From the Hindu - 6 March 2005:
"In the mid-1990s, K. Kalyanasundaram, who is a chemist engaged in
teaching and research at the Swiss Federal Institute of Technology at
Lausanne, Switzerland, got interested in Tamil computing. One of his
first efforts was to release a free Tamil font called Mylai. Soon he was
keying in the complete Thirukkural, which he released free on the Net.
Shortly, a group of similar-minded people came together and Project
Madurai (PM) was born with Kalyanasundaram as the project leader
in 1998. Today it has a core management team of more than a 100 people
distributed around the world and lots more volunteers, all working
through the Net. The project has managed to release more than 200
important Tamil texts so far without any funding from any agency,
government or private.
When they started out, says Kalyanasundaram, the project worked on
ancient Tamil texts and out of print books. But soon they expanded to
cover contemporary authors too when the Government of Tamil Nadu brought
the works of around 25 20th Century authors into the public domain
including Bharathiyar, Bharathidasan, Kalki, Pattukottai Kalyanasundaram
and others. And there were writers like Jeyakanthan and Vairamuthu who
voluntarily gave permission to the project to convert some of their
works into e-texts. Today, the project covers even the works of
expatriate Tamil authors from places like Malaysia, Singapore, Sri Lanka
and other countries. If you would like to contribute, either in terms of
locating rare texts or in any other capacity, you can join the project's
mailing list
here
(membership is subject to the approval of the project leader). "
|
தமிழுக்கு
மின்பதிப்பு
ஓம் சக்தி, மார்ச் 1998, ப 94-95
- P.N. Jayagopal in Om Sakthi Magazine, March 1998
தமிழர்கள் இந்தியாவிற்கு அப்பால் 44 நாடுகளில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.... என்ஜினியர்களாக, டாக்டர்களாக, சட்ட
நிபுணர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் கணிப்பொறி என்ற தகவல் தொடர்பு சாதனத்தில்
ஒரு தகவல் புரட்சியே வளர்ந்திருக்கிது. அதற்குக் காரணம்,
கணிப்பொறி சாதனம் மேலும் வளர்ச்சியடைந்து E-mail என்ற
மின்மடலையும் இண்டர்நெட் என்ற வளைத்தளத்தையும் �பேக்ஸ் போன்ற
சாதனங்களையும் உண்டாக்கியதுதான்.
இப்போது இந்தக் கணிப்பொறி விஞ்ஞானிகளாக - இனத்தால் தமிழர்கள்,
ஒரு மகத்தான சாதனையைச் செய்ய 44 நாடுகளில் வாழ்ந்து
கொண்டிருக்கிற தமிழ் நிபுணர்களை இண்டர்நெட் மூலம் தொடர்பு
கொண்டு ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அத்திட்டத்திற்கு "மதுரைத் திட்டம்" என்று பெயர்
சூட்டியிருக்கிறார்கள். இது ஒரு தன்னார்வ முயற்சிதான்.
கட்டாயமில்லை.
தமிழ்மொழியில் சங்ககாலத்து நூல்கள் பல இரண்டு கடல்கோள்களால்
அழிந்துவிட்டன. அது நாம் செய்த தவக்குறை. மூன்றாவது கடல்கோளால்
அழிந்தது போக, மிஞ்சியுள்ள நூல்கள் கடைச்சங்க நூல்கள். அவை,
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்
என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற தொகுப்பு நூல்கள்,
ஓரிரு பதிப்புகளுக்கு மேல் வரவில்லை. அதன்பின்னர், அந்நூல்களை
வாங்கி அனுபவிக்கும் தமழிப்புலமையுள்ளவர்கள் அருகிப்போனதால்,
அந்நூல்கள் மீண்டும் மீண்டும் அச்சாவதில்லை.
சாதாரண காகிதத் தாள்களில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அச்சான சில
நூல்கள், காலத்தின் பழமையால் மெல்ல மெல்ல செல்லரித்து
உதிர்ந்து போகும் அளவுக்கு பழைய நூல்களாகிவிட்டன. அவைகளை ஆவணக்
காப்பகங்களில் மிகவும் சிரமப்பட்டுத்தான் பாதுகாக்க
வேண்டியுள்ளன. இவைகளையெல்லாம் உணர்ந்த வௌ�நாட்டுத்
தன்னார்வமிக்கத் தமிழர்கள், இந்நூல்களை மின்பதிப்புகளாக
(Electronic Editions) வௌ�க் கொணரும் முயற்சியைத்
தொடங்கியிருக்கிறார்கள். கணிப்பொறிக்குள் இவைகளைப் பதிவு
செய்து விட்டால், அது நீண்ட நெடுங்காலத்துக்கு அழியாமல்
இருக்கும். அத்துடன் ஒரு சின்னஞ்சிறிய கணிப்பொறித்துகளுக்குள்
(chip) அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும் ஏற்றி வைத்துவிடலாம்.
இந்தக் காரியத்தை வௌ�நாடு வாழ் தமிழ் ஆர்வலர்கள்
தொடங்கியிருக்கிறார்கள்.
இதன்பொருட்டுத் தமிழ் நாட்டுக்கு அவர்கள் செய்திருக்கிற
வேண்டுகோள் இதுதான்- யாரிடம் பழைய நூல்கள் இருக்கின்றனவோ
அவர்கள் அந்த நூல்களையே அல்லது அந்த நூல்களின் போட்டோப்
பிரதிகளையோ இரண்டு மாத காலத்திற்கு இத்திட்டத்தில் இலவசமாகத்
தொண்டாற்ற முன்வந்துள்ள கணிப்பொறியாளர்களிடம் தந்து உதவினால்
அவர்கள் அதை கணிப்பொறி மூலமாக மின்வௌ�யீடு செய்ய வாய்ப்பு
ஏற்படும் என்கிறார்கள்.
இதன்மூலம் மீண்டும் அச்சாகாத பழந்தமிழ் நூல்கள்
பாதுகாக்கப்படுவதுடன் பரவவும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த வௌ�யீடுகளுக்கு "மதுரைத் திட்டம்" என்று பெயர்
வைத்ததற்குக் காரணம் உண்டு. சிவபெருமானின் தலை முடியிலிருந்து
அமிழ்தம் கொட்டியதாக ஒரு புராணக் கதை. அந்த அமிழ்தம் தான்
மதுரத் தமிழ். அதனால்தான் வௌ�நாடு வாழ் தமிழ் ஆர்வலர்கள்
இதற்கு "மதுரைத் திட்டம்" என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ்களே! உங்கள் பரண்களின் மீது எந்தப்
பனையோலைச் சுவடிகள் இருக்கின்றன என்று தேடிப்பாருங்கள்!
கரையானுக்கு அவைகளை இரையாக்கிவிடாமல் கம்ப்யூட்டருக்குள்
அவற்றை உறை போட்டு வையுங்கள்! இது நீங்கள் தமிழுக்கு செய்கிற
உங்களுடைய சேவை.
என்ன இருக்கிறது என்று நீங்கள் எழுத வேண்டிய முகவரி
பி. என். ஜெயகோபால்
156, லிங்கப்ப செட்டித் தெரு,
கோயமுத்தூர் - 641 001
தொலைபேசி (0422) - 472 394
|
சூழ்கலி
நீங்கத் தமிழ்மொழி ஓங்க!
(also
original in gif format )
Dr.N.Kannan, in Eelamurasu, Paris - 24 June 1998
உலகில் காலத்தை வென்று நிற்கும் சிற்சில மொழிகளில் தமிழும்
ஒன்றாக இருப்பது நமது பாக்கியம். தொன்று தொட்டு பேசப்பட்டு,
எழுதப் பட்டு புழக்கத்தில் இருக்கும் மொழி தமிழ் மொழி.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய திருக்குறள் இன்றும்
வாசிக்கக் கூடியதாக உள்ளது தமிழின் இளமைக்குச் சான்று.
இத்தமிழ் பண்பாட்டின் வளர்ச்சியில் பல்வேறு சமயத்தவரும்
பல்வேறு காலங்களில் பங்கேற்று இருப்பதற்கான சான்றுகள்
கிடைக்கின்றன.
தென் மதுரையில் முதல் சங்கத்தை தலைமை வகித்து நடத்திச் சென்றது
"திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்" என்று சரித்திர
காலத்துக்கு முன் வழங்கிய ஐதீகங்கள் கூறுகின்றன. இத் தென்
மதுரை இருந்த குமரிக் கண்டத்தை கோள் கொண்டெதென்று சொல்வர். இது
தமிழ் இலக்கியம் சந்தித்த முதல் பெரும் விபத்து. இதன் பின்
தலைநகரம் கபாடபுரம் என்ற நகருக்கு மாற்றப்பட்டது. இது குறித்த
குறிப்புகள் வால்மீகியின் இராமாயண காவியத்தில் உள்ளன.
கபாடபுரத்து இடைச் சங்கத்தை "குன்றம் எரிந்த குமரவேள்"
நடாத்திச் சென்றதாக தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. இந்த
இரண்டாவது சங்கத்தை "துவாரகைக் கோமான்" என்னும் கண்ணன்
நடத்தியதாகவும் செய்திகள் கிடைக்கின்றன. தொல்காப்ப்�யம்
தோன்றியது இக்காலக் கட்டத்தில்தான்.
மீண்டும் ஒரு இயற்கையின் சீற்றத்தின் பின் தமிழ் இலக்கியங்கள்
தப்பிப் பிழைத்து கடைச் சங்க காலத்திற்கு வருகின்றன. இச்சங்கம்
அமைந்தது நான்மாட கூடல் என்னும் பெயர் பெற்ற மதுரையில்.
இக்கடைச் சங்ககாலத்தில்தான் நக்கீரருக்கும், இறையனாருக்கும்
இலக்கிய விவாதம் நடந்தது. எட்டுத் தொகை, பத்துப் பாட்டு
இக்காலத்திற்கு உரியது. இச்சங்கமும் தொடர்ச்சி அற்று ஒரு
நிலையில் விட்டுப் போனது.
அடுத்த சங்கத்தை நிறுவி ஐம்பெரும், ஐங்குறுங் காப்பியங்களை
பதிப்பித்த பெருமை சமண சமயத்தைச் சேர்ந்த வஜ்ர நந்திக்கு
சேரும். இதை நான்காம் சங்கம் என்று சொல்லாமல், வஜ்ர நந்தி
தமிழ்ச் சங்கம் என்று அழைக்கிறார்கள். துருக்கிய, தெலுங்கு
நாயக்க மன்னர்கள் காலத்திலும் தமிழ் இலக்கிய ஆய்வுகளும்,
உரைகளும் மதுரையில் நடந்து வந்திருக்கின்றன.
நச்சினார்கினியாரின் தொல்காப்பிய பேருரையும், சங்கப்
பாடல்களும் தொகுக்கப் பட்டது இக்காலத்தில்தான். இப்படியானதொரு
பதிப்பித்தல் அக்காலக்கட்டதில் நடைபெறவில்லை எனில் தமிழின்
பெருமைகள் எல்லாம் அழிந்து சிறுமைப் பட்டு போயிருப்போம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் ஒரு தமிழ் மலர்ச்சி
வருகின்றது. கிராமம், கிராமமாகப் போய் பண்டை நூல்களை
சேகரித்து, பதிப்பித்த பெருமை தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்,
தாமோதரம் பிள்ளை போன்ற பெரியோர்களைச் சாரும். அவர்கள் தொடங்கிய
பணி முற்றும் முடிந்து விட்டதாகச் சொல்ல முடியாது. நாலாயிர
திவ்யப் பிரபங்தங்களும் தொகைப் படுத்த பட்ட பின்னரும்,
ஆழ்வார்திருநகரியில் கண்ட ஓலைச் சுவடி ஒன்றில், "அண்டகோளத்
தாரணுவாகி" என்ற நம்மாழ்வாரின் பதிப்பிக்கப் படாத பாடலொன்று
கிடைக்கப் பெற்றுள்ளது. இன்னும் ஆராயப் படாத ஓலைச் சுவடிக்
கட்டுகள் மூட்டை, மூட்டையாய் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில்
உள்ளன. இவைகள் ஆராயப் பட்டு, பதிப்பிக்கப் படும் போது தமிழின்
தொன்மையும், சீறும் இன்னும் நன்கு விளங்கும்.
இப்படி காலம், காலமாக சிலரின் தன்னார்வத்தாலும், தமிழ்
பற்றாலும் தமிழின் இன்றைய பெருமை கட்டிக் காக்கப் பட்டுள்ளது.
பெரும் எதிர் நீச்சலின் ஊடாகத்தான் இத்தகைய முயற்சிகள்
நடைபெற்றுள்ளன. இயற்கையின் சீற்றத்தால் அழிந்தன முது தொன்மை
இலக்கியங்கள், கரையானின் பேய் பசிக்கு இலக்காயின ஓலைச் சுவடி
பதிப்புகள், சமய பேதங்கள் தலை தூக்கிய காலங்களில் பக்தி
இலக்கியங்கள் மடங்களுடன் வைத்து கொளுத்தப் பட்டன, மிக
சமீபத்தில் இன துவேசத்தின் காரணமாக யாழ் நூல் நிலையம்
தீக்கிரையாகியது. இத்தகைய விபத்துக்களில் பல்லாண்டுகள் போற்றி
வளர்த்த சிந்தனைகள் அழிந்து போகின்றன.பண்பாட்டின் முக்கிய
கூறுகள் அழிக்கப் படுகின்றன.
இவை மீண்டும் தமிழுக்கு நேராமல் தவிர்க்க, புதிய தொழில்
நுட்பம் கை கொடுக்க முன் வந்துள்ளது. நம் பண்பாட்டை காட்டும்
ஏடுகளை மின் பதிப்புகளாக பல்வேறு உலக வலையகங்களில் சேமிப்பதே
அது. இதை மின் பதிப்பு அல்லது இலத்திரன் பதிப்பு என்று
சொல்லலாம்.
இத்தகைய புதிய மின் (இலத்திரன்) பதிப்புகள் பெரும் அளவில் சில
மேலைப் பல்கலைக் கழகங்களில் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக,
ஜெர்மனியின் கோல்ன் பல்கலைக்கழகம், அமெரிக்க பெர்க்லி தமிழ்
பீடம். இது போன்ற முயற்சிகள் சென்னை ஆசிய ஆய்வு
நிறுவனத்திலும், சிங்கப்பூர் சர்வ தேச தமிழ் ஆராய்ச்சி
நிறுவனத்திலும் நடைபெற்று வருகின்றன. இத்தொகுப்புகள்
பெரும்பாலும் ரோம வரிவடிவங்களில் தொகுக்கப் பட்டுள்ளன. மேலும்,
மேலைத் தேசங்களில் வாழும் தமிழர் சிலர் தன் முயற்சியால்
பல்வேறு தமிழ் இலக்கியங்களை இலத்திரன் பதிப்பாக வௌ�க் கொண்டு
வருகின்றனர்.
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வண்ணமும், தமிழை தமிழாக
பார்த்து, வாசித்து மகிழவும் "மதுரை தமிழ் இலக்கிய மின்
தொகுப்புத் திட்டமொன்று" சமீபத்தில் வைய விரிவு வலையில் (World
Wide Web) தொடங்கப் பட்டுள்ளது. எந்த வித வியாபார, சுய நல,
குழு நோக்கும் இல்லாமல் தமிழின் வளர்ச்சி ஒன்றை முன் வைத்து
இந்த பதிப்பகம் செயல் படத் துவங்கியுள்ளது. இப் பதிப்பகத்தின்
நிர்வாகத்தை சர்வ தேசதமிழ் குழு ஒன்று கவனித்து வருகிறது.
இப்பதிப்பகம் சூக்கும வௌ�யில் இயங்கும் முதல் சங்கமும்,
சரித்திர கணக்குப் படி ஆறாவது சங்கமும் ஆகும். அதனால்தான்
இதற்கு மதுரைத் திட்டம் என்று பெயர் வந்தது.
இலத்திரன் பதிப்பு என்றால் என்ன?
கணனி கொண்டு தமிழில் பதிப்பிக்கப்படும் முறைக்கு இலத்திரன்
பதிப்பு என்று பெயர்.
இதன் பலன்கள் யாவை?
வைய விரிவு வலையில் மின் பதிப்பாக பாதுகாக்கப்படும் போது
காலத்தின் அழிவை முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழ் எதிர்
கொள்ளும். வளரும் தொழில் திறனை முழுமையாய் பயன் படுத்திக்
கொள்ளும் இத்திட்டம் பண்டைய இலக்கியங்களை
ஒவ்வொன்றாய் வௌ�யிட உள்ளது. வலையகத்துக்குச் சென்று
இவ்விலக்கியங்களை வாசிப்பதுடன் அவைகளை தனி மனித சுவைத்தலுக்கு,
ஆய்வுக்கு என எளிதாக நகல் எடுத்துக் கொள்ளவும் முடியும்.
இப்படி நம் பண்டைய இலக்கியங்கள் பல்லாயிரக் கணக்காண
தமிழர்களிடம் பிரதிகளாக காலத்தை வென்று காக்கப்படும். மின்
பதிப்பிற்கும், புத்தக பதிப்பிற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.
உதாரணமாக, புத்தகங்களில் ஒரு பொருளைத் தேடி கண்டு பிடிக்க அதிக
காலமாகும். பெரும் பாலான பதிப்புகளில், ஆங்கில புத்தகங்களில்
உள்ளது போன்ற எளிய பதம் பிரித்த அட்டவணைகள் காணக்
கிடைப்பதில்லை. ஆனால் இலத்திரன் பதிப்பில் பொருள் தேடுதல்
என்பது மிகவும் எளிதான காரியமாகும். இதற்கான பிரத்தியேக தேடு
இயந்திரங்கள் (search engine), அல்லது செயலிகள் (software)
தற்போது கைவசம் உள்ளதுடன், தேவைக் கேற்றவாறு உருவாக்கிக்
கொள்ளவும் முடியும். இதனால் முன் எப்போதும் இல்லாத அளவு
இலக்கிய சுவைத்தல் தனி மனித அளவில் நடைபெற வாய்ப்புள்ளது.
பல்வேறு அகரமுதலிகள் (Tamil-English; Tamil-German;
Tamil-Danish, Tamil-Swedish, Tamil-Norwegian dictionaries)
இத்திட்டத்தில் சேர்க்கப் படும் போது இலக்கிய துய்தலும், தமிழ்
இலக்கிய பரிச்சியமும், தமிழ் மொழியின் வாழ்வும் அடுத்த, அடுத்த
தலைமுறைகளுக்கு, வளமாக கொண்டு செல்லப் படுகிறது.
இத்திட்டத்தின் செலவுகள் யாவை?
இத்திட்டம் தற்போது பல்வேறு அறிஞர்களின் தனி மனித முயற்சியால்
ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இச் சங்கம் தாங்கும் பலகையாக
சிட்னியிலுள்ள ஆசிய பசிபிக் நிறுவனம் செயல்படுகிறது.
இப்பதிப்பகம் உண்மையில் ஒரு நூலகம் என்பதால் நிரம்பத்
தமிழர்கள் அவரவர் வ"ட்டில் இருந்த வண்ணமே வந்து போக வசதி
செய்யப் பட்டுள்ளது. இந்நூலகத்திற்கு வருகை தருவோரின் நுகர்வை
பயன் படுத்திக் கொள்ள தனிப்பட்ட வியாபார நிறுவனங்கள் முன்வரும்
போது நிதி நிலமை செம்மைப்பட வாய்ப்புள்ளது.
வெளிவந்த நூல்கள்?
திருக்குறள், ஔவை பாடல்கள், திருவாசகம், திருமந்திரம் (முதல்
பாகம்), நாலாயிர திவ்யப் பிரபந்தம்.
வெளிவர உள்ள பதிப்புகள்?
உமறுப் புலவரின் சீறாப்புராணம், கண்ணதாசனின் ஏசு காவியம்,
சுப்பிரமணிய பாரதியின் முழுத் தொகுப்பு, பாரதிதாசனின் முழுத்
தொகுப்பு, சைவத் திருமறைகள், சித்தர் பாடல்கள், வள்ளலார்
பாடல்கள், கம்ப இராமாயணம் போன்றவை.
சமகால இலக்கியத்திற்கு இத்திட்டத்தில் இடமில்லையா?
சம கால இலக்கியத்திற்கும் இடமுண்டு. ஆனால் பதிப்புரிமையை
ஆசிரியர்கள் இத்திட்டத்திற்கு மனம் உவந்து வழங்கி பலரும் பயன்
படுத்திக் கொள்ளத் தர வேண்டும். உதாரணமாக கண்ணதாசனின்
படைப்புகள் அனைத்தும் கொண்டுவரும் முயற்சியில் அவரின் புதல்வர்
காந்தி கண்ணதாசன் அவர்கள் ஒத்துழைக்கிறார். இப்படிப் பட்ட
முன்னோடிகள் வரும் போது அனைத்து சம காலப் படைப்புகளும்
வலையகத்தில் வந்துவிடும்.
இலத்திரன் பதிப்பால் புத்தக விற்பனை பாதிக்கப் படுமா?
இதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. ஏனெனில், கணனித் தொடர்பு
என்பது அவரவர் தொலைபேசி கணக்கில் சேர்க்கப் படுவதால் ஒரு நூலை
பல மணி நேரங்கள் யாரும்கணனி முன் உட்கார்ந்து வாசிக்கப்
போவதில்லை. மேலும், அச்சுப் பதிவு என்பது அவரவர் செலவு
என்பதாலும், யாரும் ஒரு முழுப் புத்தகத்தை தன் செலவில்
வீட்டில் அச்சடிக்கப் போவதில்லை.
இலத்திரன் பதிப்பு, இலக்கிய பாதுகாப்பு மற்றும்
ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற ஊடகமாகும். மேலும், சாதாரண புத்தக
வாசகனை விட பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் வலையகத்தில்
சஞ்சாரிப்பதால் நூல் அறிமுகம் என்பது முன் எப்போதுமில்லாத அளவு
ஆயிரக் கணக்கான வாசகர்களை உடனே சென்றடைய வாய்ப்புண்டு. இதனால்
படைப்பாளிக்கும், வாசகனுக்குமுள்ள உறவு மிக விரைவில்
பலப்படுத்தப் படுகிறது.
வலையக முகவரி என்ன?
நூல்களை தற்போது கீழ்கண்ட முகவரியில் வையவிரிவு வலையில்
காணலாம்:
http://www.tamil.net/projectmadurai/
தமிழர்கள் பங்களிப்பதற்கான வாய்ப்புகள் யாவை?
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று எண்ணும்
ஒவ்வொருவரும் தங்கள் ஓய்வு நேரங்களை தமிழ் பயன்பெறும் வகையில்
பயன்படுத்தலாம். உலகின் ஐந்து கண்டங்களிலும், இத்திட்டத்தின்
வழிகாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களிடம், உங்களது ஆர்வத்தை
எடுத்துச் சொல்லி பங்குபெறலாம். இந்நூலகத்தின் அமைவும்,
விரிவும் தமிழ் கூறும் நல்லுலகின் ஆர்வத்தையும் பங்களிப்பையும்
பொறுத்த விஷயம். ஆயிரம் கைகள் சேரும் போதுதான் தேர் நிலையை
அடைகிறது. அது போல் மிகப் பிரம்மாண்டமான இந்நூலகத்தை அமைத்து,
கட்டிக் காக்க ஒவ்வொரு தமிழனின் உதவிக் கரமும் தேவைப்
படுகிறது.
மேல் விவரங்கள் அறிய...<
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் நாடுகளுக்கும் பிரதிநிதிகள்
இருக்கிறார்கள். உங்களுடைய பிரதேசத்தின் பிரதிநிதி யார் என
அறிய கீழ்க்கண்ட முகவரிக்கு சென்று பார்க்கவும்.
http://www.tamil.net/projectmadurai/pmcoord.html
இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் மதுரை செயல்
திட்டத்தின் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரத்தினையோ
(சுவிட்சர்லாந்து, [email protected]) அல்லது துணைத்தலைவர்
முனைவர் குமார் மல்லிகார்ஜுனனையோ (ஜோர்ஜியா, அமெரிக்கா,
[email protected]) மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே!
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே!
என்னும்
மகாகவி பாரதியின்
கனவு நினைவாகும் காலம் வந்து விட்டதென்றே தோன்றுகிறது.
|
தமிழ்
இலக்கியங்களுக்கு ஒரு மின் தொகுப்புத் திட்டம்
ஆர். சிவலிங்கம் (உதயணன்), நம்நாடு, ஜுலை 16, 1998
[also
original in gif format ]
உலகம் போகிற போக்கைப் பார்த்தால், பழைய தமிழ் இலக்கியப்
பொக்கிஷங்கள் ஒரு காலத்தில் மக்களால் அறியப்படாமல் போய்விடுமோ,
அழிந்துபோய் விடுமோ, அப்படியொன்று இருந்ததா? என்று வியந்து
கேட்குமளவுக்கு வரலாறாகிவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.
ஒரு புத்தகக்கடைக்கு ஒருவர் போய் "பத்துப் பாட்டு இருக்கிறதா?"
என்று கேட்கிறார். "பத்துப் பாட்டு பதினைந்து பாட்டு என்றால்
எப்படி ஸார்?" என்ற கடைக்காரர்இப்படித் தொடர்கிறார். "எந்தப்
படத்தில் என்று சொல்லுங்களேன்."
ஒரு புத்தகக் கடைக்கு வந்த ஒரு தமிழாசிரியர் ஒருவர் "சங்க
காலத்து நூல்கள் இருக்கின்றனவா?" என்று தங்கத் தமிழில்
தயங்காமல் கேட்கிறார். கடைக்காரர் பச்சைக் கசப்பான பேதி
மருந்தைக் குடித்தவர்போல வாயை வைத்துக்கொண்டு வந்தவர் ஏதோ
அபின் கஞ்சா கேட்டுவிட்ட தோரணையில் "அதெல்லாம் நாங்க
விக்கிறதில்லை. அதோ அந்தச் சின்னக் கடையில் ஒரு பெரியவர்
அதெல்லாம் விற்றுக்கொண்டிருந்தார். அங்கே போய்ப் பாருங்கள்"
என்றவர், மறு பக்கம் போய் திரும்பி ஒரு நமட்டுச் சிரிப்புடன்
"அந்தப் பெரியவரே இப்போ இருக்கிறாரோ என்னவோ" என்று
முணுமுணுக்கிறார்.
மேற்படி உரையாடல் ஒரு கற்பனை தான். ஆனால் காலம் போகிற
போக்கில், நடக்க முடியாத கற்பலையல்ல. கல்வியோடு இலக்கிய
ரசனை�யும் சேர்ந்து ஊட்டிய காலம் மலையேறி விட்டது. அதனால்
மக்களிடையே இலக்கியம் பற்றிய அறிவு அருகிவட்டது. அதனால் நமது
முன்னோரின் அறிவுக் களஞ்சியங்களைத் தேடித்தேடிப் படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் அற்று வருகின்றது. அதனால் கடைகளுக்குப்
போய்இந்த நூல்களை விரும்பி வாங்குவோர் காலப் போக்கில்
குறைந்துகொண்டே வருகிறார்கள். ஆகையால், இத்தகைய நூல்களின்
புதிய பதிப்புக்களை வௌ�க்கொணரப் பதிப்பாளர்கள்
பயப்படுகிறார்கள். இப்படியே போனால் எங்கே போய் நிற்கும்?
ஆமாம், என்ன சொன்னீர்கள்? கலிங்கத்துப்பரணியா? அப்படி ஒரு
வில்லங்கமான பெயரைத் தாத்தா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
அவருக்கு வயசானதாலே, அதையெல்லாம் நாங்க கணக்கெடுக்கிற தில்லை
என்று பிள்ளைகள் பேசும் ஒரு காலம் வந்திருக்கும்.
ஆனால் வரவில்லை. அதை முந்திக்கொண்டு இணைவலை (Internet) வந்து
விட்டது. உலகெல்லாம் வாழும் மக்கள் தங்கள் மொழிகளின்
படைப்புகள் அனைத்தையும் மின்னெழுத்துக்களில் பதிந்து மின்
தொகுதிகளாகப் பாதுகாக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. இன்றே
தொடங்கி இன்றே செய்து முடிக்கவேண்டும் என்ற வேகமும் வந்து
விட்டது.
அவுஸ்திரேலியாவில் பாலாபிள்ளை என்றொரு நல்ல மனிதர்
இருக்கிறார். இது கதையல்ல. உண்மை அவருக்கு நெடுமாறன் என்றொரு
நல்ல நண்பரும் இருக்கிறார். இதுவும் கதையல்ல. அவர்கள் இரண்டு
வருடங்களுக்கு முன்னர் தமிழ் இணையம் என்ற ஓர் அமைப்பைத்
தொடங்கினார்கள். உலகின் பல நாடுகளில் வாழும் பல நாடுகளையும்
சேர்ந்த தமிழ் மக்கள் பலர் இந்தத் தமிழ் இணையத்தில் இணைந்து
மின்னஞ்சல்கள் வாயிலாகப் பல சுவையான பயனுள்ள கருத்துப்
பரிமாறல்களைச் செய்து வந்தார்கள். தமிழிலேயே மின்னஞ்சல்களை
அனுப்பவும் படிக்கவும் தேவையான தமிழ் எழுத்துக்களையும்
அமைப்பாளர்கள் தயாரித்து உறுப்பினருக்கு இலவசமாகவே
வழங்கினார்கள்.
இந்தத் தமிழ் இணையத்தின் மிகப் பெரிய அறுவடை கடந்த பொங்கல்
நாளன்று ஆரம்பமானது. அன்று "PROJECT MADURAI" என்ற ஒரு செயல்
திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு மதுரைத் தமிழ் இலக்கிய
மின்தொகுப்புத் திட்டம் என்ற அழகான தமிழ்ப் பெயரும் சூட்டப்
பட்டது. இந்த அமைப்பில் தமிழில் படைக்கப்பட்ட எல்லாப் பண்டைய
இலக்கியங் களும் தற்காலத் தமிழ்ப் படைப்புகளும்
மின்னெழுத்துக்களில் பதிந்து பாதுகாக்கத் தீர்மானிக்கப்
பட்டது. அதன்படி பதிவு வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு
வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் செயல் திட்டத்தின் பெயர் மதுரைத் தமிழ் இலக்கிய...
என்று ஆரம்பிப்பதால் மதுரையில் வாழ்ந்த, வாழ்கின்ற
படைப்பாளிகளின் படைப்புகள்தாம் இதில் இடம்பெறும் என்று
அர்த்தமல்ல. நாலு மதுரைக்காரர்கள் வௌ�நாட்டில் தொடங்கிய
கிழக்கிந்தியக் கம்பனி போன்ற வர்த்தக நிறுவனமுமல்ல.
சிங்கப்பூரில் இன்னும் இந்த உலகில் எங்கெங்கு தமிழ்
பேசப்படுகிறதோ எழுதப்படுகிறதோ அங்கெல்லாம் தோன்றும் தமிழ்
இலக்கியப் படைப்புகள் அனைத்தும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும்.
புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இதில் இடம்பெறும்.
அதில்லை, இந்த மதுரைத் தமிழ் இலக்கிய.... என்று தொடங்கும்
பெயர் ஏன்? என்று மீண்டும் கேட்கிறீர்களா? சங்கம் வைத்துத்
தமிழ் வளர்த்த மதுரைக்குத் தரும் மதிப்பு அது. தடாதகைப்
பிராட்டியாரும் சோமசுந்தர மூர்த்தியும் உக்கிரப்
பெருவழுதியாகிய குமரக் கடவுளும் திருமுடி சூடி அரசாண்ட
மதுரைக்குத்தரும் மாண்பு அது. ஆயிரக் கணக்கான வருடங்களாக
ஆயிரக் கணக்கான அறிஞர்கள் கூடிக்கூடி ஆயிரக்கணக்கான நூல்களை
இயற்றி ஆராய்ந்து தமிழ் வளர்த்த கூடல் நகருக்குக் கொடுக்கும்
கௌரவம் அது!
இந்த மின்தொகுப்புத் திட்டத்துக்கு சுவிற்சலாந்தில் வாழும்
முனைவர் கல்யாணசுந்தரம் தலைமைப் பொறுப்பை ஏற்றுச்
சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் வாழும்
முலைவர் குமார் மல்லிகார்ஜுனன் இணைத் தலைவராக இருந்து அரிய
சேவை புரிந்து வருகின்றார். உலகெல்லாம் பரந்து வாழும் ஏனைய
இணைப்பாளர்களின் விபரங்களை இக்கட்டுரையின் கடைசியில் காண்க.
இது முற்றிலும் ஒரு பொதுப்பணி. பல நாடுகளில் வாழ்கின்ற தமிழ்
ஆர்வலர்கள் ஊதியம் கருதாது உழைத்துத் தமிழ் நூல்களை மின்
னெழுத்துக்களாக்கிப் பாதுகாக்கும் அரிய பணி. இது உங்களுக்காகத்
தொடங்கிய பெரிய பணி. இது உங்கள் உழைப்பையும் எதிர்பார்த்து
நிற்கின்ற ஒரு நல்ல பணி. அடுத்த தலைமுறையினரும் இந்தத்
திட்டத்தில் உங்களைப் பாராட்டி உங்களுக்கு நன்றி கூறப்போகிற
பாரிய பணி.
நிழல்வௌ�யில் (cyber space) கம்பீரமாக எழுகின்ற இந்தப்
பிரமாண்டமான தமிழ் இலக்கிய மாளிகைக்கு நீங்களும் ஒரு தூணை
நிறுத்திப் பெருமைப்படுங்கள். அந்தத் தூணில் உங்கள்
கைவண்ணத்தைப் பொறித்து நிறைவு பெருங்கள்.
நீங்கள் ஓர் இலக்கிய நூலை மின்னெழுத்துக்களில் பதிந்து
கொடுக்கலாம். இன்னொருவர் மின்னெழுத்துக்களில் பதிந்த நூலைச்
சரிபிழை பார்த்துக் கொடுக்கலாம். உங்களிடம் ஏதாவது அரிய நூல்
இருந்தால், அந்த நூலையோ அதன் புகைப்படப் பிரதிகளையோ தந்து
உதவலாம். எதுவுமே சாத்தமில்லை என்றால் இப்பணியில் ஈடுபட்டோரைப்
பாராட்டி அவரகள் முதுகில் தட்டிக் கொடுக்கலாம். வேறென்ன
செய்யலாம்? என்று உங்கள் நெஞ்சை நீங்களே தொட்டுக் கேட்கலாம்.
பொங்கலென்று தொடங்கிய இந்தப் பணியின் இன்றைய நிலை என்னவென்று
கேட்பீர்கள். அமெரிக்காவில் முன்னிரவில் ஒருவர் வேலையை
நிறுத்திவிட்டு நித்திரைக்குப் போகும் அந்த நேரம்
சிங்கப்பூரில் அதிகாலையாக இருக்கலாம். அங்கே ஒருவர்
நித்திரைவிட்டு எழுந்து இப்பணியைத் தொடங்கியிருப்பார். எனவே
ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது ஓரிடத்தில் இப்பணி
நடந்துகொண்டே இருக்கும். ஆதலால் இன்றைய நிலை இதுதான் என்று
சொல்வதற்கில்லை. இக்கட்டுரையை எழுதும் நேரத்தில் நிலைமை
வருமாறு
பின்வரும் நூல்கள் முற்றுப்பெற்றுவிட்டன
திருக்குறள் -
திருவள்ளுவர்
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை - அவ்வையார்
திருவாசகம் (8ம் திருமுறை) -மாணிக்க வாசகர்
திருமந்திரம் பாகம் 1 (10ம் திருமுறை) - திருமூலர்
திவ்யப் பிரபந்தம் பாகம் 1 - பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர்
இவற்றை இப்பொழுது இணைவலையில் இணைமதி, மயிலை தமிழ்
எழுத்துக்களில் படிக்கலாம். இந்தத் தமிழ் எழுத்துக்களை
இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வலைப்புல முகவரி
வருமாறு:
http://www.tamil.net/projectmadurai/
மின்னெழுத்துக்களில் விரைவில் வௌ�வர இருப்பன:
திவ்யப் பிரபந்தம் பாகம் -2 திருமங்கையாழ்வார்
திவ்யப் பிரபந்தம் பாகம் 3- நம்மாழ்வார் ஆகியோர்
திருமூலம் பாகம் 2 - திருமூலர்
திருமூலம் பாகம் 3 - திருமூலர்
பாரதியார் படைப்புகள் -சி. சுப்ரமணிய பாரதியார்
பாரதிதாடன் படைப்புகள் -பாரதிதாசன்
எழுத்து வேலை முடிவுற்றுச் சரிபிழை பார்க்க இருப்பன:
திருவிசைப்பா (9ம் திருமுறை) - திருமாளிகைத் தேவர் ஆகியோர்
பட்டினத்தார் பாடல்கள் முழுவதும் -பட்டினத்தார் நளவெண்பா
-புகழேந்திப் புலவர் 11ம் திருமுறை பாடல்கள் 1400 - காரைக்கால்
அம்மையார் ஆகியோர் பின்வரும் நூல்களின் எழுத்து வேலை
நடைபெறுகின்றது
திருப்புகழ் - அருணகிரிநாதர்
திருவருட்பா - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)
சீறாப் புராணம் - உமறுப் புலவர்
கம்ப ராமாயணம் - கம்பர்
நன்னூல் - பவந்தி முனிவர்
திருவாசகம், ஆங்கில மொழியாக்கம் - போப்
திருக்குறள் உரை - பரிமேலழகர்
அஷ்டப் பிரபந்தம் - பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
பதிற்றுப் பத்து - குமட்டுர்க் கண்ணனார் ஆகியோர்
எழுத்துவேலை விரைவில் தொடங்கவிருப்பன
திருக்குறள், ஆங்கில மொழியாக்கம் - யோகி சுத்தானந்தர்
பாரத சக்தி மகா காவியம் - முருகன் அல்லது அழகு - திரு
வி.க
தற்கால இலங்கைத் தமிழ் இலக்கியம் -பல நூலாசிரியர்கள்
பண்டைய இலங்கைத் தமிழ் இலக்கியம் - பல நூலாசிரியர்கள்
பாரின் பல பாகங்களிலிருந்தும் இப்பாரிய பணியில் பங்கு கொள்வோர்
பற்றிய விபரம் கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் பார்க்கலாம்:
http://www.tamil.net/projectmadurai/pmcoord.html
|
ஓலைச்
சுவடியிலிருந்து இன்டெர்நெட்டுக்கு
பார்கவி, தினகுரல், ஆகஸ்டு 2, 1998 [also
original in jpg format ]
தமிழ் மொழியின் பொக்கிஷங்களாகவுள்ள ஐந்து பழம்பெரும் தமிழ்
நூல்கள் 'இன்டெர்நெட்' பதிப்பாக வெளிவந்துள்ளன. உலகின்
எந்தப்பகுதியிலுள்ளவர்களும் நமக்கு விரும்பிய நேரத்தில் இந்த
நூல்களைத் தமது கணனித் திரையில் பெற்றுப்படிக்கும் வாய்ப்பை
இப்போது பெற்றுள்ளார்கள். மதுரை மின்பதிப்பகத் திட்டத்தின்
மூலமாகவே இந்த வாய்ப்பு உலகத் தமிழர்களுக்கு கிடைத்துள்ளது.
"திருக்குறள், ஔவையார் பாடல்கள், திருவாசகம், திருமந்திரம்,
திவ்வியப் பிரபந்தங்கள் ஆகியனவே இன்டெர் நெட் பதிப்பாக இப்போது
வெளிவந்துள்ளன" எனத் தெரிவித்த இத்திட்டத்தின் இலங்கைக்கான
இணைப்பாளாரான எச். எச். விக்கிரமசிங்க வெகு விரைவில் மேலும் பல
தமிழ் இலக்கிய நூல்கள் இதில் வெளிவரவிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.
உமறுப்புலவரின் சீறாப்புராணம், கண்ணதாசனின் யேசுகாவியம்,
பாரதியாரின் முழுத்தொகுப்பு, சைவத்திருமறைகள், சித்தர்
பாடல்கள், கம்ப ராமாயணம் உட்பட பல தமிழ் இலக்கிய நூல்கள்
விரைவில் மதுரை மின் பதிப்பகத் திட்டத்தின் கீழ்
இன்டர்நெட்டில் வெளிவரவுள்ளன.
"இயற்கையின் சீற்றத்தாலும், செயற்கையான காரணங்களாலும் பல தமிழ்
இலக்கியங்கள் அழிந்திருக்கின்றன. பல்லாண்டுகள் போற்றி வளர்த்த
சிந்தனைகள் இவ்விதம் அழிந்து போவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே
மதுரை செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழரின் முக்கிய
கருவூலங்களைப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுதிச் சேமித்து
வைப்பதுதான் இத்திட்டத்தின் நோகம்" எனக் குறிப்பிட்டார்
விக்கிரமசிங்க!
இத்திட்டம் உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் அறிஞர்கள்
முயற்சியில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. இதன் மையமாக
சிட்டினியிலுள்ள ஆசிய பசிபிக் நிருவன் செயல்படுகின்றது.
இத்திட்டத்திற்கான 'இன்டெர்நெட்' இங்கிருந்துதான்
செய்ற்படுகின்றது.
இதன் தலைவராக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கலாநிதி கே.
கல்யாணசுந்தரம் செயற்படுகின்றார். பிரதித் தலைவராக
அமெரிக்காவில் வசிக்கும் கலாநிதி குமார் மல்லிகார்ஜுனனும்
தமிழ் இணைய கணனிப் பொறுப்பாளராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும்
பாலாப் பிள்ளையும் செயற்படுகின்றார்கள். பிரதிப்
பொறுப்பாளர்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த முத்து நெடுமாறன்,
கனடாவிலுள்ள டாக்டர் கே. சீனிவாசன், அமெரிக்காவிலுள்ள
சண்முகவேல் பொன்னையா, சென்னையிலுள்ள டி, நாராயணன் ஆகியோர்
உள்ளனர். காந்தி கண்ணதாசன் (கவியரசு கண்ணதாசனின் மகன்) சட்ட
ஆலோசகராக பணியாற்றுகிறார்.
வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்'
இவர்களது பெருமுயற்சியால் மேலும் பல தமிழ் இலக்கியங்கள்
இன்டெர்நெட்டில் வரவுள்ளன. காந்தி கண்ணதாசன் மேற்கொண்ட
முயற்சிகளைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவின் மகனான மதன்
வைரமுத்துவும் இந்த திட்டத்தில் ஒரு தொண்டராக இணைந்து
கொண்டிருக்கிறார். மதன் ஒரு சிறந்த கணனிப் பொறியியலாளர். இந்த
தொழிநுட்ப அறிவையும் பயன்படுத்தி மதுரைத் திட்டத்திற்கு
பல்வேறு விதமான பங்களிப்புகளை மதன் வழங்கை வருகின்றார்.
ஆனந்தவிகடனில் அண்மையில் வெளிவந்த வைரமுத்துவின் 'தண்ணீர்
தேசங்கள்' என்ற கவிதை மிகவும் பிரபலமானது. இது தொடராக
வெளிவந்தது. 20 நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் இது
முக்கியமான தொன்றாகக் கருதப்படுகின்றது. மதனின் முயற்சிகளால்
இந்தக் கவிதையை இண்டெர்நெட்டில் வெளியிடுவதற்கு வைரமுத்து
குடும்பம் இணங்கியுள்ளது. மதுரைத் திட்டத்தில் வெகுவிரைவில்
இந்தக் கவிதையும் இடம்பெறும்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிடையே இந்த திட்டத்துக்கு எப்படி
வரவேற்புள்ளது எனக் கேட்டபோது பெரும் வரவேற்புள்ளதாகக்
குறிப்பிடுகின்றார் இலங்கை இணைப்பாளர் விக்கிரமசிங்க.
இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்ட நூலகள்
சேகரிக்கப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற
விரும்புபவர்கள் விக்கரமசிங்கவுடன் பின்வரும் ஈ-மெயில்
முகவரியில் தொடர்பு கொள்ள முடியும் [email protected]
மதுரைத் திட்ட இணையத்தின் முகவரி:
http://www.tamil.net/projectmadurai.
|