"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil National Forum > Selected Writings - M.Thanapalasingham > சிவராமுடன் (தராக்கி) ஒரு நாள்
Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம்,
அவுஸ்திரேலியா
சிவராமுடன் (தராக்கி) ஒரு நாள்
3 May 2005
[see also One Hundred Tamils of 20th Century - Dharmaretnam Sivaram]
"..மதுவையும், மாமிசத்தையும் சுவைத்து அவற்றை வாழ்வின் இயல்பாக்கியவள் ஒளவை. அதனை பாட்டுக்குப் பொருளாக்கிய வெட்கப்படாத நேர்மை, உண்மையில் பற்றுறிதி, அறிவுத்திறன் நிர்பந்தங்களுக்கு வளையாது வீரத்தைப் போற்றும் திண்ணம் தமிழ்பற்று மண்பற்று என்பன எல்லாம் சேர்ந்த ஒளவை சிவராமிற்கு ஆதர்சமாக இருந்ததைக் கண்டேன்..."
அந்த இரவு அவர் விரும்பும் மதுவும் மாமிசமும். அவற்றை சுவைத்த வண்ணம் அவர் கூறியவை என்மனதில் திரை எறிகின்றன. எவரையும் கடுமையாக, கரடு முரடான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிவராமை பகல் பொழுதில் கண்டேன். அவரது தமிழ் தேசியத்தை, அதனை சங்ககாலத்து வீரயுகத்தோடு இணைத்துக்காட்டிய பாங்கை, தனக்குத்துணையாக சங்க காலத்து ஓளவையை தழுவிக்கொண்ட அவரது வாழ்வுக் கோலங்களை கண்டு சுவைத்தேன். புறநானுஃற்றில் பல பாடல்களை பாணர் குலத்தில் பிறந்த ஒளவை பாடியுள்ளாள். அவற்றில் ஒன்றில் இருந்து ஓரிரு வரிகளை அவர் எடுத்து விளக்கினார். அதியமான் நெடுமானஞ்சி ஒளவையை ஆதரித்த மன்னன். அவனது அரண்மனையில் ஒளவையின் குரலுக்குப் பெரும் மதிப்பு. அந்கத மன்னன் இறந்தபோது விறலியாகிய (ஆடல் பெண்) ஒளவை புலம்புகின்றாள். அதில் அரிதாகப் பெற்ற மதுவை எனக்குத்தருவாய். பெரிய அளவில் மது இருக்கும்போது எம்மைப் பாட வைத்து நீயும் அருந்துவாய் என்ற கருத்துப்படும் " சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே என்ற பாடலே அது. இதில் சிறியகள் என்பதற்கு உரையாசிரியர்கள் சிறு அளவான கள் என்ற அர்த்தத்தில் உரை எழுதியிருக்க, சிவராமோ அது ஒரு அதிவிசேடமான மதுவைக் குறிக்கும் எனக் கூறியதை எண்ணி வியந்தேன். மதுவையும், மாமிசத்தையும் சுவைத்து அவற்றை வாழ்வின் இயல்பாக்கியவள் ஒளவை. அதனை பாட்டுக்குப் பொருளாக்கிய வெட்கப்படாத நேர்மை, உண்மையில் பற்றுறிதி, அறிவுத்திறன் நிர்பந்தங்களுக்கு வளையாது வீரத்தைப் போற்றும் திண்ணம் தமிழ்பற்று மண்பற்று என்பன எல்லாம் சேர்ந்த ஒளவை சிவராமிற்கு ஆதர்சமாக இருந்ததைக் கண்டேன். என் இனம் மிஞ்சும், என் மண் மிஞ்சும், நான் இறுதிவரை போராடி மடிந்தேன் என்ற வரலாறு மிஞ்சும் என்ற சிவராமை எப்படி மறக்க முடியும். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த பரிச்சியம், அரசியல் தத்துவங்கள், உலக வரலாறு, தமிழர் வரலாறு, திராவிட இயக்கங்கள் பற்றிய ஆழ்ந்த பார்வை, இராணுவம் போரியல் சம்பந்தப்பட்ட கூர்மையான அறிவு, மாக்சிய சிந்தனைகள் இன்ன பிறவும் அவர் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி அவரது எழுத்துக்களில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அறிவோம். துப்பாக்கி கொண்டு எழுதுவதுபோல் அவர் வார்க்கும் எழுத்துக்களில் பொய்மைக்கு அடிபணிய மறுக்கும் ஒரு போர்க்குணத்தை காணமுடியும். சிவராம் எழுதிய எழுத்துக்களை நாம் வாசிக்கும்போது அவர் எழுதாத எழுத்துக்கள் எம் மனதில் விரிவதை நாம் உணர்கின்றோம். இந்த உணர்வின் ஆழ அகலம் அவரவர் அறிவு அனுபவம் சார்ந்து வேறு வேறு காட்சிக் கோலங்களை காட்டுவதை அவர் எழுத்தை வாசிப்போரின் உரையாடல்களில் இருந்து ஊகிக்க முடியும். சொல்லக் கூடாதவற்றை பாடகமாக அவர் ஒரு புதிரோடு எழுதும்பாணி அவரது தனித்துவமான ஆளுமை. தமிழ் எழுத்துக்களில் மண்ணின் மைந்தர்களின் வட்டார வழக்குத் தமிழை அவர் கையாளும் லாவகம் ஒரு தனியான பாணி. தமிழ்த் தேசியத்திற்கு, தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கு என்றுமில்லாத அளவில் சவாலும் சோதனையும் ஏற்பட்டபோது, தமிழ் கூறும் நல்லுலகமே தவித்தபோது, ஆழக்கடலில் இருந்து அலைகடலின் மேலிருந்து ஒலித்த சிவராமின் குரலும் எழுத்தும் பிரதேச வாதங்களை சுக்கு நுஃறாக்கி தமிழ் தேசியத்தின் தாயகக் கோட்பாட்டின் வலுவை, நித்தியத்தை உலகின் முன் நிறுத்தியது. சுற்றி நின்ற பகை நடுவே துள்ளி வந்த வேலாக அவர் வலம் வந்தார். இவரது இந்தச் செயலை தமிழ் ஈழம் என்றுமே மறவாது என்பது திண்ணம். தென் தமிழ் ஈழத்தின் இருப்பு ஒட்டு மொத்தமான தமிழ் தேசியத்தின் வலுவில் மட்டுமே தங்கியுள்ளது என்ற யதார்த்தத்தை சிவராம் புரிய வைத்த விதம், நேரம் என்பன அவர் வரலாற்றை முன்னின்று நகர்த்திய செயற்பாடுகள் எனலாம். சிவராமிடம் இருந்து அரசியலைப் படித்தல் (Learning Politics from Sivaram) என்னும் நுஃலின் ஆசிரியரான Mark Whitaker (an Associate Professor of Anthropology at the University of South Carolina USA) சிவராமின் மரணத்திற்கு பின்வருமாறு கலங்குகின்றார்
ஆபத்துக்களும் பகையும் தன்னை சூழ்ந்தருப்பதை அறிந்த சிவராம் தன் மனைவியின் உறவுகள் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறியபோது, கொஞ்ச நாட்கள் தன்னும் வெளி நாடு ஒன்றில் இருந்தால் என்ன என வினவியபோது " சோறு தான் வாழ்க்கை என்றால் எங்கும் வாழலாம், அதுவும் ஒரு வாழ்வா" என்ற ஒளவையை (எத்திசை செலினும் அத்திசை சோறே) நினைவூட்டினார். ஒளவையின் சிறியகட் பாடலில் சிவராம் பாடாது விட்ட வரிகளான "இனி பாடுனரும் இல்லை, பாடுனர்க்கு ஒன்று ஈகுனரும் இல்லை " என்னும் வரிகளை காணிக்கையாக்கி அமர்கின்றேன். |