கல்கியின் பொன்னியின் செல்வன்  
 
kalkiyin ponniyin celvan
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்  
அத்தியாயம் 1-10 
					
					முதலாவது அத்தியாயம் - மூன்று குரல்கள்  இரண்டாம் அத்தியாயம் - வந்தான் முருகய்யன்!  மூன்றாம் அத்தியாயம் - கடல் பொங்கியது!  நான்காம் அத்தியாயம் - நந்தி முழுகியது  ஐந்தாம் அத்தியாயம் - தாயைப் பிரிந்த கன்று  ஆறாம் அத்தியாயம் - முருகய்யன் அழுதான்!  ஏழாம் அத்தியாயம் - மக்கள் குதூகலம்  எட்டாம் அத்தியாயம் - படகில் பழுவேட்டரையர்  ஒன்பதாம் அத்தியாயம் - கரை உடைந்தது!  பத்தாம் அத்தியாயம் - கண் திறந்தது!  
 
முதல் அத்தியாயம்  மூன்று குரல்கள் 
 
 நாகைப்பட்டினம் சூடாமணி 
விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் 
சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் 
கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம் கவர எண்ணியதாகத் தம் மீது சாட்டப் பட்ட 
குற்றம் ஆதாரமற்றது என்று நிரூபிக்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையின் வாக்கை 
மீறி நடந்ததாகத் தம் மீது ஏற்படக்கூடிய அபவாதத்தைக் கூடிய விரைவில் போக்கிக் 
கொள்ளவும் அவர் விரும்பினார். 
  ஆயினும், தமது ஆர்வத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு தமக்கையாரிடமிருந்து 
செய்தி வந்த பின்னர்தான் தஞ்சைக்குப் புறப்பட வேண்டுமென்று உறுதியாக இருந்தார். 
பொழுது போவது என்னமோ மிகவும் கஷ்டமாக இருந்தது.புத்த பிக்ஷுக்கள் தினந்தோறும் 
நடத்திய ஆராதனைகளிலும், பூஜைகளிலும் கலந்துகொண்டு சிறிது நேரத்தைப் போக்கினார். 
  சூடாமணி விஹாரத்தின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த அருமையான சித்திரக் 
காட்சிகளைப் பார்ப்பதில் சிறிது நேரம் சென்றது. பிக்ஷுக்களுடன், முக்கியமாகச் 
சூடாமணி விஹாரத்தின் ஆச்சாரிய பிக்ஷுவுடன் சம்பாஷிப்பதிலே கழிந்த பொழுது அவருக்கு 
உற்சாகத்தை அளித்தது. ஏனெனில் சூடாமணி விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு 
கீழ்த்திசைக்கடலுக்கு அப்பாலுள்ள பற்பல நாடுகளிலே வெகுகாலம் யாத்திரை செய்தவர். சீன 
தேசத்திலிருந்து சாவகத் தீவு வரையில் பல ஊர்களுக்கும் சென்று வந்தவர். அந்தந்த 
நாடுகளைப் பற்றியும் அவற்றிலுள்ள நகரங்களைப் பற்றியும் ஆங்காங்கு வசித்த மக்களைப் 
பற்றியும் அவர் நன்கு எடுத்துக்கூற வல்லவராயிருந்தார். 
  சீன தேசத்துக்குத் 
தெற்கே கடல் சூழ்ந்த பல நாடுகள் அந்நாளில் ஸரீ விஜயம் என்னும் சாம்ராஜ்யத்தில் 
அடங்கியிருந்தன. அருமண நாடு, காம்போஜ தேசம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், 
மாபப்பாளம், மாயிருடிங்கம், இலங்கா சோகம், தாமரலிங்கம், இலாமுரி தேசம் முதலிய பல 
நாடுகளும் நகரங்களும் ஸரீ விஜய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டோ, நேசப்பான்மையுடனோ 
இருந்து வந்தன.இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாகக் கடாரம் என்னும் மாநகரம் இணையற்ற சீர் 
சிறப்புகளுடனும் செல்வ வளத்துடனும் விளங்கி வந்தது. 
  அந்த நாடு 
நகரங்களைப்பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷுவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் 
பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி 
வந்தார்.அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் 
பற்றியும் கூறினார். பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பு செழித்துச் 
சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் 
விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத்துக்கும், அந்த 
நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றக் கூறினார். பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த 
தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத்திறமை வாய்ந்த ஆலயங்களைப் 
பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர, சங்கீத நாட்டிய கலைகள் 
அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார். இராமாயணம், மகாபாரதம், முதலிய 
இதிகாசங்களும், விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருமால் ஆகிய 
தெய்வங்களும், புத்த தர்மமும் அந்த தேசத்து மக்களின் உள்ளங்களில் கலந்து 
கொண்டிருப்பதையும், ஒன்றோடொன்று பிரித்து உணர முடியாதவர்களாக அந்நாட்டு மக்கள் 
எல்லாத் தெய்வங்களையும் வணங்கி வருவதையும் எடுத்துச் சொன்னார். தமிழ் மொழியின் 
தந்தையாகிய அகஸ்திய முனிவருக்கு அந்த நாடுகளில் விசேஷ மரியாதை உண்டு என்பதையும் 
அம்முனிவருக்குப் பல கோயில்கள் கட்டியிருப்பதையும் கூறினார். 
  இதையெல்லாம் 
திரும்பத் திரும்ப அருள்மொழிவர்மர் கேட்டுத் தெரிந்து, மனத்திலும் பதிய 
வைத்துக்கொண்டார். அந்தந்த தேசங்களுக்குத் தரை வழியான மார்க்கங்களையும், கடல் 
வழியான மார்க்கங்களையும் இளவரசர் நன்கு விசாரித்து அறிந்தார். வழியில் உள்ள 
அபாயங்கள் என்ன, வசதிகள் என்ன என்பதையும் கேட்டு அறிந்தார். 
  "சுவாமி! அந்த 
நாடுகளில் மறுபடியும் தாங்கள் யாத்திரை செய்யும்படியாக நேரிடுமோ?" என்று வினவினார். 
  "புத்த பகவானுடைய சித்தம்போல் நடக்கும், இளவரசே! எதற்காகக் கேட்கிறீர்கள்?" 
என்றார் பிக்ஷு. 
  "நானும் தங்களுடன் வரலாம் என்ற ஆசையினால்தான்." 
  "நான் உலகத்தைத் துறந்த சந்நியாசி; தாங்கள் புவி ஆளும் சக்கரவர்த்தியின் 
திருக்குமாரர். தாங்களும், நானும் சேர்ந்து யாத்திரை செய்வது எப்படி? தங்களைச் 
சிலநாள் இந்த விஹாரத்தில் வைத்துக் காப்பாற்றும் பொறுப்பே எனக்குப் பெரும் 
பாரமாயிருக்கிறது. எப்போது, என்ன நேருமோ என்று நெஞ்சு `திக், திக்' என்று அடித்துக் 
கொள்கிறது..." 
  "சுவாமி! அந்தப் பாரத்தை உடனே நிவர்த்தி செய்ய 
விரும்புகிறேன். இந்தக் கணமே இங்கிருந்து..." 
  "இளவரசே! ஒன்று நினைத்து 
ஒன்றைச் சொல்லிவிட்டேன். தங்களை இங்கு வைத்துக் கொண்டிருப்பது பாரமாயிருந்தாலும், 
அதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். தங்கள் தந்தையாகிய சக்கரவர்த்தியும், தமக்கையார் 
இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக 
நாங்கள் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஆயிரத்தில் ஒரு பங்குக்குக் கூட இப்போது 
நாங்கள் செய்வது ஈடாகாது. தாங்கள் புத்த தர்மத்துக்குச் செய்திருக்கும் உதவிதான் 
அற்ப சொற்பமானதா? அநுராதபுரத்தின் சிதிலமான ஸ்தூபங்களையும், விஹாரங்களையும் 
செப்பனிடச் செய்த கைங்கரியத்தை நாங்கள் மறக்க முடியுமா? அதற்கெல்லாம் இணையான பிரதி 
உபகாரமாக ஈழநாட்டின் மணி மகுடத்தையே தங்களுக்கு அளிக்கப் பிக்ஷுக்கள் முன் 
வந்தார்கள். இளவரசே! அதை ஏன் மறுத்தீர்கள்? இலங்கையின் சுதந்திரச் சிங்காதனத்தில் 
தாங்கள் ஏறியிருந்தால், நூறு நூறு கப்பல்களில் ஏராளமான பரிவாரங்களுடனே, கீழ்த்திசை 
நாடுகளுக்குத் தாங்கள் போய் வரலாமே? இந்தப் பிக்ஷுவைப் பின் தொடர்ந்து யாத்திரை 
செய்ய வேண்டுமென்ற விருப்பமே தங்கள் மனத்தில் தோன்றியிராதே?" என்றார் ஆச்சரிய 
பிக்ஷசூ. 
  "குருதேவரே! இலங்கை ராஜகுலத்தின் சரித்திரத்தைக் கூறும் `மகா 
வம்சம்' என்னும் கிரந்தத்தைத் தாங்கள் படித்ததுண்டா?" என்று இளவரசர் கேட்டார். 
  "ஐயா! இது என்ன கேள்வி? `மகா வம்சம்' படிக்காமல் நான் இந்தச் சூடாமணி 
விஹாரத்தின் தலைவனாக ஆகியிருக்க முடியுமா?" 
  "மன்னிக்க வேண்டும். `மகா 
வம்சம் படித்ததுண்டா?' என்று தங்களிடம் கேட்டது, தங்களுக்குப் படிக்கத் தெரியுமா 
என்று கேட்பது போலத்தான். ஆனால் அந்த `மகா வம்சம்' கூறும் அரச பரம்பரையில் யார், 
யார் என்னென்ன பயங்கரமான கொடும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் 
தெரியும் அல்லவா? மகன் தந்தையைச் சிறையில் அடைத்தான். தந்தை மகனை வெட்டிக் 
கொன்றான். தாய் மகனுக்கு விஷமிட்டுக் கொன்றாள்; தாயை மகன் தீயிலே போட்டு 
வதைத்தான்... பெற்றோர்களுக்கும் பெற்ற மக்களுக்கும் உறவு இப்படி என்றால், 
சித்தப்பன்மார்கள், மாமன்மார்கள், சிற்றன்னை, பெரியன்னைமார்கள், அண்ணன் 
தம்பிமார்கள்.... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குருதேவரே! இப்படிப்பட்ட 
கொடும் பாதகங்களை இலங்கை அரச குடும்பத்தினர் செய்தனர் என்று `மகா வம்சம்' 
கூறுகிறதல்லவா?" 
  "அம். ஆம்! அத்தகைய தீச்செயல்களுக்கு அவரவர்கள் அடைந்த 
தண்டனைகளையும் கூறுகிறது. அந்த உதாரணங்களைக் காட்டி மக்களைத் தர்ம மார்க்கத்தில் 
நடக்கும்படி `மகா வம்சம்' உபதேசிக்கிறது. அதை மறந்து விட வேண்டாம்! `மகா வம்சம்' 
புனிதமான கிரந்தம். உலகிலே ஒப்புயர்வற்ற தர்ம போதனை செய்யும் நூல்!" என்று ஆச்சாரிய 
பிக்ஷசூ பரபரப்புடன் கூறினார். 
  "சுவாமி, `மகா வம்சம்' என்ற நூலை நான் குறை 
சொல்லவில்லை. இராஜ்யாதிகார ஆசை எப்படி மனிதர்களை அரக்கர்களிலும் கொடியவர்களாக்கி 
விடுகிறது என்பதைப் பற்றித்தான் சொன்னேன். அத்தகைய கொடும் பாவங்களினால் களங்கமடைந்த 
இலங்கைச் சிம்மாதனத்தை நான் மறுதளித்தது தவறாகுமா?" 
  "மகா புத்திமான்களான 
புத்த சங்கத்தார் அதனாலேதான் இலங்கை அரச வம்சத்தையே மாற்ற விரும்பினார்கள். தங்களை 
முதல்வராகக் கொண்டு, புதிய வம்சம் தொடங்கட்டும் என்று எண்ணினார்கள். தாங்கள் அதை 
மறுத்தது தவறுதான். இலங்கைச் சிம்மாதனத்தில் வீற்றிருந்து அசோக வர்த்தனரைப் போல் 
உலகமெல்லாம் புத்த தர்மத்தைப் பரப்பிப் பாதுகாக்கும் வாய்ப்பு தங்களுக்குக் 
கிடைத்தது..." 
  "குருதேவரே! பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட அசோக 
வர்த்தனர் எங்கே? இன்று இந்தப் புத்த விஹாரத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை 
நாடியிருக்கும் இந்தச் சிறுவன் எங்கே? உண்மையில், தங்கள் சீடனாகக் கூட நான் 
அருகதையில்லாதவன், புத்த தர்மத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன்?" 
  "இளவரசே! அவ்விதம் சொல்ல வேண்டாம். தங்களிடம் மறைந்து கிடக்கும் மகா 
சக்தியைத் தாங்கள் அறியவில்லை. தாங்கள் மட்டும் புத்த தர்மத்தை மனப்பூர்வமாக 
ஒப்புக் கொண்டால் அசோகரைப் போல் புகழ் பெறுவீர்கள்..." 
  "என் உள்ளத்தில் 
இளம்பிராயத்திலிருந்து விநாயகரும் முருகனும், பார்வதியும், பரமேசுவரனும், நந்தியும் 
பிருங்கியும் சண்டிகேசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் 
அப்புறப்படுத்தி விட்டல்லவா புத்த தர்மத்திற்கு இடங் கொடுக்கவேண்டும்? குருதேவரே! 
அடியேனை மன்னியுங்கள்! தங்களுடனே நான் யாத்திரை வருகிறேன் என்று சொன்னபோது, புத்த 
தர்மத்தில் சேர்ந்து விடுவதாக எண்ணிச் சொல்லவில்லை. கடல்களைச் கடந்து தூர 
தேசங்களுக்குப் போய்ப் பார்க்கும் ஆசையினால் தங்களுடன் வருவதாகச் சொன்னேன்! ஆனாலும் 
மறுபடி யோசிக்கும்போது..." 
  "இளவரசே! தங்கள் வார்த்தையை நான் தவறாகத்தான் 
புரிந்து கொண்டேன். ஆனாலும் புத்த தர்மத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாமற் 
போகவில்லை. புத்த பகவானுடைய பூர்வ ஜன்மம் ஒன்றில் அவர் சிபிச் சக்கரவர்த்தியாக 
அவதரித்திருந்தார். புறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தமது சதையை அவர் அரிந்து 
கொடுத்தார். அந்த சிபியின் வம்சத்திலே பிறந்தவர் சோழ குலத்தினர். ஆகையினாலே தான் 
உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்குச் `செம்பியன்' என்ற பட்டம் ஏற்பட்டிருக்கிறது. 
இதைத் தாங்கள் மறந்து விடவேண்டாம்." 
  `மறக்கவில்லை. குருதேரே! மறந்தாலும் 
என் உடம்பில் ஓடும் இரத்தம் என்னை மறக்கவிடுவதில்லை.ஒரு பக்கத்தில் சிபிச் 
சக்கரவர்த்தியும், மனு நீதிச் சோழரும் என்னுடைய இரத்தத்திலேயும், சதையிலேயும், 
எலும்பிலேயும் கலந்திருந்தது, `பிறருக்கு உபகாரம் செய்; மற்றவர்களுக்காக உன்னுடைய 
நலன்களைத் தியாகம் செய்!' என்று வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு 
பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய 
இரத்தத்திலே சேர்ந்திருந்தது `கையில் கத்தியை எடு! நாலவகைச் சைனியத்தைத் திரட்டு! 
நாலு திசையிலும் படை எடுத்துப் போ! கடல் கடந்து போ! சோழ ராஜ்யத்தை விஸ்தரித்து 
உலகம் காணாத மகோன்னதம் அடையச் செய்!' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு 
புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், 
மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு `ஆலயத் திருப்பணி செய்! 
பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு! மேரு மலைபோல் வானளாவி நிற்கும் 
கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி!'என்று உபதேசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். 
என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். 
குருதேவரே! அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் 
எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் 
தோன்றுகிறது.கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த 
பகவானைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றார் பொன்னியின் செல்வர். 
  இதைக் கேட்ட 
பிக்ஷுவின் முகம் மிக்க மலர்ச்சியடைந்து விளங்கியது. "இளவரசே! பௌத்த மதத்தைப் 
பற்றியும், புத்த பகவானைப் பற்றியும் தாங்கள் அறியாதது என்ன இருக்கக்கூடும்?" 
என்றார். 
  "அதோ அந்தச் சுவர்களில் காணப்படும் சித்திரக் காட்சிகளை விளக்கிச் 
சொல்லுங்கள். அங்கே ஓர் இராஜ குமாரர் இரவில் எழுந்து போகப் பிரயத்தனப் படுவது போல் 
ஒரு சித்திரம் இருக்கிறதே? அது என்ன? அவர் அருகில் படுத்திருக்கும் பெண்மணி யார்? 
தொட்டிலில் தூங்கும் குழந்தை யார்? அந்த இராஜகுமாரர் முகத்தில் அவ்வளவு கவலை 
குடிகொண்ட தோற்றம் ஏன்?" என்று இளவரசர் கேட்டார். 
  "ஐயா! புத்த பகவான் இளம் 
பிராயத்தில் தங்களைப் போல் இராஜ குலத்தில் பிறந்த இளவரசராக இருந்தார். யசோதரை 
என்னும் நிகரற்ற அழகு வாய்ந்த மங்கையை மணந்திருந்தார். அவர்களுக்கு ஒரு செல்வப் 
புதல்வன் பிறந்திருந்தான். தகப்பனார் இராஜ்ய பாரத்தை அவரிடம் ஒப்புவிக்கச் 
சித்தமாயிருந்தார்.அந்தச் சமயத்தில் சித்தார்த்தர் உலகில் மக்கட் குலம் 
அனுபவிக்கும் துன்பங்களைப் போக்குவதற்கு வழி கண்டுபிடிக்க விரும்பினார். இதற்காக 
அருமை மனைவியையும் செல்வக் குழந்தையையும் இராஜ்யத்தையும் விட்டுப் போகத் 
தீர்மானித்தார். அவர் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் புறப்படும் காட்சி தான் அது. 
இளவரசே! இந்த வரலாற்றைத் தாங்கள் முன்னம் அறிந்ததில்லையா?" 
  "ஆம், ஆம்! 
பலமுறை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தச் சித்தரத்தில் பார்க்கும்போது 
மனதில் பதிவதுபோல், வாயினால் கேட்ட வரலாறு பதியவில்லை. தூங்குகின்ற யசோதரையை 
எழுப்பி `சித்தார்த்தர் உன்னை விட்டுப் போகிறார்! அவரைத் தடுத்து நிறுத்து!' என்று 
எச்சரிக்கத் தோன்றுகிறது. சரி; அடுத்த சித்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!" 
  புத்த பகவானுடைய வரலாற்றைக் குறிப்பிட்ட மற்றச் சித்திரங்களையும் 
ஒவ்வொன்றாக ஆச்சாரிய பிக்ஷசூ எடுத்து விளக்கி வந்தார். அருள்மொழிவர்மர் புத்த 
தர்மத்தைத் தழுவினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற ஆசை பிக்ஷுவின் இதய 
அந்தரங்கத்தில் இருக்கத்தான் இருந்தது.ஆகையால் மிக்க ஆர்வத்துடனே சித்தார்த்தருடைய 
சரித்திரத்தைச் சொல்லி வந்தார்.கடைசியில் சித்தார்த்தர் போதி விருட்சத்தின் அடியில் 
அமர்ந்து தவம் செய்து ஞான ஒளி பெறும் சித்திரத்துக்கு வந்தார். அந்தச் 
சித்திரத்தைச் குறித்து அவர் சொன்ன பிறகு பொன்னியின் செல்வர், "குருதேவா! தங்கள் 
கருத்துக்கு மாறாக நான் ஏதேனும் சொன்னால் தங்களுக்குக் கோபம் வருமா?" என்று 
கேட்டார். 
  "இளவரசே! நான் ஐம்புலன்களை வென்று மனத்தை அடக்கவும் பயின்றவன். 
தங்கள் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்" என்றார் பிக்ஷு. 
  `"போதி 
விருட்சத்தின் அடியில் வீற்றிருந்தபோது சித்தார்த்தர் ஞான ஒளி பெற்றார் என்பதை நான் 
நம்பவில்லை." 
  ஐம்புலன்களையும் உள்ளத்தையும் அடக்கியவாரயிருந்த போதிலும் 
பிக்ஷுவின் முகம் சுருங்கியது. 
  "இளவரசே! மகா போதி விருட்சத்தின் ஒரு கிளை 
அசோக வர்த்தனரின் காலத்தில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கிளை, வேர் 
விட்டு வளர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைக்கும் பட்டுப் போகாமல் 
அநுராதபுரத்தில் விசாலமாகப் படர்ந்து விளங்கி வருகிறது. அந்தப் புனித விருட்சத்தைத் 
தாங்களே அனுராதபுரத்தில் பார்த்திருப்பீர்கள். பின்னர், `நம்பவில்லை' என்று ஏன் 
சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். 
  "குருதேவரே! போதி விருட்சமே இல்லையென்று 
நான் சொல்லவில்லை. அதனடியில் அமர்ந்து சித்தார்த்தர் தவம் செய்ததையும் 
மறுக்கவில்லை. அங்கே தான் அவர் ஞான ஒளி பெற்றார் என்பதைத்தான் மறுத்துக் 
கூறுகிறேன். என்றைய தினம் சித்தார்த்தர் மக்களுடைய துன்பத்தைத் துடைக்க வழி 
காண்பதற்காகக் கட்டிய மனைவியையும், பெற்ற மகனையும் உரிமையுள்ள இராஜ்யத்தையும் 
தியாகம் செய்து நள்ளிரவில் புறப்பட்டாரோ, அப்போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் 
என்றுதான் சொல்லுகிறேன். அதைக் காட்டிலும் ஓர் அற்புதமான செயலை நான் எந்த 
வரலாற்றிலும் கேட்டதில்லை. இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக, 
இராஜ்யத்தைத் தியாகம் செய்தார். பரதர் தம் தமையனிடம் கொண்ட பக்தியினால், `இராஜ்யம் 
வேண்டாம்' என்றார். அரிச்சந்திர மகாராஜா தாம் கொடுத்த வாக்குறுதியை 
நிறைவேற்றுவதற்காக, இராஜ்யத்தைத் துறந்தார். சிபிச் சக்கரவர்த்தியும் புறாவுக்கு 
அடைக்கலம் கொடுத்து விட்ட காரணத்தினால், தம் உடலை அறுத்துக் கொடுத்தார். ஆனால் 
சித்தார்த்தர் யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை; யாரையும் திருப்தி செய்ய 
விரும்பவில்லை. மனித குலத்தின் துன்பத்தைப் போக்க வழி கண்டுபிடிக்கும் பொருட்டுத் 
தாமாகவே எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டுப் புறப்பட்டார். புத்த பகவான் போதி 
விருட்சத்தின் அடியில் ஞான ஒளி பெற்ற பிறகு, இதைக் காட்டிலும் அற்புதமான செயல் 
ஏதேனும் செய்த துண்டா? ஆகையால் அரண்மனையை விட்டுப் புறப்பட்ட போதே அவர் ஞான ஒளி 
பெற்றுவிட்டார் என்று சொல்லுவது தவறாகுமா?" 
  இவ்விதம் பொன்னியின் செல்வர் 
கூறிய மொழிகள் ஆச்சாரிய பிக்ஷுவின் செவிகளில் அமுதத் துளிகளைப் போல் விழுந்தன. 
"ஐயா! தாங்கள் கூறுவதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆயினும் போதி 
விருட்சத்தினடியிலேதான் மக்களின் துன்பங்களைப் போக்கும் வழி இன்னதென்பது புத்த 
பகவானுக்கு உதயமாயிற்று. அதிலிருந்துதான் மக்களுக்குப் பகவான் போதனை செய்யத் 
தொடங்கினார்." 
  "சுவாமி! புத்த பகவானுடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த 
போதனைகளைக் காட்டிலும் அவருடைய தியாகச் செயலிலேதான் அதிக போதனை நிறைந்திருப்பதாக 
எனக்குத் தோன்றுகிறது. மன்னிக்கவேணும். நானும் அவருடைய செயலைப் பின்பற்ற 
விரும்புகிறேன். சற்று முன்னால், என் முந்தையரின் மூன்றுவிதக் குரல்கள் என் 
உள்ளத்தில ஓயாமல் ஒலித்து, என்னை வேதனைப் படுத்துவதாகச் சொன்னேன் அல்லவா? அந்தத் 
தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக 
ஏற்றுக்கொள்ளுங்கள்!" என்றார் இளவரசர். 
  "இளவரசே! தங்களை யொத்த சீடனைப் 
பெறுவதற்கு நான் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.ஆனால் அதற்கு வேண்டிய 
தகுதியும் எனக்கில்லை; தைரியமும் இல்லை.இலங்கையில் புத்த மகா சங்கம் கூடும்போது 
தாங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்." என்றார் பிக்ஷு. 
  "தங்கள் 
தகுதியைப்பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தைரியத்தைப் பற்றிச் சொன்னீர்கள், அது 
என்ன?" 
  "ஆமாம்.தைரியமும் இல்லைதான்! இரண்டு தினங்களாக இந்த 
நாகைப்பட்டினத்தில் ஒரு வதந்தி பரவிக்கொண்டு வருகிறது. அதை யார் கிளப்பி 
விட்டார்கள் என்று தெரியவில்லை. தாங்கள் இந்த விஹாரத்தில் இருப்பதாகவும், தங்களைப் 
புத்த பிக்ஷுவாக்க நாங்கள் முயன்று வருவதாகவும் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் 
கொள்கிறார்களாம். இதனால் அநேகர் கோபங்கொண்டிருக்கிறார்களாம். இந்த விஹாரத்தின் மீது 
மக்கள் படை எடுத்து வந்து உண்மையை அறியவேண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்களாம்!" 
 
  "ஆகா! இது என்ன பைத்தியக்காரத்தனம்? நான் புத்த மதத்தில் சேர்வதுபற்றி 
ஊரில் உள்ளவர்களுக்கு என்ன கவலை? நான் காவித்துணி அணிந்து சந்நியாச ஆசிரமத்தை 
மேற்கொண்டால், இவர்கள் ஏன் கோபங்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எனக்குக் கலியாணம் 
கூட ஆகவில்லையே? மனைவி மக்களை விட்டுப் போகிறேன் என்று கூடக் குற்றம் சுமத்த 
முடியாதே?" என்றார் இளவரசர். 
  `ஐயா! ஜனங்களுக்குத் தங்கள் மீது கோபம் 
எதுவும் இல்லை. தங்களை ஏமாற்றிப் புத்த பிக்ஷுவாக்க முயல்வதாக எங்கள் பேரிலே தான் 
கோபம். வெறும் வதந்தியே இப்படிப் பட்ட கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. உண்மையாகவே 
நடந்துவிட்டால் என்ன ஆகும்? இந்த விஹாரத்தையே ஜனங்கள் தரை மட்டமாக்கி விடுவார்கள். 
ஏதோ தங்களுடைய தந்தையின் ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். 
தினந்தோறும். "போதியந் திருநிழர் புனித நிற் பரவுதும் மேதகு நந்தி புரி மன்னர் 
சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே!" எனப் 
பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்த நல்ல நிலைமையைக் கெடுத்துக்கொள்ள நான் 
விரும்பவில்லை. அதனாலேதான் `தைரியமில்லை' என்று சொன்னேன்" என்றார் பிக்ஷு. 
  அவர் கூறி வாய் மூடுவதற்குள்ளே அந்தப் புத்த விஹாரத்தின் வாசற்புறத்தில் 
மக்கள் பலரின் குரல்கள் திரண்டு ஒருமித்து எழும் பேரோசை கேட்கத் தொடங்கியது. பிக்ஷு 
அதைச் செவி கொடுத்துச் சிறிது நேரம் கேட்டுவிட்டு, "இளவரசே! நான் கூறியது 
உண்மையென்று நிரூபிக்க மக்களே வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதை எப்படிச் 
சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை! புத்த பகவான்தான் வழி காட்டியருள வேண்டும்!" 
என்றார். 
  சூடாமணி விஹாரத்தின் சுற்றுப் புறங்களில் ஆயிரக் கணக்கான மக்களின் 
கூக்குரல் ஒலி கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டு வந்தது. 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					இரண்டாம் அத்தியாயம்  வந்தான் 
					முருகய்யன்! 
					 
 
					சூடாமணி 
					விஹாரத்துக்கு வௌியே கடல் பொங்கும் போது எழும் ஓசையைப் போல் 
					மக்களின் இரைச்சல் ஒலி பெருகிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் 
					ஆசாரிய பிக்ஷுவும், அருள்மொழிவர்மரும் கேட்டுக் 
					கொண்டிருந்தார்கள். அந்தப் புத்த விஹாரமும், அதில் உள்ள 
					பிக்ஷுகளும் தம்மால் இந்தப் பெரும் சங்கடத்துக்கு 
					உள்ளாகியிருப்பதை எண்ணி இளவரசர் மிகவும் மனக்கலக்கம் 
					அடைந்தார். "சுவாமி என்னால் உங்களுக்கு இந்தத் தொல்லை 
					உண்டானதைப் பற்றி வருத்தப்படுகிறேன்" என்றார். 
  "இளவரசே! தங்கள் காரணமாக இதுபோல் நூறு மடங்கு தொல்லை நேர்ந்தாலும், நாங்கள் 
					பொருட்படுத்த மாட்டோம்.தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் 
					எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இது ஒரு 
					கைம்மாறாகுமா?" என்றார் பிக்ஷு. 
  "அதுமட்டும் அல்ல. இம்மாதிரி ஒளிவு மறைவாகக் காரியம் செய்வது எனக்கு 
					எப்போதும் பிடிப்பதில்லை. நான் இங்கு இருந்து கொண்டே எதற்காக 
					`இல்லை' என்று சொல்ல வேண்டும்? சத்தியத்துக்கு விரோதமான இந்தக் 
					காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும்? 
					தங்களுடைய பரிவான சிகிச்சையினால் எனக்கு உடம்பும், நன்றாகக் 
					குணமாகிவிட்டது. இப்போதே வௌியேறிச் சென்று ஜனங்களிடம் நான் 
					இன்னான் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தாங்கள் எனக்கு 
					அடைக்கலம் அளித்துச் சிகிச்சை செய்து என் உயிரையும் 
					காப்பாற்றினீர்கள் என்பதை மக்களிடம் அறிவிக்கிறேன். இந்தச் 
					சூடாமணி விஹாரத்துக்கு என் காரணமாக எந்த வித அபகீர்த்தியும் 
					ஏற்படக் கூடாது" என்றார் இளவரசர். 
  "ஐயா! இதில் 
					சத்தியத்துக்கு விரோதமான காரியம் எதுவும் இல்லை. தங்களுடைய 
					எதிரிகள் தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க 
					முயல்கிறார்கள். இந்த நாகைப்பட்டினத்தில் அவர்கள் சென்ற இரண்டு 
					நாளாகப் பரப்பி உள்ள வதந்தியிலிருந்தே அது 
					நிச்சயமாகிறது.அப்படியிருக்க தாங்கள் இங்கே இருப்பதைத் 
					தெரிவியாமல் வைத்திருப்பதில் தவறு என்ன? அரச குலத்தினர் 
					இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக 
					தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத 
					வாசம் செய்யவில்லையா? அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு 
					மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா?" என்று பிக்ஷசூ 
					கேட்டார். 
  "குருதேவரே! தங்கள் அறிவுத்திறனும், 
					விவாதத்திறனும் அபாரமானவை யென்பதை அறிவேன். தங்களுடன் தர்க்கம் 
					செய்து என்னால் வெல்ல முடியாது. ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்; 
					பஞ்சபாண்டவர்கள் மறைந்திருக்க வேண்டியது. அவர்கள் ஏற்றுக்கொண்ட 
					`சூள்' காரணமாக அவசியமாயிருந்தது.எனக்கு அப்படி அவசியம் 
					ஒன்றும் இல்லை. என் விரோதிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். எனக்கு 
					அப்படிப்பட்ட விரோதிகள் யார்? எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க 
					வேண்டும்? எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. 
					இதையெல்லாம் நான் வௌியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு 
					எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் 
					கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் 
					போகும்.மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி 
					அடைவதாயிருந்தால் அடையட்டுமே? அதில் யாருக்கு என்ன நஷ்டம்?" 
  "இளவரசே! தாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே. தங்களுடைய நிலைமையில் நானும் 
					அவ்விதமே எண்ணி நடந்து கொள்வேன். ஆனால் அதற்குத் தடையாக 
					நிற்பது, தங்கள் திருச்சகோதரி குந்தவைப் பிராட்டிக்கு நாங்கள் 
					கொடுத்திருக்கும் வாக்குறுதிதான். பழையாறை இளைய பிராட்டியைப் 
					போன்ற அறிவிற் சிறந்த மாதரசி சோழ குலத்தில் 
					தோன்றியதில்லையென்று தாங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். 
					வேறு எந்த இராஜ குலத்திலும் தோன்றியதில்லை என்பது என் கருத்து. 
					அவர் தாம் செய்தி அனுப்பும் வரையில் தங்களை இங்கே வைத்துப் 
					பாதுகாக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். முக்கியமான காரணம் 
					இன்றி அவர் அவ்விதம் சொல்லியிருக்கமாட்டார். சுந்தர சோழ 
					சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு விரோதமாகச் சோழ நாட்டுச் 
					சிற்றரசர்கள் பலர் சதி செய்வதாக நாடெல்லாம் பேச்சாக இருந்து 
					வருகிறது. மற்றொரு பக்கத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிலர் 
					இரகசியச் சதி வேலை ெய்து வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். 
					அந்தக் கூட்டதாருக்கு இந்தப் புத்த விஹாரத்திலுள்ள நாங்கள் 
					உதவி செய்கிறோமோ என்று எண்ணித்தான் ஜனங்கள் ஆத்திரம் அடைந்து 
					வாசலில் வந்து கூடியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் தாங்கள் 
					வௌியேறி, மக்களின் முன்னிலையில் தங்களை வௌிப்படுத்திக் கொள்வது 
					உசிதமான காரியமா? யோசியுங்கள்! அதைக் காட்டிலும் தங்களைப் 
					பாதுகாக்கும் முயற்சியில் எங்களுக்கெல்லாம் ஏதேனும் சங்கடம் 
					நேர்ந்தால் நேரட்டுமே?... அதற்கு நாங்கள் ஒரு நாளும் 
					பின்வாங்கப் போவதில்லை!..." 
  இவ்வாறு தலைமைப் பிக்ஷு 
					சொல்லிக் கொண்டிருந்த போது இன்னொரு இளம் சந்நியாசி அங்கே 
					பரபரப்புடன் வந்தார். "சுவாமி! நிலைமை மிஞ்சிப் போய் விட்டது. 
					ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று `இளவரசரைப் பார்க்க 
					வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். `இளவரசர் இங்கே இல்லை' 
					என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் பயனில்லை. `நாங்களே 
					விஹாரத்துக்குள் வந்து சோதித்துப் பார்க்க வேண்டும் என்று 
					கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு வழி சொல்லா 
					விட்டால், பலாத்காரமாக உள்ளே புகுந்து விடுவார்கள் 
					போலிருக்கிறது!" என்றார். 
  "அவர்களுக்கு நாம் என்ன வழி சொல்ல முடியும்? புத்த பகவான் அவர்களுடைய 
					மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு!" என்றார் 
					தலைமைப் பிக்ஷு. 
  இளவரசர் அப்போது "குருதேவரே! எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கருணை கூர்ந்து 
					கேட்க வேண்டும். தங்கள் சீடர்கள் நான் இங்கே இல்லை என்று 
					ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இனி நான் ஜனங்களின் 
					முன்னிலையில் போய் நின்றால், தங்கள்சீடர்களின் வாக்கைப் 
					பொய்யாக்கியதாகும். அதனால் ஒரு வேளை ஜனங்களின் மூர்க்காவேசம் 
					அதிகமானாலும் ஆகலாம்" என்றார். 
  "நிச்சயமாய் ஆகியே 
					தீரும். அதன் பலனை நாங்கள் அனுபவிக்க வேண்டியதுதான்" என்றார் 
					பிக்ஷசூ. 
  "அதைக் காட்டிலும் தங்கள் சீடர்களுடைய வாக்கை 
					நான் மெய்யாக்கி விடுகிறேன்..." 
  "இளவரசே! தங்களால்கூட அது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். இவர்கள் 
					சொன்னது சொன்னதுதானே? அதை எப்படி இனி மெய்யாக்க முடியும்?" 
  
					"அதற்கு வழியிருக்கிறது. ஜனங்கள் இந்த விஹாரத்துக்குள் 
					புகுவதற்குள்ளே நான் இங்கிருந்து போய் விடலாம் அல்லவா?" 
  
					"ஆகா! எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அத்தகைய பாவச் செயலை 
					நாங்கள் செய்ய வேண்டுமா? தங்களை வௌியேற்ற வேண்டுமா?" 
  "குருதேவரே! இதில் பாவமும் இல்லை. பழியும் இல்லை. இங்கிருந்து அரைக்காத 
					தூரத்தில் ஆனை மங்கலத்தில் சோழ மாளிகை இருக்கிறது. அன்றைக்கு 
					என் சகோதரியைப் பார்க்கச் சென்றபடி, இப்போதும் உடனே கால்வாய் 
					வழியே அங்கே போய் விடுகிறேன். பிறகு சௌகரியமான போது திரும்பி 
					வந்து விட்டால் போகிறது!" என்று சொன்னார் இளவரசர். 
  ஆச்சாரிய பிக்ஷுவுக்கு இளவரசர் கூறிய அந்த யோசனை பிடித்திருந்ததாகத் 
					தோன்றியது. 
  "ஆம், ஆம்! அப்படிச் செய்தால் தங்களை உடனே 
					வௌிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லாமற்போகும். தங்கள் 
					தமக்கையின் கருத்தையும் நிறைவேற்றியதாகும். ஆனால் கால்வாய், 
					விஹாரத்திலிருந்து வௌியேறும் இடத்திலும், ஜனங்கள் நிற்கலாம் 
					அல்லவா? அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே?" 
					என்றார். 
  "குருதேவரே! அதற்கு ஓர் உபாயம் செய்ய 
					முடியும். கூட்டத்தில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவன் 
					விஹாரத்திற்குள் வந்து தேடிப் பார்த்துக் கொள்ளலாம் என்று 
					சொல்லுவோம்" என்றார் இளம் பிக்ஷு. 
  "ஒருவன் வந்து 
					பார்த்தால் போதாதா? அவன் வௌியிலே சென்று மற்றவர்களிடமும் 
					சொல்லமாட்டானா?" என்றார் குரு. 
  "அவனை இங்கே கொஞ்சம் 
					தாமதப்படுத்தி வைத்திருந்தால், அதற்குள் இருட்டிவிடும். 
					இளவரசர் வௌியேறச் சௌகரியமாகயிருக்கும். அது மட்டுமல்ல, 
					சீக்கிரத்தில் ஒரு பெரும் புயல் அடிக்கலாம் என்பதற்கு 
					அறிகுறிகள் தென்படுகின்றன. இங்கிருந்து பார்க்கும்போதே கடல் 
					அலைகள் மலைபோல் எழுகின்றன. கடலின் ஆரவாரமும் அதிகமாகி 
					வருகிறது. புத்த பகவானுடைய கருணை அப்படி இருக்கிறதோ, என்னமோ? 
					பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்கடம் தீர வேண்டும் 
					என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ!" என்று கூறினார் இளம் 
					பிக்ஷு. 
  "அப்படியெல்லாம் சொல்லவேண்டாம். நம்முடைய சங்கடம் தீருவதற்காகக் கடல் 
					கொந்தளித்துப் பெரும் புயல் வர வேண்டுமா?" என்றார் குரு. 
  
					"சுவாமி! தங்கள் சீடர் சொல்லும் வழியை பரீட்சித்துப் 
					பார்க்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. உள்ளே ஒரு தனி மனிதன் 
					மட்டும் வந்தால், ஒருவேளை அவனிடம் நான் பேசி அவன் மனத்தை 
					மாற்றுவது சாத்தியமாகலாம்" என்றார் இளவரசர். 
  "அந்த 
					யோசனையும் என் மனத்தில் இருக்கிறது. இரண்டும் தினங்களுக்கு 
					முன்பு கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் 
					விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். 
					இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். 
					படகோட்டியின் மனையாள் பெருங்கூச்சல் போட்டாள்...!" 
  
					"ஆகா! அப்படிப்பட்ட படகோட்டி யார்? அவன் பெயர் என்னவென்று 
					தெரியுமா?" என்றார் இளவரசர். 
  "ஆம்; தன் பெயர் 
					முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் 
					என்று கூறினான்..." 
  "அவன் எனக்கு நன்கு தெரிந்தவன். 
					என் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டான். அவனை ஏன் 
					என்னிடம் அழைத்து வரவில்லை...?" 
  "அவன் 
					பெண்டாட்டியினால் நமது இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்று 
					எண்ணினோம். இப்போது அவனும் அவன் மனையாளும் மக்கள் கூட்டத்தில் 
					இருக்கிறார்கள்..." 
  "பழம் நழுவிப் பாலில் விழுந்தது 
					போலாயிற்று. படகோட்டி முருகய்யனை மெதுவாக இங்கே அழைத்து வந்து 
					விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய 
					பிறகு திரும்பி வந்து, அவனே என்னைப் படகில் ஏற்றி, 
					ஆனைமங்கலத்துச் சோழ மாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்!" 
					என்றார் இளவரசர். 
  ஆச்சாரிய பிக்ஷு, "இளவரசரே! இந்தக் காலத்தில் யாரையும் பூரணமாக நம்பி 
					விடுவதற்கில்லை. இந்தப் படகோட்டியும், அவனது மனையாளுந்தான் 
					இரண்டு நாளாக இந்தப் பட்டினத்தில் தங்களைப் பற்றிய வதந்தியைப் 
					பரப்பியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்." 
  
					"அப்படியேயிருந்தாலும் அதனால் பாதகமில்லை. எப்படியும் யாரேனும் 
					ஒருவனை விகாரத்துக்குள் அழைத்து வரவேண்டும் அல்லவா? அவன் 
					கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் 
					என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க 
					மாட்டான். முடியுமானால் அவனையே அழைத்துக் கொண்டு வாருங்கள்!" 
					என்றார் இளவரசர். 
  ஆச்சாரிய பிக்ஷுவின் சம்மதத்துடன், 
					இளைய பிக்ஷு வௌியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் 
					பெரிய பிக்ஷு இளவரசே! என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் 
					வௌியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை 
					எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன்.என்னுடைய 
					பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் 
					கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது!" என்று 
					சொல்லி விட்டு வௌியே சென்றார். 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					மூன்றாம் அத்தியாயம்  கடல் 
					பொங்கியது! 
					 
 
					விஹாரத்துக்கு 
					வௌியே ஆச்சாரிய பிக்ஷு கண்ட காட்சி அவருக்குக் கதி கலக்கம் 
					உண்டாக்குவதாயிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து 
					நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும் அவர்கள் போட்ட 
					கூச்சலும் அவர்கள் ஆவேசங் கொண்டவர்கள் என்பதைக் காட்டின. அந்த 
					ஆவேசத்தைக் குரோத வெறியாகச் செய்வது மிக எளிதான காரியம். பலர் 
					கைகளில் வாள், வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள். 
  இன்னும் சிலரின் கையில் கடப்பாரைகள் இருந்தன. பிக்ஷுக்கள் வழிக்கு 
					வராவிட்டால் விஹாரத்தையே இடித்துத் தரைமட்டமாக்கி விடுவது 
					என்று அவர்கள் உத்தேசித்திருந்தனர் போலும். அதற்கு வேண்டிய 
					காரணம் இல்லாமலும் போகவில்லை. பராந்தகச் சக்கரவர்த்தியின் 
					காலம் முதல் அடிக்கடி சோழ நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் 
					யுத்தம் நடந்து வந்தது. சோழநாட்டு வீரர் பலர் இலங்கைப் போரில் 
					மடிந்திருந்தார்கள். ஏதாவது ஒன்றைப் பிடிக்கவில்லையென்றால், 
					அதைச் சேர்ந்த மற்றவையும் பிடிக்காமல் போவது மக்களின் இயல்பு 
					அல்லவா? இலங்கைப் போர்கள் காரணமாகச் சோழ மக்களுக்கு 
					ஏற்பட்டிருந்த ஆத்திரம் அத்தீவில் வியாபகமாயிருந்த பௌத்த 
					மதத்தின் மேலும் ஓரளவு திரும்பியிருந்தது. ஏதாவது ஒரு சிறிய 
					காரணம் ஏற்பட்டால் போதும். தமிழகத்தில் மிஞ்சியிருந்த பௌத்த 
					விஹாரங்கள் மீதும் அவற்றில் வாழ்ந்த பிக்ஷசூக்கள் மீதும் பழி 
					தீர்த்துக்கொள்ளப் பாமர மக்கள் சித்தமாயிருந்தார்கள். 
  
					அத்தகைய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டு விட்டதாக ஆச்சாரிய 
					பிக்ஷு கருதினார். யாரோ தீயநோக்கம் கொண்டவர்கள் இவ்விதம் பாமர 
					மக்களின் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறார்கள். புத்த 
					பகவானுடைய கருணையினாலேதான் இந்தப் பேராபத்திலிருந்து மீள 
					வேண்டும்!... ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் அந்த ஜனக் 
					கூட்டத்தின் ஆரவாரம் முன்னை விட அதிகமாயிற்று. 
  "பொன்னியின் செல்வரைக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் விஹாரத்தை 
					இடித்துத் தரை மட்டமாக்கி விடுவோம்" என்பவை போன்ற மொழிகள் ஏக 
					காலத்தில் ஆயிரக்கணக்கான குரோதம் நிறைந்த குரல்களிலிருந்து 
					வௌியாகிச் சமுத்திர கோருத்தைப் போல் கேட்டது. அதே சமயத்தில் 
					கடலின் பேரோசையும் அதிகமாகிக் கொண்டிருப்பதை ஆச்சாரிய பிக்ஷு 
					கவனித்துக் கொண்டார். இளம் பிக்ஷு கூறியது உண்மைதான். அளவிலாத 
					வேகம் பொருந்திய கொடும்புயல். கடற்கரையை நோக்கி வந்து 
					கொண்டிருக்கிறது. அதி சீக்கிரத்தில் புயல் கரையைத் 
					தாக்கப்போகிறது, இந்த மக்களால் ஏற்படும் அபாயத்துக்குப் 
					பிழைத்தாலும், புயலின் கொடுமையிலிருந்து விஹாரம் தப்பிப் 
					பிழைக்க வேண்டும் என்ற கவலை பிக்ஷுவுக்கு ஏற்பட்டது. 
  
					இதற்குள் வாலிப பிக்ஷு கையமர்த்திச் சமிக்ஞை செய்து ஆத்திரம் 
					கொண்ட மக்களின் கூட்டத்தில் சிறிது இரைச்சல் அடங்கும்படி 
					செய்திருந்தார். "மகா ஜனங்களே! எங்கள் தலைவரை அழைத்து 
					வந்திருக்கிறேன், சற்று நிம்மதியாயிருங்கள். நீங்கள் இத்தனை 
					பேரும் இந்த விஹாரத்துக்குள் ஒரே சமயத்தில் புக முடியாது 
					அல்லவா? உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ 
					குறிப்பிடுங்கள்! அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் 
					பார்க்கட்டும்! திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் 
					ஏற்றுக்கொள்ள வேண்டும்! இது உங்களுக்குச் சம்மதந்தானே? 
					உங்களில் யார் என்னுடன் விஹாரத்துக்குள் வருகிறீர்கள்?" என்று 
					வினவினார். 
  "கூட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் "நான் வருகிறேன்" "நான் வருகிறேன்" 
					என்று கூச்சலிட்டார்கள். இளம் பிக்ஷு மறுபடியும் கையமர்த்தி, 
					"எல்லோரும் சேர்ந்து கூச்சலிடுவதினால் என்ன பயன்? யாராவது 
					ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப 
					காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் 
					பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். 
					அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் 
					கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும்!" என்றார். 
  
					கூட்டத்தின் முன்னணியில் நின்று கொண்டு ஒவ்வொரு தடவையும் 
					பெரும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ராக்கம்மாள், "இதோ 
					நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்று கூவினாள். 
  
					படகோட்டியைப் பார்த்து இளம் பிக்ஷு, "அப்பனே! இவள் கூறுவது 
					சரியா?" என்று கேட்டார். 
  முருகய்யன் "சுவாமி! இவள் 
					கூறுவது முழுவதும் சரியல்ல. இவள் இளவரசரைச் சமீபத்தில் 
					பார்க்கவில்லை. நான் சென்ற ஒரு மாதத்துக்குள்ளே ஈழநாட்டில் 
					பொன்னியின் செல்வரைப் பார்த்தது உண்மை.நான் அறியாமல் 
					அவருக்குச் செய்த அபகாரத்துக்காகக் காலில் விழுந்து 
					மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் அவர் கருணையுடன் 
					என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தது, நேற்று நடந்தது போல் 
					என் மனத்தில் பதிந்திருக்கிறது. அவரை நான் சுலபமாக அடையாளம் 
					கண்டுகொள்ள முடியும்" என்று சொன்னான். 
  "அப்படியானால் 
					நீதான் இந்த வேலைக்குத் தகுதியானவன். உன் மனையாள் சொல்வதிலும் 
					அவ்வளவு தவறு கிடையாது. நீ பார்த்தது இவள் பார்த்தது போலத்தான் 
					என்று எண்ணிச் சொல்லியிருக்கிறாள். இப்போதும் நீ 
					விஹாரத்துக்குள் தேடிப் பார்த்து விட்டு வந்து சொன்னால் இவள் 
					ஒப்புக்கொள்வாள். பிக்ஷுக்கள் தவம் செய்யும் புத்த 
					விஹாரத்துக்குள் பெண் பிள்ளைகளை விடுகிறதில்லையென்பது உன் 
					மனையாளுக்குத் தெரிந்து தானிருக்கும். ஆகையால், நீ வா இங்கே!" 
					என்று இளம் பிக்ஷு கூறினார். 
  பிறகு விஹாரத்தின் முன் 
					வாசற் படிகளில் இறங்கிச் சென்று முருகய்யனுடைய ஒரு கரத்தைப் 
					பற்றி அழைத்துக் கொண்டு மறுபடியும் படிகளில் ஏறினார். 
  
					மக்களைப் பார்த்து, "இதோ இந்தப் படகோட்டி முருகய்யன் 
					சமீபத்தில் இளவரசரைப் பார்த்திருக்கிறானாம். இவனை உள்ளே 
					அழைத்துப் போகிறேன். விஹாரம் முழுதும் தேடிப் பார்த்து 
					விட்டுத் திரும்பி வந்து சொல்வான். உங்கள் எல்லோருக்கும் இது 
					சம்மதந்தானே!" என்றார். 
  மக்களின் கூட்டத்திலிருந்து 
					சம்மதக்குரல் அவ்வளவு வேகத்துடன் வரவில்லை. சிலர் "சம்மதம் 
					என்று முணுமுணுத்தார்கள். மற்றவர்கள் ஒருவரோடொருவர் "இதில் 
					ஏதாவது மோசம் இருக்குமோ?" என்று இரகசியமாக பேசிக் கொண்டார்கள். 
					அவர்கள் இரகசியம் பேசிய குரல்கள் சேர்ந்து கடலின் இரைச்சலுடன் 
					போட்டியிட்டன. 
  இளம் பிக்ஷு அதைக் கவனித்து விட்டு, 
					பெரிய குரலில் "மகா ஜனங்களே! இதோ எங்கள் ஆச்சாரியரும் 
					வந்திருக்கிறார்.உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டியது இருந்தால் 
					அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் இந்த மனிதனை நான் 
					அழைத்துப் போய் விஹாரத்தைச் சுற்றிக் காண்பித்து விட்டு 
					வருகிறேன்" என்று சொல்லிப் படகோட்டி முருகய்யனை அழைத்துக் 
					கொண்டு சென்றார். கம்பீரமான தோற்றத்துடனும் சாந்தம் குடி கொண்ட 
					முகத்துடனும் பொலிந்த ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் 
					மக்களின் மனத்தில் சிறிது பயபக்தி உண்டாயிற்று. அவரிடம் அதிகப் 
					பிரசங்கமான கேள்வி எதுவும் கேட்பதற்கு யாரும் துணிவு 
					கொள்ளவில்லை. 
  ஆச்சாரிய பிக்ஷு சற்று நேரம் அந்த 
					ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், 
					அவர்களுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் தெரிந்த கடலையும் 
					நோக்கினார். "மகா ஜனங்களே! நீங்கள் எல்லோரும் இங்கே வந்து 
					கூடியிருப்பதின் நோக்கத்தை அறிந்து கொண்டேன். சக்கரவர்த்தியின் 
					திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் 
					அருள்மொழிவர்மரிடம் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அன்பு உண்டு 
					என்பது இன்றைக்கு எனக்கு நன்றாய்த் தெரிந்தது. உங்களைப் போலவே 
					அடியேனும் பொன்னியின் செல்வரிடம் அன்புடையவன் தான். 
					அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி விட்டார் என்ற செய்தி வந்து 
					அன்று காலையில் நான் இதே இடத்தில் நின்று கண்ணீர் அருவி 
					பெருக்கினேன். புத்த தர்மத்தில் பற்றுக் கொண்டவர் எவரும் 
					அருள்மொழிவர்மரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கமுடியாது. புத்த 
					தர்மத்துக்கும், புத்த பிக்ஷசூக்களுக்கும் அவர் அத்தகைய 
					மகத்தான உபகாரங்களைச் செய்திருக்கிறார். புத்தர்களின் புண்ணிய 
					க்ஷேத்திரமாகிய அனுராதபுரத்தில் புத்த மன்னர்களின் காலத்தில் 
					இடிந்து தகர்ந்து பாழான விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் 
					திருப்பணி செய்து செப்பனிடுவதற்கு ஏற்பாடு செய்தவர். 
					அப்படிப்பட்ட உத்தமரான இளவரசருக்கு எந்த வகையிலும் தீங்கு நேர 
					நாங்கள் உடந்தையாக இருக்க முடியுமா? இளவரசருக்கு ஒன்றும் 
					நேராமல் இருக்க வேண்டும்.அவரைக் கடல் கொண்ட செய்தி 
					பொய்யாயிருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்த 
					வண்ணம் இருந்தோம். உங்களையெல்லாம் விடப் பொன்னியின் செல்வரிடம் 
					நாங்கள் அன்புடையவர்களாயிருப்பதற்குக் காரணங்கள் உண்டு..." 
  
					இச்சமயத்தில் கூட்டத்தில் ஒருவன் குறுக்கிட்டு, "அதனாலே தான் 
					எங்களுக்கு அச்சமாயிருக்கிறது. உங்களுடைய அன்பு அபரிமிதமாகப் 
					போய் எங்கள் இளவரசரின் தலையை மொட்டையடித்துக் காவித்துணி 
					கொடுத்துப் பிக்ஷுவாக்கி விடுவீர்களோ என்று பயப்படுகிறோம்!" 
					என்றான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலர் இதைக் கேட்டதும் 
					கலீர் என்ற கேலிச் சிரிப்பு சிரித்தார்கள். 
  ஆச்சாரிய 
					பிக்ஷுவுக்கு எப்படியோ அச்சமயம் ஒருவித ஆவேசம் ஏற்பட்டு 
					விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் சந்தேகத்தைத் 
					தீர்த்து வைப்பதற்கு ஒரே ஒரு நிச்சயமான வழிமட்டும் உண்டு 
					என்பதை அவர் உள்ளம் உணர்த்தியது. உடனே முன் பின் யோசியாமல் தம் 
					உள்ளத்தில் தோன்றியதைப் பின்வரும் மொழிகளில் சபதமாக 
					வௌியிட்டார். "சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் 
					செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை 
					மேற்கொள்ளும்படி தான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் 
					ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் 
					கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித்துணி 
					அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்யமாட்டேன்.அதற்கு 
					உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்ம 
					சரணங்களின் மீது ஆணையாகச் சபதம் செய்கிறேன்! புத்தம் கச்சாமி! 
					தர்மம் கச்சாமி! சங்கம் கச்சாமி!" 
  இடிமுழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் 
					கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு 
					பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. 
					சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. ஆச்சாரிய பிக்ஷு தொடர்ந்து 
					கூறினார்:- "சோழ நாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் 
					குறித்து நீங்கள் எல்லோரும் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பது 
					இயல்புதான். பொன்னியின் செல்வரைக் குறித்த கவலை இப்போது 
					உங்களுக்குத் தீர்ந்து போயிருக்கலாம். இனிமேல் உங்கள் 
					குடும்பம், வீடு, வாசலைப் பற்றிச் சிறிது கவலை கொள்ளுங்கள். 
					மகா ஜனங்களே! இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் 
					கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் 
					தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் 
					பாருங்கள்!" ஜனங்கள் திரும்பிப் பார்த்தார்கள். பிக்ஷு 
					கூறியபடியே அவர்களுடைய வாழ்க்கையில் என்றுமே காணாத அதிசயமான 
					காட்சியைக் கண்டார்கள். அதிசயமான காட்சி மட்டுமன்று, பயங்கரமான 
					காட்சியுந்தான். 
  கடலானது பொங்கி மேலுயர்ந்து வானத்தில் 
					மேலே மேலே வந்து கொண்டிருந்த கரிய கொண்டல்களைத் தொட்டுக் 
					கொண்டிருந்தது. அந்தக் கரிய நிறத் தண்ணீர் மலையானது நின்ற 
					இடத்தில் நிற்கவில்லை. மேலே மேலே நகர்ந்து வந்து 
					கொண்டிருந்தது. ஜனங்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் போது 
					அந்த மலையானது அவர்கள் இருக்குமிடம் வரையில் வந்தால், அவர்கள் 
					மட்டுமல்ல. சூடாமணி விஹாரமே மூழ்கிப் போவது திண்ணம் என்று 
					தோன்றுகிறது. 
  இந்தக் காட்சியைப் பார்த்து மக்கள் 
					பிரமித்து நின்றது, ஆச்சாரிய பிக்ஷு மறுபடியும், "அதோ, நீங்கள் 
					எல்லாரும் வசிக்கும் நாகைப்பட்டினத்தைப் பாருங்கள்!" என்று 
					சொன்னார். 
  நாகைப்பட்டினம் நகரம் சூடாமணி விஹாரத்துக்குச் சிறிது வடதிசையில் 
					அமைந்திருந்தது. வெகு தூரத்துக்கு வெகு தூரம் பரவியிருந்தது. 
					கடற்கரையை யடுத்துப் பண்டக சாலைகள், சுங்கம் வாங்கும் 
					கட்டிடங்கள் முதலியவை இருந்தன. அவற்றுக்கு அப்பால் ஜனங்கள் 
					வசிக்கும் வீடுகள் ஆரம்பமாகிக் கிழக்கு மேற்கிலும், தெற்கு 
					வடக்கிலும் சுமார் அரைக் காத தூரத்துக்கு மேலே பரவியிருந்தன. 
  
					கடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த 
					இடத்தையெல்லாம் தாண்டிக் கொண்டு வந்து பட்டினத்தின் 
					தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது. கடலில் 
					இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் 
					தொங்குவதுபோல் தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, 
					இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன. படகுகளின் பாய் 
					மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன. 
  "மகா ஜனங்களே! ஒரு காலத்தில் காவிரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று 
					கேள்விப் பட்டிருக்கிறோம். அம்மாதிரியான விபத்து நமது 
					நாகைப்பட்டினத்துக்கு வராமல் புத்த பகவான் காப்பாற்றுவாராக! 
					ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உங்கள் குழந்தை 
					குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள 
					முயலுங்கள்!" என்று ஆச்சாரிய பிக்ஷு தழதழத்த குரலில் கூவினார். 
  
					இதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டமானது கடல் அலை போலவே 
					விரைந்து, நகரத்தை நோக்கி நகரலாயிற்று. முன்னணியில் 
					நின்றவர்கள் ஓடத் தொடங்கினார்கள். பின்னால் நின்றவர்கள் 
					அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். முதலில் கூட்டமாக 
					நகர்ந்தார்கள். பிறகு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சில நிமிட 
					நேரத்திற்குள் சற்று முன்னால் பெரும் ஜனத்திரள் நின்று 
					கொண்டிருந்த இடம் வெறுமையாகக் காட்சி அளித்தது. 
  
					படகோட்டி முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் மட்டும் நின்ற 
					இடத்திலேயே நின்று "என் புருஷன்!" "என் புருஷன்!" என்று 
					கத்தினாள். 
  "தாயே! உன் புருஷனுக்கும், ஒன்றும் ஆபத்து நேராது. பத்திரமாகத் திரும்பி 
					வந்து சேருவான். நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்!" என்றார் 
					பிக்ஷு. 
  "இல்லை, இல்லை! என் புருஷனை விட்டு விட்டு, 
					நான் எப்படிப் போவேன்? நான் கோவிலுக்குள் வருகிறேன்" என்றாள் 
					ராக்கம்மாள். 
  "கூடாது அம்மா! கூடாது! புத்த 
					சந்நியாசிகள் வசிக்கும் விஹாரத்துக்குள் பெண்பிள்ளைகள் 
					வரக்கூடாது! உனக்குத் தெரியாதா?" என்றார் பிக்ஷு. 
  
					இச்சமயத்தில் அந்த மாபெரும் ஜனக் கூட்டத்திலே ஓடாமல், பின் 
					தங்கி நின்று கொண்டிருந்த மனிதன் ஒருவன் ராக்கம்மாளை அணுகி 
					வந்தான். அவள் காதோடு ஏதோ சொன்னான். அவளுடைய கரத்தைப் 
					பிடித்துக் கரகரவென்று இழுத்தான். அவள் அவனுடன் வேண்டா 
					வெறுப்புடன் போகத் தொடங்கினாள். 
  "ஆகா, இந்த மனிதன் 
					யார்? இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு?" என்று 
					எண்ணிய வண்ணம் ஆச்சாரிய பிக்ஷசூ விஹாரத்துக்குள் சென்றார். 
					பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார். முருகய்யன் 
					இதற்குள் அதிசயமெல்லாம் நீங்கப் பெற்றவனாய் இளவரசர் கூறுவதைப் 
					பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தான். 
  "முருகா! 
					இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி 
					ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்" என்று இளவரசர் 
					கூறினார. 
  `ஆச்சார்ய பிக்ஷு, "இளவரசே! இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. 
					ஜனக்கூட்டம் கலைந்துவிட்டது. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் 
					போகலாம்" என்று சொன்னார். 
  பின்னர், வௌியில் 
					நடந்தவற்றைச் சில வார்த்தைகளில் கூறினார். "சுவாமி! 
					ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே! நான் எதற்காகப் 
					போகவேண்டும்?" என்றார் இளவரசர். 
  "அவர்கள் திரும்பி 
					வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மேலும், பிக்ஷுக்களாகிய 
					எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் 
					அல்லவா? அதை நிறைவேற்றி அருள வேண்டும்!" என்றார் பிக்ஷு. 
  
					உண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை 
					சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று 
					பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் 
					இளவரசரை அவசரமாக வௌியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் 
					கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. 
					ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட 
					முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை 
					மூழ்கிவிடாது. 
  இளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு 
					கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த 
					பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, "நாம் கருணையே 
					வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது 
					நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை 
					நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக 
					புகுவதைக் கண்டேன்.புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் 
					சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. 
					நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் 
					வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை 
					அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் 
					நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் 
					கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். 
					குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள். சமுத்திர 
					ராஜனின் கோபத்திலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றலாமோ 
					காப்பாற்றுங்கள்! நான் வயதானவன். இங்கேயே இருந்து மாலை 
					நேரத்துப் பூஜையைக் கவனித்துக் கொள்கிறேன்" என்றார். 
  
					இதைக் கேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். 
					கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய 
					பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் 
					கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு 
					கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பார்த்துக் கொண்டு 
					நின்றிருந்தார். அவருடைய முகத்தைச் சுற்றி அபூர்வமான ஜோதி 
					ஒன்று பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது. 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					நான்காம்அத்தியாயம்  நந்தி 
					முழுகியது 
					 
 
					படகு கால்வாயில் 
					போய்க் கொண்டிருந்த போது இளவரசர் நிமிஷத்துக்கு நிமிஷம் 
					கால்வாயின் நீர்மட்டம் அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். 
					படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. முருகய்யன் அதைச் 
					செலுத்துவதற்கு வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தான்.புயலின் 
					வேகமும் வினாடிக்கு வினாடி அதிகமாகிக் கொண்டிருந்தது. 
					இருபுறமும் மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்து 
					கொண்டிருந்தன. 
  நந்தி மண்டபத்தை நெருங்கிப் படகு வந்தது. இளவரசர் அந்த மண்டபத்தைப் 
					பார்த்தார். நந்தியின் தலைக்கு மேலே தண்ணீர் வந்திருந்தது. 
					இதிலிருந்து நீர் மட்டம் எவ்வளவு உயர்ந்திருந்தது என்று நன்கு 
					தெரிய வந்தது. 
  "முருகய்யா! படகைச் சிறிது நிறுத்து" 
					என்று இளவரசர் கூறினார். 
  முருகய்யன் படகை 
					நிறுத்தினான். ஆனால் அதன் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை. 
  
					இளவரசர் படகிலிருந்து தாவிக் குதித்து நந்தி மண்டபத்தில் 
					இறங்கினார். பின்னர் அதன் அருகில் விழுந்திருந்த ஒரு மரத்தைப் 
					பிடித்துக்கொண்டு மண்டபத்தின் மேல் சிகரத்தின் மீது ஏறினார். 
					அங்கேயிருந்து சுற்று முற்றும் பார்த்தார். கால்வாய்க்குக் 
					கீழ்ப்புறம் முழுதும் ஒரே ஜலப்பிரளயமாக இருந்தது. 
					தென்னந்தோப்பில் பாதி மரங்களுக்கு மேல் அதற்குள் விழுந்து 
					விட்டிருந்தன. இடைவௌி வழியாகப் பார்த்தபோது, கடல் பொங்கி 
					அந்தத் தென்னந் தோப்பின் முனைவரையில் வந்து விட்டதாகத் 
					தெரிந்தது. 
  வடக்கே, சூடாமணி விஹாரம் இருந்த திசையை 
					அருள்மொழிவர்மர் நோக்கினார். விஹாரத்தின் வௌிப் படிக்கட்டுகள் 
					வரையில் கடல் பொங்கிப் பரவியிருந்தது தெரிந்தது. பொன்னியின் 
					செல்வருடைய மனத்தில் அப்போது ஓர் எண்ணம் உதயமாயிற்று. அது 
					அவருடைய உடல் முழுதும் சிலிர்க்கும்படி செய்தது. 
  
					"முருகய்யா! படகைத் திருப்பிக்கொண்டு போ! விஹாரத்தை நோக்கி 
					விடு!" என்றார் இளவரசர். 
  அதிகமாகப் பேசிப் 
					பழக்கமில்லாதவனும், இளவரசரிடம் அளவிறந்த பக்தி கொண்டவனுமான 
					தியாகவிடங்கரின் மகன் ஏன் என்றுகூடக் கேளாமல் படகைத் 
					திருப்பிச் சூடாமணி விஹாரத்தை நோக்கிச் செலுத்தினான். 
					வரும்போது ஆன நேரத்தைக் காட்டிலும் போகும் போது சிறிது 
					குறைவாகவே நேரமாயிற்று. ஆனால் இளவரசருக்கோ ஒவ்வொரு விநாடியும் 
					ஒரு யுகமாக இருந்து கொண்டிருந்தது. 
  படகு விஹாரத்தை 
					அடைந்த போது பொங்கி வந்த கடல் ஏறக்குறைய விஹாரம் முழுவதையும் 
					சூழ்ந்து கொண்டிருந்தது. நீர் மட்டம் மேலே ஏறிக் 
					கொண்டுமிருந்தது. ஈழநாட்டிலுள்ள விஹாரங்களைப் போல் 
					நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம் அக்காலத்தில் அவ்வளவு 
					கம்பீரமாகவோ உயரமாகவோ அமைந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் 
					தண்ணீர் மேலே ஏறினால் விஹாரத்தின் மண்டப சிகரம்கூட 
					முழுகிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. 
  இளவரசர் 
					படகிலிருந்து தாவித் தண்ணீரில் முழுகாமலிருந்த ஒருமண்டபத்தின் 
					மேல் தளத்தில் குதித்தார். அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடினார். 
					விஹாரத்தின் அடித்தளத்துக்கு அவர் போகாமல் மேல் மாடங்களில் 
					ஒவ்வொரு பகுதியாகத் தேடிக் கொண்டு வந்தார். மேல் மாடங்களிலேயே 
					சில இடங்களில் மார்பு அளவு தண்ணீரில் அவர் புகுந்து செல்ல 
					வேண்டியதாயிருந்தது. 
  மேலும் மேலும் ஏமாற்றம் 
					ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் கௌதமபுத்தரின் உருவச் 
					சிலை அமைந்திருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தச் 
					சிலையின் மார்பு அளவுக்குத் தண்ணீர் ஏறியிருந்தது. அங்கே 
					இளவரசர் நின்று சுற்று முற்றும் பார்த்தார். தண்ணீரில் 
					குனிந்தும் பார்த்தார். அவருடைய வாயிலிருந்து எழுந்த 
					மகிழ்ச்சியும் வியப்பும் கலந்த `ஆஹா!' ஒலி அவர் தேடி வந்ததை 
					அடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக இருந்தது. 
  ஆம்; புத்தர் சிலையின் அடியில் தண்ணீருக்குள்ளே பகவானுடைய பத்ம சரணங்கள் 
					இரண்டையும் இறுகக் கட்டிக் கொண்டு ஆச்சாரிய பிக்ஷு உட்கார்ந்து 
					கொண்டிருந்தார். பொன்னியின் செல்வர் தண்ணீரில் முழுகிப் 
					பிக்ஷுவின் கரங்கள் இரண்டையும் சிலையிலிருந்து பலவந்தமாக 
					விடுவித்து விட்டு அவரைத் தூக்கி எடுத்தார். தண்ணீருக்குள்ளே 
					பிக்ஷுவைத் தூக்குவது இலேசாக இருந்தது.தண்ணீருக்கு வௌியே வந்த 
					பிறகு அவ்வளவு இலேசாக இல்லை. ஆஜானுபாகுவும், நல்ல பலிஷ்டருமான 
					அந்த பிக்ஷசூவின் உடல் கனம் இளவரசரைத் திணறச் செய்தது. 
  
					"முருகய்யா! முருகய்யா!" என்று குரல் கொடுத்தார். "இதோ 
					வந்தேன்!" என்று சொல்லிக் கொண்டே முருகய்யன் படகைக் கொண்டு 
					வந்தான். பொன்னியின் செல்வர் ஆச்சாரிய பி்ஷுவைத் தூக்கிக் 
					கொண்டு படகை நோக்கி விரைந்து சென்றார். அவருடைய கால்கள் 
					தடுமாறின. 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					ஐந்தாம் அத்தியாயம்  தாயைப் 
					பிரிந்த கன்று 
					 
 
					இளவரசர் புத்த 
					பிக்ஷுவையும் தூக்கிக்கொண்டு முருகய்யன் கொண்டு வந்து 
					நிறுத்திய படகிலே குதித்தார். அவர் குதித்த வேகத்தில் அந்தச் 
					சிறிய படகு பேயாட்டம் ஆடியது. ஒரு கணம் கவிழ்ந்து விடும் 
					போலவும் இருந்தது. முருகய்யன் மிகப் பிரயத்தனப் பட்டுப் படகு 
					கவிழாமல் காப்பாற்றினான். 
  "முருகையா! இனிமேல் 
					படகைவிடு! ஆனைமங்கலம் அரண்மனைக்கு விடு!" என்று பொன்னியின் 
					செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை 
					அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் பொங்கி வந்த கடலும் போட்ட 
					இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. 
					ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை 
					அறிந்து கொண்ட முருகையன் படகைச் செலுத்தத் தொடங்கினான். 
					சூடாமணி விஹாரத்தின் முழுகிக் கொண்டிருந்த மண்டபச் சிகரங்களின் 
					மீதும் புத்தர் சிலைகளின் மீதும் மோதாமல் படகைச் செலுத்துவது 
					மிகவும் கடினமாயிருந்தது. முருகையன் பெரும் புயலிலும் சுழிக் 
					காற்றிலும் நடுக் கடலில் படகு செலுத்திப் பழக்கப்பட்டவனாதலால் 
					வெகு லாவகமாகச் செலுத்திக் கொண்டு போனான். அதைப் பார்த்து 
					இளவரசர் வியந்தார். அவனுக்குச் சற்று உதவி செய்யலாம் என்று 
					அவருக்குத் தோன்றியது. ஆனால் புத்த பிக்ஷுவைப் பிடித்திருந்த 
					பிடியை விட்டுவிடத் தயங்கினார். அதற்கு ஏற்றாற்போல், 
					திடீரென்று பிக்ஷு இளவரசருடைய பிடியிலிருந்து விடுவித்துக் 
					கொள்ளப் பிரயத்தனம் செய்தார். அச்சமயம் படகு புத்த பகவானின் 
					சிலையின் அருகே போய்க் கொண்டிருந்தது. இப்போது கடல் வெள்ளம் 
					அச்சிலையின் கண்கள் வரை ஏறியிருந்தது. இன்னும் சில நிமிடத்தில் 
					சிலையே முழுகிவிடும் என்பதில் ஐயமில்லை. 
  இளவரசர் 
					பிக்ஷுவை இறுகப் பிடித்துக் கொண்டார். பார்ப்பதற்கு மிக 
					மென்மையான தேகம் உடையவராகக் காணப்பட்ட இளவரசரின் கரங்களில் 
					எவ்வளவு வலிமை இருந்தது என்பதை அறிந்து பிக்ஷு வியந்தார் 
					என்பதை அவருடைய முகத் தோற்றம் காட்டியது. நெஞ்சிலே உரம் 
					இருந்தால், உடலிலும் வலிமை உண்டாகும் போலும்! இத்தனைக்கும் 
					பலநாள் சுரத்தினால் மெலிந்திருந்த உடம்பு! 
  புத்தரின் 
					சிலையைத் தாண்டிப் படகு போயிற்று. முழுகிக் கொண்டிருந்த 
					அச்சிலையைப் பிக்ஷு பார்த்துக் கொண்டேயிருந்தார். சிலை 
					விரைவில் மறைந்தது. பிக்ஷசூவின் கண்களில் தாரை தாரையாகக் 
					கண்ணீர் பெருகியது."இளவரசே! என்ன காரியம் செய்தீர்?" என்றார் 
					பிக்ஷு. 
  அவருடைய உதடுகளின் அசைவிலிருந்து என்ன 
					சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட இளவரசர் பிக்ஷுவின் காதில் 
					அருகில் குனிந்து, "சுவாமி! அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்க 
					வேண்டும்? என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்?" என்றார். 
  
					"இளவரசே! இந்த விஹாரம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து 
					இங்கே இருந்து வருகிறது. மகானாகிய தர்மபாத முனிவரின் காலத்திலே 
					கூட இருந்தது. வீர சைவர்களான பல்லவ சக்கரவர்த்திகள் இதை 
					அழிக்காமல் விட்டு வைத்தார்கள். அப்படிப்பட்ட புராதன விஹாரம் 
					என் காலத்தில், என் கண் முன்னால் முழுகிவிட்டது. செங்கல் 
					திருப்பணியினாலான இந்த விஹாரம் இந்தக் கடல் வெள்ளத்துக்குத் 
					தப்ப முடியாது! வெள்ளம் வடிந்த பிறகு சில குட்டிச் சுவர்களே 
					மிச்சமிருக்கும்! விஹாரம் போன பிறகு நான் மட்டும் எதற்காக 
					உயிரோடு இருக்க வேண்டும்?" என்றார் பிக்ஷு. 
  "விஹாரம் 
					இடிந்து அழிந்தால், மறுபடியும் திருப்பணி செய்து 
					கட்டிக்கொள்ளலாம். புத்த பகவானுடைய சித்தமிருந்தால் நானே 
					திரும்பவும் கட்டிக் கொடுப்பேன். தாங்கள் போய்விட்டால் என்னால் 
					தங்களைத் திருப்பிக் கொண்டு வர முடியாதே?" என்றார் இளவரசர் 
					அருள்மொழிவர்மர். 
  கடலும் புயலும் சேர்ந்து போட்ட 
					இரைச்சலினால் அவர்களால் மேலும் தொடர்ந்து விவாதம் செய்ய 
					முடியவில்லை. மற்றும், சுற்றுபுறங்களில் நாலபுறத்திலும் 
					அவர்கள் கண்ட கோரக் காட்சிகள் அவர்களைப் பேச முடியாதபடி 
					செய்துவிட்டன. 
  முறிந்த பய்மரங்களுடனே பெரிய பெரிய 
					நாவாய்களும், சின்னஞ் சிறு மீன் பிடிக்கும் படகுகளும் கடற் 
					பக்கத்திலிருந்து கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றில் 
					பல கரை தட்டியும், கட்டிடங்களின் மேல் மோதியும், பேயாட்டம் 
					ஆடிய மரங்களின் மீது இடித்துக் கொண்டும், சுக்கு நூறாக 
					நொறுங்கி விழுந்தன. பெருங்காற்றில் வீடுகளின் கூரைகள் அப்படியே 
					பிய்த்துக் கொண்டு பறந்து சென்று வெள்ளத்தில் விழுந்தன. வேறு 
					சில கூரைகள் மிதந்து கொண்டிருந்தன.அவற்றில் சிலவற்றில் 
					மனிதர்கள் மிகுந்த சிரமத்துடன் தொத்திக் கொண்டிருந்தார்கள். 
					ஓவென்று அவர்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள். 
  பெரிய 
					பெரிய மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன.முறிந்த மரங்களில் 
					சில மிதந்து மிதந்து சென்றன. மிதந்த மரங்களைப் பிடித்துக் 
					கொண்டு சில மனிதர்கள் உயிர் தப்ப முயன்றார்கள். ஆடுமாடுகள் 
					வெள்ளத்தில் அலறிக்கொண்டு மிதந்து சென்றன. இத்தகைய கோரமான 
					காட்சிகளைப் பார்த்துப் பார்த்து இளவரசரும் பிக்ஷசூவும் மனங் 
					கசிந்தார்கள். அந்த நிலைமையில் தங்களால் ஒன்றும் உதவி செய்ய 
					முடியவில்லையே என்ற எண்ணம் அவர்களுடைய வேதனையை 
					அதிகப்படுத்தியது. 
  முருகய்யன் அப்பால் இப்பால் பார்க்காமல் படகை சர்வ ஜாக்கிரதையாகச் 
					செலுத்திக்கொண்டு சென்றான். சூடாமணி விஹாரம் 
					நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்கிருந்து 
					கால்வாய் சிறிது தூரம் வரையில் தெற்குத் திசையை நோக்கிச் 
					சென்றது. பிறகு தென்மேற்காக அரைக்காதம் வரையில் சென்று, 
					அங்கிருந்து மீண்டும் திரும்பித் தென் திசையில் நேராகச் 
					சென்றது. இந்த இரண்டாவது திருப்பத்தின் முனையிலேதான் ஆனை 
					மங்கலம் அரண்மனை இருந்தது. 
  வழி நடுவில் இருந்த நந்தி 
					மண்டபத்தின் அருகில் படகு வந்த போது, நந்தி முழுதும் 
					முழுகியிருந்தது மட்டுமல்லாமல் மேல் மண்டபத்தின் விளிம்பைத் 
					தொட்டுக்கொண்டு வெள்ளம் சென்றது. மண்டபத்துக்கு அப்பால் 
					நாலாபுறமும் பரவி இருந்த தென்னந் தோப்புகளில் முக்கால்வாசி 
					மரங்கள் காற்றினால் முறிந்து விழுந்து விட்டன. மிஞ்சியிருந்த 
					மரங்களின் உச்சியில் மட்டைகள் ஆடியது தலைவிரி கோலமாகப் பேய்கள் 
					ஆடுவது போலவே இருந்தது. அவற்றில் சில மட்டைகள் காற்றினால் 
					பிய்க்கப்பட்டு வெகு தூரத்துக்கு அப்பால் சென்று விழுந்தன. 
  நந்தி மண்டபத்தின் உச்சியில் தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி ஒன்று எப்படியோ 
					வந்து தொத்திக்கொண்டிருந்தது. அது நாலாபுறமும் பார்த்துப் 
					பார்த்து மிரண்டு விழித்தது. உடம்பை அடிக்கடி சிலிர்த்துக் 
					கொண்டது. அதன் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கன்று 
					`அம்மா' என்று எழுப்பிய தீனக்குரல் படகில் சென்று 
					கொண்டிருந்தவர்களின் காதில் இலேசாக விழுந்தது."ஐயோ! பாவம்! 
					தாயைப் பிரிந்த இந்தக் கன்றின் கதி என்ன ஆகுமோ!" என்று இளவரசர் 
					எண்ணிய அதே சமயத்தில், ஒரு பெரிய தென்னை மரம் திடீரென்று 
					முறிந்து மண்டபத்தின் பின்புறத்தில் விழுந்தது. சிறிது முன் 
					பக்கமாக விழுந்திருந்தால், கன்றுக் குட்டியின் மேலேயே அது 
					விழுந்திருக்கும். 
  மரம் விழுந்த வேகத்தினால் தண்ணீரில் ஒரு பெரிய அலை கிளம்பி மண்டபத்தில் 
					மேலே தாவி வந்தது. முன்னமே நடு்கிக் கொண்டிருந்த கன்றுகுட்டி 
					அந்த அலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தது. 
					மண்டபத்தின் உச்சியிலிருந்து அலையினால் அது வெள்ளத்தில் 
					உந்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்தது. 
  இளவரசர் 
					இதுவரையில் புத்த பிக்ஷுவைத் தம் கரங்களினால் பிடித்துக் 
					கொண்டிருந்தார். கன்றுக்குட்டி மண்டபத்தின் உச்சியிலிருந்து 
					உந்தித் தள்ளப்பட்டதைப் பார்த்ததும், "ஆகா" என்று சத்தமிட்டுப் 
					பிக்ஷுவைப் பிடித்துக் கொண்டிருந்த பிடியை விட்டார். பிக்ஷு 
					அக்கணமே வெள்ளத்தில் குதித்தார். 
  படகோட்டி முருகய்யன் 
					துடுப்பைப் படகில் போட்டு விட்டு இளவரசரைக் கெட்டியாகப் 
					பிடித்துக்கொண்டான். அவனை இளவரசர் கடுங்கோபத்துடன் 
					பார்த்துவிட்டு "விடு!" என்று கையை உதறினார். அதற்குள் பிக்ஷு 
					இரண்டு எட்டில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியின் 
					முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். 
					கன்றுக் குட்டியும் உயிர் மீதுள்ள இயற்கையான் ஆசையினால் தலையை 
					மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக் கொண்டிருக்க 
					பிரயத்தனப்பட்டது. பிக்ஷு கன்றுக் குட்டியைப் பிடித்து 
					இழுத்துக்கொண்டு படகை நோக்கி வந்தார். இளவரசர் அவருக்குக் கை 
					கொடுத்து உதவினார். இருவருமாகச் சேர்த்து முதலில் 
					கன்றுகுட்டியைப் படகில் ஏற்றினார்கள். பின்னர் இளவரசரின் 
					உதவியினால் ஆச்சாரிய பிக்ஷசூ படகில் ஏறிக் கொண்டார். 
  
					இத்தனை நேரம் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டி 
					ஒரு ஆட்டம் ஆடியதும், கால் தடுமாறித் தொப்பென்று விழுந்தது. 
					நல்ல வேளையாக, படகின் உட்புறத்திலே தான் விழுந்தது. பிக்ஷு 
					அதன் அருகில் உட்கார்ந்தார். கன்றின் தலையைத் தம் மடிமீது 
					எடுத்து வைத்துக்கொண்டு அதைத் தடவிக் கொடுக்கத் தொடங்கினார். 
  "குருதேவரே! சற்று முன்னால் சூடாமணி விஹாரத்தில் புத்த பகவானின் சரணங்களைப் 
					பிடித்துக் கொண்டு பிராணத் தியாகம் செய்யப் பார்த்தீர்களே? 
					அப்படித் தாங்கள் செய்திருந்தால், இந்த வாயில்லா ஜீவனை இப்போது 
					காப்பாற்றியிருக்க முடியுமா?" என்று இளவரசர் கேட்டார். 
  
					"ஐயா நான் செய்ய இருந்த குற்றத்தைச் செய்யாமல் தடுத்தீர்கள். 
					அதற்காக நன்றியுடையேன். ஆம், இந்தக் கன்றின் உயிரைக் 
					காப்பாற்றியது என் மனதுக்கு நிம்மதியளிக்கிறது. சூடாமணி 
					விஹாரம் இடிந்து தகர்ந்து போய்விட்டால் கூட இனி அவ்வளவு 
					கவலைப்பட மாட்டேன்" என்றார் பிக்ஷு. 
  "ஆச்சாரியரே! ஒரு 
					கன்றின் உயிரைக் காப்பாற்றியதனாலே எப்படி மன நிம்மதி 
					பெறுகிறீர்கள்? இன்று இந்தப் புயலினால் எவ்வளவு ஜீவன்கள் 
					கஷ்டப்படுகின்றன? எவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் - ஆண்கள், 
					பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், கஷ்டப்படுகிறார்கள்? எத்தனை 
					வாயில்லா ஜீவன்கள் ஆடு மாடுகள், குதிரைகள், பறவைகள், உயிரை 
					இழக்க நேரிடும்? இந்தத் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரம் என்ன?" 
					என்று கேட்டார் இளவரசர். 
  "ஐயா! நம்மால் இயன்றதைத்தான் 
					நாம் செய்யலாம். அதற்கு மேல் நாம் செய்யக் கூடியது 
					ஒன்றுமில்லை. இயற்கை உற்பாதங்களைத் தடுக்கும் சக்தி நமக்கு 
					இல்லை. புயற்காற்றை நாம் கட்டுப்படுத்த முடியுமா? பெருமழையைத் 
					தடுக்க முடியுமா? அல்லது மழை பெய்யும்படி செய்யத்தான் 
					முடியுமா? கடல் பொங்கி வரும்போது அதை நாம் தடுத்து 
					நிறுத்திவிடமுடியுமா? ஆகா! கடல்களுக்கு அப்பால் உள்ள கீழைத் 
					தேசங்களில் எரிமலை நெருப்பைக் கக்குவதையும், பூகம்பம் நேர்ந்து 
					பூமி பிளப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் 
					நாம் என்ன செய்யலாம்? நம் கண் முன்னால் கஷ்டப்பட்டுத் 
					தவிக்கும் ஜீவனுக்கு உதவி செய்யத்தான் நம்மால் முடியும்!" 
  "குருதேவரே! இயற்கை உற்பாதங்கள் ஏன் உண்டாகின்றன? புயற்காற்றும் 
					பூகம்புமும் ஏன் நிகழ்கின்றன? கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன? 
					அவற்றினால் மக்களும், மற்றப் பிராணிகளும் அடையும் 
					துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார்? நம்மால் இயற்கையின் 
					உற்பாதங்களைத் தடுக்கமுடியாது. ஆனால் கடவுளால் கூட முடியாதா? 
					கடவுள் ஏன் இத்தகைய உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் 
					இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்?" 
					என்று இளவரசர் கேட்டார். 
  "பொன்னியின் செல்வ! தாங்கள் 
					இப்போது கேட்ட கேள்விக்கு ஆதி காலம் முதல் மகான்களும், 
					முனிவர்களும் விடை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவை 
					எல்லோருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகையினாலேயே புத்த 
					பகவான் கடவுளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. கடவுளைப் பற்றிய 
					ஆராய்ச்சியிலேயே இறங்கவில்லை. `பிறருக்கு உதவி செய்யுங்கள். 
					பிறருடைய கஷ்டங்களைப் போக்க முயலுங்கள், அந்த முயற்சியிலே தான் 
					உண்மையான ஆனந்தம் அடைவீர்கள். அதிலிருந்து சுக துக்கங்களைக் 
					கடந்த நிர்வாண நிலையை அடைவீர்கள்!' என்று புத்த பகவான் 
					போதித்தார்" என்று பிக்ஷு கூறினார். 
  படகு நந்தி 
					மண்டபத்திலிருந்து மேற்குத் திசையில் திரும்பி, ஆனை மங்கலத்தை 
					நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பொன்னியின் செல்வரின் உள்ளம் 
					சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சற்று முன் பிக்ஷு வௌியிட்ட புத்த 
					சமயக் கொள்கையோடு தமது முன்னோர்களின் சமயக் கொள்கையே அவர் 
					மனத்துள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்தார். பிறருக்கு உதவி செய்யும் 
					கடமையைச் சைவ, வைஷ்ணவ சமயங்களும் வற்புறுத்துகின்றன. 
					`பரோபகாரம் இதம் சரீரம்' என்ற மகா வாக்கியமும் இருக்கிறது. 
					ஆனால் அதே சமயத்தில் கடவுளிடம் நம்பிக்கை வைத்துப் பக்தி 
					செய்யும் கடமையையும் நம் முன்னோர்கள் 
					வற்புறுத்தியிருக்கிறார்கள். கடவுளைச் சம்ஹார மூர்த்தியான 
					ருத்திரனாகவும், கருணாமூர்த்தியான மகா விஷ்ணுவாகவும் உருவங் 
					கொடுத்துப் போற்றியிருக்கிறார்கள். கடவுளுக்கு ஜகன்மாதா உருவம் 
					கொடுத்து ஒரே சமயத்தில் அன்பே வடிவான உமாதேவியாகவும், கோர 
					பயங்கர ரணபத்திர காளியாக இருக்கமுடியுமா? ஏன் இருக்க முடியாது? 
					பெற்ற குழந்தையை ஒரு சமயம் தாயார் அன்புடன் கட்டித் தழுவிக் 
					கொஞ்சுகிறாள். இன்னொரு சமயம் கோபித்துக் கொண்டு அடிக்கவும் 
					செய்கிறாள். ஏன் அடிக்கிறாள் என்பது சில சமயம் குழந்தைக்குப் 
					புரிவதில்லை. ஆனால் அடிக்கும் தாயாருக்குத் தான் பெற்ற 
					குழந்தையிடம் அன்பு இல்லை என்று சொல்ல முடியுமா?... 
  இருட்டுகிற சமயத்தில் படகு ஆனைமங்கலத்திலிருந்த சோழ மாளிகையை அணுகியது. 
					பொங்கி வந்த கடல் அந்த மாளிகையை எட்டவில்லையென்பதை படகில் 
					வந்தவர்கள் கண்டார்கள். அரண்மனைக்கருகில் அமைந்திருந்த 
					அலங்காரப் படித்துறையில் கொண்டுபோய் முருகய்யன் படகை 
					நிறுத்தினான். 
  அதுவரைக்கும் இயற்கையும் படகில் 
					சென்றவர்களிடம் ஓவளவு கருணை செய்தது. பெரும் புயல் அடித்துக் 
					கடல் பொங்கி வந்தாலும், பெருமழை மட்டும் பெய்யத் தொடங்கவில்லை. 
					சிறு தூற்றலோடு நின்றிருந்தது. 
  படகு அரண்மனை ஓரத்தில் 
					வந்து நின்ற பிறகுதான் பெருமழை பிடித்துக் கொண்டு பெய்ய 
					ஆரம்பித்தது. ஆனைமங்கலத்து அரண்மனைக் காவலன் அரண்மனையின் முன் 
					வாசலில் கையில் ஒரு தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டு நின்றான். 
					சுற்றுப் புறங்களிலிருந்து அன்றிரவு அடைக்கலம் புகுவதற்காக ஓடி 
					வந்திருந்த ஜனங்களோடு அவன் பேசிக் கொண்டிருந்தான்.படகு ஒன்று 
					வந்து படித்துறையில் நின்றதைக் கண்டதும் காவலன் தீவர்த்தியைத் 
					தூக்கிப் பிடித்தான். பொன்னியின் செல்வரின் திருமுகம் அவன் 
					கண்ணில் பட்டது. உடனே மற்றதையெல்லாம் மறந்து விட்டுப் 
					படித்துறையை நோக்கி ஓட்டமாக ஓடினான். 
  இதற்குள் 
					படகிலிருந்து இளவரசரும், ஆச்சாரிய பிக்ஷுவும் படிக்கட்டில் 
					இறங்கனார்கள். கன்றை மெள்ளப் பிடித்துக் கரையில் இறக்கி 
					விட்டார்கள். காவலன் இளவரசரின் காலில் விழப்போனான். அவர் 
					அவனைப் பிடித்துத் தடுத்தார். காவலன் கையிலிருந்த தீவர்த்தி 
					கால்வாயில் விழுந்து ஒரு கணம் சுடர் விட்டு எரிந்து விட்டு 
					மறைந்தது. 
  "இளவரசே! சூடாமணி விஹாரத்தைப் பற்றி நானே 
					கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! தாங்கள் இங்கே வந்து விட்டது 
					மிகவும் நல்லதாய்ப் போயிற்று" என்றான் காவலன். 
  "நான் 
					சூடாமணி விஹாரத்தில் இருப்பது உனக்குத் தெரியுமா?" 
  
					"தெரியும், ஐயா! இளைய பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசியும் 
					வந்திருந்தபோது தெரிந்துகொண்டேன். யாரிடமும் சொல்ல வேண்டாம் 
					என்று இளைய பிராட்டி பணித்துவிட்டுச் சென்றார்." 
  "அதை 
					இன்னமும் நீ நிறைவேற்றத்தான் வேண்டும். மாளிகை வாசலில் 
					கூடியிருப்பவர்கள் யார்?" 
  "கடற்கரையோரத்துக் 
					கிராமங்களில் கடல் புகுந்து விட்டதால் ஓடி வந்தவர்கள். இரவு 
					தங்குவதற்கு இடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் 
					தாங்கள் வந்தீர்கள், அவர்களை விரட்டி விடுகிறேன்..." 
  "வேண்டாம்! வேண்டாம்! அவர்கள் எல்லோருக்கும் இருக்கவும் படுக்கவும் 
					இடங்கொடு உணவுப் பொருள்கள் இருக்கு வரையில் சமையல் செய்து 
					சாப்பிடவும் கொடு. ஆனால் என்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல 
					வேண்டாம். உன் தீவர்த்தி கால்வாயில் விழுந்து அணைந்ததும் 
					நல்லதாய்ப் போயிற்று. எங்களை வேறு வழியாக அரண்மனை 
					மேன்மாடத்துக்கு அழைத்துக்கொண்டு போ!" என்றார் இளவரசர். 
  
					அவர்கள் அரண்மனைக்குள் பிரவேசித்ததும் புயல் காற்றோடு 
					பெருமழையும் சேர்ந்து `சோ' என்று கொட்டத் தொடங்கியதும் 
					சரியாயிருந்தன. 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					ஆறாம் அத்தியாயம்  முருகய்யன் 
					அழுதான்! 
					 
 
					தஞ்சை நகருக்கு 
					அருகில், மந்தாகினி ஏறியிருந்த பல்லக்கின் பின்னால் மரம் 
					முறிந்து விழுந்த அதே தினத்தில், வீர நாராயண ஏரியில் காற்று 
					அடித்துக் கரையோரமிருந்த படகு நகர்ந்துபோன அதே நேரத்தில், 
					நாகைப் பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவங்களையே சென்ற 
					அத்தியாயங்களில் கூறினோம் என்பதை நேயர்கள் அறிந்திருப்பார்கள். 
					அன்றிரவு முழுயுவதும் நாகைப்பட்டினமும், அதன் 
					சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தன. அவரவர்களும் 
					உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் 
					ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் இயலாத 
					காரியமாயிருந்தது. ஆயினும் புத்த பிக்ஷுக்கள் 
					நாகைப்பட்டினத்தின் வீதிகளில் அலைந்து ஜனங்களுக்கு இயன்றவரை 
					உதவி புரிந்து வந்தார்கள். அதே இரவில் ஆச்சாரிய பிக்ஷுவும் 
					பொன்னியின் செல்வரும் ஆனைமங்கலம் சோழ மாளிகைக்குள் வெகுநேரம் 
					கண் விழித்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.இந்தக் கடும் 
					புயலினால் கடல் பொங்கியதால் கடற்கரையோரத்து மக்கள் எவளவு கஷ்ட 
					நஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பதைப் பற்றிப் பேசிப் பேசிக் 
					கவலைப்பட்டார்கள். 
  அரண்மனை மணியக்காரனை இளவரசர் 
					அழைத்து அரண்மனைக் களஞ்சியங்களில் தானியம் எவ்வளவு இருக்கிறது 
					என்றும், பொக்கிஷத்தில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றும் 
					விசாரித்தார். களஞ்சியங்கள் நிறையத் தானியம் இருந்ததென்று 
					தெரிந்தது. திருநாகைக் காரோணத்தில், நீலாயதாட்சி அம்மனின் 
					ஆலயத்தைப் புதுப்பித்துக் கருங்கல் திருப்பணி செய்வதற்காகச் 
					செம்பியன் மாதேவி அனுப்பி வைத்த பொற்காசுகள் பன்னிரெண்டு 
					செப்புக் குடங்கள் நிறைய இருப்பதாகவும் தெரிந்தது. 
  "குருதேவரே! புத்த பகவானுடைய சித்தத்துக்கு உகந்த கைங்கரியத்தைத் தாங்கள் 
					செய்வதற்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றன. அரண்மனைக் 
					களஞ்சியங்களில் உள்ள தானியம் முழுவதையும் ஏழைகளுக்கு, 
					உணவளிப்பதில் செலவிடுங்கள். செப்புக்குடங்களிலுள்ள பொற்காசுகள் 
					அவ்வளவையும் வீடு இழந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்!" 
					என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர். 
  "அது எப்படி 
					நியாயமாகும்? தானியத்தையாவது உபயோகிக்கலாம். தங்கள் பெரிய 
					பாட்டியார், செம்பியன் மாதேவியார், ஆலயத் திருப்பணிக்காக 
					அனுப்பியுள்ள பணத்தை வேறு காரியத்துக்காக செலவு செய்யலாமா? 
					அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா?" என்றார் ஆச்சாரிய பிக்ஷு. 
  
					"ஆச்சாரியரே! என் பெரிய பாட்டியாருக்கு நான் சமாதானம் 
					சொல்லிக்கொள்வேன். இப்பொழுது இந்தப் பணத்தை ஏழை எளியவர்களின் 
					துயரத்தைத் துடைப்பதற்காகச் செலவு செய்வேன். வருங்காலத்தில் 
					என் பாட்டியாரின் உள்ளம் மகிழ்ந்து பூரிக்கும்படி இந்தச் சோழ 
					நாடெங்கும் நூறு நூறு சிவாலயங்களை எழுப்பிக் கொடுப்பேன்; பெரிய 
					பெரிய கோபுரங்களை அமைப்பேன். இந்த மாதிரி கடல் பொங்கி 
					வந்தாலும் முழுக அடிக்கமுடியாத உயரமுள்ள ஸ்தூபிகளை 
					எழுப்புவேன். தஞ்சை மாநகரில் தக்ஷிண மேரு என்று சொல்லும் படி 
					விண்ணையளாவும் உயரம் பொருந்திய கோபுரத்துடன் பெரியதொரு 
					கோயிலைக் கட்டுவேன்! ஐயா! இன்று முழுகிப்போன சூடாமணி விஹாரம் 
					மண்ணோடு மண்ணாய்ப் போனாலும் கவலைப்பட வேண்டாம். அதற்கு 
					அருகாமையில் கல்லினால் திருப்பணி செய்து பிரளயம் வந்தாலும் 
					அசைக்க முடியாத பெரிய சூடாமணி விஹாரத்தை எழுப்பிக் 
					கொடுப்பேன்!" என்று இளவரசர் ஆவேசம் ததும்பக் கூறினார். 
  "பொன்னியின் செல்வ! வருங்காலத்தைப் பற்றித் தாங்கள் இத்தனை உற்சாகத்துடன் 
					பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது!" என்றார் பிக்ஷு. 
  
					"ஆம், ஆம், இந்த உலகில் நான் ஜீவித்திருந்து ஏதோ பெரிய 
					காரியங்கள் செய்ய வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். 
					ஆகையினாலேயே என் உயிருக்கு நேர்ந்த எத்தனையோ அபாயங்களிலிருந்து 
					என்னைக் காப்பாற்றியிருக்கிறார். இன்றைக்குப் கூடப் பாருங்கள். 
					இந்த முருகய்யன் எப்படியோ நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தான். 
					இல்லாவிடில் தாங்களும், நானும் சூடாமணி விஹாரத்துக்குள்ளேயே 
					இருந்திருப்போம். கடல் பொங்கி வந்து இவ்வளவு சீக்கிரத்தில் 
					விஹாரத்தை முழுக அடித்துவிடும் என்று எண்ணியிருக்க மாட்டோம்." 
  
					"அது உண்மைதான். ஐந்நூறு ஆண்டுகளாக நடவாத சம்பவம் இன்று 
					பிற்பகலில் ஒரே முகூர்த்த நேரத்தில் நடந்துவிடும் என்று யார் 
					எதிர்பார்த்திருக்க முடியும்? கருணைக் கடலாகிய புத்த பகவான் 
					பொங்கி வந்த கடலின் கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றினார். 
					தங்கள் மூலம் என் அற்பமான உயிரையும் காத்தருளினார். தாங்கள் 
					செய்ய உத்தேசிக்கும் காரியத்தை நான் பூரணமாக ஒத்துக் 
					கொள்கிறேன். அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து எடுத்துச் செலவு 
					செய்தால் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் கோபங்கொள்வார். ஆலயத் 
					திருப்பணிக்காக விநியோகிப்பதைக் குறித்து தங்கள் 
					திருப்பாட்டியார் கோபித்துக்கொள்ள மாட்டார். அவ்விதம் தாங்கள் 
					செய்வது உசிதமானது. ஆனால், இந்த மகத்தான புண்ணிய காரியத்தைத் 
					தாங்களே முன்னின்று நடத்துவது அல்லவோ பொருத்தமாயிருக்கும்? 
					இந்த ஏழைச் சந்நியாசி அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க 
					முடியாது!..." 
  "குருதேவரே! நான் முன்னின்று நடத்தினால் 
					என்னை வௌிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் 
					ஏற்படும்.பாண்டவர்களின் அக்ஞாத வாசத்தைப் பற்றித் தாங்கள் 
					கூறியது என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. நமது செந்தமிழ் 
					நாட்டுப் பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் நினைவுக்கு வந்தது. 
  "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும்  தீமை இலாத சொல்லல்" என்றும், 
  `பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த  நன்மை பயக்கு மெனின்' 
 என்றும் திழ் மறை கூறுகிறதல்லவா? என்னை நான் இச்சமயம் ஜனங்களுக்கு 
					வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பமும் கலகமும் 
					விளையலாம் என்று அறிவிற் சிறந்த என் தமைக்கையார் கருதுகிறார். 
					நான் மறைந்திருப்பதனால் யாருக்கும் எத்தகைய தீமையும் இல்லை. 
					ஆகையால் புயலின் கொடுமையினால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் 
					மக்களுக்குத் தாங்கள்தான் அரண்மனையில் உள்ள பொருளைக் கொண்டு 
					உதவி புரிய வேண்டும்" என்றார் இளவரசர். 
  "பொன்னியின் 
					செல்வ! என் மனம் எதனாலோ மாறிவிட்டது. தங்களை வௌியிட்டுக் 
					கொண்டு மக்களுக்கு உதவி செய்ய இதுவே சரியான தருணம் என்று என் 
					மனத்தில் உதித்திருக்கிறது. அதுவே புத்த பகவானுடைய சித்தம் 
					என்று கருதுகிறேன்" என்றார் பிக்ஷு. 
  இச்சமயம் யாரோ 
					விம்மும் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் 
					பார்த்தார்கள். முருகய்யன் ஒரு மூலையில் உட்கார்ந்து முகத்தைக் 
					கைகளால் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தான். 
					இளவரசர் அவனிடம் சென்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு 
					வந்தார். "முருகய்யா! இது என்ன? ஏன் அழுகிறாய்?" என்று 
					கேட்டார். 
  "என் மனையாள்... என் மனையாள்..." என்று 
					தடுமாற்றத்துடன் கூறி முருகய்யன் மேலும் விம்மினான். 
  
					"ஆமாம், ஆமாம்! உன் மனைவியை நாங்கள் அடியோடு மறந்து விட்டோம். 
					அவள் இன்றிரவு புயலிலும் மழையிலும் என்ன ஆனாளோ என்று உனக்குக் 
					கவலை இருப்பது இயல்புதான். ஆயினும் இந்த நள்ளிரவு நேரத்தில் 
					செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. பொழுது விடிந்ததும் உன் 
					மனையாளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்" என்றார் இளவரசர். 
  
					"ஐயா அதற்காக நான் வருந்தவில்லை. அவளுக்கு ஆபத்து ஒன்றும் 
					நேர்ந்திராது.இதைப்போல் எத்தனையோ பயங்கரமான புயலையும், 
					வெள்ளத்தையும் அவள் சமாளித்திருக்கிறாள்!" என்றான் முருகய்யன். 
  
					"பின் எதற்காக அழுகிறாய்?" என்று இளவரசர் கேட்டார். 
  
					படகோட்டி தட்டுத் தடுமாறிப் பின்வரும் விவரங்களைக் கூறினான்:- 
					"அவளைப் பற்றி நாள் என்னென்னமோ சந்தேகப்பட்டதை நினைத்து 
					வருத்தப்படுகிறேன். அவள்தான் என்னை வற்புறுத்திக் கோடிக் 
					கரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். தாங்கள் 
					சூடாமணி விஹாரத்தில் இருக்கக்கூடும் என்று அவள் தான் சொன்னாள். 
					அவளுடைய கட்டாயத்துக்காகவே நான் வந்தேன். தங்களுக்கு ஏதோ 
					தீங்கு செய்ய நினைக்கிறாளோ என்று கூடப் பயந்தேன். அது எவ்வளவு 
					பிசகு என்று இப்போது தெரிந்தது. சற்று முன்னால் தாங்கள் இந்த 
					படகோட்டி ஏழையைக் குறித்துப் பாராட்டிப் பேசினீர்கள். கடவுள் 
					என் மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறினீர்கள். ஆனால் 
					என்னை இந்தக் காரியத்துக்கு தூண்டியவள் என் மனையாள். அவளைப் 
					பற்றிச் சந்தேகித்தோமே என்று நினைத்தபோது என்னை மீறி அழுகை 
					வந்து விட்டது!" 
  இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த 
					இளவரசர் பொன்னியின் செல்வரின் உள்ளத்தில் வேறொரு ஐயம் இப்போது 
					உதித்தது."அப்பனே! உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ 
					சந்தேகித்தது தவறுதான். ஆனால் அவளுக்கு நான் இங்கே இருப்பது 
					எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார். 
  "என் அத்தையும், 
					என் தங்கை பூங்குழலியும் நாகைப் பட்டினத்துக்குப் படகில் 
					புறப்பட்டார்கள். அதிலிருந்து என் மனையாள் ஒருவாறு ஊகித்துத் 
					தெரிந்து கொண்டாள்." 
  "எந்த அத்தை?" இளவரசர் 
					பரபரப்புடன் கேட்டார். 
  "ஐயா, ஈழத்தீவில் தங்களைப் 
					பலமுறை அபாயங்களிலிருந்து காப்பாற்றிய ஊமை அத்தைதான்." 
  
					"ஆகா! அவர்கள் இப்போது எங்கே? உன் அத்தையும் பூங்குழலியும் 
					என்ன ஆனார்கள்? இங்கே புறப்பட்டு வந்தார்கள் என்று கூறினாயே?" 
  
					"ஆம்; புறப்பட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் பிரயாணம் 
					தடைப்பட்டு விட்டது!" என்று சொல்லிவிட்டு மேலும் முருகய்யன் 
					விம்மி விம்மி அழத் தொடங்கினான். 
  பொன்னியின் செல்வர் மிக்க கவலை அடைந்து அவனைச் சமாதானப்படுத்தி விவரங்களைக் 
					கேட்டுத் தெரிந்து கொண்டார். ஈழத்து அரசியை யாரோ மூர்க்கர்கள் 
					பல வந்தமாகப் பிடித்துக்கொண்டு போனதை அறிந்ததும் இளவரசருக்கு 
					வந்த கோபத்துக்கு அளவில்லை. அவர்களை ராக்கம்மாள் தடுக்கப் 
					பார்த்தாள் என்றும், அதற்காக அவளை அடித்து மரத்தில் சேர்த்து 
					வைத்துக் கட்டி விட்டுப் போனார்கள் என்றும் அறிந்தபோது 
					ராக்கம்மாளின் பேரில் ஏற்பட்டிருந்த ஐயம் நீங்கி விட்டது. 
					இளவரசருக்கு அவள் பேரில் இப்போது மதிப்பும் அபிமானமும் 
					வளர்ந்தன. 
  "குருதேவரே! கேட்டீர்களா! இந்த உலகத்தில் 
					நான் போற்றும் தெய்வம் ஒன்று உண்டு என்றால், ஈழத்தரசியாகிய 
					மந்தாகினி தேவிதான்.அந்த ஊமை மாதரசிக்கு எந்தவிதமான தீங்கும் 
					செய்தவர்களை நான் மன்னிக்க முடியாது. பழுவேட்டரையர்கள் என்னைச் 
					சிறைப்படுத்தக் கட்டளை பிறப்பித்தது குறித்து நான் சிறிதும் 
					கோபம் கொள்ளவில்லை. ஆனால் ஊமை ராணிக்கு ஏதேனும் அவர்கள் தீங்கு 
					செய்திருந்தால், ஒருநாளும் என்னால் பொறுக்க முடியாது. 
					பழுவேட்டரையர் குலத்தை அடியோடு அழித்து விட்டு மறு காரியம் 
					பார்ப்பேன். என்னைப் பெற்ற அன்னையும், என் சொந்தத் தந்தையும் 
					ஈழத்து அரசிக்குத் தீங்கு செய்திருந்தாலும், அவர்களை என்னால் 
					மன்னிக்க முடியாது. குருதேவரே! நாளைக்கே நான் தஞ்சாவூருக்குப் 
					பிரயாணப்படப் போகிறேன். வியாபாரியைப் போல் வேடம் பூண்டு இந்த 
					படகோட்டி முருகய்யனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பப் 
					போகிறேன். ஈழத்தரசியைப் பற்றி அறிந்து கொண்டாலன்றி என் மனம் 
					இனி நிம்மதி அடையாது! ஆச்சாரியரே! புயலினால் 
					கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் கைங்கரியத்தைத் 
					தாங்கள்தான் நடத்த வேண்டும். தங்கள் பெயரால் நடத்தப் 
					பிரியப்படாவிட்டால் `ஈழத்து நாச்சியார் அறச்சாலை' என்று வைத்து 
					நடத்துங்கள். "ஈழத்தரசி புத்த மதத்தில் பற்றுக் கொண்டவர் 
					என்பது தங்களுக்குத் தெரியுமோ? என்னமோ? `பூதத்தீவு' என்று 
					மக்கள் அழைக்கும் போதத் தீவில் உள்ள புத்த பிக்ஷுக்களின் 
					மடத்திலேதான் அவர் சாதாரணமாக வசிப்பது வழக்கம்!" என்றார் 
					இளவரசர். 
  புத்த பிக்ஷுவும் இதற்கு மாறு சொல்லாமல் 
					ஒப்புக் கொண்டார். 
  மறுநாள் புயலின் உக்கிரம் தணிந்தது. 
					பொங்கி வந்த கடலும் பின்வாங்கிச் சென்றது. ஆனால் அவற்றினால் 
					ஏற்பட்ட நாசவேலைகள் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருந்தன.நாகைப் 
					பட்டினம் நகரில் பாதி வீடுகளுக்கு மேல் கூரைகளை இழந்து 
					குட்டிச்சுவர்களாக நின்றன. அந்த வீதிகளில் ஒன்றில் இளவரசர் 
					அருள்மொழிவர்மர் வியாபாரியின் வேடத்தில் தோளில் ஒரு மூட்டையைச் 
					சுமந்து நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் முருகய்யன் 
					இன்னும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து நடந்து கொண்டிருந்தான். 
					புயலினாலும் வெள்ளத்தினாலும் நேர்ந்திருந்த 
					அல்லோலகல்லோலங்களைப் பார்த்துக்கொண்டு அவர்கள் போனார்கள். 
					இடிந்த வீடு ஒன்றின் சுவரின் மறைவிலிருந்து ஒரு பெண் அவர்கள் 
					வருவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் வேறு யாரும் இல்லை. 
					முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் தான். இளவரசரும், 
					முருகய்யனும் அவள் நின்ற இடத்துக்கு அருகில் வரும் வரையில் 
					அவள் பொறுமையோடு காத்திருந்தாள். திடீரென்று வௌிப்புறப்பட்டு 
					ஓடி வந்து இளவரசரின் முன்னால் வந்து காலில் விழுந்தாள். 
					முருகய்யன் அவளுடைய கவனத்தைக் கவர முயன்றாள். உதட்டில் விரலை 
					வைத்துச் சமிக்ஞை செய்தான். `உஷ், உஷ்' என்று எச்சரித்தான். 
					ஒன்றும் பயன்படவில்லை. 
  "சக்கரவர்த்தித் திருமகனே! வீராதி வீரனே! பொன்னியின் செல்வா! சோழ நாட்டின் 
					தவப் புதல்வா! சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் 
					தாங்கள் பிழை்து வந்தீர்களா? என் கண்கள் என்ன பாக்கியம் 
					செய்தன!" என்று கூச்சலிட்டாள். வீதியில் அச்சமயம் 
					அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருடைய 
					கவனமும் இப்பொழுது இளவரசரின்பால் திரும்பின. 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					ஏழாம் அத்தியாயம்  மக்கள் 
					குதூகலம் 
					 
 
					ஓடக்கார 
					முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் 
					திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் 
					கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே "பெண்ணே! என்ன 
					உளறுகிறாய்?உனக்குப் பைத்தியமா?" என்றான். 
  "எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம். உன் அப்பனுக்குப் 
					பைத்தியம். உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் 
					தெரியவில்லை? ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை 
					நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று 
					தெரியவில்லையா? சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு 
					மக்களின் கண்ணின் மணியானவரை, காவேரித்தாய் காப்பாற்றிக் 
					கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள 
					முடியவில்லையா? அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். 
					எங்கே போகப் புறப்பட்டாய்?" என்றான் ராக்கம்மாள். 
  
					இளவரசர் இப்போது குறுக்கிட்டு, "பெண்ணே! நீ என்னை யார் என்றோ 
					தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த 
					வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் 
					கொண்டு புறப்பட்டேன்! உன்னோடு அழைத்துக்கொண்டு போ! வீண் 
					கூச்சல் போடாதே!" என்றார். 
  இந்தப் பேச்சு நடந்து 
					கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் 
					கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிருத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் 
					கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் 
					பார்க்கலானார்கள். 
  அப்போது ராக்கம்மாள் இன்னும் உரத்த குரலில், "ஆ! தெய்வமே! இது என்ன 
					பொன்னியின் செல்வருக்குச் சித்தப் பிரமையா? கடலில் மூழ்கிய 
					போது நினைவை இழந்து விட்டீர்களா? அல்லது அந்தப் பாவி புத்த 
					பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று 
					எண்ணச் செய்து விட்டார்களா? அல்லது - ஐயையோ! அப்படியும் 
					இருக்குமா? தாங்கள் இறந்துபோய் தங்கள் திருமேனியில் எவனேனும் 
					கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவன் வந்து 
					புகுந்திருக்கிறானா? அப்படியெல்லாம் இருக்க முடியாது! கோமகனே! 
					நன்றாக யோசித்துப் பாருங்கள்! தாங்கள் வியாபாரி அல்ல. 
					சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருப்புதல்வர். உலகத்தை ஒரு குடை 
					நிழலில் ஆளப் பிறந்தவர். சந்தேகமிருந்தால் தங்கள் 
					உள்ளங்கைகளைக் கவனமாகப் பாருங்கள். சங்கு சக்கர ரேகைகள் 
					இருக்கும்!" என்று கத்தினாள். 
  உடனே இளவரசர் 
					அருள்மொழிவர்மர் தம் இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டார். 
					"பெண்ணே! நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா!" என்று 
					சொல்லிவிட்டு, முருகய்யனைப் பார்த்து, "இது என்ன தொல்லை? 
					இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா?" என்று கேட்டார். 
  
					முருகய்யன் தன் மனைவியின் அருகில் வந்து காதோடு, "ராக்கம்மா! 
					உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்! பேசாமலிரு! இளவரசர் 
					யாருக்கும் தெரியாமல் வியாபாரி வேருத்தில் தஞ்சாவூர் போக 
					விரும்புகிறார்!" என்றான். 
  "அடபாவி மகனே! இதை 
					முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா? புத்த மடத்தில் இளவரசர் 
					இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே? அந்தப் புத்தியோடு தான் 
					இப்போதும் இருந்திருக்கிறாய்! ஐயையோ! என்ன குற்றம் 
					செய்துவிட்டேன்! ஆசை மிகுதியால் உளறிவிட்டேனே! பாவிப் 
					பழுவேட்டரையர்கள் தங்களைச் சிறைப்படுத்திப் பழிவாங்கச் சமயம் 
					பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! அது தெரிந்திருந்தும் 
					இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே! இளவரசே! ஆனாலும் 
					நீங்கள் அஞ்சவேண்டாம். பழுவேட்டரையர்கள் தங்கள் திருமேனியில் 
					ஓர் அணுவுக்கும் தீங்கு செய்யமுடியாது. என்னைப் போலும், என் 
					கணவனைப் போலும் லட்ச லட்சம் பேர்கள் தங்கள் கட்சியில் நின்று 
					தங்களைப் பாதுகாக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்!" என்றாள். உடனே 
					தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, "நான் 
					சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா? உங்களில் 
					யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா? 
					அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள்! என்னை 
					முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய 
					எண்ணுங்கள்!" என்று அலறினாள். 
  அதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள், 
					"பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க!" 
					என்று ஒரு பெரிய கோருத்தைக் கிளப்பினார்கள். அதைக் 
					கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே 
					கூடினார்கள். அப்படி வந்தவர்களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் 
					எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார். 
  அவர் கூட்டத்தை 
					விலக்கிக் கொண்டு முன்னால் வந்து "கோமகனே! தாங்கள் இந்த நகரின் 
					சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அந்த 
					வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று 
					அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை 
					விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த 
					விஹாரத்திலிருந்து பத்திரமாய் வௌிக்கொணர்ந்ததே, அதை 
					முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். 
					இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்!" 
					என்று கூறினார். 
  இளவரசர் இனிமேல் தன்னை 
					மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். 
					"ஐயா! தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் 
					அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான 
					காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. 
					பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி 
					வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை 
					கொடுங்கள்!" என்றார். 
  அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. "கூடாது கூடாது! இளவரசர் 
					இங்கே ஒரு நாளாவது தங்கி ஏழைகளாகிய எங்களின் உபசாரத்தைப் 
					பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்" என்று உரக்கச் 
					சத்தமிட்டுக் கூறியது அக்குரல். அதைப் பின்பற்றி இன்னும் 
					ஆயிரமாயிரம் குரல்கள் "கூடவே கூடாது! இளவரசர் ஒரு நாளாவது 
					இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்!" என்று 
					கூச்சலிட்டன. 
  எண் பேராயத்தின் தலைவர் அப்போது "கோமகனே! 
					என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா? 
					எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது 
					எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வேண்டும். புத்த 
					பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா? நேற்று 
					இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து 
					வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி 
					விஹாரத்தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். 
					அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது! நாங்கள் செய்யத் 
					தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு 
					மண்ணாகிவிட்டது!" என்று சொன்னார். 
  அதைக் கேட்ட இளவரசர் 
					"ஐயா! தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது 
					சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த 
					விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு 
					உயிருககு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து 
					காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று 
					கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் 
					கொடுப்பது என்னுடைய கடமை!" என்றார். 
  "ஆகா! இதெல்லாம் முன்னரே எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே! இப்போது 
					தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை நாங்களே 
					புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே! தாங்கள் 
					ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக 
					வேண்டும்!" என்றார் எண்பேராயத்தின் தலைவர். 
  "ஆமாம், 
					ஆமாம்! என்று பதினாயிரக்கணக்கான மக்களின் குரல்கள் எதிரொலி 
					செய்தன. 
  "இளவரசே! இங்கே தங்குவதினால் ஏற்படும் 
					தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் 
					புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் 
					சாலைகள் எல்லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் 
					பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் 
					சேர்வீர்கள்? தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். 
					தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக்கே கொண்டுவிட்டு 
					வருகிறோம்" என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் 
					கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் 
					கொண்டிருந்தது. 
  இளவரசர் யோசித்தார். `காரியம் என்னவோ 
					கெட்டுப் போய் விட்டது. இரகசியம் வௌியாகிவிட்டது.ராக்கம்மாள் 
					மூடத்தனமாகக் கூச்சலிட்டு வௌிப்படுத்திவிட்டாள். மூடத் 
					தனத்தினால் வௌிப்படுத்தினாளா?... அல்லது வேறு ஏதேனும் நோக்கம் 
					இருக்குமா? எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை 
					மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் 
					மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் 
					தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து 
					இவர்களைச் சமாதானப் படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். 
					புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் 
					கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா! நான் இச்சமயம் 
					என்னை வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் 
					என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே? அது எவ்வளவு உண்மையான 
					வார்த்தை? என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் 
					இல்லை தான்! தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் 
					பேசுகிறார்களே? உண்மையில், குந்தவை தேவியை அல்லவா 
					சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும்?...' 
  இவ்வாறு 
					பொன்னியின் செல்வர் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஜனக்கூட்டம் 
					மேலும் அதிகமாகி வருவதைக் கண்டார். அவர்களுடைய குதூகலமும் 
					வளர்ந்து வருவதை அறிந்தார். புயலின் கொடுமைகளையும், புயலினால் 
					விளைந்த சேதங்களையும் மக்கள் அடியோடு மறந்து விட்டதாகத் 
					தோன்றியது. எங்கிருந்தோ, யானைகள், குதிரைகள், சிவிகைகள், 
					திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய 
					வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன. 
  அரைப் 
					பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்தான் புறப்பட வேண்டும் என்று 
					இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, 
					"ஐயா! இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக 
					விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் 
					புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா?" 
					என்றார். 
  இளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் 
					ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. குதூகலத்தை 
					வௌிப்படுத்தும் வளிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். 
					வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஆங்காங்கே வீதிகளில் கத்தி 
					விளையாட்டு, கழி விளையாட்டு, குரவைக் கூத்து முதலியவை 
					ஆரம்பமாயின. ஜனங்களையும் அவர்களுடைய குதூகல 
					விளையாட்டுக்களையும் கடந்துகொண்டு நாகைப்பட்டினத்துச் சோழ 
					மாளிகைக்குச் செல்வது பெரிதும் கஷ்டமாயிற்று. எப்படியோ 
					கடைசியில் போய்ச் சேர்ந்தார்கள். 
  மாளிகைக்குள் இளவரசர் 
					சிறிது நேரம் கூடத் தங்கி இளைப்பாற முடியவில்லை. ஏனெனில், அவர் 
					வௌிப்பட்ட செய்தி அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் 
					பரவிவிட்டது. ஜனங்கள் திரள் திரளாக வந்து குவிந்து 
					கொண்டிருந்தார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டும் என்ற தங்கள் 
					ஆவலைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள். 
  இளவரசரும் 
					அடிக்கடி வௌியில் வந்து ஜனக்கூட்டத்தினிடையே சென்று அவர்களுடைய 
					க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டார்.புயலினால் விளைந்த கஷ்ட 
					நஷ்டங்களைப் பற்றி அனுதாபத்துடன் விசாரித்தார். தாம் 
					தஞ்சாவூருக்குப் போனவுடனே ஜனங்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் 
					பரிகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.அதைப்பற்றி 
					ஜனங்கள் அவ்வளவு உற்சாகமடையவில்லை என்பதையும் கண்டு கொண்டார். 
  
					ஜனங்கள் ஒருவரோடொருவர் "பழுவேட்டரையர்களின் அதிகாரத்துக்கு 
					முடிவு ஏற்படுமா?" என்று பேசிக்கொண்டதும் அவர் காதில் 
					விழுந்து. சக்கரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும், அடுத்தபடி 
					சிம்மாதனத்துக்கு வரக்கூடியவரைப் பற்றியும் அடக்கமான குரலில், 
					ஆனால் இளவரசர் காதில் விழும்படியாகப் பலரும் பேசினார்கள். 
  
					இதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் 
					அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து 
					சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர 
					ஏற்பாடுகள் நடந்தன.இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு 
					உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. புயலினால் நஷ்டமானது போக 
					நகரில் எஞ்சியிருந்த தானியங்கள் எல்லாம் வந்து குவிந்தன. 
					கறிகாய்களைப் பற்றியோ கவலையே இல்லை. விழுந்த வாழை மரங்களின் 
					வாழைக்காய்க் குலைகளையும், விழுந்த தென்னை மரங்களின் தென்னை 
					குலைகளையும் கொண்டு ஒரு லட்சம் பேருக்கு விருந்து தயாரித்து 
					விடலாமே? 
  விருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ 
					மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு 
					நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் 
					புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் 
					செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து 
					நின்றது.முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை 
					நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித 
					வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று 
					மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு 
					கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள். 
  இளவரசர் வௌித் 
					தோற்றத்துக்குப் புன்னகை பூத்த முகத்துடன் பொலிந்தார். அவர் 
					உள்ளத்திலோ பெருங்கவலை குடிகொண்டிருந்தது. பெற்ற தாயைக் 
					காட்டிலும் பதின்மடங்கு அவருடைய அன்பைக் கவர்ந்திருந்த ஈழத்து 
					ராணியின் கதியைப் பற்றி அறிந்து கொள்ள அவர் உள்ளம் துடி 
					துடித்தது. முருகய்யன் மனைவியிடம் இன்னும் சிறிது விவரம் 
					கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அவளோ ஜனக் 
					கூட்டத்தில் மறைந்துவிட்டாள். முருகய்யன் மட்டும் 
					முண்டியடித்துக் கொண்டு இளவரசரைத் தொடர்ந்து சோழ மாளிகைக்கு 
					வந்து சேர்ந்தான். அவன் மனைவி ராக்கம்மாள் என்ன ஆனாள் என்பது 
					அவனுக்கும் தெரியவில்லை. 
  மற்றொரு பக்கத்தில் இளவரசரை 
					வேறொரு கவலை பற்றிக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் 
					விருப்பத்துக்கு விரோதமாகத்தான் இராஜ்யத்தைக் கைப்பற்ற 
					விரும்புவதாய் முன்னமேயே பழுவேட்டரையர்கள் சொல்லிக் 
					கொண்டிருந்தார்கள். இந்த ஜனங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களின் 
					காரணமாக அவர்கள் கூற்று உண்மை என்று ஏற்பட்டு விடலாம் அல்லவா? 
  
					எப்படியாவது இந்த நகர மாந்தர்களின் அன்புச் சுழலிருந்து 
					தப்பித்துப் போனால் போதும் என்று இளவரசருக்குத் தோன்றிவிட்டது. 
					இந்த நிலைமையில் அவர் சற்றும் எதிர்பாராத இன்னொரு சம்பவம் 
					நிகழ்ந்தது. ஜனங்களிடம் விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் 
					இளவரசர் கும்பிட்டுக் கொண்டு நின்ற போது, ஜனக் கூட்டத்தை 
					விலக்கிக் கொண்டு ஐம்பெருங் குழுவின் அதிகாரிகளும், 
					எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து 
					நின்றார்கள். முன்னேற்பாட்டின்படி நிகழ்ந்தது போல், சில நிமிட 
					நேரம் பேரிகை முரசு, எக்காளம் முதலிய நூறு நூறு வாத்தியங்கள் 
					கடலொலியையும் அடக்கிக்கொண்டு ஒலித்தன. சட்டென்று அவ்வளவு 
					வாத்தியங்களும் நின்றபோது, அப்பெருங்கூட்டத்தின் நிசப்தம் 
					நிலவியது. அச்சமயத்தில் நகர தலைவர்களில் முதியவராகக் காணப்பட்ட 
					ஒருவர் மாளிகை முன் வாசலில் இருந்த நிலா மேடை மீது ஏறி நின்று 
					கொண்டு கம்பீரமான குரலில் கூறினார். 
  "பொன்னியின் செல்வ! ஒரு விண்ணப்பம். நாகை நகரையும் அக்கம் பக்கத்துக் 
					கிராமங்களையும் சேர்ந்த ஜனங்களின் சார்பாக ஒரு கோரிக்கை. 
					சக்கரவர்த்தியின் உடல் நிலையைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலை 
					கொண்டிருக்கிறோம். அதைப் போலவே நாங்கள் கேள்விப்படும் இன்னொரு 
					செய்தியும் எங்களுக்குக் கவலை தருகிறது. பழுவேட்டரையர்களும், 
					பல சிற்றரசர்களும் சேர்ந்து சக்கரவர்த்திக்குப் பிறகு 
					மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்டத் தீர்மானித்திருப்பதாக 
					அறிகிறோம். மதுராந்தகத்தேவர் இன்று வரையில் போர்க்களம் சென்று 
					அறியாதவர். அவர் பட்டத்துக்கு வந்தால் உண்மையில் 
					பழுவேட்டரையர்கள்தான் இராஜ்யம் ஆளுவார்கள். சிற்றரசர்கள் 
					வைத்ததே சட்டமாயிருக்கும். இளவரசர் ஆதித்த கரிகாலர் மூன்று 
					ஆண்டு காலமாகச் சோழ நாட்டுக்கு வரவேயில்லை. அதற்கு ஏதோதோ 
					காரணங்கள் சொல்கிறார்கள். அவருக்கு மகுடம் சூட்டிக்கொள்ள 
					விருப்பமில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் அடுத்தபடி 
					நியாயமாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார்? சோழ நாடு தவம் 
					செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த 
					செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்... 
					மக்களே! நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா?" 
					என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் 
					கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி 
					அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; "ஆம், ஆம்; எங்கள் கருத்தும் 
					அதுவே!" என்று பதினாயிரம் குரல்கள் கூறின. அதைத் தொடர்ந்து 
					கோஷித்தன. இவ்வளவு கோஷங்களும் சேர்ந்து உருத்தெரியாத ஒரு 
					பெரும் இரைச்சலாகக் கேட்டது. 
  மறுமொழி சொல்வதற்காக 
					இளவரசரின் உதடுகள் அசையத் தொடங்கியது, ஏதோ மந்திர சக்தியினால் 
					கட்டுண்டு அடங்கியது போல் அந்தப் பேரிரைச்சல் அடங்கியது. "ஐயா! 
					நீங்கள் எல்லாரும் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு 
					ஆனந்தப்படுகிறேன். ஆனால் அந்த அன்பை நீங்கள் காட்டும் விதம் 
					முறையாக இல்லையே? என் அருமைத் தந்தை- சுந்தர சோழ சக்ரவர்த்தி 
					இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து 
					விட்டதாகத் தோன்றுகிறது. "சக்கரவர்த்தி நீடுழி வாழ வேண்டும்' 
					என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க 
					வேண்டும்.சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் 
					பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன்?" 
  
					நகரத் தலைவர்களின் முதல் தலைவரான முதியவர் இளவரசரின் 
					இக்கேள்விக்குச் சரியான விடை வைத்திருக்கிறார். "பொன்னியின் 
					செல்வ! சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, 
					அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது 
					தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், 
					தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா 
					பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் 
					பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா? 
					அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார்?" என்றார். 
  
					"ஆம், ஆம்! ஆகையால், இப்போதும் அடுத்த பட்டத்துக்கு உரியவரைப் 
					பற்றிச் சக்கரவர்த்திதானே தீர்மானிக்க வேண்டும்? நீங்களும், 
					நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே!" 
					என்றார் இளவரசர். 
  "பொன்னியின் செல்வ! சக்கரவர்த்திக்குத்தான் அந்த உரிமை உண்டு என்பதை 
					ஒப்புக்கொள்கிறோம். சக்கரவர்த்தி சுயேச்சையாக முடிவு செய்யக் 
					கூடியவராயிருந்தால் அது சரியாகும். தற்போது சக்கரவர்த்தியைப் 
					பழுவேட்டரையர்கள் தஞ்சைக் கோட்டைக்குள் சிறைப்படுத்தி அல்லவோ 
					வைத்திருக்கிறார்கள். இளவரசே! இன்னும் சொல்லப் போனால், 
					சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் 
					பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து 
					தஞ்சைக்கு வந்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள 
					விரும்புகிறோம். அதிர்ஷ்ட வசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக 
					இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். 
					அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று 
					விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு 
					செய்கிறபடி செய்யட்டும்!" 
  பெரியவர் சக்கரவர்த்தி 
					உயிரோடிருக்கிறாரா என்பதைப் பற்றிச் சந்தேகப்பட்டுக் கூறிய 
					வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தில் ஒரு பெரும் திகிலை 
					உண்டாக்கின. இத்தனை நாளும் அவர் அறிந்திராத வேதனையும் பீதியும் 
					ஏற்பட்டன. சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதோ ஆபத்து 
					நெருங்கிவிட்டது போலவும் அதைத் தடுக்கமுடியாத தூரத்தில் தாம் 
					இருப்பது போலவும் ஒரு பிரமை உண்டாயிற்று. ஈழத்து ராணியை யாரோ 
					மூர்க்கர்கள் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போன விவரமும் 
					நினைவுக்கு வந்தது. இனி ஒரு கணமும் தாமதியாமல் தஞ்சை போய்ச் 
					சேர வேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடி 
					நேரத்தில் இளவரசர் தாம் செய்யவேண்டியது இன்னதென்று 
					தீர்மானித்துக் கொண்டார். இவர்களுடன் வாதமிட்டுக் 
					கொண்டிருப்பதில் பயனில்லை. பிரயாணப்படுவதுதான் 
					தாமதமாகும்.இப்போது இவர்கள் பேச்சை ஒப்புக் கொண்டதாகச் 
					சொல்லிப் பிரயாணப் பட்டு விட்டால், வழியில் போகப் போக வேறு 
					உபாயங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். 
  "ஐயா! 
					உங்களுடைய விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. 
					சக்கரவர்த்தியைப் பற்றித் தாங்கள் கூறியது அவரைத் தரிசிக்க 
					வேண்டுமென்ற என் கவலையை அதிகரித்து விட்டது. நான் உடனே புறப்பட 
					வேண்டும். நீங்களும் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்பினால் 
					தாராளமாக என்னுடன் வாருங்கள். பட்டத்து உரிமையைப் பற்றிச் 
					சக்கரவர்த்தி என்ன சொல்லுகிறாரோ, அதைக் கேட்டு நாம் அனைவரும் 
					நடந்து கொள்வோம்!" என்றார். 
  சிறிது நேரத்துக் கெல்லாம் 
					இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான 
					மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் 
					புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் 
					பெரிதாகிக் கொண்டிருந்தது. 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					எட்டாம் அத்தியாயம்  படகில் 
					பழுவேட்டரையர் 
					 
 
					புயல் அடித்த 
					அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து 
					தஞ்சைக்குப் புப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும். 
					கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் 
					கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். 
					சோழ நாட்டுக் கிராமங்களின் வழியாக அவர் நீண்ட பிரயாணம் செய்ய 
					விரும்பவில்லை. மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக 
					கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார். 
  வழக்கம் 
					போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய 
					பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய 
					வரையில் எவருடைய கவனத்தையும் கவராமலிருக்க வேண்டுமென்று 
					நினைத்தார். ஆகையால் பத்துப் பேரைத்தான் தம்முடன் அழைத்துப் 
					போனார். 
  திருவையாற்றுக்கு நேரே கொள்ளிடத்துக்கு வட 
					கரையில் பழுவேட்டரையர் வந்தபோது அந்தப் பெரிய நதியில் வெள்ளம் 
					இரு கரையும் தொட்டுக்கொண்டு பிரவாகமாகப் போய் கொண்டிருந்தது. 
					அங்கிருந்த சிறிய படகில் குதிரைகளைக் கொண்டுபோவது இயலாத 
					காரியம். 
  பெருங்காற்றுக்கு அறிகுறிகள் காணப்பட்டுக் 
					கொண்டிருந்தன. ஆகையால் திரும்பிப் போவதற்குச் சௌகரியமாக 
					இருக்கட்டும் என்று குதிரைகளை வடகரையில் விட்டு விட்டுப் 
					பழுவேட்டரையர் தம்முடன் வந்த பத்து வீரர்களுடன் படகில் 
					ஏறினார். படகு நடு நதியில் சென்று கொண்டிருந்தபோது புயல் 
					வலுத்துவிட்டது. படகோட்டிகள் இருவரும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் 
					படகைச் செலுத்தினார்கள். நதி வெள்ளத்தின் வேகம் படகைக் கிழக்கு 
					நோக்கி இழுத்தது.புயல் அதை மேற்கு நோக்கித் தள்ளப் பார்த்தது. 
					படகோட்டிகள் படகைத் தெற்கு நோக்கிச் செலுத்த முயன்றார்கள். 
					இந்த மூன்றுவித சக்திகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட படகு 
					திரும்பித் திரும்பிச் சக்கராகாரமாகச் சுழன்றது. 
  
					பழுவேட்டரையரின் உள்ளத்திலும் அப்பொழுது ஒரு பெரும் புயல் 
					அடித்துச் சுழன்று கொண்டிருந்தது. நந்தினியின் எதிரில் 
					இருக்கும்போது அவருடைய அறிவு மயங்கிப் போவது சாதாரண வழக்கம். 
					அவள் கூறுவதெல்லாம் சரியாகவே அவருக்குத் தோன்றும். 
					வாழ்நாளெல்லாம் தமக்குப் பிடிக்காமலிருந்த ஒரு காரியத்தை 
					நந்தினி சொல்லும்போது அது செய்வதற்குரியதாவே அவருக்குத் 
					தோன்றிவிடும். ஏதேனும் மனதில் சிறிது சந்தேகமிருந்தாலும் 
					அவருடைய வாய், "சரி சரி! அப்படியே செய்வோம்" என்று கூறிவிடும். 
					சொல்லிய பிறகு, வாக்குத் தவறி எதுவும் செய்வதற்கு அவர் 
					விரும்புவதில்லை. 
  இப்போதும் அவரைத் தஞ்சைக்குப் போய் 
					மதுராந்தகரை அழைத்து வரும்படி நந்தினி சொன்னபோது சரி என்று 
					ஒத்துக்கொண்டு விட்டார். பிரயாணம் கிளம்பிய பிறகு அது 
					சம்பந்தமாகப் பற்பல ஐயங்கள் எழுந்து அவர் உள்ளத்தை வதைத்தன. 
					நந்தினியின் நடத்தையில் அணுவளவும் களங்கம் ஏற்படக் கூடும் 
					என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் நந்தினியை யொத்த பிராயமுடைய 
					மூன்று வாலிபர்களுக்கு மத்தியில் அவளைத் தனியே விட்டு விட்டு 
					வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி அவர் மனத்தில் தோன்றி 
					வேதனை தந்தது. 
  கந்தமாறன், வந்தியத்தேவன், ஆதித்த 
					கரிகாலன் ஆகிய மூவர் மீதும் அவர் குரோதம் கொள்வதற்குக் 
					காரணங்கள் இருந்தன. பொக்கிரு நிலவறையில் நள்ளிரவில் தாமும் 
					நந்தினியும் போய்க்கொண்டிருந்த போது, கந்தமாறன் எதிர்ப்பட்டு, 
					நந்தினியை "தங்கள் மகள்" என்று குறிப்பிட்டது அவர் நெஞ்சத்தில் 
					பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டது போல் 
					பதிந்திருந்தது. அப்போது உண்டான குரோதத்தில் அவனைக் கொன்று 
					விடும்படியாகவே காவலனுக்கு இரகசியக் கட்டளையிட்டு விட்டார். 
					பின்னால் அதைப் பற்றி வருந்தினார். எப்படியோ கந்தமாறன் 
					பிழைத்துவிட்டான். அவன் எப்படிப் பிழைத்தான், நிலவறைக் காவலன் 
					எப்படி மாண்டான், என்னும் விவரத்தை இன்னமும் அவரால் அறிய 
					முடியவில்லை. அதற்குப் பிறகு கந்தமாறன் தம் அரண்மனையிலேயே 
					சிலநாள் இருந்ததையும், நந்தினி அவனுக்குச் சிரத்தையுடன் 
					பணிவிடை செய்ததையும் அவரால் மறக்க முடியவில்லை. 
  பிறகு 
					வந்தியத்தேவனும் கடம்பூரில் இருக்கிறான். முதன் முதலில் அந்த 
					அதிகப்பிரசங்கி வாலிபனைப் பார்த்ததுமே அவருக்கு அவனைப் 
					பிடிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூரில் சக்கரவர்த்தியிடம் 
					தனியாக ஏதோ எச்சரிக்கை செய்ய விரும்பியதையும் தஞ்சைக் 
					கோட்டையிலிருந்து ஒருவரும் அறியாமல் தப்பி ஓடியதையும் 
					அறிந்தபோது அவருடைய வெறுப்பு அதிகமாயிற்று. அச்சமயம் சின்னப் 
					பழுவேட்டரையர் அவன் தப்பிச் சென்றதற்கு நந்தினி உதவி 
					செய்திருக்கலாம் என்று குறிப்பாகச் சொன்னதையும் அவர் 
					மறக்கவில்லை. அது ஒரு நாளும் உண்மையாக இருக்க முடியாது. 
					ஏனெனில் அவன் குந்தவை பிராட்டிக்கும், இளவரசர் அருள்மொழிக்கும் 
					அந்தரங்கத் தூதன் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால் 
					அவனுக்கும் நந்தினிக்கும் தொடர்பு ஏதும் இருக்கமுடியாது. 
					ஆனாலும், அவனையும் நந்தினியையும் சேர்த்து எண்ணிப் பார்த்த 
					போதெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் இரும்பு இதயத்தில் அனல் 
					வீசிற்று. 
  பிறகு ஆதித்த கரிகாலர் இருக்கவே 
					இருக்கிறார். அவர் முன் ஒரு சமயம் ஒரு கோவில் பட்டரின் மகளைக் 
					கலியாணம் செய்து கொள்ள விரும்பினார் என்பதும், அவர்தான் 
					நந்தினி என்பதும், அவர் காதுக்கு எட்டியிருந்தது. அவர்கள் 
					இப்போது சந்தித்திருக்கிறார்கள். எதற்காக? ஒன்று நிச்சயம், 
					ஆதித்த கரிகாலன் பெரிய முரடனாயிருக்கலாம். பெரியோர்களிடம் 
					மரியாதை இல்லாதவனாயிருக்கலாம். ஆனால் அவன் சோழ குலத்தில் 
					உதித்தவன். அந்தக் குலத்திலே யாரும் பிறனில் விழையும் 
					துரோகத்தைச் செய்ததில்லை. கரிகாலனும் பெண்கள் விஷயமான 
					நடத்தையில் மாசு மறுவற்றவன். 
  ஆனால் நந்தினி? அவளைத் 
					தாம் இவ்வளவு தூரம் நம்பி அவள் விருப்பப்படி யெல்லாம் நடந்து 
					வந்திருப்பது சரிதானா? அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் 
					இல்லையென்பது நிச்சயமா? அவளுடைய பூர்வோத்தரமே இன்னும் 
					அவருக்குச் சரி வரத் தெரியாது. அவருடைய சகோதரன் காலாந்தக் 
					கண்டன் அவனைப் பற்றிச் சொல்லாமற் சொல்லிப் பலமுறை 
					எச்சரித்திருக்கிறான். 
  `தம்பி கூறியதே சரியாகப் போய் 
					விடுமோ? நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா? ஆகா! கதைகளில் 
					சொல்லுகிறார்களே! அது போன்ற வஞ்சக நெஞ்சமுள்ள ஸ்திரீகள் 
					உண்மையிலேயே உலகத்தில் உண்டா? அவர்களில் ஒருத்தி நந்தினியா?'.. 
  
					இப்படி எண்ணியபோது பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் குரோதக் 
					கனல் கொழுந்து விட்டது என்றால், அதே சமயத்தில் நந்தினியின் 
					மீது அவர் கொண்டிருந்த மோகத்தீயும் ஜுவாலை வீசியது. இவற்றினால் 
					உண்டான வேதனையை மறப்பதற்காகப் பழுவேட்டரையர் தம் தலையை ஆட்டிக் 
					கொண்டு, தொண்டையையும் கனைத்துக் கொண்டார். பத்துப் பேருக்கு 
					மத்தியில் இருக்கிறோம் என்ற நினைவுதான் அவர் தமது பெரிய 
					தடக்கைகளினால் நெற்றியில் அடித்துக்கொள்ளாமல் தடை செய்தது. 
					அவரை அறியாமல் பெரிய நெடு மூச்சுக்கள் வந்து கொண்டிருந்தன. 
  
					படகின் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பற்களைக் 
					கடித்துக்கொண்டு, "எல்லா உண்மைகளையும் இன்னும் இரண்டு 
					தினங்களில் தெரிந்து கொண்டு விடுகிறேன்! இது வரை செய்த 
					தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை!" என்று சங்கல்பம் 
					செய்து கொண்டார். 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					ஒன்பதாம்அத்தியாயம்  கரை 
					உடைந்தது! 
					 
 
					பழுவேட்டரையரின் 
					மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் 
					உணரக் கூடவில்லை. புயற் காற்றில் படகு அப்பட்டுக் கொண்டதன் 
					காரணமாகவே அவர் அவ்வளவு சங்கடப்படுவதாக நினைத்தார்கள். பெரிய 
					பழுவேட்டரையர் மனோ தைரியத்தில் நிகரற்றவர் எனப் பெயர் 
					வாங்கியிருந்தவர். அவரே இவ்வளவு கலங்கிப் போனதைப் பார்த்து, 
					மற்றவர்களின் மனத்திலும் பீதி குடி கொண்டது. எந்த நேரம் படகு 
					கவிழுமோ என்று எண்ணி, அனைவரும் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டிய 
					உபாயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். 
  
					கடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற 
					வேண்டிய துறைக்கு அரைக் காத தூரம் கிழக்கே சென்று, கரையை 
					அணுகியது. "இனிக் கவலை இல்லை" என்று எல்லாரும் பெரு மூச்சு 
					விட்டார்கள். அச்சமயத்தில் நதிக்கரையில் புயற் காற்றினால் 
					பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த மரங்களில் ஒன்று தடார் என்று 
					முறிந்து விழுந்தது. முறிந்த மரத்தைக் காற்று தூக்கிக் கொண்டு 
					வந்து படகின் அருகில் தண்ணீரில் போட்டது. படகைத் திருப்பி 
					அப்பால் செலுத்துவதற்கு ஓடக்காரர்கள் பெரு முயற்சி 
					செய்தார்கள். பலிக்கவில்லை. மரம் அதி வேகமாக வந்து படகிலே 
					மோதியது. படகு `தடால்' என்று கவிழ்ந்தது. மறுகணம் படகில் 
					இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து மிதந்தார்கள். 
  
					மற்றவர்கள் எல்லாரும் படகு கவிழ்ந்தால் தப்பிப் பிழைப்பது 
					பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்களாதலால், அவ்வாறு உண்மையில் 
					நிகழ்ந்து விட்டதும், அந்த அபாயத்திலிருந்து சமாளிப்பதற்கு 
					ஓரளவு ஆயத்தமாயிருந்தார்கள். கரையை நெருங்கிப் படகு வந்து 
					விட்டிருந்தபடியால் சிலர் நீந்திச் சென்று கரையை அடைந்தார்கள். 
					சிலர் மரங்களின் மீது தொத்திக்கொண்டு நின்றார்கள். சிலர் 
					கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்து 
					கொண்டிருந்தார்கள். 
  ஆனால் பழுவேட்டரையர் வேறு 
					சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபடியால், படகுக்கு நேர்ந்த விபத்தை 
					எதிர்பார்க்கவே இல்லை. படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் முழுகி 
					விட்டார். அவரைப் பிரவாகத்தின் வேகம் வெகு தூரம் அடித்துக் 
					கொண்டு போய் விட்டது. சில முறை தண்ணீர் குடித்து, மூக்கிலும் 
					காதிலும் தண்ணீர் ஏறி, திணறித் தடுமாறி கடைசியில் ஒருவாறு 
					சமாளித்துக் கொண்டு அவர் பிரவாகத்துக்கு மேலே வந்தபோது 
					படகையும் காணவில்லை; படகில் இருந்தவர்கள் யாரையும் காணவில்லை. 
  
					உடனே அந்தக் கிழவரின் நெஞ்சில் பழைய தீரத்துவம் துளிர்த்து 
					எழுந்தது. எத்தனையோ போர்களில் மிக ஆபத்தான நிலைமையில் 
					துணிவுடன் போராடி வெற்றி பெற்ற அந்த மாபெரும் வீரர் இந்தக் 
					கொள்ளிடத்து வெள்ளத்துடனும் போராடி வெற்றி கொள்ளத் 
					தீர்மானித்தார். சுற்று முற்றும் பார்த்தார். சமீபத்தில் 
					மிதந்து வந்த ஒரு மரக்கட்டையை எட்டிப் பிடித்துக்கொண்டார். 
					கரையைக் குறி வைத்து நீந்தத் தொடங்கினார். வெள்ளத்தின் 
					வேகத்துடனும், புயலின் வேகத்துடனும், ஏக காலத்தில் போராடிக் 
					கொண்டே நீந்தினார். கை சளைத்தபோது சிறிது நேரம் வெறுமனே 
					மிதந்தார். பலமுறை நதிக்கரையை ஏற முயன்றபோது மழையினால் 
					சேறாகியிருந்த கரை அவரை மறுபடியும் நதியில் தள்ளி விட்டது. 
					உடனே விட்டுவிட்ட கட்டையைத் தாவிப் பிடித்துக் கொண்டார். 
  
					இவ்விதம் இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகும் வரையில் போராடிய 
					பிறகு நதிப் படுக்கையில் நாணற் காடு மண்டி வளர்ந்திருந்த 
					ஓரிடத்தில் அவருடைய கால்கள் தரையைத் தொட்டன. பின்னர், வளைந்து 
					கொடுத்த நாணற் புதர்களின் உதவியைக் கொண்டு அக்கிழவர் தட்டுத் 
					தடுமாறி நடந்து, கடைசியாகக் கரை ஏறினார். அவரைச் சுற்றிலும் 
					கனாந்தகாரம் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் ஊர் எதுவும் 
					இருப்பதாகத் தெரியவில்லை. திருமலையாற்றுக்கு எதிரில் கரை ஏற 
					வேண்டிய ஓடத்துறைக்குச் சுமார் ஒன்றரைக் காத தூரம் கிழக்கே 
					வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆம், ஆம்! குடந்தை 
					நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். 
					இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா?... 
  புயல் அப்போது தான் பூரண உக்கிரத்தை அந்தப் பிரதேசத்தில் அடைந்திருந்தது. 
					நூறாயிரம் பேய்கள் சேர்ந்து சத்தமிடுவது போன்ற பேரோசை காதைச் 
					செவிடுபடச் சேய்தது. மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன 
					வானத்தில் அண்ட கடாகங்கள் வெடித்து விடுவது போன்ற இடி 
					முழக்கங்கள் அடிக்கடி கேட்டன. பெருமழை சோவென்று கொட்டியது. 
  `எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது பழைய கோயில் இல்லாமலா போகும்? அதில் 
					தங்கி இரவைக் கழிக்க வேண்டியதுதான். பொழுது விடிந்த பிறகுதான் 
					மேலே நடையைத் தொடங்க வேண்டும்' என்று முடிவு கட்டிக் கொண்டு, 
					தள்ளாடி நடுங்கிய கால்களை ஊன்றி வைத்த வண்ணம் நதிக்கரையோடு 
					நடந்து சென்றார். 
  நதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் 
					கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை 
					மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல 
					வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, 
					தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக 
					ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று 
					முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி 
					யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு 
					மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை 
					குப்புறத் தண்ணீரில் விழுந்தார். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் 
					கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த 
					வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. 
					கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் 
					ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. 
					படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் 
					மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். 
					இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு 
					புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை. 
					காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை. 
					மூச்சுத் திணறியது. யாரோ ஒரு பயங்கர ராட்சதன் அவரைத் தண்ணீரில் 
					அமுக்கி அமுக்கித் தலை குப்புறப் புரட்டிப் புரட்டி அதே 
					சமயத்தில் பாதாளத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போனான். 
  
					`ஆகா அந்த ராட்சதன் வேறு யாரும் இல்லை! கொள்ளிடத்தின் கரையை 
					உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதி வேகமாகப் பாய்ந்த 
					வெள்ளமாகிய ராட்சதன்தான்! அவனுடைய கோரமான பிடியிலிருந்து 
					பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா? கால் 
					தரையில் பாவவில்லையே? கைக்குப் பிடி எதுவும் அகப்படவில்லை? 
					மூச்சுத் திணறுகிறதே? கழுத்தைப் பிடித்துத் திருகுவது 
					போலிருக்கிறதே? காது செவிபடுகிறதே! துர்க்கா பரமேசுவரி! தேவி! 
					நான் இந்த விபத்திலிருந்து பிழைப்பேனா? அடிபாவி நந்தினி! 
					உன்னால் எனக்கு நேர்ந்த கதியைப் பார்! ஐயோ! பாவம்! உன்னை அந்த 
					துர்த்தர்கள் மத்தியில் விட்டு விட்டு வந்தேனே? சீச்சீ! உன் 
					அழகைக் கண்டு மயங்கி, உன் நிலையைக் கண்டு இரங்கி, உன்னை மணந்து 
					கொண்டதில் நான் என்ன சுகத்தைக் கண்டேன்? மன அமைதி இழந்ததைத் 
					தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன்? கடைசியில், இப்படிக் 
					கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித் திண்டாடிச் சாகப் 
					போகிறேனே! அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் 
					புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை! என் 
					உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை! எங்கேயாவது படு 
					பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன்! என் கத என்ன 
					ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது! 
					அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் 
					ஒதுக்கித் தள்ளிவிடும்! நாய் நரிகள் பிடுங்கித் தின்று 
					பசியாறப் போகின்றன!...' சில நிமிட நேரத்திற்குள் இவை போன்ற 
					எத்தனையோ எண்ணங்கள் பழுவேட்டரையர் மனத்தில் தோன்றி மறைந்தன. 
					பின்னர் அடியோடு அவர் நினைவை இழந்தார்!... 
  தடார் என்று 
					தலையில் ஏதோ முட்டியதும், மீண்டும் சிறிது நினைவு வந்தது. 
					கைகள் எதையோ, கருங்கல்லையோ, கெட்டியான தரையையோ - 
					பிடித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு சக்தி அவரை மேலே கொண்டுவந்து 
					உந்தித் தள்ளியது. அவரும் மிச்சமிருந்த சிறிது சக்தியைப் 
					பிரயோகித்து, கரங்களை ஊன்றி மேலே எழும்பிப் பாய்ந்தார். 
					மறுநிமிடம், கெட்டியான கருங்கல் தரையில் அவர் கிடந்தார். 
					கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்கப் பிரயனத்தனப்பட்டார். இறுக 
					அமுங்கிக் கிடந்த கண்ணிமைகள் சிறிது திறந்ததும், எதிரே தோன்றிய 
					ஜோதி அவருடைய கண்களைச் கூசச் செய்தது. அந்த ஜோதியில் துர்க்கா 
					பரமேசுவரியின் திருமுக மண்டலம் தரிசனம் தந்தது! தேவி! உன் 
					கருணையே கருணை! என்னுடைய அமைதியற்ற மண்ணுலக வாழ்வை முடித்து 
					விண்ணுலகில் உன்னுடைய சந்நிதானத்துக்கே அழைத்துக் கொண்டாய் 
					போலும்!... 
  இல்லை, இல்லை! இது விண்ணுலகம் இல்லை. 
					மண்ணுலகத்திலுள்ள அம்மன் கோவில். எதிரே தரிசனம் அளிப்பது 
					அம்மனுடைய விக்கிரகம். தாம் விழுந்து கிடப்பது கர்ப்பக் 
					கிருஹத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபம்.அம்மனுக்கு அருகில் 
					முணுக் முணுக்கென்று சிறிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.அதன் 
					வௌிச்சந்தான் சற்று முன் தம் கண்களை அவ்வளவு கூசச் செய்தது! 
					வௌியிலே இன்னும் `சோ' என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. 
					புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் 
					தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க 
					முடியவில்லை! அது ஒரு நல்ல சகுனமோ? துர்க்கா பரமேசுவரி 
					தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ? எத்தனை பெரிய 
					விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் மங்கிவிடாது என்று 
					எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது? ஜகன் மாதாவின் 
					கருணையே கருணை! தமது பக்தியெல்லாம், தாம் செய்த பூசனை எல்லாம் 
					வீண் போகவில்லை. 
  கிழவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க 
					முயன்றார். அவர் உடம்பு நடுகியது. வெகு நேரம் வெள்ளத்திலேயே 
					கிடந்த படியால் உடம்பு சில்லிட்டு நடுங்குவது இயல்புதான் 
					அன்றோ? அம்மன் சந்நிதியில் திரை விடுவதற்காகத் தொங்கிய துணியை 
					எடுத்து உடம்பை நன்றாகத் துடைத்துக்கொண்டார்.தமது ஈரத் 
					துணியைக் களைந்து எறிந்துவிட்டு திரைத் துணியை அரையில் 
					உடுத்திக் கொண்டார். 
  அம்மன் சந்நிதியில் உடைந்த 
					தேங்காய் மூடிகள், பழங்கள், நிவேதனத்துக்கான பொங்கல் 
					பிரசாதங்கள் - எல்லாம் வைத்திருப்பதைக் கண்டார். தேவிக்குப் 
					பூஜை செய்வதற்காக வந்த பூசாரியும், பிரார்த்தனைக்காரர்களும் 
					எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிப் 
					போயிருக்கவேண்டும். ஏன் அவர்கள் அப்படி ஓடினார்கள்? 
					புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா? அல்லது 
					கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் 
					பார்த்துவிட்டு ஓடினார்கள்? எதுவாயிருந்தாலும் சரி. தாம் செய்த 
					புண்ணியந்தான்! துர்க்கா பரமேசுவரி தம்மை உடைப்பு 
					வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது மட்டுமல்ல. தம்முடைய பசி 
					தீருவதற்குப் பிரசாதமும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். 
  இன்றிரவை இந்தக் கோயிலிலேயே கழிக்கவேண்டியது தான். இதைக் காட்டிலும் வேறு 
					தக்க இடம் கிடைக்கப் போவதில்லை. உடைப்பு வெள்ளம் இந்தச் சிறிய 
					கோவிலை ஒட்டித்தான் பாய்ந்து செல்ல வேண்டும்.அதனால் கோவிலுக்கே 
					ஆபத்து வரலாம். கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் குழி பறித்துக் 
					கொண்டிருக்கும். அஷ்திவாரத்தையே தகர்த்தாலும் தகர்த்துவிடும். 
					ஆயினும் இன்று இரவுக்குள்ளே அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது. 
					அவ்விதம் நேர்வதாயிருந்தாலும் சரிதான். இன்றிரவு இந்தக் கோவிலை 
					விட்டுப் போவதற்கில்லை. உடம்பில் தெம்பு இல்லை; உள்ளத்திலும் 
					சக்தி இல்லை... 
  பயபக்தியுடன் பழுவேட்டரையர் தேவியின் சந்நிதானத்தை நெருங்கினார். 
					அங்கிருந்த பிரசாதங்களை எடுத்து வேண்டிய அளவு அருந்தினார். 
					மிச்சத்தைப் பத்திரமாக வைத்து மூடினார். தேவியின் முன்னிலையில் 
					நமஸ்காரம் செய்யும் பாவனையில் படுத்தார். கண்களைச் 
					சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரத்துக்குள் பழுவேட்டரையர் 
					பெருந்துயிலில் ஆழ்ந்து விட்டார். 
  
					
 பக்க 
தலைப்பு  
  
					 
					பத்தாம் அத்தியாயம்  கண் 
					திறந்தது! 
					 
 
					முதலில் நதி 
					வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் 
					திண்டாடியபடியால் பெரிதும் களைப் படைத்திருந்த பழுவேட்டரையர் 
					வெகு நேரம் நினைவுற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து 
					தூங்கினார்.வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், 
					கனவுகளும் தோன்றின.ஒரு சமயம் துர்க்கா பரமேசுவரி, கோவில் 
					விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு நாலு அடி எடுத்து வைத்து 
					நடந்து அவர் அருகில் வந்தாள். அனல் வீசிய கண்களினால் அவரை 
					உற்று நோக்கிய வண்ணம் திருவாய் மலர்ந்தாள். `அடே, 
					பழுவேட்டரையா! நீயும் உன் குலத்தாரும் தலை முறை தலைமுறையாக 
					எனக்கு வேண்டியவர்கள். ஆகையால் உனக்கு எச்சரிக்கிறேன். 
					உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த 
					நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஷி! உன்னுடைய 
					குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக 
					வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் 
					கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் 
					உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார்! 
					இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத 
					அபகீர்த்தி ஏற்படும்...!" இவ்விதம் எச்சரித்துவிட்டுத் தேவி 
					திரும்பிச் சென்று விக்கிரகத்துக்குள் புகுந்து கலந்து 
					விட்டாள்...! 
  பழுவேட்டரையர் திடுக்கிட்டு எழுந்தார். 
					அவர் உடம்பு கிடுகிடென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தாம் 
					கண்டது கனவுதான் என்று நம்புவது அவருக்குச் சற்றுச் சிரமமாகவே 
					இருந்தது.ஆயினும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று 
					தீர்மானித்துக் கொண்டார். 
  பொழுது நன்றாக 
					விடிந்திருந்தது. புயலின் உக்கிரம் தணிந்திருந்தது. மழை நின்று 
					போயிருந்தது. `சோ' வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் 
					கொண்டிருந்தது. கோவில் வௌி மண்டபத்தின் விளிம்பில் அருகில் 
					வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி 
					உற்சாகமளிப்பதாக இல்லை. 
  கொள்ளிடத்தின் உடைப்பு 
					இதற்குள் மிகப் பெரிதாகப் போயிருந்தது. நதி வெள்ளத்தில் 
					ஏறக்குறையப் பாதி அந்த உடைப்பின் வழியாகக் குபு குபுவென்று 
					பாய்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. கிழக்குத் திசையிலும், 
					தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது. 
  
					மேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் 
					சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. 
					அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் 
					பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப்பட்டது. 
  அது 
					திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க 
					வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங் 
					மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப் 
					படைக்கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார். 
  
					அந்தப் பள்ளிப்படை உள்ள இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் 
					நடத்த மாபெரும் யுத்தம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் 
					சோழர் குலத்துக்கு உதவியாகத் தமது முன்னோர்கள் செய்த வீர 
					சாகஷச் செயல்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். அப்படிப் பட்ட 
					தமது பழம் பெருங்குலத்துக்கு இந்த நந்தினியினால் உண்மையிலேயே 
					அவக்கேடு நேர்ந்துவிடுமோ? துர்க்கா பரமேசுவரி தனது கனவிலே 
					தோன்றிக் கூறியதில் ஏதேனும் உண்மை இருந்தாலும் இருக்குமோ...? 
  எப்படியிருந்தாலும் இனி சர்வ ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நந்தினியின் 
					அந்தரங்கம் என்னவென்பதையும் கண்டுபிடித்தேயாக வேண்டும். 
					முதலில், இங்கிருந்து சென்ற பிறகல்லவா, மற்றக் காரியங்கள்? 
					திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி 
					பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் 
					தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே 
					வந்திருக்கக்கூடும். ஆனால் வெள்ளத்தைக் கடந்து 
					திருப்புறம்பியம் கிராமத்துக்குப் போவது எப்படி? 
  
					இந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி 
					போட்டுக்கொண்டு ஓடுகிறதே! இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட 
					அடித்துத் தள்ளிக் கொண்டு போய்விடுமே? இதை எப்படித் தாண்டிச் 
					செல்வது? 
  உடைப்பு வெள்ளம் கோவிலைச் சுற்றிக் கீழே கீழே 
					தோண்டிக் குழி பறித்துக் கொண்டிருப்பது திண்ணம்.கோவில் எப்போது 
					விழுமோ தெரியாது! துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் 
					விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வௌியேறுவது 
					எப்படி? உடைப்பு வெள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை 
					நாள் ஆகுமோ தெரியாது. 
  நல்லவேளை, வேறொரு வழி 
					இருக்கிறது. கோவிலுக்கு எதிரே பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த 
					வேப்பமரம் ஒன்று இருந்தது. புயற்காற்றிலே விழாமல் அது எப்படியோ 
					தப்பிப் பிழைத்தது. ஆனால் கோவிலைச் சுற்றித் துள்ளிச் சென்று 
					கொண்டிருந்த உடைப்பு வெள்ளம் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் 
					சுழியிட்டுக் குழி பறித்துக் கொண்டிருந்ததால், கோவில் 
					விழுவதற்கு முன்னால், அந்த மரம் விழுவது நிச்சயம். மரம் 
					விழுந்தால் அநேகமாக மேற்குத் திசையிலுள்ள காட்டுப் 
					பிரதேசத்துக்கு ஒரு பாலத்தைப் போல் அது விழக் கூடும். 
					இல்லாவிட்டாலும், வெள்ளம் மரத்தை அடித்துக் கொண்டு போய், 
					எங்கேயாவது கரையோரத்தில் சேர்க்கும். மரம் விழுந்தவுடனே அதன் 
					மேல் தொத்தி ஏறிக் கொண்டால், ஒருவாறு அங்கிருந்து தப்பிப் 
					பிழைக்கலாம். 
  அதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க 
					வேண்டியதுதான்.தேவியின் கருணையினால் இன்னும் ஒருநாள் 
					பசியாறுவதற்கும் பிரசாதம் மிச்சமிருக்கிறது. மரம் விழும் 
					வரையில், அல்லது வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் 
					காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது? 
  
					அவசரப்படுவதில் பயன் ஒன்றுமில்லை. நம்மால் இவ்வுலகில் இன்னும் 
					ஏதோ பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருப்பதனாலேதான், தேவி 
					ஜகன்மாதா, நம்மை வெள்ளத்தில் சாகாமல் காப்பாற்றியிருக்கிறாள். 
					ஆதலின் மேலே நடக்க வேண்டியதற்கும், துர்க்கா பரமேசுவரியே வழி 
					காட்டுவாள் அல்லவா? அன்று பகல் சென்றது.இன்னும் ஓர் இரவும், 
					பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து 
					கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது. 
  
					தூவானமும் விட்டுவிட்டது. ஆனால் துர்க்கா தேவியின் கோயிலில் 
					அகப்பட்டுக் கொண்ட பழுவேட்டரையருக்கு மட்டும் விடுதலை 
					கிட்டவில்லை. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் 
					காணப்பட்டது. ஆனால் உடைப்பு வரவரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. 
					கோயிலைச் சுற்றிச் சென்ற வெள்ளம் குறையவில்லை. ஆழம் என்னமோ 
					அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதை அளந்து பார்ப்பது 
					எப்படி? அல்லது அந்த உடைப்பு வெள்ளத்தில் இறங்கி நீந்திச் 
					செல்லுவது பற்றித்தான் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? 
 
  
					கடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பழுவேட்டரையர் 
					எதிர்பார்த்தபடி கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரமும் 
					விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் 
					மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக 
					அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். இரவிலே 
					புறப்பட்டு அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எப்படி வழி கண்டு 
					பிடித்துப் போவது என்பது பற்றிச் சிறிது தயங்கினார். சில கண 
					நேரத்துக்குமேல் அந்தத் தயக்கம் நீடித்திருக்கவில்லை. உடனே 
					புறப்பட வேண்டியதுதான் என்று முடிவு செய்து, தம்மை அந்தப் 
					பேராபத்திலிருந்து காத்தருளிய துர்க்கா பரமேசுவரிக்கு நன்றி 
					தெரிவிப்பதற்காகச் சந்நிதியை நெருங்கினார். சந்நிதியில் 
					விழுந்து நமஸ்கரித்தார். 
  அச்சமயத்தில் அவர் உடம்பு சிலிர்க்கும்படியான குரல் ஒன்று கேட்டது. முதலில் 
					துர்க்கையம்மன் தான் பேசுகிறாளோ என்று தோன்றியது. பிறகு, 
					இல்லை, குரல் வௌியில் சிறிது தூரத்துக்கு அப்பாலிருந்து 
					வருகிறது என்று தௌிவடைந்தார். "மந்திரவாதி! மந்திரவாதி!" என்று 
					கூப்பிட்டது அந்தக் குரல். பிறகு மறுபடியும் "ரவிதாசா! 
					ரவிதாசா!" என்று கூவியது. முன் எப்பொழுதோ கேட்ட குரல் போலத் 
					தோன்றியது. 
  பழுவேட்டரையர் எழுந்து முன் மண்டபத்துக்கு வந்தார். தூண் மறைவில் நின்று 
					குரல் வந்த இடத்தை நோக்கினார். உடைப்பு வெள்ளத்துக்கு அப்பால், 
					விழுந்த வேப்பமரத்தின் நுனிப் பகுதிக்கு அருகில் ஓர் உருவம் 
					நின்று கொண்டிருக்கக் கண்டார். "மந்திரவாதி! மந்திரவாதி!" 
					என்னும் கூக்குரல், அவருக்குத் தம் சகோதரன் முன்னொரு சமயம் 
					கூறியவற்றை ஞாபகப்படுத்துகிறது. துர்க்காதேவியின் கருணையினால் 
					தாம் அதுவரை அறிந்திராத மர்மத்தை அறிந்து கொள்ளப் போகிறோமோ 
					என்ற எண்ணம் உதித்தது. ஆதலின் அசையாமல் நின்றார். 
  
					அக்கரையில் நின்ற உருவம், விழுந்த வேப்ப மரத்தின் வழியாக 
					உடைப்பு வெள்ளத்தைக் கடந்து வரத் தொடங்கியதைப் பார்த்தார். தம் 
					வாணாளில் அதுவரை செய்திராத ஓர் அதிசயமான காரியத்தைப் 
					பழுவேட்டரையர் அப்போது செய்தார். கோவில் முன் மண்டபத்தில் 
					சட்டென்று படுத்துக் கொண்டார். தூங்குவது போலப் பாசாங்கு 
					செய்தார். 
  ரவிதாசன் என்னும் மந்திரவாதியைப் பற்றி 
					அறிந்து கொள்ளும் ஆசை அவரை அவ்வளவாகப் பற்றிக் கொண்டது. அவன் 
					நந்தினியைப் பார்ப்பதற்காகச் சில சமயம் அவர் அரண்மனைக்கு வந்த 
					மந்திரவாதியாகவே இருக்கவேண்டும். அவனுக்கும் நந்தினிக்கும் 
					உள்ள தொடர்பு உண்மையில் எத்தகையது? அவனை இந்த இடத்தில், இந்த 
					வேளையில், தேடி அலைகிறவன் யார்? எதற்காகத் தேடுகிறான்? 
					இதையெல்லாம் தெரிந்துகொண்டால், ஒருவேளை நந்தினி தம்மை 
					உண்மையிலேயே வஞ்சித்து வருகிறாளா என்பதைப் பற்றி அறிந்து 
					கொள்ளலாம் அல்லவா? ரவிதாசன் மட்டும் அவரிடம் சிக்கிக் 
					கொண்டால், அவனிடத்திலிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் 
					விடுவதில்லை என்று மனத்தில் உறுதி கொண்டார். 
  தூங்குவது 
					போல் பாசாங்கு செய்தவரின் அருகில் அந்த மனிதன் வந்தான். 
					மீண்டும் "ரவிதாசா! ரவிதாசா!" என்று கூப்பிட்டான். 
  
					ஆகா! இந்தக் குரல்? கடம்பூர் மாளிகையில் முன்னொரு தடவை 
					வேலனாட்டம் ஆடிக் குறி சொன்னானே, அந்தத் தேவராளன் குரல் போல் 
					அல்லவா இருக்கிறது? இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி 
					உண்மையைச் சொல்லும்படி செய்யலாமா? வேண்டாம்? இன்னும் சற்றுப் 
					பொறுப்போம். இவன் மூலமாக மந்திவாதி ரவிதாசனைப் பிடிப்பதல்லவா 
					முக்கியமான காரியம்? 
  "மந்திரவாதி! சூரியன் 
					அஸ்தமிப்பதற்குள்ளேயே தூங்கிவிட்டாயா? அல்லது செத்துத் 
					தொலைந்து போய்விட்டாயா?" என்று சொல்லிக்கொண்டே வந்த மனிதன், 
					பழுவேட்டரையரின் உடம்பைத் தொட்டு அவருடைய முகம் தெரியும்படி 
					புரட்டினான் அப்படிப் புரட்டியும் பழுவேட்டரையர் ஆடாமல் 
					அசையாமல் கிடந்தார். பின் மாலையும் முன்னிரவும் கலந்து மயங்கிய 
					அந்த நேரத்தில், மங்கலான வௌிச்சத்தில், தேவராளன் (ஆமாம், 
					அவனேதான்!) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை 
					நன்றாகத் துடைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். 
					பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து 
					தொனித்த ஈனக்குரலில் "ஊ ஊ!" `ஓ!ஓ!' `ஆ!ஆ!" என்று ஊளையிட்ட 
					வண்ணம் அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்! 
  
					பழுவேட்டரையர் கண்ணைத் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்து 
					பார்ப்பதற்குள்ளே அவன் கோயிலுக்கு முன்னாலிருந்த பலிபீடத் 
					திறந்த மண்டபத்தை இரண்டு எட்டில் தாண்டிச் சென்று, வேப்ப மரப் 
					பாலத்தின் மீது வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டான். திரும்பிப் 
					பார்ப்பதற்குக்கூட ஒரு கணமும் நில்லாமல் அதிவிரைவாக 
					அம்மரத்தின் மீது ஓட்டமும் தாவலுமாகச் சென்று, அக்கரையை 
					அடைந்தான். மறுகணம் புதர்களும் மரங்களும் அடர்ந்த காட்டில் 
					மறைந்துவிட்டான். பழுவேட்டரையர் அவன் மிரண்டு தாவி ஓடுவதைக் 
					கண்கொட்டா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். காட்டில் 
					அவன் மறைந்ததும், சமயம் நேர்ந்தபோது அவனைப் பிடிக்காமல் தாம் 
					விட்டுவிட்டது தவறோ என்ற ஐயம் அவரைப் பற்றிக் கொண்டது. உடனே, 
					அவரும் குதித்து எழுந்து ஓடினார். தேவராளனைப் போல் அவ்வளவு 
					வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் தாவிச் செல்ல 
					முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை 
					ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. 
  
					அக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் 
					பாதை ஒன்று போவது தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தார். சேற்றில் 
					புதிதாகக் காலடிகள் பதிந்திருந்தது தெரிந்தது.அந்த வழியிலேதான் 
					தேவராளன் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து மேலே விரைவாக 
					நடந்தார். அது முன்னிலாக் காலமானாலும், வானத்தில் இன்னும் 
					மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. 
					காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன. 
					புயலிலும் மழையிலும் அடிபட்டுக் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்த 
					காட்டில் வாழும் ஜீவராசிகள் கணக்கற்றவை மழை நின்றதினால் 
					ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவித்துக் குரல் கொடுத்துக்கொண்டு 
					அங்குமிங்கும் சஞ்சரித்தன. 
  ஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் 
					அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. அன்றிரவு முழுவதும் அந்தக் 
					காட்டில் அலைந்து திரியும்படி நேர்ந்தாலும் அந்தத் 
					தேவராளனையும், அவன் தேடிப் போகும் மந்திரவாதி ரவிதாசனையும் 
					பிடித்தே தீருவது என்று தீர்மானித்துக் கொண்டு, காட்டுப் 
					புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் 
					காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வௌிச்சம் ஒன்று 
					தெரிவதைப் பார்த்தார். அந்த வௌிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் 
					போய்க் கொண்டிருந்த படியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ 
					கையில் எடுத்துச் செல்லும் சுளுத்தின் வௌிச்சமாகவே இருக்க 
					வேண்டும் என்பது தெரிந்தது. 
  அந்த வௌிச்சத்தைக் குறி 
					வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். வௌிச்சத்தை நெருங்கிச் 
					சென்று கொண்டிருந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வௌிச்சம் 
					காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வௌிச்சம் போட்டுக் 
					காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் 
					திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப் படைக் 
					கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே 
					தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் 
					ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார். ஆமாம்; அவர் 
					எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது 
					கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தௌிவாகக் 
					கேட்டது. 
  "மந்திரவாதி! உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா? நீ 
					ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் 
					கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்!" என்றான் தேவராளன். 
  
					மந்திரவாதி ரவிதாசன் கடகட வென்று சிரித்தான். 
  "யமன் 
					என்னிடம் ஏன் வருகிறான்? சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு 
					பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். 
					நாளையதினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்!" என்றான் 
					மந்திரவாதி. அச்சமயம் வானத்தையும் பூமியையும் 
					பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.    |