கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
அத்தியாயம் 11-20
பதினொன்றாம் அத்தியாயம் - தெரிஞ்சகைக்கோளப் படை பன்னிரண்டாம் அத்தியாயம் - குருவும் சீடனும் பதின்மூன்றாம் அத்தியாயம் - "பொன்னியின் செல்வன்" பதினான்காம் அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள் பதினைந்தாம் அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல் பதினாறாம் அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை பதினேழாம் அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ? பதினெட்டாம் அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது? பத்தொன்பதாம் அத்தியாயம் - "ஒற்றன் பிடிப்பட்டான்!" இருபதாம் அத்தியாயம் - இரு பெண் புலிகள்
பதினொன்றாம் அத்தியாயம் தெரிஞ்சகைக்கோளப்
படை
இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான
மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர்
வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை எழுதும்
திருமந்திர நாயகர்கள், அகப்பரிவாரக் காவலர்கள் முதலியோர் அவரவர்களுடைய இடத்தில்
ஆயத்தமாக இருந்தார்கள்.
அநிருத்தர் படகிலிருந்து இறங்கி வந்து
அம்மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆனது, தம்மைப் பார்க்க வந்திருந்தவர்களை
அழைக்குமாறு கட்டளையிட்டார்.
ஐந்து பேர் முதலில் வந்தார்கள். அவர்களைப்
பார்த்தால் செல்வச் செழிப்புள்ள வர்த்தகர்கள் என்று தோன்றியது.
ஒரு தட்டில்
நவரத்தின மாலை ஒன்றை வைத்துச் சமர்ப்பித்தார்கள். அதை அநிருத்தப் பிரம்மராயர்
வாங்கிக் கணக்கரிடம் கொடுத்து, "செம்பியன் மகாதேவியின் ஆலயத் திருப்பணிக்கு என்று
எழுதி வைத்துக் கொள்க!" என்றார்.
"பிறகு வந்தவர்களைப் பார்த்து "நீங்கள்
யார்?" என்று கேட்டார். (இந்த நீண்ட தொடர்ப் பெயர் கொண்ட வர்த்தகக் கூட்டத்தார்
சோழப் பேரரசின் கீழ், கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் நடத்தி வந்தார்கள்.)
"நானா தேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் சார்பில் நாங்கள் வந்திருக்கிறோம்"
என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
"சந்தோஷம்; பாண்டியநாட்டில் உங்களுடைய
வாணிபம் செழிப்பாயிருக்கிறதல்லவா?"
"நாளுக்கு நாள் செழிப்படைந்து
வருகிறது!"
"பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"பாண்டிய வம்ச ஆட்சியைக் காட்டிலும் சோழ குல ஆட்சியே மேலோனது என்று பேசிக்
கொள்கிறார்கள். முக்கியமாக, இளவரசர் அருள்மொழிவர்மரின் வீர தயாளங்களைக் குறித்துச்
சிலாகிக்கிறார்கள். இலங்கையில் நடப்பதெல்லாம் இந்தப் பக்கத்து மக்களிடையில்
பரவியிருக்கிறது..."
"கீழ்க்கடல் நாடுகளுடன் உங்கள் கப்பல் வாணிபம் இப்போது
எப்படியிருக்கிறது?"
"சுந்தர சோழ சக்கரவர்த்தி ஆளுகையில் ஒரு குறைவும்
இல்லை. சென்ற ஆண்டில் அனுப்பிய எங்கள் கப்பல்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டன;
ஒன்றுகூடச் சேதமில்லை."
"கடல் கொள்ளைக்காரர்களினால் தொல்லை ஒன்றுமில்லையே?"
"சென்ற ஆண்டில் இல்லை, மானக்க வாரத் தீவுக்கு அருகில் இருந்த கடற்
கொள்ளைக்காரர்களை நம் சோழக் கப்பற் படை அழித்த பிறகு கீழைக்கடல்களில் கொள்ளை பயம்
கிடையாது."
"நல்லது; நாம் கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக என்ன ஏற்பாடு
செய்திருக்கிறீர்கள்?"
"கட்டளைப்படி செய்திருக்கிறோம்.இலங்கைச்
சைன்யத்துக்கு அனுப்ப ஆயிரம் மூட்டை அரிசியும், ஐந்தாறு மூட்டை சோளமும், நூறுமூட்டை
துவரம்பருப்பும் இந்த இராமேசுவரத் தீவில் கொண்டு வந்திருக்கிறோம். இலங்கைக்கு
அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்." "உங்களுடைய கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப
முடியுமா?"
"கட்டளையிட்டால் செய்கிறோம். இலங்கை யுத்தம் எப்போது முடியும்
என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்."
"ஆ! அது யாருக்குத் தெரியு்?
உங்களுடைய வர்த்தக சபைக்குச் சோதிடக்காரன் இருக்கிறான் அல்லவா? அவனைக் கேட்டு
எனக்கும் சொல்லுங்கள்!"
"பிரம்ம ராஜரே! எங்கள் சோதிடக்காரன்
சொல்வதையெல்லாம் எங்களாலேயே நம்ப முடியவில்லை."
"அப்படி அவன் என்ன
சொல்லுகிறான்?"
"இளவரசர் அருள்மொழிவர்மர் போகுமிடமெல்லாம் வெற்றிதான் என்று
சொல்லுகிறான். அவருடைய ஆட்சியில் சோழக் கப்பல் படை கடல் கடந்த தேசங்களுக்கெல்லாம்
சென்று வெற்றி கொள்ளும் என்று சொல்லுகிறான். தூர தூரத்தில் உள்ள தேசங்கள் பலவற்றில்
புலிக்கொடி பறக்கும் என்று சொல்லுகிறான்."
"அப்படியானால் உங்கள் பாடு
கொண்டாட்டம் தான்!"
"ஆம்; எங்கள் கடல் வர்த்தகம் மேலும் செழித்து ஓங்கும்
என்றும் சொல்லியிருக்கிறான்."
"மிகவும் சந்தோஷம் ஸரீரங்கநாதருடைய அருள்
இருந்தால் அப்படியே நடக்கும். இலங்கையில் யுத்தம் நடக்கும் வரையில் மாதம் ஒரு தடவை
நீங்கள் இப்படியே அரிசி முதலியவை அனுப்பி வரவேண்டும். போய் வாருங்கள்."
"அப்படியே செய்கிறோம், போய் வருகிறோம்."
ஐந்நூற்றுவர் சபையின்
பிரதிநிதிகள் போன பிறகு ஒரு காவலன் வந்து, "தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகள்
காத்திருக்கிறார்கள், பார்க்க விரும்புகிறார்கள்" என்று சொன்னான்.
"வரச்
சொல்லு!" என்றார் முதலாவது அமைச்சர் அநிருத்தர்.
"மூன்று கம்பீர புருஷர்கள்
பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம்
செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று
தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள
வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர். அவர்களில்
பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை
அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச
கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின்
பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.)
"சுந்தர சோழ
தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.
"ஆம், ஐயா!
ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."
"அது
ஏன்?"
"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே
வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."
"உங்கள் படையில் எத்தனை கை?
எத்தனை வீரர்கள்?"
"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத்
தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும்
இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த்
தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."
"உங்களுடைய கோரிக்கை
என்ன?"
"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர்
அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய
விரும்புகிறோம்!" "ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம்
கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."
"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை
யுத்தம் முடிந்து விட்டால்...?"
"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை
யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."
"ஈழத்துச்
சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை
பார்க்கிறோம்!..."
"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள்,
தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால்
பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின்
நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும்
வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து
தாக்குவீர்கள்..."
"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம்
செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."
"பாண்டியர்களும் சேரர்களும்
போர்க்களத்தில் எதிர்த்து நின்றார்கள்; அதனால் அவர்களைத் தாக்கி முறியடித்தீர்கள்.
பகை வீரர்களை முதலில் கண்ணால் பார்த்தால்தானே அவர்களை நீங்கள் ஒரு கையும்
பார்க்கலாம்; மூன்று கையும் பார்க்கலாம்?"
"இராவணர் காலத்து
அசுரர்களைப்போல் இந்தக் காலத்து இலங்கை வீரர்களும் மாயாவிகளாகிவிட்டார்களா? மேக
மண்டலத்தில் மறைந்து நின்று போரிடுகிறார்களா?"
"மாயாவிகளாய் மறைந்துதான்
விட்டார்கள்; ஆனால் போர் செய்யவில்லை. போரிட்டால்தான் இருக்குமிடத்தைக்
கண்டுபிடித்து விடலாமோ? இலங்கை அரசன் மகிந்தனையும் காணவில்லை; அவனுடைய சேனா
வீரர்களையும் காணவில்லை. காடுகளிலே, மலைகளிலே எங்கே போய் ஒளிந்து கொண்டார்களோ,
தெரியவில்லை. ஆகையால் ஆறுமாதமாக இலங்கையில் யுத்தமே நடைபெறவில்லை. உங்களையும் அங்கே
அனுப்பி என்ன செய்கிறது?"
"மகா மந்திரி! எங்களை அனுப்பிப் பாருங்கள்!
மகிந்தனும், அவனுடைய வீரர்களும் காடு மலைகளிலே ஒளிந்திருக்கட்டும்; அல்லது மேக
மண்டலத்திலே ஒளிந்திருக்கட்டும்; அவர்களைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து
இளவரசரின் காலடியில் சேர்க்கிறோம். அப்படிச் சேர்க்காவிட்டால், 'தெரிஞ்ச கைக்கோளர்
படை' என்ற பெயரை மாற்றிக்கொண்டு 'வேளாளரின் அடிமைப்படை' என்ற பட்டயத்தைப் பெற்றுக்
கொள்கிறோம்!"
"வேண்டாம்; வேண்டாம்! அப்படி ஒன்றும் இப்போது சபதம் செய்ய
வேண்டாம்! தெரிஞ்ச கைக்கோளர் படையின் வீர பராக்கிரமம் இந்த ஜம்புத்வீபத்தில்
யாருக்குத் தெரியாது? தஞ்சாவூர் சென்றதும் சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொண்டு
உங்களுக்குக் கட்டளை அனுப்புகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள். பாண்டிய நாட்டில்
பகைவர்களை அடக்கி அமைதியை நிலை நாட்டி வாருங்கள்!"
"மகா மந்திரி! பாண்டி
நாட்டில் இனி அடக்குவதற்குப் பகைவர் யாரும் இல்லை. குடி மக்கள் யுத்தம் நின்றது
பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரவர்களும் விவசாயம், வாணிபம்,
கைத்தொழில்களில் ஈடுபட்டு அமைதியான வாழ்க்கை நடத்துகிறார்கள். பாண்டிய மன்னர்குலமோ
நாசமாகி விட்டது..."
"அவ்விதம் எண்ண வேண்டாம்! வீர பாண்டியனோடு
பாண்டியவம்சம் அற்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். அது தவறு.பாண்டிய சிம்மாசனத்துக்கு
உரிமை கோருவோர் இன்னும் இருக்கிறார்கள்...! அவர்களுக்காகச் சதிசெய்வோரும்
இருக்கிறார்கள்...!"
"ஆகா! எங்கே அந்தச் சதிகாரர்? தெரியப்படுத்துங்கள்!"
"காலம் வரும்போது உங்களுக்கே தெரியும். பாண்டிய குலத்தின் பழைமையான மணிக்
கிரீடமும், இந்திரன் அளித்த இரத்தின மாலையும், வைரமிழைத்த பட்டத்து உடைவாளும்
இன்னும் இலங்கையில் இருந்து வருகின்றன. ரோஹண மலை நாட்டில் எங்கேயோ ஒளித்து
வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் மீட்டுக்கொண்டு வரும் வரையில் பாண்டியப் போர்
முற்றுப் பெறாது."
"ஆபரணங்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும்; இளவரசர்
அருள்மொழிவர்மரை மதுரைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய மணி மகுடத்தையும்,
பட்டாக் கத்தியையும் அணிவிக்கும் நாளும் வரவேண்டும்!"
"ஆகா! இது என்ன
வார்த்தை சொல்கிறீர்கள்?"
"குடி மக்களின் நாவிலும், போர் வீரர்களின்
உள்ளத்திலும் இருப்பதைச் சொல்கிறோம்!"
"அதெல்லாம் பெரிய இராஜரீக விஷயங்கள்,
நாம் பேசவேண்டாம். உங்களுக்குச் சந்தோஷமளிக்கக்கூடிய வேறு ஒரு முக்கிய விஷயம்
சொல்லப் போகிறேன்..."
"கவனமாய்க் கேட்டுக் கொள்கிறோம், மகா மந்திரி!"
"இலங்கை யுத்தத்தோடு யுத்தம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம்.
இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைப்போர் முடிந்த பிறகு நாலா திசைகளிலும் திக்விஜயம்
செய்யப் புறப்படுவார். ஆயிரம் கப்பல்களில் வீரர்களை ஏற்றிக்கொண்டு கீழ்த்திசைக்
கடல்களிலே செல்வார். மாநக்கவாரம், மாபப்பாளம், மாயிருடிங்கம், கடாரம், இலாமுரி
தேசம், ஸரீவிசயம், சாவகம், புட்பகம் ஆகிய நாடுகளை அந்த மகா வீரர் வெற்றி கொள்வார்.
தெற்கே முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றுவார். மேற்கே, கேரளம், குடமலை,
கொல்லம் ஆகிய நாடுகள் அவருடைய காலடியில் வந்து பணியும், பிறகு வடதிசை நோக்கிப்
புறப்படுவார். வேங்கி, கலிங்கம், இரட்டபாடி, சக்கரக்கோட்டம், அங்கம், வங்கம்,
கோசலம், விதேகம், கூர்ஜரம், பாஞ்சாலம் என்னும் நாடுகளுக்குப் படையெடுத்துச்
செல்வார்.காவியப் புகழ் பெற்ற கரிகால வளவனைப் போல் இமயமலைக்கும் சென்று
புலிக்கொடியை நாட்டுவார். வீர சேநாதிபதிகளே! இப்படியெல்லாம் நமது தென்திசை
மாதண்டநாயகர் திட்டம் இட்டிருக்கிறார். தமிழகத்தில் வீர ரத்தமும், வயிர நெஞ்சமும்
படைத்த அனைவருக்கும் வேண்டிய வேலை இருக்கும்; தத்தம் வீர பராக்கிரமங்களை நிலை
நாட்டச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆகையால் நீங்களும் உங்கள் தெரிஞ்ச கைக்கோளப்
படையும் பொறுமை இழக்க வேண்டாம்!"
சேநாதிபதிகள் மூவரும் ஏக காலத்தில் சுந்தர
சோழ சக்கரவர்த்தி வாழ்க! இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க! மகா மந்திரி அநிருத்தர்
வாழ்க!" என்று கோஷித்தார்கள்.
'பிறகு அவர்களில் ஒரு படைத்தலைவன் கூறினான்;
- "மகாமந்திரி! இன்னும் ஒரே ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறோம். எங்கள்
படையில் பெயர் 'சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படை' என்பது தாங்கள் அறிந்ததே."
"தெரிந்த விஷயந்தான்."
"சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருப்பணியில்
உயிரையும் விடுவோம் என்று பகைவர்களின் இரத்தம் தோய்ந்த சிவந்த கையினால் அடித்துப்
பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்."
"அதுவும் நான் அறிந்ததே."
"ஆகையால் சக்கரவர்த்தியைத் தவிர வேறு யாரையும் நாங்கள் சேரமாட்டோம்; வேறு
யார் சொல்வதையும் கேட்கமாட்டோம்."
"உங்களிடம் நான் எதிர்பார்த்ததும்
இதுவேதான்!"
"முன்னொரு காலத்தில் பழுவேட்டரையர்களின் மாபெரும் சேனையில் ஒரு
பகுதியாக இருந்தோம். அது காரணம் பற்றி எங்கள் பேரில் யாருக்கும் யாதொரு சந்தேகமும்
ஏற்படக் கூடாது..."
"ஆகா! இது என்ன வார்த்தை? யாருக்கு என்னச் சந்தேகம்!"
"தஞ்சாவூரில் நடப்பது பற்றி ஏதேதோ வதந்திகள் காற்றிலே வருகின்றன."
"காற்றிலே வருகிறது காற்றோடு போகட்டும்! நீங்கள் அதையெல்லாம் நம்பவும்
வேண்டாம்; திருப்பிச் சொல்லவும் வேண்டாம்." "கொடும்பாளூர் வேளாளர்கள் ஏதாவது
எங்களைப் பற்றிச் சந்தேகத்தை கிளப்பக்கூடும்..."
"கிளப்ப மாட்டார்கள்;
கிளப்பினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்."
"மனித காயம் அநித்தியமானது..."
"அதனால் சுத்த வீரர்கள் உயிருக்குப் பயப்படமாட்டார்கள்."
"திரிபுவன
சக்கரவர்த்தியானாலும் ஒரு நாள்..."
"இறைவன் திருப்பாதங்களை அடைய
வேண்டியதுதான்."
"சக்கரவர்த்திக்கோ உடல்நிலை சரியாக இல்லை..."
"வானத்தில் வால் நட்சத்திரம் பிரகாசிக்கிறது!"
"சக்கரவர்த்திக்கு அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால், எங்கள் படை
வீரர்கள் அருள்மொழிவர்மரின் அகப் பரிவாரமாக விரும்புகிறார்கள்!"
"சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் படி நடப்பது உங்கள் கடமை!"
"சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எங்களுக்குத் தெரிவிப்பது தங்களுடைய கடமை.
தாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது தஞ்சைக்குப் போய்ச்
சக்கரவர்த்தியைத் தரிசிக்க எங்களுக்கு அநுமதி கொடுங்கள்...!"
"வேண்டாம்;
நீங்கள் தஞ்சை போவது உசிதமல்ல; வீண் குழப்பம் ஏற்படும். சக்கரவர்த்தியைக் கண்டு
உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்துவதை நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள்
நிம்மதியாக இருங்கள்!"
"தங்களிடம் தெரியப்படுத்தியதுமே எங்களுடைய
மனத்திலிருந்த பாரம் நீங்கிவிட்டது! போய் வருகிறோம்!"
தெரிஞ்ச கைக்கோளப்
படைத் தலைவர்கள் மூவரும் அங்கிருந்து அகன்று சென்றார்கள்.
அநிருத்தப்
பிரமராயர் "ஆகா! பொன்னியின் செல்வரிடம் அப்படி என்னதான் ஆகர்ஷண சக்தி இருக்குமோ,
தெரியவில்லை! அவரை ஒரு முறை பார்த்தவர்கள்கூடப் பைத்தியமாகி விடுகிறார்களே!" என்று
வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
பிறகு, உரத்த குரலில், "எங்கே? அந்த
முரட்டு வைஷ்ணவனை இங்கே வரச் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டார்.
பக்க
தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம் குருவும் சீடனும்
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி
சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இக்கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக்
கொள்ள விரும்புகிறோம். திருச்சிராப்பள்ளி ஜில்லா லால்குடி தாலுகாவில் அன்பில் என்ற
பெயர் கொண்ட கிராமம் ஒன்று இருக்கிறது. இதை வடமொழியாளர் 'பிரேமபுரி' என்று
மொழிபெயர்த்துக் கையாண்டிருக்கிறார்கள். (இந்த அத்தியாயம் எழுதப்பட்டது 1951-ல்)
இன்றைக்குச் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் ஒரு
வேளாளர் தம்முடைய பழைய வீட்டை இடித்துப் புதுப்பித்துக் கட்டுவதற்காக அஸ்திவாரம்
தோண்டினார். அப்போது ஓர் அதிசயமான வஸ்து பூமிக்கடியிலிருந்து அகப்பட்டது. பல
செப்புத் தகடுகளை நுனியில் துவாரமிட்டு வளையத்தினால் கோத்திருந்தது. அந்தத்
தகடுகளில் ஏதோ செதுக்கி எழுதப்பட்டிருந்தது. இரண்டு ஆள் தூக்க முடியாத கனமுள்ள
அந்தத் தகடுகளை அவர் சில காலம் வைத்திருந்தார். பிறகு அந்தக் கிராமத்துக் கோயிலைப்
புதுப்பித்த திருப்பணி செய்யலாம் என்று வந்த ஸரீ ஆர்.எஸ்.எல்.லக்ஷ்மண செட்டியார்
என்பவரிடம் அத்தகடுகளைக் கொடுத்தார். ஸரீ லக்ஷ்மண செட்டியார், அத்தகடுகளில்
சரித்திர சம்பந்தமான விவரங்கள் இருக்கலாம் என்று ஊகித்து அவற்றை எடுத்துக்
கொண்டுபோய் மகா மகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் அவர்களிடம் தந்தார். ஐயர் அவர்கள்
அச்செப்பேடுகளில் மிக முக்கியமாக விவரங்கள் இருப்பதைக் கண்டு அந்த நாளில் சிலாசாஸன
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸரீ டி.ஏ. கோபிநாத ராவ், எம்.ஏ. என்பாரிடம்
அத்தகடுகளைச் சேர்ப்பித்தார். ஸரீ கோபிநாதராவ் அச்செப்புத் தகடுகளைத் கண்டதும்
அருமையான புதையலை எடுத்தவர் போல் அகமகிழ்ந்தார். ஏனென்றால், சோழ மன்னர்களின்
வம்சத்தைப் பற்றிய அவ்வளவு முக்கியமான விவரங்கள் அச்செப்பேடுகளில்
செதுக்கப்பட்டிருந்தன.
சுந்தரசோழ சக்கரவர்த்தியின் 'மான்ய மந்திரி'யான
அன்பில் அநிருத்தப்பிரமராயருக்குச் சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த நாலாம் ஆண்டில்
அளித்த பத்து வேலி நில சாஸனத்தைப் பற்றிய விவரங்கள் அந்தச் செப்பேடுகளில்
செதுக்கப்பட்டிருந்தன. இந்த நில சாஸனத்தை எழுதிய மாதவ பட்டர் என்பவர் சுந்தர சோழர்
வரைக்கும் வந்த சோழ வம்சாளியை அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அநிருத்தப்
பிரமராயரின் வைஷ்ணவ பரம்பரையைக் குறிப்பிட்டு, அவருடைய தந்தை, தாயார், பாட்டனர்,
கொள்ளுப்பாட்டனார் ஆகியவர்கள் .ஸரீ ரங்கநாதரின் ஆலயத்தில் செய்து வந்த சேவையைத்
குறித்தும் எழுதியிருந்தார். இதற்கு முன்னால் அகப்பட்டிருந்த ஆனைமங்கலச்
செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், ஆகியவற்றில் கொடுத்திருந்த சோழ
வம்சாவளியுடன் அன்பில் செப்பேடுகளில் கண்டது பெரும்பாலும் ஒத்திருந்தது. எனவே,
அந்தச் செப்பேடுகளில் கண்டவை சரித்திர பூர்வமான உண்மை விவரங்கள் என்பது
ஊர்ஜிதமாயிற்று. மற்ற இரண்டு செப்பேடுகளில் காணாத இன்னும் சில விவரங்களும்
இருந்தபடியால் "அன்பிற் செப்பேடுகள்" தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சித் துறையில்
மிகப் பிரசித்தி அடைந்தன. எனவே, அநிருத்த பிரமராயர் என்பவர் சரித்திரச்
செப்பேடுகளில் புகழ் பெற்ற சோழ சாம்ராஜ்ய மந்திரி என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு
மேலே கதையைத் தொடர்ந்து படிக்குபடி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மானிய
முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த மண்டபத்துக்குள்
ஆழ்வார்க்கடியான் பிரவேசித்தான். அவரை மூன்றுதடவை சுற்றி வந்தான்! சாஷ்டாங்கமாக
விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்!
"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு" என்று நாலு
தடவை உரத்த குரலில் உச்சரித்துவிட்டு, குருதேவரே விடை கொடுங்கள்" என்றான்.
அநிருத்தர் புன்னகையுடனே, "திருமலை! என்ன இந்தப் போடு போடுகிறாய்? எதற்கு
என்னிடத்தில் விடை கேட்கிறாய்?" என்றார்.
"தாஸன் அவலம்பித்த ஸரீ வைஷ்ணவ
சம்பிரதாயத்தையும், 'ஆழ்வார்க்கடியான் என்ற பெயரையும், தங்களுக்குக் கைங்கரியம்
செய்யும் பாக்கியத்தையும் இந்த மாகடலில் அர்ப்பணம் செய்துவிட்டு வீர சைவ காளாமுக
சம்பிரதாயத்தைச் சேர்ந்து விடப் போகிறேன். கையில் மண்டை ஓட்டை எடுத்துக்கொண்டு 'ஓம்
ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு என்ற மகத்தான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஊர் ஊராகப்
போவேன்! தலையில் ஜடாமகுடமும், முகத்தில் நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டு,
எதிர்ப்படுகிற ஸரீ வைஷ்ணவர்களுடைய மண்டைகளையெல்லாம் இந்தத் தடியினால் அடித்துப்
பிளப்பேன்..."
"அப்பனே! நில்! நில்! என்னுடைய மண்டைக்குக் கூட அந்தக்
கதிதானோ?"
"குருவே! தாங்கள் ஸரீ வை.ணவ சம்பிரதாயத்தை இன்னமும்
அவலம்பிக்கிறவர்தானோ?"
"திருமலை! அதைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்? என்னை
யார் என்று நினைத்தாய்!"
"தாங்கள் யார்? அது விஷயத்திலேதான் எனக்கும்
சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு நதிகளின் நடுவில் அறிதுயில் புரிந்து சகல
புவனங்களையும் காக்கும் ஸரீ ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்க்கை எடுத்த பயனாகக்
கொண்டிருந்த அன்பில் அனந்தாழ்வார் சுவாமிகளின் கொள்ளுப்பேரர் தாங்கள் தானே?"
"ஆம் அப்பனே? நான்தான்!"
"ஸரீமந் நாராயண நாமத்தின் மகிமையை
நானிலத்துக்கெல்லாம் எடுத்துரைத்த அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரியின்
திருப்பேரரும் தாங்கள்தானே?"
"ஆமாம்; நானேதான்! அந்த மகானுடைய
திருநாமத்தைத் தான் எனக்கும் சூட்டினார்கள்?"
"ஆழ்வார்களுடைய அமுதொழுகும்
மதுர கீதங்களைப் பாடிப் பக்த கோடிகளைப் பரவசப்படுத்தி வந்த நாராயண பட்டாச்சாரியின்
சாக்ஷாத் சீமந்த புத்திரரும் தாங்களேயல்லவா?"
"ஆமாம் அப்பா; ஆமாம்!"
".ஸரீ ரங்கநாதர் பள்ளிகொண்ட பொன்னரங்கக் கோயிலில் தினந்தினம் நுந்தா
விளக்கு ஏற்றி வைத்தும் யாத்ரீகர்களுக்கு வெள்ளித் தட்டில் அன்னமிட்டும் கைங்கரியம்
புரிந்து வந்த மங்கையர் திலகத்தின் புதல்வரும் தாங்களே அல்லவா?"
"சந்தேகம்
இல்லை!"
"அப்படியானால், என் கண்கள் என்னை மோசம் செய்கின்றனவா? என் கண்
முன்னே நான் பார்ப்பது பொய்யா? என் இரு செவிகளால் நான் கேட்டதும் பொய்யா?"
"எதைச் சொல்கிறாய், அப்பனே? உன் கண்களின் மேலும் காதுகளின் பேரிலும்
சந்தேகம் கொள்ளும்படி என்ன நேர்ந்தது விட்டது?"
"தாங்கள் இந்த ஊர்ச் சிவன்
கோயிலுக்குச் சென்று அபிஷேகம் - அர்ச்சனை எல்லாம் நடத்திவைத்ததாக என் செவிகளால்
கேட்டேன்."
"அது உண்மையேதான்; உன் செவிகள் உன்னை மோசம் செய்து விடவில்லை."
"தாங்கள் சிவன் கோவிலுக்குப் போய் வந்ததின் அடையாளங்கள் தங்கள்
திருமேனியில் இருப்பதாக என் கண்கள் காண்பதும் உண்மைதான் போலும்!"
"அதுவும்
உண்மையே!"
"இந்தக் கலியுகத்தில் ஸரீமந் நாராயணனே தெய்வம் என்றும்,
ஆழ்வார்களின் பாசுரங்களே வேதம் என்றும், ஹரிநாம சங்கீர்த்தனமே மோட்சத்தை அடையும்
மார்க்கம் என்றும் எனக்குக் கற்பித்த குருதேவர் தாங்களே அல்லவா?"
"ஆம்;
அதனால் என்ன?"
"குருதேவராகிய தாங்களே சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக
இருந்தால், சீடனாகிய நான் என்ன செய்யக் கிடக்கின்றது?"
"திருமலை! நான்
சிவன் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்தது பற்றித்தானே சொல்லுகிறாய்?"
"குருதேவரே! அங்கே எந்தக் கடவுளைத் தரிசனம் செய்தீர்கள்?"
"சந்தேகம் என்ன? நாராயண மூர்த்தியைத்தான்!"
"இராமேச்சுரக்
கோயிலுக்குள் இலிங்க வடிவம் வைத்திருப்பதாக அல்லவோ கேள்விப்பட்டிருக்கிறேன்? அதனால்
தானே இங்குள்ள வீர சைவ பட்டர்மார்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அவ்வளவு
கொக்கரித்தார்கள்?"
"பிள்ளாய்! நீ திருநகரியில் திரு அவதாரம் செய்த நம்
சடகோபரின் அடியார்க்கடியான் என்று நாமம் பூண்டிருப்பது சத்தியந்தானே?"
"அதில் என்ன சந்தேகம்?"
"நம்மாழ்வாரின் அருள்வாக்கைச் சற்று
ஞாபகப்படுத்திக்கொள். நீ மறந்திருந்தால் நானே நினைவூட்டுகிறேன்; கேள்;
இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்
தெய்வமுமாகி நின்றானே!....'
இவ்வாறு
சடகோபரே சாதித்திருக்கும்போது சிவலிங்கத்தில் நான் நாராயணனைத்
தரிசித்தது தவறா?"
"ஆகா! சடாகோபரின் அருள்வாக்கே!
வாக்கு! இலிங்கத்தை வழிபடுவோரைச் சமணரோடும் சாக்கியரோடும்
கொண்டு போய்த் தள்ளினார் பாருங்கள்!"
"அப்பனே! உன் குதர்க்க புத்தி உன்னை விட்டு எப்போது நீங்குமோ, தெரியவில்லை. நம்
சடகோபர் மேலும் சொல்லியிருப்பதைக் கேள்:
'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனாய்...'
உள்ளவன் ஸரீ
நாராயண மூர்த்தியே என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இன்னும்
கேள், திருமலை! கேட்டு உன் மனமாசைத் துடைத்துக்கொள்!
'முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே
என் கள்வா!
தனியே ஆருயிரே என்தலை மிசையாய்
வந்திட்டு..."
கேட்டாயா,
திருமலை 'முக்கண்ணப்பா!' என்று நம் சடகோபர் கூவி அழைத்துத் தம்
தலைமீது வரும்படி பிரார்த்திருக்கிறார்! நீயோ சிவன் கோயிலுக்கு
நான் போனது பற்றி ஆட்சேபிக்கிறாய்!..."
"குருதேவரே!
மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும்!
நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால்
வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். தங்களையும் சந்தேகித்தேன்.
இனி எனக்கு ஒரு வரம் கொடுத்து அருள வேண்டும்."
"என்ன
வரம் வேண்டும் என்று சொன்னாயானால், கொடுப்பதைப் பற்றி
யோசிக்கலாம்."
"திருக்குருகூர் சென்று அங்கேயே
தங்கிவிட ஆசைப்படுகிறேன். நம் சடகோபரின் ஆயிரம் பாடல்களையும்
சேகரித்துக் கொண்டு பிறகு ஊர் ஊராகச் சென்று அந்தப் பாடல்களைக்
கானம் செய்ய விரும்புகிறேன்..."
"இந்த ஆசை உனக்கு ஏன்
வந்தது?"
"வடவேங்கடத்திலிருந்து வரும் வழியில் வீர
நாராயணப் பெருமாள் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப்
பாடினேன். அந்தச் சந்நிதியில் கைங்கியம் செய்யும்
ஈசுவரப்பட்டர் என்னும் பெரியவர் கேட்டு ஆனந்தக் கண்ணீர்
விட்டார்..."
"ஈசுவர பட்டர் மகா பக்திமான்; நல்ல
சிஷ்டர்."
"அவருடைய இளம் புதல்வன் ஒருவனும் அவர் அருகில் நின்று கேட்டுக்
கொண்டிருந்தான். அந்த இளம் பாலகனின் பால்வடியும் முகம் ஆழ்வார்
பாசுரத்தை கேட்டுப் பூரண சந்திரனைப்போல் பிரகாசித்தது. 'மற்றப்
பாடல்களும் தெரியுமா?' என்று அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை பால்
மணம் மாறாத வாயினால் கேட்டான். 'தெரியாது' என்று சொல்ல எனக்கு
வெட்கமாயிருந்தது. ஆழ்வார்களின் தொண்டுக்கே ஏன் இந்த நாயேனை
அர்ப்பணம் செய்து விடக்கூடாது என்று அப்போதே தோன்றியது.
இன்றைக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது..."
"திருமலை; அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று கீதாச்சாரியார் அருள்புரிந்திருக்கிறார் அல்லவா?"
"ஆம், குருவே!"
"ஆழ்வார்களின் பாசுரங்களைச்
சேகரிப்பதற்கும் பரப்புவதற்கும் மகான்கள் அவதரிப்பார்கள்.
அதுபோலவே ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ள வேத சாரமான
தத்துவங்களை நிரூபணம் செய்து, வடமொழியின் மூலம் பரத
கண்டமெங்கும் நிலை நாட்டக்கூடிய அவதாரமூர்த்திகளும்
இந்நாட்டில் ஜனிப்பார்கள். நீயும் நானும் இராஜ்ய சேவையை நமது
ஸ்வதர்மமாகக் கொண்டவர்கள். சோழ சக்கரவர்த்தியின் சேவையில் உடல்
பொருள் ஆவியை அர்ப்பணம் செய்வதாக நாம் சபதம் செய்திருப்பதை
மறந்தனையோ?.."
"மறக்கவில்லை, குருவே! ஆனால் அது உசிதமா
என்ற சந்தேகம் தோன்றி என் உள்ளத்தை அரித்து வருகிறது.
முக்கியமாக, தங்களைப் பற்றிச் சில இடங்களில் பேசிக் கொள்வதைக்
கேட்டால்..."
"என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"தங்களுக்குச் சக்கரவர்த்தி பத்து
வேலி நிலம் மானியம் விட்டு அதைச் செப்பேட்டிலும் எழுதிக்
கொடுத்திருப்பதால் தாங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை
விட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதி தர்மத்தைப்
புறக்கணித்துக் கப்பல் பிரயாணம் செய்ததாகவும்
கூறுகிறார்கள்..."
"அந்தப் பொறாமைக்காரர்கள் சொல்வதை
நீ பொருட்படுத்த வேண்டாம். நம்முடைய ஜாதி கிணற்றுத் தவளைகளாக
இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். சக்கரவர்த்தி
எனக்குப் பத்து வேலி நிலம் மானியம் கொடுத்திருப்பது உண்மைதான்.
அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால்
அதற்கு நாலு வருஷங்களுக்கு முன்பே சக்கரவர்த்திக்கு நான்
மந்திரியானேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?"
ஆழ்வார்க்கடியான் மௌனமாயிருந்தான்.
"சக்கரவர்த்திக்கும் எனக்கும் எப்போது நட்பு ஏற்பட்டது
என்றாவது உனக்குத் தெரியுமா? நாங்கள் இருவரும் இளம்பிராயத்தில்
ஒரே ஆசிரியரிடம் பாடங்கற்றோம். செந்தமிழும் வடமொழியும்
பயின்றோம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம்
எல்லாம் படித்தோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம்
ஏறப் போகிறார் என்று யாரும் கனவிலும் எண்ணியதில்லை. அவராவது,
நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. இராஜாதித்தரும்
கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு வருவார்
என்று யார் நினைத்தது? அரிஞ்சயருக்கு அவ்வளவு விரைவில்
துர்மரணம் சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு
வரும்படியிருக்கும் என்றுதான் யார் நினைத்தார்கள்? சுந்தர
சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும்
என்று எதிர்பார்த்தார். உடனிருந்து நான் உதவுவதாயிருந்தால்
பட்டத்தை ஒப்புக்கொள்வதாகவும் இல்லாவிட்டால்
மறுத்துவிடுவதாகவும் கூறினார். இராஜ்ய நிர்வாகத்தில் அவருக்கு
உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை இன்றளவும்
நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா, திருமலை?"
"எனக்குத் தெரியும், குருதேவா! என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்?
ஜனங்களுக்குத் தெரியாது தானே? நாட்டிலும் நகரத்திலும் வம்பு
பேசுகிறவர்களுக்குத் தெரியாதுதானே"
"வம்பு
பேசுகிறவர்களைப் பற்றி நீ சிறிதும் கவலைப்படவேண்டாம்.
பரம்பரையான ஆச்சாரியத் தொழிலை விட்டுவிட்டு நான் இராஜ சேவையில்
இறங்கியது பற்றி இதற்கு முன்னால் நானே சில சமயம்
குழப்பமடைந்ததுண்டு. ஆனால் சென்ற இரண்டு நாட்களாக அத்தகைய
குழப்பம் எனக்குச் சிறிதும் இல்லை. திருமலை! நான் இராமேசுவர
ஆலயத்தில் சுவாமி தரிசனத்துக்காக இங்கு வரவில்லை என்பதும்
மாதோட்டம் போவதற்காகவே இங்கு வந்தேன் என்பதும் உனக்குத்
தெரியும் அல்லவா?"
"அப்படித்தான் ஊகித்தேன்,
குருதேவரே!"
"நீ ஊகித்தது சரியே, அன்றைக்குச்
சம்பந்தரும் சுந்தரமூர்த்தியும் பரவசமாக வர்ணித்தபடியேதான்
இன்றைக்கும் பாலாவி நதிக்கரையில் மாதோட்டம் இருக்கிறது.
'வண்டுபண்செயும் மாமலர்ப் பொழில்
மஞ்ஞை நடமிடுமாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய
அருள்செய் கேதீச்சுர மதுதானே!'
என்று சம்பந்தர்
பாடியிருக்கிறாரே, அந்த மாதோட்டத்தை நேரில் பார்க்காமல்
எழுதியிருக்க முடியுமா? இந்த இராமேசுவரத் தீவிலிருந்தபடியே
மாதோட்டத்தை எட்டிப் பார்த்து விட்டு எழுதியதாகச்
சொல்லுகிறார்கள், கிணற்றுத் தவளைப் பண்டிதர்கள் சிலர்.
அத்தகையோர் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம்..."
"சுவாமி! மாதோட்டத்தின் இயற்கை வளங்களைக் கண்டு களிப்பதற்காகவா
தாங்கள் அந்த க்ஷேத்திரத்துக்குச் சென்றிருந்தீர்கள்?"
"இல்லை; உன்னை அங்கே அனுப்ப எண்ணியிருப்பதால் அதைப் பற்றியும்
சொன்னேன். நான் சென்றது இளவரசர் அருள்மொழிவர்மரைப்
பார்ப்பதற்காக..."
"இளவரசரைப் பார்த்தீர்களா, குருதேவரே?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
அவனுடைய பேச்சில் இப்போதுதான் சிறிது ஆர்வமும் பரபரப்பும்
தொனித்தன.
"ஆகா! உனக்குக்கூட ஆவல் உண்டாகிவிட்டதல்லவா,
இளவரசரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு? ஆம், திருமலை!
இளவரசரைப் பார்த்தேன்; பேசினேன். இலங்கையிலிருந்து வந்து
கொண்டிருந்த அதிசயமான செய்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை
நேரில் தெரிந்து கொண்டேன். கேள், அப்பனே! இலங்கை அரசன்
மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அந்தச் சைன்யம்
இப்போது இல்லவே இல்லை! அது என்ன ஆயிற்று தெரியுமா? சூரியனைக்
கண்ட பனிபோல் கரைந்து, மறைந்து போய்விட்டது! மகிந்தனுடைய
சைன்யத்திலே பாண்டியநாட்டிலிருந்தும், சேரநாட்டிலிருந்தும்
சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம்
இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும்
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும்
நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்! மகிந்தன்
எப்படிப் போர் புரிவான்? போயே போய் விட்டான். மலைகள் சூழ்ந்த
ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆக, நமது
சைன்யம் போர் செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை!"
"அப்படியானால், குருதேவரே! இளவரசர் நம் சைனியத்துடன்
திரும்பிவிட வேண்டியதுதானே? மேலும் அங்கே இருப்பானேன்? நம்
வீரர்களுக்குத் தானியம் அனுப்புவது பற்றிய ரகளையெல்லாம்
எதற்காக?"
"எதிரிகள் இல்லையென்று சொல்லி திரும்பிவந்து விடலாம். ஆனால் இளவரசருக்கு
அதில் இஷ்டமில்லை. எனக்கும் அதில் சம்மதமில்லை. இளவரசரும்,
சைனியமும் இப்பால் வந்ததும், மகிந்தன் மலை நாட்டிலிருந்து வௌி
வருவான். மறுபடியும் பழையபடி போர் தொடங்கும். அதில் என்ன பயன்?
இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச் சிநேகிதர்களாக
வேண்டும். அல்லது புலக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக
நிறுவுதல் வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர்
ஈடுபட்டிருக்கிறார். நமது போர் வீரர்கள் இப்போது இலங்கையில்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? பழைய போர்களில்
அநுராதபுரநகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த
விஹாரங்கள், கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் எல்லாம்
இடிந்து பாழாய்க் கிடக்கின்றன. இளவரசரின் கட்டளையின் பேரில்
இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களை யெல்லாம்
புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.!'
"அழகாய்த்தானிருக்கிறது.சைவம், வைஷ்ணவம் இரண்டையும் கைவிட்டு
இளவரசர் சாக்கிய மதத்திலேயே ஒருவேளை சேர்ந்து விடுவாரோ,
என்னமோ? அதையும் தாங்கள் ஆமோதிப்பீர்களோ?"
"நானும்
நீயும் ஆமோதித்தாலும் ஒன்றுதான்! ஆமோதிக்காவிட்டாலும்
ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள் நம்முடைய மதமே பெரிது என்று
சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும் அரசர்
தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும்
ஆதரித்துப் பராமரிக்கவேண்டும். இந்த உண்மையை யாருடைய
தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே உணர்ந்திருக்கிறார்.
சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார்.
திருமலை, இதைக் கேள்! நம் இளவரசர் அருள்மொழிவர்மருடைய
கரங்களில் சங்கு சக்கர ரேகை இருப்பதாகச் சொல்லக்
கேட்டிருக்கிறேன், நீயும் கேட்டிருப்பாய். ஆனால் அவருடைய
கரங்களை நீட்டச் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் கையில் சங்கு
சக்கர ரேகை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று
நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக
ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர்
அருள்மொழிவர்மர் தாம். பிறவியிலேயே அத்தகைய தெய்வ
கடாட்சத்துடன் சிலர் பிறக்கிறார்கள். சற்றுமுன் சில
வர்த்தகத்தலைவர்களும் கைக்கோளப் படைச் சேநாதிபதிகளும்
வந்துபேசிக் கொண்டிருந்தார்களே, அது உன் காதில் விழுந்ததா?
இளவரசருக்கு என்றால் நம் வர்த்தகர்கள், - காசிலேயே
கருத்துள்ளவர்கள், - எவ்வளவு தாராளமாகி விடுகிறார்கள்
பார்த்தாயா?"
'சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச்
சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த
மகான். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'யானைக்கு ஒரு காலம்
வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும். இப்போது தென்னாடு மேம்பாடு
அடையும் காலம் வந்திருக்கிறது. வெகுகாலமாக இப்புண்ணிய பாரத
பூமியில் பெரிய பெரிய சக்கரவர்த்திகளும், வீராதி வீரர்களும்,
ஞானப் பெருஞ் செல்வர்களும், மகா கவிஞர்களும் வடநாட்டிலேயே
அவதரித்து வந்தார்கள். ஆனால் வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம்
பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா
முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம்
செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப்
போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும். அப்போது
நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில், வழிபாடு -
ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது.
வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத்தென்னாட்டில் தோன்றி,
நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகாஞானிகளும்,
பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில்
அவதரிப்பார்கள்!' என்று இவ்விதம் அந்தப் பொதிகை மலைச் சிவயோகி
அருளினார். அந்த யோகியின் தீர்க்க தரிசனம் உண்மையாகும் என்ற
நம்பிக்கை எனக்கு இப்போது பிறந்திருக்கிறது, திருமலை!'
"சுவாமி! தாங்கள் ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அங்கே இராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறியப்
பார்க்கிறார்கள் குரு தேவரே! நான் பார்த்ததையெல்லாம் தாங்கள்
பார்த்து நான் கேட்டதையெல்லாம் தாங்களும் கேட்டிருந்தால்
இவ்வளவு குதூகலமாயிருக்க மாட்டீர்கள். இந்தச் சோழ
சாம்ராஜ்யத்துக்கு ஏற்படப்போகும் அபாயத்தை நினைத்துக்
கதிகலங்குவீர்கள்..."
"திருமலை, ஆம், நான்
மறந்துவிட்டேன். அதிக உற்சாகம் என் அறிவை மூடிவிட்டது. நீ உன்
பிரயாணத்தில் தெரிந்து வந்த செய்திகளை இன்னும் நான் கேட்கவே
இல்லை. சொல், கேட்கிறேன். எவ்வளவு பயங்கரமான
செய்திகளாயிருந்தாலும் தயங்காமல் சொல்!" "சுவாமி, இங்கேயே
சொல்லும்படி ஆக்ஞாபிக்கிறீர்களா? நான் கொண்டுவந்த செய்திகளை
வாயு பகவான் கேட்டால் நடுங்குவார்; சமுத்திரராஜன் கேட்டால்
ஸ்தம்பித்து நிற்பார்; பட்சிகள் கேட்டால் பறக்கும் சக்தியை
இழந்து சுருண்டுவிடும்; ஆகாசவாணியும், பூமா தேவியுங்கூட
அலறிவிடுவார்கள். அப்படிப்பட்ட செய்திகளை இங்கே பகிரங்கமாகச்
சொல்லும் படியா பணிக்கிறீர்கள்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"அப்படியானால் வா! காற்றும், கனலும் புகாத பாதாளக் குகை ஒன்று
இந்தத் தீவிலே இருக்கிறது. அங்கே வந்து விவரமாகச் சொல்லு!"
என்றார் அநிருத்தப் பிரமராயர்.
பக்க
தலைப்பு
பதின்மூன்றாம் அத்தியாயம் "பொன்னியின்
செல்வன்"
வந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை நோக்கிப்
போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் - அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும்
சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் - குந்தவை
தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும், அம்பாரி வைத்த ஆனைமீது ஏறித் தஞ்சை நகரை
நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இளைய பிராட்டி சில காலமாகத் தஞ்சைக்குப் போவதில்லை
என்று வைத்துக் கொண்டிருந்தாள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. தஞ்சையில்
அரண்மனைப் பெண்டிர் தனித்தனியாக வசிக்கும்படியாகப் போதிய அரண்மனைகள் இன்னும்
உண்டாகவில்லை. சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனையிலேயே எல்லாப் பெண்டிரும் இருந்தாக
வேண்டும். மற்ற அரண்மனைகளையெல்லாம் பழுவேட்டரையர்களும் மற்றும் பெருந்தரத்து
அரசாங்க அதிகாரிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். பழையாறையில் அரண்மனைப்
பெண்டிர் சுயேச்சையாக இருக்க முடிந்தது. விருப்பம் போல் வௌியில் போகலாம்; வரலாம்.
ஆனால் தஞ்சையில் வசித்தால் பழுவேட்டரையர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்
தீரவேண்டும். கோட்டைக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் இஷ்டம்போல் வருவதும் போவதும்
இயலாத காரியம். அம்மாதிரி கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தங்களும் இளைய பிராட்டிக்குப்
பிடிப்பதில்லை. அல்லாமலும் பழுவூர் இளையராணியின் செருக்கும், அவளுடைய அகம்பாவ
நடத்தைகளும் குந்தவைப் பிராட்டிக்கு மிக்க வெறுப்பை அளித்தன. அரண்மனைப் பெண்டிர்கள்
பழையாறையில் இருப்பதையே சக்கரவர்த்தியும் விரும்பினார். இந்தக் காரணங்களினால்
குந்தவைப் பிராட்டி பழையாறையிலேயே வசித்து வந்தாள். உடம்பு குணமில்லாத தன் அருமைத்
தந்தையைப் பார்க்கவேண்டும். அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும்
கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் வந்தியத்தேவன் வந்துவிட்டுப்
போனதிலிருந்து இளைய பிராட்டியின் மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது.
இராஜரீகத்தில் பயங்கரமான சூழ்ச்சிகளும், சதிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது
நாம் பழையாறையில் உல்லாசமாக நதிகளில் ஓடம் விட்டுக்கொண்டும், பூங்காவனங்களில்
ஆடிப்பாடிக் கொண்டும் காலங் கழிப்பது சரியா? தமையன் தொண்டை நாட்டில் இருக்கிறான்;
தம்பிய ஈழநாட்டில் இருக்கிறான்; அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் இராஜ்யத்தில்
நடக்கும் விவகாரங்களை நாம் கவனித்தாக வேண்டும் அல்லவா? தலை நகரில் அவ்வப்போது
நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தரங்கத் தூதர்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்று தமையன்
ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டிருக்கிறானே? பழையாறையில் வசித்தால் தஞ்சையில்
நடக்கும் காரியங்கள் எப்படித் தெரியவரும்?
வந்தியத்தேவன் அறிவித்த
செய்திகளோ மிகப் பயங்கரமாயிருந்தன. பழுவேட்டரையர்கள் தங்கள் அந்தஸ்துக்கு மீறி
அதிகாரம் செலுத்தி வந்தது மட்டுமே இதுவரையில் இளைய பிராட்டிக்குப்
பிடிக்காமலிருந்தது.இப்போதோ சிம்மாசனத்தைப் பற்றியே சூழ்ச்சி செய்ய
ஆரம்பித்துவிட்டார்கள். பாவம்! அந்தப் பரம சாது மதுராந்தகனையும் தங்கள் வலையில்
போட்டுக் கொண்டார்கள். சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தரத்து அதிகாரிகள்
பலரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ,
தெரியாது. இவர்களுடைய சூழ்ச்சியும், வஞ்சனையும், துராசையும் எந்த வரையில் போகும்
என்று யார் கண்டது? சுந்தர சோழரின் உயிருக்கு உலை வைத்தாலும் வைத்துவிடுவார்கள்!
மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சக்கரவர்த்தியின் புதல்வர்கள் இருவரும்
இல்லாத சமயத்தில் அவருக்கு எதாவது நேர்ந்துவிட்டால், மதுராந்தகனைச் சிம்மாசனத்தில்
ஏற்றி வைத்துவிடுவது எளிதாயிருக்கும் அல்லவா? இதற்காக என்ன செய்தாலும் செய்வார்கள்!
அவர்களுக்கு யோசனை தெரியாவிட்டாலும் அந்த ராட்சஷி நந்தினி சொல்லிக் கொடுப்பாள்.
அவர்கள் தயங்கினாலும், இவள் துணிவூட்டுவாள். ஆகையால் தஞ்சாவூரில் நம் தந்தையின்
அருகில் நாம் இனி இருப்பதே நல்லது. சூழ்ச்சியும் சதியும் எதுவரைக்கும் போகின்றன
என்று கவனித்துக் கொண்டு வரலாம். அதோடு நம் அருமைத் தந்தைக்கும் ஆபத்து ஒன்றும்
வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
சாதுவாகிய மதுராந்தகனை ஏன் இவர்கள்
சிம்மாசனத்தில் ஏற்றப் பார்க்கிறார்கள்? தர்ம நியாய முறைக்காகவா? இல்லவே
இல்லை.மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டினால் அவனைப் பொம்மையாக வைத்துக்கொண்டு தங்கள்
இஷ்டம் போல் எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகத்தான்.அப்புறம்
நந்தினி வைத்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தில் சட்டமாகிவிடும்! அவளுடைய அதிகாரத்துக்குப்
பயந்துதான் மற்றவர்கள் வாழ வேண்டும். அவளிடம் மற்ற அரண்மனை மாதர் கைகட்டி
நிற்கவேண்டும். சீச்சீ! அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்க முடியுமா? நான் ஒருத்தி
இருக்கும் வரையில் அது நடவாது. பார்க்கலாம் அவளுடைய சமார்த்தியத்தை!
தஞ்சாவூரில் இருப்பது தனக்குப் பல வகையில் சிரமமாகவே இருக்கும். தாயும்,
தந்தையும், "இங்கு எதற்காக வந்தாய், பழையாறையில் சுகமாக இருப்பதை விட்டு?" என்று
கேட்பார்கள். 'சுயேச்சை என்பதே இல்லாமற் போய்விடும். தன்னுடைய திருமணத்தைப் பற்றிய
பேச்சை யாரேனும் எடுப்பார்கள். அதைக் கேட்கவே தனக்குப் பிடிக்காது. நந்தினியைச்
சிலசமயம் பார்க்கும்படியாக இருக்கும். அவளுடைய அதிகாரச் செருக்கைத் தன்னால் சகிக்க
முடியாது. ஆனால் இதையெல்லாம் இந்தச் சமயத்தில் பார்த்தால் சரிப்படுமா?
இராஜ்யத்துக்குப் பேரபாயம் வந்திருக்கிறது. தந்தையின் உயிருக்கு அபாயம் நேரலாம்
என்ற பயமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் இருக்கவேண்டிய இடம்
தஞ்சையேயல்லவா?'
இவ்வளவையும் தவிர, வேறொரு, முக்கிய காரணமும் இருந்தது. அது
வந்தியத்தேவனைப் பற்றி ஏதேனும் செய்தி உண்டா என்று தெரிந்துகொள்ளும் ஆசைதான்.
வந்தியத்தேவன் கோடிக்கரைப் பக்கம் போயிருக்கிறான் என்று தெரிந்து அவனைப் பிடித்து
வரப் பழுவேட்டரையர்கள் ஆட்கள் அனுப்பியிருப்பதைப்பற்றி இளைய பிராட்டி
கேள்விப்பட்டாள். 'புத்தி யுத்திகளில் தேர்ந்த அந்த இளைஞன் இவர்களிடம் அகப்பட்டுக்
கொள்வானா? ஒருவேளை அகப்பட்டால் தஞ்சாவூருக்குத்தான் கொண்டு வருவார்கள். அச்சமயம்
நாம் அங்கே இருப்பது மிகவும் அவசியமல்லவா? ஆதித்த கரிகாலன் அனுப்பிய தூதனை அவர்கள்
அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்து விடமுடியாது.ஏதாவது குற்றம் சாட்டித்தான் தண்டிக்க
வேண்டும். அதற்காகவே சம்புவரையர் மகனை முதுகில் குத்திக் கொல்ல முயன்றதாக குற்றம்
சாட்டியிருக்கிறார்கள். அது பொய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பொய் என்பதை
நிரூபிக்க வேண்டும். கந்தன் மாறனுடன் பேசி அவனுடைய வாய்ப் பொறுப்பை அறிந்து கொள்வது
அதற்கு உபயோகமாயிருக்கலாம்...'
இவ்விதமெல்லாம் குந்தவையின் உள்ளம் பெரிய
பெரிய சூழ்ச்சிகளிலும் சிக்கலான விவகாரங்களிலும் சஞ்சரித்துக் குழம்பிக்
கொண்டிருக்கையில், அவளுடன் யானைமீது வந்த அவள் தோழி வானதியின் உள்ளம், பால் போன்ற
தூய்மையுடனும், பளிங்கு போன்ற தௌிவுடனும் ஒரே விஷயத்தைப்பற்றியே சிந்தித்துக்
கொண்டிருந்தது. அந்த ஒரு விஷயம் இளவரசர் அருள்மொழிவர்மர் எப்போது இலங்கையிலிருந்து
திரும்பி வருவார் என்பது பற்றித்தான்.
"அக்கா! அவரை உடனே புறப்பட்டு
வரும்படி ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? வந்தால், எவ்விடம் வருவார்?
பழையாறைக்கா? தஞ்சாவூருக்கா?" என்று வானதி கேட்டாள்.
தஞ்சாவூருக்கு இவர்கள்
போயிருக்கும்போது இளவரசர் பழையாறைக்கு வந்து விட்டால் என்ன செய்கிறது என்பது
வானதியின் கவலை. வேறு யோசனைகளில் ஆழ்ந்திருந்த குந்தவைப் பிராட்டி வானதியைத்
திரும்பிப் பார்த்து, "யாரைப்பற்றியடி கேட்கிறாய்? பொன்னியின் செல்வனைப் பற்றியோ?"
என்றாள்.
"ஆமாம், அக்கா! அவரைப் பற்றித்தான். இளவரசரைப் 'பொன்னியின்
செல்வன்' என்று நாலைந்து தடவை தாங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள், அதற்குக் காரணம்
சொல்லவில்லை. பிற்பாடு சொல்வதாகத் தட்டிக் கழித்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இப்போதாவது சொல்லுங்களேன். தஞ்சாவூர்க் கோட்டை இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது.
இந்த யானையோ ஆமை நகர்வதுபோல் நகர்கிறது!" என்றாள் வானதி.
"இதற்குமேல் யானை
வேகமாய்ப் போனால் நம்மால் இதன் முதுகில் இருக்க முடியாது. அம்பாரியோடு நாமும் கீழே
விழவேண்டியதுதான்! அடியே! தக்கோலப் போரில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?"
"அக்கா! 'பொன்னியின் செல்வன்' என்னும் பெயர் எப்படி வந்தது என்று
சொல்லுங்கள்!"
"அடி கள்ளி! அதை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறது;
சொல்கிறேன், கேள்!" என்று குந்தவைப் பிராட்டி சொல்லத் தொடங்கினாள்.
சுந்தர
சோழ சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்த புதிதில் அவருடைய குடும்ப வாழ்க்கை ஆனந்த மயமாக
இருந்தது.அரண்மனைப் படகில் குடும்பத்துடன் அமர்ந்து சக்கரவர்த்தி பொன்னி நதியில்
உல்லாசமாக உலாவி வருவார்.அத்தகைய சமயங்களில் படகில் ஓரே குதூகலமாயிருக்கும். வீணா
கானமும் பாணர்களில் கீதமும் கலந்து காவேரி வெள்ளத்தோடு போட்டியிட்டுக் கொண்டு
பெருகும். இடையிடையே யாரேனும் ஏதேனும் வேடிக்கை செய்வார்கள். உடனே கலகலவென்று
சிரிப்பின் ஒலி கிளம்பிக் காவேரிப் பிரவாகத்தில் சலசலப்பு ஒலியுடன் ஒன்றாகும்.
சிலசமயம் பெரியவர்கள் தங்களுக்குள் பேசி மகிழ்வார்கள். படகில் ஒரு
பக்கத்தில் குழந்தைகள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். சில சமயம்
எல்லோருமாகச் சேர்ந்து வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்து
களிப்பார்கள். ஒருநாள் அரண்மனைப் படகில் சக்கரவர்த்தியும் ராணிகளும் குழந்தைகளும்
உட்கார்ந்து காவேரியில் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று,
"குழந்தை எங்கே? குழந்தை அருள்மொழி எங்கே?" என்று ஒரு குரல் எழுந்தது. இந்தக் குரல்
குந்தவையின் குரல்தான் அருள்மொழிக்கு அப்போது வயது ஐந்து. குந்தவைக்கு வயது எழு.
அரண்மனையில் அனைவருக்கும் கண்ணினும் இனிய செல்லக் குழந்தை அருள்மொழி. ஆனால்
எல்லாரிலும் மேலாக அவனிடம் வாஞ்சை உடையவள் அவன் தமக்கை குந்தவை. படகில் குழந்தையைக்
காணோம் என்பதைக் குந்தவைதான் முதலில் கவனித்தாள். உடனே மேற்கண்டவாறு கூச்சலிட்டாள்.
எல்லாரும் கதிகலங்கிப் போனார்கள். படகில் அங்குமிங்கும் தேடினார்கள். ஆனால்
அரண்மனைப் படகில் அதிகமாகத் தேடுவதற்கு இடம் எங்கே? சுற்றிச் சுற்றித் தேடியும்
குழந்தையைக் காணவில்லை. குந்தவையும், ஆதித்தனும் அலறினார்கள். ராணிகள்
புலம்பினார்கள், தோழிமார்கள் அரற்றினார்கள்.படகோட்டிகளில் சிலர் காவேரி வெள்ளத்தில்
குதித்துத் தேடினார்கள். சுந்தர சோழரும் அவ்வாறே குதித்துத் தேடலுற்றார். ஆனால்
எங்கே என்று தேடுவது? ஆற்று வெள்ளம் குழந்தையை எவ்வளவு தூரம் அடித்துக்கொண்டு
போயிருக்கும் என்று யார் கண்டது? குழந்தை எப்போது வெள்ளத்தில் விழுந்தது என்பதுதான்
யாருக்குத் தெரியும்? நோக்கம், குறி என்பது ஒன்றுமில்லாமல் காவேரியில்
குதித்தவர்கள் நாலாபுறமும் பாய்ந்து துழாவினார்கள். குழந்தை அகப்படவில்லை. இதற்குள்
படகில் இருந்த ராணிகள் - தோழிமார்களில் சிலர் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள்.
அவர்களைக் கவனிப்பார் இல்லை. உணர்ச்சியோடு இருந்த மற்றவர்கள் 'ஐயோ!' என்று அழுது
புலம்பிய சோகக் குரல் காவேரி நதியின் ஓங்காரக் குரலை அடக்கிக்கொண்டு மேலெழுந்தது.
நதிக்கரை மரங்களில் வசித்த பறவைகள் அதைக் கேட்டுத் திகைத்து மோனத்தில் ஆழ்ந்தன.
சட்டென்று ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. படகுக்குச் சற்றுத் தூரத்தில்
ஆற்று வெள்ளத்தின் மத்தியில் அது தெரிந்தது. பெண் உருவம் ஒன்று இரண்டு கைகளிலும்
குழந்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றது.அந்த மங்கையின் வடிவம்
இடுப்புவரையில் தண்ணீரில் மறைந்திருந்தது. அப்பெண்ணின் பொன் முகமும், மார்பகமும்,
தூக்கிய கரங்களும் மட்டுமே மேலே தெரிந்தன. அவற்றிலும் பெரும் பகுதியைக் குழந்தை
மறைத்துக் கொண்டிருந்தது. எல்லாரையும் போல் சுந்தர சோழரும் அந்தக் காட்சியைப்
பார்த்தார். உடனே பாய்ந்து நீந்தி அந்தத் திசையை நோக்கிச் சென்றார். கைகளை நீட்டிக்
குழந்தையை வாங்கிக் கொண்டார். இதற்குள் படகும் அவர் அருகில் சென்றுவிட்டது.
படகிலிருந்தவர்கள் குழந்தையைச் சுந்தர சோழரிடமிருந்து வாங்கிக்
கொண்டார்கள்.சக்கரவர்த்தியையும் கையைப் பிடித்து ஏற்றி விட்டார்கள். சக்கரவர்த்தி
படகில் ஏறியதும் நினைவற்று விழுந்துவிட்டார். அவரையும், குழந்தையையும் கவனிப்பதில்
அனைவரும் ஈடுபட்டார்கள். குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்த மாதரசி என்னவானாள்?
என்று யாரும் கவனிக்கவில்லை. அவளுடைய உருவம் எப்படியிருந்தது? என்று அடையாளம்
சொல்லும்படி யாரும் கவனித்துப் பார்க்கவும் இல்லை. "குழந்தையைக் காப்பாற்றியவள்
நான்!" என்று பரிசுகேட்பதற்கு அவள் வரவும் இல்லை. ஆகவே காவேரி நதியாகிய தெய்வந்தான்
இளவரசர் அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கவேண்டும் என்று அனைவரும் ஒரு
முகமாக முடிவு கட்டினார்கள். ஆண்டுதோறும் அந்த நாளில் பொன்னி நதிக்குப் பூஜை
போடவும் ஏற்பாடாயிற்று. அதுவரை அரண்மனைச் செல்வனாயிருந்த அருள்மொழிவர்மன்
அன்றுமுதலாவது 'பொன்னியின் செல்வன்' ஆனான். அச்சம்பவத்தை அறிந்த அரச குடும்பத்தார்
அனைவரும் பெரும்பாலும் 'பொன்னியின் செல்வன்' என்றே அருள்மொழிவர்மனை அழைத்து
வந்தார்கள்.
பக்க
தலைப்பு
பதினான்காம் அத்தியாயம். இரண்டு பூரண
சந்திரர்கள்
அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு
வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின்
எக்களிப்புக்குக் கேட்பானேன்? சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம்
முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு
வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம்
நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார் என்ற வதந்தி
முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது. எனவே, இன்றைக்கு வருகிறார் என்று
தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண
சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல்
இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.
கடைசியில், பூரணசந்திரனும் உதயமாயிற்று. ஏன்? இரண்டு நிலாமதியங்கள் ஒரே சமயத்தில்
உதயமாயின. தஞ்சைக் கோட்டை வாசலண்டை குந்தவை தேவி தன் பரிவாரத்துடன் வந்து
சேர்ந்தபோது, கோட்டைக் கதவுகள் தடால் என்று திறந்தன. உள்ளேயிருந்து தேவியை வரவேற்று
அழைத்துப் போவதற்காக அரண்மனைப் பரிவாரங்கள் வௌிவந்தன. அந்தப் பரிவாரங்களின்
முன்னிலையில் இருபழுவேட்டரையர்களும் இருந்தார்கள். அது மட்டுமல்ல; அவர்களுக்குப்
பின்னால், முத்துப்பதித்த தந்தப் பல்லக்கு ஒன்றும் வந்தது.அதன் பட்டுத்திரைகள்
விலகியதும் உள்ளே பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியின் சுந்தர மதிவதனம் தெரிந்தது.
குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி
விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக்
குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும்
அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன்
வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம்
பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த
சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின்
செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன;
குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு
பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல்
திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல்
இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல்
தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத்
திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல்
அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு
அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.
இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும்
தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல
முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள்
என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே
எளிதில் உணர்ந்தார்கள். நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு
அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள்
குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி
கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்று மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை
விளைவித்தது.
மக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில்
நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில்
அமைந்தது. "தேவி! வருக! வருக! எங்களை அடியோடு மறந்துவிட்டீர்களோ, என்று
நினைத்தோம். இளைய பிராட்டியின் கருணை எல்லையற்றது என்பதை இன்று அறிந்தோம்" என்றாள்
நந்தினி.
"அது எப்படி ராணி! தூரத்திலிருந்தால் மறந்து விட்டதாக அர்த்தமா?
நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா?"
என்றாள் குந்தவை.
"தேன் மலரை நோக்கி வண்டுகள் தாமே வரும்; அழைப்பு
வேண்டியதில்லை. அழகிய பழையாறைக்கு யாரும் வருவார்கள். இந்த அவலட்சணமான தஞ்சைக்
கோட்டைக்குத் தாங்கள் வந்தது தங்கள் கருணையின் பெருமையல்லவா?"
"அது என்ன
அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா? இங்கே
சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது?." என்றாள் இளையபிராட்டி.
"நானும் அப்படித்தான் கேள்வியுற்றேன், சக்கரவர்த்தியை இங்கே சிறைப்படுத்தி
வைத்திருக்கிறார்கள் என்று. இனிமேல் கவலையில்லை. அவரை விடுவித்துச் செல்லத் தாங்கள்
வந்து விட்டீர்கள் அல்லவா?" என்று நந்தினி கூறிய போது அவளுடைய கண்களில்
மின்வெட்டுத் தோன்றி மறைந்தது.
"அழகாயிருக்கிறது! சுந்தரசோழ
சக்ரவர்த்தியைச் சிறை வைக்க இந்திராதி தேவர்களாலும் முடியாது. சிறிய மனிதர்களால்
எப்படி முடியும்? நான் அதைப்பற்றிச் சொல்லவில்லை. சௌந்தர்ய தேவதையான நந்தினி
தேவியைப் பற்றிச் சொன்னேன்..."
"நன்றாகச் சொல்லுங்கள், தேவி! அவர் காது பட
இதைச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவூர் அரசர்
வைத்திருக்கிறார். தாங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்து..."
"என் சிபாரிசு
என்னத்துக்கு ஆகும்? தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே? காதல் என்னும்
சிறையல்லவா! அதிலும்..." "ஆம், தேவி! அதிலும் கிழவருடைய காதல்
சிறையாயிருந்துவிட்டால் விமோசனமே இல்லை! ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே? அதில்
அடைக்கப்பட்டவர்களாவது வௌிவரக்கூடும்! ஆனால்..."
"ஆமாம்! ராணி! அதிலும்
நாமாகப் போட்டுக்கொண்ட விலங்காயிருந்தால், நாமாகத் தேடிச் சென்ற சிறையாயிருந்தால்
விடுதலை கஷ்டமானதுதான்!... சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள்
விடுதலை தேடவும் மாட்டார்கள்!... அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்?" என்றாள்
குந்தவைப் பிராட்டி.
உண்மையாகவே, கோட்டை வாசலுக்குச் சற்றுத்தூரத்தில்
திரளாக நின்று கொண்டிருந்த பெண்களின் நடுவிலிருந்து அந்தப் பெருங்கூச்சல் எழுந்து
கொண்டிருந்தது. குந்தவையும், நந்தினியும் அவ்விடத்தை நெருங்கிப் போனார்கள். பெண்கள்
பலர் ஏக காலத்தில் கூச்சலிட்டபடியால் முதலில் இன்னதென்று புரியவில்லை. பிறகு
கொஞ்சம் விளங்கியது. இளைய பிராட்டியை அடிக்கடி அரண்மனைக்கு வந்து பார்க்க அவர்கள்
விரும்புவதாகவும், ஆகையால் நவராத்திரி ஒன்பதுநாளும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில்
உள்ள கட்டுக் காவல்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் கோருவதாகத் தெரிந்தது.
"ராணி! தங்கள் கணவரிடமாவது, மைத்துனரிடமாவது சொல்லி, இவர்களுடைய
கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லுங்கள். கேவலம் இந்த ஸ்திரீகளைக் கண்டு பயப்படுவானேன்?
இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும்? பழுவூர் சகோதரர்களின்
ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா?" என்றாள்
குந்தவை.
"அது என்ன, கடற்கரையோடு நிறுத்திவிட்டீர்கள்? கடல் கடந்து
அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம்
கிடைக்கும்!" என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப்
பிளந்தது. 'இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்?' என்று
சிந்தித்தாள். இதற்குள் நந்தினி பெரிய பழுவேட்டரையரைச் சமிக்ஞையால் அருகில் அழைத்து
அப்பெண்களின் கோரிக்கையையும், இளையபிராட்டியின் விருப்பத்தையும் தெரிவித்தாள்.
"இளைய பிராட்டியின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை ஏது?" என்றார்
பழுவேட்டரையர்.பின்னர், ஜனத்திரளின் கோலாகல ஆரவாரத்தினிடையே அவர்கள் கோட்டைக்குள்
பிரவேசித்தார்கள்.
அன்று முதலாவது சில தினங்கள் தஞ்சை நகரும்,
சுற்றுப்புறங்களும் அளவில்லாக் குதூகல ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தன.
குந்தவை தேவி தஞ்சைக்கு வந்த சமயத்தில் நவராத்திரி உற்சவம் சேர்ந்து கொண்டது.
பழுவேட்டரையரும் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். தங்கு தடையில்லாமல் அந்தப் பத்து
நாட்களிலும் ஜனங்கள் கோட்டைக்குள் புகவும் வௌிவரவும் அனுமதித்தார். கோட்டை வாசற்
கதவுகள் சதா காலமும் அகலத் திறந்திருந்தன.கோட்டைக்குள்ளே அரண்மனைகளிலும், வௌியில்
ஊர்ப் புறங்களிலும் பல கோலாகல நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவற்றைக் கண்டுகளிக்கப்
பெருந்திரளாக மக்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டங்களின் நடுவே அடிக்கடி
இரண்டு பூரணசந்திரர்கள் சேர்ந்தாற்போல் உதயமாகிக் கொண்டிருந்தார்கள். அந்தக்
காட்சியைக் கண்டு ஜனசமுத்திரம் பொங்கிப் பூரித்து ஆரவாரித்தது. ஆனால் வௌியில்
இவ்வாறு ஒரே உற்சவ உற்சாகக் குதூகலமாயிருந்தபோது, அந்த இரண்டு பூர்ண சந்திரர்களுடைய
இதயப் பிரதேசங்களிலும் எரிமலைகள் பொங்கி அக்கினிக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தன.
பழுவூர் இளையராணிக்கும், பழையாறை இளையபிராட்டிக்கும் ஓயாமல் போராட்டம் நடந்து
கொண்டிருந்தது. சொல்லம்புகளைக் கொண்டும் விழிகளாகிற வேல்களைக் கொண்டும், அவ்விரு
அழகிகளும் துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் இரு
பக்கமும் கூருள்ள வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோது தீப்பொறிகள் பறந்தன. தீட்டிச்
சாணை பிடித்த ஈட்டிகள் ஒன்றையொன்று தாக்கி ஜுவாலை வீசின.இருண்டவான வௌியில் இரண்டு
மின்னல்கள் ஒன்றையொன்று வெட்ட, இரண்டும் சேர்ந்து துடி துடித்தன. கொடிய அழகு
வாய்ந்த இரண்டு பெண் புலிகள் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கால்நகங்களினால் பிறாண்டி
இரத்தம் கசியச் செய்தன. பயங்கரச் சௌந்தரியம் பொருந்திய இரண்டு நாகசர்ப்பங்கள் படம்
எடுத்து ஆடி அவற்றின் கூரிய மெல்லிய சிவந்த நாக்குகளை நீட்டி ஒன்றையொன்று விழுங்கி
விடப்பார்த்தன.
இந்த அதிசயமான போராட்டத்தில் அவர்கள் உற்சாக வெறியும்
அடைந்தார்கள்; வேதனைப்பட்டு உள்ளம் புழுங்கியும் துடித்தார்கள். நகர மாந்தர்களின்
உற்சாகத்திலும் கலந்து கொள்ளாமல், இந்த இரு சந்திரமதிகளின் போராட்டத்தையும்
புரிந்து கொள்ளாமல், ஒரே ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருந்தது. கொடும்பாளூர் இளவரசி
வானதிக்கு இப்போதெல்லாம் இளைய பிராட்டியுடன் பேசுவதற்கே அவகாசம் கிடைக்கவில்லை.
அக்காளுடன் கூடக் கூடப் போனாளே தவிர வௌியில் நடப்பது ஒன்றிலும் அவள் மனம்
ஈடுபடவில்லை. தனக்குள்ளே ஒரு தனிமை உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதிலேயே
சஞ்சரித்து வந்தாள்.
பக்க
தலைப்பு
பதினைந்தாம் அத்தியாயம் இரவில் ஒரு துயரக்
குரல்
சோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன.
நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள்
பலரைத் தோற்றுவித்தது. அந்த நாளில் வாழ்ந்திருந்த கருவூர்த் தேவர் என்னும் சிவநேசச்
செல்வர் 'இஞ்சி சூழ்' தஞ்சைநகரைப் பற்றிப் பாடல்களில் கூறியிருக்கிறார்.
"மின்னெடும் புருவத்து இளமயிலனையார்
விலங்கல் செய நாடகசாலை
இன்னடம் பயிலும்
இஞ்சி சூழ் தஞ்சை" (இஞ்சி கோட்டை மதில்)
என்று அவருடைய
பாடல்களில் ஒன்று வர்ணிக்கிறது. தஞ்சை நகரில் நாடகக் கலை ஓங்கி
வளர்ந்ததற்கு அறிகுறியாக நாடக சாலைகள் பல இருந்தன. அந்த நாடக
சாலைகளில் எல்லாம் மிகச் சிறந்த நாடக சாலை சக்கரவர்த்தியின்
அரண்மனைக்குள்ளேயே இருந்தது.
புதிய புதிய நாடகங்களைக் கற்பனை செய்து அமைக்கும் கலைஞர்கள் தஞ்சை நகரில்
வாழ்ந்து வந்தனர்.அதற்கு முன்னாலெல்லாம் புராண இதிகாச
காவியங்களில் உள்ள கதைகளையே நாடகங்களாக அமைத்து நடிப்பது
வழக்கம், சில காலமாகத் தஞ்சை நாடகக் கலைஞர்கள் வேறொரு துறையில்
கவனம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தார்கள். சரித்திரப் புகழ்
பெற்ற வீரர்களின் வரலாறுகளை அவர்கள் நாடகமாக அமைத்தார்கள்.
அவர்களுடைய காலத்துக்குச் சிறிது முற்பட்டவர்களின் வீரக்
கதைகளையும் நாடகங்களாக்கி நடித்தார்கள். அப்படிப்பட்ட வீரர்கள்
சோழ வம்சத்தில் பிறந்தவர்களைப் போல் வேறு எங்கே உண்டு?
ஆகையினால், கரிகால் வளவர், விஜயாலய சோழர், பராந்தக தேவர்
முதலிய சோழ வம்சத்து மன்னர்களின் சரித்திரங்களை நாடகங்களாக்கி
நடித்தார்கள்.
நவராத்திரித் திருநாளில்
சக்கரவர்த்தியின் அரண்மனையில் சோழ வம்சத்து மன்னர்களின் வீர
சரித்திர நாடகம் மூன்று நாட்கள் நடைபெற்றன. சித்திர
விசித்திரமாக அமைந்த நாடக சாலைக்கு எதிரே அரண்மனை
நிலாமுற்றத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்து
நாடகங்களைக் கண்டுகளித்தார்கள். அரண்மனைப் பெண்டிர் அமர்வதற்கு
ஒரு தனியான இடம், நீலப்பட்டு விதானத்தின் கீழ் முத்திழைத்த
சித்திரத் தூண்களுடன் ஏற்பாடாகி இருந்தது.அதன் கீழ்
மகாராணிகளும், இளவரசிகளும், அவர்களுடைய அந்தரங்கத்
தோழிமார்களும் அமர்ந்து நாடகம் பார்த்தார்கள். அப்போதெல்லாம்
குந்தவை தேவிக்கு அருகாமையிலேயே நந்தினி வந்து உட்கார்ந்தாள்.
இது மற்றப் பெண்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும்
அதை அவர்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு பொருமினார்களேயன்றி
வேறெதுவும் செய்ய முடியவில்லை. பெரிய பழுவேட்டரையர் பழுவூர்
இளையராணி இவர்களுடைய கோபத்துக்குப் பாத்திரமாக யாருக்குத்தான்
துணிவு இருக்கும்? இளைய பிராட்டியே அந்தக் கர்வக்காரிக்கு
அவ்வளவு மதிப்பளித்து மரியாதை செய்யும்போது மற்றவர்கள்
எம்மாத்திரம்?
சோழ வம்ச மன்னர்களைப் பற்றிய மூன்று
நாடகங்களில் மூன்றாவதான பராந்தக தேவர் நாடகம் மிகச் சிறந்து
விளங்கியது. அன்றைக்குத்தான் நாடகம் பார்த்த ஜனங்களின்
மத்தியில் ஒரு சலசலப்புத் தோன்றி வளர்ந்தது.அதுவரை சோழ நாட்டை
அரசு புரிந்த சோழ மன்னர் பரம்பரையில் சுந்தர சோழரின்
பாட்டனாரான கோப் பரகேசரி பராந்தகர் வீரப்புகழில் சிறந்து
விளங்கினார். சுமார் நாற்பத்தாறு ஆண்டுகள் இவர் ஆட்சி
நடத்தினார். அவருடைய காலதில் சோழ சாம்ராஜ்யம் விரிந்து
பரவியது. ஈழ நாட்டிலிருந்து துங்கபத்திரை நதி வரையில் அவருடைய
ஆணை சென்றது. பல போர்கள் நடந்தன; மகத்தான வெற்றி
கிடைத்தது.'மதுரையும் ஈழமுங்கொண்ட கோப் பரகேசரி வர்மர்' என்ற
பட்டம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்துக்குப்
பொன் வேய்ந்து புகழ் பெற்றார். இவருடைய வாழ்க்கையின் இறுதியில்
சில தோல்விகள் ஏற்பட்டு இராஜ்யம் சுருங்கியது. ஆனால் இவருடைய
வீரப்புகழ் மட்டும் குன்றவில்லை. வடக்கே இரட்டை
மண்டலத்திலிருந்து கடல் போன்ற மாபெரும் சைன்யத்துடன்
படையெடுத்து வந்த கன்னரதேவன் என்னும் அரசனுடன் தக்கோலத்தில்
இறுதிப் பெரும்போர் நடந்தது. இப்போரில் பராந்தகருடைய மூத்த
புதல்வராகிய இராஜாதித்தர், இந்தப் பரத கண்டம் என்றும் கண்டிராத
வீராதி வீரர், படைத்தலைமை வகித்தார். கன்னர தேவனுடைய சைன்யத்தை
முறியடித்துவிட்டு, யானை மீதிருந்தபடி உயிர் துறந்து வீர
சொர்க்கம் எய்தினார். அந்த வீரருடைய அம்பு பாய்ந்த சடலத்தை
அப்படியே ஊருக்கு எடுத்து வந்தார்கள். அரண்மனையில் கொண்டு
சேர்த்தார்கள். பராந்தக சக்கரவர்த்தியும் அவருடைய
தேவிமார்களும் நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர் துறந்த வீரப்
பெருமகனின் உடலைத் தங்கள் மத்தியில் போட்டுக்கொண்டு கண்ணீர்
பெருக்கினார்கள். திரைக்குப் பின்னாலிருந்து அசரீரி வாக்கு
"வருந்தற்க! வருந்தற்க! இளவரசர் இராஜாதித்தர் இறக்கவில்லை; சோழ
நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கோயில் கொண்டு
விளங்குகிறார்!" என்று முழங்கிற்று. இந்த இறுதிக் காட்சியுடன்
நாடகம் முடிவடைந்தது.
அந்தத் தலைமுறைக்கு முந்திய
தலைமுறையில் நடந்த வீர சம்பவங்கள் நிறைந்த இந்த நாடகத்தை
ஜனங்கள் பிரமாதமாக ரசித்து மகிழ்ந்தார்கள். சபையோருக்குள்ளே
சலசலப்பு ஏற்பட்டதன் காரணம் என்னவென்றால், பராந்தக தேவரது
காலத்தில் நடந்த பெரும் போர்களில் அவருக்கு இரண்டு
சிற்றரசர்கள் அருந்துணையாக இருந்தார்கள். ஒருவர் கொடும்பாளூர்
சிற்றரசர்; இன்னொருவர் பழுவூர்க் குறுநில மன்னர். இந்த
இருவரும் சோழ வம்சத்தாருடன் உறவுத் தளையினால்
பிணைக்கப்பட்டவர்கள்.பெண் கொடுத்துப் பெண் வாங்கியவர்கள்.
இருவரும் இரண்டு கரங்களைப் போல் பராந்தகருக்கு உதவி
வந்தார்கள். யார் வலக்கை, யார் இடக்கை என்று சொல்ல
முடியாமலிருந்தது. இருவரையும் தம் இரண்டு கண்களைப் போல்
பராந்தக சோழர் ஆதரித்துச் சன்மானித்து வந்தார். இரண்டு
கண்களில் எது உயர்வு, எது தாழ்வு என்று சொல்ல முடியாதுதானே?
இப்போது அதிகாரம் செலுத்தி வந்த பழுவேட்டரையர்களின் பெரிய
தந்தை பராந்தகருக்கு உதவி செய்தவர். அவர் பெயர் பழுவேட்டரையர்
கண்டன் அமுதனார். ஈழத்தில் உயிர் துறந்த கொடும்பாளூர்ச் சிறிய
வேளாளரின் தந்தைதான் (அதாவது வானதியின் பாட்டனார்) பராந்தக
தேவருக்குத் துணை புரிந்த கொடும்பாளூர் சிற்றரசர்.
பராந்தக தேவரின் நாடகம் நடத்தியவர்கள் மேற்கூறிய இரண்டு
சிற்றரசர்களுக்குள்ளே எவ்வித உயர்வு தாழ்வும் வேற்றுமையும்
கற்பியாமல் மிக ஜாக்கிரதையாகவே ஒத்திகை செய்திருந்தார்கள்.
இருவருடைய வீரப் புகழும் நன்கு வௌியாகும்படி நடித்தார்கள்.
பராந்தக தேவர் அந்த இரு வீரர்களையும் சமமாகச் சன்மானித்ததைக்
குறிப்பாக எடுத்துக் காட்டினார்கள். ஆனபோதிலும் நாடகம் பார்த்த
சபையோர் அத்தகைய சமபாவத்தைக் கொள்ளவில்லையென்பது
சீக்கிரத்திலேயே வௌியாயிற்று. அவர்களில் சில கொடும்பாளூர்க்
கட்சி என்றும், வேறு சிலர் பழுவூர் கட்சி என்றும் தெரிய
வந்தது. கொடும்பாளூர் தலைவன் வீரச் செயல் புரிந்ததை நாடக
மேடையில் காட்டியபோது சபையில் ஒரு பகுதியார் ஆரவாரம்
செய்தார்கள். பழுவூர் வீரன் மேடைக்கு வந்ததும் இன்னும் சிலர்
ஆரவாரித்தார்கள். முதலில் இந்தப் போட்டி சிறிய அளவில்
இருந்தது;வரவரப் பெரிதாகி வளர்ந்தது. நாடகத்தின் நடுநடுவே
"நாவலோ நாவல்!" (இந்த நாளில் உற்சாகத்தையும் ஆதரவையும்
காட்டுவத்கு ஜனங்கள் ஜயகோஷம் செய்வதுபோல் அக்காலத்தில் "நாவலோ
நாவல்!" என்று சப்தமிடுவது வழக்கம்.) என்னும் சபையோரின் கோஷம்
எழுந்து நாலு திசைகளிலும் எதிரொலியைக் கிளப்பியது.
சபையில் எழுந்த இந்தப் போட்டி கோஷங்கள் குந்தவை தேவிக்கு
உற்சாகத்தை அளித்தன. கொடும்பாளூர்க் கட்சியின் கோஷம்
வலுக்கும்போது பக்கத்திலிருந்த கொடும்பாளூர் இளவரசியைத்
தூண்டி, "பார்த்தாயா, வானதி! உன் கட்சி இப்போது வலுத்து
விட்டது!" என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத்
தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின்
கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, "ராணி!
இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது!" என்பாள்.
ஆனால்
இது நந்தினிக்கு உற்சாக மூட்டவில்லை என்பதை அவள் முகக்குறி
புலப்படுத்தியது. இந்த மாதிரி ஒரு போட்டி ஏற்பட்டதும், அதிலே
ஜனங்கள் பகிரங்கமாக ஈடுபட்டுக் கோஷமிடுவதும், இளைய பிராட்டி
அதை மேலும் தூண்டி விட்டு வருவதும், அந்த அற்பச் சிறுமி
வானதியையும், தன்னையும் ஒரு நிறையில் சமமாக வைத்துப்
பரிகசிப்பதும் நந்தினியின் உள்ளக் கனலைப் பன்மடங்கு வளர்த்து
வந்தது. கோபித்துக்கொண்டு எழுந்து போய் விடலாமா என்று பல தடவை
தோன்றியது. அப்படிச் செய்தால் அந்தப் போட்டியைப்
பிரமாதப்படுத்தித் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதாகும் என்று
எண்ணிப் பழுவூர் ராணி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் குந்தவை கவனித்து வந்தாள். நந்தினியின்
மனோநிலையைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் அவளுடைய முகத்
தோற்றத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தாள். ஆனால் வேறொரு
விஷயம் இளைய பிராட்டிக்குத் தெரியாத மர்மமாயிருந்தது. போரில்
பாண்டிய மன்னன் தோல்வியடைந்தது, அவன் இலங்கை மன்னனிடம் சென்று
சரணாகதி அடைந்தது, இலங்கை மன்னனிடம் உதவி பெறாமல்
மணிமகுடத்தையும், இரத்தின ஆரத்தையும் அங்கேயே விட்டுவிட்டுச்
சேர நாட்டுக்கு ஓடியது முதலியவற்றை நாடகத்தில் காட்டிய போது
சபையோர் அனைவருமே அளவிலா உற்சாகத்தைக் காட்டினார்கள். ஆனால்
நந்தினியின் முகம் மட்டும் அப்போதெல்லாம் மிக்க மன வேதனையைப்
பிரதிபலித்தது. இதன் காரணம் என்னவென்பது பற்றி இளைய பிராட்டி
வியப்புற்றாள்.
கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கலாம் என்று எண்ணி, "சக்கரவர்த்தியும்
நம்முடன் இருந்து இந்த அருமையான நாடகத்தைப் பார்க்க முடியாமற்
போயிற்றே? பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம்
காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா? அப்பாவுக்கு மட்டும்
உடம்பு குணமானால்?..." என்றாள்.
"தானே உடம்பு குணமாகி
விடுகிறது. அவருடைய செல்வப் புதல்வியும் இங்கு வந்து
விட்டீர்கள். இலங்கையிலிருந்து மூலிகையும் சீக்கிரம்
வந்துவிட்டால் சக்கரவர்த்திக்கு நிச்சயம் உடம்பு
குணமாகிவிடும்" என்றாள் நந்தினி.
"இலங்கையிலிருந்து
மூலிகை வருகிறதா? அது என்ன?" என்றாள் குந்தவை.
"தெரியாதவரைப் போல் கேட்கிறீர்களே! இலங்கையிலிருந்து மூலிகை
கொண்டு வர பழையாறை வைத்தியர் ஆள் அனுப்பியிருக்கிறாராமே?
தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே?
அது பொய்யா?"
குந்தவைப் பல்லினால் உதட்டைக் கடித்துக் கொண்டாள். பார்ப்பதற்கு முல்லை
மொக்கைப் போல் பல் வரிசை அழகாயிருந்தாலும் கடிக்கப்பட்ட
உதடுகளுக்கு வலிக்கத்தான் செய்தது.
நல்லவேளையாக "நாவலோ
நாவல்!" என்னும் பெருங்கோஷம் அச்சமயம் எழுந்தபடியால் அந்தப்
பேச்சு அத்துடன் தடைப்பட்டது.
* * *
சுந்தர
சோழரின் வண்மையும் வனப்பும், ஆயுளும் அரசும் வாழ்கென
வாழ்த்திவிட்டு நாடகம் முடிவடைந்தது. சபையோர் கலைந்து குதூகல
ஆனந்தத்தினால் ஆடிக்கொண்டு தத்தம் வீடு சென்றார்கள்.
சிற்றரசர்களின் தேவிமார்களும், அவர்களுடைய பரிவாரங்களும்
சென்றார்கள். பின்னர், சக்கரவர்த்தினி வானமா தேவியும்,
மற்றுமுள்ள அரண்மனைப் பெண்டிரும் சோழர்குல தெய்வமான
துர்க்கையம்மன் ஆலயத்துக்குப் புறப்பட்டார்கள். சுந்தரசோழர்
உடல் நலம் எய்தும்படி மலையமானின் புதல்வி பல நோன்புகள் நோற்று
வந்தார்.துர்க்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று அவர்
பிரார்த்தனை செலுத்துவது உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்
ராத்திரியும் துர்க்கையம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன.
சக்கரவர்த்தியின் சுகத்தைக் கோரிப் பலிகள் இடப்பட்டன. ஒவ்வொரு
நாள் இரவும் மகாராணி கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம பூஜைக்குப்
பிறகு திரும்புவது வழக்கம். அரண்மனையின் மூத்த பெண்டிர் பலரும்
மகாராணியுடன் ஆலயத்துக்குச் செல்வார்கள்.
இளம்
பெண்களைத் துர்க்கை சந்நிதிக்கு அழைத்துப் போகும் வழக்கமில்லை.
பூசாரிகள் மீது சிலசமயம் சந்நதம் வந்து அகோரமாக ஆடுவார்கள்.
சாபம் விளைந்த வரலாறுகளைச் சொல்லுவார்கள்.இளம் பெண்கள்
பயப்படக் கூடும் என்று அழைத்துப் போவதில்லை.ஆனால் இளைய
பிராட்டியிடம் "நீ பயந்து கொள்வாய்!" என்று சொல்லி நிறுத்த
யாருக்குத் தைரியம் உண்டு? அந்த ஒன்பது தினமும் தாய்மார்களுடன்
குந்தவையும் துர்க்கை கோயிலுக்குச் சென்று அம்மனுக்குப்
பிரார்த்தனை செலுத்தி வந்தாள். இச்சமயங்களில் வானதி தனியாக
அரண்மனையில் இருக்க வேண்டி நேர்ந்தது.
பராந்தகத் தேவர்
நாடகம் நடந்த அன்று இரவு வானதியின் உள்ளம் உற்சாகத்தினால்
பூரித்திருந்தது. தன் குலத்து முன்னோர்கள் செய்த வீரச்
செயல்களை அரங்க மேடையில் பார்த்து அவளுக்குப் பெருமிதம்
உண்டாகியிருந்தது. அத்துடன் இலங்கை நினைவும் சேர்ந்து கொண்டது.
ஈழப் போரில் இறந்த தன் தந்தையின் நினைவும், தந்தையின்
மரணத்துக்குப் பழிவாங்கி வரச்சென்றிருக்கும் இளவரசரின்
நினைவும் இடைவிடாமல் எழுந்தன. தூக்கம் சிறிதும் வரவில்லை.
கண்ணிமைகள் மூடிக்கொள்ள மறுத்தன. இளையபிராட்டி ஆலயத்திலிருந்து
திரும்பி வந்து அன்றைய நாடகத்தைப் பற்றி அவருடன் சிறிது நேரம்
பேசிக் கொண்டிருந்தால் பிறகு தூக்கம் வரலாம்; அதற்கு முன்
நிச்சயமாக இல்லை.
வெறுமனே படுத்துப்
புரண்டுகொண்டிருப்பதைக் காட்டிலும் அரண்மனை மேன்மாடத்தில்
சற்று உலாவி வரலாமே என்று தோன்றியது. மேன்மாடத்திலிருந்து
பார்த்தால் தஞ்சை நகரின் காட்சி முழுவதும் தெரியும். துர்க்கை
ஆலயத்தைக்கூடப் பார்த்தாலும் பார்க்கலாம் - இவ்விதம் எண்ணிப்
படுக்கையை விட்டு எழுந்து சென்றாள். அந்த அரண்மனைக்கு வானதி
புதியவள்தான். ஆயினும் மேன்மாட நிலா முற்றத்தைக்
கண்டுபிடிப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிராது. நீள நெடுகப்
பாதைகளும், இருபுறமும் தூண்களும், தூங்கா விளக்குகளும்
இருக்கும் போது என்ன கஷ்டம்?
பாதைகள் சுற்றிச்
சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப்
பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து
மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள்
படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை
எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று
கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை
போலத் தோன்றியது.
திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது
தீனமான துயரக் குரலாகத் தொனித்தது.வானதிக்கு ரோமாஞ்சனம்
உண்டாயிற்று. உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற
இடத்திலேயே நின்றன.
மறுபடியும் அந்த அபயக் குரல்:
"என்னைக் காப்பாற்றுவார்
யாருமில்லையா?"
ஆகா! இது சக்கரவர்த்தியின் குரல் போல்
அல்லவா இருக்கிறது! என்ன பத்தோ தெரியவில்லையே! உடல் நோயின்
கோளாறா? அல்லது வேறு ஏதாவது இருக்குமோ? சக்கரவர்த்தினி முதலிய
மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே?
சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள்?
ஆயினும் போய்ப் பார்க்கலாம்.
நடுங்கிய கால்களை மெதுவாக
எடுத்து வைத்து வானதி மேலும் சில அடி நடந்தாள். குரல்
கீழேயிருந்து வருவதாகத் தோன்றியது. அந்த இடத்தில் பாதையும்
முடிந்தது. குனிந்து பார்த்தால் கீழே ஒரு விசாலமான மண்டபம்
தெரிந்தது. ஆகா! சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது?
ஆம்; அதோ சக்கரவர்த்திதான் படுத்திருக்கிறார்; தன்னந்தனியாகப்
படுத்திருக்கிறார். மேலும் ஏதோ அவர் புலம்புகிறார்; என்னவென்று
கேட்கலாம்.
"அடி பாவி! உண்மைதானடி! நான் உன்னைக்
கொன்று விட்டது உண்மைதான்! வேண்டுமென்று கொல்லவில்லை,ஆனாலும்
உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச்
சொல்கிறாய்? வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும்
என்னைவிடாமல் சுற்றுகிறாயே? உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே
கிடையாதா? எனக்கும் அமைதி தரமாட்டாயா? என்ன பிராயச்சித்தம்
செய்ய வேண்டுமோ சொல்! அதன்படி செய்து
விடுகிறேன்.என்னைவிட்டுவிடு!... ஐயோ! என்னை இவளுடைய
கொடுமையிலிருந்து விடுவிப்பார் யாருமில்லையா? எல்லோரும் என்
உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே! என் மன நோயை தீர்த்துக்
காப்பாற்றுவார் யாரும் இல்லையா!... போ! போ! போய்விடு! இல்லை,
போகாதே! நில்! நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டுப் போ!
இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே! வாயைத் திறந்து ஏதாவது
சொல்லிவிட்டுப் போ!"
இந்த வார்த்தைகள் வானதியின்
காதில் இரும்பைக் காய்ச்சி விடுவதுபோல் விழுந்தன. அவளுடைய
உச்சந்தலை முதலாவது உள்ளங்கால் வரையில் குலுங்கியது.
தன்னையறியாமல் கீழே குனிந்து பார்த்தாள். மண்டபத்தில்
நாலாபுறமும் அவளுடைய பார்வை சென்ற வரையில் பார்த்தாள்.
சக்கரவர்த்திக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் ஓர் உருவம் நின்று
கொண்டிருந்தது. அது பெண்ணின் உருவம் பாதி உருவந்தான்
தெரிந்தது. பாக்கிப் பாதி தூண் நிழலிலும் அகில் புகையிலும்
மறைந்திருந்தது. தெரிந்த வரையில் அந்த உருவம்... ஆ! பழுவூர்
இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது? இது என்ன கனவா! சித்த
பிரமையா? இல்லை ! உண்மையே தான்! அதோ அந்தத் தூண் மறைவில்
ஒளிந்து நிற்பது யார்? பெரிய பழுவேட்டரையர் அல்லவா?
சந்தேகமில்லை! அவர்கள்தான்! பழுவூர் இளையராணியைப்
பார்த்துவிட்டா சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பேசுகிறார்?
"உன்னைக் கொன்றது உண்மைதான்" என்று, அலறினாரே, அதன் பொருள்
என்ன?
திடீரென்று வானதிக்கு மயக்கம் வரும்
போலிருந்தது, தலை சுற்றத் தொடங்கியது. இல்லை, அந்த அரண்மனையே
சுற்றத் தொடங்கியது. சீச்சீ! இங்கே மயக்கமடைந்து விடக்கூடாது.
கூடவே கூடாது. பல்லைக்கடித்துக் கொண்டு வானதி அங்கிருந்து
சென்றாள்.ஆனால் திரும்பச் செல்லும் பாதை தொலையாத
பாதையாயிருந்தது. அவள் படுத்திருந்த அறை வரவே வராதுபோல்
தோன்றியது. முடியாது இனிமேல் நடக்கமுடியாது; நிற்கவும்
முடியாது. குந்தவைப் பிராட்டி கோயிலிருந்து திரும்பி வந்த போது
வானதி அவள் அறைக்குச் சற்றுத் தூரத்தில் நடை பாதையில்
உணர்வற்றுக் கட்டைபோல் கிடப்பதைக் கண்டாள்.
பக்க
தலைப்பு
பதினாறாம் அத்தியாயம் சுந்தர சோழரின்
பிரமை
மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச்
செய்தார். ஏவலாளர் தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும் படி
கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத்
தடவிக் கொடுத்தார்.
அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல்
தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள். "அப்பா! என்பேரில் கோபமா?"
என்று கேட்டாள்.
சுந்தர சோழரின் கண்களில் கண்ணீர் துளித்தது. "உன் பேரில்
எதற்கு அம்மா, கோபம்?" என்றார்.
"தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு
வந்ததற்காகத் தான்!"
"ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது;
இந்தத் தஞ்சாவூர் அரண்மனை இளம் பெண்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல. இது நேற்று இராத்திரி
நடந்த சம்பவத்திலிருந்து உனக்கே தெரிந்திருக்கும்."
"எந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள், அப்பா?"
"அந்தக்
கொடும்பாளூர்ப் பெண் மூர்ச்சையடைந்ததைப் பற்றித்தான் சொல்லுகிறேன் அந்தப்
பெண்ணுக்கு இப்போது உடம்பு எப்படியிருக்கிறது?"
"அவளுக்கு இன்றைக்கு
ஒன்றுமேயில்லை, அப்பா! பழையாறையிலும் அடிக்கடி இவள் இப்படிப் பிரக்ஞை இழப்பது
உண்டு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியாகப் போய்விடும்."
"அவளைக் கேட்டாயா,
அம்மா? இராத்திரி இந்த அரண்மனையில் அவள் ஏதேனும் கண்டதாகவோ, கேட்டதாகவோ
சொல்லவில்லையா?"
குந்தவை சற்று யோசித்துவிட்டு, "ஆம், அப்பா! நாங்கள்
எல்லோரும் துர்க்கை ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவள் தனியாக மேல்மாடத்துக்குப்
போகப் பார்த்தாளாம். அப்போது யாரோ பரிதாபமாகப் புலம்புவது போலக் கேட்டதாம். அது
அவளுக்குப் பயத்தை உண்டாக்கியதாகச் சொன்னாள்" என்றாள்.
"அப்படித்தான்
நானும் நினைத்தேன். இப்போதேனும் அறிந்தாயா, குழந்தாய் ? இந்த அரண்மனையில் பேய்
உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள்!" என்று சுந்தர சோழர்
கூறியபோது அவர் உடல் நடுங்குவதையும், அவருடைய கண்கள் வெறித்தபடி எங்கேயோ
பார்ப்பதையும் குந்தவை கவனித்தாள்.
"அப்பா! அப்படியானால் தாங்கள்மட்டும்
இங்கே எதற்காக இருக்க வேண்டும்? அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும்? எல்லோரும்
பழையாறைக்கே போய் விடலாமே! இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாயிருப்பதாகவும்
தெரியவில்லையே?" என்றாள்.
சக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து,
"என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது? அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது",
என்றார்.
"அப்படி ஏன் நிராசை அடையவேண்டும்? அப்பா! பழையாறை வைத்தியர்
தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்."
"அவர் சொல்வதை
நம்பி நீயும் இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர ஆள் அனுப்பியிருக்கிறாயாம்! நான்
கேள்விப் பட்டேன். மகளே! என் பேரில் உனக்குள்ள பாசத்தை அது காட்டுகிறது."
"தந்தையிடம் மகள் பாசம் கொண்டிருப்பது தவறா, அப்பா?"
"அதில் தவறு
ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட வாஞ்சையுள்ள புதல்வியைப் பெற்றேனே, அது என் பாக்கியம்.
இலங்கையிலிருந்து மூலிகை கொண்டுவர நீ ஆள் அனுப்பியதிலும் தவறில்லை. ஆனால்
இலங்கையிலிருந்து மூலிகை வந்தாலும் சரி, சாவகத் தீவிலிருந்து வந்தாலும் சரி,
தேவலோகத்திலிருந்து அமுதமே வந்தாலும் சரி, எனக்கு உடம்பு இந்த ஜன்மத்தில் குணமாகப்
போவதில்லை..."
"ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்!" என்றாள் இளவரசி.
"என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா! அதற்காக உண்மையில்
மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட
வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது.
சொல்கிறேன், கேள்! உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும்.
என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது?"
"தந்தையே,
மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க
முடியும்?"
"கவிகளுடைய அதிசயோக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய்,
குழந்தாய்! நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும்
ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே
என்னால் சுமக்க முடியவில்லை..."
"தாங்கள் ஏன் சுமக்க வேண்டும், அப்பா!
இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா? மணி மணியாக இரண்டு
புதல்வர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சிங்கக் குட்டிகள்; வீராதி
வீரர்கள். எப்படிப்பட்ட பாரத்தையும் தாங்கக் கூடியவர்கள்..."
"மகளே! அதை
நினைத்தால்தான் எனக்கு நெஞ்சு பகீர் என்கிறது. உன் சகோதரர்கள் இருவரும் இணையில்லா
வீரர்கள்தான். உன்னைப் போலவே அவர்களையும் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தேன்.
அவர்களுக்கு இந்த இராஜ்யத்தைக் கொடுத்தால் நன்மை செய்கிறவனாவேனா என்று
சந்தேகப்படுகிறேன். இராஜ்யத்துடன் பெரியதொரு சாபக்கேட்டையும் அவர்களிடம்
ஒப்புவித்து விட்டுப் போவது நல்லதென்று சொல்வாயா?"
"அப்படி என்ன சாபக்கேடு
இருக்க முடியும், இந்த ராஜ்யத்திற்கு? புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும்,
கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள்.
'கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில்
தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில்
வீற்றிருந்தார்.காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த
சோழரும், சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த
ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக்கண்டு, அன்பும் சிவமும் தாமாகவே
வீற்றிருந்த கண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது.இப்படிப்பட்ட
ராஜ்யத்திற்குச் சாபக்கேடு என்ன இருக்க முடியும்? அப்பா! தாங்கள் ஏதோ மனப்
பிரமையில் இருக்கிறீர்கள்! இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையை விட்டுத் தாங்கள்
புறப்பட்டு வந்தால்..."
"நான் இவ்விடம் விட்டுப் புறப்பட்டால் அடுத்த கணம்
என்ன ஆகும் என்று உனக்குத் தெரியாது! அழகிய பழையாறையை விட்டு இந்தத் தஞ்சைக்
கோட்டையாகிய சிறையில் நான் சந்தோஷத்துக்காக இருக்கிறேன் என்று கருதுகிறாயா?
குந்தவை, நான் இங்கே இருப்பதனால் இந்தப் பழம்பெரும் சோழ ராஜ்யம் சின்னாபின்னமாகாமல்
காப்பாற்றி வருகிறேன். நேற்றிரவு நாடகம் ஆடிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்பதை
யோசித்துப் பார்! நிலா மாடத்தின் முகப்பிலிருந்து நான் எல்லாவற்றையும் கவனித்துக்
கொண்டிருந்தேன். நாடகத்தை நடுவில் நிறுத்தி விடலாமா என்று கூடத் தோன்றியது..."
"தந்தையே! இது என்ன? நாடகம் மிக நன்றாக இருந்ததே! சோழ குலப் பெருமையை எண்ணி
என் உள்ளம் பூரித்ததே! எதற்காக நிறுத்த விரும்பினீர்கள்? நாடகத்தில் எந்தப் பகுதி
தங்களுக்குப் பிடிக்காமலிருந்தது?"
"நாடகம் நன்றாகத்தானிருந்தது, மகளே!
அதில் ஒரு குற்றமும் நான் காணவில்லை. நாடகம் பார்த்தவர்களின் நடத்தையைப் பற்றியே
சொல்கிறேன். கொடும்பாளூர்க் கட்சியும், பழுவேட்டரையர் கட்சியும் எழுப்பிய போட்டி
கோஷங்களை நீ கவனிக்கவில்லையா?"
"கவனித்தேன், அப்பா!"
"நான் ஒருவன்
இங்கு இருக்கும்போதே இவர்கள் இப்படி நடந்து கொள்ளுகிறார்களே! நான் இல்லாவிட்டால்
என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்! நான் தஞ்சாவூரை விட்டுக் கிளம்பிய தட்சணமே இரு
கட்சியாருக்குள்ளும் சண்டை மூளும் கிருஷ்ண பரமாத்மாவின் சந்ததிகள் ஒருவரை ஒருவர்
தாக்கிக்கொண்டு அழிந்ததுபோல், இவர்களும் அழியும்போது இந்த மகாசாம்ராஜ்யமும் அழிந்து
விடும்..."
"அப்பா! தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் சர்வாதிகாரச்
சக்கரவர்த்தி. பழுவேட்டரையர்களும் சரி, கொடும்பாளூர் வேளிரும் சரி, தங்கள் காலால்
இட்டதைத் தலையால் செய்யக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் அத்துமீறி நடந்தால் அவர்களுடைய
அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். தாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?"
"மகளே! சென்ற நூறு வருஷமாக இந்த இரு குலத்தோரும் சோழ சாம்ராஜ்யத்துக்கு
இணையில்லா ஊழியம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உதவியின்றிச் சோழ ராஜ்யம்
இப்படிப் பல்கிப் பெருகியிருக்க முடியுமா? அவர்கள் அழிந்தால் இராஜ்யத்துக்கும் அது
பலவீனந்தானே?"
"அப்பா! அந்த இரு கட்சியில் ஒரு கட்சிக்காரர்கள் தங்களுக்கு
விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் என்று தெரிந்தால்.."
சுந்தர சோழர்
குந்தவையை வியப்போடு உற்றுப்பார்த்து, "என்ன மகளே, சொல்கிறாய்? எனக்கு விரோதமான
சதியா? யார் செய்கிறார்கள்?" என்று கேட்டார்.
"அப்பா! தங்களுடைய உண்மையான
ஊழியர்களாக நடித்து வருகிறவர்கள் சிலர், தங்களுக்கு எதிராக இரகசியச் சதி
செய்கிறார்கள். தங்களுடைய புதல்வர்களுக்குப் பட்டமில்லாமல் செய்துவிட்டு
வேறொருவருக்குப் பட்டம் கட்டச் சதி செய்து வருகிறார்கள்..."
"யாருக்கு?
யாருக்கு மகளே? உன் சகோதரர்களுக்குப் பட்டம் இல்லையென்று செய்துவிட்டு வேறு
யாருக்குப் பட்டம் கட்டப் பார்க்கிறார்கள்?" என்று சுந்தர சோழ சக்கரவர்த்தி
பரபரப்புடன் கேட்டார்.
குந்தவை மெல்லிய குரலில், "சித்தப்பா
மதுராந்தகனுக்கு, அப்பா! நீங்கள் நோய்ப்படுக்கையில் படுத்திருக்கையில் இவர்கள்
இப்படிப் பயங்கரமான துரோகத்தைச் செய்கிறார்கள்..." என்றாள்.
உடனே சுந்தர
சோழர் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து, "ஆகா அவர்களுடைய முயற்சி மட்டும் பலித்தால்
எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றார்.
குந்தவைக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"தந்தையே! இது என்ன, தாங்கள் பெற்ற புதல்வர்களுக்குத் தாங்களே சத்துரு ஆவீர்களா?"
என்றாள்.
"இல்லை; என் புதல்வர்களுக்கு நான் சத்துரு இல்லை. அவர்களுக்கு
நன்மை செய்யவே விரும்புகிறேன். இந்தச் சாபக்கேடு உள்ள ராஜ்யம் அவர்களுக்கு
வேண்டியதில்லை. மதுராந்தகன் மட்டும் சம்மதித்தால்.."
"சித்தப்பா
சம்மதிப்பதற்கு என்ன? திவ்யமாகச் சம்மதிக்கிறார். நாளைக்கே பட்டங் கட்டிக்கொள்ளச்
சித்தமாயிருக்கிறார். அம்மாதிரி தாங்கள் செய்யப் போகிறீர்களா? என் தமையனின் சம்மதம்
கேட்க வேண்டாமா?..."
"ஆம்; ஆதித்த கரிகாலனைக் கேட்க வேண்டியதுதான். அவனைக்
கேட்டால் மட்டும் போதாது. உன் பெரிய பாட்டி சம்மதிக்க வேண்டும்.."
"பிள்ளைக்குப் பட்டம் கட்டினால் தாயார் வேண்டாம் என்று சொல்வாளா?"
"ஏன் சொல்ல மாட்டாள்? உன் பெரிய பாட்டியுடன் இத்தனை நாள் பழகியும் அவரை நீ
அறிந்து கொள்ளவில்லையா? செம்பியன் மாதேவியின் வற்புறுத்தலினாலேயே நான் அன்று
சிம்மாசனம் ஏறினேன். ஆதித்தனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினேன். குந்தவை! உன்
பெரியபாட்டிக்கு உன்பேரில் மிக்க அன்பு உண்டு. நீ அவரிடம் நயமாகச் சொல்லி
மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்குச் சம்மதம் வாங்கி விடு!..."
குந்தவை
திகைத்துப் போய்ப் பேசாமலிருந்தாள். "பிறகு காஞ்சிக்குப் போ! அங்கே உன் அண்ணன்
ஆதித்த கரிகாலனிடம் சொல்லி, 'இந்தச் சாபக்கேடு வாய்ந்த இராஜ்யம் எனக்கு வேண்டாம்'
என்று சொல்லும்படி செய்துவிடு. மதுராந்தகனுக்கே பட்டம் கட்டிவிடுவோம். பிறகு நாம்
எல்லாரும் சாபம் நீங்கி நிம்மதியாக இருக்கலாம்" என்றார் சக்கரவர்த்தி.
"அப்பா! அடிக்கடி சாபம் என்கிறீர்களே? எந்தச் சாபத்தைச் சொல்கிறீர்கள்?"
என்று குந்தவை கேட்டாள்.
"மகளே! பூர்வ ஜன்மம் என்று சொல்லுகிறார்களே அதை ீ
நம்புகிறாயா? பூர்வஜன்மத்தின் நினைவுகள் இந்த ஜன்மத்தில் சில சமயம் வரும்
என்கிறார்களே, அதில் உனக்கு நம்பிக்கை உண்டா?"
"தந்தையே! அவையெல்லாம் பெரிய
விஷயங்கள். எனக்கென்ன தெரியும், அந்த விஷயங்களைப் பற்றி?"
"மகாவிஷ்ணுவின்
பத்து அவதாரங்களைப் பற்றிச் சொல்கிறார்களே! புத்தபகவான் கடைசி அவதாரத்திற்கு
முன்னால் பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்களே? அந்த அவதாரங்களைப் பற்றிய பல
அழகான கதைகள் சொல்கிறார்களே?"
"கேட்டிருக்கிறேன், அப்பா!"
"கடவுளுக்கும் அவதார புருஷர்களுக்கும் அப்படியென்றால் சாதாரண மனிதர்களுக்கு
மட்டும் முற்பிறவிகள் இல்லாமலிருக்குமா?"
"இருக்கலாம் அப்பா!"
"சில
சமயம் எனக்குப் பூர்வஜன்ம நினைவுகள் வருகின்றன மகளே! அவற்றைக் குறித்து இதுவரையில்
யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும்
மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச்
சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்துவந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று
மாந்திரீகர்களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்..."
"ஆம்; தந்தையே! இப்போதே
சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது;
மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்..."
"பார்த்தாயா? நீ
அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே? நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க
மாட்டாயே?" என்றார் சக்கரவர்த்தி.
"கேட்கவேண்டுமா, அப்பா! உங்களுடைய மனம்
எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா? தங்களைப் பார்த்து நான்
சிரிப்பேனா?" என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று.
"எனக்குத் தெரியும், மகளே! அதனாலேதான் மற்ற யாரிடமும் சொல்லாததை உன்னிடம்
சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்!" என்றார்
சுந்தர சோழர்.
நாலுபுறமும் கடல் சூழ்ந்த ஓர் அழகிய தீவு. அத்தீவில்
எங்கெங்கும் பச்சை மரங்கள் மண்டி வளர்ந்திருந்தன. மரங்கள் இல்லாத இடங்களில்
நெருங்கிய புதர்களாயிருந்தன. கடற்கரையோரத்தில் ஒரு புதரில் வாலிபன் ஒருவன் ஒளிந்து
கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் கடலில் பாய்மரம் விரித்துச் சென்ற கப்பல் ஒன்றை
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது மறையும் வரையில் பார்த்துக் கொண்டு
நின்றான். பிறகு "அப்பா! பிழைத்தோம்!" என்று பெருமூச்சு விட்டான்.
அந்த
வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன். ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல;
இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால்
பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆகையால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன்
கனவிலும் நினைக்கவில்லை; ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச்
சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப்
பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள்.
வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில்
உயிரைவிடத் துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு
நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யத்தில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு
வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள்.
திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை
வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல
விரும்பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் மகாவீரர்கள் எனப் புகழ்
பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை.
ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று
தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக்
கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். கப்பல் கண்ணுக்கு மறையும் வரையில்
காத்திருந்தான். பிறகு ஒரு மரத்தின்மேல் ஏறி அதன் அடிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு
சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தீவின் அழகு அவன் மனத்தைக் கவர்ந்தது. ஆனால்
அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லை என்று தோன்றியது. அச்சமயம் அது ஒரு குறையென்று
அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய உற்சாகம் மிகுந்தது. மரக்கிளையில் சாய்ந்து
உட்கார்ந்தபடி வருங்காலத்தைப் பற்றிப் பகற்கனவுகள் கண்டு கொண்டிருந்தான்.
திடீரென்று மனிதக் குரலில், அதுவும் பெண் குரலில், ஒரு கூச்சல் கேட்டது.
திரும்பிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி கூச்சலிட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தாள்.
அவளைத் தொடர்ந்து பயங்கரமான கரடி ஒன்று ஓடியது.அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
கரடி மேலும் மேலும் அந்தப் பெண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும்
இடையேயிருந்ததூரம் குறுகிக் கொண்டிருந்தது. வேறு யோசனை ஒன்றும் செய்வதற்கு அப்போது
நேரம் இருக்கவில்லை.வாலிபன் மரக்கிளையிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான்.
மரத்தில்தான் சாத்தியிருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடினான்.கரடி அந்தப் பெண்ணை
நெருங்கி அதன் பயங்கரமான கால் நகங்களை அவள் கழுத்தில் வைப்பதற்கு இருந்தது.
அச்சமயத்தில் குறி பார்த்து வேலை எறிந்தான். வேல் கரடியைத் தாக்கியது. கரடி வீல்
என்று ஏழுலகமும் கேட்கும்படியான ஒரு சத்தம் போட்டு விட்டுத் திரும்பியது. பெண்
பிழைத்தாள். ஆனால் வாலிபன் அபாயத்துக்குள்ளானான். காயம்பட்ட கரடி அவனை நோக்கிப்
பாய்ந்தது. வாலிபனுக்கும் கரடிக்கும் துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் அந்த
வாலிபனே வெற்றி பெற்றான்.
வெற்றியடைந்த வாலிபனுடைய கண்கள் உடனே நாலாபுறமும்
தேடின. எதைத் தேடின என்பது அவனுக்கே முதலில் தெரியவில்லை. அப்புறம் சட்டென்று
தெரிந்தது. அவன் கண்கள் தேடிய பெண், சாய்ந்து வளைந்து குறுக்கே வளர்ந்திருந்த ஒரு
தென்னை மரத்தின் பின்னால் அதன் பேரில் சாய்ந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில்
வியப்பும் முகத்தில் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. அவள் காட்டில் வாழும் பெண்.
உலகத்து நாகரிக வாழ்க்கையை அறியாதவள் என்று அவளுடைய தோற்றமும் உடையும் தெரிவித்தன.
ஆனால்அவளுடைய அழகுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லையென்று
சொல்லும்படியிருந்தாள். அந்தப் பெண் அங்கு நின்றிருந்த காட்சி ஒப்பற்ற ஆற்றல்
படைத்த ஓவியக் கலைஞன் ஒருவன் தீட்டிய சித்திரக் காட்சியாகத் தோன்றியது. அவள்
உண்மையில் ஒரு பெண்ணாயிருந்தாலும் இந்த உலகத்துப் பெண்ணாயிருக்க முடியாது என்று
அந்த வாலிபன் கருதினான். அருகில் நெருங்கினான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல்
அவள் மாயமாய் மறைந்துவிடவில்லை.எதிர்பாராத விதமாக அவள் ஓட்டம் பிடித்து
ஓடினாள்.சற்று அவளைப் பின் தொடர்ந்து ஓடிப் பார்த்தான். பிறகு நின்று விட்டான்.
அவன் மிகக் களைப்புற்றிருந்த படியால் மானின் வேகத்துடன் ஓடிய அந்தப் பெண்ணைத்
தொடர்ந்து அவனால் ஓடவும் முடியவில்லை. மேலும், ஒரு பெண்ணை தொடர்ந்து ஓடுவது
அநாகரிகம் என்றும் அவன் எண்ணினான்.
"இந்தச் சிறிய தீவிலேதானே இவள் இருக்க
வேண்டும்? மறுபடியும் பார்க்காமலா போகிறோம்!" என்று கருதி நின்றுவிட்டான்.
கடற்கரையோரமாகச் சென்று தெள்ளிய மணலில் படுத்துக் கொண்டு களைப்பாறினான். அவன்
எதிர்பார்த்தது வீண்பகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி
வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத்
தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் 'கரையர்' என்னும்
வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான
உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக்
காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின்மேல் உட்கார்ந்து கடலையே
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை
உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின்மேல் ஏறத் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண்
பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை
எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை
விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.
இதைக் கேட்டதும் அந்த
வாலிபனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? தன்னைக் காப்பாற்றிய
பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும்
மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே
மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று
அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும்
கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது.பாசம்
வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும்,
பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல
முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே
தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடான பாஷை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு? அது
போலவே காதுகேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி அதிசயமான சக்தி
வாய்ந்ததாயிருந்தது.அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும்
காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால்
முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு? இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து
விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க
பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன.எத்தனை நாள்
அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான்.
வாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு
நேர்ந்தது.கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும்
கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன்
அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று
அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன.அவனுடைய
தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப்
புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக்
காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல்
ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும்
விட்டுப்போக அவனுக்கு மனமில்லை.அதேசமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும்
பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை
நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். யுத்த பேரிகையின் முழக்கம்
மிக மிகத் தொலைவிலிருந்து அவன் காதில் வந்து கேட்டது. இது அவன் முடிவு செய்வதற்குத்
துணை செய்தது.
"திரும்பி வருகிறேன்; என் கடமையை நிறைவேற்றிவிட்டு
வருகிறேன்." என்று அப்பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான்.
காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப் பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு
மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை. வாலிபன் படகில் ஏறியபோது அவள் சற்றுத்
தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக்
கொண்டிருந்தாள். அவளுடைய இருகண்களும் அப்போது இரண்டு கண்ணீர்க் கடல்களாக
வாலிபனுக்குத் தோன்றின. ஆயினும் அவன் தன் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு படகில்
ஏறிச் சென்று கப்பலை அடைந்தான்...
"குந்தவை! அந்த வலைஞர் குலப் பெண் அப்படி
நின்று பார்த்துக் கொண்டிருந்தாளே, அந்தக் காட்சியின் நினைவு அடிக்கடி என் மனக் கண்
முன் தோன்றிக் கொண்டிருக்கிறது.எவ்வளவு முயன்றாலும் மறக்கமுடியவில்லை. அதைக்
காட்டிலும் சோகமான இன்னும் ஒரு காட்சி, நினைத்தாலும் குலை நடுங்கும் காட்சி
அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. இரவிலும் பகலிலும் உறங்கும்போது
விழித்திருக்கையிலும் என்னை வருத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும்
சொல்லட்டுமா?" என்று சுந்தர சோழர் தம் அருமை மகளைப் பார்த்துக் கேட்டார்.
உருக்கத்தினால் தொண்டை அடைத்துக் தழதழத்தக் குரலில், சுந்தர சோழரின்
அருமைக் குமாரி "சொல்லுங்கள், அப்பா" என்றாள்.
பக்க
தலைப்பு
பதினேழாம் அத்தியாயம்
மாண்டவர்மீள்வதுண்டோ?
இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது
போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாறாகவே
சொல்லத் தொடங்கினார்:-
"என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம்
சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன். இதுவரை யாரிடமும் மனதைத்
திறந்து சொல்லாத செய்தியை உன்னிடம் சொல்கிறேன். இந்த உலகத்திலேயே என் நண்பன்
அநிருத்தன் ஒருவனுக்குதான் இது தெரியும்; அவனுக்கும் முழுவதும் தெரியாது. இப்போது
என் மனத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம்
எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். நம்முடைய குடும்பத்தில் யாராவது ஒருவருக்குத்
தெரிந்திருக்க வேண்டும். உன் தாயாரிடம் சொல்ல முடியாது. உன்னிடந்தான் சொல்ல
வேண்டுமென்று சில காலமாகவே எண்ணியிருந்தேன். அதற்குச் சந்தர்ப்பம் இன்றைக்கு
வந்தது. நீ என் நிலையைக் கண்டு சிரிக்கமாட்டாய்; என் மனத்திலுள்ள புண்ணை
ஆற்றுவதற்கு முயல்வாய்; என்னுடைய விருப்பம் நிறைவேறவும் உதவி செய்வாய்! - இந்த
நம்பிக்கையுடன் உன்னிடம் சொல்கிறேன்...
"அந்தத் தீவிலிருந்து மரக்கலத்தில்
ஏறிப் புறப்பட்டேன். கோடிக் கரை சேர்ந்தேன். என் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி
இந்தத் தஞ்சை அரண்மனையில் அப்போது தங்கியிருக்கிறார் என்று அறிந்து நேராக இங்கே
வந்தேன்.
"நான் தஞ்சை வந்து சேர்ந்தபோது பராந்தக சக்கரவர்த்தி மரணத்தை
எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் நொந்து போயிருந்தது. நாற்பது ஆண்டு
காலத்தில் அவர் நிர்மாணித்த மகாராஜ்யம் சின்னா பின்னம் அடைந்து கொண்டிருந்தது.
அவருக்குப் பிறகு பட்டத்தை அடைய வேண்டியவரான இராஜாதித்தர் தக்கோலப் போரில்
மாண்டார். அதே போர்க்களத்தில் படுகாயம் அடைந்த என் தந்தை அரிஞ்சயர் பிழைப்பாரோ,
மாட்டாரோ என்ற நினைவில் இருந்தார். கன்னர தேவனுடைய படைகள் தொண்டை மண்டலத்தைக்
கைப்பற்றி முன்னேறிக் கொண்டு வந்தன. தெற்கே பாண்டியர்கள் தலையெடுத்து வந்தார்கள்.
இலங்கையில் சோழ சைன்யம் தோல்வியுற்றுத் திரும்பி விட்டது. பல போர்க்களங்களிலும் சோழ
நாட்டு வீராதி வீரர் பலர் உயிர் துறந்து விட்டார்கள். இந்தச் செய்திகள் எல்லாம்
ஒருமிக்க வந்து முதிய பிராயத்துப் பராந்தக சக்கரவர்த்தியின் உள்ளத்தைப்
புண்படுத்தித் துயரக் கடலில் ஆழ்த்தியிருந்தன. இந்த நிலையில் என்னைக் கண்டதும்
அவருடைய முகம் மலர்ச்சி அடைந்தது. என் பாட்டனாருக்கு நான் குழந்தையாயிருந்த
நாளிலிருந்து என் பேரில் மிக்க பிரியம். என்னை எங்கேயும் அனுப்பாமல் அரண்மனையில்
தம்முடனேயே வெகுகாலம் வைத்திருந்தார்.பிடிவாதம் பிடித்து அவரிடம் விடை பெற்றுக்
கொண்டு நான் ஈழ நாட்டுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வந்தவர்களிலே நான் இல்லை
என்று அறிந்ததும் என் பாட்டனாரின் மனம் உடைந்து போயிருந்தது. நான் இறந்து
விட்டதாகவும் தெரியவில்லையாதலால் என்னைத் தேடிவரத் கூட்டங் கூட்டமாக ஆட்களை
அனுப்பிக் கொண்டிருந்தார்.
"கடைசியில் ஒரு கூட்டம் என்னைக் கண்டுபிடித்தது.
நான் தஞ்சைவந்து சேர்ந்ததும், புண்பட்ட அவர் மனத்துக்குச் சிறிது சாந்தி ஏற்பட்டது.
அவருடைய அந்தியகாலத்தில் வீழ்ச்சியடைந்து வந்த சோழ சாம்ராஜ்யம் மறுபடியும் என்னால்
மேன்மையடையும் என்பதாக எப்படியோ அவர் மனத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அந்த
நம்பிக்கையைச் சோதிடர்கள் வளரச் செய்திருந்தார்கள். அதற்குத் தகுந்தாற்போல்,
அவருக்குப் புதல்வர்கள் நாலுபேர் இருந்தும், அவருடைய அந்திய காலத்தில் பேரன் நான்
ஒருவனே இருந்தேன். சக்கரவர்த்தி இறக்கும் தறுவாயில் என்னை அருகில் அழைத்து உச்சி
முகர்ந்து கண்ணீர் பெருக்கினார். 'அப்பனே! எனக்குப் பிறகு உன் பெரியப்பன்
கண்டராதித்தன் சிம்மாசனம் ஏறுவான். அவனுக்குப் பிறகு இந்தச் சோழ ராஜ்யம் உன்னை
அடையும். உன்னுடைய காலத்திலேதான் மறுபடி இந்தச் சோழ குலம் மேன்மையடையப் போகிறது,
என்று பலமுறை அவர் கூறினார்.
சோழ நாட்டின் மேன்மையை நிலை நாட்டுவதே என்
வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று சொல்லி, அவ்வாறு என்னிடம்
வாக்குறுதியும் பெற்றுக்கொண்டார்...
"என் பாட்டனார் என்னிடம் எவ்வளவு
பிரியம் வைத்திருந்தாரோ, அவ்வளவு நான் அவரிடம் பக்தி வைத்திருந்தேன். ஆதலின்
அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நடப்பதென்று உறுதி கொண்டேன். ஆனாலும் என்
உள்ளத்தில் அமைதி இல்லை. கடல் சூழ்ந்த தீவில் கரடிக்கு இரையாகாமல் என்னைக்
காப்பாற்றிய கரையர் குலமகளின் கதி என்ன? சோழ நாட்டுச் சிம்மாசனத்தில்
கீழ்க்குலத்தில் பிறந்த ஊமைப் பெண் ஒருத்தி ராணியாக வீற்றிருக்க முடியுமா? அரண்மனை
வாழ்வு அவளுக்குத்தான் சரிப்பட்டு வருமா? நாட்டார் நகரத்தார் என்னைப் பார்த்துச்
சிரிக்க மாட்டார்களா?... இந்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றி என் மனத்தைச்
சஞ்சலப்படுத்தின. இது மட்டுமன்று, என் பெரிய தகப்பனார் கண்டராதித்தர் சில
காலத்திற்கு முன்புதான் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவரை மணந்த
பாக்கியசாலி மழவரையர் குலமகள் என்பதை நீ அறிவாய் முதல் மனைவிக்குக் குழந்தை
இல்லையென்றால், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறவாது என்பது என்ன நிச்சயம்.
பெரியப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தால், இராஜ்யம் எனக்கு எப்படி வரும்? இதைப் பற்றி
ராஜ்யத்தில் சிலர் அப்போதே பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ஆனால்
அத்தகைய சந்தேகம் யாருக்கும் உண்டாகக்கூடாது என்று மகாத்மாவாகிய என் பெரிய
தகப்பனார் விரும்பினார் போலும். பராந்தக சக்கரவர்த்தி காலமான பிறகு
கண்டராதித்தருக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அதே சமயத்தில் எனக்கும் யுவராஜ்ய
பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று என் பெரியப்பா - புதிய சக்கரவர்த்தி - ஏற்பாடு
செய்துவிட்டார்...
"என் பிரிய மகளே! இன்றைக்கு உன் தம்பி அருள் மொழியின்
பேரில் இந்நாட்டு மக்கள் எப்படிப் பிரியமாயிருக்கிறார்களோ, அப்படி அந்த நாளில்
என்பேரில் அபிமானமாயிருந்தார்கள். அரண்மனைக்குள்ளே பட்டாபிஷேகம் நடந்து
கொண்டிருந்தபோது வௌியிலே ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். புதிதாக
முடிசூடிய சக்கரவர்த்தியும், யுவராஜாவும் சேர்ந்தாற்போல் ஜனங்களுக்குக் காட்சி
தரவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள். அவ்விதமே பெரியப்பாவும், நானும் இந்த
அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலுக்கு வந்து நின்றோம். கீழே ஒரே ஜன சமுத்திரமாக
இருந்தது. அவ்வளவு பேருடைய முகங்களும் மலர்ந்து விளங்கின. எங்களைக் கண்டதும்
அவ்வளவு பேரும் குதூகலமடைந்து ஆரவாரித்தார்கள். நாம் இளவரசுப் பட்டம் சூட்டிக்
கொண்டது பற்றி இவ்வளவு ஆயிரமாயிரம் மக்கள் குதூகலம் அடைந்திருக்கிறார்களே,
அப்படியிருக்க, எங்கேயோ ஒரு கண் காணாத் தீவில் காட்டின் மத்தியில் வாழும் ஊமைப்
பெண்ணை பற்றி நாம் கவலைப் படுவது என்ன நியாயம்? இவ்வளவு பேருடைய மகிழ்ச்சி
முக்கியமானதா? ஒரே ஒரு ஊமைப் பெண்ணின் வாழ்க்கை முக்கியமானதா?...
"இவ்வாறு
எண்ணிக்கொண்டே எங்களை அண்ணாந்து பார்த்தபடி நின்ற மலர்ந்த முகங்களை ஒவ்வொன்றாகக்
கவனித்து கொண்டு வந்தேன். அந்த ஜனங்களிலே ஆண்களும் பெண்களும், முதியவர்களும்
இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் நின்றார்கள். எல்லோரும் ஒரே களிப்புடன்
காணப்பட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு முகம், ஒரு பெண்ணின் முகம், சோகம் ததும்பிய
முகம், கண்ணீர் நிறைந்த கண்களினால் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த
முகம், தெரிந்தது. அத்தனைக் கூட்டத்துக்கு நடுவில், எப்படி அந்த ஒரு முகம், என்
கண்ணையும் கவனத்தையும் கவர்ந்ததென்பதை நான் அறியேன். பிறகு அங்கிருந்து என்
கண்களும் நகரவில்லை; கவனமும் பெயரவில்லை. அந்த முகம் வரவரப் பெரிதாகி வந்தது; என்
அருகே வருவது போலிருந்தது. கடைசியில், அந்தப் பெரிய ஜனத்திரள் முழுவதும் மறைந்து,
என் அருகில் நின்றவர்கள் எல்லாரும் மறைந்து, ஆசார வாசல் மறைந்து, தஞ்சை நகரின்
கோட்டை கொத்தளம் மறைந்து, வானும் மண்ணும் மறைந்து, அந்த ஒரு முகம் மட்டும் தேவி
பரமேசுவரியின் விசுவரூபத்தைப் போல் என் கண் முன்னால் தோன்றியது. என் தலை சுழன்றது;
கால்கள் பலமிழந்தன; நினைவு தவறியது...
"அப்படியே நான் மயங்கி விழுந்து
விட்டதாகவும் பக்கத்திலிருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் பிற்பாடு
அறிந்தேன். பட்டாபிஷேக வைபவச் சடங்குகளில் நான் அதிகம் களைத்துப்போய் விட்டதாக
மற்றவர்கள் நினைத்தார்கள். ஜனங்களுக்குக் காட்சி அளித்தது போதும் என்று என்னை
அரண்மனைக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். பிறகு எனக்கு நல்ல நினைவு வந்ததும் என்
நண்பன் அநிருத்தனைத் தனியாக அழைத்து, நான் கண்ட காட்சியைக் கூறினேன். அந்த ஊமைப்
பெண்ணின் அடையாளம் கூறி எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்று
கட்டளையிட்டேன். தஞ்சை நகரின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அத்தகைய ஊமைப்பெண்
யாரும் இல்லையென்று அநிருத்தன் வந்து சொன்னான். என்னுடைய உள்ளத்தின் பிரமையாக
இருக்குமென்றும் கூறினான். நான் அவனைக் கோபித்துக்கொண்டு "இந்த உதவி கூடச்
செய்யாவிட்டால் அப்புறம் நீ என்ன சிநேகிதன்?" என்றேன். தஞ்சைக் கோட்டைக்கு வௌியே
கடற்கரையை நோக்கிச் சொல்லும் பாதைகளில் ஆள் அனுப்பித் தேடும்படி சொன்னேன். அப்படியே
பல வழிகளிலும் ஆள்கள் சென்றார்கள். கடற்கரை வரையில் போய்த் தேடினார்கள்.
கோடிக்கரைக்குப் போனவர்கள் அங்கேயுள்ள கலங்கரை விளக்கக் காவலன் வீட்டில் ஓர் ஊமைப்
பெண் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். அவள் பித்துப் பிடித்தவள் போலத்
தோன்றினாளாம். எவ்வளவோ ஜாடைமாடைகளினால் அவளுக்கு விஷயத்தை தெரிவிக்க முயன்றது
பயன்படவில்லையாம். அவர்களுடன் தஞ்சைக்கு வருவதற்கு அடியோடு மறுத்து விட்டாளாம்.
இந்தச் செய்தியை அவர்கள் கொண்டுவந்தவுடன், இன்னது செய்வதென்று தெரியாமல் மனங்
கலங்கினேன். இரண்டு நாள் அந்தக் கலக்கத்திலேயே இருந்தேன். ஆனமட்டும் அவளை
மறந்துவிடப் பார்த்தும் இயலவில்லை. இரவும் பகலும் அதே நினைவாயிருந்தது. இரவில்
ஒருகணங்கூடத் தூங்கவும் முடியவில்லை. பிறகு அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு
கோடிக்கரைக்குப் புறப்பட்டேன். குதிரைகளை எவ்வளவு வேகமாகச் செலுத்தலாமோ அவ்வளவு
வேகமாகச் செலுத்திக் கொண்டு போனேன். போகும்போது என் மனக்கலக்கம் இன்னும்
அதிகமாயிற்று. அந்த ஊமைப் பெண்ணை அங்கே கண்டுபிடித்தால், அப்புறம் அவளை என்ன
செய்வது என்று எண்ணியபோது மனம் குழம்பியது. தஞ்சைக்கோ பழையாறைக்கோ அழைத்துப் போய்
'இவள் என் ராணி!' என்று சொல்லுவதா? அவ்வாறு நினைத்தபோது என் உள்ளமும் உடலும்
குன்றிப்போய் விட்டன.
'என் செல்வக் குமாரி! அந்த நாளில் நான் மேனி அழகில்
நிகரற்றவன் என்று வேண்டாத பிரபலம் ஒன்று எனக்கு ஏற்பட்டிருந்தது. அதை ஒரு புகழாகவே
நான் நினைக்கவில்லை. ஆயினும் மற்றவர்கள் அதைப்பற்றி ஓயாது பேசினார்கள். என்
பாட்டனாரின் பெயராகிய 'பராந்தகன் என்னும் பெயரை எனக்கு வைத்திருந்தும், அது அடியோடு
மறையும்படி செய்து 'சுந்தர சோழன்' என்ற பெயரைப் பிரபலப்படுத்தி விட்டார்கள். அப்படி
அனைவராலும் புகழப்பட்ட நான், நாகரிகம் இன்னதென்று தெரியாத ஓர் ஊமைப் பெண்ணை எப்படி
அரண்மனைக்கு அழைத்துப் போவேன்? இல்லையென்றால் அவளை என்ன செய்வது - இப்படிப் பலவாறு
எண்ணிக் குழம்பிய மனத்துடன் கோடிக்கரை சேர்ந்தேன். அந்த மகராஜி எனக்குக் கஷ்டம்
எதுவும் இல்லாமல் செய்து விட்டாள். அங்கே நான் அறிந்த செய்தி என்னை அப்படியே
ஸ்தம்பித்துப் போகும்படி செய்துவிட்டது. நாங்கள் அனுப்பிய ஆள்கள் திரும்பிச் சென்ற
மறுநாள் அந்தப் பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை. ;
காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக் கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச்
சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிதுநேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக்கொண்டே
நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாததால் யாரும் அதைப்
பொருட்படுத்தவில்லையாம்! திடீரென்று 'வீல்' என ஒரு சத்தம் அலைகடலின் முழக்கத்தையும்
மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம்! பெண் உருவம் ஒன்று விளக்கின்
ஊச்சியிலிருந்து கடலில் தலைகீழாக விழுந்ததை இரண்டொருவர் பார்த்தார்களாம்.
படகுகளைக்கொண்டு வந்து ஆனமட்டும் தேடிப்பார்த்தும் பயன்படவில்லை. கொந்தளித்துப்
பொங்கிய கடல் அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது என்றே தீர்மானிக்க
வேண்டியிருந்ததாம்...
"இந்தச் செய்தியைக் கேட்டது என் நெஞ்சில் ஈட்டியினால்
குத்துவது போன்ற வலியும், வேதனையும் உண்டாயின. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம்
ஒருவித அமைதியும் உண்டாயிற்று. அவளை என்ன செய்வது என்ற கேள்வி இனி இல்லை. அதைப்
பற்றி யோசித்து மனத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டியதுமில்லை!... "துன்பமும், அமைதியும்
கலந்த இந்த விசித்திர வேதனையுடன் தஞ்சைக்குத் திரும்பினேன். இராஜ்ய காரியங்களில்
மனத்தைச் செலுத்தினேன். போர்க்களங்களுக்குச் சென்றேன். உன் தாயை மணந்து கொண்டேன்.
வீரப் புதல்வர்களைப் பெற்றேன்.உன்னை என் மகளாக அடையும் பாக்கியத்தையும் பெற்றேன்...
"ஆனாலும், மகளே! செத்துப்போன அந்தப் பாவியை என்னால் அடியோடு மறக்க
முடியவில்லை. சிற்சில சமயம் என் கனவிலே அந்தப் பயங்கரகாட்சி, - நான் கண்ணால் பாராத
அந்தக் காட்சி, - தோன்றி என்னை வருத்திக் கொண்டிருந்தது. கலங்கரை விளக்கின்
உச்சியிலிருந்து ஒரு பெண் உருவம் தலைகீழாகப் பாய்ந்து அலை கடலில் விழும் காட்சி என்
கனவிலும் கற்பனையிலும் தோன்றிக் கொண்டிருந்தது. கனவில் அந்தப் பயங்கரக் காட்சியைக்
காணும் போதெல்லாம் நான் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருப்பேன். பக்கத்தில்
படுத்திருப்பவர்கள் 'என்ன? என்ன?' என்று கேட்பார்கள். உன் தாயார் எத்தனையோ தடவை
கேட்டதுண்டு. ஆனால் நான் உண்மையைக் கூறியதில்லை. 'ஒன்றுமில்லை' என்று சில சமயம்
சொல்வேன். அல்லது போர்க்கள பயங்கரங்களைக் கற்பனை செய்து கூறுவேன். நாளடைவில்
காலதேவனின் கருணையினால் அந்தப் பயங்கரக் காட்சி என் மனத்தை விட்டு அகன்றது; அவளும்
என் நினைவிலிருந்து அகன்றாள்; அகன்று விட்டதாகத் தான் சமீப காலம் வரையில்
நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் செத்துப்
போனவர்கள் அதிகக் கொடுமைக்காரர்கள் என்று தோன்றுகிறது. மகளே! ஊமைச்சியின் ஆவி
என்னைவிட்டுவிடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க
ஆரம்பித்திருக்கிறது! என் மகளே! மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்று நீ
நம்புகிறாயா...?"
இவ்விதம் சொல்லிவிட்டுச் சுந்தரசோழர் தம் பார்வையை
எங்கேயோ தூரத்தில் செலுத்தி வெறித்துப் பார்த்தார். அவர் பார்த்த திக்கில் ஒன்றுமே
இல்லைதான்! ஆயினும் அவருடைய உடம்பு நடுங்குவதைக் குந்தவை கண்டாள். எல்லையற்ற
இரக்கம் அவர் பேரில் அவளுக்கு உண்டாயிற்று. கண்களில் நீர் ததும்பியது. தந்தையின்
மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அதனால் அவருடைய
நடுக்கமும் குறைந்ததாகத் தோன்றியது. பிறகு தந்தையை நிமிர்ந்து நோக்கி, "அப்பா!
இந்தப் பயங்கரமான வேதனையைப் பல வருஷகாலம் தாங்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு
கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதனாலேதான் தங்கள் உடம்பும் சீர்குலைந்து விட்டது.
இப்போது என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? இனிமேல் தங்கள் உடம்பு சரியாகப்
போய்விடும்" என்றாள்.
சுந்தரசோழர் அதைக் கேட்டுச் சிரித்த சிரிப்பின்
ஒலியில் வேதனையுடன் கூட அவநம்பிக்கையும் கலந்திருந்ததேன்? அவர் கூறினார்: "குந்தவை!
நீ நம்பவில்லை. மாண்டவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நீ நம்பவில்லை. ஆனாலும் அதோ
அந்தத் தூணுக்குப் பக்கத்தில்; குத்து விளக்கின் பின்னால், அந்தப் பாவியின் ஆவி
நேற்று நள்ளிரவில் நின்றது. என் கண்ணாலேயே பார்த்தேன். அதை எப்படி நம்பாமலிருக்க
முடியும்? நான் கண்டது வெறும் பிரமை என்றால், உன் தோழியைப் பற்றி என்ன சொல்வாய்?
அவள் எதையோ பார்த்துக் கேட்டதனால் தானே நினைவு தப்பி விழுந்தாள்! அவளை அழைத்து வா,
குந்தவை! நானே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்!" என்று சுந்தர சோழர்
பரபரப்புடன் கூறினார்.
"அப்பா! வானதி ஒரு பயங்கொள்ளிப் பெண்! கொடும்பாளூர்
வீரவேளிர் குலத்தில் இவள் எப்படிப் பிறந்தாளோ, தெரியவில்லை.இருட்டில் தூணைப்
பார்த்தாலும், அவள் அலறியடித்துக்கொண்டு மயக்கமாய் விழுவாள். அவளைக் கேட்பதில்
யாதொரு பயனும் இல்லை. அவள் ஏதும் பார்த்திருக்கவும் மாட்டாள்; கேட்டிருக்கவும்
மாட்டாள்."
"அப்படியா சொல்கிறாய்? அவள் போனால் போகட்டும். நான் சொல்ல
வேண்டியது மிச்சத்தையும் கேள்! மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்பதில் எனக்கும்
வெகுகாலம் நம்பிக்கை இல்லாமல் தானிருந்தது. அப்படிப்பட்ட தோற்றம் என்னுடைய வீண்
மனப் பிரமை என்றே நானும் எண்ணியிருந்தேன். காவேரி நதியில் நாம் எல்லாருமாக ஓடத்தில்
போய்க்கொண்டிருந்தபோது குழந்தை அருள்மொழிவர்மன் திடீரென்று காணாமற்போனது உனக்கு
நினைவிருக்கிறதல்லவா? நாம எல்லாரும் திகைத்தும் தவித்தும் நிற்கையில் ஒரு பெண்ணரசி
பொன்னி நதி வெள்ளத்திலிருந்து குழந்தையை எடுத்துக் தூக்கிக் கொடுத்தாள். குழந்தையை
மற்றவர்கள் வாங்கிக் கொண்டதும் அவள் மறைந்துவிட்டாள். இதைப் பற்றி நாம் எவ்வளவோ
தடவை பேசியிருக்கிறோம். நீ மறந்திருக்க முடியாது. நீங்கள் எல்லாரும்
காவேரியம்மன்தான் குழந்தையைக் காப்பாற்றியதாக முடிவு கட்டினீர்கள். ஆனால் என்
கண்ணுக்கு என்ன தோன்றியது தெரியுமா? அந்த வலைஞர்குலமகள் - ஊமைச்சி தான் - குழந்தையை
எடுத்துக் கொடுத்ததாகத் தோன்றியது. அன்றைய தினமும் நான் நினைவிழந்து விட்டேன்
என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? குழந்தைக்கு நேர்ந்த அபாயத்தை முன்னிட்டு நான்
நினைவிழந்தேன் என்று எல்லாரும் எண்ணினார்கள். ஆனால் உண்மை அதுவன்று. இத்தனை நாள்
கழித்து உனக்குச் சொல்கிறேன். குழந்தையை எடுத்துக் கொடுத்த பெண்ணுருவம் அவளுடைய ஆவி
உருவம் என்று எனக்குத் தோன்றியபடியால்தான் அப்படி மூர்ச்சையடைந்தேன்...
"மகளே! உன் தமையனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய தினம் நினைவிருக்கிறதா?
அன்று பட்டாபிஷேகம் நடந்த பிறகு ஆதித்த கரிகாலன் அந்தப்புரத்துக்குத்
தாய்மார்களிடம் ஆசி பெறுவதற்காக வந்தான் அல்லவா? அவனுக்குப் பின்னால் நான் வந்தேன்.
அதே ஊமைச்சியின் ஆவி அங்கே பெண்களின் மத்தியில் நின்று கரிகாலனைக் கொடூரமாக உற்றுப்
பார்த்ததைக் கண்டேன். மீண்டும் ஒரு தடவை பிரக்ஞை இழந்தேன். பிறகு யோசித்தபோது
அந்தச் சம்பவத்தைக் குறித்து எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அப்படி அவள்
கரிகாலனைக் கொடூரமாகப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று ஐயுற்றேன். அதுவும் என்
சித்தப்பிரமையின் தோற்றமாயிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், மகளே! இந்தத் தடவை
தஞ்சைக்கு வந்த பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் தீர்ந்து விட்டது. ஒரு காலத்தில், அவள்
உயிரோடிருந்த காலத்தில், அவள் முகத்தைப் பார்த்து அவள் மனத்திலுள்ளதைத் தெரிந்து
கொள்வேன்; அவள் உதடு அசைவதைப் பார்த்து அவள் சொல்ல விரும்புவது இன்னதென்று தெரிந்து
கொள்வேன்! அந்தச் சக்தியை மீண்டும் நான் பெற்று விட்டேன், குந்தவை! நாலைந்து முறை
நள்ளிரவில் அவள் என் முன்னால் தோன்றி எனக்கு எச்சரிக்கை செய்துவிட்டாள்.
"என்னைக் கொன்றாயே! அதை நான் மன்னிக்கிறேன். ஆனால் மீண்டும் பாவம்
செய்யாதே! ஒருவனுக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தை இன்னொருவனுக்குக் கொடுக்காதே!'
என்று அவள் சொல்வதைப் புரிந்து கொண்டேன். அவளுக்குப் பேசும் சக்தி வந்து வாயினால்
பேசினால் எப்படி தெரிந்து கொள்வேனோ அவ்வளவு தௌிவாகத் தெரிந்துகொண்டேன். மகளே! அதை
நிறைவேற்றி வைக்க எனக்கு நீ உதவி செய்ய வேண்டும். சாபமுள்ள இந்த இராஜ்யம் - இந்தச்
சோழ சிம்மாசனம், - என் புதல்வர்களுக்கு வேண்டாம்! இதை மதுராந்தகனுக்குக்
கொடுத்துவிடலாம்..."
குந்தவை அப்போது குறுக்கிட்டு, "அப்பா! என்ன
சொல்கிறீர்கள்? நாடுநகரமெல்லாம் ஒப்புக்கொண்டு முடிந்து போன காரியத்தை இப்போது
மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தாங்கள் மாற்றினாலும் உலகம் ஒப்புக் கொள்ளுமா?" என்று
கேட்டாள்.
"உலகம் ஒப்புக் கொண்டால் என்ன, ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன?
தர்மம் இன்னதென்று தெரிந்து செய்ய வேண்டியது என் கடமை. நான் இந்தச் சோழ
ராஜ்யத்துக்கு இளவரசனாகவும், பிறகு சக்கரவர்த்தியாகவும் முடிசூட்டிக் கொண்டபோதே என்
மனம் நிம்மதியாயில்லை. என் மனச் சாட்சி என்னை உறுதியது. மூத்தவரின் மகன்
உயிரோடிருக்கும்போது இளையவரின் மகனாகிய நான் பட்டத்துக்கு வந்ததே முறையன்று. அந்தப்
பாவத்தின் பலனை இன்று நான் அனுபவிக்கிறேன். என் புதல்வர்களும் அத்தகைய பாவத்துக்கு
ஏன் உள்ளாக வேண்டும்? ஆதித்தனுக்கு இந்த ராஜ்யம் வேண்டாம்; அருள் மொழிக்கும்
வேண்டாம். இந்த ராஜ்யத்துடன் வரும் சாபமும் வேண்டாம். நான் உயிரோடிருக்கும் போதே,
மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டிவிட வேண்டும். அதன் பிறகு ஆதித்தன் காஞ்சியில்
கட்டியிருக்கும் பொன் மாளிகையில் சென்று நான் மன நிம்மதியோடு வசிப்பேன்..."
"அப்பா! பெரிய பிராட்டி இதற்குச் சம்மதிக்க வேண்டாமா?"
"மகளே!
அதற்காகத்தான் உன் உதவியை நாடுகிறேன், எந்தக் காரணம் சொல்லியாவது என் பெரியம்மையை
இங்கே வரும்படி செய். ஆகா! எவ்வளவோ தெரிந்த பரமஞானியான அந்த மூதாட்டிக்கு இந்தத்
தர்ம நியாயம் ஏன் தெரியவில்லை? என்னை, ஏன் இந்தப் பாவம் செய்யும்படி ஏவினார்?
அல்லது அவருடைய சொந்தப் பிள்ளையின் பேரிலேதான் அவருக்கு என்ன கோபம்? தாயின்
இயற்கைக்கே மாறான இந்தக் காரியத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? மதுராந்தகன்
ஏதோ சிவபக்தியில் ஈடுபட்டுச் சந்நியாசியாகப் போகிறேன் என்று சொல்லிக்
கொண்டிருந்தபோது அதற்கு நியாயம் உண்டு. இப்போது அவனுக்கே இராஜ்யம் ஆளும் ஆசை
வந்திருக்கும் போது இன்னொருவனுக்கு எப்படிப் பட்டம் கட்டலாம்!"
"அப்பா!
இராஜ்யம் ஆள ஆசை இருக்கலாம்; அதற்குத் தகுதி இருக்க வேண்டாமா?"
"ஏன் தகுதி
இல்லை? மகானாகிய கண்டராதித்தருக்கும், மகாஞானியான மழவைராய மகளுக்கும் பிறந்த
மகனுக்கு எப்படித் தகுதி இல்லாமற் போகும்?"
"தகுதி இருக்கட்டும்;
இராஜ்யத்தின் குடிகள் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டாமா?"
"குடிகளுடைய
அபிப்பிராயத்தைக் கேட்பதாயிருந்தால் அவர்கள் உன் தம்பிக்கு உடனே பட்டம் கட்டிவிட
வேண்டும் என்பார்கள். அது நியாயமா? அருள்மொழிதான் அதை ஒப்புவானா?... அதெல்லாம் வீண்
யோசனை, மகளே! எப்படியாவது உன் பெரிய பாட்டியை இங்கே சீக்கிரம் வரும்படி செய்! நான்
யமனோடு போராடிக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி அனுப்பு; என்னை உயிரோடு பார்க்க
வேண்டுமானால் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று சொல்லி அனுப்பு..."
"அது
ஒன்றும் அவசியமில்லை, அப்பா! தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலுக்குத் திருப்பணி
செய்யவேண்டுமென்ற விருப்பம் பெரிய பிராட்டிக்கு இருக்கிறது. அதைக் குறிப்பிட்டு
இச்சமயம் வரும்படி எழுதி அனுப்புகிறேன். அதுவரை தாங்கள் அலட்டிக் கொள்ளாமல்
பொறுமையாயிருங்கள், அப்பா!" இவ்விதம் கூறித் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு
குந்தவை தன் இருப்பிடத்துக்குச் சென்றாள். வழியில் அன்னை வானமாதேவியைச்
சந்தித்தாள்.
"அம்மா! இனிமேல் என் தந்தையை ஒரு கண நேரம்கூட விட்டுப்
பிரியாதீர்கள்! மற்றவர்கள் போய்ச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யட்டும்!" என்றாள்.
குந்தவையின் உள்ளத்தில் சிலகாலமாக ஏற்பட்டிருந்த ஐயங்கள் இப்போது கொஞ்சம்
தௌிவு பெறத் தொடங்கியிருந்தன.கண் இருட்டாயிருந்த இடங்களில் கொஞ்சம் வௌிச்சம் தெரிய
ஆரம்பித்தது. தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விரோதமாக ஏதோ ஒரு பயங்கரமான
மந்திரதந்திரச் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதை அவள் அறிவு நன்கு உணர்த்தியது.
ஆனால் அது எத்தகைய சூழ்ச்சி, எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதை முழுவதும்
அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சோழ மகாராஜ்யத்துக்கும், அந்த ராஜ்யத்துக்குத்
தன் சகோதரர்கள் பெற்றுள்ள உரிமைக்கும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறதென்பதை அவள்
உணர்ந்தாள். அந்த அபாயத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்பாலாகிய
தன்மீது சுமந்திருக்கிறதாகவும் நம்பினாள்.
பக்க
தலைப்பு
பதினெட்டாம் அத்தியாயம் துரோகத்தில் எது
கொடியது?
பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர்
சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த
மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும்
வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும் சொந்தமாகச் சொத்துரிமை பெற்றிருந்தார்கள்.
ஒவ்வொருவருக்கும் தரவாரியாகக் கிராமங்களும், நன்செய் புன்செய் நிலங்களும்,
கால்நடைச் செல்வமும் இருந்தன. இந்த உடைமைகளை அவர்கள் எவ்வாறு உபயோகித்தார்கள்
என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பலர் ஆலயங்களில் தங்கள் பெயரால் பலவிதத்
திருப்பணிகள் நடைபெறுவதற்குச் சொத்துக்களை உபயோகப்படுத்தினார்கள். திருவிளக்கு
ஏற்றுதல் திருமாலை புனைந்து சாற்றுதல், தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும்
திரு அமுது செய்வித்தல் - ஆகியவற்றுக்குப் பல அரசகுல மாதர்கள் நிவந்தங்கள்
ஏற்படுத்திச் சிலாசாஸனம் அல்லது செப்புப் பட்டயத்தில் அவற்றைப் பொறிக்கும்படி
செய்தார்கள்.
அரண்மனைப் பெண்டிர் ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது
வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும்
வேறொரு வகை அறத்துக்குத் தம் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம்
தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால்தானோ, என்னமோ, அவருக்கு நாடெங்கும் தர்ம
வைத்திய சாலைகளை நிறுவ வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாயிற்று. பழையாறையில் பராந்தக
சக்கரவர்த்தியின் பெயரால் ஓர் ஆதுரசாலை ஏற்படுத்தியிருந்ததை முன்னமே பார்த்தோம்.
அது போலவே தஞ்சையில் தன் தந்தையின் பெயரால் ஆதுரசாலை அமைப்பதற்குக் குந்தவை தேவி
ஏற்பாடு செய்திருந்தார். இந்த விஜயதசமி தினத்தில் அந்த ஆதுரசாலையை ஆரம்பிக்கவும்
அதற்குரியதான சாஸனங்களை எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடாகியிருந்தது.
***
தஞ்சைக் கோட்டைக்கு வௌியேயுள்ள புறம்பாடியில், பெருமாள் கோயிலுக்கு எதிர்ப்பட்ட
கருட மண்டபத்தில், சுந்தர சோழ ஆதுரசாலையின் ஆரம்ப வைபவம் நடந்தது. திருமால்
காக்கும் தெய்வமாதலாலும், கருடாழ்வார் அமுதம் கொண்டு வந்தவராதலாலும், விஷ்ணு
கோயிலையொட்டிய கருட மண்டபத்தில் குந்தவைப் பிராட்டி ஆதுரசாலையை ஏற்படுத்தி வந்தார்.
இந்த வைபவத்திற்காக, தஞ்சை நகர மாந்தரும் அக்கம் பக்கத்துக் கிராமவாசிகளும்
கணக்கற்றவர்கள் கூடியிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலங்கார ஆடை
ஆபரணங்கள் பூண்டு கோலாகலமாகத் திரண்டு வந்தார்கள். சோழ சக்கரவர்த்தியின் உடன்
கூட்டத்து அமைச்சர்களும், பெருந்தர, சிறுதர அதிகாரிகளும், சிலாசாஸனம் பொறிக்கும்
கல் தச்சர்களும், செப்புப் பட்டயம் எழுதும் விசுவகர்மர்களும் அரண்மனைப்
பணியாளர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்தார்கள். தாரை, தப்பட்டை முதலிய
வாத்தியங்களை எட்டுத் திசையும் நடுங்கும்படி முழங்கிக்கொண்டு வேளக்காரப் படையினர்
வந்தார்கள். தஞ்சைக் கோட்டையின் காவல் படை வீரர்கள் வாள்களையும், வேல்களையும்
சுழற்றி 'டணார், டணார்' என்று சத்தப்படுத்திக் கொண்டு வந்தார்கள். பழுவேட்டரையர்கள்
இருவரும் யானை மீதேறிக் கம்பீரமாக வந்தார்கள். இளவரசர் மதுராந்தகத் தேவர் வெள்ளைப்
புரவியின் மேல் ஏறி உட்காரத் தெரியாமல் உட்கார்ந்து தவித்துக் கொண்டு வந்து
சேர்ந்தார். இளவரசி குந்தவைப் பிராட்டியும் அவருடைய தோழிகளும் முதிய அரண்மனை மாதர்
சிலரும் பல்லக்கில் ஏறிப் பவனி வந்தார்கள். இன்னொரு பக்கமிருந்து பழுவூர் இளையராணி
நந்தினியின் பனை இலச்சினை கொண்ட தந்தப் பல்லக்கும் வந்தது.
அரண்மனை
மாதர்களுக்கென்று ஏற்படுத்தியிருக்க நீலப்பட்டு விதானமிட்ட இடத்தில் குந்தவை
தேவியும், பழுவூர் ராணியும், மற்ற மாதர்களும் வந்து அமர்ந்தார்கள். பிறகு, பெரிய
பழுவேட்டரையர் சமிக்ஞை செய்ததின் பேரில் வைபவம் ஆரம்பமாயிற்று. முதலில்
ஓதுவாமூர்த்திகள் இருவர் "மந்திரமாவது நீறு" என்ற தேவாரப் பதிகத்தைப் பாடினார்கள்.
யாழ், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் ஒத்துழைப்புடன் மிக இனிமையாகப் பாடப்பட்ட
அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மெய்மறந்திருந்தார்கள். அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில்
அப்போது நிசப்தம் நிலவியது.
ஆனால் அரண்மனைப் பெண்டிர் அமர்ந்திருந்த
இடத்தில் மட்டும் மெல்லிய குரலில் இருவர் பேசும் சத்தம் எழுந்தது. பழுவூர் இளையராணி
நந்தினி குந்தவையை நெருங்கி உட்கார்ந்து "தேவி! முன்னொரு காலத்தில் சம்பந்தப்
பெருமான் இந்தப் பாடலைப் பாடித் திருநீறு இட்டுப் பாண்டிய மன்னரின் நோயைத்
தீர்த்தாரல்லவா? இப்போது ஏன் இந்தப் பாடலுக்கு அந்தச் சக்தி இல்லை? பாடலுக்குச்
சக்தியில்லா விட்டாலும் திருநீற்றுக்கும் சக்தி இல்லாமற் போய்விட்டதே? மருந்து,
மூலிகை, மருத்துவர், மருத்துவசாலை, இவ்வளவும் இல்லாமல் இக்காலத்தில்
முடியவில்லையே?" என்று கேட்டாள்.
"ஆம் ராணி! அந்த நாளில் உலகில் தர்மம்
மேலோங்கியிருந்தது. அதனால் மந்திரத் திருநீற்றுக்கு அவ்வளவு சக்தியிருந்தது.
இப்போது உலகில் பாவம் மலிந்துவிட்டது. அரசருக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள்
நாட்டில் ஏற்பட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் முன்னே நாம் கேட்டதுண்டா?
ஆகையால்தான் மந்திரத்தின் சக்தி குறைந்து மருந்து தேவையாகி விட்டது!" என்று இளைய
பிராட்டி கூறிப் பழுவூர் இளைய ராணியின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
நந்தினியின் முகத்தில் எவ்வித மாறுதலையும் காணவில்லை. "அப்படியா? அரசருக்கு
விரோதமாகச் சதிசெய்யும் துரோகிகள் இந்த நாளில் இருக்கிறார்களா? அவர்கள் யார்? என்று
சாவதானமாகக் கேட்டாள்.
"அதுதான் எனக்கும் தெரியவில்லை. சிலர் ஒருவரைச்
சொல்கிறார்கள்; சிலர் இன்னொருவரைச் சொல்கிறார்கள். எது உண்மை என்று
கண்டுபிடிப்பதற்காக இன்னும் சில நாள் இங்கேயே இருக்கலாமென்று பார்க்கிறேன்.
பழையாறையில் இருந்தால் உலக நடப்பு என்ன தெரிகிறது?" என்றாள் குந்தவை.
"நல்ல
தீர்மானம் செய்தீர்கள்.என்னைக் கேட்டால் இங்கேயே நீங்கள் தங்கிவிடுவது நல்லது.
இல்லாவிட்டால் இராஜ்யம் குட்டிச்சுவராய்ப் போய்விடும். நானும் உங்களுக்கு என்னால்
முடிந்த உதவி செய்வேன். எங்கள் வீட்டில் விருந்தாளி வந்திருக்கிறான். அவனும்
தங்களுக்கு உதவி செய்யக்கூடும்!" என்றாள்.
"அது யார் விருந்தாளி?" என்று
குந்தவை கேட்டாள்.
"கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தன்மாறன். தாங்கள் அவனைப்
பார்த்திருக்கிறீர்களா? தென்னைமர உயரமாய் வாட்டசாட்டமாய் இருக்கிறான். 'ஒற்றன்'
என்றும், 'துரோகி' என்றும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். இராஜத் துரோகத்தைப்
பற்றிச் சற்று முன் சொன்னீர்களே? இராஜத் துரோகத்தைக் காட்டிலும் பெரிய துரோகம்
இன்னதென்று தங்களால் சொல்ல முடியுமா?"
"நன்றாய் சொல்ல முடியும்.
கைப்பிடித்த கணவனுக்குப் பெண்ணாய்ப் பிறந்த ஒருத்தி துரோகம் செய்தால் அது இராஜத்
துரோகத்தைக் காட்டிலும் கொடியதுதான்!" இப்படிச் சொல்லிவிட்டுக் குந்தவை தேவி
நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மாறுதல் ஒன்றும்
நிகழவில்லை. நந்தினியின் முகத்தில் முன்போலவே மோகனப் புன்னகை தவழ்ந்தது.
"தாங்கள் சொல்வது ரொம்ப சரி; ஆனால் கந்தன்மாறன் ஒப்புக் கொள்ளமாட்டான்.
'எல்லாவற்றிலும் கொடிய துரோகம் சிநேகிதத் துரோகம்' என்று சொல்வான். அவனுடைய அருமை
நண்பன் என்று கருதிய ஒருவன் ஒற்றனாக மாறிப் போனதுமல்லாமல் இவனுடைய முதுகில்
குத்திப் போட்டு விட்டு ஓடிப்போய்விட்டானாம். அதுமுதலாவது கந்தன்மாறன் இவ்விதம்
பிதற்றிக் கொண்டிருக்கிறான்!"
"யார் அவன்? அவ்வளவு நீசத்தனமாகக்
காரியத்தைச் செய்தவன்?"
"யாரோ வந்தியத்தேவனாம்! தொண்டை நாட்டில் திருவல்லம்
என்னும் ஊரில் முன்னம் அரசு புரிந்த வாணர் குலத்தைச் சேர்ந்தவனாம்! தாங்கள்
கேள்விப்பட்டதுண்டோ?"
குந்தவை தன் முத்துப் போன்ற பற்களினால் பவழச்
செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள்.
"எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது...
பிற்பாடு என்ன நடந்தது?"
"பிற்பாடு என்ன? கந்தன்மாறனை முதுகில் குத்திப்
போட்டு அவனுடைய சிநேகிதன் ஓடிவிட்டான். அந்த ஒற்றனைப் பிடித்து வருவதற்கு என்
மைத்துனர் ஆள்கள் அனுப்பியிருப்பதாகக் கேள்வி!
"அவன் ஒற்றன் என்பது எப்படி
நிச்சயமாய்த் தெரியும்?"
"அவன் ஒற்றனோ இல்லையோ, எனக்கு என்ன தெரியும்?
சம்புவரையர் மகன் சொல்லுவதைத்தான் சொல்கிறேன். தாங்கள் வேண்டுமானால் நேரில் அவனிடமே
கேட்டு எல்லா விவரமும் தெரிந்து கொள்ளலாம்."
"ஆமாம்; சம்புவரையர் மகனை
நானும் பார்க்க வேண்டியதுதான். அவன் பிழைத்ததே புனர்ஜன்மம் என்று கேள்விப்பட்டேன்.
அப்போது முதலாவது பழுவூர் அரண்மனையிலே தான் அவன் இருக்கிறானா?"
"ஆம்;
காயம்பட்ட மறுநாள் காலையில் நம் அரண்மனையில் கொண்டு வந்து போட்டார்கள். காயத்துக்கு
வைத்திய சிகிச்சை செய்ய வேண்டிய பொறுப்பும் என் தலையில் விழுந்தது. மெதுவாக உயிர்
பிழைத்துக் கொண்டான்; காயம் இன்னும் முழுவதும் ஆறியபாடில்லை!"
"நீங்கள்
பக்கத்திலிருந்து பராமரித்து இன்னும் முழுதும் குணமாகவில்லை என்பது ஆச்சரியமான
விஷயந்தான். ஆகட்டும், ராணி! நான் அவசியம் வந்து அவனைப் பார்க்கிறேன். சம்புவரையர்
குலம் நேற்று முந்தாநாள் ஏற்பட்டதா? பராந்தக் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து
வீரப்புகழ் பெற்ற குலம் அல்லவா?..."
"அதனாலேயே நானும் சொன்னேன். கந்தன்
மாறனைப் பார்க்கும் வியாஜத்திலாவது எங்கள் ஏழை அரண்மனைக்கு எழுந்தருளுவீர்கள்
அல்லவா?" என்றாள் நந்தினி.
இதற்குள் தேவாரப் பாடல் முடிந்தது தானசாஸன
வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கர வர்த்தியின் திருமுகம்
படிக்கப்பட்டது. "நமது திருமகளார் குந்தவைப் பிராட்டிக்கு நாம் சர்வமானியமாகக்
கொடுத்திருந்த நல்லூர் மங்கலம் கிராமத்தின் வருமானம் முழுவதையும் இளைய பிராட்டியார்
தஞ்சை புறம்பாடி ஆதுரசாலைக்கு அளிக்க உவந்திருப்பதால், அந்த ஊர் நன்செய் நிலங்கள்
யாவற்றையும் 'இறையிலி' நிலமாகச் செய்திருக்கிறோம்" என்று அந்த ஓலையில் சக்கரவர்த்தி
தெரியப்படுத்தியிருந்தார். திருமந்திர ஓலை நாயகர் அதைப் படித்தபின் தனாதிகாரி பெரிய
பழுவேட்டரையரிடம் கொடுக்க, பழுவேட்டரையர் அதை இருகரங்களாலும் பெற்றுக் கண்களில்
ஒற்றிக் கொண்டு கணக்காயரிடம் கொடுத்துக் கணக்கில் பதிய வைத்துக் கொள்ளும்படி
சொன்னார்.
பிறகு குந்தவைப் பிராட்டியின் தான சிலா சாஸனம் படிக்கப்பட்டது.
மேற்கூறிய கிராமத்து சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன்
அனுபவித்துக் கொண்டு தஞ்சாவூர் சுந்தர சோழ ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு ஒன்றுக்கு
இருநூறு கலம் நெல்லும் ஆதுர சாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்காகத் தினந்தோறும்
ஐம்பது படி பசும்பாலும், ஐந்து படி ஆட்டுப்பாலும், நூறு இளநீரும் அனுப்பவேண்டியது
என்று கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்ததுடன், எழுதியவன் பெயரும் எழுதியதை
மேற்பார்வை செய்த அதிகாரிகளின் பெயர்களும் அதில் விவரமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்தச் சிலாசாஸனத்தைப் படித்தபிறகு, அங்கு இந்த வைபவத்துக்காக வந்திருந்த
நல்லூர் மங்கல கிராமத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமத் தலைவர்கள் சாஸனக்
கல்லைப் பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு அருகில் நின்ற யானை மீது ஏற்றினார்கள்.
அப்போது "மதுரைகொண்ட கோஇராஜகேசரி சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க வாழ்க!" என்று
ஆயிரமாயிரம் குரல்களில் எழுந்த ஒலி எட்டுத் திசையும் பரவியது. அந்தக் குரல்
ஒலியுடன் போட்டியிட்டுக் கொண்டு நூறு அறப்பறைகளின் முழக்கம் எழுந்து வானை அளாவியது.
பின்னர் வரிசைக்கிரமமாக "இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க!" "வீரபாண்டியன் தலைகொண்ட
வீராதி வீரர் ஆதித்த கரிகாலர் வாழ்க!" "ஈழங்கொண்ட இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!"
"சிவஞான கண்டராதித்தரின் தவப் புதல்வர் மதுராந்தகத் தேவர் வாழ்க!" என்றெல்லாம்
கோஷங்களும் பிரதி கோஷங்களும் எழுந்தன. கடைசியில், "தனாதிகாரி, தானிய பண்டாரத்
தலைவர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் வாழ்க!" "தஞ்சைக் கோட்டைத்
தலைவர் சின்னப் பழுவேட்டரையர் காலாந்தகண்டர் வாழ்க!" என்ற கோஷங்கள் எழுந்தபோது,
ஒலியின் அளவு பெரிதும் குறைந்து விட்டது. பழுவூர் வீரர்கள் மட்டும் அக்கோஷங்களைச்
செய்தார்களே தவிரக் கூடியிருந்த பொதுமக்கள் அதிகமாக அதில் சேர்ந்து கொள்ளவில்லை.
அப்போது பழுவூர் இளையராணியின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று குந்தவைப் பிராட்டி
முயற்சி செய்தும் பலிக்கவில்லை. முக்கியமாக ஆதித்த கரிகாலரைப் பற்றி வாழ்த்தொலி
எழுந்த சமயத்தில் நந்தினியின் முகத்தைப் பார்த்திருந்தால், இரும்பு நெஞ்சு படைத்த
இளைய பிராட்டி கூடப் பெரிதும் திகில் கொண்டிருப்பாள் என்பதில் ஐயம் இல்லை.
பக்க
தலைப்பு
பத்தொன்பதாம் அத்தியாயம் "ஒற்றன்
பிடிப்பட்டான்!"
அன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு மிக்க எரிச்சலை
உண்டுபண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள்
கொண்டிருந்த விசுவாசத்தை வௌிப்படுத்திக் காட்டுவதற்கல்லவா அது ஒரு சந்தர்ப்பமாகப்
போய்விட்டது? "ஜனங்களாம் ஜனங்கள்! அறிவற்ற ஆடுமாடுகள்! நாலு பேர் எந்த வழி
போகிறார்களோ அதே வழியில் நாலாயிரம் பேரும் போவார்கள்! சுய அறிவைப் பயன்படுத்திக்
கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது?" எனறு தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு
பொருமினார். "சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப்
பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது! 'இந்த ஊருக்கு வரியைத்
தள்ளிவிடு!','அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு!" என்று
கட்டளையிட்டுக் கொண்டே போகிறார்! கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரி கொடுக்கும் கிராமமே
இல்லாமற் போய்விடும். ஆனால் போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும்
உணவுக்குத் தானியமும் அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும். எங்கிருந்து அனுப்புவது?"
என்று அவர் இரைந்து கத்தியதைக் கேட்டு அவருடைய பணியாட்களே சிறிது பயப்பட்டார்கள்.
"அண்ணா! இப்படியெல்லாம் சத்தம் போடுவதில் என்ன பயன்? காலம் வரும் வரையில்
காத்திருந்து காரியத்தில் காட்ட வேண்டும்!" என்று சின்னப் பழுவேட்டரையர் அவருக்குப்
பொறுமை போதிக்க வேண்டியிருந்தது.
குந்தவை தம் அரண்மனைக்கு வரப் போகிறாள்
என்று தெரிந்ததும் பெரியவரின் எரிச்சல் அளவு கடந்துவிட்டது. நந்தினியிடம் சென்று,
"இது என்ன நான் கேள்விப்படுவது? அந்த அரக்கி இங்கு எதற்காக வரவேண்டும்? அவளை நீ
அழைத்திருக்கிறாயாமே? அவள் உன்னை அவமானப்படுத்தியதையெல்லாம் மறந்துவிட்டாயா?" என்று
கேட்டார்.
"ஒருவர் எனக்கு செய்த நன்மையையும், நான் மறக்க
மாட்டேன்;இன்னொருவர் எனக்குச் செய்த தீமையையும் மறக்க மாட்டேன். இன்னமும் இந்த என்
சுபாவம் தங்களுக்குத் தெரியவில்லையா?" என்றாள் நந்தினி.
"அப்படியானால் அவள்
இங்கு எதற்காக வருகிறாள்?"
"அவள் இஷ்டம், வருகிறாள்! சக்கரவர்த்தியின்
குமாரி என்ற இறுமாப்பினால் வருகிறாள்!"
"நீ எதற்காக அழைத்தாயாம்?"
"நான் அழைக்கவில்லை; அவளே அழைத்துக் கொண்டாள். 'சம்புவரையர் மகன் உங்கள்
வீட்டில் இருக்கிறானாமே? அவனைப் பார்க்க வேண்டும்!" என்றாள், 'நீ வராதே!' என்று
நான் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லக் கூடிய காலம் வரும். அது வரையில் எல்லா
அவமானங்களையும் நான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்."
"என்னால்
பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அவள் வரும் சமயம் நான் இந்த அரண்மனையில் இருக்க
முடியாது.இந்த நகரிலேயே என்னால் இருக்க முடியாது. மழபாடியில் கொஞ்சம் அலுவல்
இருக்கிறது. போய் வருகிறேன்."
"அப்படியே செய்யுங்கள், நாதா! நானே சொல்லலாம்
என்று இருந்தேன். அந்த விஷப் பாம்பை என்னிடமே விட்டு விடுங்கள். அவளுடைய விஷத்தை
இறக்குவது எப்படி என்று எனக்குத் தெரியும். தாங்கள் திரும்பி வரும்போது ஏதேனும் சில
அதிசயமான செய்திகளைக் கேள்விப்பட்டால் அதற்காகத் தாங்கள் வியப்படைய வேண்டாம்..."
"என்னமாதிரி அதிசயமான செய்திகள்?"
"குந்தவைப் பிராட்டி கந்தன்
மாறனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவோ, ஆதிக்க கரிகாலன் கந்தன் மாறனுடைய
தங்கையை மணக்கப் போவதாகவோ கேள்விப்படலாம்..."
"ஐயையோ! இது என்ன சொல்கிறாய்?
அப்படியெல்லாம் நடந்து விட்டால் நம்முடைய யோசனைகள் என்ன ஆகும்?"
"பேச்சு
நடந்தால், காரியமே நடந்துவிடுமா. என்ன? மதுராந்தகத் தேவருக்கு அடுத்த பட்டம் என்று
உங்கள் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருகிறீர்களே? உண்மையில் அப்படி நடக்கப் போகிறதா?
பெண்ணைப்போல் நாணிக்கோணி நடக்கும் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்காகவா நாம்
இவ்வளவு பாடுபடுகிறோம்?" என்று கூறி நந்தினி தன் கரியகண்களினால் பெரிய
பழுவேட்டரையரை உற்று நோக்கினாள்.
அந்தப் பார்வையின் சக்தியைத் தாங்க
முடியாத அக்கிழவர் தலை குனிந்து அவளுடைய கரத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு,
"என் கண்ணே! இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நீ சக்கரவர்த்தினியாக
வீற்றிருக்கும் நாள் சீக்கிரத்திலேயே வரும்!" என்றார்.
***
கந்தன்மாறன் தன்னைப் பார்க்கக் குந்தவை தேவி வரப்போகிறாள் என்று அறிந்தது
முதலாவது பரபரப்பு அடைந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். குந்தவையின் அறிவும்,
அழகும் மற்ற உயர்வுகளும் நாடு அறிந்தவை அல்லவா? அப்படிப்பட்ட இளைய பிராட்டி தன்னைப்
பார்ப்பதற்காக வருகிறாள் என்பது எவ்வளவு பெருமையான விஷயம்? இதற்காக உடம்பில்
இன்னும் பல குத்துக்கள் பட்டு நோயாகவும் படுத்திருக்கலாமே? அடாடா! இந்த மாதிரி
காயம் போர்க்களத்தில் தன்னுடைய மார்பிலே பட்டுத் தான் படுத்திருக்கக் கூடாதா?
அச்சமயம் குந்தவை தேவி வந்து தன்னைப் பார்த்தால் எவ்வளவு கௌரவமாயிருக்கும்?
அப்படிக்கின்றி, இப்போது ஒரு சிநேகிதன் செய்த துரோகத்தைப் பற்றிப் பலரிடம் படித்த
பாடத்தையேயல்லவா அவளிடமும் படித்தாக வேண்டும்?
இடையிடையே அந்தப்
பெண்ணரசியின் குடும்பத்தினருக்கு விரோதமாக அவன் ஈடுபட்டிருக்கும் இரகசிய
முயற்சியைக் குறித்து நினைவு வந்து கொஞ்சம் அவனை வருத்தியது.
கந்தன்மாறன்
யோக்கியமான பிள்ளை.தந்திர மந்திரங்களும், சூதுவாதுகளும் அறியாதவன். நந்தினியில்
மோகன சௌந்தரியம் அவனைப் போதைக் குள்ளாக்கிய போதிலும் அவள் இன்னொருவரின் மனைவி என்ற
நினைவினால் தன் மனத்துக்கு அரண் போட்டு வந்தான். ஆனால் குந்தவைப் பிராட்டியோ
கலியாணம் ஆகாதவள். அவளிடம் எப்படி நடந்து கொள்வது? எவ்வாறு பேசுவது? மனத்தில்
வஞ்சம் வைத்துக் கொண்டு இனிமையாகப் பேச முடியுமா? அல்லது அவளுடைய அழகிலே மயங்கித்
தன்னுடைய சபதத்தைக் கைவிடும்படியான மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ? அப்படி
நேருவதற்கு ஒரு நாளும் இடங் கொடுக்கக் கூடாது ... ஆ! இளவரசி எதற்காக இங்கே நம்மைப்
பார்க்க வரவேண்டும்? வரட்டும்; வரட்டும்! ஏதாவது மூர்க்கத்தனமாகப் பேசி மறுபடியும்
வராதபடி அனுப்பிவிடலாம்.
இவ்விதம் கந்தன் மாறன் செய்திருந்த முடிவு
குந்தவைப் பிராட்டியைக் கண்டதும் அடியோடு கரைந்து, மறைந்துவிட்டது. அவளுடைய மோகன
வடிவும், முகப்பொலிவும், பெருந்தன்மையும், அடக்கமும், இனிமை ததும்பிய அனுதாப
வார்த்தைகளும் கந்தன் மாறனைத் தன் வயம் இழக்கச் செய்துவிட்டன. அவனுடைய கற்பனா சக்தி
பொங்கிப் பெருகியது. தன்னுடைய பெருமையைச் சொல்லிக்கொள்ள விரும்பாதவனைப் போல்
நடித்து அதே சமயத்தில் அவளுடைய கட்டாயத்துக்காகச் சொல்கிறவனைப் போலத் தான் புரிந்த
வீரச் செயல்களைச் சொல்லிக் கொண்டான். தோள்களிலும், மார்பிலும் இன்னும் தன்
உடம்பெல்லாம் போர்க்களத்தில் தான் அடைந்த காயங்களைக் காட்ட விரும்பாதவனைப் போல்
காட்டினான். "அந்த சிநேகத் துரோகி வந்தியத்தேவன் என்னை மார்பிலே குத்திக்
கொன்றிருந்தால்கூடக் கவலையில்லை. முதுகிலே குத்திவிட்டுப் போய் விட்டானே என்றுதான்
வருத்தமாயிருக்கிறது. ஆகையினாலேதான் அவனுடைய துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதாக
இருக்கிறது. இல்லாவிடில், போரில் புறமுதுகிட்ட அபகீர்த்தியல்லவா ஏற்பட்டு விடும்?
தோளிலோ, மார்பிலோ குத்திக் காயப்படுத்தியிருந்தால், அவனை மன்னித்து விட்டே
இருப்பேன்!" என்று கந்தன் மாறன் உணர்ச்சி பொங்கக் கூறியது குந்தவைக்கு உண்மையாகவே
தோன்றியது. வந்தியத்தேவன் இப்படிச் செய்திருப்பானோ, அவன் விஷயத்தில் நாம் ஏமாந்து
போய் விட்டோமோ என்ற ஐயமும் உண்டாகி விட்டது.நடந்ததை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே,
கந்தன்மாறன் கூறினான். அவனுடைய கற்பனா சக்தி அன்று உச்சத்தை அடைந்தது நந்தினிக்கே
வியப்பை உண்டாக்கிவிட்டது.
"பாருங்கள், தேவி! கடம்பூரில் தங்கிய அன்றே அவன்
என்னை ஏமாற்றிவிட்டான். தஞ்சாவூருக்குப் புறப்பட்ட காரியம் இன்னதென்று சொல்லவில்லை.
இங்கு வந்து ஏதோ பொய் அடையாளத்தைக் காட்டி உள்ளே
நுழைந்திருக்கிறான்.சக்கரவர்த்தியையும் போய்ப் பார்த்திருக்கிறான். ஆதித்த
கரிகாலரிடமிருந்து ஓலை கொண்டு வந்ததாகப் புளுகியிருக்கிறான். அத்துடன் விட்டானா?
தங்கள் பெயரையும் சம்பந்தப்படுத்தி, தங்களுக்கும் ஓலை கொண்டு வந்திருப்பதாகச்
சொல்லவே கோட்டைத் தலைவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவன் ஒற்றனாயிருக்கலாம்
என்று ஐயுற்று அவனைக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறார்.எப்படியோ தப்பித்துப்
போய்விட்டான். அது விஷயத்தில் அவனுடைய சமர்த்தை மெச்சத்தான் வேண்டும்.நான் இந்தச்
செய்திகளைக் கேட்ட போது என் சிநேகிதன் பகையாளியின் ஒற்றன் என்பதை மட்டும் நம்பவே
இல்லை. அவனுடைய சுபாவத்திலேயே சில கோணல்கள் உண்டு. அப்படி ஏதோ அசட்டுத்தனம்
செய்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினேன். 'எப்படியாவது அவனை நான்
கண்டுபிடித்துத் திரும்ப அழைத்து வருகிறேன். அவனை மன்னித்து விடவேண்டும்' என்று
கோட்டைத் தலைவரிடம் நிபந்தனை பேசிக்கொண்டு புறப்பட்டேன். கோட்டையைச் சுற்றியுள்ள
வடவாற்றங்கரையோடு அந்த நள்ளிரவில் சென்றேன். யாரையும் பின்னோடு அழைத்துப் போய் என்
நண்பனை அவமானப்படுத்த விரும்பவில்லை. கோட்ையிலிருந்து, தப்பியவன் எப்படியும் மதில்
வழியாகத் தான் வௌியில் வரவேண்டுமல்லவா? முன்னமே வௌியே வந்திருந்தாலும் பக்கத்துக்
காடுகளிலேதான் மறைந்திருக்க வேண்டும். ஆகையால் வடவாற்றங்கரையோடு போனேன். ஒருவன்
செங்குத்தான கோட்டை மதில் சுவர் வழியாக இறங்கி வருவது மங்கிய நிலா வௌிச்சத்தில்
தெரிந்தது. உடனே அங்கே போய் நின்றேன். அவன் இறங்கியது, 'நண்பா! இது என்ன வேலை?'
என்றேன். அந்தச் சண்டாளன் உடனே என் மார்பில் ஒரு குத்து விட்டான். யானைகள்
இடித்தும் நலுங்காத என் மார்பை இவனுடைய குத்து என்ன செய்யும்? ஆயினும் நல்ல
எண்ணத்துடன் அவனைத் தேடிப்போன என்னை அவன் குத்தியது பொறுக்கவில்லை. நானும்
குத்திவிட்டேன். இருவரும் துவந்த யுத்தம் செய்தோம். அரை நாழிகையில் அவன் சக்தி
இழந்து அடங்கிப் போனான். என்னிடம் 'நீ வந்த காரணத்தை உண்மையாகச் சொல்லிவிடு! நான்
உன்னை மன்னித்து உனக்கு வேண்டிய உதவி செய்கிறேன்!' என்றேன்.
'களைப்பாயிருக்கிறது, எங்கேயாவது உட்கார்ந்து சொல்கிறேன்' என்றான். 'சரி'
என்று சொல்லி அழைத்துச் சென்றேன். முன்னால் வழிகாட்டிக் கொண்டு போனேன். திடீரென்று
அந்தப் பாவி முதுகில் கத்தியினால் குத்தி விட்டான். அரைச் சாண் நீளம் கத்தி உள்ளே
போய்விட்டது. தலை சுற்றியது; கீழே விழுந்துவிட்டேன். அந்தச் சிநேகத்துரோகி தப்பி
ஓடிவிட்டான்! மறுபடி நான் கண் விழித்து உணர்வு வந்து பார்த்தபோது ஓர் ஊமை
ஸ்திரீயின் வீட்டில் இருந்ததைக் கண்டேன்..."
கந்தன்மாறனின் கற்பனைக்
கதையைக் கேட்டு நந்தினி தன் மனத்திற்குள்ளே சிரித்தாள். குந்தவை தேவிக்கு அதை
எவ்வளவு தூரம் நம்புவது என்று தீர்மானிக்க முடியவில்லை.
"ஊமை ஸ்திரீயின்
வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? யார் கொண்டு சேர்த்தது?" என்றாள்.
"அதுதான் எனக்கும் விளங்காத மர்மமாக இருக்கிறது. அந்த ஊமைக்கு ஒன்றுமே
தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு ஒரு புதல்வன் உண்டாம்.
அவனையும் அன்றிலிருந்து காணவே காணாம். எப்படி மாயமாய் மறைந்தான் என்று தெரியாது.
அவன் திரும்பி வந்தால் ஒரு வேளை கேட்கலாம். இல்லாவிடில் பழுவூர் வீரர்கள் என்
நண்பனைப் பிடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்..."
"அவன்
அகப்பட்டு விடுவான் என்று நினைக்கிறீர்களா?"
"அகப்படாமல் எப்படித் தப்ப
முடியும்? சப்பட்டை கட்டிக் கொண்டு பறந்து விட முடியாதல்லவா? அதற்காகவே, அவனைப்
பார்ப்பதற்காகவே, இங்கே காத்திருக்கிறேன். இல்லாவிடில் ஊர் சென்றிருப்பேன்.
இன்னமும் அவனுக்காகப் பழுவூர் அரசர்களிடம் மன்னிப்புப் பெறலாம் என்று நம்பிக்கை
எனக்கு இருக்கிறது."
"ஐயா! தங்களுடைய பெருந்தன்மையே பெருந்தன்மை!" என்றாள்
இளைய பிராட்டி.அவளுடைய மனம் 'வந்தியத்தேவன் அகப்படக்கூடாது அவன்
துரோகியாயிருந்தாலும் சரிதான்!' என்று எண்ணமிட்டது.
அச்சமயத்தில் அரண்மனைத்
தாதி ஒருத்தி ஓடிவந்து, "அம்மா! ஒற்றன் அகப்பட்டுவிட்டான்! பிடித்து வருகிறார்கள்!"
என்று கத்தினாள்.
நந்தினி, குந்தவை இருவருடைய முகத்திலும் துன்ப வேதனை
காணப்பட்டது; நந்தினி விரைவில் அதை மாற்றிக் கொண்டாள். குந்தவையினால் அது
முடியவில்லை.
பக்க
தலைப்பு
இருபதாம்அத்தியாயம் இரு பெண் புலிகள்
ஒற்றனைப் பிடித்துக் கட்டி வீதியில் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியைத்
தாதி ஓடிவந்து தெரிவித்ததும் அங்கிருந்த மூவரின் உள்ளங்களும் பரபரப்பை அடைந்தன.
குந்தவையின் உள்ளம் அதிகமாகத் தத்தளித்தது.
"தேவி! நாம் போய் அந்தக்
கெட்டிக்கார ஒற்றன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாமா?" என்றாள் நந்தினி.
குந்தவை தயக்கத்துடன், "நமக்கென்ன அவனைப்பற்றி?" என்றாள்.
"அப்படியானால் சரி!" என்று நந்தினி அசட்டையாய்க் கூறினாள்.
"நான்
போய்ப் பார்த்து வருகிறேன்" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி எழுந்தான்.
"வேண்டாம்; உம்மால் நடக்க முடியாது, விழுந்துவிடுவீர்!" என்றாள் நந்தினி.
குந்தவை மனத்தை மாற்றிக் கொண்டவள் போல், "இவருடைய அருமையான சிநேகிதன்
எப்படியிருக்கிறான் என்று நாமும் பார்த்துத்தான் வைக்கலாமே! இந்த அரண்மனை
மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியுமல்லவா?" என்று கேட்டாள்.
"நன்றாய்த்
தெரியும்; என்னுடன் வாருங்கள்!" என்று நந்தினி எழுந்து நடந்தாள்.
கந்தன்மாறன், "தேவி! அவன் என் சிநேகிதனாயிருந்தால், மாமாவிடம் சொல்லி, நான்
அவனைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்!" என்று சொன்னான்.
"அவன்
உமது சிநேகிதன்தானா என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றாள் நந்தினி.
"அப்படியானால், நானும் வந்தே தீருவேன்!" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி
நடந்தான்.
மூவரும் அரண்மனை மேன்மாடத்தின் முன் முகப்புக்குச் சென்றார்கள்.
சற்றுத் தூரத்தில் ஏழெட்டுக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன.அவற்றின் மீது வேல்
பிடித்த வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கு மத்தியில் ஒரு மனிதன்
நடந்து வந்தான்.அவன் கைகளை முதுகுடன் சேர்த்துக் கயிற்றினால் கட்டியிருந்தது.
அந்தக் கயிற்றின் இரு முனைகளை இரு பக்கத்திலும் வந்த குதிரை வீரர்கள் பிடித்துக்
கொண்டிருந்தார்கள்.
வீரர்களுக்குச் சற்றுத் தூரத்தில் வேடிக்கை பார்க்கும்
கும்பல் வந்து கொண்டிருந்தது. அரண்மனை மாடத்திலிருந்து பார்த்தவர்களுக்குக்
குதிரைகளுக்கு நடுவில் நடந்து வந்த மனிதனின் முகம் முதலில் தெரியவில்லை.
ஊர்வலம் அருகில் வரும் வரையில் அந்த அரண்மனை மேன்மாடத்தில் மௌனம் குடி
கொண்டிருந்தது. குந்தவையின் ஆவலும், கவலையும், ததும்பிய கண்கள் நெருங்கி வந்த
ஊர்வலத்தின்மீது லயித்திருந்தன.
நந்தினியோ வீதியில் எட்டிப்பார்ப்பதும்
உடனே குந்தவையின் முகத்தைப் பார்ப்பதுமாயிருந்தாள்.
கந்தன்மாறன் அங்கே குடி
கொண்டிருந்த மோனத்தைக் கலைத்தான்.
"இல்லை; இவன் வந்தியத்தேவன் இல்லை!"
என்றான். குந்தவையின் முகம் மலர்ந்தது.
அச்சமயம் அந்த விநோதமான ஊர்வலம்
அரண்மனை மாடத்தின் அடிப்பக்கம் வந்திருந்தது.
கயிற்றினால் கட்டுண்டு குதிரை
வீரர்களின் மத்தியில் நடந்து வந்தவன் அண்ணாந்து பார்த்தான். வைத்தியர் மகன் அவன்
என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.
குந்தவை தன் மகிழ்ச்சியை வௌியிட்டுக்
கொள்ளாமல் "இது என்ன பைத்தியக்காரத்தனம்? இவனை எதற்காகப் பிடித்து இழுத்து
வருகிறார்கள்? இவன் பழையாறை வைத்தியர் மகன் அல்லவா?" என்றாள்.
அண்ணாந்து
பார்த்தவன் ஏதோ சொல்ல எண்ணியவனைப் போல் வாயைத் திறந்தான்.
அதற்குள் அவனை
இருபுறமும் பிணைத்திருந்த கயிறு முன்னால் தள்ளிக் கொண்டு போய்விட்டது.
"ஓ!
அப்படியா? என் மைத்துனரின் ஆட்கள் எப்போதும் இப்படித்தான். உண்மைக் குற்றவாளியை
விட்டுவிட்டு யாரையாவது பிடித்துக்கொண்டு வந்து தொந்தரவு செய்வார்கள்! என்றாள்
நந்தினி.
இதற்குள் கந்தன்மாறன், "வந்தியத்தேவன் இவர்களிடம் அவ்வளவு
இலகுவில் அகப்பட்டுக் கொள்வானா? என் சிநேகிதன் பெரிய இந்திரஜித்தனாயிற்றே? என்னையே
ஏமாற்றியவன் இந்த ஆட்களிடமா சிக்கிக் கொள்வான்?" என்றான்.
"இன்னமும் அவனை
உம்முடைய சிநேகிதன் என்று சொல்லிக் கொள்கிறீரே! என்றாள் நந்தினி.
"துரோகியாய்ப் போய்விட்டான். ஆனாலும் என் மனத்தில் அவன் பேரில் உள்ள
பிரியம் மாறவில்லை!" என்றான் கந்தன் மாறன். "ஒருவேை உம்முடைய அழகான சிநேகிதனை
இவர்கள் கொன்று போட்டிருக்கலாம். இரண்டு ஒற்றர்களைத் தொடர்ந்து கோடிக்கரைக்கு இந்த
வீரர்கள் போனதாகக் கேள்விப்பட்டேன்" என்று நந்தினி சொல்லிவிட்டு, குந்தவையின்
முகத்தைப் பார்த்தாள். "கொன்றிருக்கலாம்" என்ற வார்த்தை குந்தவையைத் துடிதுடிக்கச்
செய்தது என்பதை அறிந்து கொண்டாள்.
அடி கர்வக்காரி! உன் பேரில் பழி வாங்க
நல்ல ஆயுதம் கிடைத்தது! அதைப் பூர்வமாக உபயோகப்படுத்தாமற் போனால் நான் பழுவூர் இளைய
ராணி அல்ல! பொறு! பொறு!
குந்தவை தன் உள்ளக் கலக்கத்தைக் கோபமாக மாற்றிக்
கொண்டு, "ஒற்றர்களாவது ஒற்றர்கள்!வெறும் அசட்டுத்தனம்! வர வர இந்தக் கிழவர்களுக்கு
அறிவு மழுங்கிப் போய் விட்டது! யாரைக் கண்டாலும் சந்தேகம்! இந்த வைத்தியர் மகனை
நான் அல்லவா கோடிக்கரைக்கு மூலிகை கொண்டு வருவதற்காக அனுப்பியிருந்தேன்? இவனை
எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள்? இப்போதே போய் உங்கள் மைத்துனரைக் கேட்கப்
போகிறேன்!" என்றாள்.
"ஓகோ! தாங்கள் அனுப்பிய ஆளா இவன்? தேவி! சந்தேகம்
என்று சொன்னீர்களே? எனக்குக்கூட இப்போது ஒரு சந்தேகம் தோன்றியிருக்கிறது. மூலிகை
கொண்டு வருவதற்கு இவனை மட்டும் அனுப்பினீர்களா? இன்னொரு ஆளையும் சேர்த்து
அனுப்பினீர்களா?" என்று நந்தினி கேட்டாள்.
"இவனோடு இன்னொருவனையுந்தான்
அனுப்பினேன். இரண்டு பேரில் ஒருவனை இலங்கைத்தீவுக்குப் போகும்படி சொன்னேன்."
"ஆகா!இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது!நான் சந்தேகித்தபடிதான்
நடந்திருக்கிறது!"
"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சந்தேகித்தீர்கள்?
என்ன நடந்திருக்கிறது?"
"இனிச் சந்தேகமே இல்லை; உறுதிதான், தேவி! தாங்கள்
இவனோடு சேர்த்து அனுப்பிய ஆள் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவனா? புதிய மனிதனா?"
குந்தவை சற்றுத் தயங்கி, " புது மனிதனாவது? பழைய மனிதனாவது?
காஞ்சிபுரத்திலிருந்து ஓலை கொண்டு வந்தவன்; என் தமையனிடமிருந்து வந்தவன்" என்றாள்.
"அவனேதான்! அவனேதான்!"
"எவனேதான்?"
"அவன்தான் ஒற்றான்!
சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்ததாகத்தான் இங்கேயும் அவன் சொன்னானாம்..."
"என்ன காரணத்தினால் அவனை ஒற்றன் என்று இவர்கள் சந்தேகித்தார்களாம்?"
"எனக்கென்ன தெரியும், அதைப்பற்றி? அதெல்லாம் புருஷர்கள் விஷயம்!
பார்க்கப்போனால், அந்த ஒற்றனும் சந்தேகப்படும்படியாகத்தான் நடந்திருக்கிறான்.
இல்லாவிட்டால் இரகசியமாக இரவுக்கிரவே ஏன் தப்பி ஓட வேண்டும்? இந்தச் சாதுமனிதருடைய
முதுகிலே எதற்காகக் குத்திவிட்டுப் போக வேண்டும்?"
"இவருடைய முதுகில்
அவன்தான் குத்தினான் என்பதையும் நான் நம்பவில்லை. குத்தியிருந்தால் இவரை மறுபடி
தூக்கிக் கொண்டுபோய் அந்த ஊமையின் வீட்டில் ஏன் சேர்த்து விட்டுப் போகிறான்?"
"கூட இருந்து பார்த்ததுபோல் சொல்கிறீர்களே, தேவி! என்னமோ அந்த ஒற்றன்
பேரில் உங்களுக்கு அவ்வளவு பரிவு தோன்றியிருக்கிறது. அவனிடம் ஏதோ மாய சக்தி இருக்க
வேண்டும். இவர்கூட அவனை இன்னும் தம் சிநேகிதன் என்று சொல்லிக்கொள்கிறார் அல்லவா?
எப்படியானால் என்ன? போன உயிர் திரும்பிவரப் போவதில்லை. அவனை இந்த வீரர்கள்
கொன்றிருந்தால்..."
குந்தவையின் முகத்தில் வியர்வை துளித்தது. கண்கள்
சிவந்தன. தொண்டை அடைத்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. "அப்படி
நடந்திராது! ஒருநாளும் நடந்திராது" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
"இவர் சொல்லுகிறபடி அந்த ஒற்றன் அவ்வளவு கெட்டிக்காரனாயிருந்தால்..."
என்றாள்.
"ஆம், இளவரசி! வந்தியத்தேவன் இந்த ஆட்களிடம் ஒரு நாளும்
அகப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான்!' என்றான் கந்தமாறன்.
"இப்போது
அகப்பட்டிராவிட்டால் இன்னொரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான்!"என்றாள் நந்தினி.
குந்தவை பற்களைக் கடித்துக் கொண்டு,
"நாளை நடக்கப் போவது யாருக்குத்
தெரியும்?" என்றாள்.
"பின்னர் ஆத்திரத்துடன், "சக்கரவர்த்தி நோயாகப்
படுத்தாலும் படுத்தார்; இராஜ்யமே தலைகீழாகப் போய் விட்டது! மூலிகை கொண்டு
வருவதற்கென்று நான் அனுப்பிய ஆட்களைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம்? இதோ
என் தந்தையிடம் போய்க் கேட்டு விடுகிறேன்" என்றாள்.
"தேவி! நோயினால்
மெலிந்திருக்கும் சக்கரவர்த்தியை இது விஷயமாக ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? என்
மைத்துனரையே கேட்டுவிடலாமே? தங்கள் விருப்பம் ஒரு வேளை அவருக்குத்
தெரியாமலிருக்கலாம். தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்கிறார். இந்தச் சோழ
ராஜ்யத்தில் இளைய பிராட்டியின் விருப்பத்துக்கு மாறாக நடக்க யார் துணிவார்கள்?"
என்றாள் நந்தினி.
அந்த இரண்டு பெண் புலிகளுக்கும் அன்று நடந்த
போராட்டத்தில் நந்தினியே வெற்றி பெற்றாள். குந்தவையின் நெஞ்சில் பல காயங்கள்
ஏற்பட்டன. அவற்றை வௌிக்காட்டாமலிருக்க இளவரசி பெரு முயற்சி செய்ய வேண்டியிருந்தது.
|