திருநூற்றந்தாதி -
அவிரோதி ஆழ்வார்
tirunURRantAti of avirOti AzvAr
Acknowledgements:
Etext - Input-keying, Proof reading, Web versions in TSCII & Unicode
N D LogaSundaram & his sister Ms.N D Rani -
Chennai
PDF version : Dr. K. Kalyanasundaram,
Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in UTF-8
encoding.
� Project Madurai 1998 - 2008
Project Madurai is an open, voluntary, worldwide
initiative devoted to preparation of electronic texts of Tamil
literary works and to distribute them free on the Internet. Details
of Project Madurai are available at the website
You are welcome to freely distribute this file,
provided this header page is kept intact
திருநூற்றந்தாதி அவிரோதி ஆழ்வார்
* திருமயிலையில் கோயில் கொண்டிருந்த
சமண சமய தீர்த்தங்காரராம் நேமிநாதரைப்
போற்றித் துவங்கும் ஓர் சீர்மிகு அந்தாதி நூல்
நேமிநாதர் துதி
மறமே முனிந்து மயிலாபுரி நின்று
மன்உயிர்கட்கு
அறமே பொழியும் அருள் கொண்டலே அதரம் சிவந்த
நிறமே கரிய ஒண்கண் மாணிக்கமே நெடுநாள் ஒளித்துப்
புறமே திரிந்த பிழை அடியேனைப் பொருத்(து) அருளே 0
நூல்
பூக்கொண்டு பொன் உலகம் கொடுப்பானை
புலவர் செஞ்சொல்
பாக்கொண்டு முத்தி பணிக்க வல்லானைப் பைங் கோகிலங்கள்
கூக்கொண்டு சேரும் குளிர் பிண்டியானை குணம் புகழ்வான்
மாக்கொண்டல் வீழ்துளி எண்ண என் பேய் மனம் மால் கொண்டதே 1
கொண்டல் கண்டீர் கொடைகுன்று கண்டீர்
புயம் என்று கொண்டே
தொண்டர் கண்டாரை எலாம் துதியா வண்ணம் தொல் உலகில்
பண்டு கண்டே அறியாப் பொருள் ஈய என் பாக்கியத்தால்
கண்டு கொண்டேன் பிண்டி நீழலின் கீழ் ஒரு கற்பகமே 2
கற்பகமே கருணைக் கடலே கடல் போல்
குணத்து எம்
பற்பதமே பகடிப் பகைவா பரவைப் புனல் மேல்
புற்பதமே அன்ன பொய்க்குடி வாழ்கையைப் போகவிட்டு உன்
நற்பதமே அடைந்தேன் சுமந்து ஏகு நளினம் ஒத்தே 3
ஒத்து அகலா மதி ஒன்றிரண்டு ஒக்கும்
ஒள் பொன் குடைக்கீழ்
அத்த கல்யாணம் ஓர் ஐந்துடையாய் அடியோம் எனும் மெய்ப்
பத்தர்களாய் உனைப் பற்றி நின்றே வினைப்பற்(று) அறுக்கும்
எத்தர்களோ பெறுவார் இறைவா நினது இன் அருளே 4
அருளடு எழும் அறஆழி அப்பா பிறவாழியில்
பாய்
இருள் ஓவிய கரை ஏற உய்ப்பாய் இந்தியங்கள் என்னும்
மருள(டு) உழலும் மனத்து என்னை ஆள்கொண்ட மற்(று) உனக்கு
பொருளோ புவனங்கள் மூன்றையும் ஆள்கொள் கை புண்ணியனே 5
புண்ணியம் ஆன செம்பொன் தளை போலப்
பொல்லா வினையால்
பண்ணிய பார இருப்புத் தளை பரிந்(து) ஏற உய்த்தல்
கண்ணிய வெம்கதிர்க் காந்தம் கண்டீர் கதிர் மாமதி போல்
தண்ணிய வான்குடை மூன்றுடையான் அடித் தாமரையே 6
தாமரையே எத்தவங்கள் செய்தாய் சகம்
மூன்றினுக்கும்
தாம் அரைசே என்று சாற்றுவ போலும் முச்சத்திரத்துத்
தாமரைசேர் திருவைத் திருமார்பில் தரித்தவர் செந்
தாமரை ஏய் சரணம் தலைமேல் கொண்டு தாங்குதற்கே 7
தாங்கு வளைக்கரச் சக்கர வாழ்வொ(டு)
அத்தாமரைமேல்
பூங் குவளைக் கண்ணினாளடு புல் உடன் போர்த்த கொண்மூ
நீங்கு வளைத் திகழ் நீள் சுடர் போல் வினை நீங்கலும் புக்(கு)
ஆங்கு வளைத்த மூ ஒளியான் மெய் அடியவர்க்கே 8
அடியேன் அறிவற்(கு) அழகியவா தவம்
ஆடகம் ஆம்
கொடி சேர் நிறை மதில் கோபுரக் கோயில் குற்றேவல் செய்ய
முடி சேர் அமரர்கள் மொய்த்(து) எங்கும் நிற்பர் சொர்க்கம் குனிப்பர்
தொடி சேர் புயத்துச் சுரேந்திரர் சேர் பணைத் தோளியரே 9
தோளா மரச்செவித் தூரா வயிற்றுச்
சுமடர்க்(கு) எல்லாம்
வாளா இருக்க வரம் தருமோ வஞ்சம் அற்ற நெஞ்சொ(டு)
ஆள் ஆனவர்க்கு அல்லது ஆயிரக்கண் இந்திரற்கும்
கேளா முதல் பொருள் கேட்டார்க்(கு) உரைக்கும் எம் கேவலியே 10
கேவலம் உற்பத்தியாம் அளவே கிளர்
பூசனைக்கு என்று
ஏவல் இயற்றும் அவ் இந்திரனுக்கு முன் எண்குணத்(து) எம்
காவலனைக் கவிப்பார் வளைப்பார் முளைப்பார்களைப் போல்
மூ உலகத்துள்ள நால்வகைத்தேவரும் முன்னுவரே 11
முன்னை என் வல்வினை போக்கி
முக்குற்றத்தை நீக்கி
பின்னையும் நல்க அமையும் பெரும பிறப்பறுத்த
உன்னையும் என்னையும் அன்றி மற்(று) ஒன்றும் உள்ளாமல் உள்ளம்
தன்னையும் நின் அருள் போல் வசமாக்கித் தரப்பெறினே 12
பெறுவது மூ உலகு ஆளும் பெருமை அருமை
பொய்ம்மை
தெறுவது நாதனைச் சிந்திப்பது சிறு முள்ளி மொய்க்கும்
அறுபதம் ஆம் என ஐம்புலன் மேல் விழுந்(து) ஆவதங்கட்கு
உறுவதும் ஏதும் உறாததும் பேதைகள் ஓர்கிலரே 13
ஓர்கின்றிலை உனை யோனிகள் தோறும் பல்
ஊழி உய்த்தும்
ஆர்கின்றிலை இன்னும் ஆசை நெஞ்சே இனி அந்தகனார்
சார்கின்ற போது உனக்குச் சரண் ஆர் சொல்லும் தாமரைப் போது
ஊர்கின்ற பாதர் அல்லால் உரியார் மற்று ஒருத்தரையே 14
ஒருத்தரும் மத்தர் போல் உணரார் உயர்
ஓம்பும் எங்கள்
திருத்தரு மத்தர் அல்லாச் சிறு மானிடர் சேர்ந்தவர்க்குத்
தருத்தரு மத்தரையோடு விண்ணோர் பதம் தந்து பின்னும்
அருத்தரும் அத்தரை ஆதி பட்டாரகராம் பரிசே 15
பரித்த மலர் பதத்தார் உருக்கொண்டு
பைந்தோலும் நஞ்சும்
உரித்து உமிழ் சர்ப்பம் எனத்துறவார் தொண்டர் ஓங்கு உலகை
அரித்தும் அளித்தும் அழிப்பவர் ஆத்தர் என்று ஆபரணம்
தரித்தும் உடுத்தும் தவம் செய்குவார் ஒத்து அவம்செய்பவரே 16
அவம் செய்கின்றேன் என்று அறிகின்றதே
இல்லை அந்தம் இலாச்
சிவம் செய்கின்றான் எங்கள் தீர்த்தப் பிரான் திருவாய் மொழிந்த
தவம் செய்கின்றாய் இல்லை தானம் செய்தாய் இல்லை நீ நடுவே
எவன் செய்கின்றாய் இந்தியம் சொன்னவா செய்யும் என் நெஞ்சமே 17
என் நெஞ்சமே இடமே உடைத்தே இந்திராதி
விண்ணோர்
முன்னம்செய் பன்னிரண்டு ஓசனைத்தாய் முழு மாமணித் தூண்
மன் இஞ்சி மூன்றொடும் மானாங்கண முதல் ஏழ்நிலத்துப்
பொன்னின் சிநாலயம் ஆயிற்று அன்றோ எங்கள் புங்கவர்க்கே 18
புங்கவன் பூரணன் புத்தன் புராதனன்
பூண் புனையாச்
சங்கரன் சக்கரன் தாமரையோன் எனத் தாவில் செங்கண்
சிங்கவன் பேரணைத் தீர்தனைத் தீவினைத் தெவ் எனும் பேர்
மங்க அன்றோ வெள்ளை வாள் கொண்ட வீரனை வாழ்த்துவதே 19
வாழ்த்துதி நின் புகழ் வாழ்த்த
வல்லாரை தம் வாய் வலத்தால்
பாழ்த்துதி செய்து உனைப் பாடாதவர்களைப் பல்வினைக்கே
சூழ்த்துதியாம் அறியாச் சுழல் துன்பப் பெருங் குழிக்கே
ஆழ்த்துதி ஆர்வமும் செற்றமும் நீக்கிய அச்சுதனே 20
அச்சும் அல்லா அல்லுமாம் எழுத்து
ஆதியும் அந்தமுமாம்
வச்சது எல்லா மதி நூலும் பொதிந்து மந்திரமாய்
மெச்சும் எல்லோருக்கும் வேண்டிற்று அளிப்பது மெய்தவத்தோர்
நச்சும் அல் ஆர் குடை மூன்(று) உடை நான்முகன் நற்பெயரே 21
பெயர்த்து அன்பர் இம்பர் நண்ணாமை
நல்கும் பெருமைச் சரணாம்
புயத்து அம்பராம்பர போற்றி விண்ணப்பம் அப் புன்நெறித்(து) உன்
நயத்து அன்பிலாரொடு தீவினைத் தெவ் என்று நாட்டிய நல்
சய தம்பமோ நம்ப நின் திருவாயில் தனித்தம்பமே 22
தம்பத்தின் மேல் புழை ஏ(ழு) உள
ஆக்கித் தமித்து வைத்த
கும்பத்தினொடு நிகர் ஒக்குமாம் குணிப்(பு) இன்றி ஐந்தாம்
பம்பத்தி காயம் பணித்த பிரான் பசும் தாமரைத்தாள்
செம்பத்தியால் வணங்காச் சிறியார் தம் சிரத்திரளே 23
சிரத்திரள் நான்கிலன் ஐம்படை ஏந்திலன்
திண் சிலையால்
புரத்தியம் களையும் பொடி ஆக்கிலன் போதி என்(று) ஓர்
மரத்திரள் சேர்த்து பல் மாயம் சொல்லான் எந்தை மன்உயிர்க்கு
பரத்திரயங்கள் பணித்த பிரான் எங்கள் பண்ணவனே 24
பண்ணவனார் சகம் மூன்றும் ஓர் மாத்திரை
பார்க்கும் எங்கள்
கண்ணவனார் தன்மை கேட்டறியார்கொல் களிகளைப் போல்
விண்ணவன் காற்றவன் வெந்தீ அவன் விரிநீர் பொதிந்த
மண்ணவன் மற்று எல்லாம் அவனே என்னும் மானிடரே 25
இடர் ஆர் பவக் கங்குலின்கண் மற்(று)
என்னையும் காண ஒட்டாப்
படர் ஆர் வினைத்தொல் இருள் பேய் இரியப் பைம்பொன் அணை மேல்
அடர் ஆர் மலர்ப் பிண்டியோடும் புகுந்து என் அகத்(து) இருந்த
சுடர் ஆர் விளக்கை மெய்ஞான அங்குலி கொண்டு தூண்டுவனே 26
தூண்டு திண் தேர் உருள் போல்ச்
சுழன்று தொல் யோனிகட்கே
மீண்டு கொண்டு ஏகும் அவ்வெவ் வினைக்(கு) அஞ்சி நின் மெய்ச்சரணம்
பூண்டுகொண்டேன் இனிப் போக ஒட்டேன் பொருளாக என்னை
ஆண்டுகொண்டாய் அறஆழி கொண்டே வென்ற அந்தணனே 27
அந்தரம் மேல் ஒரு மந்தரம் வந்தென
அம்மலர் மேல்
வந்த பிரான் அடிக்(கு) அன்பிலர் ஆயின் மறையவரேல்
நிந்தர்கள் சாதியில் நீசர் கண்டீர் அந்த நீசரும் அச்
சுந்தரன் நேசர்கள் ஆயின் விண்ணோரினும் சுத்தர்களே 28
சுத்தியைச் தானுடைச் சொல் அரும்
பல்குணத் தொல் சுகத்த
சித்தியைத் தா என்று செப்புகிலேன் முதல் சீவன் உள்ளிட்டு
அத்தியைத் தான் உள்ளவாறு அறைந்தாய் அடிவிட்(டு) அகலா
பத்தியைத் தா அது முத்தி பெற்றாறின் பதின் மடங்கே 29
மடங்கலின் ஆசனம் வார் தளிர்ப்
பிண்டியும் மாமதில் சூழ்
கிடங்கு அலர்ச் சோலைகள் நாடக சாலைகள் கேடில் விண்ணோர்
அடங்கலும் ஆர்கின்ற ஆடகக் கோயிலினும் அடியேன்
முடங்கல் மனாலயமே இனிதாயிற்று எம் முத்தனுக்கே 30
முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ
சகம் மூன்றினுக்கும்
அத்தன் என்கோ எனை ஆளி என்கோ அடியேனுடைய
சித்தன் என்கோ பத்தர் செல்வம் என்கோ வினைத் தெவ் ஒன்றிலா
நித்தன் என்கோ பிண்டி நீழலின் கோவை நிரந்தரமே 31
நிரந்தரம் நான்மை நிறைந்(து)
இருந்தானும் நின்றார்களைப் போல்
தரம் தரம் என்றோ அருள் செய்வ(து) தன் தலைமேல்
கரம்தர நின்று ஒருகால் வணங்கப் பெறின் காமர் செல்வப்
புரந்தர லோகம் புழக்கடைஆகும் எம் போலிகட்கே 32
போலிப் பொருளுடைப் புல் நெறியாம் அப்
புலி கிடக்கும்
காலிச் சிறுநெறி போய்க் கழிவீழ்வர் கழியா வளத்த
மேலின் பெருநெறி வீடே புகின் பிண்டி வேந்தன் எம்கோ
நூலின் பகர் செந்நெறிப்போய் புகுமின் நொடிவரையே 33
வரை அம்பு காய்எரி மாரிகளாய் அவ்வயிரி
செய்த
திரையம் புகாக் கடல் பூக்கடலாகத் தியானம் எனும்
நரையம் புகா வினைத் தெவ் வென்றவா நன்று நாயடியேன்
நிரையம் புகா நல்நெறி பணித்து ஆள்கொண்ட நின்மலனே 34
நின்மா மலர்ப்பதம் தாங்கும் நிரை
இதழ்த் தாமரையை
வன்மா எனக் கொண்ட மற்(று) அதற்குக் கொல் வான் கருப்பு
வில் மாறனைச் செற்ற வீர மென்போ(து) என வீற்றிருப்ப
பொன் மார்பு அளித்த அப் புண்டரீகாலயப் பொன்னினுக்கே 35
பொன் குண மாமணிப் பூந்துகில் ஆதிப்
பொருள் அடியேன்
முன் கொணர்வீர் என்றும் ஓர்க்கிக்கிலேன் இம் மூ உலகு
நன்(கு) உணர் கேவல நாயகரே முன்பு நானுடைய
என் குணம் யான் பெற எம்பெருமானை இரக்கின்றதே 36
இரக்கும் தொழில் ஒழிந்து யாமே இனி
இந்த ஏழுலகும்
புரக்கும் பொருளுடையோம் புலவீர் வம்மின் பூமி எல்லாம்
நிரக்கும் பொருள் குவை யாவையும் நீர் நினையாத எலாம்
சுரக்கும் சுரபி கண்டீர் பிண்டிநாதன் தன் தொல்அறமே 37
தொல்அறமே படையாய் உடை அச்சுத
நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே 38
மோகங்களால் சில மூர்த்திகள் கண்டது
முற்(று) உணர்ந்து எம்
சேகங்கள் தீர்க்கும் அசோகர் சொல்லாவது துன்மதிகள்
யாகங்கள் செய்தும் இருந்தசை தின்றும் ஈர்ங் கள்ளடு ஒக்கும்
போகங்கள் ஆர்ந்து தம் மெய்யடும் போய்ப் புகும் பொய் முத்தியே 39
முத்தின் பொலி குடை மூன்றுடையார்க்கு
இரண்டின்றி ஒன்றாம்
பத்திப் பெரும் பதம் அல்ல உண்டோ பசி நோய் முதலாம்
புத்திக் கிலேசங்கள் நீங்கிப் புக்கார்க்(கு) என்றும் போதல் இல்லாச்
சித்திப் பெயர்ப்பத் தனம் புகுவார் கட்குச் செவ்வழியே 40
வழுவது அல்லா வதம் வல்லன தாங்கி வரத
மற்று உன்
குழுவது எல்லாம் நின் திருஉருவாய்க் கொண்டு குற்றம் உற்றால்
அழுவது அல்லாது அறியா மகப் போல் அடியேன் நின்னைத்
தொழுவது அல்லாது முழு(து) உணர்ந்தாய்க்கு என் சொல்லுவதே 41
சொல்லார் பிறர்க்கு இதம் சூழார்
தமக்கு அரண் சூழ் பொருள் மேல்
கில்லார் நசைவிடக் கேளார் திருஅறம் கேள்வியினும்
கொல்லா வதத்து எங்கள் கொற்றவன் கூறு நல் தவத்தே
நில்லா நிரயத்து நிற்பான் இருக்கின்ற நீசர்களே 42
நீசரணாம் இடம் கண்டு கொண்டாய் நெஞ்சே
நின்(று)இலங்கும்
தேசு அரணாம் ஒளி மூன்(று) உடையான் இரு செஞ்சுடரொடு
ஏய் சரணார் அரவிந்தங்கள் அல்லால் சுமந்து ஈன்(று) எடுத்த
தாய் சரணே தந்தைதான் சரணே நைந்து சாமவர்க்கே 43
சாமரை சங்கு சிங்காசனம் மாசனம்
சதுரங்கம்
சோமரை வெல் சுடர் வெண் குடை நன்கொடித் துங்க மன்னர்
காமரசு ஆன அத்திகள் ஆதல் கண்டாலும் தொண்டர்
பூமரை மேல்வரும் கற்பக நீழல் புகுகிலரே 44
புகா நின்ற ஞாயிறு போகின்ற
செல்வமும் பூம்புனலுள்
தொகா நின்ற துய் மணல் ஒக்கின்ற சுற்றமும் சோர்ந்(து) இளமை
உகா நின்ற மேனியும் மேல் உதவா என்று உனை அடைந்தேன்
நடா நின்ற தாமரைமேல் நடந்(து) ஏகிய நற்றவனே 45
நற்றவர்க்கு சித்தி நல்க வல்லார்க்கு
இரு நால் வினையும்
செற்றவர்க்குச் செய்ய தாமரை ஏறிச் செவ்வே நடக்கக்
கற்றவர்க்கு குரு(டு) ஒத்து உழல்வேற்கு நற்காட்சி தந்து
மற்றவர்க்குச் செய்வ(து) ஆள் அல்ல(து) ஏதும் கைம்மா(று)இலையே 46
மாறா மனம்கொண்டு வானோர் தொழும் பிண்டி
வாமன் மெய்ந்நூல்
தேறா(து) ஒழிந்த சிறு மானிடர் என்ப தீ முதலாய்
நூ(று)ஆயிரம் கொலை நோனா(து) எழுந்து விழுந்து ஒருகால்
ஆறா நெடுந்துயர் ஏழாம் நரகம் அடைபவரே 47
அடையுமவர் உமை என்கண்டு அடைகுவர்
ஆசனமும்
குடையும் முதலிய விண்ணோர் குயிற்றிய கொய்சகம் சேர்
உடையும் அறுசுவை ஊணும் ஒண் பூணும் ஒன்னாரை வெல்லும்
படையும் படை விழியாரும் இல்லாத பரம்பரரே 48
பரம்பற்றி நீங்க ஒட்டா வினைப் பாசம்
மெய்ப் பாவனை வாள்
அரம் பற்(றி) ஈர்த்து அடியேன் உய்யப் போம் வண்ணம் ஐவகைப்பூஞ்
சரம் பற்றினான் வலி சாய்வித்த வீரனைத் தன் புகழ் போல்
வரம் பெற்ற ஞானியை மாசற்ற சோதியை வந்திப்பனே 49
வந்திக்கவும் புகழ் வாழ்த்தவும்
தாழ்த்தில வானம் எல்லாம்
கந்திக்க மேற் கொள்ளும் கார்க்கமலத்(து) எந்தை தாள் கமலம்
சிந்தித்தலும் பண்டைத் தீப்பரிணாமத்துத் தீவினையால்
பந்தித்தவை பண்டை நுண்துகளாகிப் பறந்தனவே 50
பறந்து புக்குப் பரவாதிகள் துன்னும்
படுநர(கு) உன்
அறம் தலைப் பட்டவர்கட்(கு) அடைத்தே நிற்கும் ஆர்வம் உள்ளிட்(டு)
இறந்த முக்குற்றத்(து) எம் ஈச நின் நேயர்கட்(கு) என்று எதிரே
திறந்து நிற்கும் சித்தி நல்நகர் வாயில் திருக் கதவே 51
கதமொழி தீர்மின் கறுவுகள் தேய்மின்
கருணை நெஞ்சொடு
இதமொழி கூறுமின் இன் உயிர் ஓம்புமின் எப்பொழுதும்
சுதமொழி கேண்மின் சுகம் மிக வேண்டின் துறவர் சொன்ன
வதமொழி ஏல்மின் இவை சிநனார் திருவாய் மொழியே 52
மொழித்தேன் இயம்பு மும்மூடர் சொல்
கொண்டு முனைவன் மெய்ந்நூல்
பழித்தேன் மயரிகள் சொல் பொருள் கொண்டுமைப் பானல் அன்ன
விழித்தேன் எழும் குரலார்க்(கு) இடர் கொண்டு விலங்குகள் போல்
கழித்தேன் மதி மந்த மாயே அருமந்த காலத்தையே 53
காலம் கழிதொறும் கோலம் கழியக் கறுத்த
குஞ்சி
நீலம் கழிதர நீரும் கழி தீர் நிருமலன் தாள்
மூலம் கழிதல் செய்யாது உய்ம்மின் என்னினும் மூர்க்கர் அந்தோ
வேலம் கழி விழியார் வலைக்கே பட்டு வீழ்வரே 54
வீடும் வினைகளின் பந்தமும் மெய்ம்மை
விரித்(து) உரைத்த
நீடு மலர்ப் பிண்டி நின்மல நின் மலர்ப்பாத நல் நீர்
ஆடும் அவர்க்கு அரமங்கையர் ஆடுவர் அண்ணல் நின்சீர்
பாடும் அவரை இம் மூ உலகோர்களும் பாடுவரே 55
பாடுவனே சிலபாதகத் தேவரைப் பல்நெறி
மேல்
ஓடுவனே நின் ஒருநெறி கண்டு பண்டு உன்னை உன்னா
வேடுவனேன் நின் அறத்தினை வித்தி விளைத்(து) உணப்பெற்று
ஆடுவனே இன்னும் ஆருயிர் வேட்டை அதிசயனே 56
அதி சோகமோடு அயலார்களைப் போல் அடும்
கூற்றம் வந்தால்
மதி சோர்தர மயங்கிக் கிடவோம் மலர்மேல் நடந்தார்
துதி சேர் இணை அடியாம் துணைய(டு) அவர் தொல்அறமாம்
பொதி சோறு உடையம் இடையோம் இனித்தனிப் போ நெறிக்கே 57
நெறிச் சென்று ஒருவண்ணம் நின் அறமாகிய
நீள்நிலைச் செந்
தறித் தங்கிய என் மனத்தனி யானை தளை பரிந்து ஐம்
பொறிப் பன்றியோடு ஐம்புலன்களும் புக்கு அழியாமல் இன்னும்
குறிக் கொண்டு அருளு கண்டாய் பிண்டி நீழல் குணதரனே 58
குணதரரே முனி மங்கையரே கொலைநேர்
விலங்கே
பணதரரே முதல் நால் சுரரே அவர் பாவையரொடு
அணதரு நேமி அரதனரே என ஆறிரு மாக்
கணதரர் ஏறு செந்தாமரை காண் என் கருந்தலையே 59
கருந்திரை காணினும் வெள்நரை காணினும்
காட்சி உள்ளிட்டு
அரும் திரயம் தந்த அண்ணலைக் காண்கிலர் ஆர்கலிவாய்
வரும் திரை ஓய்வதும் போம் புனல் மாய்வதும் மாத்திரையில்
பருந்து இரை கொள்ள மெய் வீழ்வதும் காணும் பளகர்களே 60
பளகர் எல்லாம் மனப்பாரம் பரித்தனர்
பல்வினைக்கே
உளகர் எல்லாம் ஒத்(து) ஒவ்வா நெறி நின்றனர் ஓடரிக்கண்
அளக மெல் ஓதியர்க்கு ஆர்வம் இல்லா அற வேந்த அந்தச்
சளகர் அல்லாத சதுரர் நின் வேடம் தரித்தனரே 61
வேடம் தரித்து விதி அந்தரிக்க ஒழுகி
மெய்ந்நூல்
பாடம் தரித்து உண்மைப் பாரா முனிவரின் பாய் அரிமான்
பீடம் தரிக்க இருந்த பெம்மான் அறம் பேணல் இன்றி
மூடம் தரித்து எண்மயத்து நின்றார் நல்லர் மும்மடியே 62
மும்மடி சூழ்ந்த முழு ஒளி நாதர் எழும்
சுடருக்கு
அம்மடி நல்ல அடிஇணை தாங்கினும் நண்ணுதற்குத்
தம் அடியேன் மனம் போல் அற்றோ தலைமீது கொள்ள
வம்மின் அடிகேள் என்ன மாட்டா முளரி மதுமலரே 63
மலம் தோய் வயிரும் அம்மா நரகங்களும்
மண்ணும் விண்ணும்
கலந்தே கிடந்த உல(கு) ஒரு மூன்றும் கவர்தரும் ஐம்
புலம்தோய் பொறி உடைப் பொய்த் தேவர்கள் புல் நெறிபுக்கு
அலைந்தேன் அரவிந்த ஊர்தி இனி என்னை அஞ்சல் என்னே 64
என்னை இம் மண் உலகத்தோர் இயற்கை
இறைவர் அல்லாத்
துன்னய வாதிகள் சொல் பொருள் நம்புவர் தூமணிசேர்
பொன் எயில் மன்னிய புங்கவ அங்(கு)அவர் பொய்மை கண்டும்
பின்னையும் நின் அறம் தேறார் கிடந்து பிணங்குவரே 65
பிணங்கோம் எவரொடும் பேரோம் சிநன் அறம்
பேர் படைத்தும்
குணம்கோடிய குபதம் கொடும் தேவர்தம் கோயில் கண்டால்
வணங்கோம் மனம்கொண்டு வாழ்த்துகிலோம் அவர் மானிடரோடு
இணங்கோம் எழுமையும் என்கடவோம் அவ் இருவினைக்கே 66
இருவினைக்கே வேலை ஒரு வினை நீ எரி
சேர்புரி போல்
உருவினை எனும் அருவினை நீ ஒருவர்க்கு மில்லாத்
திருவினை நீ எண்திசை முகன் நீ சிறந்து ஓங்கு பிண்டித்
தருவினை நீ அருள் சக்கரம் ஏந்திய சங்கரனே 67
சங்கை அஞ்சார் தளர் நோய்க்கு இடையார்
தழல் போல் விழித்து
வெங்கயம் சாரினும் மெய்ந் நடுங்கார் விரையார் களபக்
கொங்கை அம் சாயலர் கோலம் நம்பார் வரும் கூற்றம் உள்கார்
பங்கயம் சார் பத பங்கயத்தான் அடிப் பத்தர்களே 68
பத்தர் நல்சித்தனைப் பன்னிரண்டு
ஓசனைப் பொன் எயில் சேர்
அத்தனைப் பண்டு அறியாமையின் யான் அனந்தம் உயிர்கட்(கு)
எத்தனை தந்தையரும் தாயரும் ஆயினன் இன்(று) எனக்கே
எத்தனை தந்தையும் தாயரும் ஆனர் என்று எண்ணுவனே 69
எண்ணுடைய மாலையடு ஈர்படை கொண்(டு)
இடத்தும் வலத்தும்
பெண்ணுடையார் சிலர் பேதைகட்கு ஈசர் பெரும் திசையாம்
நுண்ணுடை நாதர் நுவன்ற அருங்கலம் ஆகிய முக்
கண்ணுடையார் இந்தக் காசினி மேல் நமக்கு ஈசர்களே 70
ஈசன் என்றாலும் இறைவன் என்றாலும்
இலங்(கு) ஒளி முத்
தேசன் என்றாலும் மெய் தீர்த்தன் என்றாலும் சித்தித் திருவின்
நேசன் என்றாலும் நெஞ்சுள் இருந்து இந்த நீள் நிலத்தோர்
பேச நின்றார் தமக்கு ஏயும் நின்றார் அவர் பேரர்களே 71
பேராயிரத்து இருநான்(கு) உடையானைப்
பிறங்கிய நல்
சீராயிரத்தில் சிறந்துடையானை நல் சித்தி செய்யும்
காராய் இரத்தினம் மூன்(று) அளிப்பானைக் கவிதை செய்யா(து)
ஆராய் இரத்திர் அறியாதவரை அறிஞர்களே 72
அறியோம் அரும் தமிழ் ஆரியம் கேட்டிலம்
ஆகமத்தும்
வறியோம் மதுரக் கவிகள் அல்லோம் மனம் வேண்டிய ஐம்
பொறியடு உழல் புன்மையிலோம் எம் புலமை எலாம்
முறியடு அலர் பிண்டியார் அடியார் எனும் முக்கியமே 73
முக்குற்றம் நீக்கிய நின் குணம்
முன்பு உணராமையினால்
புக்குற்ற தீக்கதி போக்கின எத்தனை போனவற்றுள்
அக்குற்றம் ஆனது எலாம் அடியேன் குற்றம் ஆட்புகுந்தேன்
எக்குற்றம் எய்தினும் எம்பெருமானது இனிக்குற்றமே 74
குற்றம் விட்டார் குத்தி மூன்றுடையார்
செற்று ஈர்ந்து அடினும்
செற்றம் விட்டார் திரு மேனி எல்லாம் பெருமாசு விம்ம
வற்ற விட்டார் வினை மாசு உதிர் பிண்டி வாமன் அல்லால்
சுற்றம் விட்டார் திசைசூழ் துகிலார் நம் தொழும் தெய்வமே 75
தெய்வதம் வே(று) ஒன்று தேடுகின்றீர்
வினைத் தெவ் இரண்டால்
நைவ(து) அலாது முத்திக்கு நண்ணீ�ர் இருநால் வினை தீர்
ஐவத நாதர் அறுபதம் போ(து) என்(று) எழுபதம் சேர்ந்(து)
உய்வது அல்லால் உமக்(கு) உபாயம் மற்(று) ஒன்(று)இலையே 76
ஒன்(று) அறியீர் முழுவதும் உணர்ந்தீர்
உணர் ஒன்றும் இல்லா
வன் தறி போல்பவர் வந்(து) உம்மைத் தாழ்ந்திடின் மற்(று) அவர்க்கு
நன்(று)அறி ஞானம் கொடுத்(து) உண்மை காட்டுதிர் நாமும் இவ்வாறு
என்(று) அறியாதவர் எம்பெருமான் ஒக்க இச்சிப்பரே 77
இச்சிநனே புவனத் திருநாயகன் என்(று)
எவர்க்கும்
நிச்சயமாக உணர்த்துதற்காக நிலா விரித்து
முச்சகம் உற்று நிழல் செய முப் புவனேந்திரராம்
தச்சர் சமைத்(து) உடன் வைத்தார் நாதன் முச் சத்திரமே 78
சத்தியமே ஒன்று சாற்று கின்றேன்
சமயங்கள் எல்லாம்
கத்தி அஞ்ஞானமே கவல்கின்றதே கடைச் சாரம் எய்தும்
முத்தியும் ஏதம் முதல்வனும் ஏதம் முதல்வனும் உற்
பத்தியும் நாசமும் ஒன்றும் இல்லாப் பரம் சுடரே 79
சுடர் மண்டலம் சுர துந்துபி தெய்வத்
துவனி சிங்கப்
படர்மண்டல அணை பிண்டி வெண்சாமரை பெய் மலரின்
அடர் மண்டல மழை அம்பொன் குடைமும்மை ஆம் அடியோம்
இடர் மண்டலம் கெடுப்பார்க்(கு) இமையோர் செய்யும் எண் சிறப்பே 80
சிறப்பின்றி இவ்வாழ்(வு) என்று
தேவேந்திரர் தொழும் தீர்த்த நின் சீர்
மறப்(பு) இன்றியே என்றும் வாழ்த்தப் பெற்றால் மனையான வற்றிற்கு
அறப்பின்றி ஆயிழையார் இன்றியே சென்று அடைபவர்க்கு ஓர்
இறப்பின்றியே வெளியாய் நின்ற வீ(டு) எமக்(கு) என் செய்கவே 81
என்செயலாம் வினைகாள் உமக்(கு) எங்களை
யாம் பிறர்பால்
இன்செய வாய் அவர் கேள்வரைத் தேவர் என்று ஈண்(டு) அறமாய்க்
கொன் செய வேண்டும் குபதர் அல்லோம் குடை மூன்(று) உடையார்
தன் செய பாதங்கள் கண்டு கொள்ளீர் எம் தலைமிசையே 82
மிசையார் தசை இருள் மேவார் நறைமது
விண் பெறினும்
இசையார் கொலை பொய் களவு அறியார் இளம் தோகையர் மாட்டு
அசையார் பொருள் வரைந்து ஐவரைப் பேணுவர் ஐம்புலன் மேல்
நசை ஆறிய பிண்டியார் அடியார் எங்கள் நாயகரே 83
நாயகத் தேவர்தம் நல் முதல் தேவரை நாள்
மலர் வான்
மீஅகத்தே வர மேற்கொள்ளும் தேவரை மெய் அடியார்
வாயகத் தேவரும் வண்புகழ்த் தேவரை மாற்றி நெஞ்சே
நீஅகத்(து) ஏவரை இத்தனை நாளும் நினைத்தனையே 84
நினைத்தனை ஆயினும் வாழ்த்தினை ஆயினும்
நீயும் நெஞ்சே
தினைத்துணை நல் அறம் செய்தனை ஆயினும் சேர்ந்தவரைப்
பினைத்தனை வந்தனை செய்ய ஒட்டாப் பிண்டியாற்கு அரிதோ
உனைத் தனையே ஒக்க இத்தனை நாளில் உயர்த்துகையே 85
கைத்துக் கடி(து) அடும் காஞ்சிரம்
தின்பவன் தீங்கனியைத்
துய்த்துச் சுவை கண்டபின் விடுமோ சுரராய் நரரொடு
ஒத்துத் திரிபவர்க்(கு) அன்புசெய்வார் உம(து) ஒண்மை கண்டால்
வைத்துப் பிரிவர்களோ பிண்டி நீழல் எம் மாமணியே 86
மணி ஆபரணமும் மாசில் வெண் தூசும்
வம்(பு)ஆர் மலரும்
அணியாத அழகிய அண்ணல் கண்டீர் பெண்ணின் ஆசைவிடாப்
பிணிஆர் முடை உடல் பேய் அனையீர் பிறழ் பூங்கரும்பின்
திணி ஆர் வரிசிலைத் தேம் கணைக் காமனைச் செற்றவரே 87
செற்றது காதிகள் தீர்ப்பது அகாதிகள்
திக்(கு) அறியப்
பெற்றது கேவலம் பேசுதல் கேவலம் பெண் முதலாய்ப்
பற்றது தீர்த்த எம் பாவனை தீர்த்த எம் பாவம் அற்றால்
அற்ற(து) உன் மேல் துதியாரையும் ஏற்றுதி ஆள் படினே 88
படினும் படார் தவம் பாத்துண்பதும்
இலர் பார்த்திபர் ஈந்து
அடினும் அடாதன செய்கை அஞ்சார் அடியார் தம் அன்பு
கெடினும் கெடா அருள் கேவலி போல் அயல் தேவர் நல்கார்
விடினும் விடார்கள் மித்தாக்கள் கர்த்தாக்கள்கொல் வெவ்வினைக்கே 89
வினை வரும் ஆறும் அவை வெல்லும் ஆறும்
மித்தாச் சமயத்து
அனைவரும் மாறுகொள நிற்கும் ஆறும் உலகம் எல்லாம்
நினை(வு) அரும் ஆறு பொருள் நிற்கும் ஆறும் நிறைந்த நல்நூல்
புனைவு அரும் ஆறு புகு கடல் போலும் எம் பூரணனே 90
பூரணையால் பதினால் கயிற்று ஒக்கப்
புவனம் எல்லாம்
நீர்அணை மாருதம் தாங்கியது ஒக்கும் நிவந்த சிங்கப்
பேர்அணையார்க்கு இணையாரும் இல்லா பெரியோர்க்கு விண்ணோர்
பார் அணையா அடிதாங்கச் செந்தாமரை பாரித்தே 91
பாரிடை ஈர்இரு நூற்(று) ஐம்பத்தி
எட்டுப் பத்தாம் பவணத்து
ஓர் எழுகோடி எண் ஒண்பான் இலக்கம் உயர்ந்த கற்பத்து
ஓர் இயல் யோனி தொள் ஏழாயிரச் சின்னம் எண்ண ஒண்ணா
சீரிய வந்தரர் சோதிடத்து சர் நல் சேதியமே 92
சேதியம் முப் புவனத்(து) இரு
கூற்றமும் தீர்த்தர் உள்ளிட்(டு)
ஏ(து) இல் குணத்தார் வணக்கம் ஓர் ஐந்தும் இயல் பெயரோடு
ஆதி எழுத்தும் அருகனும் மவ்வும் ஒன்(று) ஆதி ஐந்து ஈறு
ஓதி நினைப்பன் வினைத் துகள் ஓடி ஒளிந்திடவே 93
ஒளி வந்த நீழல் உயர் பிண்டி வேந்தன்
ஒருத்தனுமே
விளிவந்து வேண்டும் விபூதிகள் நல்கும் மெய்ப் பொய்யை நம்பிக்
களிவந்து அவாவொடு கைவந்தவா செய்யும் கையர் பின் போய்
இளிவந்து வாழ அருமந்த ஆருயிர்க்கு என் வந்ததே 94
வந்தன வெள் நரை போயிற்று உவாய் மக்கள்
யாக்கை பெற்றும்
நம் தனமாய் ஒன்று நாடிற்றிலம் பிண்டி நாதனைச் சேர்ந்(து)
உய்ந்தனம் இன்று பண்டு ஓதனம் தின்று இன்சொலார் தனம் சேர்ந்(து)
இந்தனமாக நல் சந்தன வேர் பெற்று எரிந்தனமே 95
எரிதின்று போதல் இழுப்புண்டு போதலின்
நாயடு பல்
நரி தின்று போதல் அல்லால் மெய் நில்லா நமன் தூதர் வந்தால்
அரி(து) இன்று போதுதல் எண்ண ஒண்ணா(து) அதுனுக்கு முன்னே
கரி தின்றிடா அரி ஏந்(து) அணையான் அறம் கைக் கொள்மினே 96
கொண்மூ ஒருபருவம் பொழிந்(து) ஆங்(கு)
இரு கொட்பினுள் பார்
உள் மூ இருவகைக் காலத்திடை உல(கு) உய்யக் கொள்ளும்
எண் மூவர் அல்லது ஈசர் அல்லாமை நல் ஈசர் என்று
திண் மூடர்கள் தொழும் தேவர் மெய்க்காட்டித் தெளிவிப்பரே 97
தெளிக்கும் திருமொழித் திக்(கு)உடைத்
தொல்சக முக்குடைக்கீழ்
அளிக்கும் திருஅருள் ஆழி எம்மான் அடி ஐம்புல நீர்க்
குளிக்கும் திரிவிதக் குற்றத்து மும்மதத்து எம் மனமாம்
களிக்கும் சரம் அணைக்கும் பணைத்தாள் இணைக் கந்துகளே 98
கந்தாதிகள் என் கசிந்த நெஞ்சகக் கடி
நாறும் பூஞ்
செந்தா(து) இணைய பிண்டியார் திருப்பாதத்துச் சேர்ந்தும் இன்சொல்
அந்நாதியை அணி மாமலராய் அணிந்(து) அடியேன்
முந்தாதி வல்வினை வெல்வன் எல்லாரினும் முந்துறவே 99
முந்திய பேரன் பின் மூ உலகு ஏத்த முனி
இந்திரரொடு
எந்தை பிரான் அங்(கு) எழுந்தருளும் பொழு(து) ஏற அங்(கு) ஓர்
தந்தி பெறாது என்றும் வாசி பெறாது என்றும் தாழ்வுடையேன்
புந்தி பெறாது என்றும் தேவர் பொன் தாமரைப் பூக்கொண்டதே 100
திருநூற்றந்தாதி முற்றிற்று
நூல் ஆசிரியர் பற்றி . . . . .
பூக் கொண்டு நாளும் புனிதன் திருஅறம்
போற்றி நின்று
நாக் கொண்ட செஞ்சொல் அவிரோதி நாதன் நவின்ற மெய்ந்நூல்
பாக் கொண்டு நாளும் பணிந்தும் நினைந்தும் படிக்க வல்லார்
தீக் கொண்ட வல்வினை சேரார் சிவகதி சேர்குவரே
சிந்தா குலம் இல்லைத் தீவினை போம்
செய்ய தாமரையாய்
வந்து ஆதரிக்கும் மடநெஞ்சமே மறவா(து) இருக்கக்
கொந்(து) ஆர் அலங்கல் குடை ஒரு மூன்றுடையான் குணத்தை
அந்தாதி ஆக அவிரோதி ஓதிய ஆகமமே
'விரோதி'யின் எதிர்மறை 'அவிரோதி'
விரோதகுணம் அல்லது விரோதி அற்றவன்
(*)
மயிலை = மயிலாப்பூர் என்பதன் மரூஉ. 'மயிலார்ப்பில்'
என்பார் அப்பர் படிகள். செந்தில், அன்பில், நாஞ்சில்
போன்று ஓர் 'இல்' ஈற்று இடப்பெயர். தென்சென்னையில்
கடற்கரை ஓரமாக அமைந்த தொன்மை வாய்ந்த ஓரூர்.
" ஒருபெருங் கடவுணிற் பரவுது மெங்கோன்
மல்லை வேந்தன் மயிலைக் காவலன்
பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி " - நந்திக்கலம்பகம்
" புன்னையங் கானல் மடமயிலை " - சம்பந்தர் தேவாரம்.
" தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் "
- சுந்தர மூர்த்திநாயனார். " மயிலைத் திருப்புன்னையம்
கானல் சிந்தியா யாகில் " - ஐயடிகள் காடவர்கோன்
" பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத்
தொல் மயிலை வாயிலார் " ; " மன்னு சீர் மயிலைத்
திரு மாநகர்த் தொன்மை நீடிய " - சேக்கிழார்
"நீள் ஓதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்
கேணியான்"-திருமழிசை ஆழ்வார்-நான்முகன் திருவந்தாதி
"தென்னன் தொண்டையர்க்கோன் செய்த நன்மயிலை"
-திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி. ஆனால் இன்று
மயிலையில் பழமை வாய்ந்த சமணர் கோயில் இல்லை
கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயம்
இருக்கும் இடத்தின் அருகே ஜிநாலயம் இருந்ததாகவும்
ஆங்கிருந்த நேமிநாதர் திருஉரு சித்தாமூர் எனும் சமணர்
வாழ் திருவூரினுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும்
ஆய்வாளர் குறித்துள்ளனர். ('சமணமும் தமிழும்' - மயிலை
சீனி வேங்கடசாமி) மயிலையிலேயே பிறந்து வாழும் இங்கு
இந்நூல் பதிவாளன் தேவாலயத்தின் மிக அருகு அமைந்துள்ள
மயிலைப் பேராயர் இல்லத்தில் ஆங்கு கிடைத்த பழம்
கற்சிலைகள் பலகாலம் பாதுகாக்கப்பட்டமை அறிவார்.
இன்றும் கடல் அலை புரளும் மணல் ஓரமாக புதிய கலங்கரை
விளக்கத்தினின்று தெற்காக நடக்கும் ஒருவர் ஆங்கு
சமதளத்தில் இருக்கும் தார்ச் சாலை தேவாலயம் இருக்கும்
இடத்தில் சுமார் இருபது இருபத்தைந்தடி உயர மணல்
மேட்டின் மேல் இருக்கக் காண்பர். மணற்பரப்பினின்று
கட்டப்பட்டுள்ள 40 45 படிகள் ஏறிதான் தேவாலயத்தை
கடக்கும் சாலையை அடைய முடியும். இப்படிகள் இருக்கும்
இடத்தில்தான் ஓர் பழம் மரக்கொடி மரம் உள்ளது. இங்கு
ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் போர் நடந்ததாக
வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இன்றுள்ள திருமயிலைக்
சிவன் கோயிலும் கடற்கரை அருகுதான் இருந்துள்ளதாக
"கடலக்கரை திரை அருகே சூழ் மயிலைப் பதிதனில்
உறைவோனே" என 16 ஆம் நூற்றாண்டில் வழிபட்டுப் பாடிய
அருணகிரிநாதரும் குறித்துள்ளார். ஆனால் அ�து இன்று
சுமார் 1 கிமீ கடலலை நீரினின்று உள்ளடக்கி புதிதாகக்
கட்டப்பட்டுள்ளது.
- நூ த லோகசுந்தரமுதலி - மயிலை
|