின்றான். மறுபடியும் "ஐயோ!" என்று அலறி விட்டு விரைந்தோடிய நதிப் பிரவாகத்தில் குதித்தான். குதித்தவுடனே தண்ணீரில் மூழ்கினான். சில வினாடி நேரத்துக்கெல்லாம் அவன் குதித்த இடத்துக்குச் சற்றுத் தூரம் கிழக்கே அவனுடைய தலை மட்டும் மேலே எழுந்தது. பாறையே பிளந்து போகும்படியான ஒரு பயங்கரக் கூச்சல் கேட்டது. மறுபடியும் தண்ணீரில் முழுகியவன் அடியோடு முழுகியவன்தான். அவன் முழுகியதற்கு அடையாளம் கூட அங்கே காணப்படவில்லை. மலை வீழ் நதியான வாதோரா சலசல சப்தத்துடன் விரைந்து பாய்ந்து கொண்டிருந்தது.

சில வினாடி நேரத்துக்குள் நடந்து முடிந்து விட்ட மேற்படி சம்பவத்தைப் புலிகேசிச் சக்கரவர்த்தி கண்கொட்டாத பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். நதிப் பிரவாகத்தில் விழுந்த மனிதன் மேலே எழும்பி அலறி விட்டு மறுபடியும் நீரில் மூழ்கிய போது புலிகேசியின் இருதயத்தை யாரோ இரும்புக் கிடுக்கியினால் இறுக்கிப் பிடித்தாற்போலிருந்தது. சற்று நேரம் அந்த மனிதன் முழுகிய இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் புலிகேசி திரும்பி நாகநந்தியைப் பார்த்தார். பிக்ஷுவின் முகத்தில் அப்போது தோன்றிய புன்னகை புலிகேசியின் உடம்பைச் சிலிர்க்கச் செய்தது. "அண்ணா! அந்தச் சைத்திரிகனை நீ என்ன செய்து விட்டாய்?" என்று புலிகேசி கேட்டதும், புத்த பிக்ஷு ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்து விட்டுச் சொன்னார்: "அவனையா? நானா? வேறொன்றும் செய்யவில்லை! அப்பேர்ப்பட்ட அற்புதமான சித்திரத்தை வரைந்தவனுக்கு ஆசி கூறினேன். என்னுடைய ஆசியைப் பெறுவதற்காக அவன் தலையைக் குனிந்த போது அவனுடைய பின் கழுத்தில் இந்தச் சுண்டு விரல் நகத்தினால் ஒரு கீறல் கீறினேன். இந்த நகத்திலுள்ள விஷம் அவனுடைய உடம்பின் இரத்தத்தில் கலந்ததும் அவனுக்கு எரிச்சல் எடுத்திருக்கும். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் உடம்பு முழுவதும் அக்கினியால் தகிக்கப்படுவது போல் இருந்திருக்கும். அவனுடைய மூளையும் கொதிப்பெடுத்திருக்கும். உடம்பையும் மூளையையும் குளிரச் செய்வதற்காகவே அப்படி விரைந்து ஓடி வந்து நதியில் குதித்தான். அவனுடைய உடம்பும் மூளையும் குளிர்ந்ததோடு உயிரும் குளிர்ந்து போய் விட்டது!...." "ஐயோ! அண்ணா! நீ எப்போது இத்தகைய கொடூர ராட்சஸன் ஆனாய்? கருணையே வடிவமான புத்த பகவானுடைய சங்கத்தில் சேர்ந்து காவி வஸ்திரம் அணிந்து கொண்டு இப்படிப்பட்ட கோர கிருத்தியங்களைச் செய்ய எப்படி உன் மனம் துணிகிறது?" என்று புலிகேசி கேட்டார்.

நாகநந்தி புலிகேசியை உற்றுநோக்கிச் சீறலுடன் கூறினார்; "ஓஹோ! நான் கருணையற்ற ராட்சஸன் என்பது இப்போது தான் தெரிகிறதோ? உனக்காகவும் உன் இராஜ்யத்துக்காகவும் இதை விட ஆயிரம் மடங்கு கோர கிருத்தியங்களை நான் செய்யவில்லையா? அப்போதெல்லாம் நீ ஏன் எனக்குத் தர்மோபதேசம் செய்ய முன்வரவில்லை? காஞ்சி நகரத்துக் குடிதண்ணீரில் விஷத்தைக் கலந்து அந்நகர மக்களையெல்லாம் கொன்று விடுவதாக நான் சொன்ன போது நீ சந்தோஷத்துடன் சம்மதித்ததை மறந்து விட்டாயா?..." "ஆம், ஆம்! அதையெல்லாம் நான் மறக்கவில்லை; ஆனால், அது ஒரு காலம்!" என்று கூறிப் புலிகேசிச் சக்கரவர்த்தி பெருமூச்சு விட்டார். சற்று நேரம் நதியின் பிரவாகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நாகநந்தியின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

"அண்ணா! நீ எனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நான் மறந்து விடவில்லை. இந்த உயிர் உன்னுடையது, ராஜ்யம் உன்னுடையது. நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் இத்தனை காலமும் நான் பிரதியொன்றும் செய்யவில்லை. இப்போது செய்ய உத்தேசித்திருக்கிறேன். வாதாபி சிம்மாசனத்தில் வீற்றிருந்து சாம்ராஜ்யம் ஆளும் சுகத்தை முப்பத்தைந்து வருஷ காலம் நான் அனுபவித்து விட்டேன். எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. சாம்ராஜ்யத்தின் பொறுப்பையும் சிம்மாசனத்தின் சுகத்தையும் இனிமேல் நீ ஏற்றுக்கொள். இத்தனை காலமும் நீ அணிந்திருந்த காவி வஸ்திரத்தை நான் அணிந்து கொண்டு இந்த அஜந்தா சங்கிராமத்திலேயே மீதியுள்ள என் வாழ்நாளைக் கழித்து விடுகிறேன். பிரகிருதிதேவியும் கலைத்தேவியும் பூரண சௌந்தரியத்துடன் கொலு வீற்றிருக்கும் இந்த அஜந்தா மலையில் நீ உன்னுடைய இளம்பிராயத்தைக் கழித்தாய். நான் என்னுடைய முதுமைப் பிராயத்தை இவ்விடத்தில் கழிக்கிறேன். சாம்ராஜ்ய பாரத்தை, இனிமேல் நீ ஏற்றுக் கொண்டு நடத்து..."

இவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்தி சொல்லி வந்த போது, அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் உண்மையான உள்ளத்திலிருந்து வருவது என்பதைப் புத்த பிக்ஷு தெரிந்து கொண்டார். இத்தனை நேரமும் குரோதம் கொதித்துக் கொண்டிருந்த அவருடைய முகம் இப்போது மலர்ந்தது. புலிகேசி பேச்சை இடையில் நிறுத்தி மௌனமாயிருந்த சிறிது நேரத்தில் பிக்ஷுவின் உள்ளம் வருங்காலத்தைப் பற்றிய எத்தனையோ இன்பக் கனவுகளைக் கண்டது. அந்தக் கனவுகளின் அறிகுறி ஒருவாறு அவருடைய முகத்திலே காணப்பட்டது.

"அண்ணா! என்ன சொல்லுகிறாய்? உனக்குச் சம்மதந்தானே?" என்று புலிகேசி கேட்ட போது, அவருடைய வார்த்தையில் புத்த பிக்ஷுவுக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டிருந்தபோதிலும் இன்னும் நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, "தம்பி! இப்போது நீ சொன்ன வார்த்தையெல்லாம் உண்மையா? அலலது காவி வஸ்திரம் தரித்த பிக்ஷுதானே என்று என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்டார். "அண்ணா! நமது பாட்டனார் சத்யாச்ரயப் புலிகேசியின் திருநாமத்தின் மீது ஆணை வைத்துச் சொல்லுகிறேன் நான் கூறியதெல்லாம் உண்மை. இதோ இந்தக் கணமே அதை மெய்ப்பிக்கச் சித்தமாயிருக்கிறேன். இன்றைக்கே நான் பிக்ஷு விரதம் மேற்கொள்கிறேன். ஆசாரிய பிக்ஷுவினிடம் சொல்லி உனக்கும் விரதத்திலிருந்து விடுதலை வாங்கித் தருகிறேன். ஆனால், இதற்கெல்லாம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது. அந்தக் காஞ்சி நகரத்து நாட்டியப் பெண்ணை நீ தியாகம் செய்து விடவேண்டும்."

பெண் புலியின் மீது வேலை எரிந்து கொன்ற வேடனை ஆண் புலி எப்படிப் பார்க்குமோ, அப்படி நாகநந்தி புலிகேசியைப் பார்த்தார்! 'நடனப் பெண்ணின் சரணாகதி' சித்திரத்தை எழுதிய கலைஞனுக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே கதி ஒருவேளை புலிகேசிக்கும் நேர்ந்திருக்கக்கூடும். ஆனால், அச்சமயம் வாதோரா நதியின் மறுகரை வழியாக ஏழெட்டுப் பேர் விரைவாய் வந்து கொண்டிருந்தது தெரிந்தது; அந்த ஏழெட்டுப் பேரும் சாமான்ய மனிதர்கள் அல்ல; மந்திரிகள், தளபதிகள் முதலியோர். ஏதோ முக்கியமான, அவசரமான விஷயத்தைச் சக்கரவர்த்தியிடம் தெரிவிப்பதற்காக அவரைத் தேடி வருவதாகவும் தோன்றியது. இதைக் கவனித்த பிக்ஷு தம் உள்ளத்தில் பொங்கி வந்த குரோதத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு, "ஆ! உன்னுடைய சாம்ராஜ்ய தானத்தில் ஏதோ ஒரு இழிவான சூழ்ச்சி இருக்கிறது என்று சந்தேகித்தேன், அது உண்மையாயிற்று!" என்றார்.

"அண்ணா! நன்றாக யோசித்துச் சொல்லு! சத்யாச்ரயப் புலிகேசி வீற்றிருந்த சளுக்க குலத்துச் சிம்மாசனத்தில் ஒரு சிற்பியின் மகள் ஏறலாமா? அதற்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க முடியாது. உனக்கும் எனக்கும் மன வேற்றுமை உண்டுபண்ணிய அந்த மோகினிப் பிசாசைத் துரத்தி விட்டு, வாதாபி சிம்மாசனத்தில் ஏறி ஆயுள் உள்ள வரையில் இராஜ்யபாரத்தை நடத்து!" என்று புலிகேசி உருக்கமான குரலில் கூறினார். நாகநந்தியோ பழையபடி நாக ஸர்ப்பத்தைப் போல் சீறிக் கொண்டு, "சண்டாளா! பாதகா! நீ நாசமடைவாய்! உன் தலைநகரம் எரிந்து சாம்பலாகும்! உன் சாம்ராஜ்யம் சின்னா பின்னமாகி அழியும்! தேவேந்திரனுடைய பதவி கிடைப்பதாயிருந்தாலும் சிவகாமியை என்னால் தியாகம் செய்ய முடியாது. கேவலம் இந்தச் சளுக்க ராஜ்யத்துக்காகவா அவளைத் தியாகம் செய்யச் சொல்கிறாய்? ஒருநாளும் இல்லை! இப்படி நன்றிகெட்ட வஞ்சகத்துடன் என்னிடம் நடந்து கொண்டதற்குக் கூடிய சீக்கிரம் நீ பலன் அனுபவிக்கப் போகிறாய்! உனக்கும் எனக்கும் இந்த வினாடியோடு எல்லாவித பந்தமும் அற்றுவிட்டது. இனி உன் முகத்திலேயே நான் விழிப்பதில்லை. இதோ நான் போகிறேன், போய்ச் சிவகாமியையும் அழைத்துக் கொண்டு உன் இராஜ்யத்தை விட்டே போய் விடுகிறேன். அதோ வருகிறார்கள் பார்! அவர்கள் உன்னுடைய விநாசச் செய்தியைக் கொண்டு வருகிறார்கள்!" என்று கூறினார்.

இப்படி நெருப்பைக் கக்கும் வார்த்தைகளை நாகநந்தி கூறிக் கொண்டிருக்கும் போது நதியின் மறு கரையோடு விரைந்து வந்தவர்கள் மேற்கே சற்றுத் தூரத்திலிருந்த மூங்கில் மரப்பாலத்தின் வழியாக நதியைக் கடந்து சக்கரவர்த்தியும் பிக்ஷுவும் இருந்த பாறையை அணுகினார்கள். நாகநந்தி தமது சொல்லைக் காரியத்தில் நடத்திவைக்கும் பொருட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவர், புனராலோசனை செய்து தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் போலத் தயங்கி நின்றார். வருகிறவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள் என நிச்சயமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் அவ்விதம் நின்றார் போலும். வந்தவர்கள் எல்லாருடைய முகத்திலும் கவலையும் பீதியும் குடிகொண்டிருப்பதைப் பார்த்த சக்கரவர்த்தி மிக்க வியப்படைந்து "எல்லோரும் கும்பலாக வந்திருக்கிறீர்களே? என்ன விசேஷம்? ஏதாவது முக்கியமான செய்தி உண்டா?" என்று கேட்டார்.

"ஆம், பிரபு! மிகவும் முக்கியமான செய்திதான். ஆனால் நம்பவே முடியாத செய்தி; சொல்லுவதற்கும் தயக்கமாயிருக்கிறது!" என்று சளுக்க சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரி கூறினார். "அதென்ன அவ்வளவு முக்கியமான செய்தி? எங்கிருந்து யார் கொண்டு வந்தார்கள்! ஏன் எல்லோரும் இப்படிப் பயந்து சாகிறீர்கள்? யாராவது பகைவர்கள் சளுக்க சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறார்களா? சீக்கிரம் சொல்லுங்கள்!" "மகாப் பிரபு! தாங்களே சொல்லி விட்டீர்கள்!" "இது என்ன பிதற்றல்? நான் என்ன சொன்னேன்!" "பகைவர்கள் சளுக்க ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருவதாகச் சொன்னீர்களே." "அதுவா உண்மை?" "ஆம், சக்கரவர்த்தி!" "அதிசயமான செய்திதான்; யார் அந்தச் சத்துரு? வடக்கே ஹர்ஷராயிருக்க முடியாது; அவரிடமிருந்து சமீபத்திலே சிநேகம் நிறைந்த அழைப்புக் கடிதம் வந்திருக்கிறது. மற்றபடி மேற்கேயும் கிழக்கேயும் சத்துருக்கள் இல்லை. வந்தால் தெற்கேயிருந்துதான் வர வேண்டும் யார், காஞ்சி மாமல்லன் படையெடுத்து வருகிறானா?" "அப்படித்தான் தகவல், பிரபு!"

"ஒருநாளும் நான் நம்பமாட்டேன்; அப்படியேயிருந்தாலும் எதற்காக நீங்கள் இப்படிக் கலக்கமடைந்திருக்கிறீர்கள்? என்ன முழுகிப் போய் விட்டது?" "பெருமானே! நம்முடைய சைனியத்தில் பெரும் பகுதி நர்மதைக் கரையில் இருக்கிறது. இன்னொரு பெரும் பகுதி வேங்கியில் இருக்கிறது..." என்று பிரதம மந்திரி தயக்கத்துடன் கூறினார். "அதனால் என்ன? மாமல்லன் காஞ்சியிலிருந்து வருவதற்குள் நம்முடைய சைனியங்களை வாதாபிக்குக் கொண்டு வர முடியாதா?" "மாமல்லன் காஞ்சியில் இல்லை பிரபு! பல்லவ சைனியம் வடபெண்ணையைக் கடந்து ஒரு வாரம் ஆகிறது. இப்போது துங்கபத்திரையை நெருங்கியிருக்க வேண்டும்!" "இது என்ன விந்தை? செய்தி யார் கொண்டு வந்தது?"

"இதோ இவர்கள் வாதாபியிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இரவு பகல் எங்கும் தங்காமல் விரைந்து வந்திருக்கிறார்கள்!" என்று பிரதம மந்திரி சொல்லி இரு தூதர்களை முன்னால் நிறுத்தினார். "உங்களை யார் அனுப்பினார்கள்? ஓலை ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று புலிகேசி திகைப்புடன் கேட்டார். "இல்லை, பெருமானே! ஓலை எழுதுவதற்குக் கூட நேரமில்லை. வாதாபிக் கோட்டைத் தலைவர் வாய்மொழியாகச் செய்தி சொல்லி அனுப்பினார். நாங்கள் ஆறு பேர் ஐந்து நாளைக்கு முன்பு கிளம்பினோம். வழியில் நாலு பேர் விழுந்து விட்டார்கள்; இரண்டு பேர்தான் மிஞ்சி வந்து சேர்ந்தோம்."

"மந்திரி! இவர்கள் பேச்சு உண்மையாயிருக்க முடியுமா? மாமல்லன் இலங்கைப் படையெடுப்புக்காகக் கப்பல்கள் கட்டிக் கொண்டிருப்பதாகவல்லவா நாம் கேள்விப்பட்டோ ம்?" "ஆம், பிரபு! நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இவர்கள் வாதாபிக் கோட்டைத் தலைவரின் இலச்சினையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்னால் விவரமான ஓலையோடு வேறு தூதர்களும் வருகிறார்களாம். இவர்கள் சொல்லுவது உண்மையாயிருந்தால், பல்லவ சைனியம் இப்போது துங்கபத்திரையைக் கடந்திருக்க வேண்டும். துங்கபத்திரைக் கரையிலிருந்த சைனியத்தை அந்தப் பிரதேசத்தில் பஞ்சம் என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் வேங்கிக்கு அனுப்பினோம்."

புலிகேசி சற்று நேரம் ஸ்தம்பித்து நி்றார். சட்டென்று அவர் மனத்தில் ஏதோ ஒரு உண்மை உதயமாகியிருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் நின்று மேற்படி சம்பாஷணையையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நாகநந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். மறுபடியும் பிரதம மந்திரியை நோக்கி, "மந்திரி! நமது ஒற்றர் படை என்ன செய்து கொண்டிருந்தது? மாமல்லன் படையெடுப்பைக் குறித்த செய்தி நமக்கு ஏன் முன்னாலேயே வரவில்லை? காஞ்சியிலிருந்து பல்லவ சைனியம் புறப்பட்ட செய்தி கூட நமக்கு ஏன் வாதாபியிலிருக்கும்போதே கிடைக்கவில்லை!" என்றார். பிரதம மந்திரி வணக்கத்துடன், "பிரபு! ஒரு வருஷத்துக்கு முன்னால் நம் ஒற்றர் படைத் தலைவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்த பொறுப்பை, நமது பிக்ஷு ஏற்றுக் கொண்டார், அடிகளைத்தான் கேட்க வேண்டும்!" என்றார். சக்கரவர்த்தி உள்பட அங்கிருந்த அனைவருடைய கண்களும் அப்போது பிக்ஷுவை நோக்கின.

புலிகேசி, "அடிகளே! மாமல்லனுடைய படையெடுப்புச் செய்தி தங்களுக்கு முன்னாலே தெரியுமா? வேண்டுமென்றே என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தீர்களா?" என்று கேட்டார். "தம்பி! உன் கேள்விக்கு இவர்கள் எல்லாருடைய முன்னிலையிலும் நான் மறுமொழி சொல்ல வேண்டுமா?" என்றார் பிக்ஷு. "அடிகளே! சற்று முன்னால் சொன்னதை மறந்து விட்டீர்களா! தங்களுக்கும் எனக்கும் இனி யாதொரு உறவும் இல்லையென்று சொல்லவில்லையா? இப்போது என்னத்திற்காக உறவு கொண்டாட வேண்டும்? உண்மையை உடனே சொல்லுங்கள்!" "அப்படியானால் சொல்லுகிறேன், மாமல்லன் படையெடுப்புச் செய்தி எனக்கு முன்னமே தெரியும். நன்றியில்லாத பாதகனாகிய உனக்குத் தண்டனை கிடைக்கும் பொருட்டே உன்னிடம் சொல்லவில்லை!" என்று நாகநந்தி கர்ஜித்தார்.

"இந்தத் தேசத் துரோகியைப் பிடித்துக் கட்டுங்கள்" என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டதும், அங்கு நின்ற எட்டுப் பேரும் பிக்ஷுவைச் சூழ்ந்து கொண்டார்கள். "பிக்ஷு மடியில் செருகியிருந்த வளைந்த சிறு கத்தியைப் பளிச்சென்று எடுத்துக் கொண்டு, "ஜாக்கிரதை! அருகில் நெருங்கியவன் உடனே யமலோகம் போவான்!" என்றார். எட்டுப் பேரும் தம்தம் உடைவாள்களை உறையிலிருந்து விரைவாக எடுத்துக் கொண்டார்கள். "அப்படிச் செய்யுங்கள்! சூர சிகாமணிகள் எட்டுப் பேர் சேர்ந்து ஒரு பிக்ஷுவைக் கத்தியால் வெட்டிக் கொல்லுங்கள். புலிகேசிச் சக்கரவர்த்தியின் பெருமை உலகமெல்லாம் பரவும். மாமல்லன் கூடப் பிரமித்துத் திரும்பிப் போய்விடுவான்!" என்று பிக்ஷு பரிகாசக் குரலில் கூறினார். அதைக் கேட்ட புலிகேசி, "நில்லுங்கள்! அந்த நீசத் துரோகியைக் கொன்று உங்கள் கத்தியை மாசுப்படுத்திக் கொள்ள வேண்டாம், விலகுங்கள்!" என்று கூவினார். அவ்விதமே எட்டுப் பேரும் விலகிக் கொண்டார்கள். எனினும் சக்கரவர்த்தியின் பேரில் பிக்ஷு பாய்ந்து விடக்கூடும் என்று எண்ணி ஜாக்கிரதையாகவே நின்றார்கள்.

பிக்ஷுவைப் பார்த்துப் புலிகேசிச் சக்கரவர்த்தி கூறினார்; "அடிகளே! உம்முடைய உயிரை வாங்குவது தவறு. உம்மை நம்பிய சகோதரனுக்கும் உமது நாட்டுக்கும் நீர் செய்த மகா துரோகத்துக்கு அது தக்க தண்டையாகாது. நீண்ட காலம் நீர் உயிர் வாழ்ந்து உம்முடைய பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்; உம்முடைய துரோகத்தை நினைத்து நினைத்துக் கண்ணீர் விட வேண்டும்; மனித உருக்கொண்ட துஷ்டப் பைசாசே! போ! வாதாபிக்குச் சென்று உன்னுடைய மோகினியையும் அழைத்துக் கொண்டு போ! உன் வாக்கை இந்த விஷயத்திலாவது நிறைவேற்று! இனி என் உயிர் உள்ளவரையில் என் முகத்தில் விழிக்க வேண்டாம்! ஒரு பெண்ணின் மோகத்துக்காக ஒரு ராஜ்யத்தையே விற்கத் துணிந்த நீசனே! போ! நெடுங்காலம் உயிரோடிருந்து உன்னுடைய துரோகத்தை நினைத்து அழுது கொண்டிரு." ஆத்திரம் ததும்பிய குரலில் விம்மலோடு கலந்து புலிகேசி கூறிய மேற்படி கடு மொழிகளைக் கேட்டுக் கொண்டு நாகநந்தி கற்சிலையைப் போல் நின்றார். புலிகேசி நிறுத்தியதும் ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாமல் நதிக்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பிக்ஷு போகும் திசையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த புலிகேசி, அவர் மறைந்ததும் சட்டென்று திரும்பித் தம் கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பிறகு, அங்கு நின்றவர்களைப் பார்த்து, "மந்திரி! சேனாதிபதி! இந்தத் தூதர்கள் கொண்டு வந்த செய்தி உண்மையாகத்தான் இருக்க வேண்டும்; இதில் சந்தேகம் வேண்டாம். புத்த பிக்ஷுவின் விஷயத்தில் நீங்கள் எல்லோரும் செய்த எச்சரிக்கையை நான் அலட்சியம் செய்து விட்டேன். அதன் பலனை நானும் நீங்களும் அனுபவிக்கப் போகிறோம். என்றாலும், மோசம் ஒன்றும் போய் விடவில்லை. புலியின் வாய்க்குள்ளே வேண்டுமென்று தலையை விடுவது விளையாட்டான காரியம் அல்ல என்பதை மாமல்லனுக்குக் கற்பிப்போம். துங்கபத்திரையைக் கடந்து வந்த பல்லவ வீரன் ஒருவனாவது திரும்பிப் போகாமல் ஹதாஹதம் செய்வோம். என்னுடைய தென்னாட்டுப் படையெடுப்பு பூரண வெற்றியடையவில்லை என்ற குறை என் மனத்தில் இத்தனை நாளும் இருந்து வந்தது. அந்த மனக்குறை இப்போது தீர்ந்து விடப்போகிறது. பல்லவ நாடு சளுக்க சாம்ராஜ்யத்தோடு சேர்ந்து ஒன்றாகி விடப்போகிறது" என்றார்.



முப்பதாம் அத்தியாயம்

வாதாபிப் பெரும் போர்

வெகு காலமாய் இல்லாத வழக்கமாக அஜந்தாவில் கலை விழா நடந்து, அரைகுறையாக முடிவுற்று ஒரு மாதத்துக்கும் மேல் ஆயிற்று. அந்த ஒரு மாதமும் வடக்கேயிருந்து வாதாபியை நோக்கி விரைந்து வந்த சளுக்க சைனியத்துக்கும் தெற்கேயிருந்து படையெடுத்து வந்த பல்லவ சைனியத்துக்கும் ஒரு பெரிய போட்டிப் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. வாதாபியை முதலில் யார் அடைவது என்கின்ற அந்த விரைவுப் பந்தயத்தில் பல்லவ சைனியமே வெற்றியடைந்தது. வழியில் யாதொரு எதிர்ப்புமின்றித் தங்கு தடையில்லாமல் பொங்கி வரும் சமுத்திரத்தைப் போல் முன்னேறி வந்த அந்தப் பல்லவ சேனா சமுத்திரமானது, சளுக்க சைனியம் வடக்கே இன்னும் ஆறு காத தூரத்தில் இருக்கும்போதே வாதாபியை அடைந்து அந்த மாபெரும் நகரத்தின் கோட்டை மதிலை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது.

திடீரென்று முன்னெச்சரிக்கையில்லாமல் நேர்ந்த அந்தப் பெரு விபத்தினால் வாதாபி மக்கள் கதிகலங்கிப் போனார்கள். புலிகேசிச் சக்கரவர்த்தியின் வீர சௌரிய பராக்ரமங்களையும் அவருடைய புகழானது கடல்களுக்கப்பாலுள்ள தூர தூர தேசங்களிலெல்லாம் பரவியிருப்பதையும் எண்ணிப் பெருமிதத்துடனிருந்த வாதாபியின் மக்கள் தங்கள் நாட்டின் மீது இன்னொரு நாட்டு அரசன் படையெடுத்து வரக்கூடும் என்று கனவிலும் கருதவில்லை. சற்றும் எதிர்பாராத சமயத்தில் களங்கமற்ற வானத்திலிருந்து விழுந்த பேரிடி போல் வந்த பல்லவப் படையெடுப்பு அவர்களுக்கு பிரமிப்பையும் திகைப்பையும் உண்டாக்கியது. நகரில் அச்சமயம் சக்கரவர்த்தி இல்லை என்பதும் கோட்டைப் பாதுகாப்புக்குப் போதுமான சைனியமும் இல்லையென்பதும் ஜனங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தன. இதனால் நகர மாந்தரில் பெரும்பாலோர் என்றும் அறியாத பீதிக்கு உள்ளாயினர். பௌத்தர்களிடம் விரோத பாவம் கொண்டிருந்த சமணர்கள், சைவர்கள், சாக்தர்கள் ஆகியோர், "அஜந்தாக் கலை விழா உண்மையிலேயே பௌத்தர்களின் சதியாலோசனைச் சூழ்ச்சி" என்று பேசிக் கொண்டார்கள். பொது மக்களின் கோபத்தாக்குதலுக்கு உள்ளாகாமல் பௌத்த விஹாரங்கள், பௌத்த மடங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றும் பொருட்டு வாதாபிக் கோட்டைத் தலைவன் பீமசேனன் மேற்படி விஹாரங்களுக்கும் மடங்களுக்கும் விசேஷக் காவல் போட வேண்டியதாயிற்று.

அதோடு ஜனங்களின் பீதியைப் போக்கித் தைரியம் ஊட்டுவதற்காகச் சக்கரவர்த்தியிடமிருந்து அவசரத் தூதர்கள் மூலமாக வந்த திருமுக ஓலையை வாதாபி நகரின் நாற்சந்திகளில் எல்லாம் தளபதி பீமன் வாசிக்கப் பண்ணியிருந்தான். சக்கரவர்த்தி, அந்தத் திருமுகத்தில் நர்மதைக் கரையிலுள்ள மாபெரும் சளுக்கர் சைனியத்துடன் தாம் வாதாபியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருப்பதாகவும், வேங்கி நாட்டிலிருந்து இன்னொரு பெருஞ் சைனியம் வந்து கொண்டிருப்பதாகவும் ஒருவேளை தாம் வருவதற்குள்ளே பல்லவ சைனியம் வாதாபியை அடைந்து முற்றுகையிட்டு விட்டால் அதற்காக நகர மக்கள் மனம் கலங்க வேண்டாம் என்றும், பல்லவ சைனியத்தை நிர்மூலம் செய்து வாதாபியைக் கூடிய சீக்கிரம் முற்றுகையிலிருந்து விடுதலை செய்வதாகவும் உறுதி கூறியிருந்தார். மேற்படி திருமுகத்தை நாற்சந்திகளில் படிக்கக் கேட்ட பிறகு வாதாபி மக்கள் ஒருவாறு பீதி குறைந்து தைரியம் பெற்றார்கள்.

நர்மதை நதிக்கரையிலிருந்த சளுக்கப் பெரும் படையுடன் புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபிக்கு நாலு காத தூரத்தில் வந்து சேர்ந்த போது தமக்கு முன்னால் பல்லவ சைனியம் வாதாபியை அடைந்து கோட்டையைச் சூழ்ந்து கொண்டது என்ற விவரம் அறிந்தார். உடனே பிரயாணத்தை நிறுத்திக் கொண்டார். வேங்கி சைனியம் வழியிலே பல காடு மலை நதிகளைக் கடந்து வர வேண்டியிருந்தபடியால் அது வந்து சேர இன்னும் சில காலம் ஆகும் என்றும் தெரியவந்தது. இந்த நிலைமையில் புலிகேசிச் சக்கரவர்த்தி தமது மந்திரிகளையும் படைத் தலைவர்களையும் கலந்தாலோசித்து உடனே போர் தொடங்காமல் சில நாள் காத்திருக்க முடிவு செய்தார். வேங்கி சைனியமும் வந்து சேர்ந்த பிறகு பல்லவ சைனியத்தை ஒரு பெருந்தாக்காகத் தாக்கி நிர்மூலம் செய்து விடுவது என்றும், அது வரையில் அப்போது வந்து சேர்ந்திருந்த இடத்திலேயே தங்குவது என்றும் தீர்மானித்திருந்தார். ஆனால், அவருடைய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குப் போர்க் கலையில் மகா நிபுணர்களான மாமல்லச் சக்கரவர்த்தியும் சேனாதிபதி பரஞ்சோதியும் இடங்கொடுக்கவில்லை.

முதலிலே வாதாபிக் கோட்டையைத் தாக்குவதா அல்லது புலிகேசியின் தலைமையிலுள்ள சளுக்கப் பெரும் படையைத் தாக்குவதா என்ற விஷயம் பல்லவ சேனைத் தலைவர்களின் மந்திராலோசனைச் சபையில் விவாதிக்கப்பட்டது. வந்த காரியம் வாதாபியைக் கைப்பற்றுவதேயாதலால் உடனே கோட்டையைத் தாக்க வேண்டுமென்று மானவன்மரும் அச்சுதவர்மரும் அபிப்பிராயப்பட்டார்கள். வேங்கி சைனியம் வருவதற்குள்ளே புலிகேசியைத் தாக்கி ஒழித்து விட வேண்டும் என்றும், வாதாபிக் கோட்டை எங்கேயும் ஓடிப் போய் விடாதென்றும், அதன் முற்றுகை நீடிக்க நீடிக்கப் பிற்பாடு அதைத் தாக்கிப் பிடிப்பது சுலபமாகி விடுமென்றும் சேனாதிபதி பரஞ்சோதி கூறினார். ஒற்றர் தலைவன் சத்ருக்னன் சேனாதிபதியை ஆதரித்தான். மாமல்லரும் அந்த யோசனையையே முடிவாக ஒப்புக் கொண்டார். எனவே, வாதாபிக் கோட்டையின் முற்றுகைக்கு ஒரு சிறு படையை மட்டும் நிறுத்தி விட்டு, பல்லவ சைனியத்தின் மற்றப் பெரும் பகுதி வடக்கு நோக்கிக் கிளம்பிற்று.

இதையறிந்த புலிகேசிச் சக்கரவர்த்தி இனித் தாம் பின்வாங்கிச் சென்றால் சளுக்க சாம்ராஜ்யத்தின் மதிப்பு சின்னாபின்னமாகி விடும் என்பதை உணர்ந்து போருக்கு ஆயத்தமானார். வாதாபிக்கு வடக்கே மூன்று காத தூரத்தில் இரு பெரும் சைனியங்களும் கைகலந்தன. அந்தக் காட்சியானது கீழ் சமுத்திரமும் மேல் சமுத்திரமும் தங்குதடையின்றிப் பொங்கி வந்து ஒன்றோடொன்று மோதிக் கலந்ததைப் போலிருந்தது. மூன்று பகலும் இரவும் கோரமான யுத்தம் நடந்தது. ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வாளால் வெட்டுண்டும் வேல்களால் குத்துண்டும் போர்க்களத்தில் மாண்டு விழுந்தார்கள். வீர சொர்க்கம் அடைந்தவர்களின் சவங்கள் கால் வேறு கை வேறு தலை வேறான உயிரற்ற உடல்கள், போர்க்களத்தில் மலை மலையாகக் குவிந்தன.

இறந்த யானைகளின் உடல்கள் ஆங்காங்கு கருங்குன்றுகளைப் போல் காட்சி தந்தன. மனிதர் உடல்களின் மீது குதிரைகளின் உடல்களும், குதிரைகளின் சவங்கள் மீது மனிதர்களின் பிரேதங்களுமாகக் கலந்து கிடந்தன. மரணாவஸ்தையிலிருந்த மனிதர்களின் பரிதாப ஓலமும் யானைகளின் பயங்கரப் பிளிறலும் குதிரைகளின் சோகக் கனைப்பும் கேட்கச் சகிக்கார கோரப் பெருஞ்சப்தமாக எழுந்தது. போர்க்களத்திலிருந்து இரத்த ஆறுகள் நாலா பக்கமும் பெருக்கெடுத்துப் பாய்ந்து ஓடின. அந்த உதிர நதிகளில் போர் வீரர்களின் வெட்டுண்ட கால் கைகள் மிதந்து சென்றது பார்க்கச் சகிக்காத கோரக் காட்சியாயிருந்தது. லட்சக்கணக்கான வீரர்களும் ஆயிரம் பதினாயிரக்கணக்கான யானைகளும் குதிரைகளும் ஈடுபட்டிருந்த அந்த மாபெரும் யுத்தத்தை நடந்தது நடந்தபடி வர்ணிப்பது நம்மால் இயலாத காரியம். வால்மீகியையும் வியாசரையும் ஹோமரையும் கம்பரையும் போன்ற மகா நாடக ஆசிரியர்களுக்குத்தான் அதன் வர்ணனை சாத்தியமாகும்.

போரின் ஆரம்பத்திலிருந்தே ஒருவாறு கட்சிகளின் பலம் தெரிந்து விட்டது. போர்க் கலையின் நுட்பங்களை அறிந்தவர்கள், போரின் முடிவு என்ன ஆகும் என்பதை ஊகித்துணர்வதும் சாத்தியமாயிருந்தது. வாதாபிக்கருகில் தங்கிச் சிரம பரிகாரம் செய்து கொண்டு பூரண பலத்துடனும் அளவில்லா உற்சாகத்துடனும் போரில் ஈடுபட்ட பல்லவ சைனியத்தின் பெருந் தாக்குதலுக்கு முன்னால், நெடுந்தூர இடைவிடாப் பிரயாணத்தினால் களைப்புற்றிருந்த சளுக்க சைனியம் போர்க்களத்தில் நிற்பதற்கே திணறியது. சளுக்க சைனியத்தின் பிரதான யானைப் படை வேங்கியில் இருந்தபடியால் அது வந்து சேராதது சளுக்க சைனியத்தின் பலக் குறைவுக்கு முக்கிய காரணமாயிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் பல்லவ சைனியத்தின் வெற்றியும் சளுக்க சைனியத்தின் தோல்வியும் சர்வ நிச்சயமாகத் தெரிந்து விட்டது. அன்று மத்தியானம் சளுக்க தளபதிகளும் மந்திரிகளும் புலிகேசிச் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டு, சாம்ராஜ்யத்தின் நன்மைக்காக அவர் பின்வாங்கிச் சென்று எங்கேயாவது ஒரு பத்திரமான இடத்தில் வேங்கி சைனியம் வந்து சேரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார்கள். அதைத் தவிர வேறு வழியில்லையென்பதைக் கண்டு சக்கரவர்த்தியும் அதற்குச் சம்மதித்தார். சேதமாகாமல் மீதமிருந்த குதிரைப் படையின் பாதுகாப்புடன் அன்றைய தினம் அஸ்தமித்ததும் சக்கரவர்த்தி பின்வாங்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்படி முடிவைக் காரியத்தில் நிறைவேற்ற அன்று சாயங்காலம் ஒரு பெரும் இடையூறு ஏற்பட்டது. மானவன்மரால் விசேஷப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்த பல்லவக் களிற்றுப் படையைக் கடைசியாக உபயோகிப்பதென்று வைத்திருந்து அன்று சாயங்காலம் ஏவி விட்டார்கள்.

ஐயாயிரம் மத்தகஜங்கள் துதிக்கைகளிலே இரும்பு உலக்கையைப் பிடித்துச் சுழற்றிக் கொண்டு சளுக்கர் குதிரைப் படை மேல் பாய்ந்த போது, பாவம், அந்தக் குதிரைகள் பெரும் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடின. அந்தக் குதிரைகளை விட வேகமாக எஞ்சியிருந்த சளுக்க வீரர்கள் ஓடினார்கள். அவ்விதம் புறங்காட்டி ஓடிய சளுக்க வீரர்களைப் பல்லவ வீரர்கள் துரத்திக் கொண்டு ஓடினார்கள். அந்த மூன்றாம் நாள் இரவு முழுவதும் ஓடுகிற சளுக்க வீரர்களைப் பல்லவ வீரர்கள் துரத்திச் சென்று வேட்டையாடுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறுநாள் சூரியோதயமான போது, மூன்று தினங்கள் கடும் போர் நடந்த பயங்கர யுத்த களத்தில் இறந்து போன சளுக்கரின் உடல்களைத் தவிர உயிருள்ள சளுக்கர் ஒருவராவது காணப்படவில்லை.

வெற்றி முரசுகள் முழங்க, சங்கங்கள் ஆர்ப்பரித்து ஒலிக்க, ஜயகோஷங்கள் வானளாவ, ஒரே கோலாகலத்துக்கு மத்தியில் பல்லவ சக்கரவர்த்தியும் அவருடைய தளபதிகளும் ஒருவருக்கொருவர் வாகை மாலை சூடியும் வாழ்த்துக் கூறியும் பல்லவ சேனை அடைந்த 'மாபெரும் வெற்றியைக் கொண்டாடினர். எனினும், அவ்வளவு கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அவர்களுடைய உள்ளத்தில் ஒரு சிறு கவலை குடிகொண்டிருந்தது. அது சளுக்க சக்கரவர்த்தி புலிகேசியின் கதி என்னவாயிற்று என்ற கவலைதான். வாதாபிச் சக்கரவர்த்தி போர்க்களத்தில் இறுதி வரை நின்று போராடி உயிரிழந்து விழுந்து வீர சொர்க்கம் அடைந்தாரா, அல்லது சளுக்க வீரர் பலர் புறங்காட்டி ஓடிப் போனதைப் போல் அவரும் ஓடி விட்டாரா என்பது தெரியவில்லை. போர்க்களத்தில் அவர் விழுந்திருந்தால் மாபெருஞ் சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளை அவருடைய உடலுக்குச் செய்து கௌரவிக்க வேண்டும். ஒருவேளை அவர் ஓடிப் போயிருந்தால், மறுபடியும் படை திரட்டிக் கொண்டு போருக்கு வரக்கூடுமல்லவா? இப்படி நடந்திருக்குமா அப்படி நடந்திருக்குமா என்று வெகு நேரம் விவாதித்த பிறகு, அதைப் பற்றி மேலும் விவாதிப்பதில் பயனில்லையென்ற முடிவு ஏற்பட்டது. சத்ருக்னனுடைய தலைமையில் போர்க்களமெல்லாம் நன்றாகத் தேடிப் பார்த்துப் புலிகேசியின் உடல் கிடைத்தால் எடுத்து வருவதற்கு ஏற்பாடு செய்து விட்டு மாமல்லரும் மற்றவர்களும் வாதாபியை நோக்கித் திரும்பினார்கள்.



முப்பத்தோராம் அத்தியாயம்
பிக்ஷுவின் சபதம்

வாதாபிக் கோட்டைக்கு வெளியே சற்று தூரத்தில் காபாலிக மதத்தாரின் பலி பீடம் இருந்தது என்பதை நேயர்கள் அறிவார்கள். வாதாபிப் பெரும் போர் முடிவுற்றதற்கு மறுநாள் இரவு அந்த காபாலிகர் பலி பீடத்துக்குச் சமீபத்தில் ஒரு பயங்கர சோக நாடகம் நடைபெற்றது. கிழக்கே அப்போதுதான் உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனின் கிரணங்கள் மரங்களின் வழியாகப் புகுந்து வந்து மொட்டை மொட்டையாக நின்ற பாறைகள் மீது விழுந்த போது, அந்தக் கறுத்த பாறைகளும் அவற்றின் கறுத்த நிழல்களும் கரிய பெரிய பேய்களின் உருவங்களைக் கொண்டு அந்தப் பாறைப் பிரதேசத்தைப் பார்ப்பதற்கே பீதிகரமாகச் செய்து கொண்டிருந்தன.

பாறைகளின் ஓரமாகச் சில சமயம் நிழல்களில் மறைந்தும் சில சமயம் நிலா ஒளியில் வெளிப்பட்டும் ஒரு கோரமான பெண் உருவம் வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் தோளின் மீது இன்னொரு உடலைச் சுமந்து கொண்டு நடந்தது. அந்த உடல் விறைப்பாகக் கிடந்த விதத்திலிருந்து அது உயிரற்றது என்பதை எளிதில் ஊகிக்கலாம். அவ்விதம் தோளிலே பிரேதத்தைச் சுமந்து கொண்டு நடந்த பெண் உருவமானது நிலா வெளிச்சத்தில் தோன்றிய போது அதன் நிழல் பிரம்மாண்ட ராட்சஸ வடிவங்கொண்டு, ஒரு பெரும் பூதம் தான் உண்பதற்கு இரை தேடி எடுத்துக் கொண்டு வருவது போலத் தோன்றியது.

சற்று அருகில் நெருங்கிப் பார்த்தோமானால், அந்தப் பெண் உருவம் கற்பனையில் உருவகப்படுத்திக் கொள்ளும் பேயையும் பூதத்தையும் காட்டிலும் அதிகப் பயங்கரத் தோற்றம் அளித்தது என்பதை அறியலாம். கறுத்துத் தடித்த தோலும், குட்டையான செம்பட்டை மயிரும் அனலைக் கக்கும் கண்களுமாக அந்தப் பெண் உருவம் காவியங்களில் வர்ணிக்கப்படும் கோர ராட்சஸிகளைப் பெரிதும் ஒத்திருந்தது. ஆனால், அந்தப் பெண் பேய் தன் தோளில் போட்டுக் கொண்டு சுமந்து வந்த ஆண் உருவம் அத்தகைய கோரமான உருவமல்ல. இராஜ களை பொருந்திய கம்பீர முகத் தோற்றம் கொண்டது! அது யார்? ஒருவேளை?....

மேற்கூறிய கோர ராட்சஸி ஒரு பாறையின் முனையைத் திரும்பிய போது, எதிரில் யாரோ வருவது கண்டு திடுக்கிட்டுத் தயங்கி நின்றாள். அவள் திடுக்கிட்டதற்குக் காரணம் என்ன? பயமா? அவளுக்குக் கூடப் பயம் உண்டா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எதிரே வந்த உருவம் சிறிதும் தயங்காமல் மேலும் வந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கி வந்ததும், "ரஞ்சனி, நீதானா?" என்று புத்த பிக்ஷுவின் குரல் கேட்டது. அந்தக் கோர ராட்சஸியின் பெயர் "ரஞ்சனி" என்று அறிந்து நமக்கு வியப்பு உண்டாகிறதல்லவா? ஆயினும், அந்தப் பெண் ஒரு காலத்தில் "ரஞ்சனி" என்னும் அழகிய பெயருக்கு உரியவளாய், பார்த்தவர் கண்களை ரஞ்சிக்கச் செய்பவளாய், அவர்கள் உள்ளத்தை மோகிக்கச் செய்பவளாய்த்தான் இருந்தாள். அவளை இம்மாதிரி கோர வடிவம் கொண்ட காபாலிகையாகச் செய்தவர் புத்த பிக்ஷு தான் என்பதை முன்னமே அவருடைய வாய்மொழியினால் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

பிக்ஷுவின் குரலைக் கேட்டதும், காபாலிகையின் திகைப்பு இன்னும் அதிகமானதாகத் தோன்றியது. கற்சிலை போல் ஸ்தம்பித்து நின்றவளைப் பார்த்து, புத்த பிக்ஷு மறுபடியும் "ரஞ்சனி! இது என்ன மௌனம்? எங்கே போய் வேட்டையாடிக் கொண்டு வருகிறாய்?" என்று கேட்டார். காபாலிகையின் திகைப்பு ஒருவாறு நீங்கியதாகத் தோன்றியது. "அடிகளே! நிஜமாக நீங்கள்தானா?" என்று கேட்டாள் அவளுடைய கடினமான குரலில் வியப்பும் சந்தேகமும் தொனித்தன. "இது என்ன கேள்வி? நான்தானா என்பதில் உனக்கு என்ன சந்தேகம் வந்தது? என்னைத் தவிர இந்த நள்ளிரவில் உன்னை யார் தேடி வருவார்கள்? உன் குகையில் உன்னைத் தேடிக் காணாமல் எங்கே போயிருக்கிறாய் என்று பார்க்கக் கிளம்பினேன்! அது என்ன? யார் உன் தோளில்? எந்தப் பாவியின் பிரேதத்தைச் சுமந்து வருகிறாய்? இப்போதெல்லாம் உனக்கு நல்ல வேட்டை போலிருக்கிறது!"

இவ்விதம் பிக்ஷு சொல்லிக் கொண்டு வந்த போது காபாலிகை தான் இத்தனை நேரமும் தோளில் சுமந்து கொண்டிருந்த உடலைத் தொப்பென்று கீழே போட்டாள். "நல்ல வேடிக்கை!" என்று சொல்லி விட்டுக் கோரமாகச் சிரித்தாள். "என்ன வேடிக்கை? அந்தச் சவத்தை எங்கே கண்டு எடுத்தாய்?" என்று பிக்ஷு கேட்டார். "அடிகளே! தங்களை நினைத்து இரண்டு காத தூரம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே நடந்து வந்தேன். அவ்வளவும் வீணாய்ப் போயிற்று!" என்றாள் காபாலிகை. "கண்ணீர் விட்டாயா? என்னை நினைத்து ஏன் கண்ணீர் விட வேண்டும்? இது என்ன வேடிக்கை!" என்றார் பிக்ஷு. "பெரிய வேடிக்கைத்தான்; அந்த வேடிக்கையை ஆரம்பத்திலிருந்து சொல்லுகிறேன், கேளுங்கள்!" என்று காபாலிகை ஆரம்பித்தாள்.

"யுத்த வேடிக்கை பார்ப்பதற்காகச சென்றிருந்தேன். போர்க்களத்துக்குக் கொஞ்ச தூரத்திலிருந்த ஒரு குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பப்பா! என்ன யுத்தம்! என்ன சாவு! எத்தனை நரபலி? காபாலிகர் இங்கே மாதம் ஒரு தடவை வந்து ஒரு நரபலி கொடுக்கிறார்களே! இது என்ன பிரமாதம்? அங்கே லட்சோபலட்சம் மனிதர்களையும் ஆயிரம் பதினாயிரம் யானைகளையும் குதிரைகளையும் பலிகொடுத்தார்கள். மூன்று நாள் இரவும் பகலும் பலி நடந்தது. கடைசியில் ஒரு கட்சியார் ஓடவும் இன்னொரு கட்சியார் துரத்தவும் ஆரம்பித்தார்கள். யாரை யார் துரத்துகிறார்கள் என்று கூட நான் கவனிக்கவில்லை. எங்கே என்னைப் பிடித்துக் கொள்வார்களோ என்று பயந்து ஓட்டம் பிடித்தேன். இன்று பகலெல்லாம் காட்டில் ஒளிந்து ஒளிந்து வந்தேன். சாயங்காலம் ஆன போது பின்னால் ஒரு குதிரை ஓடி வரும் சப்தம் கேட்டது. என்னைப் பிடிக்கத்தான் யாரோ வருகிறார்கள் என்று மேலும் வேகமாய் ஓடினேன். கொஞ்ச நேரம் குதிரையும் தொடர்ந்து ஓடி வந்தது. நன்றாக இருட்டியதும் யார்தான் என்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன். என்னைத் துரத்தி வந்த குதிரை திடீரென்று கீழே விழுந்தது. அதன் மேலிருந்த மனிதனும் அப்படியே கிடந்தான் எழுந்திருக்கவில்லை. அருகிலே சென்று பார்த்த போது குதிரை மரணாவஸ்தையில் இருந்தது. அதன் மேலிருந்த மனிதன் கிடந்த மாதிரியிலிருந்து அவன் இறந்து போய் வெகு நேரமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் கால்கள் குதிரையின் கடிவாளத்தில் மாட்டிக் கொண்டிருந்தபடியால் கீழே விழாமல் தொங்கிக் கொண்டே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. குனிந்து அவன் முகத்தைப் பார்த்தேன், தங்களுடைய முகம் மாதிரி இருந்தது. நான் பைத்தியக்காரிதானே? தாங்கள்தான் என்று நினைத்துத் தோளில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே வந்தேன்!..."

அப்போது புத்த பிக்ஷுவுக்குத் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். சட்டென்று கீழே குனிந்து தரையில் கிடந்த உடலின் முகத்தை நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தார். "தம்பி! புலிகேசி!" என்று பிக்ஷு வீறிட்டு அலறியது அந்த விசாலமான பாறைப் பிரதேசம் முழுவதிலும் எதிரொலி செய்தது. "ரஞ்சனி! நீ போய் விடு! சற்று நேரம் என்னைத் தனியே விட்டு விட்டுப் போ! இங்கு நில்லாதே!" என்று பிக்ஷு விம்மலுடன் சொன்னதைக் கேட்டுக் காபாலிகை பயந்து போய் அங்கிருந்து விலகிச் சென்று பாறையின் மறைவில் நின்றாள்.

பிக்ஷு கீழே உட்கார்ந்து புலிகேசியின் உடலைத் தமது மடியின் மீது போட்டுக் கொண்டார். "தம்பி! உனக்கு இந்தக் கதியா? இப்படியா நீ மரணமடைந்தாய்? இந்தப் பாவியினால் அல்லவா நீ இந்தக் கதிக்கு உள்ளாக நேர்ந்தது?" என்று சொல்லி விட்டுப் பிக்ஷு தமது மார்பிலும் தலையிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார். "ஐயோ! தம்பி! உனக்கு நான் துரோகம் செய்து விட்டதாக எண்ணிக் கொண்டேயல்லவா நீ இறந்து போனாய்? என் உயிருக்கு உயிரான சகோதரனுக்கு - தாயின் கர்ப்பத்திலே என்னோடு பத்து மாதம் கூட இருந்து பிறந்தவனுக்கு, நான் துரோகம் செய்வேனா? மாமல்லனைப் பயங்கரமாகப் பழி வாங்குவதற்காகவல்லவா நான் சூழ்ச்சி செய்தேன்? அதை உன்னிடம் சொல்லுவதற்கு முடியாமல் இப்படி நடந்து விட்டதே!...."

மறுபடியும் பிக்ஷு தமது மார்பில் ஓங்கி அடித்துக் கொண்டு சொன்னார்; "பாழும் பிக்ஷுவே! உன் கோபத்தில் இடி விழ! உன் காதல் நாசமாய்ப் போக! உன் சிவகாமி...! ஆ! சிவகாமி என்ன செய்வாள்?.... தம்பி! உனக்கு நான் துரோகம் செய்யவில்லை. நம் தேசத்துக்கும் நான் துரோகம் செய்துவிடவில்லை. அன்றைக்கு அஜந்தாவில் நீயும் நானும் கொஞ்சம் பொறுமையாக மட்டும் இருந்திருந்தோமானால் இம்மாதிரி விபரீதம் நேர்ந்திராதே! இந்த யுத்தம் நடக்கவே நான் விட்டிருக்க மாட்டேனே! பல்லவ நாட்டார் அத்தனை பேரையும் பட்டினியால் சாகப் பண்ணியிருப்பேனே! மாமல்லனையும் உயிரோடு பலிகொடுத்திருப்பேனே! ஐயோ! இப்படியாகி விட்டதே...."

பிக்ஷு புலிகேசியின் உடலை மடியிலிருந்து மெதுவாக எடுத்துக் கீழே வைத்தார். எழுந்து நின்று இரு கைகளையும் வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டு, பாறை மறைவிலிருந்த காபாலிகைக்குக் கூட ரோமம் சிலிர்க்கும்படியான அலறுகின்ற குரலில் உரக்கக் கூவினார். "தம்பி! புலிகேசி! உன் மரணத்துக்குப் பழிவாங்குவேன்! புத்த பகவானின் பத்ம பாதங்களின் பேரில் சத்தியம் செய்கிறேன். கபாலம் ஏந்தும் சம்ஹார ருத்ரன் தலை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இரத்த பலி கேட்கும் சக்தி பத்ரகாளியின் பேரில் சத்தியம் வைத்துச் சபதம் செய்கிறேன் உன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன்!"



முப்பத்திரண்டாம் அத்தியாயம்
காபாலிகையின் காதல்

வானை நோக்கிக் கைகளைத் தூக்கிப் பல தெய்வங்களின் பேரில் ஆணையிட்டுச் சபதம் செய்த பிக்ஷு மறுபடியும் கீழே உட்கார்ந்து புலிகேசியின் உயிரற்ற உடலை எடுத்துத் தம் மடியின் மீது வைத்துக் கொண்டார். "தம்பி! நீ சாகவில்லை, இத்தனை நாளும் நாம் ஓருயிரும் இரண்டு உடலுமாக வாழ்ந்து வந்தோம். இப்போது உயிரைப் போல் உடம்பும் ஒன்றாகி விட்டோ ம். என் உயிரோடு உன் உயிர் ஒன்றாகக் கலந்து விட்டது. இனிமேல் நீதான் நான்; நான்தான் நீ! இரண்டு பேர் இல்லை!" இவ்விதம் உருகிக் கனிந்த குரலில் கூறிவிட்டுப் புத்த பிக்ஷு தமது தேகம் முழுவதும் குலுங்கும்படியாக விம்மி விம்மி அழுதார்.

சுயப் பிரக்ஞையை அறவே இழந்து சோகக் கடலின் அடியிலே அவர் ஆழ்ந்து விட்டார் என்று தோன்றியது. இரவு விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சந்திரன் மேலே மேலே வந்து கொண்டிருந்தது. பாறைகள் - மரங்களின் நிழல்கள் வர வரக் குட்டையாகிக் கொண்டு வந்தன. நெடுநேரம் பாறை மறைவில் நின்று காத்துக் கொண்டிருந்த காபாலிகை கடைசியில் பொறுமை இழந்தாள். மெதுவாகப் பாறை மறைவிலிருந்து வெளிப்பட்டு மெள்ள மெள்ள அடிமேல் அடிவைத்து நடந்து வந்தாள்.

பிக்ஷுவின் பின்புறத்தில் வந்து நின்று அவருடைய தோள்களை இலேசாக விரல்களால் தொட்டாள். புத்த பிக்ஷு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். "ரஞ்சனி! நீதானா?" என்றார். "ஆம்; நான்தான்!" என்றாள் காபாலிகை. "இன்னும் நீ போகவில்லையா?" "போகச் சொல்லி ஆக்ஞாபித்தால் போய் விடுகிறேன்." "வேண்டாம், இரு! இந்தப் பெரிய உலகில் என்பேரில் அன்பு உடையவள் நீ ஒருத்திதான் இருக்கிறாய்." "என் பேரில் அன்பு கொண்டவர் ஒருவருமே இல்லை." "ஆ! ரஞ்சனி ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? நான் ஒருவன் இல்லையா?" என்றார் பிக்ஷு.

சற்றுமுன் அவருடைய குரலில் தொனித்த சோகம் எங்கேயோ போய் இப்போது அதில் கபடங் கலந்த நயிச்சிய பாவம் தொனித்தது. "அடிகளே! ஏன் இந்தப் பேதையை ஏமாற்றப் பார்க்கிறீர்? இந்தக் கோர அவலட்சண உருவத்தின் பேரில் யாருக்குத் தான் பிரியம் ஏற்படும்!" என்று காபாலிகை கேட்டாள். "காதலுக்குக் கண்ணில்லை என்று நீ கேட்டதில்லையா? நீ எத்தனை குரூபியாயிருந்தாலும் என் கண்ணுக்கு நீதான் ரதி!" என்றார் புத்த பிக்ஷு. "வஞ்சக பிக்ஷுவே! ஏன் இப்படி மனமறிந்து பொய் சொல்லுகிறீர்? என்னை இந்த அலங்கோலம் ஆக்கினது நீர்தானே? எ் பேரில் அன்பு இருந்தால் இப்படிச் செய்திருப்பீரா?" என்றாள் அந்தக் கோர காபாலிகை.

"ரஞ்சனி! இதைப் பற்றி எத்தனை தடவை உனக்குச் சொல்லி விட்டேன்? அஜந்தா சித்திரத்தைப் போன்ற அற்புத அழகோடு வாதாபி அரண் மனையில் நீ இருந்தால், யாராவது ஒரு இராஜகுமாரன் உன்னை அபகரித்துக் கொண்டு விடுவான் என்றுதானே இப்படிச் செய்தேன்?" "என்னைத் தாங்களே அபகரித்துக் கொண்டு போயிருக்கலாமே? யார் வேண்டாம் என்று சொன்னது?" "அதையும்தான் உனக்கு ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேன். மறுபடியும் சொல்லுகிறேன், நான் செய்ய வேண்டிய காரியங்கள் சில இருந்தன. முக்கியமாக, புத்த சங்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டியிருந்தது." "இப்படித்தான் எத்தனையோ காலமாய்ச் சொல்லி வருகிறீர். எப்போதுதான் உமக்கு விடுதலை கிடைக்கப் போகிறது?"

"ரஞ்சனி எனக்கு விடுதலை கிடைத்து விட்டது! உன் மனோரதம் நிறைவேறுவதற்கான பெருந்தடை நீங்கி விட்டது; உனக்குச் சந்தோஷந்தானே?" என்று பிக்ஷு நயமாகக் கூறினார். "சத்தியமாகச் சொல்லுகிறீரா?" என்று ரஞ்சனி கேட்டாள். "முக்காலும் சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் விடுதலை கேட்கவே தேவை ஏற்படவில்லை. புத்த சங்கத்தாரே என்னைப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். உன்னுடைய தபஸின் சக்தியினால்தான் இது நடந்திருக்க வேண்டும்."

காபாலிகை இன்னும் சந்தேகம் நீங்காதவளாய், "ஏன் பிரஷ்டம் செய்தார்கள்? சர்வ சக்திவாய்ந்த நாகநந்தி பிக்ஷுவைப் புத்த சங்கத்தார் எப்படிப் பிரஷ்டம் செய்யத் துணிந்தார்கள்?" என்று கேட்டாள். "அது பெரிய கதை, அப்புறம் சொல்லுகிறேன். ரொம்ப முக்கியமான வேலை இப்போது நமக்கு இருக்கிறது. இதோ இந்த உடலை உடனே தகனம் செய்ய வேண்டும். யாருக்காவது தெரிந்து விட்டால் காரியம் கெட்டு விடும். எங்கே ரஞ்சனி! கட்டைகள் கொண்டு வந்து இங்கேயே சிதை அடுக்கு, பார்க்கலாம்." "என்னால் அது முடியாது!" "ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? எனக்கு உதவி செய்ய மாட்டாயா?" என்றார் புத்த பிக்ஷு. "புத்த சங்கத்திலிருந்து உம்மை ஏன் பிரஷ்டம் செய்தார்கள்? அதைச் சொன்னால் உதவி செய்வேன்."

"சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்! காஞ்சி மாமல்லன் படையெடுத்து வருகிறான் என்ற விஷயம் எனக்கு முன்னமே தெரியும். ஆனால், அதைச் சில காரணங்களுக்காக என் சகோதரனிடம் சொல்லாமல் இரகசியமாய் வைத்திருந்தேன். இது தெரிந்த போது நான் சகோதரத் துரோகமும் தேசத் துரோகமும் செய்து விட்டதாக இந்த நிர்மூடன் எண்ணினான். நான் உயிர் கொடுத்துக் காப்பாற்றி இவ்வளவு மேன்மைப் பதவிக்குக் கொண்டு வந்த என் சகோதரன் என்னைப் பார்த்து 'உயிரோடிருக்கும் வரையில் என் முகத்தில் விழிக்காதே' என்று சொல்லி அனுப்பினான். அதன் பலனாகத் தான் இப்போது இங்கே அநாதைப் பிரேதமாகக் கிடக்கிறான். நீயும் நானும் இவனை எடுத்துத் தகனம் செய்தாக வேண்டும்!" என்று சொல்லி பிக்ஷு பெருமூச்சு விட்டார். மறுபடியும் கூறினார்; "இதெல்லாம் அஜந்தா சங்கிராமத்துப் புத்த பிக்ஷுக்களுக்குத் தெரிந்தது. இத்தனை காலமும் என்னால் கிடைத்த உதவிகளையெல்லாம் பெற்று வந்தவர்கள், நான் சக்கரவர்த்தியின் கோபத்துக்கு ஆளானேன் என்று தெரிந்ததும் உடனே என்னைச் சபித்துப் புத்த சங்கத்திலிருந்து பிரஷ்டம் செய்தார்கள். அதன் பலனை அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. ரஞ்சனி! நீலகேசியை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் தப்பிப் பிழைக்க முடியாது, அவர்களுடைய கதி அதோகதி தான்."

"அஜந்தா பிக்ஷுக்களுக்கு அப்படி என்ன கதி நேர்ந்தது?" என்று காபாலிகை கேட்டாள். "வேறொன்றும் இல்லை; அப்புறம் ஒரு வாரத்துக்கெல்லாம் அஜந்தா பிக்ஷுக்கள் சங்கிராமத்தை மூடிவிட்டு உயிர் தப்புவதற்கு ஓடும்படி நேர்ந்தது. நாடு நகரங்களில் எல்லாம் 'அஜந்தாக் கலை விழா, புத்த பிக்ஷுக்களின் சூழ்ச்சி; காஞ்சி மாமல்லனுக்கு ஒத்தாசையாக அவர்கள் செய்த வஞ்சகமான ஏற்பாடு' என்ற வதந்தி பரவியது. வதந்திக்கு விதை போட்டவன் நான்தான். ஜனங்கள் கோபங்கொண்டு அஜந்தாவுக்குத் திரண்டு போய்ச் சங்கிராமத்தையும் அங்குள்ள சிற்ப சித்திரங்களையும் அழித்துப் போடுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள். இது தெரிந்ததும் பிக்ஷுக்கள் அஜந்தாவுக்குப் போகும் அந்தரங்க பகிரங்க வழிகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு வடக்கே ஹர்ஷனுடைய ராஜ்யத்தை நோக்கி ஓட்டம் பிடித்தார்கள். அப்புறம் அஜந்தாவுக்குப் போக நானே பிரயத்தனம் செய்தேன். என்னாலேயே வழி கண்டுபிடிக்க முடியவில்லை. பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி வந்து விட்டேன். நல்ல சமயத்திலேதான் வந்தேன். ரஞ்சனி! எழுந்திரு! சீக்கிரம் நான் சொன்னபடி செய்! உடனே சிதை அடுக்கு! நெருப்பு கொண்டு வா!"

"சக்கரவர்த்தியைத் தகனம் செய்த பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?" "ரஞ்சனி! சக்கரவர்த்தியின் மரணத்தைப் பற்றியோ, தகனத்தைப் பற்றியோ யாரிடமும் பிரஸ்தாபிக்கக் கூடாது, காற்றினிடம் கூடச் சொல்லக் கூடாது. இதைப் பரமரகசியமாக வைத்திருக்க வேண்டும், தெரியுமா?" "எதற்காக ரகசியம் அடிகளே?" "எல்லாம் அப்புறம் சொல்லுகிறேன், ரஞ்சனி! இப்போது ஒரு கணமும் வீணாக்க நேரமில்லை." "வஞ்சகப் பிக்ஷுவே! நீர் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை; காரணம் எனக்கே தெரியும்." "உனக்கு என்ன தெரியும்?" "இந்தப் பிரேதத்தைத் தகனம் செய்து விட்டு இரகசியச் சுரங்க வழியாக வாதாபி நகருக்குள் போகப் போகிறீர்! நீர்தான் சக்கரவர்த்தி என்று சொல்லிக் கொள்ளப் போகிறீர். சளுக்க சிம்மாசனத்தில் ஏறி அந்தக் காஞ்சி நகரத்து மூளியை உமக்கு அருகே உட்கார்த்தி வைத்துக் கொள்ளப் போகிறீர்....!"

நாகநந்தி கோபங்கொண்டு எழுந்து, "உன் வாக்குப்படியே செய்கிறேன். எப்படியாவது நீ தொலைந்து போ! இனிமேல் உன்னோடு..." என்று மேலும் சொல்வதற்குள் காபாலிகை அவர் காலில் விழுந்து, "அடிகளே! என்னை மன்னித்து விடுங்கள் நீர் சொல்வதைக் கேட்கிறேன்!" என்றாள். "உனக்குத்தான் என்னிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையே? உன்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?" "எனக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்கு ஒரு வழி இருக்கிறதே!" "அது என்ன?" "அந்த நடனப் பெண்ணை எனக்குக் கொடுத்து விடுங்கள்!"

"ரஞ்சனி! இத்தனை காலம் பொறுத்தாய்; இன்னும் சில நாள் பொறுத்துக்கொள். இந்த வாதாபி முற்றுகை முடியும் வரையில் பொறுத்துக் கொள். சிவகாமியை ஒரு காரியத்துக்காகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன் என்று உன்னிடம் சொல்லி வந்தேனல்லவா? அந்தக் காரியம் இப்போது நெருங்கி வந்து விட்டது. மாமல்லன் மீது பழிவாங்கியதும் சிவகாமியை உனக்குத் தந்து விடுகிறேன். பிறகு இந்த நீலகேசிதான் தக்ஷிண தேசத்தின் சக்கரவர்த்தி! நீதான் சக்கரவர்த்தினி! சளுக்க - பல்லவ - சோழ - பாண்டிய - வேங்கி நாடுகள் எல்லாம் நம் இருவருடைய காலின் கீழே கிடக்கப் போகின்றன!" என்று நாகநந்தி என்கிற நீலகேசி கூறிய போது நிலவொளியிலே அவருடைய கண்கள் தீப்பிழம்பைப் போல் ஒளி வீசின.

காபாலிகை ஒருவாறு சமாதானம் அடைந்தவளாய்க் காணப்பட்டாள். நீலகேசியின் சொற்படி அவள் தன் குகைக்குச் சென்று அங்கிருந்து விறகுக் கட்டைகளைக் கொண்டு வந்து அடுக்கலானாள். அப்போது, நீலகேசியின் காதில் விழாதபடி அவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்; "வஞ்சகப் பிக்ஷுவே! நீர் என்னை மறுபடியும் ஏமாற்றப் பார்க்கிறீர். ஆனால், உம்முடைய எண்ணம் ஒருநாளும் பலிக்கப் போவதில்லை. நீர் எவ்வளவுதான் காலில் விழுந்து கெஞ்சினாலும், தேவேந்திர பதவியே அளித்தாலும் அந்த மூளி சிவகாமி உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். கடைசியாக என் காலிலே வந்துதான் நீர் விழுந்தாக வேண்டும்!"



முப்பத்து மூன்றாம் அத்தியாயம்
மந்திராலோசனை

வாதாபிப் பெரும் போரில் பல்லவ சைனியம் மகத்தான வெற்றியடைந்து ஒரு வார காலம் ஆயிற்று. வாதாபிக் கோட்டையின் பிரதான வாசலுக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் பிரம்மாண்டமான ரிஷபக் கொடி வானளாவி உயர்ந்து கம்பீரமாகக் காற்றிலே பறந்து கொண்டிருந்தது. அதனடியில் இருந்த கூடாரத்திற்குள்ளே மாமல்லரின் மந்திராலோசனை சபை கூடியிருந்தது. மாமல்லரைச் சுற்றிலும் வீற்றிருந்த மந்திரிமார்களின் முகங்களில் மாபெரும் போரில் வெற்றி பெற்ற பெருமித உணர்ச்சியோடு சிறிது கவலைக்கு அறிகுறியும் காணப்பட்டது. மாமல்லரின் வீர சௌந்தரிய வதனத்திலோ அச்சமயம் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது! மந்திராலோசனை சபையில் ஏதோ அபிப்பிராய பேதம் ஏற்பட்டுக் காரசாரமான விவாதம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அது வாஸ்தவந்தான்; அபிப்பிராய பேதத்துக்குக் காரணமாயிருந்தது வாதாபி நகரப் பிரமுகர்களிடமிருந்து வந்த சரணாகதி ஓலையேயாகும்.

போர்க்களத்திலிருந்து திரும்பி வந்ததும் பல்லவ சைனியம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பகுதியைக் கிழக்கேயிருந்து வந்து கொண்டிருந்த வேங்கிப் படையைத் தாக்குவதற்கு வசதியாக இரண்டு காத தூரம் கிழக்கே கொண்டு போய் நிறுத்தி வைத்தார்கள். இன்னொரு பகுதி சைனியத்தைக் கொண்டு வாதாபிக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு ஆயத்தம் செய்தார்கள். கோட்டையைத் தாக்கும் விஷயத்தில் மாமல்லர் மிகவும் ஆத்திரம் கொண்டிருந்தார். பெரும் போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்களுக்கு இளைப்பாற அவகாசம் கொடுப்பதற்குக் கூட அவர் விரும்பவில்லை. சேனாதிபதியையும் மற்றவர்களையும் ரொம்பவும் துரிதப்படுத்தினார். தாமே குதிரை மீதேறி கோட்டையைச் சுற்றி வந்து ஆங்காங்கே இருந்த வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஒரே மூச்சில் அகழியைக் கடப்பது எப்படி, கோட்டை மதில்மீது தாவி ஏறுவது எப்படி, அங்கே காவல் இருக்கக்கூடிய சளுக்க வீரர்கள் மீது ஈட்டியை எறிந்து கொல்வது எப்படி, கோட்டைக்குள் புகுந்ததும் அவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன ஆகிய விஷயங்களைப் பற்றி மாமல்ல சக்கரவர்த்தி தாமே அந்த வீரர்களுக்கு விவரமாகக் கூறினார். மாமல்லரின் இத்தகைய நடவடிக்கைகளைக் குறித்துச் சேனாதிபதி பரஞ்சோதி கோபமும் வருத்தமும் அடைந்து, "இந்தக் காரியங்களையெல்லாம் என்னிடம் விட்டு விடக் கூடாதா? என்னிடம் தங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்கும்படி நேர்ந்தது.

மாமல்லர் இப்படிக் கோட்டைத் தாக்குதலை ஆரம்பிக்கும் விஷயத்தில் அவசரப்பட்டதற்குக் காரணம், எங்கே தாக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் கோட்டைக்குள்ளிருந்து சமாதானத் தூது வந்து விடுமோ என்ற பயந்தான். அவர் பயந்தபடியே உண்மையில் நடந்து விட்டது. மறுநாள் கோட்டைத் தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த சமயத்தில் கோட்டை முன்வாசலில் சமாதான வெள்ளைக் கொடி தூக்கப்பட்டது. நூலேணி வழியாக இருவர் இறங்கி வந்தார்கள். சேனாதிபதி பரஞ்சோதியிடம் தாங்கள் கொண்டு வந்த ஓலைகள் இரண்டையும் சமர்ப்பித்து விட்டுத் திரும்பினார்கள்.

அந்த ஓலைகள் இரண்டில் ஒன்று கோட்டைத் தலைவன் தளபதி பீமசேனன், சக்கரவர்த்திக்கு எழுதிக் கொண்டது. வாதாபி நகரப் பிரமுகர்கள் கூடி யோசித்துக் கோட்டையை எதிர்ப்பில்லாமல் காஞ்சிச் சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்து விடுவதென்று தீர்மானித்திருப்பதாகவும், வாதாபி அரண்மனைகளிலுள்ள சகல செல்வங்களையும் கோட்டைக்குள்ளே இருக்கும் யானைப் படை குதிரைப் படைகளையும் மாமல்ல சக்கரவர்த்திக்குச் சமர்ப்பித்து விட இணங்குவதாகவும் இன்னும் அவர் விதிக்கும் மற்ற எல்லா நிபந்தனைகளுக்கும் உட்படச் சம்மதிப்பதாகவும் அந்த ஓலையில் எழுதியிருந்தது. மாமல்ல சக்கரவர்த்தி கருணை கூர்ந்து கோட்டையைத் தாக்காமலிருக்க வேண்டுமென்றும், நகரமாந்தர்களையும் அவர்களுடைய வீடு வாசல் சொத்து சுதந்திரங்களையும் காப்பாற்றிக் கொடுத்து அருள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தது. மேற்படி சமாதானக் கோரிக்கையை மாமல்ல சக்கரவர்த்தி ஒப்புக் கொள்ளக் கருணை கூர்ந்தால் கோட்டைக் காவல் தலைவனாகிய தளபதி பீமசேனன் தன் கீழேயுள்ள எல்லா வீரர்களுடனும் சரணாகதியடையச் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்து ஓலையை முடித்திருந்தான்.

மேற்படி சமாதான ஓலையைப் பற்றி எந்தவிதத்திலும் சந்தேகப்படுவதற்கு இடம் இருக்கவில்லை, உண்மையும் அப்படித் தான். கோட்டை வாசல்களின் உச்சி மண்டபங்களில் நின்று கவனித்த வாதாபிவாசிகள் பல்லவ சைனியத்துக்கும் சளுக்க சைனியத்துக்கும் நடந்த பெரும் போரைப் பற்றியும் அதன் முடிவைப் பற்றியும் ஒருவாறு தெரிந்து கொண்டார்கள். போரில் பல்லவ சைனியம் வெற்றி பெற்றது என்பது ஸ்பஷ்டமாகத் தெரிந்து விட்டது. அதன் பயனாக வாதாபி மக்களிடையே பெரும் பீதி உண்டாகிப் பரவிற்று. வீதிகளிலும் வீடுகளிலும் ஓலமும் புலம்பலும் எழுந்தன. கோட்டைக் காவலுக்கு அவசியமான வீரர்களோ யுத்த தளவாடங்களோ இல்லையென்பதும், முற்றுகை நீடிக்கும் பட்சத்தில் அதைச் சமாளிப்பதற்கு வேண்டிய உணவுப் பொருள் நகருக்குள் சேமித்து வைக்கப்படவில்லையென்பதும் எல்லாருக்கும் தெரிந்திருந்தன. ஒரு மாதம் முற்றுகை நீடிக்கும் பட்சத்தில் நகர மக்கள் பட்டினி கிடக்கும்படி நேரிடும். சத்துரு படைகள் கோட்டையைத் தாக்கி ஜயித்து உள்ளே பிரவேசித்தால், அப்போது அவ்வீரர்களிடம் ஜனங்கள் எவ்வித கருணையையும் எதிர்பார்க்க முடியாது. இலட்சக்கணக்கான ஸ்திரீகளும், குழந்தைகளும், வயோதிகர்களும் அதோ கதியடையும்படி நேரிடும்.

இதையெல்லாம் யோசித்து வேறு வழியில்லையென்று கண்டதன் பேரில்தான் வாதாபி நகரப் பிரமுகர்களும் கோட்டைக் காவலன் பீமசேனனும் மேற்கண்டவாறு சமாதான ஓலை அனுப்பினார்கள். அதன்பேரில் யோசித்து முடிவு செய்வதற்கு மாமல்லர் மந்திராலோசனை சபை கூட்டினார். இந்த மந்திராலோசனை சபையில் மாமல்லர் சிறிதும் பொறுமையின்றி ஆத்திரப்பட்டு எரிந்து விழுந்ததைப் போல் அதற்குமுன் எப்போதும் நடந்து கொண்டது கிடையாது. ஓலையைப் பார்க்கும்போதே அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. எல்லாரும் கேட்கும்படி ஓலை படிக்கப்பட்ட போது மாமல்லரின் கண்களில் தணல் பறந்தது. எந்தக் காரணத்தினாலோ அந்தச் சமாதானக் கோரிக்கை சக்கரவர்த்திக்குப் பிடிக்கவில்லையென்பது அவருடைய முகபாவத்திலிருந்தும் பேச்சுவார்த்தைகளிலிருந்தும் அங்கிருந்த மற்றவர்களுக்கு நன்றாய்த் தெரிந்தது. எனினும், சக்கரவர்த்தி அந்த ஓலை விஷயமாக அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்ட போது தங்கள் மனத்தில் பட்டதை ஒவ்வொருவும் உள்ளது உள்ளபடி சொன்னார்கள். அதாவது, சரணாகதியை ஒப்புக் கொண்டு நகரத்தையும் நகர மக்களையும் காப்பாற்ற வேண்டியதுதான் என்று சொன்னார்கள்.

சக்கரவர்த்தியின் கோபம் மேலும் மேலும் அதிகமாகி வந்தது. ஒவ்வொருவரும் சமாதானத்துக்கு அனுகூலமாக அபிப்பிராயம் சொல்லி வந்த போது மாமல்லர், "அப்படியா?" "ஓஹோ!" என்று பரிகாசக் குரலில் சொல்லிக் கொண்டு வந்தார். சேனாதிபதி பரஞ்சோதியும் இலங்கை மானவன்மரும் மட்டும் அபிப்பிராயம் சொல்லாமலிருந்தார்கள். "நீங்கள் ஏன் ஒன்றும் சொல்லாமல் சும்மா நிற்கிறீர்கள்? சேனாதிபதி! உங்களுடைய அபிப்பிராயம் என்ன?" என்று மாமல்லர் குறிப்பிட்டுக் கேட்டார். "பிரபு! நானும் சண்டையை நிறுத்த வேண்டும் என்றுதான் அபிப்பிராயப்படுகிறேன். குற்றமற்ற ஜனங்களைக் கஷ்டப்படுத்துவதில் என்ன பிரயோசனம்? மேலும் சரணாகதி அடைவதாக அவர்கள் சக்கரவர்த்தியிடம் உயிர்ப் பிச்சைக் கேட்கும் போது வேறு என்ன செய்ய முடியும்?" என்றார் பரஞ்சோதி.

"சேனாதிபதி! என்ன சொல்கிறீர்? நீர் கூடவா இப்படியெல்லாம் தர்ம நியாயம் பேச ஆரம்பித்து விட்டீர்? புலிகேசி நம் நாட்டில் செய்த அக்கிரமங்களை எல்லாம் மறந்து விட்டீரா? இந்த நகரத்தை நாம் எரித்துச் சாம்பலாக்க வேண்டிய அவசியம் இருக்கிறதென்று உமக்குத் தெரியாதா? தெரிந்திருந்துமா இப்படி பேசுகிறீர்? திடீரென்று உங்களுக்கெல்லாம் என்ன வந்து விட்டது? யுத்தம் போதும் போதும் என்று ஆகி விட்டதா? இரத்தத்தைக் கண்டு பயந்து விட்டீர்களா? உயிர் மேலும் உடைமை மேலும் ஆசை வந்து விட்டதா? மானவன்மரே! நீர் ஒருவராவது என்னுடைய கட்சியில் இருக்கிறீரா? அல்லது நீரும் இந்தப் புத்த பகவானுடைய பரமானந்த சிஷ்யர்களுடன் சேர்ந்து சாத்விகத்தை மேற் கொண்டு அஹிம்சாவாதியாகி விட்டீரா?" என்று தீச்சுடர் போன்ற வார்த்தைகளை மாமல்லர் பொழிந்தார்.

மாமல்லருடைய மனப்போக்கை மானவன்மர் நன்கு உணர்ந்திருந்தார். சிவகாமிக்கு மாமல்லர் கொடுத்திருந்த வாக்குறுதியை எந்தவிதத்திலும் நிறைவேற்ற விரும்புகிறார் என்பதையும், சமாதானக் கோரிக்கையை ஒப்புக் கொண்டால் மேற்படி வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். உண்மையில் சேனாதிபதி பரஞ்சோதி சமாதானத்துக்குச் சாதகமாக அபிப்பிராயம் சொன்னது மானவன்மருக்கு மிக்க வியப்பையளித்தது. சமாதானத்துக்கு இணங்கி விட்டால், கோட்டைத் தாக்குதலுக்கென்று மானவன்மர் விசேஷப் பயிற்சி அளித்திருந்த யானைப் படையை உபயோகப்படுத்துவதற்குச் சந்தர்ப்பமே இல்லாமல் போய் விடும் என்பது ஒரு பக்கம் அவர் மனத்தில் கிடந்தது.

இந்த நிலைமையில் மானவன்மர், "பிரபு! பல்லவ நாட்டு வீர தளபதிகள் எல்லாரும் ஒருவித அபிப்பிராயம் சொல்லியிருக்கும் போது வேறு அபிப்பிராயம் கூற எனக்குத் தயக்கமாயிருக்கிறது. அதிலும் சேனாதிபதியாருக்கு மாறாக எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை!" என்றார். மாமல்லர் அதிகாரத்தொனியில், "மானவன்மரே! எல்லாரும் ஒரே அபிப்பிராயத்தையே தெரிவிக்க வேண்டுமென்றிருந்தால் இந்த மந்திராலோசனை சபை கூட வேண்டியதில்லை. இங்கே எல்லாரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தைத் தைரியமாகக் கூறலாம். யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை!" என்று கர்ஜித்தார்.

"பிரபு! தாங்கள் ஆக்ஞாபிப்பதால் சொல்கிறேன். இந்தச் சமாதானக் கோரிக்கையை ஒப்புக் கொள்ளக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. செய்கிற பாதகத்தையெல்லாம் செய்து விட்டு அப்புறம் சரணாகதி அடைந்து விட்டால்போதுமா?" என்பதற்குள் சேனாதிபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "வாதாபி நகர ஜனங்கள் என்ன பாதகத்தைச் செய்தார்கள்? பாதகன் புலிகேசி செய்த காரியத்திற்கு அவர்களை எப்படிப் பொறுப்பாக்க முடியும்?" என்று கேட்டார். அதற்கு மானவன்மர், "சேனாதிபதி இவ்விதம் சொல்வது எனக்கு மிக்க வியப்பாயிருக்கிறது. புலிகேசி செய்த அக்கிரமங்களையெல்லாம் இந்த ஜனங்கள் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டுதானே இருந்தார்கள்? அந்த அக்கிரமங்களைத் தடுப்பதற்கு இவர்கள் எந்த விதத்திலாவது முயன்றார்களா? பாதகன் புலிகேசிக்குப் பலம் அளித்ததெல்லாம் இவர்கள்தானே? புலிகேசி கொள்ளையடித்துக் கொண்டு வந்த பொருள்களையெல்லாம் பகிர்ந்து அனுபவித்தது இவர்கள்தானே? புலிகேசி சிறைப் பிடித்துக் கொண்டு வந்த ஆண்களையும் பெண்களையும் அடிமை கொண்டு வேலை வாங்கியது இவர்கள்தானே? ஆயனச் சிற்பியாரின் குமாரியை இந்த நகரின் நாற்சந்தியில் நடனமாடச் சொல்லிப் பார்த்து இந்த நகர மக்கள் பல்லவ சாம்ராஜ்யத்தையே அவமதித்து அழியாவசைக்கு ஆளாக்கவில்லையா? இதையெல்லாம் நமது வீர சேனாதிபதி மறந்து விட்டாரா?" என்று மானவன்மர் கூறிய போது மாமல்லரின் பார்வை கூரிய வாளைப் போல் சேனாதிபதி பரஞ்சோதியின் மீது பாய்ந்தது.

அப்போது சேனாதிபதி பரஞ்சோதி, "பல்லவேந்திரா! மானவன்மருக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் எனக்கு ஞாபகம் இல்லாமல் போய் விடாது. அதைப் பற்றித் தங்களிடம் தனியாகப் பிரஸ்தாபிக்க வேண்டுமென்று இருந்தேன். ஆனால், மானவன்மர் சிவகாமி தேவியைப் பற்றிப் பேச்சு எடுத்து விட்டபடியால் நானும் இப்போதே சொல்லி விடுகிறேன். சமாதான ஓலை கொண்டு வந்த தூதர்கள் இன்னோர் ஓலை எனக்குத் தனியாகக் கொண்டு வந்தார்கள். சிவகாமிதேவி எழுதிய அந்த ஓலை இதோ இருக்கிறது. தயவு செய்து பார்த்தருள வேண்டும்!" என்று சொல்லித் தமது வாளின் உறையிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தார். பல்லவேந்திரர் அந்த ஓலையைப் படித்தபோது ஏற்கெனவே சிவந்திருந்த அவருடைய கண்கள் இன்னும் அதிகமாகச் சிவந்து தணற்பிழம்புகளாகத் தோன்றின. அளவு மீறிய கோபத்தினால் ஓலையைப் பிடித்திருந்த அவருடைய கைகள் நடுங்கின. படித்து முடித்ததும் அந்தப் பனை ஓலைச் சுருளைச் சக்கரவர்த்தி தம் இரு கரங்களினாலும் கிழித்துப் போட யத்தனித்தார். அப்போது சேனாதிபதி குறுக்கிட்டு, "பல்லவேந்திரா! ஓலை என்னுடையது, கருணை கூர்ந்து திருப்பிக் கொடுத்தருள வேண்டும்!" என்றார்.



முப்பத்து நான்காம் அத்தியாயம்
சிவகாமியின் ஓலை

சேனாதிபதி பரஞ்சோதிக்குச் சிவகாமி அனுப்பியிருந்த ஓலையில் பின்வருமாறு எழுதியிருந்தது: "வீரபல்லவ சைனியத்தின் சேனாதிபதியும் என் அன்புக்குரிய சகோதரருமான பரஞ்சோதியாருக்கு ஆயனர் மகள் சிவகாமி எழுதிக்கொண்டது. இந்த அபலையை, அநாதையை, ஒன்பது வருஷ காலம் தாங்களும் பல்லவ குமாரரும் மறந்து விடாமல் நினைவு வைத்துக் கொண்டிருந்து என் சபதத்தை நிறைவேற்றி வைப்பதற்காகப் படையெடுத்து வந்திருப்பதை அறிந்து கொண்டேன். கோட்டைக்கு வடதிசையில் நடந்த பெரு யுத்தத்தைப்பற்றியும் இங்கே செய்தி வந்திருக்கிறது. அந்த யுத்தத்தில் வாதாபிச் சக்கிரவர்த்தி மாண்டிருக்க வேண்டுமென்று இங்குள்ளவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த வாதாபிக் கோட்டையின் காவலரான பீமசேனர் என்னை வந்து பார்த்தது ஓலை எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி என் மனப்பூர்வமான சம்மதத்துடன் இதை எழுதுகிறேன். தாங்களும் பல்லவ குமாரரும் எந்த நோக்கத்துடன் படையெட்து வந்தீர்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. சளுக்கிய சைனியமும் வாதாபிச் சக்ரவர்த்தியும் நாச மடைந்தார்கள் இத்துடன் யுத்தத்தை நிறுத்தி வாதாபி கோட்டையின் சரணாகதியை ஒப்புக்கொள்ளும்படி ரொம்பவும் வேண்டிக் கொள்ளுகிறேன். "நான் அன்று செய்த சபதத்தைப் பல்லவகுமாரர் அதன்படியே நிறைவேற்ற வேண்டும் என்னும் விருப்பம் இப்போது எனக்கு இல்லை.அதை அப்படியே நிறைவேற்றுவதென்றால், இந்தப் பெரிய நகரத்தின் குற்றமற்ற ஜனங்கள் வீடு வாசல்களை இழந்து சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளாகும்படி நேரிடும். அவர்களை அத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்க நான் பிரியப்படவில்லை. அவ்விதம் செய்தால் யாருக்கு என்ன பிரயோசனம்?

"ஏற்கனவே நடந்த யுத்தத்தில் இரு தரப்பிலும் ரொம்பவும் உயிர்ச்சேதம் நேர்ந்திருப்பது தெரிகிறது. என் காரணமாக ஏற்பட்ட இந்த விபரீத படுகொலையை நினைத்து ரொம்பவும் வருத்தப்படுகிறேன். "அருமைச் சகோதரரே! கடந்த ஒன்பது வருஷ காலம் இந்த நகரத்தில் தன்னந்தனியாக நான் வசித்த போது ஓயாமல் என்மனம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. பல்லவ குமாரரும் தாங்களும் முன்னொரு தடவை வந்து என்னை அழைத்த சமயம் நான் உங்களுடன் கிளம்பி வராதது எவ்வளவு பெரும் பிசகு என்பதை உணர்ந்து கொண்டேன். என்சபதத்தை நிறைவேற்றிய பிறகு தான் இந்த நகரை விட்டுப் புறப்படுவேன் என்று பிடிவாதம் பிடித்தது எவ்வளவு அறிவீனம் என்பதை உணர்ந்து வருந்தினேன். ஆறு அறிவு படைத்த மனிதர்கள் யுததம் என்ற பெயரால் ஒருவரையொருவர் கொன்று கொள்வது எவ்வளவு பைத்தியக்காரச் செயல்?

"கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களை மனிதர்கள் கொல்வது தெய்வ சம்மதமாகுமா? ஒரு சிறு அற்பமான உயிரைக் கூட நம்மால் சிருஷ்டிக்க முடியாமலிருக்கும் போது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வது எவ்வளவு பாபமான காரியம்? இதையெல்லாம் நினைத்துப் பார்க்கப் பார்க்க என்னால் இந்தப் பயங்கரமான பெரிய யுத்தம் வந்துவிட்டதே என்று ரொம்பவும் துக்கப்படுகிறேன். "உலகத்தில் மனிதர்கள் குற்றம் செய்தால் அதைற்குத் தண்டனையளிக்கவோ அல்லது மன்னித்து அருளவோ எல்லாம் அறிந்த இறைவன் இருக்கிறான். 'அவன் அன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது' என்று பெரியோர் சொல்லுகின்றனர். அப்படியிருக்க மனிதர்கள் தங்களையொத்த மற்ற மனிதர்களின் குற்றங்களுக்குத் தண்டனை விதிக்க ஏன் முற்பட வேண்டும்?

"சகோதரரே!போனது போகட்டும். இனிமேலாவது இரத்த வெள்ளம் பெருகுவது நிற்கட்டும். என்னுடைய மூடப் பிடி வாதத்தினால் உங்களுக்கொல்லாம் நான் கொடுத்த கஷ்டங்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள். பல்லவ குமாரரிடம் நான் ரொம்பவும் கேட்டுக் கொண்டதாகச் சொல்லி யுத்தத்தை நிறுத்தச் சொல்லுங்கள். கோட்டை முற்றுகை ஆரம்பமானதிலிருந்து என்னிடம் நகரவாசிகள் ரெம்பவும் மரியாதை காடடி வருகிறார்கள். பல்லவ குமாரர் கோட்டைச் சரணாகதியை ஒப்புக் கொண்டால், என்னைப் பல்லக்கிலே ஏற்றிச் சகல மரியாதைகளுடனும் வெளியே அனுப்பி வைக்கச் சித்தமாய் ருக்கிறார்கள். இதையெல்லாம் பல்லவ குமாரரிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று என் உள்ளம் துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. இன்று சூரியன் மலைவாயில் இறங்குவதற்கு முன்னால் தங்களையும் பல்லவ குமாரரையும் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். என் அருமைத் தந்தையின் பாத கமலங்களில் என்னுடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிக்கிறேன்."

மாமல்லருடைய குணப்பண்பையும் மனப்போக்கையும் நன்கு அறிந்துள்ள நாம், சிவகாமி தேவியின் மேற்படி ஓலை அவருக்கு ஏன் அத்தனை கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது என்று ஒருவாறு ஊகிக்கலாம். ஓலையைக் கிழிக்கப்போனவரிடம் சேனாதிபதி, "அது என் ஓலை" என்று சொன்னதும், மாமல்லரின் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று. "அப்படியா? இதோ உமது ஓலையை எடுத்துக் கொள்ளும், சேனாதிபதி! திவ்யமாக எடுத்துக் கொள்ளும். இந்தத் தர்மோபதேச மகாமந்திர ஓலையை நீரே வைத்துக் கொண்டு பூஜை செய்யும்!" என்று சொல்லிக் கொண்டே மாமல்லர் ஓலையை வீசி விட்டெறிந்தார்.

சேனாதிபதி அதைப் பயபக்தியுடனே பொறுக்கி எடுத்துக் கொண்டு கூறினார் : "ஆம், பல்லவேந்திரா! இது எனக்கு மகா மந்திரோபதேச ஓலைதான். திருநாவுக்கரசர் பெருமானிடம் சிவதீட்சை பெறுவதற்காகக் காஞ்சி நகரத்துக்கு வந்தேன். ஆனால் அந்த பாக்கியம் அன்று கிடைக்கவில்லை. ஆனால், சிவகாமி தேவியிடம் உபதேசம் பெறும் பாக்கியம் இப்போது கிடைத்தது. நான் ஆசாரியராக வரித்த ஆயனச் சிற்பியாருடைய குமாரியல்லவா சிவகாமி தேவி!"

மாமல்லருடைய கோபம் இப்போது வரம்புகளையெல்லாம் கடந்து விட்டது. சிவகாமி விஷயமாக நாலு பேருக்கு முன்னால் இதுவரை பேசி அறியாதவர், அத்தனை பேருக்கும் முன்னால் வெட்ட வெளிச்சமாகப் பின்வரும் ஆங்கார வார்த்தை களைக் கொட்டினார் : "சேனாதிபதி! என் வாழ்நாளில் இரண்டு தவறுகளை நான் செய்திருக்கிறேன். சிற்பியின் மகளைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க முயன்றேன். அந்த முயற்சியில் தோல்வியுற்றேன். தமிழ் ஓதவும் சிற்ப வேலை கற்கவும் வந்த உம்மைப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதியாக்கினேன்! அதுவும் நான் செய்த பெருந்தவறு ஆயிற்று. சிற்பியின் மகள் சிம்மாசனத்துக்குத் தகுதியற்றவள் என்பதை நிரூபித்து விட்டாள். நாடி பார்க்கும் வைத்தியரின் மகன் நாடு பிடிக்கும் சேனைத் தலைவனாக யோக்கியதை அடைய முடியாது என்பதை நீர் நிரூபித்து விட்டீர்..."சேனாதிபதி பரஞ்சோதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவமானமும் ஆத்திரமும் தொண்டையை அடைக்க, தழுதழுத்த குரலில், "பல்லவேந்திரா! ..." என்று ஏதோ சொல்வதற்கு ஆரம்பித்தார்.

"சேனாதிபதி! நிறுத்தும்!" என்று மாமல்லர் கர்ஜனை செய்ததும், சேனாதிபதி வாயடைத்துப் போய் நின்றார். இதுவரை மாமல்லர் அவரிடம் இம்மாதிரி பெசியதே இல்லை. மரியாதைக் குறைவாகவோ மனம் புண்படும்படியோ அவரைப் பார்த்து ஒரு வார்த்தையும் கூறியதே இல்லை. மாமல்லரின் இந்தப் புதிய ருத்ராவதாரம் பரஞ்சோதிக்குப் பிடிபடவே இல்லை. மாமல்லர் மேலும் சொல்லம்புகளைப் பொழிந்தார் : "என்னை யார் என்று எண்ணிக் கொண்டீர்? இந்தச் சிற்பி மகள் தான் என்னை யார் என்பதாக எண்ணிக்கொண்டாள்? என்ன தைரியத்தினால் இந்தமாதிரி ஓலை எழுத அவள் துணிந்தாள்? நீங்கள் இரண்டு பேரும் பல்லவ குலத்தில் பெருமையைக் குலைத்துப் பாழாக்க இப்படி எத்தனை காலமாகச் சதி செய்தீர்கள்? இந்த மூடப் பெண் புத்தியில்லாமல் பிடிவாதம் பிடிக்கும் போது இவளுடைய பிடிவாததுக்காக நாம் யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இவள் பார்த்து வேண்டாம் என்றால் உடனே இவளுடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு யுத்தத்தை நிறுத்தி விட வேண்டுமா? பல்லவ சாம்ராஜ்யமே இவளுக்காகத்தான் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டாளா? பல்லவ நாட்டுப் பிரஜைகளும் பல்லவ சக்கரவர்த்தியும் இவளுக்குத் தொண்டு செய்யும் அடிமைகள் என்று எண்ணிக் கொண்டல்லவா இப்படி ஓலை எழுதத் துணிந்தாள்? ஒன்பது வருஷம் பிரயத்தனம் செய்து இந்த மகத்தான சைனியத்துடன் நான் படையெடுத்து வந்தது இந்தச் சலன புத்தியுள்ள சிற்பி மகளின் மூட சபதத்தை நிறைவேற்றுதற்காக அல்ல; அதை நீர் நன்றாகத் தெரிந்து கொள்ளும். பல்லவ குலத்தின் பங்கமுற்ற கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவே நான் வந்தேன். மகேந்திர சக்கரவர்த்தி மரணத் தருவாயில் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றும் பொருட்டுப் படையெடுத்து வந்தேன். பதினெட்டு வயதில் மகாமல்லன் என்று பட்டம் பெற்ற நரசிம்ம பல்லவனைப் பார்த்து நானிலம் சிரிக்காதிருக்கும் பொருட்டு வந்தேன். அற்ப புத்தியுள்ள சிற்பி மகளின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக வரவில்லை. இவளிடம் தர்மோபதேசம் பெற்று மோட்சம் அடைவதற்காகவும் நான் வரவில்லை. மேலே யுத்தத்தை நடத்துவதற்கு உமக்கு இஷ்டமில்லையென்று தெரிகிறபடியால் உமக்கு இந்த க்ஷணமே சேனாதிபதி உத்தியோகத்திலிருந்து விடுதலை தருகிறேன்!".

இவ்வளவு நேரமும் சேனாதிபதியையே பார்த்துப் பேசிய மாமல்லர் சட்டென்று இலங்கை இளவரசரைத் திரும்பிப் பார்த்து, "மானவன்மரே! நம்முடைய சேனாதிபதி இப்படி நல்ல சமயத்தில் என்னைக் கைவிட்டு விடுவார் என்று அறிந்து தான் உம்மையும் உடன் அழைத்து வந்தேன். நல்லவேளையாக என் விருப்பத்தின்படி நடக்க நீர் ஒருவராவது இருக்கிறீரே! கோட்டையைத் தாக்குவதற்கு உடனே ஏற்பாடு செய்யும். இன்றிரவே தாக்குதல் ஆரம்பமாகி விட வேண்டும்!" என்றார். கோடை இடி குமுறி இடித்தாற் போன்ற குரலில் மாமல்லர் இவ்விதம் கர்ஜனை செய்து ஓய்ந்ததும் சிறிது நேரம் அங்கு நிசப்தம் குடிகொண்டிருந்தது. அனைவரும் திகைத்துப் போய் நின்றார்கள். மாமல்லரையும் பரஞ்சோதியையும் இரண்டு உடலும் ஓருயிருமான நண்பர்கள் என்று அவர்கள் அதுகாறும் எண்ணியிருந்தார்கள். பரஞ்சோதியைப் பார்த்து மாமல்லர் இவ்வளவு கடுமையான மொழிகளைக் கூறியது அவர்களைப் பெருங்கலக்கத்திற்கு உள்ளாக்கியது.

மானவன்மரோ, "இதுஎன்ன? பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததே! சேனாதிபதியை என்றென்றறைக்கும் நமது விரோதி யாக்கிக்கொண்டோ மே?" என்று வேதனையடைந்து சும்மா நின்றார். "மானவர்மரே! ஏன் நிற்கிறீர் என்று? " மாமல்லர் அதட்டவும், மானவர்வர் பரஞ்சோதியைப் பார்த்தார். மற்றவர்களைப் போலவே அத்தனை நேரம் திகைத்து நின்ற பரஞ்சோதி அப்போது ஓர் அடி முன்னால் வந்து தழுதழுத்த குரலில், பல்லவேந்திரா! பன்னிரண்டுவருஷம் நான் பல்லவ சாம்ராஜ்யத்துக்காக நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு ஒருவரம் அருளவேண்டும்!" என்றார்.

மாமல்லர் மறுமொழி ஒன்றும் சொல்லாமலிருக்கவே பரஞ்சோதி மேலும் கூறினார்: "பிரபு! தாங்களும் நானும் இதோ தெரியும் இந்த வாதாபி நகரத்துக்குள்ளே நாற்சந்தியில் நிற்கும் புலிகேசியின் ஜயஸ்தம்பத்துக்கருகில் நின்று ஓரு சபதம் எடுத்துக் கொண்டோ ம். கூடிய சீக்கிரம் படையெடுத்து வந்து அந்தப் பொய் ஜயஸ்தம்பத்தை பெயர்த்துத் தள்ளி விட்டு அதற்குப் பதிலாகப் பல்லவ விஜயத்தின் ஞாபக ஸ்தம்பத்தை அதே இடத்தில் நிலைநாட்டவும், சிவகாமி தேவியை விடுதலை செய்து கொண்டு போகவும் பிரதிக்ஞை செய்தோம். அதை நிறைவேற்றும் பொருட்டுச் சென்ற ஒன்பது வருஷகாலமாக இரவும் பகலும் உழைத்து வந்தோம். அந்த பிரதிக்ஞை நிறைவேறும் வரையில் இந்தச் சேனாதிபதி பதவியை அடியேன் வகிப்பதற்கு அனுமதி கொடுங்கள்!" என்றார்.

மாமல்லரின் முகத்தில் கோபாவேசம் தணிந்து ஓரளவு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காணப்பட்டன. "இதற்கு இவ்வளவு சுற்றி வளைத்து வரம் கேட்பானேன்? சேனாதிபதி! நான் விரும்புவதும் அதுவேதான். உடனே தாக்குதலை ஆரம்பியுங்கள்!" என்றார். "தயவு செய்து மன்னிக்க வேண்டும்.இன்னும் ஒரு சிறு கோரிக்கை, பிரபு! கோட்டையைத் தாக்க ஆரம்பித்து விட்டால் ஒரு பகல் ஓர் இரவுக்குள் துரிதமாக முடித்து வெற்றி பெற வேண்டும். அதற்குத் தக்க ஆயத்தம் செய்வதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுங்கள்!" என்று சேனாதிபதி விநயத்துடன் கேட்டார். மாமல்லரின் மௌனம் அவர் வேண்டா வெறுப்பாகச் சேனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்கியதற்கு அறிகுறியாய் இருந்தது.



முப்பத்தைந்தாம் அத்தியாயம்
வாதாபி கணபதி

மனிதர்களுக்குள்ளே இருவகை சுபாவம் உள்ளவர்கள் உண்டு. ஒருவகையார் கொடூரமான காரியங்கள்களையும் காட்சிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றைக் குறித்து அலட்சியமாக எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் எண்ணத் தொடங்குகிறார்கள். அப்புறம் அத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வது அவர்களுக்குச் சகஜமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பரிதாபம் அளிக்கும் சம்பவங்கள் நாளடைவில் அவர்களுடைய மனத்தில் எத்தகைய உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. இன்னொரு வகை சுபாவமுள்ளவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். கொடூரமான காட்சிகளைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய உள்ளம் உணர்ச்சியின்றித் தடித்துப் போவதற்குப் பதிலாக ஆத்திரம் அதிகமாகிறது. பரிதாப சம்பவங்களைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய மனவேதனை மிகுதியாகிறது. அநீதிகளையும், அக்கிரமங்களையும் காணக் காண அவற்றை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமென்ற பிடிவாதம் அதிகமாக வளர்கிறது. பிந்திய சுபாவமுள்ள மாந்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி பரஞ்சோதி. ரத்தத்தைப் பார்க்கப் பார்க்க ரத்த வெறி அதிகமாகும் ராட்சஸ வர்க்கத்தை அவர் சேர்ந்தவரல்ல. வாதாபிப் பெரும் போரில் போர்க்களத்திலிருந்து ஓடிய ரத்த வெள்ளத்தையும் மலைமலையாகக் குவித்து கிடந்த மனித உடல்களையும்பார்த்து, படுகாயமடைந்து உயிர்போகும் தறுவாயில் அலறிக் கொண்டிருந்தவர்களின் ஓலத்தையும் கேட்ட பிறகு, பரஞ்சோதியின் உள்ளத்தில், 'இந்தப் பயங்கரமெல்லாம் என்னத்திற்கு? மனிதருக்கு மனிதர் கொடுமை இழைப்பதும் கொன்று கொண்டு சாவதும் எதற்காக' என்ற கேள்வியும் எழுந்திருந்தன.

அத்தகைய மன நிலைமையில் சிவகாமி தேவியின் ஓலை வரவே, அதில் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று அவருக்குப் பட்டது. மேலும் அவ்விதக் கொடுஞ் செயல்களில் தம்மைப் புகவொட்டாமல் தடுத்தாட்கொள் வதற்காக இறைவனே சிவகாமி தேவியின் மூலம் அத்தகைய உபதேசத்தைச் செய்தருளியதாக அவர் எண்ணினார். இல்லாவிடில், மாமல்லருக்கு நேராக எழுதாமல் ஆயனர் மகள் தமக்கு அந்த ஓலையை எழுத வேண்டிய காரணம் என்ன? சிவகாமி தேவியே தமது சபதத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி விட்டபடியால், மாமல்லரும் அதற்கு உடனே இணங்கி விடுவார் என்று பரஞ்சோதி கருதினார். புலிகேசி பத்து வருஷங்களுக்கு முன்னால் பல்லவ நாட்டில் செய்த கொடுமைகளுக்காக இப்போது வாதாபி நகரின் ஜனங்கள் மீது பழி தீர்த்துக் கொள்வதில் யாருக்கு லாபம்? மேலும், இத்துடன் போகும் என்பது என்ன நிச்சயம்! பத்து வருஷங்களுக்கு முன்னால் புலிகேசி பல்லவ நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக இப்போது வாதாபி மக்கள் மீது நாம் பழிவாங்குகிறோம். அதே மாதிரி இன்னும் சில வருஷம் கழித்துச் சளுக்க வம்சத்தார் மறுபடி பல்லவ நாட்டின் மீது பழிவாங்கப் பிரயத்தனப் படலாம் அல்லவா? நாட்டை ஆளும் மன்னர்கள் தங்களுடைய சொந்த கௌரவத்தையும் குல கௌரவத்தையும் நிலைநாட்டுவதற்காக ஒருவரையொருவர் பழிவாங்க முற்படுவதனால், இருதரப்பிலும் குற்ற மற்ற ஜனங்கள் அல்லவா சொல்ல முடியாத எத்தனையோ அவதிகளுக்கு உள்ளாகிறார்கள்.

இப்படியெல்லாம் சேனாதிபதி பரஞ்சோதியின் உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது. இடையிடையே மாமல்லர் விடுத்த கூரிய சொல்லம்புகளின் நினைவு அவருக்கு வேதனையளித்துக் கொண்டிருந்தது. மாமல்லருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றே என்பதாக எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாக அல்லவா போய் விட்டது? தம்முடைய யோசனையை அவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துதோடு, அவ்வளவு அகௌரவப்படுத்திப் பேசி விட்டாரே! அரசகுலத்தினரின் சுபாவமே இப்படித்தான் போலும்! அதிலும் அந்த இலங்கை நாட்டான் வந்ததிலிருந்து மாமல்லருடைய சுபாவமே மாறிப் போய் விட்டது! எல்லாம் அவனால் வந்த வினைதான். மாமல்லரிடம் மூன்று நாள் அவகாசம் கொடுக்கும்படி சேனாதிபதி பரஞ்சோதி கோரிய போது, கோட்டைக் தாக்குதலுக்குத் தக்க ஆயத்தம் செய்வதற்காகவே அவ்விதம் கோருவதாகக் கூறினார். இந்தக் காரணம் என்னவோ உண்மைதான். ஆயத்தமில்லாமல் ஆரம்பித்துப் பத்து நாளில் செய்யக் கூடிய காரியத்தைத் தகுந்த ஆயத்தங்களுடன் ஆரம்பித்து ஒரே நாளில் செய்து விடலாம் என்ற உண்மையைச் சேனாதிபதி பரஞ்சோதி தமது அனுபவத்தில் கண்டறிந்திருந்தார். எனவே, அந்த முறையைத் தம் யுத்த தந்திரங்களின் முதன்மையான தந்திரமாக அநுஷ்டித்து வந்தார்.

ஆனால் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டதற்கு மேற்கூறிய காரணத்தைத் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அது, இன்னமும் வாதாபிக் கோட்டைக்குள்ளே இருந்த சிவகாமி தேவியைக் கோட்டைத் தாக்குதல் ஆரம்பிப்பதற்குள்ளே பத்திரமாக வெளியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான். பல்லவ சைனியம் கோட்டையை வெளியிலிருந்து தாக்க ஆரம்பிக்கும் போது கோட்டைக்குள்ளே ஆயனரின் குமாரிக்கு ஏதேனும் ஆபத்து விளையாது என்பது என்ன நிச்சயம்? இதைப் பற்றி ஏற்கனவே மாமல்லரும் பரஞ்சோதியும் கலந்து யோசனை செய்து கோட்டைக்குள்ளே ஒரு சிலரை முன்னதாக அனுப்புவதற்குச் சுரங்க வழி ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் சத்ருக்னனையும் குண்டோ தரனையும் ஏவியிருந்தார்கள். இவர்களுடைய முயற்சி என்ன ஆகிறது என்று பார்ப்பதற்காகவும் சேனாதிபதி மூன்று நாள் அவகாசம் கேட்டார்.

அந்த மூன்று நாளும் முடியும் சமயம் இப்போது வந்துவிட்டது. மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம். அன்றிஇரவு மாமல்லர் தமது முடிவைச் சொல்லி விட்டால், உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கும். ஆனால், சத்ருக்னனும் குண்டோ தரனும் இன்னும் வந்தபாடில்லை. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வது? மாமல்லர் ஒருவேளைதம் கருத்தை மாற்றிக் கொண்டு சண்டையில்லாமலே கோட்டையின் சரணாகதியை ஒப்புக் கொள்ளுவதாயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில், சிவகாமி தேவிக்கு அபாயம் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது எப்படி?

இவ்விதமெல்லாம் பலவாறாகச் சிந்தனை செய்து கொண்டே பல்லவ சேனாதிபதி வாதாபிக் கோட்டையின் மதில் ஓரமாகக் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். கோட்டைக்கு உட்புறத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே எல்லையற்ற மௌனம் சதா குடிகொண்டிருந்திருக்க அதற்கு மாறாக இப்போது ஏதோ நானாவிதச் சப்தங்கள் எழுந்து கொண்டிருந்தன. இதனால் பரஞ்சோதியின் உள்ளக் கொந்தளிப்பு அதிகமாயிற்று. கோட்டையின் பிரதான முன்வாசலை அடைந்ததும் பரஞ்சோதி குதிரையை நிறுத்தினார். கோட்டையைத் தாக்குவதாயிருந்தால் அந்த பிரதான வாசலின் பிரம்மாண்டமான கதவுகளை முதல் முதலில் உடைத்தெறிந்தாக வேண்டும். அப்போதுதான் ஏககாலத்தில் அநேக வீரர்கள் உள்ளே புகுவது சாத்தியமாகும். சொற்ப நேரத்தில் நகரைக் கைப்பற்ற முடியும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட்டிருந்தன வெனினும் கடைசி முறையாக யானைப் படை வீரர்களுக்குக் கட்டளையிடுவதற்கு முன்னால் ஒரு தடவை அந்த வாசலை நன்றாய்க் கவனிக்கச் சேனாதிபதி விரும்பினார்.

எனவே, குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: 'விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும் என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன்.

இவ்வாறு பரஞ்சோதி பிரார்த்தனை நடத்தி முடித்த அதே கணத்தில் அந்தக் கோட்டை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் நின்ற பல்லவ வீரர்களிடையே மிக்கப் பரபரப்பு காணப்பட்டது. கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தவண்ணம் அவர்கள் ஹாஹாகாரம் செய்தார்கள். அது சேனாதிபதியின் கவனத்தையும் கவரவே, அவர் அந்த வீரர்களை நோக்கினார். அவர்களில் ஒருவன், "சேனாதிபதி! வெள்ளைக் கொடி இறங்கி விட்டது!" என்று கூவினான். சேனாதிபதி தாமும் அவர்களிருந்த இடத்துக்கு விரைந்து சென்று கோட்டை வாசலின் உச்சியைப் பார்த்தார். மூன்று நாளாக அங்கே பறந்து கொண்டிருந்த சமாதான வெள்ளைக் கொடி காணப்படவில்லை!



முப்பத்தாறாம் அத்தியாயம்
"வெற்றி அல்லது மரணம்"

வெள்ளைக் கொடி இறக்கப்பட்டதன் பொருள் என்ன, அதன் காரணம் என்னவாயிருக்கும் என்று யோசித்தவாறு சேனாதிபதி பரஞ்சோதி ஒரு நிமிஷம் நின்ற இடத்திலே நின்றார். அந்த நிமிஷத்திலேயே அவர் மனத்தில் உதித்த கேள்விகளுக்கு விடைசொல்வது போன்ற இந்திர ஜாலக் காட்சி கோட்டை மதில் நெடுகக் காணப்பட்டது. இத்தனை நாளும் வெறுமையாயிருந்த அந்த நெடிய விசாலமான மதிலின் மீது கையில் வேல் பிடித்த வீரர்கள் வரிசையாக நின்றார்கள். மாலை வேளையின் மஞ்சள் வெயிலில் அவர்கள் தலையில் அணிந்திருந்த இரும்புத் தொப்பிகளும், மார்பில் அணிந்திருந்த செப்புக் கவசங்களும், கையில் பிடித்த வேல்களின் கூரிய முனைகளும் பளபளவென்று ஒளி வீசித் திகழ்ந்தன.

"மகாராஜாதி ராஜ, சளுக்க குல திலக, திரிபுவன சக்கரவர்த்தி, சத்தியாச்ரய புலிகேசி நீடுழி வாழ்க!" என்று இடி முழக்கக் குரல் ஒலிக்க, அதைத் தொடர்ந்து, "ஜயவிஜயீபவ!" என்று ஆயிரக்கணக்கான குரல்கள் ஏக காலத்தில் ஆர்ப்பரித்தன. அந்த அதிசயக் காட்சியைப் பார்த்துக் கொண்டு சேனாதிபதி பரஞ்சோதி சிறிது நேரம் திகைப்புற்று நின்றார். "அதோ! அதோ!" என்று அவர் பக்கத்திலிருந்த வீரர்களில் ஒருவன் கூவியவண்ணம் கோட்டை முன் வாசலின் உச்சியைச் சுட்டிக்காட்டினான. அங்கே நெடிதுயர்ந்த கம்பீர உருவம் ஒன்று நின்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது. ஆ! அந்த உருவம் புலிகேசிச் சக்கரவர்த்தியினுடையதுதான்; சந்தேகமில்லை.

வெள்ளைக் கொடி இறங்கியதன் தாத்பரியம் பரஞ்சோதிக்கு அந்தக் கணமே நன்கு விளங்கி விட்டது. புலிகேசிச் சக்கரவர்த்தி யுத்தகளத்திலிருந்து தப்பிப் பிழைத்து இரகசியச் சுரங்க வழி மூலமாகவோ, அல்லது இரவு வேளையில் பல்லவ வீரர் காவலை மீறி மதில் ஏறிக் குதித்தோ, கோட்டைக்குள்ளே வந்து சேர்ந்து விட்டார். சமாதானம் என்ற பேச்சு இனி இல்லை. யுத்தம் செய்தேயாக வேண்டும்; கோட்டையைத் தாக்கியே தீர வேண்டும். இன்னும் ஆயிரமாயிரம் மனிதர்களின் இரத்தம் வெள்ளமாக ஓடியேயாக வேண்டும். வாதாபி நகரம் தீப்பட்டு எரிந்தே தீர வேண்டும். இப்படிச் சேனாதிபதி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் கோட்டை வாசல் உச்சியிலிருந்து திடீரென்று ஓர் அம்பு ஜிவ்வென்று பறந்து வந்தது. பரஞ்சோதியின் தலைக்கு நேராக அந்த அம்பு வந்ததைப் பார்த்து அருகில் நின்ற வீரர்கள் ஹாஹாகாரம் செய்தார்கள். ஒரு க்ஷண நேரம் அவர்கள் அவ்வளவு பேருக்கும் நெஞ்சத் துடிப்பு நின்று போயிருந்தது. நல்லவேளையாக அந்த அம்பு சேனாதிபதியின் தலைக்கு மேலே ஒரு சாண் உயரத்தில் பாய்ந்து சென்று அவருக்குப் பின்னால் பூமியில் குத்திட்டு நின்றது.

மற்றவர்கள் எல்லாரும் திகிலடைந்த போதிலும் சேனாதிபதி ஒரு சிறிதும் கலங்கவில்லை. முகத்தில் புன்னகையுடன் தரையில் பாய்ந்த அம்பை எடுக்கும்படி கட்டளையிட்டார். அதன் இறகில் ஒரு சிறு ஓலைச் சீட்டு கட்டியிருந்தது. அதை எடுத்துப் பரஞ்சோதி படித்தார். "வெற்றி அல்லது மரணம்" என்று அதில் எழுதியிருந்தது. பரஞ்சோதியின் இருதயத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது. அவருடைய உள்ளத்திலே நடந்து கொண்டிருந்த போராட்டத்திற்கு இனி இடமில்லை. மீண்டும் யுத்தம் தொடங்கி இரத்த வெள்ளத்தைப் பெருக்கும் பொறுப்பு புலிகேசியின் தலை மேல் விழுந்து விட்டது. இனிமேல் மனத்தில் சஞ்சலம் எதுவுமின்றிக் கோட்டைத் தாக்குதலை நடத்தலாம்.

பரஞ்சோதி மேற்படி தீர்மானத்துக்கு வந்ததும், பக்கத்தில் நின்ற வீரனைப் பார்த்து, "சடையா? அதோ அந்தக் கோட்டை வாசலில் உள்ள கணபதி விக்கிரகம் கண்ணுக்குத் தெரிகிறதா!" என்று கேட்டார். "தெரிகிறது, சுவாமி! தாங்கள் அந்த விக்கிரகத்தின் அருகில் நின்று பார்த்த போது நானும் கவனித்தேன்!" என்றான் சடையன். "நல்லது! உனக்கு மிகவும் முக்கியமான காரியம் ஒன்றைத் தருகிறேன். சூரியன் அஸ்தமித்து நன்றாக இருட்டியதும் நீயும் இன்னும் பத்து வீரர்களும் மதிற்சுவர் மீது நிற்கும் சளுக்க வீரர் கண்ணில் படாமல் கோட்டை வாசலுக்குப் போக வேண்டும். போய் அந்தக் கணபதி விக்கிரகத்துக்கு ஒருவிதமான சேதமும் ஏற்படாமல் பெயர்த்து எடுத்து என்னுடைய கூடாரத்துக்குக் கொண்டு வர வேண்டும், தெரிகிறதா? நீ அந்த விக்கிரகத்தைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பதைப் பொறுத்துத் தான் நமக்கு இந்தக் கடைசி யுத்தத்தில் வெற்றி ஏற்பட வேண்டும்!" என்றார் சேனாதிபதி. "அப்படியே, சேனாதிபதி! விநாயகரின் விக்கிரகத்தைச் சர்வஜாக்கிரதையாகக் கொண்டு வந்து கூடாரத்தில் சேர்க்கிறேன்!" என்றான் சடையன். உடனே சேனாதிபதி குதிரையைத் திருப்பிக் கொண்டு மாமல்ல சக்கரவர்த்தி தங்கியிருந்த கூடாரத்தை நோக்கி விரைந்து சென்றார்.

சக்கரவர்த்தியின் கூடாரத்தில் ஏற்கெனவே மற்ற தளபதிகள் எல்லோரும் வந்து சேர்ந்திருந்தார்கள். முடிவான கட்டளையைச் சக்கரவர்த்தியிடம் பெற்றுக் கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். சேனாதிபதி பரஞ்சோதியின் வருகைக்காகச் சக்கரவர்த்தி காத்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. தமக்கு அருகில் நின்றவர்களிடம் அவர் சாவதானமாகப் பேசிக் கொண்டிருந்தார். கோட்டை வாசலில் பறந்த வெள்ளைக் கொடி இறக்கப்பட்ட விவரமும், மதிற்சுவரின் மேல் சளுக்க வீரர் போருக்கு ஆயத்தமாய் நின்றதும் அங்கிருந்தவர்களுக்கு இன்னும் தெரியாது. சளுக்க வீரரின் யுத்த கோஷத்தை அவர்கள் பல்லவ வீரரின் கோஷம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவ்விதம் அமைதி குடிகொண்டிருந்த சக்கரவர்த்தியின் சந்நிதானத்தில் பரஞ்சோதி புயல் நுழைவது போல் நுழைந்து முதலில் சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தினார். "பிரபு!...." என்று அவர் மேலும் பேசுவதற்குள்ளே மாமல்லர் குறுக்கிட்டுக் கூறினார்; "சேனாதிபதி! ஏன் இவ்வளவு பரபரப்பு! இந்த மூன்று நாளும் சிந்தனை செய்ததில் உம்முடைய யோசனைதான் நியாயத்துக்கும் தர்மத்துக்கும் உகந்தது என்ற முடிவுக்கு வந்தேன். கோட்டையின் சரணாகதியை ஒப்புக் கொண்டு யுத்தத்தை நிறுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்!" என்றார். சேனாதிபதி முன்னைக் காட்டிலும் அதிக பரபரப்பை அடைந்து, கண்ணில் நீர் ததும்பத் தொண்டை அடைக்கக் கூறினார்; "பிரபு! நான் அறிவீனன்; நான் சொன்ன யோசனை அபத்தம். தாங்கள் முதலில் இட்ட கட்டளைதான் நியாயம், தர்மம் எல்லாம். என் யோசனைப்படி மூன்று நாள் தாமதித்ததே பெருந்தவறு. பிரபு! கோட்டை வாசலில் வெள்ளைக் கொடி இறங்கி விட்டது. மதிற்சுவர் மேல் சளுக்க வீரர்கள் போர்க் கோலம் பூண்டு நிற்கிறார்கள்..."

பரஞ்சோதி இவ்விதம் சொன்னதைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் அனைவரும் அளவற்ற வியப்பும் ஆத்திரமும் அடைந்தார்கள். சக்கரவர்த்தி தாம் வீற்றிருந்த ஆசனத்திலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து, "சேனாதிபதி! நீர் சொல்லுவது உண்மைதானா!" என்று கர்ஜித்தார். "உண்மை, பிரபு! என் கண்ணாலேயே பார்த்தேன்! பார்த்து விட்டு நேரே இவ்விடம் வருகிறேன்." "இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று ஏதேனும் ஊகிக்க முடிகிறதா?" என்றார் மாமல்லர். "ஊகம் வேண்டியதில்லை, பிரபு! புலிகேசி போர்க்களத்தில் சாகவில்லை. தப்பிப் பிழைத்துக் கோட்டைக்குள்ளே எப்படியோ வந்து விட்டான். கோட்டை வாசல் உச்சியில் வாதாபிச் சக்கரவர்த்தி நின்று தமது சைனியத்தைப் பார்வையிட்டதையும் நான் கண்ணால் பார்த்தேன். சந்தேகத்துக்கு இடமில்லாதபடி இதோ புலிகேசியின் ஓலையும் இருக்கிறது. அம்பின் இறகிலே கட்டி இந்த ஓலை எனக்குக் கிடைத்தது!" என்று சொல்லிக் கொண்டே, "வெற்றி அல்லது மரணம்" என்று எழுதியிருந்த ஓலைத் துண்டைச் சக்கரவர்த்தியிடம் பரஞ்சோதி காட்டினார்.

"ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; வாதாபிக்கு நேரும் கதிக்குப் பாவம் பழி எல்லாம் அவன் தலைமேல்!" என்று மாமல்லர் உற்சாகமான குரலில் கூறிவிட்டு, "சேனாதிபதி! இனிமேல் சந்தேகம் ஒன்றுமில்லையே, கோட்டையைத் தாக்க ஆரம்பிக்கலாமல்லவா?" என்று கேட்டார். "இனி ஒரு சந்தேகமும் இல்லை, பிரபு! எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. இன்னும் ஒரு முகூர்த்த நேரத்தில் நமது யானைப் படை கோட்டை வாசலைத் தகர்க்க ஆரம்பித்து விடும். நம் வீரர்கள் கோட்டை மதிலைத் தாண்டி உள்ளே பிரவேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்!" என்றார் சேனாதிபதி. பின்னர் அங்கு நின்ற தளபதிகளைப் பார்த்து, "எல்லோரும் அவரவருடைய படைகளுக்குச் செல்லுங்கள். நகரத்துக்குள்ளே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இன்னொரு தடவை நம் வீரர்களுக்கெல்லாம் ஞாபகப்படத்துங்கள். பேரிகை முழக்கம் கேட்டதும் புறப்படுவதற்கு ஆயத்தமாயிருங்கள்" என்றார்.

இதைக் கேட்டதும் அங்கு நின்ற தளபதிகள் எல்லாரும் சக்கரவர்த்திக்கும் சேனாதிபதிக்கும் வணக்கம் செலுத்திவிட்டு உற்சாகத்துடன் விரைந்து வெளியேறினார்கள். சக்கரவர்த்தியும், அவருடைய மெய்க்காவலர் இருவரும், மானவன்மரும், சேனாதிபதி பரஞ்சோதியும் மட்டும் அங்கே மிச்சமாயிருந்தார்கள். "சேனாதிபதி! நகரத்துக்குள் நடந்து கொள்ள வேண்டியது பற்றி நம் வீரர்களுக்கு என்ன கட்டளையிட்டிருக்கிறீர்கள்!" என்று கேட்டார் மாமல்ல சக்கரவர்த்தி. "பிரபு! குழந்தைகளுக்கும் ஸ்திரீகளுக்கும் எந்தவிதத்திலும் துன்பமுண்டாக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஆண் மக்களில் எதிர்த்தவர்களையெல்லாம் கொன்று விடும்படியும், பணிந்தவர்களையெல்லாம் சிறைப்பிடிக்கும்படியும் கட்டளையிட்டிருக்கிறேன். வாதாபி நகரில் ஒரு வீடு மிச்சமில்லாமல் எரிந்து சாம்பலாக வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறேன். தீயை அணைக்க முயல்வோரை எல்லாம் கொன்று விடும்படி சொல்லியிருக்கிறேன். நகரை விட்டு ஓட முயலும் பிரஜைகளைப் போக விடும்படியும், ஆனால் அவர்கள் எந்தவிதமான பொருளையும் கொண்டு போக விடக் கூடாது என்றும் ஆக்ஞையிட்டிருக்கிறேன். நம்முடைய வீரர்கள் வாதாபி நகரிலிருந்து அவரவரால் முடிந்த வரையில் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றும், ஒவ்வொருவரும் கொண்டு வருவதில் பாதிப் பொருள் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஏதேனும் கட்டளையிருந்தால் தெரியப்படுத்த வேண்டும்" என்றார் பரஞ்சோதி.

"சேனாதிபதி! நான் சொல்லுவதற்கு ஒரு விஷயமாவது மிச்சம் வைக்கவில்லை. எல்லாம் முன்யோசனையுடன் செய்திருக்கிறீர்கள்!" என்றார் மாமல்லர். "பிரபு! இன்னும் ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது. அதை நம் இலங்கை இளவரசருக்கென்று வைத்திருக்கிறேன், தாங்கள் கட்டளை பிறப்பிக்க வேண்டும்!" என்றார். மாமல்லர் மறுமொழி சொல்லுவதற்குள்ளே, "சேனாதிபதியின் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்!" என்றார் மானவன்மர்.

"வாதாபிச் சக்கரவர்த்தியின் அரண்மனையில் உலகத்திலே வேறு எந்த நாட்டு அரசர் அரண்மனையிலும் இல்லார செல்வங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹர்ஷவர்த்தனர் ஐந்து வருஷத்துக்கொரு தடவை தம் செல்வங்களை யெல்லாம் பிரஜைகளுக்குத் தானம் செய்து விடுகிறார். மகாலோபியான புலிகேசி அப்படியெல்லாம் செய்வதில்லை. முப்பது வருஷமாகச் சேகரித்த குபேர சம்பத்துக்கள் புலிகேசியின் அரண்மனையில் இருக்கின்றன. அந்தச் செல்வங்களைப் பத்திரமாய்ப் பாதுகாத்துக் கொண்டு வர வேண்டிய பொறுப்பை மானவன்மர் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாச் செல்வங்களையும் அப்புறப்படுத்தி விட்டுப் பிறகுதான் அரண்மனையை எரிக்க வேண்டும். இந்தக் காரியத்தில் மானவன்மருக்கு ஒத்தாசை செய்ய ஐயாயிரம் வீரர்களைத் தனியாக வைத்திருக்கிறேன்." இதையெல்லாம் மாமல்லரைப் பார்த்தே சேனாதிபதி கூறினார். "சேனாதிபதி! தங்கள் விருப்பத்தை மானவன்மர் நிறைவேற்றுவார். ஆனால், வாதாபி நகருக்குள்ளே அரண்மனைச் செல்வங்களைத் தவிர காப்பாற்ற வேண்டிய செல்வம் வேறொன்றுமில்லையா? அதைப் பற்றி என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?" என்று மாமல்லர் கேட்ட போது அவரது குரல் கம்மிற்று. சிவகாமி தேவியைப் பற்றித்தான் சக்கரவர்த்தி கேட்கிறார் என்பதைப் பரஞ்சோதி தெரிந்து கொண்டார்.



முப்பத்தேழாம் அத்தியாயம்
சத்ருக்னன் பீதி

சக்கரவர்த்தியிடம் சேனாதிபதி கூறிய வண்ணமே அன்று சூரியன் அஸ்தமித்த ஒரு முகூர்த்த நேரத்துக்கெல்லாம் யுத்த பேரிகை முழங்கியது. வாதாபிக் கோட்டையைச் சுற்று நாற்புறமும் சூழ்ந்திருந்த பல்லவ வீரரின் மகா சைனியம் இடம் பெயர்ந்து கோட்டை மதிலை நோக்கி முன்னேறத் தொடங்கியது. காற்றில் அசைந்தாடும் கொடிகளாகிய அலைகளோடு கூடிய அந்தச் சேனா சமுத்திரமானது வாதாபிக் கோட்டையை மூழ்க அடிக்கும் நோக்கத்துடன் பொங்கி முன்னேறுவது போலக் காணப்பட்டது. பல்லவ சைனியத்தின் யானைப் படை நாலு கோட்டை வாசல்களையும் நோக்கிச் சென்ற காட்சி, கருங்குன்றுகள் இடம் பெயர்ந்து செல்லும் காட்சியையொத்திருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே வெகு நாளாகப் பயிற்சி பெற்றுக் காத்துக் கொண்டிருந்த பிரம்மாண்டமான யானைகள் துதிக்கைகளில் இரும்புலக்கைகளையும் வைரம் பாய்ந்த மரத் தூண்களையும் தூக்கிக் கொண்டு அசைந்து அசைந்து சென்ற போது பூமி அதிர்ந்தது; புழுதிப் படலங்கள் கிளம்பி வானத்தை மறைத்தன. ஓர் இலட்சம் வீரர்களும் பத்தாயிரம் யானைகளும் சேர்ந்தாற் போல் இடம் பெயர்ந்து சென்றதனால் ஏற்பட்ட ஓசை, சண்டமாருதம் அடிக்கும்போது மகா சமுத்திரத்தில் உண்டாகும் பெருங் கோஷத்தை ஒத்திருந்தது. சற்று நேரம் வரையில் அவ்வளவு சைனியமும் இருட்டிலேயே இடம் பெயர்ந்து சென்றன. திடீரென்று இங்கொன்று அங்கொன்றாகத் தீவர்த்திகளும் தீப்பந்தங்களும் தோன்றலாயின. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவை பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் எரியத் தொடங்கின. அந்தத் தீவர்த்திகளிலும் தீப்பந்தங்களிலும் எழுந்த புகை, நாற்புறமும் பரவிச் சூழ்ந்து ஒரு பயங்கரமான மாயலோகக் காட்சியை அளித்தது.

சேனாதிபதி பரஞ்சோதி தமது கூடாரத்துக்கு வெளியில் நாற்புறமும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அமைதியின்றி அங்குமிங்கும் நடந்ததையும், கத்தியினால் பூமியைக் கீறிக் கோலம் போட்டதையும் பார்த்தால் அவர் யாரையோ, எதையோ எதிர் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்போது சடையனும் இன்னும் நாலு பேரும் வாதாபிக் கோட்டை வாசலிலிருந்த கணபதியைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். விக்கிரகத்தைக் கூடாரத்துக்குள் கொண்டுபோய் வைக்கும்படி பரஞ்சோதி கட்டளை இட்டார். அவர்கள் பின்னால் பரஞ்சோதியும் உள்ளே சென்று சடையனைப் பார்த்து, "அப்பனே! நீயும் உன்னுடைய ஆட்களும் இங்கேயே இருந்து இந்தக் கணபதிராயனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேணும். என்னுடைய மனோரதம் நிறைவேறினால், சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் வாதாபிக் கோட்டைக்குள்ளேயிருந்து பத்திரமாகக் கொண்டு சேர்த்தேனேயானால், இந்த விநாயகப் பெருமானை என் கிராமத்துக்குக் கொண்டு போய்க் கோவில் கட்டி வைத்துத் தினம் மூன்று வேளை பூஜை செய்விப்பதாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறேன்!" என்றார். மீண்டும் அவர், "சடையப்பா! இங்கே இருந்து நீங்கள் இந்த விக்கிரகத்தைக் காத்துக் கொண்டிருப்பதனால் வாதாபிக் கொள்ளையில் உங்களுக்குப் பங்கு இல்லாமல் போய்விடும். அதற்கு நான் ஈடு செய்து கொடுக்கிறேன்!" என்றார். "சுவாமி! ஆக்ஞை எப்படியோ அப்படியே நடந்து கொள்ளுகிறோம்!" என்றான் சடையப்பன்.

சேனாதிபதி பரஞ்சோதி, பின்னர் கணபதியின் விக்கிரகத்தை நோக்கிக் கைகூப்பிக் கொண்டு கண்களை மூடிய வண்ணம் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அதே சமயத்தில் வெளியில் யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. அடுத்த கணம் சத்ருக்னன் தலைவிரிகோலமாய் உள்ளே ஓடிவந்தான். அவனுடைய முகம் பேயடித்தவன் முகம் போல் இருந்தது. பரஞ்சோதி அவனைத் திரும்பிப் பார்த்து, "சத்ருக்னா! இது என்ன கோலம்? ஏன் இப்படிப் பீதி கொண்டவனைப்போல் இருக்கிறாய்? ஏதாவது பெரிய ஆபத்து நேர்ந்ததா? போன காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லையா?" என்று கேட்டார். "சேனாதிபதி! என் வாழ்க்கையில் எத்தனையோ பயங்கரமான ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நேற்றும் இன்றும் எனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல் இதுவரையில் ஏற்பட்டதில்லை" என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்தான்.

அந்தக் குறிப்பை உடனே உணர்ந்து சேனாதிபதி அவர்களை வெளியில் போகச் சொன்னார். அவர்கள் போனவுடன் சத்ருக்னனைப் பார்த்து, "சத்ருக்னா! கோட்டையைத் தாக்க ஆரம்பித்தாகிவிட்டது, சிறிதும் தாமதிக்க நேரமில்லை. உன்னுடைய கதையைச் சுருக்கமாகச் சொல்லிமுடி! போன காரியத்தில் வெற்றி அடைந்தாயா, இல்லையா? அதை முதலில் சொல்!" என்றார். "சேனாதிபதி! கோட்டைக்குள் போக இரகசியச் சுரங்க வழி இருக்கிறது. அது இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டேன். ஆனால், அதன் வழியாகக் கோட்டைக்குள் போவது சுலபமான காரியமில்லை. கோட்டைத் தாக்குதலோ ஆரம்பமாகி விட்டது. இனிச் சுரங்க வழியில் போய்த்தான் என்ன பிரயோஜனம்? எல்லாவற்றிற்கும் தங்களிடம் யோசனை கேட்டுக் கொண்டு போக வந்தேன்!" என்று சொல்லி பிறகு, தான் வந்த வரலாற்றைக் கூறினான்.



முப்பத்தெட்டாம் அத்தியாயம்
பயங்கரக் குகை

சேனாதிபதி பரஞ்சோதியிடம் ஒற்றர் தலைவன் சத்ருக்னன் என்றுமில்லாத பதைபதைப்போடு கூறிய வரலாறு வருமாறு: சேனாதிபதியும், சக்கரவர்த்தியும் கட்டளையிட்டபடி சத்ருக்னனும் குண்டோ தரனும் நகரத்துக்குள் போவதற்கு இரகசியச் சுரங்க வழி இருக்கிறதா என்று கோட்டையைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தேட ஆரம்பித்தார்கள். காபாலிகர்களின் பலி பீடத்துக்கு அருகிலுள்ள மேடும் பள்ளமுமான பாறைகளிலேதான் சுரங்க வழி இருந்தால் இருக்கவேணுமென்று அந்தப் பாறைகளிலேயெல்லாம் நுணுக்கமாகத் தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படித் தேடி வரும் போது ஒருநாள் இரவில் ஏதோ தீ எரிவதைப் பார்த்து அதன் அருகே சென்றார்கள். தீயின் அருகில் ஒரு மனிதனும் ஸ்திரீயும் காணப்பட்டனர். அந்த மனிதன் நாகநந்தி பிக்ஷு என்று தெரிந்தது. ஸ்திரீயோ பயங்கரத் தோற்றம் கொண்ட காபாலிகை. அவர்களுடைய சம்பாஷணையை மறைந்திருந்து ஒற்றுக் கேட்டதில் விளக்கமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால், புலிகேசி, சிவகாமி என்ற பெயர்கள் அடிக்கடி கேட்டன. காபாலிகையைத் தமக்காக ஏதோ ஒத்தாசை செய்யும்படி நாகநந்தி கேட்டுக் கொண்டிருந்ததாக மட்டும் தெரிந்தது. பொழுது விடியும் சமயத்தில் பிக்ஷுவும் காபாலிகையும் ஒரு குகையை மூடியிருந்த பாறையை உருட்டித் தள்ளிவிட்டுக் குகைக்குள்ளே போனார்கள். அவர்கள் உள்ளே போனதும் குகைத் துவாரம் மறுபடியும் மூடப்பட்டது.

சத்ருக்னனும் குண்டோ தரனும் வெகு நேரம் காத்திருந்து பார்த்த பிறகு அந்தப் பாறையைத் தாங்களும் பெயர்த்துத் தள்ளிவிட்டுக் குகைக்குள்ளே போகலாமென்று எண்ணினார்கள். அதே சமயத்தில் உட்புறமிருந்து பாறை அசைக்கப்பட்டதைக் கண்டு நல்லவேளையாக ஓடி ஒளிந்து கொண்டார்கள். காபாலிகை மட்டும் வெளியில் வந்தாள். அவள் குகை வாசலைவிட்டு அப்பால் போகும் சமயத்தில் குகைக்குள்ளே போய்ப் பார்க்கலாம் என்று காத்திருந்தார்கள். பகலெல்லாம் அவள் குகைத் துவாரத்தை விட்டு அசையவில்லை. சாயங்கால வேளையில் அவள் கொஞ்சம் அப்பால் போன சமயம், குண்டோ தரனை வெளியில் நிறுத்திவிட்டுச் சத்ருக்னன் மட்டும் குகைக்குள் நுழைந்தான். அப்பா! அந்தக் குகையின் பயங்கரத்தை நினைத்தால் இனிமேல் வாழ்நாள் முழுதும் இரவில் தூக்கமே வராது. அப்படி மனிதரின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் அங்கே குவிந்து கிடந்தன. நாற்றமோ சகிக்க முடியவில்லை. குகைக்குள்ளே ஒரே இருட்டாகயிருந்தபடியால் அதற்குள் சுரங்க வழி இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. திடீரென்று கொஞ்சம் தெரிந்த வெளிச்சமும் மறைந்துவிட்டது. சத்ருக்னன் தான் நுழைந்து வந்த துவாரம் எங்கே என்று பார்த்தான். துவாரம் இருந்த இடம் தெரியவில்லை. காபாலிகை வெளியில் இருந்தபடியே குகைத் துவாரத்தை அடைத்துவிட்டாள் என்று ஊகித்ததும் அவன் அடைந்த திகிலைச் சொல்லமுடியாது. கபாலங்களும் எலும்புகளும் கும்மிருட்டும் துர்நாற்றமும் நிறைந்த அந்தப் பயங்கரக் குகைக்குள்ளே அவன் எத்தனை நேரம் கழித்தானோ தெரியாது. எவ்வளவோ முயற்சி செய்தும் துவாரம் இருந்த இடத்தையே அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நாலு யுகங்கள் என்று தோன்றிய காலம் அவன் அந்த இருண்ட குகைக்குள்ளே அங்குமிங்கும் பயனின்றி அலைந்து உழன்ற பிறகு திடீரென்று சிறிது வெளிச்சம் ஒரு பக்கத்தில் காணப்பட்டது. குகையின் துவாரம் திறந்தது; காபாலிகை உடனே உள்ளே நுழைந்தாள். அவள் கையில் ஒரு மனிதக் கபாலமும் எலும்புகளும் கொண்டு வந்தாள். சத்ருக்னன் குகையின் ஒரு கோடியில் சென்று பாறைச் சுவரோடு ஒட்டிக் கொண்டு நின்றான். காபாலிகை கையில் கொண்டுவந்த கபாலத்தையும் எலும்புகளையும் ஓரிடத்தில் தனியாகப் பத்திரப்படுத்தி வைத்த பிறகு குகையின் மத்தியில் தரையில் உட்கார்ந்து ஒரு பெரிய பாறாங்கல்லைப் பெயர்த்தாள். பெயர்த்த இடத்தில் அவள் இறங்கியபோது, அதுதான் சுரங்க வழியாயிருக்க வேண்டும் என்று சத்ருக்னன் ஊகித்துக் கொண்டான். இத்தனை நேரம் அந்தப் பயங்கரக் குகையில் ஆகாரம் தண்ணீர் இன்றிக் காத்திருந்தது வீண் போகவில்லை என்று எண்ணிச் சந்தோஷப்பட்டான். சுரங்கத்தில் இறங்கிய காபாலிகை தன் மனத்தை மாற்றிக் கொண்டாள் என்று தோன்றியது. மறுபடியும் மேலே ஏறினாள், திறந்த சுரங்கவாயை மறுபடியும் மூடிவிட்டு அதன்மேல் படுத்துத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய பேச்சிலிருந்து சில முக்கிய விஷயங்கள் தெரியவந்தன. அவள் நாகநந்தி என்கிற புத்த பிக்ஷுவை காதலித்தாள் என்றும், அதன் காரணமாகச் சிவகாமியைத் துவேஷித்தாள் என்றும், புலிகேசி இறந்து விட்டான் என்றும், அவனுடைய எலும்பையும் கபாலத்தையும் தான் அவள் சற்றுமுன் குகைக்குள் கொண்டு வந்தாள் என்றும், நாகநந்தி பிக்ஷு புலிகேசியைப் போல் வேஷம் போட்டு நடித்து வாதாபிச் சக்கரவர்த்தியாகி, சிவகாமியைச் சக்கரவர்த்தினியாக்க விரும்புகிறார் என்றும் அதைத் தடுக்க இந்தக் காபாலிகை கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்றும் தெரிந்தது. வெகு நேரம் இப்படி அவள் தனக்குத்தானே பிதற்றிக் கொண்டிருந்த பிறகு மௌனமானாள். அவள் தூங்குகிறாள் என்று எண்ணிய சத்ருக்னன் அந்தச் சமயத்தில் தப்பி வெளியேறத் தீர்மானித்தான். திறந்திருந்த குகைத் துவாரத்தை நோக்கி மெள்ள மெள்ள அடிவைத்து நடந்தான். துவாரத்துக்கருகில் வந்ததும் விரைவாக அதில் நுழைந்து வெளியில் குதித்தான். குதித்த அதே சமயத்தில் அவனுடைய ஒரு கையைக் குகைக்குள்ளேயிருந்து யாரோ பற்றினார்கள், சத்ருக்னன் திடுக்கிட்டுப் பார்த்தான். காபாலிகை குகையின் உட்புறத்தில் நின்றபடி அவனுடைய ஒரு கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக உறுமினாள். சத்ருக்னனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. 'செத்தோம்' என்று எண்ணிக் கொண்டான். ஆயினும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கடைசி முயற்சியாகக் கையைத் திமிறினான். எனினும், காபாலிகையின் இரும்புப் பிடியிலிருந்து அவனால் விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

காபாலிகை அப்போது, "லம்போதரா! லம்போதரா" என்று கூவினாள். "இதோ வந்துவிட்டேன், தாயே!" என்று குண்டோ தரன் பக்கத்துப் பாறை மறைவிலிருந்து ஓடிவந்ததைப் பார்த்ததும் சத்ருக்னனுக்கு வியப்பினால் வாய் அடைத்துப் போயிற்று. சத்ருக்னனைப் பார்த்துக் குண்டோ தரன் கண்களினால் சமிக்ஞை செய்து கொண்டே அவனருகில் ஓடிவந்தான். குகையின் உள்ளே நின்ற காபாலிகை, "லம்போதரா! இந்தத் திருட்டு ஒற்றனைச் சற்றே பிடித்துக் கொள், கத்தியை எடுத்துக் கொண்டு வருகிறேன் விட்டு விடமாட்டாயே?" என்றாள். "ஒருநாளும் விடமாட்டேன், அம்மா! இவனை முதல் பலி நானே கொடுக்கப் போகிறேன்!" என்று சொல்லிச் சத்ருக்னனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் குண்டோ தரன். காபாலிகை உள்ளே சென்றாள், உடனே குண்டோ தரன் சத்ருக்னனுக்குச் சமிக்ஞை காட்டிப் பிடியையும் தளர்த்த, சத்ருக்னன் தன்னை விடுவித்துக் கொண்டு ஓடினான். குண்டோ தரன் பெருங் கூச்சல் போட்ட வண்ணம் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். கொஞ்ச தூரத்தில் ஒரு பாறை மறைவுக்கு வந்ததும் குண்டோ தரன் நின்று, "சுவாமி! உங்களுடைய கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்வதற்காக இந்தக் காபாலிகையின் சிஷ்யப்பிள்ளை ஆனேன். என்னைப்பற்றிக் கவலை வேண்டாம்; நான் இங்கிருந்து இவளைச் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் சீக்கிரம் போங்கள்; கோட்டைத் தாக்குதல் ஆரம்பமாகி விட்டதாகத் தோன்றுகிறது!" என்றான். "குகைக்குள்ளே சுரங்க வழி இருக்கிறது, குண்டோ தரா! நான் போய்ச் சேனாதிபதியிடம் சொல்லி ஆட்களுடன் வந்து சேருகிறேன். அதுவரை நீ இந்த ராட்சஸியை எப்படியாவது சமாளித்துக் கொண்டிரு. அவளைச் சுரங்க வழியில் போக விடாதே!" என்று சத்ருக்னன் சொல்லி விட்டு ஓட்ட ஓட்டமாகச் சேனாதிபதியைத் தேடி ஓடி வந்தான். பிறகு குண்டோ தரனுடைய கதி என்ன ஆயிற்று என்பது சத்ருக்னனுக்குத் தெரியாது.

மேற்கூறிய வியப்பும் பயங்கரமும் நிறைந்த வரலாற்றைக் கேட்டதும், சேனாதிபதி பரஞ்சோதி, "சத்ருக்னா! ரொம்பவும் அவசரமான சமயத்தில் இப்படிப்பட்ட முக்கியச் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறாய். நன்றாய் யோசிப்பதற்குக் கூட நேரம் இல்லை. கோட்டைத் தாக்குதலோ ஆரம்பமாகிவிட்டது. நாளைப் பொழுது விடிவதற்குள் கோட்டைக்குள் பிரவேசித்து விடுவோம். எல்லாவற்றுக்கும் நீ நூறு வீரர்களுடன் அந்தக் காபாலிகையின் குகை வாசலுக்குப் போ! சுரங்க வழி மூலமாக யாரும் வெளியில் தப்பித்துக் கொண்டு போகாமல் பார்த்துக்கொள். முடிந்தால் நீயும் குண்டோ தரனும் சுரங்க வழியாகக் கோட்டைக்குள்ளே வந்து சேருங்கள். கோட்டை வாசல் திறந்ததும் நான் நேரே சிவகாமி தேவியின் வீட்டிற்குச் செல்கிறேன். கணேசரின் கருணை இருந்தால் சிவகாமி தேவியைக் காப்பாற்றி ஆயனரிடம் ஒப்புவிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்" என்று கவலையோடு கூறினார்.



முப்பத்தொன்பதாம் அத்தியாயம்
வாதாபி தகனம்

மாமல்ல சக்கரவர்த்தி தமது கூடாரத்தின் வாசலில் நின்று மாபெரும் பல்லவ சைன்யம் வாதாபிக் கோட்டை மதிலை நெருங்கிச் செல்லும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். தமது வாழ்நாளிலேயே மிக முக்கியமான சம்பவம் தம் கண் முன்னால் நடைபெறத் தொடங்கியிருக்கிறது என்பதை அவருடைய அந்தராத்மா அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தது. அன்றிரவு நடக்கப் போகும் மகத்தான கோட்டைத் தாக்குதலின் காரணமாக ஆயிரமாயிரம் வருஷங்கள் வரையில் அவருடைய பெயர் 'வாதாபி கொண்ட நரசிம்மன்' என்று சரித்திரத்தில் பிரசித்தி பெற்று விளங்கப் போகிறது. ஆனால், அவர் எந்த நோக்கம் காரணமாக இந்த மகத்தான சைனியத்தைத் திரட்டிக் கொண்டு வந்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? சிவகாமிக்கு அவர் கொடுத்த வாக்குறுதி அன்றிரவோ மறுநாளோ நிறைவேறுவது நிச்சயம். மூன்று நாளைக்குள்ளே வாதாபிக் கோட்டை தகர்ந்து வாதாபி நகரம் பற்றி எரிவது நிச்சயம்... ஆனால், அதைப் பார்ப்பதற்குச் சிவகாமி உயிரோடிருப்பாளா? ஆஹா! அந்தப் பாவி உயிரோடிருந்து வாதாபி எரியும் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியேறி வந்தால்தான் என்ன? அவளுடைய வாழ்க்கை பழைய ஆனந்த வாழ்க்கையாகப் போகிறதா? ஒருநாளும் இல்லை. அவளுடைய மனோராஜ்யமெல்லாம் ஒரு சிதைந்த கனவாகி விட்டது. ஒருவேளை அந்தச் சிதைந்த கனவிலே சிவகாமி சில சில சமயம் இன்பத்தைக் காணக்கூடும், தமக்கோ அதுகூடக் கிடையாது. தமது பிற்கால வாழ்க்கை ஒரு வறண்ட பாலைவனமாகவே இருக்கும். அந்த எல்லையற்ற நெடிய பாலைவனத்தில் கானல் நீரைத் தவிர வேறு குளிர்ச்சியான காட்சியே தென்படப் போவதில்லை.

இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த மாமல்லர், தம்மிடம் முடிவாக விடைபெற்றுச் சென்ற பரஞ்சோதி மீண்டும் வருவதைக் கண்டு சிறிது வியப்புற்றவராய், அவர் தம் அருகில் நெருங்கியதும், "சேனாதிபதி! ஏதாவது புதிய விசேஷம் உண்டா?" என்று கேட்டார். "ஆம், பிரபு! சத்ருக்னன் திரும்பி வந்தான்" என்று சேனாதிபதி கூறி, அவன் சொன்ன விஷயங்களைச் சுருக்கமாகத் தெரிவித்தார். எல்லாவற்றையும் கேட்ட மாமல்லர், "இந்தச் செய்திகள் காரணமாக நமது யோசனையில் ஏதேனும் மாறுதல் உண்டா?" என்று கேட்டார். "விசேஷமாக ஒன்றுமில்லை, பிரபு! ஆனால், கோட்டைத் தாக்குதலைக் கூடிய விரைவில் நடத்தவேண்டிய அவசியம் அதிகமாகிறது. எதிரில் பாயும் புலியைக் காட்டிலும் காலடியில் நெளிந்து ஓடும் பாம்பு அதிக அபாயம் உள்ளதல்லவா?" "அப்படியானால் காபாலிகையின் கதையை நீர் நம்புகிறீரா? உமக்கு யுத்தச் சீட்டு அனுப்பியது புலிகேசி இல்லை. நாகநந்தி பிக்ஷுதான் என்று நினைக்கிறீரா? அப்படியானால் சிவகாமி தேவி பற்றிய கவலை அதிகமாகிறது. நானும் உங்களுடனே கோட்டைக்குள் இப்போதே வந்து விடட்டுமா?" "வேண்டாம், பிரபு! தாங்கள் இங்கே இருப்பதுதான் உசிதம் என்று கருதுகிறேன்."

எது எப்படிப் போனாலும் இந்தத் தடவை தளபதி பரஞ்சோதி சிவகாமி தேவியைத் தாமே முதலில் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார். முன் தடவை மாமல்லர் சிவகாமியைச் சந்தித்துப் பேசியதன் விபரீத விளைவை அவர் மறந்து விடவேயில்லை. அம்மாதிரி இம்முறை ஏற்படாமல் தடுப்பது தம் கடமையெனக் கருதினார். மாமல்லரும் பல காரணங்களினால் சிவகாமியை உடனே சந்திக்க விரும்பவில்லை; எனவே, அவர் பின்வருமாறு கூறினார்; "அப்படியே ஆகட்டும், சேனாதிபதி! ஒரு விஷயத்தை மறந்துவிட வேண்டாம். புலியைவிடப் பாம்பு கொடியது என்று நீர் கூறியது முற்றும் உண்மை. நாகநந்தி விஷயத்தில் தாட்சண்யமே பார்க்க வேண்டாம். அந்தக் கள்ள பிக்ஷு உயிரோடிருக்கும் வரையில் இந்த வாழ்க்கையில் நம் இருவருக்கும் நிம்மதி கிடையாது; இதை மறக்க மாட்டீர் அல்லவா?" "மறக்கமாட்டேன், பிரபு!"

இதற்குப் பிறகும் சேனாதிபதி தயங்கி நிற்பதைக் கண்டு மாமல்லர், "இன்னும் ஏதாவது சொல்லுவதற்கு இருக்கிறதா?" என்றார். பரஞ்சோதி, ஆம் இன்னும் ஒரே ஒரு விஷயம். மன்னிக்க வேண்டும்; வாதாபி நகரை எரித்துவிட வேண்டும் என் கட்டளையில் மாறுதல் ஒன்றும் இல்லையே?" என்று கேட்டார். "சேனாதிபதி! போதும்! இந்த நிமிஷமே நான் கோட்டை வாசலுக்குப் போகிறேன். இனி உம்மை நம்பிப் பயனில்லை, நீர் திருநீறு தரித்து ருத்ராட்சம் அணிந்து சிவ பஜனை செய்யச் செல்லும்!" "பிரபு! திருநீறு தரித்த பெருமான் திரிபுரத்தையே எரித்தார். இந்த வாதாபியை எரிப்பது அவருக்குப் பெரிய காரியமில்லை. இன்று இரவே வாதாபி நகரம் பற்றி எரிவதைக் காண்பீர்கள்!" "அப்படியானால் ஏன் இந்தத் தயக்கம், கேள்வி எல்லாம்?"

"தங்களுடைய விருப்பத்தை நிச்சயமாகத் தெரிந்து கொள்வதற்காகத்தான். கோட்டைக்குள் புகுந்தபிறகு நகரை எரிக்க வேண்டும் என்று தாங்கள் கட்டளையிட்டீர்கள், அதை மாற்றிச் செய்ய விரும்புகிறேன். முதலில், வாதாபி தகனம் ஆரம்பமாகப் போகிறது. வெளியிலிருந்தபடியே நெருப்புப் பந்தங்களை நகருக்குள் எறியும்படி கட்டளையிடப் போகிறேன்." "இதற்கு என்ன அவசியம்?" "நகரத்துக்குள்ளேயிருந்து நம் வீரர்கள் கொண்டு வரும் பொருள்களில் பாதி அவரவர்களுக்கே சொந்தம் என்று சொல்லியிருக்கிறேன். ஆகையால், நகரம் பற்றி எரிவதைக் காணும்போது நம் வீரர்களின் வேகம் ஒன்றுக்குப் பத்து மடங்காகும். பிரபு! நாளைச் சூரியோதயத்துக்குள்ளே நான் இந்தக் கோட்டைக்குள்ளே பிரவேசித்தாக வேண்டும். அதற்குமேல் தாமதித்தால் சிவகாமி தேவியைக் காப்பாற்றுவது அசாத்தியமாகி விடலாம். சூரியோதயமாகும் சமயத்தில் தாங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். இன்று ஓரிரவு தூங்காமல் வாதாபி தகனத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்!" என்று சொல்லி விட்டுச் சக்கரவர்த்தியின் மறுமொழிக்குக் காத்திராமல் சேனாதிபதி விரைந்து சென்றார்.

சேனாதிபதி சொன்னபடியே அன்றிரவு நடுநிசி நேரத்தில் வாதாபி தகனம் ஆரம்பமாயிற்று. கோட்டை மதிளைச் சுற்றி ஆங்காங்கு பெரிய உயரமான தூக்கு மரங்கள் நிறுத்தப்பட்டன. அந்த மரங்களின் மீது ஏறி நின்று அதற்கென்று பயிற்சி செய்யப்பட்டிருந்த பல்லவ வீரர்கள், கொளுத்தப்பட்ட தீப்பந்தங்களையும் கந்தக வெடிகளையும் நகருக்குள் வீசி எறிந்தார்கள். தீப்பந்தங்கள் போகும்போதே காற்றினால் ஜுவாலை விட்டுக் கொண்டு சென்று விழுந்த இடங்களில் எல்லாம் குபீர் குபீர் என்று தீ மூட்டின. கந்தக வெடிகள் ஆங்காங்கு வெடித்து நெருப்பைப் பரப்பின. அன்றிரவு மூன்றாம் ஜாமத்திற்குள் இலட்சோப இலட்சம் ஜனங்கள் வசித்த அந்த வாதாபி மாநகரத்தில் நாற்புறமும் தீ மூண்டு எரியத் தொடங்கியது. அக்கினி தேவனுக்கு உதவி செய்ய வாயு பகவானும் வந்து சேர்ந்தார். மூண்டடித்த காற்றினால் தீயின் ஜுவாலைகள் குதித்துக் குதித்துப் பாய்ந்து வாதாபி நகரின் மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் எல்லாவற்றையும் விரைந்து விழுங்கத் தொடங்கின.

தீயோடு புகையும் படலம் படலமாக எழுந்து எட்டுத் திசைகளையும் வானத்தையும் மறைத்தது. அதே சமயத்தில் பல்லவ, பாண்டிய வீரர்கள் கோட்டையை நாற்புறமும் சூழ்ந்து கொண்டு மதிள் மீது ஏறிக்குதிக்க முயன்றார்கள். மதிள் மீதிருந்த சளுக்க வீரர்கள் அவர்களைத் தடுத்தார்கள். அவர்களுடைய வாளாலும் வேலாலும் அம்புகளாலும் தாக்கப்பட்டு ஆயிரமாயிரம் தமிழ் வீரர்கள் உயிரிழந்து விழுந்தார்கள். ஆயினும் சமுத்திரத்தில் பெருங்காற்று அடிக்கும்போது ஓர் அலைக்குப் பின்னால் இன்னோர் அலை இடைவிடாமல் வந்து கரையை மோதுவது போலத் தமிழ் வீரர்கள் மேலும் மேலும் வந்து கொண்டேயிருந்தார்கள்.

அதோடு கோட்டையின் நாலுபுறத்து வாசல்களும் பலமாகத் தாக்கப்பட்டன. ஏக காலத்தில் பத்துப் பன்னிரண்டு யானைகள் தங்கள் துதிக்கையினால் பிரம்மாண்டமான மரத் தூண்களையும் இரும்புலக்கைகளையும் தூக்கி ஆவேசமாகக் கோட்டை வாசல் கதவுகளின் மீது மோதியபோது அந்தக் கதவுகள் படார் படார் என்று தெறித்து முறிந்து விழுந்தன. சேனாதிபதி பரஞ்சோதி சக்கரவர்த்தியிடம் கூறியவண்ணமே அன்றிரவு நாலாம் ஜாமம் முடியும் தறுவாயில் வாதாபிக் கோட்டை வாசல்களைத் தகர்த்த பல்லவ வீரர்கள், ஏற்கெனவே எரியத் தொடங்கியிருந்த வாதாபி நகருக்குள் பிரவேசித்தார்கள். கோட்டை மதிளைத் தாக்கிய பல்லவ வீரர்களும் நாற்புறத்திலும் உள்ளே குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வாதாபி நகரம் தீக்கிரையாகும் இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவத்தைக் கீழ்வானத்தில் உதித்திருந்த விடிவெள்ளி கண்கொட்டாமல் பார்த்து வியந்து கொண்டிருந்தது.



நாற்பதாம் அத்தியாயம்
கொந்தளிப்பு

பல்லவ சேனா வீரர்கள் வாதாபிக் கோட்டையைச் சூழ்ந்து கொண்ட நாளிலிருந்து சிவகாமியின் உள்ளம் எரிமலையின் கர்ப்பப் பிரதேசத்தைப் போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கோட்டைச் சுவருக்கு அப்பால் வெகு சமீபத்தில் மாமல்லரும் ஆயனரும் இருந்த போதிலும் அவர்களைத் தான் பார்க்க முடியவில்லையே என்ற ஆத்திரமும், யுத்தத்தின் விளைவாக என்ன ஏற்படுமோ என்ற கவலையும், எல்லாம் நன்றாக முடிந்து மாமல்லரைத் தான் சந்திக்கும் போது அவரிடம் என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்ளுவது என்ற சிந்தனையும் அவளை வாட்டிக் கொண்டிருந்தன. வாதாபிக்கு வடதிசையில் நடந்த பெரும் போரில் பல்லவ சைனியம் வெற்றியடைந்து புலிகேசி மாண்ட செய்தி சிவகாமியின் காதுக்கு எட்டிய போது, அவளுடைய இதயம் பெருமையினால் வெடித்துப் போய்விடும் போலிருந்தது. அதோடு அந்த வெற்றியின் காரணமாகத் தன்னுடைய நிலைமையில் என்ன மாறுதல் ஏற்படுமோ என்ற கவலையும் உண்டாயிற்று.

கோட்டைத் தளபதி பீமசேனன் அவளிடம் வந்து மாமல்லருக்கு ஓலை எழுதித் தரும்படி கேட்ட போது சிவகாமி தன்னுடைய வாழ்க்கையில் என்றும் அடையாத பெருமிதத்தை அடைந்தாள். அவ்விதமே சேனாதிபதிக்கு ஓலையும் எழுதித் தந்தாள். அதிலே தன்னுடைய அறிவினால் சிந்தித்து என்ன முடிவுகளுக்கு வந்திருந்தாளோ அந்த முடிவுகளையெல்லாம் எழுதியிருந்தாள். அவற்றையொட்டி வேண்டுகோளும் செய்திருந்தாள். ஆனால், அவளுடைய இதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருந்த உணர்ச்சியை அந்த ஓலை பிரதிபலித்ததாகச் சொல்ல முடியாது. தன்னையும் தன் கலையையும் அவமதித்து அவமானப்படுத்திய அந்த நகரத்து மக்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் ஆசை அவளுடைய உள்ளத்தின் அடிவாரத்தில் இன்னும் இருக்கத்தான் செய்தது. எனவே, ஓலை எழுதி அனுப்பிய பிறகு சிவகாமி ஒவ்வொரு சமயம், 'ஏன் அந்த ஓலையை எழுதி அனுப்பினோம்? அவ்வாறு எழுதி அனுப்ப நமக்கு என்ன உரிமை? இவ்வளவு பெரும் பிரயத்தனங்களுடனே படையெடுத்து வந்திருக்கும் மாமல்லரும் சேனாரனுபதியும் அதைக் குறித்து என்ன எண்ணுவார்களோ? பெண் புத்தியின் பேதைமையைக் குறித்துப் பரிகசித்து இகழ்வார்களோ? ஒருவேளை அதை ஒப்புக் கொண்டு காரியம் நடத்திய பிறகு என்னை ஏசிக் காட்டுவார்களோ?' என்றெல்லாம் எண்ணமிட்டாள்.

அவ்விதம் தான் ஓலை எழுதி அனுப்பியது குறித்து அவளைப் பச்சாத்தாபம் கொள்ளச் செய்த சம்பவங்கள் சிலவும் பிற்பாடு ஏற்பட்டன. கோட்டைத் தளபதி சிவகாமியின் மாளிகைக்கு வந்து விட்டுப் போனதிலிருந்து அவளுடைய மாளிகை வாசலில் அடிக்கடி கூட்டம் சேர ஆரம்பித்தது. அநேகமாகச் சிவகாமியை மறந்து விட்டிருந்த வாதாபி மக்கள் அப்போது தங்களுக்கு நேர்ந்திருக்கும் பெரும் விபத்துக்குக் காரணம் சிவகாமிதான் என்பதை நினைவுகூர்ந்து அவள் வசித்த வீதியில் கூட்டம் போடவும், அவளைப் பற்றி இகழ்ந்து பேசவும் ஏசவும் ஆரம்பித்தார்கள். கூட்டத்தின் இரைச்சலைக் கேட்டுச் சிவகாமி அதன் காரணத்தை அறிந்து கொள்ளுவதற்காகப் பலகணியின் வழியாக எட்டிப் பார்த்த போது அந்த ஜனங்கள் 'ஓஹோ' என்று சப்தமிட்டும் சிரித்தும் கோரணி காட்டியும் ஏளனம் செய்தார்கள்.

விஷயம் இன்னதென்பதை ஏற்கெனவேயே அறிந்திருந்த சிவகாமியின் தோழிப் பெண் அவளைப் பலகணியின் பக்கத்திலிருந்து பலாத்காரமாக இழுத்துச் சென்றாள். அப்போது மறுபடியும் அந்த ஜனக் கூட்டம் விகாரமாகக் கூச்சலிட்டுக் கேலிச் சிரிப்பு சிரித்த சப்தம் சிவகாமியின் காதில் விழுந்தது. அவளுடைய இருதயத்தில் வெகு காலத்துக்கு முன்பு எரிந்து அடங்கி மேலே சாம்பல் பூத்துக் கிடந்த குரோதத் தீயானது அந்த நிமிஷத்தில் மறுபடியும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 'மாமல்லர் மட்டும் உண்மையான வீரமுள்ள ஆண் மகனாயிருந்தால் நான் பேதைமையினால் எழுதிய ஓலையைக் கிழித்து எறிந்து விட்டு இந்த நகரத்துக்குள்ளே படையுடன் பிரவேசிப்பார்; என்னுடைய பழைய சபதத்தை நிறைவேற்றுவார்; இந்த நகரத்தை நரகமாக்கி நாகரிகம் சிறிதுமற்ற மிருகப் பிராயமான இந்த மக்கள் ஓலமிட்டு அலறி ஓடும்படிச் செய்வார். அந்தக் காட்சியைப் பார்த்தால்தான் என் உள்ளம் குளிரும்!" என்று எண்ணிக் கொண்டாள். அந்தக் காட்சியைத் தன் மானசிக திருஷ்டியில் பார்த்து மகிழவும் தொடங்கினாள்.

நேரமாக ஆகத் தெருவில் கூட்டமும் கூச்சலும் அதிகமாகிக் கொண்டு வந்தன. கூட்டத்திலே இருந்த சில உற்சாக புருஷர்கள் வீட்டின் கூரை மீதும் வாசற்கதவின் மீதும் கல்லை விட்டு எறிந்தார்கள். கல், கதவின் மேல் விழுந்து படார் சப்தம் உண்டாக்கிய போது கூட்டத்தில் கேலிச் சிரிப்பு பீறிட்டு எழுந்தது. அன்று மாலை திடீரென்று அப்பெருங் கூட்டத்தில் ஒருகணம் நிசப்தம் ஏற்பட்டது. அந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு பறைகொட்டும் சப்தம் கேட்டது. பறைச் சப்தம் நின்றதும் இடி முழக்கம் போன்ற ஒரு குரல், "சக்கரவர்த்தி கோட்டைக்குள் வந்து விட்டார்! பல்லவர் படையைத் துவம்ஸம் செய்து வெற்றிக் கொடி நாட்டப் போகிறார். எல்லாரும் அவரவர்கள் வீட்டுக்குப் போங்கள். ஆயுதம் எடுக்கத் தெரிந்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அரண்மனை வாசலுக்கு வந்து சேருங்கள்!" என்று முழங்கிற்று.

உடனே அந்த ஜனக் கூட்டத்தில், "வாதாபிச் சக்கரவர்த்தி வாழ்க! பல்லவ மாமல்லன் நாசமடைக!" என்று குதூகல கோஷம் எழுந்தது. கொம்மாளமாக இரைச்சல் போட்டுக் கொண்டு ஜனங்கள் கலைய ஆரம்பித்தார்கள். ஏதோ இந்திரஜாலத்தினால் நடந்தது போல் கண்மூடித் திறக்கும் நேரத்தில் சிவகாமியின் மாளிகை வாசலில் ஒருவரும் இல்லாமற்போயினர். அவ்விதம் வெறுமையான இடத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் சளுக்க வீரர்கள் இருபது பேர் வந்து நின்றார்கள். சிவகாமியின் மாளிகை வாசலையும் வீதியின் இருபுறங்களையும் அவர்கள் காவல் புரியத் தொடங்கினார்கள்.

சிவகாமி தன்னுடைய தோழிப் பெண்ணின் மூலம் மேற்கூறிய சம்பவங்களுக்குக் காரணங்களை அறிந்த போது அவளுடைய மனம் ஒருவாறு நிம்மதியடைந்தது. புலிகேசி உயிர் பிழைத்துக் கோட்டைக்குள் வந்து விட்டபடியால், இனி யுத்தந்தான்; சந்தேகமில்லை. தன்னுடைய சபதம் நிறைவேறும் காட்சியைக் கண்ணால் பார்த்தால் போதும்; மற்றபடி எது எப்படியானாலும் ஆகிவிட்டுப் போகட்டும். மூர்க்க வாதாபி ஜனங்களாலோ ராட்சஸப் புலிகேசியினாலோ தனக்கு ஏதாவது அபாயம் நேரக்கூடும். நேர்ந்தால் நேரட்டும்; அதை எதிர்பார்த்துச் சிவகாமி கையில் கத்தி ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தாள். தன்னுடைய கற்புக்குப் பங்கம் வரும்படியான காரியம் ஏற்படுவதாயிருந்தால் பிராணத் தியாகம் செய்து கொள்வதென்று வெகு காலமாக அவள் உறுதிகொண்டிருந்தாள். கையிலே கத்தி இருக்கிறது; கொல்லைப்புறத்துக் கிணறு இருக்கவே இருக்கிறது!

பல்லவ சைனியம் வாதாபிக் கோட்டையைத் தாக்க ஆரம்பித்த அன்று சாயங்காலம், அந்த நகருக்குள்ளே சூறைக் காற்றும் பெருமழையும் சேர்ந்து அடிக்கும் போது நடுக்கடலில் என்னவிதமான பயங்கர ஓசை எழுமோ அம்மாதிரி ஓசை எழுந்தது. நூற்றுக்கணக்கான யுத்த பேரிகைகளின் முழக்கம், ஆயிரக்கணக்கான தாரை, தப்பட்டை, சங்கம் முதலியவைகளின் ஒலி, பதினாயிரக்கணக்கான வீரர்களின் ஜயகோஷம், இலட்சக்கணக்கான மக்களின் ஆரவார இரைச்சல்; இந்த ஓசைகளெல்லாம் கோட்டை மதில்களிலும் மண்டபங்கள் கோபுரங்களிலும் மோதும் போது எழுந்த பிரதித்வனி எல்லாம் சேர்ந்து இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாத பேரொலியாகத் திரண்டு எழுந்து கேட்போரின் உடல் நரம்புகளை யெல்லாம் முறுக்கிவிட்டு உள்ளங்களை வெறிகொள்ளச் செய்தன. அன்று சூரியாஸ்தமன நேரத்தில் அந்த மாநகரில் வாழ்ந்த பத்து லட்சம் ஜனங்களும் ஏறக்குறையப் பித்துப் பிடித்தவர்கள் போலாகித் தாம் செய்யும் காரியம் இன்னதென்று தெரியாமல் செய்கிறவர்களும், தாம் பேசுவது இன்னதென்று தெரியாமல் பேசுகிறவர்களும் ஆனார்கள். இத்தகைய வெறி சிவகாமியையும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகவே ஆட்கொண்டது.

ஒருகண நேரமாவது அவளால் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியே போவதென்பது அவளுக்கு இயலாத காரியம். சிறிது நேரம் வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தாள். பிறகு பலகணியின் வழியாக வாசலில் எட்டிப் பார்த்தாள். ஜனங்கள் தலைதெறிக்கக் கிழக்கேயிருந்து மேற்கேயும் மேற்கேயிருந்து கிழக்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வீட்டின் மேல் மச்சில் ஏறிப் பார்த்தாள். நகரின் அலங்கோலக் காட்சி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது. அவளுடைய மாளிகையின் பின்புறத்தில் கோட்டை மதில் வெகு சமீபத்தில் இருந்தபடியால் அதன் மீது ஏறிப் போருக்கு ஆயத்தமாக நின்ற வீரர்களின் காட்சியை நன்றாகப் பார்க்க முடிந்தது. மற்றும் வீதிகளில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த போர் வீரர் படைகளையும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த ஜனங்களின் காட்சியையும் பார்க்க முடிந்தது.

மறுபடியும் கீழிறங்கி அவளுடைய தோழிப் பெண்ணைத் தெரு வாசலில் போய் விவரம் அறிந்து கொண்டு வரும்படி ஏவினாள். அவ்விதமே தோழி வெளியே போய் விட்டு வந்து அன்றிரவு பல்லவர் படை கோட்டையைத் தாக்கப் போவதாகச் செய்தி கொண்டு வந்தாள். அது மட்டுமல்ல; தான் அன்றிரவு சிவகாமிக்குத் துணையாக இருக்க முடியாதென்றும், யுத்த நிலைமை என்ன ஆகுமோ என்ற பீதி ஏற்பட்டிருப்பதால் தன்னுடைய சொந்த வீட்டுக்குப் போய் உறவினரோடு இருக்க விரும்புவதாகவும் கூறினாள். சிவகாமி அவளை எவ்வளவு கேட்டுக் கொண்டும் பயனில்லை. மற்றொரு வேலைக்காரியையும் அழைத்துக் கொண்டு அவள் போய் விட்டாள். அவ்விருவரும் போகும் போது மாளிகையின் கதவு திறந்த சமயம், வாசலில் காவல் புரிந்த வீரர்கள் பொறுமை இழந்து தாங்கள் மட்டும் எதற்காக அங்கு நின்று அந்த வீட்டைக் காவல் புரிய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தது சிவகாமியின் காதிலே விழுந்தது. 'கதவைக் கெட்டியாகச சாத்தித் தாழ்கள் எல்லாவற்றையும் போட்டாள். அந்த மாளிகையின் வாசற் கதவுகள், கோபுர வாசல் கதவுகளைப் போன்ற பெரிய கதவுகள். ஒரு கதவில் திட்டி வாசல் ஒன்று இருந்தது. அதாவது ஒரு பெரிய மனிதர் உள்ளே நுழையக் கூடிய அளவு துவாரமும் அதற்கு ஒரு தனிக் கதவும் தாழ்ப்பாளும் இருந்தன. தோழியும் வேலைக்காரியும் அந்தத் திட்டி வாசல் வழியாகத்தான் வெளியே சென்றார்கள்.

சிவகாமி வாதாபியில் வசித்த காலத்தில் சாதாரணமாகவே சொற்ப நேரந்தான் தூங்குவது வழக்கம். அன்றிரவு அவள் கண்ணை மூடவில்லை; 'வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்ன நடக்கப் போகிறது?' என்று அறிந்து கொள்ள அவளுடைய உள்ளமும் உடம்பின் நரம்புகளும் துடித்துக் கொண்டிருந்தன. அடிக்கடி பெருமூச்சு எழுந்தது, நெஞ்சு 'தடக் தடக்' என்று அடித்துக் கொண்டது; அடி வயிற்றை என்னவோ செய்தது. நடுநிசி ஆன போது, நகரின் பல இடங்களில் வீடுகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததைச் சிவகாமி தன் மாளிகையின் மேல் மாடியிலிருந்து பார்த்தாள். ஒன்பது வருஷத்துக்கு முன்னால் தான் செய்த சபதம் நிறைவேற ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டாள். அவளுடைய வாழ்க்கையில் அதுவரையில் அவள் அனுபவித்திராத திருப்தி அவள் மனத்தில் அப்போது ஏற்பட்டது. அதே சமயத்தில் காரணம் தெரியாத ஒருவித மனவேதனையும் உண்டாயிற்று.

நகரிலே நாற்புறமும் தீ பரவி வந்தது. அன்று சாயங்காலம் அந்நகரில் ஏற்பட்டிருந்த மகத்தான ஆரவாரம் இப்போது வேறு ஸ்வரூபத்தை அடைந்தது. குதூகலமான ஜயகோஷங்கள் அலறலும் ஓலமுமாக மாறின. மக்களின் பெருமித வீர நடை யானது பயப்பிராந்தி கொண்ட ஓட்டமாக மாறியது. வர வர ஸ்திரீகள், குழந்தைகளின் ஓலமும் ஓட்டமும் அதிகமாகி வந்தன. இதையெல்லாம் பார்க்கச் சிவகாமியின் மனத்தில் திருப்தி மறைந்து வேதனை அதிகமாயிற்று. கடைசியில் அந்தக் கோரக் காட்சிகளைப் பார்க்கச் சகியாமல் மேல் மாடியிலிருந்து கீழே இறங்கினாள். 'ஆகா! இது என்ன நம்மால் விளைந்த விபரீதம்? இதன் முடிவுதான் என்ன? இந்தப் பெரிய நகரம் முழுவதும் உண்மையாகவே எரிந்து அழிந்து விடப் போகிறதா? இதிலே வசிக்கும் இத்தனை இலட்சக்கணக்கான மக்களும் பெண்களும் குழந்தைகளும் செத்து மடியப் போகிறார்களா? ஐயோ! இது என்ன? என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது?' என்று அவள் உள்ளத்தில் ஆயிரக்கணக்கான சிந்தனை அலைகள் கொந்தளித்து எழுந்து உடனே மறைந்தன. அப்புறம் மேல் மாடிக்கே போக மனமில்லாமல் வீட்டுக் கூடத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அலைந்து அலைந்து கால்கள் களைத்து வலி எடுத்துப் போயின. வெறுந்தரையில் குப்புறப் படுத்துக் கொண்டாள். அழுகை வந்து கண்ணீர் பெருகினால் தேவலையென்று தோன்றியது. ஆனால், அழுகையும் வரவில்லை; கண்ணீர் சுரக்கும் இடத்தில் ஏதோ அடைத்துக் கொண்டு கண்ணீர் வரவொட்டாமல் செய்து விட்டது. பொழுது விடியும் சமயம் ஆயிற்று. முற்றத்தில் உதய நேரத்துக்குரிய மங்கலான வெளிச்சம் காணப்பட்டது. அச்சமயம் அந்த வீட்டு வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது.

சட்டென்று சிவகாமியின் மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. ஒருவேளை மாமல்லர்தான் வருகிறாரோ? தன் சபதத்தை நிறைவேற்றித் தன்னை அழைத்துக் கொண்டு போவதற்காக வருகிறாரோ? அப்படியானால் ரொம்ப நல்லது. இந்த மாநகரின் படுநாசத்தை இப்போதாவது தடுக்கலாம். அவர் காலில் விழுந்து, "பிரபு! போதும் நிறுத்துங்கள்!" என்று கெஞ்சலாம். இப்படி எண்ணியவளாய்ச் சிவகாமி பரபரவென்று எழுந்து ஓடினாள். கதவண்டை சென்றதும் மனம் தயங்கிற்று. எல்லாவற்றிற்கும் திட்டி வாசற் கதவைத் திறந்து பார்க்கலாம் என்று திறந்தாள். அங்கே தோன்றிய காட்சி அவளைத் திகைத்துப் பீதியடையச் செய்தது. மாமல்லரையோ பல்லவ வீரர்களையோ அங்கே காணவில்லை. கோபங்கொண்ட வாதாபி ஜனக் கூட்டந்தான் காணப்பட்டது. அந்தக் கூட்டத்தாரில் சிலர் வீட்டைக் காவல் புரிந்த சளுக்க வீரர்களுடன் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தார்கள்.

சிவகாமியின் முகம் திட்டி வாசலின் மூலம் தெரிந்ததும் அந்த ஜனக் கூட்டத்தில் பல நூறு சிறுத்தைப் புலிகளின் உறுமல் சப்தம் போன்ற ரோமம் சிலிர்க்கச் செய்யும் சப்தம் உண்டாயிற்று. கூட்டத்திலே பலர் காவல் புரிந்த வீரர்களைத் தள்ளிக் கொண்டு வீட்டு வாசற்படியை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். சிவகாமிக்கு நிலைமை ஒருவாறு புலப்பட்டது. சட்டென்று திட்டி வாசலை மூடினாள். அவசரத்தினாலும் பயத்தினாலும் அதைத் தாழிட மறந்து போனாள். உடனே அங்கிருந்து மாளிகையின் பின்கட்டை நோக்கி விரைந்து சென்றாள். திட்டமான யோசனையுடன் செல்லவில்லை. அந்தச் சமயம் அந்த மூர்க்கங்கொண்ட ஜனங்களிடமிருந்து தப்ப வேண்டுமென்று இயற்கையாகத் தோன்றிய எண்ணம் அவளுடைய கால்களுக்குப் பலத்தை அளித்து வீட்டின் பின்கட்டை நோக்கி விரைந்து ஓடச் செய்தது.

வீட்டுப் பின்கட்டின் வாசற்படியைத் தாண்டித் தாழ்வாரத்தை அடைந்ததும், உதய நேரத்தின் மங்கிய வெளிச்சத்தில் அங்கு ஓர் உருவம் கபாலங்களையும் எலும்புகளையும் மலையாகப் பூண்ட கோரமான ஸ்திரீ உருவம் நிற்பதைச் சிவகாமி பார்த்தாள். அவளுடைய உடம்பில் இரத்த ஓட்டம் ஒரு நிமிஷம் நின்று விட்டது. தேகமாத்தியந்தம் ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிவகாமியைப் பார்த்ததும் அந்தப் பெண் பேய் கலகலவென்று சிரித்தது. பிறகு, 'அடி அழகி சிவகாமி! கலைவாணி சிவகாமி! மாமல்லனையும் நாகநந்தியையும் மோக வலைக்கு உள்ளாக்கிய நீலி! உன் அழகெல்லாம் இப்போது என்ன செய்யும்? உன் கண் மயக்கும், முகமினுக்கும் உன்னை இப்போது காப்பாற்றுமா?" என்று அந்தப் பெண் பேய் கேட்டு விட்டு மறுபடியும் சிரித்தது. "அடி சிவகாமி! நானும் உன்னைப் போல் ஒரு சமயம் கண்டவர் மயங்கும் மோகினியாகத்தான் இருந்தேன். உன்னாலே இந்தக் கதிக்கு ஆளானேன். அதற்குப் பழிவாங்கும் சமயத்திற்காக இத்தனை காலம் காத்திருந்தேனடி!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவண்ணம் காபாலிகை தன் மடியில் செருகியிருந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஓங்கினாள்.

சிவகாமிக்கு அப்போது சிந்தனை செய்யும் சக்தியோ, தப்பித்துக் கொள்ள யுக்தி செய்யும் சக்தியோ, சிறிதும் இல்லை. அவள் உள்ளம் ஸ்தம்பித்துப் பிரமை கொண்டிருந்தது. எனினும், எத்தகைய ஆபத்திலிருந்தும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யும் இயற்கைச் சுபாவத்தை ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவன் அளித்திருக்கிறான் அல்லவா? அந்த சுபாவம் காரணமாகச் சிவகாமி ஓர் அடி பின்னால் நகர்ந்தாள். அந்தக் கணத்தில் காபாலிகைக்குப் பின்புறத்தில் அவள் அறியாமல் ஓர் உருவம் திடீரென்று தோன்றியது. பின்கட்டின் வாசற்படி வழியாக நுழைந்த அந்த உருவம் காபாலிகையின் கத்தி பிடித்த கையைச் சட்டென்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

அந்தப் பிடியின் பலத்தினால் காபாலிகையின் கைவிரல்கள் விரிந்து கத்தி தரையில் விழுந்தது. அளவில்லாத குரோதத்துடன் காபாலிகை திரும்பிப் பார்த்தாள். "அட பாவி! நல்ல சமயத்தில் வந்து விட்டாயா?" என்றாள். அப்படி அதிசயமாகத் திடீரென்று தோன்றித் தன் உயிரைக் காத்த உருவத்தைச் சிவகாமியும் அப்போது உற்றுப் பார்த்தாள். அந்த உருவம் வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசிதான் என்று தெரிந்த போு சிவகாமிக்கு உண்டான வியப்பும் திகைப்பும் எல்லையற்றவையாயின. ஆகா! சக்கரவர்த்தி செத்துப் போனதாகச் சொன்னார்களே! ஒருவேளை அவருடைய ஆவி, வடிவமா? அல்லது, அல்லது.... முன்னொரு சமயம் செய்ததைப் போல் ஒருவேளை பிக்ஷுதான் சக்கரவர்த்தி வேஷம் பூண்டு வந்திருக்கிறாரோ?



நாற்பத்தோராம் அத்தியாயம்
"இதோ உன் காதலன்"

நல்ல சமயத்தில் வந்து சிவகாமியின் உயிரைக் காப்பாற்றியவர் புலிகேசி சக்கரவர்த்தி அல்ல - புலிகேசி வேஷம் பூண்ட நாகநந்தி அடிகள் என்பது நேயர்கள் அறிந்த விஷயமே! வாசலில் நின்ற கோபங்கொண்ட கூட்டத்தைப் பார்த்து விட்டுச் சிவகாமி கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அடுத்த நிமிஷமே குதிரைகள் விரைந்து வரும் சப்தம் கேட்டது. வருகிறவர்கள் பல்லவ வீரர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு ஜனக் கூட்டத்தில் பெரும்பாலோர் ஓட்டம் பிடித்தார்கள். எஞ்சி நின்ற ஜனங்களும் வீட்டைக் காவல் புரிந்த சளுக்க வீரர்களும் வருகிறவர் புலிகேசிச் சக்கரவர்த்தி என்பதைக் கண்டதும் வியப்பினால் ஸ்தம்பித்து நின்றார்கள். நர்மதையிலிருந்து துங்கபத்திரை வரையில் பரவிக் கிடந்த மகத்தான சாம்ராஜ்யத்தைப் பத்து நாளைக்கு முன்பு வரையில் ஏக சக்ராதிபதியாக இணையற்ற மகிமையுடன் ஆட்சி செலுத்திய தங்களுடைய மன்னருக்கு இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை பெரிய துர்க்கதி நேர்ந்ததையெண்ணி வாதாபி மக்கள் கலங்கிப் போயிருந்தார்கள்.

சக்கரவர்த்தியைப் பார்த்ததும் அங்கு எஞ்சி நின்ற ஜனங்கள் ஓவென்று கதறிப் புலம்பத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த சக்கரவர்த்தி தம் அருகில் நின்ற வீரனிடம் ஏதோ சொல்ல, அவன் கையமர்த்திக் கூட்டத்தில் அமைதியை உண்டாக்கிய பிறகு உரத்த குரலில் கூறினான்; "மகா ஜனங்களே! இந்த ஆபத்துக் காலத்தில் நீங்கள் எல்லாரும் காட்டும் இராஜ விசுவாசத்தைக் கண்டு சக்கரவர்த்தி ஆறுதல் பெற்று உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறார். எதிர்பாராத வஞ்சகச் செயலினால் இத்தகைய துரதிர்ஷ்டம் நமக்கு நேர்ந்து விட்டது. இதற்கெல்லாம் தக்க சமயத்தில் பழிவாங்கியே தீர்வதென்று சக்கரவர்த்தி உறுதி கொண்டிருக்கிறார். இந்த வீட்டிலுள்ள பல்லவ நாட்டு மங்கை வாதாபிக்கு நேர்ந்த விபரீதத்துக்கும் ஒரு காரணம் என்பதை அறிந்து அவளைத் தக்கபடி தண்டிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார். அந்த வேலையை அவருக்கு விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் அவரவர் உயிர் பிழைப்பதற்குரிய மார்க்கத்தைத் தேடும்படி கேட்டுக் கொள்கிறார். ஈவு இரக்கமற்ற பல்லவ அரக்கர்கள் அதர்ம யுத்தத்தில் இறங்கி உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறார்கள். அவரவருடைய பெண்டு பிள்ளைகளையும் உடைமைகளையும் கூடிய வரையில் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்; உடனே அவரவருடைய வீட்டுக்குப் போங்கள்!"

இதைக் கேட்டதும் ஜனங்கள் இன்னும் உரத்த சப்தத்தில் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் சாபமிட்டுக் கொண்டும் அங்கிருந்து கலைந்து போகத் தொடங்கினார்கள். பிறகு, சக்கரவர்த்தி அந்த வீட்டு வாசலில் காவல் புரிந்தவர்களைப் பார்த்து, "உங்களுடைய கடமையை நன்றாக நிறைவேற்றினீர்கள். மிகவும் சந்தோஷம், இனிமேல் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பாருங்கள். உயிர் தப்பியவர்கள் எல்லாரும் நாசிகாபுரிக்கு வந்து சேருங்கள்! அங்கு நான் கூடிய சீக்கிரத்தில் வந்து உங்களைச் சந்திக்கிறேன்!" என்றதும், அந்த வீரர்கள் கண்ணில் நீர் ததும்பச் சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவ்விடமிருந்து சென்றார்கள். பிறகு சக்கரவர்த்தி தம்முடன் வந்த குதிரை வீரர்களின் தலைவனைப் பார்த்து, "தனஞ்செயா! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?" என்று கேட்க, "ஆம் பிரபு! நினைவிருக்கிறது" என்றான் தனஞ்செயன்.

"இன்னொரு தடவை சொல்லுகிறேன்; இங்கிருந்து உடனே செல்லுங்கள், 'மாமல்ல சக்கரவர்த்திக்கு ஜே!' என்று கோஷம் போட்டுக் கொண்டு நகரை விட்டு வெளியேறுங்கள். காபாலிகர் பலிபீடத்துக்கு அருகில் உள்ள காட்டுக்கு வந்து சேருங்கள். உங்களுக்கு முன்னால் நான் அங்கு வந்து சேர்ந்து விடுவேன்!" என்று கூறி விட்டு, மறுபடியும் அந்த வீரன் காதோடு, "பலிபீடத்துக்கருகிலுள்ள குகையில் பைத்தியம் கொண்ட காபாலிகை ஒருத்தி இருப்பாள். தாட்சண்யம் பாராமல் அவளைக் கொன்று விடு!" என்றார் சக்கரவர்த்தி. தனஞ்செயனும் மற்ற வீரர்களும் அங்கிருந்து மறுகணமே புறப்பட்டுச் சென்று மறைந்தார்கள். பிறகு அந்த வீதி சூனியமாகக் காட்சி அளித்தது.

புலிகேசி வேஷம் தரித்த நாகநந்தி, சிவகாமியின் வீட்டுக் கதவண்டை வந்து மெதுவாகத் தட்டிப் பார்த்தார். பிறகு திட்டி வாசல் கதவைத் தொட்டுத் தள்ளியதும் அது திறந்து கொண்டது. உடனே அதன் வழியாக உள்ளே சென்று கதவைத் தாழிட்டார். வீட்டில் முன்கட்டை நன்றாய்ப் பார்த்து விட்டு அங்கு யாரும் இல்லையென்று தெரிந்து கொண்டு பின்கட்டை அடைந்தார். கத்தி ஓங்கிய காபாலிகையின் கையைக் கெட்டியாகப் பிடித்துச் சிவகாமியின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றினார். "அட பாவி, வந்து விட்டாயா?" என்று காபாலிகை சொன்னதும், புத்த பிக்ஷு அவளைத் தமது காந்தக் கண்களால் உற்றுப் பார்த்து, "ரஞ்சனி! சற்று இங்கே வா!" என்று கூறி விட்டு அப்பால் சென்றார். அந்த மூர்க்க ராட்சஸி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர் பின்னோடு சென்றது சிவகாமிக்கு மிக்க வியப்பையளித்தது.

பிக்ஷு ரஞ்சனியை ஒரு தூணின் மறைவுக்கு அழைத்துக் கொண்டு போனார். சிவகாமியின் காதில் விழாத குரலில், "ரஞ்சனி! இது என்ன காரியம் செய்தாய்?" என்றார். "பிக்ஷு! தவறு ஒன்றும் நான் செய்யவில்லையே? நகரம் எரிவதைக் கண்டதும் தங்களைப் பற்றிக் கவலை ஏற்பட்டது. தங்களைத் தப்புவித்து அழைத்துப் போவதற்காக வந்தேன்!" "அப்படியா? ரொம்ப சந்தோஷம், ஆனால் அந்தப் பல்லவ நாட்டுப் பெண்ணை எதற்காகக் கொல்லப் போனாய்?" "அதுவும் தங்களைத் தப்புவிப்பதற்காகத்தான். அவளால் தங்களுக்கு அபாயம் நேராதென்பது என்ன நிச்சயம்? அவள் விரோதி நாட்டுப் பெண்தானே? "மூடமே! அவளால் எனக்கு என்ன அபாயம் நேர்ந்து விடும்?"

"பிக்ஷு! காதல் என்கிற அபாயம் மற்ற அபாயங்களை விட மிகப் பொல்லாதது அல்லவா?" என்றாள் காபாலிகை. "உன் மூடத்தனம் இன்னும் உன்னை விட்டுப் போகவில்லை. நீ இருக்கும் போது நான் இன்னொரு பெண்ணை..." "அப்படியானால் அவளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை உங்களுக்கு? அவளை நான் கொன்று பழி தீர்த்துக் கொண்டால் உங்களுக்கு என்ன? "அசடே! சிவகாமியைப் பழிவாங்குவதற்கு உனக்கு என்ன காரணம் இருக்கிறது எனக்கல்லவா இருக்கிறது? பல்லவன் பேரில் என்னுடைய பெரும் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவளை நான் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறேன் என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன்?"

"பிக்ஷு! இப்போது ஒன்றும் மோசம் போய் விடவில்லையே?" "மோசம் போய் விடவில்லை; ஒரு விதத்தில் நீ இங்கு அவசரமாய்ப் புறப்பட்டு வந்ததே நல்லதாய்ப் போயிற்று. ரஞ்சனி! நீ எனக்கு இச்சமயம் உதவி செய்ய வேண்டும். இப்போது நான் சொல்லுகிறதைக் கேட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் உன் இஷ்டப்படி நான் நடப்பேன்...!" "பிக்ஷு! இது சத்தியமா?" "எத்தனை தடவை உனக்குச் சத்தியம் செய்து கொடுப்பது? இப்போது சத்தியம் செய்து விட்டு அப்புறம் அதை மீறி நடந்தால் என்ன செய்வாய்?" "என்ன செய்வதென்று எனக்குத் தெரியும்." "அதைச் செய்து கொள் இப்போது நான் சொல்கிறபடி செய்!" "சொல்லுங்கள், அடிகளே!"

பிக்ஷு தன் குரலை இன்னும் தாழ்த்திக் கொண்டு காபாலிகையிடம் அவள் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிச் சொன்னார். "நன்றாகத் தெரிந்து கொண்டாயல்லவா? அந்தப்படி செய்வாயா?" என்று கேட்டார். "கட்டாயம் செய்கிறேன்!" என்றாள் காபாலிகை. பிறகு, கோரப் புன்னகையுடன், "பிக்ஷு! தாங்கள் தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொண்ட பிறகு நான் என் பழியைத் தீர்த்துக் கொள்ளலாம் அல்லவா?" என்றாள். பிக்ஷுவின் முகம் சுருங்கிற்று; "ஆ! உன் சந்தேகம் உன்னை விட்டு அகலாது போல் இருக்கிறது. எத்தனை தடவை 'ஆகட்டும்' என்று சொல்லியிருக்கிறேன்! போ, சீக்கிரம்! அதோ ரதமும் குதிரைகளும் வரும் சப்தம் கேட்கிறது!" என்றார். காபாலிகை அந்த வீட்டின் முன்கட்டில் பிரவேசித்து வாசல் கதவின் சமீபம் வந்தாள். திட்டி வாசற் கதவின் தாழைத் திறந்து விட்டுப் பக்கத்தில் ஒதுங்கி நின்றாள். கத்தி பிடித்த அவளுடைய வலது கையை முதுகின் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு அபாயத்தை எதிர்பாராத ஆட்டின் மேல் பாய யத்தனிக்கும் பெண் புலியைப் போல காத்திருந்தாள். அந்தப் பெண் பேயின் முகத்திலும் கண்களிலும் கொலை வெறி கூத்தாடிற்று.

காபாலிகையை வாசற் பக்கத்துக்கு அனுப்பி விட்டு நாகநந்தி பிக்ஷு சிவகாமியின் அருகில் வந்தார். "சிவகாமி! இன்னமும் என் பேரில் சந்தேகம் தீரவில்லையா? இன்னமும் என்னிடம் நம்பிக்கை வரவில்லையா?" என்று கூறிய பிக்ஷுவின் கனிந்த குரல் சிவகாமிக்கு மனக்குழப்பத்தை இன்னும் அதிகமாக்கிற்று. "சக்கரவர்த்தி!" என்று ஆரம்பித்தவள் தயங்கி நிறுத்தினாள். "ஓ! என் தவறுதான்!" என்று சொல்லி நாகநந்தி தம் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தார். சிவகாமியின் குழப்பம் நீங்கியது. "சுவாமி! தாங்களா! இந்த வேடத்தில்..." என்றாள். "ஆம்; சிவகாமி! ஒரு சமயம் இந்த வேடம் பூண்டு உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன்... இன்னும் ஒரு கணம் சென்று வந்திருந்தால் அந்த ராட்சஸி உன்னைக் கொலை செய்திருப்பாள்! உன்னை மட்டுமா? வானமும் பூமியும் கண்டு வியக்கும்படியான அற்புத நடனக் கலையையும் உன்னோடு சேர்த்துக் கொன்றிருப்பாள்..." "ஆனால்...." என்று சிவகாமி தயங்கினாள். "ஏன் தயங்குகிறாய், சிவகாமி! என்ன வேண்டுமோ, சீக்கிரம் கேள்!" என்றார் பிக்ஷு. "ஒன்றுமில்லை, அந்தக் காபாலிகையின் பேரில் தங்களுக்குள்ள சக்தியை நினைத்து வியந்தேன்!" "அது காதலின் சக்தி சிவகாமி! அந்தப் பெண் பேய் என்னிடம் காதல் கொண்டிருக்கிறது! அதனால்தான் அவள் என் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் கீழ்ப்படிகிறாள்!"

சிவகாமியின் முகத்தில் புன்னகையைக் கண்ட பிக்ஷு மேலும் கூறினார்; "ஆனால், இவள் எப்போதும் இந்தக் கோர ரூபத்துடன் இருந்ததாக நினையாதே! முன்னமே சொன்னேனே, நினைவில்லையா? ஒரு காலத்தில் வாதாபி அரண் மனைக்குள்ளேயே இவள் தான் சிறந்த அழகியாக இருந்தாள். ஒருநாள் உன்னைப் பற்றி இழிவாகப் பேசினாள். அதன் காரணமாக இந்தக் கதியை அடைந்தாள்!" "ஐயோ! என்ன கோர தண்டனை!" "அவள் இந்த மட்டோ டு தப்பினாள்; ஆனால் அஜந்தா குகை சுவரில் நீ புலிகேசியின் அடி பணிந்ததாகச் சித்திரம் எழுதியவன் என்ன கதி அடைந்தான் தெரியுமா? அவனுடைய கழுத்தைத் தொட்டு ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான்! உடனே அவனுடைய தேகம் பற்றி எரிய ஆரம்பித்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சித்திரக்காரன் ஓட்டமாய் ஓடி நதியின் வெள்ளத்தில் குதித்தான், அப்புறம் அவன் வெளியேறவேயில்லை!" "ஐயோ என்ன கொடுமை!...எதற்காக இப்படியெல்லாம் செய்தீர்கள்?" என்று இருதயம் பதைபதைக்கச் சிவகாமி கேட்டாள்.

"ஆஹா! இது மட்டுந்தானா உனக்காகச் செய்தேன்? சிவகாமி! இன்றைக்கு இந்தப் பெரிய வாதாபி நகரம் தீப்பற்றி 'எரிகிறதே' இதற்குக் காரணம் யார் தெரியுமா? இன்று இந்த மாநகரத்தில் பல்லவ வீரர்கள் பிரவேசித்து அட்டகாசம் செய்வதற்கும், இந்த நகரத்தில் வாழும் இலட்சோப இலட்சம் ஜனங்கள் பித்துப்பிடித்தவர்கள் போல் அங்குமிங்கும் சிதறி ஓடுவதற்கும் காரணம் யார் தெரியுமா? தேசத்துரோகியும் குலத் துரோகியுமான இந்தப் பாதகன்தான்!" என்று சொல்லிப் பிக்ஷு படீர் படீர் என்று தமது மார்பில் குத்திக் கொண்டார். இதனால் பிரமை பிடித்து நின்ற சிவகாமியைப் பார்த்துச் சொன்னார்; "சிவகாமி! இந்த நகரை விட்டு அஜந்தா கலை விழாவுக்காக நான் போன போதே பல்லவன் படையெடுத்து வருகிறான் என்பதை அறிந்தேன். ஆயினும், என் சகோதரன் புலிகேசியிடம் அதைச் சொல்லாமல் மறைத்து அஜந்தாவுக்கு அவனை அழைத்துச் சென்றேன். ஏன் தெரியுமா? உன் ஒருத்தியின் சந்தோஷத்துக்காகத்தான்; உன்னுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்த்து விட்டு நீ இந்த நகரத்தை விட்டுக் கிளம்புவதற்காகத்தான். அதற்காகவே, என் உயிருக்குயிரான உடன்பிறந்த தம்பியையும் பறி கொடுத்தேன். வாதாபிச் சக்கரவர்த்தியின் மரணத்துக்கு இந்தப் பாதகனே காரணம்!" என்று சொல்லிப் பிக்ஷு மறுபடியும் தம் மார்பில் அடித்துக் கொண்டார்.

சிவகாமியின் உடம்பெல்லாம் பதறியது; பிக்ஷுவின் கையை கெட்டியாகப் பிடித்து அவர் அடித்துக் கொள்வதைத் தடுத்தாள். சிவகாமி தன்னுடைய தளிர்க்கரத்தினால் தொட்ட உடனேயே நாகநந்தியடிகள் சாந்தமடைந்தார். "சிவகாமி! உன்னைப் பதறும்படி செய்து விட்டேன் மன்னித்து விடு!" என்றார். "மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது, சுவாமி! அன்று என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினீர்கள். இன்று என் உயிரைக் காப்பாற்றினீர்கள். இதற்காகவெல்லாம் தங்களுக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் பேதைக்காகத் தாங்கள் இவ்வளவு சிரமம் எடுத்திருக்க வேண்டாம்...." "சிவகாமி! உன்னை இன்னும் நான் காப்பாற்றி விடவில்லை. உன் தந்தைக்காகவும் உனக்காகவும் நான் செய்திருக்கும் காரியங்களுக்கு நீ சிறிதேனும் நன்றியுள்ளவளாயிருந்தால், இப்போது எனக்கு ஓர் உதவி செய்!" "என்ன செய்ய வேண்டும், சுவாமி?" "என்னிடம் நம்பிக்கை வைத்து என்னுடன் புறப்பட்டு வா!" சிவகாமி திடீரென்று சந்தேகமும் தயக்கமும் கொண்டு, "எங்கே வரச் சொல்கிறீர்கள்? எதற்காக?" என்று கேட்டாள். "சிவகாமி! இந்தப் பெண் பேய் உன்னைக் கொல்ல யத்தனித்ததோடு உனக்கு வந்த அபாயம் தீர்ந்து விடவில்லை. பல்லவர்கள் வைத்த தீ அடுத்த வீதி வரையில் வந்து விட்டது. இன்னும் அரை நாழிகையில் இந்த வீட்டுக்கும் வந்து விடும். அது மட்டுமல்ல; இந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூர்க்க ஜனங்களின் கூட்டத்தைப் பார்த்தாயல்லவா! அவர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வெறி கொண்டிருக்கிறார்கள். இந்த நகரத்துக்கு நேர்ந்த விபத்துக்கு நீதான் காரணம் என்று நினைக்கிறார்கள்...!"

இந்தச் சமயம் வீட்டு வாசலில் ஏதோ பெரிய ரகளை நடக்கும் சப்தம் கேட்டது. கதவு திறந்து மூடும் சப்தமும், அதைத் தொடர்ந்து ஓர் அலறலும் கீழே ஏதோ தொப்பென்று விழும் ஓசையும் விரைவாக அடுத்தடுத்துக் கேட்டன. சிவகாமியின் உடம்பு நடுங்கிற்று. "மூர்க்க ஜனங்களின் அட்டகாசத்தைக் கேட்டாயல்லவா, சிவகாமி? இங்கேயிரு்து இந்த மூர்க்க ஜனங்களால் நீ கொல்லப்பட வேண்டும்? என்னுடன் வர மாட்டாயா?" என்றார் நாகநந்தி. நாகநந்தி கூறுவது உண்மைதான் என்ற நம்பிக்கை சிவகாமிக்கு உண்டாயிற்று. "அடிகளே! என்னை எங்கே எப்படி அழைத்துச் செல்வீர்கள்?" என்று கேட்டாள். "இத்தகைய அபாய காலத்தை எதிர்பார்த்து இந்த வீட்டிலிருந்து சுரங்க வழி ஏற்படுத்தியிருக்கிறேன். என்னை நம்பி நீ புறப்பட்டு வந்தால் அரை நாழிகை நேரத்தில் உன்னை இந்தக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்ப்பேன்!"

"சுவாமி! அது மட்டும் என்னால் முடியாது; தங்களை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். இந்த வீட்டிலிருந்து நான் வெளிக் கிளம்ப மாட்டேன் தாங்கள் செல்லுங்கள்." "சிவகாமி! நான் சொல்ல வந்ததை நீ முழுவதும் கேட்கவில்லை. உன்னை எங்கே அழைத்துப் போக உத்தேசிக்கிறேன் என்று தெரிந்து கொள்ளாமலே சொல்லுகிறாய். ஒருவேளை முன்னொரு சமயம் சொன்னேனே அந்த மாதிரி என்னுடன் அஜந்தா மலைக்குகைக்கு வரும்படி அழைப்பதாக எண்ணிக் கொண்டாயோ, என்னவோ? அந்தக் கனவையெல்லாம் மறந்து விட்டேன் சிவகாமி! உன் மனம் ஒருநாளும் மாறப் போவதில்லையென்பதை அறிந்து கொண்டேன். இப்போது என்னுடைய கவலையெல்லாம் உன்னை எப்படியாவது தப்புவித்து உன் தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் கோட்டைக்கு வெளியே சென்றதும் நேரே உன் தந்தையிடம் கொண்டு போய் உன்னை ஒப்புவிப்பேன் பிறகு என் வழியே நான் செல்வேன்.

சிவகாமி சிறிது சிந்தனை செய்து விட்டு, "சுவாமி! உங்களை நான் பூரணமாய் நம்புகிறேன். ஆனாலும் இந்த வீட்டை விட்டு நான் புறப்பட மாட்டேன். அவர் வந்து என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றால் இங்கிருந்து போவேன்; இல்லாவிட்டால் இங்கேயே இருந்து சாவேன்!" என்றாள். நாகநந்தியின் முகபாவம் திடீரென்று மாறியது. அவர் கண்களில் தணல் வீசியது. நெருப்புச் சிரிப்பு சிரித்தவண்ணம், "உன் காதலன் மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்துப் போவான் என்றா நினைக்கிறாய்; ஒருநாளும் இல்லை" என்றார். "ஏன் இல்லை?" என்று ஒரு குரல் கேட்டது . இருவரும் திரும்பி பார்த்தார்கள்; காபாலிகை, "சிவகாமி! பிக்ஷு சொல்லுவதை நம்பாதே! இதோ உன் காதலன்!" என்று சொல்லியவண்ணம் தான் தூக்கிக் கொண்டு வந்த உடலைத் தரையிலே போட்டாள். மார்பிலே கத்தி ஊடுருவியிருந்த உருவத்தைச் சிவகாமி ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தாள். அது கண்ணனுடைய முகம் என்று தெரிந்ததும், "அண்ணா!" என்று அலறிக் கொண்டு அந்த உடலின் அருகில் சென்றாள். கண்ணபிரானுடைய கண்கள் திறந்தன. சிவகாமியின் முகத்தை ஒருகணம் உற்றுப் பார்த்தன. "தங்காய்! உன் அக்கா கமலி உன்னை ஆசையோடு எதிர்பார்க்கிறாள்; சின்னக் கண்ணனும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்!" என்று அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன. மறுகணம் அந்தச் சிநேகம் ததும்பிய முகத்தில் மரணக்களை குடிகொண்டது. பேதை சிவகாமி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தாள்.



நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
ரஞ்சனியின் வஞ்சம்

மூர்ச்சித்து விழுந்த சிவகாமியண்டை நாகநந்தி பாய்ந்து சென்று நெற்றியின் பொட்டுக்களிலும், மூக்கின் அருகிலும் தம் நீண்ட விரல்களை வைத்துப் பார்த்தார். காபாலிகையைக் கடுங்கோபத்துடன் நோக்கி, "பாதகி! என்ன காரியம் செய்து விட்டாய்!" என்றார். மயானத்தில் நள்ளிரவில் பேய்கள் பல சேர்ந்து சிரிப்பது போல் காபாலிகை சிரித்தாள். "அடிகளே! நான் என்ன பாதகத்தைச் செய்துவிட்டேன்? தாங்கள் சொன்னபடி தானே செய்தேன்? இவளுடைய காதலன் மாமல்லனை வீட்டுக்குள்ளே நுழைந்ததும் கொன்றுவிடும்படி தாங்கள்தானே சொன்னீர்கள்? அருமைக் காதலனுடைய கதியைக் கண்டு இந்தக் கற்புக்கரசி செத்து விழுந்தால் அதற்கு நான் என்ன செய்வேன்?" என்று காபாலிகை சொல்லுவதற்குள் நாகநந்தி குறுக்கிட்டு, "அசடே! மாமல்லன் இவன் அல்ல; மாமல்லனுடைய ரதசாரதி கண்ணபிரான் இவன்! அரசனுக்கும் ரதசாரதிக்கும் உள்ள வித்தியாசங்கூட உனக்குத் தெரியவில்லையா?" என்றார். "ஓஹோ! அப்படியா சமாசாரம்? 'முதலிலே மாமல்லன் பிரவேசிப்பான் அவனைக் கொன்றுவிடு!' என்று தாங்கள் சொன்னபடி செய்தேன். இப்போது இவன் மாமல்லனில்லை, அவனுடைய சாரதி என்கிறீர்கள்!"

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் வாசற் கதவை வெளியிலிருந்து தடால் தடால் என்று கோடாரியால் பிளக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரஞ்சனி! போனது போகட்டும், கடைசியாக நான் கேட்கும் ஒரே ஓர் உதவியை மட்டும் செய். இந்தப் பெண்ணின் உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறது. கொஞ்சம் அவகாசம் இருந்தால் இவளை உயிர்ப்பித்து விடுவேன். இவள் நம்முடைய வசத்தில் இருக்கும் வரையில் மாமல்லன் எப்படியும் இவளைத் தேடிக் கொண்டு வருவான். என்னுடைய பழி நிறைவேறும் வரையில் இவள் உயிரோடிருந்தாக வேண்டும். ஆகையால், இவளை எடுத்துக் கொண்டு நான் முன்னால் போகிறேன். அதோ பல்லவ வீரர்கள் கதவைப் பிளக்கிறார்கள். நீ சற்று நேரம் இங்கேயிருந்து அவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்."

"அடிகளே! ஒருவர் இருவர் வந்தால் நான் சமாளிப்பேன். கதவைப் பிளந்து கொண்டு பலர் உள்ளே வந்தால் அவர்களையெல்லாம் நான் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?" "உன் சாமர்த்தியத்தையெல்லாம் இதிலேதான் காட்ட வேண்டும். நீதான் சிவகாமி என்று சொல்லு; சற்று நேரம் அவர்கள் திகைத்து நிற்பார்கள். அப்புறம் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லு! அரைநாழிகை நேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்தால் போதும்!" "ஆ! கள்ள பிக்ஷுவே! பல்லவ வீரர்கள் கையால் என்னைக் கொல்லுவிப்பதற்குப் பார்க்கிறீரா?" "ரஞ்சனி! பல்லவ வீரர்களால் நீ சாகமாட்டாய் என்று சத்தியம் செய்து கொடுக்கிறேன். உன்னைப் பைத்தியக்காரி என்று அவர்கள் விட்டுவிடுவார்கள். ஒரு நாளும் அவர்களால் உனக்கு மரணம் நேராது. போ! சீக்கிரம் போ! இந்த ஓர் உதவி மட்டும் எனக்கு நீ செய்! அப்புறம் உன்னை எக்காலத்திலும் மறக்க மாட்டேன்!"

அசூயையும் குரோதமும் நிறைந்த கண்ணால் காபாலிகை மூர்ச்சையாய்க் கிடந்த சிவகாமியையும் புத்த பிக்ஷுவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, வேண்டாவெறுப்பாக வாசற்பக்கம் போவதற்குத் திரும்பினாள். அவள் திரும்பி இரண்டு அடி எடுத்து வைத்தாளோ இல்லையோ, புத்த பிக்ஷு கண்மூடித் திறக்கும் நேரத்தில் தன் இடுப்பில் செருகியிருந்த விஷக் கத்தியைக் கையில் எடுத்தார். அவருடைய சக்தியையெல்லாம் பிரயோகித்துக் காபாலிகையின் முதுகில் அந்தக் கத்தியைச் செலுத்தினார். "ஓ!" என்று அலறிக் கொண்டு காபாலிகை திரும்பினாள். "அடபாவி! சண்டாளா! கடைசியில் துரோகம் செய்து விட்டாயா!" என்று கத்திக் கொண்டு ரஞ்சனி நாகநந்தி மேல் பாய்ந்தாள். அவர் சட்டென்று விலகிக் கொள்ளவே, தலைகுப்புறக் கீழே விழுந்தாள். மின்னல் மின்னி மறையும் நேரத்தில் நாகநந்தி தரையில் மூர்ச்சையாகிக்கிடந்த சிவகாமியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டின் பின்புறத்தை நோக்கி விரைந்தார்.

கால வெள்ளத்தில் சிறிது பின்னோக்கிச் சென்று, கண்ணபிரான் அந்தத் துர்கதிக்கு ஆளானது எப்படி என்பதைக் கவனிப்போம். பலபலவென்று கிழக்கு வெளுக்கும் நேரத்தில், வாதாபிக் கோட்டைக்குள்ளே, அன் பிரதான மேற்கு வாசல் வழியாகப் பிரவேசித்த சேனாதிபதி பரஞ்சோதி கோதண்டத்திலிருந்து விடுபட்ட இராம பாணத்தைப் போல் நேரே சிவகாமி இருந்த மாளிகையை நோக்கிச் செல்ல விரும்பினார். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. நாற்புறமும் தீப்பட்டு எரிந்து கொண்டிருந்த அந்த மாநகரத்தின் மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டும் அழுது புலம்பிக் கொண்டும் அங்குமிங்கும் பித்துப் பிடித்தவர்கள் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். கோட்டை மதில்மேலாக ஆங்காங்கு ஏறிக் குதித்து நகரத்துக்குள் புகுந்த பல்லவ பாண்டிய வீரர்கள் வாதாபியின் பெருஞ் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் வெறியினால் மதம் பிடித்தவர்களாய்த் தங்களைத் தடுத்தவர்களையெல்லாம் கொன்று வீழ்த்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடினார்கள். தீப்பிடித்த வீடுகளின் மேற்கூரைகள் தடதடவென்று விழுந்து வீதிகளை அடைத்தன. தீயும் புகையும் படலம் படலமாகக் காற்றில் சுழன்று நாற்பக்கமும் பரவின.

இத்தகைய இடையூறுகளையெல்லாம் தாண்டிக் கொண்டு சேனாதிபதி பரஞ்சோதி வாதாபி வீதிகளின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்பது வருஷத்துக்கு முன்னால் அந்த நகரின் வீதிகளின் வழியாகச் சிவகாமியின் வீட்டுக்குச் சென்ற ஞாபகத்தைக் கொண்டு சுலபமாக இப்போது வழி கண்டுபிடித்துச் செல்லலாமென்று அவர் எதிர்பார்த்தார். அதுவும் அப்போது நகரில் ஏற்பட்டிருந்த குழப்பத்தினால் அவ்வளவு சுலபமாயில்லை. அவர் பின்னோடு ரதம் ஓட்டிக் கொண்டு வந்த கண்ணபிரானையும் அடிக்கடி வழி சரிதானா என்று கேட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. கடைசியாகச் சிவகாமியின் மாளிகை இருந்த வீதியைச் சேனாதிபதி அடைந்த சமயம் சூரியோதயம் ஆகிவிட்டது. அந்த வீதி முனைக்கு வந்தபோது ஒரு பெரும் கூட்டம் அங்கிருந்து பெயர்ந்து செல்வதை அவர் பார்த்தார். ரிஷபக் கொடியுடன் கூடிய பல்லவ வீரர்களின் வருகையைக் கண்டதும் எதிரில் வந்த ஜனங்கள் பீதியடைந்து நாற்பக்கமும் சிதறி ஓடினார்கள்.

சிவகாமி இருந்த மாளிகை வாசலைப் பரஞ்சோதி அடைந்ததும் அந்த வாசலும் வீதியும் நிர்மானுஷ்யமாயிருப்பதைக் கண்டார். அந்தக் காட்சி அவருடைய உள்ளத்தில் ஒருவிதத் திகிலை உண்டாக்கியது. வீட்டின் வெளிக் கதவு சாத்தியிருந்தது, வீட்டுக்குள்ளேயோ நிசப்தம் குடிகொண்டிருந்தது. யாருக்காக, யாருடைய சபதத்தை நிறைவேற்றி அழைத்துச் செல்வதற்காக, இவ்வளவு பெரும் பிரயத்தனம் செய்து படையெடுத்து வந்தோமோ, அந்த ஆயனச் சிற்பியின் மகள் இந்த வீட்டுக்குள்ளே பத்திரமாயிருக்கிறாளா? அவளை உயிரோடு மீட்டுக் கொண்டு போய்க் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் ஆயனரிடம் ஒப்புவிக்கும் பாக்கியம் கிடைக்குமா? இப்படிச் சேனாதிபதி பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போது வீதியின் எதிர்புறத்திலிருந்து சில பல்லவ வீரர்கள் ரிஷபக் கொடியுடன் விரைந்து குதிரைமேல் வருவது தெரிந்தது. அவர்கள் தமக்குத்தான் ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வருகிறார்கள் என்று பரஞ்சோதி ஊகித்துக் கொண்டு, பக்கத்தில் ரதத்திலிருந்து இறங்கி நின்ற கண்ணபிரானைப் பார்த்து, "கண்ணா! கதவைத் தட்டு, கதவு திறந்ததும் உள்ளே சென்று தேவியிடம் நாம் தான் வந்திருக்கிறோம் அவரை அழைத்துப் போவதற்கு என்று சொல்லு!" என்றார். அவ்விதமே கண்ணன் போய்க் கதவைத் தட்டினான். சிறிது நேரத்துக்கெல்லாம் கதவின் திட்டி வாசல் திறந்தது. கண்ணன் உள்ளே பிரவேசித்ததும் மறுபடியும் கதவு சாத்திக் கொண்டது.

அவசரமாக வந்த பல்லவ வீரர்களின் தலைவன், பரஞ்சோதி எதிர்பார்த்ததுபோலவே அவருக்கு ஒரு செய்தி கொண்டு வந்தான். செய்தி அனுப்பியவன் இலங்கை இளவரசன் மானவன்மன். சேனாதிபதியின் கட்டளைப்படி மானவன்மன் பொறுக்கி எடுத்த வீரர்களுடன் வடக்குக் கோட்டை வாசல் வழியாகப் பிரவேசித்து வாதாபி அரண்மனையை அடைந்தான். அரண்மனையில் தீப்பிடிப்பதற்குள்ளே அதனுள்ளே இருந்த விலை மதிப்பதற்கரிய செல்வங்களையெல்லாம் வெளியேற்றிவிட ஏற்பாடு செய்தான். ஆனால், அரண்மனைக்குள்ளும் வெளியிலும் எவ்வளவு தேடியும் வாதாபிச் சக்கரவர்த்தி அகப்படவில்லை. அரண்மனைக் காவலர்களை விசாரித்ததில், சக்கரவர்த்தி கடைசியாக அரண்மனை வாசலில் சளுக்க வீரர்களையெல்லாம் சேர்த்து எல்லாரையும் எப்படியாவது உயிர் தப்பிப் பிழைத்து நாசிகாபுரிக்கு வந்து சேரும்படி சொல்லிவிட்டுத் தாம் ஒரு சில வீரர்களுடன் தெற்குக் கோட்டை வாசலை நோக்கிச் சென்றதாகத் தெரிந்தது. ஆனால், தெற்குக் கோட்டை வாசலைக் கைப்பற்றிக் காவல் புரிந்த பல்லவ வீரர்கள் அந்த வழியாகச் சக்கரவர்த்தி வெளியேறவில்லையென்று உறுதியாகச் சொன்னார்கள்.

இதையெல்லாம் கேட்ட சேனாதிபதிக்கு மனக் கிலேசம் முன்னை விட அதிகமாயிற்று. வாதாபிச் சக்கரவர்த்தியாக வேஷம் பூண்டு நடித்தவர் நாகநந்திதான் என்பதை அவர் சத்ருக்னன் மூலம் தெரிந்து கொண்டிருந்தார் அல்லவா? விஷப்பாம்பை விடக் கொடிய அந்தப் பாரகன் ஒருவேளை சிவகாமியின் மூலமாகப் பல்லவர் மீது பழி தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாமல்லவா? இந்த நிமிஷத்தில் ஒருவேளை அந்தக் கள்ள பிக்ஷு சிவகாமியைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறானோ, என்னவோ? அவளை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளிக்கப் பார்க்கிறானோ, என்னவோ? இந்த மாதிரி எண்ணங்கள் நெஞ்சத்தில் குமுறிக் கொந்தளிக்க பரஞ்சோதி அந்த வீட்டின் வாசற்கதவை விரைந்து நெருங்கினார். அவர் கதவண்டை வந்த சமயம் உள்ளே எங்கேயோயிருந்து 'வீல்' என்று ஒரு பெண்ணின் சோகக் குரல் கேட்டது.

பரஞ்சோதி வெறிபிடித்தவர் போலாகித் தம்முடைய பலம் முழுவதையும் பிரயோகித்துக் கதவைத் தள்ளித்திறக்க முயன்றார். அது முடியாமல் போகவே, "சீக்கிரம் கோடரி கொண்டு வந்து பிளவுங்கள்!" என்று கர்ஜித்தார். மறுகணமே ஐந்தாறு வீரர்கள் கையில் கோடரியுடன் வந்து கதவைப் பிளந்தார்கள். ஐந்து நிமிஷத்தில் கதவுகள் பிளந்து தடாரென்று கீழே விழுந்தன. திறந்த வாசலின் வழியாகப் பரஞ்சோதி உட்புகுந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து வேறு சில வீரர்களும் சென்றார்கள். முன்கட்டு முழுவதும் தேடியும் ஒருவரும் அகப்படவில்லை. பின்கட்டுக்குச் சென்றதும் ஓர் ஆணும் பெண்ணும் குத்திக் கொல்லப்பட்டுத் தரையிலே கிடந்த கோரமான காட்சி பரஞ்சோதியின் கண்முன்னால் காணப்பட்டது. ஆண் உருவத்தின் முகத்தைப் பார்த்ததும் கண்ணபிரான் என்று தெரிந்து போயிற்று. ஐயோ! கமலியின் கணவன் கதி இப்படியா ஆகவேண்டும்? ஆனால், அதைப் பற்றி அதிகம் சிந்திக்க அப்போது நேரமில்லை. அருகில் கிடந்த ஸ்திரீயின் மீது கவனம் சென்றது. அந்த உடல் குப்புறக்கிடந்தபடியால் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை சிவகாமி தேவிதானோ என்னவோ? இருவரையும் கொன்றுவிட்டு அந்தப் பாதகன்...?

பரஞ்சோதி தாம் இன்னது செய்கிறோம் என்று தெரியாமலே அந்தப் பெண் உடலைப் புரட்டி மல்லாக்க நிமிர்த்திப் போட்டார். காபாலிகையின் கோரமுகத்தைப் பார்த்ததும், 'சிவகாமி தேவி இல்லை' என்ற எண்ணத்தினால் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஸ்திரீயின் உடம்பு சிறிது அசைவதையும் நெடிய பெருமூச்சு வருவதையும் கண்டு பரஞ்சோதி திடுக்கிட்டார். அடுத்த நிமிஷம் அவளுடைய செக்கச் சிவந்த கண்கள் பர்சோதியை வெறித்து நோக்கின. "ஆகா! மாமல்லன் நீ தானா?" என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன. சிவகாமியைப் பற்றி அவளிடம் ஏதேனும் தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவலால் எழுந்த பரபரப்புடன், "ஆம், பெண்ணே! நான் மாமல்லன்தான்! நீ யார்? சிவகாமி தேவி எங்கே?" என்று சேனாதிபதி கேட்டார். "இது என்ன கேள்வி? நான்தான் சிவகாமி, தெரியவில்லையா?" என்றாள் காபாலிகை. அப்போது அவள் முகத்தில் தோன்றிய கோரப் புன்னகை அவளுடைய விகாரத்தைப் பன்மடங்காக்கிற்று.

ஒரு கணநேரம் பரஞ்சோதி திகைத்துப் போனார். நெடுங்காலம் சிறைப்பட்டிருந்த காரணத்தினால் சிவகாமி தேவிதான் இவ்விதம் சித்தப் பிரமை கொண்ட பிச்சியாகி விட்டாளோ? சீச்சி! ஒரு நாளும் அப்படியிராது. குண்டோ தரன் ஒரு மாதத்துக்கு முன்புதான் சிவகாமியைப் பார்த்துவிட்டு வந்தான் என்பதும், சத்ருக்னன் காபாலிகையைப் பற்றிக் கூறியதும் பரஞ்சோதிக்கு நினைவு வந்தன. அந்தக் காபாலிகைதான் குகை வழியாகப் பிரவேசித்து இவ்விடம் வந்திருக்கிறாள் போலும். "சீ! ஏன் பொய் சொல்லுகிறாய்? நீ சிவகாமி இல்லை. சிவகாமி எங்கே என்று உண்மையைச் சொன்னால்..." "உண்மையை நான் சொன்னால் அதற்குப் பிரதியாக நீ எனக்கு என்ன செய்வாய்?" "உன் உயிரைக் காப்பாற்றுவேன்" என்றார் பரஞ்சோதி. "ஆகா! விஷக் கத்தி பாய்ந்த என்னைக் காப்பாற்ற, உன்னால் ஒருநாளும் ஆகாது!" "விஷக் கத்தியா? அப்படியானால் நாகநந்திதான் உன்னைக் கொன்றிருக்க வேண்டும்! பெண்ணே சீக்கிரம் சொல்! நாகநந்தி எப்படி, எந்த வழியாகப் போனான்? சொன்னால் உனக்காக அவனைப் பழி வாங்குகிறேன்."

"நாகநந்திமேல் பழிவாங்கி என்ன பிரயோசனம்! அந்தக் கள்ள பிக்ஷு என்னைக் கொன்றது உண்மைதான். ஆனால், அவனாகக் கொல்லவில்லை, அந்த நீலி சிவகாமி தூண்டித்தான் கொன்றான். பல்லவனே! நீ உன்னை மன்மதன் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், என்ன செய்வது? அந்த மூளி சிவகாமிக்கு உன்பேரில் ஆசை இல்லை. வறண்டு காய்ந்து எலும்புந்தோலுமாயிருக்கும் புத்த பிக்ஷுவின் பேரிலேதான் அவளுக்கு மோகம். நீ வருவதாகத் தெரிந்ததும் அவள்தான் நாகநந்தியை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டாள். நான் குறுக்கே நிற்பேனென்று என்னையும் கொல்லச் செய்தாள். எனக்காக நீ பழி வாங்குவதாயிருந்தால் சிவகாமியைப் பழி வாங்கு. அந்த அசட்டுப் புத்த பிக்ஷுவை ஒன்றும் செய்யாதே!"

இந்த வார்த்தைகளெல்லாம் பரஞ்சோதியின் காதில் கர்ண கடூரமாக விழுந்தன. மேலே கேட்கச் சகியாமல், "பெண்ணே! அவர்கள் இருவரும் எங்கே இப்போது? எப்படிப் போனார்கள்? சீக்கிரம் சொல்லு!" என்று கூறினார். தன்னுடைய யுக்தி பலித்துவிட்டது என்று எண்ணிய காபாலிகை, "கொல்லை முற்றத்துக் கிணற்றிலே இறங்கிப் பார்! சுரங்க வழி அங்கே இருக்கிறது! சிவகாமியைப் பழி வாங்கு! ஞாபகம் இருக்கட்டும்" என்று சொல்லிப் பேச்சை நிறுத்தினாள் அதோடு அவளுடைய மூச்சும் நின்றது.



நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்
புத்தர் சந்நிதி

சேனாதிபதி பரஞ்சோதி தம்முடன் வந்திருந்த வீரர்களுக்கு அதி விரைவாகச் சில கட்டளைகளை இட்டார். அவர்களில் நாலு பேரை மட்டும் தம்மைத் தொடர்ந்து வரும்படி ஆக்ஞாபித்துவிட்டு அந்த வீட்டின் கொல்லை முற்றத்தை நோக்கி விரைந்து சென்றார். முற்றத்தின் மத்தியில் பவளமல்லிகை மரத்தின் அருகில் இருந்த கிணற்றண்டை சென்று உட்புறம் எட்டிப்பார்த்தார். கிணற்றின் சுற்றுச் சுவர் கொஞ்சதூரம் வரையில் செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாறையைப் பெயர்த்துத் தோண்டியிருந்தது; நீர் மிக ஆழத்தில் இருந்தது.

நெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ள, பரஞ்சோதி அந்தக் கிணற்றுக்குள்ளே கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு இறங்கினார். அவருடன் மற்ற நால்வரும் இறங்கினார்கள். செங்கல் சுவரைத் தாண்டிப் பாறைச் சுவரை அவர்கள் எட்டிய பிறகு மேடும் பள்ளமும் பொக்கையும் போழையுமாக இருந்தபடியால் இறங்குவது சுலபமாயிருந்தது. கிணற்றின் முக்கால் பங்கு ஆழம் இறங்கியதும் பரஞ்சோதி 'ஆ' என்று ஆச்சரிய சப்தம் இட்டார். அங்கே பாறைச் சுவரில் ஒரு பெரிய போழை இருந்தது. அது உள்ளே ஆழமாகச் சென்றதோடு சிறிது தூரத்துக்கப்பால் ஒரே இருட்டாகவும் காணப்பட்டது. பரஞ்சோதி தம்முடன் வந்த வீரர்களுக்குச் சமிக்ஞை செய்துவிட்டு அந்தப் போழைக்குள் புகுந்தார். ஓர் ஆள் படுத்து ஊர்ந்து செல்லும் அளவில்தான் அந்தத் துவாரம் இருந்தது. ஆனால், சிறிது தூரம் அவ்விதம் ஊர்ந்து சென்றதும் துவாரம் பெரியதாயிற்று. இன்னும் சிறிது தூரம் உட்கார்ந்தபடி நகர்ந்து சென்ற பிறகு காலில் படிக்கட்டுகள் தென்பட்டன. நாலைந்து படிக்கட்டுகளில் இறங்கியதும் சமதளத்துக்கு வந்திருப்பதாகத் தோன்றியது. முதலில் சிறிது நேரம் ஒரே இருட்டாயிருந்தது. கண்கள் இருளுக்குப் பழக்கமானதும் கொஞ்சம் சுற்றுப் புறத்தோற்றத்தைப் பார்க்க முடிந்தது.

பூமிக்கு அடியிலே பாறையைக் குடைந்து அமைத்த விஸ்தாரமான மண்டபத்தின் ஓர் ஓரத்தில் தாம் நிற்பதைப் பரஞ்சோதி அறிந்தார். அவர் நின்ற இடத்துக்கு நேர் எதிரே ஒரு பெரிய புத்தர் சிலை காட்சியளித்தது. புத்தர் சிலையின் மேலே அழகிய வேலைப்பாடுள்ள விமானம் காணப்பட்டது. எதிரே இரண்டு வரிசைகளாகப் பெரிய பெரிய பாறைத் தூண்கள் நன்கு செதுக்கிச் செப்பனிடாத பெருந்தூண்கள் நின்றன. பரஞ்சோதியும் மற்ற இரண்டு வீரர்களும் அந்த மண்டபத்தில் அங்கு மிங்கும் சுற்றி அலைந்து; தூண் மறைவுகளிலும் மூலை முடுக்குகளிலும் தேடினார்கள். அங்கு மனிதர் யாரும் தென்படவில்லை. ஆனாலும் ஒரு தூணின் மறைவில் சில உடைகளும் ஆபரணங்களும் கிடைத்தன. அவை சக்கரவர்த்திக்குரியவை என்று கண்டதும் பரஞ்சோதி அவ்விடத்தில் நாகநந்தி இராஜரீக உடைகளைக் களைந்து, சந்நியாசி உடை தரித்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். ஆனால் நாகநந்தியும் அவருடன் சென்ற சிவகாமியும் எங்கே? அங்கிருந்து அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்களா?

பரஞ்சோதியின் பார்வை தற்செயலாகப் புத்த பகவானுடைய சிலை மீது விழுந்தது. சட்டென்று அவருடைய மூளையில் ஓர் எண்ணம் உதித்தது. காஞ்சி இராஜ விகாரத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் இருந்த இரகசிய வழி ஞாபகத்துக்கு வந்தது. உடனே பரஞ்சோதி புத்தர் சிலையை நோக்கிப் பாய்ந்து சென்றார். அங்கு, இந்தச் சிலை பாறையின் பின் சுவரோடு ஒட்டியிருந்தது. சிலைக்குப் பின்னால் துவாரமோ இரகசிய வழியோ இருப்பதற்கு இடமே இல்லை.

பரஞ்சோதி பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார். ஆயினும் தாம் தேடும் வழியின் இரகசியம் இந்தச் சிலையிலேதான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் மனத்தை விட்டு அகலவில்லை. "பிரபு! புத்த பகவானே! மகாவிஷ்ணுவின் மாயாவதாரம் தாங்கள் என்று கேள்விப்பட்டது உண்மையானால் இச்சமயம் எனக்கு வழி காட்டவேண்டும். தங்களுடைய பாதாரவிந்தமே கதி!' என்று நினைத்த வண்ணம் சேனாதிபதி புத்தர் சிலையின் பாதங்களை தொட்டார். தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அதாவது, புத்தர் சிலை தன் இடம் விட்டுப் பெயர்ந்து ஒரு பக்கமாகச் சிறிது நகர்ந்தது. பின்புறத்துப் ாறைச் சுவரிலே எதிர்பார்த்தபடி சுரங்க வழியும் காணப்பட்டது. 'ஆகா! புத்தபகவான் வழி விட்டார்!' என்ற குதூகலமான எண்ணத்துடன் மற்ற வீரர்களுக்குச் சமிக்ஞை செய்து விட்டுப் பரஞ்சோதி சுரங்க வழியில் பிரவேசித்து, ஓர் அடி எடுத்து வைத்தார். அப்போது தம் எதிரிலே அந்தச் சுரங்க வழியிலே அவர் சற்றும் எதிர்பாராத ஆச்சரியமான காட்சி ஒன்றைக் கண்டார்.

ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவர்த்திகள் அந்தக் குறுகிய சுரங்க வழியில் வந்து கொண்டிருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வந்த மனிதர்கள் கன்னங்கரிய கொள்ளிவாய்ப் பிசாசுகள் போலத் தோன்றினார்கள். அந்தப் பயங்கர ஊர்வலத்துக்கு முன்னால் சிறிது தூரத்தில் தலை மொட்டை அடித்த பிக்ஷு உருவம் ஒன்று தோளிலே ஒரு பெண்ணைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அதி விரைவாக ஓட்டம் ஓட்டமாக வந்து கொண்டிருந்தது. பரஞ்சோதிக்கு அப்படி வருகிறவர்கள் யார் என்ற விவரம் ஒரு நொடியில் விளங்கிவிட்டது. புத்த பிக்ஷு சுரங்க வழியில் பாதி தூரம் போவதற்குள்ளே சத்ருக்னன் தன் ஆட்களுடன் மற்றொரு பக்கத்தில் புகுந்து வந்திருக்கிறான். அவனிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிக்கப் புத்த பிக்ஷு திரும்பி ஓடி வருகிறார்.

பரஞ்சோதி மறு வினாடியே புத்த பகவான் காண்பித்த வழியிலிருந்து வெளியே வந்தார். அவரும் மற்ற வீரர்களும் பாய்ந்தோடிப் பாறைத் தூண்களின் பின்னால் மறைந்து நின்றார்கள். அவ்விதம் அவர்கள் மறைந்து கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் நாகநந்தி பிக்ஷு புத்த பகவானுடைய சிலைக்குப் பின்புறமிருந்து வெளிப்பட்டார். தோள் மீது சிவகாமியைச் சுமந்து கொண்டு வந்தார். பரஞ்சோதியும் அவருடைய வீரர்களும் மூச்சுக் கூடக் கெட்டியாக விடாமல் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். நாகநந்தி புத்தர் சிலைக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் சிவகாமியைத் தரையில் கிடத்திவிட்டு எழுந்தார். புத்தர் சிலையண்டை சென்று நின்றார். ஒரு கண நேரம் அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததாகத் தோன்றியது. ஒரு தடவை சுற்று முற்றும் பார்த்தார். பிறகு, சிவகாமியின் அருகில் சென்று உட்கார்ந்தார்.

சுரங்க வழியை அடைத்து விடுவது தான் அவருடைய நோக்கம் என்பது பரஞ்சோதிக்குப் புலப்பட்டுவிட்டது. தம் அருகில் நின்ற வீரர்களுக்குச் சமிக்ஞை செய்து விட்டு ஒரே பாய்ச்சலில் பிக்ஷுவின் அருகில் சென்றார். மற்ற வீரர்களும் வந்து சேர்ந்தார்கள். பிக்ஷுவின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். பிக்ஷு திரும்பி அவர்களை ஏறிட்டுப் பார்த்தார். இருட்டில் அவருடைய முகபாவம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், உடனே அவர் கூறிய வார்த்தைகள் அவர் மனோ நிலையை வெளிப்படுத்தின.

"அப்பா! பரஞ்சோதி! நீதானா? உன்னை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். நான் தோற்றால் உன்னிடந்தான் தோற்க வேண்டுமென்பது என் மனோரதம் அது நிறைவேறிவிட்டது!" என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றார். எல்லோரும் மண்டபத்தின் நடு மத்திக்கு வந்தார்கள். நாகநந்தி பரஞ்சோதியை இரக்கம் ததும்பிய கண்களுடனே பார்த்து, "அப்பனே! இன்னும் எதற்காக இவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? இனி எங்கே நான் தப்பி ஓடமுடியும்? அந்தப் பக்கத்திலும் உன் ஆட்கள் வருகிறார்கள், இந்தப் பக்கமும் உன் ஆட்கள் நிற்கிறார்கள். என் ஆட்ட பாட்டமெல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் நீ சொன்னபடி நான் கேட்க வேண்டியதுதான். உன்னையும் ஆயனரையும் எப்படியாவது அஜந்தாவுக்கு வரச் செய்ய வேண்டும் என்று பார்த்தேன் அது முடியாமற் போயிற்று. அப்பனே! என்னை விட்டுவிடச் சொல்லு! நீ சொல்லுகிறதைக் கேட்டு அப்படியே நடக்கச் சித்தமாயிருக்கிறேன்" என்றார்.

இவ்விதம் நாகநந்தி கெஞ்சியது பரஞ்சோதியின் மனத்தில் சிறிது இரக்கத்தை உண்டாக்கியது. "பிக்ஷுவை விட்டுவிடுங்கள்!" என்று தம் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். வீரர்கள் நாகநந்தியை விட்டுவிட்டு சற்று அப்பால் சென்றார்கள். "பரஞ்சோதி! அந்தப் பழைய காலமெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காஞ்சி நகரத்தில் நீ பிரவேசித்த அன்று உன்னைப் பாம்பு தீண்டாமல் காப்பாற்றினேனே? அன்றிரவே உன்னைச் சிறைச்சாலையிலிருந்து தப்புவித்தேனே? அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" இவ்விதம் பேசிக்கொண்டே கண்மூடித் திறக்கும் நேரத்தில் நாகநந்தி தமது இடுப்பு ஆடையில் செருகியிருந்த கத்தியை எடுத்தார்.

புத்த பிக்ஷு கையில் கத்தி எடுத்ததைப் பார்த்ததும் பரஞ்சோதி விரைவாகப் பின்னால் இரண்டு அடி எடுத்து வைத்து தமது உறையிலிருந்த வாளை உருவினார். அந்த க்ஷண நேரத்தில் அவருடைய மனத்தில், 'ஆ! நமது உயிர் போயிற்றே! எவ்வளவோ முயற்சிகள் செய்து கடைசியில் காரியம் சித்தியாகும் தருணத்தில் இந்தப் பெருந்தவறு செய்துவிட்டோ மே!' என்ற எண்ணம் மின்னல் போலத் தோன்றியது. ஆ! இது என்ன? இந்த வஞ்சக நாகநந்தி ஏன் அந்தப் பக்கம் திரும்புகிறார்? யார் மேல் எறிவதற்காகக் கத்தியை ஓங்குகிறார்? ஆஹா! சிவகாமி தேவியின் மேல் எறிவதற்கல்லவா கத்தியைக் குறி பார்க்கிறார்? படுபாவி பாதகா! யார் செய்த அதிர்ஷ்டத்தினாலோ நாகநந்தி ஓங்கிய கையுடன் அரை வினாடி தயங்கி நின்றார். அந்த அரை வினாடியில் பரஞ்சோதி தமது வாளை ஓங்கிக் கத்தி பிடித்த புத்த பிக்ஷுவின் தோளை வெட்டினார். பிக்ஷுவின் கத்தி குறி தவறி எங்கேயோ தூரப் போய் விழுந்தது. நாகநந்தியும் அடியற்ற மரம் போல் தரையில் விழுந்தார்.



நாற்பத்து நாலாம் அத்தியாயம்
கடைசி பரிசு

எல்லையற்ற அந்தகார சமுத்திரத்தின் கர்ப்பத்திலேயிருந்து மோனக் கடலின் அடிவாரத்திலிருந்து, சிவகாமி மெதுவாக மேலே வந்து கொண்டிருந்தாள். கன்னங்கரிய இருளிலே திடீரென்று சிறு சிறு ஒலித் திவலைகள் தோன்றிச் சுழன்று வந்தன. நிசப்தத்தின் மத்தியிலிருந்து ஸ்வரூபம் தெரியாத ஒரு சப்தம் எழுந்தது. முதலில் அது மெல்லியதாயிருந்தது. வரவரப் பெரிதாகச் சமுத்திரத்தின் பேரிரைச்சல் போலக் கேட்டது. அந்தப் பெரிய அகண்டாகார சப்தத்தின் நடுவே சிறு சிறு ஒலிகள் விட்டு விட்டுக் கேட்கத் தொடங்கின. அந்தச் சிறு ஒலிகள் சிறுது நேரத்துக்கெல்லாம் மனிதர்களின் பேச்சுக் குரலாக மாறின. ஆ! இரண்டு குரல்கள் மாறி மாறிக் கேட்கின்றன. அவற்றில் ஒன்று சிவகாமிக்குத் தெரிந்த குரல் போல்தான் தோன்றுகிறது. ஆனால் அது யாருடையது?

சிவகாமி தன்னுடைய கண்ணிமைகள் இன்னும் மூடியிருக்கின்றன என்பதை மனத்திற்குள் உணர்ந்தாள். ஒரு பெருமுயற்சி செய்து கண்களை லேசாகத் திறந்தாள். அப்போது அவள் முன்னால் தோன்றிய காட்சியானது, வியப்பையும் இரக்கத்தையும் பரபரப்பையும் பயங்கரத்தையும் ஒருங்கே அளித்ததோடு, இது தூக்கத்திலே காணும் கனவா அல்லது பிரமை கொண்ட உள்ளத்திலே தோன்றும் கற்பனைக் காட்சியா என்று சந்தேகிக்கும்படியும் செய்தது. கற்பாறையில் குடைந் தெடுத்த பௌத்த விஹாரம் ஒன்றில் தரையிலே தான் கிடப்பதை உணர்ந்தாள். மேடு பள்ளமான பாறைத் தளமானது தேகம்பட்ட டமெல்லாம் சில்லிடும்படி அவ்வளவு குளிர்ந்திருந்தது. அவள் கிடந்த இட்துக்குச் சுற்றுத் தூரத்தில் தரையிலே ஒருவர் விழுந்து கிடக்க, அவருக்குப் பக்கத்தில் சம்ஹார ருத்ர மூர்த்தயைப் போல் கையில் வாளுடன் ஒருவர் கம்பீரமாக நின்றார். இன்னும் சற்றுத் துரத்தில் வாளும் வேலும் எந்திய வீரர்கள் பலர் முகத்தில் வியப்பும் ஆங்காரமும் குரோதமும் மரியாதையும் போட்டியிடும் பாவத்துடனே நின்றார்கள். அவர்களில் சிலர் ஏந்திக் கொண்டிருந்த தீவர்த்திகளிலிருந்து கிளம்பிய ஒளிப்பிழம்பும் புகைத் திரளும் அந்தக் குகை மண்டபத்தை ஒரு யமலோகக் காட்சியாகச் செய்து கொண்டிருந்தன.

பிரம்மாண்டமான சிலை வடிவில் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்த பகவான் கண்ணாலே பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தார். சிவகாமி தனக்கு முன் தோன்றியதெல்லாம் கனவா, பிரமையா அல்லது உண்மைக் காட்சிதானா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக ஒரு தடவை கண்ணை மூடி மறுபடியும் திறந்தாள். உண்மைக் காட்சிதான் என்று அறிந்து கொண்டாள். கொஞ்சங் கொஞ்சமாக அறிவு தெளிவடைந்தது. சிந்தனா சக்தியும் ஏற்பட்டது. தரையில் கிடப்பது நாகநந்தி பிக்ஷூ என்பதைக் கண்டாள். அவருக்கு அருகில் கம்பீரமாகக் கையில் வாள் ஏந்தி நின்று கொண்டிருப் பவர் தளபதி பரஞ்சோதிதான் என்பதையும் ஊகித்து உணர்ந்தாள்.

அவர்களைச் சுற்றிலும் சற்றுத் தூரத்தில் விலகி நிற்பவர்கள், தளபதியுடன் வந்த பல்லவ வீரர்களாய்த் தானிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எல்லோரும் இங்கே எப்படி வந்து சேர்ந்தார்கள்? தான் இவ்விடம் வந்த விதம் எப்படி? ஸ்வரூபம் தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்த பேச்சுக் குரல்கள் தெளிவடைந்தன. நாகநந்தி சொல்லிக் கொண்டிருந்தார்:" அப்பனே, பரஞ்சோதி! நீ நன்றாயிரு! நீ மிக்க குணசாலி; மிக்க நன்றியுள்ளவன்! உன்னை ஒரு சமயம் நாகப் பாம்பு தீண்டாமல் இந்தக் கை காப்பாற்றியது. உன்னைப் பல்லவன் சிறையிலிருந்து இந்தக் கை விடுதலை செய்தது. நீ ஆசாரியராகக் கொண்ட ஆயனச் சிற்பியாரின் உயிரை இந்தக் கை இரட்சித்தது. அவருடைய மகள் சற்று முன்னால் காபாலிகையின் கத்திக்கு இரையாகாமல் இந்தக் கை காப்பாற்றியது. அப்படிப்பட்ட என் வலக்கையை நீ வெட்டி விட்டாய்! ஆ! ரொம்பவும் நன்றியுள்ள பிள்ளை நீ!"

அப்போது பரஞ்சோதி குறுக்கிட்டுப் பேசினார்: "ஆஹா! கள்ளப் பிக்ஷூவே! உம்முடைய திருக்கரத்தின் அற்புத லீலைகளை ஏன் நடுவிலே நிறுத்தி விட்டீர்? மகேந்திர பல்லவர் மீது விஷக் கத்தியை எறிந்தது அந்தக் கைதானே? சற்று முன்னால் ஆயனர் குமாரியைத் தூக்கிக் கொண்டு சுரங்க வழியில் நீர் ஓடப் பார்த்ததும் அந்தக் கையின் உதவியினால் தானே? தப்பி ஓட வழியில்லை என்று தெரிந்ததும் தேவியின் பேரிலேயே உமது கொடூரமான விஷக் கத்தியை எறியப் பார்ததும் அந்தக் கைதான் அல்லவா?"

"ஆமாம், அப்பனே! ஆமாம்! நீ சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால், எதற்காக ஆயனர் மகளை நான் கொண்டு போக முயற்சித்தேன்? தெரிந்து கொண்டாயா? ஆ! பரஞ்சோதி! ஆயனர் மகள் மீது என்னைக் காட்டிலும் உனக்கு அதிக அன்பு, அதிக பக்தி, அதிக சிரத்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன் எஜமானனான அந்த மூட மாமல்லனும் அவளை என்னைக் காட்டிலும் அதிகம் காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்! அப்பனே! அன்பு என்பதற்கு உனக்கு அர்த்தம் தெரியுமா? பரஞ்சேதி! இன்று இந்த வாதாபி நகரம் பற்றி எரிந்து நாசமாவதற்குக் காரணமானவன் நான். சிவகாமிக்காகச் சொந்த சகோதரனைப் பலி கொடுத்தேன். ஹர்ஷவர்த்தனனை நடுநடுங்கச் செய்த சளுக்க மகா சாம்ராஜ்யத்தையே என் காதலுக்குப் பலியாக அர்ப்பணம் செய்தேன். ஆஹா! அன்புக்கும் காதலுக்கும் அர்த்தம் உங்களுக்கு என்ன தெரியும்?"

" அடிகளே தாங்கள் சொல்வது உண்மையே. அன்பு என்பதற்குப் பொருள் எனக்குச் சற்று முன்னால் தான் தெரிந்தது. ஒருவரிடம் நம்முடைய அன்பைக் காட்டுவதென்றால் அவர்மேல் விஷக் கத்தியை எறிந்து கொல்ல வேண்டும்! இல்லையா? இதைச் சற்று முன்னால் நான் தெரிந்து கொண்டேன். வஞ்சகப் பிஷூவே! உம்மிடம் பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. உம்முடைய வேஷத்தை மட்டும் கலைக்காமல் நீர் இராஜரீக உடை தரித்திருந்தால் இத்தனை நேரம் உம்மைப் பரலோகம் அனுப்பியிருப்பேன். காவி வஸ்திரம் தரித்த பிஷூவைக் கொல்ல மனம் வரவில்லை. ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் உம்மைக் கொல்லாமல் விடுகிறேன். பத்து வருஷத்துக்கு முன்னால் அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்து வருவதற்காக ஆயனர் என்னை அனுப்பினார். நானும் அப்படியே செய்வதாக வாக்களித்து கிளம்பினேன். அஜந்தா வர்ணத்தின் ரகசியம் உமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இதோ இந்தச் சுரங்க விஹாரத்தின் சுவர்களிலே கூட வர்ணச் சித்திரங்களைக் காண்கிறோம். உமக்குக் கட்டாயம் இந்த ரகசியம் தெரிந்துதான் இருக்க வேண்டும். அதை உடனே சொன்னீரானால் உம்மை உயிரோடு விடுகிறேன் இல்லா விட்டால் உமது இஷ்ட தெய்வத்தை... உம்மைப் போன்ற கிராதகனுக்குத் தெய்வம் என்பதாக ஒன்று இருந்தால் அந்த தெய்வத்தை பிரார்த்தனை செய்து கெள்ளும்!"

" அப்பனே! உன்னுடைய கருணைக்காக மிக்க வந்தனம். என் இஷ்ட தெய்வம் ஒன்றே ஒன்று தான். அது சிவகாமி தான்; அந்த தெய்வத்தை பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஆயனரையும் அவர் மகளையும் அஜந்தாவுக்கே அழைத்துப் போய் அழியா வர்ண ரகசியத்தை நேரிலேயே காட்டிகொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவர்களும் கொடுத்து வைக்கவில்லை. அந்த அற்புதமான ரகசியத்திற்கு உலகத்தில் வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத ரகசியத்திற்கு என்னுடைய உயிரை ஈடாக வைத்தாயே! நீ நன்றாக இருக்க வேண்டும்! சொல்லுகிறேன், கேள்:" மரஞ்செடிகளின் இலை, வேர், காய், விதை முதலிய தாவரப் பொருட்களைச் சாரு பிழிந்து காய்ச்சிச் சாதரணமாக வர்ணங்கள் குழைப்பது வழக்கம். தாவரப் பொருட்கள் காய்ந்து உலர்ந்து அழிந்து போகக் கூடியவை. ஆகையால், அவற்றிலிருந்து உண்டாகப்படும் வர்ணங்களும் சீக்கிரத்தில் மங்கி அழிந்து போகின்றன. ஆனால் மலைகளிலும் பாறைகளிலும் சிற்சில பகுதிகள் இயற்கை வர்ணம் பெற்று விளங்குகின்றன. இந்த வர்ணங்கள் காற்றுக்கும் வெயிலுக்கும் மழைக்கும் மங்குவதில்லை; அழிவதில்லை. ஆகவே, இந்த வர்ணப் பாறைகளைப் பொடி செய்து அதற்கேற்ற பங்குவப்படி அரைத்துக் குழைத்து உண்டாக்கும் வர்ணங்கள் அழிவதே கிடையாது. இம்மாதிரி வர்ணப்பாறைகளை பொடித்துக் குழைத்த வர்ணங் களை கொடுத்துதான் அஜந்தாவில் சிந்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன... பரஞ்சோதி! சென்ற ஐந்நூறு வருஷ காலமாக அஜந்தா சங்கிராமத்தைச் சேர்ந்த பிஷூக்களை தவிர வேறு யாரும் அறியாத பரம ரகசியத்தை உனக்கு நான் சொல்லி விட்டேன், இனி நான் போகலாமா?"

" அடிகளே! உடனே போய்விடுங்கள். அடுத்த நிமிஷம் என்மனம் மாறினாலும் மாறிவிடும். சிவகாமி தேவியுடன் நீர் ஓடிப்போக எத்தனித்தக் கள்ளச் சுரங்க வழியாகவே இப்போது போய்விடுங்கள். சீக்கிரம்! சீக்கிரம்!" நாகநந்தி மிக்கப் பிரயாசையுடன் எழுந்திருந்தார். வெட்டுப்பட்ட தம்முடைய வலது கையை இன்னொரு கையினால் தூக்கிப் பிடித்து கொண்டு நின்றார்." பரஞ்சோதி! நீ நல்ல பிள்ளை. நான் உயிர் தப்ப விட்டுவிட்டாய். என்கையை வெட்டியதற்குப் பதிலாக கழுத்தை வெட்டியிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும். ஆனால் இன்னும் உயிர் மேல் ஆசைவிடவில்லை உன்னிடம் உயிர் பிச்சை கேட்டேன். நீயும் கொடுத்தருளினாய். மாமல்லன் வருவதற்குள்ளே நான் போய்விட வேண்டும் என்பது உன் கருத்து என்பதை அறிந்து கொண்டேன். இதோ போய் விடுகிறேன். ஆனால், இன்னும் ஒரே ஒரு கோரிக்கை: சிவகாமி, சிறுது நேரத்தில் மூர்ச்சை தெளிந்து எழுவாள். அவளிடம் ஒரு விஷயம் அவசியம் தெரியப்படுத்து. அவள் மேல் நான் விஷக்கத்தியை எரிந்து கொல்ல முயன்றேன் என்பதை கட்டாயம் சொல்லு! அதுதான் அவள் பேரில் நான் கொண்ட காதலின் கடைசிப் பரிசு என்றும் சொல்லு!" இவ்விதம் கூறிக் கொண்டே நாகநந்தி சிவகாமி கிடந்த பக்கம் நோக்கினார். சிவகாமி மூர்ச்சை தெளிந்து எழுந்திருந்து பாறைத் தூணின் பேரில் சாய்ந்து கொண்டு சிலையைப்போல் அசைவற்று நிற்பதை அவர் பார்த்தார்.

" ஆ! சிவகாமி! எழுந்துவிட்டாயா? ஆயனரின் சீடர் பரஞ்சோதியிடம் நான் சொன்னது உன் காதில் விழுந்ததா? ஆம்! உன் மீது கத்தி எரிந்து கொல்லப் பார்த்தேன். எதிர்காலத்தை நினைத்து உன்மேல் இரக்கம் கொண்டு தான் இந்தக் காரியத்தை செய்ய முயன்றேன். பல்லவ சேனாதிபதி குறுக்கே வந்து உனக்கு அந்த நன்மையை நான் செய்ய முடியாமல் தடுத்து விட்டார். சிவகாமி! வருங்காலத்திலே... வேண்டாம்; வருங்காலத்தில் என்னை நீ நினைக்க வேண்டாம் இந்தப் பாவியை மறந்து விடு! உடல் பொருள் ஆவி அனைத்தையும் இகத்தையும் பரத்தையும் உன்காலடியில் அர்பணம் செய்த இந்தக் கள்ள பிக்ஷூவை மறந்துவிடு. மறந்துவிட்டு, கூடுமானால் சந்தோஷமாய் இரு! ஆனால், நான் மட்டுமே உன்னை மறக்கமாட்டேன். பரஞ்சோதியையும் மாமல்லனையும் கூட நான் மறக்கமாட்டேன்! போய் வருகிறேன், சிவகாமி! போய் வருகிறேன். உன்னை புத்த பகவான் காப்பாற்றட்டும் !" இவ்விதம் பேசிக் கொண்டே தள்ளாடி தள்ளாடி நடந்து நாகநந்தி பிஷூ புத்த பகவானுடைய சிலைக்குப் பின்னால் மறைந்தார்.

நாகநந்தி அவ்விதம் தப்பிச் சென்று சுரங்க வழியில் மறைந்ததை அனைவரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சேனாதிபதியின் அநுமதியின் பேரிலேயே பிக்ஷூ செல்கிறார் என்பதை அறிந்திருந்தபடியால் யாரும் அவரைத் தடுக்க முயலவில்லை. சிவகாமியும் பார்த்த கண் பார்த்த வண்ணம் நாகநந்தி மறையும் வரையில் அவரையே நோக்கிக் கொண்டு நின்றாள். சற்று முன்னால் காபாலிகையின் கத்திக்கு இரையாகாமல் அவர் தன்னைக் காப்பாற்றிய போது, அவர் புலிகேசிச் சக்கரவர்த்தியா அல்லது நாகநந்தி பிக்ஷூவா என்று ஐயமுற்றாள். இப்போது அவர் மனிதனா, மனித உருக்கொன்ட அரக்கனா, ஏதோ பெருந் துக்கத்தினால் மூளை சிதறிப் போன பைத்தியக்காரனா, அல்லது ஈவு இரக்கமற்ற கொடுய கிராதகக் கொலைகாரனா என்னும் சந்தேகங்கள் அவளுடைய மனத்தில் தோன்றி அலைத்தன.

இதற்கிடையில் சேனாதிபதி பரஞ்சோதி, "சத்ருக்னா, நல்ல சமயத்தில் வந்தாய்! இந்தப் பாதாள புத்த விஹாரத்திலிருந்து வெளியேறுவதற்கு ஏதாவது நல்ல மார்க்கம் இருக்கிறதா என்று பார்! நாங்கள் வந்த கிணற்றுச் சுரங்க வழியாக எல்லோரும் போவது கஷ்டம். பிரதான வாசல் எங்கேயாவது இருந்து அடைபட்டிருக்க வேண்டும். சீக்கிரம் கண்டுபிடி!" என்றதும், சத்ருக்னன், "சேனாதிபதி! பிரதான வாசலை ஏற்கனவே நான் கண்டுபிடித்து விட்டேன். அந்த வழியை உடனே திறப்பதற்குக் கட்டளையிடுகிறேன்!" என்றான்.

சேனாதிபதி சட்டென்று ஒரு நினைவு வந்தது. "சத்ருக்னா! குண்டோ தரன் எங்கே?" என்று கேட்டார். "ஆ! சேனாதிபதி! என் அருமைச் சீடர்களில் அருமைச் சீடன் காபாலிகையின் கத்திக்கு இரையாகி விட்டான். அந்த ராட்சஸியைக் குகையில் காணாமல் சுரங்க வழியிலே தேடிக் கொண்டு வந்தோம். தாங்கள் அந்தச் சண்டாளியைப் பார்த்தீர்களா?" என்று சத்ருக்னன் கேட்க, "பார்த்தேன். சத்ருக்னா! கண்ணனும் காபாலிகையும் பக்கத்து வீட்டிலே செத்துக் கிடக்கிறார்கள். கண்ணன் எப்படிச் செத்தான் என்பது தெரியவில்லை. அவ்விடம் போய்ப் பார்க்க வேண்டும்" என்றார்.

பரஞ்சோதி இவ்விதம் சொல்லிக் கொண்டே தூணின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த சிவகாமியின் அருகிலே சென்று பக்தியுடன் வணங்கினார். "அம்மணீ! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தீர்கள். ஏகாம்பரர் அருளால் எல்லா அபாயமும் தீர்ந்தது. ஒன்பது வருஷத் துக்குப் பிறகு தங்களை மறுபடியும் உயிருடன் பார்க்க முடிந்தது. சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறுங்கள்! இந்தக் குகையின் வாசல் திறந்ததும் வெளியேறலாம். தங்கள் தந்தையும், சக்கரவர்த்தியும் கோட்டைக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள்!" என்றார்.

சிவகாமி துக்கம் நெஞ்சம் அடைக்க, நாத்தழுதழுக்க "தளபதி! போவதற்கு முன்னால் எனக்குக் கமலியின் கணவனை மறுபடியும் பார்க்க வேண்டும். என்னை அந்த வீட்டுக்கு அழைத்துப் போங்கள்" என்றாள். அதே சமயத்தில், அடைக்கப்பட்டிருந்த அந்தப் புத்த விஹாரத்தின் பிரதான வாசலைப் பல்லவ வீரர்கள் 'படார் படார்' என்று டித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.



நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
சிம்மக் கொடி

உயிர்க்களை இழந்து மரணத்தின் அமைதி குடிகொண்டிருந்த கண்ணபிரானுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் சிவகாமி கண்ணீர் விட்டுத் தேம்பி அழுது கொண்டிருந்தாள். "அம்மா! எத்தனை நேரம் அழுது புலம்பினாலும் கண்ணனுடைய உயிர் திரும்பி வரப்போவதில்லை. யுத்தம் என்றால் அப்படித்தான்; கண்ணபிரான் ஒருவன் தானா இறந்தான்? இவனைப் போல் பதினாயிரக்கணக்கான வீரர்கள் பலியானார்கள். தயவு செய்து புறப்படுங்கள், இந்த வீட்டுக்குப் பக்கத்தில் தீ வந்து விட்டது" என்று பரஞ்சோதி கூறினார்.

கண்ணீர் ததும்பிய கண்களினால் சிவகாமி அவரைப் பரிதாபமாகப் பார்த்து, "தளபதி! யுத்தம் வேண்டாம் என்று தங்களுக்கு ஓலை எழுதி அனுப்பினேனே!" என்று விம்மினாள். "ஆம், அம்மா! யுத்தத்தைத் தடுப்பதற்கு நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். என் முயற்சி பலிதமாகும் சமயத்தில் அந்தக் கள்ள பிக்ஷு வந்து எல்லாக் காரியத்தையும் கெடுத்துவிட்டான். வாதாபி நகரம் அழிய வேண்டும் என்று விதி இருக்கும்போது யார் என்ன செய்ய முடியும்?"

"ஐயா! விதியின் பேரில் ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? எல்லாவற்றிற்கும் காரணம் இந்தப் பாதகிதான், அன்றைக்குத் தாங்களும் அவரும் வந்து எவ்வளவோ பிடிவாரமாக என்னை அழைத்தீர்கள். மூர்க்கத்தனத்தினால், 'வரமாட்டேன்' என்று சொன்னேன்..." "அம்மா! எவ்வளவோ காரியங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம். அதையெல்லாம் பற்றி இப்போது யோசித்து என்ன பயன்? தயவு செய்து புறப்படுங்கள். மாமல்லரும் தங்கள் தந்தையும் தங்களைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். "தளபதி! அவருடைய முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? என்னால் முடியாது. நான் இங்கேயே இருந்து உயிரை விடுகிறேன். ஆயிரந் தடவை மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக அவரிடம் சொல்லுங்கள்!" என்று சிவகாமி சொல்லிக் கொண்டிருக்கும்போது வாசலில் பெருஞ் சத்தம் கேட்டது.

சற்று நேரத்துக்கெல்லா் மாமல்லர் உள்ளே பிரவேசித்தார்; அவருக்குப் பின்னால் ஆயனரும் வந்தார். "ஆ! இதோ அவரே வந்துவிட்டார்" என்று பரஞ்சோதி வாய்விட்டுக் கூறி, மனத்திற்குள், "இத்துடன் என் பொறுப்புத் தீர்ந்தது!" என்று சொல்லிக் கொண்டார். "அவரே வந்துவிட்டார்!" என்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும் சிவகாமியின் தேகம் புல்லரித்தது. குனிந்திருந்த தலையை நிமிர்த்தி வாசற் பக்கம் பார்த்தாள். கண நேரத்திலும் மிகச் சிறிய நேரம் மாமல்லருடைய கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்தன. அடக்க முடியாத உணர்ச்சி பொங்கச் சிவகாமி மறுபடியும் தலை குனிந்தாள். அவளுடைய அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி மேலே வந்து மார்பையும் தொண்டையையும் அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமலும் தேம்பி அழுவதற்கு முடியாமலும் செய்தது. அப்புறம் சிறிது நேரம் அங்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் சிவகாமி உணர்வற்றிருந்தாள். "ஆ! கண்ணபிரானா? ஐயோ!" என்று அவளுடைய தந்தையின் குரல் அலறுவது காதில் விழுந்ததும் உணர்வு பெற்றாள். "ஆமாம் கண்ணன்தான்! கமலியின் சிநேகிதியைச் சிறை மீட்டு ரதத்தில் வைத்து அழைத்து வர வந்த கண்ணன்தான் மார்பில் விஷக்கத்தி பாய்ந்து செத்துக் கிடக்கிறான், ஆயனரே! உம்முடைய மகளைக் கேளும்; அவளுடைய சபதம் நிறைவேறிவிட்டதல்லவா? அவளுடைய உள்ளம் குளிர்ந்து விட்டதல்லவா? கேளும், ஆயனரே! கேளும்!" மாமல்லரின் மேற்படி வார்த்தைகள் சிவகாமியின் காதில் உருக்கிய ஈயத் துளிகள் விழுவதுபோல் விழுந்தன. ஆஹா! இந்தக் குரல் எத்தனை அன்பு ததும்பும் மொழிகளை இன்பத் தேன் ஒழுகும் வார்த்தைகளை ஒரு காலத்தில் சொல்லியிருக்கிறது? அதே குரலில் இப்போது எவ்வளவு கர்ண கடூரமான சொற்கள் வருகின்றன? ஆஹா! இதற்குத்தானா இந்த ஒன்பது வருஷ காலமும் பொறுமையுடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தோம்?

மாமல்லரின் கொடுமையான வார்த்தைகள் பரஞ்சோதிக்கும் பெருந்துன்பத்தை உண்டாக்கின. "சக்கரவர்த்தி! சிவகாமி அம்மை ரொம்பவும் மனம் நொந்து போயிருக்கிறார்..." என்று அவர் சொல்லுவதற்குள் மாமல்லர் குறுக்கிட்டு, "சிவகாமி எதற்காக மனம் நோக வேண்டும்? இன்னும் என்ன மனக்குறை? சபதந்தான் நிறைவேறி விட்டதே? சந்தேகமிருந்தால் வீதி வழியே போகும் போது பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ளட்டும். வீடுகள் பற்றி எரிவதையும், வீதிகளில் பிணங்கள் கிடப்பதையும் ஜனங்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடுவதையும் பார்த்துக் களிக்கட்டும். ஆயனச் சிற்பியாரே! உம்முடைய குமாரியை அழைத்துக் கொண்டு உடனே கிளம்பும்!" சிவகாமியின் மார்பு ஆயிரம் சுக்கலாக உடைந்தது; அவளுடைய தலை சுழன்றது. அச்சமயம் ஆயனர் அவளுக்கு அருகில் சென்று இரக்கம் நிறைந்த குரலில், "அம்மா, குழந்தாய்! என்னை உனக்குத் தெரியவில்லையா?" என்றார். "அப்பா!" என்று கதறிக் கொண்டே சிவகாமி தன் தந்தையைக் கட்டிக் கொண்டு விம்மினாள்.

அன்று அதிகாலையில் சேனாதிபதி பரஞ்சோதி வாதாபிக்குள் பிரவேசித்ததிலிருந்து மாமல்லருடைய உள்ளப் பரபரப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கு ஏதோ விபரீதமான அபாயம் நேரப் போகிறதென்றும் நாம் இங்கே வெறுமனேயிருப்பது பெரிய பிசகு என்றும் அவருக்குத் தோன்றி வந்தது. புலிகேசிச் சக்கரவர்த்தி அரண்மனையில் அகப்படவில்லையென்று மானவன்மரிடமிருந்து செய்தி வந்த பிறகு கோட்டைக்கு வெளியே அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆயனரையும் அழைத்துக் கொண்டு வாதாபி நகருக்குள் பிரவேசித்தார். சிவகாமியைச் சந்தித்தவுடனே அவளிடம் அன்பான மொழிகளைக் கூற வேண்டும் என்பதாகத்தான் யோசனை செய்து கொண்டு சென்றார். ஆனால் அவருடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் பெரிதும் பாத்திரமாயிருந்த கண்ணபிரான் செத்துக் கிடந்ததைக் கண்டதும் மாமல்லரின் மனம் கடினமாகி விட்டது. அதனாலேதான் அத்தகைய கடுமொழிகளைக் கூறினார்.

இரதத்தில் ஆயனரும் சிவகாமியும் முன்னால் செல்ல, பின்னால் சற்று தூரத்தில் மாமல்லரும் பரஞ்சோதியும் குதிரைகளின் மீது ஆரோகணித்துச் சென்றார்கள். மாமல்லரின் விருப்பத்தின்படி பரஞ்சோதி தாம் சிவகாமியின் வீட்டு வாசலை அடைந்ததிலிருந்து நடந்த சம்பவங்களையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதையெல்லாம் கேட்கக் கேட்கச் சக்கரவர்த்தியின் நெஞ்சில் குரோதாக்கினி சுடர் விட்டு எரியத் தொடங்கியது. முக்கியமாக நாகநந்தியைப் பரஞ்சோதி கொல்லாமல் உயிரோடு விட்டு விட்டார் என்பது மாமல்லருக்குப் பெரும் கோபத்தை உண்டாக்கியது. சிவகாமியைப் பெரும் துன்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகவே அவளைக் கொல்ல எத்தனித்ததாக நாகநந்தி சொன்னாரல்லவா? அதைக் கேட்டபோது, அந்தக் கூற்றில் அடங்கியிருந்த உண்மையை மாமல்லரின் அந்தராத்மா உடனே உணர்ந்தது. அது காரணமாக அவருடைய குரோதம் பன்மடங்கு அதிகமாகிக் கொழுந்து விட்டெரிந்தது.

சிவகாமி தன் அருமைத் தந்தையின் மீது சாய்ந்த வண்ணம் வாதாபி நகரின் பயங்கர வீதிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சென்றாள். அந்தக் கோரங்களைப் பார்க்கச் சகிக்காமல் சில சமயம் கண்களை மூடிக் கொண்டாள். ஆனால், கண்களை மூடிக் கொண்ட போதிலும் காதுகளை மூடிக்கொள்ள முடியவில்லை. ஜுவாலை விட்டுப் பரவிய பெருந்தீயிலே வீடுகள் பற்றி எரியும் சடசடச் சத்தமும், காற்றின் 'விர்'ரென்ற சத்தமும், குழந்தைகளின் கூக்குரலும் ஸ்திரீகளின் ஓலமும், சளுக்க வீரர்களைப் பல்லவ வீரர்கள் துரத்தி ஓடும் சத்தமும், ஜயகோஷமும், ஹாஹாகாரமும் அவளுடைய செவிகளை நிரப்பி அடிக்கடி கண்களைத் திறந்து பார்க்கச் செய்தன. அந்த நிலையில் ஒரு முறை மாமல்லர் சிறிது முன்னேறி வந்து இரதத்தின் ஓரமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்த போது சிவகாமி ஆவலுடன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

ஆனால், மாமல்லரோ அவள் பக்கம் தம் பார்வையைத் திருப்பவேயில்லை. ஆயனர் முகத்தை நோக்கிய வண்ணம், "சிற்பியாரே! நாங்கள் எல்லாரும் இங்கிருந்து புறப்பட்டு வர இன்னும் ஒரு மாதம் ஆகலாம். உங்களுக்கு இஷ்டமிருந்தால் உம்மையும் உமது மகளையும் முன்னதாகத் தக்க பாதுகாப்புடன் காஞ்சிக்கு அனுப்பி வைக்கிறேன். அல்லது நாகநந்தி பிக்ஷு உம்மையும் உமது குமாரியையும் அஜந்தாவுக்கு அழைத்துப் போக விரும்புவதாகச் சொன்னாராம். அது உங்களுக்கு இஷ்டமானால் அப்படியும் செய்யலாம்!" என்றார்.

அத்தனை கஷ்டங்களுக்கும் யுத்த பயங்கரங்களுக்கும் இடையிலேயும் ஆயனருக்கு "அஜந்தா" என்றதும் சபலம் தட்டியது. அஜந்தா வர்ண இரகசியத்தைப் பரஞ்சோதி நாகநந்தியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட விவரம் இன்னமும் ஆயனருக்குத் தெரியாது. எனவே, அவர் சிவகாமியைப் பார்த்து, "அம்மா! உனக்கு என்ன பிரியம்? காஞ்சிக்குப் போகலாமா? அல்லது அஜந்தாவுக்குப் போகலாமா?" என்றார். சிவகாமியின் உள்ளம் அந்த நிமிஷத்தில் வயிரத்தை விடக் கடினமாயிருந்தது. "அப்பா! நான் காஞ்சிக்கும் போகவில்லை! அஜந்தாவுக்கும் போகவில்லை. பல்லவ குமாரரை என் பேரில் கருணை கூர்ந்து அவர் கையிலுள்ள வாளை என் மார்பிலே பாய்ச்சி என்னை யமபுரிக்கு அனுப்பிவிடச் சொல்லுங்கள். பழைய அபிமானத்துக்காக எனக்கு இந்த உதவி செய்யச் சொல்லுங்கள்!" என்றாள். இவ்விதம் சொல்லிவிட்டு ஆயனரின் மடியின் மீது சிவகாமி மறுபடியும் ஸ்மரணையிழந்து வீழ்ந்தாள்.

மாமல்லர் திரும்பிச் சென்று பரஞ்சோதியின் பக்கத்தை அடைந்தார். சிவகாமியின் மீது அத்தகைய குரூரமான சொல்லம்புகளைச் செலுத்திய பிறகு அவருடைய மனம் சிறிது அமைதி அடைந்திருந்தது. "நண்பரே! அதோ புலிகேசியின் பொய்யான ஜயஸ்தம்பத்தைப் பார்த்தீரல்லவா? ஒன்பது வருஷத்துக்கு முன்பு ஒரு நாள் நாம் அந்த ஸ்தம்பத்தின் அடியில் நின்று, செய்து கொண்ட சங்கல்பத்தை இன்று நிறைவேற்றி விட்டோ ம். அந்தப் பொய்த் தூணை உடனே தகர்த்தெறிந்து விட்டுப் பல்லவ சைனியத்தின் ஜயஸ்தம்பத்தை நாட்டச் செய்யுங்கள். புதிய ஜயஸ்தம்பத்திலே பல்லவ சேனையின் வெற்றிக் கொடி வானளாவப் பறக்கட்டும்! மகத்தான இந்த வெற்றிக்கு அறிகுறியாக நமது கொடியிலும் விருதுகளிலும் உள்ள ரிஷபச் சின்னத்தை மாற்றிச் சிம்மச் சித்திரத்தைப் பொறிக்கச் செய்யுங்கள்!" என்று ஆக்ஞாபித்தார்.



நாற்பத்தாறாம் அத்தியாயம்
பௌர்ணமி சந்திரன்

இந்த மண்ணுலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து மாதம் ஒரு தடவை பூரண சந்திரன் உதயமாகி நீல வானத்தில் ஜொலிக்கும் வைர நக்ஷத்திரங்களிடையே பவனி சென்று வருகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வான வீதியில் பவனி வரும் பூரண சந்திரன் கடந்த ஒரு மாதத்துக்குள்ளேயே பூவுலகில் எத்தனையோ அதிசயமான மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டு வருகிறது. எனவே, மண்ணுலகில் அடிக்கடி நிகழும் மாறுதல்கள் பூரண சந்திரனுக்கு, அதிகமான ஆச்சரியத்தை அளிக்க முடியாது தான். என்ற போதிலும், (1946இல் சிவகாமியின் சபதம் எழுதப்பட்டது) இன்றைக்குச் சுமார் ஆயிரத்து முந்நூற்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்(கி.பி.642-ல்)மார்கழி மாதத்தில் உதித்த பூரண சந்திரன் வாதாபி நகரம் இருந்த இடத்துக்கு மேலாக வந்த போது சிறிது நேரம் ஆச்சரியத்தினால் ஸ்தம்பித்து நின்று விட்டு ஒரு பெருமூச்சுடனேதான் அப்பால் நகர்ந்திருக்க வேண்டும்.

சென்ற பௌர்ணமியன்று அந்த வாதாபி நகரத்தின் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் சந்திரனையே தொட்டு விட முயல்வதைப் போல் கம்பீரமாக எழுந்து நின்றன. வானத்து நக்ஷத்திரங்களோடு போட்டியிடுவன போல் நகரெங்கும் தீபங்கள் ஜொலித்தன. ஐசுவரியத்தில் பிறந்து ஐசுவரியத்தில் வளர்ந்த ஆடவரும் பெண்டிரும் சகலாபரண பூஷிதர்களாக அந்தப் பெருநகரின் விசாலமான வீதிகளில் மதோன்மத்தங் கொண்டு உலாவினார்கள். அலங்கரித்த யானைகளும் அழகிய குதிரைகளும் தந்தச் சிவிகைகளும் தங்க ரதங்களும் மோகன வெண்ணிலவிலே ஒளிவீசித் திகழ்ந்தன. விண்ணை எட்டும் மாளிகைகளின் உப்பரிகைகளில் வெண்ணிலாவுக்கு இன்னும் வெண்மையை அளித்த தவள மாடங்களில் மன்மதனையும் ரதியையும் ஒத்த காளைகளும் கன்னியர்களும் காரல் புரிந்து களித்தார்கள். தேவாலயங்களில் ஆலாசிய மணிகள் ஒலித்தன. அரண்மனையில் கீதவாத்தியங்களின் இன்னிசை கிளம்பிற்று. நடன மண்டபங்களில் சதங்கைகள் சப்தித்தன. கடை வீதிகளில் பொது ஜனங்களின் கலகலத்தொனி எழுந்தது. அகில் புகையின் மணமும் சந்தனத்தின் வாசனையும் நறுமலர்களின் சுகந்தமும் எங்கெங்கும் பரவியிருந்தன.

ஒரு மாதத்துக்கு முன்பு மேற்கண்டவாறு கந்தர்வபுரியாகக் காட்சியளித்த வாதாபி நகரம் இருந்த இடத்தில் இன்றைக்குச் சிற்சில குட்டிச் சுவர்கள் நின்றன. மற்ற இடத்திலேயெல்லாம் கரியும் சாம்பலும் புகையேறிய கல்லும் மண்ணும் காணப்பட்டன. சில இடங்களில் அவை கும்பல் கும்பலாகக் கிடந்தன; சில இடங்களில் அவை பரவிக் கிடந்தன. இடிந்து விழாமல் புகையினாலும் தீயினாலும் கறுத்துப் போய் நின்ற குட்டிச் சுவர்களின் ஓரமாகச் சிற்சில மனிதர்கள், உயிர் பெற்று எழுந்த பிரேதங்களையும் பேய் பிசாசுகளையும் ஒத்த மனிதர்கள், ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் எங்கே போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பிரமை கொண்டவர்களைப் போல் நடந்தார்கள். வேறு சிலர் ஆங்காங்கே உட்கார்ந்து கரியையும் மண்ணையும் கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரைத் தேடினார்களோ அல்லது எதைத் தேடினார்களோ, யாருக்குத் தெரியும்?

வாதாபி நகரம் இருந்த இடத்துக்குச் சற்று தூரத்தில் இடிந்தும் தகர்ந்தும் கிடந்த கோட்டை மதிலுக்கு அப்புறத்தில் அந்த மார்கழிப் பௌர்ணமி சந்திரன் முற்றிலும் வேறுவிதமான மற்றொரு காட்சியைப் பார்த்தது. லட்சக்கணக்கான பல்லவ பாண்டிய வீரர்கள் வெற்றிக் கோலாகலத்திலும் களியாட்ட ஆரவாரங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் படையெடுத்து வந்த காரியம் யாரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சுலபமாக நிறைவேறி மகத்தான வெற்றி கிடைத்த காரணத்தினால் அவர்களுக்கேற்பட்ட மதோன்மத்தம் ஒரு பக்கம்; வாதாபி நகரத்தின் கொள்ளையில் அவரவருக்குக் கிடைத்த பங்கினால் ஏற்பட்ட உற்சாகம் ஒரு பக்கம்; இவற்றோடு கூட இந்தப் பாழாய்ப் போன மயான பூமியில் - அவர்களாலேயே மயானமாக்கப்பட்ட பிரதேசத்தில் - இன்னும் ஒரு தினந்தான் இருக்க வேண்டும்; அதற்கு அடுத்த தினம் சொந்த நாட்டுக்குப் புறப்படப் போகிறோம் என்ற எண்ணமானது அவர்களுக்கு அளவில்லாத எக்களிப்பை உண்டுபண்ணி இரவெல்லாம் தூக்கமின்றிக் களியாட்டங்களில் ஈடுபடும்படி செய்திருந்தது. அந்த வெற்றி வீரர்களில் சிலர் ஆடிப்பாடினார்கள்; சிலர் இசைக்கருவிகளிலிருந்து பல வகை அபஸ்வரங்களைக் கிளப்பினார்கள். சிலர் கும்பலாக உட்கார்ந்து கதை கேட்டார்கள். சிலர் வாதாபி யுத்தத்தில் தாங்கள் செய்த வீர பராக்கிரமச் செயல்களைப் பரஸ்பரம் சொல்லிப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிலர் மார்கழி மாதத்துக் குளிரைப் போக்கிக் கொள்வதற்காக எரிகிற வீடுகளிலிருந்து பிடுங்கிக் கொண்டு வந்த கட்டைகளைப் போட்டுக் கொளுத்திக் கொண்டும் தீயைச் சுற்றி உட்கார்ந்து கொண்டும் குளிர் காய்ந்தார்கள்.

அநேகர் வாதாபியிலிருந்து அவரவரும் கொள்ளையடித்துக் கொண்டு வந்திருந்த செல்வங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு பூதம் காப்பது போல் காத்து வந்தார்கள். இப்படிக் கொள்ளை கொண்ட பொருளை அதி ஜாக்கிரதையாகப் பாதுகாத்தவர்களுக்குள்ளே, சற்று கவனித்துப் பார்த்தோமானால் - நமக்கு தெரிந்த வயோதிக வீரர் ஒருவரைக் காணலாம். சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த செம்பியன் வளவன் - மங்கையர்க்கரசியின் அருமைத் தந்தை தான் அவர். தாம் காஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்த பிறகு தமது மகளுக்கு நேர்ந்த அரும்பெரும் பாக்கியத்தை அறியாதவராய் அவளுடைய திருமணத்தின் போது ஸ்திரீ தனம் கொடுப்பதற்கென்று எரிந்துகொண்டிருந்த வாதாபி நகரிலிருந்து மிக்க பரபரப்புடனும் சுறுசுறுப்புடனும் ஏராளமான முத்துக்கள், மணிகள், ரத்தினங்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்.

இவ்விதம் கிழவர் அரும்பாடுபட்டுச் சேகரித்திருந்த பொருள்களுக்கு ஒரு நாள் ஆபத்து வரும்போலிருந்தது. இரவு நேரங்களில் சில சமயம் மாமல்லர், தமது சேனா வீரர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு, சமயோசிதமான பாராட்டு மொழிகள் கூறி உற்சாகப்படுத்தி விட்டுப் போவது வழக்கம். ஊருக்குப் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டபடியால் சென்ற நாலு தினங்களாகச் சக்கரவர்த்தி தினந்தோறும் இரவு வெகு நேரம் வரையில் வீரர்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று அவர்களைப் பார்த்தும் பேசியும் சந்தோஷப்படுத்தி வந்தார். அந்த வெற்றி வீரர்களைத் தம்முடன் நிரந்தரமாகப் பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட, போர்க்களத்திலும் கோட்டைத் தாக்குதலிலும் அரும் பெரும் வீரச் செயல்கள் புரிந்தவர்களை நேரில் தெரிந்து கொண்டு அவர்களுக்கு விசேஷ சன்மானம் அளிக்க வேண்டுமென்னும் விருப்பமும் மாமல்லரின் மனத்திலே இருந்தது.

மேற்சொன்ன நோக்கங்களுடன், மானவன்மன், ஆதித்தவர்மன், சத்ருக்னன் ஆகியவர்கள் பின்தொடர, படை வீரர்களைப் பார்த்துக் கொண்டு வந்த நரசிம்ம சக்கரவர்த்தி நமது சோழ வம்சத்து வீரக் கிழவரின் அருகில் வந்ததும் சிறிது நின்று அவரை உற்றுப் பார்த்தார். "ஆ! இந்தப் பெரியவரை நாம் மறந்தே போய் விட்டோ மே?" என்று மெல்லச் சொல்லி விட்டு, வெளிப்படையாக, "இது என்ன, ஐயா, இவ்வளவு பொருள்களை நீர் எப்படிச் சேர்த்து வைத்துக் கொள்ளத் துணிந்தீர்? ஒவ்வொருவரும் தம்மால் தூக்கிக் கொண்டு போகக்கூடிய அளவுதானே வைத்துக் கொள்ளலாம் என்பது நமது கட்டளை!" என்று கேட்டார். "சக்கரவர்த்தி! நூறு வீரர்களுடன் வந்தேன்! என்னைத் தவிர அவ்வளவு பேரும் வாதாபிப் போரில் உயிர் துறந்தார்கள்."

"ஆகா! சோழ நாட்டு வீரந்தான் வீரம்!...ஆனால் இதைக் கேட்பதற்கு நமது சேனாதிபதி இங்கில்லையே?" என்று சக்கரவர்த்தி அருகிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, "இருக்கட்டும், ஐயா, நூறு வீரர்களும் போரில் இறந்திருந்தால் வீர சொர்க்கத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பொருளினால் ஒரு பயனுமில்லையே?" என்றார். "பல்லவேந்திரா! எனது ஏக புதல்விக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். புராதன சோழ வம்சத்தின் பெருமைக்கு உகந்த முறையில் ஸ்திரீதனம் கொடுக்க வேண்டுமென்று விரும்பி..." என்று கிழவர் தயங்கினார். மாமல்லர் புன்னகையுடன் மானவன்மரைப் பார்த்து, "இவருக்கு விஷயமே தெரியாது போலிருக்கிறது; சொல்லட்டுமா?" என்று கேட்க, "வேண்டாம், பிரபு! இப்போது திடீரென்று சொன்னால் சந்தோஷ மிகுதியால் கிழவரின் பிராணன் போனாலும் போய் விடும்!" என்றார் மானவன்மர். உடனே மாமல்லர், "மானவன்மரே! இந்த பெரியாருடைய பெண்ணின் ஸ்திரீதனத்துக்காக நூறு யானையும், அந்த நூறு யானை சுமக்கக்கூடிய திரவியங்களும் கொடுங்கள்!" என்று சொல்லி விட்டு மேலே நடந்தார். செம்பியன் வளவன் தமது செவிகளையே நம்ப முடியாதவராய்ப் பிரமித்துப் போய் நின்றார். இதையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொண்டு அக்கம் பக்கத்தில் நின்ற வீரர்கள், "வள்ளல் மாமல்லர் வாழ்க! வாழ்க!" என்ற கோஷங்களைக் கிளப்பினார்கள்.

சக்கரவர்த்தியும் அவருடைய கோஷ்டியும் அப்பால் சென்று வெகு நேரம் ஆனவரையில் அந்த வீரர்களில் பலர் மாமல்லரின் வீர பராக்கிரமங்களைப் பற்றியும் அவருடைய அரும்பெருங் குணாதிசயங்களைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். எனினும், இடையிடையே உற்சாகக் குறைவை உண்டுபண்ணிய பேச்சு ஒன்றும் எழுந்தது. அது என்னவெனில், முன்னெல்லாம் போல் சக்கரவர்த்தியுடன் ஏன் சேனாதிபதி பரஞ்சோதி தொடர்ந்து வரவில்லை என்பதுதான். வீரமாமல்லரும் வீரர் பரஞ்சோதியும் நகமும் சதையும் போலவும் பூவும் மணமும் போலவும் பிரிக்க முடியாத நண்பர்கள் என்பதாக இத்தனை நாளும் அவர்களை அறிந்தவர்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இது விஷயம் தமிழகத்து வீரர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்து வந்தது. இராஜகுலம் எதிலும் பிறவாதவரும், இராஜ வம்சத்தோடு உறவு பூணாதவருமான ஒருவர், தமது வீரம், ஒழுக்கம், ஆற்றல் இவை காரணமாகவே சேனாதிபதிப் பதவியையடைந்திருந்ததும், அவருக்கும் சக்கரவர்த்திக்கும் அத்தகைய நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்ததும் மற்ற வீரர்களுக்கெல்லாம் மிக்க பெருமையை அளித்து வந்தது.

ஆனால், அப்பேர்ப்பட்ட என்றும் அழியாத சிரஞ்சீவி சிநேகம் என்று எல்லோரும் நினைத்திருந்த சேர்க்கைக்கு, இப்போது ஊறு நேர்ந்து விட்டதாகத் தோன்றியது. மாமல்லருக்கும் பரஞ்சோதிக்கும் மனவேற்றுமை ஏற்பட்டு விட்டதாகக் காணப்பட்டது. வாதாபிக் கோட்டையைத் தாக்கலாமா வேண்டாமா என்ற விவாதத்திலிருந்து அந்த வேற்றுமை உண்டானதாகச் சிலர் சொன்னார்கள். சிவகாமி தேவி விஷயத்தில் மாமல்லர் மிகக் கடுமையாக நடந்து கொண்டதே சேனாதிபதிக்கு ஆறாத மனப்புண்ணை உண்டாக்கி விட்டதாகச் சிலர் ஊகித்தார்கள். இலங்கை இளவரசரும் ஆதித்தவர்மனும் சேர்ந்து போதனை செய்து மாமல்லருடைய மனத்தில் களங்கம் உண்டுபண்ணி விட்டதாகச் சிலர் கூறினார்கள். "அதெல்லாம் ஒன்றுமில்லை! எல்லோரும் வீண் வம்பு வளர்க்கிறீர்கள்! சேனாதிபதிக்கு இடைவிடாத உழைப்பினால் தேக சுகம் கெட்டு விட்டது. அதனால் சக்கரவர்த்தி அவரை வெளியே வராமல் கூடாரத்துக்குள்ளே இருந்து இளைப்பாறும்படி கட்டளையிட்டிருக்கிறார்" என்று ஒரு சிலர் நல்ல காரணத்தைக் கற்பித்தார்கள். "நாளைக் காலையில் கொடியேற்றத்துக்குச் சேனாதிபதி வருகிறாரா, இல்லையா என்று பார்க்கலாம். கொடியேற்றத்துக்குச் சேனாதிபதி வந்தால் எல்லாச் சந்தேகமும் தீர்ந்து விடும்!" என்று சிலர் மத்தியஸ்தமாய்ப் பேசினார்கள்.



நாற்பத்தேழாம் அத்தியாயம்
சிறுத்தொண்டர்

பல்லவ வீரர்களில் சிலர் சந்தேகித்தது போல் சேனாதிபதி பரஞ்சோதியின் உடம்புக்கு ஒன்றுமில்லை. அவருடைய தேகம் சௌக்கியமாகத்தான் இருந்தது. ஆனால், அவருடைய மனத்திலேதான் சௌக்கியமும் இல்லை, சாந்தமும் இல்லை. தம்முடைய கூடாரத்தில் தன்னந்தனியாகப் பரஞ்சோதி உட்கார்ந்திருந்தார், அவருக்குத் தூக்கம் வரவில்லை. அவருடைய மனக்கண் முன்னால் வாதாபியின் வீடுகள் பற்றி எரியும் காட்சியும், ஸ்திரீகளும், குழந்தைகளும், வயோதிகர்களும் அலறிக் கொண்டு ஓடும் தோற்றமும், பல்லவ வீரர்கள் வாதாபியின் எரிகிற வீடுகளிலும் கடைகளிலும் புகுந்து கொள்ளையடிக்கும் காட்சியும், தலை வேறு கை வேறு கால் வேறாகக் கிடந்த உயிரற்ற வீரர்களின் தோற்றமும், இரத்த வெள்ளம் ஓடும் காட்சியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

இந்தக் கோரமான காட்சிகளோடு, இருளடைந்த பாதாள புத்த விஹாரத்தில் சிவகாமியின் மீது விஷக் கத்தியை எறியப் போன நாகநந்தியின் தோற்றமும், விஷக் கத்தியைக் காட்டிலும் குரூரமான நஞ்சு தோய்ந்த சொல்லம்புகளை அந்தப் பேதைப் பெண் மீது மாமல்லர் பொழிந்த சம்பவமும், கத்தியால் குத்தப்பட்டுத் தரையிலே செத்துக் கிடந்த கண்ணபிரானுடைய களையிழந்த முகமும் இடையிடையே அவர் உள்ளத்தில் தோன்றின. இவ்வளவுக்கும் மேலாக நெற்றியில் வெண்ணீறும் தேகமெல்லாம் ருத்ராட்ச மாலையும் அணிந்து, கையிலே உழவாரப் படை தரித்துச் சாந்தமும் கருணையும் பொலிந்த திருமுகத்தோடு விளங்கிய திருநாவுக்கரசர் பெருமான், சேனாதிபதி பரஞ்சோதியை அன்புடன் நோக்கி, "அப்பனே! நீ எங்கே இருக்கிறாய்? என்ன காரியம் செய்கிறாய்? போதும்! வா! உனக்காக எத்தனை நாள் நான் காத்துக் கொண்டிருப்பேன்?" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். அதற்குப் பரஞ்சோதி, "குருதேவா! இன்னும் அறுபது நாழிகை நேரந்தான்! பிறகு தங்களிடம் வந்து விடுகிறேன்!" என்று மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தார்.

சிவகாமி தேவியை விடுதலை செய்து ஆயனரிடம் சேர்ப்பித்து அவர்களை முன்னதாக ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு, பரஞ்சோதி பொறுக்கி எடுத்த வீரர்கள் அடங்கிய படையுடன் மேற்கு நோக்கிச் சென்றார். வேங்கியிலிருந்து வரும் சளுக்கர் சைனியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தவர்மருடன் சேர்ந்து கொண்டார். வாதாபி தகனம் ஆரம்பமான மூன்று நாளைக்கெல்லாம் வேங்கி சைனியம் வந்து சேர்ந்தது. அந்தச் சைனியம் பெரும்பாலும் யானைப் படையும் குதிரைப் படையும் அடங்கியது. மேற்படி சைனியத்தின் தலைவர்கள் புலிகேசியின் மரணத்தையும் வாதாபிக் கோட்டையின் வீழ்ச்சியையும் அறிந்து கொண்டதும் பின்னோக்கித் திரும்பிச் செல்லப் பார்த்தார்கள். பரஞ்சோதியின் முன்யோசனை அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஆதித்தவர்மரை நின்ற இடத்திலேயே நிற்கவிட்டுப் பரஞ்சோதி விரைந்து வளைந்து சென்று வேங்கி சைனியத்தைப் பின்னோக்கிச் செல்ல முடியாமல் தடுத்தார். இவ்விதம் இரு புறத்திலும் சூழப்பட்ட வேங்கி சைனியம் வேறு வழியின்றிச் சரணாகதி அடைந்தது. அந்தச் சைனியத்தைச் சேர்ந்த பதினாயிரம் யானைகளும் முப்பதினாயிரம் குதிரைகளும் ஒரு சேதமும் இல்லாமல் பல்லவர்களுக்குக் கிடைத்து விட்டன.

இந்த மாபெரும் காணிக்கையை மாமல்லரிடம் ஒப்புவித்ததும் பரஞ்சோதியார் தம்மைச் சேனாதிபதிப் பதவியிலிருந்து விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இத்தனை காலமும் இராஜ்ய சேவை செய்தாகி விட்டதென்றும், இனிமேல் சிவபெருமானுக்கு அடிமை பூண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வாழ்க்கை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துக் கொண்டார். மேற்படி வேண்டுகோள் மாமல்லருக்கு அதிகமான ஆச்சரியத்தை அளிக்கவில்லை. சென்ற சில காலமாகவே பரஞ்சோதியின் மனப்போக்கு மாறி வைராக்கியம் அடைந்து வருவதை மாமல்லர் கவனித்து வந்தார். எனவே அவருடைய வேண்டுகோளை மறுக்காமல் "சேனாதிபதி! தங்கள் இஷ்டப்படியே ஆகட்டும்; ஆனால், எரிந்து அழிந்த வாதாபியின் மத்தியில் நமது சிங்கக் கொடியை ஏற்றும் வைபவத்தை மட்டும் நடத்தி விடுங்கள், அப்புறம் விடை தருகிறேன்" என்று சொல்லியிருந்தார். மேற்படி கொடியேற்று விழா மறுநாள் சூரியோதயத்தில் நடைபெறுவதாயிருந்தது. இதனாலேதான் பரஞ்சோதி, "இன்னும் ஒரே ஒரு நாள்" என்று ஜபம் செய்து கொண்டிருந்தார்.

மறுதினம் காலையில் உதித்த சூரிய பகவான் சில நாளைக்கு முன்பு வாதாபி நகரம் இருந்த இடத்தில், நேற்றெல்லாம் சாம்பலும் கரியும் கும்பல் கும்பலாகக் கிடந்த இடத்தில், - கண்ணைக் கவரும் அதிசயமான காட்சி ஒன்றைக் கண்டார். பல்லவ - பாண்டிய சேனா வீரர்கள் வாளும் வேலும் ஏந்தி வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அழகாக அலங்கரிக்கப்பட்ட போர் யானைகளும் புரவிகளும் நிரை நிரையாக கண்ணுக்கெட்டிய தூரம் நின்றன. இந்தச் சேனா சமுத்திரத்துக்கு மத்தியில், அலைகடலுக்கு நடுவே தோன்றும் கப்பலின் கூம்பைப் போல் ஒரு புத்தம் புதிய சிற்ப வேலைப்பாடமைந்த ஜயஸ்தம்பம் கம்பீரமாக நின்றது.

லட்சக்கணக்கான வீரர்கள் அவ்விடத்தில் கூடியிருந்த அவ்விடத்தில் கூடியிருந்த போதிலும், கப்சிப் என்ற நிசப்தம் குடிகொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் கூட்டத்தின் ஒரு முனையில் கலகலப்பு உண்டாயிற்று. பேரிகைகள் அதிர்ந்தன! எக்காளங்கள் முழங்கின! சக்கரவர்த்தியின் வருகைக்கு அறிகுறியான மேற்படி வாத்திய கோஷத்தைக் கேட்டதும், அந்த லட்சக்கணக்கான வீரர்களின் கண்டங்களிலிருந்து ஏககாலத்தில் "வாதாபி கொண்ட மாமல்ல சக்கரவர்த்தி வாழ்க!" என்ற கோஷம் கிளம்பி மேலே வான மண்டலம் வரை சென்று, நாலா திசைகளிலும் பரவிப் படர்ந்து எங்கெங்கும் எதிரொலியை உண்டாக்கியது.

சேனாதிபதி பரஞ்சோதி, இலங்கை இளவரசர் மானவன்மர், வேங்கி அரசர் ஆதித்தவர்மன் முதலியவர்கள் பின்தொடர மாமல்ல சக்கரவர்த்தி ஜயஸ்தம்பத்தின் அடியிலே வந்து நின்றவுடனே, மறுபடியும் ஒரு தடவை ஜயகோஷம் கிளம்பி, எட்டுத் திக்குகளையும் கிடுகிடுக்கச் செய்தது. சப்தம் அடங்கியதும் மாமல்லர் சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்துச் சில விஷயங்களைக் கூறினார். தாமும் பரஞ்சோதியும் ஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாறு வேடம் பூண்டு அவர்கள் இப்போது நிற்கும் அந்த இடத்துக்கு வந்திருந்ததையும், அச்சமயம் அங்கு வேறொரு ஜயஸ்தம்பம் நின்றதையும், அதில் புலிகேசி மகேந்திர பல்லவரை முறியடித்தது பற்றிய பொய்யான விவரம் எழுதியிருந்ததையும், அந்த ஜயஸ்தம்பத்தைப் பெயர்த்தெறிந்து அதன் இடத்தில் பல்லவ ஜயஸ்தம்பத்தை நிலை நாட்டுவதென்று தாமும் சேனாதிபதியும் சபதம் செய்ததையும், அந்தச் சபதம் இன்று நிறைவேறி விட்டதையும் குறிப்பிட்டு, இந்த மாபெரும் வெற்றிக்கெல்லாம் முக்கிய காரண புருஷரான சேனாதிபதி பரஞ்சோதிதான் அந்த ஜயஸ்தம்பத்தில் பல்லவ சைனியத்தின் வெற்றிக் கொடியை ஏற்றுவதற்கு உரிமையுடையவர் என்று கூறி முடித்தார்.

சக்கரவர்த்திக்கும் சேனாதிபதிக்கும் ஏதாவது மன வேற்றுமை ஏற்பட்டிருக்கிறதோ என்பது பற்றிப் பல்லவ வீரர்களிடையில் சந்தேகம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்தோமல்லவா? எனவே, இப்போது ஜயஸ்தம்பத்தின் அருகில் சக்கரவர்த்தியும் சேனாதிபதியும் சேர்ந்து நிற்பதைப் பார்த்ததுமே அவ்வீரர்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. சேனாதிபதியைப் பற்றிச் சக்கரவர்த்தி கூறியதை அருகிலே நின்று நன்றாய்க் கேட்டவர்களும் தூரத்திலே நின்று அரைகுறையாகக் கேட்டவர்களும் கூட அளவற்ற மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தார்கள். சேனாதிபதி புதிய ஜயஸ்தம்பத்தின் மீது பல்லவ சிம்மக் கொடியை உயர்த்தியபோது, சேனா வீரர்களின் குதூகலம் வரம்பு கடந்து பொங்கி ஜயகோஷமாகவும் வாழ்த்துரை களாகவும் வெளியாயிற்று. பேரிகை முழக்கங்களும், வாத்ய கோஷங்களும், லட்சக்கணக்கான கண்டங்களிலிருந்து கிளம்பிய ஜயத்வனிகளும், அவற்றின் பிரதித்வனிகளுமாகச் சேர்ந்து சிறிது நேரம் காது செவிடுபடச் செய்தன.

சப்தம் அடங்கும் வரையில் பொறுத்திருந்த மாமல்லர் கடைசியாக அன்று அவ்வீரர்களிடம் விடைபெறுவதற்கு முன் வருத்தமான விஷயத்தைத் தாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது என்ற பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து, இத்தனை காலம் தம்முடன் இருந்து இரவு பகல் சேவை புரிந்து, இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பரஞ்சோதியார் இப்போது தம்மிடம் விடுதலை கேட்கிறார் என்றும், அவருடைய உள்ளம் சிவ பக்தியில் ஈடுபட்டிருக்கிறதென்றும் சிவனடியாரைச் சேனைத் தலைவராக வைத்திருப்பது பெருங்குற்றமாகுமென்றும், ஆகையால் அவருக்கு விடுதலை கொடுத்து விடத் தாம் சம்மதித்து விட்டதாயும், நாளைக் காலையில் அவர் தம்மையும் பல்லவ சைனியத்தையும் பிரிந்து தனி வழியே தீர்த்த யாத்திரை செல்கிறார் என்றும், வீரர்கள் எல்லாரும் உற்சாகமாக அவருக்கு விடைகொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். தாம் தெரிவித்த விஷயம் அவ்வளவாக அந்த வீரர் கூட்டத்தில் உற்சாகம் உண்டு பண்ணவில்லையென்பதையும் கண்டார். எலலையற்ற மௌனம் அந்தப் பெரும் கூட்டத்தில் அப்போது குடிகொண்டிருந்தது. அடுத்த நிமிஷம், ஆஜானுபாகுவாய் நெடிதுயர்ந்த மாமல்ல சக்கரவர்த்தி தம்மை விடக் குட்டையான சேனாதிபதி பரஞ்சோதியை மார்புறத் தழுவிக் கொண்ட போது, மீண்டும் அந்தச் சேனா சமுத்திரத்தில் கோலாகலத்வனிகள் எழுந்தன.

அன்றைக்கெல்லாம் மாமல்லர் பல்லவ - பாண்டிய வீரர்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் பரிசுகள் வழங்குவதில் ஈடுபட்டிருந்தார். வாதாபி எரியத் தொடங்கிய நாளிலிருந்து பல்லவ சைனியத்துடன் வந்திருந்த நூறு பொற் கொல்லர்கள் ஆயிரம் வீரர்களின் உதவியுடன் தங்கத்தை உருக்கிப் புதிய சிங்க முத்திரை போட்ட பொற்காசுகள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். வாதாபி அரண்மனைகளிலிருந்தும் சளுக்க சாம்ராஜ்ய பொக்கிஷங்களிலிருந்தும் கைப்பற்றிய ஏராளமான தங்கக் கட்டிகளையும் பொன்னாபரணங்களையும் பெரிய கொப்பரைகளில் போட்டுப் பிரம்மாண்டமான அடுப்புக்களில் தீ மூட்டி உருக்கினார்கள். உருக்கிய பொன்னை நாணயவார்ப்படத்துக்காக அமைக்கப்பட்ட அச்சுக்களிலே ஊற்றி எடுத்து, லட்சலட்சமாக கழஞ்சு நாணயங்களைச் செய்து குவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பல்லவ - பாண்டிய வீரனுக்கும் அவனவன் தானே சேகரித்துக் கொண்ட செல்வத்தைத் தவிர தலைக்குப் பத்துப் பொற்கழஞ்சுகள் அளிக்கப்பட்டன. போர் வீரர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு அளித்த பிறகு படைத் தலைவர்களுக்கும் சிறந்த வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கும் விசேஷப் பரிசுகள் அளிக்கப்பட்டன. யானைகளும் குதிரைகளும் சுமக்கக்கூடிய அளவு செல்வங்களும் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. துங்கபத்திரைக்கும் கிருஷ்ணை நதிக்கும் அப்பால் பல்லவ ஆதிக்கத்துக்குட்பட்ட விஸ்தாரமான பிரதேசங்களை எல்லாம் வேங்கியைத் தலைநகராக்கிக் கொண்டு சர்வாதிகாரத்துடன் ஆளும்படியாக ஆதித்தவர்மர் நியமிக்கப்பட்டார். இலங்கை இளவரசன் மானவன்மருக்குத் தக்க வெகுமதியளிப்பது பற்றி மாமல்லர் யோசித்த போது, "பிரபு! என் தந்தை வீற்றிருந்து அரசாண்ட இலங்கைச் சிம்மாசனந்தான் நான் வேண்டும் பரிசு! வேறு எதுவும் வேண்டாம்!" என்றார் மானவன்மர்.

கடைசியில், மாமல்லர் பரஞ்சோதியைப் பார்த்துச் சொன்னார்; "நண்பரே! இந்த மகத்தான வெற்றி முழுவதும் தங்களுடையது! எனவே, இந்த வெற்றியின் மூலம் கிடைத்த அளவில்லாத செல்வங்களும் உங்களுடையவைதான். முப்பதினாயிரம் யானைகள், அறுபதினாயிரம் குதிரைகள், காஞ்சி அரண்கள், எல்லாம் கொள்ளாத அளவு நவரத்தினங்கள், அளவிட முடியாத தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இவையெல்லாம் நமக்கு இந்தப் போரிலே லாபமாகக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் ஒரு பகுதியையாவது தாங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐயாயிரம் யானைகளும், பதினாயிரம் குதிரைகளும், அவை சுமக்கக்கூடிய செல்வங்களும் தங்களுக்கு அளிப்பதென்று எண்ணியிருக்கிறேன்..."

மாமல்லரை மேலே பேச விடாதபடி தடுத்துப் பரஞ்சோதி கூறினார்; "பல்லவேந்திரா! மன்னிக்க வேண்டும், தங்களிடம் நான் கோருவது முக்கியமாகத் தங்களுடைய தங்கமான இருதயத்தில் என்றைக்கும் ஒரு சிறு இடந்தான். அதற்கு மேலே நான் கோருகிற பரிசு ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுவும் வாதாபிக் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருளேதான்!" "ஆகா! அது என்ன அதிசயப் பொருள்?" என்று மாமல்லர் வியப்புடன் கேட்டார். "அந்தப் பொருள் இதோ வரும் மூடு பல்லக்கில் இருக்கிறது!" என்று பரஞ்சோதி கூறியதும், நாலு வீரர்கள் ஒரு மூடு பல்லக்கைக் கொண்டு வந்து இறக்கினார்கள். பல்லக்கைத் திறந்ததும், அதற்குள்ளே நாம் ஏற்கெனவே பார்த்த விநாயகர் விக்கிரகம் இருந்தது.

வாதாபிக் கோட்டை வாசலில் இருந்த அந்த விக்கிரகத்துக்குத் தாம் பிரார்த்தனை செய்து கொண்டதைப் பற்றிப் பரஞ்சோதி கூறி, அதைத் தம்முடன் கொண்டு போய்த் தாம் பிறந்து வளர்ந்த செங்காட்டாங்குடிக் கிராமத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். மேற்படி விக்கிரகத்தைத் தவிர வாதாபி நகரத்திலிருந்து கவரப்பட்ட வேறெந்தப் பொருளும் தமக்கு வேண்டியதில்லையென்று பரஞ்சோதி கண்டிப்பாக மறுத்து விட்டார். வேறு வழியின்றி மாமல்லர் பரஞ்சோதியின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியதாயிற்று. பரஞ்சோதி ஸ்தல யாத்திரை செல்லும் போது இரண்டு யானை, பன்னிரண்டு குதிரை, நூறு காலாள் வீரர்கள் ஆகிய பரிவாரங்களை மட்டும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மாமல்லர் பிடிவாதம் பிடித்துத் தமது நண்பரை இணங்கும்படி செய்தார்.

மறுநாள் மத்தியானம் மாமல்லரும் பல்லவ சைனியமும் அவர்கள் வந்த வழியே காஞ்சிக்குத் திரும்பிச் செல்லப் புறப்படுவதாகத் திட்டமாகியிருந்தது. பரஞ்சோதியார் துங்கபத்திரைக் கரையோடு சென்று ஸ்ரீசைலம் முதலிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து விட்டு வருவதற்காக அன்று காலையிலேயே தமது சிறு பரிவாரத்துடன் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னால் மாமல்லரிடம் கடைசியாக விடைபெற்றுக் கொள்ளுவதற்காகச் சக்கரவர்த்தியின் கூடாரத்துக்குப் பரஞ்சோதி வந்த போது பல்லவ - பாண்டிய வீரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டையெல்லாம் மறந்து அங்கே கூட்டம் கூடி விட்டார்கள். பரஞ்சோதியின் புதிய தோற்றம் அவர்களைச் சிறிது நேரம் திகைப்படையச் செய்தது. கத்தி, கேடயம், வாள், வேல், தலைப்பாகை, கவசம், அங்கி இவற்றையெல்லாம் களைந்தெறிந்து விட்டுப் பரஞ்சோதி நெற்றியில் வெண்ணீறு தரித்து, தலையிலும், கழுத்திலும் ருத்ராட்சம் அணிந்து, பழுத்த சிவபக்தரின் தோற்றத்தில் விளங்கினார். அவருடைய திருமுகம் நேற்று வரை இல்லாத பொலிவுடன் சுடர் விட்டுப் பிரகாசித்தது. சற்று நேரம் திகைத்து நின்ற வீரர்களைப் பார்த்துப் பரஞ்சோதி கும்பிட்டதும், "சேனாதிபதி பரஞ்சோதி வாழ்க! வாதாபி கொண்ட மகா வீரர் வாழ்க!" என்று கூவினார்கள். பரஞ்சோதி அவர்களைக் கைகூப்பி வணங்கி அமைதி உண்டுபண்ணினார். பிறகு, "நண்பர்களே! இன்று முதல் நான் சேனாதிபதி இல்லை; தளபதியும் இல்லை. சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்யும் தொண்டர் கூட்டத்தில் அடியேன் ஒரு சிறு தொண்டன்!" என்று கூறினார்.

அளவில்லாத வியப்புடனும் பக்தியுடனும் இதைக் கேட்டுக் கொண்டு நின்ற பல்லவ வீரர்களில் ஒருவன் அப்போது ஓர் அமர கோஷத்தைக் கிளப்பினான். "சிவனடியார் சிறுத்தொண்டர் வாழ்க!" என்று அவன் கம்பீரமாகக் கோஷித்ததை நூறு நூறு குரல்கள் திருப்பிக் கூவின. "சிறுத்தொண்டர் வாழ்க!" "சிவனடியார் சிறுத்தொண்டர் வாழ்க! என்று கோஷம் நாலாபுறத்திலும் பரவி ஆயிரமாயிரம் குரல்களில் ஒலித்து எதிரொலித்தது. பரஞ்சோதியார் தமது சிறிய பரிவாரத்துடனும் வாதாபி விநாயகருடனும் நெடுந்தூரம் சென்று கண்ணுக்கு மறையும் வரையில், "சிறுத்தொண்டர் வாழ்க!" என்ற சிரஞ்சீவி கோஷம் அந்தச் சேனா சமுத்திரத்தில் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டேயிருந்தது!



நாற்பத்தெட்டாம் அத்தியாயம்
குளக்கரைப் பேச்சு

தை மாதத்தின் பிற்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் வானம் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. அந்த வருஷம் ஐப்பசி, கார்த்திகையில் நல்ல மழை பெய்திருந்தபடியால், தாமரைக் குளம் நிரம்பிக் கரையைத் தொட்டுக் கொண்டு தண்ணீர் ததும்பிற்று. காலைச் சூரியனை மேகங்கள் மூடியிருந்த போதிலும் குளத்தில் செந்தாமரைப் புஷ்பங்கள் நன்றாக மலர்ந்து இனிய நறுமணத்தை நானா திசைகளிலும் பரப்பிக் கொண்டிருந்தன. இறகுகளில் சிவப்பு வரியுடன் கூடிய நீல நிற வண்டுகள், மலர்ந்த செந்தாமரைப் பூக்களை வலம் வந்து இசைபாடி மகிழ்ந்தன. பளிங்கு போலத் தெளிந்திருந்த தடாகத்தின் தண்ணீரில் பெரிய பெரிய கயல் மீன்கள் மந்தை மந்தையாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.

பச்சைப் பசுங் குடைகளைப் போலத் தண்ணீரிலிருந்து கம்பீரமாக எழுந்து தலை நிமிர்ந்து நின்ற தாமரை இலைகளில் முத்து நீர்த் துளிகள் அங்குமிங்கும் தவழ்ந்து விளையாடின. தாமரைக் குளதைச் சுற்றிலும் வானோங்கி வளர்ந்திருந்த விருட்சங்கள் கப்பும் கிளைகளும், இலைகளும், தளிர்களுமாய்த் தழைத்துப் படர்ந்து சில இடங்களில் குளத்தின் தண்ணீர் மீது கவிந்து கரு நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. பச்சைக் கிளிகளும் பல வர்ணக் குருவிகளும் இன்னிசைக் குயில்களும் இனிய கீதம் பாடும் மைனாக்களும் குளிர்ந்த தழைகளுக்கிடையில் உட்கார்ந்து இளந்தளிர்களைக் கோதிக் கொண்டும் மலர்களின் மகரந்தங்களை உதிர்த்துக் கொண்டும் ஆனந்தமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டும் வசந்த காலத்துக்கு வரவேற்புக் கூறிக் கொண்டிருந்தன.

இவ்விதம் இயற்கைத் தேவி பூர்ண எழிலுடன் கொலுவீற்றிருந்த இடத்தில், ஜீவராசிகள் எல்லாம் ஆனந்தத் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், மானிட ஜன்மம் எடுத்த அபலைப் பெண் ஒருத்தி மட்டும் அந்தக் குளக்கரையில் சோகமே உருக்கொண்டது போல் உட்கார்ந்திருந்தாள். அவள் ஆயனச் சிற்பியாரின் செல்வத்திருமகளும், வீராதி வீரரான மாமல்ல சக்கரவர்த்தியின் உள்ளம் கவர்ந்த காதலியும் நடனக் கலைத் தெய்வத்தின் பரிபூரண அருள் பெற்ற கலைராணியுமான சிவகாமி தேவிதான். அந்தத் தாமரைக் குளத்தின் காட்சியானது சிவகாமிக்கு எத்தனை எத்தனையோ பூர்வ ஞாபகங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

அந்தத் தடாகக் கரை ஓரத்தில் பத்து வருஷங்களுக்கு முன்னால் அவள் இதே மாதிரி எவ்வளவோ தடவை உட்கார்ந்து தெளிந்த தண்ணீரில் பிரதிபலித்த தன் அழகிய உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். சென்ற பத்து வருஷ காலத்தில் அவளுடைய உருவத் தோற்றத்தில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், அவளுடைய உள்ளம் அந்தப் பத்து வருஷத்திலே எவ்வளவு மாறுதல் அடைந்து விட்டது! அழகிய தாமரை மலரையும் அதைச் சுற்றி வரும் நீலநிற வண்டுகளையும் பார்க்கும் போது முன்னாளில் அவள் உள்ளம் அடைந்த குதூகலம் இப்போது ஏன் அடையவில்லை?

தண்ணீரிலே பிரதிபலித்த அவளுடைய பொன் மேனியின் சௌந்தரியத்தையும் ஆடை ஆபரண அலங்காரத்தையும் பார்த்த போது அவள் அடைந்த பெருமிதமும் இன்பமும் இப்போது எங்கே போய் விட்டன? அந்தக் காலத்தில் அதே தாமரைக் குளக்கரையில் தன்னந்தனியாக உட்கார்ந்து மனோராஜ்யம் செய்து கொண்டிருப்பதில் சிவகாமி எவ்வளவோ இன்பத்தை அனுபவித்தாள். தனிமையிலே அவள் கண்ட அந்த இனிமை இப்போது எங்கே? சிவகாமிக்குச் சில சமயம் தனது சென்ற கால வாழ்க்கையெல்லாம் ஒரு நெடிய இந்திரஜாலக் கனவு போலத் தோன்றியது. தான் அத்தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்திருப்பதும் தன்னைச் சுற்றிலும் காணப்படும் அழகிய இயற்கைக் காட்சிகளும் உண்மைதானா அல்லது வாதாபி நகரத்துச் சிறை வீட்டில் உட்கார்ந்தபடி காணும் பகற்கனவா என்று அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டது.

இவ்விதம் நெடுநேரம் ஏதோ உருவமில்லாத சிந்தனைகளில் சிவகாமி ஆழ்ந்திருந்தாள். வானத்தை மூடியிருந்த மேகப் படலங்கள் சிறிது விலகி சூரியன் வெளித் தோன்றி அவள் மீது சுளீர் என்று வெயில் உறைத்த பிறகு எழுந்திருந்தாள். ஆயனரின் அரண்யச் சிற்ப வீட்டை நோக்கி நடந்தாள். குதிரைக் குளம்படியின் சப்தம் திடீரென்று கேட்டதும், அந்த அடி ஒவ்வொன்றும் தன் நெஞ்சின் மேல் படுவது போன்ற வேதனை அவளுக்கு உண்டாயிற்று. அந்தக் குளக்கரையைத் தேடி அவளுடைய காதலர் மாமல்லர் குதிரை மீது எத்தனையோ தடவை வந்திருப்பது சிவகாமிக்கு நினைவு வந்தது. இப்போது வருவது யார்? ஒருவேளை அவர்தானா? - ஆஹா! அவரை எப்படிச் சந்திப்பது? அவருடைய தீக்ஷண்யமான பார்வையை - 'அடி பாதகி! உன்னால் என்னென்ன வினைகள் எல்லாம் வந்தன? என்று குற்றம் சாட்டும் கண்களை எப்படித்தான் ஏறிட்டுப் பார்ப்பது?

ஒரு குதிரையல்ல - இரண்டு குதிரைகள் வருகின்றன. இரண்டு குதிரைகள் மீதும் இரண்டு பேர் வீற்றிருக்கிறார்கள். தனியாக அவரைச் சந்திப்பதே முடியாத காரியம் என்றால், இன்னொருவரின் முன்னால் அவரைப் பார்ப்பது பற்றிக் கேட்க வேண்டியதில்லை. குளக்கரையின் சமீபத்தில் அடர்த்தியாக மண்டி வளர்ந்திருந்த புதர் ஒன்றின் பின்னால் சிவகாமி மறைந்து கொண்டாள். குதிரைகள் இரண்டும் சமீபத்தில் வந்தன. முன்னால் வரும் குதிரையின் மீது மாமல்லர்த்தான் வந்தார். அம்மா! அவர் முகத்திலேதான் இப்போது என்ன கடூரம்? அன்பு கனிந்து ஆர்வம் ததும்பிக் கள்ளங்கபடமற்ற உள்ளத்தைக் காட்டிய பால்வடியும் முகத்துக்கும் இந்தக் கடுகடுத்த முகத்துக்கும் எத்தனை வித்தியாசம்? அவருக்குப் பின்னால் மற்றொரு குதிரையின் மேல் வந்தவர் பரஞ்சோதியாகத்தானிருக்க வேண்டுமென்று எண்ணிச் சிவகாமி பார்த்தாள். இல்லை; பரஞ்சோதி இல்லை! அந்த மனிதரை இதுவரையில் சிவகாமி பார்த்தது கிடையாது. ஆ! பத்து வருஷத்துக்குள் எத்தனையோ புதுச் சிநேகிதம் அவருக்கு ஏற்பட்டிருக்கும்!

குதிரைகள் இரண்டும் குளக்கரையில் வந்து நின்றன; இருவரும் இறங்கினார்கள். அந்தப் பழைய விருட்சத்தின் அடியில் மாமல்லரின் கவிதையழகு வாய்ந்த காதல் ஓலைகளை எந்த மரத்தின் பொந்திலே தான் ஒளித்து வைத்திருப்பது வழக்கமோ, அதே மரத்தினடியில் இருவரும் நின்றார்கள். மாமல்லரின் பேச்சு அவள் காதிலே விழுந்தது. ஆம்! தன்னைப் பற்றித்தான் அவர் பேசுகிறார். மாமல்லரின் குரலில் பின்வரும் வார்த்தைகள் வருவதைச் சிவகாமி கேட்டாள். "ஒரு காலத்தில் இந்தத் தாமரைக் குளத்தைப் பார்க்கும் போது எனக்கு எத்தனை குதூகலமாயிருந்தது! எத்தனை தடவை இந்தக் குளத்தைத் தேடி ஆர்வத்துடன் ஓடி வந்திருக்கிறேன்? என் அருமைத் தந்தையிடம் கூட என் உள்ளத்தை ஒளித்து இங்கே கள்ளத்தனமாக எத்தனை முறை வந்திருக்கிறேன்? இதன் அருகில் வரும் போது, சிவகாமி இங்கே இருப்பாளோ, மாட்டாளோ என்ற எண்ணத்தினால் எப்படி என் நெஞ்சம் துடித்துக் கொண்டிருக்கும்? அவள் இந்த மரத்தடியில் உள்ள பலகையில் தங்க விக்ரகத்தைப் போல் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் எப்படி என் உள்ளம் மகிழ்ச்சி ததும்பித் துள்ளிக் குதிக்கும்? அப்படிப்பட்ட சிவகாமியை இன்று ஏறிட்டுப் பார்க்கவே என் மனம் துணியவில்லை. வீட்டின் வாசல் வரைக்கும் வந்து விட்டு, உள்ளே போகத் தயங்கி ஒதுங்கி வந்து விட்டேன். இந்தத் தாமரைக் குளம் அந்தக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிக வனப்புடனேதான் இன்று விளங்குகிறது. ஆயினும் இதைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை - மானவன்மரே! இதோ இந்த மரத்தடிப் பலகையைப் பாருங்கள்! இந்தப் பலகையின் மேல் நாங்கள் கை கோர்த்துக் கொண்டு உட்கார்ந்து எத்தனையோ நாள் சொர்க்க இன்பத்தை அனுபவித்திருக்கிறோம். அந்தப் பலகை இன்று எப்படி வெயிலிலே உலர்ந்து மழையிலே நனைந்து துண்டு துண்டாய்ப் பிளந்து கிடக்கிறது! இளவரசே! என்னுடைய சிதைந்து போன வாழ்க்கைக்கு இந்தப் பலகையே சரியான சின்னமாக விளங்குகிறது...."

மானவன்மர் என்று அழைக்கப்பட்ட மனிதர் ஏதோ சொன்னார். அது சிவகாமியின் காதில் விழவில்லை. மாமல்லர் அவருக்குக் கூறிய மறுமொழி மட்டும் கேட்டது. "ஆ! மானவன்மரே! என்னால் அது நினைக்கவும் முடியாத காரியம். செடியிலிருந்து கீழே உதிர்ந்த பூ உதிர்ந்து போனது தான். மறுபடியும் அதைச் செடியிலே பொருத்த முடியுமா? என்னுடைய தந்தை மகேந்திர பல்லவர் ஒரு சமயம் கூறியது எனக்கு நினைவு வருகிறது. 'சிவகாமியும் அவளுடைய அற்புதக் கலையும் கடவுளுக்கு அர்ப்பணம் ஆக வேண்டியவை. கேவலம் மனிதர்களுக்கு உரியவை அல்ல' என்று அவர் கூறினார். மகேந்திர பல்லவரின் வாக்கு ஒருபோதும் வீண்போவதில்லை!" இவ்விதம் சொல்லிக் கொண்டே மாமல்லர் தம் சிநேகிதருடன் மெல்ல நடந்து தாமரைத் தடாகத்தின் நீர்க்கரை ஓரம் வரையில் இறங்கிச் சென்றார். இருவரும் சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து தத்தம் குதிரைகளின் மீது ஏறிச் சென்றார்கள்.

சிவகாமி தன்னுடைய வீட்டை நோக்கிக் காட்டு வழியே சென்ற போது அவளுடைய உள்ளத்தில் பெரும் கிளர்ச்சி குடிகொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சியில் இன்பமும் வேதனையும் சமமாகக் கலந்திருந்தன. மாமல்லர் தன்னை மறந்து போய் விடவில்லையென்பதையும் தன்னிடம் அவரது அன்பு குறைந்து விடவில்லையென்பதையும் அவளுடைய உள்ளம் நன்கு தெரிந்து கொண்டிருந்தது. ஆயினும் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பெரிய தடை, - கடக்க முடியாத அகாதமான பள்ளம் இருப்பதாகவும் அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. அந்தத் தடை எத்தகையது, அந்தப் பள்ளம் எப்படி ஏற்பட்டது என்பதை அவள் எவ்வளவு யோசித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எப்படியும் மாமல்லரைக் கூடிய சீக்கிரத்தில் ஒருநாள் பார்க்க வேணும். பார்த்துத் தனது உள்ளம் அவர் விஷயத்தில் முன்போலவேதான் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேணும் என்று தீர்மானித்துக் கொண்டாள். என்றென்றைக்கும் தான் அவருடைய அடியாள், அவர் நிராகரித்துத் தள்ளினாலும் அகன்று போக முடியாதவள் என்று உறுதி கூற எண்ணினாள்.

அன்று மத்தியானம் சிவகாமி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆயனர், தயங்கித் தயங்கி அவளுடன் பேச்சுக் கொடுக்க முயன்றார். "குழந்தாய்! எனக்கென்னவோ இப்போது இந்த நடுக் காட்டிலே வசிப்பது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. காஞ்சியில் நமக்கு ஒரு வீடு இருக்கிறதல்லவா! அங்கேயே போய் விடலாம் என்று பார்க்கிறேன்; உன்னுடைய விருப்பம் என்ன?" என்று கேட்டார். "அப்பா! அதிசயமாயிருக்கிறதே? என் மனத்தில் இருப்பதையே நீங்களும் சொல்லுகிறீர்கள். எனக்கும் இந்தக் காட்டில் தனியாயிருக்க இப்போது அவ்வளவு பிரியமாயில்லை. நாலு பேரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்றிருக்கிறது. காஞ்சிக்குப் போனால் கமலி அக்காளுடனாவது பேசிப் பொழுது போக்கலாம்; நாளைக்குப் புறப்படலாமா, அப்பா?" என்றாள் சிவகாமி.

"நாளைக்குப் புறப்படலாம் என்று எண்ணித்தான் நானும் பல்லக்கு அனுப்பி வைக்கும்படி சொல்லியிருக்கிறேன். நாளைய தினம் காஞ்சி நகரில் பெரிய கோலாகலமாயிருக்கும்." "நாளைக்குக் காஞ்சி நகரில் என்ன விசேஷம், அப்பா?" என்று சிவகாமி கேட்டாள். "நாளைக்குச் சக்கரவர்த்தியின் பட்டணப் பிரவேச ஊர்வலம் நடக்கப் போகிறதாம்! சளுக்கர்களை முறியடித்து உலகம் காணாத மகத்தான வெற்றியுடன் மாமல்லர் திரும்பி வந்திருக்கிறார் அல்லவா?" "சக்கரவர்த்தி திரும்பி வந்து விட்டாரா?" என்று சிவகாமி கேட்ட போது, அவளுடைய வாழ்க்கையில் கடைசி முறையாகக் கபட வார்த்தையைக் கூறினாள்.

"ஆம் குழந்தாய்! முந்தா நாள் பல்லவ சைனியம் வந்து சேர்ந்தது; சக்கரவர்த்தியும் வந்து விட்டார். எல்லாரும் வடக்குக் கோட்டை வாசலுக்கு அருகில் தண்டு இறங்கியிருக்கிறார்களாம். பட்டணப் பிரவேசத்துக்கு நாளைய தினம் நல்ல நாள் குறிப்பிட்டிருக்கிறார்களாம்... ஒரு விஷயம் கேட்டாயா, சிவகாமி! எனக்கு வயதாகி விட்டதோடு, அறிவும் தளர்ந்து வருகிறது என்று தோன்றுகிறது. இல்லாத பிரமைகள் எல்லாம் ஏற்படுகின்றன. இன்று காலை ஏதோ குதிரை வரும் சப்தம் கேட்டது போலிருந்தது. சக்கரவர்த்திதான் அந்த நாளிலே வந்ததைப் போல் இந்த ஏழைச் சிற்பியின் வீட்டைத் தேடி வருகிறாரோ என்று நினைத்தேன். வாசலில் வந்து பார்த்தால் ஒருவரையும் காணவில்லை." சிவகாமியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சக்கரவர்த்தி வந்தது உண்மைதான் என்பதைச் சொல்லலாமா என்று நினைத்தாள் அதற்குத் தைரியம் வரவில்லை.

சிவகாமி கண்களில் கண்ணீரைப் பார்த்த ஆயனர் சற்று நேரம் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தார். பிறகு சிவகாமியை நோக்கி கனிவு மிகுந்த குரலில், "அம்மா, குழந்தாய்! உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன்" என்றார். "என்ன அப்பா, அது? சொல்லுங்களேன்!" என்றாள் சிவகாமி. "உலகத்திலே உள்ள எல்லாப் பெண்களையும் போல நீயும் யாராவது ஒரு நல்ல கணவனை மணந்து கொண்டு சந்தான பாக்கியத்தை அடைய வேண்டும். குழந்தாய்! இந்த வயதான காலத்தில் இத்தனை நாள் இல்லாத ஆசை எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாட வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது..."

"அப்பா! நான் ஒருத்தி பெண் பிறந்து உங்கள் எல்லோருக்கும் கொடுத்த துன்பம் போதாதா, இன்னும் வேறு வேண்டுமா?" என்று நெஞ்சைப் பிளக்கும் குரலில் சிவகாமி கூறினாள். "சிவகாமி, இதென்ன வார்த்தை? நீ யாருக்கு என்ன துன்பம் செய்தாய், அம்மா?" என்றார் ஆயனர். "தங்களுடைய கால் ஊனமடைவதற்கு நான் காரணமாயிருந்தேன். கமலி அக்கா கணவனை இழப்பதற்குக் காரணமானேன்..." "விதியின் விளைவுக்கு நீ என்ன செய்வாய், சிவகாமி! கண்ணபிரான் தலையில் அவ்விதம் எழுதியிருந்தது. அவன் அகால மரணம் அடைந்தாலும், அவனுடைய குலம் விளங்குவதற்குச் சின்னக் கண்ணன் இருக்கிறான். என்னுடைய குலமும் அந்த மாதிரி விளங்க வேண்டாமா? உன்னைத் தவிர எனக்கு வேறு யார்?" "அப்பா! இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்களுக்குப் பிறகு சிம்மாசனம் ஏறவும் அரசாட்சி செய்யவும் சந்ததி வேண்டுமென்று கவலைப்பட வேண்டும். நம்மைப் போன்ற ஏழை எளியவர்களுக்குச் சந்ததியைப் பற்றி என்ன கவலை?" என்றாள் சிவகாமி.



நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்
பட்டணப் பிரவேசம்

கமலி முன் தடவையைக் காட்டிலும் இந்தத் தடவை தங்கை சிவகாமியிடம் அதிக அன்பும் ஆதரவும் காட்டினாள். முன் தடவை அவள் கண்ணனுடைய அகால மரணத்தைப் பற்றி அப்போதுதான் கேள்விப்பட்டபடியால் அழுகையும் அலறலும் ஆத்திரமும் ஆங்காரமுமாயிருந்தாள். அடிக்கடி சிவகாமியைப் பார்த்து, "அடிபாதகி! உன்னையும் கெடுத்துக் கொண்டு என்னையும் கெடுத்து விட்டாயே? நீ முன்னமே செத்திருக்கக் கூடாதா!" என்று திட்டினாள். சிவகாமி பொறுமையாயிருந்ததுடன் தானும் அவளோடு சேர்ந்து அழுது தன்னைத் தானே நொந்து கொண்டும் திட்டிக் கொண்டும் கமலிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தாள்.

இந்த முறை கமலி சிறிது ஆறுதலும் அமைதியும் அடைந்திருந்தாள். வாதாபியில் சிவகாமியின் வாழ்க்கையைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி வற்புறுத்தினாள். கண்ணன் மரணமடைந்த வரலாற்றைப் பற்றியும் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். கண்ணனுடைய உயர்ந்த குணங்களைப் பற்றியும் கமலியிடம் அவன் கொண்டிருந்த அளவில்லாத காதலைப் பற்றியும் மூச்சு விடாமல் அந்தத் தோழிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு சமயம், வெளியிலே போயிருந்த சின்னக் கண்ணன் "அம்மா! அம்மா!" என்று கூவிக் கொண்டு உள்ளே ஓடி வந்தான். கமலி அவனை வாரி அணைத்துக் கொண்டு "தங்காய்! இனிமேல் உனக்கும் எனக்கும் இந்தப் பிள்ளைத்தான் கதி. இவன் வளர்ந்து பெரியவனாகித்தான் நம் இருவரையும் காப்பாற்ற வேண்டும்" என்றாள். அதைக் கேட்டதும் சிவகாமிக்குச் 'சுரீர்' என்றது. கமலி அக்கா ஏன் இப்படிச் சொல்கிறாள்! அவள் கணவனை இழந்த காரணத்தினால் தானும் அவளைப் போலவே ஆகி விட வேண்டுமா? மாமல்லரையும் அவருடைய இன்பக் காதலையும் தான் வெறுத்து விட வேண்டுமா? இவ்விதம் சிவகாமி எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது வீதியில் வாத்திய முழக்கங்களும், ஜயகோஷங்களும், ஜனங்களின் கோலாகலத்வனிகளும் கலந்த ஆரவாரம் கேட்டது.

ஏற்கெனவே ஆயனர் மூலமாகச் சக்கரவர்த்தியின் பட்டணப் பிரவேச ஊர்வலத்தைப் பற்றிச் சிவகாமி தெரிந்து கொண்டிருந்தாள். அதைப் பார்க்க வேண்டுமென்று அவளுக்கு மிக்க ஆவலாயிருந்தது. "அக்கா! நாமும் பலகணியருகில் போய் ஊர்வலத்தைப் பார்க்கலாம்!" என்றாள். "உனக்கும் எனக்கும் பட்டணப் பிரவேசமும் ஊர்வலமும் என்ன வேண்டிக் கிடக்கிறது? பேசாமலிரு!" என்றாள் கமலி. கண்ணனை இழந்ததனால் மனம் கசந்து போய்க் கமலி அப்படிப் பேசுகிறாள் என்று சிவகாமி நினைத்தாள். "என்ன அப்படிச் சொல்கிறாய், அக்கா! சக்கரவர்த்தி என்னுடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காக எத்தனை பாடுபட்டார்? அவருடைய விஜயோற்சவத்தை நகரத்து மக்கள் எல்லாம் கொண்டாடும் போது நாம் மட்டும்..."

கமலி குறுக்கிட்டு, "நீயுமாச்சு, உன் சபதமும் ஆச்சு, உன் சக்கரவர்த்தியும் ஆச்சு! அடி பைத்தியமே உனக்கு மானம், ரோஷம் ஒன்றுமில்லையா? வாதாபியிலேயே எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வந்தாயா?" என்றாள். கமலி இப்படிப் பேசியது சிவகாமிக்குச் சிறிதும் விளங்காமல் மேலும் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று. கமலி மேலும், "அடி தங்காய்! நீயும் மாமல்லரும் கல்யாணம் செய்து கொண்டு தங்க ரதத்தில் நவரத்தினக் குடையின் கீழ் உட்கார்ந்து ஊர்வலம் வர, உன் அண்ணன் ரதம் ஓட்டும் காட்சியைக் கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேனே! அது நிராசையாகிப் போய் விட்டதே!" என்று கண்ணில் நீர் ததும்பக் கூறிய போது, அவள் கண்ணன் மரணத்தை எண்ணித்தான் இப்படி மனங்கசந்து பேசுகிறாள் என்று சிவகாமி மௌனமாயிருந்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஊர்வலம் அருகிலே வந்து விட்டதாகத் தோன்றியதும் சிவகாமி தனது ஆவலை அடக்க முடியாதவளாய் எழுந்து பலகணியை நோக்கிச் சென்றாள்; கமலியும் அவளைத் தொடர்ந்து போனாள். வீதி வழியே வந்த சக்கரவர்த்தியின் பட்டணப் பிரவேச ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. ஊர்வலத்தின் முன்னணியில் ஜய பேரிகைகளை முதுகில் சுமந்து சென்ற பிரும்மாண்டமான ரிஷபங்களும், அலங்கார யானைகளும் குதிரைகளும், ஒட்டகங்களும் அவற்றின் பின்னால் பலவகை வாத்திய கோஷ்டிகளும், கொடிகளும், விருதுகளை தாங்கிய வீரர்களும் போவதற்கு ஒரு நாழிகைக்கு மேல் ஆயிற்று. பிறகு அரபு நாட்டிலேயிருந்து வந்த அழகிய வெண்புரவிகள் பூட்டிய சக்கரவர்த்தியின் தங்கரதம் காணப்பட்டதும் வீதியின் இருபுறத்து மாளிகை மாடங்களிலிருந்தும் குடிமக்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். மங்களகரமான மஞ்சள் அரிசியும் நெல்லும் பொரியும் தூவினார்கள். இனிய மணம் பொருந்திய சந்தனக் குழம்பை வாரித் தெளித்தார்கள். "வாதாபி கொண்ட மாமல்ல சக்கரவர்த்தி வாழ்க! வீராதி வீரர் நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" என்பன போன்ற எத்தனையோ விதவிதமான ஜயகோஷங்கள் வானத்தை எட்டும்படி பதினாயிரம் குரல்களிலே எழுந்தன.

சக்கரவர்த்தியின் ரதம் அருகில் வந்து விட்டது என்று அறிந்ததும் சிவகாமியின் இருதயம் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தங்க ரதத்திலே பூட்டிய அழகிய வெண் புரவிகளையே சற்று நேரம் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு மிக்க பிரயத்தனத்துடன் கண்களைத் திருப்பி அந்தத் தங்க ரதத்திலே அமைந்திருந்த ரத்தின சிம்மாசனத்தை நோக்கினாள். ஆகா! இது என்ன? சக்கரவர்த்திக்கு அருகிலே அவருடன் சரியாசனத்திலே வீற்றிருக்கும் அந்தப் பெண்ணரசி யார்? சிவகாமியின் தலை சுழன்றது! பலகணி வழியாக வீதியிலே தெரிந்த வீடுகள் எல்லாம் சுழன்றன; தங்க ரதம் சுழன்றது; அதற்கு முன்னும் பின்னும் வந்த யானை, குதிரை, பரிவாரங்கள் எல்லாம் சுழன்றன; கூட்டமாக வந்த ஜனங்களும் சுழன்றார்கள்.

சிவகாமி சுவரைக் கையினால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மறுபடியும் நன்றாகப் பார்த்தாள். உண்மைதான்; அவளுடைய கண் அவளை ஏமாற்றவில்லை. மாமல்லருக்குப் பக்கத்திலே ஒரு பெண்ணரசிதான் உட்கார்ந்திருக்கிறாள். ஆஹா! எத்தகைய அழகி அவள்! முகத்திலேதான் என்ன களை! ரதியோ, இந்திராணியோ, அல்லது மகாலக்ஷ்மியேதானோ என்றல்லவா தோன்றுகிறது! "அவள் யார், அக்கா? சக்கரவர்த்தியின் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவள்?" என்ற வார்த்தைகள் சிவகாமியின் அடித் தொண்டையிலிருந்து கம்மிய குரலில் வெளிவந்தன. "இது என்ன கேள்வி? அவள்தான் பாண்டியகுமாரி; மாமல்லரின் பட்டமகிஷி. வேறு யார் அவர் பக்கத்திலே உட்காருவார்கள்?" என்றாள் கமலி.

"அக்கா! அவருக்குக் கலியாணம் ஆகிவிட்டதா? எப்போது?" என்ற சிவகாமியின் கேள்வியில் எல்லையில்லாத ஆச்சரியமும் ஆசாபங்கமும் மனக் குழப்பமும் கலந்து தொனித்தன. "அடி பாவி! உனக்குத் தெரியாதா என்ன? யாரும் சொல்லவில்லையா? உனக்கு எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்தேன்! மாமல்லருக்குக் கலியாணம் ஆகி வருஷம் ஒன்பது ஆயிற்றே? அந்தச் சதிகார மகேந்திர பல்லவன், மகனுக்குக் கலியாணத்தைப் பண்ணி விட்டுத்தானே கண்ணை மூடினான்!" என்றாள் கமலி. "அவரை ஏன் திட்டுகிறாய், கமலி! நல்லதைத்தான் செய்தார் மகேந்திரர். இப்போதுதான் எனக்கு உண்மை தெரிகிறது; என்னுடைய அறிவீனமும் தெரிகிறது!" என்று சிவகாமியின் உதடுகள் முணுமுணுத்தன. "என்னடி உளறுகிறாய்? மகேந்திரர் நல்லதைச் செய்தாரா? குடிகெடுக்க அஞ்சாத வஞ்சகராயிற்றே அவர்?" என்றாள் கமலி.

சிறிது நேரம் வரையில் சிவகாமி கண்ணைக் கொட்டாமல் இராஜ தம்பதிகளைப் பார்த்தவண்ணம் நின்றாள். தங்க ரதம் மேலே சென்றது, அடுத்தாற்போல் பட்டத்து யானை வந்தது. அதன் மேல் அமர்ந்திருந்த குழந்தைகளைப் பார்த்து "இவர்கள் யார்?" என்றாள் சிவகாமி. "வேறு யார்? பல்லவ குலம் தழைக்கப் பிறந்த பாக்கியசாலிகள்தான். மாமல்லருக்கும் பாண்டிய குமாரிக்கும் பிறந்த குழந்தைகள். மகனுடைய பெயர் மகேந்திரன்; மகளின் பெயர் குந்தவி, இதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?" சிவகாமி மேலே ஒன்றும் பேசவில்லை. அவளுடைய உள்ளம் "ஆகா! அப்படியானால் பல்லவ குலத்தின் சந்ததியைப் பற்றிக் கவலையில்லை!" என்று எண்ணியது. அதே சமயத்தில் அவளுடைய இருதயத்தில் ஏதோ ஒரு நரம்பு 'படார்' என்று அறுபட்டது.

பட்டத்து யானைக்கு பின்னால் இன்னொரு யானை வந்தது. அதன் அம்பாரியில் புவனமகாதேவியும் மங்கையர்க்கரசியும் இருந்தார்கள். "இராஜ மாதாவுக்கு அருகில் உள்ள பெண்ணைப் பார்த்தாயா, சிவகாமி! அவளுக்கு அடித்த குருட்டு யோகத்தை என்னவென்று சொல்லட்டும்? பழைய சோழ குலத்தைச் சேர்ந்தவளாம்; மங்கையர்க்கரசி என்று பெயராம். நெடுமாற பாண்டியனை இந்த அதிருஷ்டக்காரி மணந்து கொள்ளப் போகிறாளாம். எப்படியும் இராஜ குலத்திலே பிறந்தால் அந்த மாதிரி வேறேதான்!" என்று சொல்லி வந்த கமலி, சிவகாமி அங்கேயிருந்து நகர்ந்து செல்வதைப் பார்த்து, "அடியே! ஏன் போகிறாய்?" என்றாள். உண்மையில் கமலி கடைசியாகச் சொன்னது ஒன்றும் சிவகாமியின் காதில் விழவில்லை. பட்டத்து யானை மீதிருந்த குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த யானை நகர்ந்ததும் பலகணியின் பக்கத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாள். வீட்டு முற்றத்தின் ஓரத்தில் உட்கார்ந்து வெகு நேரம் வரை சித்தப்பிரமை கொண்டவள் போலச் சிலையாகச் சமைந்திருந்தாள்.

ஊர்வலம் முழுதும் போன பிறகு கமலி அவளிடம் வந்து சேர்ந்தாள். "அடி பெண்ணே, ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? ஒரு குரல் அழுது தொலையேன்! சக்கரவர்த்தியைக் காதலித்ததனால் என்ன? அழுவதற்குக் கூடவா உனக்குப் பாத்தியதை இல்லாமற் போயிற்று?" என்று கேட்டாள். சிவகாமிக்கு எங்கிருந்தோ திடீரென்று அழுகை வந்தது! வறண்டிருந்த கண்களில் கண்ணீர் வெள்ளமாகப் பெருகத் தொடங்கிற்று. கமலியின் மடியில் குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். ஒரு நாழிகை நேரம் அழுத பிறகு விம்மல் நின்றது கண்ணீரும் ஓய்ந்தது. சிவகாமியின் இருதயத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கி விட்டது போலத் தோன்றியது. இதற்கு முன் அவள் என்றும் அறியாத அமைதியும் சாந்தமும் உள்ளத்திலே குடிகொண்டன.



ஐம்பதாம் அத்தியாயம்
தலைவன் தாள்

அன்று மாலை ஆயனரிடம் சிவகாமி தனியாக வந்து, "அப்பா நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா? அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றாள். ஆயனருக்கு அகம் நிறைந்த மகிழ்ச்சியினால் மூச்சு நின்று விடும் போலிருந்தது. சிவகாமியை உற்று நோக்கி அவளுடைய முக மலர்ச்சியையும் பார்த்து விட்டு, "அதற்கென்ன, குழந்தாய்! கூடிய விரைவில் உனக்குத் தக்க நாயகனைத் தீர்மானித்து, மணம் செய்து வைக்கிறேன்!" என்றார். அப்பா! எனக்கு நாயகனைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தைத் தங்களுக்கு நான் வைக்கவில்லை. ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!" என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்.

அச்சமயம் திருநாவுக்கரசர் பெருமான் அருகில் உள்ள ஒரு சிவஸ்தலத்திலேதான் இருக்கிறார் என்று அறிந்து அவரிடம் சென்று ஆயனர் யோசனை கேட்டார். வாகீசர் எல்லாவற்றையும் கேட்ட பின்னர், "ஆயனரே! உமது குமாரியின் விஷயத்தில் என் மனத்தில் தோன்றியது உண்மையாய்ப் போய் விட்டது. மானிடப் பெண் யாரும் அடைந்திருக்க முடியாத துன்பங்களை அவள் அடைந்து விட்டாள். இனி அவளுக்கு அத்தனை துன்பங்களுக்கும் இணையான பேரின்பம் காத்திருக்கிறது. உம்முடைய குமாரிக்குச் சிவகாமி என்று பெயர் இட்டீர் அல்லவா? அதற்கேற்ப அவள் சிவபெருமானிடமே காதல் கொண்டு விட்டாள். அவளுடைய விருப்பத்துக்கு இடையூறு செய்யாமல் நிறைவேற்றி வையுங்கள். அதுதான் சிவகாமிக்கு நீர் செய்யக்கூடிய பேருதவி!" என்று அருளினார்.

திங்கள் மூன்று சென்ற பிறகு, வாதாபி வெற்றியின் கோலாகலக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு முடிந்த பிறகு, ஒரு நல்ல நாளில் ஏகாம்பரநாதரின் சந்நிதிக்கு ஆயனரும், சிவகாமியும் இன்னும் சிலரும் வந்து சேர்ந்தார்கள். கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள்.

சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்" என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள். சிவகாமி ஆடத் தொடங்கியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சந்நிதியில் ஜனங்கள் சேரத் தொடங்கினார்கள். நடனத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் மெய்மறந்து பரவசமடைந்து பக்தி வெள்ளத்தில் மிதந்தார்கள். அச்சமயம் யாரும் எதிர்பாரா வண்ணமாக, மாமல்ல சக்கரவர்த்தியும் அவ்விடம் வந்து சேர்ந்தார். முன்னொரு தடவை இதே பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த போது சிவகாமி மாமல்லரின் வரவை அறிந்து அவருடைய நினைவாகவே அபிநயம் செய்ததுண்டு.

இப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை. அவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும் ஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும் அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை; வேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை. மாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம் தாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன அபிநயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி போலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும் அவருக்கு நினைவு வந்தன. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.

கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று

 

 

 

.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home