Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > கப்பல் ஓட்டிய தமிழனும், கள்ளக் கடத்தல்காரனும்
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

கப்பல் ஓட்டிய தமிழனும், கள்ளக் கடத்தல்காரனும்

13 March 2007

[also in Real Audio ]


 �கடல் கடத்தல்� - என்ற விடயம் அண்மைக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. தமிழகத்துக் கடலோடிகள் மீது �கடல் கடத்தல்� என்ற குற்றச்சாட்டு(!) மிகத் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றது. தமிழகம், தமிழீழம் போன்ற பிரதேசங்களில் கடலின் ஊடாக பொருட் கடத்தல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவை குறித்து, வரலாற்று ரீதியாக சில கருத்துக்களை முன்வைத்து, தற்போதைய அரசியல் நிலைமைகளைத் தர்க்கிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!

தமிழீழத்தினதும், தமிழகத்தினதும் பண்டைக்கால வரலாற்றை மட்டுமல்லாது, அண்மைக்கால வரலாற்றையும் உற்று நோக்கினால், ஒரு விடயம் தெளிவாகப் புரியும். இந்த இரண்டு தேசங்களுக்கிடையே, வரலாற்று ரீதியாக மிக நீண்ட காலமாகக் கடல் வாணிபம் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. தமிழர்கள் பாக்கு நீரிணை ஊடாகப் பர்மா, வங்காளம் போன்ற நாடுகளுக்கு அரிசி, சங்கு போன்ற பொருட்களைக் கொண்டு சென்று வியாபாரத்தை நடாத்தி வந்துள்ளார்கள்.

சங்கக் காலம் தொட்டு, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக் காலம் வரை தமிழருடைய கடல் வாணிபம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளமைக்கு சான்றுகள் உண்டு. வல்வெட்டித்துறை, தொண்டமானாறு, பருத்தித்துறை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் உட்பட்ட தமிழகத்துக் கடற்கரைப் பகுதிகளில் நீண்ட காலமாக, கடல் வர்த்தகம் மிகச் சிறப்பாகவே நடைபெற்று வந்திருக்
கின்றது.

இந்தக்கடல் வர்த்தகத்தை பிரிட்டிஷ் அரசு தடுத்து நிறுத்தியது. இந்தத் தடையின் மூலமாக நீண்ட மரபு வழியாக நடைபெற்று வந்த, பாரம்பரியத் தொழிலான கடல் வர்த்தகம் முடக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் இந்தத் தடையை மீறி மறைமுகமாகத் தங்களது கடல் வர்த்தகத்தை மேற்கொண்டார்கள். அப்போது இது கடத்தல்  என்றும் கள்ளக்கடத்தல்,  என்றும் அழைக்கப் படலாயிற்று.

முன்னர் தமிழீழப் பகுதிகளில்-குறிப்பாக வடமராட்சி போன்ற பகுதிகளில்-மரபுவழி கடல்சார் தலைவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள்
தண்டையல்கள் என்று அழைக்கப் பட்டார்கள். தமிழகத்துத் தமிழர்களோடு வர்த்தகம், பண்பாடு, மொழி ரீதியான நீண்ட காலத் தொடர்பும் உறவும் பேணப்பட்டு வந்தது. பின்னர் அரபு-இஸ்லாமிய வர்த்தகர்கள் வருகை தந்தபோது, தமிழர்களில் ஒரு பகுதியினர் இஸ்லாமியத் தமிழர்களாகினார்கள். இதுவும் நீண்ட கால வர்த்தகத்தினாலேயே உருவாகியது.

தமிழீழக் கடலோடிகளின் ஆற்றல் மிகு தொழில் வன்மையை விளக்கும் பொருட்டு, அண்மைக் காலச்சம்பவம் ஒன்றைச் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.

1930ம் ஆண்டில் வல்வெட்டித்துறையில், திரு சுந்தரம் என்பவர் பாய்மரக் கப்பல் ஒன்றைக் கட்டினார். 89அடி நீளமுள்ள இந்தப் பாய்மரக் கப்பல், வேப்ப மரத்தால் கட்டப்பட்டது. அந்தப் பாய்மரக்கப்பலின் பெயர் அன்னை பூரணி அம்மாள்
 என்பதாகும். இந்தப் பாய்மரக் கப்பலை
ALBERT ROBINSON  என்ற அமெரிக்கர் பார்த்துப் பரவசப்பட்டு, அதனை விலைபேசி வாங்கினார். இந்தப் பாய்மரக் கப்பலை அமெரிக்கா கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் தமிழர்களே ஏற்றுக் கொண்டார்கள். தண்டையல் தம்பிப்பிள்ளை என்பவரின் தலைமையில், மேலும் நான்கு தமிழர்கள் அன்னை பூரணி அம்மாள்  என்கின்ற பாய்மரக் கப்பலை 1936ம் ஆண்டு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து பாய் விரித்து ஓட்ட ஆரம்பித்தார்கள்.

 கூடவே ஒரு வெள்ளைக்கார மாலுமியும் சேர்ந்து கொண்டார். 1936ம்ஆண்டு பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் இரண்டு ஆண்டுகள் ஆழ்கடலில் பாய் விரித்துக் கடலோடி 1938ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்காவின் பொஸ்டன் துறைமுகத்தை வந்தடைந்தது. இடையில் இயற்கையின் சீற்றங்களையும், கடற்புயல்களையும் சந்தித்தபோது, வெள்ளைக்கார மாலுமி மிகவும் பயந்து போய்விட்டதையும் குறிப்புக்கள் சொல்லுகின்றன. ALBERT ROBINSON என்ற அந்த அமெரிக்கர்,  அன்னை பூரணி அம்மாள் என்ற அந்த வேப்பமரத்துப்  பாய்க்கப்பலின் பெயரை தன்னுடைய மனைவியின் பெயரான FLORENCE C. ROBINSON  என்று பெயர் மாற்றம் செய்து பூரிப்படைகின்றார்.

வல்வெட்டித்துறை அன்னை பூரணி அம்மாள்  பொஸ்டன் நகரின FLORENCE C. ROBINSON ஆக மாறி விட்டாள். இந்தக் கப்பற் பயணம் குறித்து செய்தி BOSTON GLOBE பத்திரிகை இப்படிப்பட்ட பாய்மரக் கப்பல் மேற்குச் சமுத்திரத்தைக் கடப்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கக் கூடும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.

இந்தச் சம்பவம் ஒரு வலுவான செய்தியை எமக்கு எடுத்துச் சொல்லுகின்றது. தமிழீழத்துக் கடலோடிகள் மிகச் சிறந்த தொழில் வன்மையையும், மிகச் சிறந்த ஆற்றலையும் கொண்டு நீண்ட மரபு வழித் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்கள். அந்நியர் ஆட்சியில் தமிழர்களின் சுதந்திரம் பறிபோனபோது, அவர்களுடைய மரபு வழித் தொழில்களும் பறிபோனது. இவை மூலம் தமிழ் கடலோடிகளின் வாணிபம் மழுங்கடிக்கப் பட்டது. அவர்களுடைய வீர மரபும் மழுங்கடிக்கப் பட்டது. இன்றைய புதுப்பெயர் கள்ளக்கடத்தல்..

இதுவரை காலமும் தமிழ் மக்கள் சுதந்திரமாகச் சென்று வந்த A-9 வீதி இன்று சிறிலங்கா அரசால் மூடப்பட்டு விட்டது. இன்று அதன் வழியாகத் தமிழர்கள் போனால் அது தேசத் துரோகக் குற்றம்! தமிழனுக்குக் கடலிலும் அநீதி.! பாதையிலும் அநீதி! வான் மூலமும் அநீதி!

கப்பல் ஓட்டுவதும், கடல் வாணிபம் செய்வதும் தமிழனின் பண்டைக்கால மரபு வழித் தொழிலாகும் அதனால்தான் பிரிட்டிஷ்  அரசை எதிர்த்து தமிழனான வ.உ.சிதமபரப்பிள்ளை போராடியபோது அவர் எடுத்த ஆயுதம் கப்பலோட்டுதலே ஆகும். பிரிட்டிஷ்  அரசின் கடல் வணிகத்தை நசுக்குவதற்காகக் கப்பல் ஓட்டிய அவரை இன்றுவரை �கப்பல் ஓட்டிய தமிழன்� என்றுதான் இந்திய அரசும், தமிழக அரசும், தமிழக மக்களும் போற்றுகின்றார்கள். இன்று அவர் இருந்திருந்தால் அவருக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருக்குமோ யாரறிவார்.? இன்று ஈழத் தமிழனுக்கும் கடத்தல் காரன்  என்று பெயர்!. தமிழகத்துத் தமிழனுக்கும் கடத்தல்காரன் என்று பெயர்!

இதுவரை வரலாற்று ரீதியாக சில கருத்துக்களை முன்வைத்தோம். இவற்றின் அடிப்படையில் தற்கால அரசியல் நிலைமைகள் குறித்துச் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

இன்று சிறிலங்கா அரசானது, இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிராக உள்ள பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பெருவாரியாகப் படைக்கலங்களை இறக்குமதி செய்து அதன் மூலம் தமிழர்களை அழிக்கிறது. ஆனால் தமிழர்களோ எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளும் இல்லாமல் போராடி வருகின்றார்கள். சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செய்கின்ற தமிழினப் படுகொலைகள், �சட்டபூர்வம்�  என்ற திரையின் பின்னால் மறைக்கப் படுகின்றன. ஆனால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்புவதற்காகத் தமிழர்கள் எடுக்கின்ற முயற்சிகள் யாவற்றிற்கும் சட்டவிரோதம்  என்ற சாயம் பூசப்படுகின்றது.

இன்று வாகரை, அம்பாறை, படுவான்கரை போன்ற பகுதிகளில் தமிழர்கள் மீது திட்டமிட்ட பொருளாதார அழிப்பை மேற்கொள்கின்ற சிறிலங்கா அரசு அதே கையோடு திட்டமிட்ட தமிழின அழிப்பையும் மேற்கொண்டு வருகின்
றது. இதனைக் கண்டு கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை.

அன்று
Operation Liberation (விடுதலை) என்ற பெயரில் வடமராட்சியில் இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா அரசு மேற்கொண்டபோது தமிழர்கள் பாரிய அழிவுகளை எதிர்கொண்டார்கள். தமிழர்களின் அழிவுப் படங்கள், அன்றைய தமிழக முதலமைச்சரான M.G. . ராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழர்களின் அழிவுப் படங்களை M.G.R. பார்த்தார். பார்த்ததும் துடிதுடித்துப் போனார். தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்படுவதைக் காணச் சகிக்க முடியாத M.G.R  தனது கட்சியான அ.திமு.க சார்பில் நான்கு கோடி ரூபாய்களைப் புனர் வாழ்வுக் கழகத்தின் நிவாரணப் பணிகளுக்காகக் கொடுத்தார்.

ஆனால் இன்று, அன்றைய அழிவிலும் பார்க்க பெரிய அழிவுகளை தமிழீழ மக்கள் எதிர் கொண்டு வருகின்றார்கள். ஆனால் இன்றைய அ.தி.மு.க,  MGR ஐப் போல் துடிதுடிக்க வில்லை. MGR  ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று துடிதுடித்தார். செல்வி ஜெயலலிதாவோ ஈழத்தமிழர்களுக்கு உதவக் கூடாது என்பதற்காகத் துடிதுடிக்கிறார். உதவிகளைத் தடுப்பதற் காகக் குரல் கொடுக்கின்றார்.

தமிழக மீனவர்கள் சில பொருட்களைக் கடத்தியதாகச் சொல்லிக் கூக்குரல் இடுகின்ற ஜெயலலிதா இந்து-துக்ளக் போன்ற பத்திரிகைகள் மற்றும் தமிழ் எதிர்ப்புச் சக்திகள் தமிழ் நாட்டு மீனவர்கள் சிறிலங்கா படையினரால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் வருவதைக் கண்டு கொள்வதில்லை. இந்தச் செயல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற போதும் இவர்கள் என்றும் இவை குறித்துக் குரலோ கூக்குரலோ எழுப்புவதில்லை.

சிறிலங்காப் படையினரால் தமிழக மீனவர்கள் தொடரந்து கொல்லப்பட்டு வரும் வேளையில் இந்திய மத்திய அரசு சரியான முறையில் செயற்படாமல் நிற்கின்றது. கலைஞர் ஆட்சியும், திமுகவும் இன்று சிpறிலங்கா அரசிற்கு எதிராக குரல் கொடுத்துப் போராட ஆரம்பித்துள்ளன.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று பிரச்சனை தருவது கடல் மட்டும்தான் என்றில்லை. ஆறு கூட கலைஞருக்கு பிரச்னையைத் தந்து கொண்டிருக்கின்றது காவிரி ஆறினால் எழுந்துள்ள நீர்ப்பிரச்சனையும் தமிழக முதல்வருக்குத் தலையான பிரச்சனையாக உள்ளது. இங்கே ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர், இந்தியா மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டபோது காவிரி உற்பத்தியாகும் இடம் தமிழர்களைப் பெரும் பான்மையாகக் கொண்டிருந்த இடமாக இருந்தது. ஆனால் அது கர்நாடகத்திற்கு விட்டுக் கொடுக்கப் பட்டது. இன்று இந்த நீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, இந்திய மத்திய அரசால் முடியவில்லை.

இதனால்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி கூறுகின்றார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் சரக்காரியா கமிஷ்னின் முடிவு கூடச் சொல்லுகின்றது �இந்தியாவின் சமஷ்டி அதிகாரம் போதாது�- என்று! ஆனால் இந்த ஆனந்தசங்கரி என்பவர் தொடர்ந்து சொல்லி வருகின்றார் -இந்தியாவின் சமஷ்டி முறைதான் ஈழத் தமிழர்களுக்குச் சரியான தீர்வு - என்று!

இந்திய தேசம் என்பது இலங்கையைப் போல் இரண்டு தேசிய இனங்களையும் இரண்டு தேசிய மொழிகளையும் மட்டும் கொண்ட தேசமல்ல.! பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசமாகும். அத்தோடு தன் இச்சையாக ஒரு பெரும் பான்மைத் தேசிய இனம் மற்றைய தேசிய இனம் ஒன்றை அழித்து விடுவதற்கு முயல முடியாது.

அதற்கு மற்றைய சிறுபான்மைத் தேசிய இனங்களும் இடம் கொடுக்காது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக சட்டத்தை மாற்றுவதற்கு முடியாது. காரணம் இங்கே பல மொழிகள், பல இனங்கள். ஆனால் இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை மற்றைய இனமான தமிழருக்கு எதிராகச் சட்டத்தை மாற்றும்.! மாற்றியும் உள்ளது. தவிரவும் இந்தியாவின் சமஷ்டி முறைகூட ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறை அல்ல. ஆகவே அடிப்படையில் இந்திய தேசமும் அது எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகனும் வேறுவிதமானவை! ஆகவே இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பதானது இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்க்காது. மாறாக பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

நாம் இந்தக் கருத்தைப்பல தடவைகள் தர்க்கித்தே வந்துள்ளோம். ஆனால் ஆனந்த சங்கரி இந்திய சமஷ்டி ஆட்சி முறை பற்றிப் பேசுவது தனக்காக அல்ல. தன்னுடைய எசமானனாகிய சிங்கள அரசின் நலனுக்காகப் பேசுகின்றார்.

ஆனந்தசங்கரிக்கு ஒரு விடயம் நன்றாக தெரியும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையே தூக்கி எறிந்த சிpறிலங்கா அரசு இந்திய சமஷ்டி ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளாது என்பதையும் ஆனந்த சங்கரி நன்கு அறிவார். இந்திய சமஷ்டி ஆட்சி முறை என்பது முறையான தீர்வு அல்ல என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அதனைக் கூட சிங்கள அரசு தராது என்பதுதான் யதார்த்தம்.!

இங்கே ஒரு நகைமுரணான விடயத்தையும் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

தமிழகத்தின் நீர்ப்பிரச்சனைக்கும், மற்றைய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தற்போதைய சமஷ்டி ஆட்சி முறை போதாது என்ற கருத்துக்கு இணங்க, இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.

 நீர்ப்பிரச்சனைக்காக, நீதி மன்றத்தை நாடியும் பயனில்லாத நிலை அங்கே! ஆனால் ஆனந்த சங்கரியின் எசமானர் மகிந்த ராஜபக்ச மாவிலாறுத் தண்ணீர்ப் ப்pரச்சனையைத் தீர்த்து வைத்த கதை வேறு! சுமார் இரண்டாயிரம் சிங்களக் குடீயேற்றக் குடும்பங்களின் தண்ணீரப் பிரச்சனையைத் தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் இலட்சக் கணக்கான தமிழர்களை இன்று மகிந்த ராஜபக்ச அகதிகளாக்கி விட்டார்.

இந்த ராஜபக்சவிற்காக ஆனந்தகசங்கரியும் தமிழ் ஒட்டுக்குழுக்களும் ஒத்து ஊதிக் கொண்டிருக்கின்றனர். வாகரையில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை மகிந்தவின் இராணுவத்தினர் அழித்து விட்டார்கள். வாகரை மாவீரர் துயிலும் இல்லத்து வித்துடல்கள் மட்டக்களப்பைச் சேர்ந்த மாவீரர்களுடையதாகும். ஆனால் இச்சம்பவம் குறித்துக் கண்டிக்காத கருணாஇ ராஜபக்சவோடு குலவித் திரிகின்றார்.

இன்று சிறிலங்கா அரசைக் கண்டித்து தி.மு.க நடாத்துகின்ற போராட்டம் அடிப்படையில் தமிழகக் கடலோடிகளின் மரபுவழித் தொழிலை ஏற்றுக் கொள்கின்ற கொள்கையின் ஒரு கூறேயாகும்.! சிறிலங்காவின் படைகள் தமிழக மீனவர்கள் மீது நடாத்துகின்ற தாக்குதல்களையும் சிpறிலங்கா அரசின் வன்முறைப் போக்கினையும் கண்டித்து, தமிழகத்தின் ஆளும் கட்சி நடாத்துகின்ற ஆர்ப்பாட்டம் வரவேற்கத் தக்க முன்னுதாரணமாகும். ஆனால் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஆக்கபூர்வமாக அமையா விட்டால் பலன் இல்லாமல் போய்விடும்.

இந்த ஆர்ப்பாட்டமும், தமிழீழ மக்கள் நலன் சார்ந்த ஆர்ப்பாட்டங்களும் சிறிலங்கா அரசிற்குத் தகுந்த உரிய அரசியல், இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுப்பதாக அமைய வேண்டும். ஆர்ப்பாட்டத்தோடு மட்டும் நின்று விடாது, அதனூடே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகள் சிறிலங்க அரசாங்கத்தின் சிங்கள பௌத்தப் பேரினவாதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் முன்னைய ஆர்ப்பாட்டங்கள் போலவே உரிய பயன் எதையும் தராமல் போய்விடும்.!
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home