Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam > Democracy, Sri Lanka Style > புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையா? - க.வே.பாலகுமாரன்

 Sri Lanka Presidential Elections

புலிகளின் அழுத்தத்தினால்தான்
தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையா?:

க.வே.பாலகுமாரன்
  Puthinam Tamil Daily - 22 November 2005


சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.11.05) ஒளிபரப்பாகிய 'நிலவரம்' நிகழ்ச்சியில் க.வே.பாலகுமாரன் கூறியதாவது:

" தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொல்வதற்கு மேற்குலகமும் பி.பி.சி. போன்ற ஊடகங்களும் முயற்சிகள் எடுக்கின்றன.

அவர்களுக்கு இலங்கையினது வரலாறு தெரியாது. 1931 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முதலாவது தேர்தலை- அதாவது டொனாமூரின் பரிந்துரைக்கு அமைய நடந்த தேர்தலை யார் புறக்கணித்தது? தமிழ் மக்கள்தான் புறக்கணித்தார்கள். எதற்காக புறக்கணித்தார்கள்? இலங்கைக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று சிங்கள மக்களின் சார்பாக தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள்.

அதே இனமானது இன்று தங்கள் விடுதலைக்காக தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டார்கள்.

"எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை" என்று கடந்த மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

ஆழிப்பேரலை வராதிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். அன்று எங்கள் தலைவர் கூறியதை இன்று எங்கள் மக்கள் இந்த தேர்தலினூடாக கூறியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் ஆதரவு என்பது வெற்று காசோலை. ரணில் அதற்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லை. அவரது இராஜதந்திரம் தோல்வியடைந்துவிட்டது.

தமிழ் மக்கள் போருக்கு அஞ்சிவிட்டதாகவும் உண்டு உடுத்து வாழ்ந்தால் போதும் என்று வாழ்பவர்கள் தமிழர்கள் என்று மிக இழிவாகத் தமிழர்களைக் கருதியமைக்கான மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மகிந்தருக்கு நாமும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏனெனில் நிம்மதியான நேர்த்தியான பிறந்த நாளை மகிந்தர் இனிமேல் கொண்டாட முடியுமா என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கிறது.

மகிந்தரை நாங்கள் நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை என்பது வேறுவிடயம். சந்திரிகா, அவரது தம்பியார், ஜே.வி.பி, சிங்கள மக்கள் யாருமே அவரை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை.

இந்தத் தேர்தல் முடிவு என்பது 2 தேசியங்களின் முடிவாக இருக்கிறது.

தமிழ் மக்கள் வாக்களிக்காமல் இருப்பதன் ஊடாக தங்களது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கிராமப்புற சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர்கள் அபிலாசைகளை வாக்களித்து வெளிப்படுத்தி உள்ளார்கள்.

மகிந்தர் இப்போது அனைத்துக்குமான வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறார்.

பேரினவாத பூதத்தை-
ஒற்றையாட்சி எதிர்ப்பு கோசத்தை-
அடிப்படைவாத ஆதரவு நிலைப்பாட்டை-
பௌத்த பிற்போக்குத்தனத்தை-
போருக்கான வாய்ப்பை-

அனைத்து மோசமான நிலைகளுக்குமான வாய்ப்புக்களை மகிந்தர் திறந்துவிட்டிருக்கிறார்.

தமிழ் மக்களோ அமைதியாக வாக்களிக்காமல் இருந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தேசியத் தலைவரின் சென்ற வருட மாவீரர் நாள் உரையிலேயே சர்வதேச சமூகத்துக்கான செய்தி வெளிப்படையாக வந்திருக்கிறது.

"சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புக்களும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடக்கு-கிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை" என்று கூறியிருக்கிறார்.

இதை நாம் நீண்டகாலமாக சர்வதேச சமூகத்துக்குச் கூறிவருகிறோம். இதைக் கூறுவதற்காக போரை இடைநிறுத்தினோம். அப்போது சர்வதேச சமூகம் என்ன கூறியது?

"ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தாருங்கள். நிச்சயமாக சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு தீர்வைத் தருவார்கள். ஒரு இடைப்பட்ட தீர்வை பக்குவமாக முன் வைப்போம்" என்றார்கள். ஆனால் அவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு எதிராகவே சிங்கள மக்கள் வாக்களித்துள்ளார்.

நோர்வேக்காக நாங்கள் உண்மையிலேயே பரிதாப்படுகிறோம். நோர்வேயின் நல்ல நோக்கம் இவ்வளவு மோசமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் போல் மூன்றாம் தரப்பாக உள்வந்து சிங்களத்துக்கு ஆதரவாக ஒருதரப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிங்களம் முயற்சிக்கும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும்.

சிங்களத்துக்கு தமிழர் உரிமைகளை மறுப்பதற்கும் ஒடுக்குவதற்கும்தான் சர்வதேச சமூகம் தேவை. உரிமைகளைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு சர்வதேச சமூகம் தேவை இல்லை.

இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தலையிட்டதே திறந்த பொருளாதாரக் கொள்கைக்காகத்தான். இந்த அடிப்படையையே சிங்களம் மறுத்திருக்கிற போது சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது?

சிங்களத்திலே இருப்பது பௌத்த பேரினவாத அடிப்படைவாதம். இதன் வெளிப்பாடுதான் மகிந்தர். இதற்கு ஒரு அழுத்தத்தை சர்வதேச சமூகம் அளிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் இல்லை. "இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது" என்று கடந்த மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த அரசியல் வெறுமை யாரால் உருவாக்கப்பட்டது? ரணிலின் அமைதிப் பேச்சுவார்த்தைகளால்தான் உருவாக்கப்பட்டது.

தமிழர்களை அரவணைத்து வாழவும் தயாரில்லை-பிரிந்து செல்ல வாழவிடுவதாகவும் இல்லை.

குறுகிய கால "சலுகைகளுக்காக" "உரிமைகளை" விட்டுக்கொடுத்தால் இறுதியில் நீ "சலுகைகளையும்" இழந்துவிடுவாய் என்பதுதான் ரணிலுக்கு வாக்களிக்காத தமிழ் மக்களின் கருத்து.

சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் தமிழ் பேசும் வாக்குகள். இவர் என்ன தமிழரின் பிரதிநிதியா? எங்களுடைய குரலை ஒலிக்கா இவர் இருக்கிறார்? அல்லவே..அல்ல.

எதற்காக நாங்கள் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும்?

48 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற படுகொலைகள், மிக மோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள், தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழித்த அனைத்து சர்வதேச சதி வலைப்பின்னல் தொடர்பான வேதனை எல்லாவற்றுக்கும் நாம் கொடுக்க வேண்டிய தண்டனை என்பது வரலாற்றின் தீர்ப்பாக இருக்கும்.

நாளாந்த வாழ்க்கைக்கான அற்ப சலுகைகளுக்காக இனத்தின் உரிமைகளை பணயம் வைப்பது என்பது எப்போதும் முடியாது.

மற்ற நாடுகளில் போராடுகிற சக்திகளை ஒடுக்குவதற்காக இணைந்து செயற்பட்டு மிக இலாவகமாக ஒடுக்குவார்கள். ஆனால் இங்கே அந்த செயற்பாட்டைக் கூட செய்ய அவர்களால் முடியவில்லை என்பதை அந்த மக்கள் மகிந்தரை வாக்களிப்பினூடாக தெரிவு செய்துள்ளதன் மூலம் நோர்வே என்ன செய்ய முடியும்?

இனி நோர்வே அற்புதங்களையும் மந்திரங்களையும் இங்கே நிகழ்த்த வேண்டும்.

பண்டாவின் அரசியல் வாரிசுகள் இன்று ஒன்று சேர்ந்து செய்யப் போவது என்ன? மிகப் பெரிய அவலமாக மாறப் போகிறது. முரண்பாடுகள் எல்லாம் முற்றி கூர்மையடைந்து வெடிக்கிற போது இந்தத் தீவிலே இரத்த ஆறு ஓடுவது கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. அதைத் தடுக்கும் வலிமை கூட பிரபாகரனிடம்தான் உண்டு.

இராணுவத்தில் ஊருவல், ஆட்சிக் கவிழ்ப்பு, புரட்சி என்று சிங்கள தேசம் நாசமாகப் போகிறது. அதைத் தடுக்கிற ஆற்றல் எங்களிடம்தான் உள்ளது. ஆகவே பிரபாகரன் வெல்ல வேண்டும் என்று சிங்கள மக்களே விரும்புவார்கள். இதைத்தான் மகிந்தவின் வெற்றி...பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம் என்று கூறியிருந்தேன் என்றார் க.வே. பாலகுமாரன்.


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home