Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > யாழ் நூலகம்

Selected Writings

M.Thanapalasingham, Australia
-
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

யாழ் நூலகம்

சிட்னி,அவுஸ்திரேலியாவில் 19 ஜனவரி 2008 இல் திரு வி.எஸ். துரைராசா அவர்களால் வெளியிடப்பட்ட யாழ் நூலகத்தின் கொந்தளிப்பான வரலாறு பற்றிய நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை.

[see also Destruction of Jaffna Library]


ஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாகும்

' எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர்"

" Where they have burned books, they will end in burning human beings " –Heinrich Heine (1797-1856)

என புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரம்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.

1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படைஎடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை.

 " the burning is but a prologue: where books are burned, people in the end are burned too "

என அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர். 100 ஆண்டுகளின் பின்னர் இடம் பெற்ற நாசிகளின் அவிęட்டு களப்பலியை இவர் முன் கூட்டியே எதிர்வு கூறியிருந்தாராம். ஈழத் தமிழ் மக்களுக்கு இவ் வாசகங்கள் எத்துணை அர்த்தம் வாய்ந்தவை என்பதை கூறவும் வேண்டுமோ.

ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு மக்கள் கூட்டத்தை éண்டோடு அழிக்க முயலும்போது முதலில் அம் மக்களை பிறரில் இருந்து வேறுபடுத்தியும் ,பிறரோடு இணைத்தும் நிற்கும் அவர்களின் கூட்டான வரலாற்றுப் பிரக்ஞையை, ஞாபகங்களை, அவற்றிற்கான தடயங்களை அழித்துவிட முனைகிறார்கள். ஒரு மக்கள் தமது கடந்தகாலத்தையிட்டு, தம் முன்னோர் விட்டுச்சென்ற பாரம்பரியங்களை இழந்தவர்களாக ஆக்கப்பட்டால் அவர்கள் தன்நம்பிக்கை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அவ்வாறான மக்களை அடிமைப்படுத்துவது சுலபமானது. இந்தப் பின்னணியில் நூலக எரிப்புக்களை பார்க்கவேண்டும். நூலகங்களுக்கே தாயான எகித்து நாட்டில் அலெக்சாந்திரியாவில்

கி.மு 300 இல் அமைக்கப்பட்ட பெரும் நூலகத்தின்மீதான தீ வைப்புப்பற்றி பல ஆய்வுகள் உண்டு. பேசியாவில் கி.பி 651 இல் அரேபிய ஆக்கிரமிப்பாளர்களால் அரச நூலகம் தீயில் பொசுக்கப்பட்டது. இந்தியாவில் நாளந்தாவில் அமைந்திருந்த நூலகம் கி.பி 1193 இல் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களால் தீயிடப்பட்டது. எமது கண் முன்னே யாழ் நூலகம் எரிக்கப்பட்டதுபோல் அதே மாதத்தில் 1992 இல் பொஸ்னியா சறயேவோவில் இருந்த பெரும் நூலகம் சிலாவிக் தேசியவாதிகளால் தீயில் பொசுக்கப்பட்டது.

ஏதோ ஒரு வடிவத்தில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியத்தின் கருவூலமாக நூலகத்தைக் காணமுடிகின்றது. Repository சேர்த்துவைத்தல் என்னும் பதத்தில் இருந்தே Library  என்னும் பதம் வந்தது என்பர். அவ்வாறாயின் எழுத்து அறிவில்லா காலத்து மக்கள் தங்கள் பாரம்பரியங்களை எவ்வாறு பேணிக்காத்தனர் என்ற கேள்வி எழுகின்றது.

வாய்வழியாக இவை கேள்விச் செல்வமாகக் கூறப்பட்டு பேணப்பட்டமையை மானிடவியலாளர் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளனர். மேற்குலக நாகரிகத்தின் தொட்டிலான கிரேக்க நாட்டின் ஆதிக்கவியான ஹோமரது இலியாட் ,ஒடசி போன்ற காவியங்கள் வாய்வழியாகப் பாடப்பட்டவையே.

மில்மன் பரி போன்றவர்களின் ஆய்வுகள் இவைபற்றிக் கூறும்போது சமுதாயத்தில் மரபுகளை பேணவும் நிறுவனங்களை அமைத்து ஒழுங்காக வாழவும் எழுத்தறிவு அற்ற மக்களாலும் முடியும் என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் காட்டுவர். ஆயின் எழுத்தின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் வாய்வழியாக வந்த பண்பு அருகிவிட்டது.

தமிழ் மக்களின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசுவோர் பொதுவாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்திகளை அவற்றிற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுவர். அதிலும் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்துவர். தொல்காப்பியத்தில் இன்றைய நவ நாகரிகமே வியக்கத்தக்க வகையில் காணப்படும் தமிழ் மக்களின் வாழ்வியலை, அவர்தம் பண்பாட்டை கண்டு வியக்கின்றனர்.

இவ்வாறான பண்பாட்டு வளர்ச்சி தற்செயலாக ஏற்பட்டதல்ல. அவ்வாறாயின் அந்த வளர்ச்சியைக் காட்டும் ஆதாரங்கள் எங்கே?.தொல்காப்பியரே தன் கருத்துக்களை முன் வைக்கும்போது அதற்கு ஆதாரமாக, 'என்மனார் புலவர்," ' என்பர்," எனப் பல இடங்களில் கூறுவர். இவர் தன் காலத்தவரையோ அல்லது தனக்கு முற்பட்டோரையோ கூறியிருக்கலாம். இவை இன்று எமக்குக் கிடைக்கவில்லை.

இதுபோன்று இளங்கோவடிகள் குறிப்பிடும் 'நாட்டியநன்நூலும்" இன்று இல்லை. அவைபற்றிய ஆதாரங்கள் எல்லாம் கடலால், தீயால் ,காற்றால் ,கறையானால், படைஎடுப்புக்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இன்றும் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிகள் சங்க இலக்கியச் செய்திகளுக்கு ஆதாரமாகின்றன, வலுச்சேர்க்கின்றன.

சுருக்கமாகக் கூறின் பண்டைத் தமிழர்களிடையே எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்டது என்னும் உண்மையை இவ் அகழ்வாராச்சிகள் நீருபிக்கின்றன. இந்த எழுத்துக்கள் பல அழிந்த நிலையில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈழத்து சி.வை தாமோதரனார், தமிழ் நாட்டு உ.வே.சாமிநாதையர் போன்றோரின் கடும் பிரயத்தனத்தால் பனை ஓலைகளில் இருந்த கருவூலங்கள் பல நவீன அச்சுவாகனம் ஏறி பொது நூலகங்களில் புகுந்து பொதுமக்களின் கருவூலங்களாகின.

இந்தக் கருவூலங்களும் அவற்றை தொடர்ந்து வந்தவையும் எமது செல்வங்கள்.

சுப்பிரமணிய பாரதியின் '.....அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் ..."

என்னும் அமர வரிகளில் வரும் அவர் . யார் இந்த அவர்? அந்த அவரே மக்கள் என்றால் அவரை மற்றவரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுபவை எவை? அவரை மற்றவரோடு இணைத்து வைப்பவை எவை? இவற்றை அவரவர் எவ்வாறு புலப்படுத்துகின்றனர்? அவை எங்கனம் தலைமுறை தலைமுறையாக மாறாமலும் மாற்றங்களுடனும் எடுத்துச் செல்லப்படுகின்றன? என்ற கேள்விகளை எழுப்புவோமேயானால் அவற்றில் நூலகங்களின் பாரிய பங்கினை அறிந்தவர்களாவோம்.

இந்த அறிவுக் கருவூலங்கள் ஒரு காலத்தில் பெரும்பாலும் தனியார் கைகளில் குவிந்து கிடந்தன. சோக்கிரட்டீசுன் புகழ் பெற்ற மாணவரான அரிஸ்ரோற்றலிடம் இருந்த சேமிப்புக்களைப் பற்றி வரலாறு பதிவுசெய்துள்ளது. இன்றைய புகழ் பெற்ற ஹாவாட் பல்லலைக்கழக நூலகத்தின் ஆரம்பம் மசாசுசெற்றைச் சேர்ந்த மதகுருவான ஜோன் ஹாவாட் என்பவரின் கொடையான 400 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கும் தமிழ் ஆர்வலர் பலர் தமது அரிய கருவூலங்களை அன்பளிப்புச் செய்திருந்தனர்.

இருப்பினும் இன்று பொது நூலகங்களே ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரியங்களின் கருவூலமாக உள்ளது. அதிலும் தம் இருப்பிற்காகப் போராடும் மக்கள் தம்மை அறிவதற்கு இந்த பாரம்பரியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் நூலகங்கள் மிக முக்கிய பங்கினைச் செலுத்துகின்றது.

இன்று தமிழீழமக்கள் ஒருபெரும் அழிவினை எதிர்நோக்கிய நிலையில் தம் இருப்பிற்காகப் போராடுகின்றார்கள். போராடும்போதும் தம் முன்னோர் விட்டுச்சென்ற நல்லவற்றைப் பேணியும், புதுப்பித்தும் ஆகாதவற்றை களைந்தும் புதியன கண்டும் நல்லவற்றை பிறரிடம் இருந்து உள்வாங்கியும் வருவதால்தான் அந்தப் போராட்டமும் மக்கள்மயப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக தமிழ் மக்கள் கல்விக்கு அறிவிற்கு, கலைகளுக்கு காலம் காலமாகக் கொடுத்துவரும் விலையை கொடுமையான போர்ச் சுஸ்ரீழலிலும் பேண அவர்தம் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையே காரணமெனலாம்.

அண்மையில் தை பொங்கலையே தமிழரின் புது வருடப்பிறப்பாகவும் அதனால் கை விசேசம் வழங்குவதை சித்திரைக்குப் பதிலாக தை பொங்கல் நாளில் மேற்கொள்ளுமாறும் வேண்டப்பட்டமை எமது பாரம்பரியத்தை புதுப்பிற்பதாகும்.

' When the past no longer illuminates the future, the spirit walk in darknes " de Tocqueville 1805-1859

ஒரு மக்களின் கடந்தகாலம் அவர்தம் எதிர்காலத்திற்கான ஒளியினை தொடர்ந்து வழங்காதுவிடின் அவர்தம் ஆத்மா இருட்டினில் பயணிக்கும் என 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரஞ்சு அரசியல் ஞானியும் வரலாற்று அறிஞருமான டி ரோக்வில் என்பார் கூறியுள்ளதை நினைவில் நிறுத்தி அமர்கின்றேன்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home