Maha Kavi Subramaniya Bharathy
-Thothirap Padalkal 4
சி. சுப்ரமணிய பாரதியார்
- தோத்திரப் பாடல்கள் 4
[eText input: Govardhanan proof/read
version (proof-read Kalyanasundaram) © Project Madurai 1999 Project
Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of Tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website
http://www.projectmadurai.org You are welcome to freely
distribute this file, provided this header page is kept intact.]
27.
பேதை நெஞ்சே
28.
மஹாசக்தி
29.
நவராத்திரிப் பாட்டு
30.
காளிப்பாட்டு
31.
காளி ஸ்தோத்திரம்
32.
யோக சக்தி
33.
மஹாசக்தி பஞ்சகம்
34.
மஹா சக்தி வாழ்த்து
35.
ஊழிக்கூத்து
36.
காளிக்குச் சமர்ப்பணம்
37.
ஹே காளீ! (காளி தருவாள்) 38.
மஹா காளியின் புகழ்
39.
வெற்றி
40.
முத்துமாரி
41.
தேச முத்துமாரி
42.
கோமதி மஹிமை
43.
சாகா வரம்
44.
கோவிந்தன் பாட்டு
27. பேதை நெஞ்சே
இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை,
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோமில்லை,
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை,
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங்கில்லை, நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!
நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தப் பயன் காண்பதவள் செய்கை யன்றோ?
மனமார உண்மையினைப் புரட்ட லாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி, வீரர் தேவி
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத்தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!
சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்,
சங்கர னென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி,
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளிலாமற் காக்கச் சொல்லி
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே!
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,
கல்வியிலே மதியினை நீ தொடுக்க னொன் றில்லை,
கருணையினாaல் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!
பாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்!
பயனின்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை,
கேடில்லை, தெய்வமுண்டு வெற்றியுண்டு,
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,
நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்,
நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!
28. மஹாசக்தி
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்,
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்,
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.
29. நவராத்திரிப் பாட்டு
(உஜ்ஜயினி)
உஜ்ஜயினீ நித்ய
கல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமாஸரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)
சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)
30. காளிப்பாட்டு
யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய்.
இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய்.
31. காளி ஸ்தோத்திரம்
யாது மாகி நின்றய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.
எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய்
மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே!
கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.
என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,
குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,
ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.
வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைகொ ணாதாம்.
வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.
காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,
வேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே!
32. யோக சக்தி
வரங் கேட்டல்
விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
வீரை சக்தி நினதருளே - என்றன்
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?
நீயே சரணமென்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு
வாயே என்றுபணிந் தேத்திப் - பல
வாறா நினது புகழ்பாடி - வாய்
ஓயே னாவதுண ராயோ? - நின
துண்மை தவறுவதோ அழகோ?
காளீ வலியசா முண்டி - ஓங்
காரத் தலைவியென் னிராணி - பல
நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலியென் னியல்பறி யாயோ?
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.
கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!
ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!
33. மஹாசக்தி பஞ்சகம்
கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளி நீ காத்தருள் செய்யே,
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,
மாரவெம் பேயினை அஞ்சேன்,
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்,
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,
தாயெனைக் காத்தலுன் கடனே.
எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,
யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்,
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால்.
நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும், நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்
மயங்கினே அவையினி மதியேன்,
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்,
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.
ஐயமுந் திகைப்புந் தொலைந்தன, ஆங்கே
அச்சமுந் தொலைந்தது, சினமும்
பொய்யுமென றினைய புன்மைக ளெல்லாம்
போயின உறுதிநான் கண்டேன்.
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்து கொண்டே.
தவத்தினை எளிதாப் புரிந்தனள், போகத்
தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்,
சிவத்தினை , இனிதாப் புரிந்தனள், மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்,
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்
பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்,
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்க யிங்கவளே!
34. மஹா சக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான் வெளியென - நின்றனை,
அண்ட கோடிகள்வானில் அமைத்தனை,
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை,
மண்ட லத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே! நினைக் காளியென் றேத்துவேன்.
நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்,
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே!
பரிதியென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும்வெய்ய கதிரெனக் காய்ந்தனை,
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை,
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை,
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யெனதம்மை வெல்கவே.
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளியருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை,
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை,
சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை
இதலத்தின் மீது மலையும் நதிகளும்
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை,
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை!
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே!
போற்றி! போற்றி! நினதருள் போற்றியே!
சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மபயனெனப் பல்கினை,
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று
ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை
உள்ளமென்னும் கடலில் அமைந்தனை.
35. ஊழிக்கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!
ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!
பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!
சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!
காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!
36. காளிக்குச் சமர்ப்பணம்
இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்,
வந்தனம், அடி பேரருள் அன்னாய்,
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!
37. ஹே காளீ! (காளி தருவாள்)
எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்,
தருவள் இன்றென தன்னை யென் காளி,
மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,
நான்வி ரும்பிய காளி தருவாள்.
38. மஹா காளியின் புகழ்
காவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு - தழல்
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
இ·தெலா மவள்புரியும் மாயை - அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் - பேயை.
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் - அவை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த
அறிவு தான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர் தரைமீது - எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்ர்கில்லையோர் தீது - என்று
நேர்மைவேதம் சொல்லும் வழியிது.
39. வெற்றி
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டி னேனுக் கருளினன் காளி,
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாரு மானுட வாயினும் அ·தைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறு மாறே.
எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.
40. முத்துமாரி
உலகத்து நாயகியே! - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர் பலர், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
துணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுக்கொ ரெல்லையில்லை - எங்கள் முத்து
மாரியம்மா,எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா. எங்கள் முத்து மாரி!
41. தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,
இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.
நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
42. கோமதி மஹிமை
தாருக வனத்தினிலே - சிவன்
சரண நன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் - பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்,
பேருயர் முனிவர் முன்னே - கல்விப்
பெருங் கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்.
வாழிய, முனிவர்களே! - புகழ்
வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், - இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்.
ஏழிரு புவனத்திலும் - என்றும்
இயல்பெரும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், - ஒளி
யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான்.
தேவர்க் கெலாந்தேவன். - உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் - அந்தக்
கண்ணுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவர்கள் - பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான். - அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.
கேளீர், முனிவர்களே! இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் - சதுர்
வேதங்க ளாயிர முறைபடித்தால்,
மூளுநற் புண்ணியந்தான் - வந்து
மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும்,
நாளுநற் செல்வங்கள் - பல
நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்!
இக்கதை உரைத்திடுவேன், - உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் - இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள் - வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? - புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்?
நக்க பிரானறிவான், - மற்று
நானறி யேன்பிற நரரறியார்.
தொக்க பேரண்டங்கள் - கொண்ட
தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ஒளி
தருகின்ற வானமோர் கடல்போலாம் ,
அக்கட லதனுக்கே - எங்கும்
அக்கரை இக்கரை யொன்றில்லையாம்.
இக்கட லதனக்கே - அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள், - திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்,
மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்!
மெய்க்கலை முனிவர்களே! - இதன்
மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்!
எல்லை யுண்டோ இலையோ? - இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
சொல்லிமொர் வரம்பிட்டால் - அதை
. . . . . .
(இது முற்றுப் பெறவில்லை)
43. சாகா வரம்
பல்லவி
சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!
சரணங்கள்
ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,
ஏகாமிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா)
வாகார்தோள் வீரா, தீரா
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா)
நித்யா, நிர்மலா, ராமா
நிஷ்க ளங்கா, சர்வா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா)
44. கோவிந்தன் பாட்டு
கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும், மிகப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.
எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ?
என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா
எனக்கமுதம் புகட்டு வாயே.
continued
|