Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >  சர்வதேச மகளிர் தினம், 2005:கற்பும் பெண்விடுதலையும்...

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் -மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 சர்வதேச மகளிர் தினம் 2005:கற்பும் பெண்விடுதலையும்...
[see also Women, Nation & Struggle]

17 March 2005

"‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம்.... ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்றதொன்றாகவே காணப்படுகின்றது..."


சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8ம் திகதியில் உலகெங்கும் கொண்டாடப் பட்டு வருகின்றது. அவுஸ்திரேலியாவைப் பொறுத்த மட்டில் முதல் முறையாக 1928ம் ஆண்டு மார்ச் 25ந்திகதியன்று M.W.M.  என்று அழைக்கப்பட்ட Women's Militant Movement  என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும், ஆண்களைப் போல சமஊதியம், எட்டுமணி நேரவேலை, மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற கோரிக்கைகள் வற்புறுத்தப்பட்டன.

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமை என்ற கருத்தாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை நாமும் பயன்படுத்த விரும்புகின்றோம். ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த “முதலாளியப்” பெண்ணியம், குடும்பம் உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்கசியப் பெண்ணியம்; தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம்,  இவை அனைத்தும் ‘பெண்’ என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.

இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது Biological Foundation  ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளை ஒன்றெனக் கொண்டு அந்த உயிரிகளைப் ‘பெண்’ எனக் கண்டன. ஒட்டு மொத்தமான பெண்களின் விடுதலையை இந்தப் பெண்ணிய இயக்கங்கள் வலியுறுத்தின.

பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லுக்கும், பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன், தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும்ää சிக்கலான பல பண்புகளின் வலைப் பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியாகும். இதன் அடிப்படையிற்தான் நாம் ‘பெண்’ என்ற சொல்லின் கருத்தை அணுக வேண்டும்.

பெண்ணியம்-Feminism- என்பது பெண்ணை ஒரு ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச் சொல் கி.பி. 19ம் நூற்றாண்டில் முதன்முதலாக பயன் படுத்தப் பட்டது. 18ம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது உண்மைதானென்றாலும்ää பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது 19ம் நூற்றாண்டிற்தான். இந்தக் கோட்பாட்டின் தோற்றம் பற்றியும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்களை எதிர்க்கும் நோக்கில், அதன் ஒரு பகுதியாக, ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப் பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் அதிலிருந்துதான் பின்பு பெண்ணியம் ஒரு தனிக்கோடாட்பாடாக உருவாகியது என்று மார்க்கசியப் பெண்ணிய வாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pure Feminists என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியமென்பது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாடுகளில்ää பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டிப் பெண்கள் எழுப்பிய குரலில் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விடப்பட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராகää தீர்க்கமாக எழுப்பிய குரலே பெண்ணியத்திற்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

மேற்கத்திய நாடுகள் போலவே கிழக்கத்தைய நாடுகளிலும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வேரூன்றி நிற்கின்றன. இச்சமுதாயக் கொடுமைகள் குறித்து அறிவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன. உதாரணத்திற்குப் புறநானூற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம்.

பூதபாண்டியனின் மனைவியான பெருங்கோப்பெண்டு பாடிய இந்தப்பாடலை இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலை ஒரு பெண்ணியப் பார்வையில் பார்க்கும் போதுதான், அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலனாகின்றன.

“அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ்போனல்லிளர் நறுநெய் தீண்டாதுää
அடையிடைக் கிடந்த கழிபிழி பிண்டம்
வெள்ளாட் சாந்தோடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சியாகää
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்” (புறநானூறு 246)

இந்தப் பாடலின் கருத்தென்ன?

“வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறுää எள்ளுத்துவைää புளியைக் கூட்டிச் சமைத்த வேளை இலை ஆக்pயவற்றை உண்டும்ää பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும்ää கைம்மை நோற்கும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் இறப்பதே மேல்”

-என்பது இப்பாடலின் கருத்தாகும்.

கணவன் இறந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வாழ்க்கை எவ்வளவு கடுமையானது, கொடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்லுகின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்-மனைவி அன்புநிலை குறித்து ஒரு வரியிலும் தென்படவில்லை.

இப்படியாக, கைம்மை பற்றிய சங்கப் பாடல்களைத் தொகுத்துக் காணும் போது, அக்காலத்தில் கைம்மை என்ற பெயரில் நடந்த கொடுமைகளையும், அவற்றை சகியாது பெண்கள் சாவுக்கு துணிந்த அவலத்தையும் இனம் காண முடிகின்றது. அதேநேரம், இவர்கள் இப்படி இறப்பதற்கும் பழைய விதிமுறைகள் தூண்டி விடுகின்றன. வடநாட்டு காசிகாண்டம் என்கின்ற நூல் கீ;ழ்வருமாறு கூறுகின்றது.

“கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண்,
தனது உடம்பிலுள்ள உரோமங்கள் ஒவ்வொன்றுக்கும்
ஆயிரம்கோடிக் காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்”

இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதைப்போலவே, சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும்போது சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவன் கோவலன், மாதவியிடம் சென்றபோது அவனுடைய நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவும் இழந்த போதும் அவனைத் தடுக்க வில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தன் சிலம்பைக் கோவலனிடம் கொடுத்ததானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது, கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக்கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்றம் சாட்டத் தூண்டுகின்றது.

இதேபோல் கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறிட்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு, நீதியை நிலைநாட்டுவதைப் பார்க்கும்போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகக் காணவும் முடிகின்றது. இரு வேறுபட்ட நிலைகளை இங்கே காணுகின்றோம்.

ஒரு பெண்ணிற்குப் பிறந்த தினத்திலிருந்து அவள் இறக்கும்வரை பல விதமான விலங்குகளை அவளுடைய சமுதாயம் மாட்டி விடுகின்றது. தமிழ் இலக்கியத்தில்,  ஒரு பெண்ணுக்கு,  கற்பு நிலையைப் பேணும் நிலை மூன்றாகச் சொல்லப்படுகின்றது:-

1. கன்னிப்பருவக் காவல்: அதாவது திருமணத்துக்கு முந்திய கன்னிப் பருவத்தில் கன்னிமையைக் காத்தல்.
2. கடியிற் காவல்: அதாவது திருமணமான பின்பு தன் கணவனோடு இல்லறம் நடாத்தும்போது ‘பதிவிரதா தர்மத்தை’ப் பேணுதல். இது மனையறம் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
3. கைம்மைக் காவல்: தனது கணவன் இறந்தபிறகு, அவனது நினைவாக நோன்பு நோற்று, தன் மனத்தையும், உடலையும் காத்தல். இது ‘மாதவம்’ என்று அழைக்கப் படுகின்றது, போற்றப் படுகின்றது.

இப்படியாக,  ‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம். கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை, மதம் சார்ந்த சடங்குநெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை புராண நூல்களும் பரப்பி இருக்கின்றன.. இங்கே புராண நூல்கள் குறித்தும், புராணகாலங்கள் குறித்தும் சில கருத்துக்கள் சொல்ல வேண்டிய அவசியமாகின்றது.

புராணகாலம் என்றால் மிகப்பழைய காலம் என்ற பொருளே வழக்கத்திலிருந்து வருகின்றது. ஆனால் உண்மையில் இப்புராணகால இலக்கியங்களும்,  நூல்களும் தோன்றிய காலம் கிறிஸ்துவுக்குப்பின் 12ம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட காலமாகும். அதேவேளையில் தமிழில் அதிகமான நூல்கள் சமயம் சார்ந்து எழுதப்பட்டன.

வடமொழியிலுள்ள ஸ்கந்தபுராணம்,  பாகவதப்புராணம், விநாயக புராணம் போன்றவையும் பின்னாளில் மொழி பெயர்க்கப் பட்டன. கி.பி 15ம் நூற்றாண்டிற்கும் பின்னர் தலபுராணங்களும் குறிப்பிடத்கக்க அளவு தோன்றின. இப்புராணங்களில் கற்பு பற்றியும் கற்புக்கரசிகள் பற்றியும் செய்திகள் அதிகம் உண்டு. கற்பு பற்றிய அச்சுறுத்தல்களும் உண்டு. அவை குறித்து சிலவற்றைச் சொல்லலாம் என்று நம்புகின்றோம்.

ஸ்கந்தபுராணம் கற்பு என்பது மகளிர் தம் கணவரைக் கடவுளாகக் கருதி வழிபடுதல் என்று சொல்கின்றது. திருக்குற்றாலப்புராணம் பெண்கள் கற்புக்கரசிகளாக விளங்குவதற்கு 12 செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.

1. சிறுகாலை எழுதல்.
2. உடன் சமையல்கட்டிற் புகுதல்.
3. நன்றாக கூட்டிச் சமைத்தல்.
4. சுவை குன்றாது அதனைப் பரிமாறுதல்.
5. வீட்டைத் திருத்துதல்.
6. வருந்தும் காலத்திலும் விருந்து உபசரித்தல்.
7. குழந்தைகளைப் பெறுதல்.
8. பெறும்போது இன்புறுதல்.
9. அச்சம், மடம், நாணம் உடையவளாக இருத்தல்.
10. கணவன் உறங்கிய பின் உறங்குதல்.
11. அவன் எழுவதற்கு முன் எழுதல்.
12. காலை எழும்போது அவனைத் தொழுது எழுதல்.

கற்பு என்பதற்கு பலவிதமான பொருள்கள் சொல்லப்படுகின்றன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல், என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவி என்ற கருத்தாக்கம், பெண்ணை அடக்கி, அடிமைப் படுத்தி, உடைமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்று நவீன பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

இப்போது ஆண்களிடமும் ‘கற்பு’ பற்றிய சிந்தனைகளில் ஓரளவு மாற்றத்தைக் காணமுடிகின்றது. பல ஆண்கள் விசாலமான பார்வையை உடையவர்களாக இருந்தாலும்ää கற்பு என்ற கருத்தாக்கத்தைää அடி மனதில் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். முன்பு பெண்ணை மூடி மறைத்து வைத்தவர்கள்ää இன்றைய காலகட்டத்தில் பொருள்தேவை கருதி வேலைக்கு அனுப்பி விட்டுää பின்னர் அவர்கள் மீது வீண்பழி போட்டுக் கோபதாபங்களைக் காட்டுபவர்களும் உள்ளார்கள். அது குறித்து ஆங்கிலம் கலந்த புதுக்கவிதையொன்று அழகாகச் சொல்லுகின்றது.

“ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பதற்காகவும்
பிரிஜ் வாங்க வேண்டும் என்பதற்காகவும்
அலுவலகம் செல்ல நாம் அனுமதிக்கப் படும்போது
எங்களின் கற்பின் எல்லை விரிவாக்கப்படுகின்றது.!”

இந்தப் புதுக்கவிதை ‘கற்பு’ என்ற சொல்லையே கேலி செய்யவில்லையா, என்ன?

ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்றதொன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலகநாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது பரிபூரண வளர்ச்சியை நோக்கிச் செல்வதை நாம் பெருமையுடன் காணக் கூடியதாக உள்ளது. இதற்கு அடித்தளமாக அமைந்தது,  தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது இனத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம்ää விரிந்து பரந்ததாக இருப்பதையும் நாம அவதானிக்கின்றோம்.

பெண்விடுதலை குறித்து, பலஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் கூறியது, ஊன்றிக் கவனிக்கத் தக்கதொன்றாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளுக்கு இணையாக இக்கருத்து உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராதுää செயல்வீரனாகவும் திகழ்வதுää அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு உலகமகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத்தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். பெண்ணினத்தின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளைää அதற்குரிய கௌரவத்தையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:-

“பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும், பெண்மைக்கும் அப்பாலான இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு பெண்ணினம், ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக்கொள்ளும் போதுதான், ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.”

அன்புக்குரிய நேயர்களே.  சர்வதேச மகளிர் தினம் குறித்த இந்தக் கட்டுரைக்கு, கலாச்சாரத்தின் வன்முறை பெண்ணியம் - அணுகு முறைகள்:
கற்பு-கலாச்சாரம்: புறநாநூறு: போன்ற நூல்களும்,  எரிமலை சஞ்சிகையும் பயன் படுத்தப் பட்டன. பெண்ணியம்-அணுகுமுறைகள் நூலிலிருந்து பல சொல்லாக்கங்கள் அப்படியே எடுத்தாளப் பட்டன. சம்பந்தப் பட்டவர்களுக்கு எமது நன்றிகள்.!
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home