| 
			  
			சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் 
			இயக்கத்திற்கும், இடையிலான, புரிந்துணர்வு ஒப்பந்த அமலாக்கம் தொடர்பான, 
			பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் சுவிட்சலாந்தின் 
			ஜெனிவா நகரத்தில் நடைபெறும் என்று உத்தியோக பூர்வமாக 
			அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நோர்வே நாட்டின் சிறப்புத் தூதுவர் 
			திரு எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது சமாதானப் 
			பேச்சு வார்த்தைகள் குறித்துப் பரவலாக நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 
			தமிழரின் தேசியப் பிரச்சனையைக் குறித்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் 
			உடனே ஆரம்பமாகக் கூடும் என்றுதான் செய்திகளும் ஊடகங்களும் 
			வெளியிடப்பட்டிருந்தன. 
			 
			ஆனால் நாம் இத்தகைய கருத்துக்களுக்கும் ஊகங்களுக்கும் எதிராகத்தான் 
			எமது தர்க்கங்களை முன் வைத்தமையை எமது நேயர்கள் அறிவீர்கள.
			எமது கடந்த வாரக் 
			கட்டுரையின் போது நாம் தர்க்கித்த பல விடயங்களில் புரிந்துணர்வு 
			ஒப்பந்த அமலாக்கத்தின் அவசியம் குறித்து முக்கியமாக 
			வலியுறுத்தியிருந்தோம். 
			
 சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் சிறிலங்கா 
			அரசும் புரிந்துணர்வு ஒப்பந்த விதிமுறைகளை அமலாக்குவதில் முதலில் 
			சிரத்தை காட்ட வேண்டும் என்றும் நாம் தெரிவித்திருந்தோம். குறிப்பாக 
			தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய வேண்டும். 
			 சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள 
			இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் தமிழ்ப் பொதுமக்கள் மீது சிறிலங்கா 
			இராணுவம் மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் பாலியல் 
			பலாத்காரங்கள் நிறுத்தப்பட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 
			ஏற்றுக் கொண்டபடி தமிழர் தாயகத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்குரிய சகல 
			முயற்சிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பவை போன்ற 
			நடவடிக்கைகளை நாம் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தோம். 
				�அத்தோடு மிக முக்கியமாக இன்னுமொரு 
				விடயத்தையும் நாம் சொல்லியிருந்தோம். இந்தப் பிரச்சனைகள் அதாவது 
				புரிந்துணர்வு ஒப்பந்தம் முழுமையாக அமலாக்கப்படாமல் இருப்பதனால் 
				எழுந்துள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் 
				நீடிக்குமானால் நோர்வே போன்ற நாடுகளின் வன்னி விஜயங்களால் 
				பிரயோசனம் எதுவும் ஏற்படும் என்று நாம் நம்பவில்லை. கடந்த நான்கு 
				ஆண்டு காலத்திற்கும் மேலாக சமாதானத் தீர்வில் தாம் அக்கறை 
				கொண்டுள்ளதாக தெரிவித்து வந்துள்ள சம்பந்தப்பட்ட உலக நாடுகள் 
				இனியாவது கள யதார்த்தைதை உணர்ந்து கொண்டு உண்மையான அக்கறையுடன் 
				செயல்பட முன்வரவேண்டும். அதுவும் உடனடியாக முன்வரவேண்டும்.�  
			-என்றும் நாம் கடந்த வாரம் தர்க்கித்து 
			இருந்தோம். 
			 
			நாம் எதிர்பார்த்தது போலவே, பேச்சு வார்த்தைகளின் முதல் கட்டம் 
			புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின் அமலாக்கம் பற்றியதாகவே அமைய வேண்டுமே 
			தவிர வேறு எது பற்றியும் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை-என்று தமிழீழத் 
			தேசியத் தலைமை தெளிவாகத் தெரிவித்து விட்டது. 
			 
			எமது பார்வையும் தர்க்கமும் சரியாக அமைந்துவிட்டது என்று 
			பெருமைப்படுவதற்காக நாம் இதனைக் குறிப்பிடவில்லை. தமிழீழத் தேசியத் 
			தலைமையின் ஆளுமையையும் தீர்க்கதரிசனத்தையும் சிறிதளவாவது புரிந்து 
			கொள்ள முயல்பவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புத்தான் இது என்பதுதான் 
			உண்மையுமாகும். 
			 
			இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீரிய அமலாக்கம் குறித்து பேச்சு 
			வார்த்தைகள் தொடங்கவிருக்கின்ற அவ்வேளையில் சில முக்கியமான விடயங்களைத் 
			தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம். 
			 
			சம்பந்தப்பட்ட உலக நாடுகள் விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்கின்ற 
			தேவையற்ற அறிக்கை அழுத்தங்களும், அரசியல் அழுத்தங்களும் ஒரு 
			கட்டத்திற்கு மேல் செல்லுபடியாகாமல் போய்விடும் என்ற கருத்தை நாம் 
			அண்மைக் காலத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதை நேயர்கள் 
			அறிவீர்கள்! இன்று விடுதலைப்புலிகள் மீது வாய்ச்சொல் அழுத்தங்களை 
			அமெரிக்கா உட்பட பல நாடுகள் மேற்கொண்டு வந்துள்ள போதிலும் யார் 
			உண்மையில் அழுத்தங்களுக்கு ஆளாகி பணிய வேண்டிய நிலை வந்துள்ளது என்பது 
			குறித்து ஆராய வேண்டியது அவசியமானதாகும்! 
			 
			சிறிலங்காவின் புதிய அரச அதிபராக திரு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் தெரிவு 
			செய்யப்பட்ட பின்னர் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கும், மேற் கொண்ட 
			செயற்பாடுகளுக்கும் உள்ள வேற்றுமைகளை சிறிது கவனிப்போம். 
				� சமாதானப் பேச்சு வர்த்தைகளுக்கு 
				அனுசரணையாளர்களாக நோர்வே வரக்கூடாது என்று மகிந்த ராஜபக்ச 
				தெரிவித்திருந்தார் நோர்வேதான் அனுசரணையாளராக வரவேண்டும் என்று 
				விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். 
				 
				ஈற்றில் நோர்வேதான் அனுசரணையாளராக வந்துள்ளது. 
				 
				� பேச்சு வார்த்தைகள் இலங்கையில் மிஞ்சிப் போனால் ஜப்பான் போன்ற 
				ஆசிய நாடொன்றில்தான் ஆரம்பமாக வேண்டும் என்று விடுதலைப் புலிகள் 
				தெரிவித்திருந்தார்கள். 
				 
				இப்போது ஐரோப்பிய நாடான சுவிட்சலாந்தில் பேச்சு வார்த்தைகள் 
				ஆரம்பமாக உள்ளன. 
				 
				� புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றவேண்டும்-மறு சீரமைக்க வேண்டும் 
				என்றெல்லாம் மகிந்த முழக்கமிட்டு வந்தார். ஏற்கனவே ஏற்றுக் 
				கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்ற முடியாது மாறாக அதனை 
				முறையாக அமல் படுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்க்கமாக 
				தெரிவித்திருந்தார்கள்.  
			இப்போது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட 
			புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்துவது குறித்துத்தான் 
			பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. 
			 
			அதாவது ஆயிரம் அழுத்தங்களை உலக நாடுகள் விடுதலைப் புலிகள் மீது திணிக்க 
			முயன்றாலும் ஈற்றில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டின் படியேதான் 
			நோர்வேயின் அனுசரணையுடன் ஐரோப்பிய நாடொன்றில் புரிந்துணர்வு 
			ஒப்பந்தத்தை முறையாக அமலாக்குவது குறித்து பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாக 
			உள்ளன. 
			 
			எனவே ஒரு கட்டத்திற்கு மேல் புலிகள் மீதான அழுத்தங்கள் என்பது 
			செல்லுபடியாகாமல் போய்விடும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்த 
			விரும்புகின்றோம். 
			 
			இந்த வேளையில் திரைமறைவுச் சம்பவங்கள் என்று நாம் கருதுகின்ற 
			ஊகிக்கின்ற சில விடயங்களைத் தர்க்கிக்க விழைகின்றோம். 
			 
			அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வெளிப்போக்காக சிறிலங்கா 
			அரசுகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்திருந்தாலும் அவை உண்மை 
			நிலையை யதார்த்த நிலையை உணர்ந்தே உள்ளன. எது நீதி எது அநீதி என்று 
			உலகநாடுகளுக்கு உள்ளூரத் தெரியும். தமது சொந்த நலன் கருதி அநீதியின் 
			பக்கம் நின்று கொண்டிருந்தாலும் இது நெடுங்காலத்திற்கு நீடிக்க 
			முடியாது என்பதையும் உலகநாடுகள் அறியும். 
			அடிப்படையில், பேச்சுவார்த்தைகள் ஊடாகச் சமாதானத் தீர்வு ஒன்று 
			வரவேண்டும் என்று உலகநாடுகள் விரும்புகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் 
			சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடான உரிய சமாதானத் தீர்வை மறுக்கவில்லை 
			என்பதையும் உலகநாடுகள் அறியும். ஆனால் சிங்கள தேசமானது தானும் குழம்பி 
			சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்து குழப்பி வருகின்ற 
			உண்மையையும் இந்த உலகநாடுகள் அறியும். இந்த வேளையில் சில செய்திகள் 
			சிறிலங்காவின் புதிய அரச அதிபரான மகிந்த ராஜபக்சவிற்குச் 
			சொல்லப்பட்டிருக்கலாம் என்று நாம் ஊகிக்கின்றோம். 
			 
			இந்தக் கள யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவும் 
			அமெரிக்காவும் சில விடயங்களை அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தியுள்ளதாக 
			நாம் ஊகிக்கின்றோம். அதனால்தான் வெறும் கைகளோடு இந்தியாவிலிருந்து 
			அதிபர் ராஜபக்சவும், அமெரிக்காவிலிருந்து அமைச்சர் மங்கள சமரவீரவும் 
			திரும்பி வந்தார்கள். அந்த வெறும் கைகளை நிரப்ப வேண்டும் என்ற 
			பரிதாபத்தின் மூலம்தான் அமெரிக்கத் தூதுவர்கள் சில வாய்ச் சவடால்களை 
			சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள். பனங்காட்டு நரிகளே, சலசலப்புக்கு 
			அஞ்சாதபோது பனங்காட்டுப்புலிகள் எவ்வாறு அஞ்சும்? 
			 
			எனினும் யதார்த்த நிலையை உலகநாடுகளும் சிறிலங்கா அரசும் உணர்ந்து 
			கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறையாக அமலாக்கப்பட வேண்டியதன் 
			அவசியத்தைப் புரிந்துகொண்டு அதற்குரிய பேச்சுவார்த்தைக்கான தளத்தை 
			அமைத்திருக்கின்றன. 
			 
			இந்த வேளையில் கசப்பான ஓர் உண்மையை நாம் சொல்லி வைக்க விழைகின்றோம். 
			 
			இன்று போர்ச்சூழல் உருவாகியதற்கான அடிப்டைக் காரணமே புரிந்துணர்வு 
			ஒப்பந்தம் அமலாக்கப்படாமல் போனதுதான். எதிர்வரும் பெப்ரவரி மாத்தில் 
			ஜெனிவாவில் நடைபெறப் போகின்ற பேச்சு வார்த்தைகளின் மூலம் புரிந்துணர்வு 
			ஒப்பந்த அமலாக்கத்தில் நியாயமான இணக்கப்பாடு வராத பட்சத்தில் 
			மிகப்பெரிய சிக்கல் உருவாக வாய்ப்பிருக்கின்றது. இது நிலைமையை மேலும் 
			மோசமாக்க வைப்பதுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகள் என்பன எதிர்காலத்தில் 
			ஒருபோதும் நிகழமுடியாத இறுக்கமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் 
			நாம் அச்சப்படுகின்றோம்.  
			 
			எமது அச்சத்தை உறுதி செய்யும் விதமாக மட்டக்களப்பு-வடமுனைப் பகுதியில் 
			தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேஜர் கபிலன் அவர்களை சிறிலங்கா 
			ராணுமும் ஒட்டுப்படைகளும் ஒளிந்திருந்து தாக்கிக் 
			கொன்றிருக்கின்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறையாக அமலாக்குவது 
			குறித்த பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா அரசு 
			இணங்கியதற்கு அடுத்தநாளே இந்தக் கொலை நடந்திருப்பதானது சிறிலங்கா 
			அரசின் நேர்மையை மீண்டும் கேள்விக்குறியதாக்கியுள்ளது. இவ்வாறான 
			செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கே வழிவகுக்கும். 
			 
			இந்த Nளையில் எம்முடைய இன்னுமொரு கருத்தையும் சொல்லி வைக்க 
			விழைகின்றோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்துவது 
			குறித்து இன்னுமொரு புரிந்துணர்வைப் பெற்றுக்கொண்டு அதனை முறையாகவும் 
			அமலாக்க வேண்டும். அதன் பின்னர் தமிழீழ மக்களின் தேசியப் 
			பிரச்சனைக்குரிய தீர்வை காண்பதற்கான சமாதானப் பேச்சு வார்த்தைகள் 
			ஆரம்பமாக வேண்டும். இந்த புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறையான 
			வகையில் நகரவேண்டும் இவற்றை இதய சுத்தியுடன் முன்னெடுப்பதற்கு சிங்கள 
			தேசம் முன்வர வேண்டும். 
			 
			ஆனால் சிங்கள தேசமோ அதன் அரசோ சமாதானப் பேச்சுக்கள் ஊடாகத் தமிழீழ 
			மக்களின் தேசியப்பிரச்சனையை நியாயமுறையில் தீர்க்க முன்வரும் என்று 
			நாம் நம்பவில்லை. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளுடன் நடாத்துகின்ற 
			சமாதானப் பேச்சுக்கள் சரிவரமாட்டாது என்பதைச் சகலரும் முழுமையாக 
			விளங்கிக் கொள்ளும் காலம் விரைவில் வரக்கூடும் ஒரு கட்டத்திற்கு மேல் 
			தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமையைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பார்கள் 
			என்ற எதிர்பார்க்க முடியாது. நியாயமான 
			தீர்வை நெடுங்காலமாக எதிர் பார்த்து நிற்கின்ற தமிழீழ மக்கள் அதீதமான 
			பொறுமை அநீதிக்குத்தான் வழி வகுக்கும் என்று பொங்கி எழவும் கூடும். 
			அந்த மக்கள் எழுச்சி இதுவரை காலமும் தமிழினம் கண்ட காட்டிய 
			எழுச்சிகளையும் விட பேரெழுச்சியாக எழுவதுதான் காலத்தின் கட்டாயமாகவும் 
			அமையப் போகின்றது! நீதியின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. 
			அப்பொழுதுதான் நீதி நீதியாகச் செயலாற்ற முடியும்! 
			 
   |