"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil National Forum > Selected
Writings - M.Thanapalasingham >
மகாகவி பாரதி - அன்றும், இன்றும், என்றும்
Selected Writings மகாகவி பாரதி - அன்றும், இன்றும், என்றும்
11 December 2007 125 ஆண்டுகளுக்கு முன்னர்
தமிழ்நாடு உலகிற்கு ஓர் ஓப்பற்ற கவியை � மகாகவி சுப்பிரமணிய பாரதியை -
பெற்றுத்தந்தது. இன்று சி.சுப்பிரமணிய பாரதியார் பிறந்து 125 ஆண்டுகள்
உருண்டோடி விட்டன. 1882 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி
அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார். ஜந்து வயதாக இருக்கும் போதே தாயாரை
இழந்துவிட்டார். இவர் இந்த மண்ணில்
வாழ்ந்ததோ 39 ஆண்டுகள் மாத்திரமே. ஆனாலும் இந்தக் குறுகிய கால வாழ்வில்
இவர் சாதித்தவையே இவரை மகாகவியாக இனம்காண வைத்தன. திறமான புலமையெனின்
வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்பது பாரதியின்
அளவுகோல்களில் ஒன்று . அப்படியான வெளிநாட்டாரான செம்யோன் ருஷிதின்
என்னும் றஸ்சிய அறிஞர் பின்வருமாறு எழுதினார்.
"இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில்
ஓர் இலக்கியப் புரட்சியே நிகழ்ந்தது ; தமிழ் இலக்கியம் புத்துயிர்
பெறும் , புதிய தற்கால உள்ளடக்கத்தையும் , புதிய வடிவங்களையும் பெறும்
ஒரு திட்டவட்டமான மாற்றம் தொடங்கியது. இந்த மாற்றத்தை மகாகவி
சுப்பிரமணிய பாரதியின் படைப்புக்களிலிருந்து பிரித்துவிட முடியாது.
தேசபக்தி , சர்வதேசியத்துவம் , சுதந்திரம் , சமுக நீதி , மற்றும்
மொழியை ஜனநாயகமாக்குவது , கவிதை மற்றும் வசனத்தின் நடையை
ஜனரஞ்சகமாக்கவது போன்ற கருத்துக்கள் யாவுமே அவரது பெயரோடு
சம்பந்தப்பட்டவையேயாகும்." பாரதிக்கு
முன்னால் தமிழ்க் கவிதையானது ஆதீனங்களிலும் , குறுநில மன்னர்களின்
அரண்மனைகளிலும் , எடுத்த மாத்திரத்தே எதுகை, மோனைகளை தம்வசப்படுத்தி
கவிபாடவல்ல பண்டிதர்களிடத்திலும் சிறைப்பட்டுக் கிடந்தது.
கிடக்கவே அந்தக் கவிதைகளின்
பாடுபொருளும் தெய்வங்களாகவும், குறுநிலமன்னர்களாகவும் , அவர்களுக்கு
இன்பம் ஊட்டவல்ல வஸ்துக்களாகவும் இருந்ததைக் காண்கிறோம். எண்ணில்
அடங்காத் தலபுராணங்கள் எழுந்ததும் இக்காலங்களில்தான். இதற்குப் பல
நூற்றாண்டுகளின் முன்னர் தமிழ்நாடு மாபெரும் கவிஞர்களும்,
மனிதாபிகளுமான வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வையார், ஆழ்வார்கள்,
நாயன்மார்கள், தாயுமானவர் போன்றோரை பெற்றிருந்தது. இவர்களை இழந்துவிடாமல்
அதேசமயம் தன் காலத்தின் தேவைகளுக்கு இலக்கியத்தை, மொழியை
ஆட்சிப்படுத்தவேண்டிய காலத்தின் முத்திரையை பாரதி பதித்தார். இதுவே
இவரை பிறரில் இருந்து வேறுபடுத்தி மக்கள் கவியாக, மகாகவியாக,
மறுமலர்ச்சிக்கவியாக, தேசியக்கவியாக, மானிடத்தின் குரலாக, பர்ணமிக்க
வைத்தது.
"கலைத் துறையில் துணிவோடிருப்பது மிகவும்
அவசியம். இல்லாவிட்டால் அற்பமானவற்றைத் தவிர வேறு ஆர்வமாஃனவை எதையும்
நீங்கள் படைத்துவிட முடியாது " என்று கூறினார் லியோ டால்ஸ்டாய்.
இதற்குத் துணிவுவேண்டும். பாரதியிடம் இருந்த துணிவாற்றலே தன்
சாதியையும் சமுகத்தையும் எதிர்து நின்று கவிதைபாட முடிந்தது.
'உலகின் ஒப்புக்கொள்ளப்படாத
சட்டவரைஞர்களே கவிஞர்கள் " என்றான் பாரதியால் போற்றப்பட்ட
ஆங்கிலக்கவிஞர்களில் ஒருவரான ஷெல்லி. வேதாந்தக்கனியான பாரதியோ
எனக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு
உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்
எனப் பாடுகின்றார். தன்வினையை கருமயோகமாக
மாற்றிய இவரது வெற்றியே இவரை மற்றவர்களிடம் இருந்து
பிரித்துப்பார்க்கவும் இவரது மேதாவிலாசத்தை புரிந்துகொள்ளவும்
வழிசமைக்கின்றது எனலாம்.
இந்தப் பிரபஞ்சத்தை தன்வசப்படுத்தும்
சக்தி மனித ஆற்றுலுக்கு உண்டு என்பதை இவரது படைப்புக்கள் அனைத்திலும்
பரக்கக்காணலாம். இதனால் தான் ' எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா "
என்றும் "நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக்
களியாட்டம் " என்றும் பாடிய கவிஞனே ' தனியொருவனுக்கு உணவில்லையெனின்
இந்த சகத்தினையே அழித்துவிட " துணிகின்றான்.
அவ்வப்போது பிரபஞ்சத்தின் அழகில்மயங்கி
பரவசப்படும் கவிஞன் அந்தப் பரவசத்தின் மத்தியிலும் தூக்கிய கொடியை கீழே
போட்டுவிடவில்லை.
இவரது அற்புதமான ஞானரதம் என்னும் படைப்பு
இதற்கு சான்றுபகர்கின்றது. தேசபக்தியே தெய்வபக்தியாகி தேசத்தின்
விடுதலையே எல்லாவிடுதலைகளுக்கும் ஆதாரம் என்பதில் அவன் என்றுமே
தளம்பியதில்லை.
இத்தாலியப் பெரும் கவிஞனான தாந்தே தனது
Divine Comedy என்னும் அமரகாவியத்தில் நரகலோகம், சுத்திகரிப்பு
உலகம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகத்திலும் பிரவேசிக்கின்றான்.
இந்தப் பயணத்திற்குத் துணையாக வேர்ஜில்
என்னும் கவிஞனையும் தன்காதலான பியற்றீசையும் துணைகொள்கின்றான்.
பாரதியும் தன் ஞானரதத்தில் ஏறி உலகை வலம்வரத் துணிந்தபோது
காளிதாசனையும் ஏதாவது ஓர் உபநிடதத்தையும் படிக்க விளைகின்றான். ஞானம்,
அழகு என்னும் படிமங்களின் துணைகொண்டு பிரபஞ்சத்தினை அனுபவிக்க இரு
கவிஞர்களும் துணிகின்றனர்.
"ஞானரத" த்தில் ஏறிக்கொண்டு உலகின் துன்ப
துயரங்களில் இருந்து விடுபட்டு மேலும் மேலும் பறந்து செல்கிறான்
கவிஞன். அங்கு தர்மலோகத்துள் தர்மராஜாவின் முகத்திலும் இந்திய
விடுதலைக்காக தீவிரவாதத்தைக் கைக்கொண்ட பாலகங்காதர திலகரின் சாயலையை
தரிசிக்கின்றார். ' மோகமான பரவசத்தில் " ஒரு கணம், மறுகணம் பூமியல்
வந்து விழுகின்றான். இன்று இத்தனை
ஆண்டுகளின் பின்னரும் பாரதியின் குரல் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கணும்
ஒலித்தபடி இருப்பதன் மகிமைதான் என்ன.
அவரால் வாஞ்சையோடு தம்பி என்று
அழைக்கப்பட்ட பரலை நெல்லையப்பபிள்ளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன்
பாட்டிற்கு எழுதிய முகவுரையில் ' பாரதியார் பாடல்களின் பெருமையைப்
பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவுகடந்து
பெரிதாய்விடும். ஒரு வார்த்தைமட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன்
காலத்திற்குப்பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின், இவர் பாடல்களைத்
தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக்
களிப்படையும் காட்சியை யான் இப்பொழுது காண்கின்றேன் " எனக் கூறியுள்ளதை
நினைவுகொள்கின்றேன். ' பாரதியாரின் கீதம்
தமிழுக்கு உயிர்கொடுத்தது. அதைப்பாடிக்கொண்டே தேசத்திற்காக தடியடி
பட்டோம். சிறைசென்றோம். பாரதியின் கீதத்தைப் பார்த்த ஒரு மலையாள ஹைகோட்
நீதிபதி இந்த அடிகளை எவராவது பாடினால் உடனே புரட்சி ஏற்பட்டுவிடும்
எனக் கூறினார் " எனகிறார் ஒருவர். '
இளங்கோவடிகள், கம்பர் என்னும் மலர்களைத் தந்த தெய்வத்தரு " ஓராயிரம்
வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராத வந்த செல்வத்தைப்போலப் பாரதியார்
என்னும் மலரை அளித்திருக்கின்றது. இம்மலரை நாம் பிறர் சொற்கேட்டுத்
தோற்றுவிடுவோமோ " என ஏங்கினார் விபலானந்த அடிகளார்.
' புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி, மண்ணைத்தெளிவாக்கி, நீரல்
மலர்ச்சிதந்து, விண்ணை வெளியாக்கி " இவன் செய்த விந்தைக் கவிகள் எம்
இனத்தின் சொத்து. நாம் உலகிற்கு வழங்கக்கூடிய செல்வம். மண்ணிலே
வேலிபோடலாம், வானத்திலே போடலாமா? போடலாம் என்கிறான் ராமகிருஸ்ணமுனி. '
மண்ணைக் கட்டினால் வானைக்கட்டியதாகாதா? மண்ணிலும் வானம்தானே
நிரம்பியிரக்கின்றது " என்கிறார் பாரதி. வானத்தை இவ்வுலகில்
இருந்தபடியே தீண்டுகிறான் கவிஞன். இதனால் தான் இவனது கவிதைக்
கூட்டிற்கு ' கள்ளும், தீயும், காற்றும் ,வானவெளியும் " கலவைகளாகின்றன.
பாரதி ஆய்வில் தம்மைப் பறிகொடுத்தவர்களில் ஒருவரான டாக்டர் எல்.
புச்சிக்கினா ' பாரதி தம் ஆத்மாவைச் செம்மைப்படத்திக் கொள்ளும்
பயிற்சியை மேற்கொண்டது இநத உலகைத் துறப்பதற்காக அல்ல் மாறாக அதற்கு
மேலும் தகுதியாவதற்காகவே, தமது தாய்நாட்டின் தேசிய,சமுக விடுதலையை எய்த
வேண்டிய உன்னதமான பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவேதான் "
எனக் கூறியுள்ளமை மனம்கொள்ளத்தக்கது. "
சொல்லடி, சிவசக்தி - எனைச் சாவின்
பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த அமர கவி காலத்தைக்
கடந்து தான் வாழ்வேன் என உறுதியாக நம்பினான். அவனுக்கு அதற்கான உரிமை
முற்றிலும் இருந்தது. ஏனெனில் தனக்கு முன்பிருந்த கவிச்செல்வம்
எல்லாவற்றையும் தனதாக்கி, நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றை
தன்வசப்படுத்தி ,பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், பைரன் (ஆங்கில
) எமில் வர்ஹரன் (பெல்யியம்) விட்மன், மிஸ் ரீஸ் (அமெரிக்க) மற்றும்
தன்காலத்தைச் சார்ந்த யப்பானிய கவிஞனின் ஆங்கிலக் கவிதைகள் என எங்கும்
எதிலும் அவன் பார்வை பட்டுத்தெறித்ததை அவனது கவிதைகளிலும்
கட்டுரைகளிலும் காணமுடிகின்றது.
இலக்கியத்திற்குரிய சமுதாயப் பணியையும் , காலத்தின் தேவைகளைப்
பூர்த்திசெய்யும் அதன் தாற்பரியத்தையும் எந்தவொரு இந்தியக் கவிஞனும்
கூறாத வகையில் : " காலத்திற்கேற்ற வகைகள்
� அவ்வக்
கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. இருப்பினும் இவனது கவிதைபின் பொருளே
மனிதன் என்பதால், இவன் கூறிய நிலைக்கு மானிடம் நகரும் வரை அந்த
வரலாற்றின் முடிவுவரை இவனது கவிதைகள் உயிரோடு உலாவும்.
இந்த இடத்தில் வோல்ராயர்
" இவன் ஒரு மனிதனிலிலும் மேலானவன். இவன் ஒரு யுகம். இவன் ஒரு வினையைச் சாதித்து அதன் முலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றினான். உன்னதமான சக்தியின் ஆற்றலால் இவன் செய்த செயலுக்காகத் தெரிவுசெய்யப்பட்டவனே இவன். இது இயற்கையின் விதிகளைப்போன்ற காலத்தின் விதியாகும் . " என்னும் வார்த்தைகள் எங்கள் பாரதிக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் செய்த தவப்பயனால் வந்துதித்த இந்தக் கவிஞனால் இந்த புதுயுகத்து மொழியாகத் தமிழ் பின்வந்தோருக்கு ஆதர்சமாக அமைந்தது. புரட்சிக்கவி பாரதிதாசன் கூறியது போல், இவன் ஓர் பைந்தமிழ் தேர்பாகன். செந்தமிழ் தேனீ. தமிழர் உள்ளங்களில் இவன் ஓர் பார்த்தசாரதி. பாரதி புகழ் பாடி மகிழ்வோமாக. |