tamil nadu
& Tamil Eelam
strugglE for freedom
An Open Letter to Chief Minister M.Karunanidhi
Dr.K.Indrakumar, London
25 May 2006
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு,
ஐந்தாவது தடவையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழ் நெஞ்சங்கள் தங்களைத்
தேர்ந்தெடுத்தது எமக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பிரித்தானியாவில்
உள்ள எம் அன்புத் தமிழ் நெஞ்சங்களின் வாழ்த்துக்கள். மனித இனம் உருவாகி திராவிட
நாகரிகம் தொட்டிலில் வளர்ந்து, இந்த நாகரிகத்தை அங்கிருந்து அகிலமெங்கும்
அனுப்பிவைத்த குமரிக்கண்டத்தின் இன்றைய ப+கோள வடிவமான ப+மியின் முதல்வர் தாங்கள்
தான் என்று நினைக்கும் போது அந்தப் பதவியினதும், அது வழங்கும் பொறுப்பினதும்
பரிமாணம் வானளாவ வியாபித்து நிற்பது எம் மனக் கண்ணில் தெரிகிறது.
ஏற்கனவே பொற்கால ஆட்சி தந்த உங்கள் ஆட்சி அதைவிடச் செல்வச் செழிப்பு வாய்ந்த
பிளாட்டினம் ஆட்சியாக இம்முறை அமைய எங்களது மனப்ப+ர்வமான வாழ்த்துக்கள்.
தமிழ்த் தாயின் சார்பாக தாங்கள் ஆற்றக்கூடிய நான்கு முக்கியமான கடமைகளை உங்கள்
மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.
1) ஈழத் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு ஆதரவு தாருங்கள்
ஈழத்தமிழர் பிரச்சனை இன்று கவலைக்குரிய ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளது. ஈழத்தமிழர்
தலைவர்கள், தாங்கள் அரசியலுக்கு வந்த காலம் தொட்டு கடந்த ஐம்பது வருட காலமாக,
தமிழகத்துக்கு வந்து தமது அரசியல் போராட்;டத்தின் வெற்றி தோல்விச் செய்திகளைப்
பகிர்ந்து கொண்டு தங்களது தார்மிக ஆதரவைப் பெற்றுச் சென்றதை எம்மால் மறக்க முடியாது.
ஈழத் தமிழர் தலைவரும் சிறந்த வழக்குரைஞருமான ஜீ.ஜீ. பொன்னம்பலம் தங்கள் சார்பில்
தில்லியில் சர்க்காரியா கமிஷன் முன் தோன்றிக் கமிஷனைக் கலக்கியதும், தாங்கள் சென்னை
மெரீனா கடற்கரையில் கூட்டம் வைத்து அவரது நட்பினை பிசிராந்தையார் நட்பிற்கு
ஒப்பிட்டு நன்றி சொன்னதையும் எப்படி மறப்பது? தமிழர் தலைவர்கள் செல்வநாயகம்,
அமிர்தலிங்கம், உடுப்பிட்டி சிவசிதம்பரம் ஆகியோர் அடிக்கடி தங்களிடம் ஓடி ஓடி
வந்ததைத்தான் மறப்பது எப்படி?
ஈழத்தமிழர்களை தாங்கள் ஆதரித்ததை அடிப்படையாக வைத்து தங்களுக்கும் தங்கள் அரசிற்கும்
இழைக்கப்பட்ட அநியாயங்களைத்தான் எம்மால் மறப்பது எப்படி? அதற்குப் பின் இந்திய
அமைதிப்படை இலங்கை சென்று ஈழத்தமிழரைக் கொன்று குவித்துவிட்டு தமிழ்நாட்டினூடாகத்
தாயகம் திரும்பிய போது தங்களது தமிழ் இரத்தம் கொதித்ததனால் அவர்களைச் சந்திக்க
தாங்கள் மறுத்து விட்டீர்கள்.
பள்ளி செல்லும் இளைஞர்கள் புத்தகங்கள் தூக்குவதற்குப் பதிலாக போர்கலன்கள்
தூக்கியதாலும், உயிர்த்தியாகம் செய்ய அஞ்சாததாலும் சிங்களப்படைகளை ஆனையிறவிலிருந்து
யாழ்ப்பாணக் குடா நாட்டினுள் ஓட ஓட விரட்டிச் சுற்றி வளைத்தபோது, வங்க தேச விடுதலைப்
போரில் பல்லாயிரம் பாகிஸ்தானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்ட கோலம் எமது கண்
முன்னால் நர்த்தனம் ஆடியது. ஆனால் வங்கம் விடுதலை ஆனது போல் ஈழம் விடுதலை ஆகவில்லை.
காரணம், பல்லாயிரம் சிங்கள படைகளுக்கு உயிர்பிச்சை வழங்கச் சொல்லிக் கொண்டு
புதுதில்லிப் படைகள் ஈழக்களத்தை அணுகியதுதான்.
நோர்வே நாட்டின் மேற்பார்வையோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தமது உரிமைகளைப்
பெறமுடியும் என்று நம்பிச் சென்ற தமிழருக்கு மீண்டும் ஏமாற்றம். மனதில் சிங்களப்
பாசிசத்தை ஒளித்து வைத்துக் கொண்டு போலி மார்க்சிசம் பேசுபவர்களும், இந்தியாவின்
நக்ஸலைட்டுக் கும்பலுக்கு நிகரானவர்களுமான ஜே.வி.பி குழுவினர் சந்திரிகாவுடன்
கூட்டுச் சேர்ந்து பேச்சுவார்த்தைகளைத் தடுத்து வைத்தனர். சந்திரிகா அவர்களை விரட்டி
அடித்தபின் புதிய சனாதிபதி ராஜபக்சாவை வளைத்துப் போட்டுக்கொண்டு, பேச்சுவார்த்தைகளை
முறிவடையச் செய்ததோடு மட்டுமல்லாது மோதல்களையும் ஆரம்பித்தும் வைத்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்துள்ள தேர்தல் வெற்றி வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாதபடி,
தங்களுக்கு ஒரே நேரத்தில் புதுதில்லியிலும் சென்னையிலும் அசல் அதிகாரத்தை
வழங்கியுள்ளது. தங்களது அனுபவத்தையும், ஆற்றலையும், சமயோசித புத்தியையும்
பயன்படுத்தினால், ஈழத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்குச் சாதகமான சூழலை
தங்களால் ஏற்படுத்த முடியும். உலகளாவிய தமிழர்கள் தங்களிடம் இதை
எதிர்பார்க்கிறார்கள், வேண்டி நிற்கிறார்கள்.
2) பழ நெடுமாறன் அவர்களுக்கு பூரணவிடுதலை
தங்களைப் போல் ஒரு அசல் தமிழரும், தங்களைப் போல் தமிழ் நெஞ்சங்களின் அபிமானத்தைப்
பெற்றவரும் தங்களைப் போல தமிழ் நாட்டின் அறுவடைகள் தமிழனுக்கே உரியன என்ற
விடாப்பிடியான உறுதியும் கொண்ட பழ நெடுமாறன் தங்களது நண்பர். சந்தன வீரப்பன்
கர்நாடக நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்று கொலைப் பயமுறுத்தல் விடுத்தபோது
கர்நாடகம் கொந்தளித்தது. அங்கு வாழ்ந்த பல்லாயிரம் தமிழரின் உயிர்கள், உடமைகள்
கேள்விக்குறியாயின.
தனது தள்ளாத வயதிலும் தனது இருதயத்தில் அறுவைச் சிகிச்சை செய்து தேறி வந்த
நிலையிலும் தாங்கள் விதித்த பணியைப் புன்முறவலோடு ஏற்றுக்கொண்டு, கானகத்தினுள்
கால்நடையாகச் சென்று வீரப்பனின் மனதை மாற்றி ராஜ்குமாரை விடுவித்து, கர்நாடக
தமிழருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஆபத்துக்களையும், பழிகளையும் நீக்கி வைத்தார்.
தங்களது அரசுக்குச் சிறப்புத் தேடியும் தந்தார் தங்களது நண்பர் நெடுமாறன் அவர்கள்.
21 ஆம் நூற்றாண்டுக்குள் உலகில் வழக்கொழியப்போகும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்ற
அபாய அறிவிப்பை யுனெஸ்கோ நிறுவனம் விடுத்திருந்த பின்னணியில், தமிழைச் சாகாவரம்
பெற்ற ஒரு மொழியாக்குவதற்கு பல்வேறு ஆக்கப+ர்வமான திட்டங்களை தமிழக அரசின் ஆதரவுடன்
நிறைவேற்றவென உருவாக்கினார். இவைகளுக்கு ஆதரவு தேடுவதற்காக உலகளாவிய தமிழர்
அமைப்புக்களை உலகத் தமிழர் பேரமைப்பு என்ற குடை அமைப்பின் கீழ் கொண்டு வர ஒரு ஆரம்ப
மாநாட்டையும் சென்னையில் நடாத்தினார். இந்த மாநாடு நிறைவேறி ஒரு வாரத்திற்குள்
போலிக் குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் 01.08.2002 முதல் 08.01.2004 வரை அன்றைய
தமிழக அரசினால் சிறையில் அடைக்கப்பட்டார். வந்தாரை வாழவைத்த தமிழகம் வந்தாரை ஆளவும்
வைத்த ஏமாளித்தனத்தால் பதவி ஏறிய அரசு அது. அந்த அரசு தங்கள் வீட்டினுள் புகுந்து
இழைத்த அதிரடிக் கொடுமைகளையும் சன் டிவியில் கண்டு உலகத் தமிழர்கள் தலைகுனிந்தோம்,
கண்ணீர் வடித்தோம்.
இன்று பழ நெடுமாறன் அவர்கள் சிறையிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருந்தாலும்
அவருக்குப் பேச்சு சுதந்திரம் இல்லை. சென்னையை விட்டு வெளியேறுவதென்றாலும் காவல்
துறையினரின் அனுமதி பெற்றே வெளியேற வேண்டும். வாய்ப்ப+ட்டு! காற்கட்டு!
அவருக்கெதிரான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கள் போலியென்று
நிரூபிக்கப்பட்டாலும், முன்னைய அரசு ஆதாரமற்ற மேன் முறையீடுகளைத் திணித்து, மேல்
விசாரணை முடிந்தவிடத்திலும், தீர்ப்புகளை வழங்காது கால வரையறை இன்றி இழுத்தடித்து
இந்த 75 வயதுத் தமிழரை சித்திரவதை செய்து வந்துள்ளது. தமிழுக்குத் தொண்டு
செய்பவர்கள் சாவதில்லை என்று பெருமையோடு சொல்வார்கள் தமிழர்கள்.
இது போதாது. தமிழுக்குத் தொண்டு செய்பவரின் வாய்ப்ப+ட்டு உடைத்தெறியப்பட வேண்டும்.
காற்கட்டுக்கள் அறுத்து எறியப்பட வேண்டும். முன்னாள் தமிழக அரசு நீதி
மன்றங்களுக்குச் சமர்ப்பித்த அர்த்தமற்ற, அடிப்படையற்ற, ஆதாரமற்ற மேன்முறையீடுகளை
தங்களது அரசு மீளாய்வு செய்து, மீளப்பெற்றுக்கொண்டால் நெடுமாறன் அவர்களுக்குப்
ப+ரணவிடுதலை கிடைக்கும். இந்த நல்ல பணி மூலம் உங்கள் புகழும் மேலோங்கும்.
3) தமிழ் நாட்டு வரலாற்று நூல்கள் பணியை துரித கதியில் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ் நாட்டின் வரலாற்றை தொடர்ச்சியாக, முற்று முழுதாக,
நெளிவுகள்-சுளிவுகள்-திரிபுகள்-இடைச்செருகல்-இடைநீக்கல்கள் இல்லாது எழுதுவதற்கென
தாங்கள் ஒரு வரலாற்று ஆசிரியர் குழுவை டாக்டர் மு.வரதராசனார் தலைமையில் நிறுவி
தமிழன் தனது முகவரியை இழக்காமல் இருக்கவும், மறந்த முகவரிகளைத் தேடிக்
கண்டுபிடிக்கவும் வழிவகுத்தீர்கள். இந்த மகோன்னதப் பணியின் விளைவாக சங்க கால வரலாறு
முதல் சோழப்பெருவேந்தர் காலம் வரை பல தொகுதிகள் இதுவரை வெளிவந்து விட்டன. இந்த
வரிசையில் இன்னும் நான்கு தொகுதிகள் வெளிவர உள்ளன.
அ) பிற்காலப் பாண்டியர் - விசய நகர வேந்தர் காலம்
ஆ) பெருவேந்தர் அமையாத காலம்
இ) வெள்ளையர் ஆட்சிக்காலம்
ஈ) விடுதலை பெற்றபின் அமையும் காலம்
தங்களது அரசு ஆட்சியில் இல்லாத காலங்களிலெல்லாம் இந்த நூலெழுதும் பணி
நிறுத்தப்படுவதும், அது மட்டுமல்லாது, ஏற்கனவே வெளியிடப்பட்ட நூல்கள் இருட்டறையில்
அடைக்கப்படுவதும் நாம் கண்டு வெதும்பிய காட்சிகள். குளத்தோடு கோபித்துக் கொண்டு
எதையோ கழுவாமல் போன கதையாக இது அமைகின்றது. இத்தகைய தலைவலிகளைத் தவிர்ப்பதற்காக
இந்தப் பணியை துரித கதியில் முடுக்கிவிட்டு தங்களது இந்த ஆட்சிக்காலத்திலேயே
நிறைவேற்றி வையுங்கள் என்று அன்புடன் வேண்டுகின்றோம்.
ஒரே ஒரு வரலாற்று ஆசிரியர் குழுவை நியமிக்காமல், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு
ஆசிரியர் குழுவென நான்கு குழுக்களை நியமியுங்கள். சமகாலத்தில் நான்கு குழுக்களும்
நான்கு வௌ;வேறு தொகுதிகளையும் எழுதி முடிக்கலாம். தேவை ஏற்படும் போதெல்லாம் நான்கு
குழுக்களும் ஒன்றாகக்கூடி அவசியமான வரலாற்றுத் தொடர்ச்சி - ஒருங்கிணைப்பு
அம்சங்களைச் செய்து கொள்ளலாம். இந்த தொடரில் வரும் சகல நூல்களும் தங்களது மேலான
முன்னுரையுடன் வரவேண்டும் என்பது எமது பேரவா.
எந்த இனம் தனது வரலாற்றை மறந்து விடுகிறதோ அந்த இனத்தை வரலாறு மறந்துவிடும்.
தி.மு.க ஆட்சியில் இல்லாத காலங்களில் தமிழ்நாட்டு வரலாறு நூல்கள் இருந்த இடம்
தெரியாமல் மறைக்கப்படுவதையும், புதிய பதிப்புக்கள் தேவையானவிடத்து அம் முயற்சியில்
மாற்று அரசுகள் அக்கறை செலுத்தாது இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படுவதை
முறியடிக்கவும், சட்டம் இயற்றப்பட வேண்டும். புதிய பதிப்புகள் பிரசுரிக்கும் பணியில்
தனியார் பதிப்பகங்களுக்கு அல்லது அறக்கட்டளைகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு
அளிப்பது பற்றி ஆராயப்பட வேண்டும். தங்களது முயற்சியால் உருவான இந்த நூல்
எதிர்காலத்தில் இருட்டடிப்புச் செய்யப்படாமல் தடுக்க இது உதவக்கூடும்.
உலக வரலாற்றாசிரியர்களுக்கும் ஒரு ஆய்வுத் தளமாக விளங்கும் வகையில் இந்த நூல்கள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்வடிவம் அல்லது இணையத்தள வடிவம் பெறவேண்டும்.
சங்க காலத்துக்கும் முந்திய தமிழர் வரலாறு குமரிக்கண்டக் காலம் வரை பின்னோக்கி
ஆராய்ந்து எழுதப்பட வேண்டும். மன்னர்கள் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட
தமிழர் குடியேற்ற வரலாறும், ஈழத்தமிழர் வரலாறும், சமகாலத்து சர்வதேச குடியேற்ற
வரலாறும் ஆராய்ந்து எழுதப்பட வேண்டியது இனிவருங்காலப் பணி.
4) கண்ணகிக்கு கயவர் களவாட முடியாத வள்ளுவரை ஒத்த பெருஞ்சிலை வேண்டும்
கனகவிசயன் தலையில் கல்லேற்றி, சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் பற்றிய
கதையை உயிரோவியம் போல் உரை எழுதி சிவாஜியின் நாவில் புரண்டு விளையாட விட்டு அதைத்
தமிழன்னைக்குக் காவியம் ஆக்கினீர்கள்.
நேற்று வரை மெரீனா கடலோரத்தில் கற்புக்கு இலக்கணமாய் நின்ற கண்ணகியின் பார்வையும்
நோக்கிய திசையும் அத்திசையில் எவரோ ஒருவருக்கு பேரச்சத்தை ஊட்டியதால் கயவர்களை ஏவி
கண்ணகி சிலையை அடியோடு புரட்டி எடுத்து ஒளித்து விட்டாhகள். தமிழரின் பெருமைக்குரிய,
பெருமதிப்பிற்குரிய அடையாளச் சின்னங்களை மாசு படுத்துபவர்களது சொத்துக்களை பறிமுதல்
செய்ய, அல்லது அவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இப்படிப் பட்ட சில்லறைப் பேய்களின் தொல்லை இனிமேல் ஏற்படாதிருக்க ஐயன் வள்ளுவருக்கு
133 அடி உயரச் சிலை எடுத்தது போல் உயர்ந்த உறுதியான சிலை நிறுவுமாறு வேண்டுகின்றோம்.
மலையாள- தமிழ் நாட்டு எல்லையில் கனகவிசயன் கட்டுவித்த கண்ணகிக்கோவில் புனருத்தாரணம்
செய்யப்பட்டு தமிழக அரசின் மேற்பார்வையில் உள்ள ஒரு மாபெரும் அருங்காட்சி அகமாகப்
பொலிவுற வேண்டும்.
நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
அன்புடன்
டாக்டர் க. இந்திரகுமார்
(மன நல மருத்துவ நிபுணர், இலங்கை-தமிழ்நாடு அரசுகளின் முதற்பரிசு பெற்ற
நூலாசிரியர்)
வே. ஜெகேந்திர போஸ் (எஸ்ரேட்
ஏஜன்ட், செயலாளர்- பிரித்தானியத் தமிழர் வர்த்தக-கைத்தொழில் பேரமைப்பு)
வ.இ.இரமநாதன் (அறங்காவலர்-சைவ
முன்னேற்றச்சங்கம்: இயக்குனர், தமிழர் தகவல் மையம்)
பேராசிரியர்.கோபன் மகாதேவா (பொறியியல்
நிபுணர் ; நூலாசிரியர், ஆங்கில-தமிழ் இலக்கிய ஆர்வலர்)
ச.சிறீரங்கன் (ஒலி பரப்பாளர்:
அறங்காவலர்-ஈலிங்கனகதுர்க்கை அம்மன் கோயில்)
ஐ.தி. சம்பந்தன் (முன்னாள்
தொழிற்சங்கவாதி: செயலாளர் உலக சமாதான மன்றம், ஆசிரியர்: சுடரொளி சஞ்சிகை)
"தமிழினி" குலேந்திரன் (இயக்குநர்
சர்வதேச அகதிகள் நிறுவனம் ; நூலாசிரியர்)
க.இராஜமனோகரன் (பொறியியல் நிபுணர்
; நூலாசிரியர் ;தலைவர் இலண்டன் தமிழ் இலக்கிய மன்றம்)
பொன். பாலசுந்தரம் (மூத்த
பத்திரிகையாளர் ; முன்னாள் பி. டி. ஐ செய்திஸ்தாபன இலங்கை நிருபர் ;
முன்னாள் ஆசிரியர் : தினகரன் , வீரகேசரி நாளிதழ்கள்)
நா. சிவானந்தசோதி (வர்த்தகப்
பிரமுகர் ; ஆசிரியர்: தமிழர் தகவல் சஞ்சிகை)
ச.ஆனந்ததியாகர் (செயலாளர் , சைவ
முன்னேற்றச் சங்கம் ; நால்வர் தமிழ்க் கலை நிலைய தலைமை ஆசிரியர்)
எம். ரி. செல்வராஜா (பொறியியலாளர்
; நூலாசிரியர் ; தலைமை ஆசிரியர்: மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை)
நடராஜா.கிருஷ்ணராஜா (வழக்கறிஞர்,
சத்தியப்பிரமாண ஆணையர்)
செ. சிறீகந்தராசா (வழக்கறிஞர் ;
தவைவர், வித்துவான் வேலன் தமிழ் இலக்கிய வட்டம்)
டாக்டர். மு. தெய்வேந்திரா (குடும்ப
மருத்துவர்; அறங்காவலர், பிரென்ட் தமிழ்ச் சங்கம்)
நா. ராதா (வர்த்தகப்பிரமுகர் ;முகாமையாளர்,
தனியார் நிறுவனம்)
அ. ராஜதுரை (வர்த்தகப் பிரமுகர் ;
இலண்டன் ஸ்ரீ முருகன் கோயில் அறங்காவலர்)
செல்லத்துரை செல்வராஜா (எஸ்ரேட்
ஏஜன்ட் ;ஸ்தாபக அறங்காவலர்,இலண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம், இல்பர்ட்)
ஜெயரஞ்சன்.தவத்துரை (பொறியியலாளர்
; தலைவர், அரசியல்தஞ்சம் கோரும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் குழு)
பீற்றர் ஜேசுதாஸ் (பாரிஸ்டர்-இலண்டன்,
ஒலிபரப்பாளர்)
டாக்டர்.எஸ். தியாகராஜா (மனநல
மருத்துவ நிபுணர், முனைவர்-தொல்லியல் துறை, நூலாசிரியர்)
து.சிறீகந்தராஜா (வருடாந்த "தமிழ்
ஓலைகள்" (லுநடடழற Pயபநள) நிர்வாக ஆசிரியர் (2006 வெளியீடு 768 பக்கங்கள்)
தயா இடைக்காடர் (கணக்காளர், ஹரோ
உள்ளூராட்சி சபை உறுப்பினர்)
(இவர்களின் கையொப்பப்பிரதிகள் டாக்டர். இந்திரகுமாரிடம் உள்ளன)
288 High Street North
London
E12 6SA
|