Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > வசந்த மாலை கலை நிகழ்ச்சி

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

வசந்த மாலை கலை நிகழ்ச்சி

22 April 2006

" அங்கு வாழ்பவர்களுக்காக மட்டுமல்ல இங்கு வாழப்போகும் எமது பிள்ளைகளுக்காகவும்தான். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் முகம் வேண்டும். முகவரிவேண்டும்... தமிழ் ஈழத் தேசியத்தவைர் கூறியுள்ளது போல் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் அடக்கிவிடமுடியாது."

சிட்னி தமிழ் அறிவகத்தால் 22 ஏப்பிரல் மாதம் நடத்தப்பட்ட வசந்த மாலை கலை நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

வசந்தமாலையில் கட்டுண்டு வீற்றிருக்கும் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்.

நாம் விட்டுவந்த எமது மண்ணின், எமது முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மடிந்த மண்ணின், எமது அன்னையர் கன்னியராகி நிலவினில் ஆடிய மண்ணின் சமகால நிகழ்வுகள் பற்றி சில நிமிடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த அரிய வாய்ப்பிற்காக சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவருக்கும், செயற்குழு உறுப்பினர்க்கும் முதற்கண் எனது நன்றிகள்.

பஸ்ரீமிப்பந்தில் வாழும் எந்த ஒரு மக்களுக்கும் முகமும், முகவரியும் முக்கியமான அடையாளங்களாகும். எமக்கு எமது தமிழ் மொழியே அந்த அடையாளத்தின் அத்திவாரம். எமது முன்னோர் எமக்காக விட்டுச் சென்ற அரிய செல்வங்களையெல்லாம் சுமந்து நிற்பது எமது மொழியே. எம் முன்னோரின் சிந்தனைகள், வல்லபங்கள், வெற்றிகள், தோல்விகள் யாவற்றையும் எமது மொழியின் ஊடாகவே நாம் உள்வாங்கி வலுமை பெறுகின்றோம்.

உலகின் சிறந்த ஒரு சில செம்மொழிகளில் ஒன்றான எமது மொழி, தொன்மையோடு தொடர்ச்சியும் கொண்டிருப்பது எமக்குப் பெருமை அளிக்கின்றது. ஆரம்பத்தில் வாய்வழியாகவும், எழுத்தின் கண்டு பிடிப்பைத் தொடர்ந்து ஓலைச்சுவடிகளிலும் குடியிருந்த எமது மொழி பின்னர் நவீன அச்சுவாகனமேறி இன்று அதிநவீன கணனி வலையங்களையும் தன்வசப்படுத்தி "முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும்" ஏற்றவளாகி வாழ்கின்றாள்.

இந்த வகையில் அரிய தமிழ் நூல்களை களஞ்சியமாகக் கொண்டு விளங்கும் சிட்னி தமிழ் அறிவகம் ஏனைய தமிழ் அமைப்புக்களில் இருந்து வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்டதுமட்டுமல்ல எல்லாத்தமிழ் அமைப்புக்களாலும் அரவணைக்கப்படவேண்டிய ஒரு அறிவகமாகும்.

இன்று தமிழர் போற்றி பெருமைப்படும் நூல்களும், தத்துவங்களும், கோபுரங்களும், சிலைகளும், இசையுமநடனமும் தமிழர் தம்மைத் தாமே ஆண்ட காலங்களில் வெளிவந்த வல்லபங்களாகும். படையும் கொடியும் கொண்டு கடல் ஆதிக்கம் செய்த வரலாற்றுப் பகைப்புலத்தில் அவை வெளிவந்தன. இந்தப் பின்புலத்தில் யாழ் நூலக எரிப்பு ஒரு கலாச்சாரப் படுகொலையாகும். ஒரு இனத்தின் கூட்டான வரலாற்று ஞாபகங்களை அழித்து விடுவதன் மூலம் அவர்களின் தனித்துவமான இருப்பையே அழிக்கும் செயலாகும். நூல்களுக்கு தீ மூட்டி, எம்மிடையே வாழும் சிந்தனையாளர்களை, புத்திஜீவிகளை, கொன்றொழித்து விடுவதன் மூலம் எம்மை ஒரு மக்களாக உலகம் பாற்காத நிலைக்கு தள்ளுவதே எதிரியின் நீண்டகாலச் செயல்பாடுகளாகும்.

சிங்கள ஆட்சியாளரின் இந்த வினைகளுக்கு எதிர்வினையாக வெடித்ததே எம்மக்களின் ஆயுதப் போராட்டமாகும் என்பதை நாம் அறிவோம்.
இந்தப் போராட்டத்தின் வீரமும், தியாகங்களும், அடிபணிய மறுக்கும் ஓர்மமும், இன்று இலங்கைத்தீவில் இரு அதிகார மையங்களை தோற்றுவித்துள்ளதை யாவரும் அறிவர்.

இந்த அதிகார மையங்களுக்கு வேறு வேறான இராணுவக் கட்டமைப்புக்களும், சட்ட ஒழுங்கு கட்டமைப்புக்களும், நிர்வாக அலகுகளும் உருவாகியுள்ளதையும் நாம் பார்க்கின்றோம்.

இவற்றின் பின்னணியிலேயே மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தத்தில் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பேச்சு வார்தைகள் இடம் பெறுகின்றன. இந்தப் பேச்சு வார்த்தைகளுக்கான அத்திவாரம் யுத்த நிறுத்த உடன்படிக்கை. இதற்குக் காரணம் இருபக்க இராணுவச் சமநிலை.

இருந்த போதும் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த இராணுவச் சமநிலையை தமக்குச் சாதகமாக்கி அதன் மூலம் தமிழ் மக்களின் போர்க்குணத்தை மழுங்கச்செய்து அவர்களை மண்டியிட வைப்பதே சிங்களத்தின் ஒரே நோக்கமாகும். இதில் எமக்கு ஏமாற்றம் இல்லை.

ஏமாற்றமெல்லாம் சர்வதேச சமூகத்தின் மீதே. அதுவும் மேற்குலகின்மீது.
யாழ்ப்பாண பாராழுமன்ற உறுப்பினர் இதனையே அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றியபோது பேச்சு வார்த்தைகளுக்கு புலிகள் தனிநாடு அமைக்க கங்கணம்கட்டி நிற்பதே தடையாக உள்ளது என்னும் மனஅடிப்படையில் மேற்குலகம் செயல்படுவதை விடுத்து பிரச்சனை சிங்களபேரினவாதமே என்பதை உள்வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனையே பிரபல மூத்த அரசியல் மூதறிஞர் மு.திருநாவுக்கரசு

" சிங்களத்தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு மத்தியஸ்தர் மூலமே பேசவேண்டும் என்ற ஒருநிலை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் பின்னணியில் மேற்குலகமும் தனது நம்பிக்கைக்கு பாத்திரம் அல்ல என்று புலிகள் கருதுவார்களானால், தமிழ் மக்கள் நம்புவார்களேயானால் அது மோசமான இடங்களில் போய்ச் சேரவேண்டிவரும் "

எனவே மேற்குலகம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறத்தக்க வகையில் நடக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்லர். இந்தியா, மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு தமது நலங்களைப் பேண முற்படுவதை நாம் அறிவோம். ஆனால் சிங்களத்தின் ஒட்டுப்படையால் குரூரமாகக் கொலைசெய்யப்பட்ட, புகழ்பெற்ற தாரக்கி எனப்படும் சிவராம் கூறியதுபோல் எமது போரட்டம் நாம் அரசியல் விடுதலை பெற்றவர்களாக, எம் முன்னோர் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து மடிந்த மண்ணில் பாதுகாப்பாக தன்மானத்துடன் வாழ்வதற்கான போராட்டமாகும். மற்றவர்களின் நலன்களைப் பேணுவதற்காக எம் மண்னின் ஒரு இஞ்சியை தன்னும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

இருந்த போதும் சுதந்திரமான தமிழ் ஈழம் சிங்களத்துடன் பாதுகாப்பாக பரஸ்பர நலன்களைப்பேணி வாழ்வதற்கான முறையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்போது சம்பந்தப்பட்டோரின் நலங்களுக்கு பாதகமாக அவை அமையத்தேவையில்லை. முரண்பாடுகளைத் தீர்க்கும் போது எல்லோருக்கும் வெற்றி தரும் தீர்வைக் காணும் நனி நாகரிகம் கொண்டவர்கள் நாங்கள்.

இந்த நிலையை ஏற்படுத்த புலம் பெயர்ந்து வாழும் நாம் ஒன்று திரண்டு குரல் கொடுக்கவேண்டியகாலம் வந்துவிட்டது. அங்கு வாழ்பவர்களுக்காக மட்டுமல்ல இங்கு வாழப்போகும் எமது பிள்ளைகளுக்காகவும்தான். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் முகம் வேண்டும். முகவரிவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையில் இருந்து நாம் தவறின் அவர்களின் பழிச்சொல்லிற்கு ஆளாவோம்.

எமது மண்ணில் மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்டவர்களாக அதற்காக பல துன்பங்களை சுமப்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். இந்த விழிப்புணர்வின் கொடுமுடிகளே விக்கினேஸ்வரன் போன்ற மாமனிதர்கள். தமிழ் ஈழத் தேசியத்தவைர் கூறியுள்ளது போல் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் அடக்கிவிடமுடியாது. நாமும் எமது பங்களிப்பை செய்வோமாக.

" உற்றவர், நாட்டவர், ஊரவர் இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற் தவம் ஆவது கண்டோம்"

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home