கல்கியின் பொன்னியின் செல்வன்  
 kalkiyin ponniyin celvan
மூன்றாம் பாகம் - கொலை வாள்  
 
					
						
						பதினொன்றாம் அத்தியாயம் - கொல்லுப்பட்டறை  பன்னிரண்டாம் அத்தியாயம் - "தீயிலே தள்ளு!"  பதின்மூன்றாம் அத்தியாயம் - விஷ பாணம்  பதினான்காம் அத்தியாயம் - பறக்கும் குதிரை  பதினைந்தாம் அத்தியாயம் - காலாமுகர்கள்  பதினாறாம் அத்தியாயம் - மதுராந்தகத் தேவர்  பதினேழாம் அத்தியாயம் - திருநாரையூர் நம்பி  பதினெட்டாம் அத்தியாயம் - நிமித்தக்காரன்  பத்தொன்பதாம் அத்தியாயம் - சமயசஞ்சீவி  இருபதாம் அத்தியாயம் - தாயும் மகனும்  
					 
 
பதினொன்றாம் அத்தியாயம்  கொல்லுப்பட்டறை 
  வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக 
வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம் 
இருந்தபடியால் யாரையும் வழிகூடக் கேளாமல் உத்தேசமாகத் திசை பார்த்துக் கொண்டு 
சென்றான். முதலில் கொஞ்ச தூரம் காட்டுப் பாதை வழியே சென்றான். குதிரை இதனால் 
மிகவும் கஷ்டப்பட்டுப் போனதை அறிந்தான். வல்லவரையனுக்கும் களைப்பு அதிகமாகவே 
இருந்தது. அவன் சிறிது நேரமாவது அயர்ந்து தூங்கிப் பல தினங்கள் ஆகிவிட்டன. 
அவ்வப்போது கண்ணை மூடிக்கொண்டு ஆடி விழுந்ததைத் தவிர நிம்மதியாக ஓரிடத்தில் 
படுத்துத் தூங்கினோம் என்பது கிடையாது. பழையாறைக்குப் போய் இளவரசியிடம் செய்தியைச் 
சொல்லிவிட்டால், அப்புறம் அவனுடைய பொறுப்புத் தீர்ந்தது; நிம்மதியாகத் தூங்கலாம். 
வெகு நேரம் தூங்கலாம்; ஏன், சென்று போன தினங்களுக்கும் சேர்த்து நாள் கணக்கில் 
தூங்க வேண்டும் என்று திட்டமிட்டான். 
  இளவரசி குந்தவையிடம், "தாங்கள் கூறிய 
பணியை நிறைவேற்றிவிட்டேன்" என்று சொல்லும்போது தனக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை 
அவன் எண்ணிப் பார்த்தான். தேவியின் முகம் அதைக்கேட்டு எவ்வண்ணம் மலர்ந்து பொலியும் 
என்பதையும் நினைத்தான். அந்த நினைவு அவனுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது. 
  இன்னொரு விஷயமும் அவனுக்கு நினைவு வந்தது. காஞ்சியிலிருந்து 
புறப்பட்டதிலிருந்து எத்தனை பொய்யும் புனை சுருட்டும் அவன் சொல்லியிருக்கிறான்? 
அவசியம் நேரிட்டதனால்தான் கூறினான். ஆயினும் அதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு 
உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம் 
பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறிப் போயிருந்தது. இராஜரீக காரியங்களில் 
ஈடுபடுகிறவர்களுக்குச் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று அவன் 
கருதியிருந்தான். அத்தகைய இராஜரீக தந்திரங்களின் மூலமாக அவனுடைய முன்னோர்கள் 
இழந்துவிட்ட ராஜ்யத்தைத் திரும்பிப் பெறலாம் என்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. அந்த 
எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும், சத்திய 
தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே 
உண்டாகிவிட்டது. அவரைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு மந்திரவாதியின் காது கேட்க 
நேற்றிரவு அவன் கூறிய பொய்யையும் எண்ணிக் கொண்டான். அதனால் ஏதாவது விபரீதம் நேராமல் 
இருக்க வேண்டுமே என்று நினைத்தபோது அவன் நெஞ்சு துணுக்கமுற்றது. அதை வேறு யாராவது 
கேட்டிருந்தால்? ஒருவேளை குந்தவை தேவியிடமே யாரேனும் சொல்லி வைத்தால்? இளைய 
பிராட்டி நம்பிவிட மாட்டாள்! ஆயினும் எவ்வளவு பெரிய ஆபத்து? 
  இனி, 
இவ்வாறெல்லாம் இல்லாததைப் புனைந்து கூறுவதையே விட்டுவிடவேண்டும். உண்மையைச் சொல்ல 
வேண்டும்; அதனால் கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டும். அந்த வீர வைஷ்ணவனைப் 
போன்றவர்களும், ரவிதாசனைப் போன்றவர்களும் ஒற்றர் வேலை செய்யட்டும். நமக்கு 
என்னத்திற்கு அந்தத் தொல்லை? வாளின் துணை கொண்டு நமக்குக் கிடைக்கும் வெற்றி 
கிடைக்கட்டும். அதுவே போதும், அதனால் யிரை இழந்தாலும் சரிதான். தந்திர 
மந்திரங்களையெல்லாம் இனிவிட்டுவிட வேண்டியதுதான். 
  இவ்வாறு எண்ணமிட்டுக் 
கொண்டே சென்றதில் குதிரையின் வேகம் தடைப்பட்டதை அவன் சிறிது நேரம் கவனிக்க வில்லை. 
ஏன், குதிரை மீதிலிருந்து சிந்தனை செய்து கொண்டே போனதில் கொஞ்சம் கண்ணயர்ந்தும் 
விட்டான். குதிரை ஓரிடத்தில் தடுமாறிக் குனிந்தபோது அவன் திடுக்கிட்டு 
விழித்துக்கொண்டான். குதிரை தனது முன்னங்கால் ஒன்றைத் தரையில் ஊன்றி வைக்க 
முடியாமல் தத்தளித்தது தெரிந்தது. உடனே கீழே இறங்கினான், குதிரையைத் தட்டிக் 
கொடுத்து விட்டு ஊனமடைந்ததாகத் தோன்றிய முன்னங்காலை எடுத்துப் பார்த்தான். அதன் 
அடிப்புறத்தில் ஒரு சிறிய கூறிய கல் பொத்துக்கொண்டிருந்தது. அதை லாவகமாக எடுத்து 
எறிந்தான். நல்லவளை; பெரிய காயம் ஒன்றும் படவில்லை. மறுபடியும் குதிரையைத் தட்டிக் 
கொடுத்து உற்சாகப்படுத்தி விட்டு அதன் முதுகின்மீது ஏறிக் கொண்டான். கப்பலில் அரபு 
நாட்டார் பேசிக் கொண்டது நினைவு வந்தது: 
  "தமிழ் நாட்டார் கொடூரமானவர்கள்; 
அறிவும் இல்லாதவர்கள்! குதிரைகளின் குளம்புக்குக் கவசம் அடிக்காமல் வெறுங்காலினால் 
ஓடச் செய்கிறார்கள். அப்படி ஓடும் குதிரைகள் எத்தனை நாள் உயிரோடிருக்கும்?" 
  இதை நினைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரையை ஓட்டினான். வீரர்கள் 
போர்களத்துக்குப் போகும்போது மார்பிலே கவசம் தரிப்பார்கள். குதிரைக் குளம்புக்கு 
இரும்புக் கவசம் போடுவது அதிசயமான காரியந்தான். ஆயினும் அம்மாதிரி வேறு தேசங்களில் 
செய்வதுண்டு என்று முன்னமே கேள்விப்பட்டிருந்தான். முதன்முதலாக எதிர்ப்படும் 
கொல்லுப்பட்டறையில் இதைப்பற்றிக் கேட்க வேண்டியதுதான். முடியுமானால் இந்தக் 
குதிரையின் குளம்புக்கே கவசம் அடித்துப் பார்க்கலாம். இல்லாவிடில், இது பழையாறை வரை 
போய்ச் சேர்வதே கடினம். நடுவில் இது விழுந்துவிட்டால் வேறு குதிரை சம்பாதிக்க 
வேண்டும். எப்படிச் சம்பாதிப்பது? யாரிடமாவது திருடத்தான் வேண்டும்! சீச்சீ! அந்த 
நினைவே வந்தியத்தேவனுக்கு வெட்கத்தை உண்டாக்கியது. 
  காட்டுப் பாதையிலிருந்து 
உத்தேசமாகக் குதிரையைத் திசை மாற்றிவிட்டுக் கொண்டு போய் வந்தியத்தேவன் 
இராஜபாட்டையை அடைந்தான். வந்தது வரட்டும்; இனிமேல் இராஜபாட்டை வழியாகத் தான் 
போகவேண்டும். தன்னைத் தெரிந்தவர்கள் யாரும் இந்தப் பக்கத்தில் இருக்க முடியாது. 
பழுவேட்டரையர் பரிவாரங்கள் பின்னாலேதான் வரும். மந்திரவாதியும் அப்படித்தான். 
ஆகையால் அபாயம் ஒன்றுமில்லை. மேலும், இராஜபாட்டையோடு போனால் கொல்லுப் பட்டறை 
எங்கேயாவது இருக்கும். அதில் குதிரைக் குளம்புக்கு இரும்புக்கவசம் போட முடியுமா 
என்று பார்க்கலாம். 
  வந்தியத்தேவன் எதிர்பார்த்து வீண் போகவில்லை. சிறிது 
தூரம் சென்றதும், ஒரு கிராமம் தென்பட்டது. கிராமத்தில் ஏதோ ஒருவிதக் கிளர்ச்சி 
ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஒரு பக்கத்தில் வீதிகளிலும், வீடுகளிலும் தோரணங்கள் 
கட்டி அலங்கரித்திருந்தார்கள். ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இந்தப் பக்கமாய் 
வரப்போகிறார் என்று அறிந்து இப்படி ஊரை அலங்காரம் செய்திருக்கலாம். 
பழுவேட்டரையரும், அவர் பரிவாரமும் வருவதற்குள் தான் வெகுதூரம் போய்விடலாம் என்பது 
நிச்சயம். 
  மற்றொரு பக்கத்தில் கிராமத்து ஜனங்கள் - ஸ்திரீகள், புருஷர்கள், 
வயோதிகர்கள், சிறுவர் சிறுமிகள் அனைவரும் அங்கங்கே கும்பல் கும்பலாக நின்று 
கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவாயிருக்குமென்று அவனால் ஊகிக்க 
முடியவில்லை. அவர்களில் சிலர் குதிரையில் வருகிறவனைக் கண்டதும் அவனை நிறுத்தும் 
எண்ணத்தோடு அருகில் வந்தார்கள். வந்தியத்தேவன் அதற்கு இடங்கொடாமல் குதிரையைத் தட்டி 
விட்டுக் கொண்டு மேலே போனான். வீண் வம்புகளில் அகப்பட்டுக் கொள்ள அவன் 
இஷ்டப்படவில்லை. 
  கிராமத்தைத் தாண்டியதும் சாலை ஓரத்தில் கொல்லுப் பட்டறை 
ஒன்று இருக்கக் கண்டான். அதைக் கடந்து மேலே செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. குதிரையை 
நிறுத்திவிட்டுப் பட்டறைக்குள் சென்றான். 
  பட்டறைக்குள் கொல்லன் ஒருவன் வேலை 
செய்து கொண்டிருக்கக் கண்டான். ஒரு சிறுவன் துருத்து ஊதிக் கொண்டிருந்தான். 
வந்தியத்தேவன் உள்ளே பிரவேசித்த அதே சமயத்தில் இன்னொரு மனிதன் பின்பக்கமாக 
மறைந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இதிலெல்லாம் அவன் கவனம் செல்லவில்லை. 
கொல்லன் கையில் வைத்துக் கொண்டிருந்த வாள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே 
கவர்ந்தது. அது ஓர் அபூர்வமான வாள். பட்டறையில் வைத்துக் கொல்லன் அதைச் 
செப்பனிட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அதன் ஒரு பகுதி பளபளவென்று வெள்ளியைப் 
போலப் பிரகாசித்தது. இன்னொரு பகுதி நெருப்பிலிருந்து அப்போது தான் 
எடுக்கப்பட்டிருந்த படியால் தங்க நிறச் செந்தழல் பிழம்பைப்போல் ஜொலித்தது. "வாள் 
என்றால் இதுவல்லவா வாள்!" என்று வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் எண்ணி வியந்தான். 
 பக்க 
தலைப்பு  
  
					
 பன்னிரண்டாம் அத்தியாயம்  "தீயிலே தள்ளு!" 
  கொல்லன் சிறிது நேரம் தன் வேலையிலேயே கவனமாயிருந்தான். வந்தியத்தேவன் 
					இரண்டு மூன்று தடவை கனைத்த பிறகு நிமிர்ந்து பார்த்தான். 
  "யார், அப்பனே, நீ! உனக்கு என்ன செய்ய வேண்டும்? வாள், வேல் ஏதாவது 
					வேண்டுமா? வாளுக்கும் வேலுக்குந்தான் இப்போதெல்லாம் 
					தேவையில்லாமல் போய்விட்டதே? நீ வாளுக்கு எங்கே வந்திருக்கப் 
					போகிறாய்?" என்றான் கொல்லன். 
  "என்ன ஐயா, இவ்வாறு 
					சொல்கிறீர்? உம்முடைய கையில் வாளை வைத்து வேலை செய்து கொண்டே 
					வாளுக்குத் தேவையில்லையென்கிறீரே?" என்றான் வந்தியத்தேவன். 
  
					"இது ஏதோ அபூர்வமாக வந்த வேலை; பழைய வாளைச் செப்பனிடுவதற்காகக் 
					கொண்டு வந்தார்கள். சில வருஷங்களுக்கு முன்னால் பாண்டிய 
					நாட்டுப் போரும், வட பெண்ணைப் போரும் நடந்து கொண்டிருந்தபோது 
					இந்தப் பட்டறையில் மலை மலையாக வேலும் வாளும் குவிந்திருக்கும். 
					இலங்கை யுத்தம் ஆரம்பமான புதிதில் கூட ஆயுதங்களுக்குக் 
					கிராக்கியிருந்தது. இப்போது வாளையும் வேலையும் கேட்பாரில்லை. 
					பழைய வாள்களையும் வேல்களையும், என்னிடம் கொண்டு வந்து 
					விற்பதற்காக வருகிறார்கள். நீ கூட அதற்காகத் தான் ஒரு வேளை 
					வந்தாயா என்ன?" 
  "இல்லை, இல்லை! இன்னும் சில காலத்துக்கு எனக்கு வாள் 
					தேவையாயிருக்கிறது.ஒப்புக் கொண்ட வேலையை முடித்து விட்டால், 
					அப்புறம் கையில் தாளத்தை எடுத்துக் கொண்டு தேவாரம் 
					பாடிக்கொண்டு சிவ ஸ்தலயாத்திரை புறப்படுவேன். அப்போது 
					வேணுமானால் என் ஆயுதங்களை உம்மிடமே கொண்டு வந்து கொடுத்து 
					விடுகிறேன்." 
  "பின்னே, இப்போது எதற்காக என்னைத் தேடி வந்தாய்?" 
  "என்னுடைய 
					குதிரையைக் காட்டிலும் மேட்டிலும் விட்டுக் கொண்டு வந்தேன். 
					இன்னும் வெகுதூரம் போயாக வேண்டும். குதிரைகளின் கால் 
					குளம்புக்கு இரும்புக் கவசம் போடுவதாமே! அது உம்மால் 
					முடியுமா?" 
  "ஆம், அரேபியா தேசத்தில் அப்படித்தான் 
					வழக்கம். இங்கேயும் சிலர் இப்போது குதிரைக் குளம்புக்கு 
					இரும்பு லாடம் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்கும் 
					கொஞ்சம் அந்த வேலையில் பழக்கம் உண்டு." 
  "என் குதிரைக்கு லாடம் போட்டுத் தருவீரா?" 
  "அதற்கு நேரம் அதிகம் 
					பிடிக்கும். கையில் உள்ள வேலையை முடித்துவிட்டுத் தான் உன் 
					வேலையை எடுத்துக் கொள்ள முடியும்." 
  வந்தியத்தேவன் 
					யோசித்தான், அவனுக்கும் களைப்பாயிருந்தது. குதிரையும் 
					கஷ்டப்பட்டுப் போயிருந்தது. சிறிது நேரம் காத்திருந்து, அதன் 
					குளம்புகளுக்குக் கவசம் போட்டுக் கொண்டே போவது என்று முடிவு 
					செய்தான். 
  "கைவேலை முடியும் வரையில் காத்திருக்கிறேன், அப்புறமாவது உடனே செய்து 
					தருவீர் அல்லவா?" 
  "அதற்கென்ன, ஆகட்டும்!" 
  
					வந்தியத்தேவன் சற்றுநேரம் கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட 
					வாளையே பார்த்துக் கொண்டிருந்தான். 
  "இந்த வாள் 
					அபூர்வமான வேலைப்பாடு அமைந்ததாயிருக்கிறதே? இராஜகுலத்து வாள் 
					மாதிரி அல்லவா இருக்கிறது? இது யாருடைய வாள்?" என்றான். 
  
					"அப்பனே! இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் அரிச்சந்திர நதி என்று 
					ஓர் ஆறு ஓடுகிறது." 
  "நானும் கேள்விப்பட்டிருந்தேன். 
					அதனால் என்ன?" 
  "நான் அரிச்சந்திர நதிக்குச் சென்று 
					அடிக்கடி தலை முழுகி வருவது வழக்கம்." 
  "மிக்க நல்ல 
					காரியம். போகும் இடத்துக்குப் புண்ணியம்." 
  "ஆகையால் 
					கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும், பொய் 
					சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன்." 
  
					"அதற்கு என்ன ஆட்சேபம்? உம்மை யார் பொய் சொல்லச் சொன்னது? நான் 
					சொல்ல்வில்லையே?" 
  "நீ என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் 
					கேள்வி கேட்காமலிருந்தால், நானும் பொய் சொல்லாமலிருக்கலாம்!" 
  
					"ஓஹோ! அப்படியா சமாசாரம்?" என்று வந்தியத்தேவன் மனத்திற்குள் 
					எண்ணிக் கொண்டான். 
  "நான் கேள்வியும் கேட்கவில்லை. நீர் 
					விரத பங்கமும் செய்ய வேண்டாம்.கைவேலையைச் சீக்கிரம் 
					முடித்துவிட்டு, என் வேலையை எடுத்துக்கொண்டு செய்து கொடுத்தால் 
					போதும்!" 
  கொல்லன் மௌனமாகத் தன் வேலையில் கவனம் 
					செலுத்தினான். 
  வந்தியத்தேவன் வாளைச் சிறிது நேரம் 
					உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அடிப்பகுதியில், 
					பிடியின் பக்கத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைப் 
					பார்த்து வியந்தான். மீன் உருவம் எதற்காக? அதற்கு ஏதேனும் 
					பொருள் உண்டா? வெறும் அலங்காரத்துக்குத்தானா? 
  கொல்லன் 
					அந்த மீன் உருவம் உள்ள இடத்தை மறுபடியும் தீயில் காட்டிக் 
					காய்ச்சி அதன் பேரில் சுத்தியால் அடித்தான் மீன் உருவம் 
					தெரியாமல் மறைப்பதுதான் அவனுடைய நோக்கம் என்று தோன்றியது. 
					எதற்காக இக்காரியம் என்று வல்லவரையன் யோசனை செய்தான். யோசனை 
					செய்து கொண்டிருக்கும் போதே, அவன் கண்கள் சுழலத் தொடங்கின. பல 
					நாளாக அவனால் விரட்டியடிக்கப்பட்டு வந்த நித்திராதேவி இப்போது 
					தன் மோக மாயவலையை அவன் பேரில் பலமாக வீச ஆரம்பித்தாள். 
					வந்தியத்தேவன் அதிலிருந்து தப்ப முடியவில்லை. சிறிது நேரம் 
					உட்கார்ந்தபடியே ஆடி விழுந்தான். பிறகு அப்படியே கொல்லன் 
					உலைக்குப் பக்கத்தில், படுத்துத் தூங்கிப் போனான். 
  
					தூக்கத்தில் வல்லவரையன் பல பயங்கரக் கனவுகள் கண்டான். 
					கத்தியைப் பற்றியே ஒரு கனவு. ஒருவன் வந்து கொல்லனிடம் 
					கத்தியைத் திரும்பக் கேட்டான், கொல்லன் கொடுத்தான். "என்ன கூலி 
					வேண்டும்?" என்று அவன் கேட்டான். "கூலி ஒன்றும் வேண்டாம். 
					பழுவூர் இளையராணிக்கு நான் அளிக்கும் காணிக்கையாயிருக்கட்டும்" 
					என்றான் கொல்லன். 
  "ஜாக்கிரதை! இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக, பழுவூர் 
					இளைய ராணியின் பெயரைச் சொல்லவே சொல்லாதே! சொன்னால் என்ன 
					செய்வோம் தெரியுமா?..." 
  "நான் எதற்காக ஐயா, பழுவூர் ராணியின் பெயரைச் சொல்லப் போகிறேன்? 
					ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்." 
  "இதோ இங்கே யாரோ ஒரு 
					வாலிபன் படுத்திருக்கிறானே! சப்தம் போட்டுப் பேசுகிறாயே?" 
  
					"அவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறான். இடிஇடித்தாலும் 
					அவனுக்குக் காது கேட்காது." 
  "ஒருவேளை அவனுக்குத் தெரிந்து விட்டது என்று தோன்றினால் இந்த உலைக் 
					களத்தின் நெருப்பில் அவனைத் தூக்கிப் போட்டு வேலை 
					தீர்த்துவிடு!" 
  இந்தச் சம்பாஷணையின் முடிவில் 
					கொல்லனும், கத்திக்கும் உடையனும் வந்தியத்தேவனை இழுத்துப் போய் 
					உலைக் களத்தில் போடப் போவதாக வந்தியத்தேவன் கனவு கண்டான். 
					பிறகு அந்தக் கனவு மாறியது. 
  வந்தியத்தேவனை யம தூதர்கள் 
					நரகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யம தர்மராஜன் பூலோகத்தில் 
					வந்தியத்தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தான். "பொய் 
					சொல்வதில் இவன் நிபுணன். எத்தனை பொய்தான் சொல்லியிருக்கிறான் 
					என்பதற்கு அளவே கிடையாது" என்றான் சித்திரகுப்தன் கையிலிருந்த 
					ஓலையைப் பார்த்துவிட்டு. 
  "இல்லை, இல்லை! எல்லாம் சக்கரவர்த்தி குடும்பத்தாரின் சேவையிலேதான் 
					சொன்னேன். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்காகச் சில 
					பொய்களைச் சொன்னேன்." 
  "எதற்காகச் சொல்லியிருந்தாலும் பொய் பொய்தான். தள்ளுங்கள் இவனை நரகத்தின் 
					பெரிய நெருப்புக் குழியில்!" என்றான் யமன். உடனே நரகத்தின் 
					உட்புறத்திலிருந்து நூறாயிரம் குரல்கள் பயங்கரமாக ஊளையிட்டன. 
  
					யம தூதர்கள் அவனை அழைத்துப் போனார்கள். பயங்கரமாகக் கொழுந்து 
					விட்டெரிந்த பெரு நெருப்பில் அவனைத் தள்ளுவதற்கு ஆயத்தம் 
					செய்தார்கள். அந்த யம தூதர்கள் இருவரையும் பார்த்தார், 
					முகங்கள் பழுவேட்டரையர்களின் முகங்களைப் போலிருந்தன. அதைப் 
					பற்றி அவன் திடுக்கிட்டு நிற்கையில் குந்தவைதேவி அங்கே 
					வந்தாள். "என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே அவர் பொய் 
					சொன்னார். ஆகையால், அவருக்குப் பதிலாக என்னை நெருப்பில் 
					போடுங்கள்!" என்று கூறினாள். 
  இந்தச் சமயத்தில் நந்தினி 
					தேவியும் அங்கு எப்படியோ வந்து சேர்ந்தாள். "இரண்டு பேரையுமே 
					சேர்த்து நெருப்பிலே போட்டு விடுங்கள்!" என்றாள் அந்தப் 
					புண்ணியவதி. யம தூதர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து 
					நெருப்பில் தள்ளப் போனார்கள். "ஐயோ வேண்டாம்" என்று 
					வந்தியத்தேவன் அலறிக் கொண்டு திமிறினான்; கண் விழித்து எழுந்து 
					உட்கார்ந்தான். கண்டது கனவு என்ற எண்ணம் ஆறுதல் கொடுத்தது. 
					ஆனால் எல்லாம் உண்மையாக நடந்தது போலவே தோன்றிய படியால் அவன் 
					உடம்பு இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. 
  சேச்சே! 
					இனிமேல் எக்காரணத்திற்காகவும் பொய் சொல்லக்கூடாது என்று 
					தீர்மானித்துக் கொண்டான். 
  "ரொம்பநேரம் தூங்கிப்போய் 
					விட்டேனா!" என்று கொல்லனைப் பார்த்துக் கேட்டான். 
  
					"அப்படி ரொம்ப நேரம் ஆகிவிடவில்லை, இரண்டு ஜாமந்தான். அப்பனே! 
					நீ கும்பகர்ணன் வம்சத்தில் வந்தவனோ? பட்டப்பகலில் இப்படித் 
					தூங்குகிறாயே? இரவிலே எப்படித் தூங்கமாட்டாய்?" என்றான் 
					கொல்லன். 
  "கடவுளே! இரண்டு ஜாம நேரமா தூங்கி விட்டேன்? 
					குதிரைக் குளம்புக்குக் கவசம் செய்தாகி விட்டதா?" 
  
					"இனிமேல்தான் செய்யவேண்டும். ஆனால் உன்னைப் போன்ற தூங்கு 
					மூஞ்சிக்கு அதனால் என்ன பயன்? நீ குதிரையையே பறிகொடுத்து 
					விடுவாய்! இன்னும் உன்னையே கூடப் பறிகொடுத்து விடுவாய்!" 
  
					வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்தில் ஒரு 
					சந்தேகம் உதித்தது. எழுந்து ஓடிப் போய் வாசற் பக்கம் 
					பார்த்தான். குதிரையை நிறுத்திய இடத்தில் அதைக் காணோம்! 
  
					"ஐயோ! குதிரை எங்கே?" என்று இரைச்சல் போட்டுக் கொண்டே 
					உடைவாளின் பிடியில் கை வைத்தான். பயப்படாதே! உன் குதிரை 
					பத்திரமாயிருக்கிறது. கொல்லைப்புறத்தில் போய்ப் பார்!" 
  
					வந்தியத்தேவன் கொல்லைப்புறம் சென்று பார்த்தான். அங்கே மூன்று 
					பக்கம் அடைக்கப்பட்ட கீத்துக் கொட்டகையில் அவனுடைய குதிரை 
					நின்று கொண்டிருந்தது. கொல்லன் உலைக்களம் ஊதிய சிறுபிள்ளை அதன் 
					வாயில் புல் கொடுத்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனைப் 
					பார்த்ததும் குதிரை உடலைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது. 
  
					"ஐயா! இங்கே வந்து கொஞ்சம் உங்கள் குதிரையைப் பார்த்துக் 
					கொள்ளுங்கள். இதன் குளம்புகளுக்கு அளவு எடுக்க வேண்டும்!" 
					என்றான் பையன். 
  வந்தியத்தேவன் குதிரை அருகில் சென்று 
					அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றான். பையன் குதிரையின் 
					குளம்புக்கு அளவு எடுத்தான். 
  "இதை யார் இங்கே கொண்டு 
					வந்து கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். 
  
					"நான்தான் கட்டினேன்." 
  "எதற்காக?" 
  "அப்பா கட்டச் சொன்னார்." 
  "அது எதற்காக?" 
  இந்த ஊர் 
					வழியாகச் சற்று முன்னால் பெரிய பழுவேட்டரையரும், அவர் 
					பரிவாரங்களும் போனார்கள். குதிரையை வாசலில் பார்த்திருந்தால் 
					கட்டாயம் கொண்டு போயிருப்பார்கள். 
  வந்தியத்தேவனுக்குப் பழைய ஞாபகம் - திரு நாராயணபுரத்து ஞாபகம் - வந்தது. 
					தான் செய்த தவறை எண்ணி வெட்கம் அடைந்தான். கொல்லனிடமும், அவன் 
					மகனிடமும் மனத்திற்குள் நன்றி உணர்ச்சி கொண்டான். குதிரையின் 
					குளம்புக்கு அளவு எடுத்துக் கொண்டதும் இருவரும் உலைக் 
					களத்துக்குள் வந்தார்கள். 
  கொல்லன் இரும்புத்துண்டை 
					எடுத்துக் குளம்பைப் போல் வளைத்து வேலை செய்யத் தொடங்கினான். 
  "என் குதிரையைக் காப்பாற்றிக் கொடுத்தீரே? அதற்காக மிக்க வந்தனம்" என்றான் 
					வல்லவரையன். 
  "என்னைத் தேடி வருகிறவர்களுடைய உடைமையை 
					நான் காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமல்லவா? அது என் கடமை." 
  
					"பழுவேட்டரையர் பரிவாரம் இந்தப் பக்கம் போய் எத்தனை நேரம் 
					இருக்கும்?" 
  "இரண்டு நாழிகைக்கு மேலேயிருக்கும். 
					அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கும் நீ தூங்கிக் கொண்டிருந்தாயே, அதை 
					நினைத்தால்தான் எனக்கு வியப்பாக இருக்கிறது." 
  
					"நான்தான் தூங்கிப் போய் விட்டேன். இத்தனை நேரம் நீர் வீணாக்கி 
					விட்டீரே? அவர்கள் போன பிற்பாடாவது வேலையை உடனே 
					ஆரம்பித்திருக்கலாமே?" 
  "எப்படி ஆரம்பிப்பது? அவர்கள் 
					கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பிறகு, யாருக்கு வேலை செய்ய மனம் 
					வரும்? உனக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இதை நான் 
					செய்கிறேன். எங்கிருந்து அப்பனே நீ வருகிறாய்?" 
  அவர்கள் கொண்டு வந்த செய்தி என்ன வாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டே 
					வந்தியத்தேவன், "இலங்கையிலிருந்து வருகிறேன்" என்றான். 
  
					கொல்லன் அவனுடைய முகத்தை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு குரலைத் 
					தாழ்த்திக்கொண்டு, "இலங்கையில் இருந்தபோது இளவரசர் 
					அருள்மொழிவர்மரைப் பார்த்தாயா?" என்றான். 
  உண்மையே 
					சொல்லுவதென்று சற்றுமுன் சங்கல்பம் செய்து கொண்டிருக்க 
					வந்தியத்தேவன், "பார்த்தேன்" என்றான். 
  "கடைசியாக அவரை 
					நீ எப்போது பார்த்தாய்?" 
  "இன்று காலையில் பார்த்தேன்." 
  
					கொல்லன் வந்தியத்தேவனைக் கோபமாய் நோக்கினான். 
  "விளையாடுகிறாயா தம்பி?" 
  "இல்லை ஐயா! உண்மையைத்தான் சொன்னேன்." 
  "இளவரசர் இப்போது எங்கேயிருக்கிறார் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே?" 
  "ஓ! கேட்டால் சொல்லுவேன்!" 
  "இளவரசர் எங்கே இருக்கிறார், சொல் 
					பார்க்கலாம்." 
  "நாகைப்பட்டினம், சூடாமணி விஹாரத்தில் 
					இருக்கிறார்!" 
  "அப்பனே நானும் எத்தனையோ பொய்யர்களைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல் 
					கட்டுக்கதை புனைந்துரைக்கக் கூடியவர்களைப் பார்த்ததேயில்லை." 
  
					வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். புனைந்து 
					கூறும் பொய்யை நம்புவதற்கு எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள். 
					உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். இது நமது ஜாதக 
					விசேஷம் போலும்! 
  "தம்பி! நீ இலங்கையிலிருந்து எப்போது 
					புறப்பட்டாய்?" 
  "நாலு நாளைக்கு முன்னால்!" 
  
					"அதனாலே தான் உனக்குச் செய்தி தெரியவில்லை." 
  "என்ன 
					செய்தி ஐயா?" 
  "பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு 
					விட்டது என்ற செய்திதான்!" 
  வந்தியத்தேவன் 
					கஷ்டப்பட்டுத் திடுக்கிடுவது போல் பாசாங்கு செய்தான். 
  
					"ஐயோ, அப்படியா! யார் சொன்னார்கள்?" 
  "நேற்று முதலாவது இங்கெல்லாம் அப்படிப் பேச்சாயிருந்தது. இன்றைக்குப் 
					பழுவேட்டரையர் இவ்வழியாகப் போனபோது ஊர்த்தலைவர்கள் அவரைக் 
					கேட்டார்கள். அந்தச் செய்தி உண்மைதான் என்று பழுவேட்டரையர் 
					கூறினார். அந்தச் சண்டாளப் பாவியின் தலையில் இடி விழவில்லையே!" 
  
					"ஏன் அந்தக் கிழவரை வைகிறாய்?" 
  "அவராலேதான் இது 
					நடந்திருக்கிறது. ஏதோ சூழ்ச்சி செய்து இளவரசரை அவரே கடலில் 
					மூழ்க அடித்து விட்டார் என்று ஊரார் சொல்கிறார்கள். அதனால் 
					அவருக்காக ஏற்பாடு செய்திருந்த உபசாரங்களையும் 
					நிறுத்திவிட்டார்கள்." 
  "இளவரசர் மீது இந்த ஊராருக்கு 
					அவ்வளவு பிரியமா?" 
  "கேட்க வேண்டுமா? ஊர் மக்கள் அவ்வளவு பேரும் இப்போது கண்ணீரும் 
					கம்பலையுமாயிருக்கிறார்கள். இந்த ஊரார் மட்டும் என்ன? சோழநாடு 
					முழுவதும் ஒலமிட்டு அழப் போகிறது. பழுவேட்டரையர்களைச் சபிக்கப் 
					போகிறது. ஏற்கெனவே, சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கிறார். 
					இந்தச் செய்தி கேட்டு என்ன பாடு பாடுவாரோ, தெரியாது. இன்னும் 
					என்னவெல்லாம் விபரீதங்கள் நடக்குமோ? சில நாளாக வானத்தில் தூம 
					கேது தோன்றி வருகிறதே? அதற்கு ஏதேனும் நடந்துதானே 
					தீரவேண்டும்?" 
  நடக்ககூடிய விபரீதங்கள் என்னவாயிருக்கக் 
					கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணிப் பார்த்தான் தான் கூறியதை 
					இந்தக் கொல்லன் நம்பாமலிருந்ததே நல்லதாய்ப் போயிற்று. தான் 
					இனிமேல் பொய் சொல்லாவிட்டாலும், இளவரசரைப் பற்றிய உண்மையைச் 
					சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இளையபிராட்டி ஏதோ முக்கிய 
					காரணத்திற்காகத்தானே அவரைச் சூடாமணி விஹாரத்தில் இருக்கச் 
					சொல்லியிருக்கிறார்! இளவரசியைக் கண்டு பேசிய பிறகு, அவர் 
					சொல்லும் யோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். 
  "தம்பி! 
					என்ன யோசிக்கிறாய்?" என்றான் கொல்லன். 
  "நடுக்கடலில் சுழற்காற்றில் நானும் அகப்பட்டுக் கொண்டேன். கடவுள் அருளால் 
					நான் தப்பிப் பிழைத்ததை நினைத்துப் பார்த்துக் கடவுளுக்கு 
					நன்றி செலுத்துகிறேன்." 
  "கடவுள் அருள் என்பது ஒன்று இருக்கிறதா, என்ன?" 
  "பெரியவரே! அது 
					என்ன அப்படிச் சொல்கிறீர்?" 
  "கடவுள் அருள் என்பதாக 
					ஒன்று இருந்தால் பழுவேட்டரையர்களின் அக்கிரமங்கள் இன்னும் 
					நடந்து கொண்டிருக்குமா! பொன்னியின் செல்வர் கடலில் 
					மூழ்கியிருப்பாரா?" 
  "பெரியவரே! பழுவேட்டரையர் 
					அதிகாரத்தில் உள்ளவர்கள். அவர்களைப் பற்றி இப்படியெல்லாம் 
					பேசலாமா? யார் காதிலாவது விழுந்தால்? கொஞ்சம் 
					ஜாக்கிரதையாயிருங்கள்." 
  "என்னைவிட நீதான் 
					ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நானாவது விழித்துக் 
					கொண்டிருக்கும் போது பேசுகிறேன்.நீ தூக்கத்தில் உளறுகிறாய்!" 
  
					"ஐயையோ? என்ன உளறினேன்?" பழுவேட்டரையர்களை யம தூதர்கள் என்று 
					சொன்னாய். பழுவூர் இளைய ராணியைப் பெண் பேய் என்று சொன்னாய். நீ 
					சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால் என்னைத் தவிர வேறு யார் 
					காதிலாவது விழுந்தால் உன்கதி என்ன? நீ அப்படிப் பிதற்றிக் 
					கொண்டிருக்கிற சமயத்திலேதான் அந்தச் சாலை வழியாகப் 
					பழுவேட்டரையர்களின் பரிவாரங்கள் போயின. எனக்கு ரொம்பத் 
					திகிலாய்ப் போய்விட்டது." 
  "நீர் என்ன செய்தீர்?" 
  "வாசற் பக்கம் போய் நின்று இந்த உலைக் 
					களத்தின் கதவையும் சாத்திக் கொண்டேன். அதற்கு முன்னால் உன் 
					குதிரையைக் கொல்லைப்புறம் கொண்டு போய்க் கட்டியாயிற்று." 
  
					"தூக்கத்தில் நான் இன்னும் ஏதாவது உளறினேனா?" 
  
					"உளறலுக்குக் குறைவேயில்லை." 
  "ஐயோ! என்ன உளறினேன்?" 
  
					"நீ இளவரசரைப் பழையாறைக்கு வரும்படி வற்புறுத்தினாய். அவர் 
					பழுவேட்டரையர் கட்டளைப்படி சிறைப்படுவேன் என்றார். இன்னும் 
					என்னவெல்லாமோ சொன்னாய். தம்பி! பழையாறை இளைய பிராட்டியைக் 
					குறித்துக் கூட ஏதேதோ சொன்னாய். ஜாக்கிரதை, அப்பனே! 
					ஜாக்கிரதை!" 
  வந்தியத்தேவன் வெட்கித் தலை குனிந்தான். 
					இளையிராட்டியைக் குறித்து அனுசிதமாக ஏதாவது பேசி விட்டோமோ 
					என்று பீதி அடைந்தான் இனிமேல் தூங்குவதாயிருந்தால் தனி அறையில் 
					கதவைத் தாளிட்டுக் கொண்டு தூங்க வேண்டும். அல்லது மனித 
					சஞ்சாரம் இல்லாத காட்டிலோ, பாலைவனத்திலோ, மலைக் குகையிலோ தூங்க 
					வேண்டும். 
  "தம்பி! சுழற் காற்றில் நீ எப்படி 
					அகப்பட்டுக் கொண்டாய்? எப்படிப் தப்பிப் பிழைத்தாய்?" 
  
					"நான் ஏறி வந்த கப்பல் இடி விழுந்து கடலில் முழுகி விட்டது. 
					முறிந்த பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் மிதந்தேன். 
					பிறகு ஓடக்காரப் பெண் ஒருத்தியின் உதவியால் தப்பிக் 
					கரையேறினேன்." 
  "இளவரசரும் ஒருவேளை அவ்விதம் தப்பிப் பிழைத்திருக்கலாம் அல்லவா?" 
  "கடவுள் சித்தமாயிருந்தால் தப்பிப் பிழைத்திருக்கலாம்." 
  "நேற்றிரவு 
					நீ எங்கே தங்கினாய்?" 
  "கோடிக்கரையிலேதான் 
					கடற்கரையோரத்தில் பழுவேட்டரையர் பரிவாரங்கள் ஒரே 
					கூட்டமாயிருந்தன. ஆகையால் குழகர் கோவிலில் சிறிது நேரம் 
					படுத்துத் தூங்கினேன். பொழுது விடிவதற்குள் புறப்பட்டு 
					விட்டேன்." 
  "அதனால்தான் உனக்கு இளவரசர் பற்றிய செய்தி 
					தெரியவில்லை போலிருக்கிறது." 
  "நீர் 
					தெரியப்படுத்தியதற்காக வந்தனம், ஐயா! நான் பழையாறைக்குக் கூடிய 
					சீக்கிரம் போக வேண்டும் பழுவேட்டரையரின் பரிவாரத்திடம் 
					சிக்காமல் போக வேண்டும். எந்த வழியாகப் போவது நல்லது?" 
  
					"பழுவேட்டரையர் தஞ்சாவூர் இராஜபாட்டையில் போகிறார். நீ 
					முல்லையாற்றங் கரையோடு போனால் பழையாறையை அடையலாம்." 
  
					"நீங்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே குதிரைக் குளம்புக்குக் கவசம் 
					அடித்துக் கொடுத்தால் நல்லது." 
  "இதோ!" என்றான் கொல்லன். வளைத்துக் காய்ச்சியிருந்த இரும்பைச் சுத்தியினால் 
					அடிக்கத் தொடங்கினான். 
  "இது பெரிய பழுவேட்டரையருக்கு! 
					இது சின்னப் பழுவேட்டரையருக்கு! இந்த அடி சம்புவரையருக்கு! இது 
					மழவரையருக்கு!" என்று சொல்லிக் கொண்டே அடித்தான். இதிலிருந்து 
					அந்தச் சிற்றரசர்கள் பேரில் நாட்டு மக்கள் எவ்வளவு கோபம் 
					கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருவாறு வந்தியத்தேவன் தெரிந்து 
					கொண்டான். 
  குதிரைக் குளம்புக்கு லாடம் அடித்து முடிந்தது. செய்து கொடுத்த வேலைக்காகக் 
					கொல்லனுக்குக் காசு தர வந்தியத்தேவன் யத்தனித்தான். கொல்லன் 
					அதைப் பேற்றுக் கொள்வதற்கு மறுத்து விட்டான். 
  'நீ நல்ல 
					பிள்ளை என்பதற்காகச் செய்து கொடுத்தேன். காசுக்காகச் செய்து 
					தரவில்லை" என்றான். 
  வந்தியத்தேவன் மறுபடியும் 
					கொல்லனுக்கு நன்றி கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டு 
					புறப்பட்டான். புறப்படும் சமயத்தில் கொல்லன், "தம்பி! 
					பழையாறைக்கு நீ எதற்காகப் போகிறாய்?" என்று கேட்டான். 
  
					"ஐயா! நீங்கள் என்னை அதைப் பற்றி ஒன்றும் கேட்காமலிருந்தால், 
					நான் பொய்சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது" என்றான் வல்லவரையன். 
					கொல்லன் சிரித்துவிட்டு, "அப்பனே! நீ துரிதமாகக் கெட்டிக்காரன் 
					ஆகி வருகிறாய்! தூங்குகிறபோதும் இவ்வளவு ஜக்கிரதையாயிரு!" 
					என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பினான். 
  
					வந்தியத்தேவன் மறுபடியும் பிரயாணம் தொடங்கிய போது சூரியன் 
					அஸ்தமிக்கும் நேரமாகி விட்டது.சிறிது நேரதுக்கெல்லாம் அந்தி 
					மயங்கி இருள் சூழ்ந்து வந்தது. இதற்குள் முல்லையாற்றங்கரையை 
					வல்லவரையன் பிடித்து விட்டான். அதற்கு மேல் ஆற்றங்கரையோடு போக 
					வேண்டியதுதான். வழி விசாரிக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது. 
  முன்னிருட்டு வேளைதான். ஆனால் வானத்தில் ஆயிரங்கோடி நட்சத்திரங்கள் 
					ஒளிச்சுடர்களாக விளங்கின. முல்லை நதியின் கரைகளில் மரங்கள் 
					அதிகம் இல்லை. சிறிய சிறிய புதர்கள்தான் இருந்தன. ஆகையால் வழி 
					கண்டு பிடித்துப் போவதற்கு வேண்டிய வௌிச்சம் விண்மீன்கள் 
					தந்தன. 
  வானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களோடு 
					போட்டியிடுவது போல ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் நதிக் 
					கரைப்புதர்களைச் சுற்றி வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. 
  
					வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பியது. அதற்குப் பல 
					காரணங்கள் இருந்தன. நாடெல்லாம் இளவரசரைப் பற்றிய கவலையில் 
					ஆழ்ந்திருக்கும் போது அவனுக்கு மட்டும் அவர் 
					பத்திரமாயிருக்கிறார் என்ற செய்தி தெரிந்திருந்தது. இளவரசரிடம் 
					சோழ நாட்டு மக்கள் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்பதை 
					ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. மந்திரவாதி ரவிதாஸனை அவன் 
					மறுபடியும் ஏமாற்ற முடிந்ததை நினைக்கக் குதூகலமாயிருந்தது. 
					இதையெல்லாம் விடக் குந்தவை தேவியைச் சீக்கிரத்தில் பார்க்கப் 
					போகிறோம் என்ற எண்ணம் அவனுக்கு எல்லையில்லாத மனக் கிளர்ச்சியை 
					அளித்தது. 
  வெறுமனேயா பார்க்கப் போகிறான்? இளைய 
					பிராட்டி கூறிய காரியத்தைச் செய்து முடித்து விட்டுப் 
					பார்க்கப் போகிறான்! அந்தக் காரியத்துக்கு ஏற்பட்ட 
					தடங்கல்களையெல்லாம் நினைத்து, அவற்றையெல்லாம் தான் எதிர்த்து 
					வெற்றி கொண்டதையும் எண்ணி அவன் பெருமிதம் அடைந்தான். நாளை மாலை 
					இந்த நேரத்துக்குள் இளையபிராட்டியைச் சந்தித்து விடுவோம் 
					என்பதில் சந்தேகமில்லை. ஆகா! அந்தச் சந்திப்பைக் குறித்து 
					எண்ணும்போதே அவனுக்கு மெய்சிலிர்த்தது. 
  நட்சத்திரச் சுடர்களால் விளங்கிய வானமும், மின்மினி பறந்த பூமியும், 
					சலசலவென்ற சப்தத்துடன் ஓடிய முல்லையாற்று வெள்ளமும், மந்த 
					மந்தமாக வந்த குளிர்ப் பூங்காற்றும் வந்தியதேவனைப் பரவசமடையச் 
					செய்தன. வானமும் பூமியும் ஒரே ஆனந்த மயமாக அவனுக்கு அச்சமயம் 
					தோன்றின. பழைய காதல் பாட்டு ஒன்று அவனுக்கு நினைவு வந்தது. 
					தான் வாய்விட்டு உற்சாகமாகப் பாடுவதற்குத் தகுந்த இடந்தான் 
					இது. சுற்றுப்புறமெங்கும் மனித சஞ்சாரமே கிடையாது. ஏன் 
					பட்சிகள் கூடக் கூடுகளிலே சென்று அடங்கிவிட்டன. அவன் 
					பாடுவதற்குத் தடை என்ன இருக்கிறது? இதோ அவன் பாடிய பாட்டு.யாரை 
					மனத்தில் நினைத்து கொண்டு பாடினான் என்று சொல்ல வேண்டியதில்லை 
					அல்லவா? 
  "வானச் சுடர்க ளெல்லாம் 
 மானே உந்தனைக் கண்டு  மேனி சிலிர்க்குதடி-அங்கே  மெய்மறந்து நிற்குதடி! 
  
					
	தேனோ உந்தன் குரல்தான் 
	   தென்றலோஉன் வாய் மொழிகள் 
	மீனொத்த விழி மலர்கள்-கண்டால் 
	   வெறி மயக்கம் தருவதேனோ?" 
 
					 
					வந்தியத்தேவன் இப்படிப் பாடி முடித்தானோ இல்லையோ, அவனுடன் 
					போட்டி போடுவது போலத் தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. 
  
					அதே சமயத்தில் மனிதக் குரலில் கலகலவென்று சிரிக்கும் சத்தம் 
					கேட்டது. வந்தியத்தேவன் சிறிது மிரண்டு சுற்றும் முற்றும் 
					பார்த்தான். அவனுடைய கை உடைவாளில் சென்றது. 
  புன்னைமரம் 
					ஒன்றின் கரிய நிழலிலிருந்து ஓர் உருவம் வௌிப்பட்டது. 
  
					"தம்பி உன் பாட்டு பிரமாதம்! நரிகளின் போட்டி கானம் அதைவிடப் 
					பிரமாதம்!" என்று கூறிவிட்டுத் தேவராளன் மீண்டும் சிரித்தான்.  
					பக்க தலைப்பு  
 
					
 பதின்மூன்றாம் அத்தியாயம்  விஷ பாணம் 
அந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் 
பார்த்ததும், வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் 
தேவராளன் வெறியாட்டம் ஆடியதும், அப்போது அவன் கூறிய மொழிகளும் நினைவுக்கு வந்தன. 
நடுக்கடலில் சுழற்காற்றுக் குமுறிக் கொண்டிருந்த வேளையில் ரவிதாஸனும், தேவராளனும் 
சொன்ன செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை 
என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு மர்மமான பயங்கரமான சதிச் 
செயலில் ஈடுபட்டவர்கள் என்பது நிச்சயம். அவர்களில் ஒருவனிடம் இச்சமயம், அதுவும் 
இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்தான். 
அவனிடமிருந்து தப்பி, குதிரையை வேகமாகத் தட்டி விட்டுக் கொண்டு போய்விடலாமா என்று 
ஒரு கணம் எண்ணினான். அந்த எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான்! தூரத்தில் 
தீயின் வௌிச்சம் தெரிந்தது. அது சுடுகாடாய்த்தான் இருக்கவேண்டும். ஏதோ ஒரு மண்ணுடல் 
தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணுடலில் உயிர் இருந்த காலத்தில் எத்தனை 
எத்தனை ஆசாபாசங்களால் அலைப் புண்டிருக்கும்? எத்தனை இன்ப துன்பங்களை அது 
அநுபவித்திருக்கும்! அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி 
சாம்பல்தான்! உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; 
மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு 
இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே! 
  திகில் வந்தது போலவே 
திடீரென்று விட்டுப் போய் விட்டது. இந்த வேஷ வஞ்சகக்காரனுக்குப் பயந்து எதற்கு ஓட 
வேண்டும்? ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே? 
ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று 
மறைந்து கொண்டவன் இவன் தான் போலும்! அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம். 
அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா? இவனுடன் கொஞ்சம் 
பேச்சுக் கொடுத்தால் புதிய செய்தி ஏதேனும் தெரிய வரக்கூடும். 
  ஆகையால் 
குதிரையை மெதுவாகவே செலுத்தினான் வல்லவரையன். முதன் முதலில் புதிது புதிதாக லாடம் 
அடிக்கப் பெற்ற அந்தக் குதிரையும் நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. 
அதை விரட்டியடிக்க மனம் வரவில்லை. 
  "இங்கே எப்படி அப்பா, திடு திப்பென்று 
வந்து முளைத்தாய்!" என்று கேட்டான் வல்லவரையன். 
  "நான் அல்லவா அந்தக் 
கேள்வியைக் கேட்க வேண்டும்? உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு 
வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய்?" என்றான் தேவராளன். 
  "உனக்கு மட்டும் 
தான் மந்திரம் தெரியும் என்று நினைத்தாயோ? எனக்கும் கொஞ்சம் தெரியும்!" 
  "மந்திரத்தில் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டது பற்றி எனக்கு மகிழ்ச்சி. 
என்னுடைய மந்திர சக்தியினால் நீ இங்கே தனியாகப் போய்க் கொண்டிருப்பாய் என்று நானும் 
அறிந்து கொண்டேன். அதனால்தான் நான் முன்னால் வந்து காத்திருந்தேன்." 
  "ஏன் 
காத்திருந்தாய்? என்னிடம் உனக்கு என்ன காரியம்?" 
  "நீயே யோசித்துப் பார்! 
அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி!" 
  "உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில் 
என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை 
என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த இரசியங்களை நான் மறந்துவிடத் தீர்மானித்து 
விட்டேன். யாரிடமும் சொல்லப் போவதில்லை..." 
  "அதைப்பற்றி நானும் 
கவலைப்படவில்லை. எப்போது நீ அந்த இரகசியங்களை யாரிடமாவது சொல்லலாம் என்று 
நினைக்கிறாயோ அப்போது உன் நாக்கு துண்டிக்கப்படும். நீ ஊமையாவாய்!" 
  வந்தியத்தேவனுக்கு உடல் சிலிர்த்தது. தஞ்சையிலும் இலங்கையிலும் அவன் 
சந்தித்த ஊமைப் பெண்களைப் பற்றிய நினைவு வந்தது. சற்றுத் தூரம் சும்மா நடந்தான். 
இந்தப் பாவி எதற்காக நம்மைத் தொடர்ந்து வருகிறான்? இவனிடமிருந்து தப்பிச் 
செல்வதற்கு என்ன வழி? கோடிக்கரையிலிருந்து போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம் 
இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும்? அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் 
போகலாமா? அதில் பயனில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் கிடையாது. வேறு வழி ஒன்றும் 
இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது உடைவாள். அதை எடுக்க வேண்டியதுதான். 
  "தம்பி, நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது 
கைகூடாது. வீண் முயற்சியில் இறங்காதே!" 
  வந்தியத்தேவன் பேச்சை மாற்ற 
விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்குச் சிறிது சாவகாசம் வேண்டும். அதுவரை 
ஏதேனும் பேச்சுக் கொடுத்து வரவேண்டும். 
  "உன் கூட்டாளி ரவிதாஸன் எங்கே?" 
  தேவராஜன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "அது உனக்கல்லவா 
தெரியவேண்டும்? ரவிதாஸன் எங்கே?" என்று கேட்டான். 
  வந்தியத்தேவன் 
திடுக்கிட்டான். ரவிதாஸனைப் பற்றிய பேச்சைத் தான் எடுத்திருக்கக்கூடாது; எடுத்தது 
தவறு. ரவிதாஸனை இவன் பார்த்துப் பேசிவிட்டு நம்மை ஆழம் பார்க்கிறானா? அல்லது... 
  "என்ன, தம்பி சும்மா இருக்கிறாய்? ரவிதாஸன் எங்கேயென்று சொல்லமாட்டாயா? 
போனால் போகட்டும்! அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலி எங்கே? அதையாவது சொல்!" 
  வந்தியத்தேவன் பாம்பை மிதித்தவன் போல் பதறினான். மேலே பேசுவதற்கே 
அவனுக்குத் தயக்கமாயிருந்தது. 
  "அவளைப்பற்றியும் நீ ஒன்றும் 
சொல்லமாட்டாயாக்கும். போனால் போகட்டும். அவளை நீ காப்பாற்ற நினைப்பதற்குத் தக்க 
காரணம் இருக்கலாம். தம்பி! சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே? அவளை 
நினைத்துப் பாடினாயா?" 
  "இல்லை, சத்தியமாய் இல்லை!" என்று வல்லவரையன் 
பரபரப்போடு கூறினான். 
  "ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு? ஏன் இவ்வளவு 
ஆத்திரம்?" 
  "சரி, சரி! அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போது 
அவகாசம் இல்லை. ஏன் என் குதிரையின் முகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்? 
விட்டுவிடு! நான் போகிறேன், அவசர காரியம் இருக்கிறது." 
  "நான் வந்த 
காரியத்தை நீ இன்னும் கேட்கவில்லையே?" 
  "சொன்னால்தானே கேட்கலாம்?" 
  "இந்த முல்லையாற்றங்கரைக்கு ஓர் அதிசய சக்தி உண்டு. இங்கே யார் எதை 
விரும்புகிறார்களோ, அது உடனே அவர்களுக்குச் சித்திக்கும்." 
  "நான் ஒன்றும் 
விரும்பவில்லையே." 
  "அது பொய்! நீ யாரை நினைத்துக் கொண்டு உன் காதல் 
பாட்டைப் பாடினாயோ அவள் உன்னைப் பார்க்க விரும்புகிறாள்! நீ இஷ்டப்பட்டால் 
பார்க்கலாம்." 
  "எப்போது?" 
  "இன்றிரவே பார்க்கலாம்." 
  "இது 
என்ன கதை?" 
  "கதையல்ல தம்பி! அதோ பார்!" என்று தேவராளன் சுட்டிக்காட்டினான். 
அவர்கள் சென்ற வழியில் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தது. 
வந்தியத்தேவன் உற்றுப் பார்த்தான். அது ஒரு பல்லக்கு - மூடு பல்லக்கு என்று 
அறிந்தான். 
  ஆகா! அந்தப் பல்லக்கு! எங்கே பார்த்திருக்கிறோம்? ஏன், பழுவூர் 
இளையராணியின் பல்லக்கு அல்லவா அது? ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன? 
அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலை அவனால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை. குதிரையை 
அந்தப் பல்லக்கின் அருகில் கொண்டு போய் நிறுத்தினான். பனைச் சித்திரம் போட்ட 
பல்லகில் மூடுகுதிரை தெரிந்தது.திரை அசைவது போலவும் இருந்தது. 
  உடனே 
வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான். அதே கணத்தில் தேவராளன் 
தொண்டையிலிருந்து ஒரு விசித்திரமான சப்தம் வௌிவந்தது. அக்கம் பக்கத்திலிருந்து 
புதர்களின் மறைவிலிருந்து ஏழெட்டுப் பேர் திடும் திடும் என்று எழுந்து பாய்ந்து 
வந்தார்கள் வந்தியத்தேவன் மீது விழுந்தார்கள் அவனால் மீறி அசையவும் முடியாதபடி 
பிடித்துக் கொண்டார்கள். கால்களையும், கைகளையும் துணியினால் கட்டினார்கள். 
கண்ணையும் ஒருவன் கட்டினான் உடைவாளை ஒருவன் பலவந்தமாக எடுத்துக் கொண்டான். பிறகு 
வந்தியத்தேவனை அந்தப் பல்லக்கினுள்ளே தூக்கிப் போட்டார்கள். சிலர் உடனே பல்லக்கைத் 
தூக்கிக் கொண்டு விரைந்து நடந்தார்கள். மற்றவர்கள் முன்னும் பின்னும் சென்றார்கள். 
தேவராளன் முன்னால் வழிகாட்டிக் கொண்டு சென்றான். ஒருவன் குதிரையைப் 
பிடித்துக்கொண்டு நடந்தான். 
  இவ்வளவும் அதிவிரைவில் நடந்து விட்டன. 'கண் 
மூடித் திறக்கும் நேரத்தில்' என்று சொல்வதும் மிகையாகாது. வந்தியத்தேவன் தன்னைப் 
பலர் வந்து ஏககாலத்தில் தாக்கியதும் திகைத்துப் போய்விட்டான். அத்தகைய தாக்குதலை 
அவன் எதிர்பார்க்கவேயில்லை. பல்லக்கில் அவனைத் தூக்கிப் போட்டுப் பல்லக்கு நகர 
ஆரம்பித்தவரையில் அவனால் எதுவும் சிந்திக்கவும் முடியவில்லை. என்ன நடக்கிறதென்று 
தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. 
  ஆனால் பல்லக்கு நகர ஆரம்பித்ததும் சிறிது 
சிறிதாக மனம் தௌிவடைந்தது. கண்ணின் கட்டுச் சுலபமாக நழுவிவிட்டது. கட்டியிருந்த 
கைகளினால் பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு பார்த்தான். நதிக்கரையிலிருந்து 
குறுக்கே இறங்கிப் பல்லக்கு எங்கேயோ போகிறது என்பதை அறிந்து கொண்டான். 
  அவனுடைய கையின் கட்டுக்களையும், காலின் கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு 
விடுதலை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியம் அன்று. பல்லக்கிலிருந்து குதிப்பதும் 
எளிதாகத்தான் இருக்கும். குதிரையோ பின்னால் வந்து கொண்டிருந்தது. அந்த ஏழெட்டுப் 
பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறிச் செல்வதும் அவனுக்கு 
முடியாத காரியமாகாது. அவ்விதம் செய்யலாமா என்று யோசித்தான். ஆனால் ஏதோ ஒன்று 
குறுக்கே நின்று தடை செய்தது. அந்தப் பல்லக்கினுள்ளே ஓர் அபூர்வமான மணம் 
சூழ்ந்திருந்தது. அது முதலில் அவனுக்கே உற்சாகத்தை அளித்தது. அதன் 
கவர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு போக எளிதில் மனம் வரவில்லை. இந்தப் 
பல்லக்குத் தன்னை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறது? நந்தினியிடந்தான் 
சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற 
ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக 
வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை 
விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை? என்னத்துக்காகத்தான் 
அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே? ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து 
கொள்ளலாமே? சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும்? 
மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான். 
தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம். 
அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை 
அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே?... 
  "ஆம்; ஆம்! நந்தினியைப் பார்க்க 
வேண்டும் என்பதற்கு இன்னொரு அவசியமான காரணமும் இருந்தது. 
  இலங்கையில் அவன் 
பார்த்த அந்த ஊமை அரசி! அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எண்ணியது சரியா? அதைத் 
தெரிந்து கொள்ள வேண்டாமா? 
  இவ்விதம் வந்தியத்தேவன் யோசித்துக் 
கொண்டிருக்கும் போதே அவன் தலை சுழன்றது. தூக்கம் வருவது போலத் தோன்றியது. இல்லை, 
இல்லை! இது தூக்கம் இல்லை! பகலிலே தான் அவ்வளவு நேரம் தூங்கியாகி விட்டதே! இது ஏதோ 
மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ! 
இது என்ன பயங்கர அபாயம்! பல்லக்கிலிருந்து குதித்து விட வேண்டியதுதான். 
  வந்தியத்தேவன் கைக்கட்டை அவிழ்த்துக் கொள்ள முயன்றான்; முடியவில்லை, கைகள் 
அசையவேயில்லை. எழுந்து உட்கார முயன்றான்; அதுவும் முடியவில்லை. கால்களை அடித்துக் 
கொள்ளப் பார்த்தான்; கால்களும் அசைய மறுத்தன. அவ்வளவுதான்! கண்ணிமைகள் 
மூடிக்கொண்டன; அறிவு விரைவாக மங்கியது, மயக்கம் அவனை முழுவதும் ஆட்கொண்டது. 
  வந்தியத்தேவன் மயக்கம் தௌிந்து கண் விழித்த போது பழைய நினைவுகள் வந்து 
பல்லக்கிலிருந்து குதிக்க முயன்றான். ஆனால் விந்தை! விந்தை! அவன் இப்போது 
பல்லக்கில் இல்லை! விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால் 
பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது! ஆனால் பழைய மாதிரி 
மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை 
மயக்கிய மணம், இது அறிவைத் தௌிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து 
உட்கார்ந்தான்! சுற்று முற்றும் பார்த்தான். கதவு ஒன்று திறந்திருந்தது. 
வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான். 
  திறந்த கதவின் வழியாக நந்தினி வந்தாள். 
வந்தவளைக் கண்கொட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய வியப்புக்கும், 
திகைப்புக்கும் பல காரணங்கள் இருந்தன. வர்ணனைக் கெட்டாத அவளுடைய சௌந்தரியம் ஒரு 
காரணம். எதிர்பாராத முறையில் அவளைச் சந்திக்கும்படி நேர்ந்தது இன்னொரு 
காரணம்.இலங்கையில் அவன் பார்த்திருந்த மூதாட்டியின் உருவத்தோடு இந்த யுவதியின் 
உருவம் எவ்வளவு ஒத்திருக்கிறது என்ற எண்ணம் மற்றொரு காரணம். உருவங்கள் 
ஒத்திருக்கின்றவா? அல்லது அந்த மூதாட்டி தான் உயரிய ஆடை ஆபரணங்களை அணிந்தபடியினால் 
இப்படித் தோற்றமளிக்கிறாளா? 
  இனிய கிண்கிணி நாதக்குரலில், "ஐயா! நீர் 
மிகவும் நல்லவர்!" என்று கூறினாள் நந்தினி. 
  வந்தியத்தேவன் "வந்தனம்!" 
என்றான். 
  "நல்லவருக்கு அடையாளம் சொல்லாமற் போவதுதானே? தஞ்சை 
அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா!" என்றாள் 
நந்தினி. 
  வந்தியத்தேவன் நகைத்தான். 
  "தஞ்சைக் கோட்டைக்குள் 
வருவதற்கு உமக்கு நான் உதவி செய்தேன். என் கைவிரலிலிருந்து பனை முத்திரை மோதிரத்தை 
எடுத்துக் கொடுத்தேன். அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டாவது போயிருக்க 
வேண்டாமா?" 
  வந்தியத்தேவன் வெட்கித்து மௌனமாக நின்றான். 
  "எங்கே? 
இப்போதாவது அதைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா! அதன் உபயோகம் தீர்ந்து 
போயிருக்குமே? மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே?" என்று 
கூறி, நந்தினி தன் அழகிய மலர்க் கரத்தை நீட்டினாள். 
  "தேவி! அந்த முத்திரை 
மோதிரத்தை இலங்கைத் தளபதி பூதி விக்கிரம கேசரி கைப்பற்றிக் கொண்டு விட்டார். 
ஆகையால் அதைத்திருப்பிக் கொடுக்க இயலவில்லை, மன்னிக்க வேண்டும்" என்றான் 
வந்தியத்தேவன். 
  "என்னுடைய ஜன்ம சத்துருவிடம் நான் உமக்குக் கொடுத்த 
மோதிரத்தைக் கொடுத்து விட்டீர் அல்லவா? மிக்க நன்றியுள்ள மனிதர் நீர்." 
  "நானாகக் கொடுத்து விடவில்லை. பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்." 
  "வாணாதி ராயர் குலத்தில் உதித்த வீராதிவீரர் பலவந்தத்துக்கு உட்பட்டு ஒரு 
காரியம் செய்தீரா? என்னால் நம்பமுடியவில்லை!" 
  "அம்மணி! இங்கே இச்சமயம் நான் 
வந்திருப்பதும் பலவந்தம் காரணமாகத்தானே? தங்களுடைய ஆட்கள்..." 
  "உண்மையாகச் 
சொல்லும், ஐயா! நன்றாய் நினைத்துப் பார்த்துச்சொல்லும்! பலவந்தத்தினால் மட்டும் 
நீர் இங்கே வந்தீரா? இஷ்டப்பட்டு வரவில்லையா? பல்லக்கில் ஏற்றப்பட்ட பிறகு கீழே 
குதித்து ஓடுவதற்கு உமக்குச் சந்தர்ப்பம் இல்லையா?" என்று நந்தினி கேட்ட கேள்விகள் 
கூரிய அம்புகளைப் போல் வந்தியத்தேவன் நெஞ்சைத் துளைத்தன. 
  "ஆம்? 
இஷ்டப்பட்டுத்தான் வந்தேன்" என்றான். 
  "எதற்காக வந்தீர்?" 
  "தாங்கள் 
எதற்காக என்னை அழைத்துவரச் செய்தீர்கள்?" 
  "என் முத்திரை மோதிரத்தைத் 
திருப்பிக்கேட்பதற்காக" 
  "அது மட்டும்தானா?" 
  "இன்னும் ஒரு காரணம் 
இருக்கிறது. என் கணவரின் பாதுகாப்புக்கு உட்பட்ட பொக்கிஷ நிலவறையில் நீர் அன்றிரவு 
இருந்தீர் அல்லவா?" வந்தியத்தேவன் திடுக்கிட்டான். 
  "எனக்குத் தெரியாது 
என்றா எண்ணினீர்? அழகுதான்! எனக்குத் தெரிந்திராவிட்டால் அன்றிரவு நீர் தப்பிச் 
சென்றிருக்க முடியுமா?" 
  "தேவி..." 
  "ஆம்! எனக்குத் தெரியும், பெரிய 
பழுவேட்டரையருக்கும் தெரியும். உம்மை அங்கேயே கொன்று போட்டுவிடும்படி பழுவேட்டரையர் 
சுரங்க வழிக்காவலனுக்குக் கட்டளையிட்டார். அவர் அப்பால் சென்றதும் நான் அந்தக் 
கட்டளையை மாற்றிவிட்டேன் அதனால் நீர் பிழைத்தீர். உம்முடைய அழகான நண்பன் ஆபத்துக்கு 
உள்ளானான். இல்லாவிடில், அந்தப் பொக்கிஷ நிலவறையில் முத்துக் குவியல்களுக்குப் 
பக்கத்தில் உம்முடைய எலும்புகள் இப்போது கிடைக்கும்!" 
  வந்தியத்தேவன் 
வியப்புக்கடலில் மூழ்கினான். அவள் கூறியவையெல்லாம் உண்மையென்று அவனால் 
நம்பமுடியவில்லை. உண்மையில்லாவிட்டால் தான் அன்று அங்கு ஒளிந்திருந்தது எப்படி 
தெரிந்தது? சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி, 
"அம்மணி...!" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். 
  "வேண்டாம்! மனத்தில் இல்லாததை 
வௌியில் எதற்காகச் சொல்லப் பார்க்கிறீர்? எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம்!" 
  "இல்லை தேவி..." 
  "உம்முடைய உயிரை அன்று காப்பாற்றியதைப் பற்றி 
எதற்காகச் சொன்னேன் தெரியுமா? உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச் 
சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான். அங்கே 
இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா?" 
  "மறுபடியும் அந்தப் பக்கம் போகும் உத்தேசமே எனக்கு இல்லை." 
  "அது 
ஏன் இருக்கப் போகிறது? உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே? 
உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே 
எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன். 
அதில் உமக்குத் திருப்திதானே? அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத் 
துரோகமும் உம்முடன் பிறந்ததா?" 
  நந்தினியின் வார்த்தை ஒவ்வொன்றும் 
விஷபாணத்தைப் போல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது. அவன் 
துடிதுடித்து மௌனமாயிருந்தான். 
  "உம்முடன் கோடிக்கரைக்கு வந்த வைத்தியர் 
மகனைத் தான் உமக்குப் பதிலாகப் பிடித்துக் கொடுத்து அனுப்பினீர்; அவன் என்ன ஆனான் 
என்று விசாரித்தீரா?" 
  "தங்களைக் கேட்க எண்ணினேன்." 
  "சொல்கிறேன்; 
ஆனால் உம்முடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன ஆனார்? 
அதைச் சொன்னால் நான் வைத்தியர் மகனைப் பற்றிச் சொல்லுவேன்." 
  வந்தியத்தேவனுக்கு உடம்பை ஒரு உலுக்கி உலுக்கிப் போட்டது. இளவரசரைப் பற்றி 
அறிவதற்காகத்தான் தன்னை இவள் இப்படிப் பாடாய்ப் படுத்தினாளோ என்று தோன்றியது. 
ஏமாந்துபோகக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான். 
  "அரசி! அதைப்பற்றி 
மட்டும் என்னைக் கேட்கவேண்டாம்" என்றான். 
  "ஆம்! அதைப்பற்றி மட்டும் கேட்கக் 
கூடாதுதான்! கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும். 
உம்முடைய காதலி எப்படியிருக்கிறாள்? அதைப்பற்றியாவது எனக்குச் செல்லலாமா?" 
  வந்தியத்தேவனுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. "யாரைச் சொல்லுகிறீர்கள்? 
ஜாக்கிரதை!" என்றான். 
  "ஆகா! நான் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறேன்.அந்தப் 
பழையாறை மகாராணியைச் சொல்வதாக எண்ண வேண்டாம். அவள் உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க 
மாட்டாள். தன் காலில் ஒட்டிய தூசிக்குச் சமானமாக உம்மை மதிப்பாள். உம்மை இலங்கையில் 
கொண்டு சேர்த்துத் திரும்பியும் அழைத்து வந்தாளே, அந்த ஓடக்காரப்பெண்ணைப்பற்றிக் 
கேட்கிறேன்.பூங்குழலி உமது காதலி அல்லவா?" 
  "இல்லை, இல்லவே இல்லை! அவளுடைய 
காதலர்களை அவளே எனக்குக் காட்டினாள். நள்ளிரவில் கோடிக்கரைச் சதுப்பு நிலத்தில் 
கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினாள். அவர்கள்தான் தன்னுடைய 
காதலர்கள் என்று சொன்னாள்." 
  "அவள் பாக்கியசாலி! ஏனெனில் அவளுடைய காதலர்கள் 
ஒளிவடிவம் பெற்றிருக்கிறார்கள். பிரகாசமாகக் கண்முன் தோன்றுகிறார்கள். என்னுடைய 
காதலர்களோ இருள் வடிவமானவர்கள்! உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும் 
மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தி படுத்திருந்ததுண்டா? வௌவால்களும், 
ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில் 
உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா? அம்மாதிரி வடிவங்கள் 
என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன. 
என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன! 
அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன? எங்கே போகின்றன? ஏன் என்னைச் 
சுற்றிச்சுற்றி வட்டமிடுகின்றன? ஐயோ! உமக்குத் தெரியுமா?" - இவ்விதம் கூறிவிட்டு 
நந்தினி வெறிகொண்ட கண்களால் அங்குமிங்கும் பார்த்தாள். 
  வந்தியத்தேவனுடைய 
வயிர நெஞ்சமும் கலங்கிப் போயிற்று. ஒரு பக்கம் இரக்கமும், இன்னொருபக்கம் இன்னதென்று 
தெரியாத பயமும் அவன் மனத்தில் குடிகொண்டன. 
  "தேவி! வேண்டாம்! கொஞ்சம் சாந்தி 
அடையுங்கள்!" என்றான். 
  "என்னைச் சாந்தி அடையும்படி சொல்வதற்கு நீர் யார்?" 
என்று கேட்டாள் நந்தினி. 
  "நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன். தாங்கள் 
யார் தேவி!" 
  "நான் யார் என்றா கேட்கிறீர்? அதுதான் எனக்கும் தெரியவில்லை. 
அதைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா? 
அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா?" 
  "இல்லை, இல்லை! தெய்வ 
லோகத்திலிருந்து தவறி விழுந்த தேவப் பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா? தெய்வ 
சாபத்தினால்..." 
  "ஆம்! தெய்வ சாபம் என் பேரில் ஏதோ இருக்கிறது. அது 
என்னவென்று மட்டும் தெரியவில்லை. நான் யார், எதற்காகப் பிறந்தேன் என்பதை அறிவேன். 
இதுவரையில் ஒரே ஒரு சூசகத்தை மட்டும் தெய்வம் எனக்கு அளித்திருக்கிறது. இதோ 
பாரும்!" என்று கூறி நந்தினி அவள் அருகில் இருந்த வாளை எடுத்துக் காட்டினாள், 
புதிதாகச் செப்பனிடப்பட்ட அந்தக் கூரிய வாள் தீப வௌிச்சத்தில் பளபளவென்று 
ஜொலித்துக் கண்ணைப் பறித்தது. 
  வந்தியத்தேவன் அந்த வாளைப் பார்த்தான். 
பார்த்த உடனே அது கொல்லன் பட்டறையில் தான் பார்த்த வாள் என்பதைத் தெரிந்து 
கொண்டான். இதுவரையில் நந்தினியின் வார்த்தைகளாகிற விஷபாணங்களினால் அவன் 
துடிதுடித்துக் கொண்டிருந்தான். இப்போது இரும்பினால் செய்த வாளாயுதத்தைப் 
பார்த்ததும் அவனுடைய மனம் திடப்பட்டது. ஏனெனில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் 
அவனுக்குப் பழக்கப் பட்டவை.பிறந்தது முதலாவது அவனுடன் உறவு பூண்டவை, ஆகையால் 
பயமில்லை. நந்தினி அந்த வாளைத் தன் பேரில் பிரயோகிப்பதாயிருந்தாலும் பயம் கிடையாது! 
  "தேவி! பார்த்தேன்! வாளைப் பார்த்தேன்.வேலைப்பாடு அமைந்த வாள்! அரச 
குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட 
தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது? அதன் மூலம் தெய்வம் தங்களுக்கு அளித்திருக்கும் 
சூசகந்தான் என்ன?" என்று கேட்டான். 
  
					  
பக்க 
தலைப்பு  
  
					
 பதினான்காம் அத்தியாயம்  பறக்கும் குதிரை 
நந்தினி ஒளிவீசிய அந்த வாளை எடுத்து ஆசையுடன் தன் 
மார்போடு அணைத்துக கொண்டாள். பிறகு முகத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு தன் 
செவ்விதழ்களினால் முத்தமிட்டாள். ஒரு கணம் அக்கினிக் கொழுந்தைச் செந்தாமரை மலர் 
முத்தமிடுவது போலிருந்தது. அடுத்த கணத்தில் இரத்த வர்ண மேகம் பூரண சந்திரனைக் 
குறுக்கே நின்று தடுக்கப் பார்ப்பது போலிருந்தது. நந்தினியின் முகம் அப்போது 
காபாலிகர்கள் பூசித்த இரத்த பலி கேட்கும் காளியின் கோர சௌந்தரிய முகம் போலாயிற்று. 
கத்தியை எடுத்து முன்போல் பக்கத்தில் வைத்ததும் அவளுடைய முகம் பழைய வசீகரத்தை 
அடைந்தது. 
  "ஆம், தெய்வம் எனக்கு அளித்திருக்கும் சூசகம் இந்த வாள். ஆனால், 
அந்தச் சூசகத்தின் பொருள் இன்னதென்பதை நான் இன்னும் அறியவில்லை. இந்த வாளை நான் 
அடிக்கடி கொல்லன் உலைக்கு அனுப்பித் துருநீக்கிப் பதப்படுத்திக் கூராக்கி வைத்துக் 
கொண்டு வருகிறேன். தாய்ப்புலி தான் பெற்ற குட்டிப் புலியைப் பாதுகாப்பதுபோல் இதை 
நான் பாதுகாத்து வருகிறேன். உரிய பிராயம் வருவதற்குள் புலிக்குட்டி நீண்ட கொம்புகள் 
படைத்த காட்டு மாடுகளிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது அல்லவா? அராபிய நாட்டார் 
தங்கள் குதிரையை எவ்வளவு அன்புடன் பேணுகிறார்களோ அப்படி இதை நான் பாதுகாத்து 
வருகிறேன். நோய்ப்பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு வானமாதேவி பணிவிடை செய்வதுபோல் 
நானும் இந்த வாளுக்குச் செய்து வருகிறேன். இதைக் கொண்டு நான் என்ன செய்யவேண்டும் 
என்பதைத் தெய்வம் இன்னும் எனக்கு அறிவிக்கவில்லை. மலர்மாலை தொடுத்துப் பழகிய இந்தக் 
கைகளினால் இந்த வாளை எந்தக் கொடியவனுடைய விஷ நெஞ்சத்திலாவது செலுத்த வேண்டுமென்பது 
தெய்வத்தின் ஆக்ஞையோ அல்லது என்னுடைய மார்பில் என்னுடைய கையினாலேயே இதைச் 
செலுத்திக் குபுகுபுவென்று பெருகும் இரத்தத்தை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்த இந்த 
உடம்பில் பூசிக் கொண்டு நான் சாகவேண்டும் என்பது தெய்வத்தின் சித்தமோ, இன்னும் அது 
எனக்குத் தெரியவில்லை. இந்த வாளை எனக்கு அளித்திருக்கும் தெய்வம், சமயம் வரும்போது 
அதையும் எனக்குத் தெரியப்படுத்தும். அந்தச் சமயம் எப்போது வரும் என்று தெரியாத 
படியால் இரவும், பகலும் எந்த நேரத்திலும் ஆயத்தமாயிருக்கிறேன். ஆம்; அழகிற்குப் 
பெயர்போன பழுவூர் இளைய ராணிக்கு ஆடை ஆபரண, அலங்காரங்களில் மிக்க பிரியம் என்பது 
நாடறிந்த செய்தி. இரவு பகல் அறுபது நாழிகையும் நான் இந்த என் மேனியை அலங்கரித்து 
அழகு படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். பாவம்! பெரிய பழுவேட்டரையர் 
அவருக்காகவும், அவருடைய கௌரவத்தை முன்னிட்டும் நான் இப்படி சதா சர்வகாலமும், 
சர்வாலங்காரத்துடன் விளங்குவதாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்! என் 
நெஞ்சத்தில் கொழுந்துவிட்டெரியும் தீயை அவர் அறியார்!" 
  இதையெல்லாம் பிரமை 
பிடித்தவன் போலக்கேட்டுக் கொண்டிருந்த வல்லவரையன் சுய உணர்ச்சியை வருவித்துக் 
கொண்டு, "அம்மணி! பெரிய பழுவேட்டரையர் எங்கே!" என்று கேட்டான். 
  "ஏன்? 
அந்தக் கிழவரைப் பார்ப்பதற்கு உமக்குப் பயமாயிருக்கிறதா?" என்றாள் நந்தினி. 
  "இல்லை, அம்மணி! தங்களைப் பார்க்கவே நான் பயப்படவில்லையே, பழுவேட்டரையரிடம் 
எனக்கு என்ன பயம்?" என்றான் வந்தியத்தேவன். 
  "ஆகா! உம்மை எனக்குப் 
பிடித்திருப்பதின் காரணம் அதுதான். எதனாலோ, என்னைக்கண்டு எல்லோரும் 
பயப்படுகிறார்கள். வீராதி வீரரும் எத்தனையோ போர்க்களங்களில் போரிட்டு உடம்பில் 
அறுபத்துநாலு புண் சுமந்தவருமான பெரிய பழுவேட்டரையர் என்னைக் கண்டு பயப்படுகிறார். 
சின்னப் பழுவேட்டரையர் - காலனையும் கதிகலங்க அடிக்கக்கூடிய காலாந்தக கண்டர், - 
என்னிடம் வரும்போது பயந்து நடுங்குகிறார். இந்தச் சோழ ராஜ்யத்தை ஏகசக்கராதிபதியாக 
ஆளவிரும்பும் மதுராந்தகத் தேவர் என்னிடம் வரும்போதும் பயபக்தியுடன் வருகிறார். யம 
லோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தர சோழச் சக்கரவர்த்திகூட நான் 
அருகில் சென்றால் நடுங்குகிறார். ஒவ்வொரு தடவை அவர் என்னைக் கண்டு மூர்ச்சையே 
அடைந்து விடுகிறார். இன்றைக்கு வந்தானே பார்த்திபேந்திர பல்லவன்! அவனுடைய அஞ்சா 
நெஞ்சத்தையும், வீரத்தைப் பற்றியும் வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், 
ஆதித்தகரிகாலரின் உயிர்த்தோழன் என்றும் அறிந்திருக்கிறேன்.ஆனால் என் அருகில் வந்த 
அரை நாழிகைக்கெல்லாம் அவன் எப்படி அடங்கி ஒடுங்கிப் போய்விட்டான்! 
ஆதித்தகரிகாலரிடம் உடனே போக வேண்டிய கடமையையும் மறந்து, என்னைத் தொடர்ந்து 
வருகிறான். நான் காலால் இட்ட பணியைத் தலையால் நிறைவேற்றிவைக்க ஆயத்தமாயிருக்கிறான். 
அதே சமயத்தில் என்னருகில் நெருங்கும்போது அவன் நடுங்குகிறான். அதைப் பார்க்கும்போது 
எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சிறு குழந்தையாயிருந்த போது எரியும் நெருப்பைக் 
காண எனக்கு ஆசையாயிருக்கும். நெருப்பின் அருகில் செல்வேன். தீயின் கொழுந்தைத் 
தொடுவதற்கு ஆசையுடன் கை விரலை நீட்டுவேன். ஆனால் அதற்குத் தைரியம் வராது. சட்டென்று 
விரலை எடுத்துக்கொண்டு விடுவேன். இம்மாதிரி எத்தனையோ தடவை செய்திருக்கிறேன், 
பார்த்திபேந்திரன் என் பக்கத்தில் நெருங்கி வருவதையும், பயந்து விலகுவதையும் 
பார்க்கும்போது அந்தப் பழைய ஞாபகம் எனக்கு வந்தது; பல்லவன் மட்டும் என்ன? நீ 
யாருடைய தூதராக ஓலை எடுத்துக்கொண்டு காஞ்சியை விட்டுக் கிளம்பினீரோ, அந்த 
ஆதித்தகரிகாலரும் அப்படித்தான். நாங்கள் குழந்தைகளாயிருந்த நாளிலிருந்து அவருக்கு 
என்பேரில் அளவில்லாத வாஞ்சை; கூடவே ஒரு பயம். அதனால் என் வாழ்க்கை எப்படியெல்லாம் 
மாறி விட்டது! ஐயா! உமது எஜமானரை நீர் மறுபடியும் சந்திக்கும் போது எனக்காக ஒரு 
செய்தி சொல்வீரா? 'சென்றதையெல்லாம் நான் மறந்து விட்டேன். நான் இப்போது அவருக்குப் 
பாட்டி உறவு பூண்ட பழுவூர் ராணி. என்னைப் பார்ப்பதற்குச் சிறிதும் பயப்பட வேண்டாம். 
அவரை நான் கடித்துத்தின்று விழுங்கி விட மாட்டேன்!' என்று சொல்லுவீரா?" 
  "தேவி! நான் உயிரோடு திரும்பிபோய் ஆதித்த கரிகாலரைப் பார்ப்பேன் என்பது 
நிச்சயமில்லை, அப்படிப் பார்த்தால் அவரிடம் நான் சொல்லுவதற்கு எத்தனையோ செய்திகள் 
இருக்கின்றன. தங்களுடைய செய்தியைச் சொல்லுவதாக என்னால் உறுதி கூற முடியாது. தயவு 
செய்து மன்னிக்க வேணும்!" 
  "ஆம்! நான் பார்த்திருப்பவர்களுக்குள்ளே நீர் 
ஒருவர்தான் தைரியசாலி. மனத்தில் உள்ளதை ஒளியாமல் பேசுகிறீர். ஆகையால்தான் உம்மை 
எனக்குப் பிடித்திருக்கிறது. வாணர்குல வீரரே! நான் அதிகம் பேரைப் பார்ப்பது 
கிடையாது. பழையாறை இளைய பிராட்டியைப் போல் ரதத்தில் ஏறிப் பிரயாணம் செய்வதில்லை. 
எங்கேயாவது போகவேண்டி நேர்ந்தால் மூடுபல்லக்கில் போகிறேன். எனக்கு யார் மூலமாகவாவது 
ஏதேனும் காரியம் ஆகவேண்டியிருந்தால் அவர்களை மட்டுந்தான் பார்க்கிறேன்.அவர்கள் 
பெரும்பாலும் கோழைகளாயிருக்கிறார்கள். மனத்தில் உள்ளதைச் சொல்வதற்குத் துணிவதில்லை. 
நீர் மனத்தில் தோன்றுவதை ஒளிக்காமல் சொல்கிறீர்..." 
  "ஒளிப்பதில் பயனில்லை 
என்று நான் அறிந்திருக்கிறேன், ராணி! தங்களுடைய கண்கள் ஊடுருவிச் சென்று அறிய 
முடியாத இரகசியம் எந்த மனிதனுடைய நெஞ்சிலும் இருக்க முடியாது!" 
  "அது 
உண்மையாக இருக்கலாம். ஆனால் உம்முடைய நெஞ்சில் உள்ளதைத்தான் நான் இன்னும் அறிந்து 
கொள்ள முடியவில்லை. போனால் போகட்டும், பழுவேட்டரையரைப் பற்றிக் கேட்டீர். என் 
கணவரும், பார்த்திபேந்திரனும் பரிவாரங்களுடன் பக்கத்துக் கிராமத்துக்குச் 
சென்றிருக்கிறார்கள். அங்ே கண்ணகிக் கூத்தும், வேலனாட்டமும் நடைபெறுகின்றன. சின்ன 
இளவரசரைப் பற்றி வெறியாட்டக்காரனிடம் ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று 
பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள், பைத்தியக்காரர்கள்! யாரைக் கேட்க வேண்டுமோ 
அவரைப் பிடித்துக் கேட்காமல் ஜோசியக்காரனிடம் சென்றிருக்கிறார்கள். திரும்பி 
வருவதற்கு வெகுநேரம் ஆகும். ஆகையால் உம்மை நான் அழைத்துவரச் செய்தேன். ஐயா! 
மறுபடியும் கேட்கிறேன். இளவரசரைப் பற்றிய உண்மை உமக்குத் தெரியும் அல்லவா? அதை நீர் 
எனக்குச் சொல்லமாட்டீர் அல்லவா?" 
  "இல்லை தேவி! சொல்வதற்கில்லை! இனிமேல் 
எந்தக் காரியத்திற்கும் புனைந்துரைப்பதில்லையென்றும், உண்மையே சொல்வதென்றும் 
இன்றைக்குத்தான் தீர்மானம் செய்து கொண்டேன். ஆகையால் இளவரசரைப் பற்றிச் சொல்ல 
முடியாது. சற்று முன்னால் கூட என் தீர்மானத்தை மறந்து விட்டேன். மன்னிக்க வேணும்!" 
என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் தன்னுடைய இடைக் கச்சின் சுருளை அவிழ்த்து 
அதற்குள்ளேயிருந்த பனை இலச்சினை மோதிரத்தை எடுத்தான். 
  "அம்மணி! இதோ தாங்கள் 
அளித்த பனை முத்திரை மோதிரம். இலங்கையில் பூதிவிக்கிரம கேசரியின் ஆட்கள் இதை 
என்னிடமிருந்து பலவந்தமாகக் கவர்ந்து கொண்டது உண்மைதான். ஆனால் சேனாதிபதி 
திருப்பிக் கொடுத்து விட்டார். இதோ தங்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்; பெற்றுக் 
கொண்டு அருள் புரியவேணும்!" என்று கூறி முத்திரை மோதிரத்தை நீட்டினான். 
  நந்தினி அதை உற்றுப்பார்த்துத் தான் கொடுத்த முத்திரை மோதிரம் அதுதான் 
என்று தெரிந்து கொண்டாள். "ஐயா! நான் கொடுத்ததை திரும்பி வாங்கிக்கொள்ளும் 
வழக்கமில்லை. உம்முடைய நேர்மையைச் சோதித்து அறிவதற்காகவே கேட்டேன். சோதனையில் நீர் 
தேறி விட்டீர். என்னுடைய ஆட்களைக் கொண்டு உம்மைச் சோதனை போடும் படியான அவசியத்தை 
எனக்கு ஏற்படுத்தவில்லை. மோதிரத்தை என்னுடைய ஞாபகத்துக்காக நீரே வைத்துக் 
கொள்ளலாம்!" என்றாள். 
  "அம்மணி! யோசித்துச் சொல்லுங்கள். இது 
என்னிடமிருந்தால் மீண்டும் அவசியம் நேரும்போது உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்..." 
  "அதைப்பற்றிக் கவலை இல்லை. எப்படி வேணுமானாலும் உபயோகப்படுத்திக் 
கொள்ளலாம். உம்மை இப்போது மறுபடியும் கண்ணைக் கட்டிப் பல்லக்கிலே ஏற்றிக்கொண்டு 
போகச்சொல்லப் போகிறேன். உம்மைப்பிடித்த இடத்திலேயே திரும்பவிட்டு விடுவார்கள்...." 
  "நான் அதற்கு மறுத்தால்?" 
  "இந்த பாழடைந்த அரண்மனையிலிருந்தும் 
கோட்டையிலிருந்தும் உம்மால் திரும்பிப் போக முடியாது. திரும்பத்திரும்பப் புறப்பட 
இடத்துக்குத்தான் வந்து கொண்டிருப்பீர். 
  "தேவி! இந்தக் கோட்டை? இந்தப் 
பாழடைந்த அரண்மனை?...' 
  "ஆம்; ஒரு காலத்தில் இந்தச் சோழநாடு பல்லவர் 
ஆட்சியில் வெகுகாலம் இருந்தது. அப்போது பல்லவ சக்கரவர்த்திகள் இங்கே கோட்டையும், 
அரண்மனையும் கட்டியிருந்தார்கள்.பிறகு சோழநாடு பாண்டியர்கள் வசப்பட்டது. பாண்டிய 
மன்னர்கள் சில சமயம் இந்த அரண்மனையில் வசித்தார்கள். விஜயாலய சோழர் காலத்தில் இங்கே 
ஒரு பெரிய யுத்தம் நடந்தது. கோட்டை இடிந்து தகர்ந்தது. அரண்மனையிலும் பாதி 
அழிந்தது. மிச்சம் அழியாமலிருந்த பகுதியில் இப்போது நாம் இருக்கிறோம். இந்தக் 
கோட்டையைச் சிலர் பல்லவராயன் கோட்டை என்றும், இன்னும் சிலர் பாண்டியராயன் கோட்டை 
என்றும் சொல்வார்கள். இரண்டிலும் உண்மை உண்டு. ஆனால் நன்றாக வழி 
தெரிந்தவர்களாலேதான் இதற்குள்ளே வந்துவிட்டு வௌியேற முடியும்! என்ன சொல்கிறீர்? என் 
ஆட்களை அழைத்துக்கொண்டு போய்விடச் சொல்லட்டுமா? அல்லது நீரே வழி கண்டுபிடித்து..." 
  "இல்லை, தேவி! வழி கண்டுபிடித்துச் செல்ல எனக்கு நேரம் இல்லை. என்னை 
அழைத்து வந்தவர்களே திரும்ப அழைத்துச் செல்லட்டும். ஆனால்... நான் போவதற்கு 
முன்னால்... என்னைத் தாங்கள் அழைத்து வரும்படி சொன்ன காரணம் வேறொன்றும் இல்லையா? 
நான் தங்களுக்குச் செய்யக்கூடிய உதவி வேறொன்றும் இல்லையா? அப்படி ஏதாவது இருந்தால், 
சொல்லுங்கள்!" 
  "நல்லது; நீர் கேட்கிறபடியால் சொல்கிறேன். பறக்கும் குதிரை 
ஒன்று எனக்கு வேண்டும். உம்மால் முடிந்தால் சம்பாதித்து வந்து கொடுக்கலாம்." 
  "என்ன? பறக்கும் குதிரை என்றா சொன்னீர்கள்?" 
  "ஆம்; பறக்கும் 
குதிரைதான்!" 
  "பறப்பதுபோல் அதிகவேகமாய் ஓடக்கூடிய அரபு நாட்டுக் குதிரையைச் 
சொல்கிறீர்களா?" 
  "இல்லை; இல்லை! என்னால் அத்தகைய குதிரைமேல் ஏறவே முடியாது. 
பூமியில் கால் வைத்து ஓடும் குதிரையை நான் சொல்லவில்லை. பறவைகளைப்போல் இறகுகளை 
விரித்து வானத்தில் பறந்து செல்லும் குதிரையைச் சொல்கிறேன். அம்மாதிரி அதிசயக் 
குதிரைகள் இந்தப் பூவுலகில் எங்கேயோ இருப்பதாகக் கதைகளில் கேட்டிருக்கிறேன். 
அத்தகைய இறகுள்ள பறக்கும் குதிரைதான் எனக்கு வேண்டும்!" 
  "எதற்காக? சொர்க்க 
லோகத்துக்குப் பறந்து போவதற்காகவா?" 
  "என்னைப் பார்த்தால் சொர்க்கத்துக்குப் 
போகக் கூடியவளாகத் தோன்றுகிறதா? அத்தகைய புண்ணியம் செய்தவள் அல்ல நான். கொடிய 
பாவங்கள் பல செய்தவள்." 
  "சொர்க்கத்தில் உள்ளவர்கள் புண்ணியம் மட்டுந்தானா 
செய்கிறார்கள்? அங்கேயும் பாவங்கள் செய்கிறார்கள். அதற்குப் பரிகாரம் தேடப் 
பூவுலகத்துக்கு வருகிறார்கள். வந்த காரியம் ஆனதும் சொர்க்கத்துக்குப் போகிறார்கள்." 
  "இல்லை எனக்குச் சொர்க்கத்துக்குப் போக விருப்பம் இல்லை. பாண்டிய நாட்டில் 
ஒரு பாலைவனம் இருக்கிறது. அதன் நடுவில் சில மொட்டைப் பாறைகள் இருக்கின்றன. புல், 
பூண்டு முளைக்காத பாறைகள். அவற்றில் சில முழைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த 
முழைகளில் திகம்பர ஜைனர்கள் இருந்து தவம் செய்தார்கள். இப்போது பாம்புகளும் 
நரிகளும் அவற்றில் வசிக்கின்றன. தேவலோகத்து அமராவதி நகரைக் காட்டிலும் அந்தப் 
பாண்டிய நாட்டுப் பாலைவனப் பாறைகளே எனக்கு அதிகம் பிடித்தமானவை." 
  "தேவி! 
தங்களுடைய ஆசை அதிசயமானதுதான்." 
  "பறக்கும் குதிரை கிடைத்தால் நான் அந்தப் 
பாலைவனத்துக்குப் போவேன். பிறகு அங்கிருந்து இலங்கைத் தீவுக்குப் பறந்து செல்வேன். 
இலங்கையில் வானை முட்டும் மலைகளும், அம்மலைகளை மறைக்கும்படி உயர்ந்த மரங்கள் 
அடர்ந்த காடுகளும் இருக்கின்றனவாம். இந்தச் சோழ நாட்டில் காணப்படும் எருமை 
மந்தைகளைப் போல் இலங்கைக் காடுகளில் யானை மந்தைகள் திரியுமாம்; அவற்றையெல்லாம் 
பார்ப்பேன். இன்னும் இந்தப் பூவுலகத்தின் மத்தியில் உலகம் தோன்றின நாள் தொட்டுப் 
பனிக் கட்டியால் மூடப்பட்ட சிகரங்களையுடைய மலைகள் இருக்கின்றனவாம். சூரியன் 
உதயமாகும் சமயத்தில் அவை வெள்ளி மலைகளைப் போல் ஜொலிக்கும். பறக்கும் குதிரை மேல் 
ஏறிச் சென்று அம்மலைச் சிகரங்களைப் பார்க்க விரும்புகிறேன். இன்னும் அப்பால் 
பாண்டிய நாட்டுப் பாலைவனத்தைப்போல பதினாயிரம் மடங்கு விஸ்தாரமான பாலைவனங்கள் ஒரே 
வெண்மணல் காடாக இருக்குமாம். பகல்வேளையில் அங்கே எரியும் தீயின் மத்தியில் இருப்பது 
போலவே தோன்றுமாம். அங்கேயெல்லாம் போக விரும்புகிறேன். இன்னும் அப்பால் போனால் 
கடுங்குளிர் காரணமாகக் கடல்நீர் உறைந்து கெட்டிப் பட்டு மனிதர்களும் மிருகங்களும் 
நடந்து போகும்படியிருக்குமாம். பறக்கும் குதிரைமேல் ஏறிச்சென்று அந்த இடங்களைப் 
பார்க்க விரும்புகிறேன்..." 
  "தேவி! என்னால் அத்தகைய பறக்கும் குதிரையைத் 
தங்களுக்கு கொண்டு வந்து தர முடியாது. ஆனால் தாங்கள் கூறிய சில இடங்களுக்குப் போகச் 
சுலபமான வழி இருக்கிறது. ஒரு நல்ல படகிலே ஏறினால் அரை நாளில இலங்கைக்குப் போகலாம். 
கப்பல் ஏறிச் சென்றால்..." 
  "ஐயா! அந்த வழி எனக்குத் தெரியாத வழி அல்ல. 
ஆனால் எனக்குக் கடலைக் கண்டால் பயம். கப்பலிலே ஏறுவதென்றால் பயம். நதியைப் படகில் 
ஏறிக்கடக்கும்போது படகு அசைந்தால் கூடப் பயம். ஆகையால் உம்முடைய யோசனை எனக்குச் 
சிறிதும் பயன்படாது. நீர் போய் வரலம்!" என்று கூறி நந்தினி எழுந்தாள். 
  "தேவி! வேறொன்றும் தாங்கள் என்னிடம் சொல்வதற்கு இல்லையா?" 
  "இல்லை! 
நீ ஏதோ சொல்ல விரும்புவது போல் காண்கிறது." 
  "ஒரு கேள்வி கேட்க 
விரும்புகிறேன். அதற்கு மட்டும் விடை சொல்ல வேண்டும். சில நாளைக்கு முன்பு தாங்கள் 
இலங்கைக்கு வந்திருக்கவில்லையா? அநுராதபுரத்தின் வீதிகளில் இருண்ட நிழலில் தனியாக 
நின்றிருக்கவில்லையா?" 
  "இல்லவே இல்லை. பழுவேட்டரையரின் அரண்மனையையும் 
காவலையும் தாண்டி நான் ஒரு பொழுதும் அப்பால் சென்றதே இல்லை. உமக்கு ஏன் அத்தகைய 
சந்தேகம் உதித்தது?" 
  "அம்மணி! இலங்கையில் சில தினங்களுக்கு முன்பு தங்களைப் 
பார்த்தேன். 'பறக்கும் குதிரை' என்றெல்லாம் சொல்லுகிறீர்களே? ஒருவேளை உண்மையில் 
அத்தகைய குதிரை தங்களிடம் இருக்கிறதோ, அதில் ஏறி அங்கு வந்தீர்களோ என்று 
நினைத்தேன். ஆனால் இப்போதுபோல் ஆடை ஆபரணங்கள் புனைந்து அலங்காரமாக இருக்கவில்லை. 
சாதாரண சேலை ஒன்று மட்டும் உடுத்தி ஒருவித ஆபரணமும் புனையாமல் கூந்தலை விரித்துப் 
போட்டுக்கொண்டு நின்றீர்கள். அந்த ஸ்திரீ தாங்கள் அல்லவா?" 
  "இல்லை; நான் 
இல்லை ஐயா! நீர் கூறும் அந்த ஸ்திரீ வாய்திறந்து ஏதாவது பேசினாளா?" 
  "இல்லை; 
ஜாடையினாலேதான் பேசினாள். ஆனால் தங்களுக்கு மந்திரவாதிகளுடன் பழக்கம் இருக்கிறது. 
ஒருவேளை அத்தகைய மந்திர சக்தியினால் தங்களுடைய சூட்சும வடிவம் அங்கே வந்திருக்கலாம் 
அல்லவா?" 
  "நானோ, என்னுடைய சூட்சும சரீரமோ இல்லை என்றால்?..." 
  "தங்களை வடிவத்தில் மிகவும் ஒத்தவனாய், பேச முடியாத ஸ்திரீயாக அவள் இருக்க 
வேண்டும்." 
  நந்தினியின் பார்வை எங்கேயோ வெகு தூரத்தில் சென்றிருந்தது. ஒரு 
நெடிய பெருமூச்சு விட்டாள். 
  "ஐயா! சற்று முன்னால் எனக்கு ஏதேனும் உதவி 
செய்யவிரும்புவதாகச் சொன்னீர் அல்லவா?" 
  "ஆம்!" 
  "அது தாங்கள் 
உண்மையாகச் சொன்ன வார்த்தைதானே?" 
  "சந்தேகமில்லை." 
  "அப்படியானால் 
இதைக் கேளும். எப்போதாவது ஒரு சமயம் மறுபடியும் அந்த ஸ்திரீயைப் பார்க்க நேர்ந்தால் 
அவளை எப்படியாவது பிடித்துக் கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பியும். அது 
முடியாவிட்டால் என்னையாவது அவளிடம் அழைத்துக் கொண்டு செல்லும்!" என்றாள் நந்தினி. 
  அரை நாழிகைக் கெல்லாம் வந்தியத்தேவன் மறுபடியும் முல்லையாற்றங்கரையில் 
நின்றான். அவனுடைய குதிரையும் பக்கத்தில் நின்றது. அவனை அங்கே அழைத்து வந்தவர்கள் 
ஒரு நொடியில் மறைந்துவிட்டார்கள்.தேவராளனைக்கூடக் காணவே இல்லை. 
  முல்லையாற்றங்கரையோரமாகக் குதிரையை மெதுவாகவே செலுத்திக்கொண்டு 
வந்தியத்தேவன் இரவெல்லாம் பிரயாணம் செய்தான். மூன்றாம் ஜாமத்தில் வாள்நட்சத்திரம் 
அதன் பூரண வளர்ச்சியை அடைந்து வானத்தில் ஒரு நெடிய பகுதியை அடைத்துக்கொண்டு 
காணப்பட்டது. மக்கள் உள்ளத்தில் பீதியை விளைவித்த அந்தத் தூமகேதுவின் காரணமாக 
உண்மையிலேயே ஏதேனும் விபரீதம் ஏற்படப் போகிறதா அல்லது இதெல்லாம் வெறும் குருட்டு 
நம்பிக்கைதானா என்று அடிக்கடி அவன் சிந்தனை செய்தான். நந்தினியின் நினைவும் 
இடையிடையே வந்து கொண்டிருந்தது. அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவன் மனத்தில் 
நன்கு பதிந்திருந்தன. முதலாவது தடவை தஞ்சை அரண்மனையில் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட 
அருவருப்பு உணர்ச்சி இப்போது மறைந்துவிட்டது. ஏதோ பயங்கரமான துன்பங்களில் 
அடிபட்டவள் இவள் என்ற எண்ணத்தினால் ஒருவித அநுதாபமே உண்டாகியிருந்தது. ஆயினும் 
அவளுடைய நோக்கம் என்ன, அவள் செய்ய விரும்பும் காரியம் என்ன, அவளுடைய உண்மையான 
வாழ்க்கை வரலாறு என்ன என்பவை மர்மமாக இருந்தபடியால் ஒரு பக்கத்தில் கோபமும் 
இருந்தது.ஒப்பில்லாத சௌந்தரியத்தோடு, ஏதோ ஒருவித மாயாசக்தி உடையவள் அவள் என்றும் 
தோன்றியது. ஆதலின் அவளுடன் இனி எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமலிருப்பதே 
நல்லது. பனை இலச்சினை உள்ள மோதிரத்தை அவள் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் 
எவ்வளவோ நன்றாயிருக்கும்.அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாளே? நதியிலே 
எறிந்துவிடலாம்; அதற்கும் மனம் வரவில்லை. இந்த அபாயகரமான காலத்தில் அது மீண்டும் 
சமயத்துக்கு உபயோகப்படலாம்; எதற்காக எறிய வேண்டும்? 
  பழையாறைக்குச் சென்று 
இளைய பிராட்டியைப் பார்த்துச் சொல்லவேண்டிய செய்தியையும் சொல்லிவிட்டால், அப்புறம் 
அதை எறிந்தே விடலாம்.இம்மாதிரி தொல்லையான காரியங்களில் பின்னர் பிரவேசிக்கவே 
கூடாது. இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்குத் திசையில் வெள்ளி முளைத்தது. சுக்கிரனை 
எதிரிட்டுக் கொண்டு போகக்கூடாது என்று வந்தியத்தேவன் கேள்விப்பட்டிருந்தான். 
குதிரையை நிறுத்தி ஒரு மரத்தில் கட்டிவிட்டுத்தானும் தரையில் படுத்துச் சிறிது 
உறங்கினான். 
  
					  
பக்க 
தலைப்பு  
  
					
 பதினைந்தாம் அத்தியாயம்  காலாமுகர்கள் 
உதய சூரியனுடைய செங்கதிர்கள் வந்தியத்தேவனுடைய 
முகத்தில் சுளீர் என்று பட்டு அவனைத் துயிலெழுப்பி விட்டன. உறக்கம் தௌிந்ததும் 
எழுந்திருக்க அவனுக்கும் மனம் வரவில்லை, கண்ணை விரித்துப் பார்த்தான். சற்றுத் 
தூரத்தில் பயங்கர ரூபமுள்ள இரண்டு சாமியார்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய 
திரித்துவிட்ட சடை, ஒரு கையில் திரிசூலம், இன்னொரு கையில் அக்கினி குண்டம் 
இவற்றிலிருந்து அவ்விருவரும் காலாமுக வீர சைவர்கள் என்பதை வந்தியத்தேவன் அறிந்து 
கொண்டான். இவர்களுடன் வாதப் போர் செய்வதற்கு ஆழ்வார்க்கடியான் இங்கு இல்லையே என்று 
எண்ணம் உண்டாயிற்று. அந்தக் காலாமுகச் சாமியார்கள் போகும் வரையில் கண்ணை 
மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்வதென்று தீர்மானித்தான். 
  அவர்கள் 
அவன் பக்கத்தில் வந்து நிற்பதாக அவன் உணர்ந்தபோது கண்களைத் திறக்கவில்லை. அவர்களில் 
ஒருவர் அருகில் வந்து கனைத்தபோது, அவன் கண்ணை விழித்துப் பார்க்கவில்லை. 
  "சிவோஹம்! பையன் நல்ல கும்பகர்ணனாயிருக்கிறான்" என்றார் ஒருவர். 
  "சிவோஹம்! இவனைப்போல் ஒரு வாலிபப் பிள்ளை நமக்குக் கிடைத்தால், எவ்வளவு 
நன்றாயிருக்கும்?" என்று சொன்னார். 
  இன்னொரு சாமியார். "சிவோஹம்! 
ஆளைப்பார்த்து, முகம் களையாயிருக்கிறதே என்று சொல்லுகிறாய்! இவனால் நமக்குப் பயன் 
ஒன்றுமில்லை. வெகுசீக்கிரத்தில் இவனுக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகிறது!" என்றார் 
முதலாவது வீர சைவர். 
  மேலும் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வது மூச்சுவிட 
முடியாமல் திணறும் உணர்ச்சியை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று. எனினும் அச்சமயம் 
விழித்தெழுந்தால் தன் பாசாங்கு வௌியாகிவிடும். மேலே அவர்கள் ஏதாவது பேசுவதைக் 
கேட்கமுடியாமலும் போய்விடும். தனக்கு என்ன பெரிய ஆபத்து வரப் போகிறது என்பதையும் 
இவர்கள் ஒரு வேளை சொல்லலாம் அல்லவா?... 
  ஆனால் அவன் எண்ணிய எண்ணம் 
நிறைவேறவில்லை. "சிவோஹம்! அவனவனுடைய தலையெழுத்து! நீ வா போகலாம்!" என்று ஒரு 
வீரசைவர் கூற, இருவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். 
  அவர்கள் சற்றுத் 
தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்து விட்டு வந்தியத்தேவன் எழுந்தான். "சீக்கிரத்தில் 
இவனுக்கு பெரிய ஆபத்து வரப்போகிறது!" என்ற வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் 
கொண்டிருந்தன. 
  பழைய காபாலிகர்களின் பரம்பரையில் வந்தவர்கள் காலாமுகர்கள். 
காபாலிகர்களைப் போல் அவர்கள் நரபலி கொடுப்பதில்லை. மற்றபடி காபாலிகர்களின் பழக்க 
வழக்கங்களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் மயானத்தில் அமர்ந்து கோரமான 
தவங்களைச் செய்து வருங்கால நிகழ்ச்சிகளை அறியும் சக்தி பெற்றிருந்ததாகப் பலர் 
நம்பினார்கள். சாபங்கொடுக்கும் சக்தி அவர்களுக்கு உண்டு என்றும் பாமர ஜனங்கள் 
எண்ணினார்கள். ஆகையால் காலாமுக சைவர்களின் கோபத்துக்கு ஆளாகாத வண்ணம் அவர்களுக்கு 
வேண்டிய உபசாரங்களைச் செய்ய, பலர் ஆயத்தமாயிருந்தனர். சிற்றரசர்கள் பலர் ஆலயங்களில் 
காலாமுகர்களுக்கு வழக்கமாக அன்னமளிப்பதற்கு நிவந்தங்கள் விட்டிருந்தனர். இதுவரையில் 
சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் மட்டும் காலாமுகர்களுக்கு எவ்வித ஆதரவும் 
காட்டவில்லை. 
  இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருக்க வந்தியத்தேவன், "அவர்கள் 
ஏதாவது உளறிவிட்டுப் போகட்டும்; இதுவரையில் நேராத ஆபத்து நமக்குப் புதிதாக என்ன 
வந்துவிடப் போகிறது?" என்று எண்ணித் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். 
ஆயினும் வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவன் மனத்தைவிட்டு அடியோடு 
அகன்று விடவில்லை. 
  வந்தியத்தேவன் எழுந்து நின்று பார்த்தபோது அந்தக் 
காலாமுகர்கள் சற்றுத் தூரத்தில் ஒரு பழைய மண்டபத்தின் அருகில் போய்க் 
கொண்டிருப்பதைக் கண்டான். மண்டபத்துக்கு அருகில் செயற்கைக் குன்றம் ஒன்று 
காணப்பட்டது. அதில் ஒரு குகை, சிங்க முகத்துடன் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. பழைய 
நாள்களில் திகம்பர ஜைனர்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் குகைகளைக் காலாமுகர்கள் 
பிடித்துக் கொண்டிருந்தார்கள். 
  அங்கே சென்று அவர்களுடன் சிறிது பேச்சுக் 
கொடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு உண்டாயிற்று. குதிரையைக் 
கட்டியிருந்த இடத்திலேயே விட்டுவிட்டுச் செய்குன்றை நோக்கிப் போனான். மண்டபத்தை 
நெருங்கியபோது காலாமுகர்கள் குகையின் மறுபக்கத்தில் நின்று பேசியது அவன் காதில் 
இலேசாக விழுந்தது. 
  "அந்தப் பையன் பொய்த் தூக்கம் தூங்கவில்லை. 
உண்மையாகவேதான் தூங்கியிருக்க வேண்டும்" என்று சொன்னார் ஒருவர்." 
  "அது 
எப்படி நிச்சயமாய்ச் சொல்கிறாய்?" என்றார் இன்னொருவர். 
  "அபாயம் 
வரப்போகிறது" என்ற வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அதைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் 
என்று விரும்பாத மனிதர் யாரையும் நான் இதுவரையில் கண்டதில்லை." 
  "பையன் நல்ல 
தீரனாகத் தோன்றுகிறான். அவனை நம்மோடு சேர்த்துக்கொண்டால் நன்றாய்த்தான் இருக்கும் 
நீ என்ன சொல்லுகிறாய்?" 
  "இவனைப் போன்ற வாலிபர்கள் எதற்காக? இன்னும் கொஞ்ச 
நாளில் இந்தச் சோழ நாட்டின் சிம்மாதனம் ஏறப்போகிறவனே காலாமுகத்தைச் சேரப் 
போகிறான்..." 
  "யாரைச் சொல்கிறாய்?" 
  "வேறு யாரை? மதுராந்தகத் 
தேவனைத்தான் சொல்கிறேன்! இது கூட உனக்குத் தெரியவில்லையா?" 
  "அது எப்படி? 
மற்ற இரண்டுபேர்?" 
  "ஒருவன் தான் கடலில் முழுகி இறந்துவிட்டானாம். 
இன்னொருவனுடைய காலம் குறுகிக்கொண்டிருக்கிறது..." 
  வந்தியத்தேவன் அதற்கு 
மேல் அந்தக் காலாமுகச் சாமியார்களின் பேச்சைக் கேட்கச் சிறிதும் விரும்பவில்லை. 
அவர்களுடன் பேச்சுக் கொடுக்கவும் எண்ணவில்லை. 
  விரைவிலே பழையாறை அடைந்து 
இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டுக் காஞ்சிக்குப் போக விரும்பினான். 
எல்லாருக்கும் மேலாகத் தான் அதிகம் கடமைப்பட்டிருப்பது ஆதித்த கரிகாலருக்கு அல்லவா? 
அவரை எத்தனையோ வித அபாயங்கள் சூழ்ந்திருப்பது உண்மை. பார்த்திபேந்திரன் கூடப் 
பழுவூர் ராணியின் மாய வலையில் விழுந்து விட்டான். எந்தக் காரியத்திலும் படபடப்புடன் 
இறங்கக் கூடியவரான ஆதித்த கரிகாலர் எப்போது எந்தவித அபாயத்துக்கு உள்ளவாரோ 
தெரியாது. அவரிடம் சென்று அவரைக் காத்து நிற்பது தன் முதன்மையான கடமை. வழியில் 
வீண்பொழுது போக்குவது பெருங்குற்றம். இந்தக் கணமே சென்றுவிட வேண்டும். 
  வந்தியத்தேவன் சப்தமில்லாமல் திரும்பிச் சென்று குதிரை மீது ஏறிக்கொண்டான். 
குதிரையை வேகமாகத் தட்டிவிட்டான். காலாமுகர்களின் குகையோரமாகச் சென்றபோது அவர்கள் 
தன்னை வெறித்து நோக்குவதைக் கண்டான். ஒரு முகம் அவன் எப்போதோ பார்த்த முகம் போலத் 
தோன்றியது. ஆனால் நின்று பார்க்க விருப்பமின்றி மேலே சென்றான். 
  வழியில் ஜன 
நெருக்கமான பல கிராமங்களை அவன் பார்த்தான். அங்கேயெல்லாம் இளவரசர் கடலில் மூழ்கியது 
பற்றிய செய்தி இன்னும் பரவவில்லையென்று தெரிந்தது. ஏனெனில் ஜனங்கள் சாவதானமாக 
அவரவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதுவரையில் நல்லதுதான். இளவரசரைப் பற்றிய 
செய்தி பழையாறையை அடைவதற்குள் தான் அங்கே போய்ச் சேர்த்துவிட வேண்டும். இளைய 
பிராட்டியிடம் உண்மையை அறிவித்து விடவேண்டும். குந்தவை தேவியின் காதில் வேறுவிதமான 
செய்தி விழுந்தால் ஏதாவது விபரீதம் நேரிட்டு விடலாம் அல்லவா? இளைய பிராட்டியாவது 
நம்புவதற்குத் தயங்கலாம். அந்தக் கொடும்பாளூர் இளவரசி உயிரையே விட்டாலும் 
விட்டுவிடுவாள்!... இந்த எண்ணம் வந்தியத்தேவனுக்கு மிக்க பரபரப்பை உண்டாக்கிற்று. 
ஆனால் அவனுடைய அவசரம் குதிரைக்குத் தெரியவில்லை. கால்களில் புதிதாக லாடம் 
அடிக்கப்பட்டிருந்த அக்குதிரை வழக்கமான வேகத்துடன் கூட ஓட முடியாமல் தத்தளித்தது. 
கடைசியாகப் பிற்பகலில் சூரியன் அஸ்தமிப்பதற்கு இரண்டு நாழிகை இருந்தபோதுதான் 
பழையாறைக் கோட்டையின் பெரிய சுவர் அவனுக்குப் புலப்பட்டது. 
  அதோ, கோட்டை 
வாசலில் துர்க்கையின் கோவில் தெரிகிறது. கோட்டைக்குள் எப்படிப் பிரவேசிக்கிறது 
என்பதைப் பற்றி எத்தனையோ யோசனைகள் அவன் உள்ளத்தில் மின்னல் வேகத்தில் படையெடுத்து 
வந்தன. ஆனால் ஒன்றும் காரிய சாத்தியமாகத் தோன்றவில்லை. பனைமுத்திரை மோதிரமோ இங்கே 
பயன்படாது. ஏனெனில் அந்த மோதிரத்துடன் வருவான் என்பது முன்னமே கோட்டைக் 
காவலர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும். இப்போது மோதிரத்தைப் பார்த்ததும் 
வேறு விசாரணையின்றிச் சிறைப்படுத்தி விடுவார்கள். சின்ன பழுவேட்டரையரிடம் அவனை 
அனுப்பி விடுவார்கள். இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்ப்பதற்கு முன்னால் 
அவ்விதம் அகப்பட்டுக் கொள்ள அவன் சிறிதும் விரும்பவில்லை. 
  யோசனை செய்த 
வண்ணம் குதிரையின் வேகத்தை அவன் குறைத்துக்கொண்டு கோட்டை வாசலை நெருங்கியபோது 
மற்றொரு திசையிலிருந்து ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். வேல் பிடித்த வீரர்கள், 
விருதுகளைச் சுமந்தவர்கள், குதிரைகள் ஏறி வந்தவர்கள்- இவ்வளவு பேருக்கும் நடுவில் 
தாமரைப் பூ வடிவமாக அமைந்த ஒரு தங்க ரதம். ஆஹா! அந்த ரதத்தில் வீற்றிருப்பது யார்? 
இளவரசர் மதுராந்தகத் தேவர் அல்லவா? கடம்பூர் அரண்மனையிலும் தஞ்சாவூர் பொக்கிஷ 
நிலவறையிலும் பார்த்த அதே இளவரசர்தான்! - கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு யுக்தி 
என்னவென்பது உடனே வந்தியத்தேவன் மனத்தில் தோன்றி அவனுக்கு உணர்ச்சியூட்டிவிட்டது. 
  "ஆபத்து வரப்போகிறது என்ற வார்த்தை காதில் விழுந்தால் அதைப்பற்றி 
அறிந்துகொள்ள விரும்பாதவனை இதுவரை நான் பார்த்ததில்லை."- இவ்விதம் காலாமுகர்களில் 
ஒருவர் கூறிய வார்த்தைகள் அவன் மனத்தில் புதிந்திருந்தன.அவனே அந்த ஆவலுக்கு 
இடங்கொடுத்து விட்டான் அல்லவா? அந்தக் காலாமுகரின் யுக்தியை ங்கே கையாண்டு பார்க்க 
வேண்டியதுதான். 
  தாமரை மலரின் வடிவமான தங்க ரதத்தை நோக்கி வந்தியத்தேவன் 
களைப்படைத்திருந்த தன் குதிரையை வேகமாகச் செலுத்தினான். மதுராந்தகத்தேவருடைய 
பரிவாரங்களில் யாரும் அவ்விதம் ஒருவன் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. 
ஆகையால் அவனை யாரும் தடுக்க முன்வருவதற்குள் குதிரை ரதத்தின் சமீபத்தை 
அடைந்துவிட்டது. அந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் குதிரைமீது எழுந்து நின்றான். 
ரதத்தில் வீற்றிருந்த மதுராந்தகரை உற்றுப் பார்த்தான். பார்த்துவிட்டு, "ஓ! 
அபாயம்!" என்று ஒரு குரலைக் கிளப்பினான். உடனே தடால் என்று குதிரை மீதிருந்து 
தரையில் விழுந்து உருண்டான். குதிரை சில அடிதூரம் அப்பால் சென்று நின்றது. 
  இவ்வளவும் சில வினாடி நேரத்தில் நடந்துவிட்டது. மதுராந்தகத்தேவரின் 
பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் அவனுடைய குதிரை ரதத்தை நோக்கிப் போவதை கண்டு அவசரமாகக் 
கத்தியை உறையிலிருந்து எடுத்தார்கள். சிலர் வேலை எறிவதற்குக் குறிபார்த்தார்கள். 
அதற்குள் அவன் குதிரைமேல் நிற்கமுயன்று கீழேயும் விழுந்து விட்டபடியால் அவர்களுடைய 
கவலை நீங்கியது. 
  பிறகு கீழே விழுந்தவனைப் பார்த்து எல்லாரும் 
சிரித்தார்கள். மதுராந்தகரும் சிரித்தார். அதற்குள் ரதம் நிறுத்தப்பட்டிருந்தது. 
அவர் கையைக் காட்டி சமிக்ஞை செய்யவே, வீரர்கள் இருவர் வந்தியத்தேவன் அருகில் சென்று 
அவனைத் தூக்குவதற்கு முயன்றார்கள். அதற்குள் அவனே எழுந்து 
உட்கார்ந்திருந்தான்.வீரர்களுடைய உதவியில்லாமல் குதித்து எழுந்து நின்றான். தான் 
விழுந்தது பற்றிச் சிறிதும் கவனியாதது போல் இளவரசர் மதுராந்தகரையே உற்றுப் 
பார்த்துக் கொண்டிருந்தான். 
  "அவனை இப்படி அருகில் கொண்டு வாருங்கள்!" 
என்றார் இளவரசர். 
  வீரர் இருவரும் வந்தியத்தேவனை கையைப் பிடித்து 
அழைத்துச்சென்று ரதத்தின் பக்கத்தில் நிறுத்தினார்கள். இன்னமும் அவனுடைய கண்கள் 
மதுராந்தகர் முகத்தின் பேரிலேயே இருந்தன. 
  "அப்பனே! நீ யார்?" என்று இளவரசர் 
கேட்டார். 
  "நான்... நான்தான்! சக்கரவர்த்திப் பெருமானே! என்னைத் 
தெரியவில்லையா?" என்றான் வந்தியத்தேவன். 
  "என்ன உளறுகிறாய்?.. அடே! நீங்கள் 
சற்று விலகி நில்லுங்கள்" என்றார் மதுராந்தகர். மற்ற வீரர்களைப் பார்த்து, வீரர்கள் 
விலகினார்கள். 
  "என்னை யார் என்று எண்ணிக் கொண்டாய்?" என்று மறுபடியும் 
மதுராந்தகர் கேட்டார். 
  "மன்னிக்க வேண்டும் இளவரசே! தவறாகச் சொல்லி 
விட்டேன். தாங்கள் இன்னும்...இன்னும்" என்று தட்டுத் தடுமாறிப் பேசினான். 
  "இதற்கு முன் எப்பொழுதாவது என்னை நீ பார்த்திருக்கிறாயா?" 
  "பார்த்திருக்கிறேன்... இல்லை; பார்த்ததில்லை..." 
  "என்னைப் 
பார்த்திருக்கிறாயா? இல்லையா? உண்மையைச் சொல்!" 
  "நேற்றிலிருந்து நான் 
உண்மையைச் சொல்வதென்று வைத்திருக்கிறேன். அதனால்தான் நிச்சயமாக சொல்ல முடியவில்லை!" 
  "ஓகோ! நேற்று முதலாவது நீ உண்மை பேசுகிறவனா? நல்ல வேடிக்கை!" என்று 
மதுராந்தகர் சிரித்தார். 
  "அதனால் நிச்சயமாய்ச் சொல்ல முடியாமற் போவானேன்?" 
என்று மறுபடியும் கேட்டார் மதுராந்தகர். 
  "இந்தக் காலத்தில் எதைத்தான் 
நிச்சயமாகச் சொல்ல முடிகிறது? ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்கிறார். ஒரு நாள் மூடு 
பல்லக்கில் இருந்தவர், இன்னொரு நாள் ரதத்தில் இருக்கிறார்..." 
  "என்ன 
சொன்னாய்?" என்று மதுராந்தகர் சிறிது திடுக்கிட்ட குரலில் வினவினார்." 
  "ஒருவரைப்போல் இன்னொருவர் இருப்பதால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை 
என்றேன்!" 
  "நான் யாரைப் போல இருக்கிறேன்?" 
  "இரண்டு தடவை தங்களை 
நான் பார்த்திருக்கிறேன். அல்லது தங்களைப் போன்றவரைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் 
தானா அதாவது நான் பார்த்தவர்தானா, என்று சந்தேகமாயிருந்தது.அதைத் தெரிந்து 
கொள்வதற்காகத்தான்... சற்று முன்..." 
  "குதிரைமேல் ஏறி நின்று அப்படி 
உற்றுப் பார்த்தாயா?" 
  "ஆம், ஐயா!" 
  "என்ன தெரிந்து கொண்டாய்?" 
  "தாங்கள் நான் பார்த்தவராகவும் இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம் என்று 
தெரிந்து கொண்டேன்." 
  மதுராந்தகருக்குக் கோபம் உண்டாகத் தொடங்கியதென்பது 
அவருடைய முகத்திலிருந்தும், குரலின் தொனியிலிருந்தும் தெரிந்தது. 
  "நீ 
சுத்தப் போக்கிரி. உன்னை...." 
  "இளவசரே கோபிக்க வேண்டாம். நான் தாங்களையோ, 
தங்களைப் போன்றவரையோ பார்த்தது எங்கே என்று சொல்கிறேன். பிறகு தாங்களே 
தீர்மானித்துக் கொள்ளலாம்." 
  "அப்படியானால் சொல், சீக்கிரம்!" 
  "ஒரு 
பெரிய கோட்டை, நாலாபுறமும் நெடிய மதில்சுவர். வீராதி வீரர்கள் பலர் அங்கே 
கூடியிருந்தார்கள். நடுராத்திரி, சுவரில் மாட்டிய பெரிய அகல் விளக்கிலிருந்து 
புகையினால் மங்கிய வௌிச்சத்தில் அவர்கள் ஆத்திரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். 
சுவர் ஓரமாக ஒரு பல்லக்கு இருந்தது. அந்த வீரர்களின் தலைவரை மற்றவர்கள் ஏதோ 
கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார்கள். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. வேகமாக 
எழுந்துபோய் பல்லக்கின் அருகில் நின்றார். பல்லக்கை மூடியிருந்த பட்டுத்திரையை 
விலக்கினார். பல்லக்கின் உள்ளேயிருந்து ஒரு சுந்தர புருஷர் வௌியே வந்தார். அவரைப் 
பார்த்ததும் அங்கே கூடியிருந்த வீரர்கள் அனைவரும் 'வாழ்க! வாழ்க!' என்று 
கோஷித்தார்கள். பட்டத்து இளவரசர் வாழ்க!" என்றும் சிலர் கூவினார்கள். 
'சக்கரவர்த்திக்கு ஜே! என்று கோஷித்ததாதகவும் ஞாபகம்! ஐயா, அப்போது 
பல்லக்கிலிருந்து வௌி வந்தவருடைய முகம் தங்கள் முகம் போலத்தான் இருந்தது. ஏதாவது 
நான் தவறாகச் சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவேண்டும்." 
  நடுவில் 
குறுக்கிடாமல் இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த மதுராந்தகத் தேவருடைய நெற்றியில் 
வியர்வை துளிர்க்கலாயிற்று. அவருடைய முகத்தில் பயத்தின் சாயை படர்ந்தது. 
  "நேற்று முதலாவது உண்மையைச் சொல்லுகிறவனே! அந்த வீரர்களின் கூட்டத்தில் நீ 
இருந்தாயா?" என்று கேட்டார். 
  "இல்லை, ஐயா! சத்தியமாக இல்லை!" "பின் 
எப்படிக் கூடயிருந்து பார்த்தது போலச் சொல்கிறாய்?" 
  "நான் கண்ட காட்சி 
உண்மையாக நடந்ததா அல்லது கனவிலே கண்டதா என்று எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. 
இன்னொரு காட்சியையும் கேளுங்கள். இருளடர்ந்த ஒரு நிலவறை, அதில் ஒரு சுரங்கப் பாதை. 
வளைந்து வளைந்து கீழே இறங்கி மேலே ஏறிப் போகவேண்டிய பாதை. அதன் வழியாக மூன்று பேர் 
வந்துகொண்டிருந்தார்கள். முன்னால் ஒருவன் தீவர்த்திப் பிடித்துக்கொண்டு போனான். 
பின்னால் ஒருவன் காவல் புரிந்துகொண்டு வந்தான். நடுவில் ஒரு சுந்தர புருஷர் - 
வடிவத்தில் மன்மதனையொத்த ராஜகுமாரர் வந்து கொண்டிருந்தார். தீவர்த்தியின் வௌிச்சம் 
அந்த நிலவறையின் மூலை முடுக்குகளில் பரவியபோது அங்கேயெல்லாம் பொன்னும், மணியும், 
வைடூரியங்களும் ஜொலிப்பதுபோலத் தோன்றியது. அது மன்னாதி மன்னர்களில் இரகசியப் 
பொக்கிஷங்களை வைக்கும் நிலவறையாக இருக்கலாம் என்று தோன்றியது. தூண்களில் கோரமான பூத 
வடிவங்கள் செதுக்கப் பட்டிருந்தன. அத்தகைய சுரங்க வழியில் வந்துகொண்டிருந்த மூன்று 
பேரில் நடுவில் வந்த சுந்தர புருருரின் முகம் தங்கள் திருமுகம் போலிருந்தது. அது 
உண்மையா, இல்லையா என்பதைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்...." 
  இளவரசர் 
மதுராந்தகர், "போதும் நிறுத்து!" என்றார்.அவருடைய குரலில் பீதி தொனித்தது. 
  வந்தியத்தேவன் சும்மா இருந்தான். 
  "நீ நிமித்தக்காரனா?" 
  "இல்லை ஐயா! அது என் தொழில் இல்லை. ஆனால் நடந்ததையும் சொல்லுவேன்; இனிமேல் 
நடக்கப் ோவதையும் சொல்லுவேன்." 
  மதுராந்தகர் சிறிது யோசித்துவிட்டு, 
"குதிரைமேல் நின்றபோது ஏதோ கத்தினாயே, அது என்ன?" என்று கேட்டார். 
  "அபாயம் 
என்று கத்தினேன்." 
  "யாருக்கு அபாயம்?" 
  "தங்களுக்குத்தான்!" 
  "என்ன அபாயம்?" 
  "பல அபாயங்கள் தங்களைச் சூழ்ந்திருக்கின்றன. அது 
போலவே பெரும் பதவிகளும் காத்திருக்கின்றன. அவற்றைக் குறித்துச் சாவகாசமாகச் 
சொல்லவேண்டும். என்னுடைய கத்தியைக்கூடத்தான் தங்கள் வீரர்கள் பிடுங்கிக் கொண்டு 
விட்டார்களே? தங்களுடன் என்னைக் கோட்டைக்குள் அழைத்துக் கொண்டு போனால்..." 
  "ஆகட்டும்; என்னுடன் வா! சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம்!" மதுராந்தகத் தேவர் 
தம்முடன் வந்த வீரர்களின் தலைவனைக் கைகாட்டி அருகில் அழைத்தார். 
  வந்தியத்தேவனைச் சுட்டிக்காட்டி அவனை அவர்களுடன் கோட்டைக்குள் அழைத்து 
வரும்படி கட்டளையிட்டார் அந்தக் கட்டளை அவ்வீரர் தலைவனுக்கு அவ்வளவு உற்சாகம் 
அளிக்கவில்லை. ஆயினும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தியத்தேவனையும் தன்னுடன் 
அழைத்துச் சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் பழையாறைக் கோட்டைக் கதவு 
திறந்தது.மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் வந்தியத்தேவனும் கோட்டைக்குள் 
பிரவேசித்தார்கள். 
  
					  
பக்க 
தலைப்பு  
  
					
 பதினாறாம் அத்தியாயம்  மதுராந்தகத் தேவர் 
இந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய 
மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். 
இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் 
அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற 
இளவரசரை, - பின்னால் பரகேசரி உத்தம சோழர் என்றும் பட்டப் பெயருடன் தஞ்சைச் 
சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை - நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் 
செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம். 
  
மதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் 
வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு 
முன்னால் சோழ நாட்டில் நீண்டகாலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை 
கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் 
செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் 
வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள். 
  தமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் 
சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் 
நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் 
தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் 
திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது. 
  கண்டராதித்தர் தமது 
அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் 
வேய்ந்தது பற்றித் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:-   
					
	"வெங்கோல் வேந்தன் தென்னன்நாடும் 
	   ஈழமும் கொண்ட திறல் 
	செங்கோற்சோழன்  கோழிவேந்தன் 
	   செம்பியன் பொன்னணிந்த 
	அங்கோல்வளையார் பாடியாடும் 
	   மணி தில்லையம்பலத்துள் 
	எங்கோல் ஈசன் எம்பிறையை என்றுகொல் 
	   எய்துவதே!"
 
					என்ற பாடலில் தம் 
					தந்தை பாண்டிய நாடும், ஈழமும் வென்றவர் என்பதைக் 
					குறிப்பிட்டிருக்கிறார். பதிகத்தின் கடைசிப் பாடலில் தமது 
					பெயரை அவர் குறித்திருப்பதுடன், தம்முடைய காலத்தில் சோழரின் 
					தலைநகரம் தஞ்சையானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.  
					
	"சீரான்மல்கு தில்லைச் செம்பொன்னம்பலத்தாடி தன்னைக் 
	காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த 
	ஆராவின் சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலைவல்லார் 
	பேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே!" 
 
					 
					கண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் 
					நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் 
					துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் 
					சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் 
					காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் 
					சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் 
					மகளை மணந்து கொண்டார். அவளுடைய புதல்வன் மதுராந்தகன், 
					கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. 
					இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் 
					கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி 
					அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் 
					கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் 
					காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, 
					மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் 
					தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியன் என்று 
					முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் 
					சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் 
					பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் 
					என்றும் சொல்லி விட்டார். 
  தமது குமாரன் மதுராந்தகனைச் 
					சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் 
					என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் 
					அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. 
  செம்பியன் 
					மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். 
					மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் 
					சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி 
					வளர்த்து வந்தாள். 
  ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத 
					வாக்காகக்கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் 
					அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு 
					உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. 
					இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை 
					மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் 
					இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி 
					தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள்.சிறிய தீப்பொறி அதிவிரைவில் 
					பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் 
					சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் 
					மதுராந்தகனை ஆதரித்துச் சதிசெய்ய முற்பட்டதையும் பார்த்தோம். 
					மதுராந்தகனைச் சிம்மாசனதில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் 
					மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் 
					மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. 
					சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், 
					தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் 
					எண்ணத் தொடங்கினான். அதிலும் இப்போது சுந்தர சோழர் 
					நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி இராஜ்யத்தைக் கவனிக்க 
					முடியாத நிலைமையில் இருந்தார் அல்லவா? ஆதலின் ஏன் தான் 
					உடனடியாகத் தஞ்சாவூர் சிங்காசனமேறி இராஜ்ய பாரத்தை ஏற்றுக் 
					கொள்ளக்கூடாது? 
  இவ்விதம் மதுராந்தகனு்கு ஏற்பட்டிருந்த 
					அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது 
					பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் 
					காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர 
					சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் 
					செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் 
					உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் 
					வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் 
					சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். 
					சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் 
					புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி 
					உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் 
					தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் 
					சிறிதளவு மாறியிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் 
					பிறகு இளவரசர் மதுராந்தகருத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே 
					சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே 
					நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் 
					மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் 
					சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் 
					தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி 
					தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் 
					பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை 
					விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் 
					வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி 
					ஏற்றுக்கொள்வார்கள்? ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் 
					பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய 
					மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, 
					பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்? 
  
					ஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் 
					தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். 
					மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. 
					இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. 
					ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். 
					ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக 
					விரும்பவில்லை. 
  இப்போது, செம்பியன் மாதேவியே 
					தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய 
					விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் 
					திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் 
					தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். 
					அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் 
					போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் 
					சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி 
					அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார். 
  
					 
பக்க 
தலைப்பு  
  
					
 பதினேழாம் அத்தியாயம்  திருநாரையூர் நம்பி 
மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் 
வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். ஆரியப் படை வீடு, பம்பைப்படை 
வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு முதலான வீரர்கள் வாழும் பகுதிகளின் வழியாக 
ஊர்வலம் சென்றது. பிறகு கடை வீதிகள், குடிமக்கள் வாழும் பகுதிகள், ஆலயங்கள், 
ஆலயங்களைச் சூழ்ந்திருந்த சந்நிதித்தெருக்கள் முதலியவற்றின் வழியாகச் சென்றது. 
ஆங்காங்கு ஒரு சிலர் வீட்டு வாசல்களில் நின்று பார்த்தார்கள். ஆனால் மக்களிடையே 
எவ்வித உற்சாகமும் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். முதன்முறை அவன் 
இந்நகருக்குள் வந்திருந்தபோது நகரம் கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இப்போது வீதிகள் 
ஜன சூனியமாயிருந்தன. பழையாறை பாழடைந்த நகரமோ என்று சொல்லும்படி இருந்தது. 
மதுராந்தகத் தேவர்மீது பழையாறை மக்கள் அவ்வளவாக விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்பது 
வெட்ட வௌிச்சமாகத் தெரிந்தது. வந்தியத்தேவனுக்கு இது ஒரு விதத்தில் 
சௌகரியமாயிருந்தது. தன் முகம் தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப் பார்க்கும்படி 
நேரவும் அதனால் தொல்லை ஏற்படவும் இடமில்லையல்லவா? 
  இவர்கள் சோழ மன்னர்களின் புராதன அரண்மனை வீதியை நெருங்கிக் கொண்டிருந்த 
சமயத்தில் இன்னொரு பக்கமிருந்து பெரியதோர் ஊர்வலம் வந்து கொண்டிருந்ததைக் 
கண்டார்கள். அந்த ஊர்வலத்தின் மத்தியில் திறந்த பல்லக்கு ஒன்று வந்து 
கொண்டிருந்தது. அதில் இருந்தவர் யாரென்பது நன்கு தெரியவில்லையாயினும் யாரோ 
சிவனடியார் என்றும் இளம் பிராயத்தினர் என்றும் தோன்றியது. சிவிகைக்கு முன்னும் 
பின்னும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. கையில் தாளங்களை வைத்து இனிய ஜங்கார ஓசையை 
எழுப்பிக் கொண்டு சிலர் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் பாடிக்கொண்டு வந்தார்கள். 
  இடையிடையே "திருச்சிற்றம்பலம்", "ஹரஹர மகாதேவா!" என்ற கோஷங்களுடன் 
"திருநாரையூர் நம்பி வாழ்க!" "பொல்லாப் பிள்ளையாரின் அருட்செல்வர் வாழ்க!" என்ற 
கோஷங்களும் எழுந்து வானை அளாவின. 
  மதுராந்தகர் அந்த ஊர்வலத்தை அசூயை கொண்ட 
கண்களினாலேயே பார்த்தார். பக்கத்திலிருந்து வீரனைப் பார்த்து ஏதோ கேட்டார் "ஆம்; 
பல்லக்கிலே வருகிறவர்தான் திருநாரையூர் நம்பி!" என்று அவன் மறுமொழி கூறினான். 
  "இருந்தாலும் என்ன தடபுடல்! இந்த ஊரில் நம்மை யாரும் கேட்பாரைக் காணோம்! 
இந்த நம்பியைச் சூழ்ந்து கொண்டு ஜனங்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே?" 
என்றார் மதுராந்தகத் தேவர். 
  அந்த ஊர்வலம் இவர்கள் இருந்த இடத்திலிருந்து 
சற்று தூரத்திலேயே சென்றது. ஆயினும் பல்லக்கின் அருகில் வந்தவர்களில் ஒருவர், 
முன்னொரு சமயம் கொள்ளிட நதியைப் படகிலே தாண்டியபோது ஆழ்வார்க்கடியானோடு சண்டையிட்ட 
வீரசைவர் என்று வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. 
  மதுராந்தகத்தேவரும் அவருடைய 
பரிவாரங்களும் அரண்மனை வீதியை அடைந்து, செம்பியன் மாதேவியின் மாளிகையை 
அடைந்தார்கள். அரண்மனை வாசலிலேயே பெரிய பிராட்டி நின்று கொண்டிருந்தார். யாரையோ 
வரவேற்பதற்கு ஆயத்தமாக அவர் காத்திருந்ததாய்த் தோன்றியது. மதுராந்தகர் 
ரதத்திலிருந்து இறங்கி அன்னையின் அருகில் சென்று வணங்கினார். வணங்கிய மதுராந்தகரை 
உச்சி முகந்து அன்னை ஆசி கூறினார். 'மகனே! நல்ல தருணத்தில் வந்து விட்டாய்! 
திருநாரையூர் நம்பி வந்து கொண்டிருக்கிறார். அவசியமானால் சற்றுச் சிரம பரிகாரம் 
செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர்!" என்று கூறினார். 
  மதுராந்தகரின் முகம் பொலிவு இழந்ததை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். 
பாவம்! தம்மை வரவேற்பதற்காகவே பெரிய பிராட்டி அரண்மனை வாசலில் காத்திருந்ததாக 
மதுராந்தகர் எண்ணியிருந்தார் போலும். என்ன ஏமாற்றம்? பல்லக்கிலே பின்னால் ஊர்வலமாக 
வரும் சிவனடியாரை வரவேற்பதற்குத்தான் அவர் காத்திருந்தார் என்று தெரிந்ததும் 
மதுராந்தகருக்கு, நாளைக்குச் சோழ சிம்மாசனத்தில் ஏறலாம் என்று ஆசைப்பட்டுக் 
கொண்டிருப்பவருக்கு, - மிக்க ஏமாற்றமாயிருப்பது இயல்புதானே? 
  அரண்மனையில் 
மதுராந்தகருக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள். 
மதுராந்தகர் உடை மாற்றுதல் முதலிய காரியங்களைச் சாகாசமாகவே செய்து கொண்டிருந்தார். 
சபாமண்டபத்துக்குப் போக அவ்வளவாக ஆர்வம் கொண்டிருந்ததாய்த் தெரியவில்லை. 
அன்னையிடமிருந்து ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தனர். கடைசியாக மதுராந்தகர் 
புறப்பட்டார். புறப்பட்டபோது, "அந்த நிமித்தக்காரன் எங்கே?" என்று வினவினார். 
அவருடன் சபாமண்டபத்துக்குப் போகத் துடிதுடித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன்,"இதோ 
ஆயத்தமாயிருக்கிறேன்" என்றான். அவனையும் இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு 
மதுராந்தகர் சபாமண்டபம் போய்ச் சேர்ந்தார். 
  மண்டபத்தில் ஏற்கனவே சபை 
கூடியிருந்தது. ஒரு பக்கத்தில் செம்பியன் மாதேவியும், குந்தவைப் பிராட்டியும், 
மற்றும் சில அரண்மனைப் பெண்களும் வீற்றிருந்தார்கள். சபையில் நடுநாயகமாகப் 
போட்டிருந்த பீடத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார் அவர் இளம் பிராயத்தவர். விபூதி 
ருத்ராட்சதாரி, அவருடைய திருமுகம் களையுடன் பொலிந்தது. அவர் எதிரில் ஓலைச் சுவடிகள் 
சில கிடந்தன. கையிலும் ஓர் ஓலைச் சுவடியை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அவர் 
அருகில் விபூதி ருத்ராட்சதாரியான பெரியவர் ஒருவர் பரவசமாக நின்றார். இன்னும் 
சபாமண்டபத்தில் ஜனங்கள் நிறைந்திருந்தார்கள். இளைஞர் பல்லக்கில் வந்தவர்தான் 
என்பதையும், பக்கத்திலே நின்றவர் முன்னொரு தடவை தான் கொள்ளிடத்துப் படகில் 
பார்த்தவர் என்பதையும் வந்தியத்தேவன் கண்டு கொண்டான். அவனுடைய கண்கள் சபா 
மண்டபத்தில் அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றாலும், கடைசியில் பெரிய பிராட்டிக்கு 
அருகில் வீற்றிருந்த குந்தவையின் திருமுகத்திலேயே வந்து நின்றன.குந்தவை தேவியின் 
கண்களோ முதலாவது முறை அவனைப் பார்த்ததும் வியப்புக்கு அறிகுறியைக் காட்டின. பிறகு 
அவன் பக்கம் இளவரசியின் கண்கள் திரும்பியதாகவே தெரியவில்லை. தன்னை ஒரு வேளை 
தெரிந்து கொள்ளவில்லையோ என்று கூட அவனுக்கு ஐயம் உண்டாயிற்று. 
  மதுராந்தகர் 
சபா மண்டபத்தில் பிரவேசித்ததும் பெண்மணிகளை தவிர மற்றவர்கள் எழுந்து மரியாதை 
செய்தார்கள். மதுராந்தகர் தம் பீடத்தில் அமர்ந்ததும் மற்றவர்களும் அவரவர்களுடைய 
இடத்தில் உட்கார்ந்தார்கள். 
  செம்பியன் மாதேவி மதுராந்தகரைப் பார்த்து, 
"குமாரா! இந்த இளம்நம்பி திருநாரையூரைச் சேர்ந்தவர். அவ்வூரிலுள்ள பொல்லாப் 
பிள்ளையாரின் பூரண அருளைப் பெற்றவர். இதுவரையில் யாருக்கும் கிடைக்காத தேவாரப் 
பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. முன்னொரு காலத்தில் நமது சோழ 
குலத்தில் உதித்த மங்கையர்க்கரசியர் பாண்டிமா நாட்டின் மகாராணியாக விளங்கினார். 
அவருடைய அழைப்புக்கிணங்கி ஆளுடைய பிள்ளையார் ஞானசம்பந்தர் மதுரைமா நகருக்குச் 
சென்றார். அங்கே சமணர்களை வாதப் போரில் வென்றார். அச்சமயம் மதுரைமாநகரில் சம்பந்த 
சுவாமி பாடிய பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. அந்தப் பதிகங்களில் 
நமது சோழகுலத்து மாதரசியைப் பற்றியும் சம்பந்தர் பாடியிருக்கிறார். அந்தப் 
பாடல்களைக் கேட்கும் போது எனக்கு உடல் பூரித்துப் பரவசமாகிறது. உன் தந்தை இருந்து 
கேட்டிருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியடைந்திருப்பார். நீயாவது கேள்!" என்று சொன்னார். 
  மதுராந்தகர், "கேட்கிறேன், தாயே! பதிகத்தை ஆரம்பிக்கட்டும்" என்றார். ஆனால் 
அவருடைய முகம் அவ்வளவாக மலர்ந்திருக்கவில்லை. அவருடைய உள்ளம் வேறு எங்கேயோ 
இருந்தது. திருநீறு, ருத்ராட்சம் அணிந்த சாதாரணச் சிறுவன் ஒருவனைப் பெரியதொரு 
பீடத்தில் நடுநாயகமாக அமர்த்தித் தடபுடல் செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. 
அன்னையைத் திருப்தி செய்வதற்காகப் பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார். 
  பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி தம் 
கையிலிருந்த ஓலைச் சுவடியிருந்து படிக்கத் தொடங்கினார். ஞானசம்பந்தர் மதுரை 
மாநகரைப் பார்த்ததும், "சிவபக்திச் செல்வத்திற் சிறந்த மங்கையர்க்கரசியார் வாழும் 
பதி அல்லவா இது?" என்று வியந்து பாடிய பதிகங்களை முதலில் அவர் பாடினார்.  
					 
					
	"மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை 
	   வரிவளைக் கைம் மடமானிப் பங்கயச்
	செல்வி பாண்டிமா தேவி 
	   பணிசெய்து நாடொரும் பரவப் 
	பொங்கழலுருவன் பூத நாயகனால் 
	   வேதமும் பொருள்களும் அருளி 
	அங்கயர்க்கண்ணி தன்னொடும் 
	   அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே!" 
	"மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் 
	   மணிமுடிச் சோழன்றன் மகளாம் 
	பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி 
	   பாங்கினாற் பணி செய்து பரவ 
	விண்ணுளோர் இருவர் கீழொடுமேலும் 
	   அளப்பரிதாம் வகை நின்ற 
	அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற 
	   ஆலவாயாவதும் இதுவே!" 
 
					என்னும் 
					பாடல்களைக் கேட்டபோது செம்பியன் மாதேவியின் கண்களிலிருந்து 
					முத்து முத்தாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. அத்தகைய 
					மங்கையர்க்கரசியைப் பெற்ற குலத்தில் தாமும் வாழ்க்கைப்பட்டு, 
					மகாராணியாக வாழ்ந்திருக்கக் கொடுத்து வைத்திருந்த பூர்வ ஜன்ம 
					பாக்கியத்தை எண்ணி எண்ணி மனம் பூரித்து மகிழ்ந்தார். 
					மதுராந்தகருக்கோ மேற்கூறிய பாடல்களில் 'மண்ணெலாம் நிகழ 
					மன்னனால் மன்னும் மணி முடிச் சோழன்' என்னும் வரி மட்டுமே 
					மனத்தில் பதிந்தது. அத்தகையப் புராதனப் பெருமை வாய்ந்த சோழர் 
					குலத்து மணிமகுடம் தன் சிரசை அலங்கரிக்க வேண்டியதிருக்க, 
					இன்னொருவர் அதை அபகரித்துக் கொண்டிருப்பதை நினைத்தபோது 
					அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. 
  சம்பந்தர் 
					மங்கையர்க்கரசியாரைப் போய்ப் பார்க்கிறார். பாண்டிமாதேவி 
					அந்தப் பாலகரைப் பார்த்து, "ஐயோ! இந்த இளம் பிள்ளை எங்கே? 
					பிரம்ம ராட்சதர்கள் போன்ற சமணர்கள் எங்கே? இந்தப் பிள்ளை 
					அவர்களுடன் எப்படி வாதப்போரிட்டு வெல்ல முடியும்?" என்று 
					கவலையுறுகிறார். அதையறிந்த சம்பந்தர் பாண்டிமாதேவியைப் 
					பார்த்துச் சொல்லுகிறார். 
  
					
	"மானினேர் விழி மாதராய் வழுதிக்கு 
	   மாபெருந் தேவி கேள்! 
	பானல்வாயொரு பாலன் ஈங்கிவன்
	   என்று நீ பரிவெய் திடேல்! 
	ஆனை மாமலை யாதியாய 
	   இடங்களிற் பல அல்லல்சேர் 
	ஈனர்கட் கௌியேன் அலேன்திரு 
	   ஆலவாயரன் நிற்கவே!" 
 
					என்ற பதிகத்தைத் 
					திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய போது செம்பியன் மாதேவி 
					தம்மையே மங்கையர்க்கரசியாகவும், பதிகம் பாடிய நம்பியையே ஞான 
					சம்பந்தராகவும் பாவனை செய்து கொண்டு இந்த உலக நினைவையே மறந்து 
					மனம் பூரித்தார். 
  மதுராந்தகத் தேவரோ, "ஆம் நான் இளம் பிராயத்துச் சிறுபிள்ளைதான்! ஆனால் 
					திருக்கோவலூர் மலையமானுக்கும், கொடும்பாளூர் பூதி விக்கிரம 
					கேசரிக்கும், அவர்களுடைய ஆதரவைப் பெற்ற சுந்தர சோழரின் 
					புதல்வர்களுக்கும் அஞ்சி விட மாட்டேன். சம்பந்தருக்கு ஆலவாயரன் 
					அருள் இருந்தது போல் எனக்கும் பழுவேட்டரையர் உதவி இருந்தது!" 
					என்று எண்ணிக் கொண்டார். 
  வந்தியத்தேவனுடைய செவிகளில் 
					பாடல் ஒன்றும் புகவேயில்லை. அவனுடைய கண்களும் கருத்தும் 
					குந்தவை தேவியிடமே முழுவதும் ஈடுபட்டிருந்தன. இளைய பிராட்டி 
					ஒருகால் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லையா, தெரிந்து கொண்டும் 
					பாராமுகமா, அல்லது தன்னிடம் ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றி 
					விட்டு வந்து உடனே சொல்லவில்லை என்ற கோபமா? என்று இப்படி அவன் 
					மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அத்துடன் இளையபிராட்டியைத் 
					தனிமையில் எப்படிச் சந்திப்பது, சந்தித்துச் செய்தியை எப்படிச் 
					சொல்லுவது என்றும் அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். 
  
					பாடல்கள் முடிவடைந்ததும் செம்பியன் மாதேவி நம்பியாண்டாருடன் 
					வந்திருந்த பெரியவரைப் பார்த்து, "ஐயா இந்த இளம்பிள்ளையைப் 
					பார்த்தால் ஞானசம்பந்தரே மீண்டும் வந்து அவதரித்திருப்பது 
					போலத் தோன்றுகிறது. இவரை அழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் ஊர் 
					ஊராகச் செல்லுங்கள். அங்கங்கே கிடைக்கும் தெய்வீகமான தேவாரப் 
					பதிகங்களைச் சேகரித்துக் கொண்டு வாருங்கள். அப்பர் 
					பதிகங்களையும், சம்பந்தர் பதிகங்களையும், சுந்தர மூர்த்தியின் 
					பாடல்களையும் தனித்தனியாகத் தொகுக்க வேண்டும். சிவாலயங்கள் 
					எல்லாவற்றிலும் தினந்தோறும் பாடச் செய்ய வேண்டும். இது என் 
					கணவருடைய விருப்பம். அதை என் வாணாளில் நிறைவேற்றிப் பார்க்க 
					ஆசைப்படுகிறேன். நீங்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு வேண்டிய 
					சிவிகைகள், ஆட்கள், பரிவார சாதனங்கள், எல்லாம் அளிப்பதற்கு 
					ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியின் அநுமதியைக் கோரி என் 
					குமாரனிடமே செய்தி சொல்லி அனுப்புகிறேன்!" என்றார். அச்சபையில் 
					அப்போது எழுந்த கோலாகலமான கோஷங்கள் மதுராந்தகரின் செவிகளுக்கு 
					நாராசமாயிருந்தன. 
  
					 
பக்க 
தலைப்பு  
  
					
 பதினெட்டாம் அத்தியாயம்  நிமித்தக்காரன் 
நம்பியாண்டார் நம்பியை வரவேற்பதற்காகக் 
கூடியிருந்த சபை கலையும் சமயத்தில் பெரிய மகாராணி தம் செல்வக் குமாரனிடம், "மகனே! 
நான் இவர்களை அரண்மனை வாசல் வரையில் சென்று வழியனுப்பி விட்டு வருகிறேன். அதற்குள் 
நீ உன் இருப்பிடம் சென்று சிரமபாரிகாரம் செய்து கொண்டு திரும்பி வா! உன்னிடம் ஒரு 
முக்கியமான விஷயம் பேச வேண்டும்!" என்றார். 
  "ஆகட்டும், தாயே" என்று 
சொல்லிவிட்டு மதுராந்தகர் புறப்பட்டார். அரண்மனையில் அவர் தங்கியிருந்த பகுதிக்குப் 
போனார். அவருடைய உள்ளத்தில் ஆத்திரமும், அசூயையும் கொழுந்து விட்டு எரிந்தன. யாரோ 
வழியோடு போகிற ஆண்டிப் பண்டாரத்துக்கு எவ்வளவு தடபுடலான மரியாதைகள்! இராஜ குலத்தின் 
கௌரவத்துக்கே தம் தாயினால் பங்கம் நேர்ந்துவிடும் போலல்லவா இருக்கிறது! 
பழுவேட்டரையர்கள் தம் அன்னையைப் பற்றி அடிக்கடி குறை சொல்லுவதில் வியப்பு 
ஒன்றுமில்லை. உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு 
யார் வந்தாலும் பெரிய மகாராணிக்குப் போதும்! பதிகம் ஒன்றும், அவன் பாடிக்கொண்டு 
வந்துவிடவேண்டும்; அல்லது கோயில், குளம், திருப்பணி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட 
வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்து இராஜங்க பொக்கிஷத்தையே இவர் 
சூனியமாக்கி விடுவார் போலிருக்கிறது! போதாதற்கு இளவரசி குந்தவை ஒருத்தி எப்போதும் 
அருகில் இருக்கிறாள். கோவில் திருப்பணி செய்து மிச்சம் ஏதேனும் இருந்தால், அதை 
மருத்துவச் சாலை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்டு விடுகிறாள். இப்படியெல்லாம் இவர்கள் 
செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும்? சோழ 
சிங்காதனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் 
முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும்? 
  மறுபடியும் பெரிய மகாராணிக்கு மகனிடம் ஏதோ அந்தரங்கம் பேசவேண்டுமாம்! என்ன 
அந்தரங்கத்தைச் சொல்லப் போகிறாரோ, தெரியவில்லை! அஷ்டாங்க யோகம், இயம, நியம 
நிதித்தியாசனம் ஆகியவற்றைக் குறித்து ஒருவேளை பேச ஆரம்பித்து விடுவார். கண்களின் 
பார்வையை மூக்கு நுனியில் செலுத்திக் குண்டலினியை மேல் நோக்கிக் கொண்டு வருவதினால் 
அறுபத்து நாலு கலைகளையும் கல்லாமல் கற்கும் முறையைப் பற்றி ஒருவேளை உபதேசிக்க 
ஆரம்பித்து விடுவார்! அல்லது நடராஜருடைய ஆனந்தக் கூத்தின் உட்பொருளைக் குறித்தும் 
அவருடைய சடா மகுடம் எதைக் குறிக்கிறது, அவர் அணிந்திருக்கும் பிறை எதைக் 
குறிக்கிறது என்பவை குறித்தும் சொல்ல ஆரம்பித்துவிடுவார் இப்படியெல்லாம் சொல்லிச் 
சொல்லித்தான் நம்மை உலகம் அரைப்பைத்தியம் என்று பரிகசிக்கும்படியான நிலைக்குக் 
கொண்டு வந்துவிட்டார். அம்மாதிரிப் பேச்சுகளுக்கு இனிமேல் இடம் கொடுக்கக்கூடாது. 
அவர் பேசித்தான் தீருவேன் என்றாலும், நம் காதிலே வாங்கிக் கொள்ளக்கூடாது... 
  இருக்கட்டும்! அன்னை மீண்டும் கூப்பிட்டு அனுப்புவதற்குள் அந்த 
நிமித்தக்காரனிடம் பேசியாக வேண்டும்.யாருமே அறிந்திருக்க முடியாத இரண்டு மர்மமான 
செய்திகளை அவன் எப்படி அறிந்து கொண்டான்? அதை நினைத்துப் பார்த்தால் ஒரே வியப்பாக 
அல்லவா இருக்கிறது! அதிசயமான சக்தி அவனிடம் ஏதோ இருக்கவேண்டும். சென்றுபோன 
நிகழ்ச்சிகளை அறிந்து கூறியது போல் வருங்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் 
அவனால் கூற முடியுமா? - அவனையே கேட்டுப் பார்த்து விடலாம். 
  சபையிலிருந்து 
தாம் புறப்படும் சமயத்தில் நிமித்தக்காரன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு 
தயங்கித் தயங்கி நிற்பதை மதுராந்தகர் கவனித்தார்.அவனைத் தம்முடன் வரும்படி 
சமிக்ஞையினால் கட்டளையிட்டார். வந்தியத்தேவனுடைய கண்கள் இளவரசியின் முகத்தைப் 
பார்க்கவும், நயன பாஷையினால் செய்தி உணர்த்தவும் ஆர்வம் கொண்டிருந்தன. ஆனால், 
இளவரசி மீண்டும் அவனைத் திரும்பிக்கூடப் பாராமல் பெரிய மகாராணியுடன் போய்விட்டாள். 
  இது என்ன? தன்னை இளவரசி அடியோடு மறந்து விட்டாரா? அப்படித்தான் இருக்க 
வேண்டும். எத்தனையோ ஆயிரமாயிரம் பேரை அவர் தினம் தினம் பார்த்து வருகிறார். ஒரு 
தடவை - இரண்டு தடவை பார்த்த தன்னுடைய முகம் அவர் மனத்தில் எவ்விதம் நினைவிருக்கும்? 
நான் பைத்தியக்காரன்; இரவும் பகலும் எத்தனை எத்தனையோ விபரீத சம்பவங்கள், 
அபாயங்களிடையிலும் இளவரசியின் திருமுகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன். இளவரசி 
எதற்காக என்னை நினைத்திருக்க வேண்டும்? தேனீ தேனை விரும்பி மலரைச் சுற்றிச் சுற்றி 
வருகிறது. மலருக்குத் தேனீயைப் பற்றி என்ன கவலை? மலர் சூரியனைப் பார்த்துப் புன்னகை 
புரிந்து கொண்டிருக்கிறது. குந்தவையின் முகமலரை விரியச்செய்யும் சூரியதேவன் யாரோ? 
  ஆயினும் தன்னை எதற்காக அனுப்பினாரோ, அந்தச் செய்தியைத் தெரிந்து 
கொள்வதிலேகூட அவருக்கு ஆர்வம் இல்லாமலா போய்விடும்? தனக்கு முன்னாலே யாராவது வந்து 
சொல்லியிருப்பார்களோ? அது எப்படி முடியும்? இல்லை, இல்லை! அவர் ஏதோ கவலையில் 
ஆழ்ந்திருக்கிறார் என்பதையும் அவர் முகம் நன்றாகக் காட்டியது. தன்னை அடையாளம் கண்டு 
கொள்ளாததுதான் காரணமாயிருக்க வேண்டும். அந்தரங்க ஓலை எடுத்துக்கொண்டு இலங்கை சென்ற 
தூதன், மதுராந்தகத் தேவரின் பரிவாரங்களில் ஒருவனாகச் சபைக்கு வந்தால் எப்படி 
அடையாளம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள முடியும்? ஆகா! இளவரசியைச் சந்திது 
அந்நகரில் நுழைவதற்குத் தான் கையாண்ட யுத்திகளைப்பற்றிச் சொல்லும் போது அவர் 
எவ்வளவு ஆச்சரியம் அடைவார்? ஆனால் சந்திப்பது எப்படி? செய்தி சொல்லி அனுப்புவது 
எப்படி?... 
  "நிமித்தாரா! என்ன யோசனையில் ஆழ்ந்திருக்கிறாய்?" என்ற 
மதுராந்தகரின் குரலைக் கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டான்.அதற்குள்ளே அவர்கள் 
அரண்மனையில் மதுராந்தகத் தேவருடைய தனி அறைக்கு வந்திருந்தார்கள். 
  அந்த 
நாளில் சோதிடர்கள், ஆரூடக்காரர்கள், ரேகை பார்த்துக் குறி சொல்வோர், நிமித்தக்காரர் 
என்று வருங்காலத்தைப் பற்றிச் சொல்வோர், பலர் இருந்தனர். சோதிடர்கள் ஜாதகம் 
பார்த்ததும், கிரகங்கள் நட்சத்திரங்களின் சஞ்சாரத்தைக் கணித்தும், ஜோதிடம் 
சொல்வார்கள். ஆரூடக்காரர்கள் தங்களிடம் வருவோர் பேசும் சொற்களைக் கொண்டும், ஆரூடம் 
கேட்கும் வேளையைக் கொண்டும், நூற்றெட்டில் ஓர் இலக்கம் சொல்லும்படி கேட்கும் சுபா 
சுபங்களைப் பற்றிப் பொதுப்படையாகச் சொல்லுவார்கள். ரேகை சாஸ்திரமோ அன்றைக்கு 
இருந்தபடியே இன்றைக்கும் இருந்து வருகிறது. 
  நிமித்தக்காரர்கள் என்பவர்கள் 
ஞான திருருஷ்டி படைத்த முனிபுங்கவர்களைப் போல் அகக் கண்ணினால் பார்க்கும் ஆற்றல் 
உடையவர்கள். அவர்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டு, அகக் கண்ணின் 
உதவியினால் முக்கால நிகழ்ச்சிகளையும் நேரில் பார்ப்பது போல் பார்த்து உரைப்பார்கள். 
சிலர் புறக் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து சொல்வார்கள்; இன்னும் சிலர் 
தீபப்பிழம்பை உற்று நோக்கிய வண்ணம் மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு, நடந்துபோன, 
நடக்கப்போகிற நிகழ்ச்சிகளை அந்தத் தீபப் பிழம்பில் பார்த்துச் சொல்வார்கள். இன்னும் 
சிலருக்கு எதிர்ப்பட்டவர்களின் முகத்தைப் பார்க்கும் போதே அவர்களுடைய சென்றகால 
வரலாறும், வருங்கால வரலாறும் மனத்தில் தோன்றிவிடும் இத்தகைய அதிசய சக்திகள் 
படைத்தவர்களைத் தவிர காக்கை இடம் போயிற்றா வலம் போயிற்றா, என்பது முதலான வௌி 
நிகழ்ச்சிகளைக் கொண்டு சகுன பலன்களை உரைக்கும் சாதாரண நிமித்தக்காரர்களும் உண்டு. 
  வந்தியத்தேவன் தன்னை "நிமித்தக்காரா!" என்று மதுராந்தகர் அழைத்ததும் 
திடுக்கிட்டான். இளவரசர் மேலும் தன்னை என்னென்ன கேள்விகள் கேட்பாரோ தெரியவில்லை. 
அவற்றுக்கெல்லாம் சாமர்த்தியமாகத் தக்க விடை கூறிச் சமாளித்துக் கொள்ளவேண்டும். 
கடவுளே! இங்கிருந்து, இவரிடமிருந்து தப்பித்துச் செல்வது எப்படி? இளவரசியைத் 
தனியாகச் சந்தித்துப் பேசுவது எப்படி?... 
  "வேறு யோசனை ஒன்றுமில்லை, ஐயா! 
நான் நிமித்தக்காரானாயிருப்பதைக் காட்டிலும் இப்போது சபையில் பார்த்த 
பிள்ளையைப்போல் நாலு பதிகங்களைக் கற்றிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! எனக்கும் 
எவ்வளவு உபசார மரியாதையெல்லாம் நடக்கும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்!" 
என்றான். 
  "யார் வேண்டாம் என்றார்கள்! நீயும் தேவாரத்திருப்பதிகம் கற்றுக் 
கொண்டு பாடுவது தானே!" 
  "இன்னாருக்கு இன்னபடி என்று எழுதியிருப்பது போலத் 
தானே நடக்கும் இளவரசே! வீண் ஆசைப்பட்டு என்ன பயன்?" 
  "பதிகம் பாடிய அந்தப் 
பிள்ளையைப்பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது?அவனுடைய யோகம்..." 
  "மிக உயர்ந்த 
யோகம். சிவ யோகமும், இராஜயோகமும் கலந்தது. மன்னர்களும், மகாராணிகளும் அந்தப் 
பிள்ளைக்கு மரியாதை செய்வார்கள் மகான்களுடைய பெயருடனே அவருடைய பெயரும் சேர்ந்து 
இப்பூவுலகத்தில் நெடுங்காலம் விளங்கும்". 
  வல்லவரையன் ஏதோ குருட்டாம் 
போக்காக இவ்விதம் கூறினான். ஆனால் மதுராந்தகருடைய மனத்தில் அவனுடைய வார்த்தைகள் 
பெருங்கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. 
  "என்னுடைய யோகம் எப்படி என்று சொல், 
பார்க்கலாம்!" 
  "அவனுடைய யோகத்தைப் போலவே தங்கள் யோகமும் சிவயோகமும் இராஜ 
யோகமும் கலந்தது.ஆனால் இன்னும் மேன்மையானது!" 
  "அப்பனே! கொஞ்சம் விவரமாகச் 
சொல், பார்க்கலாம்." 
  வல்லவரையன் என்ன சொல்வது என்று யோசிக்க அவகாசம் 
வேண்டினான். ஆகையால், "இப்படியெல்லாம் அவசரப்பட்டால் முடியுமா? விவரமாகச் சொல்ல 
வேண்டுமானால், தீபம் ஏற்றி, வைத்து அகிற் புகை போடச் சொல்லவேணும், தாங்களும் 
தீபத்துக்குப் பின்னால் உட்கார்ந்து கொள்ளவேணும் அப்போது வருங்கால நிகழ்ச்சிகளை 
நடக்கப் போகிறபடியே பார்த்துச் சொல்வேன். 
  மதுராந்தகர் பரபரப்பு அடைந்து 
தீபம் ஏற்றி வைக்கும் படியும் அகிற் புகை போடும்படியும் கட்டளையிட்டார். 
தீபத்துக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு மணைகளும் போடப்பட்டன. மதுராந்தகர் ஒரு 
மணையில் உட்கார்ந்த பின்னர் அவருக்கெதிரே வந்தியத்தேவனும் உட்கார்ந்தான். 
  கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய 
வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பிறகு அவன் உடம்பை ஒரு 
குலுக்கு குலுக்கிக் கொண்டு ஆவேசம் வந்தவனைப் போல் நடித்தான். வெறியாட்டக்காரனைப் 
போல் அவன் உடல் நடுங்கிற்று. 
  பின்னர், கண்களை அகலத் திறந்தான். எதிரில் 
இருந்த தீபத்தின் பிழம்பை உற்றுப் பார்க்கலானான். சற்று நேரம் பார்த்துவிட்டு 
மதுராந்தகத் தேவரை நோக்கி, "ஐயா! தங்களைப்பற்றி அலட்சியமாக நான் ஏதாவது 
சொல்லியிருந்தால் மன்னிக்கவேண்டும். தங்களுடைய யோகம் சாதராண யோகம் அல்ல. அங்கே 
சபையில் உட்கார்ந்து பாட்டுப் படித்த பிள்ளையின் யோகத்துக்கும், தங்கள் 
யோகத்துக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை. அந்தப் பிள்ளையின் யோகம் அரசர்களின் 
ஆதரவினால் ஏற்படும் ராஜயோகம்; தங்களுடைய யோகத்தைப் பற்றி இந்தத் தீபத்திலே நான் 
காண்பது - ஆகா என்னையே பிரமிக்கச் செய்கிறது!" என்றான். 
  "அப்படி என்ன 
காண்கிறாய்? சொல்! சொல்!" என்றார் மதுராந்தகர். 
  "ஆகா! எப்படிச் சொல்வேன்? 
சொல்வதற்கு வார்த்தைகள் எனக்குக் கிடைக்கவில்லை! கண்ணுக்கெட்டிய தூரம் மணிமுடி 
தரித்த மன்னர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள். மந்திரிகளும், சாமந்தர்களும், 
அதிகாரிகளும் வரிசை வரிசையாக நிற்கிறார்கள். அவர்களுக்கு அப்பால், முடிவில்லாத 
கடலைப்போல், சேனா வீரர்கள் அலைமோதிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்த 
வேல்களும், வாள்களும் மார்பில் தரித்த கவசங்களும் ஒளிவீசிக் கண்ணைப் பறிக்கின்றன. 
தூரத்திலுள்ள மாட மாளிகைகளின் மேல் ஜனங்கள் நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். கோட்டை 
கொத்தளங்கள் மீதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாய் நிற்கின்றனர். 
அவர்கள்...அவர்கள்...ஏதேதோ கோரும் செய்கிறார்கள்!" 
  "சொல், சொல்! மக்கள் 
என்ன கோருமிடுகிறார்கள்?" 
  "இளவரசே! பல்லாயிரம் மக்களின் கோருமாகையால் 
நன்றாகக் கேட்கவில்லை. 'சோழ குலத் தோன்றல் வாழ்க! திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க! 
மன்னாதி மன்னர் வாழ்க! என்றெல்லாம் கோஷிப்பது போலத் தோன்றுகிறது." 
  "அப்புறம் என்ன?" 
  "மக்கள் திரண்டு கூட்டம் கூட்டமாக முன்னேறி 
வருகிறார்கள். வேலும் வாளும் பிடித்த வீரர்கள் அவர்களைத் தடுத்து 
நிறுத்துகிறார்கள். சிறிது நேரம் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது." 
  "சரி, சரி! கூட்டம் எதற்காகக் கூடியிருக்கிறது? அதைச் சொல்!" 
  "அதைத்தான் நானும் இப்போது பார்க்கப் போகிறேன். கூட்டத்தின் மத்தியில் 
புலிக்கொடி வானளாவிப் பறக்கிறது. அதற்குக் கீழே மீனக்கொடி, விற்கொடி, பனைக்கொடி 
சிங்கக்கொடி, ரிஷபக்கொடி, பன்றிக்கொடி ஆகியவை தாழ்வாகப் பறக்கின்றன. மயன் 
மாளிகையைப் போன்ற சபாமண்டபத்தின் நடுவிலே நவரத்தின கசிதமான தங்கச் சிங்காதனம் 
போட்டிருக்கிறது. அருகில் ஒரு பீடத்தில் கோடி சூரியப் பிரகாசமான வைர வைடூரியங்கள் 
பதித்த மணிமகுடம் ஒன்று வைத்திருக்கிறது. சிங்காதனத்துக்கு மேலே தண் மதியின் 
வெண்ணிலாவையொத்த குளிர்ச்சி பொருந்திய வெண் கொற்றக்குடை விரிந்து 
கவிந்திருக்கின்றன. தேவ கன்னியரைப் போன்ற பெண்கள் கைகளில் வெண்சாமரங்களை 
வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். பற்பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு 
வந்த தண்ணீருடன் பொற்குடங்கள் வரிசையாக வைத்திருக்கின்றன. இளவரசே! 
பட்டாபிஷேகத்திற்கு எல்லாம் ஆயத்தமாகி விட்டன!..." 
  "யாருக்குப் 
பட்டாபிஷேகம்? அதைச் சொல், அப்பனே" என்றார் மதுராந்தகர். 
  "இதோ அதுவும் 
தெரிந்துவிடும். சபாமண்டபத்தின் பிரதான வாசற்கதவு திறக்கிறது. பலவகைக் கட்டியம் 
கூறிக் கொண்டு சிலர் உள்ளே வரகிறார்கள். வீரகம்பீரத் தோற்றமுடைய கிழவர் ஒருவர் 
வருகிறார். அவருடைய சகோதரர் போலக் காணப்படும் இன்னொருவர் வருகிறார். அவர்களுக்குப் 
பின்னால் மன்மதனை யொத்த சுந்தர ரூபமுடைய இராஜ குமாரர் ஒருவர் இதோ வருகிறார். 
  "அது யார்? யார்?" 
  வந்தியத்தேவன் மதுராந்தகரை மறுமுறை உற்றுப் 
பார்த்துவிட்டு மீண்டும் தீபத்தை நோக்கினான். 
  "ஐயா! தங்களைப் போலவே அவர் 
இருக்கிறார்! தங்களைப் போல என்ன? தாங்களே தான்! முன்னால் வந்த இருவரும் தங்களைச் 
சிம்மாசனத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். 'ஜய விஜயீபவா!' என்ற கோஷம் சமுத்திர 
கோஷத்தைப் போல் எழுகிறது. தங்கள் மீது நூறு நூறு கரங்கள் மலர்களையும், மணிகளையும், 
மஞ்சள் நிறத் தானியங்களையும் தூவுகின்றன. இதோ, தாங்கள் சிங்காதனத்தை நெருங்கி 
விட்டீர்கள்! அடாடா! இது என்ன? சகுனத் தடை போல் யார் குறுக்கே வருகிறது? தலைவிரி 
கோலமாக ஒரு ஸ்திரீ குறுக்கே வந்து, தங்களுக்கும் சிம்மாசனத்துக்கும் நடுவில் 
நிற்கிறாள். 'வேண்டாம்! என்று தங்களைத் தடை செய்கிறாள் தாங்கள் அந்த ஸ்திரீயைத் 
தள்ளுகிறீர்கள்!... அடாடா! இது என்ன, நல்ல சமயத்தில் இப்படிப் புகை வந்து 
மூடிக்கொள்கிறது? ஒன்றும் தெரியவில்லையே?...." 
  "பார்! பார்! நன்றாக உற்றுப் 
பார்! அப்புறம் என்ன நடக்கிறது?" 
  "இளவரசே! மன்னிக்க வேண்டும்! பெரும் 
புகைப் படலம் வந்து எல்லாவற்றையும் மறைத்து விட்டது!..." 
  "பார், அப்பனே 
பார்! அந்த ஸ்திரீ யார் என்றாவது பார்! அவளை நீ முன்னம் பார்த்திருக்கிறாயா?" 
  "இளவரசே! அந்த மாதரசியும் மறைந்துவிட்டாள், தாங்களும் மறைந்து விட்டீர்கள். 
சபை, சிம்மாசனம், கிரீடம், எல்லாம் மறைந்து விட்டன. இந்த அரண்மனையில் மந்திர சக்தி 
உள்ளவர்கள் யாரோ இருக்கவேண்டும்! வேண்டுமென்றே மந்திரம் போட்டுத் தடுத்துவிட்டதாகக் 
காண்கிறது.ஐயோ! என் முகமெல்லாம் பற்றி எரிவது போல் தகிக்கிறது!..." 
  இவ்விதம் கூறி வந்தியத்தேவன் தன் கரங்களினால் முகத்தை மூடிக்கொண்டான். 
அப்படியே சிறிது நேரம் இருந்துவிட்டு கண்களைத் திறந்து பார்த்தான். மதுராந்தகத் 
தேவருடைய உடம்பின் நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டிருந்தன. அவருடைய முகத்தில் 
கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. கண்கள், எரியும் தணல்களைப் போலப் பிரகாசித்தன. 
வந்தியத்தேவனுக்குச் சிறிது பயமாகவே போய்விட்டது. இளவரசருடைய ஆசை வெறியை அளவுக்கு 
அதிகமாகக் கிளப்பிவிட்டு விட்டோமோ என்று பயந்து போனான். 
  "மறுபடியும் பார்! 
நன்றாகப் பார்த்துச் சொல்!" என்றார் மதுராந்தகர்." 
  "இளவரசே! அதில் 
பயனில்லை! ஒரு தடவை மறைந்த காட்சி மறுபடியும் உடனே வராது. சில நாள் கழிந்த 
பிறகுதான் வரும். தீபத்தைப் பார்த்து, வேண்டுமானால் வேறு ஏதாவது காட்சி தெரிந்தால் 
சொல்லுகிறேன்." 
  "சொல், சொல்! என்ன காட்சி புலப்பட்டாலும் சொல்!" 
  "ஜனங்கள் ஒரே குழப்பமாயிருக்கிறார்கள். துக்கமாயும், கோபமாயும் 
இருக்கிறார்கள். தூதன் ஒருவன் வந்து அவர்களிடம் ஏதோ செய்தி சொல்கிறான். இராஜ 
குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் கடலில் முழுகிவிட்டதாகச் செல்லுகிறான். ஐயோ! 
பாவம்! அந்தத் தூதனை ஜனங்கள் அடிக்கப் போகிறார்கள். இளவரசே! அம்மாதிரி ஏதாவது 
நேர்ந்தால் தாங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனங்கள் மத்தியில் செல்ல வேண்டாம்! 
சென்றாலும் ஜாக்கிரதையாகச் செல்லுங்கள்!" 
  "கடலில் முழுகியது யார் என்று 
பெயர் சொல்லவில்லையா?" 
  "கூச்சலிலும் குழப்பத்திலும் பெயர் காதில் 
விழவில்லை. அந்தக் காட்சி மறைந்துவிட்டது. இப்போது, கழுத்தில் மண்டை ஓடு மாலைகளை 
அணிந்த ஒரு பயங்கரமான கூட்டம் என் கண்முன் தெரிகிறது. காபாலிகர்கள் காலாமுகர்கள் 
போல் தோன்றுகிறார்கள். அவர்களில் ஒருவன், கையில் ஒரு பயங்கரமான அரிவாளை வைத்துக் 
கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரில் பலி பீடம் ஒன்று இருக்கிறது. இளவரசே! இங்கேயும் 
இராஜகுமாரர் ஒருவர் வருகிறார். காலாமுகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கும்மாளம் 
அடிக்கிறார்கள். ஐயோ! தப்பித் தவறிக்கூடத் தாங்கள் அப்படிப்பட்ட கூட்டத்தின் 
மத்தியில் போகவேண்டாம்!..." 
  இதைக் கேட்டதும் மதுராந்தகருடைய முகத்தில் 
வியர்வை துளித்தது; அவர் உடம்பு நடுங்கியது. 
  வந்தியத்தேவன் அதைக் 
கவனித்துக் கொண்டான். பின்னர், "இளவரசே! மேலே ஒன்றும் எனக்குத் தெரியவில்லை, 
மன்னிக்க வேண்டும். என் தலை சுற்றுகிறது; கண் இருளுகிறது. யாரோ மந்திரம் போட்டுத் 
தடை செய்கிறார்கள். இன்னொரு சமயம் இன்னொரு இடத்தில் பார்த்துச் சொல்கிறேன்!" என்று 
கூறித் தன் தலையைக் கையால் பிடித்துக் கொண்டான். 
  அச்சமயத்தில் அரண்மனைச் 
சேவகன் ஒருவன் வந்து, பெரிய மகாராணி செம்பியன் மாதேவி இளவரசரை அழைத்து வரச் 
சொன்னதாகக் கூறினான். மதுராந்தகர் தம் உள்ளத்தில் பொங்கிய ஆத்திரத்தையெல்லாம் 
அன்னையின்மீது கொட்டிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார். "ஐயா! 
தலைவலி பொறுக்க முடியவில்லை. அரண்மனைக்கு வௌியே சென்று இந்த நகரைக் கொஞ்சம் 
சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன்!" என்று வந்தியத்தேவன் அவரிடம் கூறி அனுமதி 
பெற்றுக் கொண்டான். 
  பழையாறை மருத்துவர் மகன், பினாகபாணி பண்டிதனுக்கு 
வாழ்க்கையில் ஒரு புதிய ரஸம் ஏற்பட்டிருந்தது. சில நாளைக்கு முன் வரையில் அவன் 
தந்தையிடம் மருந்து சாஸ்திரம் கற்றுக் கொள்வதுடன் திருப்தியடைந்தான்.கோடிக்கரைப் 
பிரயாணத்தின்போது, வந்தியத்தேவன் வௌி உலகத்தைப் பற்றிப் பல விஷயங்களை அவனுக்குக் 
கூறினான். அத்துடன் மட்டும் அவன் நிறுத்தவில்லை. புதிதாகக் காதல் வலையில் 
விழுந்தவர்களுக்கு அதைப் பற்றி யாரிடமாவது பேசத் தோன்றுவது இயல்பு. வைத்தியர் மகன் 
முதல்தர அசடு என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன் அவனிடம் பெண்களிடம் காதல் 
கொள்வதைப் பற்றிய அபாயங்களைப் பற்றிப் பேசலானான். நான், ஒரு பெண்ணிடம் காதல் 
கொண்டு, அதன் பயனாக அனுபவித்துவரும் இன்ப துன்பங்களைப் பற்றியும் கூறினான். 
  வைத்தியர் மகன் பினாகபாணி இந்தப் பேச்சுக்களை முதலில் அவ்வளவாக 
ரஸிக்கவில்லை. சிறிது சிறிது சிறிதாக அவன் மனம் மாறியது. வந்தியத்தேவனிடம் 
விவரமில்லாத அசூயையும், ஆத்திரமும் ஏற்பட்டன. அவனுடைய மனத்தைக் கவர்ந்த மங்கையின் 
ஊர், பெயர் என்ன என்று கேட்டான். வந்தியத்தேவன் சொல்ல மறுத்து விட்டான். அதனால் 
பினாகபாணியின் கோபம் அதிகமாயிற்று. கோடிக்கரை போய்ச் சேருவதற்குள் வந்தியத்தேவனை 
வைத்தியரின் மகன் தன்னுடைய சத்துருவாகவே கருதத் தொடங்கிவிட்டான். 
  அவன் 
மனத்திற்குள் புதைத்து கொண்டிருந்த தீ பூங்குழலியைப் பார்த்ததும் கொழுந்துவிடத் 
தொடங்கியது. பூங்குழலி அவனை மறுதளித்ததுடன் பரிகாசமும் செய்தாள். அவள் தன்னைக் 
காட்டிலும் வந்தியத்தேவனை அதிகம் மதிக்கிறாள் என்று தெரிய வந்ததும் பினாகபாணியின் 
பைத்தியம் முற்றி விட்டது.வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வீரர்களிடம் அவனைக் 
காட்டிக்கொடுக்கவும் துணிந்தான். 
  பழுவேட்டரையரின் ஆட்கள் வந்தியத்தேவனைப் 
பிடிக்க முடியாமல் பினாகபாணியைப் பிடித்துக் கொண்டு தஞ்சை சென்றார்கள். சிறிது 
நேரம் அவன் பாதாளச் சிறையில் வசிக்கும்படி நேர்ந்தது. இதனாலெல்லாம் அவனுக்கு 
முன்னமே வந்தியத்தேவனிடம் உண்டாகியிருந்த கோபம் மேலும் வளர்ந்தது. 
  இளவரசி 
குந்தவை அவனைப் பார்த்துப் பேசி விடுதலை செய்வதற்காகப் பாதாளச் சிறைக்குப் போவதற்கு 
முன்னாலேயே அவன் விடுதலையாகியிருந்ததைக் கண்டோம். விடுதலை செய்தவள் பழுவூர் 
இளையராணி நந்தினிதான். தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் தஞ்சை 
அரண்மனையிலிருந்து தப்பிச் சென்றது பற்றி நந்தினி கோபமும், சந்தேகமும் 
கொண்டிருந்தாள். அவன் பழையாறை சென்று, பிறகு ஈழநாட்டுக்குத் தப்பிச் சென்றதை அறிந்த 
பிறகு அவளுடைய சந்தேகம் அதிகமாயிற்று. எப்படியும் ஒருநாள் பழையாறைக்குத் திரும்பி 
வந்து, இளவரசி குந்தவையைப் பார்க்க முயல்வான் என்று ஊகித்தாள். அப்போது அவனைக் 
கண்டுபிடித்துச் செய்தி அனுப்பப் பழையாறையில் தனக்கு நம்பகமான ஆள் ஒருவன் வேண்டும் 
என்று தீவிரமாக எண்ணினாள். 
  வைத்தியர் மகன் பினாகபாணியைப் பார்த்துப் பேசிய 
பிறகு அவன் அந்த வேலைக்குச் சரியான ஆள் என்று முடிவு செய்தாள்: அவனிடம் அந்தப் 
பெரிய பொறுப்பை ஒப்புவித்தாள். "உனக்குத் துரோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றவன் 
சீக்கிரத்தில் ஒருநாள் பழையாறைக்குத் திரும்பி வருவான். நீ கண்ணும் கருத்துமாகப் 
பார்த்திருந்து, அவன் எங்கெங்கே போகிறான், என்னென்ன செய்கிறான், என்பதைக் கவனித்து 
எனக்கு உடனே சொல்லி அனுப்ப வேண்டும். அவ்விதம் செய்தால் உனக்கு வேண்டிய வெகுமதிகளை 
அளிப்பேன்" என்றாள். 
  பின்னர் சின்னப் பழுவேட்டரையரும் அவனை அழைத்து 
வந்தியத்தேவனைப் பற்றிக் கட்டளை இட்டார். "அந்த இராஜத்துரோகி திரும்பி வரும்போது, 
அவனைப் பிடித்துக் கொடுத்தால் உன்னை நமது ஒற்றர் படையில் சேர்த்துப் பெரிய 
அதிகாரியாக்கி விடுவேன்" என்று அவனுக்கு ஆசை காட்டியிருந்தார். அது முதல் பினாகபாணி 
மருத்துவத் தொழிலில் பற்றை இழந்துவிட்டான். ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டே 
பழையாறை நகரின் வீதிகளில் ஓயாமல் அலைந்து கொண்டிருந்தான். திடீர் திடீரென்று 
அவனுக்குச் சந்தேகம் உதித்துவிடும். வீதியில் போகிறவர்களின் அருகில் ஓடிச்சென்று 
முகத்தை உற்றுப் பார்ப்பான். "இவன் இல்லை!" என்று முணுமுணுத்துக் கொண்டே அப்பால் 
செல்வான். இதைப் பார்த்த பலரும் வைத்தியர் மகனுக்குச் சித்தப்பிரமை பிடித்து 
விட்டதென்று எண்ணத் தொடங்கினார்கள். 
  ஆயினும், பினாகபாணி தன்னுடைய 
முயற்சியைக் கைவிடவில்லை. மதுராந்தகத்தேவரும், அவருடைய பரிவாரங்களும் பழையாறைக்குள் 
பிரவேசித்தபோது பினாகபாணி அவர்களை அவ்வளவு நன்றாகக் கவனிக்கவில்லை.. அவர்களில் 
வந்தியத்தேவன் இருக்கக்கூடுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. திருநாரையூர் நம்பியின் 
பல்லக்கைச் சூழ்ந்திருந்த பெருங்கூட்டத்திலே அவன் சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக் 
கொண்டிருந்தான். அப்போது, சற்றுத்தூரத்தில் மதுராந்தகருடைய பரிவாரம் போவது 
தெரிந்தது. மதுராந்தகருக்கு அருகில் குதிரை மேலிருந்தவன் ஒரு தடவை திருப்பிப் 
பார்த்தபோது பினாகபாணிக்கு ஐயம் உதித்தது. ஆனால் அவன் விரைவாகச் சென்று அரண்மனையில் 
புகுத்துவிட்டபடியால் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. 
  
					  
பக்க 
தலைப்பு  
  
					
 பத்தொன்பதாம் அத்தியாயம்  சமயசஞ்சீவி 
நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது 
பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு 
அப்பால் நின்ற கூட்டத்தில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். 
வந்தியத்தேவனுடைய கவனம் வேறு இடத்தில் இருந்தது என்பதை முன்னமே பார்த்தோம். 
பினாகபாணியோ வந்தியத்தேவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் 
பார்த்தும், பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். அவன் தான் நம் 
பழைய தோழனாகிய ஆழ்வார்க்கடியான். 
  இளவரசர் மதுராந்தகருக்கு நிமித்தம் 
பார்த்துச் சொல்லி அவர் மனத்தைக் கலக்கிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனைக்கு வௌியில் 
வந்தான். அங்கே சற்றுத் தூரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனை 
நெருங்கி வந்து, "அப்பனே! நீ யார்?" என்று கேட்டான். வந்தியத்தேவன் பினாகபாணியைப் 
பார்த்துத் திடுக்கிட்டான். அதை வௌியில் காட்டிக் கொள்ளாமல், "என்ன கேட்டாய்?" 
  
"நீ யார் என்று கேட்டேன்" என்றான். 
  "நான் யார் என்றா கேட்கிறாய்? எந்த 
நானைக் கேட்கிறாய்? மண், நீர், தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்ச பூதங்களினாலான இந்த 
உடம்பைக் கேட்கிறாயா? உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா? ஆத்மாவுக்கும் 
அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா? அப்பனே! இது என்ன கேள்வி? நீயும் இல்லை, 
நானும் இல்லை. எல்லாம் இறைவன் மயம்! உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் 
உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்!" என்று 
கூறிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனை வாசலில் நின்ற தன் குதிரைமேல் தாவி ஏறினான். 
குதிரையைச் சிறிது நேரம் வேகமாகச் செலுத்திய பிறகு வைத்தியர் மகன் தன்னைப் பின் 
தொடரவில்லை என்று தெரிந்துகொண்டு மெள்ள மெள்ள விட்டுக்கொண்டு போனான். 
  ஆனால் 
வைத்தியர் மகன் அவ்வளவு எளிதில் ஏமாந்து போகிறவனா? அவனது சந்தேகம் இப்போது 
நிச்சயமாகி விட்டது. நகர்க் காவல் அதிகாரியிடம் சென்று செய்தியைத் தெரிவித்தான். 
அதிகாரி அனுப்பிய இரண்டு காவல்வீரர்களை அழைத்துக் கொண்டு அவனும் ஊரைச் சுற்றி 
வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே வந்தியத்தேவனை ஒரு நாற்சந்தியில் சந்தித்தான். 
  "இவன்தான் ஒற்றன்! இவனைச் சிறைப்பிடியுங்கள்!" என்று கூவினான். 
  "என்னடா, அப்பா! உனக்குப் பைத்தியமா?" என்றான் வல்லவரையன். 
  "யாரைப் 
பைத்தியமா, என்று கேட்கிறாய்? இந்த உடம்பையா, இதற்குள் இருக்கும் உயிரையா, 
ஆத்மாவையா! பரமாத்மாவையா! அல்லது பசு, பதி, பாசத்தையா?" என்று கூறினான் வைத்தியர் 
மகன் பினாகபாணி. 
  "நீ இப்பொழுது உளறுவதிலிருந்தே நீ பைத்தியம் என்று 
தெரிகிறதே!" 
  "நான் பைத்தியம் இல்லை; உன்னோடு கோடிக்கரை வரையில் வந்த 
வைத்தியன்! காவலர்களே! தஞ்சாவூர்க் கோட்டையிலிருந்து தப்பி, இலங்கைக்கு ஓடிய ஒற்றன் 
இவன்தான்! உடனே இவனைச் சிறைப் பிடியுங்கள்!" 
  காவலர்கள் வல்லவரையனை நோக்கி 
நெருங்கினார்கள். "ஜாக்கிரதை! இவன் சொல்வதைக் கேட்டுத் தவறு செய்யாதீர்கள்! நான் 
இளவரசர் மதுராந்தகத் தேவரோடு வந்த நிமித்தக்காரன்!" என்று கூறினான் வந்தியத்தேவன். 
  "இல்லை இல்லை! இவன் பெரும் பொய்யன். இவனை உடனே சிறைப்படுத்துங்கள்!" என்று 
வைத்தியர் மகன் வாய்விட்டுக் கூவினான். 
  இதற்குள் அவர்களைச் சுற்றிலும் ஒரு 
பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் சிலர் வந்தியதேவனுடைய கட்சி பேசினார்கள்; 
சில வைத்தியர் மகனின் கட்சி பேசினார்கள். 
  "இவனைப் பார்த்தால் 
நிமித்தக்காரனாகத் தோன்றவில்லை" என்றான் ஒருவன்." 
  "ஒற்றனாகவும் 
தோன்றவில்லையே" என்றான் இன்னொருவன்." 
  "நிமித்தக்காரன் இவ்வளவு சிறு 
பிராயத்தனாயிருக்க முடியுமா?" 
  "ஏன் முடியாது? ஒற்றன் குதிரை மேலேறி 
வீதியில் பகிரங்கமாகப் போவானா?" 
  "நிமித்தக்காரன் எதற்காக உடைவாள் 
தரித்திருக்கிறான்?" 
  "ஒற்றன் என்றால் யாருடைய ஒற்றன். பழையாறையில் என்ன 
வேவு பார்ப்பதற்காக வருகிறான்?" 
  இதற்கிடையில் பினாகபாணி, "அவனைச் 
சிறைப்பிடியுங்கள்! உடனே சிறைப்பிடியுங்கள்! பழுவேட்டரையருடைய கட்டளை!" என்று 
கத்தினான். 
  பழுவேட்டரையர் என்ற பெயரைக் கேட்டது, அங்கே கூடியிருந்தவர்கள் 
பலருக்கு வந்தியத்தேவன் மேல் அனுதாபம் உண்டாகிவிட்டது. அவனை எப்படியாவது தப்புவிக்க 
வழி உண்டா என்று பார்த்தார்கள். 
  இதற்கிடையில் ஆழ்வார்க்கடியான் அந்தக் 
கூட்டத்தின் ஓரத்தில் வந்து சேர்ந்தான். "இளவரசோடு வந்த நிமித்தக்காரன் இங்கே 
இருக்கிறானா?" என்று கூவினான். 
  "இல்லை; இவன் ஒற்றன்" என்று பினாகபாணி 
கூச்சலிட்டான். 
  "இதென்ன வம்பு? நீ மதுராந்தகத் தேவருடன் வந்து 
நிமித்தக்காரனாயிருந்தால் என்னுடன் வா! உன்னை இளவரசி அழைத்து வரச் சொன்னார்!" 
என்றான் ஆழ்வார்க்கடியான். 
  வந்தியத்தேவனின் உள்ளம் துள்ளிக் குதித்தது. 
"அந்த நிமித்தக்காரன் நான்தான்! இதோ வருகிறேன்" என்றான். 
  "வீடாதீர்கள்! 
ஒற்றனை விட்டு விடாதீர்கள்!" என்று வைத்தியர் மகன் பினாகபாணி கத்தினான். 
  ஆழ்வார்க்கடியான், "நீ நிமித்தக்காரன்தானா என்பதை நிரூபித்து விடு! 
அப்படியானால்தான் என்னுடன் வரலாம்!" என்று கூறிக்கொண்டே கண்ணால் சமிக்ஞை செய்தான். 
  "என்னவிதமாக நிரூபிக்கச் சொல்கிறாய்?" என்று வந்தியத்தேவன் அவசரத்துடன் 
கேட்டான். 
  "அதோ இரண்டு குதிரைகள் வேகமாக வருகின்றனவல்லவா? அவற்றின் மீது 
வருகிறவர்கள் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. அது 
உண்மையாயிருந்தால், அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள், சொல்!" 
  குதிரைகளின் பேரில் வந்தவர்களை வந்தியத்தேவன் உற்றுப் பார்த்துவிட்டு, "ஓ 
சொல்கிறேன், இராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜலகண்ட விபத்து 
நேர்ந்திருக்கிறது! அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள்!" 
என்றான் வந்தியத்தேவன். 
  இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் குதிரைகள் 
ஜனக்கூட்டத்தை நெருங்கிவிட்டன.ஜனங்கள் மேலே போக வழிவிடாதபடியால் குதிரைகள் நின்றன. 
  "நீங்கள் தூதர்கள் போலிருக்கிறது, என்ன செய்தி கொண்டு வருகிறீர்கள்?" என்று 
ஆழ்வார்க்கடியான் கேட்டான். 
  "ஆம் நாங்கள் தூதர்கள்தான்! துக்கச் செய்தி 
கொண்டு வருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் ஏறி வந்த கப்பல் சுழற்காற்றில் 
அகப்பட்டுக் கொண்டதாம். இளவரசர் யாரையோ காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து 
மூழ்கிப் போய்விட்டாராம்!" 
  குதிரை மீது வந்தவர்களில் ஒருவன் இவ்வாறு 
கூறியதும் அந்த ஜனக்கூட்டத்தில் "ஐயோ! ஐயகோ!" என்ற பரிதாபக் குரல்கள் நெஞ்சைப் 
பிளக்கும்படியான சோகத் தொனியில் எழுந்தன. எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்களும் 
வந்தார்களோ, தெரியாது. அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் 
என்றும் சொல்ல முடியாது. ஆண்களும், பெண்களும், வயோதிகளும், சிறுவர் சிறுமிகளும் 
அந்தத் தூதர்களைப் பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டார்கள். பலர், அவர்களைப் பல 
கேள்விகள் கேட்டார்கள்; பலர் அழுது புலம்பினார்கள். 
  பழுவேட்டரையர்கள் 
அருள்மொழிவர்மரை விரும்பவில்லையென்பது அந்நகர மக்களில் பலருக்கு ஏற்கனவே 
தெரியும்.இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர்கள் 
ஈழத்துக்குள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பிரஸ்தாபமும் அவர்கள் காதுக்கு 
எட்டியிருந்தது எனவே, கூட்டத்தில் பலர் பழுவேட்டரையர்களைப் பற்றி முதலில் 
முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பிறகு உரத்த குரலில் சபிக்கவும் தொடங்கினார்கள். 
"பழுவேட்டரையர்கள் வேண்டுமென்ற இளவரசரைக் கடலில் மூழ்கடித்துக் கொன்றிருக்க 
வேண்டும்!" என்றும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அந்த ஜனக் கூட்டத்தார் 
பேசிக்கொண்ட சத்தமும், அவர்கள் புலம்பிய சத்தமும், பழுவேட்டரையர்களைச் சபித்த 
சத்தமும் சேர்த்துச் சமுத்திரத்தின் பேரிரைச்சலைப் போல் எழுந்தது. 
  இந்தக் 
கூட்டத்துக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட தஞ்சாவூர்த் தூதர்கள், மேலே 
அரண்மனைக்குப் போக முடியாமல் தவித்தார்கள்.ஜனங்களை விலக்கிக் கொண்டு போக அவர்கள் 
முயன்றும் பலிக்கவில்லை. "எப்படி?" "எங்கே?" "என்றைக்கு?" "நிச்சயமாகவா?" 
என்றெல்லாம் ஜனங்கள் அத்தூதர்களைக் கேட்ட வண்ணம் மேலே போக முடியாதபடி தடை 
செய்தார்கள். 
  வைத்தியர் மகனுடன் வந்திருந்த காவலர்களைப் பார்த்து 
ஆழ்வார்க்கடியான், "நீங்கள் ஏன் சும்மா நிற்கிறீர்கள்? கூட்டத்தை விலக்கித் 
தூதர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!" என்றான். காவலர்களும் மேற்படி செய்தி 
கேட்டுக் கதி கலங்கிப் போயிருந்தார்கள். அவர்கள் இப்போது முன்வந்து தூதர்களுக்கு 
வழி விலக்கிக் கொடுக்க முயன்றார்கள். தூதர்கள் சிறிது சிறிதாக அரண்மனையை நோக்கி 
முன்னேறினார்கள். ஜனக் கூட்டமும் அவர்களை விடாமல் தொடர்ந்து சென்றது. மேலும் மேலும் 
ஜனங்களின் கூட்டம் பெருகிக் கொண்டும் வந்தது. 
  அவ்வளவு பெரிய 
ஜனக்கூட்டத்தில், ஒரே மனதாக இளவரசர் அருள்மொழிவர்மரின் கதியை நினைத்துக் கலங்கிப் 
புலம்பிக் கொண்டிருந்த அக்கூட்டத்தில், ஒரே ஒரு பிராணி மட்டும், "ஐயோ! இது ஏதோ 
சூழ்ச்சி! ஒற்றனைத் தப்பித்துவிடச் சூழ்ச்சி!" என்று அலறிக் கொண்டிருந்தது. அவ்வாறு 
அலறிய வைத்தியர் மகனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கூக்குரல் யாருடைய 
செவியிலும் ஏறவில்லை. மாநதியின் பெருவெள்ளம் அதில் விழுந்து விட்ட சிறு துரும்பை 
அடித்துக் கொண்டு போவதுபோல் அந்தப் பெரும் ஜனக் கூட்டம் வைத்தியர் மகனையும் 
தள்ளிக்கொண்டு முன்னே சென்றது. 
  ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியபோதே 
வந்தியத்தேவன் குதிரை மேலிருந்து இறங்கிவிட்டான். கூட்டம் நகரத் தொடங்கியபோது, 
ஆழ்வார்க்கடியான் அவன் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டான். "குதிரையை 
விட்டுவிடு! பிறகு அதைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். உடனே என்னுடன் வா!" என்று 
அவன் காதோடு சொன்னான். 
  "அப்பனே! சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தாய்! 
இல்லாவிடில் என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ, தெரியாது!" என்றான் வல்லவரையன். 
  "இதுதான் உன் தொழில் ஆயிற்றே? நீ சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது; 
யாராவது வந்து உன்னை அந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டியது!" என்று 
எகத்தாளம் செய்தான் ஆழ்வார்க்கடியான். 
  இருவரும் ஜனக்கூட்டம் அவர்களைத் 
தள்ளிக் கொண்டு போகாத வண்ணம் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் போனபிறகு 
வந்தியத்தேவனுடைய கையை ஆழ்வார்க்கடியான் பற்றிக்கொண்டு வேறு திசையாக அவனை அழைத்துச் 
சென்றான். 
  அரண்மனைகள் இருந்த வீதியில் முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் 
பூட்டிக் கிடந்த கோடி வீட்டில் அவர்கள் புகுந்தார்கள். கொல்லைப்புறத்தில் இருந்த 
நந்தவனத்தில் பிரவேசித்துக் கொடி வழிகளில் நடந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் 
நீல நிற ஓடை தெரிந்தது? அதில் ஒரு ஓடம் மிதந்தது. ஓடத்தில் ஒரு மாதரசி இருந்தாள். 
அவளைக் கண்டதும் வந்தியத்தேவனுடைய உள்ளம் துள்ளிக் குதித்தது. 
  
					  
பக்க 
தலைப்பு  
  
					
 இருபதாம்அத்தியாயம்  தாயும் மகனும் 
அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து 
கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற் 
சிறந்த அந்த மூதாட்டியின் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. ஒரு காலத்தில் 
மதுராந்தகனும் அன்னையிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தான். இப்போது அந்தப் பக்தி, கோப 
வெறியாக மாறிப் போயிருந்தது. பெற்ற மகனுக்குத் துரோகம் செய்து, தாயாதிகளின் கட்சி 
பேசிய தாயைப்பற்றிக் கதைகளிலே கூடக் கேட்டதில்லையே! தனக்கு இப்படிப்பட்ட அன்னையா 
வந்து வாய்க்கவேண்டும்?... இதை நினைக்க நினைக்க அவன் உள்ளத்திலிருந்த அன்பு 
அத்தனையும் துவேஷமாகவே மாறி நாளடைவில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்தது. 
  
ஆபூர்வமான சாந்தம் குடிகொண்ட அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் அவனுடைய 
கோபம் தணிந்தது. பழைய வழக்கத்தை அனுசரித்து நமஸ்கரித்து எழுந்து நின்றான். 
"சிவபக்திச் செல்வம் பெருகி வளரட்டும்!" என்று மகாராணி ஆசி கூறி, அவனை ஆசனத்தில் 
உட்காரச் செய்தார். 
  அந்த ஆசீர்வாதம் மதுராந்தகனுடைய மனத்தில் அம்பைப் போல் 
தைத்தது. 
  "மதுராந்தகா! என் மருமகள் சுகமா? உன் மாமனார் வீட்டிலும், தனாதிகாரியின் 
வீட்டிலும் எல்லோரும் சௌக்கியமா?" என்று அன்னை கேட்டார். 
  "எல்லாரும் 
சௌக்கியமாகவே இருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை?" என்று குமாரன் 
முணுமுணுத்தான். 
  "தஞ்சையிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீ 
சக்கரவர்த்தியைப் பார்த்தாயா? அவருடைய உடல் நலம் தற்சமயம் எப்படியிருக்கிறது?" 
என்று மகாராணி கேட்டார். 
  "பார்த்து விடை பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டேன். 
சக்கரவர்த்தியின் உடம்பு நாளுக்கு நாள் நலிந்துதான் வருகிறது. உடல் வேதனையைக் 
காட்டிலும் மனவேதனை அவருக்கு அதிகமாயிருக்கிறது" என்றான் மதுராந்தகன். 
  "அது 
என்ன, குழந்தாய்? சக்கரவர்த்தி மன வேதனைப்படும்படியாக என்ன நேர்ந்தது?" 
  "குற்றம் செய்தவர்கள், - அநீதி செய்தவர்கள்... பிறர் உடைமையைப் பறித்து 
அனுபவிக்கிறவர்கள் - மனவேதனை கொள்வது இயல்புதானே?" 
  "இது என்ன சொல்கிறாய்? 
சக்கரவர்த்தி அவ்வாறு என்ன குற்றம் - அநீதி - செய்துவிட்டார்?" 
  "வேறு என்ன 
செய்யவேண்டும்? நான் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் அவர் இத்தனை வருஷங்களாக 
அமர்ந்திருப்பது போதாதா? அது குற்றம் இல்லையா? அநீதி இல்லையா?" 
  "குழந்தாய்! 
பால்போலத் தூய்மையாக இருந்த உன் உள்ளத்தில் இந்த விஷம் எப்படி வந்தது? யார் 
உனக்குத் துர்ப்போதனை செய்து கெடுத்துவிட்டார்கள்?" என்று இரக்கமான குரலில் அன்னை 
கேட்டார். 
  "எனக்கு ஒருவரும் துர்ப்போதனை செய்து கெடுக்கவில்லை. தங்கள் மகனை 
அவ்வளவு நிர்மூடனாக ஏன் கருதுகிறீர்கள்? எனக்குச் சுய அறிவே கிடையாது என்பது தங்கள் 
எண்ணமா?" 
  "எத்தனை அறிவாளிகளாயிருந்தாலும், துர்ப்போதனையினால் மனம் கெடுவது 
உண்டு. கரைப்பவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும் அல்லவா? கூனியின் துர்ப்போதனையினால் 
கைகேயியின் மனம் கெட்டுப் போகவில்லையா?" 
  "பெண்களின் மனத்தை அப்படித் 
துர்ப்போதனையினால் கெடுத்துவிடலாம் என்பதை நானும் தெரிந்து கொண்டுதானிருக்கிறேன்!" 
  "மதுராந்தகா! யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறாய்?" 
  "தாயே! என்னை, 
எதற்காக அழைத்தீர்கள். அதைச் சொல்லுங்கள்!" 
  "சற்றுமுன் நடந்த வைபவத்தில் நீ 
பிரசன்னமாய் இருந்தாய் அல்லவா?" 
  "இருந்தேன், யாரோ வழியோடு போகிற சிறுவனைப் 
பல்லக்கிலேற்றி அழைத்து வரச்செய்தீர்கள். சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து 
உபசரித்தீர்கள். அவன் தலை கால் தெரியாத கர்வம் கொண்டிருப்பான்..." 
  "ஐயோ! 
அப்படி அபசாரமாய்ப் பேசாதே, குழந்தாய் வந்திருந்தவர் வயதில் வாலிபரானாலும், சிவஞான 
பரிபக்குவம் அடைந்த மகான்...." 
  "அவர் மகானாகவேயிருக்கட்டும், நான் 
குறைத்துப் பேசினால் அவருடைய பெருமை குறைத்துவிடாதல்லவா? அந்த மகானுக்குத் தாங்கள் 
இராஜரீக மரியாதைகள் செய்ததையும் நான் ஆட்சேபிக்கவில்லை. என்னை எதற்காக அழைத்தீர்கள் 
என்று சொல்லுங்கள்!" 
  செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். 
பிறகு கூறினார்:- "உன்னுடைய குணத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் எனக்குப் பிரமிப்பை 
உண்டாக்குகிறது. பழுவேட்டரையர் மாளிகையில் இரண்டு வருஷ வாசம் இப்படி உன்னை 
மாற்றிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. போனால் போகட்டும், என்னுடைய 
கடமையை நான் செய்ய வேண்டும். உன் தந்தைக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற 
என்னாலியன்ற வரையில் முயலவேண்டும் மகனே! உன்னை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு 
முன்னால், என்னுடைய கதையை, - நான் உன் தந்தையை மணந்த வரலாற்றைக் கூறவேண்டும். 
சற்றுப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிரு!" 
  மதுராந்தகன் பொறுமையுடன் கேட்டுக் 
கொண்டிருக்கப் போவதற்கு அறிகுறியாகக் கால்களை மண்டி போட்டுக் கொண்டு, கைகளைப் 
பீடத்தில் நன்றாய் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான். "நான் பிறந்த ஊராகிய மழபாடிக்கு 
நீ குழந்தையாயிருந்தபோது இரண்டொரு தடவை வந்திருக்கிறாய்; அந்த ஊரில் உள்ள 
சிவபெருமான் ஆலயத்தையும் பார்த்திருக்கிறாய். கோச்செங்கட் சோழ மன்னர் சிவாலயம் 
எடுப்பித்த அறுபத்து நாலு ஸ்தலங்களில் அதுவும் ஒன்று எனப் பெரியோர்கள் சொல்லக் 
கேட்டிருக்கிறேன்.உன்னுடைய பாட்டனார், என்னுடைய தந்தை, மழபாடியில் பெரிய 
குடித்தனக்காரர். எங்கள் குலம் தொன்மையானது. ஒரு காலத்தில் மழவரையர்கள் 
செல்வாக்குப் பெற்ற சிற்றரசர்களாயிருந்தார்கள். விஜயாலய சோழர் காலத்தில் நடந்த 
யுத்தங்களில் பாண்டியர்களோடு சேர்ந்திருந்தார்கள். அதனால் சோழர்கள் வெற்றி பெற்ற 
பிறகு மழவரையர்களின் செல்வாக்குக் குன்றியிருந்தது. சிறு பெண்ணியிருந்தபோது 
அதைப்பற்றியெல்லாம் நான் குறைப்படவில்லை. என் உள்ளம் மழபாடி ஆலயத்தில் உள்ள நடராஜப் 
பெருமான் மீது சென்றிருந்தது. மழபாடியின் சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றை ஒரு 
பெரியவர் நான் குழந்தையாயிருந்தபோது எனக்குச் சொன்னார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் 
தமது சீடர்களுடனே எங்களூர்ப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார். மழபாடி சிவாலயத்தைச் 
சுற்றிச் செழித்து வளர்ந்து கொத்துக் கொத்தாகப் பூத்துக்குலுங்கிய கொன்னைமரங்கள் 
ஆலயத்தை மறைத்திருந்தனவாம். ஆகையால் கோயிலைக் கவனியாமல் சுந்தரர் சென்றாராம். 
'சுந்தரம், என்னை மறந்தாயோ!'- என்ற குரல் அவர் காதில் கேட்டதாம். சுந்தரர் சுற்றும் 
முற்றும் பார்த்து 'யாராவது ஏதேனும் சொன்னீர்களா?' என்று கேட்டாராம். சீடர்கள், 
'இல்லை' என்றாகளாம். தங்கள் காதில் குரல் எதுவும் கேட்கவில்லை என்றும் 
சொன்னார்களாம். சுந்தரர் உடனே அருகில் ஏதாவது ஆலயம் மறைந்திருக்கிறதா என்று 
விசாரித்தாராம். கொன்னை மரங்களுக்கிடையில் மறைந்திருந்த மழபாடித் திருக்கோயிலைக் 
கண்டுபிடித்து, ஓடி வந்து இறைவன் சன்னதியில் "பொன்னார் மேனியனே!" என்ற பதிகத்தைப் 
பாடினாராம். இந்த வரலாற்றைக் கேட்டது முதற்கொண்டு,   
					
	மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! 
	அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே! 
 
					என்ற வரிகள் என் 
					மனத்தில் பதிந்துவிட்டன. கோவிலுக்கு அடிக்கடி போவேன். நடராஜ 
					மூர்த்தியின் முன்னால் நின்று அந்த வரிகளை ஓயாது சொல்லுவேன். 
					நாளாக ஆக, என் உள்ளத்தில் மழபாடி இறைவர் குடிகொண்டுவிட்டார். 
					சிவபெருமானையே நான் மணந்துகொள்ளப் போவதாக மனக்கோட்டை 
					கட்டினேன். என்னை நான் உமையாகவும், பார்வதியாகவும், 
					தாட்சாயணியாகவும் எண்ணிக்கொள்வேன். அவர்கள் சிவபெருமானைப் 
					பதியாக அடைவதற்குத் தவம் செய்ததுபோல நானும் கண்ணை மூடிக்கொண்டு 
					தவம் செய்வேன். யாராவது என் கலியாணத்தைப் பற்றிய பேச்சு 
					எடுத்தால் வெறுப்பு அடைவேன். இவ்விதம் என் குழந்தைப் பருவம் 
					சென்றது. மங்கைப் பருவத்தை அடைந்தபோது என் உள்ளம் 
					சிவபெருமானுடைய பக்தியில் முன்னைவிட அதிகமாக ஈடுபட்டது. 
					வீட்டாரும், ஊராரும் என்னைப் 'பிச்சி' என்று சொல்ல 
					ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவேயில்லை. 
					வீட்டில் உண்டு உறங்கிய நேரம் போக மிச்சப் பொழுதையெல்லாம் 
					கோவிலிலேயே கழித்தேன். பூஜைக்குரிய மலர்களைப் பறித்து 
					விதம்விதமான மாலைகளைத் தொடுத்து, நடராஜப் பெருமானுக்கு 
					அணியச்செய்ு பார்த்து மகிழ்வேன்! நெடுநேரம் கண்ணை மூடிக்கொண்டு 
					தியானத்தில் ஆழ்ந்திருப்பேன். இவ்விதம் ஒரு நாள் கண்ணை 
					மூடிக்கொண்டு மனத்தில் இறைவனையே தியானித்துக் கொண்டிருந்தபோது 
					திடீரென்று கலகலவென்று சத்தம் கேட்டுக் கண் விழித்துப் 
					பார்த்தேன். என் எதிரே ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். 
					அவர்களில் முன்னால் நின்ற ஒருவர் மீதுதான் என் கண்களும் 
					கருத்தும் சென்றன. நான் மனத்தில் தியானித்துக் கொண்டிருந்த 
					சிவபெருமான், தாமே தம் பரிவாரங்களுடன் என்னை ஆட்கொள்ள 
					வந்துவிட்டார் என்று எண்ணிக்கொண்டேன். எழுந்து நின்று 
					தலைகுனிந்து வணங்கி நின்றேன். எண் கண்களிலிருந்து தாரை தாரையாக 
					கண்ணீர் பொழிந்தது. இதை அவர் கவனித்து இருக்கவேண்டும். 'இந்த 
					பெண் யார்? இவள் ஏன் கண்ணீர்விட்டு அழுகிறாள்?' என்று ஒரு 
					குரல் கேட்டது. அதற்கு என் தந்தையின் குரல், 'இவள் என் மகள். 
					பிஞ்சிலே பழுத்தவளைப் போல் இவளுக்கு இப்போது சிவபக்தி 
					வந்துவிட்டது. ஓயாமல் இப்படிக் கோவிலில் வந்து உட்கார்ந்து, 
					கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பதிகம் பாடுவதும், 
					கண்ணீர் விடுவதுமாயிருக்கிறாள்!" என்று கூறிய மறுமொழி என் 
					காதில் விழுந்தது. மறுபடி நான் நிமிர்ந்து பார்த்த போது, 
					முன்னால் நின்றவர் சிவபெருமான் இல்லையென்றும், யாரோ அரச 
					குலத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு அவமானம் 
					தாங்கவில்லை. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வீட்டை 
					அடைந்தேன். ஆனால் என்னை ஆட்கொண்டவர் என்னை விடவில்லை. என் 
					தந்தையுடன் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார். மகனே! அவர்தான் 
					என் கணவரும், உன் அருமைத் தந்தையுமாகிய கண்டராதித்த தேவர்!" 
  
					இவ்விதம் கூறிவிட்டுப் பெரிய மகாராணி சிறிது நிறுத்தினார். 
					பழைய நினைவுகள் அவருடைய கண்களில் மீண்டும் கண்ணீர்த் துளிகளை 
					வருவித்தன. கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் கூறினார்:-  
					"பிறகு உன் தந்தையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். 
					அவர் சிறிது காலத்துக்கு முன்புதான் சோழநாட்டின் 
					சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதலாவது பற்பல 
					சிவஸ்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். 
					அவருக்குப் பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் 
					அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகி விட்டார். மறுபடி 
					கலியாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. 
					மீண்டும் மணம்புரிந்து கொள்வதில்லையென்று விரதம் 
					கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் 
					கண்டதினால் சலனமடைந்தது. என் தந்தையின் முன்னிலையில் என் 
					விருப்பத்தை அவர் கேட்டார். நானோ சிவபெருமானே மனித 
					உருவங்கொண்டு என்னை ஆட்கொள்ள வந்திருப்பதாக எண்ணிப் பரவசம் 
					கொண்டிருந்தேன். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் 
					தெரிவித்தேன். எங்களுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அதன் 
					பயனாக உன் பாட்டனார் இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் அடைந்து 
					'மழவரையர்' என்ற பட்டப் பெயரையும் பெற்றார்..." 
  "மகனே! 
					எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் 
					இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். 
					சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் 
					செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் 
					தீர்மானித்திருந்தோம். அதற்கு ஓர் முக்கியம் காரணம் 
					இருந்தது.குழந்தாய்! இதையெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டிய 
					அவசியம் ஏற்படும் என்று நான் கனவிலும் கருதவில்லை. ஆயினும், 
					அத்தகைய அவசியம் நேர்ந்தது விட்டதனால் சொல்லுகிறேன். கொஞ்சம் 
					செவி கொடுத்துக் கவனமாகக் கேள்!" 
  இவ்விதம் 
					செம்பியன்மாதேவி கூறி மீண்டும் ஒரு நெடுமூச்சு விட்டார். 
					மதுராந்தகனும் முன்னைக்காட்டிலும் அதிகச் சிரத்தையுடன் காது 
					கொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.
					  |