"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
எல்லாளன் நடவடிக்கையும், புலம் பெயர் தமிழர்களும்
29 October 2007
தமிழீழ விடுதலைப் புலிகள், அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது நடாத்திய துணிகரமான, வெற்றிகரமான தாக்குதல், சிறிலங்கா அரசிற்கு மட்டுமல்லாது, உலகத்திற்கும் பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றது.
தமிழீழத் தேசியத் தலைவரால், துல்லியமாகத் திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்க கொண்டு வந்துள்ள தாக்கத்தின் பரிமாணத்தை, வரலாற்று மற்றும் அரசியல் ரீதியாகத் தர்க்கித்துச் சில கருத்துக்களை முன் வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்வான இராணுவச் சாதனையைக் காணப் பொறுக்காத சிங்களத் தரப்பு, மிகக் கீழான, இழிவான, கீழ்த்தரமான, பண்பாடற்ற செயல்களில் இறங்கித் தன்னுடைய இயலாமையை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்தி, அசிங்கப்படுத்த முயன்ற சிங்களத்தின் செய்கையானது, சிங்கள அரசின் இயலாமையை மட்டுமல்லாது, அதன் காட்டுமிராண்டித்தனத்தையும் சேர்த்தே காட்டுகின்றது. சிங்களம் ஒரு புதிய உலகத்திற்கு, நவீன, பண்பாட்டு நாகரிகத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதையும், இன்னும் காட்டுமிராண்டித்தனத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றது என்பதையும் இந்தச் செய்கை புலப்படுத்தியுள்ளது.
இங்கே சிங்களம், இரண்டு அற்பத்தனங்களைச் செய்து காட்டியுள்ளது. மாவீரர்களின் வித்துடல்களை, நிர்வாணப்படுத்தி, உழவு இயந்திரங்களில் கொண்டு சென்று, சிங்கள மக்களுக்குக் காட்டிக் கொண்டு சென்ற சிங்கள இராணுவம் இன்னுமொரு அற்பத்தனத்தையும் செய்துள்ளது. போரில் இறந்த எதிர்த் தரப்பினர்களின் உடல்களை மீளக் கொடுப்பது உலக வழக்கம்.அதைக்கூடச் செய்யாமல், மாவீரர்களின் வித்துடல்களை எரிக்கின்றோம், புதைக்கின்றோம் என்று சிங்களம் சொல்லிக் கொண்டு நின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள், இறந்து போன சிங்கள இராணுவத்தினரின் உடல்களை, எப்போதும் திருப்பிக் கொடுத்தே வந்துள்ளார்கள். சிங்கள அரசு தன்னுடைய படையினரின் உடல்களைப் பெற்றுக் கொள்ள மறுத்தபோதெல்லாம் விடுதலைப் புலிகள் இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்களைப் பூரண இராணுவ மரியாதையோடு புதைத்தும் உள்ளார்கள்.
சிங்களத்தின் இந்தக் காட்டுமிராண்டிச் செயல்கள் ஒன்றும் புதிதானவை அல்ல! பல ஆண்டுகளுக்கு முன்னர் வெலி-ஓயாவில் நடந்த சமரின்போது இறந்த, பெண் புலிப் போராளிகளின் வித்துடல்களையும் இவ்வாறுதான் சிங்களம் அசிங்கப்படுத்த முயன்றது. தன்னுடைய இன்னுமொரு அற்பத்தனத்தின் வெளிப்பாடாக, மாவீரர் துயிலும் இல்லங்களை உழுது அழிக்கின்ற செயல்களையும், சிங்களம் செய்து வருகின்றது.இன்றுகூட, இந்தியாவில், ஆங்கிலேயச் சிப்பாய்களின் கல்லறைகள் இருந்து வருகின்றன. அவற்றை இந்திய அரசு உடைக்கவில்லை. உழுது தள்ளவில்லை. ஏனென்றால் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகளை அழிக்கக் கூடாது என்பது பொதுவான உலக நியதி. அதைக் கூடச் சிங்களம் பொருட்படுத்துவதில்லை.
துட்ட கைமுனு என்ற சிங்கள இளவரசன், 72 வயது முதிர்ந்த எல்லாளன் என்ற தமிழ் அரசனைத் தனிச்சமர் ஊடாகத் தோற்கடித்துக் கொன்றதை மகாவம்சம் விரிவாக எடுத்துரைக்கின்றது. ஆனால் துட்ட கைமுனு, எல்லாளன் வீழ்ந்திறந்த இடத்தில், எல்லாளனுக்கு ஒரு நினைவுத் தூபியை (தக்கிண விகாரை) அமைத்துக் கௌரவப்படுத்தினான். அத்தோடு மட்டுமல்லாது, எந்த மனிதனாயினும், அவன் இளவரசனாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, இந்த வழியாகச் சிவிகையிலோ மூடு பல்லக்கிலோ வரநேர்ந்தால் வாத்திய ஒலி எழுப்பக்கூடாது என்று கற்றூணில், துட்ட கைமுனு பொறித்தும் வைத்துள்ளான்.
துட்டன் என்ற பெயரெடுத்த துட்ட கைமுனுவுக்குக்கூட ஒரு வீரனை மதிக்க வேண்டிய பண்பு இருந்தது. ஆனால் இன்றைய சிங்களத் தலைமைக்கு அதுகூட இல்லை. அன்றைக்கு இருந்த சிறிய பண்புகூட இன்று இல்லாதபடியால்தான், சிங்களம் இன்று காட்டுமிராண்டித்தை நோக்கிப் போகின்ற ஒரே ஒரு இனமாக விளங்குகின்றது போலும்! புத்தர் நிர்வாணம் அடைந்தார் என்பதால், இவர்கள் நிர்வாணம் குறித்து விளங்கி வைத்திருப்பது இப்படித்தானோ என்னவோ?
இப்படியான ஒரு காட்டுமிராண்டிச் சம்பவம், மேலை நாடுகளில் நடைபெற்றிருந்தால், அந்தத் தேசத்து மக்கள் தமது அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தமது கண்டனத்தைத் தெரிவித்துப் போராடியிருப்பார்கள். சிங்களத்தில் அவ்வாறு நடைபெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளோடுதான் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்வைப் பெறலாம் என்று சர்வதேசம் சொல்லி வருகின்றது.
சிங்களம் தனது இயலாமையைத் தனது அற்பத்தனங்கள் ஊடாகக் காட்ட முற்படுகின்ற அளவிற்கு, எல்லாளன் நடவடிக்கை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இத்தாக்குதல் காத்திரமான பல செய்திகளையும் சொல்லியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
� தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் பலமிழந்து, மனவுறுதி இழந்து விட்டார்கள் என்று சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட மாயை இன்று உடைந்து போய் விட்டது.
� தமிழீழ எல்லைப் பகுதிகளைக் கடந்து, சிங்களத்தின் இதயப் பகுதிகளுக்குள் சமர்கள் நடைபெற்று இருக்கின்றன. சிங்களத்தின் புராதானத் தலைநகரான அநுராதபுரத்திலும், மற்றைய கோட்டையான அம்பாந்தோட்டை - திஸ்ஸமகாராமவிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
� புலிகளை ஓரங்கட்டி விட்டு, பொருந்தாத ஒரு தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணித்து விடலாம் என்று நினைத்த சிங்களப் பேரினவாதத்திற்குப் பலத்த அடி விழுந்துள்ளது.
� சிங்கள அரசின் இத்தகைய திட்டத்திற்கு இணக்கமாகச் செயல்பட்ட மேற்குலகத்திற்கும், இன்று, யதார்த்த நிலை புரிய வைக்கப்பட்டுள்ளது.
� தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போர் நடவடிக்கைகளினால் விளைந்த அழிவுகள் ஊடாக, மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் போன்றவை சாத்தியப்படாது என்பதையும் இத் தாக்குதல்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
� அபிவிருத்தி என்ற பெயரில் போருக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பிரயோசனப்படாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
� இங்கே புலிகள் அழிந்து போய்விட்டார்கள். நாங்கள் இங்கே வந்து, இருப்பதைச் சுரண்டிக் கொண்டு போகலாம் - என்று கனாக் காணுகின்ற சிலருக்கும் ஒரு காத்திரமான செய்தி சொல்லப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படையெடுப்பு ஒன்றை மேற்கொள்ளாமல் ஏன் அநுராதபுர வான் படைத்தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்? என்று சிலர் வினவக் கூடும். இந்த வினா குறித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.
இருபத்தியொரு கரும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகள், ஒத்திகைகள், உழைப்புகள் போன்றவற்றிற்கு என்று ஒரு காலம் இருக்கிறதல்லவா? இந்தக் கரும்புலி மாவீரர்களின் செயல்நோக்கை ஒருமுகப்படுத்தி, ஓர் இராணுவ முகாமை அழிக்க வேண்டுமென்றால், அதனைச் சுலபமாகச் செய்திருக்கலாம். ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்டு, இன்று அநுராதபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் என்பது பாராதூரமானவை என்பது மட்டுமல்லாது, அதனால் ஏற்பட்ட, ஏற்படப் போகின்ற விளைவுகளும் சிறிலங்கா அரசிற்குப் பாரதூரமானவைதான்!
தமிழீழ எல்லைகளில் நடைபெறுகின்ற சமர்களில் சிறிலங்கா இராணுவம் அடைகின்ற இழப்புக்கள் சிங்களத்தின் இதயத்தைப் பெரிதாகத் தாக்குவதில்லை. அதனைப் பெரிதாகவும் உலுக்காது. நாம் முன்னர் கூறியதுபோல், வேறு ஓர் இடத்தைத் தெரிவு செய்திருந்தாலும், பெரிய ஒரு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் தெரிவு செய்யப்பட்ட இடமும், செய்யப்பட்ட முறையும் பல்வேறு விதமான தாக்கங்களை ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளன.
இராணுவத்திற்கு ஏற்படுகின்ற இழப்புக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குச் சிங்கள அரசு மாற்றீடு செய்து கொண்டே இருப்பது வழமை. அதேபோல், இந்தப் பாரிய இழப்பையும் சிறிலங்கா அரசு மாற்றீடு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லாளன் நடவடிக்கையினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், விளைவுகளும் சிங்களத்தின் இதயத்தின் மீது பலத்த அடியைக் கொடுத்துள்ளன. மிகப் பெரிய அளவில், மிக முக்கியமான வானூர்திகள் அழிக்கப்பட்டது மட்டுமல்லாது, சிறிலங்கா அரசின் வரவு செலவுத் திட்டத்திலும் மிகப் பெரிய துண்டு விழுந்து விட்டது. இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகளின் பெறுமதி 400 கோடி ரூபாய்கள் என்று சொல்லப்பட்டு வந்தாலும், கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. தற்போதைய பணவீக்கம் மற்றும் நாணய மாற்று வீதம் கொண்டு வரக்கூடிய விளைவுகளும் இந்த இழப்பை மேலும் அதிகரிக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.
மன்னார் போன்ற இடங்களில் பாரிய பகுதியொன்றைப் புலிகள் வெல்வது இன்று ஒரு பிரச்சனையல்ல! ஆனால் மிகுந்த பாதுகாப்போடு விளங்குகின்ற தமது புராதானத் தலைநகருக்குள் - தமிழர்களை அடித்து விரட்டி, ஏறத்தாள தமிழனே இல்லாத பகுதிக்குள் - நடைபெற்ற இத்தாக்குதல், சிங்கள தேசத்திற்கு, யதார்த்தத்தைப் படிப்பித்திருக்கின்றது.இவ்வளவு காலமும் வெற்றிக் களிப்பில் இருந்த சிங்களத்திற்கு மட்டுமல்லாது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு பெரிய அதிர்ச்சி அடியாக அமைந்து விட்டது. காரணம் இது ஓர் எல்லைப்புறச் சண்டையல்ல! சிங்களத்தின் இதய பூமிக்குள் நடந்த சண்டை!
பாரிய படையெடுப்பு ஒன்றினூடாக, இராணுவப் பாசறை ஒன்றை அழிக்கின்றபோது, எவ்வளவு குறைந்த இழப்போடு, அந்த இராணுவப் பாசறை அழிக்கப்படுகின்றது என்பது கருத்தில் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகும். ஆனால் அதனைக் கரும்புலிகளோடு செய்ய முற்பட்டால் அதற்குரிய பரிமாணமே வேறு! ஆகவே அப்படியான ஒரு தாக்குதலைக் கரும் புலிகளோடு செய்கின்றபோது, பெரிய வெற்றி சுலபமாக கிடைத்திருக்கும். ஆனால், இங்கே நோக்கம் அதுவல்ல!
தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கம், சிங்கள இராணுவத்திற்குப் பாரிய அழிவை ஏற்படுத்துவதும், சிங்களப் பேரினவாதத் திமிருக்கு ஒரு பலத்த அடியைக் கொடுப்பதுவும், அதே வேளை சர்வதேசத்தின் கண்களைத் திறக்க வைப்பதுவுமாகும். அத்தோடு சிங்களமும், சர்வதேசமும் நினைக்கின்ற மாதிரி, பிழையான தீர்வு ஒன்றை எம் மக்கள் மீது திணிக்க முடியாது அல்லது உங்களுக்கு விருப்பமான, எமக்குப் பொருந்தாத தீர்வு ஒன்றை காணமுடியாது என்ற செய்தியை, அவர்களுக்குப் புரியக் கூடிய விதத்தில் சொல்வதும் புலிகளின் நோக்கமாக இருந்தது. இவ்வளவற்றையும் ஓருங்கு சேர நிறைவேற்றியதுதான் எல்லாளன் நடவடிக்கையாகும்!
சர்வதேசம் எல்லாப் போராட்டங்களையும் பயங்கரவாதம் என்ற கூடைக்குள் போட்டுப் பொதுமைப்படுத்துவதனால்தான், நியாயமான விடுதலைப் போராட்டங்களுக்கும் தேவையற்ற அழுத்தங்கள் போடப்படுகின்றன என்ற எமது கருத்தை, நாம் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாகத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக் கொண்டே வந்துள்ளோம். சர்வதேசம், குறிப்பாக அமெரிக்கா இந்தப் பயங்கரவாதப் பொதுமைப்படுத்தலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும என்றும், இந்தப் பொதுமைப்படுத்தல் காரணமாகத்தான் மகிந்த ராஜபக்ச அரசு தமிழின அழிப்பையும், மனித உரிமை மீறல்களையும் புரிந்து வருகின்றது என்றும், நாம் தொடர்ந்தும் குறிப்பிட்டே வந்துள்ளோம்.
இப்போது, அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும், எதிர்வரும் அமெரிக்க அரச தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளருமான ஹிலரி கிளின்ரன் அவர்களும் பயங்கரவாதப் பொதுமைப்படுத்தலுக்கு எதிரான தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அடிப்படையில் அனைத்துப் பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம் குறித்தும், அவர்கள் பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் குறித்தும், நாம் தெளிவடைய வேண்டிய தேவை உள்ளது. எடுத்துக்காட்டாக, இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்பெயின் பாஸ்கியூ பிரிவினைவாதிகளும், அல் - அன்பர் மாநிலக் கிளர்ச்சியாளர்களும் வெவவேறு நோக்கங்களுக்காகப் போராடுகின்றார்கள். இவர்களால் கையாளப்படும் யுக்திகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இவர்கள் ஒரே மாதிரியான சித்தாந்தத்தினை, கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால் எல்லோருக்கும் ஒரே சாயத்தைப் பூச முடியாது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான திருமதி ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
திருமதி ஹிலரி கிளின்ரனின் இந்தக் கருத்து வரவேற்கத்தக்கதுதான்! பாராட்டப்பட வேண்டியதுதான்! ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சர்வதேசம் இந்தப் பொதுமைப்படுத்தலின் மூலம் நியாயமான விடுதலைப் போராட்டங்களையும் அழிக்க முனைந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்துடன் நிமிர்ந்து நிற்பதன் மூலம் இந்தப் பொதுமைப்படுத்தல் பிழை என்பதை உலகிற்கு உணர்த்தியிருப்பதுதான்! அதாவது திருமதி ஹிலரி கிளின்ரனின் இந்தப் பேச்சுக்கு அடிப்படைக் காரணமே விடுதலைப் புலிகளும் அவர்களது பலமும்தான்! இல்லாவிட்டால் இத்தகைய கருத்து எளிதில் அங்கிருந்து வராது!
இன்று தமிழீழ மக்களின் போராட்டம் சர்வதேச சமூகத்தின் எண்ணத்தை, அதன் கொள்கையை மாற்றியமைக்கின்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றது என்பதையும் இது சுட்டிக்காட்டுகின்றது. இதனைச் சர்வதேசம் உணரத் தலைப்பட்டிருக்க்pன்றது என்பதைத்தான், ஹிலரி கிளின்ரனின் பேச்சு, இன்று உணர்த்துகின்றது.
இங்கே சொல்லப்பட வேண்டிய இன்னமொரு விடயம் என்னவென்றால், பயங்கரவாதப் பொதுமைப்படுத்தல் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை அடக்கி, அவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை மகிந்த ராஜபக்ச வைத்துக் கொண்டு நிற்கின்றபோது, இப்போது சர்வதேசம் மாற்றுவழியில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றது என்பதுதான்! மாற்றுவழிகளில்தான் இந்தப் பிரச்சனைகளை அணுக வேண்டும்! எல்லாப் போராட்டங்களையும் பயங்கரவாதத்திற்குள் பொதுமைப்படுத்த முடியாது! என்பதை இப்போதுதான் உலகம் உணரத் தலைப்படுகின்றது.
இவ்வாறு சர்வதேசத்தின் பார்வையில் தகுந்த மாற்றம் வருகின்ற வேளையில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம், எம்மை நாமே சுய விமர்சனம் செய்து கொண்டு, எமது குறைகளை, சஞ்சலங்களைக் களைந்து கொண்டு, தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களை மேலும் பலப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். புலிகள் போராடவில்லை, புலிகள் போராடவில்ல என்று புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம் சொல்லிக் கொண்டிருக்கையில்தான், இந்த எல்லாளன் நடவடிக்கைக்கான துல்லியமான திட்டமும், மிக நீண்ட பயிற்சிகளும், ஒத்திகைகளும் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் போராடிக் கொண்டுதான் வருகின்றார்கள். காலநேரம் சரியாக வருகின்றபோது புலிகள் தாக்குதல்களை நடாத்திக் கொண்டுதான் வருகின்றார்கள். இப்போதும் அப்படித்தான் செய்யப்பட்டுள்ளது.
இங்கே சில முக்கியமான விடயங்களை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் எமக்கு வேண்டும். சிறிலங்கா அரசானது, மிகப் பாரிய ஆளணியையும், யுத்தக் கருவிகளையும் வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 15ஆயிரம் கோடி ரூபாய்களைப் போருக்காகச் செலவழித்து வருகின்றது. அதில் நூறில் ஒரு விழுக்காடுக்கும் குறைவான நிதியோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் போராடி வருகின்றார்கள். இந்தப் 15 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு எதிராக, மிகப் பெரிய அளவில், தமது விலை மதிக்க முடியாத உயிர்களைத்தான் விடுதலைப் புலிகள் கொடுத்துப் போராடி வருகின்றார்கள். இந்த 21 மாவீரர்களின் உயிரின் விலை, சிறிலங்கா அரசின் 15 ஆயிரம் கோடி ரூபாய்களையும் விட மேலானது அல்லவா? இந்த உயிர்களுக்கு விலை மதிப்பு உண்டா? எமது மக்களுக்காக மரித்தவர்களின் வித்துடல்களுக்குச் சிங்களம் இழைக்க முயன்ற அவமானத்தைச் சொல்லி கண்டிக்க வார்த்தைகள்தான் உண்டா?
இதற்குள்ளே வந்து நாம் சஞ்சலப்பட்டுக் கொண்டு அது நடக்குமா, இது நடக்குமா என்று சொல்லிக்கொண்டு நிற்பதை விட்டுவிட்டு, எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். இதனூடு, தமிழர்கள் ஒன்றுபட்டால் எதனையும் சாதிக்க முடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய மூத்த உறுப்ப்pனர் திரு யோகரட்ணம் யோகி அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கக்கூடும்.
இன்றைய வெற்றி தமிழர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இங்கே மாவீரர்கள்pன் பெற்றோருக்கும், குடும்பங்களுக்கும் நாம் ஆறுதல் சொல்கின்றோம். ஆனால் எங்களுக்கு யார் ஆறுதல் தருவது? ஏனென்றால் எங்களுடன் கூடிக் கலந்து பழகி வளர்ந்த நண்பர்களை நாம் இழந்து நிற்கின்றோம். எமக்கு யாரும் ஆறுதல் தர முடியாது.
புலம் பெயர் வாழ் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, மாவீரர்கள் எந்த நோக்கத்திற்காகப் போராடினார்களோ, அதனை - சுதந்திரத் தமிழீழத்தை -அடைவதற்காக ஒன்றுபட்டு நின்று வெல்வோமாக இருந்தால், நாம் மாவீரர்களுக்குத் துரோகம் செய்யாதவர்கள் என்ற மகிழ்வை அடையலாம்! புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களுடைய கடமையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடுதான் மாவீரர்கள் சாகின்றார்கள்.
வரலாற்றில் ஒரு சான்று உள்ளது. இராஜ இராஜ சோழப் பேரரசனின் மகன் இராஜேந்திரன் இலங்கை மன்னனான 5வது மகிந்தனைச் சிறைப் பிடித்துச் சோழ நாட்டிற்குக் கொண்டு போகின்றான். அங்கே 5வது மகிந்தன் பின்னர் இறந்து விடுகின்றான். கி.பி.1017ல் இராஜேந்திர சோழன் நடாத்திய தாக்குதலில் அநுராதபுர நகரம் முற்றாக அழிக்கப்பட்டு, அரசதானி பொலநறுவைக்கு மாறியது.
சோழப் பேரரசு சிங்கள மன்னனைப் போரில் வென்று இலங்கையின் தலைநகரையும் மாற்றியது. இதற்கு மறுபக்கமும் ஒன்று உண்டு. சோழப் பேரரசையும் விடப் பெரிய வல்லரசான இந்தியாவையும் எதிர்த்து நின்று போரிட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதையும் இதே வரலாறுதான் பதிவு செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் எதையும் எதிர் கொள்ளத் துணிந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, மாவீரர்களின் நம்பிக்கையை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம்.