Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் -  நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம்அத்தியாயம் 1- 10அத்தியாயம் 11- 20 > அத்தியாயம் 21- 30 > அத்தியாயம் 31- 40 > அத்தியாயம் 41- 50 > அத்தியாயம் 51- 57 > இரண்டாம் பாகம் - சுழற்காற்று > மூன்றாம் பாகம் - கொலை வாள் > நான்காம் பாகம் - மணிமகுடம் > ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்  >  முடிவுரை

Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

� Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 

கல்கியின் பொன்னியின் செல்வன்
kalkiyin ponniyin celvan
முதலாவது பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 31-40

முப்பத்தொன்றாம் அத்தியாயம் - "திருடர்! திருடர்!"
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - பரிசோதனை
முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - மரத்தில் ஒரு மங்கை!
முப்பத்து நான்காம் அத்தியாயம் - லதா மண்டம்
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - மந்திரவாதி
முப்பத்தாறாம் அத்தியாயம் - "ஞாபகம் இருக்கிறதா?"
முப்பத்தேழாம் அத்தியாயம் - சிம்மங்கள் மோதின!
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினியின் ஊடல்
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - உலகம் சுழன்றது!
நாற்பதாம் அத்தியாயம் - இருள் மாளிகை


முப்பத்தொன்றாம் அத்தியாயம்
"திருடர்! திருடர்!"

விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹாவீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம்.

மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்திரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள்.

முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தாம்.

இதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தர சோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.

ஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டிருப்பது என்னவோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வௌியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான்! சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப்பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்ு விடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வௌியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வௌியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத்தான் வௌியேற முடியும்!

ஆகா! இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி? ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையையை விட்டு வௌியேறி விடவேண்டும். பழுவூர் இளையராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய் விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வௌியேறி விட்டால் போதும்! ஓலையில்லாவிட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வௌியேறுவதற்கு என்ன வழி?

தான் உடுத்தியிருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் மனத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள்! குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திரும்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா! ஒரு யுக்தி! உடனே ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும்! -- இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி! பார்க்க வேண்டியதுதான் ஒரு கை! வீரவேல்! வெற்றிவேல்!

வந்தியத்தேவன் சித்திர மண்டபத்தின் பலகணி வழியாக வௌியே பார்த்தான். சின்னப் பழுவேட்டரையர் பரிவாரங்கள் புடைசூழக் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். ஆகா! இதுதான் சமயம்! இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது!

வாசற்படிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சொக்கட்டான் ஆடிய ஏவலாளர்கள் மூவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். மாளிகை வாசலில் சின்னப் பழுவேட்டரையர் வரும் சப்தம் அவர்களுடைய காதிலும் விழுந்தது.

வந்தியத்தேவன் அவர்கள் அருகில் நெருங்கி, "அண்ணன்மார்களே! நான் தரித்திருந்த உடைகள் எங்கே?" என்று கேட்டான்.

"அந்த அழுக்குத் துணிகள் இப்போது என்னத்துக்கு? எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே!" என்றான் ஒருவன்.

"எனக்குப் புதிய உடைகள் தேவையில்லை; என்னுடைய பழைய துணிகளே போதும். அவற்றைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள்!"

"அவை சலவைக்குப் போயிருக்கின்றன. வந்த உடனே தருகிறோம்."

"அதெல்லாம் முடியாது! நீங்கள் திருடர்கள். என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். அதைத் திருடிக் கொள்வதற்காக எடுத்திருக்கிறீர்கள் உடனே கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால்...!"

"இல்லாவிட்டால் என்ன செய்து விடுவாய், தம்பி! எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுவாயோ? ஆனால் இதுதான் தஞ்சாவூர்! ஞாபகம் இருக்கட்டும்!"

"அடே! என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா? இல்லையா?"

"இருந்தால்தானே தம்பி கொண்டு வருவேன்! அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோம்! முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா?"

"திருட்டுப் பயல்களா! என்னுடன் விளையாடுகிறீர்களா? இதோ உங்கள் எஜமானரிடம் சென்று சொல்கிறேன், பாருங்கள்!" என்று வந்தியத்தேவன் வாசற்படியைத் தாண்டத் தொடங்கினான். மூவரில் ஒருவன் அவனைத் தடுப்பதற்காக நெருங்கினான். வந்தியத்தேவன் அவனுடைய மூக்கை நோக்கிப் பலமாக ஒரு குத்து விட்டான். அவ்வளவுதான்; அந்த ஆள் மல்லாந்து கீழே விழுந்தான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது.

இன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டு வந்தான். நீட்டிய கைகளை வந்தியத்தேவன் பற்றிக் கொண்டு, தன் கால்களில் ஒன்றை எதிராளியின் கால்களின் மத்தியில் விட்டு ஒரு முறுக்கு முறுக்கினான்; அவ்வளவுதான்! அந்த மனிதன் 'அம்மாடி' என்று அலறிக் கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான். இதற்குள் மூன்றாவது ஆளும் நெருங்கி வரவே, வந்தியத்தேவன் தன் கால்களை எடுத்துக் கொண்டு ஒரு காலால் எதிரியின் முழங்கால் முட்டைப் பார்த்து ஒரு உதை விட்டான். அவனும் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.

மூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக் கொண்டு வந்தார்கள். வெகு ஜாக்கிரதையாகவே வந்தார்கள்.

இதற்குள் மாளிகை வாசலில் குதிரை வந்து நின்ற சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் "திருடர்கள்! திருடர்கள்!" என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான். மூன்று பேரும் அவனைப் பிடித்து நிறுத்தப் பார்த்தார்கள். மறுபடியும் "திருட்டுப் பயல்கள்! திருட்டுப் பயல்கள்!" என்று பெருங்குரலில் கூச்சலிட்டான் வந்தியத்தேவன்.

அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர், "இங்கே என்ன ரகளை?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

பக்க தலைப்பு



முப்பத்திரண்டாம் அத்தியாயம்
பரிசோதனை

சின்னப் பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து, "தளபதி! நல்ல சமயத்தில் தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். இந்தப் பக்காத் திருடர்கள் என்னுடைய உடைமைகளைத் திருடிக் கொண்டதுமல்லாமல், என்னையும் கொல்லப் பார்த்தார்கள்! விருந்தாளியை இப்படித்தானா நடத்துவது? இதுவா தஞ்சாவூர் சம்பிரதாயம்? நான் தங்களுக்கு மட்டும் விருந்தாளியல்ல, சக்கரவர்த்திக்கும் விருந்தாளி; சக்கரவர்த்தினி சொன்னதைத்தான் தாங்களும் கேட்டீர்களே! பட்டத்து இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்த தூதன். அப்படிப்பட்ட என்னை இந்தப் பாடுபடுத்துகிறவர்கள் மற்றவர்களை என்ன செய்து விட மாட்டார்கள்! இப்படிப்பட்ட திருடர்களைத் தங்கள் பணி ஆட்களாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறுகாரியம் பார்ப்போம்!" என்று சரமாரியாய்ப் பொழிந்தான்.

மூன்று வீரர்களை ஏக காலத்தில் எதிர்த்துப் புரட்டிக் கீழே தள்ளிய வாலிபனுடைய வீரச் செயலைப் பற்றிய வியப்பு இன்னும் பழுவேட்டரையரின் மனத்தை விட்டகலவில்லை. இத்தகைய வீரனை நாம் நமது காவற் படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு அதிகமாயிற்று. எனவே, அவர் சாந்தமான குரலில், "பொறு! தம்பி! பொறு! அப்படியெல்லாம் இவர்கள் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை! இவர்களை விசாரித்துப் பார்க்கிறேன்!" என்றார்.

"நான் கோருவதும் அதுதான்! இவர்களை விசாரியுங்கள்; விசாரித்து நீதி வழங்குங்கள்! என்னுடைய உடையும் உடைமையும் என்னிடம் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்றான் வல்லவரையன்.

"அடே! அந்தப் பிள்ளையை விட்டு விட்டு இப்படி வாருங்கள்! நான் சொன்னது என்ன? நீங்கள் செய்தது என்ன? இவன் மீது ஏன் கை வைத்தீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார் கோட்டைத் தளபதி.

"எஜமானே! தாங்கள் சொன்னு சொன்னபடியே செய்தோம். இவரை எண்ணெய் முழுக்காட்டிப் புதிய ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவித்தோம்; அறுசுவை உண்டி அளித்தோம். சித்திர மண்டபத்துக்கும் அழைத்து வந்தோம்! இவர் சிறிது நேரம் சித்திர மண்டபத்தில் உள்ள சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று நினைத்துக் கொண்டு இவருடைய பழைய உடைகளைக் கேட்டார். உடனே எங்களைத் தாக்கவும் ஆரம்பித்தார்!" என்றான் அவ்வீரர்களில் ஒருவன்.

"ஒரு சிறு பிள்ளையிடமா மூன்று தடியர்கள் அடிபட்டு விழுந்தீர்கள்?" என்று கூறி இரத்தக் கனல் வீச விழித்துப் பார்த்தார்.

"எஜமான்! அரண்மனை விருந்தாளியாயிற்றே என்று யோசித்தோம். இப்போது சற்று அனுமதி கொடுங்கள்; இவனை உடனே வேலை தீர்த்துவிடுகிறோம்."

"போதும் உங்கள் வீரப் பிரதாபம்! நிறுத்துங்கள்! தம்பி!... நீ என்ன சொல்லுகிறாய்?"

"இவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன். எனக்கும் அனுமதி கொடுங்கள். சோழ குலத்துப் பகைவர்களோடு போராடிக் கொஞ்சம் நாள் ஆயிற்று. தோள்கள் தினவெடுக்கின்றன. அரண்மனை விருந்தாளிகளை எப்படி நடத்த வேண்டுமென்று இவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன்!" என்றான் நமது வீரன்.

சின்னப் பழுவேட்டரையர் புன்னகை புரிந்து, "தம்பி! உன் தோள் தினவைத் தீர்த்துக் கொள்வதைச் சோழப் பகைவர்களோடேயே வைத்துக் கொள்! சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் தஞ்சைக் கோட்டைக்குள் இவ்விதம் சண்டை, சந்தடி ஒன்றும் உதவாது என்று கட்டளை!" என்று சொன்னார்.

"அப்படியானால் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் உடனே கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்கள்!"

"எங்கேடா அவை?"

"எஜமான்! தங்கள் கட்டளைப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம்."

"தளபதி! இவர்கள் எப்படிப் புளுகுகிறார்கள், பாருங்கள்! சற்றுமுன் உடைகளை வெளுக்கப் போட்டிருப்பதாய்ச் சொன்னார்கள். இப்போது தாங்கள் 'பத்திரப்படுத்தி' வைக்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். சற்றுப் போனால் தங்களுக்கே திருட்டுப் பட்டம்கூடக் கட்டி விடுவார்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

தளபதி காவலர்களைப் பார்த்து, "முட்டாள்களா! இந்தப் பிள்ளைக்கு புது ஆடைகள் கொடுக்கும்படி மட்டுந்தானே சொன்னேன்? பழையவைகளைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே?... இந்த மூடர்கள் என்னவோ உளறுகிறார்கள், தம்பி! போனால் போகட்டும், பழைய உடைகளைப் பற்றி எதற்காக இவ்வளவு கவலைப்படுகிறாய்? அதற்குள் ஏதாவது உயர்ந்த பொருள் வைத்திருந்தாயோ?" என்று கேட்டார்.

"ஆம்; வழிநடைச் செலவுக்காகப் பொற்காசுகள் வைத்திருந்தேன்..." என்று வந்தியத்தேவன் சொல்வதற்குள், "அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். உனக்கு வழிச் செலவுக்கு எவ்வளவு பொன் வேண்டுமோ அவ்வளவு தருகிறேன்!" என்றார் பழுவேட்டரையர்.

"தளபதி! நான் இளவரசர் கரிகாலருடைய தூதன். பிறரிடம் கை நீட்டி பணம் பெறும் வழக்கம் என்னிடம் கிடையாது..."

"அப்படியானால், உன்னுடைய உடைகளையும் அதற்குள்ளிருந்த பொற்காசுகளையும் திருப்பி உன்னிடம் சேர்ப்பிக்கச் செய்கிறேன். கவலைப்படாதே! உன் உடையில் வேறு பொருள் ஒன்றும் இல்லையல்லவா?"

வல்லவரையன் ஒரு கணம் யோசித்தான். அந்தத் தயக்கத்தைச் சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக் கொண்டார்.

"வேறொரு முக்கியமான பொருளும் என் அரைச்சுற்று ஆடையில் இருக்கிறது. அதை உங்கள் ஆட்கள் தொட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தொட்டிருந்தால் அவர்கள் தொலைந்தார்கள்!..."

"ஆகா! உனக்கு எத்தனை கோபம் வருகிறது? எங்கே, யாரிடத்தில் பேசுகிறோம் என்பதை மறந்துவிட்டே பேசுகிறாய். சிறு பிள்ளையாயிற்றே என்று மன்னித்து விடுகிறேன்; அப்படிப்பட்ட பொருள் என்ன?"

"தளபதி! அதைச் சொல்வதற்கு இல்லை. அது அந்தரங்க விஷயம்!"

"தஞ்சைக் கோட்டைக்குள் எனக்குத் தெரியாத அந்தரங்கம் ஒன்றும் இருக்க முடியாது!"

"இளவரசர் கரிகாலர் என்னிடம் ஒப்புவித்த அந்தரங்க விஷயம்."

"இளவரசர் வடதிசையின் மாதண்ட நாயகர். அவருடைய அதிகாரம் பாலாற்றுக்கு வடக்கே செல்லும். இங்கே சக்கரவர்த்தியின் அதிகாரந்தான் செல்லும்."

"தளபதி! புலிக் கொடி பறக்கும் இடமெல்லாம் சக்கரவர்த்தியின் அதிகாரந்தான். அதில் என்ன சந்தேகம்?"

"ஆகையினால்தான், இந்தக் கோட்டைக்குள்ளே எனக்குத் தெரியாத அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது என்று சொல்கிறேன். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தைக் கருதித்தான்!"

"தளபதி! சக்கரவர்த்தியைக் கண்ணுங் கருத்துமாய்க் காப்பாற்றி வருவதற்காக தங்களுக்கும் பெரிய பழுவேட்டரையருக்கும் சோழ சாம்ராஜ்யம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. இன்றைக்குச் சக்கரவர்த்தி தங்களைப் பாராட்டியதும் என் காதில் விழுந்தது. தங்களுக்குப் பயந்து கொண்டு தான் யமன் தஞ்சைக் கோட்டைக்குள் புகுந்து வராமல் தயங்கிக் கொண்டிருக்கிறான் என்று சக்கரவர்த்தி சொன்னாரே? அது எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!"

"ஆம், தம்பி! பழையாறையிலிருந்து சக்கரவர்த்தியை நாங்கள் இங்கே அழைத்து வந்து கட்டுக் காவலுக்குள் வைத்திராவிட்டால், இத்தனை நாளும் என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தெரியாது. பாண்டிய நாட்டுச் சதிகாரர்களின் நோக்கம் நிறைவேறியிருந்தாலும் இருக்கலாம்."

"ஆ! தாங்கள்கூட அவ்விதமே சொல்கிறீர்களே! அப்படியானால் நான் கேள்விப்பட்டது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்!"

"என்ன கேள்விப்பட்டாய்?"

"சக்கரவர்த்திக்கு விரோதமாக ஒரு சதி நடக்கிறதென்றும், சக்கரவர்த்தியின் திருக்குமாரர்களுக்கு விரோதமாக இன்னொரு சதி நடக்கிறதென்றும் கேள்விப்பட்டேன்."

சின்னப் பழுவேட்டரையர் தம் வஜ்ரப் பற்களினால் உதட்டைக் கடித்துக் கொண்டார். இந்தச் சிறு அறியாப் பையனுடன் பேச்சுக் கொடுத்ததில் தமக்கே இத்தனை நேரமும் தோல்வி என்பதை உணர்ந்தார். ஏறக்குறைய அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குத் தாம் பதில் சொல்லிச் சமாளிக்கும் நிலைமை வந்து விட்டது! எனவே, பேச்சை அத்துடன் வெட்டிவிட விரும்பினார்.

"உனக்கென்ன அதை பற்றிக் கவலை? எல்லாச் சதிகளையும் உடைத்துச் சோழ குலத்தைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். உன்னுடைய கோரிக்கையைச் சொல்லு. உன் பழைய ஆடைகள் உனக்கு வேண்டும்; அவ்வளவுதானே!" என்றார்.

"என் பழைய ஆடைகளும் வேண்டும்; அவற்றுக்குள் இருந்த பொருள்களும் வேண்டும்."

"என்ன பொருள்கள் என்று இன்னமும் நீ சொல்லவில்லையே!"

"சொல்லத்தான் வேண்டுமானால் சொல்லுகிறேன். அதன் பொறுப்பு தங்களைச் சார்ந்தது.இளவரசர் சக்கரவர்த்திக்குக் கொடுத்திருந்த ஓலையைத் தவிர இன்னொரு ஓலையும் என்னிடம் கொடுத்திருந்தார்..."

"இன்னொரு ஓலையா! யாருக்கு? நீ சொல்லவே இல்லையே!"

"அந்தரங்கமானபடியால் சொல்லவில்லை; நீங்கள் இப்போது வற்புறுத்துகிறபடியால் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள இளையபிராட்டி குந்தவை தேவிக்கு இளவரசர் ஓலை ஒன்று கொடுத்தார்!..."

"ஓஹோ! அப்படியானால், நாளைக்குச் சக்கரவர்த்தி கொடுக்கும் திருமுகத்தை நீ உடனே எடுத்துக் கொண்டு காஞ்சிக்குப் போக முடியாது. இளைய பிராட்டிக்கு இளவரசர் ஓலை அனுப்பும்படி இப்போது என்ன அவசரம் நேர்ந்ததோ?"

"தளபதி! நான் பிறருக்கு எழுதப்படும் ஓலையைப் படிப்பதில்லை. சக்கரவர்த்தியின் ஓலையைப் படித்ததுபோல் இதையும் நீங்கள் படிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் கிடையாது. அந்தப் பொறுப்பு தங்களுடையது. என் உடையிலிருந்த பொன்னும் ஓலையும் களவு போகாமல் என்னிடம் திரும்பி வந்தால் போதும்."

"அதைப் பற்றி பயம் வேண்டாம். நானே பார்த்து எடுத்து வருகிறேன்" என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார். அவர் பின்னோடு வந்தியத்தேவனும் தொடர்ந்தான். அதையறிந்த கோட்டைத் தளபதி கண்களினால் சமிக்ஞை செய்யவே ஐந்தாறு வேல் பிடித்த வீரர்கள் வந்து வாசற்படியண்டை குறுக்கே நின்றார்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதில் அனுகூலம் ஒன்றுமில்லையென்று கருதி வந்தியத்தேவன் அங்கேயே நின்றான்.

சற்று நேரத்துக்கெல்லாம் சின்னப் பழுவேட்டரையர் திரும்பி வந்தார். அவருக்குப் பின்னால் ஒருவன் ஒரு தட்டில் சீர் வரிசை ஏந்திக் கொண்டு வருவது போல் வந்தியத்தேவனுடைய பழைய ஆடைகளை எடுத்து வந்தான்.

"தம்பி! இதோ உன் ஆடைகள், பத்திரமாயிருக்கின்றன. நன்றாக சோதனை செய்து பார்த்துக் கொள்!" என்றார் கோட்டைத் தளபதி.

அவ்விதமே வந்தியத்தேவன் சோதனை செய்து பார்த்தான். அரைச்சுற்றுச் சுருளில் அவன் வைத்திருந்ததைக் காட்டிலும் அதிகமாகப் பொற்காசுகள் இருந்தன. குந்தவை தேவியிடம் சேர்ப்பிக்க வேண்டிய ஓலையும் இருந்தது. அதிக பொற்காசுகள் எப்படி வந்தன? முதலில் அவன் தேடிப் பார்த்தபோது இல்லாத ஓலை இப்போது எப்படி வந்தது? சின்னப் பழுவேட்டரையரிடம் அது அகப்பட்டிருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு இப்போது திரும்பி வந்த பிறகு அவர் அந்த ஓலையைத் திரும்பச் செருகியிருக்க வேண்டும்! எதற்காக இப்படிச் செய்திருக்கிறார்? பொற்காசுகள் எதற்காக அதிகம் வைத்திருக்கிறார்? பொல்லாத மனிதர் இவர்! இன்னும் எப்படியெல்லாம் தன்னைச் சோதிக்கப் போகிறாரோ, தெரியாது! இவரிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். ஏமாந்து போகக் கூடாது!

"எல்லாம் சரியாயிருக்கிறதா, தம்பி! நீ கொண்டு வந்த பொன், பொருள் எல்லாம்?" என்று சின்னப் பழுவேட்டரையர் கேட்டார்.

"இதோ பார்த்துச் சொல்கிறேன்." என்று கூறி வந்தியத்தேவன் பொற்காசுகளை எண்ணினான். அதிகப்படி காசுகளை எடுத்துத் தனியாக பழுவேட்டரையர் முன்பு வைத்துவிட்டு, "தளபதி! வாணர் குலத்தில் பிறந்தவன் நான்; ஆதித்த கரிகாலரின் தூதன்; பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை!" என்றான்.

"உன்னுடைய நேர்மையை மிக மெச்சுகிறேன். ஆயினும் உன்னுடைய வழிச் செலவுக்கு இதை நீ வைத்துக் கொள்ளலாம்! எப்போது புறப்பட விரும்புகிறாய்? இன்றைக்கே புறப்படுகிறாயா? அல்லது இன்றிரவு தங்கி இளைப்பாறிவிட்டு, பெரியவரையும் பார்த்துவிட்டுப் போகிறாயா?" என்று கேட்டார் தளபதி.

"அவசியம் இன்றிரவு இங்கே தங்கிப் பெரிய பழுவேட்டரையரையும் தரிசித்து விட்டுத்தான் போக எண்ணியிருக்கிறேன். ஆனால் உங்கள் ஆட்களிடம் மட்டும் கொஞ்சம் சொல்லி வையுங்கள்; என் பொருள்களில் கை வைக்க வேண்டாம் என்று!" -- இவ்விதம் சொல்லிக் கொண்டே அதிகப்படியாயிருந்த பொற்காசுகளையும் வந்தியத்தேவன் எடுத்துத் துணிச்சுருளில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

"மிக்க சந்தோஷம். உனக்கு இங்கே எந்தவிதமான இடைஞ்சல்களும் இனிமேல் இராது. உனக்கு என்ன வேண்டுமோ, தாராளமாய்க் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்."

"தளபதி! இந்தத் தஞ்சை நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாயிருக்கிறது. பார்க்கலாம் அல்லவா?"

"தாராளமாகப் பார்க்கலாம். இதோ இவர்கள் இருவரும் உன்னோடு வந்து கோட்டைக்குள் எல்லா இடங்களையும் காட்டுவார்கள்.கோட்டைக்கு வௌியில் மட்டும் போக வேண்டாம். சாயங்காலம் கோட்டைக் கதவுகளைச் சாத்திவிடுவார்கள்! வௌியில் போய்விட்டால் திரும்பி இரவு வரமுடியாது.கோட்டைக்குள்ளே உன் விருப்பப்படி சுற்றி அலையலாம்!" -- இவ்விதம் கூறிவிட்டு இரண்டு புதிய ஆட்களைச் சின்னப் பழுவேட்டரையர் தம் அருகில் அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அவர் சொன்னது என்னவாயிருக்கும் என்று வந்தியத்தேவன் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டான்.

பக்க தலைப்பு



முப்பத்துமூன்றாம் அத்தியாயம்
மரத்தில்ஒரு மங்கை!

கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. கோட்டை வாசல் வழியாக வௌியே யாரையும் போக விடாமல் பார்த்துக் கொள்ளும்படி கட்டளை பிறந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும் அவன் அன்று அன்று முன்னிரவுக்குள் தப்பிச் சென்றே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் வந்துவிட்டால், பிறகு தப்பித்துச் செல்வது இயலாத காரியம்; உயிர் பிழைத்திருப்பதே முடியாத காரியமாகிவிடும்!

ஆகவே, தஞ்சாவூர் கோட்டைக்குள் வந்தியத்தேவன் அங்குமிங்கும் அலைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அவனுடைய மனம் தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டேயிருந்தது. முதலில் இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்ப வேண்டும்; பின்னர், கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எப்படித் தப்புவது? அதுதான் தெரியவில்லை.

பார்க்கப்போனால் இவர்களிடமிருந்து தப்புவது பெரிய காரியமில்லை. இரண்டு பேரையும் ஒரு வினாடி நேரத்தில் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடலாம். ஆனால் எங்கே ஓடுவது? தஞ்சைக் கோட்டையைப் பழுவேட்டரையர்கள் எவ்வளவு பலப்படுத்திக் கட்டியிருக்கிறார்கள் என்பது நாடறிந்த செய்தி. அவர்களுடைய அனுமதியின்றித் தஞ்சைக் கோட்டைக்குள் காற்றுக்கூட நுழைய முடியாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். யமனும் வரமுடியாது என்று சக்கரவர்த்தியே இன்று காலையில் சொன்னார்.அத்தகைய கோட்டையிலிருந்து எப்படிச் செல்வது? இந்த இருவரையும் தொட வேண்டியதுதான்; அவர்கள் உடனே கூச்சல் கிளப்பிவிடுவார்கள். அடுத்த கணத்தில் தான் பாதாளச் சிறைக்குப் போக நேரிடும்; அல்லது உயிரிழக்க நேரிடும். இவர்களைத் தாக்குவதில் பயனில்லை; தாக்காமல் தந்திரத்தினாலேயே தப்பிக்க வேண்டும். அப்படித் தப்பித்த பிறகு கோட்டையிலிருந்து வௌியேற வழி தேட வேண்டும். எவ்வளவு பலமான கோட்டையாயிருந்தாலும் இரகசியச் சுரங்கவழி இல்லாமற் போகாது. அதை எப்படி கண்டுபிடிப்பது? அது யாருக்குத் தெரிந்திருக்கும்? தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தாலும், தனக்குச் சொல்வார்களா?

இப்படிப் பலவகையாகச் சிந்தித்துக் கொண்டே நடந்த போது, சட்டென்று பழுவூர் இளையராணியின் நினைவு வந்தது. ஆகா! அந்தக் கோட்டைக்குள் யாராவது தனக்கு உதவி செய்வதாயிருந்தால், அந்த மாதரசிதான் செய்யக்கூடும். அதுவும் சந்தேகந்தான். ஆனால் ஆழ்வார்க்கடியானின் பெயரைச் சொல்லி ஏதேனும் தந்திர மந்திரம் செய்து பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதற்கு முதலில் பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தாலும், தான் அங்கே ராணியைப் பார்க்கச் செல்வது இந்தத் தடியர்களுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் இவர்கள் போய்ச் சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிவிடுவார்கள். அதிலிருந்து என்ன விபரீதம் நேருமோ, யார் கண்டது? ஒருவேளை, பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் இருக்கும்போது அவரே வந்துவிட்டால் என்ன செய்வது? சிங்கத்தின் குகைக்குள் நாமாகச் சென்று தலையைக் கொடுப்பது போல ஆகுமே?

வந்தியத்தேவனுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வாயும் கண்களும் சும்மா இருந்துவிடவில்லை. பின்னோடு வந்தவர்களை "அது என்ன? இது என்ன?", "அது யார் அரண்மனை?", "இது யார் ாளிகை?", "இது என்ன கட்டடம்?", "அது என்ன கோபுரம்?" என்றெல்லாம் அவன் வாய் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனுடைய காதுகள், "இது பெரிய பழுவேட்டரையர் அரண்மனை" அல்லது "பழுவூர் இளையராணி அரண்மனை" என்ற மறுமொழி வருகிறதா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய கண்களோ அப்புறமும் இப்புறமும் நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்தன. அப்படிப் பார்த்து வந்தபோது ஒரு விஷயம் அவன் கண்கள் வழியாக மனத்தில் நன்கு பதிந்தது. கோட்டைக்குள்ளே பிரதான வீதிகள் விசாலமாயும் ஜனப் போக்குவரவு நிறைந்ததாயும் இருந்தபோதிலும் சந்து பொந்துகளும் ஏராளமாயிருந்தன. மரமடர்ந்த தோட்டங்களும் அதிகமாயிருந்தன. அந்தச் சந்து பொந்துகளின் வழியாகச் சென்று அடர்ந்த தோட்டங்களுக்குள் புகுந்து மறைந்து கொள்வது அசாத்தியமான காரியம் அல்ல. ஒரு நாள், இரண்டு நாள் கூடத் தலைமறைவாக இருப்பது சாத்தியந்தான். ஆனால் யாரும் பாராத சமயத்தில் மறைந்து கொள்ள வேண்டும்; யாரும் தேடாமலும் இருக்க வேண்டும். சின்னப் பழுவேட்டரையர் அவருடைய கணக்கற்ற ஆட்களைத் தேடுவதற்கு ஏவிவிட்டால் மறைந்திருப்பது சாத்தியமல்ல. அல்லது யாருடைய வீட்டுக்குள்ளாவது புகுந்து அடைக்கலம் பெற வேண்டும். அம்மாதிரி தஞ்சைக் கோட்டைக்குள் தனக்கு அடைக்கலம் யார் கொடுப்பார்கள்? பழுவூர் ராணி கொடுத்தால் தான் கொடுத்தது. தன்னுடைய கற்பனா சக்தியையெல்லாம் பிரயோகித்து அவளிடம் கதை கட்டிச் சொல்லி நம்பும்படி செய்ய வேண்டும். அதற்கு முதலில், இவர்களிடமிருந்து தப்பித்து நழுவ வேண்டும்...

ஆகா! இது என்ன கோஷம்? இது என்ன ஆர்ப்பாட்டம்?-- ஓ! இவ்வளவு கூட்டமாகப் போகிறார்களே, இவர்கள் யார்? தெய்வமே! நீ என் பக்கத்தில் இருக்கிறாய் என்பதில் சந்தேகமில்லை. இதோ ஒரு வழி புலப்படுகிறது! இதோ ஒரு துணை தோன்றுகிறது!...

குறுக்கு வீதியில் ஒரு திருப்பத்துக்கு வந்ததும், பிரதான வீதி வழியாக ஒரு பெரிய கும்பல் வாத்திய கோஷ ஜயகோஷ முழக்கங்களுடன் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து வந்தியத்தேவன் மேற்கண்டவாறு நினைத்தான். அந்தக் கும்பலில் சென்றவர்கள் வேளக்காரப் படையினர் என்பதைத் தெரிந்து கொண்டான். வழக்கம்போல் மகாராஜாவை தரிசனம் செய்துவிட்டு அவர்கள் கோட்டையை விட்டு வௌியேறுகிறார்கள் போலும்! இந்தக் கூட்டத்தில் தானும் கலந்து விட்டால்?... ஆகா! தப்புவதற்கு இதைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் என்ன?

பின்னோடு வருகிறவர்கள் அவ்வளவு சுலபத்தில் தன்னை விட்டுவிடமாட்டார்கள். தான் கூட்டத்தில் கலந்தால் அவர்களும்கூடத் தொடர்ந்து வருவார்கள். கோட்டை வாசல் வழியாக வௌியேறுவதும் எளிதாயிராது! வாசற் காவல் செய்வோர் அவ்வளவு ஏமாந்தவர்களாக இருந்துவிடுவார்களா? தன்னைக் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்திவிடமாட்டார்களா? ஆயினும் ஒரு பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டியதுதான்; வேறு வழியில்லை. கடவுளே பார்த்துக் காட்டியிருக்கும் இந்த வழியை உபயோகித்துக் கொள்ளாவிட்டால் தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இல்லை.

வழக்கம்போல், பின்னோடு வந்தவர்களைப் பார்த்து, "இது என்ன கூட்டம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். "வேளக்காரப் படை" என்று சொன்னதும், அந்தப் படையைப் பற்றிய விவரங்களைக் கேட்கலானான். அத்தகைய வீரப் படையில் தானும் சேர்ந்துவிட விரும்புவதாகவும், ஆகையால் நெருங்கிப் பார்க்க வேண்டுமென்றும் சொன்னான். இப்படியெல்லாம் பேசிக் கொண்டே வேளக்காரப் படையை அணுகினான். சிறிது நேரத்தில் "முன்னால் தாரை தப்பட்டை முழக்குகிறவர்களைப் பார்க்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வேளக்காரப் படைக் கூட்டத்தில் கலந்துவிட்டான்.

கூட்டம் மேலே போகப் போக, இவனும் ஒரே இடத்தில் நில்லாமல் மேலும் கீழும் அப்பாலும் இப்பாலும் நகர்ந்து கொண்டிருந்தான். வேளக்காரப் படை வீரர்களைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடன் கோஷங்களைச் செய்தான். அவ்வீரர்களில் சிலர் இவனை உற்று உற்றுப் பார்த்தார்கள். "இவன் யார் பைத்தியக்காரன்?" என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள். "மிதமிஞ்சி மதுபானம் செய்தவன் போலிருக்கிறது!" என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள். ஆனால் யாரும் அவனைத் தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ முயலவில்லை.

அவனுடன் வந்த சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களோ, வேளக்கார படைக்குள் நுழையத் துணியவில்லை. "எப்படியும் அவன் வௌியில் வருவான், அப்போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம்" என்ற நம்பிக்கையுடன் வேளக்காரப் படையின் ஓரமாகச் சற்று விலகியே அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

அச்சமயம் வீதியில் எதிர்ப்புறமாகத் தயிர்க் கூடையுடன் வந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீ வேளக்காரப் படைக்கு ஒதுங்கி ஒரு சந்தில் நின்றாள். அந்த வீரர்களில் ஒருவன், "அம்மா! தாகமாயிருக்கிறது; கொஞ்சம் தயிர் தருகிறாயா? என்று கேட்டான். அந்தப் பெண் துடுக்காக, "தயிர் இல்லை; கன்னத்தில் இரண்டு அறை வேணுமானால் தருகிறேன்!" என்றாள்.

அதைக் கேட்ட ஒரு வீரன் "ஓகோ! அதைத்தான் கொடுத்துவிட்டுப் போ!" என்று அந்தப் பெண்ணை அணுகிச் சென்றான். தயிர்க்காரப் பெண் பயந்து ஓடினாள். வீரன் அவளைத் தொடர்ந்து ஓடினான். அவளைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக இன்னும் இரண்டு வீரர்கள் ஓடினார்கள். ஓடியவர்கள் அனைவரும் தலைக்குத் தலை ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடியபடியால் விஷயம் என்னவென்பதை யாருக்கும் தெரியவில்லை. ஏதோ தமாஷ் என்று மட்டும் எல்லாரும் எண்ணினார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் வல்லவரையன். அந்த ஒரு கணத்தில் அவன் மனத்திற்குள் தீர்மானத்துக்கு வந்து விட்டான். தீர்மானிப்பதும் தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவதும் வந்தியத்தேவனுக்கு ஒன்றுதான் என்பதை நாம் ஏற்கெனவே பல முறை பார்த்திருக்கிறோம். தீர்மானித்த பிறகு தயங்குவதென்பது அவனுடைய இயற்கைக்கு விரோதமானது. எனவே, "ஓடு! ஓடு!", "பிடி!பிடி!" என்று கூவிக் கொண்டே வந்தியத்தேவனும், தயிர்க்காரப் பெண்ணைத் துரத்திக் கொண்டு ஓடியவர்களைத் தொடர்ந்து தானும் ஓடினான். அந்தப் பெண் சற்றுத் தூரம் ஓடி, ஒரு குறுகிய சந்தில் திரும்பினாள். பின் தொடந்து ஓடியவர்கள் அங்கே போய்ப் பார்த்தபோது தயிர்க்காரப் பெண்ணைக் காணவில்லை. மாயமாய் மறைந்து விட்டாள்! துரத்தி வந்த வீரர்களும் அவளைப் பற்றி அப்புறம் கவலைப்படவில்லை; திரும்பிவிட்டார்கள். வந்தியத்தேவன் மட்டும் திரும்பவில்லை. அந்தப் பெண் புகுந்து சென்ற சந்து வழியாகவே மேலும் ஓடினான். இன்னும் இரண்டு மூன்று சந்துகள் புகுந்து திரும்பிய பிறகே ஓட்டத்தை நிறுத்தி மெதுவாக நடக்கலுற்றான்.

வேளக்காரப் படை சாதாரணமாகக் கோட்டையிலிருந்து வௌியேறும் நேரம் சூரியாஸ்தமன நேரம் அல்லவா? வந்தியத்தேவன் இப்போது புகுந்து சென்ற சந்துகளில் ஏற்கெனவே இருள் சூழ்ந்து விட்டது. இருபுறமும் சில இடங்களில் மதில்சுவராயிருந்தது. சில இடங்களில் செடி கொடிகள் அடர்ந்த வேலியாயிருந்தது. வந்தியத்தேவன் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டேயிருந்தான். திசையைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. பெரிய வீதிகளில் புகாமல் சந்து பொந்துகளின் வழியாகப் புகுந்து போனால் எப்படியும் கோட்டை வௌிச்சுவரை அடைந்தே தீர வேண்டும். கோட்டைச் சுவரை அடைந்த பிறகு என்ன செய்வது என்பதைப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம். யோசித்து யுக்திகள் கண்டுபிடிப்பதற்குத்தான் இரவெல்லாம் நேரம் இருக்கிறதே!

சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாக இருட்டிவிட்டது. அவன் சென்ற பாதை கடைசியில் ஒரு மதில் சுவரில் வந்து முடிந்தது. இருட்டில் நடந்து வந்த வந்தியதேவன் அச்சுவரின் மேல் இலேசாக மோதிக் கொண்டான். சுவர் என்று மட்டும் தெரிந்தது. அது என்ன சுவர், எவ்வளவு உயரமான சுவர் என்பது ஒன்றும் தெரியவில்லை. அநேகமாக அது கோட்டை மதில் சுவராகவே இருக்கலாம். அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவதுதான் சரி. சிறிது நேரத்துக்கெல்லாம் சந்திரன் உதயம் ஆகும். அப்போது பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதுவரை ஒளிந்திருப்பதற்கு இதைக் காட்டிலும் நல்ல இடம் இருக்க முடியாது. இத்தனை நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் திரும்பிப் போய்ச் சொல்லியிருப்பார்கள். கோட்டைத் தளபதி தன்னுடைய ஆட்களை நாலாபுறமும் ஏவியிருப்பார். ஒருவேளை வேளக்காரப் படையுடன் தான் வௌியேறியிருக்கலாம் என்றும் சந்தேகித்திருப்பார். கோட்டைக்கு உள்ளேயும்வௌியிலேயும் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தேடட்டும்; தேடட்டும்; நன்றாகத் தேடட்டும். அவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு, நான் இக்கோட்டையை விட்டுத் தப்பித்துச் செல்லாவிட்டால் நான் வாணர் குலத்தவன் அல்ல! என் பெயரும் வந்தியத்தேவன் அல்ல!

ஆனால் சந்திரன் உதயமாகி நிலா அடிக்கத் தொடங்கி விட்டால் பழுவேட்டரையர் ஆட்களுக்கும் வசதியாகப் போய்விடும். தன்னைத் தேடி இங்கே வந்தாலும் வந்துவிடுவார்கள். வந்தால் வரட்டும்; தாராளமாய் வரட்டும்; இந்த அடர்ந்த தோப்புக்குள் ஒளிந்து கொண்டால் யார்தான் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

இப்படி எண்ணிக் கொண்டே சுவரின் மீது சாய்ந்து கொண்டு வந்தியத்தேவன் உட்கார்ந்தான். இளம்பிள்ளையாதலாலும் பகலெல்லாம் அலைந்து களைத்திருந்தபடியாலும் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. மேலக்காற்றில் மரக்கிளைகள் ஆடி ஒன்றோடொன்று உராய்ந்து உண்டாக்கிய சத்தம் தாலாட்டுப் பாடலைப் போல மயக்கத்தை உண்டுபண்ணியது. அப்படியே தூங்கிவிட்டான்.

அவன் தூக்கம் நீங்கிக் கண் விழித்த போது சந்திரன் உதயமாகிக் கீழ்வானத்தில் சிறிது தூரம் மேலே வந்திருந்தது.அடர்ந்த மரக்கிளைகளின் வழியாக நிலா வௌிச்சம் வந்து சுற்றுப்புற காட்சிகளை அரைகுறையாக அவனுக்குக் காட்டியது. தனது நிலை என்னவென்பதை வந்தியத்தேவன் ஞாபகப்படுத்திக் கொண்டான். சுவரில் சாய்ந்தபடி தான் தூங்கிவிட்டது அவனுக்கு வியப்பை அளித்தது. அதைக் காட்டிலும் துயில் நீங்கி விழித்துக் கொண்டது ஆச்சரியம் அளித்தது. தன்னுடைய துயிலை நீக்கி விழிக்கச் செய்த காரணம் யாது? ஏதோ ஒரு குரல் கேட்டதுபோல் தோன்றியதே? அது மனிதக் குரலா? அல்லது விலங்கின் குரலா? அல்லது இரவில் விழித்திருக்கும் பறவையின் குரலா? - குரல் கேட்டதுதான் உண்மையா?

வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். அரைகுறையான நிலா வௌிச்சத்தில் செங்குத்தான சுவர் தெரிந்தது. ஆ! இது கோட்டைச் சுவராயிருக்க முடியாது; கோட்டைச் சுவர் இன்னும் உயரமாயிருக்கும். ஒருவேளை வௌிக்கோட்டைச் சுவருக்குள்ளே இன்னொரு சிறிய கோட்டைச் சுவராக இருக்குமோ? அல்லது பெரியதொரு அரண்மனைத் தோட்டத்தின் மதிள் சுவரோ?

அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் எழுந்தான். ஒருகணம் அவனுடைய இருதயத் துடிப்பு நின்று போயிற்று. வயிற்றிலுள்ள குடல் மேலே மார்பு வரை விம்மி வந்து அடைத்தது. அவ்வளவு பீதி உண்டாயிற்று. அதோ அந்த மதில் சுவருக்கு மேலேயுள்ள மரக்கிளையில் இருப்பது என்ன? மரங்களில் வசிக்கும் வேதாளம் என்னும் பிசாசைப் பற்றி அவன் கேட்டிருந்த கதைகள் பலவும் நினைவுக்கு வந்தன.

ஆனால் வேதாளம் பேசுமா? மனிதக் குரலில் பேசுமா? அதுவும் பெண்ணின் குரலில் பேசுமா? இந்த வேதாளம் அவ்வாறு பேசுகிறதே? என்ன சொல்கிறது என்று கேட்கலாம்.

"என்ன ஐயா! சுவரில் சாய்ந்தபடி தூங்கிவிட்டாயா? எத்தனை தடவை கூப்பிடுகிறது?"

ஆ! இது வேதாளம் அல்ல. மனித குலத்துப் பெண்மணிதான் பேசுகிறாள். மரக்கிளையின் மீது உட்கார்ந்திருப்பவள் ஒரு பெண்மணிதான்! இது என்ன கனவா? அல்லது உண்மையில் நடப்பதா?

"அழகுதான்! இன்னும் தூக்கம் கலையவில்லை போலிருக்கிறது. இதோ ஏணியை வைக்கிறேன். ஜாக்கிரதையாக ஏறி வா! கீழே விழுந்து தொலைக்காதே!"

இப்படிச் சொல்லிக் கொண்டே அப்பெண் சுவரின் உட்புறத்திலிருந்து மெல்லிய மூங்கிலினால் ஆன ஏணி ஒன்றை எடுத்து வௌிப்புறத்தில் சுவர் ஓரமாக வைத்தாள்.

வந்தியத்தேவனுக்கு ஒன்றும் விளங்கவில்லைதான்! ஆனாலும் இப்படிப்பட்ட அரிய சந்தர்ப்பத்தை-- தன்னைத் தேடி வரும் சந்தர்ப்பத்தை அவன் விட்டு விடுவானா?

வருகிறது வரட்டும்; பிறகு நடப்பது நடக்கட்டும். இப்போது இந்த ஏணியில் ஏறலாம்; சுவரின் உச்சியை அடைந்த பிறகு மற்ற விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஏணியில் முக்கால் பங்கு அவன் ஏறிய போது அந்தப் பெண் மறுபடியும், "நல்ல தாமதக்காரன் நீ! அங்கே இளைய ராணியம்மாள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நீ மதில் சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய்!" என்றாள். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் ஏணியிலிருந்து நழுவி விழுந்து விட இருந்தான். நல்ல வேளையாக, அங்கே சுவரில் நீட்டிக் கொண்டிருந்த கல்லைப் பிடித்துக் கொண்டு சமாளித்தான்.

இளைய ராணியென்றால், பழுவூர் இளைய ராணியாகத்தான் இருக்கும்! நான் இங்கே வந்து உட்கார்ந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது? மாயமந்திரம் ஏதோ அவள் அறிந்திருக்க வேண்டும்! தன்னைப் பார்ப்பதில் அவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்படக் காரணம் என்ன? ஒருவேளை, - ஒருவேளை, - வேறு எவனுக்காகவோ வைத்த ஏணியில் நான் ஏறி விட்டேனோ? எப்படியிருந்தாலும் இருக்கட்டும்! முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது! எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்து போய்விடுகிறது.

சுவரின் உச்சியருகில் வந்ததும் அவனுடைய கையைப் பிடித்து அந்தப் பெண் தூக்கிவிட்டாள். அப்போது நிலா வௌிச்சம் அவள் முகத்தில் அடித்தது. இதற்குள் ஆச்சரியப்படும் சக்தியையே வந்தியத்தேவன் இழந்து விட்டான். அதனால்தான் அவளுடைய முகம் வேளக்காரப் படையினர் துரத்திய தயிர்க்கூடைக்காரியின் முகம் போலத் தோன்றியும், அவன் சுவரிலிருந்து தவறி விழவில்லை. இன்றிரவு இதற்கு மேல் என்னென்ன வியப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும் வியப்படைவதற்கு இடமில்லைதான்.

"ஊம்! ஏன் விழித்துக் கொண்டு சுவர் மேலேயே உட்கார்ந்திருக்கிறாய்? ஏணியை எடுத்து உள்ளே இறக்கிவிட்டுக் குதி சீக்கிரம்!" என்று சொல்லிக் கொண்டே அந்தப் பெண் சரசரவென்று மரக்கிளையிலிருந்து கீழே இறங்கினாள்.

வந்தியத்தேவன் அவள் கூறியவாறே செய்தான். அவன் இறங்கிய இடம் ஒரு விஸ்தாரமான தோட்டம் என்று தெரிந்தது. சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய அரண்மனையின் மாடகூட கோபுரங்களும் சிகரங்களும் மங்கிய நிலா வௌிச்சத்தில் சொப்பன உலகக் காட்சியைப் போல் தோன்றின.

அது யாருடைய அரண்மனை என்று கேட்பதற்காக வந்தியத்தேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். உடனே அந்தப் பெண் "உஷ்" என்று சொல்லி, உதட்டில் விரலை வைத்து எச்சரித்துவிட்டு முன்னால் நடந்தாள். வந்தியத்தேவன் அவளைத் தொடர்ந்து சென்றான்.

பக்க தலைப்பு



முப்பத்து நான்காம் அத்தியாயம்
லதா மண்டம்

அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம்மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடரந்து சென்றான். மரஞ் செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல், அந்த இருளில் நடந்து செல்லுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு சமயம் இவன் மரத்தில் மோதிக் கொள்ளப் பார்த்துத் தயங்கி நின்றபோது, அந்த மங்கை திரும்பிப் பார்த்து, "ஏன் நிற்கிறாய்? வழி மறந்து போய் விட்டதா? நீதான் இருட்டில் கண் தெரிகிற மனிதன் ஆயிற்றே!" என்றாள். அதற்குப் பதிலாக வந்தியத்தேவன் உதட்டில் விரலை வைத்து முன்னால் அவள் சொன்னது போல் "உஷ்!" என்றான். அதே நேரத்தில் மதில் சுவருக்கு வௌியே ஏதோ சப்தம் கேட்டது. மனித நடமாட்டம் போலத் தொனித்தது. பிறகு இருவரும் மறுபடி நடந்தார்கள். கொஞ்ச தூரம் போனதும் வல்லவரையன் இலேசாகச் சிரித்தான். அந்த மங்கை திரும்பிப் பார்த்து, "என்னத்தைக் கண்டு சிரிக்கிறாய்?" என்றாள்.

"கண்டு சிரிக்கவில்லை; கேட்டுச் சிரிக்கிறேன்!"

"அப்படியென்றால்?..."

"என்னைத் தேடி வந்தவர்களின் காலடிச் சத்தத்தைச் சற்று முன் நீ கேட்கவில்லையா? அவர்கள் ஏமாந்து போனதை எண்ணிச் சிரிக்கிறேன்!"

அவள் சிறிது பயத்துடன், "உன்னை யாராவது தேடி வருகிறார்களா என்ன? எதற்காக?" என்றாள்.
"இல்லாவிட்டால் எதற்காக இந்தக் குருட்டு இருட்டில் மதில் சுவரில் வந்து மோதிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?" அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது.

அந்தப் பெண் சற்று வியப்புடனும் திகைப்புடனும் அவனைப் பார்த்தாள்.

"என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டான்.

"நீ, நீதானா என்று பார்த்தேன்!"

"நான், நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன்?"

"போன தடவை நீ வந்திருந்த போது பெரிய மீசை வைத்திருந்தாயே!"

"நல்ல கேள்வி கேட்கிறாய்! என்னைப் போல் சுவர் ஏறி குதித்து வருகிறவன் அடிக்கடி வேஷத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் எப்படி?"

"முன்னைக்கு இப்போது இளமையாய்த் தோன்றுகிறாயே?"

"உற்சாகம் இருக்கும்போது இளமைதானே வருகிறது!"

"அப்படி உனக்கு என்ன உற்சாகம் வந்தது?"

"உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?"

"பரிகாசம் செய்ய வேண்டாம். இன்றைக்கு எங்கள் எஜமானி இளைய ராணிதான். ஒருநாள் நிச்சயமாக மகாராணி ஆவார்கள்!"

"அதைத்தான் நானும் சொல்லுகிறேன்."

"இதுதானா சொல்வாய்? உன்னுடைய மந்திர சக்தியினால்தான் மகாராணி ஆனார்கள் என்று கூடச் சொல்வாய்! பாதி ராஜ்யத்தைக் கொடு என்று கேட்டாலும் கேட்பாய்!"

வந்தியத்தேவன் அறிய விரும்பியதை ஒருவாறு அறிந்து கொண்டான். பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. தீவிரமாக யோசித்துக் கொண்டே நடந்தான்.

தான் சந்திக்கப் போகிறது யாரை? பழுவூர் இளையராணியாயிருக்கலாம். அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளாயிருக்கலாம். தன்னை மந்திரவாதியென்று எண்ணி அந்தப் பெண் அழைத்துக் கொண்டு போகிறாள். போய், அந்த 'இளையராணி' யாராயிருந்தாலும் அவளைச் சந்திக்கும்போது எப்படி நடந்து கொள்வது? நெஞ்சே! தைரியத்தைக் கைவிடாதே! தைரியம் உள்ள வரையில் ஜயமும் உண்டு! சமயத்தில் ஏதேனும் யுக்தி தோன்றாமல் போகாது! இதுவரையில் எந்த நெருக்கடியிலும் நாம் தோல்வியுற்று வந்ததில்லை. அதிலும் பெண்பிள்ளை ஒருத்தியிடமா தோல்வியடையப் போகிறோம்?

ஒரு பெரிய மாளிகையை அவர்கள் நெருங்கிச் சென்றார்கள். ஆனால் மாளிகையின் முன் வாசலை நோக்கிச் செல்லவில்லை. பின்புற வாசலையும் நெருங்கவில்லை. மாளிகையின் ஒரு பக்கத்தில் தோட்டத்துக்குள் நீட்டி விட்டிருந்த சிருங்கார லதா மண்டபத்தை நெருங்கினார்கள். இன்னும் அருகில் நெருங்கிய போது, அந்த லதா மண்டபம் இரண்டு பெரிய பிரம்மாண்டமான மாளிகைகளை ஒன்று சேர்க்கும் பாதையைப் போல் அமைந்திருப்பது தெரிந்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட இரு கட்டடங்களும் ஒருவிதத்தில் மாறுபட்டிருந்தன. வலதுபுறத்து மாளிகை அதன் உள்ளே சுடர் விட்டு எரிந்த பல தீபங்களினால் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளிருந்து பலவித கலகலப்பான தொனிகள் வந்து கொண்டிருந்தன. இடதுபுறத்துக் கட்டடத்திலோ, ஒரு சின்னஞ் சிறு தீபம் கூட எரியவில்லை. நிலா வௌிச்சத்தில் அதன் வௌிச்சுவர்கள் நெடிதுயர்ந்து தெரிந்தன. ஆனால் அந்த மாளிகையின் உள்ளே நிசப்தமும் இருளும் குடிகொண்டிருந்தன.

வந்தியத்தேவனை அழைத்துக் கொண்டு வந்த பெண், லதா மண்டபத்தை அணுகியதும் அவனைப் பார்த்துச் சமிக்ஞையினால் அங்கேயே நிற்கும்படி சொன்னாள். அவனும் அப்படியே நின்றான். அவ்விதம் நின்றபோது தான் அந்த இடத்தில் நிறைந்திருந்த மலர்களின் நறுமணத்தை அவன் உணர்ந்தான்.அப்பப்பா! என்ன வாசம்! என்ன வாசம்! மூக்கில் நெடி போல ஏறித் தலையைக் கிறுகிறுக்க அடிக்கிறதே!

அந்தப் பெண் லதா மண்டபத்துக்குள் நுழைந்ததும், அவளுடைய குரலும் இன்னொரு இனிய பெண் குரலும் கேட்டன. "வரச் சொல் உடனே! கேட்பானேன்? நான்தான் இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறேன் என்று தெரியுமே?" என்ற சொற்கள் அவனுக்கு மயக்கத்தை உண்டாக்கின. அந்தக் குரல் பழுவூர் இளையராணியின் குரல்தான்! சந்தேகமில்லை! அடுத்த கணம் அவள் முன்னால் போய் நிற்கப் போகிறோம். அந்த நிலைமையை எவ்விதம் சமாளிக்கப் போகிறோம்? எதிர்பார்த்த மந்திரவாதிக்குப் பதிலாகப் பல்லக்கில் வந்து மோதிய மனிதன் வந்து நிற்பதைக் கண்டு அவள் என்ன நினைப்பாள்? ஆச்சரியப்படுவாளா? கோபம் கொள்வாளா? ஒருவேளை மகிழ்ச்சி அடைவாளா?... அல்லது எவ்வித உணர்ச்சியையும் வௌியில் காட்டாமல் நடந்து கொள்வாளா?

அவனை அழைத்து வந்த மங்கை லதா மண்டபத்து வாசலில் நின்றபடி சமிக்ஞையால் அழைத்தாள்.

வந்தியத்தேவன் அவள் நின்ற இடத்தை அடைந்து மண்டபத்தின் உட்புறம் நோக்கினான். ஒரு நொடிப் பொழுதில் அங்கே தோன்றிய காட்சி அவன் கண் வழியாக மனத்தில் பதிந்தது. தங்க விளக்கு ஸ்தம்பத்தில் ஒளிர்ந்த தீபச் சுடர் பொன் ஒளியைப் பரப்பியது. ஏதோ ஓர் அபூர்வமான வாசனைத் தைலத்தை அந்த விளக்கில் விட்டிருக்க வேண்டும். ஆதலின் தீபச் சுடரின் புகை கமகமவென்று மணம் வீசிற்று. பல வர்ண நறுமண மலர்களைப் பரப்பிய சப்ரகூட மஞ்சத்தில் ஒரு பெண் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு வீற்றிருந்தாள்.

அவள் பழுவூர் இளையராணிதான். பகலில் பல்லக்கில் பார்த்தபோது அவள் அழகியாகத் தோன்றினாள். இரவில் தங்கக் குத்துவிளக்கின் வௌிச்சத்தில் அழகென்னும் தெய்வமே உருவெடுத்தது போலக் காணப்பட்டாள். மலரின் மணமும் விளக்கின் புகை மணமும் பழுவூர் இளையராணியின் மோகன உருவமும் சேர்ந்து வந்தியத்தேவனைப் போதை கொள்ளச் செய்தன.

வந்தியத்தேவா! ஜாக்கிரதை! ஒரே ஒரு தடவை நீ மதுபானம் செய்தாய்! உன் அறிவு கலங்குவதை அறிந்தாய்! பிறகு மதுவைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தாய்! இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொள்! மதுவின் போதையைக் காட்டிலும் சக்தி வாய்ந்த இந்த மயக்கத்தில் உன் அறிவைப் பறிகொடுத்துவிடாதே!

வந்தியத்தேவனைப் பார்த்த பழுவூர் இளையராணி நந்தினி, அவளுடைய பவழ இதழ்கள் சிறிது விரிந்து முத்துப் பற்களை வௌிக்காட்டும்படி வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள். பேச முடியாத நிலையை அவள் அச்சமயம் அடைந்திருந்தது வந்தியத்தேவனுக்கு அனுகூலமாகப் போயிற்று.

இலேசாக அவன் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, "அம்மணி! தங்கள் தாதிப் பெண்ணுக்குத் திடீரென்று சந்தேகம் வந்து விட்டது;-- நான் மந்திரவாதியா இல்லையா என்று! அதை எப்படிக் கேட்டாள் என்று நினைக்கிறீர்கள்? 'நீ நீதானா?' என்று கேட்டாள்!" என்று சொல்ல மறுபடியும் சிரித்தான்.

நந்தினி புன்னகை புரிந்தாள். வந்தியத்தேவனுடைய கண் முன்னால் ஒரு மின்னல் மின்னியது! அது தேனைச் சொரிந்தது.

"இவளுக்கு அப்படித்தான் ஏதாவது சந்தேகம் திடீர் திடீர் என்று வந்துவிடும்! வாசுகி! ஏன் இங்கேயே மரம்போல் நிற்கிறாய்? உன் இடத்துக்குப் போ! யாராவது வரும் காலடிச் சத்தம் கேட்டால் கதவைப் படீரென்று சாத்து! என்றாள் நந்தினி.

"இதோ, அம்மா!" என்று சொல்லிவிட்டு, வாசுகி லதா மண்டபத்தின் உள் வழியாகப் பிரகாச மாளிகைக்குச் சென்ற நடைபாதையில் நடந்து போய்ச் சற்றுத் தூரத்தில் மங்கலாகத் தெரிந்த வாசற்படியாண்டை உட்கார்ந்து கொண்டாள்.

நந்தினி சிறிது குரலைத் தாழ்த்திக் கொண்டு, "உன்னை மந்திரவாதியில்லையென்றா இவள் சந்தேகிக்கிறாள்? அசட்டுப் பெண்! மந்திரவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் வெறும் பொய்யர்கள். நீதான் உண்மை மந்திரவாதி! என்ன மாய மந்திரம் செய்து இந்தச் சமயத்தில் இங்கே வந்தாய்?" என்று கேட்டாள்.

"அம்மணி! மாயமந்திரம் செய்து நான் இங்கு வரவில்லை. சுவர் மீது சாத்தியிருந்த ஏணி மேல் ஏறித்தான் வந்தேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"அதுதான் தெரிகிறதே! இந்தப் பெண்ணை என்ன மாயமந்திரம் செய்து ஏமாற்றினாய் என்று கேட்டேன்."

"நிலா வௌிச்சத்தில் ஒரு புன்னகை புரிந்தேன். அவ்வளவுதான்! அதற்குச் சரிப்பட்டு வராவிட்டால் தாங்கள் கொடுத்த மந்திர மோதிரத்தைக் காட்ட எண்ணியிருந்தேன்."

"அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அந்த மோதிரம் இருக்கும்போது பட்டப் பகலில் பகிரங்கமாக இங்கே வந்திருக்கலாமே? எதற்காக இந்தக் குருட்டு வழியில் திருட்டுத்தனமாக வந்தாய்?"

"அம்மணி! தங்கள் மைத்துனர் இருக்கிறாரே, சின்னப் பழுவேட்டரையர், அவருடைய ஆட்கள் சுத்தத் திருடர்கள். முதலில் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் திருடப் பார்த்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து ஒரு கணம் கூடப் பிரியாமல் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து பிரிய பட்டபாடு பெரும் பாடாகப் போயிற்று. பிரிந்த பிறகு சந்து பொந்துகளில் புகுந்து தங்களுடைய மாளிகை மதில் சுவரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் சுவர் மேல் வைத்த ஏணியைப் பார்த்ததும் தாங்கள் தான் இந்த ஏழையை நினைவுகூர்ந்து இந்த ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். அது தவறு என்று தெரிந்து கொண்டேன். மன்னிக்க வேண்டும்."

"மன்னிப்பதற்கு அவசியம் ஒன்றும் ஏற்படவில்லையே!"

"அது எப்படி, அம்மணி ?"

"நீ நினைத்தது அவ்வளவாகத் தவறும் இல்லை. மந்திரவாதியை எதற்காக நான் தருவிக்க நினைத்தேன், தெரியுமா?"

"தெரியவில்லை அம்மணி! எனக்கு மந்திரமும் தெரியாது; ஜோசியமும் தெரியாது!"

"உன்னை நேற்றுக் காலையில் பார்த்தது முதலாவது உன்னுடைய ஞாபகமாகவே இருந்தது. நீ ஏன் இன்னும் என்னைப் பார்க்க வரவில்லையென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காகவே தான் நான் மந்திரவாதியைக் கூப்பிட்டனுப்பினேன்."

"மிக்க ஆச்சரியமாயிருக்கிறது."

"எது?"

"இப்போது நீங்கள் சொன்னதுதான். நேற்று உங்களைப் பார்த்தது முதலாவது எனக்கும் உங்கள் ஞாபகமாகவேயிருந்தது!"

"பூர்வ ஜன்ம வாசனையில் உனக்கு நம்பிக்கை உண்டா?"

"அப்படியென்றால்?"

"பூர்வ ஜன்மத்தில் இரண்டு பேருக்கு நட்போ, உறவோ இருந்தால், இந்த ஜன்மத்திலும் அத்தகைய தொந்தம் ஏற்படும் என்கிறார்களே, அதைத்தான் சொல்லுகிறேன்."

"நேற்று வரையில் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நேற்றுத் தான் அதில் நம்பிக்கை பிறந்தது."

இவ்விதம் வந்தியத்தேவன் கூறிய போது வௌிப்படையாகப் பொய் சொன்னான் என்றாலும், மனத்திற்குள் குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த பெண்ணை நினைத்துக் கொண்டுதான் சொன்னான். ஆனால் நந்தினிக்கு அதைப் பற்றிய விவரமே தெரிய இடமில்லையல்லவா? தன்னைப் பற்றிச் சொல்வதாகவே நினைத்துக் கொண்டாள்.

"ஆனால் அதற்காக நீ என்னைப் பார்க்க வரவில்லையே? ஏதோ ஆழ்வார்க்கடியார்நம்பி என்பவர் செய்தி சொல்லி அனுப்பியதாக..."

"ஆம், அம்மணி, அவர் சொல்லி அனுப்பிய செய்தியைத் தங்களிடம் சொல்வதற்காகவே முதலில் தங்களைப் பார்க்க விரும்பினேன். தங்களை ஒருமுறை பார்த்த பிறகு, பழைய காரணமெல்லாம் மறந்து போய்விட்டது."

"ஆழ்வார்க்கடியாரை நீ எங்கே பார்த்தாய்? என்ன செய்தி சொல்லியனுப்பினார்?"

"வீர நாராயணபுரத்துக்கு அருகில் ஆழ்வார்க்கடியார்நம்பியைச் சந்தித்தேன். அவர் தம் கைத்தடியின் சக்தியைக் கொண்டு விஷ்ணுதான் பெரிய தெய்வம் என்று மெய்ப்பிக்க முயன்றார். அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையரின் பரிவாரங்கள் வந்தன. அவரைத் தொடர்ந்து தங்கள் பல்லக்கும் வந்தது. அங்கே என்ன ரகளை என்று பார்ப்பதற்காகவோ என்னவோ, தங்களுடைய ஒரு பொற்கரம் பல்லக்கின் திரையை விலக்கிற்று. அப்போதுதான் தாங்கள் என்று தெரிந்து கொண்டு ஆழ்வார்க்கடியார் தங்களுக்கு ஒரு செய்தி அனுப்ப விரும்பினார். நானும் அன்றிரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியபடியால் என்னிடம் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனால் கடம்பூரில் தங்களை நான் பார்க்க முடியவில்லை. தஞ்சாவூர்க் கோட்டைக்கருகில் சாலையில்தான் சந்திக்க முடிந்தது. அதுவும் தங்கள் பல்லக்கு என் குதிரை மேல் மோதியதினால்தான்!"

இவ்விதம் வந்தியத்தேவன் சொல்லி வந்தபோது நந்தினி மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் அவளுடைய முகபாவத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் வந்தியத்தேவன் சொன்னதைக் கேட்டதும், அவனைத் திரும்பிப் பார்த்து ஒரு மோகனப் புன்னகை புரிந்தாள். "ஆமாம்; நான் ஏறும் பல்லக்கு வெகு பொல்லாத பல்லக்குதான்!" என்றாள்.

பக்க தலைப்பு



முப்பத்தைந்தாம் அத்தியாயம்
மந்திரவாதி

தூரத்தில் பேரிகைகளின் பெருமுழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக் கொள்ளும் சத்தமும், யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.

நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். காவல் புரிந்த தாதிப் பெண் திடுக்கிட்டு எழுந்து சற்று அருகில் வந்து, "அம்மா! எஜமான் வந்து விட்டார் போலிருக்கிறது" என்றாள்.

நந்தினி, "எனக்குத் தெரியும்; நீ உன் இடத்துக்குப் போ!" என்றாள்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, "தனாதிகாரி கோட்டையில் பிரவேசிக்கிறார். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தை விசாரித்து விட்டு, கோட்டைத் தளபதியைப் பார்த்துப் பேசிவிட்டு, இங்கே வருவார்.வருவதற்குள் நீ போய்விட வேண்டும். ஆழ்வார்க்கடியார் கூறிய செய்தி என்ன?" என்று வினவினாள்.

"அம்மணி! அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார்; அது உண்மைதானா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?"

"பச்சைக் கிளியும் கடுவன் குரங்கும் ஒரு தாயின் குழந்தைகள் என்றால் எளிதில் நம்ப முடியுமா?"

நந்தினி சிரித்துவிட்டு, "ஒரு விதத்தில் அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் ஒரே வீட்டில், ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம். உடன்பிறந்த தங்கையைப் போலவே என்னிடம் பிரியம் வைத்திருந்தார். பாவம்! அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்து விட்டேன்!"

"அபபடியானால் சரி! ஆழ்வார்க்கடியார் தங்களுக்குச் சொல்லி அனுப்பிய செய்தி கிருஷ்ணபகவான் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். தாங்கள் கண்ணனை மணந்து கொள்ளும் கலியாணக் காட்சியைப் பார்க்க வீர வைஷ்ணவ பக்தகோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்!"

நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள். "ஆகா! இன்னும் அவருக்கு அந்தச் சபலம் நீங்கவில்லை போலிருக்கிறது! நீ அவரைப் பார்த்தால் எனக்காக இதைச் சொல்லி விடு. என்னை அடியோடு மறந்து விடச் சொல்லு! ஆண்டாளைப் போல் பரமபக்தையாகக் கொஞ்சமும் தகுதியற்றவள் நான் என்று சொல்லு!"

"நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை, அம்மா!"

"என்னத்தை ஒப்புக் கொள்ளவில்லை?"

"தாங்கள் ஆண்டாள் ஆக முடியாது என்பதைத்தான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆண்டாள் பக்தி செய்து, பாட்டுப் பாடி, அழுது கண்ணீர் விட்டு, பூமாலை தொடுத்துச் சூட்டி, - இப்படியெல்லாம் செய்து கண்ணனை மணந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தங்களுக்கு அத்தகைய கஷ்டமே தேவையில்லை. தங்களைக் கிருஷ்ணபகவான் பார்த்துவிட வேண்டியதுதான். ருக்மிணி, சத்தியபாமாவையும், ராதையையும், கோபிகாஸ்திரீகளையும் உடனே கைவிட்டு அவர்கள் வீற்றிருந்த சிம்மாசனத்தில் தங்களை ஏற்றி உட்கார வைத்து விடுவார்!"

"ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்தராயிருக்கிறீர். அது எனக்குப் பிடிப்பதேயில்லை."

"அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?"

"முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வதுதான்."

"அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு உட்காருங்கள்."

"எதற்காக?"

"முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக் கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?"

"நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்."

"இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செய்கிறீர்கள்?"

"நீரும் உமது முகத்தைத் திருப்பிக் கொண்டு, முதுகைக் காட்டுவதுதானே?"

"மகாராணி! போர்க்களத்திலாகட்டும், பெண்மணிகளிடமாகட்டும், நான் முதுகு காட்டுவது எப்போதும் கிடையாது. தாங்கள் தாராளமாய் என்னை முகஸ்துதி செய்யலாம்!"

இதைக் கேட்டு விட்டு நந்தினி 'கலீர்' என்று சிரித்தாள்.

"நீர் மந்திரவாதிதான்; சந்தேகமில்லை; நான் இம்மாதிரி வாய்விட்டுச் சிரித்து வெகு காலம் ஆயிற்று!" என்று சொன்னாள்.

"ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்! தடாகத்தில் தாமரை சிரித்து மகிழ்ந்தது; தேன் வண்டு மயங்கி விழுந்தது!" என்றான் வந்தியத்தேவன்.

"நீர் மந்திரவாதி மட்டுமல்ல; கவியும் போலிருக்கிறதே!"

"நான் முகஸ்துதிக்கும் அஞ்சமாட்டேன்; வசவுக்கும் கலங்க மாட்டேன்."

"உம்மை யார் வைதது?"

"சற்றுமுன் என்னைக் 'கவி' என்றீர்களே?"

"அப்படியென்றால்?"

"நான் சிறுவனாயிருந்தபோது என்னைச் சிலர் 'குரங்கு மூஞ்சி!' என்று சொல்வதுண்டு. வெகு நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் தங்களுடைய பவளச் செவ்வாயினால் அதைக் கேட்டேன்."

"உம்மையா 'குரங்கு மூஞ்சி' என்றார்கள்? யார் அப்படிப்பட்ட புத்திசாலிகள்?"

"அவர்களில் யாரும் இப்போது உயிரோடில்லை."

"உம்மை நான் அவ்விதம் சொல்லவில்லை. கவிபாடக் கூடியவர் போலிருக்கிறதே என்று சொன்னேன்."

"கொஞ்சம் கவியும் பாடுவேன்; ஆனால் பகைவர்களுக்கு முன்னால்தான் பாடுவேன். வில்லம்பினால் சாகாதவர்கள், சொல்லம்பினால் சாகட்டும் என்று!"

"ஐயா, கவிராஜ வீரசிங்கமே! உம்முடைய பெயர் என்னவென்று இன்னமும் சொல்லவில்லையே!"

"என் சொந்தப் பெயர் வந்தியத்தேவன்; பட்டப்பெயர் வல்லவரையன்."

"அரச குலத்தினரா?"

"பழைய புகழ்பெற்ற வாணாதி ராஜர் குலத்தில் வந்தவன்."

"இப்போது உங்கள் ராஜ்யம்?"

"மேலே ஆகாசம்; கீழே பூமி; இப்போது நான் சகல பூமண்டலத்துக்கும் ஏக சக்கராதிபதி!"


நந்தினி சிறிது நேரம் வல்லவரையனை ஏறத்தாழப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்படி ஒன்றும் நடக்காத காரியம் இல்லை. உம்முடைய பூர்வீக ராஜ்யத்தை நீர் திரும்பவும் பெறலாம்."

"அது எப்படி சாத்தியம்? புலியின் வயிற்றுக்குள்ளே போனது திரும்பவும் வருமா? சோழ சாம்ராஜ்யத்தில் சேர்ந்த அரசு திரும்பக் கிடைக்குமா?"

"கிடைக்கும்படி செய்ய என்னால் முடியும்."

"அம்மணி! வேண்டாம்! இராஜ்யம் ஆளும் ஆசை எனக்கு எப்போதும் கிடையாது. கொஞ்சம் இருந்ததும் இன்றைக்குச் சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்த்த பிறகு அடியோடு போய்விட்டது. இம்மாதிரி பிறர் கையை எதிர்பார்த்துச் சக்கரவர்த்தியாயிருப்பதைக் காட்டிலும் மறுநாள் உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாத சுதந்திர மனிதனாயிருப்பதே மேல்."

"என்னுடைய கருத்தும் அதுதான்!" என்றாள் நந்தினி. பிறகு ஏதோ மறந்து போன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டவள் போல், "சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் உம்மை எதற்காக தேடுகிறார்கள்?" என்று கேட்டாள்.

"தங்களுடைய தாதிப் பெண்ணைப் போல் அவருக்கும் என் பேரில் சந்தேகம் உண்டாகி விட்டது."

"என்ன சந்தேகம்?"

"பனை இலச்சினை உள்ள முத்திரை மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று."

நந்தினியின் முகத்தில் பயத்தின் சிறிய சாயல் தென்பட்டது.

"மோதிரம் எங்கே?" என்று திடுக்கிட்ட குரலில் கேட்டாள்.

"இதோ இருக்கிறது, அம்மணி! இலேசில் அதைப் போக்கடித்து விடுவேனா?" என்று கூறிக் கொண்டே மோதிரத்தை எடுத்துக் காட்டினான்.

"இது உம்மிடம் இருப்பது அவருக்கு எப்படித் தெரிந்தது?" என்று நந்தினி கேட்டாள்.

"சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் நெடுநாளாக இருந்தது. அதற்கு இந்த முத்திரை மோதிரத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். பார்த்து முடிந்த பிறகு இந்த மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று கோட்டைத் தளபதி கேட்டார்..."

"நீர் என்ன சொன்னீர்?" என்று நந்தினி வினாவிய குரலில் திகில் தொனித்தது.

"தங்கள் பெயரைச் சொல்லவில்லை, அம்மணி! பெரிய பழுவேட்டரையர் கொடுத்தார் என்று சொன்னேன். கடம்பூர் மாளிகையில் கொடுத்தார் என்றும் சொன்னேன்..."

நந்தினி பெருமூச்சு விட்டாள். அவள் முகத்திலும் குரலிலும் இருந்த திகில் நீங்கியது.

"நீர் சொன்னதை அவர் நம்பினாரா?" என்று கேட்டாள்.

"முழுதும் நம்பியதாகத் தெரியவில்லை. அதனால்தானே என்னைப் பின்தொடரும்படி ஆட்களை விட்டிருக்க வேண்டும்? தமையனார் திரும்பி வந்ததும் என்னை அவர் முன்னால் நிறுத்தி உண்மையை அறிய எண்ணியிருக்கலாம்!" என்றான் வந்தியத்தேவன்.

நந்தினி புன்னகை புரிந்து, "பெரிய பழுவேட்டரையரிடம் நீர் பயப்பட வேண்டாம். அவர் உம்மைக் கடித்துத் தின்றுவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றாள்.

"அம்மணி! தனாதிகாரியின் பேரில் தங்களுடைய செல்வாக்கு எவ்வளவு என்பது உலகம் அறிந்த செய்தி. ஆனால் எனக்கு வௌியில் அவசர காரியம் இருக்கிறது. ஆகையினால்தான் தப்பிச் செல்லத் தங்கள் உதவியைக் கோருகிறேன்."

"அப்படி என்ன அவசர வேலை இருக்கிறது?"

"எத்தனையோ இருக்கிறது. உதாரணமாக ஆழ்வார்க்கடியாரைப் பார்த்துத் தங்கள் மறுமொழியைச் சொல்ல வேண்டும். அவருக்கு என்ன சொல்லட்டும்?"

"அவருக்கு 'நந்தினி' என்று ஒரு சகோதரி இருந்தாள்' என்பதை அடியோடு மறந்து விடும்படி சொல்லும்!"

"சொல்லி விடலாம்; ஆனால் நடக்கிற காரியமில்லை."

"எது?"

"தங்களை மறப்பதுதான். இரண்டு தடவை தற்செயலாகப் பார்த்த என்னாலேயே தங்களை மறக்க முடியாது போலிருக்கிறதே! வாழ்நாளெல்லாம் தங்களோடு இருந்தவரால் எப்படி மறக்க முடயும்?"

நந்தினியின் முகத்தில் வெற்றிப் பெருமிதத்தின் சாயல் பரிணமித்தது. அவளுடைய வேல்விழிகள் வந்தியத்தேவனுடைய நெஞ்சை ஊடுருவின போல் நோக்கின.

"சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு நீர் ஏன் அவ்வளவு ஆவல் கொண்டிருந்தீர்?" என்று கேட்டாள்.

"உலகப் பிரசித்தி பெற்ற அந்தச் சுந்தர புருஷரைப் பார்க்க நான் விரும்பியதில் வியப்பு என்ன? உலகத்தில் வீர மன்னர்கள் தங்கள் வீரமும் பௌருஷமும் பெருக வேண்டும் என்றும், இராஜ்யமும் கீர்த்தியும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அவ்விதமே பிரஜைகளைப் பிரார்த்தனை செய்யும்படியும் சொல்வார்கள். ஆனால் நம்முடைய சக்கரவர்த்தியைப் பற்றிப் புத்த பிக்ஷூக்களின் மடங்களில் என்ன பிரார்த்தனை செய்கிறார்கள்?

"...................................சுந்தரச்
சோழர் வண்மையும் 'வனப்பும்'
திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே"

என்று பிரார்த்தனை செலுத்துகிறார்கள். இத்தகைய கலியுக மன்மதனைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசையாயிருந்தது..."

"ஆமாம்; சக்கரவர்த்திக்குத் தம்முடைய அழகைப் பற்றி ரொம்பப் பெருமைதான். அவருடைய செல்வக் குமாரிக்கு அதைவிட அதிக கர்வம்..."

"குமாரியா? யாரைச் சொல்லுகிறீர்கள்?"

"பழையாறையிலே இருக்கிறாளே, ஒரு அகம்பாவம் பிடித்த கர்வி, -- அந்த இளையபிராட்டி குந்தவை தேவியைத் தான் சொல்லுகிறேன்."

வந்தியத்தேவா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ தேடிக் கொண்டிருந்த உபாயம் இதோ உன் முன்னால் தானே வந்து நிற்கிறது! அதை நன்கு உபயோகப்படுத்திக் கொள்! -- இவ்வாறு வல்லவரையன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

இத்தனை நேரமும் ஒய்யாரமாகப் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த நந்தினி திடீரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை ஒப்புக் கொள்வீரா?" என்று கேட்டாள்.

"சொல்லுங்கள், அம்மணி!"

"நீரும் நானும் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளலாம். நீர் எனக்கு உதவி செய்ய வேண்டியது. நான் உமக்கு உதவி செய்ய வேண்டியது. என்ன சொல்கிறீர்!"

"அம்மணி! தாங்கள் சோழ மகாராஜ்யத்தில் சர்வ சக்தி வாய்ந்த தனாதிகாரியின் ராணி. நினைத்ததை நினைத்தபடி சாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர். நானோ ஒருவிதச் செல்வாக்கும் இல்லாதவன். தங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்ய முடியும்?" என்றான்.

அவன் உள்ளத்திலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று தெரிந்து கொள்ள விரும்பிய நந்தினி தன் கூரிய விழிகளை அவன் மீது செலுத்தினாள்.

வந்தியத்தேவன் அதற்குச் சிறிதும் கலங்காமல் நின்றான்.

"எனக்கு அந்தரங்கமான பணி ஆள் ஒருவர் தேவையாயிருக்கிறது. இந்த அரண்மனையில் உமக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், ஒப்புக் கொள்வீரா?" என்று கேட்டாள்.

"இதே மாதிரி சேவையை இன்னொரு மாதரசிக்குச் செய்வதாக ஏற்கெனவே ஒப்புக் கொண்டு விட்டேன். அவள் வேண்டாமென்று நிராகரித்தால் தங்களிடம் வருகிறேன்."

"அது யார் அவள், என்னோடு போட்டிக்கு வருகிறவள்?"

"சற்று முன் மிகப் பிரியத்தோடு பேசினீர்களே, அந்த இளையபிராட்டி குந்தவை தேவி தான்."

"பொய்! பொய்! அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது! என்னை வேடிக்கை செய்யப் பார்க்கிறீர்...!"

"மகாராணி! இந்த ஓலையை ஏற்கெனவே பலர் திருடிப் பார்த்து விட்டார்கள். ஆகையால் தாங்களும் இதைப் பார்ப்பதினால் மோசம் ஒன்றும் வந்து விடாது!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் குந்தவைக்குக் கொடுத்த ஓலையை எடுத்து நீட்டினான்.

நந்தினி ஓலையை விளக்கினடியில் பிடித்துக் கொண்டு படித்தாள். படித்து முடித்தபோது அவளுடைய கண்களிலிருந்து கிளம்பிய மின்னல் ஜுவாலை நாக சர்ப்பத்தின் வாயிலிருந்து வௌிவந்து மறையும் அதன் பிளவுபட்ட நாவை வந்தியத்தேவனுக்கு நினைவூட்டியது; அவனையறியாமல் அவன் உடம்பு நடுங்கியது.

நந்தினி கம்பீர பாவத்துடன் வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிரோடு தப்பிச் செல்ல எண்ணுகிறீர் அல்லவா?" என்று கேட்டாள்.

"ஆம் அம்மா! அதற்குத்தான் தங்கள் உதவியை நாடி வந்தேன்."

"ஒரு நிபந்தனையின் பேரில்தான் உம்மைத் தப்பித்து விட நான் உதவி செய்யலாகும்."

"நிபந்தனையைச் சொல்லுங்கள்!"

"இந்த ஓலைக்குக் குந்தவை என்ன மறு ஓலை கொடுக்கிறாளோ, அதை மறுபடியும் என்னிடம் கொண்டு வந்து காட்ட வேண்டும், சம்மதமா?"

"மிக அபாயமான நிபந்தனை போடுகிறீர்கள்!"

"அபாயத்துக்கு அஞ்சாதவர் என்று சற்று முன்னால் பெருமை அடித்துக் கொண்டீரே?"

"அபாயத்துக்குத் துணிவது என்றால் அதற்குத் தகுந்த பரிசு கிட்டவேண்டும் அல்லவா?..."

"பரிசா? பரிசா வேண்டும்? நீர் கனவிலும் அடையக் கருதாத பரிசு உமக்குக் கிடைக்கும். சோழ சாம்ராஜ்யத்தில் இன்று சர்வ சக்தி வாய்ந்தவராய் விளங்கும் பெரிய பழுவேட்டரையர் எந்தப் பரிசுக்காக வருஷக்கணக்காகத் தவம் கிடக்கிறாரோ அத்தகைய பரிசு உமக்குக் கிடைக்கும்!" என்று கூறி நந்தினி வந்தியத்தேவன் பேரில் மறுபடியும் மோகனாஸ்திரத்தைத் தூவினாள்.

பாவம்! வல்லவரையனுடைய தலை சுழன்றது. நெஞ்சே! தைரியத்தைக் கடைப்பிடி! அறிவை இழந்து விடாதே! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அச்சமயம் அவனுக்குத் துணை செய்ய வந்ததைப் போல் அருகிலுள்ள தோட்டத்திலிருந்து ஆந்தையின் கடூரமான குரல் கேட்டது. ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை கேட்டது.

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. நந்தினி தோட்டத்தில் ஆந்தைக் குரல் வந்த இடத்தை நோக்கி, "நிஜ மந்திரவாதியே வந்து விட்டான்!" என்றாள்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, "அவன் எனக்கு இனித் தேவையில்லை. ஆனாலும் இரண்டு வார்த்தை அவனிடம் சொல்லி அனுப்புகிறேன். ஒரு வேளை, உம்மைத் தப்பித்து விடுவதற்கும் அவன் உபயோகமாயிருக்கலாம். சற்று நேரம் நீர் அதோ அந்தப் பக்கம் போய் இருட்டில் மறைந்து நில்லும்!" என்று முன்னம் அவளுடைய தாதிப் பெண் போன திசைக்கு நேர் எதிர்த் திசையைக் காட்டினாள்.

பக்க தலைப்பு



முப்பத்தாறாம் அத்தியாயம்
"ஞாபகம்இருக்கிறதா?"

லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நின்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.

அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது.

தோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங்களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.

இருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வௌியே வந்தான்.

நந்தினி தன்னுடைய புஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.

மந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்தின் மீது விழுந்தது.

ஏற்கெனவே பார்த்த முகமாயிருக்கிறதே! யார் இவன்? ஆம்! திருப்புறம்பியம் பள்ளிப் படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். "ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்று விடுங்கள்!" என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாசன்தான் இவன்.


வரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின.

மஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்து கொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக் கொண்டு "ஹூம் ஹ்ரீம் ஹ்ராம்! பகவதி! சக்தி! சண்டிகேசுவரி!..." என்று சில மந்திரங்களைச் சொன்னான்.
"போதும்! நிறுத்து! தாதிப் பெண் வாசற்படியில் உட்கார்ந்தபடி தூங்கித் தொலைத்து விட்டாள் போலிருக்கிறது! சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்! 'அவர்' கோட்டைக்குள் வந்து விட்டார்!" என்றாள் நந்தினி.

"அடி பாதகி!" என்று ரவிதாசன் கூறியது, நாகப்பாம்பு சீறுவது போலத் தொனித்தது.

"யாரைச் சொன்னாய்?" என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.

"நன்றி கெட்ட நந்தினியைத்தான்! பழுவூர் இளையராணியைத்தான்! உன்னைத்தான்!" என்று ரவிதாசன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக்காட்டினான்.

நந்தினி மௌனமாயிருந்தாள்.

"பெண்ணே! நினைவில் வைத்திருக்க வேண்டிய சில சம்பவங்களை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்" என்றான் ரவிதாசன்.

"பழைய கதை இப்போது எதற்கு?" என்றாள் நந்தினி.

"இப்போது எதற்கு என்றா கேட்கிறாய்? சொல்கிறேன், முதலில் ஞாபகப்படுத்தி விட்டுப் பிற்பாடு சொல்கிறேன்" என்றான் ரவிதாசன்.

அவனைத் தடுப்பதில் பயனில்லையென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"ராணி! கேள்! மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடுநிசியில் வைகை நதிக் கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர்களைக் கொண்டு அந்திமக்கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும் குச்சிகளையும் இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச்சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டு வந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாய்ப் பிடித்துக் கொழுந்து விட்டு எரிந்தது.அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டு கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம்மனிதர்கள் ஜூவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். 'இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்!' என்று அவர்களில் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித்தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அது வரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா!' என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு!' என்றான் இன்னொருவன். 'இல்லையடா! தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம்! வாயிலிருந்து துணியை எடு!' என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே!" என்று ரவிதாசன் கேட்டுவிட்டு நிறுத்தினான்.

நந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர்த் துளிகளும் ததும்பி நின்றன.

"பெண்ணே! பேச மாட்டேன் என்கிறாய்! வேண்டாம்! அதையும் நானே சொல்லி விடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப் போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய். உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டு விடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன், இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று ரவிதாசன் கூறி நிறுத்தினான்.

நந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, "ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே? என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே?" என்றாள்.

"பின்னர் ஒருநாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக் கரையோரமாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சப்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் காட்டில் ஒளிந்துகொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத்தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய். என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்து விட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக் கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்று விட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சை கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா?" என்று கேட்டு விட்டு நிறுத்தினான் ரவிதாசன்.

"இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள்? எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய்? இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு!" என்றாள் நந்தினி.

"இல்லை, பெண்ணே! உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்து விட்டாய்! பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்து விட்டாய்! அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ! உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்?"

"சீச்சீ! இந்த மஞ்சமும் மெத்தையும் ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும்? இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன்? இல்லவே இல்லை!"

"அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கி விட்டாய் போலும்! புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழிவாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா?"

நந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக் கொண்டு "பொய்! முழுப் பொய்!" என்றாள்.

"அது பொய்யானால், நான் இன்ற வரப் போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை?"

"அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்து விட்டான். அந்த மூடப் பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். அது என்னுடைய குற்றமா?"

"யாருடைய குற்றமாயிருந்தால் என்ன? இன்னும் ஒருகணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்..."

"உனக்கு அது வேண்டியதுதான். என்னைச் சந்தேகித்த பாவத்தை அந்த முழுக்கினால் கழுவிக் கொண்டாய்!"

"பெண்ணே! சத்தியமாகச் சொல்! அந்த வாலிபனுடைய அழகில் நீ மதிமயங்கி விடவில்லையா?"

"சீச்சீ! இது என்ன வார்த்தை! ஆண்பிள்ளைகளின் அழகைப் பற்றி யாராவது பேசுவார்களா? இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் 'அரசன் அழகன்' என்று கொண்டாடுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா?"

"நன்றாக சொன்னாய்; இதை நீ உண்மையாகச் சொல்லும்பட்சத்தில், அந்த வாலிப வழிப்போக்கன் இங்கு எதற்காக வந்தான்?"

"முன்னமே சொன்னேனே, நீதான் என்று எண்ணி வாசுகி அவனை அழைத்துக் கொண்டு வந்தாள் என்று."

"என்னிடம் கூட நீ கொடுக்காத உன் முத்திரை மோதிரத்தை அவனிடம் ஏன் கொடுத்தாய்?"

"அவனை இவ்விடம் தருவித்துப் பேசுவதற்காகவே கொடுத்தேன். இப்போது அம்மோதிரத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு விடப் போகிறேன்..."

"எதற்காக அவனைத் தருவித்தாய்? அவனிடம் இவ்வளவு நேரம் என்ன சல்லாபம் செய்து கொண்டிருந்தாய்?"

"ஒரு முக்கியமான லாபத்தைக் கருதியே அவனுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவனால் பெரிய அனுகூலம் ஏற்படும்."

"அடி பாதகி! கடைசியில் உன் பெண் புத்தியைக் காட்டி விட்டாயா? யாரோ முன்பின் தெரியாத வாலிபனிடம் நமது இரகசியத்தை..."

"வீணில் ஏன் பதறுகிறாய்? நான் ஒன்றும் அவனிடம் சொல்லிவிடவில்லை. அவனிடமிருந்துதான் இரகசியத்தைக் கிரஹித்துக் கொண்டேன்."

"என்ன கிரஹித்துக் கொண்டாய்?"

"இவன் காஞ்சியிலிருந்து பழையாறைக்கு ஓலை கொண்டு போகிறான். பழையாறையிலுள்ள பெண் புலிக்குக் கொண்டு போகிறான், அதை என்னிடம் காட்டினான். அவள் கொடுக்கும் மறு ஓலையை என்னிடம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்து விட்டாய்."

"ஓலையுமாயிற்று; எழுத்தாணியும் ஆயிற்று. இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம்?"

"உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான்! புலிக் குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண்புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்து விட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய்? பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா? காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா?..."

"இல்லை! உன்னை ராணியாகப் பெறும் பாக்கியம் பெற்ற தனாதிகாரி பழுவேட்டரையர்தான். இது உலகம் அறிந்ததாயிற்றே!"

"அதுவும் தவறு! உலகம் அப்படி எண்ணுகிறது; இந்தக் கிழவரும் அப்படி எண்ணியே ஏமாந்து போகிறார். நீயும் அந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய். உண்மையில் பழையாறையில் உள்ள பெண் புலிக்குட்டிதான் இந்த ராஜ்யத்தை ஆளுகிறது. அரண்மனைக்குள் இருந்தபடி அந்தக் கர்வக்காரி சூத்திரக் கயிற்றை இழுத்து எல்லாரையும் ஆட்டி வைக்கப் பார்க்கிறாள்! அவளுடைய கொட்டத்தை நான் அடக்குவேன். அதற்காகவே இந்த வாலிபனை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறேன்..."

ரவிதாசனுடைய முகத்தில் வியப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிகுறிகள் தென்பட்டன.

"நீ பெரிய கைகாரிதான்; சந்தேகம் இல்லை; ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? உன்னை எப்படி நம்புவது?" என்றான்.

"அந்த வாலிபனை உன்னிடமே ஒப்புவிக்கிறேன். நீயே அவனைச் சுரங்க வழியில் கோட்டைக்கு வௌியே அழைத்துக் கொண்டு போ! கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு போ! பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு! குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா! அவன் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் உன்னை ஏமாற்றப் பார்த்தாலும் உடனே கொன்று விடு" என்றாள் நந்தினி.

"வேண்டாம்! வேண்டாம்! நீயும் அவனும் எப்படியாவது போங்கள்! அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வௌியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு!"

"வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லை..."

"காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகி விட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்..."

"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இன்னும் பொன் வேண்டுமா? உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா?"

"பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம்? இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது..."

"இதைச் சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம்? நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்" என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். "இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக் கொண்டு போ! அவர் வரும் நேரமாகி விட்டது!" என்றாள்.

ரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்டபோது, "கொஞ்சம் பொறு! அந்த வாலிபனைக் கோட்டைக்கு வௌியிலாவது கொண்டு போய் விட்டு விடு! அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும்! சுரங்க வழியை அவனுக்கு காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை!" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.

அங்கே ஒன்றும் தெரியவில்லை விரல்களினால் சமிக்ஞை செய்தாள்; இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.

அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.

ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை! சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை!

பக்க தலைப்பு



முப்பத்தியேழாம் அத்தியாயம்
சிம்மங்கள் மோதின!

பழுவூர்ச் சகோதரர்கள் மீது தஞ்சைபுரிவாசிகள் தனிப்பட்ட அபிமானம் வைத்திருந்தார்கள். அந்தப் பழைய நகருக்குப் புதிய பெருமையும் செல்வாக்கும் அளித்தவர்கள் பழுவேட்டரையர்கள் அல்லவா?

யானை, குதிரை, ஒட்டகைகளுடன் பவனி என்றால், எந்த நாளிலும் ஜனங்களுக்கு வேடிக்கை பார்ப்பதில் குதூகலந்தான். அதிலும் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தஞ்சைை விட்டு வௌியே போனாலும் சரி, வௌியே போயிருந்து கோட்டைக்குள் பிரவேசித்தாலும் சரி, வீதியின் இருபுறங்களிலும் ஜனங்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பார்கள்; ஜயகோஷம் செய்வார்கள்; வாழ்த்துக் கூறுவார்கள்; பூமாரியும், பொரி மழையும் பொழிவார்கள்.

சாதாரணமாகப் பெரிய சகோதரர் வௌியில் போய்விட்டு வந்தால் இளையவர் கோட்டை வாசலில் வந்து நின்று வரவேற்று அழைத்துச் செல்வார்.

அண்ணனும் தம்பியும் ஒருவரையொருவர் கண்டதும் தழுவிக் கொள்ளும் காட்சி நீலகிரியும் பொதிகை மலையும் ஆலிங்கனம் செய்து கொள்வது போலிருக்கும்.

இருவரும் இரண்டு யானைகள் மீதோ அல்லது குதிரைகளின் மீதோ ஏறிக் கொண்டு அருகருகே சென்றார்களானால், அந்தக் காட்சியைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்.

பழுவூர்ச் சகோதரர்களைச் சிலர் இரணியனுக்கும் இரண்யாட்சனுக்கும் ஒப்பிட்டு பேசுவார்கள். இன்னும் சிலர் 'சுந்தோப சுந்தர்கள்' என்பார்கள். இராமரையும் பரதரையும் ஒத்த அருமைச் சகோதரர்கள் என்றும், வீமனையும் அருச்சுனனையும் ஒத்த வீரச் சகோதரர்கள் என்று கூறுவோரும் உண்டு.

ஆனால் இன்றைக்குப் பெரிய பழுவேட்டரையர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்தபோது அவருடன் வந்த பரிவாரங்கள் வழக்கமான முழக்கங்களைச் செய்தபோதிலும் வீதிகளில் குதூகல ஆரவாரம் இல்லை; ஜனக் கூட்டமும் அதிகமில்லை. சின்னப் பழுவேட்டரையர் கோட்டை வாசலுக்கு அண்ணனை வரவேற்பதற்காக வந்து காத்திருக்கவும் இல்லை.

ஆனால் தனாதிகாரி இதைப் பொருட்படுத்தாமல் நேரே தம்பியின் மாளிகையை நோக்கிச் சென்றார். ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில் இளையவன் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஒருவேளை சக்கரவர்த்தியின் உடல்நிலை ரொம்பக் கேவலமாகி விட்டதோ, அல்லது... அல்லது, 'பெரிய காரியம்'தான் நடந்து விட்டதோ என்ற ஐயம் உண்டாயிற்று. ஆகையால், வழக்கத்தை விடத் துரிதமாகவே அவருடைய பரிவார ஊர்வலம் சென்று கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் மாளிகையை அடைந்தது.

மாளிகை வாசலுக்குத் தமையனை வரவேற்க வந்த தளபதியின் முகத்தில் பரபரப்பும் கவலையும் காணப்பட்டன. தமையனுக்கு வணக்கம் செலுத்திப் பிறகு மார்புறத் தழுவிக் கொண்டார். இருவரும் மாளிகைக்குள் சென்றார்கள். நேரே அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.

இருவரும் தனிப்பட்டதும், " தம்பி! காலாந்தகா! என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதாவது விசேஷம் உண்டா? சக்கரவர்த்தி சுகமா?" என்று தமையனார் கேட்டார்.

சின்னப் பழுவேட்டரையராகிய காலாந்தக கண்டர், "சக்கரவர்த்தி எப்போதும் போல் இருக்கிறார். அவரது சுகத்தில் அபிவிருத்தியும் இல்லை; சீர்கேடும் இல்லை!" என்றார்.

"பின் ஏன் வாட்டம் அடைந்திருக்கிறது உன் முகம்? ஏன் கோட்டை வாசலுக்கு வரவில்லை? ஊரும் ஒரு மாதிரி சலசலப்புக் குறைந்திருக்கிறதே!" என்று பெரியவர் கேட்டார்.

"அண்ணா! ஒரு சிறு சம்பவம் நடந்திருக்கிறது. பிரமாதம் ஒன்றும் இல்லை. அதைப் பற்றிப் பிற்பாடு சொல்கிறேன். தாங்கள் போன காரியங்களெல்லாம் எப்படி?" என்று காலாந்தககண்டர் கேட்டார்.

"நான் சென்றிருந்த காரியம் பூரண வெற்றிதான். அழைத்திருந்தவர்கள் அவ்வளவு பேரும் கடம்பூருக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் ஒருமுகமாக உன் மருமகன் மதுராந்தகனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்று ஒப்புக் கொண்டார்கள். ஜயகோஷத்துடன் ஆமோதித்தார்கள். நியாயத்துக்குக் கட்டுப்படவில்லையென்றால் கத்தி எடுத்துப் போர் செய்து உரிமையை நிலைநாட்டவும் அவ்வளவு பேரும் சித்தமாயிருக்கிறார்கள். கொல்லி மழவனும், வணங்காமுடி முனையரையனும் கூட ஒப்புக் கொண்டார்கள் என்றால், நம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்குத் தடை என்ன? சம்புவரையர் தம் கோட்டை, கொத்தளம், படை, செல்வம் எல்லாவற்றையும் ஈடுபடுத்தச் சித்தமாயிருக்கிறார். அவருடைய மகன் கந்தமாறன் மிகத் தீவிரமாயிருக்கிறான். நடுநாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் பற்றிக் கவலையேயில்லை. சோழ தேசந்தான் எப்போதும் நம் கையில் இருக்கிறது. வேறு என்ன யோசனை? திருக்கோவலூர் மலையமான், பல்லவன் பார்த்திபேந்திரன், கொடும்பாளூர் வேளான் இந்த மூன்று பேருந்தான் ஒருவேளை எதிர்க்கக்கூடும். அவர்களில் கொடும்பாளூரான் இங்கில்லை; இலங்கையில் இருக்கிறான். மற்ற இருவராலும் என்ன புரட்டிவிட முடியும்? கூடிய சீக்கிரத்தில் சக்கரவர்த்தியிடம் சொல்லி உடனே முடிவு செய்துவிட வேண்டியதுதான்!" என்றார் பெரிய பழுவேட்டரையர்.

"தலைவர்களைப் பற்றித் தாங்கள் சொல்வதெல்லாம் சரி; ஜனங்கள்? ஜனங்கள் ஆட்சேபித்தால்?" என்று கேட்டார் காலாந்தககண்டர்.

"ஆகா! ஜனங்களை யார் கேட்கப் போகிறார்கள்? ஜனங்களைக் கேட்டுக் கொண்டா இராஜ்ய காரியங்கள் நடக்கின்றன? ஜனங்கள் ஆட்சேபிக்கத் துணிந்தால், மறுபடியும் அவர்கள் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்காதபடி செய்துவிட வேண்டும். அப்படி ஒன்று நேரும் என நான் நினைக்கவில்லை. சக்கரவர்த்தியின் விருப்பம் என்றால் பேசாமல் அடங்கி விடுவார்கள். மேலும், அருள்மொழிவர்மன் நல்லவேளையாக இலங்கையில் இருக்கிறான். அவன் இருந்தாலும் ஒருவேளை ஜனங்கள் தங்கள் குருட்டு அபிமானத்தைக் காட்ட முயல்வார்கள். ஆதித்த கரிகாலன் மீது ஜனங்கள் அவ்வளவு பிரேமை கொண்டிருக்கவில்லை. மதுராந்தகன் மீது அவர்களுடைய அபிமானத்தைத் திருப்புவது சுலபம். 'சிவபக்தன்', 'உத்தம குணம் படைத்தவன்' என்று ஏற்கெனவே பெயர் வாங்கியிருக்கிறான். சுந்தர சோழரின் புதல்வர்கள் இருவரைக் காட்டிலும் உன் மருமகனுடைய முகத்தில் களை அதிகம் என்பதுதான் உனக்குத் தெரியுமே? 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று கருதும் முட்டாள் ஜனங்கள் 'மதுராந்தக சக்கரவர்த்தி வாழ்க' என்று கோஷிக்காவிட்டால்தான் ஆச்சரியமாயிருக்கும். எப்படியிருந்தாலும் நான் ஒருவன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை....?"

"ஆனால் வேளக்காரப் படை இருக்கிறதே! அவர்களை எப்படிச் சமாளிப்பது?"

"வேளக்காரப் படையார் சுந்தர சோழருக்குத்தான் உயிர்ப் பலி விரதம் எடுத்தவர்களே தவிர, அவருடைய பிள்ளைகளுக்கு அல்லவே? அப்படி அவர்கள் குறுக்கிட்டாலும் உன்னுடைய கோட்டைக் காவல் படை எங்கே போயிற்று? ஒரு நாழிகைப் பொழுதில் அவ்வளவு பேரையும் பிடித்துப் பாதாளச் சிறையில் தள்ள வேண்டியதுதானே?"

"அண்ணா! முக்கியமான எதிர்ப்பு பழையாறையிலிருந்துதான் வரும். அந்தக் கிழவியும் குமரியும் சேர்ந்து என்ன சூழ்ச்சி செய்வார்களோ, தெரியாது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்..."

"தம்பி! காலாந்தகா! போயும் போயும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கா என்னைப் பயப்படச் சொல்கிறாய்? அவர்களுடைய தந்திர மந்திரங்களுக்கெல்லாம் மாற்று என்னிடம் இருக்கிறது. கவலைப்படாதே!"

"இரண்டு பிள்ளைகளையும் தஞ்சைக்கு வரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்..."

"ஆதித்த கரிகாலன் வரமாட்டான். ஒருவேளை அருள்மொழி தந்தை கட்டளைப்படி புறப்பட்டு வருவான். வந்தால், அவனைத் தடுக்க வேண்டியதுதான்! மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிச் சிம்மாசனத்தில் சகல அதிகாரங்களுடன் ஏற்றிய பிறகுதான் அவர்கள் இருவரும் வந்தால் வரலாம். அதற்கு முன் வரக் கூடாது. இதை என்னிடம் விட்டு விடு! மற்றபடி நீ என்னவோ சிறிய விசேஷம் இங்கே நடந்ததாகச் சொன்னாயே, அது என்ன?"

"காஞ்சியிலிருந்து வாலிபன் ஒருவன் வந்தான். சக்கரவர்த்திக்கு ஒரு ஓலையும் குந்தவைக்கு ஒரு ஓலையும் கொண்டு வந்தான்..."

"அவனை என்ன செய்தாய்? ஓலைகளைப் பிடுங்கிக் கொண்டு அவனைச் சிறைப்படுத்தியிருக்கிறாய் அல்லவா?"

"இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா?"

"ஆகா! வெறும் பொய்! கடம்பூரில் அழையாத வாலிபன் ஒருவன் - கந்தமாறனின் சிநேகிதன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தான். ஆனால் ஓலை கொண்டு வந்திருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே! அவன் முகத்தைப் பார்த்ததுமே சந்தேகித்தேன். அவனிடம் நீ ஏமாந்து போய் விட்டாயா என்ன?"

"ஆம், அண்ணா! ஏமாந்துதான் போய்விட்டேன். தங்கள் பெயரைச் சொன்னதால் ஏமாந்தேன்!"

"அட மூடா! ஏமாந்து என்ன செய்தாய்? ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டாயா? அதைப் பார்க்கக் கூட இல்லையா?"

"பார்த்தேன். அதில் ஒன்றுமில்லை. காஞ்சி பொன் மாளிகைக்கு வரும்படி தான் எழுதியிருந்தது. ஓலையைக் கொடுத்து விட்டு அந்த வாலிபன் ஏதோ 'அபாயம்' என்று சொல்லிக் கொண்டிருந்தான்..."

"பிறகாவது, சந்தேகித்துச் சிறைப்படுத்தவில்லையா?"

"சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை!"

"பின்னே, என்ன செய்தாய்?"

"ஊர் பார்க்க வேண்டும் என்றான். பார்த்துவிட்டு வரட்டும் என்று இரண்டு ஆளையும் பின்னோடு அனுப்பினேன். அவர்களை ஏமாற்றி விட்டு மறைந்து விட்டான். அவனைத் தேடுவதற்குத்தான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் கோட்டை வாசலுக்குக் கூட வரவில்லை! நகர மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன்..."

"அட சீ! நீயும் ஒரு மனிதனா? மீசை முளைக்காத ஒரு சிறு பிள்ளையிடமா ஏமாந்து போனாய்? உனக்குக் காலாந்தககண்டன் என்று பெயர் வைத்தேனே, என் முட்டாள்தனத்தை நொந்து கொள்ள வேண்டும்.உன்னைக் கோட்டைத் தளபதியாக்கினேனே? எனக்கு இது வேண்டியதுதான்! என் பெயரைச் சொல்லி ஒரு தறுதலைப் பயல் உன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாயில்லையா?"

"வெறுமனே உங்கள் பெயரைச் சொன்னதோடு இல்லை. உங்கள் முத்திரை மோதிரத்தையும் காட்டினான். அதை அவனுக்கு நீங்கள் கொடுத்தீர்களா?"

"இல்லவே இல்லை! அப்படியெல்லாம் ஏமாந்து விட நான் உன்னைப் போல் ஏமாளியா?"

"அவனிடம் முத்திரை மோதிரம் இருந்தது உண்மை. என்னிடமும் காட்டினான். கோட்டை வாசல் காவலர்களிடமும் காட்டி விட்டுத்தான் உள்ளே புகுந்தான். நீங்கள் கொடுத்திராவிட்டால், இன்னும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் அதை அவன் பெற்றிருக்க முடியும்."

"யாரைச் சொல்கிறாய்?"

"தங்களால் ஊகிக்க முடியவில்லையா? இளையராணியைத்தான் சொல்கிறேன்..."

"சீச்சீ! ஜாக்கிரதை! நாக்கை அறுத்து விடுவேன்!"

"நாக்கை அறுத்தாலும் அறுங்கள்; தலையைக் கொய்தாலும் கொய்யுங்கள். வெகு நாளாய்ச் சொல்ல விரும்பியதை இப்போது சொல்லி விடுகிறேன். விஷ நாகத்தை அழகாயிருக்கிறது என்று எண்ணி வீட்டில் வைத்து வளர்க்கிறீர்கள். அது ஒருநாள் கடிக்கத்தான் போகிறது. நம் எல்லோரையும் நாசம் செய்யப் போகிறது! வேண்டாம்! அவளைத் துரத்தி விட்டு மறு காரியம் பாருங்கள்!"

"காலாந்தககண்டா! வெகு நாளாக உனக்குச் சொல்ல எண்ணியிருந்த ஒரு விஷயத்தை நானும் உனக்கு இன்று சொல்லுகிறேன். வேறு எந்தக் காரியத்தைப் பற்றி வேண்டுமானாலும் உன் அபிப்ராயத்தை நீ தாராளமாய்ச் சொல்லலாம். என் காரியம் பிடிக்காவிட்டால் தைரியமாகக் கண்டித்துப் பேசலாம். ஆனால் நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக் குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி; உன்னை வளர்த்த இதே கையினால் உன்னைக் கொன்று விடுவேன். உனக்குக் கத்தி பிடிக்கச் சொல்லிக் கொடுத்த நான், உன் கத்தியைப் பிடுங்கியே உன்னை வெட்டிக் கொல்லுவேன்! ஜாக்கிரதை!"

அந்த இரு சகோதரர்களும் அப்போது போட்டுக் கொண்ட ஆத்திரச் சொற்போர் சிங்கமும் சிங்கமும் மோதிப் பயங்கரமான சண்டை பிடிப்பது போலவே இருந்தது. அவர்களுடைய குரலும் சிம்ம கர்ஜனையைப் போலவே முழங்கிற்று. அவர்கள் பேசியது அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில்தான் என்றாலும், வௌியில் காத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குரல், விவரம் இன்னதென்று தெரியாமல் இடிமுழக்கம் போல் கேட்டது. அனைவரும் 'என்ன விபரீதமோ' என்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

பக்க தலைப்பு



முப்பத்தெட்டாம் அத்தியாயம்
நந்தினியின் ஊடல்

பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டிலும் அவருடைய உள்ளத்தில் அடித்த புயல் அதிகப் புழுதியைக் கிளப்பியது. அருமைச் சகோதரனை அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச் சிறிது பச்சாதாபப்பட்டார். அவர் மீது தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை. அந்த அபிமானத்தின் காரணமாகத்தான் ஏதோ சொல்லிவிட்டான். இருந்தாலும் சந்தேகக்காரன், எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக் குறைகூற வேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்? கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்டு வாலிபனை விட்டு விட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்லுவது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா? போனால் போகட்டும்! அதற்காகத்தான் அவன் வருந்தி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விட்டானே? மேலும் அதைப் பற்றி நாம் எதற்காக நினைக்க வேண்டும்?

இருந்தாலும், அவன் கூறியதில் அணுவளவேனும் உண்மை இருக்கக் கூடுமா? ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்து தான் பிடித்திருக்குமோ? எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப்பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது? அப்படி என்ன அவள் உயர்த்தி? அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத்தான் இருக்கின்றன. சீச்சீ! தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே! என்ன அநியாயம்? அவள் எப்படி நம்மிடம் உயிர்க்குயிரான அன்பு வைத்திருக்கிறாள்? எவ்வளவு மட்டுமரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள்? நம்முடைய காரியங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள்? சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே? இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா? தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன்கூட ஓடி வருவானே? இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள்? ஆ! இந்தச் சுந்தரச் சோழன் கண்ணில் அவள் அகப்பட்டிருந்தால் போதுமே? அப்படிப்பட்டவளைப் பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை? இளம் பெண்ணை மணந்து கொண்ட கிழவர்கள், இல்லாத சந்தேகங்கள் எல்லாம் தோன்றி தம் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உலக வாழ்க்கையில் அத்தகைய உதாரணங்களைப் பார்த்துமிருக்கிறோம். அம்மாதிரி ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா?

இருந்தபோதிலும் சிற்சில விவரங்களை அவளுடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும் அவசியம்தான். அடிக்கடி முத்திரை மோதிரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறாளே, எதற்காக? அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறாளே, அது எதற்கு? யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக் கொண்டாளே, அது எதற்காக? மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள்? மந்திரம் போட்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும்? இதெல்லாம் இருக்க, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள்? ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை! கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது? அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது! இன்றிரவு அதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசித் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்!


பழுவேட்டரையர் அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது அரண்மனைப் பெண்டிரும் ஊழியர்களும் தாதியர்களும் காத்திருந்து வரவேற்றார்கள். ஆனால் அவருடைய கண்கள் சுற்றிச் சுழன்று பார்த்தும் அவர் பார்க்க விரும்பிய இளையராணியை மட்டும் காணவில்லை. விசாரித்ததில், இன்னும் லதா மண்டபத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. அவர் மனத்தில், " நள்ளிரவு ஆன பிறகும் அங்கு இவளுக்கு என்ன வேலை?" என்ற கேள்வியுடன், தம்மை அலட்சியம் செய்கிறாளோ என்ற ஐயமும் கோபமும் எழுந்தன. சிறிது ஆத்திரத்துடனேயே கொடி மண்டபத்தை நோக்கிச் சென்றார்.

இவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது நந்தினியும் அவளுடைய தோழியும் எதிரே வருவதைக் கண்டார். அப்படி வந்தவள் இவரைக் கண்டதும் நின்று, அவரைப் பார்க்காமல், தோட்டத்தில் குடிகொண்டிருந்த இருளை நோக்கத் தொடங்கினாள். தாதிப் பெண் சற்று அப்பாலேயே நின்றுவிட்டாள்.

பழுவேட்டரையர் நந்தினியின் அருகில் வந்த பின்னரும் அவள் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. நந்தினியைக் கடிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு வந்ததற்கு மாறாக அவளுடைய கோபத்தை இவர் தணிக்க முயல வேண்டியதாயிற்று!

"நந்தினி! என் கண்மணி! என்ன கோபம்? ஏன் பாராமுகம்?" என்று கேட்டுக் கொண்டு தம் இரும்பையொத்த கையை அவளுடைய தோளின் மீது மிருதுவாக வைத்தார்.

நந்தினியோ மலரினும் மிருதுவான தன் கர மலரினால் அவருடைய வஜ்ராயுதத்தையொத்த கையை ஒரு தள்ளுத் தள்ளினாள். அம்மம்மா! மென்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் இத்தனை பலமும் உண்டா?

"என் உயிரே! உன் பட்டுக் கையினால் தொட்டு என்னைத் தள்ளினாயே, அதுவே என் பாக்கியம்! திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய்! அது என் அதிர்ஷ்டம்! என்றாலும், எதற்குக் கோபம் என்று சொல்ல வேண்டாமா? உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவிக்கின்றதே?" என்று கெஞ்சினார் ஆயிரம் போர்க்களங்களில் வெற்றி கண்ட அந்த மகா வீரர்.

"தாங்கள் என்னைப் பிரிந்து போய் எத்தனை நாள் ஆயிற்று? முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா?" என்று சொன்ன நந்தினியின் குரலில் விம்மல் தொனித்தது. அது எத்தனையோ வாள்களையும் வேல்களையும் தாங்கி நின்றும் தளராத பழுவேட்டரையரின் நெஞ்சத்தை அனலில் இட்ட மெழுகைப்போல் உருக்கி விட்டது.

"இதற்காகத்தானா இவ்வளவு கோபம்? நாலு நாள் பிரிவை உன்னால் சகிக்க முடியவில்லையா? நான் போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய்? மாதக்கணக்காகப் பிரிந்திருக்க நேரிடுமே?" என்றார்.

"தாங்கள் போர்க்களத்துக்குப் போனால் மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள்? அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து நானும் போர்க்களத்துக்கு வருவேன்.."

"அழகாயிருக்கிறது! உன்னைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போனால் நான் யுத்தம் பண்ணினாற் போலத்தான்! கண்மணி! இந்த மார்பும் தோள்களும் எத்தனையோ கூரிய அம்புகளையும் வேல் முனைகளையும் தாங்கியதுண்டு. அவ்வாறு ஏற்பட்ட காயங்கள் அறுபத்து நான்கு என்று உலகோர் என்னைப் புகழ்வதுமுண்டு. ஆனால் உன்னுடைய மிருதுவான மலர் மேனியில் ஒரு சிறு முள் தைத்து விட்டால், என்னுடைய நெஞ்சு பிளந்து போய்விடும். எத்தனையோ வாள்களும் வேல்களும் என்னைத் தாக்கிச் சாதிக்க முடியாத காரியத்தை உன் காலில் தைக்கும் சிறிய முள் சாதித்து விடும். உன்னை எப்படி யுத்த களத்துக்கு அழைத்துப் போவேன்? நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்று கொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு! உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே! உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்கிறேன்!" என்று கூறி, நந்தினியின் கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு போய் மஞ்சத்தில் உட்கார வைத்தார்.

நந்தினி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. ஆகா! இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே? மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம்! ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை! - இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர். அவளைக் கேள்வி கேட்பது, கடிந்து கொள்வது என்கிற உத்தேசம் போயே போய் விட்டது! நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கு வந்து விட்டார்! எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான்! ஆனால் பெண்ணடிமைத்தனத்தைப் போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை!

"நாலு நாள் வௌியூரில் இருந்து விட்டுத்தான் வந்தீர்களே? திரும்பி வந்தவுடனே நேரே ஏன் இங்கு வரவில்லை? என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார்!" என்று கேட்டாள் நந்தினி. கேட்டுவிட்டுக் கள்ளக் கோபத்துடன் அவரைக் கடைக்கண்ணால் பார்த்தாள்.

"அப்படியில்லை, என் கண்மணி! வில்லிலிருந்து புறப்பட்ட பாணத்தைப் போல் உன்னிடம் வருவதற்குத்தான் என் மனம் ஆசைப்பட்டது. ஆனால் அந்த அசட்டுப் பிள்ளை - மதுராந்தகன் - சுரங்க வழியின் மூலமாகப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்கிறானா என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில் தாமதிக்க வேண்டியதாயிற்று......"

"ஐயா! தாங்கள் எடுத்த காரியங்களிலெல்லாம் எனக்குச் சிரத்தை உண்டு. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் ஏற வேண்டிய மூடுபல்லக்கில் ஓர் ஆண் பிள்ளையைத் தாங்கள் ஏற்றிக் கொண்டு போவதை நினைத்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது.நாடு நகரங்களில் உள்ள ஜனங்கள் எல்லோரும் தாங்கள் போகுமிடமெல்லாம் என்னையும் கூட அழைத்துப் போவதாக எண்ணுகிறார்கள்..."

"அது எனக்கு மட்டும் சந்தோஷமளிக்கிறது என்றா நினைக்கிறாய்? இல்லவே இல்லை! ஆனால் எடுத்த காரியம் பெரிய காரியம். அதை நிறைவேற்றுவதற்காகச் சகித்துக் கொண்டு செய்கிறேன். மேலும், இந்த யோசனை கூறியதே நீதான் என்பதை மறந்து விட்டாயா? உன்னுடைய மூடுபல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய்? கோட்டையிலிருந்து போகும் போதும் வரும்போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய்?...."

"என்னுடைய கடமையைத்தான் நான் செய்தேன். கணவர் எடுத்திருக்கும் காரியத்துக்கு உதவி செய்வது மனைவியின் கடமை அல்லவா? ஏதோ எனக்குத் தெரிந்த யுக்தியைச் சொன்னேன். தங்களுக்கு அதனால்...."

"அது மட்டுமா செய்தாய்? இந்த மதுராந்தகன் உடம்பெல்லாம் விபூதியைப் பூசிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணிந்து நமசிவாய ஜபம் செய்து கொண்டிருந்தான்! கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு 'அம்மாவுக்குப் பிள்ளை நான்தான்' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான்! அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது! பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி! அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை!....ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே? வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய்? அதைப் பற்றி அநாவசியமாக ஜனங்கள்..."

"அரசே! அதைப் பற்றி அநாவசியமாக யாரேனும் பேசினால், அப்படிப்பட்ட துஷ்டர்களின் நாக்கைத் துண்டித்துப் புத்தி கற்பிப்பது தங்கள் பொறுப்பு. மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். 'கேவலம் பெண் பிள்ளைகள்' என்று அலட்சியம் செய்வீர்கள். பெண் பிள்ளைகளுடன் போர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால் நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்து விடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம், நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, 'அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது;-- உன் அறிவு எங்கேயடி போயிற்று? அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய்?' என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா? 'தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்து கொண்டாயே! என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா!" என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது.

பக்க தலைப்பு



முப்பத்தொன்பதாம் அத்தியாயம்
உலகம் சுழன்றது!

முதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம் பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை. இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம் கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப் என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத் தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.

"என் கண்ணே! அந்தச் சண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள்? என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள்? இருக்கட்டும்; அவளை...அவளை....என்ன செய்கிறேன், பார்! எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார்! இன்னும்...அவளை...அவளை....." என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேச முடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த கோர சொரூபத்தை வர்ணிக்க முடியாது.

நந்தினி அவரைச் சாந்தப்படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக் கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்களை இணைத்துக் கோத்துக் கொண்டாள்.

"நாதா! எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது. குந்தவை ஒரு பெண் பூனை. ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான் எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். தங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுங்கள். இன்றைக்கே நான் இந்த மாளிகையை விட்டு வௌியேறுகிறேன்..." என்று கூறி மீண்டும் விம்மினாள்.

பழுவேட்டரையரின் கோப வெறி தணிந்தது; மோக வெறி மிகுந்தது.

"வேண்டாம்; வேண்டாம்! ஆயிரம் மந்திரவாதிகளை வேண்டுமானாலும் அழைத்து வைத்துக்கொள். நீ போக வேண்டாம்! என் உயிர் அனையவள் நீ! அனையவள் என்ன? என் உயிரே நீதான்! உயிர் போய்விட்டால் அப்புறம் இந்த உடம்பு என்ன செய்யும்?... இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது! இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே? எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா?" என்றார்.

"நாதா! உங்கள் கையில் வாளும் வேலும் இருக்கும்போது மந்திரம் எதற்கு? பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை! தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும்?" என்றாள் நந்தினி.

"கண்ணே! நீ உன் பவள வாய் திறந்து 'நாதா' என்று அழைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது...உன் பொன் முகத்தைப் பார்த்தால் என் மதி சுழல்கிறது! என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன்? மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே? உன்னிடம் அல்லவா இருக்கிறது? எனக்கு மந்திரம் எதற்காக என்று கேட்கிறாய்! என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான்! அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தல் சொல்லு! இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு! எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று! கண்மணி! உலகம் அறிய சாஸ்திர விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன! ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய்! அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு!..."

நந்தினி தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, "ஐயையோ! இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்! இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம்!" என்றாள்.

"இல்லை, இல்லை; இனி அப்படிச் சொல்லவில்லை. என்னை மன்னித்து விடு! நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா? இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்...!"

"நாதா! எதற்காகத் தாங்கள் பைத்தியமாக வேண்டும்? என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை? மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது!..."

"நிறுத்து! நிறுத்து! உன் கொடுமையான வார்த்தைகளைக் கேட்டு என் காது கொப்புளிக்கிறது!" என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: "மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய்? பொய்! பொய்! தேன் மணம் கமழும் உன் கனி வாயினால் அத்தகைய பெரும் பொய்யைச் சொல்லாதே! உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய்? ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா? தேவலோகத்து மந்தார மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களைச் சேகரித்தான்; தமிழகத்துக்கு வந்து செந்தாமரை மலர்களைப் பறித்துச் சேகரித்தான்; சேகரித்த மலர்களைத் தேவலோகத்தில் தேவாமிர்தம் வைத்திருக்கும் தங்கக் கலசத்தில் போட்டான். அமுதமும் மலர்களும் ஊறிக் கலந்து ஒரே குழம்பான பிறகு எடுத்தான். அந்தக் குழம்பில் வெண்ணிலாக் கிரணங்களை ஊட்டினான். பண்டைத் தமிழகத்துப் பாணர்களை அழைத்து வந்து யாழ் வாசிக்கச் சொன்னான். அந்த யாழின் இசையையும் கலந்தான். அப்படி ஏற்பட்ட அற்புதமான கலவையினால் உன் திருமேனியைப் படைத்தான் பிரம்மதேவன்..."

"நாதா! ஏதோ பிரம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் பேசுகிறீர்களே! இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன்? தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது!..." என்று நந்தினி சொல்வதற்குள், பழுவேட்டரையர் குறுக்கிட்டார். அவருடைய உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி வெள்ளத்தை வார்த்தைகளின் மூலமாகவாவது வௌிப்படுத்திவிட விரும்பினார் போலும். அவரைப் பற்றி எரிந்த தாபத்தீயைச் சொல்மாரியினால் நனைத்து அணைக்க முயன்றார் போலும்.

"நந்தினி! என் அந்தப்புரத்து மாதர்களைப் பற்றிச் சொன்னாய். பழமையான பழுவூர் மன்னர் குலம் நீடித்து வளர வேண்டும் என்பதற்காகவே அவர்களை நான் மணந்தேன். அவர்களில் சிலர் மலடிகளாகித் தொலைந்தார்கள். வேறு சிலர் பெண்களையே பெற்றளித்தார்கள். 'கடவுள் அருள் அவ்வளவுதான்' என்று மன நிம்மதியடைந்தேன்.பெண்களின் நினைவையே வெகு காலம் விட்டொழித்திருந்தேன். இராஜாங்கக் காரியங்களே என் கவனம் முழுவதையும் கவர்ந்திருந்தன. சோழ ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எந்த நினைவுக்கும் இந்த நெஞ்சில் இடமிருக்கவில்லை. இப்படி இருக்கும்போதுதான் பாண்டியர்களோடு இறுதிப் பெரும் யுத்தம் வந்தது. வாலிபப் பிராயத்துத் தளபதிகள் பலர் இருந்தபோதிலும் என்னால் பின்தங்கி இருக்க முடியவில்லை. நான் போர்க்களம் சென்றிராவிட்டால், அத்தகைய மாபெரும் வெற்றி கிடைத்தும் இராது. பாண்டியர் படையை அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு சென்றேன். அங்கிருந்து அகண்ட காவேரிக் கரையோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன். முதலில் நீ அங்கு நிற்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அப்போதும் நீ நின்றாய். 'நீ வனதேவதையாக இருக்க வேண்டும்; அருகில் சென்றதும் மறைந்து விடுவாய்! என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து விடவில்லை. 'புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது!' என்று எண்ணி கொண்டு, 'பெண்ணே! நீ யார்?' என்று கேட்டேன். நீ நல்ல தமிழில் மறுமொழி கூறினாய். 'நான் அநாதைப் பெண்; உங்களிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைக் காப்பாற்றுங்கள்' என்றாய். உன்னைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தபோது என் மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது. உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் நினைத்து நினைத்துப் பார்த்தும் எங்கே என்று தெரியவில்லை. சட்டென்று என் மனத்தை மூடியிருந்த மாயத்திரை விலகியது; உண்மை உதயமாயிற்று. உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை. ஆனால் முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது. அந்தப் பூர்வ ஜன்மத்து நினைவுகள் எல்லாம் மோதிக் கொண்டு வந்தன. நீ அகலிகையாக இந்த உலகில் பிறந்திருந்தாய்; அப்போது நான் தேவேந்திரனாக இருந்தேன். சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து ரிஷி சாபத்துக்கும் துணிந்து உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். பிறகு நான் சந்தனு மகாராஜனாகப் பிறந்திருந்தேன். கங்கைக் கரையோடு வேட்டையாடச் செல்லுகையில் உன்னைக் கண்டேன்; பூலோகப் பெண்ணைப் போல் உருக்கொண்டிருந்த கங்கையாகிய உன்னைக் காதலித்தேன். பிறகு ஒரு காலத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் நான் கோவலனாய்ப் பிறந்திருந்தேன்; நீ கண்ணகியாக அவதரித்திருந்தாய். என் அறிவை மறைத்த மாயையினால் உன்னைச் சில காலம் மறந்திருந்தேன். பிறகு மாயைத் திரை விலகிற்று. உன் அருமையை அறிந்தேன். மதுரை நகருக்கு அழைத்துச் சென்றேன். வழியில் உன்னை ஆயர் குடியில் விட்டு விட்டுச் சிலம்பு விற்கச் சென்றேன். வஞ்சகத்தினால் உயிரை இழந்தேன். அதற்குப் பழிக்ுப் பழியாக இந்தப் பிறவியில் மதுரைப் பாண்டியன் குலத்தை நாசம் செய்து விட்டுத் திரும்பி வரும் போது உன்னைக் கண்டேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன்!...."

இப்படிப் பழுவேட்டரையர் முற்பிறவிக் கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தபோது நந்தினி, அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகத்தில் அப்போது தோன்றிய பாவ வேறுபாடுகளைப் பழுவேட்டரையர் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.

மூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோது, நந்தினி அவரைத் திரும்பிப் பார்த்து, "நாதா! தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள்!" என்று முன்போல் முகமலர்ந்து புன்னகை செய்தாள்.

பழுவேட்டரையரின் முகம் அப்போது மகிழ்ச்சியினாலும் பெருமையினாலும் மலர்ந்து விளங்கியது. எவ்வளவு அவலட்சணமான மனிதனாயினும், தான் காதலித்த பெண்ணினால் 'மன்மதன்' என்று அழைக்கப்பட்டால் குதூகலப்படாதவன் யார்? என்றாலும், தற்பெருமையை விரும்பாதவர் போல் பேசினார்:

"கண்மணி! உன்னை ரதி என்பது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் என்னை 'மன்மதன்' என்று சொல்லுவது பொருந்துமா! உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய்!' என்றார்.

"நாதா! என் கண்களுக்குத் தாங்கள் தான் மன்மதன். ஆண் பிள்ளைகளுக்கு அழகு வீரம். தங்களைப் போன்ற வீராதி வீரர் இந்தத் தென்னாட்டில் யாரும் இல்லை என்பதை உலகமே சொல்லும். அடுத்தபடியாக, ஆண்மை படைத்தவர்களுக்கு அழகு தருவது அபலைகளிடம் இரக்கம். அந்த இரக்கம் தங்களிடம் இருப்பதற்கு நானே அத்தாட்சி. இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள் அழைத்து வந்து அடைக்கலம் அளித்தீர்கள். இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என் பேரில் சொரிந்தீர்கள். அப்படிப்பட்ட தங்களை நான் வெகு காலம் காத்திருக்கும்படி செய்ய மாட்டேன். என்னுடைய விரதமும் நோன்பும் முடியும் காலம் நெருங்கி விட்டது..." என்றாள்.

"கண்மணி! என்ன விரதம், என்ன நோன்பு என்பதை மட்டும் தௌிவாகச் சொல்லிவிடு! எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன்!" என்றார் பழுவூர் அரசர்.

"தன்னைக் காட்டிலும் மன்மதன் வேறு இல்லை என்று எண்ணியிருக்கும் இந்தச் சுந்தர சோழருடைய சந்ததிகள் தஞ்சைச் சிம்மாசனத்தில் ஏறக்கூடாது. தற்பெருமை கொண்ட அந்தக் குந்தவையின் கர்வத்தை ஒடுக்க வேண்டும்..."

"நந்தினி! அந்த இரண்டு காரியங்களும் நிறைவேறி விட்டதாகவே நீ வைத்துக் கொள்ளலாம். ஆதித்தனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் பட்டம் கிடையாது. மதுராந்தகனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று இந்த ராஜ்யத்தின் தலைவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள்..."

" 'எல்லாரும்' சம்மதித்து விட்டார்களா? உண்மைதானா?" என்று நந்தினி அழுத்தமாகக் கேட்டாள்.

"இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள். கொடும்பாளூரானும், மலையமானும், பார்த்திபேந்திரனும் நம்முடன் என்றும் இணங்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிக் கவலையில்லை..."

"ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே?"

"அதற்குச் சந்தேகம் இல்லை. எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன். மற்றவர்களின் முட்டாள்தனத்தினால் பிசகு நேர்ந்தால்தான் நேர்ந்தது. இன்றைக்குக் கூட அத்தகைய பிசகு ஒன்று நேர்ந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து வந்த ஒரு வாலிபன் காலாந்தகனை ஏமாற்றி விட்டுச் சக்கரவர்த்தியைச் சந்தித்து ஓலை கொடுத்திருக்கிறான்..."

"ஆகா! தங்கள் தம்பியைப் பற்றி தாங்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவருக்குச் சாமர்த்தியம் போதாது என்று நான் சொல்லவில்லையா?"

"இந்த விஷயத்தில் அசட்டுத்தனமாகத்தான் போய் விட்டான்! ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான்!"

"ஏமாந்து போனவர்கள் இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்லுவார்கள்! ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா?"

"முயற்சி செய்யாமல் என்ன? கோட்டைக்கு உள்ளேயும் வௌியேயும் வேட்டை ஆரம்பமாகி விட்டது! எப்படியும் பிடித்து விடுவார்கள். இதனாலெல்லாம் நம்முடைய காரியத்துக்கு ஒன்றும் பங்கம் வந்து விடாது. சக்கரவர்த்தி காலமானதும் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறுவது நிச்சயம்...."

"நாதா! என்னுடைய விரதம் என்னவென்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்தும் காலம் இப்போது நெருங்கி வந்து விட்டது..."

"கண்ணே! அதைச் சொல்லும்படி தான் நானும் கேட்கிறேன்.."'

"மதுராந்தகன் - அந்த அசட்டுப் பிள்ளை - பெண் என்றால் பல்லை இளிப்பவன் - அவன் பட்டத்துக்கு வருவதினால் என்னுடைய விரதம் நிறைவேறி விடாது..."

"வேறு எதனால் நிறைவேறும்? உன் விருப்பத்தைச் சொல்லு! நிறைவேற்றி வைக்க நான் இருக்கிறேன்...'

"அரசே! என் சிறு பிராயத்தில் ஒரு பிரபல ஜோசியன் என் ஜாதகத்தைப் பார்த்தான். பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன் என்று சொன்னான்..."

"இன்னும் என்ன சொன்னான்?"

"பதினெட்டுப் பிராயத்துக்குப் பிறகு தசை மாறும் என்றான். இணையில்லாத உன்னத பதவியை அடைவேன் என்று சொன்னான்..."

"அவன் சொன்னது உண்மைதான்! அந்தச் ஜோசியன் யார் என்று சொல்லு! அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்."

"நாதா!"

"கண்ணே!"

"இன்னும் அந்தச் ஜோசியன் கூறியது ஒன்று இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?"

"கட்டாயம் சொல்லு! சொல்லியே தீர வேண்டும்!"

"என்னைக் கைபிடித்து மணந்து கொள்ளும் கணவர், மணிமகுடம் தரித்து ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக வீற்றிருப்பார் என்று அந்தச் ஜோசியன் சொன்னான். அதை நிறைவேற்றுவீர்களா?"

பழுவேட்டரையரின் செவியில் இவ்வார்த்தைகள் விழுந்ததும், அவருக்கு முன்னாலிருந்த நந்தினியும் அவள் வீற்றிருந்த மஞ்சமும் சுழன்றன. லதா மண்டபம் சுழன்றது. அந்த மண்டபத்தின் தூண்கள் சுழன்றன. எதிரே இருந்த இருளடர்ந்த தோப்பு சுழன்றது. நிலாக் கதிரில் ஒளிர்ந்த மர உச்சிகள் சுழன்றன. வானத்து நட்சத்திரங்கள் சுழன்றன. இருபுறத்து மாளிகைகளும் சுழன்றன. உலகமே சுழன்றது!

பக்க தலைப்பு



நாற்பதாம் அத்தியாயம்
இருள் மாளிகை

காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம். இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன் முதலில் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆனால் அவர்களுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக அவனுக்குச் சிரத்தையும் இல்லை. நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் அறிவு தன்னை விட்டு அகன்று ஒருவித போதை உணர்ச்சி உண்டாகியிருந்தது என்பதை இப்போது உணர்ந்தான். மறுபடியும் அவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. பழுவேட்டரையர்களிடம் அகப்ட்டுக் கொள்வதைக் காட்டிலும் இந்த இளையராணியிடம் அகப்பட்டு கொள்வதில் அபாயம் அதிகம் இருக்கிறது. அவர்கள் முன்னிலையில் தன் அறிவு நன்றாய் இயங்குகிறது; தோள் வலி ஓங்குகிறது; அரையில் உள்ள கத்தியில் எப்போதும் கை இருக்கிறது. யுக்தியினாலும் ஒரு கை பார்க்கலாம்; கத்தியினாலும் ஒரு கை பார்க்கலாம். ஆனால் இந்த மோகினியின் முன்னால் புத்தி மயங்கி விடுகிறது; கையும் கத்தி பிடிக்கும் சக்தியை இழந்து விடுகிறது. மீண்டும் இவள் முன்னால் சென்றால், என்ன நேருமோ என்னவோ? போதும் போதாதற்கு மந்திரவாதி ஒருவனுடைய கூட்டுறவும் இவள் வைத்துக் கொண்டிருக்கிறாள்! இரண்டு பேரும் சேர்ந்து என்ன மாயமந்திரம் செய்வார்களோ? குந்தவைப் பிராட்டியிடந்தான் இவளுக்கு எவ்வளவு துவேஷம்? அந்தத் துவேஷம் இவளுடைய கண்களில் தீப்பொறியாக வௌிப்படுகிறதே! ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு பழுவேட்டரையரிடம் தன்னைப் பிடித்துக் கொடுத்தாலும் கொடுத்து விடலாம்! பெண்களின் சபல சித்தமும் சஞ்சல புத்தியும் பிரசித்தமானவை அல்லவா? ஆகையால் மீண்டும் இவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய் விட்டால் நல்லது. ஆனால் எப்படி? தோட்டத்துக்குள் புகுந்துதான் வழி கண்டுபிடித்துப் போக வேண்டும்! மதில் ஏறிக் குதிக்க வேண்டும்! மதிலுக்கு வௌியில் தன்னைத் தேடி வந்தவர்கள் காத்திருந்தால்?.... வேறு ஏதேனும் உபாயம் இல்லையா? வந்தியத்தேவா! இத்தனை நாளும் உனக்கு உதவி செய்து வந்த அதிர்ஷ்டம் எங்கே போயிற்று? யோசி! யோசி! மூளையைச் செலுத்தி யோசி! கண்களையும் கொஞ்சம் உபயோகப்படுத்து! நாலாபக்கமும் பார்! இதோ இந்த இருள் அடைந்த மாளிகை இருக்கிறதே! இது ஏன் இருளடைந்திருக்கிறது? இதற்குள்ளே என்ன இருக்கும்? இதன் உள்ளே புகுந்தால் இதன் இன்னொரு வாசல் எங்கே கொண்டு போய் விடும்? எல்லாவற்றுக்கும் இதற்குள் புகுந்து பார்த்து வைக்கலாமா? இப்போது உபயோகப்படாவிட்டாலும் வேறு ஒரு சமயத்துக்கு உபயோகப்படலாம். யார் கண்டது?

ஆனால், இதற்குள்ளே எப்படிப் பிரவேசிப்பது? எவ்வளவு பெரிய, பிரம்மாண்டமான கதவு! இதற்கு எவ்வளவு பெரிய பூட்டு! அப்பப்பா! என்ன அழுத்தம்! என்ன கெட்டி! ஆ! இது என்ன? கதவுக்குள் ஒரு சிறிய கதவு போலிருக்கிறதே! கையை வைத்ததும் இந்தச் சிறிய கதவு திறந்து கொள்கிறதே! அதிர்ஷ்டம் என்றால், இதுவல்லவா அதிர்ஷ்டம்! உள்ளே புகுந்து பார்க்க வேண்டியதுதான்!

பெரிய கதவுக்குள்ளே, பார்த்தால் தெரியாதபடி பொருத்தியிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் அந்த இருளடைந்த மாளிகைக்குள் புகுந்தான்.உள்ளே காலடி வைத்ததும் அவனுக்குத் தோன்றிய முதலாவது எண்ணம், தான் அம்மாளிகைக்குள் புகுந்தது நந்தினிக்குக் கூடத் தெரிய கூடாது என்பதுதான். ஆகையால் சிறிய கதவைச் சாத்தினான். சாத்தியவுடன் உள்ளிருந்த இருள் இன்னும் பன்மடங்கு கனத்து விட்டதாகத் தோன்றியது. கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. இப்போது அதுவும் தெரியவில்லை. இருட்டு என்றால், இப்படிப்பட்ட இருட்டைக் கற்பனை செய்யவும் முடியாது!.. சீச்சீ! வௌிச்சத்திலிருந்து இருட்டில் வந்திருப்பதால் முதலில் இப்படித்தான் இருக்கும். சற்று போனால் இருட்டின் கனம் குறைந்து பொருள்கள் மங்கலாகக் கண்ணுக்குப் புலப்படும். இதை எத்தனையோ தடவை அனுபவத்தில் கண்டிருந்தும், இருளைக் கண்டு கலக்கம் ஏன்? சும்மா நிற்பதற்குப் பதில் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். கையினால் தடவிக் கொண்டே போகலாம். முதலில் தெரிந்த தூண் இப்போது இல்லாமல் எங்கே போய்விடும்...? சற்றுத் தூரம் குருடனைப் போல் கையை முன்னால் நீட்டிக் கொண்டு வந்தியத்தேவன் நடந்தான். அவன் நினைத்தபடியே ஒரு தூண் கைக்குத் தட்டுப்பட்டது! ஆ! எவ்வளவு பெரிய தூண்! கருங்கல் தூண்! இதைச் சுற்றி வளைத்துக் கொண்டு மேலே போய்ப் பார்க்கலாம். மேலும் கொஞ்ச தூரம் நடந்ததும் இன்னொரு தூண் கைக்கு அகப்பட்டது. ஆனால் இன்னமும் கண்ணுக்கு ஏதும் தெரிந்தபாடாயில்லை. திடீரென்று கண் குருடாகப் போய் விட்டதா, என்ன? இது என்ன பைத்தியக்கார எண்ணம்! கண் திடீர் என்று எப்படிக் குருடாகும்? இன்னும் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உண்ர்ச்சி உண்டாகிறது! ஆ! இதோ ஒரு படி! நல்லவேளை, விழாமல் தப்பினோம்! இப்படியே இந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் எத்தனை நேரம், எத்தனை தூரம் போவது?.... எதனாலோ வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பீதி உண்டாயிற்று. மேலே போகத் துணிவு ஏற்படவில்லை. வந்த வழியில் திரும்ப வேண்டியதுதான்! கதவைத் திறந்து கொண்டு லதா மண்டபத்துக்கே போக வேண்டியதுதான்! இந்தப் பயங்கர இருட்டில் உழலுவதைக் காட்டிலும் நந்தினியை மீண்டும் சந்தித்து அவளுடைய யோசனைப்படி நடப்பதே நல்லது. என்ன வாக்குறுதி கேட்டாலும் இப்போதைக்குக் கொடுத்து விட்டால், பிறகு சமயம் போல் பார்த்துக் கொள்கிறது! இவ்வாறு எண்ணி வந்தியத்தேவன் திரும்பினான். ஆனால் திரும்பிச் செல்லும் வழி வந்த வழியேதானா? எப்படிச் சொல்ல முடியும்!.... நடக்க நடக்கக் கைக்கு ஒன்றும் தட்டுப்படவில்லையே! அந்தக் கருங்கல் தூண்கள் எங்கே போயின! கதவைக் கண்டுபிடிக்க முடியாமலே போய் விடுமோ? இரவெல்லாம் இந்த இருளில் இப்படியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க நேரிடுமோ? கடவுளே! இது என்ன ஆபத்து!...

ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? வௌவால்கள் சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும். அவ்வளவு இருட்டில் வௌவால்கள் நிறையக் குடிகொண்டிருப்பது இயல்புதானே? இல்லை! இது வௌவால் இறகின் சத்தம் மட்டும் இல்லை! காலடிச் சத்தம்! யாரோ நடக்கும் சத்தம்!.... நடப்பது யார்? மனிதர்கள்தானா? அல்லது... வந்தியத்தேவனுடைய தொண்டை உலர்ந்து போயிற்று! நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது! திடீரென்று யாரோ அவன் முகத்தில் இடித்தாற் போலிருந்தது. வந்தியத்தேவன் தன் சக்தியையெல்லாம் காட்டி ஒரு குத்து விட்டான்! குத்திய கை துண்டிக்கப்பட்டது போல வலித்தது. இன்னொரு கையினால் தொட்டுப் பார்த்தான். இருட்டில் கருங்கல் தூணின் மேல் மோதிக் கொண்டதுமல்லாமல் அதைக் குத்தியதாகவும் தெரிந்து கொண்டான்! கையை அவ்வளவு 'விண், விண்' என்று வலித்திராவிட்டால் வந்தியத்தேவன் சிரித்தேயிருப்பான். ஆயினும் அதனால் அவனுடைய பயம் சிறிது அகன்றது. முழுதும் அகலவில்லை. காது கொடுத்துக் கேட்டபோது அந்தக் காலடிச் சத்தம் மேலும் மேலும் கேட்டது.ஒரு சமயம் எட்டிப் போவது போல இருந்தது! இன்னொரு சமயம் நெருங்கி வருவது போல் இருந்தது! வந்தியத்தேவன் நின்ற இடத்திலேயே நின்று உற்றுக் கேட்டான். அதே சமயத்தில் ஓசை வந்த திசையை நோக்கி அவனுடைய கண்களும் உற்றுப் பார்த்தன.

ஆ! வௌிச்சம்! அதோ வௌிச்சம்! கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது! நெருங்கியும் வருகிறது! வௌிச்சத்துடன் புகை! யாரோ தீவர்த்தியுடன் வருகிறார்கள். நந்தினிதான் தன்னைத் தேடிக் கொண்டு வருகிறாளோ, என்னமோ! அப்படியானால் நல்லது. வேறு யாராவதாயிருந்தால்? எல்லாவற்றுக்கும் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்க்கலாம். ஒளிந்து நிற்பதற்கு இங்கே இடத்துக்குக் குறைவில்லை! தூரத்திலே வந்த தீவர்த்திக் கொழுந்து அது ஒரு விசாலமான மண்டபம் என்பதைக் காட்டியது. அதில் பெரிய பெரிய தூண்கள் இருந்தன. தூண்களில் பயங்கரமான பூதங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அஙகே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது. அந்தப் படிக்கட்டின் அடிப்பக்கத்திலிருந்துதான் தீவர்த்தி வௌிச்சம் வந்தது என்பதையும் அறிந்து கொண்டான். ஆகையால் வருவது நந்தினியாக இருக்க முடியாது. 'பாதாளச் சிறை' என்று தான் கேள்விப்பட்டது இந்த இருண்ட மாளிகையின் அடியிலேதான் இருக்கிறதோ? ஒருவேளை அங்கிருந்துதான் யாரேனும் வருகிறார்களோ? பாதாளச் சிறையின் பயங்கரங்களைப் பற்றி வந்தியத்தேவன் அதிகம் கேள்விப்பட்டிருந்தபடியால், அந்த எண்ணம் அவனுடைய ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிக்கும்படி செய்தது. அடுத்த கணம் ஒரு பெரிய தூணின் மறைவில் போய் நின்று கொண்டான். மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின!


படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன. மூவரும் மனிதர்கள்தான். ஒருவன் கையில் தீவர்த்தியிருந்தது. இன்னொருவன் கையில் வேல் இருந்தது. நடுவில் வந்தவன் கையில் ஒன்றும் பிடித்திருக்கவில்லை. தீவர்த்தி வௌிச்சத்தில் அவர்கள் முகங்கள் புலப்பட்டதும் வந்தியத்தேவனுடைய பீதி அடியோடு அகன்றது. பீதியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான வியப்பு உண்டாயிற்று. அவர்களில் முன்னால் வந்தவன் வேறு யாரும் இல்லை; வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய கந்தமாறன்தான்! நடுவில் வந்த உருவம், முதலில், ஓர் அதிசயமான பிரமையை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று. பழுவூர் இளையராணியாகிய நந்தினி தான் வருகிறாள் என்று தோன்றியது. மறு கணத்திலேயே, அந்தப் பிரமை நீங்கியது. வருகிறவன் ஆண் மகன் என்று தெரிந்தது. கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அரை குறையாகத் தான் பார்த்த இளவரசர் மதுராந்தகத் தேவர் என்பதை அறிந்து கொண்டான். மூன்றாவதாக, கையில் தீவர்த்தியுடன் வந்தவனை வல்லவரையன் முன்னால் பார்த்ததில்லை. அவன் வாசற் காவலனாகவோ, ஊழியக்காரனாகவோ இருக்க வேண்டும்.

வந்தியத்தேவனுடைய மூளை அதிவேகமாக வேலை செய்தது. அவர்கள் அந்தப் பாதாள வழியில் படிக்கட்டு ஏறி வருவதன் மர்மம் என்னவென்பது வெகு விரைவில் அவனுக்கு விளங்கி விட்டது.பழுவூர் இளையராணி பல்லக்கில் ஏறி முதலாவது நாளே வந்து விட்டாள். பெரிய பழுவேட்டரையர் அன்றிரவு தஞ்சைக் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இருவரும் கோட்டை வாசல் வழியாகப் பகிரங்கமாக வந்து விட்டார்கள். ஆனால், மதுராந்தகத்தேவர் வௌியில் போனதும் தெரியக் கூடாது; திரும்பி வருவதும் தெரியக் கூடாது. அதற்காக இந்த இரகசியச் சுரங்க வழியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இருளடைந்த மாளிகையின் மர்மமே இதுதான் போலும்! கந்தமாறன் தன்னைக் கொள்ளிடக் கரையில் விட்டுப் பிரிந்த பின்னர், வேறு எங்கேயோ ஓரிடத்தில் பெரிய பழுவேட்டரையருடன் சேர்ந்திருக்கிறான். இந்த அந்தரங்க வேலைக்கு அவனைப் பழுவேட்டரையர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுராந்தகத்தேவரைச் சுரங்க வழியில் அழைத்துச் செல்லத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறார். ஆகா! இப்போது நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது. "எனக்குக் கூடத் தஞ்சாவூரில் ஒரு வேலை இருக்கிறது. நானும் அங்கே வந்தாலும் வருவேன்!" என்று கந்தமாறன் சொன்னான் அல்லவா?.... இப்போது இங்கே திடீர் என்று, தான் கந்தமாறன் முன்னால் போய் நின்றால், அவன் என்ன செய்வான்?.... இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அதை வல்லவரையன் மாற்றிக் கொண்டான். இந்தச் சமயத்தில் கந்தமாறன் முன்னால் தான் எதிர்ப்பட்டால், அவன் செய்துள்ள சபதத்தை முன்னிட்டுத் தன்னைக் கொல்ல நேரிடும்; அல்லது தான் அவனைக் கொல்ல நேரும். அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்?....

இதற்குள் அந்த மூவரும் படிக்கட்டில் மேலேறிப் போய் விட்டார்கள். வௌிச்சமும் வர வர மங்கத் தொடங்கியது. அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து, அதையும் உடனே மாற்றிக் கொண்டான். அவர்கள் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குப் போகிறார்கள் என்பது நிச்சயம். அங்கே தான் திரும்பிப் போவதில் என்ன பயன்? சிங்கத்தின் குகையிலிருந்து தப்பித்து வந்த பிறகு தலையைக் கொடுப்பது போலத்தான்! இனித் திரும்ப நந்தினி இருந்த லதா மண்டபத்துக்குப் போவதிலும் பயன் இல்லை. ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இதற்குள் அங்கு வந்திருக்கலாம். அதுவும் அபாயகரந்தான் வேறு என்ன செய்யலாம்?... ஏன்? இந்தப் படிக்கட்டு வழியாக இறங்கிப் போய்ப் பார்த்தால் என்ன? இவ்விதம் எண்ணி நம் வாலிப வீரன் அந்தச் சுரங்கப் படிக்கட்டில் இறங்கினான்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home