Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவாக
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவாக
� சிட்னியில் இன்பத்தமிழ் வானொலிக்கு
15 டிசம்பர் வழங்கிய நேர்காணலில் இருந்து

[see also Anton Balasingham - One Hundred Tamils of 20th/21st Centuries]

" தத்துவஞானிகள் உலகை விமர்சனம் செய்கின்றார்கள். பிரச்சனை என்னவென்றால் உலகத்தை மாற்றியமைத்தலாகும் " என்றார் கால் மாக்ஸ்.  (Philosophers try to intepret the world, the point is to change it ) பாலா அண்ணை அழகான கதிரையில் இருந்து தன் தத்துவ தரிசனத்தை எமக்குத்தரவில்லை. மாறாக இரத்தமும் சதையும், வேர்வையும் புழுதியும், இடப்பெயர்வும் அகதிவாழ்வும், பசியும் நோயும், ஏமாற்றங்களும் துரோகங்களும், தீரமும் தியாகங்களும், அவர் இருப்பாக அதன்மத்தியிலே அவர் பேசினார், எழுதினார், பாடம்சொன்னார், கூட்டம்போட்டார். மொத்த்ததில் அவர் ஒரு போராளி. போராளியாகத் தன்னை இனம் கண்டார், போராளியாக வாழ்ந்தார், போராளியாகச் செயல்பட்டார். "

15  December 2006


எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாலா அண்ணை வகித்த பாகத்தை உரிய முறையில் மதிப்பிடவேண்டுமாயின் அவர் வருகைக்கு முன்பிருந்த காலத்தை விளங்கிக்கொள்ளல் அவசியமாகின்றது. இன்னொரு வகையில் கூறுவதானால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் அதன் புறநிலை,அகநிலைக் காரணிகளால் தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாக ஆயுதப்போராட்டமாகப் பர்ணமித்த காலத்தின் முன் உள்ள காலத்தை எம் கண்முன்னே நிறுத்தல் அவசியமாகும்.

அந்தச் சமுதாயம் பழமையில் ஊறிக்கிடந்தது. சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரே அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். தொழில் சார்ந்த துறைகளில் கல்விகற்றோரே புத்திஜூவிகளாக வலம்வந்தனர். அவர்களுள்ளும் சட்டம் பயின்றோரே " உயர்ந்தோர் குழாமாக " (elite) அரசியலில் கணிக்கப்பட்டனர்.

இவர்களே தமிழத்தேசிய விடுதலையை பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியும் முன்னின்று நகர்த்திவந்னர். இவர்கள் அரசியல்மொழியோ ஆங்கிலம். இந்த பண்பியல்புகள் எமது சமூகத்திற்கு மட்டுமானதல்ல . ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப்போர்கொடி உயர்த்திய இந்தியா உட்பட்ட நாடுகளுக்கும் பொதுவானதே. ஆயின் எண்ணிக்கையில் அசுரபலம் கொண்ட சிகங்களதேசம் தமிழர் இருப்பையே கேள்விக்குறியாக்கிய காலகட்டத்தில் வடிவம்பெற்ற ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அரசியலை , சமூகவியலை, வரலாற்றை, கலைபண்பாடுகளை, சடங்கு சம்பிரதாயங்களை, புதிய ஒளியில் இபுதிய மார்க்கத்தில், பார்க்கவேண்டிய நிர்பந்தத்தை ஆயுதப்போராட்டம் ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுப் பணியை ஆற்றியவர் அன்ரன் பாலசிங்கம். இதனால்தான் இவர் எமது தேசியவிடுதலைப் போராட்டத்தின் தத்துவாசிரியராகின்றார்.

" தத்துவஞானிகள் உலகை விமர்சனம் செய்கின்றார்கள். பிரச்சனை என்னவென்றால் உலகத்தை மாற்றியமைத்தலாகும் " என்றார் கால் மாக்ஸ்.
 (Philosophers try to intepret the world, the point is to change it ) பாலா அண்ணை அழகான கதிரையில் இருந்து தன் தத்துவ தரிசனத்தை எமக்குத்தரவில்லை. மாறாக இரத்தமும் சதையும் , வேர்வையும் புழுதியும், இடப்பெயர்வும் அகதிவாழ்வும், பசியும் நோயும், ஏமாற்றங்களும் துரோகங்களும், தீரமும் தியாகங்களும், அவர் இருப்பாக அதன்மத்தியிலே அவர் பேசினார், எழுதினார், பாடம்சொன்னார், கூட்டம்போட்டார். மொத்த்ததில் அவர் ஒரு போராளி. போராளியாகத் தன்னை இனம் கண்டார், போராளியாக வாழ்ந்தார், போராளியாகச் செயல்பட்டார்.

இவ்வாறு செயல்பட்டபோது தனது ஆழமான வாசிப்பு இவாசித்திவற்றுள் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பவற்றை உள்வாங்கினார். அவற்றைப் போராளிகளுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களிடமிருந்து இவரும், இவரிடம் இருந்து அவர்களுமாக இடம்பெற்ற இருவழிப் பாய்ச்சலில் ஆயுதப்போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியலில் புதிய வெளிச்சங்கள் பாய்ந்தன. புதிய புத்திஜுவிகள் போராட்டத்திற்குள் இருந்து பிறப்பெடுத்தனர். கிட்டு என எல்லோராலும் வாஞ்சையோடு அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமாரின் மொழியில் கூறுவதானால் :

".....விறகு கொத்தும் கந்தனும்
கள்ளு வடிக்கும் பூதனும்
கோவணத்துடன் தோட்டம் கொத்தும் ராமையாவும்
கரைவலை இழுக்கும் கோபுவினதும்....வாழ்வு வளம் பெற
உழைப்பது " ஆத்மீகமும் புரட்சியுமாகின்றது."

தவிரவும் நவீன ராஜதந்திரங்களுக்கு முகம்கொடுத்து நிற்கும் புதிய மனிதர்களும் எம்மிடையே தோற்றம் பெற்றனர். அதிகாரவர்கத்தோடு கைகோத்திருந்த தமிழ் அறிவுலகில் பாலா அண்ணரின் வரவு ஒரு உடசலையும் ஏற்படுத்தியது எனலாம். ஆயுதப்போராட்டத்தின் அரசியல், கலை இலக்கியங்களிலும் , சமூகவியலிலும் இமானிடவியலிலும், தனிமனித சிந்தனைகளிலும் மாற்றங்களை வேண்டிநின்றவேளையில் அந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன்றான பாரிய புலம் பெயர்வும் பெரும் மாற்றங்களை வேண்டிநின்றன. இந்த வகையிலும் குறிப்பாக சென்ற நூற்றாண்டின் 1989 ஆம் 90 ஆம் ஆண்டுகளில் பாலா அண்ணர் ஆற்றிய பணிகளை நோக்கி மதிப்பிடவேண்டும்.

ஏறத்தாள முப்பது ஆண்டுகளாகத் தமிழ் ஈழப் புலிகளுடன் தன்னை இணைத்து வாழ்ந்த பாலா அண்ணர் எழுதிய எழுத்துக்கள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. அவற்றுள் றஸ்சிய பெரும் அறிஞரும், நாவலாசிரியருமான டால்ஸ்டாயின் புகழ் பூத்த போரும் சமாதானமும் என்ற நாவலின் தலைப்பில் பாலா அண்ணரால் வடிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் ஆயதப் போராட்டத்தினதும் சமாதான முன்னெடுப்புக்களினதும் ஆவணங்களாகப் போற்றப்படும் என்பது நிச்சயம்.

ஆயுதப் போராட்டத்திற்கான புறநிலைக்காரணிகள், நெருக்கடிமிகுந்த இந்தியத் தலையீட்டுக்காலத்தில் இயக்கம் எதிர்கொண்ட சவால்கள், திம்புவில் இருந்து ஒஸ்லோவரை நகர்த்தப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கள் யாவும் ஒரு கற்பியல் பாடநூல் முறையில் எழுதப்பட்டுள்ளது.

இவரது ஆழமான வாசிப்பிற்கும் , சிந்தனைக்கருவூலத்திற்கும் சான்று பகரும் நூலாக இவர் பல்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுதியாக நூலுருப்பெற்றுள்ள "விடுதலை" என்னும் நூலைக் குறிப்பிடலாம்.

மாற்றங்களை வேண்டிநிற்கும் எந்த ஒரு கருத்தியலோ, சிந்தனையோ, தத்துவமோ உலகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமும் திருத்தமும் இன்றி நிற்குமேயானால் நாற்றம் எடுக்கும். திறந்த அரங்கில் நிகழும் மாற்ங்களை அவதானித்துச் செயலாற்ற வழிவகுக்கும் கருத்தியலே வெற்றிக்கு எம்மை இட்டுச் செல்லும்.

"விடுதலையில் ஜுட்டு கிருஸ்ணமூர்த்தியின் மனப்புரட்சியை " மனித வாழ்வுக்கு மனிதனே அர்த்தத்தைக் கற்பிக்க வேண்டும் " என்னும் பிரஞ்சு இருப்பியல்வாதியான அல்பேர்ட் கம்லுஸ்ரீவின் ( Albert  Camus ,1913-1960 ) வாதங்களை, சென்ற நூற்றாண்டின் கணிசமான காலப்பகுதியை ஆட்கொண்டு ஜரோப்பிய சிந்தனை உலகை ஆட்டிப்படைத்தவரும் எழுத்து என்றால் என்ன.

ஒரு எழுத்தாளன் ஏன் எழுத வேண்டும்? அவன் யாருக்காக எழுத வேண்டும் ? என்னும் கேள்விகளுக்கு விடையளித்தவருமான ஜோன் போல் சாத்தர்,( Jean Paul Sartre 1905-1980) பிராங்ஸ் பனன் எழுதிய " பூமியில் இழிநிலைப்பட்டோர் " (Wretched of the Earth ) கால் மாக்சையே கவர்ந்த யேர்மன் தத்துவஞானியாககிய ஹேஹல், (Hegel ) சீனத்து மாவோ,  " நாகரிகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும் " என்ற சாமுவேல் ஹண்டிங்ரன் எழுத்துக்கள், ( The Clash of Civilizations and the Remaking of World Order )  உணர்ச்சிமயமான மனிதனைக் காணும் சிக்மண்ட் பிராய்ட்டின் கருத்துக்கள், "வரலாற்றின் முடிவு " என்னும் சர்ச்சைக்குரிய பிரான்சிஸ் புக்குயாமாவின் கருத்துக்கள் எனப் பல சமூகவியல், வரலாற்றியல், இருப்பியல், மானிடவியல் சார்ந்த சிந்தனையாளரின் கருத்துக் கருவூலங்களை அழகான தமிழ் நடையில் பாலா அண்ணர் எழுதியுள்ளது போராட்டதிற்கு அவர் அளித்த மாபெரும் கொடையாகும். சிந்திக்கத் தூண்டும் இந்த எழுத்தோவியங்கள் அவர்களை ஆகர்சித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இவை யாவற்றையும் விட எளிமையான பண்பும், வாழ்வும், சுவைதோய்ந்த அவரது உரையாடல்களும், அந்த உரையாடல்களில் வட்டாரத் தமிழை அவர் சரளமாகப் பயன்படுத்தும் அந்த மண்ணின் வாசமும், என்றுமே எம்மை விட்டகலா நினைவுகளாகும். அவருக்கு யாவற்றிலும் துணையிருந்து அவரை நவீன அர்த்தநாரீஸ்வரராக வலம் செய்ய வைத்த அருமைச் சகோதரி அடேல் அவர்களை பாசத்தோடு அணைத்துக்கொள்கின்றோம்.

குரூரமான கொடுமையான உலகம் ஒன்றை எதிர்த்து பாலா அண்ணர் போராடினார். அந்தப் போராட்டம் அதன் உச்சப் பரிணாமத்தில், பாரிய சவால்களை எதிர் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவரின் மரணம் ஒரு அகால மரணமாகும்.

" Large trees seem larger when they dominate a forest, there they are at home .." என்பர்.

பாலா அண்ணை என்ற வீருட்சம் அதன் புழுதியோடும், உறவுகளோடும், உணர்வுகளோடும் ஒன்று பட்டு நிற்பதால் அந்தக் காட்டின் பெரு விருட்சங்களில் ஒன்றாக என்றுமே கோலம் காட்டி நிற்கும். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் வசப்படக்கூடியதொன்றல்ல. இது வானத்தில் இருந்து விழுவதுமல்ல. நிலத்தில் ஆழமாக ஊன்றிய தேசபக்தியின் உருவமே அன்ரன் பாலசிங்கம் என்னும் எமது பாலா அண்ணை.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home