Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam > Democracy, Sri Lanka Styleஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்

Democracy Continues, Sri Lanka style...

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்
அனுபவ பாடங்களால் அரசியல் விழிப்பு
பெற்றவர்களாக இருக்கும் தமிழ்மக்கள்

சா.ஆ.தருமரத்தினம்
29 October 2005 - Thinakural

"...சிங்கள இனவாதிகளோடு சேர்ந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை ராஜபக்ஷ முன்வைத்து வருகின்றார். அதேபோல், ரணில் விக்கிரமசிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றின் இணக்கப்பாட்டுடன் தான் அமைதி முயற்சிகள் சாத்தியப்படும் என்று கூறிவருகிறார். ஆகவே, இரு தரப்பினரதும் அண்மைக்கால கருத்துகள் எதுவும் தமிழ் மக்களுக்குச் சார்பானதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய சூழலை ஏற்படுகின்றவனவாக இல்லை..."


தென்னிலங்கை அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் அதிகாரங்களைக் கைப்பற்றுவதில் தான் காலம் காலமாக செயற்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆட்சித் தலைமையும் மாறும் போது எங்களுடைய மக்கள் நிலைமைகள் மாறும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அதனால் புதிய தேர்தலின் மூலம், தேர்ந்தெடுக்கப்படும் ஷ்ரீ லங்கா அரசியல் தலைமையானது, இந்தச் சமாதான முன்னெடுப்புகளில் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் செயற்படுவார்கள் என்பதில் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றுத்தான் இருக்கிறார்கள்.

இப்போதுள்ள சூழலில் இரண்டு ஸ்ரீ லங்கா அரசுத் தலைமை வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ளும் யுக்திகளில் தான் கவனம் செலுத்துகின்றார்கள். எவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான விடயத்தை வெளிப்படுத்தவில்லை.

சிங்கள இனவாதிகளோடு சேர்ந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை ராஜபக்ஷ முன்வைத்து வருகின்றார். அதேபோல், ரணில் விக்கிரமசிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றின் இணக்கப்பாட்டுடன் தான் அமைதி முயற்சிகள் சாத்தியப்படும் என்று கூறிவருகிறார்.

ஆகவே, இரு தரப்பினரதும் அண்மைக்கால கருத்துகள் எதுவும் தமிழ் மக்களுக்குச் சார்பானதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய சூழலை ஏற்படுகின்றவனவாக இல்லை.

நீண்ட காலமாக இன வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம் கொடுத்து, எம்மக்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். சமீபத்திய கடந்த காலத்தில் தேர்தல்களின்போது தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் ஷ்ரீலங்கா அரச தலைவர் தேர்தலிலும் எங்கள் மக்கள் தெளிவான தமது நிலைப்பாட்டை சுதந்திரமாக வெளிப்படுத்துவார்கள்" என நோர்வே தூதருடனான தமது சந்திப்பின் போது புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் முக்கியஸ்தர்கள் செம்மையாக தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை ஆணித்தரமாக உரைத்திருத்தல் தெரிந்ததே!

சமீபத்திய கடந்த காலத்துக்கு முன்பாக 1956 பொதுத் தேர்தலில் இருந்து 1977 வரையிலான பொதுத் தேர்தல்களில் ஏதாவது ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சிக்கு வாக்களித்து அதனை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தென்னிலங்கை தமிழ் மக்கள் படித்துக் கொண்ட அனுபவ பாடம் தான், தமிழ் மக்களை மேற்படி நிலைப்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

1956 க்கு முன் பதவியில் இருந்த பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவலையின் ஐக்கிய தேசியக் கட்சி அதுவரை தமிழ், சிங்கள மொழிகளுக்கு இடையே அது கடைப்பிடிக்கப்படுவதாகப் போக்குக் காட்டி வந்திருந்த உத்தியோக மொழி சம்பந்தப்பட்ட சம அந்தஸ்துக் கொள்கைக்கு விரோதமாக சிங்கள மொழியை மட்டுமே உத்தியோகமொழியாக்கச் சட்டம் இயற்றப் போவதாக களனியில் கூட்டப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றியதும் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு சிங்களம் மட்டும் தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு வாக்காளர்களிடம் ஆணை கோரித் தேர்தலில் குதித்தது.

1956 ஏப்பிரல் திங்களில் நடைபெறவிருந்த மேற்படி தேர்தல், தமது கட்சி பதவியில் அமர்ந்து இருபத்தினான்கு மணி நேரத்தில் தனிச்சிங்கள சட்டத்தை உத்தியோக மொழியாகத் தாம் நடைமுறைப்படுத்துவார் என வாக்களித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தீவிர இனவாதக் கட்சிகளான தோழர் பிலிப்குணவர்தனாவின் வி.எல்.எஸ்.எஸ்.பீ. டபிள்யூ.தகநாயக்க மற்றும் கே.எம்.பீ.இராஜரத்ன போன்றோருடன் மக்கள் ஐக்கிய முன்னணி எனும் பெயரில் ஒரு கூட்டு முன்னணியை அமைத்துக் கொண்டு தேர்தலில் குதித்திருந்தார்.

உத்தியோக மொழிக் கொள்கையில் தமிழ், சிங்கள மொழிகளுக்கு இடைப்பட்ட சம அந்தஸ்து பேணப்பட வலியுறுத்தி வந்த தோழர் டாக்டர் என்.எம்.பெரேராவைத் தலைவராகக் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சியும், டாக்டர் விக்கிரமசிங்காவைத் தலைவராகக் கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பண்டாரய நாயக்கவின் கூட்டு முன்னணியில் சேராவிடினும் கூட தேர்தலில் அதனுடன் ஒரு போட்டி தவிர்ப்பு உடன்படிக்கையைச் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் காணமாகத் தென்னிலங்கைத் தமிழ் வாக்காளர் தவறாக வழிநடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட இரு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற பண்டாரநாயக்கா ஒரு போதும் சிங்களம் மட்டும் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முன்வரமாட்டார், வெறுமனே வாக்கு வங்கியைப் பெருக்கும் அவரது தேர்தல் யுக்தியே தீவிர இனவாதக் கட்சிகளுடன் இருபத்திநான்கு மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தை, நடைமுறைப்படுத்துவதாக உரைத்து அவர் அமைத்துக் கொண்ட கூட்டு முன்னணி என எடுத்துக் கொண்டு அக் கூட்டணிக்கே மிகப் பெரும்பான்மையாக வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசிற்கு உத்தியோக மொழிக் கொள்கையில் கொத்தலாவலை அரசு அடித்த குத்துக் கரணத்திற்கு தக்க அரசியல் பாடம் புகட்ட வேண்டும் எனும் நோக்கம் அவர்கள் கண்களை மறைக்க அதே சிங்களம் மட்டும் கொள்கையை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிட்டிருந்த பண்டாயநாயக்கவை கூடுதல் பெரும்பான்மையுடன் பதவியில் அமர்வதற்கு தென் இலங்கைத் தமிழ் மக்கள் இவ்வாறு அரசியல் சோரம் போக நேர்ந்தது. தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியால் வெறுமனே எட்டு ஆசனங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. தேர்தலில் படித்துக் கொண்ட பாடத்தால் பிரதமர் கொத்தலாவலை மரமேறிகளுடன் சமதையாக பாராளுமன்றத்தில் அமரவிரும்பவில்லை எனத் தெரிவித்துப் பாராளுமன்ற அமர்வுகளையே பகிஷ்கரித்திருந்தமை தெரிந்ததே. அதன் பின், அவர் ஒரு போதுமே பாராளுமன்றம் சென்றதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு அதனது மொழிக் கொள்கையில் அடித்த குத்துக்கரணத்துக்கு தென்னிலங்கைத் தமிழ் வாக்காளர்கள் தக்க பாடத்தைப் புகட்டியிருந்த போதிலும், சம காலத்தில் அதே சிங்களம் மட்டும் உத்தியோக மொழிக் கொள்கையை வரித்துக் கொண்டிருந்த பண்டாரநாயக்கவை அபரிமிதமான பெரும்பான்மை ஆசனங்களுடன் தெரிவு பெற உதவியமையால் தம்மையும் அறியாது தமது தலையில் தாமே மண்ணை வாரிக் கொண்டிருந்தமை சிறந்த ஒரு அனுபவப்பாடமாக எடுத்துக் கொண்டு பின் வந்த தேர்தல்களிலாவது பயன்படுத்தியிருத்தல் வேண்டும்.

அவ்வாறாக இருந்திராமையே வருத்தத்திற்குரிய விடயமாகும். 1960 மார்ச் திங்களில் அடுத்து நிகழ்ந்த பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத தொங்கு பாராளுமன்றமே வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. தந்தை செல்வாவின் தலைமையைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி ஐக்கிய தேசியக் கட்சியாலோ அன்றேல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலோ அரசு அமைக்க முடியாத அவல நிலை நாம் முன்வைத்த ஆகக் குறைந்த நான்கு சிந்தனைகளையும் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உடன்படும் கட்சிக்கே இலங்கைத் தமிழரசுக் கட்சி அதனது ஆதரவை நல்கும் எனத் தந்தை செல்வா அறிவித்திருந்தார். தந்தை செல்வாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமலே அப்போது மகா தேசாதிபதியாகப் பதவி வகித்த சேர் ஒலிவர் குணத்திலக்கவிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருப்பதாக பொய் உரைத்து (கனவான்?) டட்லி சேனாநாயக்க ஏற்கனவே பிரதமர் நியமனம் பெற்றுப் பிரதமர் எனும் கோதாவில் நியமன உறுப்பினர்களாக ஆறு பேரையும் பதவியில் அமர்த்தியிருந்தார். இருப்பினும், தந்தை செல்வாவினால் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகள் நான்கினையும் நிராகரித்து, நிபந்தனையற்ற ஆதரவைத் தமக்கு நல்கும்படி தந்தை செல்வா மீது பலத்த செல்வாக்கினையும் அழுத்தங்களையும் கொடுக்கத் தலைப்பட்டார் டட்லி சேனாநாயக்க.

மாறாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் சீ.பீ.டி.சில்வாவோ, தந்தை செல்வாவின் நிபந்தனைகள் நான்கினையும் நடைமுறைப் படுத்துவதற்கு உடன்பாடு தெரிவித்திருந்தார். இந் நிலையில் பாராளுமன்றத்தில் அரியணை உரை மீது எடுக்கப்பட்ட முதல் வாக்கெடுப்பில் தானே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புடன் டட்லி சேனாநாயக்காவின் அரசு தோற்கடிக்கப்பட்டது. சீ.பீ.டி. சில்வா மாற்று அரசு அமைப்பதற்கு உடன் பாடு தெரிவித்து கூட்டாக எதிர்க் கட்சிகள் யாவும் கையெழுத்திட்டு அனுப்பிய மகஜரைப் புறக்கணித்தவராக, மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணத்திலக்க தமது பாராளுமன்றப் பெரும் பான்மையைத் தானும் எண்பிக்கத் தவறிய பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் பரிந்துரையை ஏற்றுப் பாராளுமன்றத்தைத் கலைத்து மறு தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

1960 ஜூலை திங்களில் அதே ஆண்டில் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெறவிருந்த இடைக் காலத்தில் இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதனின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்பதற்கு முன்வந்திருந்த இளம் கைம்பெண் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமது கணவர் கைச்சாத்திட்டிருந்த "பண்டா - செல்வா" உடன்படிக்கையை, தாம் பதவியில் அமர்த்தப்பட்டால் நடைமுறைப்படுத்துவதாக தந்தை செல்வாவுடன் (எழுத்தில் வரையப்படாத) ஒரு கனவான் உடன்படிக்கையைச் செய்து கொண்டிருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அமோக ஆதரவுடன் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 1960 ஜூலைப் பொதுத் தேர்தலில் அடைந்த பெரு வெற்றி காரணமாக ஒரு தனிக் கட்சி அரசாங்கத்தை ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறுவியது. நேரடியாகத் தேர்தலில் போட்டியிட்டிராத அக் கட்சியின் தலைவியாக மூதவை உறுப்பினர் நியனம் பெற்று ஷ்ரீமாவோ அம்மையார் பிரதமராக வந்திருந்தார்.

இத் தேர்தல் பெறுபேறுகள் வானொலி வாயிலாக அறிவிக்கப்பட்ட போது காங்கேசன் துறையில் தந்தை செல்வா பெற்ற வெற்றியை நாட்டில் முதல் தடவையாக தென்னிலங்கையில் சிங்களவர்கள் வெடி கொளுத்திக் கொண்டாடியமை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அது போன்றே அத் தேர்தலுக்குப் பின் முதல் தடவையாகப் பாராளுமன்றம் கூடிய போதும் பாராளுமன்றக் கட்டிடத்தின் முன் திரண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், "செல்வநாயகம் மாத்தையாவுக்கு ஜெயவேவா" என்று கோஷித்து ஆர்ப்பரித்தும் இருந்தனர். தேர்தலில் அக் கட்சி அடைந்த பெரு வெற்றிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அளித்த பேராதரவே முழு முதல் காரணம் என்பதை இவை ஒப்புக் கொள்வதாகவே இருந்தன.

"அண்ணன் தம்பி உறவு ஆறு கடக்கும் வரை மட்டுமே" எனும் முதுமொழிக்கொப்ப பதவியில் அமர்ந்ததும் தாம் செய்து கொண்ட கனவான் ஒப்பந்தத்தை மறைந்த தமது கணவர் பண்டாயநாயக்க செய்தது போன்றே முற்றாகக் கைகழுவி விட்டதோடு நில்லாது, சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச் சட்டத்தை நீதி மன்றங்கள் வரை விஸ்தரித்தார். ஷ்ரீமாவோ அம்மையார். அதனை ஆட்சேபித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி தந்தை செல்வா தலைமையில் யாழ் கச்சேரி முன்பாக ஆரம்பித்திருந்த சத்தியாக்கிரக மறியல் போராட்டம் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் அரச இயத்திரத்தையே இரண்டு மாதங்களுக்கு மேல் செயல் இழக்கும் படி செய்தது. அப் போராட்டத்தின் ஓர் அம்சமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு தபால் சேவை வெளியிட்ட, தமிழரசு தபால் முத்திரை சர்வதேச முத்திரை சேகரிப்பவர்களது கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது. அதுவரை வாளாவிருந்த ஷ்ரீமாவோ அரசு தமிழரசுக் கட்சி அதன் அடுத்த நடவடிக்கையாக வடக்குக் கிழக்கில் உள்ள முடிக்குரிய காணிகளை காணியில்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாக அறிவித்ததும் "நெருக்கடி கால நிலையையும்" கூடவே ஒரு நாற்பத்தெட்டு மணி நேர ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்து, சத்தியாக்கிரகிகள் மீது ஆயுதப் படைகளைக் கட்டவிழ்த்து விட்டது.

சத்தியாக்கிரகிகள் பனாகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக அதுவரை திறந்து வைக்கப்படாதிருந்த இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு கொண்டு செல்லப்பட்டதும் திடீரென அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் நிமித்தம் உயிராபத்துக்கு உள்ளாகிவிடுவாரோ எனப் பீதியடைந்த அரசு, பின் தந்தை செல்வாவை மட்டும் கொள்ளுப்பிட்டி அல்பிரட்ஹவுஸ் தோட்டத்தில் இருந்த அவரது வாடகை இல்லத்தில் வீட்டுக் காவலில் வைத்தது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களுள் தமிழரசுக் கட்சியைச் சேராத சேர் கந்தையா வைத்தியநாதன், யாழ். மாநகர முதல்வர் தா.ச.துரைராஜா, பாராளுமன்ற உறுப்பினர் வவுனியா த.சிவசிதம்பரமும் உள்ளடங்குவர்.

கைது செய்யப்படக் கருதப்பட்டிருந்தவர்களுள், பண்டாரநாயக்கவின் பெயர் வரலாற்றில் நிலைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை அவர் ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென ஷ்ரீமாவோ அம்மையாருக்கு ஆலோசனை தெரிவித்து அவரை இணங்க வைத்திருந்தவரான இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஒருவர் மட்டுமே கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து தலைமறைவாகியிருந்தார். அவரது நோக்கம் பாராளுமன்றத்தில் வெளிப்பட்டு சத்தியாக்கிரகிகள் மீது இராணுவனத்தினர் நடப்பித்த அத்துமீறுதல்களையெல்லாம் அவையில் அம்பலப்படுத்துவதே!

தமிழ் காங்கிரஸ் பிரமுகர்களாகிய யாழ். மாநகர முதல்வர் தா.ச.துரைராஜாவையும், வவுனியா பா.உ., த.சிவசிதம்பரத்தையும் கைது செய்து பனாகொடையில் தடுப்புக் காவலில் அடைத்த அரசு, உடுப்பிட்டி பா.உ., எம்.சிவசிதம்பரம் அவர்களை மட்டும் கைது செய்யத் தவறியது. மாறாக, அவர் இராணுவத்தினரால் நையப் புடைக்கப்பட்டிருந்தார். டாக்டர் நாகநாதன் ஒரு கிறிஸ்தவ மதக் குருவாகவும், சிவசிதம்பரம் ஒரு தொழிலாளியாகவும் மாறுவேடம் பூண்டு தலைநகர் சென்றடைய மேற்கொண்ட முயற்சி போக்குவரத்து தடை காரணமாக சித்தியடையவில்லை. சி.ஐ.டி.அதிகாரியான தமது மருமகன் நதானியேலிடம் சரணடைந்த நாகநாதன் பனாகொடை தடுப்பு முகாமில் சேர்க்கப்பட்டார்.

வட, கிழக்கில் இராணுவத்தினர் நிகழ்த்திய அட்டூழியங்களை தோழர் எட்மன் சமரக்கொடி வாய்மொழியாகவும், நேரில் தாமும் எம்.சிவசிதம்பரத்தால் பாராளுமன்ற சபையில் பதிவிலிட முடிந்தது. தமிழ் மக்கள் பெரிதும் நம்பியிருந்த, லங்கா சமசமாஜக் கட்சி மூன்று அமைச்சர் பதவிகளை ஏற்பதற்காக 1963 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசில் இணைந்து கொண்டது. கட்சியின் நிலைப்பாட்டில் செய்து கொள்ளப்பட்ட குத்துக்கரணத்தை ஆட்சேபித்து தோழர்கள் எட்மன் சமரக்கொடியும் பாலா தம்புவும் (தொழிற்சங்கப் பிரமுகர்) சமசமாஜக் கட்சியில் இருந்து விலகினர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோ பதவிகள் பெறாதே அரசை ஆதரிக்கத் தலைப்பட்டது.

மேற்படி சூழ்நிலையில் அரசு 1965 பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. 1960 மார்ச் பொதுத் தேர்தலில் சம்பவித்தது போன்றே இத் தேர்தலிலும் ஒரு தொங்கு பாராளுமன்றமே தெரிவு செய்யப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளைத்தெடுக்கும் நோக்குடன் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமது கட்சி தோற்கடிக்கப்பட்டிருந்த போதும், உடன் பதவி விலகாது தாமதம் செய்து வந்தார். தமிழரசுக் கட்சியுடன் திரும்பவும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பயன் தராத நிலையில், திருச்செல்வம் அவர்களது றொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே மாவட்ட சபை நிறுவுவதற்குச் செய்து கொள்ளப்பட்ட "டட்லி- செல்வா" உடன்படிக்கையால் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஓர் அரசு நிறுவப்படவிருப்பதை அறிந்து கொண்ட பின்பே, தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ஷ்ரீமாவோ அம்மையார் மகா தேசாதிபதி கொபெல்லாவவிடம் சமர்ப்பித்தார்.

தமது அரசு வலுவுள்ளதாக இருப்பதற்கு தமிழசுக் கட்சி மூன்று அமைச்சுகளையேனும் பொறுப்பேற்க வேண்டுமென டட்லி சேனாநாயக்கா வற்புறுத்திய போதிலும் அது மறுக்கப்பட்டது. காரணம் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் தானும் அமைச்சர் பதவியேற்க முன் வராமையால் குறைந்த பட்சம் மாவட்ட சபைகள் மசோதவுக்கான வரைபைத் தயாரிப்பதற்காகவேனும் ஒருவர் பதவியேற்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டமையால் வெளியார் ஒருவரான அமரர்.மு.திருச்செல்வம் மூதவை உறுப்பினராக அரசினால் நியமிக்கப்பட்டு அப் பதவி அவருக்குத் தரப்பட்டது.

"ட்டலி- செல்வா" உடன்படிக்கையைின் அடிப்படையில் தமிழ்மொழி உபயோக மசோதா பலத்த இழுபறிகள் மத்தியில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 1966 ஜனவரி 8 ஆம் திகதி எதிர்க் கட்சிகள் கூட்டாக நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் மரணமடைந்தார். ஆயினும், மேற்படி மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும், ஒரு போதுமே அது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மாவட்ட சபைகள் நிறுவுவதற்கான ஒரு வெள்ளை அறிக்கையை மட்டுமே அரசினால் சமர்ப்பிக்க முடிந்தது. தமது கட்சிக்குள் எழுந்த பலத்த எதிர்ப்புக் காரணமாக தமது கையாலாகாத் தன்மையை டட்லி சேனநாயக்க ஒப்புக்கொண்டிருந்தார். அரசின் அவல நிலைக்கு எதிர்க் கட்சிகளின் பலத்த எதிர்ப்பும் முக்கிய காரணமாக அமைந்தமையால் தமிழரசுக் கடசி அவற்றிற்கு மேலும் பலம் சேர்க்காது இருப்பதற்காக உடனடியாக அரசில் இருந்து விலகுவதைப் பின்போட்டே வந்தது.

ஆயினும், உத்தியோகபூர்வமாக பிரதமர் டட்லி சேனநாயக்கா திருகோணமலைக்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின் போது கோணேசர் கோவில் சுற்றுவட்டத்தை ஒரு புனித நகராக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் எனும் ஒரு மனுவினை அங்குள்ள சைவப் பெருமக்கள் பிரதமரிடம் கையளித்திருந்த போது, அம்மனுமீது நடவடிக்கை எடுக்கும் படி பணித்து தம் அருகில் நின்ற உள்ளூராட்சி அமைச்சர் மு.திருச்செல்வத்திடம் பிரதமரே கையளித்திருந்தார். அமைச்சர் செய்ததெல்லாம் சம்பந்தப்பட்ட மனு மீது ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு நானா வித அறிக்கை மூலம் கே.சி.நித்தியானந்தா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவினை நியமித்திருந்ததே!

விடயம் அறியாத ஒரு பௌத்த பிக்கு, உள்ளூராட்சி அமைச்சர் திருச்செல்வம் ஏதோ தன்னிச்சையாக மேற்படி விசாரணைக் குழுவை நியமித்து விட்டதாகக் கருதி பலத்த ஆட்சேபனை கிளப்பியிருந்தார். பிரதமர் டட்லி சேனநாயக்காவும் சம்பந்தப்பட்டவரான உள்ளூராட்சி அமைச்சரையும் கலந்து கொள்ளாது உடனடியாகவே நானவித அறிக்கை மூலம் மேற்படி விசாரணைக் குழுவை கலைத்திருந்தார். அச் செயலை ஆட்சேபித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் இருந்து விலகத் தீர்மானித்ததுமே, அமரர் மு.திருச்செல்வமும் தமது அமைச்சர் பதவியைத் துறந்தார். சம்பந்தப்பட்ட கோவை, மேற்படி விசாரணைக் குழுவின் தலைவர் கே.சி.நித்தியானந்தனிடம் திருகோணமலையில் இருந்ததனால் தமது பதவிவிலகல் குறித்து தாம் மூதவையில் நிகழ்த்திய உரையில் தானும் பிரதமரின் எழுத்து மூலமான பணிப்பின் மீதே சம்பந்தப்பட்ட விசாரணைக் குழுவினை தாம் நியமித்திருந்த விபரங்களைத் தானும் விவரமாக திருச்செல்வத்தினால் குறிப்பிட இயல்வில்லையெனும் தகவலை, கே.சி.நித்தியானந்தா அவர்களே இக் கட்டுரையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் 1970 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டிய நிர்ப்பந்தம் தென்னிலங்கைத் தமிழ் வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருந்தது. புதிய குடியரசு யாப்பு ஒன்றை அமைப்பதற்கு ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்கிய முக்கூட்டு முன்னணி வாக்காளரிடம் கோரியிருந்த ஆணையை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்று முழுதாகாவே நிராகரித்திருந்தனர். அங்கு ஒரு தேர்தல் தொகுதியை தானும் அதனால் வெற்றிகொள்ள இயலவில்லை. அவ்வாறிருந்தும், தென்னிலங்கையில் அபரிமிதமாக அது பெற்றிருந்த வெற்றிக்கு தென்னிலங்கைத் தமிழ் வாக்காளர்களும் தம்மை அறியாதே பங்களிப்புச் செய்திருந்தனர். ஒப்பந்த மீறுதலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் எனும் உந்துதலால் தமது கண்களையே அவர்கள் குத்திக் கொண்டதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் மக்களுக்குப் பாதகமான 1972 குடியரசு யாப்புத் தோற்றம் பெறுவற்கு அவர்களது வாக்குகளும் பயன்பட நேர்ந்ததே இதன் பலனாகும்.

1970 இல் தெரிவு செய்யப்பட்ட முக் கூட்டரசு 1975 இல் அதன் பதவிக் காலம் முடிவு பெறப் புதிய தேர்தலை எதிர்கொண்டிருத்தல் வேண்டும். ஆயினும், புதிய குடியரசு யாப்பு 1972 மே திங்களில் நடைமுறைக்கு வந்திருத்தமையைக் காரணம் காட்டி அதன் பதவிக் காலத்தை ஒரு வருடத்தால் முறையீனமாக அது நீடித்துக் கொண்டது. மேலும், தமிழ் மக்களுக்கு முன்னிருந்த உரிமைகள் பலவற்றை மறுத்ததுடன் சோல்பரி அரசமைப்பில் இருந்த 29 ஆவது ஷரத்தையும் நீக்கி, பௌத்த மதத்துக்கே முன்னுரிமை தந்திருந்தமையால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தேசிய நிர்ணய சபை அமர்வுகளில் இருந்து வெளிநடப்புச் செய்து புதிய அரசியல் அமைப்பையே நிராகரித்திருந்தார்கள்.

1972 புதிய குடியரசு யாப்பு தம்மைக் கட்டுப்படுத்தாது எனப் பிரகடனம் செய்திருந்த தமிழர் ஐக்கிய முன்னணி வட்டுக்கோட்டையில் கூடிய அதன் தேசிய மாநாட்டில் முன்னிருந்ததும் போர்த்துக்கேயரிடம் பின்னர் போரில் இழக்கப்பட்டதுமான தமிழ் ஈழ அரசை மீள்வித்துப் புதுப்பிக்கப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன், 1977 யூலையில் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் அதன் மீது வாக்காளர்களிடம் ஆணை கோரி கிழக்கிலும் வடக்கிலும் மொத்தமாக பதினெட்டு ஆசனங்களை வென்று கோரப்பட்ட ஆணையை அபரிமிதமாகப் பெற்றிருந்தது. சம்பந்தப்பட்ட தீர்மானம் காரணமாக தமிழர் ஐக்கிய முன்னணி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாறியதும் தெரிந்ததே! இருப்பினும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களோ முக்கூட்டு முன்னணியைத் தோற்கடிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்த வாக்குகளால் ஐந்தில் நான்கு பெரும்பான்மை பெற்று ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் பதவியில் அமர முடிந்தது.

1977 ஆகஸ்ட், பின் 1981, 1983 ஜூலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளை முன்னின்று நடப்பித்தது, ஐக்கிய தேசியக் கட்சி அரசே! மேற்படி படிப்பினைகள் கற்றுத் தந்த அனுபவ பாடங்களால் தமிழ் மக்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். சமீபத்திய கடந்த காலத் தேர்தல்களின் போது தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளை சர்வ தேசிய சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருப்பது போன்றே, ஷ்ரீலங்கா அரசத் தலைவர் தேர்தலிலும் தமிழ் மக்கள் தெளிவான தமது நிலைப்பாட்டை சுதந்திரமாக முடிவெடுத்து, சுதந்திரமாக வெளிப்படுத்துவார்கள் என்பது திண்ணம்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home