"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
வலியப்போய் ஏமாறுபவர்களும்,
15 May 2007
சில மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசு மீது இப்போது கொடுக்கக் தொடங்கியிருக்கின்ற அழுத்தங்கள், தங்களது நலன் சார்ந்தே இருக்கும் என்பதையும், இத்தகைய அழுத்தங்கள் மீது நாம் தேவையற்ற நம்பிக்கைகளை வைக்கக் கூடாது என்பதையும் விளக்குகின்ற தர்க்கங்களை நாம் இந்த வாரம் முன்வைப்போம் என்று, எமது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கிணங்க, சில கருத்துக்களை முன்வைத்து இவ்விடயங்களை இவ்வாரம் தர்க்கிக்க விழைகின்றோம்.
இங்கே மேற்குலகின் தன் நலன் சார்ந்த விடயம் என்னவென்றால், தங்களுடைய அரசியல், பொருளாதார, பிராந்திய நலன்களைப் பாதிக்காத வகையில், இலங்கைத்தீவில், ஏதாவது, ஒரு வகையில் ஏதோ ஒருவித சமாதானம் வரவேண்டும் என்பதேயாகும். இதனைச் சற்று விளக்கமாகச் சொல்லப் போனால், இவ்வாறு சொல்லலாம். சமாதானம் என்பது தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கா விட்டாலும் பரவாயில்லை, தமிழர்கள் அதில் ஏமாறுகின்ற அளவிற்கு இருந்தால் போதும - என்பதே மேற்குலகின் நிலைப்பாடாக இருக்கின்றது.
உதாரணத்திற்கு இலங்கைத்தீவின் அண்மை நாடான இந்தியா முன்னர் சிறிலங்கா அரசிற்கு கொடுத்த அழுத்தங்களையும், அதனால் எழுந்த சமாதானத்தையும்(?) நாம் சுட்டிக் காட்டலாம். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம், தமிழர்களை ஏமாற்றுகின்ற திட்டமே தவிர, அதனூடே தமிழர்களுக்கு எந்தவித உரிமையும் கிடைக்கவில்லை. தவிரவும் அவற்றில் சொல்லப்பட்ட சில அதிகாரங்களும் கடைசி வரையில் அமலாக்கப்படவில்லை. அவ்வேளையில், சிறிலங்கா அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் இருந்த போதும், இவை அமலாக்கப்படவில்லை. அப்போது இந்தியாவின் தலையீடு நேரடியாக இருந்தபோதும் கூட, அதிகாரங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று எத்தனையோ ஆண்டுகள் கடந்த பின்னரும் அரசியல் ரீதியான தீர்வு அல்லது சமாதானம் என்பதானது மிக மோசமான நிலையையே அடைந்துள்ளது. இப்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி முன்வைக்கின்ற திட்டங்கள், மாவட்ட சபை அதிகாரங்கள் என்கின்ற நிலைக்கு, மிக மோசமாகக் கீழே இறங்கி வந்துள்ளன. இன்று சிறிலங்கா அரசோடு இணங்கிப் போகின்ற டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் போன்றோர் கூட இத்தகைய திட்டங்களுக்கு இணங்கிப் போக முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது.
இங்கு, எவ்வாறு அதிகாரங்கள் பகிரப்படுகின்றன என்பது அல்ல, அடிப்படைப் பிரச்சனை! இந்தப் போதாத அதிகாரங்களைக் கூட அமலாக்கத் தவறுகின்ற, செயல்முறை வடிவம் கொடுக்கத் தவறுகின்ற நிலைதான் அடிப்படைப் பிரச்சனையாகும்.!
இந்த வரலாற்றுப் படிப்பினையின் ஊடாக, தற்போது மேற்குலகம் மேற்கொண்டிருக்கின்ற செயற்பாடுகளை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். ஏதோ சில அதிகாரப் பரவலாக்கங்களைக் குறிக்கின்ற வெறுமையான ஒரு திட்டத்திற்கு எழுத்து வடிவம் கொடுத்துவிட்டு, செயல் வடிவம் இல்லாமல், ஏதோ ஒரு தீர்வைக் காணவேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில்தான், இன்று மேற்குலகம் இயங்குகின்றது.
தவிரவும் தங்களது அரசியல், பொருளாதார மற்றும் பிராந்திய நலன்களைப் பேணுகின்ற அளவிற்கு, ஒரு சமாதானம் வரவேண்டும் என்று இந்த மேற்குலகம் எண்ணுகின்றதே தவிர, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப் படவேண்டும் என்கின்ற உண்மையான அக்கறை மேற்குலகிற்கு அறவே கிடையாது!
இப்படிப்பட்ட ஓர் ஏமாற்றுகரமான திட்டத்திற்காகத்தான் மேற்குலகம் இன்று சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றதே தவிர முழுமையான திருப்பம் இன்னும் வரவில்லை.
திருப்பம் என்பது தமது தவறுகளைத் திருத்துவதன் ஊடாகத்தான் வரவேண்டுமே தவிர, தொடர்ந்து எம்மை ஏமாற்றுவதற்காக வரக்கூடாது.!
இப்போது பிரித்தானியாவில் வந்திருக்கின்ற இலேசான திருப்பத்திற்கான காரணிகளை நாம் ஆராய்வது இவ்வேளையில் பொருத்தமானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட!
இன்று பிரித்தானிய அரசு பல விதமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இவற்றிற்குள்ளே பல விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன. முக்கியமான சில விடயங்களை மட்டும் இப்போது கருத்தில் கொள்வோம்.
� பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று பிரித்தானியா சொல்லிக் கொண்டு அமெரிக்காவோடு முற்று முழுதாக ஒட்டிக்கொண்டு நின்றது. இதன் காரணமாகப் பிரித்தானியா இன்று உலகில் அந்நியப்பட்டு நிற்கின்றது.
� இந்த விளைவின் அடுத்த கட்டமாக தன்னுடைய இந்த நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்கின்ற நிலைக்குப் பிரித்தானியா தள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் புதிய முதலமைச்சராக வரக்கூடிய கோர்டன் பிறவுன் அவர்கள் தவறுகள் நடந்திருப்பதைத் தான் ஒத்துக் கொள்வதாகவும் ஈராக் மீதான பிரித்தானியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்றும் அறிவித்திருப்பது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.
� பிரித்தானியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் உள்நாட்டுப் பிரச்சனைகள் சம்பந்தமாக, பிரித்தானியப் பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ள இவ்வேளையில், பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பிரித்தானரியாவில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கணிசமான தொகையினர் தொழிற்கட்சிக்கு ஆதரவாகத்தான் உள்ளார்கள். இதனையும் தற்போதைய பிரித்தானிய அரசு கருத்தில் கொண்டுள்ளது.
� அத்தோடு பிரித்தானியாவின் கணிசமான தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வகையில் உள்ளன.
� ஈழத்தமிழர்களின் நலன் குறித்துப் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பேசியவர்களில் கணிசமானோர் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பது மட்டடல்லாது, அடுத்த தேர்தலைச் சந்திக்க இருப்பவர்களாகவும், தமிழர்களின் வாக்குகளைத் தங்கள் மனதில் கொண்டுள்ளவர்களாகவும் உள்ளதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
� இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்ட நிலை ஒன்றும் உள்ளது.! அது பிரித்தானியாவின் ஊடகங்களாகும்! புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நலன் அல்லது பலன்? சார்ந்து அவர்களைத் திருப்திப்படுத்தி, தமிழ் மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை ஓப்புக்கொண்டு, தமிழர்களின் எண்ணங்களைப் பிரித்தானிய ஊடகங்களும் பிரதிபலித்து வருகின்றன. இது பிரித்தானிய வெகு சன மக்களைச் சென்றடைவதோடு மட்டுமல்லாது, அவர்களது கருத்து நிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
� அடுத்த முக்கிய காரணியாக சிறிலங்கா அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டலாம். மேற்குலகின் எதிர்பார்ப்புக்கு எதிராக, சிறிலங்கா அரசு படுமோசமாக நடந்து கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களும் சமாதானத்திற்கு எதிரான போர் முனைப்புக்களும் உலக நாடுகளை - குறிப்பாக பிரித்தானியாவை- இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. இதுவும் பிரித்தானியாவிற்கு ஓர் அழுத்தத்தை கொடுத்துள்ளது.
� இவற்றிற்கு அப்பாற்பட்டு சிறிலங்கா அரசு மேற்குலகைத் திருப்திப்படுத்தும் வகையில் இதுவரை செயல்படவில்லை.
மேற்கூறிய காரணிகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான், இன்று பிரித்தனியா அரசு செயற்பட முனைந்திருக்கின்றது. இதன் காரணமாகத்தான் பிரித்தானியா அரசு நிதிமுடக்கம், வன்னிப்பயணம் என்று பேச ஆரம்பித்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆனால்- - - - -
இத்தகைய அழுத்தங்கள் ஊடகவும், பிரித்தானியா தன் அரசியல் நலன்சார்ந்து தான் செயல்படுகின்றது. பிரித்தானியாவும் மற்றைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தங்களுடைய அரசியல் பொருளாதார பிராந்திய நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இலங்கைப் பிரச்சனையை அணுகி வருகின்றன.
சில அடிப்படை முரண்பாடுகளை இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
அங்கே பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தடை விதித்துவிட்டு இங்கே வன்னிக்கு வந்து புலிகளுடன் பேசுவோம் என்று கூறுவது மிக அபத்தமான விடயமாகும். சிறிலங்கா அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றது என்று குற்றம் சாட்டுகின்ற ஐரோப்பிய நாடுகள், அங்கே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களை மூடுகின்ற செயற்பாடுகளைச் செய்கின்றார்கள். விடுதலைப்புலிகளோடு தாங்கள் பேசுவோம் என்று கூறிக்கொண்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைச் சிறையில் அடைக்கின்றார்கள்..
சிறிலங்கா அரசு ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காண வேண்டும் என்ற மிக அபத்தமான கோட்பாட்டை முன் வைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓரு அபத்தமான கோட்பாடு என்பதை மேற்குலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இதனையும் விட மிக அபத்தமான கோட்பாட்டை மேற்குலகம் வைத்துக் கொண்டிருக்கின்றது. தாங்கள் விடுதலைப்புலிகளைத் தடை செய்து கொண்டு, இங்கே தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று மேற்குலகம் நினைத்துச் செயல்படுவதானது சிறிலங்காவின் செய்கைகளையும் விட மிக அபத்தமான செய்கையாகும். சிறிலங்காவின் கோட்பாட்டையும் விட, மிக அபத்தமான கோட்பாடாகும்.
இன்னுமொரு மிக அபத்தமான கேலிக்கூத்தைக் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திக் காட்டியுள்ளது. அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான விஜயத்தை நாம் கோமாளித்தனமான கேலிக்கூத்து என்று தான் கருதமுடியும். றிச்சர்ட் பௌச்சரின் இந்தக் கோமாளித்தனமான கேலிக்கூத்து விஜயம், தமிழீழ மக்களைக் கேவலப்படுத்தி, அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசின் மனித உரிமை மீறல்களையோ, அரச பயங்கரவாதச் செயல்களையோ, சமாதானத்திற்கு எதிரான போர் முனைப்புகளையோ நிறுத்துவதற்கு எந்தவிதமான செயல்பாட்டுத் திட்டங்களையும் பௌச்சர் முன் வைக்கவில்லை. மூன்று .லட்சம் தமிழ் மக்கள் இன்று இடம் பெயர்ந்து வாழ்வது குறித்து அவர் மூச்சு கூட விடவில்லை. அவர் அதிகம் கவலைப்பட்டு பேசியதெல்லாம் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, உல்லாசப் பயணிகளின் வரவுகள் குறைதல், வானூர்திப் போக்குவரத்து நெருக்கடி, மிலேனிய அபிவிருத்தித் திட்டங்களின் பின்னடைவு, இலங்கைக்கான நிதி உதவி என்பவைதான்! தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்றப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கக் கூட இல்லை.
யாழ்ப்பாணத்தில் கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டுக் காணாமல் போன தன் மகனின் விபரங்களைக் தன் கையில் கொடுத்த அந்தத் தமிழ் தாயின் கடிதத்தை பௌச்சர் எதற்குத்தான் பயன்படுத்துவாரோ எமக்குத் தெரியாது! ஆனால் சிறிலங்காவிற்கான இராணுவ சம்பந்தமான விற்பனைகளை 1.4 மில்லியன் டொலர்களில் இருந்து 60.8 மில்லியன் டொலர்களாக அமெரிக்கா அதிகரித்து இருப்பதை அந்த அப்பாவித் தமிழ்த் தாயிடம் அவர் நிச்சயம் சொல்லியே இருக்க மாட்டார்.
தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சனை குறித்தோ, அவர்களுடைய தேசியப் பிரச்சனைகள் குறித்தோ எந்தவிதமான ஆக்கபூர்வமான கருத்தைக் கூட பௌச்சர் முன்வைக்கவில்லை. ஊடகவியலாளரகளின் சுதந்திரம் பற்றிப்பேசிய அவரது ஊடகவியலாளர் மகாநாடும் கோமாளித்தனமாகத்தான் நடைபெற்றது எனலாம். தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் தமிழர்கள் பிரச்சனைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு மழுப்பலான பதிலைத் தந்தது மட்டுமல்லாது, அவரை மேலும் கேள்வி கேட்கவிடாமல் பௌச்சர் தடுத்தும் விட்டார்.!
றிச்சர்ட் பௌச்சரின் சங்கடமெல்லாம் சிறிலங்கா அரசின் அடாவடித்தனங்களுக்கு, தான் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே என்பதே தவிர மேறு ஒன்றுமில்லை. இனி இந்த மாதிரி விடயங்களை எல்லாம் வெளியில் வருகின்ற மாதிரி செய்யாதீர்கள் என்று கூட அவர் சிறிலங்கா அதிபருக்கு அறிவுரை சொன்னாரோ என்னவோ?
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து பௌச்சர் கூறிச் சென்றதை நாம் நம்பி ஏமாந்து விடக்கூடாது. நாம் முன்னர் கூறிய அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து, என்று அமெரிக்கா முறையான செயல் வடிவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதோ அன்றுதான் சிறிலங்கா அரசின் தமிழின படுகொலைகள் குறையத் தொடங்கும்!
மேற்குலகம் தனது அரசியல், பொருளாதார, பிராந்திய நலன்களை முன்வைத்துத் தன் நலன் சார்ந்தே செயல்பட்டு வருகின்றது என்பதை முன்னர் தர்க்கித்திருந்தோம். மேற்குலகின் தற்போதைய அரசுகளோ அல்லது எதிர்க்கட்சிகளோ எல்லோருக்கும் வெளிநாட்டுக் கொள்கைள் என்று வருகின்றபோது அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்! அங்கே குறிப்பிடும்படியான பெரிய மாற்றங்கள் எதுவும் வருவதில்லை. இந்த அடிப்படையோடுதான் சிறிலங்கா அரசையும் மேற்குலகம் அணுகுகின்றது. தாங்கள் நினைக்கின்ற போக்கிற்கு ஏற்றவாறு, சிறிலங்கா அரசு போகவில்லை என்பதுதான் மேற்குலகத்திற்குரிய பெரிய பிரச்சனை. மேற்குலகம் இந்தப் பிரச்சனையைத்தான் பிரதிபலிக்கின்றதே தவிர இன்னும் தங்களுடைய அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து மாறி வரவில்லை. விடுதலைப்புலிகளை எவ்வளவு தூரம் பலவீனப் படுத்த வேண்டுமோ அவ்வளவு தூரம் பலவீனப் படுத்த வேண்டும் என்கின்ற கோட்பாட்டில் மேற்குலகம் தெளிவாக உள்ளது. ஆகவே விடுதலைப்புலிகள் மீது மேற்குலகம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் இந்த அடிப்படை அரசியல் உண்மைகளை உள்வாங்கி எமது அரசியல் பரப்புரைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். யதார்த்த நிலைமைகளை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும். எதிரியை மடையன் என்று மட்டம் தட்டி அவனுடைய பலத்தை மலிவாக எடைபோட்டு எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் மலிவான ஆய்வுகளுக்கு நாம் இரையாகக் கூடாது. எதிரியின் பலத்தை அறிந்து அதனை வெளிப்படுத்தி அவனைப் பலவீனப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளைப் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டும்.
இப்போது பிரித்தானியாவில் வந்திருக்கின்ற இலேசான திருப்பத்திற்கான காரணங்களை நாம் தர்க்கித்திருந்தோம். அதில் முக்கிய காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து கொடுக்கின்ற அரசியல் அழுத்ததை குறிப்பிட்டிருந்தோம். உலகெல்லாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற எமது மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் ஒருங்கிணைகின்றபோது இத்தகைய திருப்பங்கள் யாவும் முறையான திருத்தங்கள் ஊடாகவே வெளிவரும். இவை மூலம்தான் மேற்குலகின் அடிப்படைக் கோட்பாடுகளும் மாறும்!
நாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த கருத்துக்களில் எமது ஒருங்கிணைப்புக் குறித்த கருத்து முக்கியமானதாகும்! யூத மக்களைப்போல், நாட்டுப்பற்று என்கின்ற விடயத்தில் உறுதியாக, சமரசம் செய்யாது, விட்டுக் கொடுக்காமல் இருப்போமேயானால் பெரிய மாற்றங்களை நாமே உருவாக்கலாம்.
உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பலம் மேலும் வலிமையடைகின்ற போது, அரசியல்வாதிகளே நம்மைத் தேடி, ஓடி வருவார்கள். ஜனநாயக ரீதியாக நாம் பெரிய திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டு வரலாம். யதார்த்த நிலையைத் தர்க்க ரீதியாக முன்வைத்து, எமது நியாயமான கோரிக்கைகளை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதற்கான சிந்தனைகளின் அடித்தளம்தான் இவ்வகையான எமது ஆய்வுக் கட்டுரைகளாகும். எப்படியெல்லாம் எமது சிந்தனைகளைத் திசை திருப்பி ஏமாற்றுவதற்கு, எதிரியும் அவனது நண்பர்களும் முயலுகின்றார்கள் என்பதை நாம் அறிந்து வைத்து, அவற்றை முறியடிக்கும் ஜனநாயக செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும். வலியப் போய் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, துணிந்து வந்து ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்! புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் முழுமையான ஒருங்கிணைப்புத்தான் முழுமையான மாற்றங்களை உருவாக்க வல்லதாகும்!
. |