Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Yogaswamy - the Sage from Eelam > யாத்திரையும் யாத்திரிகனும் - பராசக்தி சுந்தரலிங்கம்

யாத்திரையும் யாத்திரிகனும்.
- பராசக்தி சுந்தரலிங்கம் - அவுஸ்திரேலியா

20 January 2008

"நாங்கள் எல்லோருமே வாழ்க்கையில் பயணம், யாத்திரை செய்தபடி இருக்கிறோம். நாங்கள் யாத்திரிகர்கள். இது புற உலக யாத்திரை. “புற உலகைப் போலவே அகஉலகம் ஒன்றும் உள்ளது. அங்கே உன் பார்வையைச் செலுத்து. அகமுகமாகுக” என்பது சுவாமியின் வேண்டுகோள். "


 

“தேடித் திரிந்து காசிக்கு வந்து
கண்டேன் - விஸ்வநாதனை
என்னுள் -
வாடித் திரிந்து வருந்த வேண்டாம்
தேடிய பூண்டு காலுக்குள்ளே
என்ற தெவிட்டா வாசகம்
ஒன்றுண்டு” –

இது, சிவயோக சுவாமிகள் காசியிலிருந்து எழுதிய ஒரு கடிதம். இதைப் பார்த்தபோது அப்பர் பெருமான் திரு அங்கமாலையிலே பாடிய பாடல் நினைவுக்கு வந்தது.

தேடிக் கண்டு கொண்டேன்
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை – என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்

தலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ, செவிகாள் கேண்மின்களோ என்று இறைவனை நினைத்து ஒவ்வொரு அங்கமாகப் பாடிய அப்பர்; ஈற்றிலே, இறைவனை நான் எனக்குள்ளேயே கண்டு கொண்டேன் என்று குதூகலிக்கிறார்.

“கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனை
வருத்தமுற்றேன் தேடுகின்றாய்”

என்று யோகர் சுவாமிகளும் கேட்கிறார். சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்களிலே அவர் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார்.

தன்னைத் தன்னால் அறிந்திட வேண்டுமே
தன்னை அறிக தானே ஆகுக

அண்ட சராசரம் எல்லாம் சிவசிவ
அகத்திலே கண்டு
தரிசித்துக் கொண்டேன்

அதுவே நீ என்றுரைத்தான் எங்கள் குருநாதன்.

பிறிவற நின்று பார்த்தால்
பிரமமே நீயும் நானும்

என்று சுவாமிகளின் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஞானிகள் எல்லோரும் அன்றும் இன்றும் இந்;தக் கருத்தையே கூறி வந்திருக்கிறார்கள்.
அவனை அறியில்
அவன் இவனாமே என்பது திருமூலர் வாசகம்.

உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான்

என்கிறார் ஒளவையார்.

சந்தமும் எனது செயல்
நினது செயல்
யானெனுந் தன்மை
நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்

என்று பாடுகிறார் தாயுமானவர்.

கருத்து நிலையில் உள்ள இந்தத் தத்துவமான “நீ தான் அது” என்பதை
Saint Yogarswamy And A Testament Of Truth  என்னும் நூலிலே திருமதி Ratna Chelliah Navaratnam  அவர்கள் நுட்பமாகவும், தெளிவாகவும் விளக்கியிருக்கிறார்.

அந்த நூலிலே சுவாமியின் படமும், ஒரு வாசகமும் பதியப்பட்டுள்ளன.

சிவயோக சுவாமிகள் வீதியிலே நடந்து போகிறார்.


 

யாழ்ப்பாண வீதிகளிலே அவர் நடந்து சென்று மக்களைச் சந்திப்பது ஒரு வழக்கமான செயல். அவர் நடந்து செல்லும் அந்தக் காட்சியைக் காட்டும் படத்தின் கீழே இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

Pilgrim pilgrimage and road
was but myself toward myself
and your arrival but
myself at my door


யாத்திரிகன், யாத்திரை, வீதி,
வீதிவழியே யாத்திரை செய்து
வீட்டுவாசலை அடைந்தேன்
வாசலிலே என்னில்
உன்னைக் கண்டுகொண்டேன்

இவை மேல் நாட்டு அறிஞர் ஒருவரின் பாடல் வரிகள்
(Mantiqu’t – Tair) (Tr: Fitzgerald).

இதைப் பார்த்தபோது சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஒரு மரத்திலே இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒன்று மரத்தின் உச்சிக் கொம்பரில் இருக்கிறது. மற்றையது மரத்தின் கீழ்க் கொப்பில் இருக்கிறது. கீழேயுள்ள பறவை பறந்து பறந்து அந்த மரத்தின் பழங்களைச் சுவைத்துக் கொண்டு தன் பொழுதைக் கழிக்கிறது.

ஆனால் மரத்தின் மேலே இருக்கும் பறவை அமைதியாக இருக்கிறது. மற்றைய பறவையோ இனிப்பான பழத்தைச் சுவைக்கும் பொழுது குதூகலமாகவும், கசப்பான பழத்தைச் சுவைக்கும் பொழுது சோர்ந்து போயும் காணப்பட்டது. மேலே உள்ள பறவையைப் போலத் தானும் அமைதியாக இருக்க விரும்பி, இது அதன் சமீபமாகப் பறந்து செல்கிறது. அந்தப் பறவையைப் பார்த்து அதிசயப்படுகிறது.

ஆனால் இதனால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. புலன்கள் அதைக் கீழே இழுக்கின்றன. மீண்டும் மீண்டும் இனிப்பையும் கசப்பையும் நுகர்கிறது.

இத்தனைக்கும் அது மேலேயுள்ள பறவையைப் போல இருக்கவே விரும்புகிறது. கடைசியாக இந்தப் பறவை பறந்து பறந்து மேலேயுள்ள பறவைக்கு மிகச் சமீபமாக வந்துவிடுகிறது. அப்பொழுது ஒரு பெரிய அதிசயம் நடக்கிறது. – அந்தப் பறவை ஒளிமயமாக இருப்பதைப் பார்க்கிறது.

அந்த ஒளி இதன் மேல் பட்டுப் பரவியபோது, இது அந்த ஒளியிலே கரைந்து விடுகிறது. இவ்வளவு காலமும் மேலேயிருந்த பறவை வேறு யாருமல்ல “தானே” என்பதை இது உணர்கிறது. இதையே – தத்வம் அஸி – “நீ தான் அது” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

உலகமாகிய மரத்திலே இனிப்பும் கசப்பும் இருக்கும் அதனை உணர்ந்து தளம்பாமல் இருப்பவனே மனிதன் என்பது சுவாமியின் கருத்து.

இதே கருத்தை சுவாமி விவேகானந்தரின் சீடரான சுவாமி ரங்கநாதானந்தா வேறொரு வகையில் தெளிவுபடுத்துகிறார்.

புற உலகிலே ஒருவர் ஒரு நட்சத்திரத்தைப் பற்றி ஆராயும்போது அந்த நட்சத்திரமாக அவர் மாறுவதில்லை. ஒரு மேசையைப்பற்றி ஆராய்ச்சியிலே ஈடுபடும்போது அவர் அந்த மேசையாக மாறுவதில்லை. ஆனால் ஒருவர் தன்னைப் பற்றிய சிந்தனையில் மூழ்கும்போது, “தன்னை” அறிகிறார். ஒரு சித்தார்த்தன் ‘புத்தர்’ ஆகிறார் - ஞானம், அறிவு பெறுகிறார். இதுவே தன்னை நோக்கிய யாத்திரை.

இந்த யாத்திரையையே சிவயோக சுவாமிகள் “அகமுகமாகுக” என்று சுருக்கமாகக் கூறிவிடுகிறார்.

நாங்கள் எல்லோருமே வாழ்க்கையில் பயணம், யாத்திரை செய்தபடி இருக்கிறோம். நாங்கள் யாத்திரிகர்கள். இது புற உலக யாத்திரை. “புற உலகைப் போலவே அகஉலகம் ஒன்றும் உள்ளது. அங்கே உன் பார்வையைச் செலுத்து. அகமுகமாகுக” என்பது சுவாமியின் வேண்டுகோள்.

“என்னை எனக்கு அறிவித்தன் எங்கள் குருநாதன்” என்று சுவாமி சொல்வது இதைத்தான்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home