Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - P.Nedumaran  > கவியரசருக்கு எண்பது

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM

Selected Writings - P.Nedumaran - பழ. நெடுமாறன்

கவியரசருக்கு எண்பது
16 July 2006 [courtesy தென் செய்தி]

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கூறும் நல்லுகமெங்கும் என்றும் அழியாத வகையில் தனது முத்திரையை பொறித்த கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலம் மிகக் குறைவே மானிட வாழ்க்கையில் 54 ஆண்டுக்காலம் என்பது மிகக் குறுகிய காலமேயாகும். அந்தக் குறுகிய காலத்தில் அவரது சாதனை என்பது எண்ணி எண்ணிப் பிரமிக்கதக்கதாகும்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர் தனது சுயமுயற்சியால் இலக்கியப் புலமையை வளர்த்துக்கொண்டு பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் கவிதை யுலகின் முடிசூடாத மன்னராகத் திகழ்ந்தார்.

அவரது வாழ்க்கை எவ்வளவோ ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்டிருக்கிறது. வயிற்றுப் பசியைத் தணிக்கப் போராடியும் இருக்கிறார். எத்தனையோ பேரின் பசியைப் போக்கியும் இருக்கிறார். கோடி கோடியாக செல்வம் திரட்டிப் பெருக்கியும் இருக்கிறார். அதைப் பிறருக்கு வாரி வழங்கியுமிருக்கிறார்.

''ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு''

என அவரே பாடியிருப்பதைப் போல களியாட்ட வாழ்க்கையும் நடத்தியிரு:ககிறார்.
மதத் தத்துவங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்து பேருரைகள் நிகழ்த்திய ஞானப் பேராசானாகவும் திகழ்ந்திருக்கிறார்.

இலக்கியத் தென்றலாகத் தவழ்ந்து தமிழ் மணம் பரப்பி அனைவரையும் மகிழ்வித்தும் இருக்கிறார். அரசியல் புயலாகச் சீறிச் சுழன்றடித்து எதிரிகளைத் திக்குமுக்காட வைத்தும் இருக்கிறார்.

'எப்படி வாழவேண்டும் என்பதற்கு இது நூலில்லை எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' எனத் தனது சுயசரிதையின் முன்னுரையில் சொல்லுகிற துணிவு அவருக்கு இருந்ததைப் படித்தவர்கள் முதலில் திடுக்கிட்டாலும் அவரது புதுமையான தமிழ்நடையில் மயங்கி அவரது தவறுகளை மறந்து போற்றினார்கள்.

அவரது பாடல்கள் திரையுலகில் புதியதொரு சகாப்தத்தைத் தோற்றுவித்தன. படித்தவர்-பாமரர் பெரியவர்கள்-இளைஞர்கள் ஆண்கள்-பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் மயங்கி முணுமுணுக்கும் வண்ணம் இலக்கிய நயம் மிகுந்த பாடல்கள் அவரிடமிருந்து பிறந்தன. அவர் வாழ்ந்த காலம் முழுவதிலும் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிக்குயிலாகத் திகழ்ந்தார்.

அரசியலில் அவர் எந்த நிலை எடுத்திருந்தாலும் தான் நியாயம் என்று உணர்ந்தவற்றுக்காகப் போராடினார். பதவிகளுக்காக அவர் ஒருபோதும் யாரிடமும் கெஞ்சியதில்லை. தன் நண்பர்கள் பதவிகளைப் பெற உதவியிருக்கிறார். அவரைத் தேடி பதவிகள் வந்தபோதும் அதைப் பிறருக்கு வழங்கிய வள்ளல் அவர்.
கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கி இளங்கவிஞர்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே பல நூறு கவிஞர்களை உருவாக்கி மகிழ்ந்த பேருள்ளம் அவரது உள்ளம்.

கவிச்சக்கரவர்த்தியான கம்பனுக்குப் பிறகு 'சந்தம்' கவியரசர் கண்ணதாசனிடம் தான் குடிகொண்டது. தனது கவிதை யடிகளால் தமிழ் கூறும் நல்லுகை அளந்தவர் அவர். சொல்தொகுதியின் கரைகண்டவர் அவர். அதனால்தான் நொடிப்பொழுதில் கவிதைகளை எழுதிக்குவிக்க அவரால் முடிந்தது.

பணம் சம்பாதிப்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தால் திரை யுலகில் அவர் ஒரு ஜெமினிவாசனாக ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியாராக ஆகியிருக்க முடியும். திரையுலகில் அவரது செல்வாக்கு கொடிகட்டி பறந்த காலத்தில் அவர் சொற்படி நடக்க நடிகர்கள் நடிகைகள் படமெடுக்கும் முதலாளிகள் இயக்குநர்கள் உட்பட பலரும் காத்துக்கிடந்தனர். இந்தச் செல் வாக்கைப் பயன்படுத்தி அவரும் படத் துறை யில் தங்கச்சுரங்கம் வெட்டி இருந்திருக்கலாம்.

பத்திரிகைத் துறையில் அவர் எழுத்திற்கு பெரும் மதிப்பு இருந்தது. குமுதம் ஆனந்தவிகடன் கல்கி ராணி தினமணி, தினத்தந்தி போன்ற பெரும் பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு அவரது எழுத்துகளைப் பிரசுரித்துத் தங்களின் விற்பனையைப் பெருக்கிக்கொண்டன. ஆனால் கவிஞர் தனது சொந்தப் பத்திரிகை களான தென்றல், முல்லை, கண்ணதாசன் போன்றவற்றை சற்றுக் கவனத்துடன் வணிக நோக்கில் நடத்தியிருந்தால் அவை நின்று நிலைத்திருக்கும். கவிஞரும் பெரும் பத்திரிகை முதலாளியாயிருந்திருப்பார்.

அரசியல் உலகில் தனது செல் வாக்கைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்த வரல்லர். தமிழக அரசிலும் இந்திய அரசிலும் அவருக்கு மிக வேண்டியவர்கள் பெரும் பதவிகளில் இருந்தபொழுது அவர்களைப் பயன்படுத்தி தொழில் துறையில் ஈடுபட்டு பெரும் செல்வம் திரட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.
பணத்தை அள்ளிக் குவிக்க வேண்டும் என அவர் ஒருபொழுதும் ஆசைப்பட்டதில்லை.

தான் ஒரு சிறந்த இலக்கியவாதியாகத் திகழவேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். அவரது ஆசைக்கு முட்டுக்கட்டையாக அரசியல் குறுக்கிட்டது. அதையும் தாண்டி எழுதினார். அரசியலில் அவர் செலவழித்த நேரத்தை எழுதுவதில் செலவழித்திருந்தால் மேலும் பல புதிய ஆக்கங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கும்.
தனிமையில் அவரிடம் பேசும் பொழுது ஒன்றை நான் வற்புறுத்துவதுண்டு.

'பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் கவிதையுலகின் தலைமகனாக நீங்கள் திகழுகிறீர்கள். தமிழ்கூறும் நல்லுலகம் உங்களிடமிருந்து சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறது. தமிழின் பெருமையைப் பல மடங்குகள் உயர்த்தும் உன்னதமான படைப்புகளை உருவாக்கும் அறிவும் ஆற்றலும் தகுதியும் திறமையும் உங்களிடம் உண்டு. அதை நீங்கள் செய்யவேண்டும்' எனப் பலமுறைகள் வேண்டியிருக்கிறேன்.

அவரும் அதை வழிமொழிவார். ஆனால் எங்கேயோ வீசும் அரசியல் சூறாவளியில் தன்னையும் அறியாமலேயே சிக்கிக்கொள்ளுவார். அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்.

அரசியல் சூறாவளிகள், கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள் ஆகிய வற்றுக்கு நடுவேயும், அவரது இலக்கியச் சாதனை எண்ணி எண்ணிப் பிரமிக்கத் தக்கதாகும்.
18 வயதில் எழுதப்புகுந்த அவர் 54-ஆம் வயதில் மறைந்தார். இடைப்பட்ட 36 ஆண்டுக்காலத்தில்

கவிதைகள் - 8 தொகுதிகள்
நவீனங்கள் - 20
கட்டுரை நூற்கள் - 20
அர்த்தமுள்ள இந்து மதம் - 6 பாகங்கள்
திரைப்படப் பாடல்கள் - 5000க்கு மேல்
திரைக்கதை வசனம் - 10 படங்களுக்கு மேல்

மாங்கனி, ஆட்டனத்தி-ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி, இயேசுகாவியம் முதலிய பல காவியங்களைப் படைத்தார்.வணங்காமுடி, தமிழ்மன்னன், காரைமுத்துப் புலவர் ஆகிய புனைப் பெயர்களிலும் அவர் எழுதிக்குவித்தார்.

அவருடைய குட்டிக்கதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
அவர் எழுதிய 'புஷ்பமாலிகா' ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

'விளக்கு மட்டுமா சிவப்பு' என்னும் நவீனம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 'மலையாளநாடு' இதழில் தொடராக வெளிவந்தது. அவரது 'அழகி' என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டது.

'பாடாய் தும்பி! மணவறைப்பாட்டு' கவிதை சாகித்திய அகாதமியினால் 1958-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது.

கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை நண்பர் ஆஷா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'ஆய தங்ஸ்ர்ண்ழ்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

பாரிசில் வாழும் பேராசிரியரான ஓங்ஹய்லிஙஹழ்ண்ங்லிஓன்ப்ண்ஹ என்பவர் கவிஞரின் 10 கவிதைகளைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து ஃஹய்ய்ஹக்ஹள்ஹய்ங் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

தமிழக அரசு இவரை அரசவைக் கவிஞராக நியமித்துப் பெருமையடைந்தது. இந்திய சாகித்திய அகாதமி அவரின் 'சேரமான் காதலி' நவீனத்தைத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தது.

எம்.ஏ.சி. அறக்கட்டளையின் சார்பாக அண்ணாமலையரசர் நினைவுப் பரிசு கொடுக்கப்பட்டது.

இந்தப் பாராட்டுகளும் பரிசுகளும் அவரைத் திருப்தி செய்யவில்லை. கம்பனைப் போல இளங்கோவைப் போல அற்புதமான காவியங்களைப் படைத்து அழியாப் புகழைப் பெறவேண்டும் என்ற துடிப்பு அவரிடம் குடிகொண்டிருந்தது என்பதை நானறிவேன்

'கம்ப சூத்திரம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் தனது மனக் கிடக்கையை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:

கம்பனெனும் மாநதியில்
கால்நதிபோல் ஆவதென
நம்புகிறேன் பாட்டெழுதும் நானோ-அந்த
நாயகன்தான் என்ன நினைப்பானோ?

ஆனால் காலம் செய்த சதியால் அவரது மனோரதம் முழுமையாக நிறைவேறவில்லை.

அவருடைய கவிதைகள், திரைப் பாடல்கள் மட்டும் இலக்கிய நயத்தோடு மிளிரவில்லை. அவரது உரைநடையும் இலக்கியச் சுவையும் மிகுந்ததாக இருந்தது. பலதரப்பட்ட உரைநடைகளை அவர் கையாண்டார். சிவகங்கைச் சீமை, இல்லற ஜோதி போன்ற படங்களுக்கு அவர் எழுதிய வசனம் இலக்கிய நடையில் அமைந்தது.
தி.மு.க.விலிருந்து விலகும் கட்டத்தில் 'போய் வருகிறேன்', 'முடிவின் தொடக்கம்', 'பாவமன்னிப்பு' என்ற தலைப்புகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் விவிலிய நடையை வென்றன. விவிலியத் தமிழைப் புதுமையாகக் கையாண்டு எல்லோரின் உள்ளங்களையும் தொட்டார்.

அதற்கு மறுப்பு எழுதச் சிலர் முற்பட்டபொழுது அறிஞர் அண்ணா அவர்களைத் தடுத்துவிட்டார். 'இந்த மாதிரி முயற்சியும் பாணியும் உங்களில் யாருக்கும் வராது. அது அவனுக்கு மட்டுமே ஆகிவந்த கலை' என்றாராம்.

இதைத் தொடர்ந்து வனவாசம், மனவாசம் என்ற தலைப்புகளில் தனது வாழ்க்கை வரலாற்றை ஒளிவு மறைவின்றி அவர் எழுத ஆரம்பித்தபொழுது தமிழகம் திகைத்தது. அவரது எதிரிகள் கூட அந்தப் புதுமையான நடைக்காக அதை வாங்கிப் படித் தார்கள். இதற்கு முன்னாலும் அதற்குப் பின் னாலும் இன்றுவரை யாராலும் அந்தப் புதிய பாணியில் எழுத முடியவில்லை. முயன்று பார்த்தவர்கள் தோல்வியையே சந்தித்தனர்.

கவிதை, உரைநடை, பேச்சு ஆகிய மூன்று துறைகளிலும் ஆற்றல் மிக்ககவராக கவியரசர் விளங்கினார். கவிதை புனைவதில் சிறந்தவருக்கு பேசத் தெரியாது. அல்லது உரைநடை சிறப்பாக வராது. ஆனால் கவியரசர் கவிதை எழுதும் ஆற்றலையும், படிப்போரைத் துடித்தெழ வைக்கும் உரைநடைத் திறனையும், பண்டிதரையும் பாமரரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு வன்மையும் ஒருங்கே கொண்டிருந்தார். இந்த மூன்று ஆற்றல்களும் ஒருங்கே அமைந்த கவிஞர் அவர் ஒருவர் மட்டுமே.

வள்ளுவனுக்கும், இளங்கோவுக்கும் ,கம்பனுக்கும், பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், இறப்பு என்பது இல்லை. அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்களைப் போலவே கவியரசர் கண்ணதாசனும் அமரத்துவம் பெற்றவர். கன்னித் தமிழ் இருக்கும்வரை கண்ணதாசனின் பெயரும் நிலைத்திருக்கும்.

தண்டமிழ்ச் சோலையில் கண்ணதாசக் குயிலின் பாடல்கள் என்றும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். மறத் தமிழரை மகிழ்வித்துக் கொண்டேயிருக்கும்.
மனித நேயமிக்க அந்த மாபெரும் கவிஞரை நினைக்கும்தோறும் என்னெஞ்சம் நெக்குருகிறது.

மாணவனாக நான் இருந்தபொழுது என்னை எழுத்தாளனாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் கவியரசர். அவரைப் பின் தொடர்ந்து அரசியலிலும் அடியெடுத்து வைத்தேன். அரசியல் களங்களில் அவரும் நானும் தோளோடு தோள் நின்று ஒன்றாகப் போராடியிருக்கிறோம். பல்வேறு கட்டங்களில் எனக்குக் காவலராக, கவசமாக நின்று காத்தவர் அவர். அரசியலில் நான் உயரவேண்டும் என உளமாற விரும்பி அதற்காக அரும்பாடு பட்டவர்.

தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அவரது நட்பை பொன்னேப்போல போற்றிப் பாதுகாத்தேன். அரசியலில் இருவேறு முகாம்களில் நாங்கள் பிரிந்து நிற்க நேர்ந்த காலத்திலும் எங்கள் உறவு பாதிக்கப்பட்டதே இல்லை. மேலும் மேலும் வளர்ந்து வலுவடைந்ததே தவிர நலிவடைந்ததில்லை. அதனால்தான் மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்ற முடிந்தது.

அந்த மாபெரும் கவிஞனின் குழந்தையுள்ளத்தில் எனக்குமொரு சிறு இடம் நிரந்தரமாகக் கிடைத்ததை எண்ணி மகிழு கிறேன். அவர் நினைவு நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது.

தனது வாழ்வையே தனக்கு ஆசானாகக் கொண்ட அற்புத மனிதர் அவர்.

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றில் பறந்தேன் கல்லில் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்ந்தது என்ன? சிறந்த அனுபவம்

- என்று பாடிய கவியரசரின் வாழ்வின் பல கட்டங்களில் அவர் அருகே நின்று அவரைக் கண்டு பரவசப்பட்ட நான் என்னை எழுத்தாளனாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்த கவியரசரின் பொன்விழாவினை மதுரையில் 1976ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்த நாட்கள் என் நினைவில் இன்னமும் நிழலாடுகின்றன. அவரது எண்பதாவது ஆண்டு விழாவின் போது அவர் இல்லாத வெறுமை நம்மை வாட்டுகிறது.
 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home