"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Nation without a State> Pongu Thamil > Pongu Thamil 2008 > Pongu Thamil Rally in Melbourne, Australia
பொங்கு தமிழ் - PONGU THAMIL: 2008 Pongu Thamil Rally in Melbourne 5 July 2008 |
|
Tamils call for solidarity - Chris Slee, 12 July 2008 in Green Left Weekly, 16 July 2008
|
அவுஸ்திரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் இன்று சனிக்கிழமை பொங்கு தமிழ் நிகழ்வு மிகவும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ண் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேசன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 2,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். பிற்பகல் 2:00 மணியளவில் நிகழ்வு தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர கச்சேரியுடன் விக்ரோறிய தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், மங்கள விளக்கை திருமதி துளசி பரமசிவன் ஏற்றி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி அரங்காற்றுகைகளின் தொடக்க நிகழ்வாக திருமதி மீனா இளங்குமரன் நடனப்பள்ளி சிறுமியின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பொங்கு தமிழ் பாடல் இசைக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற மக்களின் உணர்ச்சிகளை மேலும் எழுச்சிகொள்ள வைத்த இந்தப் பாடல், அங்கு கூடியிருந்தவர்களை எழுந்து நின்று கரகோசம் செய்யுமளவுக்கு பரவசப்படுத்தியது. அடுத்து உரையாற்றிய அவுஸ்திரேலிய ஈழத் தமிழ்ச் சங்கச் தலைவர் மகேந்திரராஜா, பொங்கு தமிழ் நிகழ்வு என்றால் என்ன, அது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பவை பற்றி கூறினார். அதனையடுத்து, வணக்கத்துக்குரிய டீக்கின் அடிகளாரும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் வூட்டன் அடிகளாரும் உரையாற்றினர். ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்கள் இன்றைய நாளும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வை பாராட்டி தமிழ் மக்களின் எழுச்சி கண்டு தாம் வியப்படைவதாகவும் இவ்வாறான தமிழ் மக்கள் திரட்சியை முன்னர் தான் கண்டதில்லை என்றும் கூறினர். நீதியின் வழி நின்று தமது நியாயபூர்வமான உரிமைகளை கோரி போராடும் தமிழ் மக்களின் இந்த தொடர்ச்சியான போராட்டங்களை அவுஸ்திரேலிய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் அங்கு இடித்துரைத்தனர். அடுத்து இடம்பெற்ற பிரபல பாடகர் நித்தி கனகரட்னத்தின் பாடல், தாயக விடுதலை வாழ்வில் தமிழ் மக்கள் படும் துயரத்தை படம் பிடித்துக்காட்டியது. அதனைத் தொடர்ந்து, மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் தமிழர் உரிமை மற்றும் போராட்ட உணர்வுகளை ஆங்கிலத்தில் பாடலாக பாடினார். இவ்வாறு பாடப்பட்ட சுமார் மூன்றுக்கும் அதிகமான பாடல்களை அப்பகுதியால் சென்ற அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களையும் நின்று உன்னிப்பாக கேட்க வைத்தன. அதனையடுத்து, அவுஸ்திரேலிய வானொலியில் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான ஆங்கில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அன்ரனி கிறேசியன் உரையாற்றினார். தமிழரின் உரிமைப் போராட்டம் தாண்டவேண்டிய தடைகளுக்கு பொங்கு தமிழ் நிகழ்வு எத்துணை முக்கியத்துவமானது என்பதை அவர் வலியுறுத்தினார். அடுத்த நிகழ்வாக, நிருத்தா சொரூபி நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. ஈழத்தமிழ் எழுச்சிப் பாடலுக்கான நடனம், பாரம்பரிய நடனமான கரகாட்டம் ஆகியவற்றை மேடையேற்றிய மாணவிகளின் ஆற்றுகைகள் திரண்டிருந்த மக்களை எழுச்சிகொள்ள வைத்தது.
அடுத்து பேசிய மெல்பேர்ண் இந்திய தமிழ்ச் சங்கப் பொருளாளர் அசோகராஜா, தமிழர்கள் எதிர்கொண்டு வரும் படுகொலை கலாச்சாரம் விடுதலைப் புலிகளால் ஒழிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார். ஈழ விடுலைப் போராட்டத்தை தனது நெஞ்சத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழம் மலர்ந்திருக்கும் என்று கூறினார். "பேதமை பதுமையாக தன்னை புரட்சித்தலைவி என்றி கூறிக்கொண்டு ஆட்சிக்கட்டில் ஏறிய ஜெயலலிதா தமிழரின் போராட்டத்தை தூக்கியெறிந்து நடந்து கொள்கிறார் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர் தமிழச்சியே அல்ல" என்றும் தெரிவித்தார். அதனை அடுத்துப் பேசிய, மருத்துவப்பணிக்காக வன்னி சென்று வந்த அவுஸ்திரேலிய குடிமகனான ஜேசன் தோமஸ் மற்றும் அவுஸ்திரேலிய சோசலிச முன்னணி செயலாளர் மாகரிட்டா வின்டிச் ஆகியோர் திரண்டிருந்த மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தனர். "தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை அவுஸ்திரேலிய மக்கள் மதிக்கிறார்கள். உண்மை நிலை தெரியாத பலர் இது தொடர்பில் இன்னமும் மௌனமாக இருக்கிறார்கள். இப்படியான தொடர் மக்கள் போராட்டங்களே இந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் இந்த அரசுக்கும் தமிழ்மக்களின் அபிலாசைகள் தொடர்பில் கரிசனையை ஏற்படுத்தும். அனைத்துலக அரசுகள் பல தமது நலன்சார்ந்தே தமது நாட்டு வெளியுறவுக்கொள்கைகளை வகுத்துக்கொள்கின்றன். ஆனால், மக்கள் போராட்டங்கள் மட்டுமே அதனை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவை. எம்மைப் பொறுத்தவரை நாம் தமிழீழ ஆதரவுக்கொள்கையை என்றுமே கைவிடமாட்டோம். தமிழர்களுக்கு தன்னாட்சி உடைய தனித்தேசம் கிடைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்" என்று அவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் சீராளன் குணரட்ணம், "தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் தேவை குறித்து" வலியுறுத்தினார். தாயகத்திலிருந்து வருகை தந்த பிரதம பேச்சாளரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றினார். அவர் தனது உரையில், "தாயகக் கோரிக்கையை நெஞ்சில் சுமந்து நிற்கும் எமது மக்கள் இன்று போல் என்றும் காண்பிக்கும் எழுச்சியே களத்தில் போராடும் எமது பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பலமாக அமையும். "சிறிலங்கா அரசு எதையும் எமக்கு தங்கத்தாம்பாளத்தில் வைத்து தந்துவிடும் என்று இனியும் எம்மால் கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இது எமக்கு வரலாறு அளித்துள்ள மிகப்பெரிய சந்தர்ப்பம். தேசியத்தலைவர் பிரபாகரனின் பின்னால் அணிதிரண்டு நின்று எமக்கான தேசத்தை வென்றெடுப்பதே எமக்கு முன்னுள்ள வரலாற்றுக்கடன். "70-களில் முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையை அன்று முதல் இன்றுவரை வந்த சிங்கள அரசுகள், தாங்கள் தட்டி விளையாடும் விளையாட்டுப்பொருளாகவே பரிகசித்து வந்துள்ளன. அந்த நிலை இனிமேல் தொடராமல் இருக்கவேண்டுமெனில் எமக்கான தேசத்தை நாம் துரித கதியில் பெறவேண்டும். அதற்கு நாம் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும். "இன்று புலம்பயர்ந்து வாழும் தமிழன் ஒவ்வொருவனும் தனது பணியைச் செவ்வனே செய்தால் அதுவே மண்மீட்புக்கு நாம் செய்யும் மகத்தான சேவை" என்றார். இதனைத் தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அங்கமான பொங்கு தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
இதனை படித்த விக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சபேசன்,
பொங்கு தமிழ் பிரகடனத்தை மக்கள் உணர்வோடு உரத்துக்கூறி உறுதியெடுத்துக்கொண்டனர். பொங்கு தமிழ் பிரகடனத்தின் பின்னர் இறுதி நிகழ்வாக அங்கு இசைக்கப்பட்ட பொங்கு தமிழ் பாடலின்போது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று தமது கைகளை அசைத்து தாம் தாங்கியிருந்த சிவப்பு மங்சள் கொடிகளையும் தேசியத் தலைவரின் படங்களையும் அசைத்து தமது எழுச்சியை வெளிப்படுத்தினர். சிலர் உணர்ச்சி பெருக்கிட மேடையின் முன்பாக வந்து நின்று ஆடினர். "எங்கள் தலைவர் பிரபாகரனே", "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்" என்றும் கோசமெழுப்பினர். மெல்பேர்ண் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக நடைபற்ற இந்த பொங்கு தமிழ் நிகழ்வு மாலை 5:30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது. |