Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home  > Tamil Eelam Struggle for Freedom > International Frame of  the Tamil Struggle >  The Indian Ocean Region - A  Story Told with Pictures > கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்கான ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை - புரட்சி (தாயகம்)  > International Relations in the Age of Empire

The Indian Ocean Region

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்கான
ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை
புரட்சி (தாயகம்),
16 July 2007

[see also The Indian Ocean Region - A  Story Told with Pictures ]


'யார் இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவைக் கட்டுப்படுத்துவார்கள். இருபத்தோராம் நூற்றாண்டிலே இந்து மாகடலே ஏழு கடல்களின் திறவுகோலாக விளங்கும். அதுவே உலகின் தலைவிதியையும் தீர்மானிக்கும் மாகடலாகவும் விளங்கும்."- அல்பிரட் மகான் (அமெரிக்க கடற்படை அட்மிரல் 1840-1914)

"Whoever controls the Indian Ocean dominates Asia. This ocean is the key to the seven seas in the twenty-first century, the destiny of the world will be decided in these waters." US Rear Admiral Alfred Thayer Mahan quoted by Cdr. P K Ghosh in Maritime Security Challenges in South Asia and the Indian Ocean, 18 January 2004
 


இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச மயப்பட்ட பிரச்சினையாக கணிக்கப்படுவதற்கும் பன்னாட்டு சமூகங்களின் தலையீடுகள் பல்வேறு வடிவங்களில் காணப்படுவதற்கும் மிகவும் வலுவான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இவற்றிலே இந்து சமுத்திரப் பிராந்தியத்திலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கைத்தீவு அமைந்துள்ளமை, பல்வேறு வர்த்தக மற்றும் எரிபொருள் கொண்டு செல்வதற்கான கடல்வழிப் போக்குவரத்துக்கள் இடம்பெறும் பகுதியாக இப்பிராந்தியம் விளங்குகின்றமை, எதிர்கால உலக வல்லரசுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகள் இப்பகுதியில் காணப்படுகின்றமை, அவுஸ்ரேலியா, யப்பான், தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் தமது அரசியல் பொருளாதார நலன்களை பேணுவதற்கு இக்கடல் பிராந்தியம் முக்கியமாக இருக்கின்றமை, தென்கிழக்காசியாவையும் மத்திய கிழக்கையும் அதாவது மலாக்கா நீரிணையையும் அரபிக்கடலையும் இணைக்கும் மாகடலாக இப்பிராந்தியம் விளங்குகின்றமை போன்றவை முக்கியமானவை.

Indian Ocean - Global View

பனிப்போரின் பின்னான காலப்பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் பொதுவுடமைக் கொள்கையானது தோல்வியடைந்து முதலாளித்துவக் கொள்கை வெற்றிபெற்றதாக கூறப்பட்டது. இதன்பின் ஏற்பட்ட புதிய உலக ஒழுங்கிலே அமெரிக்கா உலகின் ஏக வல்லரசாக உருவெடுத்தது. உலக நாடுகள் அனைத்துமே உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் போன்ற முதலாளித்துவக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம் உலக மக்கள் அனைவருமே மிகவும் சிறப்பான செழிப்பான வாழ்க்கையை பெறலாம் என பிரமாண்டமான முறையில் அமெரிக்காவினால் பரப்புரை செய்யப்பட்டது.

இக்கோட்பாடுகளை உலகின் பெருமளவிலான நாடுகள் எதுவித எதிர்ப்புகளுமின்றி ஏற்றுக்கொண்டன. இதனை ஏற்க மறுத்த நாடுகள் மீது அரசியல், பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் போடப்பட்டு இக்கோட்பாடுகளை ஏற்கும் வரைக்கும் தனிமைப்படுத்தப்பட்டன. இவற்றிற்கும் மேலாக சில நாடுகள் மீது படைபலம் பிரயோகிக்கப்பட்டு அந்நாடுகளின் அனைத்து கட்டுமானங்கள் அழிக்கபட்டன. இவ்வாறுதான் அமெரிக்கா தனது முதலாளித்துவக் கோட்பாடுகளை அனைத்துலக அளவில் பரப்பியது.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அமெரிக்க கொள்கை வகுப்பு குழாத்து இயக்குனரான றிச்சாட் என்.ஹாஸ் கூறியவற்றைத்தான்.

'அமெரிக்காவிடம் இருப்பது ஒரே ஒரு வெளியுறவுக்கொள்கைதான். அனைத்துலக ரீதியில் நாம் ஒரு திசையில்தான் பயணிக்க வேண்டுமே தவிர பல திசைகளில் அல்ல. நாம் உலகைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் உலகம் எம்மைக் கட்டுப்படுத்திவிடும். நாம் உலகை எம்மயப்படுத்தவில்லை என்றால் உலகம் எம்மை தம்மயப் படுத்திவிடும். நாமே படைத்துறை, பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகிய அனைத்து தளங்களிலும் உலகின் முன்னணி நாடாக விளங்க வேண்டும்."

என்று ஹான்ஸ் ஒரு கருத்தரங்கில் தெரிவித்திருந்தார்.

அதாவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மூலோபாயம் என்னவெனில் உலகிலுள்ள எந்தவொரு நாட்டையும் முடக்கவல்ல உலகளாவிய வியூகத்தினை அமைத்து அதன் மூலம் தனது விருப்பத்தினை நிறைவேற்றுவதே.

அதாவது தனது படைப்பல வலு மற்றும் பொருளாதார அரசியல் கோட்பாடுகள் என்பனவற்றை பிரயோகித்து எந்தவொரு நாட்டினையும் தனது உலகளாவிய வியூகத்தில் சிக்கவைப்பதற்கு அமெரிக்கா எப்போதுமே தயங்கியது கிடையாது. அண்மைக்கால உலக வரலாற்றினை நாம் சற்று கவனித்துப் பார்த்தோமானால் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை அமெரிக்கா இதனையே செய்துவருகின்றது.

இதன் மூலம் அமெரிக்கா தனது வல்லாண்மை, மதிப்பு மற்றும் தனது நிலை என்பனவற்றிற்கு உலகின் எந்த மூலையிலும் எவராலும் சவால்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கின்றது. இதற்காக அமெரிக்கா முடக்கல் கோட்பாடு, விரிவாக்கல் கோட்பாடு மற்றும் ஈடுபாட்டுக் கோட்பாடு என்பனவற்றை தேவைக்கேற்றவகையிலே பயன்படுத்திவருகின்றது.

இந்தவகையிலே 1989 டிசம்பர் 5 ஆம் திகதி முன்னாள் சோவியத் யூனியனின் அதிபராக விளங்கிய கேர்பச்சேவ் பனிப்போர் முடிவடைந்துவிட்டது என்று அறிவித்த கையோடு அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சோவியத் யூனியனின் இறகுகளாக இருந்த சோவியத் குடியரசுகளை வெட்டித் துண்டாடும் நடவடிக்கையில் ஈடுபட்டன. அத்துடன் இவ்வாறு துண்டு துண்டுகளாக சிதறிய நாடுகளை நேட்டோ அணியில் சேர்ப்பதன் மூலமும் உலகமயமாக்கல் மற்றும் சந்தைப்பொருளாதாரம் போன்ற கோட்பாடுகளை பின்பற்றச் செய்வதன் மூலமும் இந்நாடுகளை ரஸ்யாவில் இருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டன.

இதன் மூலம் பால்டிக் குடியரசுகளான லித்துவேனியா, லட்வியா, எஸ்தோனியா என்பனவும் மற்றும் கிழக்கு ஐரோப்பியா நாடுகளான உக்ரேயின், போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, சிலாவாக்கியா என்பனவும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரஸ்யாவிடம் இருந்து பிரிந்து சென்றன. இதேபோன்று மேற்காசிய குடியரசுகளான ஆர்மேனியா, அசார்பைஜான், கசக்கிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் என்பன 1990-1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனித்தனி அரசுகளாப் பிரிந்து சென்றன.

அமெரிக்காவின் கிழக்கு ஐரோப்பா மீதான நேட்டோவின் விரிவாக்கல் கோட்பாட்டிற்கு எதிராக முட்டுக்கட்டையாக நின்ற யூகோசிலாவியா மீது நேட்டோ படைகள் 1996 ஆம் ஆண்டு படை நடவடிக்கையில் ஈடுபட்டு அதனை சேர்பியா-மொன்றிநிகிரோ, பொஸ்னியா-கெர்சகோவினா, குரோசியா, மெசிடோனியா, சுலோவேனியா என ஐந்து துண்டுகளாக உடைத்துவிட்டன. அத்துடன் கோசோவா மற்றும் மொன்றிநிகிரோ என்பன தனிநாடுகளாக உருவாகுவதற்காக நேட்டோவும் ஐ.நாவும் இணைந்து தமது அனைத்துலக கண்காணிப்பாளர்களை இப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு ரஸ்யாவினை "முற்றுகைக்குள்ளாக்கும் கோட்பாட்டிற்கு" எந்தளவிற்கு முக்கியமானதோ அவ்வளவிற்கு ரஸ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை முற்றுகைக்குள்ளாக்குவதற்கு மத்திய ஆசியாவும் ஆப்கானிஸ்தானும் மேற்குலகிற்கு மிகவும் முக்கியமானது.

அதாவது மத்திய ஆசிய நாடுகளின் பூகோள அமைவிடமானது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலே அமையப்பெற்றிருக்கின்றது. ரஸ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசுகள் மத்திய ஆசியாவின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக அமைந்துள்ளதோடு ஈரான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளை மேற்கு மற்றும் தென்பகுதி எல்லைகளாகவும் கொண்டுள்ளன.

அத்துடன் இந்துமா கடலின் பிராந்திய வல்லரசாக தன்னைக் கருதிக்கொள்ளும் இந்தியாவும் இந்த நாடுகளின் தென்புறப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே அமெரிக்கா இப்பிராந்தியத்திலே செல்வாக்கு செலுத்துவது என்பது அதனது ஏக வல்லரசு என்ற நிலையினை தொடர்ச்சியாக தக்க வைப்பதற்கு மிகவும் அவசியமானது.

இதன் காரணமாகத்தான் 2003 ஆம் ஆண்டு ஜோர்ஜியாவில் மக்கள் ரஸ்யா சார்பு செர்வனாட்சே அரசிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் முண்டியடித்துக்கொண்டு ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களுக்கு தாம் ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இவ்வரசினைக் கவிழ்ப்பதற்கு உதவிபுரிந்தன.

இதுபோன்று 2004 நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் உக்ரேயினிலும் இது போன்ற மக்கள் போராட்டங்கள் அரசிற்கு எதிராக நடத்தப்பட்டன. இதன்பின்னர் இம் மக்கள் போராட்டங்களானது டொமினோவின் தாக்கம் போன்று மத்திய ஆசிய நாடுகளான தஜகிஸ்தான், கிர்கிஸ்தான், அசார்பைஜான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் பரவியபோது அமெரிக்கா இச்சந்தர்ப்பத்தினை நன்கு பயன்படுத்தி தனது செல்வாக்கினை இப்பிராந்தியத்திலே உறுதிப்படுத்திக்கொண்டது.

இதன் மூலமாக சீனா, ரஸ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை முற்றுகைக்குள்ளாக்கும் அல்லது தனது கண்காணிப்பில் வைத்திருக்கும் தனது மூலோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வது அமெரிக்காவிற்கு மிகவும் சுலபமாகிவிட்டது. துருக்கி, அசார்பைஜான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் படைத்தளங்களை அமைத்துள்ள அமெரிக்காவானது ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக நிலைகொள்வதன் மூலமும் மேலே கூறப்பட்ட தனது முற்றுகைக்குள்ளாக்கும் கோட்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுக்க முனைகின்றது. இங்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போரிற்கும் இப்பிராந்தியத்தில் அமெரிக்கா நிலைகொள்வது அவசியமானது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இங்கு அமெரிக்க மூலோபாயத்தின் முக்கிய நோக்கமாக விளங்குவது ஆசிய பசுபிக் பிராந்தியத்திலே தனது ஆதிக்கத்தையும் நலன்களையும் பேணுவதற்கு இப்பகுதியில் பிராந்திய வல்லரசோ அல்லது ஆசிய கண்டத்திற்கான வல்லரசோ உருவாகாமல் பார்த்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதாவது சீனா, ரஸ்யா, இந்தியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் தனியாகவோ கூட்டாகவோ இணைந்து அமெரிக்காவிற்கு எதிராக அச்சுறுத்தல் எதனையும் ஏற்படுத்தாது கவனித்துக்கொள்வது அமெரிக்காவின் ஏகவல்லரசு நிலையினை தக்கவைக்கும் கனவிற்கு மிகவும் அவசியமானது.

இதன் காரணமாகத்தான் அமெரிக்கா செக் குடியரசிலும் போலந்திலும் தனது தேசிய ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஏவுகணை பாதுகாப்பு அரங்கினை ஏற்படுத்த விரும்புகின்றது. ரஸ்யாவின் அதிபர் புட்டின் இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்து வருகின்ற போதிலும் இந்தவருடம் யூலை 13 ஆம் நாள் வழங்கிய செவ்வியில் அமெரிக்க அதிபர் புஸ் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தற்பாதுகாப்பு ஏவுகணை நிலைப்படுத்தும் திட்டமானது மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ரஸ்ய அதிபர் புட்டின், அமெரிக்காவிற்கு ஈரானினால்தான் உண்மையில் ஆபத்தென்று கருதினால் துருக்கி, அசார்பைஜான் அல்லது ஈராக்கில்தான் இந்த ஏவுகணைகள் நிலைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளிக்குமாற்போல் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொண்டலிசா ரைஸ் ஒருவருமே ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கான இடங்களை எழுந்தமானத்தில் தெரிவு செய்வதில்லை. பூகோள அமைவிடம் மற்றும் உலக வரைபடவியல் தொடர்பான விடயங்களை கருத்தில்கொண்டே இதற்கான இடங்கள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார். அதாவது ரஸ்யாவிற்கு எதிரான நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்படுகின்றது என்பதை மறைமுகமாக ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று தென்கிழக்காசியா மற்றும் தென்னாசியா பிராந்தியத்திலே அமெரிக்கா எதிர்கால வல்லரசாக உருவாகி வரும் சீனாவினை முற்றுகைக்கு உள்ளாக்குவதற்காக பல்வேறு தளங்களை இப்பகுதிகளில் அமைத்துவருகின்றது.

1970களில் இருந்தே அமெரிக்கா தனது கடற்படை மூலோபாய கோட்பாடுகளின் அடிப்படையில் தனது கடல் தொடர்பான தந்திரோபாயங்களை பின்பற்றத் தொடங்கியது.

இது தொடர்பாக அமெரிக்க மேலாளர் குழாம் தலைவரான அட்மிரல் எல்மோ ஆர்.சூமட் தெரிவித்த கடற்படையின் நான்கு நடவடிக்கைகளான தற்பாதுகாப்பு, கடலினைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தல், கடற்படை வலுவினை வெளிப்படுத்தல், சமாதான நடவடிக்கைகளுக்கான கடற்படையின் பிரசன்னம் என்பன முக்கிய தந்திரோபாயங்களாகக் கணிக்கப்படுகின்றது. அத்துடன் கடற்படையின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னணி தற்பாதுகாப்பு மற்றும் நேச நாடுகளுடனான நட்புறவு என்பன அமெரிக்க கடற்படையினரால் தமது மூலோபாயங்களை செயற்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எதிர்காலத்தில் அமெரிக்காவானது தனது ஏகவல்லரசு என்ற நிலையினைத் தக்கவைப்பதற்கான மூலோபாயங்களை செயற்படுத்தும்போது உலகளாவிய ரீதியில் 'முற்றுகைக்குள்ளாக்கும் மூலோபாயத்தில்" இருந்து உலக 'சமநிலையைப் பேணுவதற்கான மூலோபாயத்தினை" கடைப்பிடிக்கவேண்டும் என்று அட்மிரல் கெஸ்லோ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய நாட்டினை முதன்மைப்படுத்தி தந்திரோபாயங்களை வகுப்பதை விடுத்து, தற்போதைய புதிய உலக சூழலுக்கு அமைவாக பிராந்திய ரீதியில் மூலோபாயங்களை உருவாக்குவதுடன் அமெரிக்கா தனது நலன்களை பேணக்கூடிய வகையில் இப்பகுதிகளில் இடம்பெறும் பிராந்திய சிக்கல்களையும் நெருக்கடிகளையும் விரைவாக தீர்க்ககூடிய திறனையும் கொண்டிருத்தல் வேண்டும் என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றார்கள்.

அமெரிக்கா அத்திலாந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருக்கின்ற ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக செயற்பாடுகளினால் ஈட்டப்படும் வருமானத்தினை விட 50 வீதத்திற்கும் அதிகமான வருமானம் பசுபிக் சமுத்திரத்திற்கு அப்பால் இருக்கின்ற தென்னாசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெறுகின்றது. அத்துடன் அமெரிக்கா மூன்று பெரிய போர்களையும் இப்பிராந்தியங்களில் நடத்தியிருக்கின்றது.

அமெரிக்காவானது தனது படையினரின் சில தளங்களை இப்பிராந்தியங்களிலே மூடியுள்ளதுடன் படையினரின் எண்ணிக்கைகளையும் குறைத்து வருவதால் அமெரிக்க கடற்படையின் அதிகரித்த நடவடிக்கைகளும் பயணங்களும் அமெரிக்க பிராந்திய பொருளாதார, அரசியல் நலன்களை பேணுவதற்கு அவசியமானது என்று பென்ரகன் கருதுகின்றது.

அண்மைக்காலங்களில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க கடற்படையினர் அரேபியக் கடலில் கடற்பயிற்சிகளில் ஈடுபடுவதும், 90 வரையிலான விமானங்களையும் 5,000 வரையிலான படையினரைக் கொண்டிருப்பதும் அணுசக்தியினால் இயங்குவதுமான அமெரிக்காவின் மிகப்பாரிய விமானந்தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் யூலை 2 ஆம் நாள் சென்னைத்துறைமுகத்திற்கு சென்றடைந்து நங்கூரமிட்டு நிற்பதும் இதனடிப்படையிலே பார்க்கப்பட வேண்டும்.

19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியும் 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவும் எழுச்சியடைந்தது போன்று சீனாவானது தற்போது அரசியல், படைத்துறை மற்றும் பொருளாதார ரீதியாக விரைவாக எழுச்சியடைந்து வருகின்றது என்று சிங்கப்பூர் கொள்கை வகுப்பு நிறுவனத்தின் இயக்குனரான பாரி டெஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தென்கிழக்காசிய மற்றும் தென்னாசிய பிராந்தியங்களை 'முத்துமாலைத் தொடர்" மூலோபாயத்தினைப் பயன்படுத்தி தனது செல்வாக்கை செலுத்த முற்படுவதுடன் பாதுகாப்பான கடல்வழித் தொடர்பாடல்களையும் பேணி வருகின்றது.

இது தொடர்பாக அமெரிக்காவின் படைத்துறையைச் சேர்ந்த லெப். கேணல் கிறிஸ்தோபர் ஜே.பெர்சன் 2006 ஆம் ஆண்டு மூலோபாய கற்கை நெறிக்கான நிறுவனத்திற்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் சீனாவின் வல்லரசாகும் கனவிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சக்தி மூலங்களையும் பெறுவதற்கும், சீனா முத்துமாலைத் தொடர் மூலோபாயத்தினை பயன்படுத்தி சீனாவின் ஹய்நான் தீவு, சிற்றகொங்- பங்களாதேஸ், சிற்வி- மியன்மார், குவாடர்- பாகிஸ்தான், மோரோ தீவுக்கூட்டங்கள்- மாலைதீவு, சயிட் துறைமுகம்- எகிப்து, பன்டர்அபாஸ்- ஈரான் என பல்வேறு தளங்களை அமைத்துள்ளது.

இலங்கைத் தீவிலே 2000 ஆம் ஆண்டு சீனாவின் ஹான்கோ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முத்துராஜவலை, கொலன்னாவ எண்ணெய் குதங்களை அமைத்து பராமரித்து வருகின்றது. அத்துடன் சந்திரிகா அரசுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இது மகிந்த அரசின் காலப்பகுதியில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இலங்கைத்தீவிலே சீனாவின் அதிகரித்த செயற்பாடுகளும் சிறிலங்கா படையினருக்குத் தேவையான ஆயுத தளபாட விநியோகங்கள் செய்வதில் சீனா முதலாவது நாடாக விளங்குவதும் அமெரிக்கா, இந்தியா மற்றும் யப்பான் போன்ற நாடுகளுக்கு மிகுந்த கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மகிந்த அரசின் அமைச்சர்களும் மகிந்தவின் சகோதரர்களும் மேற்கு நாடுகள் எமக்குத் தேவையில்லை ஆசிய நாடுகளே போதும் என்று வெளிப்படையாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதும் மேலே கூறப்பட்ட நாடுகளுக்கு சிறிலங்கா சீனாவிற்கான இன்னொரு தளமாக மாறப்போகின்றதா என்ற ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில் வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டிகளுக்கான களப்பரீட்சை மைதானமாக இந்து சமுத்திரமே விளங்கப்போவதால் தற்போது உருவாகிவரும் சாதகமான உலகச் சூழலில் எமது தேசியத் தலைவரின் மதிநுட்பத்துடன் கூடியதான அரசியல், இராஜதந்திர காய்நகர்த்தல்கள் மற்றும் படைத்துறை நடவடிக்கைகள் தமிழர் விடுதலைப் போராட்டத்தினை தீவிரப்படுத்தி தமிழீழத்தினை விரைவில் பெற்றுத்தரும் என்பது திண்ணம்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home