Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya BharathyIndex of Works - பட்டியல்  > Thesiya Geethangal - Bharatha Nadu > Thesiya Geethangal - Tamil Nadu > Thesiya Geethangal - Suthanthiram > Thesiya Geethangal - Thesiya Iyakkam >  Thesiya Geethangal - National Leaders > Thesiya Geethangal  - Other Countries


Maha Kavi Subramaniya Bharathy
Thesiya Geethangal  - Suthanthiram

சி. சுப்ரமணிய பாரதியார்
தேசிய கீதங்கள் -  சுதந்திரம்

[eText input: Govardhanan proof/read version (proof-read Kalyanasundaram) © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.]

26. சுதந்திரப் பெரும27. சுதந்திரப் பயிர28.சுதந்திர தாகம் 29. சுதந்திர தேவியின் துதி 30. விடுதல31. சுதந்திரப் பள்ள


26. சுதந்திரப் பெருமை

( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்
திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு)

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமுதுண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவா ரோ? (வீர)

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
பொய்யென்று கண்டாரேல் - அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பா ரோ? (வீர)

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பா ரோ? (வீர)

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுளதோ? (வீர)

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர)

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியா ரோ? (வீர)

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (வீர)

 


27. சுதந்திரப் பயிர

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கி·து மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?

எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?

வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.

 


28 . சுதந்திர தாகம்

ராகம் - கமாஸ் தாளம் - ஆதி

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ?

பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ!
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
 



29. சுதந்திர தேவியின் துதி

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும்,
பன்னருங் கல்வி கேள்வி,
படைத்துயர்ந் திட்டா ரேனும்,
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்,
அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.

தேவி! நின்னொளி பெறாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ?
பாவிய ரன்றோ நிந்தன்
பாலனம் படைத்தி லாதார்?

ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார்,
கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார்,
கனவிலும் இன்பங் காணார்,
அழிவுறு பெருமை நல்கும்
அன்னை! நின் அருள் பெறாதார்.

வேறு

தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே.

அம்மை உன்றன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்,
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.

மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றிநினைப் புதுநிலை யெய்தினர்,
கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர்.

அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன்
என்ன கூறிஇசைத்திட வல்லனே
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.

பேர றத்தினைப் பேணுதல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன்.
 


30. விடுதல

ராகம் - பிலகரிவிடுதலை

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே! (விடுதலை)

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)
 


31. சுதந்திரப் பள்ளு
(பள்ளர் களியாட்டம்)

ராகம் - வராளி தாளம் - ஆதி

பல்லவி

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு)

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home